Saturday, November 29, 2008

பவழமல்லிப் பூவீன்றவளுடனான அதிகாலை உரையாடல்கள்


இருக்கியா?..
ம்ம்..உள்ள வா
எப்படியிருக்க?
நல்லா..என்ன இந்த நேரத்தில
சும்மா ....நெறய மிதந்து வந்திச்சி ஒரு மாதிரி சொற்களா குவியலா பேச்சா சிந்தனையா..எங்கயாச்சிம் யார்கிட்டயாச்சிம் கொட்டனும் இல்லனா வெடிச்சிடும்.
ம்ம்.. சொல் எனக்கும் ரொம்ப சலிப்பான ஒரு நாள்தான் இது.. பெரும்பாலான நாட்கள்மாதிரி..
உன் வீடு நல்லாருக்கு.. சின்னதா, அழகா, பளிச் னு உன்ன மாதிரி... எங்கிட்டயுமா..போர்..
சரி.. நேத்து ழார் பத்தாயோட விழியின் கதை படிச்சேன்
உங்களுக்கெல்லாம் திடீர்னு என்ன ஆச்சி? ..நாகார்சுனன் பிளாக்ல பார்த்தேன்..கருமம்..கருமம்..
ஆமா.. அது ஒருமாதிரி பண்ணிடுச்சி ...படிச்சிட்டிருக்கும்போதே....பதினம வயசில இப்படி ஆனது...ம்ம்ம்.. சில மூணாந்தரங்கள்.... அதுக்கு பிறகு இப்பதான்..
என்னது?.. ஓஓ... ஓ கே..
ம்ம்...
அதுல என்ன ..... குற்ற உணர்ச்சியா?
இல்ல..ஆனா i frustrate
usual தானே god damn frustrates
Yes i know...
அப்புறம் என்ன ?..ஆடுகள் எப்போது தம்மை ஆடுகள் என உணரத் தொடங்குகிறதோ அப்போது அவை மந்தையிலிருந்து விலகத் துவங்குகின்றன நீதான் இதுன்னு முழுசா எப்ப உன்ன உணர ஆரம்பிக்கிறியோ, அப்ப முழுசா வெளில வந்துடுவ..
ம்ம்..அந்த ஆடுகள் யார் சொன்னது?
கலீல் ஜிப்ரான்
Fuck the philosophers..
ஏன்? அவங்களுக்கு என்ன?..உங்கள மாதிரி கிறுக்குங்க இல்ல.. ரொம்ப தெளிவான நிதானமான ஸ்டேட்மெண்ட்ஸ் தான்... ஆரம்பத்தில பாக்குறப்போ ரொம்ப flat ஆ தெரிஞ்சாலும் நீங்க ஆராய்ச்சி பண்ணி கிழிச்சதும் அவங்க சொன்னதுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணுமில்ல..
இங்க பார் இந்த தத்துவம், தத்துவவாதிங்க இவங்கள லாம் கட்டி வச்சி ஒதைக்கனும்... ரொம்ப சோம்பேறித்தனமான மேலோட்டமான பாசிஸ்ட் தெரியுமா இவங்கலாம்
யார் சொன்னா..உனக்கப்படி படுது அவ்ளோதான்..மொதல்ல accept பண்ணு ..நம்பு..எல்லாத்தையும் குறுக்கில பாக்காதே..
STOP advising me!!!
கத்தாதே..பக்கத்து வீட்ல குழந்தைங்க இருக்காங்க.. விடியற்காலை இரண்டு மணி இப்ப..
sorry
no issues..
இந்த பேச்ச விடு தத்துவம் கலை கவிழ்ப்பு ன்னு போர்..
நீதான் ஆரம்பிச்ச...சரி உன் காதலிகள் எல்லாம் எப்படியிருக்காங்க எண்பத்தி எட்டாவது காதலிய கண்டுபிடிச்சிட்டியா?
ஆமா.. நேத்து ஆர்குட் ல ஒரு பொண்ண பாத்தேன்..சுமாரா கவிதை எழுதுறா..அழகாவும் இருக்கா ....i like her
orkut ல நெறய fake நானே மூணு id வச்சிருக்கேன் :)
இல்ல இவ நெசமாத்தான் இருக்கணும்...
எப்படியோ நல்லா இருந்தா சரி..உனக்குன்னு வந்து மாட்ராளுங்க பார் அவளுங்கள சொல்லனும்....
எனக்கு ஒரு டவுட்... நீ இந்த சாரு இன்னும் எல்லா பொனைவு எழுத்தாளர்களும் காதல், காதலி, சாட், காமம் ,அது இதுன்னு அடிச்சி உடறிங்களா நெசமாவே நடக்குதா இல்ல உங்க புனைவா?...
என்னோட சிறுபிராயத்து முதல் காதலியிலிருந்து எண்பத்தி ஏழாவது காதலியான செர்ஜினா சிமோந்தி வரைக்குமானவங்களோட புகைப்படம் இருக்கு..கடிதங்கள...கடிதங்கள்..தொலைப்பேச்சுகள்..கலவி கொண்டதற்கான தடயங்கள் எல்லாம் எங்கிட்ட இருக்கு அதெல்லாம் உன்கிட்ட காமிக்கிறதில எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல..
சரி..நம்பிட்டோம்..ஆளவிடு...
ஆனா உன்னத்தான் ஒண்ணும் செய்ய முடியல
கழுத்த பிடிச்சி வெளியில தள்ளனுமா இப்ப?..
இல்ல நான் ஆரம்பிக்கல... ஆனா நீ முதல்ல இந்த புனிதக்காரியான ஒரு அடையாளத்தில இருந்து வெளில வா..
இருந்துட்டு போகட்டும்.. உன் flirt லாம் என்கிட்ட மூட்ட கட்டி வச்சிட்டு பேசரதா இருந்தா பேசு... இல்ல எடத்த காலி பண்ணு...
சரி பேச்ச மாத்து... இத நீதான் ஆரம்பிச்ச..
:) சரி..இப்ப ஒண்ணு சொல்லவா?.. உன்கிட்ட எனக்கு பிடிச்சதே இந்த கூர்மையான அவதானம்தான்.. கடைசி subject ல நான் சொன்ன dialogue ஐ correct ஆ இப்ப சொல்ற..how sharp you !!
yes i know but இது பெரிய விசயம் ஒண்ணும் இல்ல க்ரேசி மோகன் கூட இன்னும் ஷார்ப்பா எழுதறான்..
பச்.. அந்த அளவுக்குலாம் தாழ்த்திக்காதே..உன்கிட்ட சரக்கு இருக்கு
yes i know
then what the hell u don't know?
i don't know :)
நீ திமிர் பிடிச்சவந்தான்...
i guss i know eve...ry..thingggg...
சரக்கு போட்ருக்கியா என்ன?
இப்ப இல்ல..காலைல எதிர் போட்டேன்... லைட்டா
இன்னும் இருக்கா?
இல்ல பளிச் னு இருக்கு..
நேத்து அதிகமா?...
ம்ம்..கொஞ்சம் அதிகம்தான்
ஏதாசசிம் படம் பாத்தியா?
frida பார்த்தேன் salma hayek படுத்திட்டா..robert rodriguz triology ல வருவா இல்ல அத விட இதுல செம அழகு.. நீ பாத்த இல்ல desparado?
இல்ல ரொம்ப ரத்தம் அதில.. பாதில மூடிட்டேன்..உன் பேச்ச நம்பி இனிமே படம் பாக்க கூடாது. இனிமே உங்கிட்ட கேக்கவும் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் நீ சொன்னன்னு perfume வாங்கினேன்..அன்னிக்கு என்னால சாப்ட முடியல் u know i vomitted..
இதான் உன்கிட்ட இருக்க பிரச்சின..குரூரம்னு லாம் எதுவும் இல்ல சொல்லப்போனா அழகியல்னு நீ நெனச்சிட்டிருக்க எல்லாம்தான் படு குரூரம்..
ப்ச் ...உன்கிட்ட இந்த சப்ஜெக்ட் பேசி சலிச்சிட்டேன்...நீயும் மாறப்போறதில்ல ..நானும் இப்படியிருக்கதான் ஆசப்படுறேன்..பேச்ச மாத்து..
tinto brass collection வாங்கினேன்
சொன்னியே..நீ அந்த கருமத்தலாம் பாக்குறதுக்கும் ஜோதி தியேட்டர் ரசிகர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?
நெறய இருக்கு..சொன்னா உனக்கு புரியாது..இல்லனா காத பொத்திப்ப..ஆளவிடு
இல்ல நீ சொல் நான் கேட்கிறேன் ஆனா உன் மைண்ட்லெஸ் ட்ங்க் க மட்டும் கொஞ்சம் அடக்கி வாசி..
சரி..காமம் கலவி இதெல்லாம் வெறுமனே நுழைப்புக்குள்ள முடிஞ்சிபோய்டுறதில்ல.பெரும்பாலான மக்கள் உச்சத்த சரியா அடையுறதும் இல்ல அத என்னன்னு உணர்ரதும் இல்ல.காமம் வெறும் சதை அசைப்புகளோடும் மனத் தூண்டுதல்களோடும் முடிஞ்சிபோய்டுது.மூளையிலிருந்து காமம் செயலுக்கு வர்ரதேயில்ல.கலவி ங்கிறது இப்ப பெரும்பாலும் நினைவின் தூண்டுதலா சுயத்தின் வெளித்துப்பலா மட்டும் தான் நிகழுது.இது மனிதனுக்கு ஆரோக்யமானதில்ல.ஓஷோ இத பத்தி பேசி இருப்பார்.மூளையின் நரம்பதிர்வுதான் உடலின் உச்சம்னா அந்த நரம்ப நொடிக்கொரு முறை துடிக்க செய்யும்படி உடல்ரீதியா விஞ்சானத்த கொண்டு அறுவ சிகிச்ச பண்ணிக்கலாம்.every five minute you can get orgasm... நம்ம விஞ்சான சோம்பேறிக் கோமாளிகள் இப்படி நரம்ப அறுவ சிகிச்சை பண்ணி, ஒரு சுவிட்ஜ் ஐ இணைச்சி கைல கொடுத்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு ஒண்ணுமில்ல..ஏன்னா காமம் பத்தின நம்மளோட மேலோட்டமான புரிதல் நம்மை கடைசியா அங்கதான் கூட்டிப்போக போவுது..
சரி காமம் உடல் ரீதியானதுதான்..அன்பால நிறைஞ்சதுதான்.. உடலின் அதி உன்னத முயக்கம்தான் ...நிதானமான அணுஅணுவான துடிப்புதான் ....எல்லாம் ஒத்துக்குறேன்..நான் கேட்டது நீ பாக்குற போர்னோ படங்களுக்கும் ஜோதி தியேட்டர் வகையறாக்களுக்கும் என்ன பெரிய்ய வித்தியாசம்?
சதை அசைவுகள் மட்டும்தான் காமம்னு நினைக்கிறவங்களுக்கு சுயபுயணர்ச்சிக்கு தேவையான பிம்பங்களுக்காக தேடி அலைபவங்களுக்கு அது சரியா படும்.எனக்கு அப்படி இல்ல.நான் காமத்திலிருக்க அதிகாரத்த களைய விரும்புறேன்.நுழைப்புகள் தவிர்த்து உச்சத்திற்கான மாற்றுக்களைத் தேடறேன்னும் சொல்லிக்கலாம்.நீ பியானோ டீச்சர் னு ஒரு படம் பார்.மாற்று உச்சம் பத்திலாம் பிறகு பேசலாம்.உங்கிட்ட விலாவரியா சொல்லி புரிய வைக்க என்னால முடியாது.நீ பார்த்திட்டு சொல்லு அப்புறம் பேசலாம்....
நான் ஏன் பாக்க போறேன்..ஆ ன்னா ஊ ன்னா அதிகாரம் ங்கிற வார்த்தைய பயன்படுத்த ஆரம்பிச்சிடுங்கடா..பெண் வந்து எப்பவும் driven தான் அதிலதான் சந்தோசம் இதில எங்க வந்தது அதிகாரம்?
உன்னமாதிரி middle class முட்டாள்களாலதான் நம்ம சமூகம் உருப்படாம போவுது.
நெனச்சேன் இத சொல்வேன்னு...
எல்லா பெண்களும் driven தானே அப்புறம் ஏன் நம்ம சமூகத்தில இத்தன பாலியல் குற்றங்கள்.கணவனே கண்கண்ட தெய்வம்னு இருக்க வேண்டியதுதானே..
அப்ப வெறும் உடல் இச்சை மட்டும்தான் இந்த குற்றங்களுக்கான காரணம்னு சொல்றியா
ஆமா..எல்லாத்துக்கும் உடல்தான் காரணம். அதுபத்தின அரைகுறை புரிதல்தான் எல்லா வினைக்கான துவக்கங்களும்.
உடலைத் தாண்டி மனம்னு ஒண்ணு இருக்குடா அதுதான் காரணமா இருக்க முடியும்.நீ ரொம்ப குரூரமா சிந்திக்கிற..விட்டா காதல்னு ஒண்ணு கெடயவே கெடயாதும்ப...
ஆமா அப்படின்னு ஒண்ணு கெடயவே கெடயாது...
போடா எனக்கு டயர்ட் ஆ இருக்கு உன்கிட்ட பேசி
baskin robbins icecream பிடிக்குமா ஒனக்கு? இந்த நேரத்தில கட தொறந்திருக்கும் போலாமா?..
இல்ல நான் டீ போடுறேன்...
நான் உன்ன டீ போடவா
செருப்பு பிஞ்சிடும்..
அய்யோ பாவம்
லூசுடா நீ
யெஸ்...இந்த விடியற்காலை நல்லாருக்கு இல்ல..சன்னமான பனி..நீ வேற அழகா இருக்க..கொஞ்சூண்டு புத்திசாலியாவும் இருக்க..என்ன சரியா புரிஞ்சிக்க வேற செய்யுற..முக்கியமா என்ன சகிச்சிக்கிற..இதுக்குலாம் என்ன பண்ணலாம்..
அய்யா சாமி நீ ஒண்ணியுமே பண்ண வேணாம்..ஆளவிடு..உன்ன வூட்ல வுட்டது தப்பா போச்சி..பெரிசா ஆரம்பிக்கிறான்..டேய் நீ செண்டிமெண்டுக்கு விரோதி மாதிரி பேசி கிழிப்ப.. அப்புறம் அப்படியே மென்மையான கவுஞ்சனா மாறிடுவ எப்படிடா இதெல்லாம்?..
நீ என்னோட காதல் கவிதைகள் தொகுப்பு படிச்சியா..அதில ஒரு வரி வரும்.. நீரினடியில் பற்றுதலுக்காய் அலைந்துகொண்டிருக்கின்றன என் மிக மெல்லிய வேர்கள் ன்னு சொல்லப்போனா அதான் நான்..
ம்ம் ஆகாயத் தாமரை.. நல்ல படிமம் டா அது!..எங்கிருந்து பிடிக்கிற நீ இதெல்லாம்
உன்கிட்ட இருந்துதான்..உன் கண்கள்ள இருந்துதான்
யப்பா!! டேய் அடிச்சி வுட்றா...
:) எரும..
நீ அலுத்துகிட்டாலும் பரவால்ல..நான் இத சொல்லியே ஆகனும்..உனக்குள்ள ரொம்ப மென்மையான ஒரு கவிஞன் இருக்கான்டா.அவன பத்ரமா பாத்துக்கோ..உன் காதல் கவிதைகள் தொகுப்பு படிச்சி ரொம்ப சந்தோஷப்பட்டேன்..புள்ள வழிக்கு வந்திடுச்சின்னு நெனச்சேன்..நீ இன்னாடான்னா இப்பவும் இந்த வாய்கிழிய பேசுறத விடல..
நான் நெறய மாறிட்டேன்..நெட் பக்கம் வர்ரதில்ல..கண்டதையும் படிக்கிறதில்ல..போலி, நெஜம், உண்மைய தேடுறேன்னுலாம் ஒளறிக்கொட்றதில்ல..உனக்கு தெரியுமா இப்பலாம் நெறய சினிமா பாட்டு கேட்க ஆரம்பிச்சிட்டேன்..என்னோட பழைய கலெக்சன்லாம் தேடி தேடி ஓடவிட்டுட்டு இருக்கேன்..நைட்ல சத்தமா பாடுறேன்..நேத்து வைரமுத்துவ சிலாகிச்சிட்டு இருந்தேன் தெரியுமா...மலர்கையில் மலர்வாய் க்காக..எத்தன அழகான வரி அது..நான் அத்தன கவனமா கேட்டதில்ல அந்த பாட்ட..ஆசிப் தான் சொன்னார்...இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில மலரனும்யான்னு..அசந்திட்டேன்..எத்தன பெண் தன்மை அந்த வரில..உச்சம் ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில நிகழ்வது அற்புதமான கலவியா இருக்க முடியும்.....
அடப்பாவி உனக்கு இப்பதான் இந்த வரிக்கான அர்த்தமே தெரியுமா?..எனக்குலாம் கேட்ட உடனே பிடிச்சது இந்த வரிதான்...எல்லாரையும் தட்டையா நிராகரிக்கடா நீ..நான் வேணா இப்ப அந்த பாட்ட பாடவா..ஸ்..நே...கிதனே...
ஆத்தா ஆளவிடு..நான் வேணா பாடுறேன்..உன் கொரல கேட்கிற தைரியம்லாம் எனக்கு இல்ல..
போடா வெண்ண..நான் சுமாரா பாடுவேன்..
அத நான் சொல்லனும்..
ஒரு கவித சொல்லேன்
எனக்கு சொல்ல வராதே
ஏன்?.. உனக்கு ஜோ வும்.. மொட்டைமாடியும் ..ஓல்ட்மங்கும் இருந்தாதான் வருமா..பெரிசா பண்ணிக்காதே..சொல்லு..
ம்ம்..சரி
கிளையிலிருந்து உதிர்ந்து
பசிய இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கின்றன

காவி நிறக் காம்புகள் கொண்ட
வெள்ள நிற
பவழமல்லிப்பூக்கள்
அது உன் கண்களிலிருந்து துவங்கி
இதழ்களில்
எப்போதும் தங்கியிருக்கும்
எனக்கான புன்னகையை
நினைவூட்டுகின்றது...

ம்ம்ம் சுமார்தான்.... இது என்ன பூ? பவழமல்லி?
அது ரொம்ப அழகான சின்ன்ஞ்சிறிய பூ நானும் சமீபத்திலதான் பார்த்தேன்..இந்த முறை ஊருக்குப் போயிருந்தப்போ அதிகாலைல ஊர விட்டுத் தள்ளி இருக்கும் ஒரு சிவன் கோவில்ல...அத்தன அழகு அந்த பூ ..பேர் தெரில...கதிர் ப்லாக்ல யாரோ சொல்லி இருந்தாங்க அந்த பூவுக்கு பேர் பவழமல்லின்னு..
சரி ..எனக்கு தூக்கம் வருது..நீ கெளம்பு
ம்ம்..விடிஞ்சிடுச்சி..வர்ரேன்..பை
குட் நைட் டா
குட்மார்னிங்க் :)

(முகமற்ற நேசத்தினுக்கு இந்த இருநூறாவது பதிவு....)

Wednesday, November 26, 2008

ஜோ


எனக்கும் ஜோ என்கிற ஜோசப் மரிய செல்வத்திற்கும் நிறைய ஒற்றுமைகள்.98 ஆம் வருடம் அவன் கடலூரிலும் நான் கிருஷ்ணகிரியிலும் எங்கள் படிப்பை முடித்திருந்தோம்.அவன் காதலியின் பெயரும் என் காதலியின் பெயரும் ஒன்றாய் இருந்ததுதான் எங்களிருவருக்குமான ஆரம்பப் புள்ளி. எல்லைப்பிள்ளைச் சாவடியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு கட்டிடத்தில் நான் வசித்து வந்தேன்.அவ்விடத்தை வீடு என மிகத் தாராளமாகச் சொல்லலாம் . மிகப்பழங்கால கதவுகளையும்,அதி பழங்கால சன்னல்களையும்,சுண்ணாம்பு பெயர்ந்து லேசாக வெளிறிய சுவர்களையும்,வீட்டின் கூடத்தில் இரும்புக் கதவு கொண்ட குளியலறை ஒன்றையும் கொண்டிருக்கும் வினோத வீடு அது.ஒழுங்கீனங்களின் மீது அபார விருப்பம் இருந்ததால் அவ்வொழுங்கற்ற வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பாண்டிச்சேரியில் ஈஸ்வரன் கோவில் தெருவில் இருவரும் பணிபுரிந்தோம்.இரவில் பணி முடிந்து திரும்புகையில் தினமும் என்னோடு லேசாய் குடித்துவிட்டு கடலூருக்குப் பேருந்தில் புறப்படுவான்.பணம் அதிகமாயிருந்த ஒருநாள் மிக அதிகமாய் குடித்திருந்தோம்.அவனை அதே தள்ளாட்டத்தோடு அனுப்ப விருப்பமில்லாததால் என் இளஞ்சிவப்பு நிற லேடி பேர்டு மிதிவண்டியில் அமரவைத்து அழைத்து வந்தேன்.அவ்வீட்டை வெகுநேரம் சிலாகித்துக் கொண்டிருந்தான்.புழுக்கம் மிக அதிகமாக இருந்ததால் குறுகலான, ஒரே ஒரு உருவம் மட்டும் ஏறக்கூடிய மாடிப்படியில் ஏறி,கைப்பிடியில்லாத மொட்டை மாடியில் நின்றபடி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.ஜோவிற்கு ஓல்ட் மங்க் குடிக்க பிடிக்கும். எனக்கும்.எனக்கு கவிதைகள் பிடிக்கும்.ஜோவிற்கும். ஜோவிற்கு நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தால் அவனுக்காய் காத்திருக்கும் காதலியை உடனே திருமணம் செய்துகொள்வான்.நானும்.இன்னும் சின்ன சின்னதாய் நிறைய ஒற்றுமைகள்.

ஒரு ஞாயிறு மாலை பச்சை நிற சூட்கேசுடன் என் அறைக்குக் குடியேறினான். ஜாவா படிக்க போவதாய் சொன்னதை நான் நம்பவில்லை.நாங்கள் பார்த்து வந்த துக்கடா வேலை முடிய இரவு பத்து மணி ஆகும்.பத்து மணிக்கு மேல் ஓல்ட் மங்க் அரைப்புட்டியை கையில் பிடித்துக்கொண்டு கணக்கு வைத்திருந்த மெஸ்ஸில் இரவு உணவையும் வாங்கிக்கொண்டு மொட்டை மாடியில் அமருவோம்.மிக மெதுவாய் குடிப்பது இருவருக்குமே மிகவும் பிடிக்கும்.முதல் மிடறை மிகக்கசப்புகளோடு விழுங்கிவிட்டு சிகரெட்டை பற்ற வைப்பான்.அந்த வண்ணதாசன் கவிதை சொல்லு மச்சி என ஆரம்பிப்பான்.ஜோவிற்கு பிடித்த கவிதைகள் எனக்கு மனப்பாடம்.புழுக்கம் மிகுந்த கோடை இரவுகள் மிகத் தெளிவான வானத்தையும் ஒளிர்விடும் நட்சத்திரங்களையும் பரிசாகத் தருவதுதான் எத்தனை அற்புதம். சாதாரண குரலில்தான் ஆரம்பிப்பேன் அக்கவிதையை, மூன்றாம் வரிகளில் உயர்ந்து,பின் இறுகி,முடிவில் மிகக் கசப்பானதை உமிழ்வது போல என் குரல் மாற்றமடைவதை என்னால் ஒவ்வொருமுறையும் உணரமுடிந்தது.

வயதாகிவிட்டது என் தூக்கத்திற்கும்
வினோத சொப்பணங்களுக்கிடையில்
அரற்றி அரற்றிப் புரள
நசுங்கிக் கிடக்கின்றன தலையனைகள்
தரையில் தாள் நகர்கிற சப்தத்திற்கும்
புத்தகங்கள் சிறகடிக்கிற நுட்பத்திற்கும்
விழித்தும் பதைத்தும் எழுகையில்
கண்காணாமல் போய் விட்டிருக்கிறது
இருளில் கரைந்த இசை ரூபம்

இந்த இடத்தில் நிறுத்திவிட்டு சிகரெட்டை ஜோவிடம் வாங்கி ஒரு முறை உள்ளிழுத்துக் கொள்வேன்.
யார்யாரைக் கைவிட்டீர்கள் உங்களில்
என நகரும் முட்களால் கேள்வி கேட்டபடி
அப்பால் சென்றது காலம்

இதை சொல்லி முடிக்கையில் என் பதட்டம் மிக அதிகமாயிருக்கும்.ஜோ உறைந்து போயிருப்பான். போதை எங்களிருவரையும் தன் அதி உன்னத உலகத்தில் தொலைக்கச் செய்து விட்டிருக்கும்.

அபியையும் ஆத்மாநாமையும் கிறக்கங்களோடு வாசித்த காலம் அது.ஜோவிற்கு அபியை புரிவிக்க நான் அதிகம் மெனக்கெடுவேன்.இந்தக் கவிதையைத் திரும்பத் திரும்பச் சொன்ன ஒரு இரவில் அவன் பைத்தியமானான்.

இந்த விளிம்பிலிருந்து
எட்டிப் பார்க்கையில்
செய்தி எதுவும் தெரிவிக்காத
அமைதிப் பள்ளத்தாக்கு....


ஜோ புரியல ஒய்.. புரியல ஒய்... என அரற்றத் துவங்கினான்.இரு மச்சி! இரு மச்சி!! இப்ப பார்
மொட்டை மாடியை ஒட்டிய தண்ணீர் தொட்டியின் மீது ஏறினேன்.இதாண்டா விளிம்பு..சிமெண்ட் சிலாபுகள் கொண்டு மூடப்பட்டிருந்த அத்தொட்டியின் நுனியில் என் பாதங்கள் ..இதாண்டா பிடிமானம் எதுவுமில்லாத விளிம்பு..பார்.பார்..இங்கிருந்து மெதுவா எட்டிப் பாக்கிறேன்..நீதான் பள்ளத்தாக்கு.. செய்தி எதுவும் தெரிவிக்காத அமைதிப்பள்ளத் தாக்கு.அ மை தி ப ள் ள த் தா க் கு அ வை உயர்ந்த குரலில் ஆரம்பித்து க் ல் அடங்கி கு வை காற்றாக வெளியிட்டேன்...
மச்சி நீ கீழ இறங்கு!.. விழுந்திடப்போற..எனக் குழறியபடி உறங்கிப்போனான்.நான் கவிதையை பிரசங்கித்த கிளர்வில் மேலிருந்தபடியே சிமெண்ட் சிலாபுகளில் உறங்கிப் போனேன்.

ரத்னா தியேட்டரில் அய்ரோப்பியத் திரைப்படங்களை எப்போதாவது திரையிடுவார்கள். ஒருநாள் அத்திரையரங்கைக் கடக்கையில் பை சைக்கிள் தீஃப் படம் திரையிடுவதை அறிந்து பார்க்கச் சென்றோம்.திரைப்படம் முடிந்து வெளியே வந்த பிறகு எங்களிருவ்ரையும் அழுத்தமான மெளனம் சூழ்ந்திருந்தது.என் நினைவு முழுக்க திருடமுயன்று பிடிபட்ட அச்சாமான்யனின் வெளிறிய முகமும்,கால்கள் வலிக்க அலைந்த சிறுவனின் பசியும் நிறைந்திருந்தது.ஜோ மெதுவாய் பணமிருக்கிறதாவெனக் கேட்டான்.இல்லையெனத் தலையசைத்தேன்.குடிச்சாதான் தூங்கமுடியும்னு தோணுதுடா! என்றான் எனக்கும் அப்படித்தான் இருந்தது.சாலையில் கடந்து போகும் முகங்களில்,தெரிந்த முகங்கள் எது தென்பட்டாலும் உடனடியாய் கடன் வாங்கிவிடும் தீர்வுடன் வெகு நேரம் நின்றுகொண்டிருந்தோம்.அலுவலக வாசலில் டீ கடை வைத்திருக்கும் ராமு மிதிவண்டியில் கடந்தான் புட்ரா மச்சான் அவன! என கத்தியபடி விரட்டிப் பிடித்தோம்.இன்னா மிசே ரோட்ல!! என்றவனை பேசவிடாது அவன் சட்டைப்பைக்குள் துழாவி அய்ம்பது ரூபாயைத் தேற்றினோம்.அப்போதிருந்த மனநிலைக்கு அது போதாதெனத் தோன்றிற்று. ராமு இன்னோரு அம்பது ரெடி பண்ணு! என்ற ஜோ வை மிகக் கடுமையாய் முறைத்தபடி கைகளை உதறினான்.இருந்தது அவ்ளோதான் என்றவனை அதிகம் பேசவிடாது நட கடைக்குப் போகலாமென அவனையும் தள்ளிக்கொண்டு கடைக்கு வந்தோம்.இன்னொரு அய்ம்பது ரூபாய் வியாபாரம் நடக்கும் வரையில் உட்கார்ந்திருந்து அதையும் பிடுங்கிக் கொண்டு அரைப்புட்டியோடு அறையை வந்தடைந்தோம்.இதை எழுதும்போது கூட சோர்வு மிகுந்த அச்சிறுவனின் முகம் என் நினைவில் வந்து போகிறது.அத்திரைப்படம் குறித்து மாற்றி மாற்றி அரற்றினோம்.ங்கோத்தா! அந்த ஓட்டல்ல ஒக்காந்து சாப்டுவானுங்க பாரு ப்ப்பா! என்னா சீன் டா தாயோலி சாகடிச்சிட்டாண்டா..

வெகு சீக்கிரத்தில் நெருக்கடிகள் எங்களிருவரையும் ஆக்ரமிக்கத் தொடங்கின.இடம் பெயர்வது குறித்து யோசிக்கத் துவங்கினோம்.அடுத்த வேலை எதுவுமில்லாத நிலையில் இருந்த வேலையும் தூக்கி எறிந்து விட்டு திசைக்கொருவராய் விலகினோம்.செட்டில் ஆனா சொல்றன் மச்சி இதுதான் நாங்கள் கடைசியாய் பேசிக்கொண்டது.நான் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சுற்றி அலைந்தேன்.கைவசமிருந்த ஒரே பிடிமாணத்தையும் தொலைத்து விட்டு துபாய் கிளம்பி வந்துவிட்டேன்.ஜோவிற்கும் பிடிமாணம் தொலைந்ததை தெரிந்து கொள்ள முடிந்தது.அவன் எங்கிருக்கிறானெனத் தெரிந்து கொள்ள விருப்பமில்லை.நான் அவனையும் என்னை அவனும் பார்க்க நேரிடும் சூழலின் அபத்தங்கள் மிகக் குரூரமாய் இருக்கக்கூடுமென நம்பினேன்.சென்ற வருட இறுதியில் அவனிடமிருந்தது ஒற்றை வரியில் மின்னஞ்சல் வந்திருந்தது.செட்டில் ஆயிட்டண்டா..நானும் அதே வரிகளை எழுதி அனுப்பினேன்.

இந்த வருட துவக்கத்தில் சென்னை அசோக் நகர் தண்ணி டேங்க் பூங்காவில் சந்திப்பதாய் முடிவு செய்தோம்.ஜோ கொஞ்சம் பூசியிருந்தான்.அவனை வெளிறிய வெள்ளை/ கோடு போட்ட சட்டைகளிலேயே பார்த்திருந்தது.இப்போதவன் அடிடாஸ் ஜோ வாக மாறியிருந்தான். ரே பானை உயர்த்தியபடி பல்ஸரிலிருந்து இறங்கினான். உள்ளுக்குள் நிறைவும் மகிழ்வும் ஒரே நேரத்தில் பொங்கியது. வா! ஒய் என கட்டிக்கொண்டேன்.அவனும் துபாய் தண்ணியா ஒய் செம கலராயிட்ட எனக் கிண்டலடித்தான்.
டகீலாவா எறங்குது மச்சான் என சத்தமாய் சிரித்தேன்.அப்ப நம்ம பிராண்ட அடிக்கிறதில்லையா நீ! எனக் கோபித்தான்.இல்ல மச்சி என சிரித்துக்கொண்டேன்.
எவ்ளோடா வாங்குற? என்றான்
ஒண்ணர மச்சான்
அடி தூள் எங்கயோ போய்ட்ட
நீ என்றேன்
அறுவது தொட்டண்டா
இருவரும் மிகக் கவனமாய் அந்தக் கேள்விகளைத் தவிர்த்தோம்.குடிக்க அழைத்தேன்
இல்ல மச்சி.. என்னோட கொலீக்.. ஒரு பொண்ணு... இப்பதான் நாலு மாசம்.. அவளோட வெளில போற ப்ளான்..என வார்த்தைகளை மென்றான்.லேசாய் நெளிந்தான். சந்தோஷமாயிருந்தது.சரிடா கெளம்பு நீ நான் அடுத்த லீவ்ல வரும்போது வீட்ல தங்குறா மாதிரி வர்ரேன் என விடைபெற்றுக்கொண்டு பிரிந்தேன்.சொல்ல முடியாத உணர்வில் கண்மண் தெரியாமல் குடிக்க வேண்டும் போலிருந்தது..சிகரெட்டினைப் பற்றவைத்துப் புகையை ஆழமாய் உள்ளிழுத்தேன்.மறுபடியும் ஜோ..
இன்னாடா... போவல?
நாம ஜெயிச்சிட்டமா மச்சி? என்றான்.அவன் முகத்தில் படிந்திருந்த பரிதாபத்தை துயரத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.விழிகளைத் தாழ்த்திக் கொண்டேன்.என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.அவன் பைக்கை திருப்பிக் கொண்டு விரைந்து கடந்தான்.

Photo from Dictionary of Khazars play

Saturday, November 15, 2008

வாரணம் ஆயிரமும் முதல் முத்தமும்


திரைப்படம் பார்த்து முடித்த பின்பு லேசாய் குடித்தால் நன்றாகவிருக்கும்போல் தோன்றியது. இரவு பதினோரு மணிவாக்கில் Grand ல் போய் அமர்ந்தேன்.மூன்று வாரங்களாய் தொட்டிராத பியர் வாசனை தந்த மகிழ்வை விட வெகு காலம் கழித்து நம் சூழலில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் நிறைந்திருந்தேன்.உறவுகள் தொடர்கதை யென கிதார் பின்னனியில் தொடங்கும்போதே மகிழ்வாய் இருந்தது.ரயில், மழை, கிதார், காதல் என பதின்மங்களை புரட்டிப்போடும் காட்சியமைப்புகள்.நெடிய திரைப்படத்தில் அங்கங்கு கவிதைத்தனம்.(அவளோடு வாழ்ந்த தொண்ணூ்று நாள் ஒரு இளையராஜா பாடல் மாதிரி).கல்லூரியில் படிக்கும்போது எல்லாருக்கும் ஒரு கனவிருக்கும். கையில் ஒரு கிதார், ஒரு அழகான பெண், என் இனிய பொன்நிலாவே, வென தன்னைப் பிரதானப்படுத்தி காட்சிகள் பகல்கனவில் விரியும்.அதை திரையில் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்வு அளவில்லாதது.சூர்யா- சமீராரெட்டி காதல் ஒரு இளமை fantasy.

அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு நமது சூழலில் அழுகாச்சி காவியங்களாகவே சொல்லப்பட்டிருக்கிறது.முதன்முறையாய் இயல்பான, நட்புரீதியிலான, நெகிழவைக்கிற, அற்புதமான கதை சொல்லல் இத்திரைப்படத்தில் சாத்தியமாகி இருக்கிறது.கிருஷ்ணன் கதாபாத்திரம் தமிழ்சூழலுக்கு மிகவும் புதிது.நானா படேகர் இப்பாத்திரத்தில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான் என்றாலும் சூர்யாவின் உழைப்பு எவ்வகையிலும் உறுத்தவில்லை.உடல்மொழி, குரல், உடைத்தேர்வுகள் காட்சியமைப்புகளென கிருஷ்ணன் கதாபாத்திரம் மிகக் கச்சிதம்.பதின்ம சூர்யா, கல்லூரி சூர்யா, காதல் சூர்யா, பொறுப்பான சூர்யா, தடுமாறும் சூர்யா, அலையும் சூர்யா, திரும்பும் சூர்யா, உழைக்கும் சூர்யா, சாகச சூர்யா, குடும்ப சூர்யா,அப்பா சூர்யா,சந்தோஷமாய் மரணிக்கும் சூர்யா ..மூச்சுமுட்ட வைக்கும் சூர்யாக்கள்.ஒவ்வொரு காட்சியிலும் புதிய சூர்யாவை பார்க்க முடிகிறது.ஒரு திரைப்படத்திற்காக உழைக்கும் கலைஞனை பார்க்க மகிழ்வாய் இருக்கிறது.சுயசரிதைப் படங்கள் பிரதான பாத்திரத்தின் உழைப்பைக் கோருபவை Raging Bull ல் Robert di niro அபரிதமாய் உழைத்திருப்பார்.ஒரு குத்துச் சண்டை வீரனாய் ஆரம்பித்து குடிகார குப்பனாய் மாறும் வரையிலான உடலை அப்படியே நம் முன் கொண்டு வந்திருப்பார். சூர்யாவின் உழைப்பும் உலகத் தரம்தான்.

இந்த படத்தில் நொட்டை சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.நீளத்தை வெட்டியிருக்கலாம்,தேவையில்லாத காட்சிகளை நீக்கியிருக்கலாம், இன்னும் கச்சிதமாக்கியிருக்கலாம், தமிழில் பேசியிருக்கலாம், இப்படி ஏகப்பட்ட லாம்கள்.ஆனால் சுயசரிதை படங்கள் கசாமுசா வென இருப்பது தான் எனக்குப் பிடித்திருக்கிறது.நேர்கோட்டில் எவரின் வாழ்வும் இல்லை.அப்படி நேர்கோட்டில் சொல்வதெல்லாம் சுயசரிதைப் படங்களாக முடியாது.கெளதம் தன் அப்பாவிற்கு செலுத்திய மிக உயர்ந்த பட்ச நன்றியாய் இப்படம் இருக்கலாம்.சினிமாவை நேசிக்கும் மிகச் சொற்பமான நபர்களுக்கு நிச்சயம் இத்திரைப்படம் பிடிக்கலாம்.
.............................................................

வியர்வைக் கசகசப்புகள் மிகுந்த ஒரு வன்கோடையின் பின் மதியத்தில்தான் நிகழ்ந்தது அது.அழுக்கேறிய தலையணைகள், எப்போதுமே மடித்திராத போர்வைகள், சுருட்டியிராத பாய்கள் எங்களைச் சூழ்ந்திருந்தன.அடுத்தவரின் படுக்கையறையை ஆவென வாய்பிளந்து சன்னலின் வழி உள்நுழைந்து பார்க்கும் சூரியனை ஒரு கனமான போர்வையினைக் கொண்டு தடுத்திருந்தேன்.முருங்கை மரமொன்றும்,மாமரமொன்றும் மிகச் சோம்பலான நிழலை,மென் காற்றை, இணைப்பாய் தேன் சிட்டுகளின் ட்விட் ட்விட்டை தந்துகொண்டிருந்தன.எவ்வித முன் தீர்மாணங்களும் அந்நிகழ்விற்கு இல்லை.வெளிர் நீலமும் வெளிர் பச்சையும் எனக்குப் பிடித்தமான நிறங்கள்.அன்றைய நாளில் பச்சை நிறம் உடுத்தியிருந்த அப்பச்சை நிற தேவதையின் நெற்றி வியர்வை நீர்,அவளின் மென் சங்கு கழுத்திலிறங்கும் காட்சி மழைக்காலத்தில் வெள்ளைக் கோட்டின் சாய்ல்களில்,பாறையின் மீது வழுக்கும் தற்காலிக அருவியினை நினைவூட்டியது. நீர் அருந்தும் மனநிலைதான் இருந்ததெனக்கு.மிகுந்த தாகத்துடன் அந்நீரைக்குடித்துவிட முனைகையில் அஃதொரு முத்தமாய் வடிவமெடுத்தது.முத்தங்கள் வடிவமிலிகள், உருவமிலிகள், எண்ணற்றத் தன் பெருக்கிகள், உடையக் காத்திருக்கும் நீர்க்குமிழிகள், உடைவதற்காய் ஏங்கும் உயிருள்ள கூடு முட்டைகள்.மேலும் முத்தங்கள் உடைந்த நொடியில் பறக்கத் துவங்கும் அசுர வளர்ச்சி கொண்டவை யாகவுமிருக்கின்றன.சமதளத்திற்கு வெகு சீக்கிரத்தில் வந்து விட விரும்பாத முத்தங்கள் இலக்கற்ற வெளியில் தன் எழுச்சியைத் தொலைத்து மீண்டும் திரும்புகின்றன.நாங்கள் மீண்டு திரும்பியபோது சூரியனை மறைக்க ஆரம்பித்திருந்தன அடர் கரு மேகங்கள்.

(கென்னிற்கு....)

Wednesday, November 12, 2008

ஆசிப்பும் உலகத் திரைப்படங்களும்
The Diving bell and the butterfly சற்றும் எதிர்பார்க்காமல் /தேடாமல் பார்க்கக் கிடைத்தது .முதல் இருபது நிமிடங்கள் என்ன நிகழ்கிறது என்பதை சரியாய் புரிந்து கொள்ளமுடியவில்லை.உடலின் அனைத்து பாகங்களும் செயலிழந்து போன ஒருவனின் ஒரே ஒரு விழியினூடாய் மொத்த திரைப்படமும் நகர்கிறது.விழியின் முன் வந்து போகும் செவிலிகள், மருத்துவர்கள், கூரை, என படம் அலைந்தபடி இருக்கிறது.மொத்த படத்தையும் இப்படித்தான் பார்க்கநேரிடுமோ என்கிற வியப்பும் வரத்தவறவில்லை.சன்னாசியின் பக்கத்தில் இத்திரைப்படம் குறித்த சில குறிப்புகளும் உதவியாய் இருந்தன.ஒரு முறை விழியசைத்தால் ஆம் இரண்டு முறை விழியசைத்தால் இல்லை இப்புரிதல்களோடு விபத்துக்குள்ளானவர் தான் எழுத ஒத்துக்கொண்ட புத்தகத்தை எழுதி முடிக்கிறார்.படம் பார்த்து முடித்த சில நாட்களுக்கு பிறகு சுஜாதாவின் கற்றதும் பெற்றதுமை கழிவறையில் மேய்ந்துகொண்டிருந்தபோது இத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அறிதல் முறை குறித்து சில குறிப்புகள் எழுதி இருந்ததையும் படிக்க முடிந்தது.சிந்திக்கும் போது மூளையில் ஏற்படும் மெதுவான நுண் மின் அலைகலை (Slow critical potential)ஆம்/இல்லை வகை கேள்விகளுக்கு விடையாக கட்டுப்படுத்தமுடியுமாம்.யுத்தத்தில் அத்தனை இயக்கங்களையும் இழந்த போர்வீரர் ஒரு வரை பேசவைத்த குறிப்பையும் தந்திருந்தார்.

சமீபத்தில் எத்தனையாவது முறையாகவோ ஆசிப்பிற்காக desperado வை பார்க்க நேரிட்டது.Robert rodriguz ன் குருதி தெறிக்கும் அட்டகாசமான ஆரம்பகாலப் படங்கள் தமிழ் மசாலா படங்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை.ஆனாலும் மிக விறுவிறுப்பான காட்சியாக்கங்களில் பார்வையாளனை திரும்ப திரும்ப படத்தை பார்க்கவைக்கும் யுக்தி இவருக்குத் தெரிந்திருக்கிறது.El mariachi யின் சம தள கதை சொல்லலை ஹாலிவுட் மிகை வண்ணங்களைப் பூசி Desperado வாக கொடுத்திருப்பார்.ரசனை அடிப்படையில் எனக்கு el mariachi தான் பிடிந்திருந்தது என்றாலும் salma hayek கிற்காக desperado வை அதிக முறை பார்த்தேன்.இவர் திடீரென தடம் மாறி குழந்தைகளுக்கான படங்களை எடுக்கத் துவங்கியது குறுநகையை வரவழைத்தது.ஆனால் spy kids ன் இரண்டு பாகங்களையும் அக்காவின் குழந்தைகளோடு பார்க்கநேரிட்டதால் அப்படங்களையும் என்னால் ரசிக்க முடிந்தது.குழந்தைகளுடன் குழந்தைகளுக்கான சாகச படங்களை பார்க்க நேரிடுவது அலாதியானது.திரும்பவும் ரத்தம் தெறிக்கும் sinsity யை இவர் படமாக்கியபோது அதில் மிக குரூரமான காட்சிகளை comicical ஆக மாற்றியிருப்பார் இது இன்னொரு வகையில் காட்சியமைப்பின் வீர்யத்தை குறைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.2010 மற்றும் 2011 களில் sinsity யின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.

The Dreamers திரைப்படத்தை பார்த்துவிட்டு ஆசிப் இசா இசா என புலம்பிக்கொண்டிருந்தார்.hilary duff படங்கள் பார்த்து சந்தோஷப்படும் மனிதரை இன்னும் சிறிது வதைக்க ஆசைப்பட்டு pasolini யின் Decameron யையும் மறுபடியும் பார்த்தேன்.முதல் அரை மணி நேரத்திற்கே மனிதரின் விழி பிதுங்கிவிட்டது.திரையின் மூலம் புனிதங்களை உடைத்தவர்களில் pasolini முக்கியமானவர்.கி.ரா மற்றும் கழனியூரான் தொகுத்திருந்த மறைவாய் சொன்ன கதைகள் மற்றும் கி,ராவின் நாட்டுப்புற பாலியல் கதைகளைப்போல இத்தாலியின் நாட்டுப்புற பாலியல் கதைகளை படமாக்கியிருப்பார்.இரண்டாவது கதையில் பெருக்கெடுத்து ஓடும் convent Nun களின் காமம் திருச்சபைகளின் புனிதங்களை உடைத்தது.இவரின் Oedipus Rex படம் கைவசமில்லாததால் மனிதர் தப்பித்தார்.

உச்ச வதையாக Master of Erotica என அழைக்கப்படும் Tinto Brass ன் P.O.Box Tinto Brass திரைப்படத்தைப் பார்த்தோம்.மிக அதிக பட்ச கிளர்ச்சிகளைத் தரும் படம். இத்திரைப்படம் மருத்துவருக்கு பெண்கள் அனுப்பும் கடிதங்கள், புகைப்படங்கள், வீடியோ டேப் களிலிருந்து விரிகிறது.திரை முழுக்க வரும் பெண்கள் மிக அதீதமான கவர்ச்சியுடையவர்கள்.உடலை மிக அதிக பட்சமாய் ஆராதிக்கும் ஒவ்வொரு காட்சிகளும் கிளர்ச்சியினைத் தூண்டுபவை.உடல் ...உடல் ...உடல்... திரை முழுக்க உடலாயும், துரோகங்களாயும், நிறைவேறாமையும் பொங்கிப் பிரவகிக்கும் படமிது.இத்திரைப்படத்தை முழுமையாய் பார்த்த புண்ணியவான்களிடம் கேட்க என்னிடம் ஒரு கேள்வியிருக்கிறது :)

Saturday, November 8, 2008

வா.மு.கோமு வின் கள்ளி

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வா.மு.கோமுவின் முதல் நாவல் இது.கொங்கு வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் தொடும் தளம் விடலைத் தனம்.எவ்வித திரிபுகளுமற்ற கொங்கு மொழியின் அசாத்தியம் இந்நாவலில் சாத்தியமாகி இருக்கின்றது.வட்டார வழக்கில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நாவல்களில் இதையும் இனிமேல் சேர்த்துக்கொள்ளலாம்.கொங்கு வாழ்வினை தளமாக கொண்ட இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதில் பெருமாள் முருகனுக்கு முக்கியப் பங்கு உண்டு.ஆனால் இவராலும் அம்மக்களின் வாழ்வை இலக்கியப் பாங்கோடுதான் படைக்கமுடிந்தது.வா.மு.கோமு செய்திருப்பது அசாத்திய மொழி உடைப்பு.இலக்கியம் நுழைய முடியாத அல்லது இலக்கிய வடிவினில் சேர்க்க விரும்பாத,சேர்க்கத் தயங்கிய பல கூறுகளை எவ்வித தயக்கமும் இல்லாது நேரடியாய் பேசுகிறது இவரின் மொழி.

எல்லாப் பக்கங்களிலும் மது பொங்கி வழிகிறது.காமம் கரைபுரண்டோடுகிறது.கற்பு,ஒழுக்கம் என எவ்வித பம்மாத்துகளுமில்லாது காமத்தினை ஒரு விளையாட்டாய் விளையாடித் தீர்க்கிறார்கள் இவரின் கதை மாந்தர்கள்.நள்ளிரவு,விடியல்,முன்னிரவு, என எல்லாப் பொழுதுகளிலும் வெட்ட வெளி,பாறை இடுக்கு, முட்காடு, எவருமற்ற அந்நியன் வீடென எங்கெங்கிலும் புணர்ந்து திரியும் இவரது கதை மாந்தர்களுக்கான அடிநாதம் தீராக்காமமாயும் பருவத் தெறிப்பாகவுமிருக்கிறது.

இது தவிர்த்து இந்நாவல் தொட்டுச் செல்லும் இன்னொரு தளம் மாதாரிகளின் கொண்டாட்டமும் அவலமுமான வாழ்வு.மேலதிகமாய் கவுண்டர்களின் ஆதிக்கத் திமிர்களையும் பண்ணைய முறைகளின் வன்முறைகளையும் கோடிட்டுச் சென்றிருக்கிறது.விடலைத் தனம் நிரம்பியிருப்பதால் மிக அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்க வேண்டிய பல விதயங்களை சற்றே தொட்டுவிட்டு மதுவில் கரைந்து போகிறது இந்நாவல்.முதல் அத்தியாயத்தில் தொடங்கிய வீச்சும், புதுத்தளமும், புதுமொழியும், அசாத்திய நகைச்சுவையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வலுவிழந்து போகிறது.எனினும் கிண்டலும், கேலியும், காமமும் சேர்ந்து நாவலை ஒரே மூச்சில் படிக்க வைக்கும் மனநிலையைத் தந்துவிடுகிறது.நாவலைப் படிக்கும்போது சத்தம் போட்டு சிரித்தது கடைசியாய் எந்த நாவலுக்கென மறந்து போய்விட்டது.ஆனால் எத்தகைய உம்மணாமூஞ்சிகளையும் வெடித்துச் சிரிக்க வைக்கும் அசாத்திய மொழி இந்நாவலில் சாத்தியமாகி இருக்கிறது.

கடைசி அத்தியாயத்தில் தாங்கிப் பிடிக்கும் ஆதிக்க மனோபாவ கொடி முதல் அத்தியாயத்திலிருந்து சொல்லப்பட்ட விளிம்புசார் நிலையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.கடைசி அத்தியாயத்தை நம்ப எனக்கு சிறிது நேரம் பிடித்தது.லேசான எரிச்சலும் மண்டியது.எழுத்தாளனுக்கான கடமை இதுவென எதையும் வலியுறுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் தான் எழுதும் தளத்தின் வீச்சை, தேவையை உணர்ந்து கொள்ள வேண்டியது எழுத்தாளன் செய்ய வேண்டியது.
இவரின் எழுத்துக்கள் பெண்ணியவாதிகள் கண்ணில் பட்டதா எனத் தெரியவில்லை.பெண்மைத் தனங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கியிருக்கிறார்.காமம் மட்டுமே பிரதானமாய் கொண்ட பெண்களை மட்டுமே உலவவிட்டிருக்கிறார்.போதாக் குறைக்கு இந்நாவலை அவரின் காதலி/மனைவிக்கு சமர்பித்திருக்கிறார்.மிக அசாத்திய துணிச்சலராய் இருக்கவேண்டும்.
இரண்டு முன்னாள் காதலிகள்..

ஜப்பானிய இயக்குனரான Yasujiro Ozu யின் இரண்டு திரைப்படங்களைப் பார்க்க நேரிட்டது.ஜப்பானிய திரைப்படங்களின் ஊடாய் அவர்களின் கலாச்சாரம், வாழ்வு, தொன்கதைகள், பண்பாடு, இவற்றை அறிய நேரிடுவது அலாதியானது.மிகப் பெரும்பான்மையான புள்ளிகளில் திராவிட கலாச்சாரங்களோடு அவைகள் ஒத்துப்போவது மிக ஆச்சர்யமான ஒற்றுமை.உலகமெங்கிலும் உள்ள வழமைகள் ஒன்றுக்கொன்றுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவைதான் என்றாலும் ஜப்பானியர்களை என்னால் மிக நெருக்கமாக உணர முடிகிறது. 1959 ல் வெளிவந்த இவரின் Ukigusa aka The floating Weeds திரைப்படம் ஒரு மறுபதிப்பு.1934 ல் இவர் கருப்பு வெள்ளையில் எடுத்த சலனப் படத்தை 1959 ல் வண்ணப்படமாக பிரசித்தி பெற்ற ஒளிப்பதிவாளர் Miyagawa வினால் மீணடும் எடுக்கப்பட்டது.Miyagawa அகிராவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்.

1.The floating Weeds


இத்திரைப்படம் Kabuki கலைஞர்களின் வாழ்வைப் பேசுகிறது.ஜப்பானிய தொன்கலைகளில் ஒன்றான Kabuki கிட்டத் தட்ட நமது தெருக்கூத்துக் கலைக்கு ஒப்பானது.சிறு குழுவாய் நகரெங்கிலும் பயணிக்கும் இக்கலைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் தங்கி தங்களின் நிகழ்ச்சியை நடத்துவார்கள்.அக்குழுவின் தலைமை நடிகர் Komajuro, அவரின் மனைவி Sumiko, இளம் நடிகை Kayo, உள்ளிட்ட குழுவினரோடு கடற்கரையோர கிராமத்திற்கு ஒரு வெயில் தகிக்கும் மதியத்தில் சென்றடைகிறார்கள்.அந்நகரத்திற்கு இக்குழு ஏற்கனவே வந்திருக்கிறது.ஆனால் இப்போதிருக்கும் பலர் அப்போதிருக்கவில்லை.Komajuro வின் ரகசிய மனைவி அல்லது முன்னாள் காதலி இந்நகரத்தில் தனது வளர்ந்த மகனோடு வசித்து வருகிறாள்.இவர்களின் உறவை அவள் மகனுக்கும் தெரிவித்திருக்கவில்லை.மாமா எனவே இவரைத் தெரிந்துவைத்திருக்கிறான்.இவர்களின் உறவு sumiko விற்கு தெரிந்து போகிறது.தன் கணவனை பழி வாங்கும் பொருட்டு அவர் மிகவும் நேசிக்கும் அவரின் மகனை தன் குழுவில் இருக்கும் இளம் பெண்ணை வைத்து காதலிக்க வைக்கிறாள்.அதன் மூலம் குழப்பங்கள் ஏற்படுகின்றன.அவரின் மகனுக்கும் இவர் தந்தை என தெரிந்து போகிறது.அவரின் எதிர்ப்பை மீறி அவ்விளம் நடிகையை மணந்து கொள்கிறான்.இடையில் அக்கலைக்குழு தோல்வியடைகிறது. மொத்தப் பணத்தையும் இழக்கிறார்கள். தலைமை நடிகர் பிற நடிகர்களை திருப்பி அனுப்புகிறார்.இறுதியில் அவரின் முன்னாள் காதலி, மகன், என எல்லாரையும் துறந்து அந்நகரை விட்டுச் செல்கிறார்.ரயில் நிலையத்தில் அவரால் ஏற்கனவே துரத்தியடிக்கப்பட்ட மனைவி்யோடு இணைந்துகொள்வதாய் படம் நிறைவடைகிறது.

குறுகலான ஜப்பானிய தெருக்கள், வெயில் உண்டு வாழும் சாமான்யர்கள்,கோபமும், ஆத்திரமும், வன்மமும், பெருமிதமும் , கொண்டாட்டமுமான பல்வேறு பாத்திரங்கள் என இத்திரைப்படம் தனது மண்சார்ந்த பதிவுகளை மிக நேர்த்தியாய் நம் முன் வைக்கிறது.

2.Kohayagawa-ke no aka The End of Summer(1961)சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் என்று கூட இத்திரைப்படத்தை சொல்லலாம்.காலமும் சூழலும் ஒரு குடும்பத்தை வெவ்வேறு தளங்களுக்குள் கொண்டு செல்வதையும், இழப்பு/மகிழ்வு, வெறுமை/அன்பு என இரு வேறு நிலைப்பாடுகள் மத்திய தர வாழ்வை மாறி மாறி அலைக்கழிப்பதையும் நேர்த்தியான பின்புலம் கொண்டு சொல்லியிருக்கிறார் Yasujiro Ozu.மனைவியை இழந்த ஒரு குடும்பத் தலைவன்,மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண், இந்தக் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களைத் திரைப்படமாக தந்திருக்கிறார்.இதிலும் வெக்கை மிகுந்த வெயில் படம் முழுவதும் பயணிக்கிறது.மிக நேர்த்தியான ஒளிப்பதிவு,ஒத்திசைவாய் அற்புதமான இசை, எனக் காட்சி இன்பத்தினைத் தூண்டும் பதிவாக்கம் வேறொரு மனநிலைக்கு பார்வையாளனை அழைத்துச் செல்கிறது.இத்திரைப்பபடத்தை ஒளிப்பதிவு செய்திருப்பவர் Tomoichi Nakai.இவர் குறித்த தகவல்கள் எதுவும் இணையத்தில் காணப்பெறவில்லை.மிகுதி எனச் சொல்லப்படும்படியான கதை சொல்லல்கள் இல்லாதிருந்தது ஆச்சர்யத்தைத் தந்தது. நகரும் மேகத்தைப் போல, கடக்கும் கணத்தினை போல, மிக இயல்பான காட்சிப் பதிவாக்கம் மிகவும் நெகிழ்வுத் தன்மைக்கு தள்ளியது.

வயதான Kohayagawa-ke (Ganjiro Nakamura) தனது பொறுப்புகளிலிருந்து விலகி பழைய காதலியின் வீட்டிற்கு அடிக்கடி செல்கிறார்.கணவனை இழந்த முதல் பெண், வாய் துடுக்கு மிகுந்த இரண்டாவது மகள், படிக்கும் மூன்றாவது மகள்,அதிக விஷயஞானமில்லாத மகன் என அனைவரும் தந்தையின் இச்செயலின் மீது மனவருத்தம் கொள்கின்றனர்.தந்தையின் மீதிருக்கும் அபரிதமான அன்பை மய்யமாக கொண்டிருக்கிறது இத்திரைப்படம்.பொறுப்பில்லாத தகப்பனார்கள் தரும் அயர்ச்சி விவரிக்க இயலாதது.அவரின் உடல்நிலை கெடும்போது நால்வரும் பரிதவித்துப் போவதும்,அவரின் வயதுக்கொவ்வாத செயல்களின் மீது ஏற்படும் வெறுப்பை நேரிடையாய் வெளிக்காட்ட முடியாததுமாய் தவிக்கும் காட்சிகள் நடிப்பின் உச்ச சாத்தியங்கள்.மரணம் குறித்தான உரையாடல்கள் தென்னிந்திய தத்துவங்களின் மறுபதிப்பாக ஜப்பானில் உலவும் ஒற்றுமை இன்னொரு ஆச்சர்யம்.முதல் மகளாய் நடித்திருந்த பெண்ணின் கண்களில் ஒளிர்ந்த கருணையும் அமைதியும் வெகுநேரம் கட்டிப்போட்டது.சுற்றியுள்ளவர்களிடத்தில் அன்பை பொழியும் இவளின் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது.

இரண்டு திரைப்படங்களின் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பவர் Ganjiro Nakamura தலைமை கலைஞனாகவும்,வயதான தகப்பனாகவும் இரண்டு படங்களிலும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.இரண்டிலும் பொதுவான அம்சம் old Flame ஆக இருக்கிறது.

பதின்மங்களின் கிளைகளில் பூக்கும் காதல் பரவசங்கள்,விலகிப் போக நேரிடின் அவற்றைப் பின் தொடராதிருப்பதே அப்பரவசங்களுக்கு நாம் தரும் மிகக் குறைந்த பட்ச மரியாதையாய்/ நன்றியாய் இருக்கமுடியும்.இன்றளவிலும் அவளின் திசையறிய எவ்வித முயற்சிகளுக்கும் மெனக்கெட்டதில்லை.எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாய்த்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன்,முதல் காதலும் இன்னும் சில முத்தங்களும்..

Featured Post

test

 test