Friday, March 30, 2012

அரவான் - சில குறிப்புகள்

அரவான் திரைப்படம் பார்த்துவிட்டு கூகுல் ப்ளஸில் சில குறிப்புகள் எழுதினேன். வலைப்பூவில் சேமித்து வைக்கும் பொருட்டு மீண்டும் இங்கே பதிகிறேன். இரண்டு வருடங்களாக கூகுல் பஸ்ஸில் எழுதிய, முக்கியமானவையாக நான் எண்ணும் சில குறிப்புகளையும் மீண்டும் இங்கே பதியும் எண்ணம் இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது பதிகிறேன்.

ரவான் படத்திற்கு தனியாகப் போக நேர்ந்தது. படம் முடிந்து வெளியே வரும்போது தலைவலி மண்டையைப் பிளந்தது.படம் முழுக்க பயங்கர இரைச்சல். நிச்சயமாக மோசமான படம் கிடையாது ஆனால் முழுமையான படமாகவும் வந்திருக்கவில்லை. முதல் குறையாக இசையை சொல்ல வேண்டும். Period படம் பார்க்கிறோம் என்கிற உணர்வே எழா வண்ணம் இசை பார்வையாளர்களை கட்டிப் போடுகிறது.இரண்டரை மணிநேரத்தில் இப்படியொரு விலாவரியான கதையை விஸ்தாரமாய் சொல்ல முடிந்திருக்கிறது. எடிட்டிங்கின் ஒத்துழைப்பு அபாரம். சமீபமாய் இவ்வளவு திறமையான எடிட்டிங்கும் கதை சொல்லலும் தமிழ் படத்தில் நிகழ்ந்திருக்கவில்லை.முதற்பாதியின் கச்சிதத்தோடு ஒப்பிடுகையில் இரண்டாம் பாதியின் லாஜிக் மீறல்கள் சற்று சோர்வடைய வைத்தன. ஆனாலும் புதிரின் முடிச்சை மெல்ல மெல்ல அவிழ்க்கும் திரைக்கதை சுவாரசியத்திற்கு வலு சேர்க்கிறது. விவரணைகளின் நுட்பமும் குழப்பமில்லாத திரைக்கதையும் படத்தோடு ஒன்றிப்போக உதவின. தாசிக் கதாபாத்திரத்தை (அதுவும் ஸ்வேதா மேனன் போன்ற கருங்கற் சிலை நடிக்க ஒப்புக் கொண்ட பின்பும்) அநியாயத்திற்கு வீணடித்திருப்பதை நினைத்துத்தான் ஆற்றாமைப் பட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. இருப்பினும் வசந்தபாலன் ஒரு நல்ல கதைசொல்லி என்பதை ஆல்பத்திலிருந்து அரவான் வரைக்குமான படங்கள் நமக்குச் சொல்கின்றன.

அரவான் படத்தின் நொட்டைகளை பட்டியிடலாம் எனத் தோன்றியது. இந்தப் பட்டியலுக்கான அவசியம் கிடையாதுதான் என்றாலும் வரலாற்று/ காலகட்டப் படங்களில் எதையெல்லாம் தவறவிடுகிறோம் அல்லது தவறவிடக்கூடாது என்பது பற்றின யோசனையாக வாசிப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1. அத்தர் வியாபாரியான பரத்தின் வீடு குடியானவர்களின் வீடாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பரத் உள்ளூரைச் சேர்ந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்த அத்தர் வியாபாரம்/வியாபாரிகள் பற்றி நாம் படித்திருந்த வரலாற்றுச் சித்திரம் முழுக்க வேறானவை. எஸ்.ராமகிருஷ்ணனின் யாமத்தை வாசித்திருப்பவர்களுக்கு அத்தர் பின்புலம் ஓரளவிற்கு பிடிபட்டிருக்கலாம்.

2. வீடுகளில் புழக்கத்திலிருக்கும் பொருட்கள், பெண்களின் ஆடைகள், வழக்கத்திலிருக்கும் மொழி இவை குறித்து சற்று கவனத்தைக் செலுத்தியிருக்கலாம்.

3. படத் துவக்கத்திலேயே அலுப்பூட்டும் அளவிற்கு close-up shot களை தவிர்த்திருக்கலாம். காட்டின் பின்னணியில் கள்வர்களின் முகங்கள் வெவ்வேறு கோணங்களில் திரையை நிறைக்கின்றன.

4. ஆதி அரவானாவதற்கான காரணத்தை கச்சிதமாக யோசித்துவிட்டு காரணத்தின் வேரை கோட்டை விட்டிருக்கிறார்கள். முதிர் வயது ராஜா தனியாய் வந்து ராணியுடன் கள்ள உறவு வைத்தவனை கழுத்தறுப்பதெல்லாம் லாஜிக் இல்லாத கற்பனை. போலவே ராஜா அறைக்குள் நுழைந்து கட்டித் தூக்கி வண்டியில் போட்டு விரைந்து வருவதெல்லாம் பூச்சுற்றல்கள். திறமை நிறைந்த கள்வனின் சாகசம் என்கிற சமாதானத்தோடு பார்த்தாலும் அருவி மரணம் என்றெல்லாம் அதை நீட்டித்திருப்பது அபத்தமான கற்பனை.

5. மறைந்து வாழும் பலியாள் கள்வனாவதற்கான காரணம் சொல்லப்படவில்லை. காவலனாக இருந்தவன் கள்வனாவது எளிதுதான் என்றாலும் காரணம்? தவிர மறைந்து வாழவேண்டிய நிர்பந்தத்திலிருப்பவன் வேம்பூர்காரன் எனச் சொல்லி துப்பு கேட்பானா?

6. பாம்பு, காளை என எல்லாவற்றையும் கிராபிக்ஸ் செய்திருப்பது படு செயற்கை.

7. Star Casting களை வீணடித்திருப்பது

8. பாடல் காட்சிகள் மற்றும் இசை

9. கதை நிகழும் காலத்தில்((9 வருடம்) இருந்திருக்க வேண்டிய மாறுதல்கள் பற்றிய கவனமின்மை.

இக் குறிப்புகளில் அரசியல் பிரக்ஞை கிடையாது. இரசனை மன நிலையில் மட்டுமே எழுதப்பட்டன. அரசியல் விமர்சனங்களுக்கு Facebook இல் ராஜன் குறை மற்றும் நண்பர்களின் உரையாடலைத் தேடிப் படிக்கலாம். சுவாரசியமான வாசிப்பு உத்திரவாதம்.

சாடிசத்திலிருந்து காதலுக்கு





ஆஸ்திரிய இயக்குனரான Michael Haneke ன் Funny Games ஐ சமீபமாய் பார்க்க முயன்று தோற்றேன். Sadist வகைப் படங்களை மிக அலட்சியமாய் பார்க்கும் மனநிலை உண்டெனக்கு. ஸ்டேன்லி குப்ரிக்கின் A Clockwork Orange துவங்கி உலகின் பல இயக்குனரால் கையாளப்பட்ட இவ் வகைப் படங்களை ஒரு வித ஆர்வத்துடன் பார்த்துமிருக்கிறேன். irreversible, Antichrist போன்றவை சில உதாரணங்கள். செர்பிய சினிமாவின் மகாமட்டமான A serbian film ஐயும் எரிச்சலோடு பார்த்து முடித்தேன். ஆனால் ஆனால் இந்த Funny Games படத்தை என்னால் முழுவதுமாகப் பார்க்க முடியவில்லை. மனதைப் பிசைந்து ஒரு மாதிரி இறுக்கமும் பயமும் சூழ ஆரம்பித்துவிட்டது. Haneke யின் பியானோ டீச்சரை பல முறை பார்த்திருக்கிறேன். ஒருவகையில் பியானோ டீச்சர் என் புரிதலின் பல சன்னல்களை திறந்து வைத்தது. ஏன் இந்தப் படம் என்னை மிரட்டியது எனதான் புரிந்து கொள்ள முடியவில்லை.மெல்ல நானொரு லேசானவனாக, திடத்தன்மை இல்லாதவனாக மாறிக் கொண்டிருக்கிறேனோ? 


பாதியில் நிறுத்திவிட்டு கொரியன் காதல் படமான My Girl and I ஐப் பார்க்க ஆரம்பித்தேன். பள்ளியில் படிக்கும் பதின்மர்களின் காதல் கதை. ஒரு சின்னஞ்சிறு கிராமம்,பிரமாதமான இயற்கைப் பின்னணி, எப்போதும் பெய்யும் மழை, வழிந்தோடும் அருவியாய் பின்னணி இசை இப்படியாய் காதல் சொட்ட சொட்ட ஒரு படம். லட்சக்கணக்கான படங்கள் இதே கதையைக் கொண்டு எடுக்கப்பட்டுவிட்டனதாம் என்றாலும் இளமையும் அன்பும் வழிந்தோடும் படங்களைப் பார்ப்பதில் ஒருபோதும் சலிப்பேற்படுவதில்லை. மேலும் உலகின் இருண்ட பாகத்திலிருந்து வெறும் சமிக்ஞை மொழியில் காதல் படம் எடுத்தாலும் அதனோடும் தன் சொந்தக் காதலை இணைத்துப் பார்க்கும் அபூர்வ மனம் நிறைவேறாக் காதல் மனங்களைக் கொண்டவர்களுக்கு உண்டு.


Friday, March 16, 2012

இருபது வெள்ளைக்காரர்கள் – குறுநாவல் தொகுப்பு

நண்பர்களுக்கு,

பழி, மழைக்காலம் மற்றும் இருபது வெள்ளைக்காரர்கள் ஆகிய மூன்று குறு நாவல்களும் ஒரே தொகுப்பாய் வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

தொடர்பு கொள்ள

வம்சி பதிப்பகம்
19.டி.எம் சாரோன்
திருவண்ணாமலை
தொலைபேசி 9444867023



Featured Post

test

 test