Tuesday, January 26, 2021

நூரி பில்கே சிலான்


 ’லாக்டவுன்’ காலத்தை நூரி பில்கே சிலானுடன் தான் துவங்கினேன். இனி அலுவலகம் வரத் தேவையில்லை என்கிற விடுதலை உணர்வு, முன் நின்ற பூச்சி பயத்தை ஓரளவுக்குப் பின்னுக்குத் தள்ளியது மேலும் பதுக்கி வைத்திருந்த பியர் போத்தல்கள் அந்த அடைவுக் காலத்தின் ரகசிய மகிழ்விற்கு இன்னும் வலுசேர்த்தன. இஸ்தான்புல் பயணத்தின் மீதங்கள் அப்படியே இருந்ததால் துருக்கியப் படைப்புகள், படைப்பாளர்கள் வழியாக அந்த நகரத்தை மீண்டும் மீண்டும் மீளுருவாக்கம் செய்து கொண்டிருந்தேன். மதியம் மற்றும் முன்னிரவென  ஒரு நாளில் இரண்டு துருக்கியப் படங்களைப் பார்த்தேன். குறிப்பாக சிலானின் படங்கள். ஏற்கனவே பார்த்திருந்த அவரின் ஆறு படங்களையும் மீண்டும் பார்த்தேன். இம்முறை இஸ்தான்புல் நகரத்தின் வீதிகள்,  கடைகள் மற்றும் புராதன அடையாளங்களை நெருக்கமாக உணர முடிந்தது. 

ஒரு தேசத்தின் நிலப்பரப்பும் உணவும் பழகிவிட்டால் மனிதர்களையும் அவர்தம் உணர்வுகளையும் இன்னும் அணுக்கமாகப் புரிந்து கொள்ள முடியும் என்பது என்னளவில் நிஜமாகிற்று. ஒவ்வொரு படத்தையும் பார்த்து முடித்த பின்னர் அதே மனநிலை கொண்ட நண்பர் சுதாகருடன் மணிக்கணக்கில் உரையாடி மேலும் சில நுண்மையான விஷயங்களை மீட்டெடுத்துக் கொள்ள முடிந்தது. குறிப்பாக Winter Sleep திரைப்படம். இதன் பல காட்சிகளை இணுக்கி இணுக்கிப் பேசி மீண்டும் மீண்டும் பார்த்து சிலானின் மேதமையைப் புரிந்து கொண்டோம். 

சிலானின் படங்களில் Three Monkeys படமும்  The Wild Pear Tree படமும் உறவுகளுக்குள் இருக்கும் ஆழமான அன்பையும் முரணையும் மிக உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துகின்றன. மற்ற படங்களில் இருக்கும் கூறமைதி அல்லது நுட்பம் இந்த இரண்டு படங்களிலும் வெளிப்படையாக இருக்கும். 

அவரது ஆரம்பகாலப் படங்களான The Small Town மற்றும் Clouds of May ஆகிய இரண்டும் அவரது சொந்த வாழ்வை அல்லது சூழலை பிரதியெடுத்த படங்களாக அமைந்தன. இரண்டுமே ஒரு பெரிய பயணத்தின் துவக்கங்களாக மட்டும் முடிந்த படங்கள். 2002 இல் வெளிவந்த Uzak திரைப்படம்தான் முழுமையான ஒன்றாக இருந்தது. ஒரு புகைப்படக் கலைஞனின் மனச் சிடுக்குகளைப் பேசும் படமாக வெளிப்புறம் தோற்றமளித்தாலும் உள்ளே மனிதர்கள் தங்களுக்கான இடங்களை பகிர்ந்து கொள்வதில் எவ்வளவு வன்முறையாளர்களாக இருக்கிறார்கள் என்பதைப் படம் மிக நுணுக்கமாகப் பேசியிருந்தது. வன்முறையின் பல்வேறு வடிவங்களை திரையில் பார்த்திருக்கிறேன். ஆனால் சிலான் காட்சிப்படுத்தும் வன்முறை மிக ஆழமானது.

சிலானும் அவரது மனைவி Ebru Ceylan ம் இணைந்து நடித்த படமான Climates இதுவரை நான் பார்த்திருக்கும் காதல் படங்களில் தனித்துவமானது. தன்முனைப்பு, அகங்காரம், காதல், பிரிவு, காமம், சுயநலம் என கணவன் மனைவி உறவுக்குள் இருக்கும் அத்தனை விஷயங்களையும் மூன்றாம் கோணத்தில் பதிவு செய்த படம். சிலான் தன்னையே அந்தப் படைப்பின் அடையாளமாக்கி துருக்கிய சினிமாவின் இன்னொரு நகர்வை சாத்தியப்படுத்தி இருப்பார். 

இதற்குப் பிறகு வெளிவந்த நான்கு படங்களான Three Monkeys, Once Upon a Time in Anatolia, Winter Sleep மற்றும் The Wild Pear Tree உலக அளவில் பெரிய கவனத்தை ஏற்படுத்தின. ’கான்’ சிலான் படங்களுக்கான அங்கீகாரத்தை மிகப் பெருமையாய் வழங்கியது. Once Upon a Time படத்தின் காட்சியமைப்புகளில் மயங்காதவர்களே கிடையாது. காட்சிகளுக்காக மட்டுமே இந்தப் படத்தை திரும்பத் திரும்ப பார்க்கும் நபர்களில் நானும் ஒருவன்.

சிலானை சந்திக்க வேண்டும் என்கிற ஆசையை விட அவர் பதிவு செய்த நிலக்காட்சிகளை காண வேண்டும் என்கிற விருப்பம் நிறைய உண்டு. ஒட்டுமொத்த துருக்கியையும் சிலானின் கண்கள் வழியாய் காணும் காலம் விரைந்து வரட்டும். நூரி பில்கே சிலானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

No comments:

Featured Post

test

 test