Saturday, May 26, 2007

கனவின் வழி தப்புதல் – அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கி யின் தி மிர்ரர்யாராலும் தொந்தரவிற்க்குட்படாத 110 நிமிடங்கள் உங்களிடம் இருக்கிறதா?ரஷ்ய புதினங்களில் பரிச்சயமுண்டா ?ஏதாவது ஒரு புத்தகம் குப்ரினோ தஸ்தாயெவ்ஸ்கியோ படித்திருந்தால் கூட போதும்.கவிதைகளின் மீது கிறக்கமுண்டா?சர்ரியலிச ஓவியங்களை பார்த்திருக்கிறீர்களா?அகத்தேடலைப்பற்றி ஏதேனும் தெரியுமா ஒரே ஒரு ஓஷோ அல்லது ஜே கே புத்தகம் படித்திருந்தால கூட போதும் இவற்றில் ஏதேனும் ஒரு கேள்விக்கு ஆமெனில் நீங்கள் தவற விடக்கூடாத படம் இது.இதில் எதிலேயும் நீங்கள் இல்லையா தயவு செய்து இப்படத்தை வாங்கி விடாதீர்கள்.பார்க்க முடியாதென்பது தெரிந்த விடயம்தான். ரஷ்ய இயக்குனரான அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் இயக்கத்தில் 1974 ம் ஆண்டு வெளிவந்த படமிது.மூன்று முறை என்னால் அரை மணி நேரத்திற்க்கு மேல் இப்படத்தை தொடர்ச்சியாய் பார்க்கமுடியவில்லை.ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் நேரடித் தொடர்பு இல்லை.குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள் வரவதை பார்த்துக்கொண்டிருப்பது எத்தகைய புதிர் தன்மையை நமக்கு தோற்றுவிக்குமோ அப்படித்தான் இருக்கிறது பாதிப்படம். வரைந்த அக்கோடுகளை ஓவியமாய் காணும்போது மெல்லிய அதிர்வு உள்ளே எழுகிறது. நம் அளவுகோளுக்கேற்ப இந்த அதிர்விருக்கும் என்பதனால்தான் மேற்சொன்ன ஆரம்பத் தகுதிகள்.

இந்த திரைப்படத்தில் காலம் உறைந்த படிமமாக காட்டப்படுகிறது.சம்பவங்கள் அல்லது நிகழ்வுகள் மட்டும் பதிவிக்கப்படுகிறது.காலம் ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை.இத்திரைப்படத்தை மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும் Spanish civil war க்கு முந்திய காலம்,போர்க்காலம் மற்றும் போருக்கு பிந்திய காலம் அதாவது 1930 க்கு முன்.1930 மற்றும் 1965 இக்காலகட்டங்களில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் தனிமை மற்றும் வலிகளை இப்படம் பேசுகிறது.மொத்தம் 12 screen shot களை உள்ளடக்கி இருக்கிறது.மரியா என்ற பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் ஒரு தனிமை வீட்டில் வசிக்கிறாள்.இவளின் துயரங்கள்,பதட்டங்கள் 1930 காலகட்டத்தில் பதிவிக்கப்படுகிறது.நிகழ் காலத்தில் (1960) மரியாவின் மகனான அலேக்ஸேயின் மனைவியான நடாலியாவின் துயரங்கள் பதிவிக்கப்படுகிறது.மரியா வாகவும் நடாலியா வாகவும் நடித்திருப்பது ஒருவர்தான் Margarita Terekhova

ஆரம்பகாட்சியான சிகிச்சைமுறைக்கும் படத்திற்க்கும் என்ன தொடர்பென்பது தெரியவில்லை.ஒரு பெண் மருத்துவர் திக்குவாய் கொண்ட இளஞைனுக்கு காந்த சிகிச்சை முறையில் அல்லது மனோவசிய முறயில் சிகிச்சை அளித்து அவனுக்கு பேச்சை சாத்தியமாக்குகிறாள்.இந்த காட்சி துவங்குவதற்க்கு முன் ஒரு தொலைக்காட்சி நடாலியாவின் மகனான இக்னாட்டினால் உயிர்ப்பிக்கபடுகிறது.எனவே இது தொலைக்காட்சி நிகழ்ச்சியாவுமிருக்கலாம் அல்லது விடுபடலை குறிக்கும் குறியீடாகவும் இருக்கலாம்.பரந்த வயல் விளிக்கு முன்னால மரக்கட்டையினால் அமைத்திருந்த வேலி ஒன்றின் மீதமர்ந்து சலன்மில்லாது புகைத்து கொண்டிருக்கிறாள் மரியா.தொலைவிலிருந்து வழி தப்பிய மருத்துவனொருவன் டோமோஷினா போக வழி கேட்டபடி அவளிடம் பேச்சு கொடுக்கிறான் அப்பேச்சினூடாய் திருமண மோதிரமில்லாத விரல்களை வைத்து அவள் தன்னுடைய கணவனுடன் வசிக்கவில்லை என்பதை யூகிக்கிறான் தொலைவில் மரத்தில் கட்டப்பட்ட நைலான் ஊஞ்சலில் இரு குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.அவளிடம் சிகெரெட் ஒன்றினை வாங்கிப் புகைத்தபடி அவளமர்ந்திருக்கும் அம் மரக்கட்டையிலான வேலியில் தானும் அமர்கிறான் பாரம் தாங்காத அக்கட்டை உடைந்து இருவரும் கீழே விழுகிறார்கள் பெருங்குரலில் சிரிக்கிறான் பின் அங்கு வளர்ந்திருக்கும் புற்களையும் இயற்கையின் வனப்பையும் சிலாகிக்கிறான் விடைபெற்று செல்லுகையில் விரிந்திருக்கும் வயல் வெளியிலிருந்து காற்று அவன் மீது படர்ந்து புற்களின் தலை வருடியபடி விரைந்து அவள் கேசத்தை அசைக்கிறது.வெகு அற்புதமாக இக்காட்சி படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.தன் குழந்தைகளுக்கு உணவிட்டு கொண்டிருக்கும் ஒரு சாயந்திர நேரத்தில் பற்றி எரியும் வீட்டினை காண தன் குழைந்தகளுடன் வெளியே செல்கிறாள்.கூரையிலிருந்து மழை நீர் சொட்டிக்கொண்டிருக்க ஒரு வீட்டை பற்றியபடி தீ கொழுந்து விட்டு எரிகிறது.அவள் மெல்ல நடந்து கிணற்றின் மீது தொங்கவிடப்பட்ட வாளியில் தன் முகம் கழுவுகிறாள்.இந்த காட்சி தைல வண்ண ஓவியமொன்றினைப்போல வெகு நாள் மனதில் தங்கியிருந்தது.

ஒரு விநோத கனவு காட்சி நிகழ்காலத்தில் முடிகிறது ஒரு வீட்டில் தொலைபேசி உரையாடல்கள் மட்டும் கேட்கிறது தன் மகன் அலேக்ஸேயிடம் பேசிக் கொணடிருக்கிறாள் மரியா. அவன் காலம் நேரம் எல்லாம் மறந்து மூன்று தினங்களாய் ஒரு வார்த்தைகூட பேசாதிருக்கிறான்.சொற்கள் மிகவும் மந்த தன்மை கொண்டதெனவும் அவற்றை தான் வெறுக்கிறேனவும் சொல்கிறான்.அவளுடன் அச்சகத்தில் பணிபுரிந்த லிசா என்ற பெண்ணின் மரண செய்தியை சொல்லி தொலைபேசியை துண்டிக்கிறாள்.இவன் தன் தாயைவிட தனிமையிலிருக்கிறான்.தன் தாயின் சாயலையொத்த பெண்ணான நடாலியாவை திருமணம் செய்து கொண்டு ஒரு மகனயும் பெற்றுக்கொண்டு இனிமேல் அவளுடன் தொடர்ந்து வாழமுடியாதென சொல்லி அவளை விலகி விட கோருகிறான்.

போர் நிமித்தமாய் சென்ற அவள கணவரின் பிரிவே மரியா வின் துயருக்கான பின்புலமாய் சொல்லப்படுகிறது அவன் உயிருடன் இருப்பதற்க்கான சாத்தியக்கூறுகளை கூட அறிந்து கொள்ள முடியாத மிதமிஞ்சிய தனிமையில் அவள் பெரும் பதட்டம் நிரம்பியவளாகவும் துயரினை சுமந்து அலையும் பெண்ணாகவும் மாறிப்போகிறாள்.இதையொட்டியே அவளின் குழந்தைகளும் தனிமையின் பிடிகளுக்குள் சிக்கி கொள்ளுகிறார்கள்.அந்த துயரும் வெறுமையும் யுகங்களாக பின் தொடர்கிறது.போரின் துயரங்களை வேறு விதமாய் பதிவித்த படமென்று கூட சொல்லலாம்.
இப்படத்தின் கடைசிக்காட்சி அற்புதம் பரந்த வயல் வெளியின் ஒரு முனையில் நடாலியா நின்று கொண்டிருப்பாள் மற்றொரு விளிம்பை நோக்கி மரியா இரண்டு குழந்தைகளுடன் வேகமாய் நடந்து கொண்டிருப்பாள்.வெகு நேரத்திற்க்குப் பின் இசையொலியுடன் படம் முடியும்.

படத்தின் பின்னணியில் பயன்படுத்திருக்கும் கவிதைகளை எழுதியிருப்பது Arseny Tarkovsky அனைத்து கவிதைகளும் அவரது குரலிலேயே பதிவிக்கப்பட்டிருக்கிறது.குறிப்பாய் இந்தக் கவிதையை சொல்லலாம்

There is no death.
We're all immortal.
All is immortal.
Fear not death at seventeen,
Nor at seventy . . .

இருப்பினும் எதையும் நேரடியாக சொல்லாது இயல்பாகவே ஒரு பன்முகத் தன்மையை இத்திரைப்படம் சுமந்திருப்பதால் பார்ப்பவர்களின் கோணத்திற்க்கேற்ப இப்படத்தை அணுகலாம்.ஒருவேளை சித்தார்த்,மதி,டிசே,தான்யா மற்றும் எனக்கு தெரியாத வலையுலக அறிவுஜீவிகள் பலர் இப்படத்தை வேறு விதமாகவும் அணுககூடும்.அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் இன்னொரு படமான solaris ஐயும் இரண்டு முறைக்கு மேல் பார்க்க முயன்று தவித்துப்போனேன்.நிச்சயம் ஒரு நள்ளிரவில் பார்த்துவிடுவேன் :)

Friday, May 25, 2007

பைத்தியமாதல் அல்லது மனம் பிறழ்தல்இந்த இரவை இப்படியே நீட்டிக்க விருப்பமில்லை அவனுக்கு இரவுகளின் மீது தீராக் காதல் கொண்டதால் அவன் இரவுகளை தூங்கிக் கழிப்பதில்லையென தன் பதின்ம பருவத்தில் சபதமெடுத்துக்கொண்டான்.இரவின் சன்னல்கள் அவன் சிறுவயதில் திறக்கவேயில்லை ஒரு பெண்ணின் மெய் தீண்டலில் அவன் இரவு விழித்து கொண்டது இளமையின் தடத்தில் இரவு தன் பூக்களை ரகசியமாய் ஒளித்துவைக்கிறது.பெண்ணை அறியும்போது இரவும் சேர்ந்தே அறிந்து கொள்ளப்படுகிறது. மதுவின் போதைக்கு சாத்தியமற்ற இந்த இரவின் நீட்சியில் என்ன செய்யலாம்? நெஞ்சு கமற கமற புகைத்து தொலைக்கலாம்.அறையெங்கும் சிதறிக் கிடக்கும் புத்தகத்தில் இரவு பற்றி எழுதப்பட்ட கருமை பூசிய கவிதைகளை எத்தனையாவது முறையாகவோ படித்து தொலைக்கலாம்.வேறென்ன செய்ய முடியும் இந்த வெளியில்? அறையில் சூழ்ந்திருக்கும் மங்கலான வெளிச்சத்தை மொத்தமாய் மங்கச் செய்து விட்டு சன்னலைத் திறக்கலாம் பின்னிரவில் நிலவின் ஒளி சன்னலின் வழி இறங்கும் நிகழ்வைப் பார்த்துகொண்டிருக்கலாம்.வேறெதாவது கிளர்ச்சியான,ஆறுதலான ஒரு சம்பவத்தை நினைத்துக் கொண்டிருக்கலாமெனில் பாழாய்போன இருத்தலிய கொள்கைகள் தன் கூரான பற்களினால் கடித்துக் குதறி மூளையில் படிந்துள்ள பழைய அடுக்குகளைத் தின்று செறித்து விட்டது.மேலும் எந்த ஒரு ஆறுதலான நெகிழ்வான நிகழ்வுகளும் அவனுக்கு நேர்ந்ததாய் நினைவில்லை.நேற்றைய இரவில் என்ன செய்தான் என்பது கூட மறந்து போய்விட்டிருந்தது.எல்லாம் உதறி வெளிவந்து இரவையும் கருமையையும் உற்று நோக்குகையில் இரவு ஒரு பெண்ணென்பதுத் தெரிய வந்தது.இந்த உலகம் தோன்றிய தினத்திலிருந்து இந்த இரவுப் பெண் வெகு ரகசியமாய்த் தன் வெளியுடன் கலவி கொள்ளும் அதி ரகசியத்தினைத் தெரிந்து கொண்ட அந்த இரவில் தன் முதல் கிளர்ச்சியை தன் இயற்கை விதித்த உச்சத்தின் பரவசத்தை தன்னிச்சையாக அடைந்தான்.தன் புனிதம் வெளிப்பட்ட இரவு குமைந்து மருகி அவனை குரூரத்துடன் பார்த்தது.அவனின் நினைவில் தன் பிம்பத்தை அழிக்க முயன்று தோற்ற இரவுப்பெண் தன் இயலாமையின் வன்மத்தில் அவனை சபித்து விட்டு ஓடி மறைகிறாள்.

இயக்கத்திலிருக்கும் பொருட்களின் மேல் இரவுப்பெண் தன் மேலைடையை களைந்து வெகு நேர்த்தியாய்ப் போர்த்திவிட்டு பிரபஞ்சத்துடன் ரகசிய கலவியில் தன்னைத் தொலைக்கும்போது இவனின் நிலைக்குத்திய விழிகள் நினைவிற்க்கு வந்து அச்சமடைந்தாள்.தன் அந்தரங்கம் வெளிப்பட்ட வன்மத்தில் இருள் பிம்பம் கலைத்து சொற்களின் வடிவம் கொண்டு அவனின் இருப்பிடமடைகிறாள்.மதிய கனவொன்றில மனம் பிறழ்ந்து கொண்டிருந்த அவனை அசைத்து தான் இருள் நகரத்தில் வாழ்வதாகவும்,அவனின் இரவு காதலை சிலாகித்தும்,இருளின் வசீகரம் அவளையும் தூங்கவிடாததைப் பற்றியும் இருள் பற்றி எழுதபடும் கவிதைகளை அவள் தின்று செறிப்பதைப் பற்றியுமாய் தொடர்ச்சியாய் கதைக்கிறாள். ஒத்த உணர்வுகளை கொண்ட சக பயணியை அவள் கண்டெடுக்க இத்தனை நாள் காத்துக்கொண்டிருந்ததாகவும் அவனைப் பற்றி நேற்றய இரவில் விழித்திருந்த ஆந்தையொன்று அவன் இருப்பறிந்து உலகின் மற்றொரு பாகத்தில் இருளை அசையாது பார்த்துக்கொண்டிருந்த அவளிடம் வந்து சொன்னதாகவும் இருளின் தடம்பிடித்து உன்னிடம் வந்து சேர்ந்தேனெனவும் அவன் தலை வருடிக் கதைத்தாள்.
முதலில் நம்ப மறுக்கும் அவன் அவளின் வெம்மையை உணர்ந்து கொண்டபின் அவள் மீது பைத்தியமாகிறான்.மெல்ல அவனின் உடலின் மீது புராண காலப் பசலைகள் தனது கொடிகளை விரித்துப் படறத் துவங்குகின்றன.உடல் தானாகவே பச்சை நிறத்தை அடைகிறது.சோர்வடைந்த அவனின் கண்களிலிருந்து அவன் எப்போதும் பார்த்திராத சமவெளிகளின் நெடிய பசுமை மெல்ல நிரம்புகிறது. அவன் உடலில் ஏற்படும் மாற்றங்களைத் தடுக்க முயன்று ஓய்கிறான்.மேலும் அவளின் கதையாடல்களை தாங்க இயலாது தான் விரும்பும் இரவொன்றில் தூங்கியே இராத பொழுதொன்றில் அவளின் சொற்களை தன்னுள் நிரப்பியபடித் தூங்கிப் போகின்றான்.ஒரே நாளில் தன் எதிரியை ஒழித்த இரவுப் பெண் அன்று இரவு தன் முழு ஆடை களைந்து பிரபஞ்சத்தில் லயிக்கிறாள் மீண்ட தன் அந்தரங்கத்தின் புனிதங்களோடு. பாதுகாக்கப்பட்ட பிரபஞ்ச ரகசியம் மீண்டும் தன்னை மூடிக் கொள்கிறது.

பறவைகளோடு விடிந்த பகல் அச்சமூட்டுவதாய் இருக்கிறதவனுக்கு அவன் எப்போதுமே பார்த்திராத பகலின் ஒளிவெள்ளம் வெகு நேரத்திற்க்கு அவன் கண்களை செயலிழக்க செய்து குருடாக்குகிறது.இரைச்சலின் சத்தங்களுக்கு அவனின் காதுகள் பழகாததால் பெரும் சத்தமொன்றில் கிழிந்து காதுகளிலிருந்து வெள்ளமென வடிய ஆரம்பிக்கிறது குருதி.புகையில் தூசுப்படலத்தில் வீங்கிப் போகிறது நாசித்துவாரம்.தன் அறையை இருட்டாக்கி ஒரு மூலையில் பதுங்கிகொள்கிறான் கருநிழல்கள் வசிக்கும் இடுக்குகளில் தன்னை பொருத்திக்கொள்ளும் கணத்தில் அவன் தானும் ஒரு நிழல் என்பதை உணரத் தொடங்குகிறான்.மேலும் தன்னை இந்நிலைக்குத் தள்ளிய அப்பெண்ணின் வெம்மை மிகுந்த சொற்களின் விஷம் அவன் உடலிலிருந்து மெல்ல வடிய ஆரம்பிக்கிறது.மீண்டும் அவனது உடல் கருமை வாறிப் பூசிக் கொள்கிறது.இருப்பினும் மதிய பொழுது நெருங்கும்போது அவன் உடல் பரபரப்படைகிறது.அவளின் சொற்கள் மிதந்து வரும் சன்னலின் கதவுகளை திறந்து வைக்கிறான் மிகுந்த பசியுடன் அவளின் சொற்களுக்காக காத்திருந்ததின் சோர்வில் மீண்டும் உறங்கிப்போகிறான்.அந்தியில் விழிப்புறும் அவன் தான் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து குமைகிறான்.சொற்கள் மிதந்து வந்ததின் இருப்பிடம் புரிந்து வெறி கொள்கிறான்.இனி இரவில் மட்டுமில்லை பகலிலும் தூங்குவதில்லையென குமைந்து தன் இமைகளை ஒவ்வொன்றாக பெயர்த்து எறிகிறான்.நிலைக்குத்திய விழிகளுடன் அமர்ந்திருந்தான் இரவுப்பெண்ணின் வருகைக்காக

நேற்றய லயிப்பில் சோர்ந்த இரவுப்பெண் இவனை மறந்து தூங்கிப் போகிறாள் சற்று தாமதித்து விழிப்புற்ற அவள் மதிய பொழுதில் தான் அனுப்ப மறந்த சொற்கள் அவளை சூழ்ந்திருப்பது கண்டு கலக்கமுற்றாள்.வாரி சுருட்டி எழுந்து வெளியை நெருங்கும்போது அவனின் சலனமில்லாத அமர்வு அவளுள் பெரும் பீதியடையச் செய்தது மேலாடை கலையுமுன் சொற்களின் வடிவம் கொண்டு அவனை நெருங்குகிறாள்.மிகுந்த பாசாங்குடன் அவன் தலைக்கோதும் உத்வேகத்தோடு அவன் உடல் தொட்டு முகம் நிமிர்த்துகையில் அவனின் இமைகளற்ற கண்களின் தரிசனம் பார்த்து அதிர்ச்சியில் விறீடுகிறாள் இனி எப்போதுமே காக்க முடியாத தன் அந்தரங்கத்தின் புனிதம் அவனின் கண்களின் வழியே கைக்கொட்டி சிரிப்பது கண்டு உறைந்து போகிறாள்.வெகு நேரமாகியும் இரவு வராததை கண்டு குழம்பிய பகல் அவளின் வரவிற்க்காகத் தன்னை நீட்டிக்கிறது.நள்ளிரவாகியும் முடியாத பகலினை கண்டு அதிர்ச்சியடையும் உலகம் குழப்பத்தில் மூழ்குகிறது முடியாத பகலின் உக்கிரத்தில் மனம் பிறழ்ந்து பைத்தியமாகிறது உலகம்.

Thursday, May 17, 2007

நாட்குறிப்புகளிலிருந்து தட்டப்பட்ட தூசி -2

தொலைந்த அடையாளம்

வெகு நாட்களுக்குப்பின்
நாம் வாழ்ந்திருந்த
அக்கடற்கரை நகரத்திற்க்கு
சென்றிருந்தேன்

இந்த நண்பகல் வெயிலில்
கடற்கரை மணற்திட்டில்
பாதச்சுவட்டில் பாதம் வைத்து
நடந்து கொண்டிருந்தது
ஒரு ஜோடி

நாம் வழக்கமாய் அமரும்
புங்கை மரத்தடி
மர பெஞ்சில்
நம் சாயல்களில் யாரோ
உள்ளங்கை பற்றியபடி
பேசிக்கொண்டிருந்தனர்

மேலும்
சருகுகள் கூட்டி வாரப்படாத
நூலக கட்டிடப் பின்புறம்
நன்றாய் புற்கள் வளர்ந்திருக்கும்
அசோக மரத்தடி
செயற்கை நீரூற்றை ஒட்டிய
சிமெண்ட் திட்டு
ராமன் தியேட்டர்
அ வரிசை கடைசி இருக்கையென
நாம் வாழ்ந்திருந்த
இடங்களின் புனிதம் கெடாது
இளம் காதலர்களே
நிரம்பியிருந்தனர்

ஒருவேளை நமக்கு முன்னர்
இவ்விடங்களை நிரப்பியவர்கள்
நம்மை போன்றவர்களாய்
இருந்திருக்கக் கூடும்

நாளை இவ்விடங்களை
நிரப்பும் இளம் காதலர்களின்
ரகசிய குறுகுறுப்புகளில்
துளிர்க்கலாம்
இழந்ததை தேடியலையும்
என்போன்றவனின்
வறண்ட இதழிலிருந்து
புன்முறுவல்கள்

மக்களே இந்த காதல் கவுஜ க்கி என்ன மன்னிச்சிடுங்க :)

நாட்குறிப்புகளிலிருந்து தட்டப்பட்ட தூசி -1

இன்றென் காலை நேரம்

இன்றய விடியலில்
எந்த அவசரமுமில்லை
செய்யப்பட எதுவுமேயில்லாத
மற்றொரு நாளின்
சுகமான காலை

தேநீரை சுவைத்தபடி
என் பழைய தேசத்திலிருந்து
வெளிவரும் நாளிதழை
மேய்கிறேன்
வழக்கம்போல்..

மாவட்டந்தோறும் வன்புணரப்பட்ட
பெண்களின் விலாவரி கதைகளே
கட்டச் செய்திகளில்
என் சக இனத்தின் மீது தினமும்
குண்டுகள் போடப்படுகின்றன
குழந்தைகளை குறிபார்த்து
வீசப்படும் குண்டுகளுக்கு கைம்மேல் பலன்
நேற்றும் கடல் சில வீடுகளையும் பல உயிர்களையும்
ஏப்பம் விட்டிருக்கிறது
இந்த சட்டமன்ற தொடரில்
உடைந்த மண்டைகள்
வீசப்பட்ட செருப்புகள்
சென்ற கூட்டத்தொடரை
காட்டிலும் அதிகமாம்..
அரசிய…

ஆ!

தேநீர் தீர்ந்துவிட்டது
தேநீருக்குப்பின் உடனே
புகைக்க வேண்டும் எனக்கு
இரவு வந்து படித்துகொள்வேன்
நிறுத்திய இடத்திலிருந்து

வேர்கள் பிறழ்ந்து
வெகு தொலைவு வந்திருப்பினும்
நான் தமிழன்…

Wednesday, May 16, 2007

துவக்கத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடும் விறீடல் - ஆல்பிரட் ஹிட்ச்காக்சண்டைப் படங்கள் சலித்த ஒரு நாளில் நான் முதலில் கண்டெடுத்தது ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கை. சஸ்பென்ஸ்,கொலை,த்ரில்லர்,என்ற முன் தீர்மாணங்களுடன் இவரை அனுகின முதல் முயற்சியே தோல்வியில் முடிந்தது.திரைக்கதை என்பது தூய சினிமாவின் ஆதாரம் என்பதை ஆணித்தரமாய் சொல்லியிருப்பார்.கதையாடல்களை மட்டுமே வைத்துக்கொண்டு திகைப்பையும் விறுவிறுப்பையும் திரைக்கதையில் கொண்டுவர முடியும் என்பதெல்லாம் இவரால் மட்டுமே சாத்தியமான ஒன்று.ஆனால் விறுவிறுப்பான படங்கள் என்றால் நாம் இன்னமும் பின்னணி இசையைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். இவரின் the shadow of a doubt படம்தான் முதலில் பார்க்க நேர்ந்தது.படம் முழுவதும் ஒரு சந்தேகத்தன்மை மெல்லியதாய்,இயல்பாய் படர்ந்திருக்கும்.ஒரு புதுவித அனுபவத்தை எனக்கு தந்தது இந்த படம்.பின் எல்லாவிடங்களிலும் இவரை தேடத் தொடங்கினேன்.யாரை சந்திக்க நேரிட்டாலும் ஹிட்ச்காக் படமிருக்கா? இன்று ஏதேனும் டி.வி.யில் இவர் படமா? இப்படியெல்லாம் தேடி Black mail (1929) Murder (1930) the 39 steps (1939) போன்ற பிரிட்டிஷ் படங்களும் Rope (1948) I Confess(1953) psyco(1960),The birds(1963),Marnie(1964),Frenzy(1972) போன்ற அமெரிக்க திரைப்படங்களையும் கண்டுபிடித்தேன்.இன்னும் கண்டறிய 30 படங்களுக்கு மேல் இருக்கிற்து.

தூய சினிமா என்பது ஒன்றையொன்று இட்டு நிரப்புவதான பல துண்டு சினிமாக்கள் ஒன்று சேர்ந்தது என ஹிட்ச்காக் வரையறுக்கிறார் பல இசைக் குறிப்புகள் சேர்ந்து ஒரு இனிய இசையைத் தருவது போல வெட்டி ஒட்டும் உத்தியினால் விளையும் முக்கியப் பயன்கள் இரண்டு. ஒன்று கருத்தாக்கத்தை உருவாக்குவது. இரண்டாவது வன்முறை மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டுவது.இந்த உத்தியை இவர் சிறப்பாக கையாண்டார்.சினிமா பேச ஆரம்பிக்கும் முன்னரே ஹிட்ச்காக் தனது மிரட்டலை ஆரம்பித்துவிட்டார்.ஆகஸ்ட் 13 ,1899 ல் இலண்டனில் பிறந்த ஹிட்ச்காக் பொறியியலில் பட்டம் பெற்று பொறியியல் வரைபடம் வரைபவனாக தனது வாழ்க்கையை துவங்கினார் பின் புகைப்படத்துறையின் மீதிருந்த ஆர்வத்தினால் 1920 களில் சினிமா படக் கம்பெனிகளில் ஊமைப் படங்களுக்கு டைட்டில் எழுத வந்துவிட்டார்.1925ல் இவர் முதலில் இயக்கிய திரைப்படம் The pleasure Garden என்கிற ஊமைப்படம்.இந்த படத்தின் வணிக ரீதியிலான தோல்வி அவரது சினிமா எதிர்காலத்தின் அச்சுறுத்தலாக அமைந்தது பின்பு 1926 ல் The lodger.A Story of the London Fog என்கிற படத்தின் வெற்றி இவரை விறுவிறுப்பான படங்களில் நிலைபெற தூண்டியது எனலாம்.பதினோரு ஊமைப்படங்கள் பதினாறு பிரிட்டிஷ் படங்களுக்குப்பின் ஹிட்ச்காக்கின் ஹாலிவுட் பிரவேசம் நிகழ்ந்தது.இந்த காலகட்டத்தில் இவர் இயக்கிய 39 steps மற்றும் the man who knew too much படங்கள் பரவலாய் எல்லோர் கவனத்தையும் ஈர்த்த்து.

ஹாலிவுட்டில் 1940 ல் இவரின் இயக்கத்தில் வெளிவந்த Rebacca அந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.இது இவரின் முதல் அமெரிக்க திரைப்படம்.திரைப்படம் என்பது தயாரிப்பாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இயக்குனர்கள் எடுக்கும் ஒரு முயற்சி என்கிற பிம்பத்தை உடைத்த முதல் இயக்குனர் ஹிட்ச்காக்தான்.திரைப்படம் இயக்குனர்களின் பார்வையிலேதான் இயக்கப்பட வேண்டும் என்பதை அப்போதே வலியுறுத்தியதின் காரணமாக author theory என்கிற புது சித்தாந்தம் தோன்றவும் காரணமாக இருந்தார்.North by northwest,psycho,birds போன்ற படங்களின் பெரும் வெற்றி உலகம் முழுதும் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியது.Family plot(1976) படம் இவர் இயக்கிய கடைசித் திரைப்படம்.இறப்பதற்க்கு முன் நிலுவையில் இருந்த the short night என்கிற திரைக்கதை அவரின் மறைவுக்குப்பின் புத்தகமாக வெளிவந்தது ஏப்ரல் 29,1980 ல் தனது 80 வது வயதில் கலிபோர்னியாவில் சிறுநீரக கோளாறில் இறந்தார்.

சாதாரண மனிதர்களை அசாதாரண நிலைக்கு பொருத்துவதுதான் இவரது சிறப்பம்சமாக இருந்தது. இதனால பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிப்போக செய்து ஒரு திகில் அனுபவத்தை வெகு எளிதில் கடத்திவிட அவரால் முடிந்தது.மாடிப்படிக்கட்டு இவருடைய எல்லா படங்களிலும் பயன்படுத்தப்பட்ட ஒரு இடம்.அதில் மெல்ல மேலேறும்போது ஒரு அசாதாரண பயம் மெல்ல விரவும்.இவரது பெரும்பாலான படங்களில் அம்மா கதாபாத்திரம் புதிர் தன்மை நிரம்பியதாய் இருக்கும்.அம்மாவிற்க்கும் மகனிற்க்கும் உள்ள உறவு சிக்கல்தன்மை நிரம்பியதாய் இருக்கும்.போலிஸ்க்கு பயந்தவர்களாகவே இவரது கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்.சிறுவயதில் குறும்புத்தனமிக்கவராக இருந்த இவரை திருத்த வேண்டி இவர் அப்பா தன் போலிஸ்கார நண்பர் உதவியுடன் 5 நிமிடங்கள் சிறையில் வைத்திருந்தாராம் அந்த பயம் இவரின் எல்லா படங்களிலும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படும்.
மேலும் இவரது எல்லா கதாபாத்திரங்களும் பிராந்தி என்ற மதுவகை மட்டும்தான் பயன்படுத்துவர் :) ஹிட்ச்காக் படப்பிடிப்பு தளங்களில் திரையை மனதில் கொண்டே பணியாற்றுவார்.நீங்கள் ஏன் உங்கள் ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்குகளில் படம் பார்ப்பதில்லை? அவர்கள் திகிலில் விறீடுவதை கேட்காமலே இருக்கிறீர்களே?என்கிற கேள்விக்கு அவர் நான் படத்தை எடுக்கத் தொடங்கும்போது அந்த விறீடலை கேட்க ஆரம்பித்து விடுகிறேன் என்கிரார்.

ஒரு சம்பவத்தை,நிகழ்வை திகிலான காட்சியமைப்பாக ஹிட்ச்காக் இப்படி மாற்றியமைக்கிறார்
நீங்களும் நானும் ஒரு அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அங்கே வெடிகுண்டு இருக்கிறது. எதைப் பற்றியுமில்லாத ஒரு சாதாரணமான உரையாடலை மேற்கொண்டுள்ளோம். சலிப்பூட்டுகிறது. அது எதையும் அர்த்தப்படுத்தவில்லை. திடீரென பெரும் சத்தம். குண்டு வெடிக்கிறது. பதினைந்து வினாடிகளுக்கு. அவர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். இப்போது அதை நீங்கள் மாற்றுங்கள் அதே காட்சியை அமையுங்கள். வெடி குண்டை நடுவில் நுழையுங்கள். வெடிகுண்டு அங்கு இருப்பதைக் காட்டுங்கள். அது ஒரு மணிக்கு வெடிக்கப் போகிறதென்று உணரச் செய்யங்கள். இப்போது பன்னிரண்டே முக்கால். பன்னிரண்டு ஐம்பது. சுவரில் உள்ள ஒரு கடிகாரத்தைக் காட்டுங்கள். மறுபடியும் அதே காட்சிக்குத் திரும்புங்கள். இப்போது நமது உரையாடல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது அதிலுள்ள முட்டாள்தனத்தினால். ‘டேபிளுக்கு அடியில் பார் முட்டாளே.’ பதினைந்து வினாடிகளுக்கு அதிர்ச்சியூட்டுவதற்கு பதிலாக இப்போது அவர்கள் பதினைந்து நிமிடங்களுக்கு காட்சி அமைக்கிறார்கள்
உலகத் திரைப்படங்களுக்கு புதிதாய் செல்ல விரும்புவோர் ஹிட்ச்காக்கிலிருந்து துவங்குவது சரியாய் இருக்கும் என நான் நினைக்கிறேன்.திகில் படம் பார்ப்பதற்க்கு முன் அப்படத்தின் திரை விமரிசனத்தை படிப்பது எவ்வளவு அபத்தமானதோ அதை விட அபத்தமானது ஹிட்ச்காக் படங்களுக்கு விமர்சனம் எழுதுவது எனவே அதை நான் தவிர்க்கிறேன். இருப்பினும் அடுத்த இடுகையில் ஒரு 5 படங்களையாவது அறிமுகப்படுத்தலாம் என இருக்கிறேன்.அதற்க்கு எப்போதும் என்னுள் விழிப்பாய் இருக்கும் ஒரு சோம்பேறி மனது வைக்க வேண்டும்

ஒப்பீடு
1.http://www.keetru.com/puthuezhuthu/jul06/alfred.html
2.http://en.wikipedia.org/wiki/Alfred_Hitchcock

தனிமையின் இசை
நிசப்த வெளியில்
துவங்குகிறது
தனிமையின் இசை

நிறமழியும் சொற்களின்
வசீகரம் தவிர்த்து
உள்ளிருந்து எழுகிறது
நாத அதிர்வாய்..

அதிர்வின் நீட்சி
புலன்கள் பயணிக்க இயலா
என் உள்வெளியின் மடிப்புகளை
மெல்ல கட்டவிழ்க்கிறது
மலர்தலின் சாயல்களையொத்து

இப்பிரபஞ்சம் நிறையுமளவு
உள்ளில் தேங்கியுள்ள
இசையின் ஒரு அதிர்வு
எழுதுகிறது
முற்றிலுமொரு புதிய
இசைக்கோர்வையை…

Saturday, May 12, 2007

அடர்வனத்தின் மய்யத்தில் பூத்திருக்கும் செடிகளை முளைக்கச் செய்யும் வீர்யம் கொண்ட வினோதனின் சொற்கள்அரசாண்மையின் கட்டளைகள் எவ்வெவற்றை விலக்கப்பட்டவையாக அறிவிக்கின்றதோ அவற்றை மிக இயல்பாய் கடைபிடிக்கத் துவங்கி,ஆபாசங்களை அழகென்றும் அழகுகளை அழுகிப்போனவையென்றும்,தேவதைகளின் சிலைகளின் மேல் சிறுநீர் கழித்தும்,வேத கன்னிகளை புணர்ந்தும்,தடுக்கப்பட்ட வார்த்தைகளை உரக்க கூவியபடியுமாய் திரியும் அதீதனின் நண்பர்கள் கூட்டத்தில் தன்னையும் ஒருவனாய் பாவித்துக்கொண்டு மனம் பிறழ்ந்த மதிய கனவொன்றில் திளைத்துக்கொண்டிருந்த அவனின் உச்சந்தலைமயிரை பிடித்திழுத்துவந்து நாற்சந்தியில் நிற்கவைத்து தன்னிரு கைகளால் மலத்தை அள்ளி அவன் முகத்தில் அடித்தாள் பெருந்தனிமைக்காரி ஒருத்தி.

புத்தகங்களால் முடப்பட்டிருக்கும் பெருந்தனிமைக்காரியின் அறையில் இயல்பாய் படுத்திருக்கும் அவநம்பிக்கைகளின் கருநிழல்கள்.புத்தக இடுக்கிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் எவனோ க்களின் சொற்க்குவியல்களில் புதைந்துகொண்டிருக்கும் அவளது தனிமை.மிகுந்த கழிவிரக்கதிலிருந்து வெளிப்படும் அவளது சொற்கள் கவிதை எனும் உடை அணிந்து நகரெங்கும் வலம் வரும் கம்பீரமாய்.கவிதையின் சாயலையொத்த ஒருபிரதியினை துருப்புச்சீட்டெனக் கொண்டு அவள் அறை நுழைந்த அவன் வெகு விரைவில் தன் மந்திரச் சொற்களை நிறைக்க ஆரம்பித்தான்.சிதறிக்கிடந்த புத்தகங்களை மூட்டைகட்டி பரணின் மேல் வீசியெறிந்துவிட்டு தன் வசீகர சொற்களை அறையெங்கும் பரவ விட்டான்.எல்லாப் புத்தகத்தின் கவிதைகளையும் எப்படியோ அவன் தன் சொற்களில் சேமித்திருந்தான்.அவனின் வித்தைகள் அவளின் நடுமுதுகில் ஆணியென இறங்கியது.துரத்தப்பட்ட அவளின் தனிமை கதவின் மூலையிலும்,கட்டிலின் அடியிலும் தஞ்சமடைந்தது.ஆளறவமற்ற அவளின் அறையில் கதகதப்பாய் நிரம்பிய அவனின் சொற்களை மெல்ல விழுங்க ஆரம்பித்தாள்.மதிய கிளர்ச்சிகளில் அவன் சொற்களை மொத்தமாய் சேகரித்து படுக்கையில் நிரப்பி பாம்பின் வடிவம் கொண்டு அக்குவியலில் புதைந்து தன் உச்சமடைந்தாள்.எழுத்து,ஒலி,ஒளி என எல்லா வடிவிலும் அவன் பிம்பம் அவளுள் நிறைய ஆரம்பித்தது.இரு வேறு தனிமை உலகங்கள் தன் நிறங்களை இழக்க ஆரம்பித்தன.ஒரு கட்டத்தில் அவனின் சொற்களை சேகரிக்க அறையில் இடமில்லாது போக தன் யோனிக்குள் திணிக்க ஆரம்பித்தாள்.யோனி நிறைந்த வெளியில் தாளமுடியாத வேட்கையில் அவனை சந்தித்து நிறைந்த சொற்களை மீட்டெடுக்க வேண்டிப்புறப்பட்டவளை பின் வருமாறு கூறி தடுத்து நிறுத்தினான்.

தோழி!நான் வாழும் இவ்விருள் நகரத்திற்க்கு உன்னை அழைக்கவிருப்பமில்லை. ஆயிரம் பேர்களுக்குமேல் புணர்ந்து சலித்த ஒரு குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதியின் அறையொன்றில் கவிதை தீர்ந்த வெளியில் உன்னுடல் சேர நீளலாம் என் அசிங்க குறி.அதன் நீட்சியாய் உன்னைக் கிளர்த்தி இந்தப் பாழில் நம் புனிதக் கலவியை நிகழ்த்த நான் விரும்பவில்லை. அத்துடன் கலவிதீர்ந்த நள்ளிரவில் புனிதங்களை கொளுத்திய உன் விசும்பல்களை கேட்கும் திராணியும் எனக்கில்லை.மேலும் திட்டமிட்ட சந்திப்புகளின் மேல் நம்பிக்கையுமில்லை அது வெகு இயல்பாய் நிகழ வேண்டும் உன் அறையில் என் சொற்கள் நுழைந்தது போல.மேலும் விசையுறு பந்து என்கிற பிம்பத்தை நான் செயற்கையாய் ஏற்படுத்திகொண்டு விட்டேன் வரலாறு என்பது புரட்டுக்களின் தொகுப்பென்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.உடனே இப்பிம்பத்தை அழிப்பதென்பது இயலாத காரியம்.அதீதனின் புத்தகங்களை இப்போதுதான் ஒவ்வொன்றாக படிக்கத்துவங்கியிருக்கிறேன்.மொத்தமாய் படித்து முடித்ததும் நானே உன்னை சந்தித்து என் சொற்களை மீட்டெடுக்கிறேன் என்றான்.

அவனின் புனித பிம்பங்களில் களைப்படைந்த பெருந்தனிமைக்காரி தன் வன்மங்களனைத்தும் திரட்டி அவனது குறியின்மீது காறி உமிழ்ந்தாள்.அவன் ஆண்மையை சந்தேகித்து அவளெழுப்பிய வினாக்கள் அவனை பெரும் பாழில் தள்ளியது.மேலும் வெகுண்டெழுந்த அவளின் வன்மங்கள் இப்பிரதியின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டதுபோல அவனின் பிம்பங்களின் மீது மலமள்ளி வீசியது .சொற்களை உற்பத்தி செய்யும் அவன் ஊற்றின் மீது உதிரப்பெருக்கில் நனைந்த தன் உள்ளாடை கொண்டு மூடினாள்.பின் எப்போதும் அவனை மீளவிடாமல் கூரிய ஆயுதமெனும் தன் சொற்களைக் கொண்டவனை சிதைத்தழித்தாள்.அறையை நிரப்பியிருந்த அவனின் சொற்களை துடைப்பம் கொண்டு வழித்தெடுத்து சன்னலின் வழி வெளிக்கொட்டினாள்.கூரிய ஆயுதம் கொண்டு குத்திக்கிளறி அவள் யோனியில் புதைந்திருத அவனின் சொற்களை மீட்டெடுத்து வன்மங்களுடன் வெளியே வீசியெறிந்தாள்.பின்பு கட்டிலுக்கடியிலும் கதவின் மூலையிலும் ஒளிந்திருந்த தனிமையின் காதைப்பிடித்து திருகி வெளியிழுத்து தன்மீது போர்த்திக்கொண்டாள்.பரணில் கட்டப்பட்ட புத்தகக்குவியலின் முடிச்சை அவிழ்த்து தன் அறைமுழுக்க சிதறவிட்டு அவற்றின் இடுக்கில் தூங்கிப்போனாள்.

மலங்களை வெகுநேரம் வழித்தெடுத்த அவன் அவமானத்தில் உடல் குறுகி யாருக்கும் கேட்காதபடி சன்னக்குரலில் பின்வருமாறு முனகினான்.தோழி!முன்பொரு பிறவியில் வேட்கைமிகுந்த கானக மதியமொன்றில் கலவியிலிருந்த இரு புலிகளின்மீது அம்பெய்தேன் விரைத்த குறியோடு ஆண் புலியொன்று மடிந்ததுபோனது.எஞ்சியிருந்த பெண்புலியின் சாபத்தால் வெயில் காலங்களில் என் உடல் புலியின் வாசனை கொள்கிறது.அதன் வீச்சம் என் அருகினில் யாரையும் நெருங்க விடுவதில்லை வெயில் காலம் முடியும் வரை இந்த இருள் நகரத்தில் நான் புதைந்து கொள்வேன்.வீச்சங்களை நீ தாங்கிக்கொள்வாயெனினும் மதிய பொழுதுகளில் என் குறி சிதைவுற்று புலியின் விறைத்த குறியின் தன்மையை அடைகிறது.மதிய புணர்வுகளில் பெரும் தாகம் கொண்ட உன்னை எவ்வாறு புணர்வேன் புலியின் குறிகளோடு.மேலும் இதை சொல்லி உன் துயரை நீட்டிக்க செய்ய விரும்பாமல் என் பசப்பு வார்த்தைகளை கொண்டு உன் வருகையைத் தடுத்தேன் என்றபடி இருள்நகரத்தில் அமிழ்ந்துபோனான்.

துயிலெழுந்த பெருந்தனிமைக்காரி விடியலைக்காண தன் சன்னல்களை திறக்கையில் அடர் வனங்களில் பூத்திருக்கும் செடிகள் தன் தோட்டம் நிறைய பூத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள்.வழித்தெடுத்து வீசப்பட்ட அவன் சொற்களனைத்தும் முளைத்து அடர்வனப்
பூக்களைப் பிரசவித்தது கண்டு சொல்லொனாத் துயர் கொண்டாள்.அவள் யோனியிலிருந்து வீசப்பட்ட சொற்கள் மட்டும் ரத்த வண்ணத்தில் பூத்திருந்ததை அவளின் அழகிய விழிகள் விரியப் பார்த்துக்கொண்டிருந்தாள் அப்பெருந்தனிமைக்காரி.

*நன்றி : அதீதனைக் கண்டறிந்த ரமேஷ்-ப்ரேம் களுக்கு

Thursday, May 10, 2007

பின்நவீன கடவுளர்களின் வருகைக்கான காத்திருப்புகள்
புதிரொன்றின் முடிச்சை
கட்டவிழ்க்கும் கணத்தின்
விளிம்பொன்றில்
இறுகத்தொடங்குகிறது
புதிதாய் ஒரு முடிச்சு

தனிமையின் வன்மங்கள்
நடனமிடும் நமது வெளி
சாத்தானின் இருப்பிடங்களெனவும்
அறியப்படுகிறது
முதல் சந்திப்பில்
மலர்வதென அரும்பியிருந்த
சிறுமொட்டொன்று
கருகிப்போனது
அனலெனத் தகிக்கும்
புனிதங்களின் வெளியில்

கடவுளர்கள் வகுத்த
பாதுகாப்பான எல்லைகளுக்குள்
சாத்தான்களை உலவவிட்டு
கழிவிரக்கம் நிரப்பி வாழும்
நம் உலகத்தின்
விளிம்புகளையும் மய்யத்தையும்
உடைக்க கிளர்ந்தெழுந்து வரும்
பின்நவீன கடவுளர்களின் வருகைக்காக
காத்திருக்கும் இப்பொழுதுகளில்
மாற்றி மாற்றி எழுதிக்கொள்ளலாம்
இதுபோன்ற சில அபத்தக் கவிதைகளை

Thursday, May 3, 2007

வனங்களில் அலையும் நீலிஅடர்ந்த மரங்களின் துணையோடு
படர்ந்திருக்கும் இருளின் மய்யத்தில்
நுரைததும்பி ஓடும் காட்டுச் சிற்றோடையின்
குறுகலான வளைவுகளில்
கூந்தலை ஆடையெனக் கொண்டு
நீந்திக் களிப்பாள்
கானக நீலி

மரங்களையும் பட்சிகளையும்
துயிலெழுப்பிபடி
பனித்திரை விலக்கி மேலெழும் ஆதவன்
சோம்பல் முறிக்கும் மர இலைகளின்
சிறு இடைவெளியில்
தன் சன்னக் கதிர்களை
நீலியின் பளிங்கு முதுகில் பாய்ச்சி
காமப்பசியாறுவான்

பட்சிகளின் ஒலிகளில் மெய்மீளும் நீலி
ஆதவனின் குறும்புகளில்
பொய்க்கோபம் கொண்டு
ஓடை விட்டகலுவாள்
அடர்நீளக் கூந்தலிலிருந்து
உதிரும் நீர்த்துளிகளை உறிஞ்சிக்குடித்து
நீலியின் நடைவழிகளெங்கும்
இலைதெரியாமல் பூத்திருக்கும்
காட்டுச் செடிகள்

பசியில் அலையும்
வனாந்திரக் குழந்தைகளின் பசிதீர
தன்னிரு முலைகளைக் கொண்டு பாலூட்டுகிறாள்
கன்னித்திரை கிழிந்திடாத
கானக நீலி

மூங்கில் மர அடர்வுகளில்
துயில் கொள்ளும் நீலியின்
விழியசைவுகளில்
உயிர்த்திருக்கிறது
இக்காடு

Tuesday, May 1, 2007

ஒரு மிகச்சிறந்த மரணம்The Road Home

“என் கணவரது உடல் நகரத்தில் இருந்து இந்த மலைகிராமத்திற்க்கு இக்கிராம வாசிகளால் சுமக்கப்பட்டு கொண்டுவரப்பட வேண்டும்” என்ற ஒரு வயதான மனைவியின் வேண்டுகோளோடு துவங்குகிறது இப்படம்.

"Rememberance" என்ற பாவோ ஷீயின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த சீன மொழி திரைப்படம், 1999 ஆம் ஆண்டு புகழ் பெற்ற இயக்குனரான ஷாங்க் யிமோ (shank yimou) வின் இயக்கத்தில் வெளிவந்தது. அழகியல் ரீதியான முக்கியமான படைப்பு என சொல்லலாம். இப்படம் ஒரு மோசமான குளிர்காலத்தில் கருப்பு வெள்ளையில் துவங்குகிறது. தந்தையின் மரண செய்தியறிந்து நகரத்திலிருந்து வந்த தன் மகனிடம் சிரமமான ஒரு வேண்டுகோளை வைத்துவிட்டு தன் கணவனின் இறுதிச் சடங்கிற்க்கான ஆடையை நெய்யத்தொடங்குகிறாள் அந்த தாய்.

பனிப்பொழிவு மோசமாக தாக்கியிருக்கும் அந்த கிராமத்தில் பெரும்பாலான மக்கள் ஏற்கனவே நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டிருந்தனர். தனது தந்தையின் உடலை மருத்துவமனையிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் கிராமத்திற்க்கு சுமந்தபடி கொண்டு செல்வதில் இருக்கும் சிக்கல்களை உணர்ந்து அக்கிராம மக்களின் உதவி வேண்டி செல்கிறான்.

இடையில் வண்ணங்களை குழைத்து Luo Changyu (Hao Zheng) என்ற ஆசிரியனின் வாழ்வு சொல்லப்படுகிறது. பள்ளிக்கூடம் இல்லாத அந்த மலை சூழ்ந்த கிராமத்தில் முதன் முதலில் ஆசிரியனாக வருகிறான் ஒரு இளைஞன்.அந்த கிராம மக்கள் அவனுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்தை கட்டும் பணியில் ஈடுபடுகின்றனர்.முதல் பார்வையிலே அவனிடம் மனதை பறிகொடுக்கும் Zhao Di (Zhang ziyi) அவன் பார்வை படும் இடங்களில் சுற்றி வருகிறாள். பள்ளிக்கூடம் கட்டும் பணியில் ஈடுபடும் ஆண்களுக்கு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பெண்கள் உணவு தயாரித்து கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் நேரிடுகிறது.மிகுந்த பரபரப்புகளோடு அவனுக்காக தான் பிரத்யேகமாய் சமைத்து கொண்டு செல்லும் உணவை அவன் சாப்பிட வேண்டும் என ஏங்குவதும்,தன் வீட்டில் அவன் உணவு அருந்தும் நாளுக்காய் காத்திருந்து மிகுந்த அன்போடும் வெட்கத்தோடும் அவள் உணவு பரிமாறுவதும்,அந்த ஆசிரியனின் குரல் கேட்பதற்க்காக அவள் வீட்டிலிருந்து வெகு தொலைவிலிருக்கும் கிணற்றுக்கு நீரெடுக்க வருவதும்
அரசியல் காரணங்களுக்காய் அவனை சிறைப்பிடித்து செல்வதை கேள்விப்பட்டு அந்த மலைப்பாதையில் பதபதைப்புகளோடு ஒடிவருவதுமாய் ஒரு எளிமையான கிராமத்து பெண்ணின் காதலை அழகாய் சொல்லியிருக்கிறார்கள். அவனுக்காக உருகி,தவித்து,ஏங்கி அதில் வெற்றியும் பெறுகிறாள்.படம் முழுக்க அந்த ஆசிரியனைப் பற்றி பேசுகிறார்கள். அவனின் எளிமை,அன்பு,உரிமைக்காக போராடும் குணம் என மிகச்சிறந்த மனிதன் ஒருவனின் தன்னலம் கருதா தொண்டை பாராட்டுகிறார்கள். இதை எல்லாவற்றையும் விட இந்த பெண்ணின் கண்மூடித்தனமான காதல் அம்மனிதனை மிக உயரத்திற்கு கொண்டு செல்கிறது.

ஒரு பெண்ணின் எல்லைகளற்ற அன்பை உள்வாங்கிக் கொண்டு அந்த கிராமத்திலேயே தன் வாழ்நாள் முழுதும் செலவிட்டு ஒரு தலைசிறந்த ஆசிரியனாய் எண்ணற்ற மாணவர்களை உருவாக்கி அந்த கிராமத்தை விட்டு வெளியேற மறுத்து ஒரு மோசமான பனி நாளில் இறந்து போகிறார்.அவரின் இறுதிசடங்குகள் அவரது மனைவியின் ஆசைப்படி நிறைவேறுகிறது. உலகின் பல பாகங்களிலிருந்து அவரின் மாணவர்கள் குழுமி ஒரு மிகச்சிறந்த மனிதனின் மரணத்தை சிறப்பிக்கின்றனர்.

இயற்கையின் வண்ணங்களை வாரிப் பூசிக்கொண்டதுபோல் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. படத்தோடு கரைந்துபோகும்படியாய் அற்புதமான பின்னணி இசை. 18 வயதான சின்னஞ்சிறு கிராமத்து பெண்ணின் காதலை கவிதையாய் சொல்லியிருக்கிறார்கள். ஒரு கிராமத்து பெண்ணின் காதலை, அன்பை, பதட்டங்களை, இளமையின் அத்தனை உணர்வுகளையும் துல்லியமாய் பதிவு செய்திருக்கிறது இப்படம். ஜாங் ஜியி என்ற இந்த பெண்ணின் முகம் வெகுநாட்களுக்கு மனதை விட்டு அகலவே இல்லை.உயரமாய் புற்கள் வளர்ந்த மிக நீளமான,நகரத்தை இணைக்கும் அச்சாலை படத்தின் மிகச் சிறந்த குறியீடு. இந்த பெண் அவனை முதலில் காண்பது, கொட்டும் மழையில் அவனின் திரும்புதல்களுக்காய் காத்துகிடப்பது. எப்போதும் அவனை சந்திக்க ஓடிக்கொண்டே இருப்பதனெ அந்த சாலை முழுக்க அவள் காதல் பரவிக்கிடக்கிறது.

இறுதியில் அவன் உடலை சுமந்தபடி ஒரு பெரும் கூட்டம் அச்சாலையை நிறைப்பது கவித்துவம். ஓரு மிகச்சிறந்த மரணம் இப்படித்தான் இருக்கமுடியும்.

மிகப் பெரிய பள்ளிக்கூடத்தை கட்டிவிட வேண்டும் என்கிற அந்த ஆசிரியனின் ஆசை நிறைவேறாமலேயே போய் விடுகிறது.அந்த சிறிய மலைக்கிராமப் பள்ளி பராமரிப்புகள் ஏதுமற்றும்,அடுத்த ஆசிரியன் யார்? மற்றும் அடுத்த தலைமுறைக்கான கல்வி பற்றிய கேள்விகளோடு படம் முடிகிறது.

தன் தாய்க்காக ஒரே ஒரு நாள் அப்பள்ளியில் பாடம் சொல்லித்தந்துவிட்டு விடைபெறுகிறான் அவள் மகன்.அவனது தந்தையின் குரலைப்போல் இல்லாவிட்டாலும் மகனது குரலும் காற்றில் கலக்கிறது.

இத்திரைப்படம் மூலம் தனிமனிதனது வேர் சார்ந்த கடமைகளின் அவசியத்தை முன் வைக்கிறார் ஷாங்க் யிமோ.

* ஏப்ரல் மாத வலம்புரி இதழில் இக்கட்டுரை வெளியானது.

Featured Post

test

 test