Monday, May 31, 2010

தில்லி 06 : 2

நேற்று: 29.05.2006 : ஜிபி ரோட் – தில்லி

எல்லா வேலையும் முடிந்தது. யுஏஇ எம்பசியில் பின்புறம் ஸ்டாம்ப் ஒட்டின என் பட்டத்தை வாங்கும்போது பெரிய விடுதலையை உணரமுடிந்தது. எத்தனை அலைச்சல்! எவ்வளவு நீண்ட காத்திருப்பு! வெயில், பசி என எல்லா கொடுமைகளையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. விஜியும் கொண்டு வந்திருந்த தலையணை புத்தகங்களும் இல்லையென்றால் இன்னும் அதிகமாக சிரமப்பட்டிருப்பேன். கையில் புத்தகம் இருந்தால் எவ்வளவு நீளமான வரிசையிலும் நின்றுவிடலாம். நின்றபடியே அந்த உலகத்தில் தொலைவதில் எனக்கு பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை. விஜியால் ஒரே இடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாது. இதற்கும் அதற்குமாய் நடந்து கொண்டிருப்பான். மழையில் எருமைக் கணக்காய் நிற்கும் என்னை சற்று எரிச்சலாகத்தான் அவ்வப்போது வந்து பார்த்துப் போவான். ஒரு வழியாய் எல்லாம் முடிந்தது. மிக உற்சாகமாய் புறா கூண்டு லாட்ஜிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். திடீரென நினைவு வந்தவனாய் ”ஆக்ரா பக்கம்தான தாஜ்மகாலை பார்த்துட்டுப் போய்டலாமே..” என்றேன். உடனே சம்மதித்தான். ரயில் நிலையத்திற்கு போய் பயணச் சீட்டுகளை ஆக்ராவிற்கு மாற்றிவிட்டு அறைக்குத் திரும்பினோம். ஒரு இயல்பான மன நிலை திரும்பியிருந்தது. உணவிற்கு சொல்ல சிப்பந்தியை அழைத்தோம்.

விஜி மூன்று நாட்களில் கத்துக் கொண்டிருந்த இந்தி உதவியுடன் ”ரூமுக்கு பொண்ணு வருமா” என்றான். ”ஜிபி ரோட் சலோ பூரா லடுக்கி ஹெ” என்றார். எங்கள் இருவருக்குமே மெல்லிதான குறுகுறுப்பு ஒன்று தொற்றிக் கொண்டது. எப்படிப் போவது என்பதை அவரிடமே கேட்டுப் புரிந்து கொண்டோம். லேசாய் தூங்கிவிட்டு நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வெகுநேரம் குளித்துத் தயாரானோம். சிவப்பு விளக்குப் பகுதியெல்லாம் சினிமாவில் பார்த்திருந்ததுதான். லேசான பயமும் இருந்தது. ”பெண்ணுடன் இருக்கும்போது போலீசு வந்தால் எப்படி தப்பிப்பது?” என விஜியிடம் கேட்டேன். அவன் இந்த கோணத்தில் சிந்தித்திருக்க மாட்டான் போல. “அய்யோ மச்சான் உள்ள கிள்ள உக்கார வச்சுட்டானுங்கனா துபாய் எப்படிடா போவறது?.. வேணாம் வுடு.. சரக்கடிச்சிட்டு தூங்கிடலாம்.. ஏன் வம்பு” என்றான். எனக்கும் அதுதான் சரியெனப்பட்டது இருப்பினும். சும்மா கொஞ்ச தூரம் நடக்கலாமே என வெகு தூரம் நடந்து ஜிபி ரோடுக்கு வந்து விட்டோம்.

தமிழ் சினிமாக்களில் பார்த்திருந்தது போலதான் இருந்தது. மக்கள் நெரிசல் மிகுந்த, குறுகிய, நீளமான சாலை. நெடுகிலும் மிகப் பழைய வீடுகள். முதல் மாடியின் நீள வராண்டா முழுக்க பெண்கள். மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் முழுக்க பெண்கள். இத்தனை அடர்த்தியான முகப்பூச்சுகளையோ குறைவான ஆடையணிந்த பெண்களையோ இருவருமே பார்த்திருக்க வில்லை. சின்ன பதட்டத்தோடே அந்த சாலையில் நடந்து கொண்டிருந்தோம். நான்கைந்து பெண்கள் “ஏ மதராஸி இதர் ஆவ்” எனக் கிண்டலடித்தனர். நானும் இவனும் வேகமாய் நடந்தோம். பின்னாலேயே இரண்டு சிறுவர்கள் தொடந்து கொண்டிருந்தனர். ஒருவன் என் கைப் பிடித்து நிறுத்தினான். உடைந்த தமிழில் “தமில் கேரளா ஆந்திரா எல்லா ஸ்டேட்டும் இருக்கு. மஸ்த் பிகர். நூறு ரூபாதான்” என்றான். பதின்மத்தை தொட்டிராத சிறுவன் அவன். “நை நை ஜஸ்ட் வாக்கிங்” என்றேன். அவன் சற்று நேரம் எதுவும் பேசாமல் நின்றான் பின்பு கையை விட்டுவிட்டு போய்விட்டான். விஜி இன்னொரு சிறுவனுடன் தீவிரமாய் மூன்று நாள் இந்தியில் பேசிக் கொண்டிருந்தான். எனக்காய் திரும்பி “மச்சான் சும்மா போய் எடத்த பாக்கலாண்டா... புடிக்கலன்னு சொல்லிட்டு வந்துடலாம்.. . சும்மா ஒரு டிபரண்ட் எக்ஸ்பீரியன்ஸ்” என சிரித்தான். பயம், ஆசை, தயக்கம், சபலம் என எல்லாம் ஒருமித்த மன நிலை அது. போலாம் என தலையசைத்தேன்.

அந்தச் சிறுவன் முன்னால் நடக்க நாங்கள் பின் தொடந்தோம். பிரதான சாலையிலிருந்து குறுக்கு சந்தில் நடக்கத் துவங்கினான். மிக சிடுக்கான வீதி அது. முழுக்க கடைகளும் மனிதர்களும் அடைத்துக் கிடந்தனர். அவன் மிகச் சுலபமாய் கூட்டத்தில் நீந்திச் சென்றான். எங்களால் தொடர முடியவில்லை. அவ்வப்போது நின்று எங்கள் தலைகள் தெரிந்தவுடன் மீண்டும் நீந்திப் போய் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் எனக்கு பயமாக இருந்தது. திரும்பிப் போய்விடலாம் என இவனை நிறுத்தினேன். திரும்ப யத்தனிக்கும்போது சிறுவன் அருகில் வந்து விஜியின் கையைப் பிடித்துக் கொண்டான். வந்துவிட்டோம் என சொல்லியபடியே அருகில் பிரிந்த இருள் சந்திற்குள் நுழைந்தான். வெளிச்சம் மிகக் குறைவான சந்து அது. மனித நடமாட்டம் இல்லை. பத்தடி நடந்ததும் ஒரு சிதைந்த வீட்டின் பின் கதவின் முன் நின்றான். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதைப் போலிருந்தது. “விஜி வாடா ஓடிடலாம்” என்றேன். சிறுவன் கதவுகளைத் திறந்து கொண்டு வீட்டினுள் நுழைந்தான். நாங்களும் தொடர்ந்தோம். வெளிச்சமற்ற நீள வழி அது. சுரங்கப் பாதை போல மண்ணால் கட்டப்பட்ட இரு சுவர்களுக்கு மத்தியில் நீண்டு கொண்டிருந்தது. நடந்து கொண்டிருந்தோம். திடீரென வெளிச்சம் பாய்ந்தது. நாங்கள் நின்று கொண்டிருந்தது பிரதான சாலையை ஒட்டியிருந்த பழைய கட்டிடம் ஒன்றினுள்தான். சிறுவனை முறைத்தோம் ஆனால் கடிந்து கொள்வதற்கு வாய் வரவில்லை.

அவன் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினான். வளைந்த குறுகிய அரை இருள் படிக்கட்டுகள். இடைவெளியே இல்லாது முழுக்க பெண்கள் நின்று கொண்டிருந்தனர். வியர்த்துப் போய் மேலே வந்தோம். இரண்டு தூண்கள் வைத்திருந்த ஒரு கூடம். படிக்கட்டு முடியுமிடத்தில் ப வடிவ சிமெண்ட் திட்டு. அதில் காலி குடங்கள் அழுக்குப் பாத்திரங்கள் சிதறிக் கிடந்தன. கூடத்தின் நடுவில் திரி ஸ்டவ் எரிந்து கொண்டிருந்தது. ஒரு பெண் குத்துக் காலிட்டு அமர்ந்தபடி சப்பாத்தியை தேய்த்து ஸ்டவ்வின் மேலிருந்த வாணலில் போட்டபடியிருந்தாள். அவளுக்கு சமீபமாய் ஒரு சிமெண்ட் திண்ணை. அதில் ஒரு போலீஸ்காரர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தொப்பியையும் லத்தியையும் அருகில் கிடத்தியிருந்தார். கூடத்தின் வலது புறத்தில் மூன்று அறைகள் வரிசையாய் கட்டப் பட்டிருந்தன. இரும்புக் கதவுகளைக் கொண்ட அவ்வறைகள் மூடியிருந்தன. கூடத்தின் இடது பக்கம் ஒரு நார் கட்டில் அதில் ஒரு கூன் விழுந்த மூதாட்டி அமர்ந்திருந்தாள்.

நாங்கள் தயங்கியபடி சற்று நேரம் நின்றுகொண்டிருந்தோம். போலீஸ்காரரும் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணும் எங்கள் இருவரையும் சட்டை செய்யவில்லை. சிறுவன் திடீரென மாயமாய் மறைந்து விட்டிருக்கிறான். பாட்டி எங்களை அருகில் அழைத்தாள். நடுங்கும் குரலில் ”மதராஸி?” என்றாள் தலையசைத்தோம். ”ஆளுக்கு இருநூறு ரூபாய் எடுங்கள்” என்றாள். அதே நேரத்தில் ஒரு இரும்புக் கதவு பல் கூசும் சப்தத்துடன் திறந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண் உடைகளை சரிசெய்தபடி உள்ளிருந்து வெளியே வந்தாள். பேண்டை தோளில் போட்டபடி ஒரு நோஞ்சான் ஆள் பின்னாலயே வெளியில் வந்தான். நான் “போய்டலாம் விஜி” என அவன் கைகளை பிடித்து இழுத்தேன். வெளியில் வந்தப் பெண் “க்யா” என்றாள். “நை கமிங் ஆப்டர் ஆப்டர்” என்றேன். மீண்டும் நடுங்கும் குரல் “சாலா மதராஸி பணத்த எடு” என்றது. விஜி “நோ பைசா நோ பைசா ஆப்டர் கமிங்” என உளறினான். இன்னொரு இரும்புக் கதவும் திறந்தது. சற்று கனத்த உடம்போடு நடுத்தர வயதுப் பெண் உள்ளாடைகளோடு வெளியில் வந்தாள். ஓடப் பார்க்கிறோம் எனப் புரிந்து கொண்டாள். நெருங்கி வந்து என் சட்டையை கொத்தாக பிடித்து உலகத்தின் அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் அர்ச்சித்தாள். “பை மிஸ்டேக் கேம் சாரி சாரி” என்றேன். “திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” என உதறிவிட்டு சிரித்தாள்.

விடுவிடு வென வெளியில் வந்தோம். அவமானம் பிடுங்கித் தின்றது. எதுவும் பேசாமல் வேகமாய் நடந்து கொண்டிருந்தோம். எந்த வழியில் போகிறோம் என்று கூட தெரியவில்லை. திடீரென சூறைக் காற்று அடிக்கத் தொடங்கியது. பிரதான சாலையை விட்டு வெகு தொலைவு வந்துவிட்டிருக்கிறோம். தலை முகம் உடைகள் எல்லாமும் மண்ணால் நிரம்பியது. கண்ணை இறுக்க மூடிக் கொண்டேன். திடீரென மழை கொட்டத் துவங்கியது. அருகிலிருந்த பெஞ்சில் கண் மூடி வானம் பார்த்து படுத்துக் கொண்டேன் விஜி எதுவும் பேசாமல் அருகில் அமர்ந்தான். மழை எங்கள் இருவரையும் ஆக்ரோஷமாய் தழுவியது

30.05.2006 இன்று : தில்லி ஆக்ரா நெடுஞ்சாலை பெயர் தெரியா நிறுத்தம்

நேற்றைய இரவை நினைக்க நினைக்க அவமானமாய் இருந்தது. நினைவை உதறிக் கொண்டேன். கடந்த அரை மணி நேரமாக எந்த வாகனமும் உள்ளே வரவில்லை. அவ நம்பிக்கைகள் மெதுவாய் எங்களின் முகங்களில் படரத் துவங்கின. கல்லூரிக்குத் தொடர்பு கொண்டு மாற்று சான்றிதழ்களை வழங்குவார்களா என கேட்கலாமா என்றான் விஜி. கிடைச்சிடும்டா என்றேன். அந்த குரலில் எனக்கே சுத்தமாய் நம்பிக்கையில்லை. பஞ்சரான வண்டி தயாராகி விட்டது போலிருக்கிறது. நடத்துனர் சிதறிக் கிடந்த பிரயாணிகளை அழைக்கத் துவங்கினார். இந்த வண்டியில் ஏறிக் கொள்ளலாம் என்றபடியே பேருந்தை நோக்கி நடக்கத் துவங்கினோம். படியில் நின்றிருந்த நடத்துனர் எதுவும் கேட்கவில்லை. எனக்கு முன்பு ஏறின விஜி ”டேய் மச்சான் ”என சந்தோஷமாய் கத்தினான். ”என்னடா” என்றபடியே உள்ளே வந்தேன். எங்களின் பைகள் இருக்கைகளில் பரிதாபமாய் அமர்ந்திருந்தன. இருவரும் ஒரு நிமிடம் திகைத்துப் போனோம். நாங்கள் வந்த வண்டி இதுதான். வேறேதோ வண்டியை பார்த்து நான் தான் குழம்பி பதறியடித்திருக்கிறேன். விஜி என் கழுத்தை நெறிக்க வந்தான். நான் “ரண்டக ரண்டக ரண்டக” என உற்சாகமாய் கத்தினேன்.

Friday, May 28, 2010

தில்லி 06


இன்று : 30.05.2006 : தில்லி ஆக்ரா நெடுஞ்சாலை ,பெயர் தெரியா நிறுத்தம்

செய்வதறியாது நின்றுவிட்டேன். திகைப்பும் பயமும் ஒருமித்து அடிவயிற்றிலிருந்து பந்து ஒன்று மேலெழும்பிக் கொண்டிருந்தது. இடம், மொழி, அடையாளம் எதுவும் தெரியாத ஒரு வினோத நகரத்தின் சாலை ஓரத்தில் கைவிடப்பட்டவர்களாய் நானும் விஜியும் நின்று கொண்டிருந்தோம். அவனுக்கு இளகின மனது. எந்த நொடியிலும் அழுதுவிடும் மனநிலையில் இருந்தான். எங்களைக் கடக்கும் வாகனங்களை கைகாட்டி நிறுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தோம். விஜி நிறுத்தாத சில வாகனங்களின் பின்னால் சிறிது தூரம் ஓடி “பைசா தரேன் பைசா தரேன் ஏத்திட்டுப் போ” எனக் கத்திக் கொண்டிருந்தான். எவரும் சட்டை செய்யாது வாகனத்தை அதி விரைவாய் ஓட்டிக் கடந்தனர். தலைப்பாகை அணிந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் கூட நிறுத்தாமல்தான் சென்றனர். காலை எட்டு மணிக்கே சூரியன் முன் நெற்றியை எரித்துக் கொண்டிருந்தது. நாங்கள் பதட்டத்திலும் வியர்வையிலும் நனைந்து கொண்டிருந்தோம். மரங்களின் நிழல்கள் ஒரு போதும் தீண்டியிராத தில்லியிலிருந்து ஆக்ரா செல்லும் இந்த நெடுஞ்சாலை காலையிலே தகிக்கத் துவங்கிவிட்டது. எங்களைக் கை விட்டுச் சென்ற பேருந்தை இனிமேல் பிடிப்பது சற்றுக் கடினம்தான்.

பிரதான சாலையிலிருந்து சற்று உள்ளடங்கிய உணவகத்திற்கே மீண்டும் திரும்பி வந்தோம். அங்கு வரும் பேருந்தில் ஏறி, ஆக்ரா போய் எங்கள் உடைமைகள் இருக்கும் பேருந்தைக் கண்டுபிடித்துவிடலாம் என விஜியிடம் ஆறுதலாய் சொல்லத் துவங்கினேன். “ட்ரைவர் இல்ல கண்டக்டர் முகம் நினைவில இருக்கா?” என்றான். இல்லை. சுத்தமாய் நினைவிலில்லை. காலை ஆறு மணிக்கு பேருந்தில் ஏறினோம். டிக்கெட் வாங்கியவுடன் இருவருமே தூங்கிவிட்டோம். இந்த பதட்டங்களுக்கு காரணம் பேருந்தில் வைத்திருந்த எங்களின் பைகளில் ஒரிஜினல் கல்விச் சான்றிதழ்கள் இருந்தன. கடந்த மூன்று நாட்களாய் அலைந்து திரிந்து வெளியுறவு அமைச்சகம், கல்வி அமைச்சகம், யுஏஇ எம்பசி போன்றவற்றிடமிருந்து உறுதி முத்திரைகளை வாங்கியிருந்தோம். ஒழுங்காய் ரயிலேறி சென்னைக்குத் திரும்பியிருக்கலாம். நான்தான் இவ்வளவு தூரம் வந்துவிட்டு தாஜ்மகாலைப் பார்க்காமல் போவதா? என இவனையும் கிளப்பிக் கொண்டு, தில்லி ரிசர்வேசனை ஆக்ராவிற்கு மாற்றிவிட்டு, இன்று அதிகாலையில் பேருந்தைப் பிடித்து வந்துகொண்டிருந்தோம். வழியில் தேநீருக்காக நிற்கையில் இறங்கினோம். இதோ சாலையில் நிற்கிறோம்.

உணவகத்தில் ஒரு பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போதுதான் பஞ்சரானதாம். பயணிகள் சலித்தபடி கீழிறங்கிக் கொண்டிருந்தனர். வேரெந்த வாகனமும் உள்ளே வரவில்லை. உணவக வாசலிலிருந்த டீக் கடையின் பாதி நிழலில், வாகனங்கள் நுழையும் வழியைப் பார்த்தபடி நின்று கொண்டோம். இந்த பயணமே சிக்கலாய்த்தான் ஆரம்பித்தது.

ஐந்து நாட்கள் முன்பு 25.05.2006: சென்னை செண்ட்ரல்

திட்டமிட்டதைப் போல மதியம் இரண்டு மணிக்கெல்லாம் செண்ட்ரல் வந்து விட்டேன். மே மாத வெயிலின் உக்கிரம் சிதறலாய் கிடந்த மனிதர்களின் முகங்களில் படிந்திருந்தது. இடது தோளில் ஒரு கனமான பையும் வலது கையில் ஒரு சிறிய பையும் வைத்திருந்தேன். வியர்வையில் சட்டை ஏற்கனவே நனைந்து விட்டிருந்தது. ப்ளாட்பாரத்தில் சுழலும் பெரிய மின் விசிறி வெப்பத்தை கக்கியது. அந்த காற்று படாத இடமாய் பார்த்து நின்று கொண்டேன். விஜி இரண்டு மணிக்கெல்லாம் வந்து விடுவதாய் சொல்லியிருந்தான். மாலை ஐந்து மணி க்ராண்ட்(GT) ரயிலில் தில்லிக்குப் போகிறோம். டிக்கெட்டையும் அவன் தான் பதிவு செய்திருந்தான். முதல் முதலாய் தொலைதூரப் பயணம் என்பதால் முந்தின நாள் இரவே எனக்கு தூக்கம் போய்விட்டது. கிட்டத்தட்ட ஐந்து நாள் ரயிலில் பயணிக்க வேண்டும் தில்லியில் இரண்டு நாட்கள் அலைந்து திரிய வேண்டும். எங்களுடைய கல்விச் சான்றிதழ்களை வெளியுறவு அமைச்சகமும் கல்வி அமைச்சகமும் உறுதிசெய்யவேண்டும். பின்பு யுஏஇ எம்பசியிடமிருந்து அச்சான்றுகளில் ஒரு ஸ்டாம்பையும் வாங்க வேண்டும் இம் மூன்று சான்றுகளை வாங்கி அனுப்பினால்தான் துபாயில் எங்களை தேர்வு செய்திருந்த நிறுவனம் விசா அனுப்பி வைக்கும். குறுகிய கால அவகாசமே இருந்ததால் வேலையை முடிக்க வேண்டிய லேசான பதட்டமும் இருந்தது.

வீட்டிலிருந்து புறப்படும்போது ஐந்து நாள் பிரயாணத்திற்கு தேவையான கனமான புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். பின் தொடரும் நிழலின் குரல், பிதிரா, காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ் மூன்றை நுழைத்ததுமே பை வீங்கி விட்டது. புளியோதரை, எலுமிச்சை சாதம் வகையறாக்களை பையில் நுழைக்க எடுத்து வந்த என் அம்மாவை ஒரு பார்வை பார்த்தேன். “பிரயாணத்தில் நல்ல சாப்பாடு கிடைக்காது எடுத்துட்டுப் போடா” என்றாள். “உன்னோடது நல்ல சாப்பாடுன்னு நான் சொல்லனும் நீயே சொல்லிக்க கூடாது” என்றேன் விரைப்பாக. “காய்ஞ்சி திரும்பி வா அருமை தெரியும் “ என சபித்தபடியே பொட்டலங்களை உள்ளே எடுத்துப் போனாள். விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து சமையலறையை உருட்டிக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. பேருக்காவது இரண்டு பொட்டலங்களை எடுத்துக் கொண்டிருக்கலாம்தான். வேண்டாம் அது வேறு எங்காவது கொட்டிக் கொண்டால் துணியும் புத்தகங்களும் வீணாகி விடும். காலை ஆறு மணிக்கு பேருந்தைப் பிடித்து விட்டேன்.

இரண்டு மணியிலிருந்து காத்திருந்து வெறுத்துப் போய் மூன்று மணிக்கு சமீபமாய் விஜியை அலைபேசியில் அழைத்தேன். எடுக்கவில்லை. அரக்கோணத்திலிருந்து ரயிலில் நின்று கொண்டு வருகிறானோ என்னவோ. அவன் சொந்த ஊர் அரக்கோணம் பக்கத்தில் ஒரு சிறு கிராமம். அனல் காற்றும் மக்கள் கூட்டமும் செண்டரலை காந்தியது. நல்ல பசி வேறு. விஜியுடன் லேசாய் குடித்து விட்டு, சாப்பிட்டுவிட்டு, நாலரை மணிக்கெல்லாம் ப்ளாட்பாரம் வந்து விடுவதுதான் திட்டம். பாவி மூன்று மணியாகியும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டபோது சின்னதொரு சிக்கலில் மாட்டிக் கொண்டதாய் சொன்னான். ஐந்து மணிக்கு கண்டிப்பாய் வந்துவிடுவதாக உறுதியளித்தான். பைகளை சுமந்தபடி சாப்பிடச் சென்றேன்.

சென்னை மிக மோசமான நகரம். அதுவும் வெயில் காலங்களில் இந்த நகரத்திற்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது. இந்த சென்னை வாழ்வு பிடிக்காமல்தான் நல்ல வேலையை உதறிவிட்டு ஆறு மாதத்தினுக்கு முன்பு மதுரை ஓடிப்போனேன். விஜியும் நானும் சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தோம். அப்போதிருந்தே அவன் துபாய் போக முயற்சி செய்துகொண்டிருந்தான். எனக்கு வெளிநாடு போகும் ஆர்வம் இல்லை. மதுரையே போதுமானதாக இருந்தது. மதுரை நகரமும், மனிதர்களும், உணவகங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒத்தக்கடையிலிருந்து சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு போகும் வழியில் நிலம் கூட பார்த்துவிட்டேன். லோன் கிடைப்பதும் எளிதுதான். விஸ்தாரமாய் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு மதுரையிலேயே செட்டில் ஆகும் எண்ணம்தான் இருந்தது. இவனை தேர்வு செய்த நிறுவனத்தில் இன்னொரு பணி காலியாக இருந்ததாம். வந்துவிடும்படி விஜி நச்சரித்துக் கொண்டிருந்தான். “இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இருந்து விட்டு வந்துவிடலாம். …விசா டிக்கெட் எதுக்கும் பணமில்ல…. தங்குர இடமும் அவனே தர்ரான்…. சம்பளமும் ஓகே… என பல்வேறு தூண்டில்கள். கடைசியில் நான் மீனானேன்.

இதோ கடந்த இரண்டு மாதங்களாக அலைந்து கொண்டிருக்கிறோம். விசா வந்துவிடும் என அந்நிறுவனம் லட்டர் கொடுத்ததோடு சரி. ஒரு மாதம் எந்த தொடர்புமில்லை. நாங்கள் இருவருமே பார்த்துக் கொண்டிருந்த வேலையை கவுண்டமணியைப் போல விட்டிருந்தோம். ஒரு மாதம் கழித்து சான்றிதழ்களை அட்டஸ்டட் செய்து அனுப்புங்கள் அப்போதுதான் விசா எடுக்க முடியும் என புதிதாய் ஒரு கதை சொன்னார்கள். வெளிநாட்டு வேலை மிதப்பில் ஏகத்துக்கும் செலவு செய்து விட்டிருந்தோம். அங்கே இங்கே கடன் வாங்கி இன்று சென்னை செண்ட்ரல்.

அருகிலிருந்த சாப்பாட்டுக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த வியர்வையில் கூட்டத்தில் நீந்தி, இடம் பிடித்து உட்கார்ந்து, கொதிக்கும் சாம்பாரோடு சாதத்தை தின்று தொலைக்க முடியாது. சென்னையையும் வெயிலையும் மனதார சபித்து விட்டு பக்கத்தில் மதுக் கடையைத் தேடி நகர்ந்தேன். அரசு மதுக்கடையில் பியர் கொதித்தது. ஆத்திரமாய் வந்தது. காண்ட்ராக்ட் முடிய சொற்ப மாதங்கள் மீதமிருக்கும் தனியார் கடை ஒன்று கண்ணில் பட்டது. நல்ல வேளையாய் அங்கே பியர் குளித்திருந்தது. அழுக்கு மேசை, காலுடைந்த மர ஸ்டூல், சுண்டல் சிதறல்களாய் மனிதர்களென கடை பின் பக்கத்தில் பியரை தாகத்துடன் வேகமாய் குடித்து முடித்தேன். தோள்பட்டை வலித்தது. இந்தத் தலயணை புத்தகங்களை எடுத்து வராமலிருந்திருக்கலாம். ஆனால் ஐந்து நாள் பயணத்தில் என்ன செய்வது? மீண்டும் ஒரு பியர் குடித்தேன். உலகம் சந்தோஷமானது. வெயிலைப் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணன் வரிகள் நினைவுக்கு வந்தன. சென்னையை, கூட்டத்தை, வியர்வையை நான் நேசிக்கத் துவங்கினேன். அடுத்த மாதம் வாங்கப் போகும் சம்பளத் தொகையை நினைத்துக் கொண்டேன். இன்னும் சந்தோஷமானது. அரைப்புட்டி ரம்மை வாங்கி பெப்சி பாட்டிலில் கலந்து பையில் வைத்துக் கொண்டேன். நான்கு மணி ஆகியிருந்தது. விஜி கால் டாக்சியில் வந்து கொண்டிருப்பதாகவும் சரியாய் ஐந்து மணிக்கு ஸ்டேசனில் இருப்பேனனவும் சொன்னான். நான் மீண்டும் பைகளை சுமந்தபடி லேசாய் மிதந்தபடி செண்ட்ரல் திரும்பினேன்.

இரண்டாவது ப்ளாட்பாரத்துக்கு சமீபமான பெஞ்சில் சுமைகளை இறக்கி வைத்து விட்டு அமர்ந்தேன். ஜிடி வந்துவிட்டது. நான் விஜிக்கு அலைபேசவில்லை. இடியே விழுந்தாலும் சமாளிக்கும் உற்சாக மன நிலை இருந்தது. ஜிடி கிளம்பிப் போய்விட்டது. விஜியிடமிருந்து அழைப்பு
“மச்சான் வண்டி வந்துட்சா”
“போய்டுச்சி ஒய்”
“சாரிடா இங்க செம ட்ராபிக்”
“சரி வந்து சேரு தமிழ்நாடுல இடம் இருக்கா பாப்பம்” என்றேன்.
ஐந்தரைக்கு மணிக்கு வந்து சேர்ந்தான். டிக்கெட்டுகளையும் அவனே வைத்திருந்தபடியால் என்னால் கேன்சல் செய்யவும் முடியவில்லை. இருவரும் போய் ஜிடியை பாதி விலைக்கு கேன்சலித்தோம். தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் மூன்றாவது ஏசி டிக்கெட்டுகள்தாம் இருந்தன. “தேர்ட் ஏசிக்கு அவன் கேக்குர காசுக்கு கொஞ்சம் கூட போட்டு பிளைட்ல போய்டலாம் மச்சான்” என்றான். “அடுத்த மாச சம்பளத்த நென... இப்ப புக் பண்ணு” என சிரித்தேன். மேலும் “வட மாநிலங்களில் வெயில் பயங்கரமாக இருக்கும் ஏசி கிடைத்தது நம் அதிர்ஷ்டம்தான்” என்றேன். “இருந்தாலும் செம காசு மச்சான்” என்றான். “வுடு ஒய்” என்றதும் முறைத்தபடியே டிக்கெட் வாங்கினான்.

விஜி அளவில் சிறியதாய் ஒரு பை எடுத்து வந்திருந்தான். என் பெரிய பைகளைப் பார்த்து “பறவையப் போல வாழக் கத்துக்க மச்சான்” என்றான். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வந்த்து. இடம் தேடி அமர்ந்தோம். ”நீ மட்டும் நல்லா குடிச்சி சந்தோசமா இரு ஒய்” என்றான். முன் மற்றும் பக்கத்து இருக்கைகள் காலியாய் இருந்தன. பையிலிருந்த பெப்சி பாட்டிலை எடுத்தேன். ”மச்சான் நீ கில்லிடா” என்றான். விஜிக்கு பித்த உடம்பு (அப்படித்தான் சொல்வான்) அரை பியருக்கே படு பயங்கரமான உண்மைகளையெல்லாம் உலகினுக்கு உரத்து சொல்ல ஆரம்பித்துவிடுவான். ஹாட் என்றால் ஒரு கட்டிங்தான். மெதுவாய் ஆரம்பித்தான்.

“மச்சான் இன்னா மேட்டர் தெரியுமா நான் அரக்கோணத்துல இருந்து நேத்து சாயந்திரமே திருவள்ளூர் வந்துட்டேன். கார்த்தி ரூம்ல இருந்துட்டு காலைல கிளம்பி மேரியப் பாக்க போனேன். சாப்டுட்டுதான் போகனும்னு அடம்புடிச்சாங்க. அவங்க அன்பை தட்டிக் கழிக்க முடியாம நல்லா சாப்டுட்டு மனசே இல்லாமதான் கால் டாக்சி புடிச்சி வந்தேன் ஒய்” என இளித்தான். எனக்கு ஆத்திரமாய் வந்தது. “தாயோலி உன்னால எவ்ளோ லாஸ்” “கோச்சுக்காத ஒய் இன்னொரு ரவுண்ட் ஊத்து” என்றபடியே சரிந்தான் ஸ்லீப்பர்களை விரித்து மட்டையானோம்.

இன்று : 30.05.2006 : தில்லி ஆக்ரா நெடுஞ்சாலை, பெயர் தெரியா நிறுத்தம்

கடந்த பதினைந்து நிமிடமாக எந்த வாகனமும் உள்ளே வரவில்லை. காற்றில் இதற்கு முன்பு அனுபவித்திராத வினோத வாசமிருந்தது. வயிற்றில் பசி நிரந்தரமாக இருந்தது. நன்றாக சாப்பிட்டு ஐந்து நாட்கள் ஆகின்றன. எல்லா உணவிலும் நீக்கமற அடிக்கும் எழவெடுத்த எண்ணெய் நாற்றம் வயிற்றைக் குமட்டியது. அவ்வப்போது வெறும் காற்றை வாந்தியாய் எடுத்துக் கொண்டிருந்தேன். இந்த தில்லி நகரம் எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. குவியல் குவியலாய் மக்கள். எங்கு பார்த்தாலும் காவிக் கறை. எப்போதும் எதையாவது குதப்பும் சொத்தைப் பல் மனிதர்கள். வத்திப்பெட்டி வசிப்பிடங்கள். மிக மோசமான உணவகங்கள். என மத்திய வர்க்கம் புழங்கும் தில்லி நினைத்துப் பார்க்கவே பயமாய் இருந்தது. இந்தியாவின் சொர்க்கம் தென்னிந்தியாதான் என தோன்றிற்று. போதாதென்று இம்மாதிரியான அனுபவங்கள் வேறு. எனக்கு பைத்தியம் பிடித்து விடுவது போலிருந்து.

விஜி சற்று நிதானமாகி இருந்தான்.” நம்ம பேக் பஸ்லதான் மச்சான் இருக்கும்.. எவன் எடுக்க போரான்..கவுருமெண்ட் பஸ் தான நாம வந்தது… பஸ் ஸ்டாண்ல இருக்க கவுண்டர்ல எடுத்து வச்சிருப்பானுங்க.. போய் எடுத்துக்கலாம்..” என பதில் எதிர்பாராது அவனுக்கு அவனே பேசிக் கொண்டிருந்தான்.
இங்கு எல்லா பேருந்துகளுமே ஒரே மாதிரி இருந்து தொலைகிறது. இந்தி எழுத்துக்களை இருவருமே வாழ்நாளில் முதல் முறையாய் பார்ப்பதால் என்ன எழுதி இருக்கிறதென்றும் தெரியவில்லை. நாங்கள் வந்த பேருந்தின் எண்ணும் தெரியாது. இறங்கும்போது பின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த மஞ்சள் ஸ்டிக்கர் ஒன்றை நினைவில் வைத்துக் கொண்டு இறங்கினேன். டீ குடித்து விட்டு திரும்பி பார்க்கையில் மஞ்சள் ஸ்டிக்கர் உணவகத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்ததைப் பார்த்து பதபதைத்துதான் இவனை அழைத்துக் கொண்டு வெளியில் ஓடினேன். அதற்குள் அந்த பேருந்து பிரதான சாலையில் மாயமாகி இருந்தது.

ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். நேற்றைய இரவு தந்த பயங்கர அனுபவத்தை விட இது மோசமில்லைதான். வினோதக் காற்றின் வாசத்தை சிகரெட் புகை இடம்பெயர்க்கத் துவங்கியது.

.........மேலும்

Tuesday, May 25, 2010

வதை


நான் சகலத்தையும் வெறுக்கிறேன்
போலவே சகலமும்
பிறரை நம்ப வைத்துக்
கழுத்தறுக்கிறேன்
போலவே பிறரும்
எவருடனும் பேசப் பிடிப்பதில்லை
போலவே எவரும்

அருவியிலிருந்து குதித்து விடலாம்
விலங்கின் இரையாகிவிடலாம்
நீரில் அல்லது தீயில் பாயலாம்
மிகப் பழைய காதலியின்
மிகமிகப் பழகிய உதடுகளை
கவ்விக் கொள்ளலாம்

திடீர் உறைபனியில்
சிக்குண்ட தடித்த மீனின்
தலையை வெட்டுகிறேன்
இரு துண்
டாகிறது

Friday, May 21, 2010

புவி இயக்கம்


இரு பெரும்
மலைத் துண்டுகளுக்கு
இடைப்பட்ட பிளவில்
பயணிக்கிறது
செங்கொன்றைப் பூ

தடித்த வேர்களிடமோ
தழை விரித்துப்
படர்ந்திருக்கும்
கிளைகளிடமோ
சிக்காது
நிலம் தொடும்
துல்லிய கணத்தில்
மலைகள்
நகரத் துவங்கும்
சமவெளிகள் சிதையும்
பள்ளத்தாக்குகள்
விழித்துக் கொள்ளும்

நெஞ்சு பதபதைக்க
பார்த்துக் கொண்டிருக்கும்
கடவுள்
மீண்டுமொரு சிகரெட்டைப்
பற்ற வைத்துக் கொள்கிறார்.

Friday, May 14, 2010

தாலாட்டு


குட்டிப் பையன்
தூங்க வேண்டும்
தொலைக்காட்சியை இருளில் மூழ்கடித்தாயிற்று
அலைபேசி எப்போதும் போல் அமைதியில்
முரட்டுத்தனமான நண்பர்களுக்கு பயந்து
அழைப்பு மணியையும் துண்டித்தாயிற்று
கோடை துவங்கிவிட்டதால்
குளிரூட்டியின் சபதத்தை
எதுவும் செய்ய இயலாது

மெல்லப் பாடுகிறேன்
மோசமான குரல்தாமென்றாலும்
தொடர்ச்சியாய் இப்பாடல்களைப் பாடி
இனிமையைப் பயிற்சியால்
நிறைத்திருக்கிறேன்
கற்பூர பொம்மையொன்று
ஆயர்பாடி மாளிகையில்
வரம் தந்த சாமிக்கு
ஒரு தெய்வம் தந்த பூவே
எழுதுகிறேன் ஒரு கடிதம்

திராட்சைக் கண்கள் ஒளிர
மென்னிருளில் சப்தமாய் கத்துகிறான்

என்னைப் புறந்தள்ளி
அவனுக்கு பிடித்த விளம்பரப் பாடல்களை
பாடுகிறாள்/ சொல்லத் துவங்குகிறாள்
ப னி துளி பனித்துளி
டூடுங் டூடுங்க் டொக்கோமோ
மிச்சம் இருக்க மூணு ரூபாய்ல ஐஸ்கிரீஸ்
சாப்டேன் ஆஆ
என்றதும்
சிரித்துச் சம நிலைக்கு
வருகிறான்
கடைசி அஸ்திரத்தை
லேசாய் சிரித்தபடியே
பிரயோகிக்கத் துவங்குகிறாள்
அம்மி அம்மி அம்மி மிதிச்சி

Tuesday, May 11, 2010

தஸ்தாயெவ்ஸ்கியின் இரண்டு வாசகர்கள்


வெறுமை வேண்டியும்
துக்க மன நிலைக்குமாய்
தஸ்தாயெவ்ஸ்கியுடன்
படுக்கையில் சரிகிறாள்
மொஹல் மெத்தையின்
வெல்வெட் வழவழப்பில்
விரைந்து பற்றவாரம்பிக்கிறது தீ

அகிரா,பிரஸ்ஸோன் மற்றும்
மொராக்கோ சகோதரர்களிடம்
சிக்கியிராத
தஸ்தாயெவ்ஸ்கியின் ஆன்மாவை
ஒளிப்படச் சுருளில்
பொதிந்துவைக்க
குளிர் விரவிய
தெருக்களில் மிதந்தபடி
விரல்சுடும் சிகரெட்டை
காற்றில் சுண்டி விடுகிறான்
பொறிகளை
சிதறவிட்டு
மெல்ல அணைகிறது
கங்கு

பின்பொரு
சலித்த கோடை இரவில்
மூத்திர இருள் சந்தில்
தஸ்தாயெவ்ஸ்கியை
கொல்வது குறித்த
சதியாலோசனையைத்
துவங்குகிறார்கள்

இதே போன்றதொரு
குளிர் இரவில்
இருபக்கமும் மரப்பிடிகொண்ட
ரம்பத்தை
பின்பும் முன்புமாய்
இழுத்து
தஸ்தாயெவ்ஸ்கியின்
தலையைக் கொய்ததை
நினைத்துக் கொள்கிறார்கள்

உட்கார்ந்தும் நின்றுமாய்
மூத்திரம் கழித்து
எதிரெதிர் திசைகளில்
திரும்புகிறார்கள்.

Wednesday, May 5, 2010

பனி


வசந்தம் முழுதும் விழித்திருக்க
பனி முடியும்வரை
தூங்கிக்
கொண்டிருந்தேன்

வசந்தத்தின் துவக்கத்தை
அதிகாலைப் பறவை
அறிவித்துச்
சென்ற பின்புதாம்
கருணை மரங்கள்
கடைசியாய் பனியுதிர்த்திருக்க
வேண்டும்

மொத்தமாய் சுருட்டிக் கொண்டு
பூட்டியிருந்த
மரக்கதவிடுக்கின்வழி
நுழைந்த பனி
கடந்தேயாக வேண்டியதற்காக
என் முன் அசையாது
காத்திருக்கிறது
வாழ்வைப் போலவும்
சாவைப் போலவும்

Featured Post

test

 test