Monday, March 29, 2010

அங்காடித் தெரு – கை விடப்படுதலின் துயரம்

தன்னுடைய இரண்டாவது படத்தை இரத்தமும் சதையுமாக வெயிலில் நிகழ்த்திக் காட்டிய வசந்தபாலன் மீண்டும் அதே இரத்த வாசத்தோடும், பிய்ந்து தொங்கும் சதையின் குரூரத்தோடும் மற்றுமொரு படைப்பை நம் முன் வைத்திருக்கிறார். சாமான்யர்கள், விளிம்பு நிலை மனிதர்கள், வறுமையின் கோரப் பிடியில் சிக்குண்டு தத்தளிக்கும் குடும்பங்கள், அடுத்த வேளை உணவிற்கான உத்திரவாதமற்றோர், சாலையோர மனிதர்கள் என தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் முப்பது சதவிகித மக்களின் வாழ்வை மிகுந்த வீச்சோடு பேசுகிறது இப்படம். அவர்களின் குமுறலை, துயரத்தை, மரணத்தை, இழப்பை, கதறலை, நசுக்கப்படுதலை, ஒடுங்கிப்போதலை மிகுந்த வன்மத்தோடும் சற்றே மிகையோடுமாய் பதிவு செய்திருக்கிறது இப்படம். வறுமையும் விபத்தும் தத்தமது கோரத் தாண்டவங்களை நிகழ்த்திக் காட்டும் பிரதான இடமாக இவர்களின் வாழ்விருக்கிறது. இவர்களின் வாழ்வை மொத்தமாய் உறிஞ்சிக் குடித்து வீங்கிப் பெருத்திருக்கும் பண முதலைகளையும், அதிகார வர்க்கத்தினரையும் இப்படம் கடுமையாய் சாடியிருக்கிறது.

அங்காடித் தெருவின் திரைக்கதையிலிருந்து பத்திற்கும் மேற்பட்ட அற்புதமான சிறுகதைகள் பிரிந்து செல்கின்றன. அல்லது பல சிறுகதைகள் சேர்ந்து ஒரே திரைக்கதையாய் பிணையப்பட்டிருக்கிறது. இப்படம் முழுக்க சிதறியிருக்கும் கதாபாத்திரங்களுக்கு விரிவாய் சொல்லப்படாது விட்ட அழுத்தமான பின்புலம் இருக்கிறது. அதை ஒரு காட்சியின் மூலமோ, சிறியதொரு உரையாடலின் மூலமோ மொத்தமாய் பார்வையாளனுக்கு கடத்தி விட முடிவது அதி நேர்த்தியான இயக்கமாகத்தான் இருக்க முடியும்.

1. செளந்திர பாண்டி – ராணியின் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மட்டுமே ஒரு தேர்ந்த சிறுகதையாக கண் முன் விரிகிறது.
தட்டிக் கழிக்க முடியாத குடும்ப பொறுப்புகளும், வறுமையும், வேலையின்மை குறித்த அச்சமும் செளந்திரபாண்டியை இயலாமையின் உச்சத்தினுக்கு நகர்த்திவிட்டிருக்கிறது. தன்னுடைய காதலை ஒத்துக் கொண்டால் இருவருக்குமே வேலை போய்விடும், குடும்பம் தெருவிற்கு வந்துவிடும் என்கிற பலவீனம் பலரின் முன் தன் காதலை ஒத்துக் கொள்ள அவனை மறுக்க வைக்கிறது. இரண்டு வருடங்களாய் பின்னால் அலைந்த ஆண் காதலிப்பதாய் உருகிய காதலன் பொதுவில் தன்னை வேசை யென்றும் தன்னை அவன் காதலிக்கவே இல்லையென்றும் சொன்ன அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாது (கனி யின் வார்த்தைகளில் : அவன் ராணிய வேசைன்னு சொன்னான் பார் அப்பவே அவ நெஞ்சு வெடிச்சி செத்து போயிட்டா அப்புறம் கீழ விழுந்தது வெறும் உடல்தான்) ராணி மாடி கண்ணாடி சன்னலை உடைத்துக் கொண்டு தரைக்குப் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். வேலை, காதலி வாழ்க்கை என சகலமும் இழந்து பைத்தியமாகும் செளந்திரபாண்டி ஆண்களுக்கு ஆத்மார்த்தமாகவும். காதலுக்காக உயிர் நீத்த ராணி பெண்களுக்கான ஆதர்சமாகவும் மாறிப்போகிறார்கள். வறுமை என்கிற ஒரே பலவீனத்தை மிக மோசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அதிகார வர்க்கம் ஒரு பெண்ணைக் கொன்றும் இன்னொருவனைப் பைத்தியமாக்கியுமாய் கெக்கலிக்கிறது. பார்வையாளர்களாகிய நாம் உறைந்து போகிறோம்.

2. கனியின் பதிமூன்று வயது தங்கை - அவள் பணிபுரியும் வீடு - சடங்காதல் -தீட்டு என கொல்லையில் நாய்கள் கட்டும் இடத்தில் தங்க வைத்தல் – இந்தாடி அம்பது ரூபா என்பதை உதறிவிட்டுப் போதல் - சடங்கான பெண்ணை கூட்டிக்கொண்டு எங்கே போவதெனத் தெரியாமல் நடுத்தெருவில் கதறுதல் – தீட்டு மனுசங்களுக்குதான் சாமிக்கு இல்ல என மனித நேயமிக்க மனிதர்கள் சிலர் அரவணைத்துக் கொள்ளுதல். இது இன்னொரு நேர்த்தியான சிறுகதை.

3. வளர்ச்சிக் குன்றிய மனிதருக்கு பிறக்கும் குழந்தை அவரைப் போலவே இருக்கிறதென மகிழும் முன்னாள் பாலியல் தொழிலாளித் தாய். இந்தக் கதையை மட்டுமே விவரித்து எழுதினால் சிறந்த சிறுகதையாக வரும் என்பதில் சந்தேகமில்லை

4. வெளியில் பளபளப்பாய் திரியும் பணக்காரப் பெண்ணின் குசுவினால் ஓடி மறையும் ஏழை இளைஞர்கள் பகுதி மிகுந்த எள்ளலோடு பதியப்பட்ட எதிர் கதையாடல்.

5. எட்டு வருடங்களாய் பனிரெண்டு மணி நேரங்கள் நின்றபடியே வேலை பார்த்ததில் இரண்டு கால்களும் முழுதாய் வெரிக்கோசு நோய் தாக்கி அதே ரங்கநாதன் தெருவில் மடியும் நடுத்தர வயதுக்காரர்.

முப்பது வருடங்களாய் மனிதர்களை மட்டும் நம்பி ரங்கநாதன் தெருவில் கடைபோட்ட கண் தெரியாத முதியவர், பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காமல் நகராட்சிக் கக்கூஸை ஆக்ரமித்து செல்வந்தனாகும் நடுத்தர வயதுக்காரர், பழைய சட்டைகளை துவைத்து புதிதாக லேபிள் ஒட்டி பேக்கிங் செய்து பத்து ரூபாய்க்கு விற்கும் இளைஞர், வெளியூரில் அண்ணன் வேலை செய்யும் கடையின் பெயர் போட்ட பையை தயக்கத்தோடு கேட்டு வாங்கி குதூகலிக்கும் சிறுமி என படம் முழுக்க கதாபாத்திரங்களும் கதைகளும் சிதறிக் கிடக்கின்றன.
எல்லாக் கதைகளும் எல்லாக் கதாபாத்திரங்களும் விளிம்பு மனிதர்களின் மீது பாயும் அதிகாரங்களின் வெறியாட்டத்தையும் தின்றுக் கொழுத்த பணக்காரர்களின் குரூர முகத்தினையும் அப்பட்டமாக தோலுறிக்கின்றன. அதே நேரத்தில் மனித நேயத்தையும் சிறியதொரு நம்பிக்கை வெளிச்சத்தையும் பார்வையாளர்களிடத்தில் கடத்தவும் தவறவில்லை.

விபத்து இந்தப் படத்தில் வெகு கவனமாக கையாளப்பட்டிருக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் சாமான்யர்களின் உயிரைத்தான் காவு வாங்குகின்றன. சாமான்யன் ஒரு தனிமனிதனுமல்ல. மரணமோ, உடல் ஊனமோ அது அவனுக்கு மட்டும் நேராது அவனைச் சார்ந்துள்ள குடும்பத்தினுக்கும் நேரும் அவலத்தையும் அங்காடித் தெரு நுட்பமாய் பதிவு செய்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு உதயம் தியேட்டருக்கருகில் சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் உயிரை / உடலைப் பறித்த லாரியின் வன் சக்கரங்களுக்கடியில் சிக்குண்ட லிங்குகளின் கனிகளின் வாழ்வு இப்படி இருந்திருக்கலாம். விடியப் போகும் அடுத்த நாள் அவர்களுக்கு மிக முக்கியமானதொரு நாளாக இருந்திருக்கக் கூடும். அடுத்த நாளின் சுதந்திரத்தை அவர்கள் மிகப் பெரும் போராட்டத்தினுக்குப் பிறகு பெற்றிருக்கலாம். அப்போதுதான் துளிர்த்த ஒரு செடி வேரோடு பிடுங்கியெறிப்பட்டதைப் போல கனிகளின் லிங்குகளின் துளிர்த்த வாழ்வை அந்த லாரி நசுக்கி அழித்திருக்கக் கூடும். ஆளில்லாத ரயில்வே கேட்டுகளை கடக்க முனைந்து, ரயிலிடம் தோற்று, தண்டவாளத்தில் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எத்தனையோ குடும்பங்கள் சென்னையின் நெரிசலில், அதிகார வர்க்கத்தினரின் காலடியில் புதையுண்டிருக்கலாம். பனையேறியின் வாழ்வும் சாவும் பனையிலேதான் என்பதை நிரூபித்த எத்தனையாவதோ பனையேறியின் மீதமிருக்கும் வாழ்வைக் காக்க வேண்டி அவரின் இரண்டு பதின்ம வயதுப் பெண்களில் ஒருத்தி சென்னையின் துணிக்கடைகளில் மாரைக் கசக்கும் கருங்காலிகளுக்கு இரையாகலாம். இன்னொருத்தி மேல்தட்டு வர்க்கத்தினரின் நாய்கள் தங்கும் கூண்டுக்குள் அடைப்பட்டுக் கிடக்கலாம். எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் இருப்பது இந்த விபத்துக்கள்தாம். அந்த விபத்துகளின் பின்னாலிருக்கும் அரசாங்கத்தின் மெத்தனம், தனிநபரின் கவனக் குறைவு போன்றவைதாம் மிகப் பெரும் துயரங்களுக்கான ஊற்றாய் இருக்கிறது. எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்ளும் மேல் தட்டு வர்க்கம் கை விடப்பட்டவர்களின் வாழ்வை மிகுந்த விருப்பத்தோடு விழுங்கி ஏப்பம் விடுகிறது.

திரையாக்கத்தைப் பொறுத்த வரை அங்காடித் தெரு வெயிலின் நகலாகத்தான் வந்திருக்கிறது. இரு படங்களும் வெவ்வேறு தளம்தான் என்றாலும். ஒரு பெண்ணின் தற்கொலையோடு முடியும் முதல் பாதி, பால்ய கால முன் கதைக் காட்சியமைப்புகள், மிகுந்த சப்தங்களோடு பெய்யும் மழையில் சண்டை, வலிந்து திணிக்கப்படும் குரூரம், கிளிட்சே அழுகை என பலக் காட்சிகளில் வெயிலின் பாதிப்பு இருந்தது. இம்மாதிரியான பேட்டன் கதை சொல்லல் முறைகளிடம் வசந்த பாலன் போன்றவர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. இந்த படத்தின் மிக மோசமான விஷயம் இசை. குதூகலம், கொண்டாட்டம், துயரம், என எந்த உணர்வையுமே இசை தூண்டவில்லை. மாறாய் காட்சிகளின் வீர்யத்தை இசை சற்றே குறைக்கிறது. பின்னணி இசையை சரியாகப் பயன்படுத்தும் இயக்குனராக நம் சூழலில் பாலுமகேந்திராவை சொல்லலாம். அவர் இயக்கத்தில் வந்த பெரும்பாலான படங்களின் பின்னணி இசையென்பது மெளனமும், காற்றும், பறவைகளின் சப்தமும் அல்லது சூழல்களின் ஒலிகளாகத்தான் இருக்கும் அதுவே அக்காட்சிகளின் இயல்பைக் குலைக்காது பார்த்துக்கொள்ள உதவும். இம்மாதிரியான படங்களுக்கு நடனத்துடன் கூடிய பாடல் காட்சிகளெல்லாம் பொருந்தாது உறுத்தலாகி விடுகின்றன. படத்தின் இயக்குனரே எழுதும் உரையாடலுக்கும் எழுத்தாளரின் உரையாடலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை ஜெயமோகன் சரியாய் நிறுவியிருக்கிறார். இரண்டாம் பாதி தொய்வை திரைக்கதையில் சற்று சரி செய்திருக்கலாம். ஆனந்தியாக நின்று போயிருந்த அஞ்சலி கனியாக விஸ்வரூபமெடுத்திருக்கிறார். படத்தை உயிரோட்டமாக வைத்திருப்பதில் இவரின் பங்கு பிரதானமாகிறது.

சொற்பமான ஆட்கள் மட்டுமே அமர இயலும் துபாய் கலேரியாவின் குட்டித் திரையரங்கில் மிக சொற்பமான ஆட்களுன் இத்திரைப்படத்தைப் பார்த்தேன். இடைவேளையில் கழிவறையில் இருபத்தாறு வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் அழுகையைக் கட்டுப் படுத்த முனைந்து தோற்றுக் கொண்டிருந்தார். சில காட்சிகளில் பின்னிருக்கைப் பெண்களின் விசும்பல்களும் துல்லியமாய் கேட்டன. படம் பார்த்து இரண்டு நாட்களாகியும் ஏதோ ஒரு நிம்மதியின்மையை உணர்வதாக நண்பியொருத்தி புலம்பிக் கொண்டிருந்தாள். இவைதாம் இத்திரைப்படத்தின் வெற்றியாகவிருக்கிறது.

Monday, March 22, 2010

விழாக் குறிப்புகள் - 2


சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அளவில் சிறிய விமான நிலையம் என்பதால் சீக்கிரம் வெளியே வந்து விட முடிந்தது. வெளியேறும் வழியில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். மூன்று மாதத்தினுக்கு முன்பு வரும்போது இப்படிச் சுற்றி வர வேண்டியதில்லை. பெரும்பாலான நவீனப்படுத்தப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் யாவும் நமக்கு மிகப்பெரும் தொல்லையாகத்தான் இருக்கின்றன. சிம் கார்டு மாற்றி வாட்சைத் திருகி சென்னைக் காற்றை ஆழமாய் உள்ளிழுத்தபோது ஒரு சிறிய பரவசம் உண்டாயிற்று. எந்தக் கவலையுமற்று மனிதர்கள் வெற்றுத் தரையில் தலைக்கு கை வைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தனர். திறந்திருந்த இரண்டு ஏர் டெல் கடைக்காரர்கள் இரும்பு நாற்காலியில் சரிந்து ஆழமாய் தூங்கிக் கொண்டிருந்தனர். குளிர் மென்மையாய் பரவியிருந்தது. டாப் அப் செய்ய வேண்டியிருந்ததுதான் என்றாலும் அவர்களின் தூக்கத்தை கெடுக்க மனதில்லாமல் நகர்ந்தேன். மகேந்திரா வேனிலிருந்து கிராமத்து மனிதர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். தூக்கம் நிறைந்த கண்களோடு வழியெங்கும் தாயகம் திரும்புபவர்களின் உறவினர்கள் காத்துக் கிடந்தனர். இம்மாதிரி சம்பிரதாயங்களான விடைபெறல், வரவேற்றல், கண்ணீர், இதெல்லாம் என்னை சம நிலையில் இருக்க விடாமல் செய்துவிடுமென பயந்தே நான் உறவுகளையும் நண்பர்களையும் விமான நிலையத்தினுக்கு அழைப்பதில்லை. மேலதிகமாய் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வந்துவிடுவதால் பெரிய இடைவெளியோ நெகிழ்வுச் சமாச்சாரங்களோ இருப்பதில்லை.

அங்கிருந்த கடையொன்றில் தேநீரும் தண்ணீர் பாட்டிலொன்றும் வாங்கினேன் அய்ம்பது ரூபாய் கொடுத்ததில் சில்லறையாக ஏதோ திருப்பித் தந்தனர். சென்னை நம்பவே முடியாத அளவினுக்கு விலைகளை உயர்த்திக் கொண்டுள்ளது. டீயைக் குடிக்கவே முடியவில்லை. மோசமானதொரு சுவையிலிருந்தது. உடன் வந்த உயரமான ஜீன்ஸ் பெண் எனக்கு முன்னர் வந்து அதே டீயை ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருந்தாள். டீயை எறிந்து விட்டு விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்தேன். திருவண்ணாமலை என்பதால் பேருந்து வசதி சற்று அதிகம்தான். விமான நிலையத்திலிருந்து இறங்கி சாலைக்கு எதிர்புறம் சென்றால் போதுமானது. ஆட்கள் குறைவான பேருந்துகள் தூங்கியபடி வந்து கொண்டிருக்கும். குளிர் காற்று முகத்தில் படபடக்க பயணிக்கும் இந்த நான்கு மணி நேரத்தில் என்னால் எப்போதுமே ஒரு நொடி கூட தூங்க முடிந்ததில்லை. மெல்ல இருள் விலகிக் கொண்டிருக்கும் பின்னிரவைப் பார்த்தபடி வழியில் தென்படும் ஊர்களுக்கு வந்த தருணங்களை, நிகழ்ந்த சம்பவங்களை நினைத்தபடி, நேரம் கடக்கும். இம்மாதிரி தருணங்கள் பகல் கனவில் மூழ்கித் திளைக்க வசதியானது. சமீபத்தில் வந்து கொண்டிருக்கும் பகல் கனவையெல்லாம் எழுதி உங்களை கிச்சுகிச்சு மூட்ட விருப்பமில்லாததால் பகல் கனவு என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்.

திண்டிவனம் தாண்டியபோது இரவு மெல்ல விலகியிருந்தது. பனிப்புகை மூடிய காலை உதித்த முதல் கணத்தை தரிசிக்க முடிந்தது. செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை வரை பிரதான சாலையை ஒட்டிய வயல்கள் வரிசையாய் வந்து கொண்டிருந்தன. பசிய புற்களில்,அடர் பசும் நெற்கதிர்களில் பனி படந்திருந்தது. அதிகாலைப் பனிக்காற்றில் கலந்திருந்த பசுந்தாவரங்களின் வாசம் சுவாசத்தை நிரப்பியது. சாலையை ஒட்டிய குடிசைகள், ஓட்டு வீடுகள், சமீபமாய் கட்டப்பட்ட ஒரே மாதிரியான மெத்தை வீடுகளென சிறுசிறு இடைவெளிகளில் வீட்டின் முகங்கள் வந்து கொண்டிருந்தன. சொல்லி வைத்தாற்போல் எல்லா வீட்டு முற்றத்திலும் அதே நேரத்தில் பெண்கள் சாணம் தெளித்துக் கொண்டிருந்தனர். சாலை ஓரத்தில் குத்துக் காலிட்டு அமர்ந்து கையில் ஒரு குச்சியினை வைத்துக் கொண்டு மண்ணைக் கீறியபடி சிறுவர்கள் மலம் கழித்துக் கொண்டிருந்தனர், அசை போட்டபடி நடக்கும் மாடுகள், புலுக்கை உதிர்க்கும் ஆடுகள், விடியலை அறிவிக்கும் கோழிகள் என கண்களில் பட்டு வேகமாய் மறையும் சாலையோர கிராமக் காட்சிகளை விழுங்கியபடி பயணித்துக் கொண்டிருந்தேன். கீழ் பெண்ணாத்தூரைக் கடந்த போது கருவேல மரங்கள் சூழந்த அந்த ஏரியும் அதனுள் மாலை நேரங்களில் சூரியன் தங்கமாய் மின்னும் பின்னணியில் விளையாடிக் களைத்த சிறு பிராயத்து நாட்களும் நினைவில் வந்தது. மேலும் அவ்வயதில் அக் கிரமத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான சிறு கிராமங்களின் கிணறுகளில் குதித்து கும்மாளமிட்டிருந்ததையும் நினைத்துக் கொண்டேன். பம்பு செட்டு, கிணறை ஒட்டிய பெருமரக் கிளைகள் போன்றவற்றின் மீதேறிக் குதிப்பது மிகப்பெரும் சாகசச் செயலைப் புரிந்த மனநிலையைத் தரும். இந்த மன நிலை இன்னமும் கூட அப்படியேதான் இருக்கிறது. சமீபத்தில் மஸ்கட் சென்றிருந்த போது வாதிபின்காலித் என்கிற இடத்தில் கென்னுடன் ஒரு உயரமான பாறை மீதிருந்தது நீரில் குதித்து புளகாங்கிதமடைந்து கொண்டேன்.

திருவண்ணமலை வந்துவிட்டது. பெரியார் சிலை நிறுத்ததில் இறங்கியதும் பிரம்மாண்டமான பேனர் ஒன்று என்னை வரவேற்றது. புத்தக வெளியீட்டு விழா பேனர் தான் அது. மிக நேர்த்தியான ஓவியத்துடன் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை பறை சாற்றிக் கொண்டிருந்தது. மூன்று சாலைகள் சந்திக்கும் திருவண்ணாமலையின் முக்கிய இடங்களிலெல்லாம் மிகப் பெரிய விளம்பரங்கள் நேர்த்தியான ஓவியத்துடனும் புகைப்படத்துடனும் வைக்கப்பட்டிருந்ததை ஆட்டோவில் செல்லும்போது பார்த்துக் கொண்டேன்.

காலை பத்தரை மணிக்கு வம்சியில் வைத்து பவா வைக் கட்டிக் கொண்டேன். மிகப் பெரிய மலர்ந்த வரவேற்பை ஒவ்வொரு முறையும் அவரிடம் உணரமுடிகிறது. க.சீ.சிவக்குமார் நான்கு நாட்கள் முன்னதாகவே அங்கு வந்துவிட்டிருந்தார். தொடர்ச்சியாக நண்பர்கள் வந்து கொண்டேயிருக்க சுவாரசியமாய் பேச்சும் டீயும் ஓடியபடி இருந்தது. அழைப்பிதழ்களை அணுப்பியபடி, நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தபடி, அந்த நண்பகல் கடந்தது. என் சொந்த வேலை ஒன்றையும் மதியவாக்கில் முடித்துக் கொண்டு நானும் சிவாவும் பிரபஞ்சனை சந்திக்கச் சென்றோம். மதிய உணவை பவாவின் நிலத்தில் அவரின் புதுக் குடிலில் வைத்துக் கொள்ள திட்டமிட்டோம்.

தொடரும்..

Friday, March 19, 2010

மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் - துபாய் திரைப்பட விழா



ஆறாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில் டிசம்பர் 9 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 16 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்விழாவில் 55 நாடுகளிலிருந்து 168 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் அராபிய ஆவணப்படங்களும் பாலஸ்தீனிய குறும்படங்களும் உள்ளடக்கம். பெரும்பாலான திரையிடல்கள் மால் ஆஃப் எமிரேட்ஸ் - சினிஸ்டார் திரையரங்குகளிலும் சொற்பமான படங்கள் மதினாத் ஜூமைரா, டிஎம்சி உள்ளிட்ட மற்ற மூன்று இடங்களிலும் திரையிடப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதை தேர்வுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இது ஒருவகையில் சரியானதே. பெரும்பான்மையுடன் போட்டியிட முடியாத சிறுபான்மை சினிமாவிற்கான தளமாகவும் துபாய் திரைப்பட விழா இருக்கிறது. A celebaration of Indian cinema என்கிற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அமிதாப் பச்சனிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நம் ஊரிலிருந்து அவள் பெயர் தமிழரசி மற்றும் யோகி இரண்டும் இடம் பிடித்திருந்தன. பிற நாடுகளின் வரிசையில் பிரெஞ்சுத் திரைப்படங்களும் அதிகம் திரையிடப்பட்டன.

மற்ற நாடுகளின் சினிமா பரிச்சயமான அளவிற்கு நான் வாழும் நிலப்பரப்பின் திரைப்படங்களை இன்னும் பார்த்திருக்கவில்லை(ஈரான் நீங்கலாக) எனவே இம்முறை மத்திய கிழக்கின் படங்களைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் முன்பெப்போதுமில்லாத பரபரப்பான நாட்களை எதிர்கொண்டிருப்பதால் நான்கு படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

THE NILE BIRDS – Egypt
WHISPER WITH THE WIND -Iraq
MY DEAR ENEMY - South Korea
THE MAN WHO SOLD THE WORLD - Morocco

நான்கு படங்களுமே நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. திரைப்படம் என்கிற வகையில் எகிப்திய படமான நைல் பேர்ட்ஸ் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தாலும் நைல் நதிக்கரை மனிதர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வு, காமம், கொண்டாட்டம், துயரம் இவற்றை ஓரளவிற்கு சுமாரான திரைக்கதையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. எகிப்தில் சினிமா ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை. அதிக திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை. வளர்ச்சி, தொழில்நுட்பம் என எதுவுமில்லாத ஒரு தேசத்திலிருந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அந்நாட்டைப் பொறுத்த வரை ஒரு முக்கிய சினிமாவாக இருக்கலாம். இப்படத்தினை அதன் இயக்குனரோடும் கதாநாயகனோடும் அமர்ந்து பார்த்தேன். படம் முடிந்த பின்பான உரையாடலில் நான் சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் எகிப்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்து இச்சினிமா குறித்த நல்லதொரு திருப்தி இருந்ததை அவர்களின் களிப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

After the Downfall, Heman, The Children of Diyarbakir, Whisper with the Wind போன்ற குர்திஷ் இயக்குனர்களின் படங்கள் இம்முறை இடம் பெற்றிருந்தன. குர்திஷ் இன மக்களின் அழித்தொழிப்பை களமாகக் கொண்டிருக்கும் இத் திரைப்படங்கள் துருக்கி,ஈரான் மற்றும் ஈராக் நாடுகளால் கொன்று குவிக்கப்பட்ட குர்திஷ் இன மக்களின் அவலத்தை மிகுந்த வலியுடன் நம் முன் வைக்கின்றன. Turtles can fly படத்தை இயக்கிய பக்மன் ஹோபாடியின் No one Knows about Persian Cats படத்தைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன் அத்திரைப்படம் இங்கு திரையிடப்படாததால் இரானிய குர்திஷான ஷாஹ்ரம் அலிடியின் இயக்கத்தில் வந்த Whisper with the Wind படத்தைப் பார்த்தேன். ஷாஹ்ரம் அலிடியின் முதல் படமிது. கான் 2009 திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. குர்திஷ் இன மக்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வெறியாட்டத்தை, படுகொலைகளை இத் திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. வறண்ட மலைகள் சூழந்த நிலப்பரப்பு, எல்லாவிடத்தும் நிறைந்திருக்கும் காற்றின் அமானுஷ்ய சப்தம் இவற்றின் பின்னணியோடு மிகத் துல்லியமான, அபாரமான ஒளிப்பதிவும் சேர்ந்து இப்படத்தை மிளிரச் செய்திருக்கிறது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் சாமான்யர்களின் வாழ்வு மிகுந்த வலியுள்ளதாக இருக்கிறது. தொடர்ச்சியான போர்களிலும், வல்லரசுகளின் கோரத் தாண்டவங்களிலும் சிக்கி அலைவுறுவதோடு மட்டுமில்லாமல் மதம், சமூகக் கட்டுக்கள், சிறுபான்மை இனத்தவரின் மீதான அதிகாரத்தின் வெறியாட்டம் என எல்லா வன்முறைகளும் நிகழ்ந்த / நிகழ்ந்து கொண்டிருக்கும் இடமாக இத் தேசங்கள் இருக்கின்றன. இம்மாதிரியான சூழலிலிருந்து வெளிவரும் படங்கள் தங்களின் துயரம் நிரம்பிய வாழ்வை, இழப்பை, கதறல்களை இரத்தமும் சதையுமாக பார்வையாளன் முன் வைக்கின்றன. அவை ஏற்படுத்தும் அதிர்ச்சி பார்வையாளனை நிலைகுலைய வைக்கிறது. அப்படி ஒரு அதிர்வைத்தான் இப்படமும் ஏற்படுத்தியது. ஈராக் - அமெரிக்க போர்சூழல் பின்னணியில் வெளிவந்த turtles can fly படத்தின் தொடர்ச்சியாக இதை அணுகலாம். இரண்டு பிரச்சினைகளும் வெவ்வேறானது என்றாலும் இரண்டுமே சாமான்யர்களின் துயரத்தை மிக அழுத்தமாகவே நம் முன் வைக்கின்றன.

ஈராக் மலைப்பிரதேசங்களில் வாழும் குர்திஷ் மக்களின் அழித்தொழிப்பில் தன் மகனை இழந்த மாம் பால்டார் என்கிற முதியவர் திக்பிரம்மையுற்ற மனைவியுடன் எஞ்சிய நாளை கழிக்கிறார். தன் வாகனத்தில் மலைகள், சமவெளிகள் முழுக்கப் பயணித்து அங்கங்கே மீதமிருக்கும் மக்களுக்கு தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார். கூண்டோடு அழிக்கப்பட்ட கிராமங்கள், உயிரோடு புதைக்கப்பட்ட மனித உடல்கள் எல்லாவற்றையும் தாண்டி மீதமிருக்கும் மனிதர்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரது பயணங்களில் தென்படும் கடைகள், நிகழ்வுகள் யாவும் திரும்பி வரும்போது காணாமல் போயிருக்கின்றன அல்லது சிதிலமாகிக் கிடக்கின்றன. உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் அழித்தொழிப்புகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வரலாம் என்கிற பயத்தோடு வாழ்கிற மக்களின் அவலத்தை மிகத் துல்லியமாய் பதிவு செய்திருக்கும் படமிது. எல்லா நம்பிக்கைகளும் காணாமல் போன பின்பு அங்கங்கே கேட்கும் அல்லா அல்லா என்கிற அவலக் குரல்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் மாம் பால்டார் பதிவு செய்த பிறந்த குழந்தையின் அழுகுரலொன்றை தடைசெய்யப்பட்ட வானொலி ஒளிபரப்பு செய்கிறது. மலைப் பிரதேசமெங்கும் வானொலியில் கேட்கும் அப்போதுதான் பிறந்த குழந்தையின் அழுகுரல் புதியதொரு துவக்கத்திற்கான நம்பிக்கைகளைத் தருவதோடு படம் நிறைவடைகிறது.

ஈழம், குர்திஷ்தான் என நிறைவேறாமலேயே போன அற்புதங்கள் கணக்கிலடங்கா குழந்தைகளின் பெண்களின் முதியவர்களின் இளைஞர்களின் உடல்களைத் தின்று அதிகாரத்தின் காலடியில் புதையுண்டிருக்கலாம். ஆயினும் அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகளைப் பற்றிய கனவுகளின் மீது நம்பிக்கை வைப்பதுதான் இந்நாட்களின் மீட்பாய் இருக்கிறது.

மொராக்கோ திரைப்படமான The man who sold the world புதுமையான காட்சி அனுபவத்தைத் தந்தது. திரைப்படவிழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டு இரண்டு முறையும் அரங்கு நிறைந்தது. இவ்விழாவில் பார்த்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான படமாக இதைச் சொல்லலாம். இமாத் நூரி(Imad Noury), சுவெல் நூரி (Swel Noury) என்கிற மொராக்கோ சகோதரர்கள் இயக்கிய படமிது. இவர்களின் தந்தை ஹக்கிம் நூரி மொராக்கோவில் நன்கு அறியப்பட்ட இயக்குனர். தாய் மரியா (Maria Pilar Cazorla) ஸ்பானியத் திரைப்பட தயாரிப்பாளர். இத் திரைப்படத்தை தயாரித்திருப்பதும் இவர்தான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் 'A Weak Heart' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது. பெரும்பாலான காட்சிகளில் இரஷ்ய இயக்குனர் அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் பாதிப்பை உணர முடிந்தது. திரையில் மிகச் சிறந்த கவித்துவப் படிமங்களை உண்டாக்குவதில் வல்லவரான தர்க்கோயெவ்ஸ்கியால் பயன்படுத்தப்பட்ட பல திரைப்படிமங்கள் இவர்களை பாதித்திருக்கின்றன. கவித்துவ உச்சங்களை திரையில் கொண்டுவர தர்க்கோயெவ்ஸ்கியால் மட்டும்தான் முடியுமென்கிற என் இறுக்கமான நம்பிக்கைகளை இவர்கள் சற்றுத் தளர்த்தியிருக்கிறார்கள். மத்திய கிழக்கின் intellectual cinema என இத்திரைப்படத்தை தாராளமாக கொண்டாடும் அளவிற்கு மிக நேர்த்தியான முறையில் படமாக்கப் பட்டிருக்கிறது. இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்ப சுவெல் நூரி.

ரெட் காமிராவினைக் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள். லில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Audrey Marnay யின் வெண்ணிற உடலில் தனியாய் தெரியும் அடர் சிவப்பு உதடுகளும் சிவப்புச் சாயம் பூசின நகங்களும் ரெட் காமிராவின் அசாத்தியங்கள். படம் முழுவதுமே சிவப்பு நிறம் காதலின் நிறமாகவும் கொண்டாட்டத்தின் நிறமாகவும் கையாளப்பட்டிருக்கிறது.

காட்சிகளுக்குப் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்கள் படத்திற்கு அசாதாரணத் தன்மையை தந்திருக்கின்றன. மனதின் மிக ஆழமான, கொந்தளிப்பான, உணர்வுகளின் / உணர்ச்சிகளின் தெறிப்பை ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிந்தது. பதினைந்து தலைப்புகளில் இத்திரைப்படம் தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு அடையாளமில்லா தேசத்தில் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வு மிகக் கடுமையான சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. வளைந்த கால் ஒன்றையும் மிக இலேசான இதயத்தையும் கொண்டவனுமான எக்ஸ்(Said Bey) அரசாங்கத்தின் கோப்புகளை மறு பிரதியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். எக்ஸின் கையெழுத்து அந்த ஊரிலேயே மிகச் சிறந்த கையெழுத்தாய் இருப்பதனாலும் அவன் உடல் சிக்கலை முன் வைத்தும் அவனை அரசாங்கம் போர் முனைக்கு அனுப்பி வைக்க வில்லை. எக்ஸின் அறைத்தோழனும் சக பணியாளனுமான நே (Fahd Benchamsi) எக்ஸின் மீது மிக ஆழமான அன்பை வைத்திருக்கிறான். இருவரும் மிக நெருக்கமான அடர்த்தியான அன்பில் திளைக்கிறார்கள். மேலதிகமாய் எக்ஸிற்கு லில்லி என்கிற மிக அழகான பாடகியின் காதலும் கிட்டுகிறது. அவள் எக்ஸை இந்த உலகத்தின் எல்லாவற்றையும் விட அதிகமாய் நேசிக்கிறாள்.

தன் மீது நம்பிக்கை வைக்கும் உயரதிகாரி, அன்பையும் அக்கறையும் கொட்டும் உயிர்த்தோழன், தன்னை வாரிக் கொடுக்கும் அழகான காதலி என எல்லாமிருந்தும் எக்ஸ் துயரமடைகிறான். பதட்டமடைகிறான். இந்த உலகத்தில் தனக்கு மட்டும் எல்லாம் கிடைத்துவிட்டதே என குற்ற உணர்வு கொள்கிறான். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கையை குலைத்து விடுவோமோ என பயப்படுகிறான். தன்னை உலகத்துடன் பொருத்திப் பார்த்து உலகம் எப்போது மகிழ்வடைகிறதோ அப்போதுதான் தன்னால் மகிழ்வாய் இருக்க முடியும் என நம்புகிறான். இறுதியில் மனநிலை பிறழ்கிறான்.

இப்படத்தின் திரையாக்கம் மகிழ்வையும், உற்சாகத்தையும், அன்பில் திளைத்தலையும், நட்பையும், காதலையும், காமத்தையும், உடலையும், போதையையும், பைத்தியத்தன்மையையும் மிகச் கச்சிதமாக பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. போர்ச்சூழலை காண்பிக்க இரண்டு சிதிலமடைந்த வீடுகளும் எக்ஸ் மற்றும் நே வின் பதட்டங்களும் போதுமானதாய் இருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் கதையும் புறம் சாராது அகத்திலேயே பயணிப்பதால் இடம்/தேசம் குறித்தான அடையாளமற்றத் தன்மையை உண்டாக்க இயக்குனர்கள் பெரிதாய் மெனக்கெட வேண்டிய அவசியமில்லாமல் போய்விடுகிறது.

திரையிடலுக்குப் பின்பான கலந்துரையாடலில் நூரி சகோதரர்களில் ஒருவரும் தயாரிப்பாளரான தாயும் மற்றும் எக்ஸாக நடித்திருந்த சையத்பேவும் பங்குபெற்றனர். இரஷ்ய நாவலை அராபிய போர் சூழலுக்குப் பொருத்த எவ்வாறு முடிந்தது என்கிற வினாவிற்கு நூரி பதிலளித்தார். தஸ்தாயெவ்ஸ்கி, காஃப்கா போன்றவர்களின் படைப்புகளில் சூழல்கள் பின்னணிகள் குறித்த பெரும் விவரணைகள் இல்லாதது எல்லா சூழல்களுக்கும் பொருந்திப் போக இலகுவாய் இருக்கிறதென்றார். தாய் தயாரிப்பாளராக இருந்ததால் தங்களால் சுதந்திரமாய் இயங்க முடிந்ததென்றும் பட நேர்த்தியை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்பட முடிந்ததாயும் பகிர்ந்தனர். அரை மில்லியன் யூரோக்களை இப்படத்திற்கு செலவு செய்ததாய் மரியா பகிர்ந்தார். முப்பது வயதையும் எட்டியிராத இவ்விளம் இயக்குனர்கள் தொட்டிருக்கும் உயரம் அசாத்தியமானதுதான். மேலதிகமாய் இத்திரைப்படம் மூலமாய் உலகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன போன்ற மொன்னை கேள்விகளுக்கும் மிக நிதானமாய் பதில் சொல்லும் பொறுமையும் இவர்களுக்கு இருக்கிறது.படம் முடிந்த பின்பு நூரியின் கைகளை அழுத்தமாய் பற்றிக் குலுக்கினேன். இவ்விரு சகோதரர்களும் வருங்கல மத்தியக் கிழக்கின் தவிர்க்க முடியாத சினிமா அடையாளமாகவிருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

துபாய் திரைப்பட விழாவின் வண்ணம் வருடத்திற்கு வருடம் மெருகேறிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக இந்நிகழ்வை அவதானித்து வருபவன் என்கிற முறையில் கடந்த வருடங்களை விட இவ்வருடம் மிக தைரியமான படங்களை விழாக் குழுவினர் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். உள்ளூர் படங்களுக்கு கணிசமான பரிசை வழங்குவதின் மூலம் அராபிய இளைஞர்களிடையே திரைப்படம் குறித்தான சிந்தனைகளை வளர்த்தெடுக்கிறார்கள். அய்ரோப்பிய திரைப்பட விழாக்களைப் போல கவர்ச்சியும் வசீகரமும் புகழின் வெளிச்சமும் அங்கீகாரங்களும் இன்னமும் இவர்களுக்கு கிடைக்கவில்லைதான் எனினும் மத்தியக் கிழக்கின் பெருமளவில் அறியப்படாத சினிமாக்களுக்கு இவ்விழா ஒரு பாலமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

அகநாழிகை மார்ச் 2010 இதழிலும் இக்கட்டுரை வெளிவந்துள்ளது. நன்றி வாசு.

Thursday, March 18, 2010

விழாக் குறிப்புகள் -1

நினைவு முழுக்க படு வேகமாய் கடந்து போன இரண்டரை நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களும் தருணங்களும் மனிதர்களும் பேச்சுக்களும் நிறைந்திருந்தன. ஒவ்வொரு முறையும் என் சொந்த நகரத்தை விட்டு வரும்போது ஒற்றையனாய்த்தான் வருகிறேன் (எப்படி உள் நுழைந்தேனோ அப்படியே) சென்னை விமான நிலையத்தினுக்கு விரையும் வாகனமொன்றில் சன்னல் வழியே இரவுக் குளிர் காற்று முகத்தினை சிதறடித்துக் கொண்டிருந்தது. என்னுடலை உறைவித்து நினைவுகள் எங்கெங்கோ உலவிக் கொண்டிருந்தன. கடந்த வியாழக்கிழமை மாலை துவங்கிய பயணமிது. இதோ அதே புள்ளியை நோக்கிய திரும்பல். ஒரு வித இறுக்கமும், இலகுவும் தோன்றி மறைந்தன. எல்லா இறுக்கங்களையும் நான் இலகுவாய் எடுத்துக் கொள்ள இச்சூழலால் தயாரிக்கப்பட்டிருக்கிறேன் என்பதுதான் உண்மையாய் இருக்க முடியும்.

ஒரு படைப்பு வேண்டுமென்றால் பூ மலர்வது போல இயல்பாய் உதிர்க்கலாம் ஆனால் அந்தப் படைப்பை வெளியே கொண்டுவருவதற்கும், வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் பெரும் ப்ரயத்தனங்கள் எடுக்க வேண்டியிருக்கிறதென ஷைலஜா ஒரு முறை சொன்னார். இதை என்னால் முழுமையாய் உணர முடிந்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில்தான் துவங்கியது இந்த புத்தகப் பணி. இத்தனைக்கும் இந்த மூன்று புத்தகங்களின் உள்ளடக்கங்களும் ஏற்கனவே எழுதப்பட்டவைதாம். அவற்றை புத்தக வடிவத்தினுக்கேற்றார் போல் மாற்றித், தொகுத்துத், திருத்தி, அட்டையைத் தேர்வுசெய்து, நண்பர்களிடம் படிக்கத் தந்து, முன்னுரை வாங்கி, அச்சகத்தினுக்கு அனுப்ப வேண்டியதுதான் வேலை.

இம்மாதிரியான வேலைகளில் அனுபவமில்லாததால் பல்வேறு வகையில் இடையூறுகளையும், தாமதங்களையும் எதிர் கொள்ள நேர்ந்தது. இத்தனைக்கும் பவா நான்கு புத்தகங்களை கொண்டு வர விரும்பினார். நானாகத்தான் மூன்றாகக் குறைத்தேன். அதற்கே எனக்குத் தெரிந்த எல்லா நண்பர்களும் எனக்காக வேலை செய்ய வேண்டியதாய் போயிற்று. புத்தகச் சந்தையில் இடம்பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கத்தில் இரவு பகலாய் செயல்பட்டு சரியான நாளில் மூன்று புத்தகங்களையும் வம்சி குடும்பத்தார் புத்தகச் சந்தைக்கு கொண்டுவந்துவிட்டு மகிழ்ச்சியாய் தொலைபேசினர். எனக்கு லேசான குற்ற உணர்வும், மகிழ்வும் அந்த தருணத்தில் ஒருமித்து எழுந்தது. விற்பனையும் நல்ல முறையில் இருந்ததாக தெரியவந்ததும் சற்று ஆறுதலாக உணர்ந்தேன்.


இதோ இந்தப் பயணம் வெளியீட்டு விழாவினுக்காக நிகழ்ந்திருக்கிறது. சொந்த நகரத்தில் வசிக்க இயலாதவர்களுக்கு மட்டுமே அந்நகரம் மிகுந்த வசீகரமுடையதாய் இருக்கிறது என்பது உண்மைதான். இரு சக்கர வாகனத்தில் கூட இலகுவாய் பயணிக்க இயலாதிருக்கும் சாலைகளால் ஆன இச்சிறுநகரத்தின் மீதுதாம் என் பிரியங்கள் படர்ந்திருக்கின்றன. இதே நகரத்தில் எனக்குப் பிடித்தமான ஆளுமைகள், நண்பர்கள், உறவுகள் சகிதமாய் புத்தகங்களை வெளியிட வாய்த்தது என் வாழ்வின் அதி முக்கிய நிகழ்வுதாம். வெளிச்சத்திற்கான நகர்வுகளை, மய்யத்திற்கான தயாரிப்புகளை நிகழ்த்தினாலும் நான் அடிப்படையில் கூட்டுக்குள் சுருங்கி வாழ்வதில் திருப்தியடையும் உயிரினம்தான் என்பது இந்த நிகழ்வில் உறுதியாயிற்று. படபடப்பும், வெட்கமும், கூச்சமும் சேர்ந்து கலவையான ஒரு மனநிலையில்தான் விழா முழுக்கத் திளைத்துக் கொண்டிருந்தேன். முதல் புத்தக வெளியீட்டு விழாவில் எழுத ஆரம்பிக்கும் புதியவர்கள் வழக்கமான ஏற்புரையாய் சொல்லும் தேய்ந்த வசனங்களை நானும் சொன்னேனா என்பது நினைவிலில்லை. ஆனால் அதே தொணியில் வேறு சொற்களைத்தான் நானும் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

இந்த விழாவினுக்கான அடித்தளங்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டும் எனப் பேச ஆரம்பித்தபோதே பவாவினால் முன்னெடுக்கப்பட்டதுதான். திருவண்ணாமலையில் வெளியீடு என்பதை நானும் விரும்பியதால் சற்றுத் தாமதமாக நடத்த வேண்டியதாயிற்று. மானஸியின் பிறந்த நாளைத் தொடர்ந்து மார்ச் இரண்டாவது வாரத்தில் புத்தக வெளியீடுகளை நிகழ்த்தி விடலாம் என்பதை பவா தொலைபேசி உறுதி செய்ததும் பத்து நாட்கள் விடுமுறைக்குத் திட்டமிட்டேன். இத்தனை வருடங்களாய் தூங்கி, சமீபமாய் விழித்துக் கொண்ட என் அலுவலகம் திடீர் புத்திசாலிகளை அங்கங்கே உலவ விட்டதில் என் விடுமுறை மறுக்கப்பட்டது. நிகழ்வினுக்கு வர முடியாத மன நிலையை வளர்த்துக் கொண்ட பின்பு வம்சி வெளியீடுகளின் அழைப்பிதழைப் பார்த்தேன். என் தனியொருவனுக்காக இத்தனை பேர் மெனக்கெடும்போது இங்கென்ன வேலையென ஒரே ஒரு நாளை போராடிப் பெற்றுக் கொண்டு வியாழக் கிழமையன்று ஒரு மோசமான வானூர்தியில் என் இடத்தைப் பதிந்து கொண்டேன். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எனும் குறுகலான வானூர்தியில் ஏறியதும் லேசான பினாயில் வாசம் வீசியது. மோசமான நிறத்தில் உடையணிந்த மெலிந்த பெண்கள் கடமையாய் புன்னகைத்ததும் அவசரமாய் அவர்களின் கண்களைப் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டேன்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் கடுமையான நட்டம் காரணமாக(அப்படித்தான் சொல்லப்படுகிறது) இரவில் சொற்பமாய் தரும் உணவையும் நீரையும் தவிர்த்து மற்ற எல்லாவற்றினுக்கும் காசைத் தீட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். பணம் பிடுங்குவதின் உச்சமாய் குட்டித் திரையில் ஆர்யாவும் த்ரிஷாவும் பேசிக் கொள்வதைக் கேட்க ஐந்து திர்ஹாம்கள் கொடுக்க வேண்டியிருந்தது. நடமாடும் மதுச்சாலைகளும் உண்டு என்பது லேசான ஆசுவாசத்தை தந்தது. கிட்டத் தட்ட ஆறு மணி நேர இடுக்கிப் பயணமிது. நம் சொந்த ஊர் பேருந்தில் கூட தாராளமாய் அமரலாம். ஆனால் இந்த இருக்கை பேருந்து இருக்கையை விட அளவில் குறுகியதாய் இருந்தது. ப்ளாக் லேபிள் லார்ஜ் பதினோரு திர்ஹாம், சோடா நான்கு திராம், கண்ணாடியும் பிளாஸ்டிக்குமல்லாத க்ளாஸ் மற்றும் வறுகடலை இரண்டு திராம், பனித் துண்டங்களை பற்றி விசாரிக்கவில்லை. எனினும் சற்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது துபாய் மதுவிடுதிகளோடு ஒப்பிடுகையில் சற்றுக் குறைவுதான். மூன்று முறை பிளாக்கியதும் எதைப் பற்றியும் கவலைப்படாது தூங்கி விட்டேன்.

விழித்துப் பார்த்தபோது திருச்சிராப் பள்ளி எனப் பரிதாபமாய் எழுதப்பட்ட பெயர்பலகை நள்ளிரவில் தனியாய் கண்ணில் பட்டது. துபாயிலிருந்து திருச்சி வந்து பின் சென்னை வரும் விமானமிது. கிட்டத் தட்ட எல்லா இருக்கைகளும் இங்கேயே காலியாகிவிட்டிருந்தன. தென் தமிழ்நாட்டுப் பயணிகளுக்கு இவ்விமானம் நேர அடிப்படையில் வசதியானதாக இருக்கலாம். இதே விமானம் கோலாலம்பூர் வேறு போகிறதாம். சென்னை மற்றும் கோலாலம்பூர் பயணிகள் ஏறிக்கொண்டதும் மீண்டும் செங்குத்தான பயணம் துவங்கியது. இறுக்கமான ஜீன்ஸ் அணிந்த இருபது வயது மதிக்கத் தக்க உயரமான பெண்ணொருத்தி எனக்கு எதிர் இருக்கையில் பெற்றோர் சகிதமாய் வந்தமர்ந்து உடனடியாய் தூங்கிப் போனாள். சுஜாதாவின் ரங்கத்துப் பெண்களின் நிழலை அவள் தன் முகத்தில் தேக்கி வைத்திருந்தாள்.

அடுத்த இரண்டு நாட்களின் பரபரப்பை நினைத்துக் கொண்டேன். தூக்கம் விலகி ஓடியது. இந்தப் பயணத்திற்கான துவக்கப் புள்ளி எதுவாக இருந்தது? இணக்கமான மனிதர்களற்ற சூழலா? மிகப்பெரும் பூதத்தைப் போல இளைப்பாறிக் கிடந்த நேரமா? இணையத்தின் அசாதாரண சாத்தியமா? ஓசி வலைப்பூ? நண்பர்கள்? நண்பிகள்? தோழிகள்? காதலிகள்? இவையெல்லாமும்தான் என்றாலும் எல்லாவற்றுக்குமான துவக்கப்புள்ளி ஆறுவயதில் எனக்கு அறிமுகமான, பார்வதி நகருக்கு குடிநீர் வந்ததை அறிவிக்கும் பணியிலிருந்த, நைனார் தாத்தாவின் கையிலிருந்த பூந்தளிர் புத்தகமாகத்தான் இருக்கமுடியும்.


தொடரும்..

Tuesday, March 9, 2010

புத்தக வெளியீட்டு விழா


வம்சி வெளியீட்டு விழாவில் என்னுடைய மூன்று புத்தகங்களும் வரும் சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையில் வெளியிடப் பட இருக்கின்றன. தமிழ்நதி சந்திரா முத்து கிருஷ்ணன் ஆகியோர் என் புத்தகங்களைக் குறித்து பேச இருக்கிறார்கள். வம்சியின் மற்ற புத்தகங்களும் உடன் வெளியிடப்படுவதால் திரளான படைப்பாளிகள் கலந்து கொள்கிறார்கள். மூன்று நாள் பயணமாக வரும் நானும் விழாவில் பங்கு கொள்கிறேன். நேரமும் சந்தர்ப்பமும் வாய்க்கும் நண்பர்கள் இச்சிறு அறிவிப்பை அழைப்பாக ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும். முதல் புத்தக வெளியீட்டை சொந்த ஊரில் நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். வரும் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து ஞாயிறு மதியம் வரை 9952236058 என்ற எண்ணில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Featured Post

test

 test