சாம் தான் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் துவக்கம்.அவன் அதை என்னிடம் தனியாய் சொல்லியிருக்கலாம்.சாம் நாங்கள் வழக்கமாய் சந்திக்குமிடமான கரிபு கஃபே வில் பணிபுரிபவன்.நேற்று நானும், இவளும் எங்களின் வழக்கமான இருக்கையில் அமர்ந்தபடி பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.அடுத்த மாதம் இந்த பறவைகள் போய்விடுமே என இப்போதிலிருந்தே கவலைப்பட ஆரம்பித்தவளைத் தேற்றிக் கொண்டிருந்தேன். சாம் ஆப்பிரிக்க தேசத்தவன். எனக்கான குழம்பியைக் கொடுத்தபடி அந்தச் செய்தியைச் சொன்னான்.கடந்த நான்கு நாட்களாகத் தமிழ்முகங்கள் கொண்ட சிலர் மாலைவேளையில் இப்பகுதியை சுற்றிச் சுற்றி வருகிறார்களாம்.எனக்கென்னமோ அவர்கள் உங்களைத் தேடித்தான் வந்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது என்றான்.இவளின் முகம் இருண்டது.எனக்கும் துணுக்குறலாகத்தான் இருந்தது.நாங்கள் கடந்த ஒரு வாரமாக இந்த இடத்தில் சந்திக்கவில்லை.இவள் அவசரமாகக் கிளம்பினாள். உடன் நானும் கிளம்பி அந்த இடத்திற்குப் போனோம் (எந்த இடமென்று இனிமேல் சொல்லப்போவதில்லை)
"எனக்கு எங்க மச்சம் இருக்குன்னு கூட எழுதிவியா நீ! மானங்கெட்டவனே" கடுமையான வசவாய் இருந்தாலும் பொறுத்துக்கொண்டபடி "நீ! உன் மச்சங்களை என்னிடம் இன்னும் காண்பிக்கவில்லை" என்றேன்.தன்னிரு வளைக் கைகளைக் கொண்டு கழுத்தை நெறிக்க முயற்சித்துப் பின் வாங்கினாள்.உரையாடலினி பதிவு எழுதியதால் வந்த வினை இது.நெடுநாள் இவளைப் பற்றி எழுதிவிட வேண்டும் என்கிற தவிப்பு இருந்து கொண்டே இருந்தது.அறுத்தாறு பக்கங்களில் இவளை எழுதி அய்ந்து பக்கங்களுக்குச் சுருக்கினேன்.அந்த பதிவை எழுதிக்கொண்டிருந்த நாட்களில் மிகுந்த மன நெருக்கடிக்குள்ளானேன்.எந்த வார்த்தை கொண்டும் அவளைச் சரியாய் எழுதிவிட முடியவில்லை.எழுதி முடித்தும் கூட நான் சொல்ல நினைத்ததில் பாதியைக் கூட சொல்ல முடியவில்லை என்கிற போதாமையும் ஆதங்கமும் இருந்தது.ஆனாலும் அந்த உரையாடலினி பிம்பம் என்னைப் படிக்கும் சொற்ப வாசகர்களிடத்தில் ஒரு வித கனவுத் தன்மையை ஏற்படுத்தி விட்டிருந்தது.ஒருவேளை அவர்களில் சிலர் இவளைப் பார்க்க கரிபு கஃபே வந்திருக்கலாம் என அவள் சந்தேகித்தாள்.
அவள் மிகுந்த கோபத்திலிருந்தாள்.அவளின் இருபெருகருநிற விழிகளில் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள்.மிகுந்த அலைக்கழிப்பில் இதற்கும் அதற்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.எனக்கு புல்வெளியில் அலையும் முயல் நினைவில் வந்து போனது.எப்படிச் சமாதானப்படுத்துவதெனத் தெரியவில்லை. பெண்களைச் சமாதானப்படுத்த முத்தத்தை விட சிறந்த முறை எதுவுமில்லை. ஆனால் இவள் சீதையின் கடைசி வாரிசு.தொடவும் முடியாது. அவளை என் வசப்படுத்திய என் கவிதைகளைச் சொல்ல முடிவெடுத்தேன். விழிக்கையில் சிரிக்கும் இருபெருகரு நிற விழிகள் என முடியும் கவிதையைச் சொல்ல ஆரம்பித்தேன் (இந்த வரிக்காக முன்பு ஒரு முறை பெரிய சண்டை ஒன்று இருவருக்கும் வந்தது.இந்த வரி உனக்கானது எனச் சொல்லியபோது அதிர்ந்தாள்."விழிக்கையில் சிரிக்கும் என்றால் என்னோடு படுக்கும் எண்ணமா உனக்கு?" எனக் கத்தினாள்."நீ அருவெருப்பானவன்,அசிங்கம் பிடிச்சவன், "எனக் கத்தி மிகப்பெரிய ரகளையை நிகழ்த்தினாள்.) வெகுசனப் பத்திரிக்கைகள், வெகு சன சினிமாக்கள், சாமியார்கள், மத போதகர்கள், ஒழுக்க சீலர்கள், அரசியல்வாதிகள் இன்ன பிற நாதாறிகளால் சீர்கெட்ட தமிழ்சூழலின் தாக்கங்கள் இவளிடம் அதிகமாகவே இருந்தன.எதைக் கொண்டும் என்னால் அவற்றை மாற்றமுடியவில்லை.
தலையை இதற்கும் அதற்குமாய் அசைத்தபடி "அண்டப் புளுகண்டா நீ ! எனக் கத்தினாள்."நான் உன் விரலைக் கூட தொட்டதில்லை தனியாய் தள்ளிட்டு போய் முத்தம் கொடுத்தனாம் அதுவும் பார்ல அய்யோஓஓஒ" எனக் கத்தினாள். அவளுக்கு புனைவெழுத்தின் சாத்தியங்களை விளக்க தொண்டையைக் கனைத்தேன்.நான் பேச வாயெடுப்பதை கண்ட அவள் "போதும் நிறுத்து "என சைகையாலே தடுத்தாள்.பின் எனக்காய் முதுகு காட்டி அமர்ந்தாள்.எல்லாக் கதவுகளும் மூடிக்கொண்டதைப் போல் இருந்தது.சற்று நேரம் மெளனத்துடன் உரையாடிவிட்டுச் சொல்ல ஆரம்பித்தேன்.
வண்ணங்களுதிர்த்த
என் நிழல்
கண்கள் சுருக்கி
கொட்டாவி விடுகிறது.
தலைக்கு மேல் சிறகடிக்கும்
மென்சிறு பட்சிகளை
விழியசையாது
வெறிக்கிறது.
சூழும் கருமைகளை
கனவிக் கலவுகிறது.
……….
பச்சை நிறத்திற்கு
சமீபமான எதுவாக
இருந்தாலும்
பரவாயில்லை
என நினைத்துக் கொள்கிறது.
சொல்லி முடித்த பத்து நிமிடம் கழித்து எனக்காய் திரும்பினாள்."மறுபடி சொல்லு" என்றாள்.சொன்னேன்."சூழும் கருமை நல்லாருக்கில்ல..ஆனா இந்த சமீபமான எதுவாக இருந்தாலும் ங்கிற காம்ப்ரமைஸ் இருக்கில்ல அது செம கொடுமடா " என்றாள். எனக்கு நிம்மதியாய் இருந்தது.அதே உற்சாகத்தில் இன்னொன்றைச் சொல்ல ஆரம்பித்தேன்.
நேற்றிரவுஅவள் இதைத் திரும்பத் திரும்பக் கேட்டாள்.சொல்லிக் கொண்டிருந்தேன். எனக்காய் நெருங்கி வந்து என் கண்களை வெகு சமீபமாய் பார்த்துச் சொன்னாள்."உன்னை என்னால காதலிக்க முடியாது...இனிமேலும் நீ திருந்தப் போறதில்லைன்னு தெரிஞ்சு போச்சு...இன்னிக்கோட உனக்கு முற்றும்."எனச் சொல்லியபடி எழுந்தாள்.நான் பதட்டமானேன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டபடி பிதற்ற ஆரம்பித்தேன்.
தாமதமாய் திரும்புகையில்தாம்
நிகழ்ந்திருக்க வேண்டும்.
ஒருவேளை
நினைவுப்பாதைகளின்
குழம்பிய வளைவுகளில்
தொலைந்து விட்டிருக்கலாம்.
இரவின் மீதங்கள்
உதிர்ந்திடாத
அதிகாலையில்
புறப்பட்டேன்.
உன் கீச்சுக் குரல்
பதுங்கியிருக்கும்
வளைவுப்
பள்ளத்தாக்குகளுக்கு..
உன் மென் மென்னியைகண்களை இறுக்க மூடி இக்கவிதையை சத்தமாய் சொன்னபோது அவள் என்னை பயத்தோடு பார்க்க ஆரம்பித்தாள்."ப்ளீஸ் !என்ன கரெக்ட் பண்ண ட்ரை பண்ணாதே.இயல்பா இரு" என்றாள்.இதை அவள் சொல்லும்போது இரு விழிகளிலும் கண்ணீர் தேங்கியது. எந்த நிமிடத்திலும் உடைந்து விடுவாளெனத் தோன்றியது.என்னால் இயல்பாய் இருக்க முடியவில்லை.எந்த ஒன்றையும் மிக அதிகபட்சமாய் துய்க்கும் குரூர மனதினைக் கொண்டதினால் அவளின் மிக அதிகபட்சம் எதுவோ அதை எனதாக்கிக் கொள்ளும் வேகமெனக்கு அந்தப் பொழுதில் இருந்தது.அவள் தீர்மானமாய் சொன்னாள்."இனி என்னால் உன்னுடன் பேசவோ முன்பு போல பழகவோ முடியாது.இத இதோட விட்டுடு !"என்றபடி என் கண்ணிலிருந்து மெல்ல மறைய ஆரம்பித்தாள்.அவளின் மங்கும் பிரகாசம் பாத்தபடி இப்படிக் கத்தினேன்.
நெறித்தே விடுவது.
உன் மயிர்காடுகளில்
தொலைந்தே விடுவது.
உன்னிதழ் இரத்தத்தை
சுவைத்தே விடுவது.
உன்னுடலின்
இடுக்கு
சிடுக்கு
குறுக்கு
நெடுக்கு
வெடிப்பு
பிளவு
மறைவு
உச்சி
ஆழம்
பைத்தியம்.
எதைக் கொண்டாவது
என்னை அழி.
துரத்தியடி.
நிராகரி.
காறியுமிழ்.
சொற்களின் வன்மம் கொண்டு
கருக்கு.
மிதி.
புதை.
மீண்டும் எழாமலென்னை
அழித்தொழி.
.................
வெறுமனே விலகாதே
.......................
உன் விலகல்
என் பைத்தியம்.