Showing posts with label எனக்கு மனிதர்களைப் பிடிக்காது. Show all posts
Showing posts with label எனக்கு மனிதர்களைப் பிடிக்காது. Show all posts

Thursday, November 9, 2017

எனக்கு மனிதர்களைப் பிடிக்காது - கிண்டில் வெளியீடு

https://www.amazon.in/dp/B0778TCFP4



எனக்கு மனிதர்களைப் பிடிக்காது’ கவிதைத் தொகுப்பை கிண்டிலில் பதிவேற்றி இருக்கிறேன். ஏற்கனவே என் வலைப் பக்கத்தில்  PDF ஆகத் தரவிறக்கிக் கொள்ளும்படி வைத்திருந்தேன். அமேஸான் விதிமுறைகளின் படி அதை நீக்கி இருக்கிறேன். இது ஒரு சோதனை முயற்சிதான். வெளியிடுகையில் இலவசமாகத் தரும் வசதி அமேசானில் இல்லை. எனவே  அதன் ஆரம்ப விலையான 49 ரூ. இது சரிவரும் எனத் தோன்றினால் சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு என அடுத்தடுத்து கொண்டு வருவேன். இந்த எண்ணம் தோன்ற மாமல்லனே காரணம். அவருக்கு என் நன்றி. 

கவிதைகள் மலிந்த இக்காலகட்டத்தில் கவிதைத் தொகுப்பை அச்சில் வெளிக் கொண்டு வரக் கூச்சமாக இருந்தது. எனவே மூன்றாண்டுகளுக்கு முன்பு ’எனக்கு மனிதர்களைப் பிடிக்காது’ தொகுப்பை பிடிஎப் ஆக மாற்றி வலையில் ஏற்றினேன். இப்போது வாசிக்கவும் நன்றாக இருப்பது போல் தோன்றவே இந்த கிண்டில் வெளியீடு. மேலும் எப்படித்தான் இருக்கிறது பார்ப்போமே என்கிற உடனடி ஆவலும் இந்த வெளியீட்டுக்கான இன்னொரு காரணமாக இருக்கலாம்.

உரையாடலினி தொகுப்பிற்குப் பிறகு எழுதிய கதைகளை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். கூகுல் பஸ் காலகட்டத்திலிருந்து எழுதிக் குவித்த சினிமா விமர்சனங்களையும் அலுவலக வெட்டி நேரத்தில் தொகுக்க வேண்டும். இப்படியாக இணையத்தில் எழுதிக் குவித்தவைகளை தனித் தனி தொகுப்புகளாக கிண்டிலில் கொண்டு வரப் பார்க்கலாம். நிச்சயமாக இத்தொகுப்புகளில் ஓசிதானே என்கிற அசட்டை மனப்பான்மை இராது. ஒரு கறார் ஆசாமியின் உயிர்ப்புதான் என்னை இன்னும் இயங்க வைக்கிறது. அந்த நேர்த்தி தொகுப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.

பொதுவாக என்னுடைய ஒரு நாள் என்பது வழமையைத் தாண்டி எதுவுமே நிகழாத ஒன்றாகத்தான் இருக்கும். அல்லது அப்படி நான் வைத்துக் கொள்வேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவ்வளவு பரபரப்பு. மனிதர்களாலும் நிகழ்வுகளாலும் நிறைந்த நாட்கள் இவை. மனநிலை வாய்க்கும்போது ஒவ்வொரு பரபரப்பையும் விலாவரியாக எழுதப் பார்க்கிறேன்.

Wednesday, January 15, 2014

எனக்கு மனிதர்களைப் பிடிக்காது - கவிதைத் தொகுப்பு - அய்யனார் விஸ்வநாத்






இக்கவிதைகள் தனிமையின் இசை மற்றும் நானிலும் நுழையும் வெளிச்சம் கவிதைத் தொகுப்புகளிற்குப் பிறகு எழுதப்பட்டவை. 2010 ஆம் வருடத்திலிருந்து  2013 வரைக்குமான கவிதைகள் (இப்படிச் சொல்வது சரியா எனத் தெரியவில்லை. கவிதை மனதில் விழுவது காலத்திற்கப்பாற்பட்டது இல்லையா?) ஆனால் இவை இந்த வருட இடைவெளிகளில்தான் எழுதப்பட்டன. கவிதை குறித்த பெரும் சலிப்புகள் மிகுந்த காலத்தில் இவை மின் தொகுப்பாக வந்திருக்க வேண்டாம்தான், ஆனால் ஒரு எதிர்ப்பைக் காண்பிக்க வேண்டிய அழுத்தத்தில் இவை இந்த வடிவத்தைப் பெறுகின்றன. இணையத்தில் எழுத ஆரம்பித்த புதிதில் கவிஞன் என்கிற பிரம்மைகள் எனக்கிருந்தன, காலப்போக்கில் அந்த அசட்டு பிம்பம் தன்னை அழித்துக் கொண்டது. எனக்கு எழுத வருகிறது என்பதைத் தாண்டி இக்காலகட்டத்தில் வேறெந்த எண்ணமும் இல்லை.

இத் தொகுப்பில் டேபிள் டென்னிஸ் என்கிற தலைப்பில் எழுதப்பட்ட கவிதைகள் யாவும் கோபி கிருஷ்ணன் பாதிப்பில் எழுதப்பட்டவை. இக்கவிதைகளுக்கும் அவரின் படைப்புலகத்திற்கும் பெரிய தொடர்பு ஒன்றும் இல்லையென்றாலும் கூட இவற்றை எழுதும் மனநிலையை கோபி கிருஷ்ணனின் படைப்புகளே தந்தன. மற்றபடி இச்சிறு தொகுப்பிலுள்ள கவிதைகள் யாவும் எனக்குப் பிடித்தமானவை. பிடிக்காதவற்றைச் சேர்க்கவில்லை. மொத்த கவிதைகளையும் வாசிக்கும்போது அதில் பருவமும் கால நிலையும் இணைப்புச் சங்கிலியாக / பின் இயங்கும் மனநிலைக் காரணியாக இருந்ததைப் போலத் தோன்றியது எனவே வஸந்தம், வேனில், பனி, டேபிள் டென்னிஸ் என்கிற உப தலைப்புகளில் இக் கவிதைகளைத் தொகுத்திருக்கிறேன். இப்பாலையில் மழை மிகக் குறைவென்பதால் மழை இடம்பெறவில்லை அல்லது மழை மனநிலை வாய்க்கவில்லை.

மனிதர்களை எனக்குப் பிடிக்காது எனத் தலைப்பு வைத்துவிட்டு யாருக்காவது சமர்பிப்பது அபத்தம் இல்லையா? ஆனாலும் டேபிள் டென்னிஸ் கவிதைகளை மட்டும் கோபிகிருஷ்ணனுக்கு சமர்ப்பிக்கிறேன். மற்றவை யாவும் எனக்கே எனக்கு மட்டும்தான்.


Featured Post

test

 test