
கழுத்து வரைக்கும் இறங்கிப் போய்விட்டேன். மேற்பகுதி குளிராகவும் ஆழத்தில் கதகதப்பாகவும் ஏரி ததும்பிக் கொண்டிருந்தது. ஒரே சமயத்தில் குளிரையும் கதகதப்பையும் உணர்ந்து கொண்டிருந்தேன். இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் தலை மூழ்கும். பத்து நிமிடம் மூச்சடக்கினால் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு விடலாம். மெல்ல நகர்ந்தேன். முகம் மூழ்கியது. இன்னும் ஒரு அடி நகர்ந்தேன். தலையும் மூழ்கியது. ஐந்து நிமிடங்கள் கூட இருக்காது. மூச்சு வெடித்தது. படாரென நீரிலிருந்து மேலெழும்பினேன். மூச்சு இறைத்தது. கரைக்காய் நீந்தி வந்தேன். இயலாமையும் ஏமாற்றமும் ஒரே நேரத்தில் கொன்றது. வெறுப்பாய் கரையில் அமர்ந்து கொண்டேன். செத்துப் போகும் துணிச்சல் எனக்குக் கிடையாது என்பதை நினைக்க நினைக்க ஆத்திரம் பொங்கியது. நீர்கோழிகள் விழித்துக் கொண்டு மேற்பரப்பில் மேய ஆரம்பித்தன. அவ்வப்போது அவை தலையை நீருக்குள் விட்டு விட்டு வெளிப்பட்டன. விழிப்பு வந்த அதிகாலையில் செத்துப் போகும் எண்ணம் உதித்தது. போதையின் தீவிரம் சற்றும் குறையாமல் இருக்கவே விடுவிடுவெனக் கிளம்பி வண்டியை எடுத்துக் கொண்டு ஏரி வந்து சேர்ந்தேன். அரை மணி நேரம் கரையில் அமர்ந்து யோசித்துவிட்டு, வாழ்வதற்கான எந்த ஒரு பிடிப்பும் இல்லாததை முழுமையாய் உணர்ந்து கொண்டுதான் நீரில் இறங்கினேன். ஆனால் இப்போது ஒரு கோழையைப் போல் வாழ்வை நோக்கி ஓடுகிறேன்.
அவமானமாக இருந்தது. தொடர்ந்து ஏரியைப் பார்க்க எரிச்சலாய் வந்தது. எழுந்து சரிவை நோக்கி நடந்தேன். நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஆடைகளை கழற்றி எறிந்துவிட்டு வேறு உடைகளை அணிந்து கொண்டேன். ஆத்திரத்தோடே வண்டியைக் கிளப்பி ஸ்டேண்டிற்காய் விரட்டினேன். ஸ்டேண்டில் வண்டியைப் போட்டுவிட்டு பக்கவாட்டுத் திரைகளை அவிழ்த்து விட்டு பின் சீட்டில் குறுகிப் படுத்துக் கொண்டேன். அப்படியே தூங்கியும் விட்டேன்.
யாரோ வெகுநேரமாக எழுப்புவதை உணர்ந்தேன். கண் திறந்து புதிராய் பார்த்தேன். சக ஆட்டோ ஸ்டேண்ட் நண்பர்தான். “உன்ன தேடி யாரோ வந்துகிறாங்கப்பா” என்றார். ஆட்டோவிலிருந்து இறங்கினேன். அந்தப் பெண் நின்று கொண்டிருந்தார். துணுக்குறலாய் இருந்தது. வாங்க என்றேன். ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டார். வண்டியைக் கிளப்பி சற்று தூரம் வந்துவிட்டு நிறுத்தினேன். என்ன என்பதுபோல் கண்ணாடியில் அவர் முகம் பார்த்தேன். தலையைக் குனிந்து கொண்டார்.
“நீங்க எங்களோடவே வந்து தங்கிடுங்க” என்றார்.
“இல்லைங்க பரவா இல்ல எனக்கு இங்க வீடு இருக்கு” என்றேன்.
அவர் மெதுவாய் தலைதூக்கி
“தனியா இருக்க பயமா இருக்குங்க. அப்பாவோ அக்காங்களோ என்னோட இருக்க முடியாது. எனக்கு செத்துப் போவ கூட பயமா இருக்குங்க “என உடைந்து அழுதார்.
எந்தக் கண்ணியோ அறுபட்டது. மொத்தமாய் உடைந்தேன்
“எனக்கும் சாவ பயம்மா இருக்குமா” எனக் கத்திக் கொண்டே அழுதேன்.
அவர் அவசரமாய் கண்களைத் துடைத்துக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கினார். முன் சீட்டிற்காய் வந்து அழுதுகொண்டிருந்த என்னை மார்போடு அணைத்துக் கொண்டார்.
ஓவியம்: பிகாஸோ
முற்றும்