Tuesday, January 26, 2021

The Great Indian Kitchen




றிவார்ந்த சமூகம் என கேரளத்தை அடையாளம் காட்டுவோர் உண்டு. நானும் சில கூறுகளில் கேரளத்தவரே முன்மாதிரி என்பேன். ஆனால் இன்றும் சாதியப் பெருமிதத்தை தக்கவைத்திருக்கிற, பெண்களை குடும்ப அமைப்பின் வெற்றுச் சின்னமாக மட்டும் கருதுகின்ற பழமைவாதிகளும் இவர்களாகத்தான் இருக்கிறார்கள். கேரள ஆண்கள், ஆணாதிக்க தடியர்கள் எனப் புலம்பாத மதுவிடுதி சேச்சிகள் இங்கு குறைவு. The Great Indian Kitchen திரைப்படம் இதைத்தான் வழிமொழிந்திருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் ,காமிரா கோணங்கள், கதைத் திருப்பங்கள் என எதையுமே பொருட்படுத்தாமல் தினசரியை மட்டும் நுணுக்கமாகக் காட்டி பார்வையாளர்களைக் கட்டிப் போட முடியும், சொல்ல வந்ததை சரியாகக் கடத்திவிட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு சாட்சி. ’தொண்டி முதலும்’ பார்த்த நாளில் இருந்தே நிமிஷாவின் தீவிர ஆராதகன் தான் என்றாலும் இந்தப் படத்தில் இன்னும் முழுமையான நடிகையாக மிளிர்ந்திருக்கிறார்.
ஆண்கள்- குற்ற உணர்வு அடைதல், பெண்களின் மீது பழி சுமத்துதல், ‘ஏண்டா இப்படி ஊதிப் பெருக்குறீங்க’ எனப் பொருமுதல் போன்ற கலவையான வெளிப்பாடுகளை இந்தப் படத்தின் விமர்சனங்களாக முன் வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ் இலக்கிய சூழலைப் பொருத்த மட்டில் பெண்களின் சமையலறை பாடுகளை ஏற்கனவே நிறைய வாசித்திருக்கிறோம். அம்பை முதற்கொண்டு சமீபமாக எழுத வந்தவர்கள் வரை சமையலறை குறித்தான சித்திரங்களை நமக்குத் தந்திருக்கிறார்கள். ஒரு பார்வையாளனாக இந்தத் திரைப்படம் பேசும் உழைப்புச் சுரண்டலைத் தாண்டிய இன்னும் சில விஷயங்கள் எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகின்றன.
முதலாவதாக ஐயப்பன் வழிபாடு- சமீபத்தில் கேரளத்தின் பற்றி எரியும் பிரச்சினையாக இருந்த இந்தச் சிக்கலை இந்தப் படம் மிகக் கூர்மையாக பெண்ணின் வழியாகப் பார்த்திருக்கிறது. வழக்கத்திலேயே இல்லாத அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இந்த மாதவிலக்கு சமயத்தில் தள்ளி வைத்தல் என்கிற விஷயம் ஆச்சரியத்தையும் எரிச்சலையும் ஒரு சேரத் தந்தது. இவை அனைத்தும் கடவுள் மற்றும் வழிபாடுகளை துணைக்கு அழைத்துக் கொள்கின்றன என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மதமும், கடவுளும், வழிபாடுகளும் பெரும்பாலும் ஆண்களால் கட்டமைக்கப்பட்டவை. அங்கே பெண்கள் வெறும் பயன்பாட்டின் எச்சமாகத்தான் இருப்பார்கள்.
இன்னொரு மிக முக்கியமான பிரச்சினை ‘ஃபோர் ப்ளே’ என்கிற விஷயமே இந்த ‘ஸோ கால்டு’ ஒழுக்கமாக வளர்க்கப்பட்ட / வளர்ந்த ஆண்களுக்கு தெரிவதில்லை. மனைவியுடன் உறவு கொள்வதை வெற்றுச் சடங்காக, இயந்திரத்தனமான முயக்கமாக நினைத்துக் கொண்டு அதையும் கடைபிடிக்கிறார்கள் என்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இதே சிக்கலை சில மாதங்களுக்கு முன்பு வந்த ‘கெட்டியவனாளு எண்டே மாலகா’ திரைப்படமும் பேசியிருக்கிறது. ஃபோர் ப்ளே யை விடுங்கள் ‘மாலகா’ படத்தில் நாயகனுக்கு மனைவியுடன் உறவு கொள்வது எப்படி என்பதே தெரியாது. முதலிரவில் மனைவியை வன்புணர்ந்து கிட்டத்தட்ட சாகும் நிலைக்கு தள்ளிவிடுவான். கையடக்கத் தொலைபேசியில் ஃபோர்னோ மலிந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் இப்படியும் ஆண்கள் இருக்கிறார்களா என்பது திகைப்பாகத்தான் இருக்கிறது.
தமிழில் ஆண்களை இப்படியெல்லாம் சித்தரிக்கமாட்டார்கள். அவர்கள் 96 ராம் போல ஒரு ஆணை தியாகச் செம்மலாக நமக்குக் காண்பிப்பார்கள், ஒட்டுமொத்த மிடில்க்ளாஸ் ஆண்களும் ராமை விழுந்து விழுந்து கொண்டாடி பாயைப் பிறாண்டுவார்கள். மிக எளிமையாக யோசித்துப் பார்த்தால் ராமும் அடிப்படையில் இவர்களைப் போன்ற ஃபோர்ப்ளேயும் உறவு கொள்ளவும் தெரியாத ஒரு ஆண்தான், நம்மவர்களுக்கு அப்படிக் காண்பிக்க தைரியம் கிடையாததால் ஒரு மென்சோகத்தை நாயகனுக்கு வழங்கி அழகு பார்த்துக் கொள்கிறார்கள். போகட்டும்.
ஹெடோனிஸ்டான நாம் மிக முக்கியமான கட்டத்துக்கு வருவோம். நம்மைச் சுற்றி யாராவது சில பயல்கள் நாங்கள் 90’ஸ் கிட்ஸ், முரட்டுச் சிங்கிள் என்றெல்லாம் பினாத்திக் கொண்டிருந்தால் அவர்களின் தலையில் தட்டி பெண்களை காதலிப்பது எப்படி என சொல்லித் தருவோம். முத்தமே காதலின் திறவுகோல், தீவிரக் காதலும் தீராக் காமமுமே இந்த அற்ப வாழ்வின் ஆதாரம் என்பதை சொல்லிக் கொடுத்து, நூற்றாண்டுகளாக ஆண் மனம் கட்டுண்டு கிடக்கும் பெண்வெறுப்பு ஒழுக்கச் சிக்கல்களிலிருந்து வெளிக் கொண்டு வரப் பாடுபடுவோம். ஜெய் மகிழ்மதி!

No comments:

Featured Post

test

 test