Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Wednesday, March 22, 2017

கூடு திரும்புதல்

இந்த வலைப்பக்கத்தை எட்டிப் பார்த்து மாதங்களாகின்றன. எழுதியோ,வருடமாகிறது. ஃபேஸ்புக் யுகத்தில் போய் என்ன ப்லாக்ஸ்பாட் ! என்கிற அலுப்பு மட்டுமே இந்தப் பக்கத்தில் எழுதாமல் விட்டதற்கான காரணமாய் இருக்க முடியாது. எழுதி என்ன ஆக? அல்லது எழுத என்ன இருக்கிறது? என்கிற விட்டேத்தி மனநிலைதாம் முக்கியக் காரணம்

ஒரேயடியாய் சேர்ந்து கொண்ட சினிமாப் பித்தும், இலக்கிய அடையாளமாகவிருந்த மனதிற்குப் பிடித்த சில முகங்களின் பரிதாபகரமான காரிய வெளிறல்களும் எழுத்தின் மீதான வாஞ்சையை சற்றல்ல, நிறையவே குறைத்திருக்கின்றன. இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் எல்லாத் துறையிலேயும் நிகழும் தேய்மானம் தான் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

இதையெல்லாமா எழுதுவது? என்கிற கூச்சமும் சென்ற சில வருடங்களில் என்னிடம் அடையாய் அப்பியிருந்தது. ஃபேஸ்புக்கில் நெகிழ்ந்த சில வியாழன் இரவுகளில் மட்டும் எதையாவது கிறுக்கி வைக்கப் போய்,பின்பு அதுவே வழக்கமானது. சில நெருங்கிய நண்பர்கள் இதைப் புரிந்து கொண்டு என் குறிப்பைப் பார்த்து நாளை நினைவு கொள்வதாய் கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அவசரமாய் விழித்துக் கொண்டு வியாழன் இரவுக் குறிப்புகளை நிறுத்தினேன்.

 முன்பு எப்போதுமே இல்லாத அசாத்திய அமைதி இப்போது வாய்த்திருக்கிறது. மேலும் நிதானப்பட்டிருக்கிறேன். மனதின் பைத்திய நிழல்களையெல்லாம் துரத்தி அடித்தாயிற்று. சிறுமை, மனநோவு, கோபம், பற்றாக்குறை, பேராசை என எதுவுமில்லை. முழுமையாய் மகிழ்ச்சியோடிருந்தல் என்பது இப்போதுதான் சாத்தியப்பட்டிருக்கிறது. மற்றவர்களின் பிழைகளையும் என்னுடைய பிழைகளையும் முழுமையாய் மறந்துவிட்டு ஒவ்வொரு நாளையும் புத்தம் புதிதாய் எதிர் கொள்கிறேன். நோய்மையுற்றிருந்த உடல், மனம் இரண்டும் வலுப் பெற்றிருக்கிறது.

 எழுத மட்டுமே விரும்புபவன் எங்கே போவேன்? எங்கெங்கோ சுற்றி விட்டு மீண்டும் கூட்டிற்கே வருகிறேன். எழுத்தே என்னைச் சேர்த்துக் கொள்.

Sunday, November 30, 2014

கூண்டுப் புளி

நேற்று இரவு முழுவதும் ஒரு நொடி கூட என்னால் தூங்க முடியவில்லை. ஒரு முழு இரவையும் கொப்பளிக்கும் எண்ணங்களோடும், குற்ற உணர்வோடும், இயலாமையோடும் கழித்தது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். வாழ்வில் ஏரளமான தூங்க முடியாத நிசிகள் இருந்திருக்கின்றனதாம் என்றாலும் விடியலில் எப்படியாவது தூக்கம் இழுத்துக் கொண்டுவிடும். ஆனால் நேற்று அப்படி ஒன்று நிகழவேயில்லை. மனம் குழப்பத்திலும் கழிவிரக்கத்திலும் சஞ்சலித்தபடியே இருந்தது. இப்படியான போராட்ட மனநிலைக்கான காரணத்தை எழுதக் கூச்சமாக இருக்கிறது. வெட்கமும் அவமானமும் பிடுங்கித் தின்றபடியே இருக்கிறது. இனி தனியாகக் குடிப்பதில்லை. அப்படியே குடித்தாலும் இணையத்தைத் திறப்பதில்லை என்கிற கறாரான முடிவிற்கும் வந்திருக்கிறேன். வெள்ளி இரவு நிலையில்லாமல் உளறிக் கொட்டி ஒரு ஆன்மாவின் முகச் சுளிப்பிற்கும் கோபத்திற்கும் உள்ளானதை எண்ணி வெட்குகிறேன். அதற்குப் பிராயச்சித்தமாக என் ஃபேஸ்புக் கணக்கை முடக்கியிருக்கிறேன். கூகுல் ப்ளஸ் என்னை அத்தனை விகாரங்களோடும் ஏற்றுக் கொண்டு விட்ட இடம் என்பதால் முதல் நாள் உளறி அடுத்த நாள் அழிப்பது வழக்கமாகவே மாறிவிட்டது. அதைக் குறித்து வெட்கமேற்படாதவாறு வழமை பார்த்துக் கொள்கிறது.

என் தனிமையை எந்த அளவிற்கு கொண்டாடுகிறேனோ அந்த அளவிற்கு அதைக் கண்டு பயப்படுபவனாகவும் இருக்கிறேன். கட்டவிழ்த்த வனாந்திர வெளியும் சுதந்திரமும் என்னை அதிக உற்சாகமடைய வைக்கும் அதே நேரத்தில் அந்த மிகு வெளி குறித்து மிரட்சியும் அடைகிறேன். எனக்கு கூண்டுதான் சரியாக இருக்கும். கூண்டில்தான் என்னால் மனச் சமாதானங்களோடு வாழ்ந்து கொள்ள முடிகிறது. கூண்டின் பாதுகாப்பு குறித்து அதன் வழமைகள் குறித்து அதன் சோம்பல் தன்மை குறித்து இந்தப் புளிக்கு மிகுந்த ஆசுவாசங்கள் இருக்கின்றன. செய்ய ஒன்றுமே இருக்காத வாழ்வை எப்படி ஒரு மனம் விரும்ப முடியும்? ஒரு நாள் முழுக்க எதையுமே செய்யாமல் கடத்தும் தடித்தனம் எப்படியோ வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது. அந்த தடித்தனத்தில் ஊறி மூளையும் உடலும் மட்கிக் கொண்டிருக்கிறது. இலைகள் மட்கினால் சரி. மரமே மட்குவதை என்ன செய்து சரி செய்ய முடியும்?

 சும்மா இருப்பதுதான் பெரிய விஷயமாகிற்றே. "கிட சும்மா" என சமாதானமாகிவிடலாமென்றாலும் சதா பகற் கனவில் மூழ்கும் மனதின் ஓயாத பேராசையைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதென்ன சுயமிது? இத்தனை ஆசைகளையும் கனவுகளையும் இதன் ஆழத்தில் யார் வந்து கொட்டியிருப்பார்கள்? மனம் பேராசையின், சுயப் பெருமிதத்தின், பகட்டு வெளியின் நாயகனாகத் தன்னை அலங்கரித்துக் கொள்கிறது. போகுமிடமெல்லாம் ராஜாதி ராஜப் பின்னணிக் குரல் காதில் விழுந்து கொண்டே இருக்கவேண்டுமென விரும்புகிறது. பச்சையாக சொல்வதென்றால் சில சினிமாக்காரர்களின் பகட்டு வாழ்வை அருகிலிருந்துப் பார்த்துவிட்டு தானும் அதுபோல மாறிவிட இந்தப் புளி கொட்டையைப் பிதுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சினிமாப் பித்திலிருந்து வெளிவர புத்தக வாசிப்பைத் துரிதப்படுத்தி யிருக்கிறேன். என் நமுத்த வழமைகளில் இருந்து சீக்கிரம் வெளியே வர வேண்டும். மாலையில் கர்ம சிரத்தையாய் நடப்பது. இசை கேட்பது. புத்தகம் படிப்பது. குறைவாய் படம் பார்ப்பது. குறைவாய் உண்பதென திடீரென வாழ்வு நம்ப முடியாத ஒழுங்கிற்கு திரும்பிவிடும். அந்த கணத்திற்காக காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு செய்ய ஒன்றும் இல்லை. ஃபேஸ்புக்கைத் தொலைத்திருப்பதால் மீண்டும் வலைப்பூ வில் நாட்டம் செல்லத் துவங்கியிருக்கிறது. எழுதாமல்தான் நான் துருப்பிடித்துப் போனேன். இனி எழுதி எழுதி என்னை மீளக் கொணர்வேன்.



Wednesday, January 2, 2013

2012




 வேறெப்போதும் உணர்ந்திராத மன அமைதியை இந்த வருடத்தில் பெற்றேன். பெரும்பாலான இரவுகளில் பயல்களுக்கு கதை சொல்லிக்கொண்டே பயல்களுக்கு முன்பாகவே தூங்கிப் போனேன். தேவையில்லாத எண்ணங்கள், அநாவசியக் கற்பனைகள், சதா குழம்பித் திரியும் மனம் என எல்லாவற்றிடமிருந்தும் என்னைத் துண்டித்துக் கொண்டேன். வெளி உலகத் தொடர்புகள், நண்பர்கள், ஊர்சுற்றல், வார இறுதிக் குடி போன்றவையும் என்னைத் துண்டித்தன. மிகக் குறைவாகத்தான் யோசித்தேன். மிகமிகக் குறைவாகத்தான் எழுதினேன். மூன்று குறுநாவல்களின் கரு மனதில் விழுந்திருந்தாலும் அதிலேயே மனம் ஊறிக் கிடக்காததால் எழுத முடியவில்லை. ஒவ்வொரு நாளும் துளிர்க்கும் பசுஞ்செடியைப் போல் இச்சிறு பிள்ளைகள் வளர்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களின் வேகத்திற்கு, துடிப்பிற்கு, உற்சாகத்திற்கு ஈடுகொடுக்க இன்னும் உயிர்ப்போடு இருக்க வேண்டியிருக்கிறது. Wide Awake, Alertness  போன்ற பதங்கள் எல்லாம் ஞானவாழ்வில் மட்டுமல்ல குமாஸ்தா வாழ்விலும் உண்டு என்பதை இந்தப் பயல்கள் கற்றுத் தருகிறார்கள். ஒரு நாளில் நூறு ஏன்-ம்பா? விற்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் கண்முன் விரியும் காட்சிகள் அனைத்தும் ஏன்? என்கிற கேள்வியோடுதான் முடிகின்றன. சில பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு சும்மா- பா என்கிற பதிலையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன்/றோம்.

மனதை தொந்தரவு செய்யும் எந்த செய்திகளையும் மேய்வதில்லை. இந்த வருடத்தில் பார்த்த படங்களை விட பாதியில் நிறுத்தின படங்கள் அதிகம். “நீ இப்ப ஒரு குழந்த மாதிரி ஆகிட்ட தெரியுமா?” என நம்பமுடியாத குரலில் இவள் சொல்வதைக் கேட்டு புன்னகைக்க முடியவில்லை. அவ்வளவு மோசமாக இருந்தேன் என்பதை நினைக்க வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய? எல்லா உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் முழுமையாய் உணர்ந்துவிட்டே வெளிவர விரும்புகிறேன். தீயைத் தீண்டி அறிய விரும்பும் மனம். பிறருக்கு என்னால் நேர்ந்த துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் நானே என்கிற புள்ளிக்கு திமிர் பிடித்த மனம் மெல்ல நகர்வதை உணரமுடிகிறது. எம்பிஏ  முதல் வகுப்பில் தேறியது. புதுக் கார் வாங்கியதென குமாஸ்தா சாதனைகளும் இவ்வருடத்தில் உண்டு. என்னை வற்புறுத்தி, நச்சரித்து, திட்டு வாங்கிக் கொண்டு, படிக்க வைத்த மனைவிக்கு எம்பிஏ வும், சீட்டை மட்டுமே தேய்ப்பவனுக்கு நிறைய சம்பளம் கொடுக்கும் அரசிற்கு காரும் சமர்ப்பணம்.

இந்த வருடத்தில் நீலகண்டப் பறவையைத் தேடி – நாவலை வாசித்துவிட முடிந்தது. மிக வேகமாக வாசித்து முடித்து விட்டு சில பகுதிகளை மீண்டும் வாசித்தேன். மன எழுச்சி என்கிற பதத்தை படிக்க நேரிடும்போதெல்லாம் ஒரு சின்ன ஏளனப் புன்னகை தோன்றும். ஆனால் நீலகண்டப் பறவை தந்த உணர்வை வார்த்தையில் கடத்த தோற்றுப் போய் அதே மன எழுச்சியையே துணைக்கழைக்கிறேன். ஆம் இந்த நாவல் மிகுந்த மன எழுச்சியைத் தந்தது. முதல் வேலையாக எழுதிக் கொண்டிருந்த குறுநாவலை நிறுத்திவிட்டேன். என்ன மாதிரியான குப்பை இது? என என் எழுத்தின் மீது கோபம் வந்தது. ஒரு பெரும் மரத்தைத் தொட்டுப் பார்த்து இரண்டு வருடங்களாகப் போகின்றன, என்னால் எந்த மாதிரியான எழுத்தைத் தந்துவிட முடியும்? நான் ஏன் எழுத்து என்கிற பெயரில் குப்பையைச் சேர்க்கிறேன்? என அடுக்கடுக்காய் கேள்விகள் முளைத்த ஒரு இரவில் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு தூங்கப் போய்விட்டேன். கொஞ்சம் இந்திய க்ளாசிக்குகளை படிக்கலாம் என தூக்கத்தின் நடுவே நினைத்துக் கொண்டேன்.

பயல்களின் அனுமதி இல்லாமல் டிவி பார்க்க முடியாததால் சாகசப் படங்கள், குறிப்பாக அனிமேட்டட் படங்களாக பார்த்துத் தள்ளினோம். ஹேப்பி ஃபீட் வகையறாக்களோடு மியாசகி படங்களையும் கலந்து கட்டி இரு தரப்பும் திருப்தியடைந்து கொண்டோம். பயல்கள் தூங்கிய பின்பு நல்ல பிரிண்ட் கிடைத்த புதுத் தமிழ் படங்களையும் விடாமல் பார்த்தோம். டோனி காட்லிஃப் படங்களைக் குறித்து எழுத ஆரம்பித்து அதையும் இரண்டு பதிவுகளோடு நிறுத்திக் கொண்டேன். ஏனோ தெரியவில்லை தொடரமுடியவில்லை. சமீபமாய் கண்டறிந்த இன்னொரு இயக்குனர் Emir Kusturica. செர்பிய இயக்குனர். இவரின் Time of the Gypsies படம் பல அதிர்வுகளைத் தந்தது. இவரின் மற்ற படங்களையும் பார்த்து விட்டு எழுதவேண்டும். இப்படியாய் ஜிப்சி படங்களைப் பார்த்து, ஜிப்சி இசையைக் கேட்டு, வாழ்வு அனுமதித்தால் ரோமானிய தேசங்களில் சுற்றி அலைந்துவிட்டு, ஜிப்சிக்களைப்பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்கிற எண்ணத்தையும் இங்கே பதிந்து வைக்கிறேன். 

அகிரா வைக் குறித்தும் ஒரு நூல் எழுத வேண்டும். அல்லது கட்டுரைகளாவது எழுத வேண்டும். ஆனால் உலகின் பெரும்பாலானவர்களால் எழுதி,பேசி, சலிக்கப்பட்டுவிட்டவர் அகிரா. புதிதாக அவரை எந்த கோணத்தில் எழுதி விட முடியும்? என்கிற சலிப்பும் கூடவே எழுகிறதுதான். ஆனால் எழுத்து இரண்டாம் பட்சம் முதலில் சற்று விழிப்பாய் மீண்டும்அகிரா படங்களைப் பார்ப்போமே என ஆரம்பித்து விட்டேன். செவன் சாமுராய், yojimbo, The bad sleeps well ஆகிய மூன்று படங்களை  கடந்த இரண்டு நாளில் பார்த்தேன். செவன் சாமுராயை என்னுடன் பார்த்த மனைவி “கொள்ளைக்காரர்களுக்கு பதிலாய் யானையைப் போட்டால் அப்படியே கும்கி படம். இப்படியா அட்ட காப்பி அடிப்பாங்க? “ என அங்கலாய்த்தபடியே சாமுராய் அல்லாத ஒருவனுக்கும் கிராமத்துப் பெண்ணுக்கும் ஏற்படும் காதல் அப்படியே  கும்கியில் சுடப் பட்டிருப்பதையும் சொன்னாள். மேலும் “அடிக்கிறது அட்ட காப்பி ஆனா டிவில வந்து உட்கார்ந்துட்டு, கால்மேல கால் போட்டுட்டு நானே ஜிந்திச்சேன்னு பேட்டி கொடுக்கறத பாத்தாதான் பத்திட்டு வருது” என பொரிந்து தள்ளினாள். அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு ஒரு பிரபல ப்ளாக்கர் ஆவதற்கான எல்லாத் தன்மைகளும் உன்னிடம் இருக்கின்றன எனச் சொன்னேன் “ஏ! பே” எனச் சொல்லிக்கொண்டே எழுந்து போய்விட்டாள்.



Monday, October 1, 2012

குள நடை

நான் வசிக்கும் பகுதியில் ஒரு பூங்கா இருக்கிறது. நல்ல விஸ்தாரமான பூங்கா. ஏராளமான மரங்கள், பரந்த புல்வெளி, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல் அத்துடன் இரண்டு கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு பெரிய குளம் ஒன்றும் உண்டு. நடப்பதற்கு தோதாய் குளத்தைச் சுற்றி இரப்பர் பூசிய நடைபாதை அமைத்திருக்கிறார்கள். நடை பாதை வழியெங்கும் அடர்ந்த செடிகொடிகளும், மரங்களும், ஏராளமான பறவைகளும், குறிப்பாய் சிட்டுக்குருவிகளின் கீச்சுச் சிறகடிப்புகளும் உடன் வரும். நடப்பதற்கோ அல்லது இளைப்பாறுவதற்கோ மிகச் சிறந்த இடம். கடந்த ஒரு வருடமாய் வார இறுதி நாட்களில் பயல்களை அழைத்துக் கொண்டு போய்வரும் இடம்தான் என்றாலும் ஒரு முறை கூட நடக்கப் போனதில்லை. ஒவ்வொருமுறையும் பூங்காவிலிருந்து திரும்பும்போது நாளையிலிருந்து நடக்க ஆரம்பிக்கவேண்டும் என நினைத்துக் கொள்வதோடு முடிந்து போய் விடும். ஆனால் சமீபமாய் வழக்கத்தைப் பொய்யாக்கிவிட்டு நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.

செய்ய ஒன்றுமே இல்லாமல் ஒரு நாளை வைத்துக் கொள்வதில் முனைப்பாக இருக்கும் என்னுடைய இயல்பும், மனைவியின் இண்டர்நெட் சமையலறிவும் சேர்ந்து என்னுடலைப் பதம் பார்த்திருக்கின்றன. புளிமூட்டை அல்லது அரிசிமூட்டை கணக்காய் உடல் பெருத்திருக்கிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் மனிதர்கள் என்னை அடையாளம் கண்டறிய முடியாது திகைப்பதைப் பார்த்து நானும் அவர்களோடே திகைப்பேன். அலுவலகத்தில் நடக்கும் உடல்நல முகாம்களில் வெள்ளைக் கோட்டணிந்த லெபனீஸ் பெண்கள் வயிறைத் தட்டிக் காட்டி சைகையால் குறைத்தே ஆகவேண்டும் என்பார்கள். புன்னகைத்து வைப்பேன். ஆனால் சமீபமாய் நடந்த ஒரு சம்பவம்தான் உடனடியாய் நடக்க தூண்டுதலாக அமைந்தது.

வழக்கமான ஒரு உடல்நல முகாம். அதே வழக்கமான லெக்சர்கள். பிபி, கொலஸ்ட்ரால் சோதனைகள். எல்லாம் முடிந்து ஒருவர் சொன்னார் உங்களின் Metabolic age 45. சற்றுக் கடுப்புடன் என்ன! இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள் எனக் கேட்டேன். உங்களின் மிகச்சரியான எடை அறுபது கிலோதான் பதினைந்து கிலோ அதிகமாக இருக்கிறீர்கள் என்றார். கோபப்பட்டு உடனடியாய் முகாமை விட்டு வெளியேறினேன். மாலை க்ரீன் டீ டப்பாக்கள், கொள்ளு சகிதமாய் வீட்டிற்கு போய் மனைவியிடம் என் வயது நாற்பத்தைந்து என்றேன். அடுத்த நாள் காலை காபிக்கு பதிலாய் ஊறவைத்துக் கொதிக்க வைத்த கொள்ளு நீரைத் தந்தாள். அதற்கடுத்த நாள் மாலை நடக்க ஆரம்பித்து விட்டேன்.

உற்சாகமாத்தான் இருக்கிறது. அவ்வப்போது வாங்கும் எலெக்ட்ரானிக் வஸ்துக்களை பயல்களே ‘இரு’ கை பார்த்துவிடுவதால் பாட்டுக் கேட்டு நடக்கும் பெரும்பான்மைகளின் கும்பலில் தனித்துத் தெரிகிறேன். தொடர்புக்கு ஒரு சாம்சங் போன் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கிறது ஆனாலும் அதைப் பேசுவதற்கு மட்டும்தான் பயன்படுத்த முடிகிறது. இயற்கையின் இசையை விட வாத்தியங்களின் இசை பெரிதா என்ன? குளிர்காலம் துவங்கிவிட்டதால் ஏராளமான பறவைகள் வர ஆரம்பித்துவிட்டன. நடக்கும்போது உடன் வரும் பறவைகளின் கீச்சுக் குரல்களுக்கு நிகரேது? மிக ரம்மியம். மாதத்திற்கு மூன்று கிலோ குறைப்பதுதான் இப்போதைய இலக்கு. பத்து நாள் நடந்துவிட்டு பதினோராம் நாள் சுத்த போர்,டைம் வேஸ்ட், இப்ப குண்டா இருந்தா என்ன? என்றெல்லாம் கிளம்பாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

Tuesday, June 19, 2012

உயிர்த்திருத்தல்

சதத் ஹசன் மண்ட்டோவின் தலைப்பு மறந்து போன சிறுகதை ஒன்றில் அப்பா கதாபாத்திரமொன்று தொடர்ந்து வீட்டை/ தரையை சுத்தம் செய்தபடி இருக்கும். சிறு சிறு கூரான துரும்புகள் எங்கே தன் சின்னஞ்சிறு மகனை காயப்படுத்திவிடுமோ வென தொடர்ந்து அஞ்சியபடி இருக்கும். கடந்த மூன்று வருடங்களாய் நானும் அக்கதாபாத்திர மனநிலையில்தான் பெரும்பாலும் உழல்கிறேன். இந்த அசட்டுத்தனமான எண்ணங்கள், தேவையற்ற பயங்கள் யாவும் புதுத்தகப்பர்களின் இயல்பு - போகப்போக சரியாகிவிடும் என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்ட ஆரம்ப நாட்கள், இப்போதைய என்னைப் பார்த்து கேலியாகச் சிரிக்கின்றன. இன்னமும் மோசமான, பயங்களின்/ கற்பனைகளின் உச்சத்திற்குத்தான் நகர்ந்திருக்கிறேனே தவிர எவ்வித சமநிலை திரும்பலும் இல்லை. சொல்லப்போனால் பயம் துவங்கிய நாளிலிருந்து அடுத்த ஒண்ணரை வருடத்தில் இரட்டிப்பானதே தவிர சமநிலைக்குத் திரும்பவேயில்லை. இந்த பயங்களும், கற்பனைகளும், மிகைகளும் என்னைப் பலவீனனாக்கி இருப்பதை தனிமையில் புரிந்து கொள்கிறேன். ஏற்கனவே சோம்பேறியான என்னை வீட்டை விட்டு நகரவே நகராத அதி சோம்பேறியாக மாற்றியிருப்பதும் உண்மை. ஆனால் என் வாழ்வின் மிக சந்தோஷமான,உயிர்ப்பான நாட்கள் இவை என்பதையும் மறுப்பதற்கில்லை ( ஆமாம் நீ எப்போதுதான் துக்கமாயிருந்தாய்?)

பெரியவன் லொடலொட வென பேசிக்கொண்டே இருக்கிறான். சின்னவன் அவன் பேச்சைப் பார்த்து சொற்களற்ற குரலை அதே பாவத்தில் உயர்த்துகிறான். நால்வருமே சேர்ந்து கோரஸாய் கத்தி அவ்வப்போது வீட்டை அலற வைக்கிறோம். ஓடி, குதித்து, விழுந்து, வாரி, சுவறில் மோதி, பொருட்களை உடைத்து, கத்தி, சிரித்து, பயந்து, பயமுறுத்தி, பாடி, ஆடி ஒவ்வொரு நொடியையும் உயிர்ப்பாக்குகிறோம். புற உலக மனிதர்கள் தவிர்த்து எண்ணற்ற கதைகள், கதாபாத்திரங்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள், பேய்கள்(Bயா,காஞ்சனா) என எங்களின் உலகம் சகல வஸ்துக்களாலும் நிரம்பி வழிகிறது. பிங்குவும் ஷான் த ஷீப்பும் எங்களின் மூன்றாம் நான்காம் பிள்ளைகள். ஒரு உச்சத்தில் இதயம் விரிந்து கண்ணில் படும் அத்தனை சிறார்களும் எங்களின் பிள்ளைகளாக பாவிக்கும் பெரும்கருணையும் வந்து சேர்ந்திருக்கிறது.


அவதார், ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட், ஹேப்பிஃபீட், குங்க்பூபாண்டா, தமிழ் ரைம்ஸ், காக்கா –நரி கதைகள், குத்துபாட்டுக்கள் போன்றவைகளால் கூடம் நிறைகிறது. சோதனை முயற்சியாக சென்ற வாரத்தில் காஸ்ட் அவே வை பெரியவனோடு சேர்ந்து பார்த்தேன். டாம் ஹாங்க்ஸ் நெருப்பை வரவழைக்கும் காட்சிக்கு கண்கள் வியந்து ஆர்ப்பரித்தான். மெல்ல கதையை அவனுக்கேற்றார்போல் மாற்றி அங்கிள் டாமின் அவல நிலையை அவன் வார்த்தைகளில் மொழி பெயர்த்து ( பல்ல சரியா தேய்க்காததால அங்கிள்க்கு சொத்த பல்லு வந்திருச்சி, பிஷ் சாப்ட்றாம்பா, அங்கிள பியா கட்ச்சிருச்சா, காஞ்சனா(படம் வரையப்பட்ட பந்து) கடல்ல வுந்திரிச்சி, செம செமயா மழ, போட்ல போறான்) பாதிப் படம் பார்த்தோம். அலைகள் டாமை மீண்டும் கரை சேர்த்தபோது இவன் சோர்ந்து ”டி.வி பாத்தா கண்ணு கெட்டுடும்” என திடீர் நல்ல பிள்ளையாகி எழுந்து போய் சுவிட்சை நிறுத்தினான். பின்போர் இரவில் சில்ரன் ஆப் ஹெவன் படத்தையும் அவனுக்கு மொழி பெயர்த்தேன். சாகஸ காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் அச்சிறுவர்களின் முக பாவனைகள் இவனைப் பெரிதும் ஈர்த்தது. அலி ஓடி ஜெயிக்கும் காட்சிக்கு பெரியவன் ஆர்ப்பாட்டமாய் சிரித்தும், என் மனைவி கண்கள் நிறைந்துமாய் இரு வேறு மனப் பதிவுகளை வெளிப்படுத்தினர். தாய்மையின் உச்சத்தில் அலியும் சாராவும் இப்போது வளர்ந்திருப்பார்களா? சினிமா நடிக்கிறார்களா? எனக்கேட்ட மனைவிக்கு இணையத்தில் தேடிப் பார்த்து சொல்வதாய் சொன்னேன்.
 0 
சமீபமாய் மீண்டும் ஓஷோவை கேட்க ஆரம்பித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஓஷோவின் உரைகள் புத்துணர்வைத் தருவதென்னவோ உண்மை. தம்மபதா குறித்த உரைகளை தொடர்ந்து கேட்டதன் விளைவு, முன்பொரு காலத்தில் நான் விபாஸனா பயின்றது நினைவிற்கு வந்தது. இணைய நண்பர்கள் வழியாய் தம்மபதாவின் மூல வடிவம், மகாவசம்சம் போன்றவைகளை படிப்பதற்காக தரவிறக்கி வைத்திருக்கிறேன். மிக முக்கியமாக விபாஸனாவை மீண்டும் தூசி தட்ட வேண்டும் என்ற எண்ணமும் வந்திருக்கிறது. செய்ய வேண்டியவைகளின் பட்டியலில் தினம் ஒன்று கூடுவதாக இன்றளவும் வாழ்வு அமைந்திருப்பதில் திருப்தியே. என் ப்ரியத்திற்குறிய சோம்பலன் மிக நீளமான to-do பட்டியலில் புதிய வார்த்தை ஒன்றை இன்றும் எழுதிவிட்டு தூங்கப் போகிறான். தூக்கம் தழுவுவதற்கு முன்பு என்னுடைய கனவு இடத்தின் (மரங்கள் சூழ்-நீர் சூழ்-மலைகள் சூழ் ) சாணத் தரையில் பாய் விரித்து சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்றைத் தேடியெடுத்து முதல் பக்கத்தைப் பிரிக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அந்த மென்சூழலிலும் தூக்கமே தழுவுகிறது. நீங்கள் கிம்-கி-டுக் கின் the isle படத்தில் நீர் அசைவுடன் -படகு வீட்டில்- காற்றின் முணுமுணுப்போடு இருவர் தூங்கும் காட்சியை நினைவுபடுத்திப் பார்க்கலாம். நானும் அக்காட்சியைத்தான் கனவப்போகிறேன்.

Tuesday, April 13, 2010

முப்பது வருடங்கள்

பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத் தறுவாயோ ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?
வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.
அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ ?
எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?
- தேவதேவன்


முப்பது வயதைக் கடந்திருக்கிறோம் என நினைக்கையில் லேசான ஒரு திடுக் மனநிலை அல்லது நம்ப இயலாத ஒரு வியப்பு புன் முறுவலைப் போலத் தோன்றி விட்டு மறைகிறது. ஆனாலும் முப்பது வருடங்களை நான் கடந்துதான் வந்திருக்கிறேன். இன்னும் எத்தனை வருடங்கள் மீதமிருக்கின்றன என நினைத்துக் கொள்ளவும் இந்த நாள் ஒரு வாய்ப்பளிக்கிறது. அசையாது அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மரணத்தின் முன்புதாம் நாமனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மரணம் நமக்களித்த கொடைதாம் இந்த வாழ்வு. எப்போது வேண்டுமானாலும் அந்தக் கொடையை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் மரணம் தயங்குவதில்லை. மேலும் அது திரும்பப் பெற்றுக் கொள்ளும் கணம் அத்தனை இலகுவாய் எவருக்கும் இருப்பதில்லை. நான் என்னளவில் அந்த கணத்தின் இறுக்கத்தை சிறிது குறைக்க விரும்புகிறேன். இந்த வாழ்வின் இந்த பயணங்களின் இந்த அலைவுகளின் குறைந்த பட்ச வெற்றியென்பது மரணத்தை இலகுவாக்குவதுதான். நானும் என் சகோதரனும் அடிக்கடி சொல்லிக் கொள்வதுதான் இது. மரணம் ஒரு தியானத்தைப் போல, ஒரு விடுபடுதலைப் போல, ஒரு திறப்பைப் போல அணுகப்பட வேண்டும். அதற்கான மன நிலையை எட்டுவதுதான் என் வாழ்நாள் சாதனையாக இருக்கக் கூடும். A perfect pure death என சொல்லிப் பாருங்கள் கிளர்ச்சியாக இருக்கிறதல்லவா?

இன்றைய பதினைந்து நிமிடக் காலைப் பயணத்தில் முப்பது வருடங்களை நினைவில் சக்கரமாய் சுழற்றிப் பார்த்தேன். மிக இலகுவாய் நகர்ந்து போகும் இந்த நாட்களை விட வியர்வையில் குளித்தபடி வெயிலில் அலைந்து கொண்டிருந்த இருபதின் ஆரம்ப நாட்கள் மிகுந்த உயிர்ப்புத் தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது. பத்து வருடத்திற்கு முன்பு நான் எட்டுவதற்கான உயரங்கள், அடைய வேண்டியவை, கைப் பற்ற வேண்டியவை என்பன போன்ற ரீதியிலான நீளமான பட்டியல்களும் பேராசைகளுமிருந்தன. அந்த விரும்புதல்கள் இன்னொரு வகையில் வாழ்வை உற்சாகமாகவும் வைத்திருந்தன. வெற்றி, தோல்வி, கொண்டாட்டம், துயரம் என்பதினை அடி மனதிலிருந்து அந்தந்த உணர்வுகளின் வேர்சுவையை ருசிக்க முடிந்தது. இப்போதும் அதே உணர்வுகள் இருக்கிறதுதாம் என்றாலும் ஏதோ ஒரு புள்ளியில் நான் அதிலிருந்து விலகுகிறேன். அதன் ஆழத்தினுக்கு என்னால் பயணிக்க முடியவில்லை. பாதியிலேயே நான் நடிப்பது எனக்கே உறைத்துவிடுகிறது. மீண்டும் அவ்விருபதினுக்கு,அப்பதின்மத்தினுக்கு செல்ல முடிந்து விட்டால் பின்பு எப்போதுமே அங்கிருந்து நகராமல் எதையாவது பிடித்துக் கொள்ள வேண்டும். சற்றுக் கலைந்த நினைவுகளில் பதின்மமும்,இருபதும் தந்த அயற்சிகள் லேசாய் எட்டிப் பார்த்தன. இன்னும் சற்று வசதியாக இருக்கட்டுமே என நினைவை இன்னும் பின்னோக்கி விரட்டினேன்.அணிந்திருக்கும் கால்சட்டை முழுக்க தெருப்புழுதியும், ஆற்று மணற்துகள்கள் நிரந்தரமாய் தஞ்சம் புகுந்துவிட்ட செம்பட்டை தலை முடியோடும் சுற்றித் திரிந்த என் சிறு வயது பிம்பத்தில் நினைவைப் பொருத்தி விடுகிறேன். இதில் எந்த சிக்கல்களுமில்லை.

எல்லா வளர்ந்த ஆண், பெண்களிலும் ஒரு சிறுவனோ சிறுமியோ நிரந்தரமாய் விழித்திருப்பார்கள் போலும். என் சிறுவனை எவரும் நினைவுறுத்தத் தேவையில்லாது அவன் அவ்வப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். அந்த கணங்கள் மிகப் பிரத்யேகமாகிவிடுகின்றன. அந்த கணத்தின் உற்சாகத் தளும்பலை எது கொண்டும் அடக்கி விட முடிவதில்லை. அந்த கணத்திலேயே தொடர்ந்து நீடிப்பதுதான் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வாய் இருக்க முடியும். மனதளவில் நான் அந்த வயதை விட்டு நகராமல்தான் இருக்கிறேனோ என்கிற சந்தேகங்கள் எழ ஆரம்பிக்கின்றன. எப்போதுமே இழந்ததை விரும்பும் மனதின் பகல் கனவுதாம் இவ்வெண்ணங்கள் என்பது உறைத்தாலும் கனவினை நாடும் மனம் நிகழில் ஒரு போதும் பொருந்துவதில்லை.

இன்றைய தினத்தில் நன்றி உணர்வு பெருக்கெடுக்கிறது. இந்த இயற்கை, இந்த மனிதர்கள், எனக்குச் சமீபமான சக உயிரினங்கள், என எல்லாத் தரப்பிலிருந்தும் நான் அன்பைப் பெற்றிருக்கிறேன். எந்த பற்சக்கரத் தாடைகளும் கடித்துக் குத்தி கிழித்துவிடாமல் இந்த வருடங்களை நான் கடந்திருக்கிறேன். அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இன்றைக் கருதுகிறேன். கோபத்தின் விதையை, வன்மத்தின் வளர்ந்த செடியை, துரோகத்தின் மறைவுக் கொடியை நான் பலரின் சிறு தோட்டங்களில் ஊன்றியிருக்கலாம். அவைகளுக்கான காரணங்கள் அந்தந்த நிமிடங்களின் உணர்வுத் தெறிப்புகளேயன்றி எப்போதைக்குமான வன்மங்கள் அல்ல. எனக்கு இணக்கமில்லாதவர்கள், என்னை வெறுப்பவர்கள், என் மீது உமிழ நினைப்பவர்கள் அனைவருக்கும் என் அன்பு முத்தங்கள்.

இதே நாளில் பிறந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சக வலைப்பதிவர் வால் பையன், தங்கை அருள்மொழி பாலாஜி மற்றும் முகமற்ற முகவரியற்ற அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். மின்னஞ்சல்,தொலைபேசி,ஆர்குட்,முகப்பு பக்கம் மூலமாக வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றியும் அன்பும்.

Monday, February 22, 2010

கடினத்திலிருந்து நீர்மைக்கு


மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பிப்ரவரி மாத இறுதியில்தான் இந்த வலைப்பூ மலர்ந்தது. கல்வியினுக்குப் பிறகு மூன்று வருடங்கள் தொடர்ந்து ஒரே தளத்தில், ஒரே இடத்தில், ஒரே மாதிரியான வாழ்வினை நான் எப்போதும் எதிர்கொண்டிருக்கவில்லை. கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் அதிகபட்சம் ஒண்ணரை வருடங்கள் ஒரே சூழலில் வாழ்ந்திருந்ததுதான் என் சாதனையாக இருந்தது. இதோ இந்த வலையும், எழுத்தும் விலக இயலா ஈர்ப்பாக மூன்று வருடங்கள் கடந்த பின்னும் என்னுள் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு போதும் கடமையாகவோ, வேலையாகவோ, நிர்பந்தமாகவோ, பிறரின் விருப்பத்தினுக்காகவோ இந்த எழுத்து இன்னமும் செய்யப்படாததாகவே இருக்கிறது என்கிற நம்பிக்கைகள் மட்டுமே இதைத் தொடரும் காரணங்களாகப் பின்னிருந்து கொண்டிருக்கின்றன.

பதிமூன்று வயதில் கிடைத்த மெரூன் நிற டைரியொன்று ஏதோ ஒரு கணத்தில் என் அந்தரங்க நண்பனானது. என் மிக இரகசியத் தகவல்களை ஒளித்து வைக்குமிடமாகவும் விரைவில் அது மாறியது. நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தையும் என் அண்ணனைப் பார்த்துதான் எழுத ஆரம்பித்தேன். இரகசியமாய் அவரின் டைரிகளைப் படித்து அதே மாதிரி எழுதி வைத்துக் கொள்ள ஆரம்ப நாட்களில் பெரிதும் மெனக்கெட்டேன். இதுவரைக்குமான எல்லாமும் அண்ணனைப் பார்த்துக் கற்றுக் கொள்வது அல்லது அண்ணன் கற்றுக் கொடுத்ததாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. முக்கிய சம்பவங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், புத்தகம், சினிமா பற்றிய குறிப்புகள் எல்லாமும் அப்போதிலிருந்து இன்றைய தேதி வரைக்குமாய் அந்தந்த புரிதல்களுக்கு ஏற்றார் போல் என்னால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது இல்லாமல் போனது அந்தரங்கமாகத்தான் இருக்கிறது என்றாலும் அதற்கு படைப்பு, ஆசிரியன், வாசகன் என்றெல்லாம் வேறுவேறு பெயர்களை சூட்டிக் கொண்டாயிற்று.

கற்பனைகளால் கட்டமைக்கப்படும் உலகம், மிகவும் சாந்தமான மன நிலையைத் தந்துவிடுகிறது. இயல்பிற்கேத் திரும்பாத வேறொரு உலகத்தில் மொத்தமாய் தொலைந்து போய்விடும் பரவச ஆசையும் அந்த கணத்தில் மேலெழும். ஆனாலும் பயம், தேவைகள், நிர்பந்தம் என ஏதேதோ பெயர்களில் நான் மீண்டும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்துக் கொண்டு இயல்பு உலகத்தினுக்கு வந்து விடுகிறேன். இந்த தேர்வு என்னுடையது. இந்த இயல்பு வாழ்க்கையை தெரிவு செய்தது நான். சுதந்திர வாழ்வினையோ அல்லது பாதுகாப்பில்லாத வாழ்வினையோ என்னால் சகித்துக் கொள்ள இயலாது. தோளில் ஒரு பையினை மாட்டிக் கொண்டு கால் போன போக்கில் என்னால் நடந்து போய்விடமுடியாது. ஹிப்பிக்களின் வாழ்வெல்லாம் சிலாகிக்க மட்டும்தானேயன்றி பின் தொடர்வதற்கில்லை என்பன போன்ற சாமர்த்திய அனுகுமுறைகளே என் வாழ்வாக இருக்கிறது.

கடந்த நான்கு வருடங்களாய் இதுவாய், அதுவாய் ஆக வேண்டுமென்கிற ஆசைகளோ, கனவுகளோ சுத்தமாய் இல்லை. எனக்கிருந்த மிக உயர்ந்த பட்சக் கனவே ஏதோ ஒரு நிறுவனத்திற்காக மேனஜராய் குப்பை கொட்ட வேண்டுமென்பதாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது வந்திருக்கும் தொலைவு அந்த கனவுகளை வெகு அற்பமாக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பிடங்களின் தொடர்ச்சியான மாற்றங்கள், சந்திக்க நேர்ந்த புதிய மனிதர்கள், அலைக்கழிப்பும், அதி உற்சாகமுமான வாழ்வு மற்றும் மனநிலை என எல்லா பரீட்சார்த்தங்களுமிருந்தும் உண்மையாகவே எனக்கு எதிலேயும் ஆர்வமோ பிடிப்போ இல்லை. எல்லா இடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கின்றேனோ என்கிற சந்தேகங்கள் வேறு வர ஆரம்பிக்கின்றன. இந்த வாழ்வை உற்சாகமாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டியதெல்லாம் உண்மையாகவே எனக்குப் பிடித்த வேலையை செய்வதும், பிடித்த மாதிரி வாழ்வதும்தான். ஆனால் எப்படி இருந்தால் எனக்குப் பிடிக்கும்? என்பதுதான் இப்போதைய குழப்பமாக இருக்கிறது. சமூகத்திற்கும், சூழலுக்கும், மனிதர்களுக்கும் ஏற்றார்போல் மாற்றி மாற்றித் தகவமைத்துக் கொண்டதன் மூலம், என்னுடைய அடையாளத்தை முற்றிலுமாய் இழந்துவிட்டிருக்கிறேன். எது என்னுடைய பிடித்தம்? எந்த நகர்வில் என் பூரணத்துவத்தை எட்ட முடியும்? என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இப்போதைய சவாலாக இருக்கிறது.

இது நான் இல்லை, இது என் உலகம் இல்லை என்கிற கிசுகிசுப்புக் குரலை எனக்கான தினசரிகளினூடாய் எப்போதும் கேட்டபடியிருக்கிறேன். அந்தக் கிசுகிசுப்புகள் எப்போது உரத்து ஒலிக்க ஆரம்பிக்கிறதோ அப்போதென்னால் குறைந்த பட்ச நிம்மதியுடன் கூட வாழ முடியாதுதான் போலிருக்கிறது. குரலை உயர்த்தவிடாமலிருக்கவும் நான் உபாயங்களைக் கண்டறிந்திருக்கிறேன். சொல்லப்போனால் இங்கே கொட்டப்படும் வார்த்தைகளுக்கான ஆதாயமும், இந்தப் பரப்பைக் கெட்டியாய் பிடித்துக் கொள்வதற்கான காரணங்களும் குரலை உயர்த்த விடாமலிருக்கத்தான்.

0
இந்த வலைப்பக்கத்தை துவங்கிய நாளிலிருந்து இன்று வரைக்குமாய் கிடைத்த, கிடைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களும் அவர்களின் வழி விரியும் உலகமும் புதுமையானவை. நல்ல / கெட்ட என்றெல்லாம் பிரித்தோ, ஒதுக்கியோ, உயர்த்தியோ, தாழ்த்தியோ பார்க்கும் வழக்கத்திலிருந்து மெல்ல நகர்ந்து மனிதர்களை மனிதர்களாக பார்ப்பதற்கு பழகிக் கொள்கிறேன். எல்லா துன்பங்களுக்கும் காரணம் “நான்” எல்லா இன்பங்களுக்கும் காரணம் “நீ” என்கிற அனுகுமுறை இவ்வுலகில் இரு மனிதர்களுக்கிடையிலான உறவுகளை மகிழ்ச்சியாய் வைத்திருக்க உதவும் என்கிற நம்பிக்கைகள் வரத் துவங்கிவிட்டன. குற்றம் சுமத்துதல், பழிபோடுதல், வன்மம், பகை, கழிவிரக்கம், குற்ற உணர்வு, இழந்தவற்றின் மீதான ஏக்கம், இயலாமை, நிகழின் மீதான வெறுப்பு, அவநம்பிக்கை, குறுக்கு புத்தி, என வெவ்வேறு மனநிலைகளைக் கடந்து கொண்டிருக்கிறேன்.

நதியின் வசீகரக் குளுமையை நினைவில் கொண்டபடி பாலையைக் கடப்பது படு அபத்தமானது என உள்ளிருக்கும் நிகழ் புத்தன் குரலெழுப்பினாலும் அவன் குரல் வளையை என் ஆயிரம் இயலாமை கரங்களைக் கொண்டு நெறித்தபடி அதே நதியின் நினைவுகளோடு நிகழைத் தொலைக்கிறேன். நினைவில் காடுள்ள இன்னொரு மிருகம் நான். எந்த வனத்திலிருந்தும் தப்பவில்லையெனினும் மீண்டும் வனம் புக விழையும் நவீன மிருகமாகத்தானிருக்கிறேன். அடர்ந்த வனங்களை மோகித்தபடி காட்டுச் சிற்றோடைகளில் நீந்திக் களிக்கிறேன். எந்நேரத்திலும் விரிந்த நீர்ப்பரப்பு நினைவில் விடாமல் சிறு அலைகளை ஏற்படுத்தியபடி இருக்கிறது. என் வாழ்வாக, கனவாக, கிளர்ச்சியாக (நீரினடியில் இன்னொரு உடல் நுழைவது என் நெடுநாளையக் கிளர்வுகளில் ஒன்று) விருக்கும் இந்நீரே என் மரணமாகவுமிருக்கும்.

மலைகளில் தோன்றி, பள்ளத்தாக்குகளில் வீழ்ச்சியடைந்து, வளைவுகளில் குறுகி, பாறைகளில் உயர்ந்து, சமவெளியில் சலனமற்று நகரும் நதியினை யொத்ததாய் இருக்கிறது வாழ்வு. அதே சமவெளி நதியின் இருப்பினையொத்த மனநிலையோடு மீதமிருக்கும் வாழ்வையும் கடந்துவிடுவதற்கான விருப்பங்களும் வரத் துவங்கியாயிற்று. மஜித் மஜிதியை ஊருக்கு வர வழைக்க விரும்பும் பவாவின் மனநிலையோடோ, கோணங்கியைப் போல ஊர் சுற்றிக் கொண்டோ எஸ்.ராமகிருஷ்ணனைப் போல பொதிகை மலையில் இலைகளின் நடனத்தை எழுதிக் கொண்டோ மீதமிருக்கும் வாழ்வினைக் கடக்க நான் விரும்புகிறேன்.

மூன்று வருடங்களுக்கு முன்பிருந்த கடின “நான்” இரண்டாம் வருடத்தில் இளகி மூன்றாம் வருடத்தில் நீர்மையாகியிருக்கிறது. இனி செய்ய வேண்டியதெல்லாம் காண்பதுவும் கடப்பதுவும் மட்டுமே.
0

Friday, November 13, 2009

குளிர் நினைவுகள்


குளிர்பதனப் பெட்டியின் உர்ர் தான் இன்றைய விழிப்பில் கேட்ட முதல் சப்தம். இந்த சப்தத்தின் மீது எண்ணத்தைக் குவித்தபடி படுத்துக் கிடந்தேன். காலைப் பரபரப்புகள் இல்லாத இந்த விடுமுறைத் தினத்தைப் போல எல்லா தினங்களும் இருந்தால் எப்படியிருக்கும் என்கிற நினைவின் கனவுத் துழாவல்களோடு கடிகாரத்தின் நகரும் முள்ளின் சப்தமும் சேர்ந்து கொண்டது. இந்தப் புதிய வீடு எனக்குப் பிடித்திருக்கிறது. நகரத்தின் இரைச்சல்களிலிருந்து சற்றுத் தள்ளிய வீடிது. இதுவரை எத்தனை வீடுகளில் வசித்திருப்பேன் என்கிற எண்ணம் ஒவ்வொரு வீடாய் நினைவு படுத்தத் துவங்கியது. என் கிராமத்து வீடு, திருவண்ணாமலை வீடு, கிருஷ்ணகிரி அறை, காட்டிநாயனப் பள்ளி அறை, ஓசூர் தர்கா அறை, அண்ணாமலை நகர் வீடு, அண்ணாமலை நகர் அறை, டவுன்ஷிப் வீடு,பாண்டிச்சேரி நடேசன் நகர் வீடு, ரெட்டியார் பாளையம் அறை, எல்லப் பிள்ளைச் சாவடி வீடு, முதலியார் பேட்டை அறை சென்னை ஜாபர்கான் பேட்டை அறை,திருவள்ளூர் நேரு நகர் அறை, பூங்கா நகர் வீடு, ஆயில் மில் அறை, மதுரை வீடு, ஷார்ஜா பேங்க் ஸ்டீரீட் வீடு, துபாய் அல்கூஸ் அறை, கராமா அறை, டெய்ரா அறை, ஷார்ஜா வீடு மீண்டும் டெய்ரா அறை இப்போது இந்த பர் துபாய் வீடு. இது நான் வசிக்கும் இருபத்தி நான்காவது வீடு. புன்னகையும் அயர்ச்சியும் ஒரே சமயத்தில் எழுந்தது.

எது என்னை இப்படி விரட்டியடித்துக் கொண்டிருக்கிறதெனத் தெரியவில்லை. எல்லா வீட்டின் சித்திரங்களையும் வரிசையான காட்சிகளாக மாற்றி சுழலவிட்டுப் பார்த்தேன். முன் பின் கால வரிசைப்படி வேகமாய் நினைவுகளில் வீடுகளை நகர்த்தியும் பின்பு மெது மெது வாய் நகர்த்தியுமாய் நினைவுகளோடு விளையாடிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அலுக்கவே சடாரென எழுந்து திரைச்சீலையை சரக் கென விலக்கினேன். பளிச் வெள்ளை வெயில் திடீர் மிரட்சியாய் இருந்தது. சடார் சரக் பளிச் என்ன ஒரு ரிதம்! என நினைவு சப்தங்களில் முன்பும் பின்புமாய் அலையத் துவங்கியது.

நினைவைக் கட்டி இழுத்து நிகழில் பொருத்தினேன். மணி என்ன என சரியாய் தெரியவில்லை. எட்டரை அல்லது ஒன்பது இருக்கலாம். இங்கு குளிர் துவங்கி விட்டது.வெயிலுக்கு கருணை வந்து விட்டது. தூர தேசப் பறவைகள் வரத் துவங்கி விட்டன. கடல் புறாக்கள் அதிகம் கண்ணில் பட ஆரம்பித்து விட்டன. எல்லா காலத்திலும் இருக்கும் புறாக்கள் மிகுந்த அசட்டையாய் தரைத் தளத்தில் நடந்து கொண்டிருந்தன. குளிருக்கு ஒண்டும் பூனைகளைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். எல்லாப் பூனைகளையும் கொன்றிருப்பார்களோ என்கிற எண்ணம் பயத்தைத் தந்தது. இந்த நகரம் இன்னும் சரியாய் விழிக்கவில்லை. இரவு முழுக்க விழித்திருந்து விட்டு அடுத்த நாள் நண்பகல் வரை தூங்கும் இந்த நகரம் என்னை மட்டும் சீக்கிரம் எழுப்பி விட்டு விடும். மனித சஞ்சாரங்கள் குறைந்த காலையை நினைவுகளோடு போராடியபடி குளிரோடு அணுகுவது இதமாகத்தான் இருக்கிறது.

தேநீர் குடித்தால் என்னவெனத் தோன்றிற்று. தேநீர் தியானமுறை நினைவிற்கு வந்தது. சமோவாரில் தேநீர் கொதிக்கும் சப்தத்தின் மீது தியானித்தபடி, தயாரானவுடன் அதன் வாசனையை உள்ளிழுத்தபடி, தேநீரை மெதுவாய் மிக மெதுவாய் மிகமிக மெதுவாய் உறிஞ்சிக் குடித்தபடி நகரும் நாட்கள் மிகுந்த நிறைவுகளைத் தரக் கூடும். தியானம், நிர்வாணம், அமைதி, சலனமின்மை என எல்லாவற்றிலிருந்தும் இப்போது விலகிக் கடந்து வந்தாயிற்று. நினைவுகளோடு போராடப் பழகி விட்டிருக்கிறது. இது போன்ற தருணங்களில் நினைவே மிகப் பெரிய துணையாகவுமிருப்பதால் ஓஷோ, ஜேகே வையெல்லாம் பரணில் தூக்கிப் போட்டாயிற்று. எனக்கானத் தேநீரைத் தயாரிக்க எனக்கான உணவைச் சமைக்க எப்போதும் பிடித்திருக்கிறது. தேயிலையில் பால் கலப்பது வன்முறைதான் என்றாலும் எனக்கிதுதான் வசதி. செம்மண் நிறத்தில் லேசாய் ஏல வாசனையோடு டீ தயாரித்துக் குடிக்க எனக்குப் பிடித்திருக்கிறது. என் முடி வெள்ளையாவதற்கு இதுதான் காரணமென இவள் சொல்வதை நினைத்தபடியே மேலதிகமாய் ஒரு கரண்டி தேயிலையைக் கூட்டினேன். காலையில் புகைக்க எனக்குப் பிடிக்காது. உடல் மாசுபடுவதைக் காட்டிலும் இந்த அதிகாலைக் குளிர் காற்றில் புகை நாற்றத்தைக் கலப்பதில் விருப்பமிருந்ததில்லை. எனக்கு இரவுகளில்தான் புகை தேவைப்படும். குளிரில் நடுங்கியபடி மொட்டை மாடியில் புகைக்கும்போது காற்று மாசாவதை நினைத்துக் கொள்வதில்லை.

பால்கனியில் நடக்கையில் முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது. பால்கனியில் இதற்கும் அதற்குமாய் நடந்தபடி வாய்விட்டுப் படிக்கும் சிறுமியொருத்தி மீன் தொட்டியில் உலவும் மீனைப் போலிருக்கிறாள் என்கிற குறுங்கவிதையது. மிக வழக்கமான காட்சியை சாதாரண வார்த்தைகளில் புனைவிற்கு தள்ளுவது அல்லது தன் கவிதைப் படிமங்களை இயல்பிற்கு கொண்டு வருவது, இதில் அதையும் அதில் இதையும் சாதாரண வார்த்தைகளைக் கொண்டே கோர்ப்பது இவைதாம் இவர் கவிதைகளில் கவித்துவத்தை கொண்டு வரும் யுக்தியாக இருக்கிறது. யாருமில்லாத அமைதியான காலையில் சத்தமாய் ஒரு கவிதையை சொல்லி முடித்தவுடன் ஏற்படும் உணர்வினுக்குப் பெயர் தெரியவில்லை.

முழுக்க முழுக்க தன் வயமான இத்தனிமை எப்போதும் சலிப்படையாதிருக்க எனக்கு இலக்கியமும் திரைப்படமும் உதவியாய் இருக்கிறது. குற்ற உணர்வில் திளைக்காதிருக்க வாழ்வு இன்பமயமானதுதான் என்பதை நம்ப வார இறுதி விடுதிகளும் சக நண்பர்களும் உதவுகின்றனர். இவையெல்லாம் இல்லாத பிறருக்கு எது விடுதலையாய் இருக்க முடியும் என யோசித்துப் பார்த்தேன். பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையாய் இருக்கலாம். ஒட்டு மொத்த மனித இனமும் எதிலிருந்தாவது விடுபடுவது/எதிலாவது சிக்கிக் கொள்வது என்கிற இரண்டு நிலைப்பாட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தரைத் தளத்தில் கோடு போட்ட காகிதம் ஒன்றை மென் காற்று மெல்ல நகர்த்திக் கொண்டிருந்தது. புறா அக்காகிதத்தின் மீது வந்தமர்ந்தது. கோடு போட்ட காகிதம் ஒன்றில் பென்சிலில் கோழிக் கிறுக்கலாய் என் பக்கத்தில் பிடித்த வரிகளை எழுதி வைத்துக் கொண்ட நண்பியொருத்தியின் நினைவு வந்தது. அவள் அந்தக் காகிதத்தை ஸ்கேனித்து அனுப்பியிருந்தாள். எதையோ வீட்டில் தேடிக் கொண்டிருந்தபோது அந்தக் காகிதம் தட்டுப்பட்டதாயும், ஒரு வருடத்திற்கு முன்பு என் பக்கத்தை மிகுந்த விருப்பங்களோடும், எரிச்சலோடும், கோபங்களோடும் படித்துத் திரிந்ததாயும் அவ்வப்போது பிடித்தவற்றை ஏதாவது ஒரு காகிதத்தில் எழுதி, எங்காவது தொலைத்து விடுவது வழக்கமானதெனவும் சொல்லியிருந்தாள். மிகவும் இணுக்கி இணுக்கி அந்த ஒரு பக்கத்தில் நான் எழுதிய வரிகள் எழுதப்பட்டிருந்தன. இணையம் அறிமுகமாவதற்கு முன்பு வரை நானும் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த வரிகளை / காட்சிகளை என் நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொள்வது வழக்கம். அதே வழக்கத்தைக் கொண்ட இன்னொருத்தி எழுதி வைத்துக் கொள்வது என் வரிகளாய் இருக்கிறதென்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

இம்மாதிரிக் குளிர் காலையில், தேநீரோடு, காட்சிகளை விழுங்கியபடி, பிடித்தமான நினைவுகளில் மூழ்குவதும் ஒரு கட்டத்தில் சலிக்கவே செய்கிறது. சலிக்கும் நொடிதான் இசை கேட்பதற்கான துவக்கம். இந்துஸ்தானியையும் கஜலையும் மென்மையாய் கசியவிடும்போது தயவு செய்து யாராவது என் மூளையில் இந்த இந்தி / உருது மொழியை ஏற்றிவிடுங்களேன் எனக் கத்த வேண்டும் போலிருக்கும். என்னால் ஏன் இம்மொழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லை எனத் தெரியவில்லை.

சென்ற வருடத்திற்கு முந்தின குளிர்காலத்தில் கராமாவிலிருந்தேன். விடுமுறை தினங்களில் சீக்கிரம் எழுந்து நடைக்குப் போவது வழக்கமாய் இருந்தது. குளிர் விரவிய தெருக்களில், பனி மூடிய அகலமான சாலைகளில் ஏதேனும் ஒரு விநோதப் பறவை தட்டுப் படலாம். அகலமான இறக்கைகளில் அடர் நீலத்தில் தூரிகையால் பட்டையாய் கோடிழுத்தது போன்ற தீற்றல் கொண்ட பறவையொன்றை இது போன்ற ஒரு நடையில்தான் பார்த்தேன். பின்பொரு பறவையின் முகம் கொண்ட சிறுமியையும் செம்பழுப்பு நிற இறக்கைகளைக் கொண்ட நடுத்தர வயதுப் பெண்ணையும் அவ்வப்போது கடந்து போவேன். இருவரிடமும் கேட்காமலேயே விட்டுப் போன ஒரு கேள்வி என்னிடம் இருந்தது. உங்களை மனித உருவாய் போகக் கடவதென சபித்த பறவையின் பெயர் என்ன?

Thursday, November 5, 2009

பவா வைப் பற்றி சில குறிப்புகள்

From தனிமையின் இசை

மிக நெருக்கடியான பணிச்சூழலில்தான் என் விடுமுறையைத் தீர்மானித்தேன். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இந்தியா வரவேண்டிய சூழல்கள் அமைவதால் விடுப்புகள் குறைவாகவே இருந்தன. இந்த நேசமற்ற சூழலும், இயந்திர முகங்களையும் பார்த்து சலித்து வெறுத்த தனிமை குறைந்த பட்சம் முப்பது நாட்கள் விடுப்பைக் கோரியது. எல்லாம் உதறி செப்டம்பர் மாதத்தின் ஒரு அதிகாலையில் ஓசியில் கிடைத்த ஒயினை மூக்கு முட்டக் குடித்த கிறக்கத்தோடு சென்னை வந்திறங்கினேன். மூன்று வருடங்களுக்கு முன்பு முதல் முறையாய் இந்த அயல்தேசத்திலிருந்து ஊருக்குக் திரும்பிய நாளின் பரவசமெல்லாம் எங்கே போயின எனத் தெரியவில்லை. என்னுடைய எல்லா உணர்வுகளையும், பரவசங்களையும், அறியாமைகளையும் இந்த நகரும் காலம் தின்றுக் கொழுத்துவிட்டுத்தான் செத்து மடிகிறது. காலத்தின் மாறுதல்களின் எந்த நச்சும் தீண்டியிராத மனிதர்களைப் பார்க்கும்போது பொறாமையும் இணக்கமும் ஒருமித்து, ஒரு வித ஸ்நேகம் உள்ளுக்குள் துளிர்விடுகிறது. அப்படி ஒரு மனிதர்தான் பவா.செல்லதுரை.

என் வாழ்வில் அபூர்வமாய் வந்துவிட்டுப் போன தேவதைகள் வாழ்வின் மீதான என் நம்பகத்தன்மைகள் குறித்து பெரிதும் கவலை கொள்வர். நான் மிகுந்த வறட்டுத் தனமாய் இருக்கிறேன், வெறும் அவநம்பிக்கைகளை மட்டுமே சுமந்தலைகிறேன் என்றெல்லாம் அவர்கள் பதறி மாய்ந்து, மாய்ந்து என் நிலைப்பாட்டை மாற்றப் பெரிதும் மெனக்கெடுவர். திமிர்,அலட்சியம், அசட்டை என என் பிரத்யேகமான வெவ்வேறு குணாதிசயங்களின் மூலம் எல்லாவற்றையும் சிதறடித்துவிட்டு அவர்கள் கடந்து போன பின்னர் கழிவிரக்கத்திலாழ்வதுதான் இதுவரைக்குமான என் வாழ்வாய் இருந்து வருகிறது. முதன் முறையாய் வாழ்வென்பது நெகிழ்ச்சியானது, அன்பாலானது, சக மனிதன் ஒருவனை எவ்வித முகாந்திரமுமில்லாது நேசிக்க முடியும் என்பன போன்ற நம்பிக்கைகளை, மனிதர்கள் அத்தனை போலித்தனமானவர்கள் அல்ல என்கிற இணக்கத்தை பவா வின் மூலமாய் கண்டறிய முடிந்தது.

பவா வின் வரவேற்பில் ஒரு குழந்தையின் குதூகலம் இருக்கும். ஒவ்வொரு முறையும் அதே குதூகலம் நிரம்பி வழியும். அன்பை, நேசிப்பை சரியான நேரத்தில், சரியான மனிதர்களிடத்தில், மிகச் சரியாய் சொல்ல முடிவது / வெளிப்படுத்த முடிவது என்னைப் பொறுத்தவரை மிக அபூர்வமான குணமாகத்தான் இருக்க முடியும். (என்னால் ஒருபோதும் வெளிப்படுத்த முடிந்ததில்லை) பவா வின் இயல்பே நெருக்கமும் இணக்கமுமான ஒரு குழைவு நிலைதான். ஒருவரை இதனால்தான் பிடிக்க வேண்டும் அல்லது ஒருவருடன் இதனால்தான் பழக வேண்டுமென்கிற துய்ப்பு சூழல் எனக்குக் கற்றுத் தந்த பாடங்களையெல்லாம் பவா காற்றில் பறக்கவிட்டார். என்னிடம் சொல்வதற்கு அவரின் இத்தனை வருட வாழ்வு இருந்தது. எனக்குத்தான் அவரிடம் சொல்ல புத்தகங்களையும் அந்நிய வாழ்வையும் தவிர வேறொன்றுமில்லாமல் போனது.

பவாவின் வீட்டில், நிலத்தில், கடையில், பயணிக்கையில், ஏரிக்கரையில், விடுதிப் பூங்காவில், விடுதி அறையில், என நாங்கள் சந்தித்துக் கொண்ட எல்லா இடங்களிலும் விடாது பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய தொடர்ந்த பேச்சில் நான் மெல்ல இளகத் துவங்கினேன். ஒரு கட்டத்தில் தினம் இரண்டு வார்த்தையாவது அவருடன் பேசாவிடின் அந்த நாளே முழுமையாகாத உணர்வும் வரத் துவங்கியது. என் வாழ்வின் மிக இலேசான நாட்களாக, நம்பிக்கையும் அன்புமான நாட்களாக இந்த விடுமுறை தினங்கள் இருந்தமைக்கு பவாதான் காரணமாக இருந்தார்.

பவா வை அவரின் குழந்தமை சிதையாது பார்த்துக் கொள்வதின் மிக முக்கியப் பங்கு தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளரான, மலையாளத்திலிருந்து பல காத்திரமான படைப்புகளை தமிழில் அதன் ஆன்மாவோடு கொண்டுவந்த ஷைலஜா மற்றும் அவரின் குடும்பத்தாரினுடையது. உலகின் எங்கோ ஒரு மூலையில் பிளாக்கில் பினாத்துகிறேன் என்கிற அறிமுகம் கூட எனக்கான அன்பைத் தருவதற்கு இவர்களுக்கு தேவையில்லாத ஒன்றுதான். நான் ஒரு சக மனிதன் என்பது மட்டுமே போதுமானதாகவும் வாசிப்பவன் என்பது அதிகப்படியான குணமாகவுமாய் இவர்களுக்கு இருக்கிறது.

ஒரு மின்சாரம் போன மதியத்தில் ஷைலஜா தன் கைகளினால் உருண்டையாக்கித் தந்த சோற்றுக் கட்டிதான் இதுவரை நான் சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்த உணவு. வீட்டில் சுற்றி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அந்தப் பின் மதிய அமைதியில் எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் அன்பைச் சேர்த்துப் பிசைந்த அந்தச் சோற்றுக் கட்டி அமிர்தமாய் இருந்தது. வம்சி மற்றும் மானஸியோடு நாங்களும் ஷைலஜாவின் பிள்ளைகளானோம்.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய உலகம் இதுவரை நான் அறிந்திராத ஒன்றாகத்தான் இருந்தது. பேச்சினூடாய் பகிர்ந்து கொண்ட மனிதர்கள், நிகழ்வுகள், சம்பவங்கள் யாவும் இயல்பு வாழ்வு குறித்தான என் முன் முடிவுகளை தகர்ப்பதாய் இருந்தது. எனக்குப் பிடித்தமான ஆளுமைகளில் தொடங்கி அடுத்த வீட்டு மனிதர் வரைக்குமாய் விரிந்திருந்த பவாவின் நட்புலகில் விரோதிகளோ பிடிக்காதவர்களோ இல்லை.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்கள் அனைவரின் வாழ்வு முறையும் புதிதாக இருந்தது. புகழ்,பணம், பிரபல வெறி என எல்லாவற்றிலிருந்தும் விலகி ஒதுங்கி கலையை வாழ்வாகவும், வாழ்வைக் கலையாகவும் நேசித்து வாழும் மனிதர்களையும் அவர்களின் படைப்புகளையும் நான் காண நேர்ந்தபோது நெகிழ்ந்து போனேன். நான் உழன்று கொண்டிருக்கும் இயங்கிக் கொண்டிருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கும் உலகத்தையும் அதில் கடக்க நேரிடும் சக மனிதர்களையும் அந்தச் சூழலில் நினைத்துப் பார்த்துக் கொண்டேன். எத்தனை மோசமான வாழ்வை நானும் என் சக உலகத்தவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைத்து சிரித்துக் கொண்டேன். இப்படி ஒரு எண்ணத்தை வரவழைத்தது திருவண்ணாமலையில் வாழும் ஸ்பெயின் ஓவியர் காயத்ரி காமுசும் அவரது கணவரான ஆனந்தும் தான். இருவரைப் பற்றியும் விரிவாக பிறகொருமுறைப் பதிகிறேன்.

நான் எதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன்? என்னைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்தும் மனிதர்களிடத்துமிருந்தும் ஏன் விலகி வந்துவிட்டேன்? என்றெல்லாம் எனக்குள் யோசனைகள் மிக ஆரம்பித்தன. வாழ்வை வறட்சியாக அணுக எனக்கு சில தோல்விகளும், பல புத்தகங்களும், சில துரோகங்களும் கற்றுக் கொடுத்திருக்கின்றன. கண்கள் விரியாதுச் சிரிக்க, அழுத்தமில்லாது கைக் குலுக்க இந்த அந்நிய வாழ்வும் சிநேகமற்ற மனிதர்களும் பழகிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வாழ்வை நேசிக்க, மனிதர்களை முன்முடிவில்லாமல் அணுக, எதிர்பார்ப்பில்லாத அன்பு சாத்தியம் என்கிற நம்பிக்கைகளையெல்லாம் எவரிடமிருந்தும் இதுவரை நான் பெற்றிருக்கவில்லை. இந்நம்பிக்கைகளை என்னில் துளிர்விட பவாவும் ஷைலஜாவும் அவரின் குடும்பமும் அவரின் நண்பர்களும் காரணமாய் இருந்திருக்கிறார்கள்.

விடைபெறும் நாளின் கடைசி சில மணிநேரங்களுக்கு முன்பு கூட பவா அவரின் கல் வீட்டில் அமர்ந்தபடி அவரின் நெகிழ்ச்சியான சத்தமான குரலில் பாவண்ணனின் கதையொன்றினை சொல்லிக் கொண்டிருந்தார். நானும் என் சகோதரனும் ஷைலஜாவும் அவரது குரல் வழி உலகில் பயணித்துக் கொண்டிருந்தோம். பக்கத்திலிருக்கும் சிறு நகரத்தினுக்கு சைக்கிளில் பயணிக்கும் ஆசைகள் மிகுந்த குமாஸ்தா ஒருவன் மிகப் பாடுபட்டு கடனுக்கு காத்திருந்து சைக்கிளொன்றை வாங்குகிறான். பயணத்தில் அவனோடு சிறுவன் ஒருவனும் சேர்ந்து கொள்ள இருவரின் பயணமும் சுகமாய் தொடர்கிறது. குமாஸ்தாவினுக்கு சைக்கிள் மீதிருந்த காதலை விட அச்சிறுவனுக்கு அதிகமான காதலிருப்பதை உணர்ந்து கொள்ளும் குமாஸ்தா சைக்கிளை அச்சிறுவனிடம் கொடுத்துவிட்டு பஸ் ஏறுவதாய் கதை முடியும். இந்தக் கதையை எழுதியவரின் உணர்வுகளை அப்படியே உள்வாங்கி தன் குரலில் அவ் உலகை படைக்கும் பவாவின் வார்த்தை வண்ணங்களில் முழுவதுமாய் கரைந்து போனோம்.

விமானத்தைப் பிடிக்கச் சென்னைக்கு விரைந்த அவ்விரவில் தொலைபேசியில் பவா வின் குரல் கேட்க என்னால் முடியவில்லை. வாழ்வில் எப்போதாவது அடைக்கும் தொண்டை அப்போது அடைத்துக் கொண்டது. என்னால் எப்போதும் அழமுடிவதில்லை என்பது உண்மைதாம் நண்பர்களே!

Monday, September 14, 2009

புனைவுகளே வரலாறாய் ஆனது அல்லது வரலாறு புனைவுகளால் ஆனது

பதிவுலகத் தொடர்களில் பங்கு பெறுவது எப்போதும் எனக்குப் பிடித்தமான ஒன்று. இவ்விளையாட்டுக்கள் பதிவுலகை ஆரோக்கியமாய் வைத்திருக்கின்றன என்றெல்லாம் சல்லியடிக்க விரும்பவில்லை. என்னைப் பற்றி நானே ‘டமாரம்’ அடித்துக் கொள்ள இத் தொடர்கள் மிகுந்த உதவியாய் இருப்பதால் இதில் நான் ஆர்வமுடன் பங்குகொள்கிறேன். இம்முறை என்னுடைய பதிவுலக வரலாறை எழுத தீபா அழைத்திருக்கிறார் அவருக்கு என் நன்றி.

அந்நிய வாழ்வில்தான் இணையத்தில் தமிழைக் காண முடிந்தது. இந்தியாவில் இருக்கும் வரை எனக்கும் கணினிக்கும் பெரிதாய் தொடர்பு ஒன்றுமில்லை. ”இரும்படிக்கிற பயல்!” என கணினியிடமிருந்து என்னைப் பிரித்து வைத்திருந்தனர். வீட்டில் வைத்திருந்த கணினியைப் பாட்டு கேட்கவும் படம் பார்க்கவும் மட்டுமே பயன்படுத்தினேன். மேலும் நாட்கள் ஒரு விதமான வழமைக்குப் பழகியிருந்தன.செய்து முடிக்கப்பட வேண்டியவைகள் மிகுதியாகவிருந்தன. எப்போதும் ஏதாவது ஒன்று காத்துக் கொண்டிருந்தது. இந்த அயல் வாழ்வில் வழமைகள் முற்றிலுமாய் மாறியதும் நிறைய இடைவெளிகள் உருவாகின. எதைக் கொண்டும் நிரப்பி விட முடியாத இடைவெளிகளாய் அவைகள் உருமாறத் துவங்கும் முன் என்னை இவ்வெளியில் திணித்துக் கொண்டேன்.

ஏற்கனவே பல முறை சொன்னதுதான் இது. இணையத்தில் முதலில் தமிழில் படித்த இடுகை சித்தார்த்தின் சொர்கத்தின் குழந்தைகள். கணினியில் தமிழைப் பார்த்த வியப்பை விட இத்திரைப்படம் குறித்தெல்லாம் எழுத ஆட்கள் இருக்கிறார்களா? என்கிற வியப்புதான் எனக்கு அதிகமாக இருந்தது. (அப்போதெல்லாம் எனக்குப் பெரிய புடுங்கி என்ற எண்ணம் இருந்தது.மேலும் அத்திரைப்படத்தை ஒரு வருடத்திற்கு முன்பே பார்த்துமிருந்தேன்.) பாசோலினி, குப்ரிக்கை எல்லாம் பார்த்திருக்கிறீர்களா ? என அறிவுஜீவித்தனமாய் அவருக்கு ஒரு மடலிட்டேன். சித்தார்த் உடனே தொடர்பு கொண்டு பேசினார். அவரின் மூலம் தமிழ்மணம், தேன்கூடு, வலைப்பதிவு என இவ்வுலகம் மெல்ல அறிமுகமானது.

தனிமையின் இசை என்கிற பெயருக்கு காரணங்கள் பெரிதாய் ஒன்றுமில்லை. நிலா,மழை,தனிமை,பெண்,கண்,பாதம் என இவைபற்றியெல்லாம் ஒண்ணுங்கீழ ஒண்ணாய் சில வரிகளை எழுதியிராவிட்டால் கவிஞர் உலகில் சேர்த்துக் கொள்ளமாட்டார்களோ? என்கிற லேசான பய உணர்வு என்னிடமிருந்ததும் கூட ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். ஆரம்பகாலத்தில் எழுதுவதை விட வாசிக்க அதிகம் பிடித்திருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு ஏராளமான புது எழுத்துக்களைப் பார்க்க முடிந்தது. சிற்றிதழ், வெகுசன இதழ் போன்ற பழகிய நமுத்த வாசமில்லாமல் வலை எழுத்துக்களில் ஒரு வித சுதந்திரத் தன்மையை, ஆசுவாசத்தை, குறைந்த போலித்தனத்தை உணரமுடிந்தது.

இந்த உணர்வு இப்போது மெல்லக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. வெகு சன இதழ்களில் எழுதிப் புகழ்பெறுவதற்கான ஐந்தாண்டுத் திட்டங்களோடுதான் பெரும்பாலான வலைப்பதிவுகள் துவங்கப்படுகின்றன. வலைஞர்களுக்கு வெகுசன இதழ்களில் எழுவது எப்படி? என முகாமிட்டு சொல்லித் தருபவர்களும் இங்கு கிடைப்பதால் வருங்கால வெகுசன எழுத்தாள சந்ததிகளின் பெருக்கம் ஆரோக்யமானதாகவே இருக்கிறது. பலமான முதுகு சொறிதல்களும் பெருகிவருவதால் வலைப்பக்கங்களில் இரத்த ஆறு ஓடுவதாக புளகாங்கிதமடைந்து கொள்ளலாம். ஒரு மொக்கைப் படத்தை மொக்கை படமென்றே தெரிந்துகொண்டு, முதல் நாளே பார்த்து விட்டு, இந்தப்படம் மொக்கையாக இருக்கிறது என அவசரம் அவசரமாய் எழுதுவதைத்தான் முந்நூறுக்கும் அதிகமான தமிழ் வலைப்பக்கங்கள் செய்து கொண்டிருக்கின்றன என முன்பொருமுறை நண்பர் ஒருவர் சொன்னதற்காக அவருடன் அரை மணி நேரம் சண்டையிட்டேன். இப்போதெல்லாம் அவர் என்னைப் பார்த்துக் குறும்பாகக் கண் சிமிட்டுகிறார்.

புரியாத எழுத்து, கெட்ட வார்த்தைக் கவிதைகள் என இந்தப் பக்கம் ஆரம்ப காலத்தில் பெரும்பாலான சக பதிவர்களால் விமர்சிக்கப் பட்டது. சீனியர் கெட்ட வார்த்தைப் பதிவர்களிடம் உடனே நட்பு அல்லது அங்கீகாரம் கிடைத்ததும் அதற்கு ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். இம்மாதிரியான முத்திரை அல்லது அடையாளம் தவிர்க்க நண்பர்கள், கும்மிகள், கிண்டல்கள் உதவியாய் இருந்தன.ஆனாலும் உள்ளூர அவர்களுக்கு என் மீது அவநம்பிக்கைகள் இருந்ததைப் பிறிதொரு முறை தெரிந்து கொள்ள முடிந்தது.

எழுத்துக்கும் வாழ்வினுக்கும் அதிக இடைவெளி இருக்கலாம் அல்லது இருக்கத் தேவையுமில்லை.கீதைக்கு விளக்க உரை எழுதுபவன் சரக்கடிக்க கூடாதென்றும், சரக்கடிப்பதைப் பற்றி எழுதுபவன் கீதை படிக்கக் கூடாதென்றும் எதுவுமில்லை. இப்படி எழுதுபவன் இப்படித்தான் இருப்பான் என்கிற நம்பிக்கைகள் படிப்பவனுக்குத்தானே தவிர எழுதுபவனுக்கல்ல. அவனின் பிம்பங்களை நோண்டி நுங்காகாமல் தன்னையும் தான் வாசிப்பவற்றையும் பாதுகாத்துக் கொள்வது படிப்பவனின் கையில்தான் இருக்கிறது.

மாசோசிஸ்ட், நார்சிஸ்ட், சைக்கோபதிக் என வலையில் ஏராளனமான பிம்பங்களிருக்கின்றன. இந்த நார்சிஸ்ட் பிரிவில் என்னையும் பொருத்திப் பார்க்க முடிகிறது. வலை உலகம் ஏராளமான மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. பலரிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. உன்னத மனிதர்கள், அற்ப மனிதர்கள் என அறிமுகமானவர்களை என் நம்பிக்கையளவில் தரம் பிரித்துக் கொண்டு இருவரிடமிருந்தும் விலகி வாழ்வதுதான் எனக்குப் பாதுகாப்பாய் இருக்கிறது.

சுகுணாவிடம் மாய்ந்து மாய்ந்து சண்டையிட்டது, தமிழச்சியைத் திட்டி வாங்கிக் கட்டிக் கொண்டது,ஜெமோ சாரு இவர்களை அவ்வப்போது கிண்டலடித்தது போன்ற சாகசங்கள்தான் வலை வாழ்வில் உடனே நினைவுக்கு வருகின்றன. மேலும் தூக்கம் வராத மிக அழுத்தமான இரவுகளில் என்னுடைய சில வரிகளை, சில கவிதைகளை, சில கதைகளை, சில வார்த்தை ஜாலங்களை மீண்டும் மீண்டும் படிக்கப் பிடித்திருக்கிறது. “இத நீதான் எழுதினியா கண்ணா!” என புளகாங்கிதமடைந்து கொள்ள முடிகிறது. “எவ்ளோ மொண்ணையா எழுதியிருக்கடா!” என சத்தமாய் சிரித்துக் கொள்ள முடிகிறது.

இதை வேரெது அல்லது வேறெவர் எனக்குத் தந்துவிட முடியும்?

இத்தொடரைத் தொடர இவர்களை அழைக்கிறேன்…

தமிழ் நதி
லேகா
உமாசக்தி
ரெளத்ரன்

Monday, August 24, 2009

சென்னை சில நினைவுகள்


எட்டாம் வகுப்பு அ பிரிவு நண்பர்களோடுதான் சென்னையை முதன்முறையாய் எதிர்கொண்டேன். ஒரு சிறுநகரப் பதின்மனின் ஆச்சர்யங்களும், வியப்பும் எனக்கு அப்போது சற்று அதிகமாகவே இருந்தது. மகாபலிபுரம்,விஜிபி கோல்டன் பீச், மெரினா என சென்னைக்கு உள்ளும் புறமும் சுற்றி வந்ததில் சென்னை மிக வசீகரமான பெரு நகரமாக எனக்கு முன் விரிந்திருந்தது. “இந்த ஊருக்கெல்லாம் நான் போயிருக்கனே!” என சக நண்பர்களிடம் பீற்றிக் கொள்ளும் வேளைகளில் ’மெட்ராஸ்’ தான் முதலில் வந்தது. உறவினர் வீடுகள்,திருமண விழாக்களென படிக்கும் காலகட்டத்தில் அவ்வப்போது சென்றதுண்டு என்றாலும் சென்னையை முழுமையாக சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு அப்போது கிட்டியிருக்கவில்லை.

படிப்பு முடிந்ததும் ஒரு நேர்முகத் தேர்வினுக்காக சென்னைக்குத் தனியாய் போன நாள் நினைவிலிருக்கிறது. ஓசூரிலிருந்து இரவுப் பயணம். எட்டு மணி நேரங்கள் பயணித்துப் போயிருந்தேன். இரவுப் பயணம் புதிதாகையால் சுத்தமாய் தூங்கியிருக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்தினுக்கு முன்னதாகவே பேருந்து பாரீஸ் கார்னர் சென்றுவிட்டிருந்தது. விடியற்காலை ஐந்து மணிக்கு தோளில் ஒரு பையுடன் அந்தப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்தேன். நடைபாதை முழுக்கத் தூங்கிக் கொண்டிருந்த மனிதர்களைப் பார்க்க புதிதாகவும் வருத்தமாகவும் இருந்தது. பாரீஸ் கார்னர் மற்றும் பூக்கடைப் பகுதிகள் பத்து வருடத்திற்கு முன்பு தங்களுடைய அதிகாலை மெல்லிய குளிருக்கு மிக அதிக வறுமையையும், அழுக்கையும், குவியலாய் மனிதர்களையும் போர்த்தியிருந்தன.

திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்து, பல்லவனைப் பிடிக்க நடந்து கொண்டிருந்தேன். உறவினர் வீட்டிற்குச் சென்று இளைப்பாறி, அங்கிருந்து நேர்முகத் தேர்வினுக்கு செல்லும் திட்டம். நடைபாதை முழுக்க மனிதர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் கீழிறங்கி சாலை ஓரமாகவே நடந்து கொண்டிருந்தேன். குப்பைத் தொட்டி ஒன்றின் பின்னால் ஒரு சிறு குடும்பம் படுத்திருந்தது. மிகவும் நைந்த அந்தப் பெண் வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் மேல் சட்டை முற்றாய் விலகிக் கிடந்து. கணவன் ஒரு புறமும் கைக்குழந்தை ஒரு புறமும் அவள் கையினை தலையணையாக்கி இருந்தனர். அதே போல் அப்பெண்ணின் ஒரு முலையை குழந்தையும் இன்னொன்றினைக் கணவனும் கைப்பற்றி இருந்தனர். ஒரு சில நிமிடங்கள் கண்ணில் விழுந்த அக்காட்சி எனக்குள் மிகப்பெரிய கசப்புகளை உண்டாக்கிவிட்டுப் போனது. சொல்லமுடியாதொரு துக்கமும் கசப்பும் அந்த அதிகாலையில் என்னுள் படர்ந்தது. நகரத்தின் குரூரமான கைகளுக்குள் சிக்குறும் இயலா மனிதர்களின் வாழ்வை யோசிக்க யோசிக்க பயமாய் இருந்தது. மேலதிகமாய் சென்னை என்கிற பெரு நகரத்தின் மீதிருந்த வசீகரம் சுத்தமாய் வடிந்து போனது.

அந்த வேலை எனக்குக் கிடைக்கவில்லை அதற்கு பிறகு சென்னையில் பணிபுரிய வேண்டுமென்கிற முயற்சிகளையும் கை விட்டேன். வெவ்வேறு ஊர்களுக்குத் துரத்தியடித்த வாழ்வு ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் சென்னைக்குக் கொண்டு வந்தது. என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒரே வீட்டில் இருந்ததும் மீண்டும் நான் சென்னை வர காரணமாக இருந்ததெனச் சொல்லலாம். காசி தியேட்டர் எதிர் சந்தில்தான் வாசம். அப்போது நான் வாழ்வைக் கொண்டாட,மனிதர்களைத் தவிர்க்கப் பழகி இருந்தேன்.

கோல்டன் பாரையும், படிக்கட்டு பாரையும் சனிக்கிழமை இரவுகளில் நிரப்பினோம். நவீன திரையரங்குகள்,பைக் பயணம்,புதிய தோழிகளென பெரு நகரத்தின் வசீகரங்களை முழுமையாய் துய்க்கத் துவங்கினேன். கன்னிமாரா இன்னொரு புகலிடமாக இருந்தது. இத்தனை பெரிய பழமையான நூலகத்தில் அமர்ந்திருப்பதே மிகவும் பெருமையாக இருந்தது. பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்களை அங்கேதான் கழித்தேன்.

சீட்டுக் கட்டை கலைத்துப் போடுவதும் என் இருப்பிடங்கள் மாறுவதும் அத்தனைச் சுலபமானது. ஏதோ ஒன்று திடீரென சலிக்கவே என் இருப்பிடத்தை அலுவலகத்துக்குச் சமீபமாய் திருவள்ளூருக்கு மாற்றிக் கொண்டேன். எட்டு மணி நேர நிம்மதியான வேலை, வீட்டிற்கு வந்து அழைத்துப் போகும் சிற்றுந்து, பத்து நிமிடப் பயணம், என நகரத்தின் பரபரப்புகள் திடீரென முற்றிலுமாய் உதிர்ந்து போயின. ஆயிரம் ரூபாய் வாடகையில் பூங்கா நகரில் மிகத் தாராளமான வீடு கிடைத்தது. என் வசிப்பிடங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த வீடு இன்று வரை அவ்வீடாகத்தான் இருக்கிறது. சுற்றிலும் அடர்த்தியான மரங்கள் வளர்ந்திருந்த வீட்டின் மாடியில் நான் குடியிருந்தேன். கிழக்குப் பக்கம் பார்த்த மிகப்பெரிய பால்கனி ஒன்று சரிவான சிமெண்ட் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் இருந்தது. என்னை முழுமையாய் புத்தகங்கள் ஆக்ரமித்திருந்த காலகட்டங்களாக அவையிருந்தன. வீட்டிற்குச் சமீபமாய் பூங்கா நகர் கிளைநூலகம் இருந்தது. பெரும்பாலான புத்தகங்களில் ஒட்டிக் கொண்டிருந்த பக்கங்களை நான்தான் பிரித்தேன். நிலைப்படிக்காய் வெறும் தரையில் தலையணை மட்டும் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருப்பேன். அந்த வீட்டில் வெப்பத்தை நான் எதிர் கொண்டதே இல்லை. கோடைகாலத்தில் கூட குளுமையான செந்நிற சிமெண்ட் தரை தகிப்பை விரட்டி விட்டிருந்தது. செய்ய வேரெதுவுமே இல்லாத நாட்களாய் அவை இருந்தன. மேலும் என்னுள் மார்க்வெஸ்,கால்வினோ,போர்ஹேஸ், ரமேஷ் ப்ரேம், கோணங்கி என குழப்பமான சித்திரங்கள் உலவிக் கொண்டிருந்தன.

பூங்கா நகர் உள்ளடங்கிய பகுதியாதலால் சப்தங்கள் மிகக் குறைவு. அப்போது அந்நகரில் அத்தனை நெருக்கடியும் இல்லாமலிருந்தது. ஒவ்வொரு தெருவினுக்கும் மலர்களின் பெயரைச் சூட்டியிருப்பார்கள். முல்லைத் தெரு,மல்லித் தெரு,செம்பருத்தி தெரு என தெருக்களின் பெயரை உச்சரிக்கவே மகிழ்வாக இருக்கும். அந்தச் சூழலும் வேலையும் பிடித்துப் போனதால் அங்கேயே நிலம் வாங்கி நிரந்தரமாய் தங்கும் எண்ணமும் இருந்தது. மீண்டும் எங்கிருந்தோ வந்த சாத்தான் அவ்விடத்தினை விட்டும் துரத்தியடிக்க வைத்தது.

சுனாமி வந்த கறுப்பு ஞாயிறன்று என் நண்பி ஒருத்தியுடன் மின்சார ரயிலில் மெரினாவுக்குச் சென்று கொண்டிருந்தேன். காலைப் பதினோரு மணிக்கு சமீபமாய், அலையைப் பார்க்க நீங்கள் செல்ல வேண்டாம் உங்களைப் பார்க்க அலை வருகிறதென ரயிலில் இருந்தவர்கள் கிண்டலாய் சொல்லிக் கொண்டார்கள். நேரம் ஆக ஆக அதன் தீவிரம் மெல்ல எல்லாருக்கும் புரிய ஆரம்பித்த போது ரயிலை நிறுத்தி விட்டிருந்தார்கள். நாங்களும் உறைந்திருந்தோம். இரண்டு மணி நேரம் முன்னதாய் கிளம்பியிருந்தால் அலையோடு போயிருக்கலாமென நண்பி சொன்னாள்.

வட சென்னை நண்பர்களுடன் காசிமேடு பகுதியை சுற்றித் திரிந்த நாட்களும் சுவாரசியமானவை. சுண்ட கஞ்சி என்கிற வஸ்துவும் அது தந்த போதையும் இன்னமும் நினைவிலிருக்கிறது. ஒரு வாரம் வட சென்னையிலும், அடுத்த வாரம் சத்யம் திரையரங்கிலும், அதற்கடுத்த வாரம் ’ஈஸிஆர் லாங்க் ட்ரைவு’மாய் வாழ்வின் உச்சம், வீழ்ச்சி இரண்டையும் ஒரே மனதோடு எதிர் கொள்ளும் பக்குவம் அப்போது வாய்த்துவிட்டிருந்தது.

அயல் வாழ்வு சென்னையை ஒரு சிறு நகரமாக்கி விட்டிருக்கிறதென்றாலும் சென்னை எனக்கு பிடித்த ஊர்களின் பட்டியலில் இருக்கத்தான் செய்கிறது.பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை!

சந்தன முல்லையின் இவ்விடுகை இந்நினைவுகளை கிளறிப்போட்டது.அவருக்கு நன்றி.

Wednesday, May 6, 2009

நேர்காணல் : நாம் இதழ் - 1

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் நாம் சிற்றிதழுக்கு நேர்காணலொன்றை நண்பர் பாண்டித்துரை டிசம்பர் மாத இறுதிவாக்கில் கேட்டிருந்தார்.நேர்காணல் தருமளவிற்கு சாதித்துக் கிழித்தவை எதுவுமில்லையெனினும் நட்பின் நிமித்தமான பகிர்வுகளாகவே இவை இருக்கின்றன.

1. சிற்றிதழ் வாசிப்பனுபவம் வலையுலக வாசிப்பனுபவம் இரண்டினைபற்றிய உங்களின் அனுபவங்களை சொல்லுங்களேன்?
வெகுசன இதழ்கள் தந்த சலிப்பு மற்றும் போதாமை என்னைச் சிற்றிதழ்களுக்கு நகர்த்தியது. வாசிப்பின் துவக்கமாக கணையாழியாகவே இருந்தது.பெரும்பான்மைகளே நிறைந்து பிதுங்கும் புத்தக கடைகள் சிற்றிதழ்களுக்கான இடங்களைத் தந்திருக்கவில்லை. கணையாழியைத் தொடர்ந்து வாங்கவே பல கிலோமீட்டர்களை பயணிக்க வேண்டியிருந்தது. ஓசூரில் வாழ்ந்திருந்த காலகட்டத்தில் ஆதவன் தீட்சண்யாவின் விசை இதழ் படிக்க கிடைத்தது.பெரும்பான்மைகளின் தரங்களை பின்னுக்குத் தள்ளும் வடிவமைப்பு,காத்திரமான உள்ளடக்கங்கள் சிற்றிதழ் எனும் வடிவங்களை வேறு தளத்தினுக்கு நகர்த்தியிருந்தது.அந்த இதழ் தந்த பரவசம் பல சிற்றிதழ்களுக்கு ஆண்டு சந்தாவினை அனுப்ப ஒரு ஊக்கியாக இருந்தது.நம் மொழி தாண்டிய பிற மொழி படைப்புகளின் செறிவான மொழிபெயர்ப்பு, புதிது புதிதாய் அறிமுகமான இசங்கள், கவிதையின் காத்திரமான புதுத்தளம் என சிற்றிதழ்கள் மிகப்பெரிய போதையாய் இருந்தன.குறிப்பாய் ஆத்மா நாம் நடத்தி வந்த ழ இதழை சொல்லலாம்.சிற்றிதழ்களுக்கு முன்னோடியான சி.சு செல்லப்பாவின் எழுத்தை ஒரு பழைய புத்தகக் கடையில் தேடிப்ப்பிடித்தேன்.இன்னமும் அச்சு வடிவிலான பழைய சிற்றிதழ்களின் மேல் தீராத காதலிருக்கிறது.இலக்கிய தாகம் அல்லது வாசிப்பின்பம் தாண்டியும் சிற்றிதழ்கள் ஒரு இயக்கமாக வளரமுடியும் என்பதற்கு நிறப்பிரிகை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.தமிழின் சொற்பமான அறிவுஜீவிகள் தங்களது உக்கிரமான பார்வைகளை,மாற்றுக்களை விரிவான தளத்தில் பகிர்ந்து கொண்ட நிறப்பிரிகை வாசகனுக்கு உலகச் சிந்தனையின் நீரோட்டத்தில் கலக்க உறுதுணையாய் இருந்ததெனச் சொல்லலாம்.பழமைகளின், போலிகளின், பம்மாத்துக்களில் பதுங்கி கிடந்த 'உண்மை' நிறப்பிரிகை மூலமாக மெல்ல வெளியே வந்தது.பல மாற்றுச் சிந்தனைகளை நம் தளத்தில் உயிர்த்தெழச் செய்தது.காலச்சுவடு, உயிர்மை போன்ற இதழ்கள் சிற்றிதழ்களுக்கான சமரசமில்லா நிலைப்பாடிலுமில்லாது வெகுசன இதழ்களுக்கான மிகை போலித்தனதனங்களுமில்லாது தங்களுக்கான மித சமரசங்களை உள்ளரசியல்களோடு நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன.இவை பொதுப்புத்தி சார்ந்த இலக்கிய வாசகனின் தாகத்தை தீர்த்து வைக்க மெனக்கெடுகின்றன.

துபாய் வந்தபின்பு அறிமுகமான இணைய வாசிப்பு விரிவான வாசிப்பிற்கு உறுதுணையாய் இருந்தது.விரல் நுனியில் எல்லாவற்றையும் படித்து விட முடிந்தது. குறிப்பாய் கீற்று இணைய தளம் சிற்றிதழ்களை மொத்தமாய் சேகரித்து தருவது வாசகனுக்கு மிகுந்த உவப்பானது.தலித் இயக்கம்,பெரியாரியல் என நம்சூழல் சார்ந்த மொழியறிவு பெற இவ்வாசிப்பு மிகுந்த உறுதுணையாய் இருந்ததெனச் சொல்லலாம்.வலைப்பூக்கள் வாசகனாக மட்டுமே இருந்த என்னை எழுத்து சார்ந்தும் இயங்கத் தூண்டின.நாட்குறிப்புகளில் தீர்த்துக் கொட்டிய என் உள்ளெழுச்சிகளை அதே காத்திரத்தொடு வலைப்பூவிலும் எழுதும் சுதந்திரம் எனக்குக் கிட்டியது.வலைப்பூ நமக்குப் பிடித்தமானதை எழுத, பிடித்தமானதை தேர்ந்தெடுத்து வாசிக்க உதவியாய் இருக்கிறது.நண்பர்களுடனான விவாதங்கள் உரையாடல்கள் சரியான புரிதலுக்கு வழிவகுக்கின்றன.எல்லா தளங்களிலும் இருக்கும் பிரச்சினைகள் வலைப்பூவிலும் இருக்கிறதுதான் என்றாலும் நமக்கானதை தெரிவு செய்து கொள்ளும் சுதந்திரம் இன்றளவும் நம்மிடமே இருப்பது எத்தனை ஆறுதலான ஒன்று!

2. இன்று பல சிற்றிதழ் எழுத்தாளார்களும் இணைத்தில் இணைந்து விட்டனர் இவர்களின் வருகைபற்றி?
வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.தமிழர்கள் தமிழ்நாடு தாண்டியும் உலகம் முழுவதும் விரவியிருப்பதால் சிற்றிதழ்கள் கிடைப்பதற்கான சூழல்கள் மிகவும் அரிதாகின்றன. இணையம் இத்தேக்கத்தை உடைக்கிறது.இணையத்தில் வலைப்பூக்கள் அறிமுகமான புதிதில் பேரெழுத்தாளப் பிதாமகர்களின் கடுமையான விமர்சனங்களைத் தாண்டி வரவேண்டி இருந்தது. அச்சு வடிவங்கள் மட்டுமே இலக்கிய வடிவங்களாக முடியும். இணையம் பத்து நொடி பரவசத்திற்கானது என்பன போன்ற அரிதான தத்துவங்களையெல்லாம் கேட்டுத் துன்புற வேண்டியிருந்தது இன்று அது மெல்லத் திரிவடைந்து பேரெழுத்தாளர்களும் இணையத்தினை நோக்கிப் படையெடுப்பது நல்லதொரு மாற்றமே.சமீபத்தில் பிரம்மராஜனின் வரவும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கனவே நாகார்ச்சுனன் தன் பங்கினுக்கு மிகக் காத்திரமான உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சூழலில் பிரம்மராஜனின் வருகையும் பங்களிப்பும் அவசியமானது.மிதமான இலக்கியப் படையல்களை எஸ்ராமகிருஷ்ணனும், ஆபத்தான அரசியல் விளையாட்டை ஜெயமோகனும், வாசிப்பின்பத்தை மட்டுமே பிரதானமாக்கும் சாருவும் சிற்றிதழ் பேரிதழ் சூழல்களிலிருந்து வந்தவர்களே. அப்போது இணையத்தினை பழித்தவர்களுள் ஒருவரான ஜெயமோகன் இன்று ஏகப்பட்ட ஹிட்ஸ் என பேசிக்கொள்வது சிரிப்பைத்தான் வரவைக்கிறது. நிறப்பிரிகையில் மிக முக்கியமானவரான வளர்மதியும் தொடர்ச்சியாய் இணையத்தில் தன் பங்களிப்பை செய்து வருகிறார்.

3. தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது (அ) வாசித்துக்கொண்டிருப்பது சலிப்பை தருவதில்லையா!
இல்லை.சொல்லப்போனால் செய்ய வேண்டியது வேறு எதுவும் இல்லை.தொடர்ந்து வாசிப்பதும் எழுதுவதும் என் சுய விருப்பத்தினுக்காகவே.என் உள் சார்ந்த ஏதோ ஒன்று இச்செயல்களின் மீது ஆர்வம் உடையதாய் இருக்கின்றது.நிறைவு அல்லது அதைப்போன்ற ஒன்றினை ஒரு நல்ல பிரதி எனக்குத் தருகிறது.எனக்கு இணக்கமான பிரதி ஒன்றினை வாசித்து முடித்ததும் ஏற்படும் அதீத உணர்வுப் பெருக்கம் என் வெறும் பொழுதுகளை நிரப்பி விட்டுப் போகிறது.பிம்பங்களை உருவங்களாக்கும் முயற்சிகளில் என்னைச் செலுத்தி அந்த பிம்ப உருவாக்கங்களில் கிளர்ந்து அலைவது என்னை இன்பங்களில் திளைக்கச் செய்கிறது.வெகு சுமாரான ஒரு படைப்பை நிகழ்த்திக் காட்டும்போது ஏற்படும் மகிழ்ச்சி வார்த்தைகளில் சொல்ல இயலாதது.எழுத்து எழுதுபவனை எழுதிக்கொண்டிருக்கிறது என்பது எனக்கு மிக இணக்கமாக இருக்கிறது.

4. சுஜாதாவிற்கு பின் இன்று சிறுபத்திரிக்கையில் தீவிரமாக இயங்கிய பல எழுத்தாளர்கள் திரைதுறைக்கு வந்துவிட்டனர் இப்பொழுது இவர்களின் படைப்பினைஎப்படி அணுகிகிறீர்கள் ஏன் எனில் சினிமா எழுத்து மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது அங்கே எழுத்தாளார்கள் சமரசம் செய்துகொள்கிறார்கள் அவர்களிடம் கேட்கபடும் இத்தகையகேள்விக்கு வெளிப்படும் ரெடிமேட் பதிலாக இருப்பது டீம் ஒர்க்!
பொதுவாகவே சமரசங்கள் மீது எனக்கு மிகப்பெரும் சலிப்புகள் இருக்கின்றன.கலையும் கலைஞனும் சமரசங்களுக்கு அப்பாற்பட்டவை. உன்னதங்கள் எனக்கொண்டாடப்படுபவைகள் சமரச அரசியல்களில் சிக்கிக் கொள்ளாதவைகளாய் மட்டும்தான் இருக்க முடியும். எழுத்தாளர்கள் திரையில் தமது அடையாளத்தை நிறுவ மெனக்கெடாதது மிக எரிச்சலான ஒன்று. வெகுசனதிரையில் ஒரு இலக்கியவாதியால் மாற்றுக்களை கொண்டு வரமுடியாது என்பதெல்லாம் பொதுபுத்தி சார்ந்த கற்பிதங்களே.குறைந்த பட்சம் தான் இயங்கும் தளத்தின் தரத்தையாவது மெருகேற்றலாம்.ஆனால் அதற்கான எந்த முயற்சியினையும் எழுத்தாளர்கள் எடுத்ததாய் தெரியவில்லை. கூட்டுமுயற்சி என்பதெல்லாம் சப்பைக்கட்டாய் மட்டும்தான் இருக்க முடியும். தேவை, பிழைப்பு என்கிற இரண்டு பிரம்மாண்டங்களின் முன்பு படைப்பாளி தன்னை அடகு வைத்துவிடுகிறான்.இலக்கியத்திற்கு ஒரு முகமும் சினிமாவினுக்கு ஒரு முகமுமாய் இடத்தினுக்கு தகுந்தாற்போல் முகமூடியை மாற்றிக்கொள்ளும் எழுத்தாளர்களின் மீது பரிதாபமும் எரிச்சலும் ஒரே சமயத்தில் எழுகின்றன.சமீபத்தில் திரைப்பட பாடலாசிரியை தாமரை பேட்டி ஒன்றில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் ஒரு பாடலில் ஆங்கில வார்த்தைகளை சேர்க்க வேண்டி இருந்ததால் அந்தப்பாடலை மட்டும் தான் எழுத ஒப்புக்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலைப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

5. சினிமாவின் முன் எழுத்தாளனுக்கான அடையாளம் தொலைந்துகொண்டுவருதாக எண்ணத்தோன்றுகிறதா?
ஆம்.சொல்லப்போனால் சினிமாவில் எழுத்தாளனுக்கான எந்த அடையாளத்தையும் பார்வையாளன் உணரமுடிவதில்லை.உதாரணத்திற்கு சமீபத்தில் வந்த தாம்தூம் திரைப்படத்தை எடுத்துக் கொள்வோம். இத்திரைப்படத்திற்கு வசனம் எஸ்.ராமகிருஷ்ணன். இத்திரைப்பட வசனங்கள் வெகுசன இதழில் கூட பயிற்சிபெறாத ஆளுமை ஒருவர் வசனமெழுதி இருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதே தரத்தில்தான் இருந்தது. எஸ்.ராவின் நவீன மொழியாளுமையின் குறைந்த பட்ச சாத்தியங்களைக்கூட அவரால் அத்திரைப்படத்தில் செய்து காட்டமுடியவில்லை.குறைந்த பட்சம் காதல் காட்சிகளிலாவது மொக்கை வசனங்களை குறைத்துக்கொள்ள மெனக்கெட்டிருக்கலாம் ஆனால் அதற்கான எந்த முயற்சியினையும் அவர் எடுக்கவில்லை.இச்சூழலில் எழுத்தாளனின் அடையாளத்தை எங்கே
போய் தேட?.

6. குழும நட்பு வலைதள நட்பு பற்றி
வலைக்கு வந்த பின்பு கிடைத்த நட்புகள் மிகுந்த ஆசுவாசமாய் இருக்கின்றன.எனக்குப் பிடித்தமானவைகளைப் பகிர்ந்து கொள்ள நாட்குறிப்பை மட்டுமே நம்பியிருந்த நான் வலைக்கு வந்த பின்னர் என்னைப் போன்ற பல நண்பர்களை சந்திக்க முடிந்தது.முகமற்ற நட்புகளும், குரல் மட்டும் அறிந்த நட்புகளும் இதில் அடக்கம்.தொடர்ச்சியாய் இயங்க இந்நட்புகள் பேருதவியாய் இருக்கின்றன.கோபி கிருஷ்ணன் சொல்வது போல் என் முகமறியாத் தோழிகளே /தோழர்களே உங்களால்தான் நான் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன்.

7. துபாயில் இயங்கிவரும் தீவிர தமிழ் இலக்கிய அமைப்பு பற்றி அல்லது அங்குள்ள இலக்கிய வாசிப்பு நண்பர்களுக்கிடையேயதன சந்திப்பு பற்றி
துபாயில் தடுக்கி விழுந்தால் ஒரு தமிழர் அமைப்பை நீங்கள் காணநேரிடலாம். அவ்வமைப்புகளில் குழு மனப்பான்மை தவிர்த்து குறிப்பிட்டு சொல்ல வேறெதுவும் இல்லையெனினும் நண்பர் ஆசிப் மீரான் இலக்கியம், திரைப்படம் மற்றும் வாசிப்பு சார்ந்து இயங்கும் நண்பர்களை அமைப்பு சார்ந்து இயங்க உதவிவருகிறார்.மற்றபடி வலையின் பிரபலமான பல பதிவர்கள் இங்கு வசிப்பதால் பிடித்தமானவற்றை பகிர, தீவிரமாய் உரையாடல்களை நிகழ்த்த இச்சூழல் மிகுந்த இணக்கமாய் இருக்கிறது.எல்லாவற்றையும் விட நட்பு மிகப் பிரதானமாய் முன்னிருத்தப்படுவதால் ஒரே தளத்தில் இயங்கும் ஒத்த/மாற்று கருத்துடைய நண்பர்கள் பலர் ஒரே சூழலில் வசிப்பதும் அவ்வப்போது சந்தித்துக்கொள்வதும் மிகுந்த மகிழ்வானது.வேலைப்பளு, நெருக்கடியான பணி போன்ற சூழல்களிலும் இங்குள்ள நண்பர்கள் தொடர்ச்சியாய் தத்தமது தளத்தில் சீராய் இயங்குவது பாராட்டப்பட வேண்டியது.

8. உங்களின் வலைப்பக்கத்தில் சமீபமாக நீங்கள் எழுதிய காதல் கவிதைகான வெளிப்பாட்டின் பிண்ணனியல் உங்களின் மணநாளும் காரணமா?
இருக்கலாம்.என் எழுத்துக்களில் எனது அனுபவங்களை, என் வாசிப்புகளை, என் விருப்பங்களைத் தவிர்த்து பெரிதாய் வேறெதுவும் இல்லை.அடர்வான கசப்பான சூழலில் மிகக் குரூரமாய் எழுதிப்பார்ப்பதும் மிக லேசான தருணங்களில் மகிழ்வாய் எழுதிப் பார்ப்பதும் என் இயல்பாய் இருக்கிறது.தருணங்களில் வாழ்வதைத் தவிர்த்து மிகப் பிரதானமாய் எவ்வித வாழ்வையையும் கொள்கையினையும் நான் கடைப்பிடிக்க விரும்பாததால் என் எழுத்து என் வாழ்வை மட்டுமே பிரதிபலிக்கிறது.

Friday, October 3, 2008

ஊரும் வாழ்வும்........



அக வாழ்வு...
பின்னந்தலையை துளைத்துப் பாயுமொரு துப்பாக்கித் தோட்டா வெகுநாள் கனவில் வந்த வண்ணமிருக்கிறது.சில பதறிய விழிப்புகளில், அத் தோட்டா வந்த திசை நனவிலியின் குழப்பமான எத்தனையோக்களின் இன்னொரு எச்சமாய் திசை தொலைத்து, தன்னை இழக்கிறது. சுற்றிலும் கண்ணாடிகளால் சூழப்பட்ட அறைகளில், தனித்தமர்ந்திருக்கையில், எங்கிருந்தோ விரைந்து வரும் குண்டுகள், மூளையை / தலையை பக்கவாட்டிலிருந்து சிதறச்செய்வதாய், சில மாயத் தோற்றங்கள் நிகழ்ந்து மறைகின்றன.கனவில் பின்னந்தலையாகவும், நினைவில் பக்கவாட்டிலுமாயும், என் தலையைத் தெறிக்க, வெகுநாட்களாய் இத்துப்பாக்கித் தோட்டாக்கள் பெரும் முயற்சி செய்துகொண்டு வருவதை, வெகு நுட்பமான என் மன உணர்வுகள் தடம் பிடித்ததை உணர்ந்து, பெரு மகிழ்வு கொண்டேன்.அவ்வப்போது தலையை கைகளினால் தடவிக்கொள்வேன்.பாய்ந்து வரும் தோட்டாக்களுக்கு சிக்காமல் என் தலையை அடிக்கடி குனிந்தோ, சாய்ந்தோ, கவிழ்ந்தோ, காப்பாற்றிக் கொள்வேன்.கூட்டமான இடங்களுக்கு செல்கையில் வெகு கவனமாய் இருப்பேன்.இந்தக் கும்பலில் எத்திசையிலிருந்து வேண்டுமானாலும் விரையலாம் என் தலையை சிதறடிக்கும் தோட்டாக்கள், அதைத் தவிர்க்கும் பொருட்டு அடிக்கடி தலையின் இருப்பை மாற்றியமைத்துக் கொள்வேன். உள்ளுணர்வு அதிகமாகத் துடிக்கையில், எவ்விடத்தில் இருந்தாலும் உடனடியாய் தரையில் படுத்துக்கொள்வேன். தோட்டாக்கள் மிகப்பெரும் ஏமாற்றமடைந்து எங்காவது தன் வலிமை இழந்திருக்கலாம்.தோட்டாக்கள் அகன்றதை உள்ளுணர்வு சொன்னதும் மிக உவப்பாய் எழுவேன். கண்ணுக்கே தெரியாத அவ்விரோதியை ஏமாற்றிவிட்டதை உணர்ந்து மகிழ்வில் கத்துவேன்.கூச்சலிடுவேன்.என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு என் செய்கைகள் கோமாளித்தனமாய்த் தெரியலாம். என்னைப் பார்த்துச் சிரிக்கலாம். பைத்தியமெனலாம். மன உளவியலின் அடிப்படையில் சில புதிய நோய்க்கூறுத்தன்மையை மேற்கோள் காட்டலாம், அல்லது புதியதொரு வாயில் நுழையாப் பெயரை துப்பறிந்து, என் இயல்புகளோடு பொருத்திப் பார்த்து, மிக நீளமான விரிவுரை ஒன்றை இச்சமூக ஆர்வலர்கள் நிகழ்த்தலாம். அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை.என் புலப்படா விரோதிகளைப் பற்றி என்னைச் சுற்றியுள்ளவர்களுக்குத்(புலப்படும்) தெரியாது.அவர்/வை கள் ஒரு சிறிய விசையிலிருந்து பாயும் வலிமை கொண்டவர்கள்/ன. எல்லாவற்றையும் சிதறடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்/வை. அவர்/வை களுக்கு இலக்கு என் பின் மற்றும் பக்கவாட்டுத் தலை. ஆம்! அவர்கள் / அவைகள் என்னை முன்புறமாய்த் தாக்குவதில்லை.இந்த சிக்கலான உணர்வுகளைப் புரியவைக்கவே இப்படிச் சிக்கலாய் எழுதினேன். மற்றபடி புரியாமை நிலைக்குத் தள்ளுவது என் நோக்கமல்ல.புரியாமைகளின் ஒத்திசைவின் அதிர்வுகள் மாத்திரமே பகிரத் தூண்டுவதால் இப்புரியாமையும், சிக்கலும், தலைசுத்தலும் கடேசியாய் வாந்தியும்.

பு/பிற வாழ்வு

நீல வானில் வெண்மை திரண்ட மேகங்கள் காற்றின் அலைக்கழிப்புகளுக்கேற்றார்ப்போல் தன் வடிவங்களை அமைத்துக்கொள்கின்றன.குட்டித் தும்பிக்கை கொண்ட யானையொன்று, தன் தும்பிக்கை நீளும் வித்தைகளை மிக மெதுவாய் நிகழ்த்திக்கொண்டிருக்கும். இன்னுமொரு மாலையில் வாயைப் பிளந்த முதலையொன்று, ஒரு வினோத சிறிய உயிரை மெல்ல விழுங்கிக்கொண்டிருக்கும்.படக்கதைகளென விரியும் மேக நடனங்கள், மிதக்கும் வனங்களாகின்றன.தாவும் குரங்கு,கிளையழிக்கும் யானை, மானின் முதுகில் பதியும் சிறுத்தையின் முன்னங்கால்கள், இப்படிச் சிலவாய் வனங்களின் உயிர்களை, வெகு துல்லியமாய் மேகங்கள் கொண்டிருக்கும்.வனங்களில் வழி தப்பி மீள்வதும், வானில் நினைவு தொலைந்து மூழ்குவதும் ஒரே உவப்பைத் தரவல்லது.வழமையாய் மின்சாரம் போகும் விடியல், கொசுக்களை அனுப்பி என்னை என் வீட்டின் மாடிக்குத் தூக்கி வரச் செய்யும்.நான் விழிநிறை தூக்கங்களோடு வானில் புதைவேன்.குறிகளற்ற மேகக் கலவியில் திசுக்களெங்கிலும் கிளர்வு.

இந்த முன்பகலை பார்த்துக்கொண்டிருப்பது வெகு சாந்தமானது.மாமர அடிபாகத்தில், செங்குத்தாய் அமர்ந்து, வால் தூக்கிப் பார்க்கும் சாம்பல் நிற அணில், அருகாமையிலிருக்கும் எம்மரத்திற்குத் தாவும்? என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாது.சில நேரங்களில் அது எங்கும் தாவாமல் மாமரத்தின் உச்சிக்கே மீண்டும் விரையும்.பெரிய வண்ணத்துப் பூச்சியொன்று எவ்விடத்திலும் அமராது அலைந்து கொண்டிருக்கும். வண்ணத்துப் பூச்சிகள் அமர என் வீட்டின் சிறு தோட்டத்தில் மலர்களில்லை.எனினும் வண்ணத்துப் பூச்சிகள் அலைந்து கொண்டுதானிருக்கின்றன.சிமெண்ட் தரையிலமர்ந்து தேநீர் பருகியபடி அலையும் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது தொலைபேசியில் அழைக்கும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். இவ்வண்ணத்துப் பூச்சி அமர்வதற்கான இருக்கை என்னிதயப் பூவாய் இருக்கலாம். முருங்கை மரப் பூத்தேனின் மீது, தேன் சிட்டுகளுக்கு அலாதி பிரியமாய் இருக்கக்கூடும்.சிட்டுக்குருவிகளை விட மிகச்சிறிய இப்பறவைகள் விதவிதமான வண்ணங்களில் இருக்கும். மஞ்சளும் நீலமும் கலந்த சிறுபறவைகள் என் வீட்டிற்கு வழமையானவை.தேனுண்ட பறைவகளின் உற்சாக கீச்சுகள் முன்பகலை வண்ணமயமாக்கும்.

நண்பகல் கருப்பு வெள்ளை திரைக்கானது.நெற்றிநரம்பு புடைக்க சிவாஜியின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் வார்த்தைகளாய் இறைந்து கொண்டிருக்கும்.கைகளிரண்டையும் உயரத் தூக்கி பாபூ பாபூஊஊஊ எனக் கத்தும் ஆலயமணி ஜமீந்தார், நினைவு தப்பிய காதலியை மீன் தொட்டி சிதற சந்தித்து அதிர்ச்சியுறும் ஆண்டவன் கட்டளை விரிவுரையாளர்,வேலைக்காரன் வீட்டு அதிரசத்தை அறியாமல் உண்டு பின் உணர்ந்து வாந்தியெடுக்கும் 'பார் மகளே பார்'மேல்தட்டு பணக்காரர்,ஒச்சிடுவேன் என நாகேஷ் உடன் கலாய்க்கும் கலாட்டக் கல்யாணம் பணக்கார இளைஞன்.என சிவாஜி மிக மெதுவாய் என் நண்பகலை நகர்த்திக்கொண்டிருப்பார்.எந்தவித எதிர் குணங்களும் இல்லாத, மிக நல்ல, மிக யோக்கிய, மிக நேர்மையான, பெருங்கொண்ட சத்தியவான் எம்ஜிஆரை என்னால் 30 நிமிடத்திற்கு மேல் பார்க்கமுடிவதில்லை.

ரமணர் ஆசிரமத்திலிருந்து மலையிலிருக்கும் கந்தர் ஆசிரமத்துக்கு செல்லும் மலைப்பாதை என் பால்யங்களோடு மிக நெருக்கமானது.பள்ளிக்காலத்தில் என் பாடங்களை அப்பாதை வழிகளில் அமர்ந்துதான் படித்தேன். நண்பர்களோடும் தனித்தும் சுற்றித்திரிந்த மலைப்பாதை அது.கோடை விடுமுறைகளில் அப்பாதைகளில் அமர்ந்துதான் கதைப்புத்தகங்களை படித்துக்கொண்டிருப்பேன். குறிப்பாய் ரஷ்ய மொழிபெயர்ப்புகளை, ராதுகா பதிப்பக வெளியீடுகளின் பெரும்பாலான புத்தகங்களை அங்குதான் படித்தேன்.வெயிலேறத் துவங்கியதும் பாறைக்கடியில் தஞ்சம் புகுந்தபடி, பனிப்பொழியும் ரஷ்ய சதுப்பு நிலக் காடுகளில் என்னைத் தொலைத்திருப்பேன்.இந்த முறை சென்ற போது சமீப மழையால் மலை மிகப் பசுமையாய் இருந்தது.மிக அருகினில் மேகக்கூட்டங்கள், சுழன்றடிக்கும் காற்று, என மிக அற்புதமான ஒரு பொழுதில் ஓஓஓஓஒ வெனக் கத்தினேன் பாறைகளில் பட்டுத் தெறித்த என் குரல் எங்கேயோ புதைந்து கிடந்த என் ஆதி வேர்களின் மீதங்களை மீட்டெடுத்தது.மஞ்சள் கொன்றை மலர்கள் அங்கங்கே பூத்துக்குலுங்கின. மலைக்குரங்குகள் கண்ணில் பட்டன.இவ்வகை குரங்குகள் இப்போதுதான் வந்திருக்கின்றன போலும்.மலைக்குன்றின் முடிவும் புதிய ஒன்றின் துவக்கமுமான இடமொன்றில் மிக அடர்த்தியாய் மரங்கள் சூழ்ந்திருந்தன.அடர்வான மரமொன்றின் அடிவேரில் தலைசாய்த்து அமர்ந்திருந்தேன். சுழன்று சுழன்று அடித்துக்கொண்டிருந்த காற்று நிதானமானது. சொல்லில் விவரிக்க முடியா மஞ்சம்பில் கலந்த வாசனையை அக்காற்று கொண்டிருந்தது.முடிந்த வரை என்னில் நிரப்பிக்கொண்டேன்.மலை விட்டிறங்கும்போது எப்போதும் பூத்திருக்கும் இந்நித்தியப்பூவினை நீங்கள் மலையென்றும் அழைக்கலாம் என்கிற என் பழைய வாசகம் நினைவில் வந்துபோனது.

நான் நீந்திக களித்த பெரும்பாலான கிணறுகளை எப்போதோ மூடிவிட்டிருந்தனர்.வெற்றிலைக்கிடங்குகள்,கண்ணுக்கெட்டியவரையிலான பசும் வயல்வெளிகள், அடர்வான மரங்கள், ஏரியிலிருந்து நீர் வரும் அகலமான வாய்க்கால், சாலையின் இருமருங்கிலும் அடர்த்தியாய் வளர்த்திருந்த புளியமரங்கள், என எதுவுமில்லை.நகரம் பெரிதாய் ஒன்றும் வளர்ந்துவிடவில்லை ஆனால் எல்லா விவசாய நிலங்களும் ப்ளாட்டுகளாகி விட்டன.புதிதுபுதிதாய் ஏகப்பட்ட நகர்கள் முளைத்திருக்கின்றன.விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு, பணத்தை வங்கியில் பாதியும், வட்டிக்கு பாதியுமாய் இறைத்திருக்கிறார்கள்.பெருகிய பணம் டாஸ்மாக்குகளில் மிதந்துகொண்டிருக்கிறது. வேட்டி எதுவுமற்று கடைக்கருகிலேயே தூங்கிப்போகும் எத்தனையோ விவசாயிகள் முன்பொரு காலத்தில் பயிர்செய்து பசுமைகளை உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள் என்பதை நம்புவதற்கு சிறிது கடினமாய் இருக்கிறது.பணம் தன் விகாரப் பற்களினால் கடித்துத் துப்புவது இயல்பு வாழ்வையும் யதார்த்த மனிதர்களையும்தான்.

Saturday, September 27, 2008

ஜே.பி.சாணக்யாவின் கனவுப் புத்தகம்

திருவண்ணாமலையிலிருந்தும் பவா செல்லதுரையை சந்தித்திருக்கவில்லை.அவரின் முற்றம் இலக்கிய கூட்டங்களுக்கு வேடிக்கைப் பார்க்கச் செல்வதோடு சரி.சென்ற வாரத்தில் ஒரு நாள் அவர் நடத்தும் வம்சி புத்தக கடைக்குச் சென்றிருந்தேன்.திருவண்ணாமலையில் அத்தனை
பெரிய கடையை எதிர்பார்த்திருக்கவில்லை.மேலதிகமாய் எளிதில் கிடைக்காத உலக சினிமாக்களையும் தேடிப்பிடித்து வைத்திருக்கிறார்.அவரின் துணைவியாரும் நன்றாய் அறியப்பட்ட எழுத்தாளரே.மலையாள மொழிபெயர்ப்புகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இருவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசி வந்தேன்.இணைய எழுத்துக்களின் பரிச்சயம் இல்லாவிடினும் ஜெமோ, சாரு, எஸ்ரா, கீற்று வலைப்பக்கங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.அவருக்கும் எனக்குமான நண்பர்கள் பொதுவாக இருந்ததால வெகு நேரம் பேச வசதியாய் இருந்தது.கோபிகிருஷ்ணனை மிகவும் நெகிழ்ச்சியோடு நினைவுபடுத்திக் கொண்டார்.இவர்களின் மூன்று வயது மகன் இறந்தபோது இரண்டு தினங்கள் கோபி ஒரே இடத்தில் அசையாது அமர்ந்திருந்ததாக குறிப்பிட்டார்.தமிழினி பதிப்பகம் கோபியின் மொத்த படைப்புகளையும் ஒரே நூலாக கொண்டு வரும் முயற்சிகளில் இருப்பதையும் பகிர்ந்து கொண்டார்.

ஜேபி சாணக்யாவின் கனவுப் புத்தகம்-சிறுகதை தொகுதியும்,அரசியலறிவு அரைவேக்காட்டுத் தனமாய் இருப்பதால் அ.மார்க்சின் புத்தகங்கள் இரண்டும் (அ.மார்க்சை படித்தாலே அகில அரசியல் ஞானமும் கிட்டும் என்கிற முழுவெந்த ஞானமும் எனக்கு சமீபத்தில்தான் கிட்டியது)பவா செல்லதுரை மற்றும் அவரின் துணைவியார் ஷைலஜா எழுதிய புத்தகங்களையும் வாங்கினேன்.old boy திரைப்படமும் ஏழுமலை ஜமா என்கிற குறும்படமும் உடன் வாங்கினேன்.

சாணக்யாவின் கதைகளை இதற்கு முன்பு படித்திருக்கவில்லை.மோகன்தாஸ் ஒரு முறை கேட்டிருந்தது நினைவில் வரவே கனவுப் புத்தகத்தை முதலில் படித்தேன். காலச்சுவடு, தீராநதி, தலித் போன்ற இதழ்களில் வெளிவந்த கதைகள் இவை.கடவுளின் நூலகம்,கோடை வெயில்,பதியம், கண்ணாமூச்சி, கறுப்புக் குதிரைகள், ஆண்களின் படித்துறை, இரண்டாவது ஆப்பிள், அமராவதியின் பூனை, மஞ்சள் நீலம் வெள்ளை,கனவுப்புத்தகம் ஆகிய பத்து சிறுகதைகளைக் கொண்டிருக்கிறது.கடவுளின் நூலகம் ஏற்கனவே பலமுறை எழுதப்பட்டு விட்ட கதைச்சூழல்தான் என்றாலும் வினோதங்களின் வண்ணங்களை சற்றே குழைத்துக் கொடுக்கப்பட்ட புனைவு 'மாதிரி'தான்.எழுத்து நடையிலும் அத்தனை வசீகரமில்லை.

இரண்டாவது கதையான கோடை வெயிலை படித்து முடித்ததும் புத்தகத்தை தொடர்ந்து படிக்க முடியவில்லை.சொல்லொணா கசப்பும,எரிச்சலும்,
கோபமும் மண்டியது.இப்படி ஒரு மனநிலைக்கு வாசகனைத் தள்ளுவது எழுத்தின் வெற்றியாக கருதப்படலாமெனினும் அடிப்படை நம்பிக்கைகளை தூக்கி எறியச் செய்யும்,சகல புனிதங்களையும் வெகு சுலபமாய் தீக்கிரையாக்கும் இது போன்ற முடிவுகள் ஏற்படுத்தும் அதிர்ச்சி மிகவும் வன்மமானது.பிரதான சாலையை ஒட்டிய அரசுத் தொகுப்பு வீடுகளில் வசிக்கும் மனிதர்களின் வாழ்வு, கோடை வெய்யிலின் உக்கிரத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. பி.ஏ படித்தும் வேலை கிடைக்காத சேகர், தன் மனைவி வசந்தாவோடு வறுமையில் உழலுகிறான்.ஒரு நாள் வீட்டிற்கு வரும் அவர்களின் போலீஸ்கார உறவினர், சேகருக்கு வேலை ஏற்பாடு செய்வதாக உறுதியளிக்கிறார்.இருவரும் கள்ளருந்திவிட்டு மகிழ்வுடன் வீடு திரும்புகிறார்கள்.சமைப்பதற்காக கறியெடுக்க வெளியில் செல்லும் சேகர் திரும்பி வருகையில் அந்த வீட்டின் அறை உட்புறமாய் தாழிடப்பட்டிருக்கிறது.சன்னல்களும் இறுக சாத்தப்பட் டிருக்கின்றன.குமைந்து போகும் சேகர் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கெங்கோ அலைந்து விட்டுத் திரும்புகிறான்.கணவன் மீது மிகுந்த அன்பு கொண்ட வசந்தா தேவையின் நிபந்தனைக்காக அண்ணன் என விளிக்கும் உறவுக்காரனோடு உறவு கொள்கிறாள்.இயலாமைகளை சுமந்து திரியும் சேகர் மனதில் அவனை கொலை செய்கிறான்.இயல்பில் அழக்கூட முடியாமல் உறைந்து போகிறான்.இக்கதையின் கடைசிப் பக்கம்
ஏற்படுத்திய அழுத்ததிலிருந்து விடுபட வெகுநேரமாயிற்று.

வாசலில் வேண்டுமென்றே தீவிரத்துடன் சைக்கிளைச் சத்தம் அதிர நிறுத்தி ஒயர் கூடையை உருவி எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான.அவர் ஒருக்களித்துப் படுத்துக்கிடந்தார்.அவர் முதுகைப் பிரதானப்படுத்தும் அக்கோணம் அவர் உடலை ஒரு விலங்கு போலக் காட்டியது.அவர் வேண்டுமென்றே முகம் காட்டாமல் கண்மூடிப் படுத்திருப்பது போன்றிருந்தது.உள்ளே சென்றான்.தோட்டத்தில் வசந்தா ஏதோ செய்து கொண்டிருப்பது தெரிந்தது.அவள் முகத்தைத் தேடிப்பற்றியபடி முன்நகர்ந்தபோது அவள் அவனைப் பார்த்துவிட்டு புளிச்சக்கையை வெளியே வீசினாள்.கறிக்கூடையை அவளின் பக்கமாய் வைத்துவிட்டு சட்டையைக் கழற்றினான்.அவள் முகம் அலம்பியிருந்தாள்.கன்னத்திலும் காதோர மேற்புரங்களிலும் முடிக்கற்றைகள் ஈரப் பளபளப்புடன் ஒட்டிக் கொண்டிருந்தன. மேலுடம்பில் பளிச்சென மாற்றம் தெரிவதைப் பார்த்தான்.ஜாக்கெட் மாற்றியிருந்தாள். வெள்ளை நிறம்.அவள் முகத்தை மிக அருகில் பார்த்தான.அது ஆண்டு அனுபவித்த ஒரு பெரிய மனுஷியின் முகம் போலிருந்தது.அவள் கண்கள் ரத்தச் சிவப்பில் சோர்வுற்றிருந்தன. அவனைப் பார்த்துச் சிரித்தாள.ஓரு குழந்தையைப் போல இந்த க் கறிய அரிஞ்சி குடு என்றாள்.அவன் எங்கோ பார்த்தபடி நகர்ந்தான.பின்பு அவளே தோட்டத்திற்கு சென்று கவிச்சி அரிவாள்மணை எடுத்து வந்து திட்டமான துண்டுகளாக அறியத் தொடங்கினாள்.

அவன் திறந்திருந்த சன்னல் கம்பியைப் பற்றிக்கொண்டு நட்சத்திர வெளியை வெறித்தான்.அவனை யாரோ பலவந்தமாக அடித்துப் போட்டதுபோல் களைப்பாக உணர்ந்தான்.எவற்றையும் எதுவும் செய்து விட முடியாத இயலாமை அழுத்திப் பிடித்தது.எல்லாரும் பதறி பதறிக் கேட்க ஒன்றும் சொல்லாமல் கத்தி அழுதி தீர்க்க வேண்டும் போலிருந்தது.


பதியம் கூலி வேலைக்கு செல்லும் இளம் பெண்ணின் தீவிர காதலை சொல்கிறது.உழைப்பும், இறுமாப்பும், காதலும், விளிம்பு வாழ்க்கையும், இன்னும் நன்றாய் சொல்லப்பட்டிருக்கலாம்.

கண்ணாமூச்சி
யின் சூழல் ஜி.நாகராஜனுடையது.குப்பத்து வாழ்வை சில பக்கங்களின் கண்முன் கொண்டு வரும் எழுத்து.சக்களத்திகளாகும் தாயும் மகளும் மோதிக்கொள்கிறார்கள.கேட்கும்போதே பதறும் வாழ்வுதான் ஆனாலும் மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எழுத்துக்களினூடாய் பார்ப்பதே மிகுந்த வலியுடையதாய் இருக்கிறது.

ஆண்களின் படித்துறை
இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை.
இக்கதையில் வரும் அன்னம் பாலியல் தொழிலாளி இல்லை.உழைத்து வாழும் பெண். மிக அழகானவள.அந்த கிராமமே வாயைப் பிளந்து பார்க்குமொரு அழகு.அவளிடம் வருபவர்களிடம் அவள் உறவு வைத்துக்கொள்வாள். அவளை, அவளுடம்பை பார்த்து வியப்பவருக்கு தன்னைக் கொடுப்பாள. பதிலுக்கு பணத்தையோ, தயவையோ எதிர்பார்க்க மாட்டாள்.இக்காதாபாத்திரமும் இன்னும் இத்தொகுப்பில் வரும் சில கதாபாத்திரங்களும் இதற்கு முன்பு அறிமுகமில்லாதது.முற்றிலும் புதிய மனிதர்களை முற்றிலுமொரு புதிய அலைக்கழிப்பை கதைகளுக்குள் பொருத்தியிருக்கும் சாணக்யாவின் எழுத்துக்களை தலித் அல்லது விளிம்பு நிலை எழுத்துக்கள் என வகைப்படுத்த
எனக்கு தயக்கமாய் இருக்கிறது.

சமீபத்தில் சோ தர்மன் இதுவரை தலித் எழுத்துக்கள் என நாம் சொல்லி வந்ததெல்லாம் கதாநாயகி லேசாய் சோரம் போவதாய் எழுதப்பட்டவை மாத்திரமே என்பதாய் ஒரு முத்தை உதிர்த்திருந்தார் இதைப் படித்த எழுச்சியே என்னால் சாணக்யாவின் எழுத்துக்களை தலித் என்கிற அடையாளததோடு பொருத்திப் பார்ப்பதை தவிர்க்க விரும்புகிறது.இக்கதைகளில் ஒழுக்கம் தவறுவது என்பது பிரதானமாய் இருக்கிறது (இவை ஒருவகையில் புனிதங்களை கட்டவிழ்க்கின்றன என்றாலும்) ஒழுக்கமென்பது உயர்குடிகளுக்கு மாத்திரமே எனக் கட்டமைக்கப்பட்ட புனிதங்களோடு பொருத்திப் பார்க்கையிலும, சோ தர்மனின் முத்து் நினைவுக்கு வருவதாலும் சாணக்யாவின் எழுத்துக்களை தலித் எழுத்துக்களாக என்னால் அணுக முடியவில்லை. மாறாய் இதுவரை காட்சிப்படுத்திடாத சில அபூர்வ தளங்களை, அலைவுறும் மனிதர்களை சாணக்யா சாதாரண மொழியில் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பதை மறுக்கவியலாது.

அமராவதியின் பூனை சிலம்பாட்ட கலைஞன் ஒருவனின் ஆண்மையையும் அதன் அவமானத்தையும் சொல்லும் கதை.பூனைபடிமங்களாலும், நுட்பங்களாலும், பாலுறவு விவரிப்பின் தெறிப்புகளாலும்
இன்னொரு தளத்திற்கு வாசகனை கொண்டு செல்லும் கதை.இதிலேயும் அமராவதியின் பிறழ்விற்கு அழுத்தமான காரணங்களில்லை.வீரமான, ஊரே போற்றும் ஆண்மகனைத் தாண்டியும் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் காசி அமராவதிக்கும் அவளின் பூனைக்கும் தேவைப்படுவது வினோதமாய் இருக்கிறது.இவை வலிந்து எழுதப்பட்டவையா? அல்லது தான் கண்ட மனிதர்களை புனைவுகளினூடாய் பதிவிக்கும் முயற்சியா? அல்லது கட்டமைக்கப்பட்ட உறவப் புனிதங்களை கலைத்துப் போடும் முயற்சியா? என தெளிவுகளற்றிருப்பினும் இன்னொரு மனிதர்களை, இன்னொரு வாழ்வை தனது கதைகளினூடாய் காட்சிப்படுத்திய ஜே.பி சாணக்யாவை வரவேற்போம்.

Sunday, June 22, 2008

நினைவுகளை மீட்டல் : கோடை



அதிகாலை வேம்பூக்களின் வாசம் முதல் முத்தத்தின் உயிர்த்துடிப்புகளை நினைவூட்டிப்போகின்றது.வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களினை, கோடைகால இரவுப் புழுக்கம் முடிந்த அதிகாலை, தென்றலின் வடிவம் கொண்டு வருடிப்போகிறது.இந்த உள்ளிழுக்கும் சுவாசத்தினுக்காக, இந்த சுவாத்தினூடாய் நுரையீரலை அடையும் வேம்பூவின் கிளர்ச்சிக்காக, இந்த அதிகாலையை கொண்டாடலாம்.கொல்லைப்புற வேம்பூ, முற்றத்துப் புங்கை இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள்.

இந்த மலையை அதிகாலையில் பார்க்கவேண்டும்.பிரமிடின் முழுமையான வடிவம் அல்லது மலையின் முழுமையான தோற்றம் நம் வீட்டிலிருந்துதான் மிகச் சரியாக தெரிகிறதென்பார் அண்ணன்.எனக்கென்னமோ மிகக் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் சக உயிரியாகத்தான் இந்த மலை, இந்த இடத்திலிருந்து நினைவூட்டுகின்றது.மிக ஓய்வாக, மிக லகுவாக, மிக சாந்தமாக, மிக அழகாக, வீற்றிருக்கும் இன்னொரு ஜீவன் இம்மலை.வெள்ளி இன்னமும் ஒளிர்ந்திருக்க, துடைத்து வைக்கப்பட்ட வெளிர்நீலத்தின் அழகினை தலைக்கு மேல் சூடியிருக்கும் இந்நித்திய பூவினை நீங்கள் மலையென்றும் அழைக்கலாம்.

எதிர்ச்சாலையில் எதிர்ப்படுவர் எவருமற்ற ஒரு குக்கிராம வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் பயணிப்பது எத்தனை குதூகலமானதென்பதைச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.இரு புறங்களிலும் அடர்த்தியாய் புங்கை மரங்கள் பூத்திருக்கும் நண்பகலில் ஒற்றையனாய் பயணிக்கும் தருணங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவை.மிகப்பரந்த ஏரிக்கரையின் இருமருங்கிலும் எப்படி இத்தனை வளர்த்தியாய் அடர்த்தியாய் மரங்கள் வளர்ந்திருக்கின்றன?. மிகப் பெரு அடிமரத்தின் பொந்துகளிலிருந்து கிளியின் கெச்சட்டங்கள் வெகு தொலைவினை கடந்து செல்கையிலும் கேட்க முடிகிறது.தவிட்டு வால் குருவிகள் வெகு சுவாதீனமாக சாலையின் இரு பக்கங்களிலும் நடந்து போகும் இந்நண்பகலில், நான் அவைகளின் இறக்கைகளை கடன் வாங்கிப் பறக்கத் துவங்குகிறேன்.

சூரியனைப் பழித்துக் கவிதை எழுதுபவர்களை செவிட்டில் அறையலாம்.இதோ இந்தக் கோடையின் வீச்சை உள்வாங்கியபடி மரங்களற்ற சாலையில் பேருந்து புகைக் கழிவினை உள்ளிழுத்தபடி என் சிறுநகரத்தில் நடந்து கொண்டிருக்கிறேன். உச்சந்தலை கொதித்து உடலின் எல்லாச் சிறு துளைகளிலிருந்தும் வியர்வை நீராய் வெளியேறும் பரவசத்தை உணர்வது் அற்புதமானது.நெற்றியின் இருபுறங்களில் துவங்கி, பின்னங்கழுத்து வழியாய் பல்கிப் பெருகி, எவரும் தொடா இடங்களை மிக மென்மையாய் தொட்டு வழியும் இவ்வியர்வையை நான் நேசிக்கிறேன்.முன் நெற்றியிலிருந்து வழிந்து, மூக்கினைக் கடந்து, உதட்டைத் தொடும் இந்நீரை, என் உடல் நீரை, என் நாவுகளில் சுவைக்கிறேன். அது அமிர்தமெனச் சொல்லப்படுவதையெல்லாம் விடச் சிறந்ததாய்த்தான் இருக்க முடியும்.கோடையை இயற்கை கொண்டாடுகிறது. எல்லாத் தாவரங்களும் பச்சையுடுத்தி பூக்களை அணிந்துகொள்கின்றன. அவை மாலைநேரத்தில் கணவனின் வருகைக்காய் காத்தி்ருக்கும் புது மணப்பெண்ணை நினைவூட்டியபடியிருக்கின்றன. புழுக்கத்தை உள்வாங்கி தென்றலை வெளித்துப்பும் கோடை மிக உன்னதமானது.கோடை காலத்தில் வானம் தன் அழகின் மொத்தத்தையும் அள்ளித் தருகிறது.வெளிர் நீல வானில் தவழும் வெள்ளை நிற மேகங்களை நான் காதலிக்கிறேன்.அந்தியில் வானம் தன் மிகச்சிறந்த ஓவியங்களை உலகிறகு மொத்தமாய் தருகிறது.மழைக்கால மழைக்கிருக்கும் சோம்பலும் சகதியும் கோடை மழைக்கில்லை கோடை மழை முற்றத்தில் தெளிக்கும் நீரையொத்தது. மேலும் இம் மழையை பனியொத்த உதடுகளின் முத்தமெனவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.உதடுகள் மட்டுமின்றி உடலெங்கும் தரும் முத்தம் கோடை மழையின் தொடுகையாக இருக்கலாம். சிறார்களோடு இம்மழையில் குதிப்பதும், ஓடுவதும், கத்துவதும், என் கசடுகளை வெளித் துப்புவதற்கான மிகச் சிறந்த வழி.

என் சின்னஞ்சிறு நினைவுப்பேழையினுள் கண்ணில் விரியும் அற்புதங்களை வாரிப்பூட்டிக் கொள்ள விரும்புகிறேன்.விருப்பென்றும் வெறுப்பென்றும்
ஏதுமில்லை. இந்த இடத்தில் நானிருந்தால் நானிருக்க விரும்புகிறேன். பின்பெதுவுமற்ற சூழலில் முன்பிருந்ததை சொற்களினைக் கொண்டு வரையத் துவங்குகிறேன்.என்னால் ஒரு ஓவியனாவதற்கான கொடுப்பினைகள் இல்லாமல் போனது. நான் சபிக்கப்பட்டவனானதால் வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கிறேன்.இறையும் வார்த்தைகள் தனக்கேற்ற வடிவத்தினை எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தினையாவது தந்துவிட வேண்டும்.அஃதெப்போது ஒற்றை வடிவத்தினை கொண்டுவிடுகிறதோ அப்போது என் விரல்களை ஒடித்துக் கொள்ளவேண்டும்.

நான் வாழ்ந்தேன்.வாழ்கிறேன் நிகழ்வுகளாலும் நினைவுகளாலும்...

********************************

Wednesday, December 26, 2007

பிரசவக் குறிப்புகள் அல்லது தாய்மை பற்றிய சிலாகிப்புகள்





கிழிக்கப்பட்ட வயிறு ஒட்டப்பட்டதோ, வெறும் மயக்கம்தானா? வேறேதும் நிகழ்ந்துவிட்டதா எனத் துணையான நண்பன் துடித்துக்கொண்டிருந்ததோ, செவிலிகள் எல்லாம் சேர்ந்து அள்ளிக்கொண்டுவந்து அறையில் போட்டதோ, விடாத குளிரில் வெடவெடத்த உடம்பை அவர்கள் என் உள்ளங்கால் தேய்த்து உஷ்ணப்படுத்தியதோ எதுவும் அறியாத உணர்வற்ற நிலையில் கட்டிலில் கிடந்திருக்கிறேன். எல்லாம் சரியே என சோதித்த மருத்துவர், வலிவந்த நொடிமுதல் என் இன்னொரு தாயாக உடனிருந்த களைப்பில் "காலையில் பார்க்கிறேன். அவள் சரியாக இருக்கிறாள்" எனச் சொல்லி நகர்ந்து நள்ளிரவுதாண்டிய இருளில் மருத்துவமனை வாசல்வரை போயிருப்பார். உடல் அசையாத மயக்கத்திலும் என் உதடுகள் அசைத்துக் கேட்கிறேன் "where is Bonnie?"
"அவர் ஓய்வுகொள்ளப் போயிருக்கிறார், காலை மறுபடியும் உன்னைப் பார்ப்பார், உறங்கு" என்று உடனிருந்தவர்களின் குரல்கள் காதுகளை எட்டவில்லை. தொடர்ந்து அதே பல்லவியை அழுத்தமாகவும் பாடத் தொடங்குகையில் பயந்துபோன செவிலிகள் ஓடிப்போய்ப் பிடித்தே வந்துவிட்டார்கள் தன் வாகனம் கிளப்பிக்கொண்டிருந்த மருத்துவரை. "Yes dear I am here" அது Bonnie யின் குரலாக வந்ததும் மூளைக்கு எட்டுகிறது. "Thank you doctor, you saved me and my child" அவ்வளவுதான்.

செலவநாயகியின் ஒரு கிறுக்கியாக வாழும் ஆசையிலிருந்து...


பனி படர்ந்த முன்னிரவுகளில் ஆளரவம் அடங்கிய வீதிகளில் சற்றே முன்புறம் சரிந்த வயிறுமாய் தலையைச் சுற்றிக் கட்டப்பட்ட ஸ்கார்ப் மற்றும் முழுக்கை ஸ்வெட்டர் அணிந்த மனைவியை நடைக்கு கூட்டிப்போகும் ஆண்களைப் பார்க்கும் போது ஒரு மலர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இன்றைய வாழ்வில் பதினோரு மணி வாக்கில் பூங்காவிற்கு செல்ல நேரிடுகையில் இது போன்ற ஒரு சோடியையாவது பார்க்க நேர்கிறது.ஓசூரில் டைட்டன் குடியிருப்பில் வாழ்ந்த சமயங்களில் பெரும்பாலான இரவுகளில் இதுபோன்ற தம்பதியினரின் அந்நியோன்யத்தை, கிசுகிசுப்பை,குழைவை எதிர்கொள்ள நேர்ந்ததுண்டு.வறண்ட இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டு உண்மையான நேசத்திற்கான நம்பிக்கைகளை மீள்பதிவித்துக்கொள்வேன்.

பிரசவிப்பது என்பது உயிர்களுக்கான இயல்பு இதில் சிலாகிக்க என்ன இருக்கிறது? என்பது போன்ற வறட்டுத்தனமான அணுகுமுறைகளோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை.தாய்மை என்ற ஒரே தனித்தன்மைக்காக மட்டும் ஒரு பெண் எத்தனை அபத்தமானவளாக இருந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம் எனத்தான் தோன்றுகிறது. பிரசவங்களை எதிர்கொள்ளும் நேரங்களில் ஏற்படும் பயம் மிக அடியாழத்திலிருந்து எழுவதை அதன் வெளிப்பாட்டிலிருந்து புரிந்து கொள்ள முடியும். என் பால்யங்களில் கன்றிலிருந்து வளர்க்கப்பட்ட பசுமாடு அதன் கன்றை ஈன்றெடுத்த தருணம்தான் என்னுடைய முதல் பயம், முதல் படபடப்பு, முதல் ஆச்சர்யமுமாய் இருந்தது.ஈன்ற சில நிமிடங்களில் அதன் துள்ளல்களில் கிடைத்த பரவசம் மிக மங்கலாய் நினைவிலிருக்கும் அற்புத நிகழ்வு.

கன்றினுக்குப் பிறகு என் சகோதரியின் பிரசவம்தான் என்னை பயப்படவும் நெகிழவும் வைத்தது.ஒரு நண்பகலில் அரசுமருத்துவமனை வாசலில் இதற்கும் அதற்குமாய் நடந்தபடி புதிதாய் பழக்கமாயிருந்த சிகெரெட்டினை மட்டும் துணைக்கழத்தபடி மனதிற்குள் இல்லாத கடவுள்களையெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தேன்.எனக்குள்ளிருந்த பெண் தன்மைகள் எட்டிப்பார்த்த தருணங்களில் அதுவும் ஒன்று.அவளுக்கு திருமணமான பின்னரும் அபத்தமாய் எதையாவது உளறிக்கொட்டுவது போல் எனக்குப் பட்டால் சத்தமாய் குரலெழுப்பியோ அல்லது மிக மோசமாய் கடிந்துகொண்டோ என் அறிவுஜீவித்தனத்தை நிரூபித்துக்கொள்வேன். ஒன்றிரண்டு முறை அறைந்தும் இருக்கிறேன்.அவளின் பிரசவத்திற்கு பின்பு எத்தனை முட்டாள்தனமாய் அவள் நடந்துகொண்டாலும் அறைய கைகள் எழுவதே இல்லை பின்பு அது கடிந்து பேசுவதையும் நிறுத்திவிட வழிவகுத்தது.பிரசவ தருணங்களில் சாலையில் சிகெரெட் புகைத்துக்கொண்டிருந்த எனக்கே இத்தனை மாற்றங்கள் வந்தது ஆச்சர்யத்தைத் தந்தது. கணவர்கள் பிரசவ தருணங்களில் பிரசவ அறைக்குள் மனைவியுடன் இருப்பது மிகவும் தேவையான அவசியமான ஒன்று.பெண்ணை உடல்ரீதியிலான புரிதல்களோடு அணுகுவதன் மூலமே எப்போதுமே மாற்ற இயலாத நம் அடிப்படைத் தன்மைகளை சிறிதளவேணும் குறைக்க இயலும்.

80 திலிருந்து 90 வரைக்குமான தமிழ் திரைப்படங்கள் பெண்களைக் குறிவைத்தே எடுக்கப்பட்டது. தொலைக்காட்சி பெண்களை வீடுகளில் விழுங்குவதற்கு முன்பு வரை பகல் காட்சி முழுக்க திரையரங்குகள் பெண்களைத்தான் நிரப்பி வைத்திருந்தது.அப்போதைய வியாபாரிகள் பெண்களை ஈர்க்க புகுத்திய யுக்திகளில் பிரசவமும் அலைக்கழிப்பும் முதன்மையானது.உணர்ச்சி பொங்கும் தாலி வசனங்கள், இறுதிக் காட்சி தீ மிதிப்பு வகையறாக்களைக் காட்டிலும் இந்த யுக்தி அதிகக் கண்ணீரை வர வைத்தது. கதாநாயகனின் தங்கை, அக்கா, மனைவி களுக்கு பெரும்பாலும் பெரும் மழை கொட்டும் நள்ளிரவுகளில்தான் பிரசவ வலியெடுக்கும் சொல்லிவைத்தார்போல வில்லன்கள் நிறைமாத கார்ப்பிணியை தரையிலிழுத்துப்போவர் பாதி வழியிலேயே குழந்தை பிறக்கும் அந்த பெண் கால்கள் இடையில் இரத்தம் சிந்தி இறந்து போவாள்.பெரும்பாலான திரைப்படங்கள் இவ்வாறுதான் எடுக்கப்பட்டன.இவைகள் பிரசவம் குறித்த பயங்களை ஏற்படுத்தியிருந்தது. பார்வையாளனான எனக்கே இத்தனை பயங்களெனில் பிரசவிக்கும் பெண்ணுக்கு எத்தகைய மன உளைச்சலை இத் திரைப்படங்கள் ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்பதை யோசிக்கும்போது இவ்வியாபாரிகளின் குரூர முகம் கண்முன் வந்து பெரும் வெறுப்பை உண்டாக்குகிறது.

நண்பனின் தொணதொணப்புகளுக்கு செவி சாய்த்து ஒரு ஆயுள்காப்பிட்டுக்காக வேண்டி மருத்துவ பரிசோதனைக்கு சென்றிருந்தேன்.அந்த மருத்துவமனை கிருஷ்ணகிரியின் மய்யத்தில் இருந்தது.கிருஷ்ணகிரி மிகவும் பின் தங்கிய ஏழை மக்களால் நிறைந்தது நான் சென்றிருந்த காலை வேளை ஏகப்பட்ட நோயாளிகளால் நிறைக்கப்பட்டு நிற்க இடமின்றி ஒண்டிக்கொண்டிருந்தேன்.முந்தய தினத்தில் இரவுப் பணி முடிந்து வந்திருந்ததால் சோர்வு அப்பட்டமாய் கண்ணில் மிதந்தது.தேகத்தில் எலும்பைத் தவிர கொஞ்சம் சதைகளையும் கொண்டிருந்த பெண்ணொருத்தி தன் பருத்த வயிற்றுடன் மாடிப்படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தாள்.கையில் குளுகோஸ் பாட்டிலோடு அப்பெண்ணைத் தாங்கியபடி ஒரு செவிலியும் குறுகலான படிக்கட்டுளில் இறங்கி வந்துகொண்டிருந்தாள் இந்த நிலையில் இப்பெண்ணை இம்மாதிரி கொண்டு வருகிறார்களே எனப் பதைத்து பார்த்துக்கொண்டிருந்தபோதே அப்பெண் சறுக்கி விழுந்தாள். சின்னதாய் ஒரு கூச்சல் அப்பெண்ணின் பனிக்குடம் உடைந்ததை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சியில் படபடப்பாய் வந்தது நின்றுகொண்டிருந்த நான் மயங்கி விழுந்தேன்.அந்த பெண்ணை ஒரு மருத்துவர் கூட்டமும் என்னை சில மருத்துவர்களும் சூழ்ந்து கொண்டனர் கண் விழித்துப் பார்த்தபோது என்னை ஒரு பெஞ்சில் கிடத்தியிருந்தனர் வெட்கமும் அவமானமும் ஒரு சேர பிடுங்கித் தின்றது.சுற்றி இருந்த வலிய நெஞ்சினர் கொல் லென சிரித்தனர்.அந்த மருத்துவர் இந்த மாதிரி இருக்கியே எனக் கடிந்து கொண்டார்.அதற்குப் பின் மருத்துவமனைக்கு செல்வதையே நான் பெரும்பாலும் தவிர்த்து வந்தேன்.

இந்த பயங்களுக்கு யார் காரணம் எனத் தெரியவில்லை.நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்மை சிதைத்துக்கொண்டிருக்கிறது வணிக ரீதியிலான வெகுசன ரசனைகள்.

Sunday, December 2, 2007

நினைவுகளிலிருந்து குறிப்பெடுத்தல் அல்லது பூமரங்களைப் பற்றி சில குறிப்புகள்



---------- 1 -----------------
நினைவுகளே இல்லாதிருப்பது என்பதும், எண்ணங்களின் ஓட்டம் எதுவுமில்லாமல் அசையாத குளத்தினை ஒத்த இருப்பு என்பதும், சுலபத்தில் எவருக்கும் கிடைக்காத பொக்கிஷமாகத்தான் இருக்க வேண்டும்.எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் நம்மால் வாழ்வின் எல்லா நிமிடங்களையும் எதிர்கொள்ள முடிவதில்லை.தியானம்,பயம்,போதை போன்ற மூளையழிந்த சந்தர்ப்பங்களில் மட்டும்தான் நம்மால் சிந்தனை மற்றும் எண்ணச் சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இயல்பில் இருக்க முடிகிறது.படுத்த உடனேயே தூங்கி விடுவது மிகப்பெரிய வரமாய்த்தான் இருக்கமுடியும். என்னால் எப்போதுமே என் சிந்தனைகளிலிருந்து விடுபடமுடிவதில்லை.ஏதாவது ஒன்று உள்ளே எப்போதும் ஒடியபடியே இருக்கும்.அப்படி சிந்தனைகளே இல்லாத அற்புத தருணங்களும் வாய்த்திருக்கிறது.

ஓஷோ தியான முகாம்களில் இந்த "ப்ளாங்க்" தருணங்களைப் பெற்றிருக்கிறேன்.குறிப்பாய் குச்வாடா தங்கலில் இந்த அற்புத உணர்வு கிட்டியிருக்கிறது.நள்ளிரவைத் தொடும்வரை வியர்க்க விறுவிறுக்க நடனமாடிவிட்டு அங்கிருந்த நீச்சல் குளத்தில் வானம் பார்த்தபடி மிதந்திருந்த இரவுகள் எனக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கின்றன. அதற்கடுத்தபடியாக விபாஸனா தியான நாட்களிலும் சிந்தனைகள் எதுவுமில்லாமல் இயல்பில் இருக்கமுடிந்தது.சென்னையடுத்த திருநீர்மலைக்கு சமீபமான ஒரு புத்தர் ஆசிரமத்தில் பத்து நாள் தங்கலின் போது கிட்டிய ஆசுவாசமும் அமைதியும் வேறெந்த தருணத்திலும் பெற முடியாதது.பெண்ணொருத்தியின் அருகாமையும் முத்தங்களும் ஒருவேளை எண்ணச் சிக்கல்களிலிருந்தும் மனவோட்டத்திலிருந்தும் விடுபடும் தற்காலிக தீர்வுகளாயும் இருக்கக்கூடும்.எதுவெப்படியோ சிந்தனைகளிலில்லாமல் இருப்பதைவிட ஆசுவாசமானது வேரெதுவுமில்லை.

---------- 2 ---------------

என் பள்ளிக் காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடம் தமிழ், பிடிக்காத பாடம் அறிவியல். பழந்தமிழ் பாடல்களின் மீது பெரு விருப்பம் இருந்தது.என் பள்ளிக்காலத் தமிழாசிரியர்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களாய் இருந்தனர்(சம்பந்தம்,குப்புசாமி,அருணாசலம்,ஆறுமுகம்)


அற்ற குளத்தின் அறு/ரு நீர்ப் பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்-அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி இருப்பார் உறவு

சிறு வயதில் நெட்டுரு போட்ட பாடல்.இந்தப் பின்னிரவிலும் நினைவுகளின் இடுக்கில் இருந்து பெயர்த்தெடுக்க முடிகிறது.இந்தப் பாடலை யார் எழுதியது? எதில் வருகிறது? என்றெல்லாம் நினைவிலில்லை.ஒரு சில வார்த்தைகளும் மாறியிருக்கலாம்.ஆனாலும் உறவுகள் குறித்து எழுதப்பட்டிருக்கும் இப்பாடல் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று.

பள்ளியில் பேச்சு,கவிதை,கட்டுரை என எந்தப் போட்டி வந்தாலும் நிச்சயம் ஏதாவது ஒரு பரிசை எனதாக்கி விட முடிந்தது.மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளிலும் என் பங்களிப்பும் பரிசும் தவறாமல் இருந்து வந்தன.நான் எழுதிய முதல் கவிதையின் தருணம் நன்றாக நினைவிலிருக்கிறது.ஒன்பதாம் வகுப்பில் கவிதைப் போட்டிக்காக கொடுக்கப்பட்டத் தலைப்பு நிலா.ஒரு சாயந்திரத்தில் மாடியில் அமர்ந்தபடி என் முதல் கவிதையை எழுதினேன். அந்தப் பிரதி இன்னும் கைவசமிருக்கிறது.இந்த முறை ஊருக்குப் போனால் அதை ஸ்கேனித்து பதிவிக்கும் எண்ணமும் இருக்கிறது.அந்தக் கவிதை இப்படித் தொடங்கும்

ஏ நிலாவே நீ எனக்கு மட்டுமே சொந்தமானவள்
உன் கன்னல் செரியும் பேரொளி
என் முகத்தில் மட்டுமே நிறைந்திருக்கிறது
…….
என் பயமெல்லாம் உன்னை சைட்
அடிக்கும்
விண்மீண்களை நினைத்துதான்

இப்போது இந்த கவிதையை நினைத்தாலும் சிரிப்பும் வெட்கமுமாய் வருகிறது.எல்லா துவக்கங்களும் அபத்தமானதுதான்போல.

பத்தாம் வகுப்பு மாணவர் மன்றத் தேர்வில் தமிழில் மாவட்ட அளவில் முதல் மாணவனாய் வரமுடிந்தது.(95/100)ஆனால் இறுதித் தேர்வில் கோட்டை விட்டேன் (89/100)
நான் மாநில அளவில் தமிழில் முதல் மாணவனாய் வருவேன்
என எதிர்பார்த்திருந்த தமிழாசிரியர் ஆறுமுகம் கடைசியாய் சொன்னது இப்போதும் உறுத்தலாய் இருக்கிறது (என் தலையில மண்ணள்ளிப் போட்டுட்டியேடா!!)
---------- 3 ---------------
மரங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் குறிப்பாய் பூ மரங்கள்.கிளைகள் முழுதும் பூத்திருக்கும் சிவப்புக் கொன்றை மரங்கள்,சின்னச் சின்னப் பூக்களாய் இடைவெளி விடாது நெருக்கமாய் பூத்திருக்கும் புங்கை மரங்கள்,மனதை மயக்கும் வாசனைகளோடு நீளமாய் பூத்திருக்கும் மரமல்லி மரங்கள், கசப்பும் மயக்கமுமாய் வாசனைகளைப் பரப்பி தரைமுழுவதும், இலைமுழுவதும் விரிந்திருக்கும் வேப்பம் பூ மரங்களெனப் பூ மரங்கள் என் நேசத்திற்குரியவை.எப்போதோ ஆனந்தவிகடனில் படித்த ஆபுத்திரனின் கவிதை ஒன்று..
மரங்களை விட அழகிய கவிதை வேறெதுவுமில்லை
….
இலைக் கரங்களால்
பிரார்த்திக்கும் விருட்சம்
தன் கோடை கால ஆடையை அணிந்திருக்கும்
….
தலையில் புறாக்கூடு சூடி நிற்கும்
……
கவிதைகள் என்னைப்போன்ற
முட்டாள்களால் எழுதப்படுகின்றன
மரங்கள் கடவுளால் மட்டுமே உருவாகின்றன
தேவதேவன் கவிதைகளிலும் மரங்களை அதிகம் பார்க்கலாம்.எதுவும் நினைவிலில்லாததால் பகிரமுடியவில்லை.

கொன்றை மரங்கள் விடுமுறை முடிந்த ஜீன், ஜீலை மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும் பெரிய கிளைகளில் ஏறி பூக்களைப் பறித்து அதன் தேங்காய் பூவை தின்று கொண்டிருப்போம். காய்களைப் பறித்து கொக்கி சண்டை போடுவது,முன்னமர்ந்திருப்பவனின் தலையை குறிவைத்தடிப்பதென கொன்றை மரங்களோடு கழிந்த நாட்கள் அற்புதமானவை.வீட்டின் முன்புறம் பெரிய புங்கை மரமொன்று இருந்தது. பின் கொல்லையில் மிகப் பெரிதாய் இரண்டு வேப்ப மரங்கள். ஏப்ரல் மாதத்திலேயே வேம்பும், புங்கையும் பூக்கத் தொடங்கிவிடும்.அதிகாலையில் எழுந்து முன்வாசலுக்கோ தோட்டத்திற்கோ வரும்போது ரம்மியமான பூக்களின் வாசனை மெல்லிய கிறக்கத்தைக் கொடுக்கும்.தரையில் படுக்கை விரித்திருக்கும் பூக்களை என் அம்மா எவ்வித சலிப்புமில்லாமல் வாரி தெருவில் கொட்டுவாள்.குப்பைமேடும் பலவகைப் பூக்களோடு மிகுந்த அழகாய்த் தோற்றமளிக்கும்.

மரமல்லிப் பூக்கும் காலம் அலாதியானது மழைக்காலத்தில்தான் அவைப் பூக்கும்.டிசம்பர், ஜனவரி மாதங்களில் மரம்முழுக்க வெள்ளையாய், நீளமாய் பூக்க ஆரம்பித்துவிடும். இரவில் பெய்த மழையில் நனைந்தபடி தரை சேர்ந்திருக்கும் பூக்கள் எழுப்பும் வாசம் நம்மை வேறொரு உலகத்திற்கு அள்ளிக்கொண்டு போகும். எல்லாவற்றையும் இழந்துவிட்டிருந்தாலும் மரமல்லி மரங்கள் மட்டும் என்னோடு இப்போதுமிருக்கின்றன நான் வசிக்கும் கராமாவில் இருக்கும் பூங்காவில் நிறைய மரமல்லிப் பூமரங்கள் இருக்கின்றன. எந்த நாட்டிலிருந்தாலும் பூக்களும் மரங்களும் எவ்வித வித்தியாசங்களையும் காண்பிப்பதில்லை.சிந்தனை மிகும் சாயந்திரங்களில் இப்போதெல்லாம் தஞ்சமடையும் இடம் மரமல்லி மரத்தடியாகத்தான் இருக்கிறது.தனிமை மிகுந்து கசப்பும் துயரமுமான மாலைகளில் யாரேனும் பார்க்கிறார்களா?என்பதை உறுதி செய்துகொண்டு இம்மரங்களை இறுகக் கட்டி முத்தமிட்டு வருகிறேன்.

Featured Post

test

 test