Wednesday, May 31, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினெட்டு


அங்கையற்கன்னியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏன் அழுகிறோம் என்பதும் அவளுக்குப் பிடிபடவில்லை. கண்களிலிருந்து நீர் வழிந்தபடியும் இதயம் விம்மியபடியும் இருந்தது. சங்கமேஸ்வரன் அவளை ஆறுதல் படுத்த முயன்று தோற்றான். பொது இடமாக இருக்கிறது, அவளை அணைத்துக் கொள்ளவும் முடியவில்லை. உள்ளங்கையை அழுத்தி அவளை சமாதானப்படுத்த முயன்றான். அவன் தொடத் தொட அவள் மேலும் மேலும் உடைந்து கொண்டிருந்தாள். அருகில் இருந்த சிமெண்ட் திண்டில் அவளை அமர வைத்தான். அவசரமாய் ஓடிப்போய், தியான அறைக்கு சமீபமாய் வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்த தண்ணீரை ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டு வந்து குடிக்க வைத்தான். அவனும் நெகிழ்ந்திருந்தான். அங்கை சற்று நிதானமானாள். தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். எழுந்து நின்று, வாங்க போகலாம் என அவனை அழைத்தாள். எங்கு போவதென இருவருக்குமேத் தெரியவில்லை. சங்கமேஸ்வரன் எங்கு எனவும் கேட்கவில்லை.  ஆசிரமத்திலிருந்து வெளியே வந்தார்கள்.

அவனிடம் பைக் இருந்தது. இவள் ஏறி இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்து கொண்டு அவனை இறுகக் கட்டிக் கொண்டாள். சங்கமேஸ்வரனுக்கு பித்து கூடியது. இந்த வாசனை மலர்ச்செல்வியின் வாசனை. வண்டியை அதன் போக்கில் விட்டான். வண்டி அரசுக் கல்லூரி தாண்டி இடது பக்கம் உள்ளே திரும்பியது. மண் சாலையில் வெயில் தகித்தது. கருங்கல் சாலையில் வண்டி துள்ளித் துள்ளி நகர்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு துள்ளலுக்கும் அங்கை அவனை இன்னும் நெருங்கினாள். சமுத்திர ஏரிக்கரை வந்திருந்தது. இருபுறமும்  மரங்களடர்ந்த ஒற்றையடிப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அடிபருத்து கிளைகள் விரித்துப் படர்ந்திருந்த ஓர் அரசமரத்தடியின் நிழலில் வண்டியை நிறுத்தினான். வெயில் பசும் இலைகளில் பட்டு மினுமினுத்துக் கொண்டிருந்தது. அரசம் பழங்கள் மண்ணில் உதிர்ந்து கிடந்தன. பறவைகளின் ஒலி ஆர்ப்பரித்தது. நெடுந்தொலைவிற்கு யாருமில்லை. அந்த ஒற்றையடிப்பாதையின்  முடிவில் சில ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. ஓரிரு மனிதத் தலைகள் தென்பட்டன.

அங்கை வண்டியை விட்டு இறங்கியதும் சங்கமேஸ்வரனை முன்புறமாய் தழுவிக் கொண்டாள். ஆறுதலாய் அவளை விலக்கி மரத்தின் பின்புறம் அழைத்துப் போனான். தரையில் கிடந்த சிறு சிறு முட்களை விலக்கி மண்ணில் அமர்ந்தான். அங்கை அவன் மடியில் படுத்து வயிறைக் கட்டிக் கொண்டாள். என்ன நடக்கிறதென்று அவனுக்குப் புரியவில்லை. யார் இந்தப் பெண், ஏன் இப்படித் துவண்டு தன் மீது விழுகிறாள் என்பதெல்லாம் பிடிபடாமல் இருந்தது. ஒரு வேளை.. ஒருவேளை.. மலர்செல்வியின் ஆன்மா இவளிற்குள் புகுந்திருக்கிறதோ, இதெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா, இதென்ன சுத்தப் பைத்தியக்காரத்தனம் என மனதிற்குள் புலம்பிக் கொண்டான்.

அங்கை சற்று நிதானமானதும். அவன் மெல்லக் கேட்டான்

”உன் பேர் என்ன?”

அந்தக் கேள்வி அங்கையின் உலகத்தை சடுதியில் தரைக்கிழுத்தது. மயக்கமும் கிறக்குமாய்  வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளின் இயல்பு தடுமாறிப் போனது.

”என்ன.. என்ன கேட்ட?”

”உன் பே..ரு என்ன..?”

”அப்ப என்ன உனக்கு தெரியாதா?”

”நீ மலர்..” மென்று முழுங்கினான்

”மலரும் இல்ல கொடியும் இல்ல, நான் அங்கை. அங்கையற்கன்னி.
நான் நினைச்சேன் உன்ன பாத்த ஒடனே எனக்கு என்னலாம் ஆனதோ, அதெல்லாம் உனக்கும் ஆனதுன்னு..”

’அது.. அது’

’அப்ப என்ன பாத்ததும் உனக்கு ஒண்ணும் ஆகலையா, கடவுளே இதென்ன சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ எனச் சொல்லியபடியே அங்கை எழுந்து நின்றாள். அவசரம் அவசரமாக நான் போகனும் என்றாள்.

சங்கமேஸ்வரன் தடுமாறினான்.

”இல்ல இல்ல எனக்கு தெரிஞ்சது.. நீ ....நீ”

”நிறுத்து. போதும் போகலாம்.”

சங்கமேஸ்வரன் கோபமுற்றான்.

”ஏய் என்ன நீயா வந்து மேல உழுந்து பிராண்டுன. இப்ப போறன்ற, என்ன பாத்தா எப்படி தெரியுது..?”

அங்கையின் கண்களில் நீர் தளும்பிற்று. இவன் அவனில்லை. அவன் முகச் சாயல் மட்டும்தான் இவனிடம் இருக்கிறது

தழுதழுப்பாய் அவனிடம் சொன்னாள்.

“எனக்கு சிறு வயதிலிருந்து ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் வருபவனின் முகமும் உன்னுடைய முகமும் ஒரே போல இருந்தது. நீயும் நானும் பல யுகங்களாய் காதலர்கள் என நினைத்துக் கொண்டேன். என் இத்தனைக் காத்திருப்பிற்குப் பிறகு, துன்பங்களிற்குப் பிறகு நீ என்னிடம் வந்து சேர்ந்துவிட்டதாய் உணர்ந்தேன். எனவே உன்னிடம் தஞ்சமடைந்தேன்” என்றாள்.

சங்கமேஸ்வரன் தெளிந்தான். பின்பு குழம்பி நின்று தளும்பிக் கொண்டிருந்த அவளை நெருங்கி ஆதூரமாய் அணைத்துக் கொண்டான். மலர் செல்வியும் அவனும் காதலித்த கதையை சொன்னான். ஒரு நாள் பைக்கிலேயே ஓடிப்போனதை, மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவில் அவள் காணாமல் போனதை, இறுதியில் அவள் உடலை ஒரு புள்ளி மான் சுமந்து வந்ததை என எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

”புள்ளி மானா?” அங்கை திகைத்தாள்

”ஆமா புள்ளிமான் தான் ”

”எனக்கு வரும் கனவில் முகம் மட்டும்தான் உன்னைப் போல இருக்கும்.. உடல் புள்ளிமான் போலதான் இருக்கும்”

”அப்ப இதெல்லாமே அந்தப் புள்ளி மானின் விளையாட்டுகள்தானா?”

இருவருமே ஒரே நேரத்தில் சொல்லிச் சப்தமாய் சிரித்தார்கள்.

சங்கமேஸ்வரன் அங்கையை முழுக் காதலோடும் யுகாந்திர தொடர்புகளோடுமாய் அணைத்து உதடுகளில் முத்தமிட்டான்.
அங்கை அவனை மூர்க்கமாய் அணைத்துக் கீழே தள்ளி அவன் மீது ஆகாயத் தாமரையாய் படர்ந்தாள்.

அதுவரை சுட்டெரித்துக் கொண்டிருந்த வெயில் மங்க ஆரம்பித்தது. அங்கை அவன் உதடுகளைத் திறந்து உள்ளே நுழைந்து கொண்டிருக்கையில் மொத்தப் பகுதியும் நடுநடுங்குமளவிற்கு அந்தக் கோடையின் முதல் இடி சப்தம் கேட்டது. சங்கமேஸ்வரன் திடுக்கிட்டு மேலே படர்ந்திருந்தவளை விலக்கிப் பார்த்தான். மேகங்கள் அடர்ந்திருந்தன. காற்றில் குளுமையும் சீற்றமும் கூடியிருந்தது.

“அங்கை மழை வரும் போல இருக்கு வா கிளம்பலாம்” என்றான்.

அவள் கோபமுற்று

“மழ வர்ரது நமக்காகத்தான் இதுகூடவா புரியல?”

 என அவன் மீது பாய்ந்தாள்.

சங்கமேஸ்வரன் புன்னைகைத்து தன்னை அவளிடம் ஒப்படைத்தான்.

மழை தொடங்கியது.

அந்த மழை, இடியும் மின்னலும் காற்றுமாய் இருந்தது. சுழன்று சுழன்று அடித்தக் காற்றில் நீர்த்துளிகள் நாற்புறமும் சிதறின. அங்கையின் புடவையைக் காற்றே அவிழ்த்திருந்தது. சங்கமேஸ்வரன் அரை உடம்போடு அவளுடன் புரண்டு கொண்டிருந்தான். மழைச் சீற்றமாய் உயர்ந்தது. ஆட்கள் வருவார்கள் என்கிற அச்சமும் அவர்களை விட்டு அகன்றிருந்தது.  ஏரிச்சரிவிலிருந்து நீர் வெள்ளமாய் வழிந்து அவர்களின் உடல்களின் மீது ஏறிப் பாய்ந்தது. உடன் அது முற்செடிகளையும் காய்ந்து ஒடிந்து கீழே கிடந்த சிறு சிறு கிளைகளையும்  கொண்டுவந்து இவர்களிடம் சேர்த்துவிட்டு உற்சாகமாய் அகன்றது. மயக்கமும் பித்தும் கூடி சங்கமேஸ்வரன் அவளிற்குள் இறங்கிக் கொண்டிருந்தான்.  அவர்களின் கலவிக்கு இடையில் செம்மண் துகற்களும் சிறு சிறு கற்களும் உரசுவதை உணர்ந்தார்கள். மொத்த இயற்கையும் அவர்களோடு கலவியது. அந்திக் கருத்து இருள் மொத்தமாய் அப்பகுதியை மூடியது. மழை மேலும் அடர அடர அப்பகுதி வெள்ளக் காடானது. இருவரும் பிரபஞ்சத்தின் துகள்களாய் மாறியிருந்தனர்.

- மேலும்

Sunday, May 28, 2017

அன்னா கரேனினாவும் அடல்டரியும்


ஸ்லீப் கதை தந்த உந்துதலால் அன்னா கரேனினா நாவலைத் தேடிப் பிடித்து வாசிக்க ஆரம்பித்தேன். இ-வாசிப்பில் இரண்டாயிரம் பக்கங்கள். முதல் ஐம்பது பக்கங்களைக் கடக்கவே சிரமப்பட வேண்டியதாகிற்று. மூடி வைத்துவிட்டு எப்போதும் பயன்படுத்தும் உத்தி யான திரைப்படத்தைத் தேடினேன். நாடுகள் வாரியாக இந்த நாவல் பல முறை திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது தவிர தொலைக்காட்சித் தொடர்கள், மேடை நாடகம், ஓபரா என எல்லா வடிவங்களிலும் அன்னா கரீனா நூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாய் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறாள். நான் பார்த்தது 2012 இல் ’ஜோ ரைட்’ இயக்கத்தில் வெளியான ’ப்ரிட்டிஷ்’ திரைப்படம். 

வழக்கமான க்ளாசிக் நாவல் திரைப்படமாக இல்லாததுதான் இதன் தனித்துவம். முதல் அரைமணி நேரம் இது திரைப்படமா, ஓபரா வா என்கிற சந்தேகம் தோன்றுமளவிற்கு முற்றிலும் புதுமையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. கதை நடக்கும் பின்னணி, காட்சிகள் மாறும் தன்மை எல்லாமும் பிரமாதம். சர்ரியலிஸ்டிக், மேஜிக்கல் என்றெல்லாமும் கூட சொல்லிவிடலாம். அவ்வளவு கச்சிதமான ’ஆர்ட் வொர்க்’  பிரபுக்களின் கதை என்பதால் திரையில் செல்வச் செழிப்பை காண்பிக்க  உடைத் தேர்வுகளில் அத்தனை கவனத்தையும் செலுத்தியிருக்கிறார்கள். நடனக் காட்சிகளில் ஒரு ஓரமாய் வந்து போகும் பெண்ணிற்குக் கூட அவ்வளவு பிரமாதமான உடைகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ருஷ்யப் பின்னணி குறித்து கவலைப்படாமல் அசல் பிரிட்டிஷ் பிரபுக்களின் கதை போன்ற தோற்றத்தை இத் திரைப்படம் ஏற்படுத்துகிறது. 

என் கற்பனையில் சிறு வயதிலிருந்து தருவித்துக் கொண்டிருக்கிற ரஷ்ய நிலப்பரப்பின் காட்சிகள் மற்றும்  மனிதர்களின் முகங்களாக இத் திரைப்படம் இல்லை.  Kostya என்றழைக்கப்படும் Konstantin முகம் மட்டுமே ரஷ்ய முகமாக இருந்தது. அவரின் நிலம், வீடு, சகோதரன் மற்றும்  அறுவடைக் காட்சிகள் மட்டுமே ரஷ்யத் தன்மையைக் கொண்டிருந்தன. ஆனாலும் ஒரு திரைப்படமாக இதை முழுமையான படமென்றுதான் குறிப்பிட வேண்டும்.

அன்னா கரேனினா கதாபாத்திரத்தில் நடித்திருப்பது. பிரிட்டிஷ் நாயகியான Keira Christina Knightley. கெய்ராவிற்கு  இத் திரைப்பட இயக்குனாரான ஜோ ரைட்டுடன் மூன்றாவது படம். அன்னா கரேனினாவிற்கு முன்பு ப்ரைட் அண்ட் ப்ரைஜுடிஸ் மற்றும் அடோண்ட்மெண்ட் படங்களில் சேர்ந்து பணிபுரிந்திருக்கிறார்கள். அடோண்ட்மெண்ட் படம் குறித்து முன்பு எப்போதோ எழுதிய நினைவிருக்கிறது ப்ரைட் அண்ட் ப்ரைஜூடிஸ் படத்தைப் பார்க்கவில்லை.  சில வருடங்களுக்கு முன்பு  வரிசையாக நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களைப் பார்த்தேன். ஜோர்பா த க்ரீக், டின் ட்ரம், ப்ளைண்ட்னஸ், அன்பியரபிள் லைட்னஸ் ஆஃப் பீயிங் போன்ற படங்களை வரிசை யாகப் பார்த்து முடித்தேன். அப்போது நவீன நாவல்களிற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை க்ளாசிக் நாவல்களிற்குத் தரவில்லை. இம்முறை அக்குறையை நிவர்த்தி செய்துவிட வேண்டும்.

அடல்டரி அல்லது திருமணத்திற்கு வெளியிலான உறவு குறித்த படைப்புகள்தாம் எப்போதுமே சாகா வரம் பெற்றவை என்பது என் எண்ணம். உலகின் மிகச் சிறந்த படைப்புகள் பல அடல்டரி யை மையமாகக் கொண்டவை. ஏன் இதே பக்கத்தில் நான் எழுதிக் கொண்டிருக்கும் ஓரிதழ்ப்பூவையும் கூட அடல்டரி என வகைமைப்படுத்த முடியும். காதலுணர்வும் சாகசமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.  ஏதோ ஒன்று குறையும்போது அதில் சுவாரஸ்யம் போய்விடுகிறது. இன்னொருவருக்குச் சொந்தமான ஒன்றைத் திருடுவது என்பது எப்போதுமே ஆழ்மனதைத் திருப்தியடைய வைப்பதுதான்.

இடர்னல், ஸோல்ஃபுல் போன்ற பிதற்றல்களெல்லாம் தான் அடல்டரியின் மிக முக்கியமான குறியீட்டுச் சொற்கள். பெரும்பாலான உறவுகள் இந்த ஸோல்ஃபுல் என்கிற வார்த்தையில்தான் விழுகின்றன. உண்மையிலும்  அப்படித்தான் தோன்றும்.  ஈகோவிலிருந்தும் பொஸசிவ்தன்மையிலிருந்தும் விடுபட்ட சுதந்திர உறவு எனக் கூறியபடியே அடல்டரியும்  மெல்ல  பொறாமையில்தான் போய் முடியும்.  ஒரு கட்டத்தில் எங்கே மற்ற துணை நம்மை விட்டு விலகிவிடுமோ என்கிற பாதுகாப்பற்ற தன்மையும்  தலை தூக்கும். பின்பு இச் சாகஸக் காதலும் தோல்வியில் முடியும். இதில் ஆண் பெரும்பாலும் தப்பித்துக் கொள்வான். பெண் பலியிடப்படுவாள். ஆனால் இப்பேஸ்புக் யுகத்தில் ஆண் பெண் இருவருமே சாகஸம் தீர்ந்தபின் தத்தமது சொந்த இணைகளுடன் மீண்டும் போய் சத்தம்போடாமல் வாழ்ந்து கொள்ள முடிவது காலமும் டெக்னாலஜியும் தந்த வரம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அன்னாவும் வெரோன்ஸ்கியும் கலவும் காட்சிகள் கவித்துவமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. கெய்ராவின் உடல்மொழியும் அற்புதம்.  மதுவால் வீழும் இறுதி கட்டங்களில்,  துக்கமும் காதலுமான வெளிப்பாட்டுத் தருணங்களில் இவரின் நடிப்பு பிரமாதம்.  அன்னா என்கிற சாகா வரம் பெற்ற  கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.  ஒரு நாவலாக இம் மகத்தானப் படைப்பை இன்னும் வாசிக்காமல் இருப்பது குறித்த வெட்கம் இருக்கிறதுதான் என்றாலும் தற்சமயம் இப் பெரும் படைப்புகளிற்கு ஒதுக்க நேரமில்லை என்பதுதான் உண்மை. மேலும் பிற்கால  ஓய்வு நாட்களுக்கென்று சிலவற்றை விட்டு வைக்க வேண்டும்தானே.

படத்தைப் பார்த்து முடித்தப் பிறகு முரகாமி ஏன் ஸ்லீப் கதை நாயகி வாசிக்கும் நாவலாக அன்னா கரேனினாவை வைத்திருக்கிறார் என்பதன் சூட்சுமம் புரிந்தது.  நிஜமாகவே இப்போது ஸ்லீப் கதை இன்னும் அடர்த்தியானதாய் மாறுகிறது.  இன்று ப்ரைட் அண்ட் ப்ரைஜுடிஸ் படம் பார்க்கப் போகிறேன். இந்த தொடர் சங்கிலி தன்னைத் தானே வடிவமைத்துக் கொள்கிறது. நான் அதன் பின் போகும் வழி தப்பிய குழந்தையாக மாறியிருக்கிறேன்.Thursday, May 25, 2017

தினசரிகளின் துல்லியம் - முரகாமியின் ஸ்லீப்

இரண்டு நாட்களாக ஹருகி முரகாமியின் ’ஸ்லீப்’ என்கிற கதை தொந்தரவு செய்கிறது. குறிப்பாக வாகனம் ஓட்டும்போது. ஸ்லீப் கதையின் நாயகிக்கு தூக்கமின்மை பிரச்சினை இருக்கும். ஆனால் அது ’இன்சோம்னியா’ அல்ல. தூக்கம் வராது அதனால் தூங்காமல் இருப்பாள் . பதினேழு நாட்களாக தூங்கியிராத அந்தப் பெண் கதாபாத்திரத்தை எவ்வளவு முயன்றும் நினைவில் இருந்து துரத்த முடியவில்லை.  கணவனும் மகனும் தூங்கிய இரவில் வரவேற்பறையில்  அமர்ந்து கொண்டு  ரெமி மார்டின் சகிதமாய் அவள் வாசிக்கும் அன்னா கரீனா நாவலை மனம் திரும்பத் திரும்ப நினைத்துக் கொள்கிறது. நான் அன்னா கரீனாவை வாசித்ததில்லை. இச்சிறுகதைக்குப் பிறகு அன்னா கரீனாவை வாசிக்கும் ஆவல் எழுந்திருக்கிறது.

’ஸ்லீப்’ எனும் இச்சிறுகதை முரகாமியின் ’The Elephant Vanishes’ தொகுப்பில் இருக்கிறது. 1989 இல் எழுதப்பட்ட சிறுகதை. ஆரம்பகால முரகாமியின் சிறுகதைகளில் தினசரிகளைக் குறித்தக் கச்சிதமானச் சித்திரம் இருக்கும்.  ஒரு கதாபாத்திரம் காலை ஆறு பதிமூன்றிற்கு எழுந்து இரவு பத்து முப்பத்தி நான்கிற்குத் தூங்கப் போவது வரைக்குமான சம்பவங்களை நிகழ்வுகளை அல்லது எதுவுமே நிகழாதத் தன்மைகளையும் மிகத் துல்லியமாக விவரிப்பது முரகாமியின் கதை சொல்லும் முறை. ஒரே ஒரு அசைவைக் கூட விடாமல் சொல்லிவிடுவதுதான் இவர் தனித் தன்மை. சில கதைகளில் அலுப்பூட்டும் அளவிற்கு தினசரிகளின் துல்லியம் வந்து விழுந்து கொண்டே இருக்கும். வரிசைக் கிரமம் மாறாத முறைமைகளைக் கொண்டிருக்கும் இவர் கதாபாத்திரங்கள் ஒருபோதும் தினசரிகளில் அலுப்படைவதில்லை. மேலும் அத் தினசரிகளில் ஆழமாய் ஊன்றிப் போக முயலுகின்றன.

முரகாமியின் கதைகள், கதை மாந்தர்கள் என்னுடைய தினசரிகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். செய்யும் எந்த ஒன்றிலும் கவனம் அல்லது நுணுக்கம் குறித்தான பிரக்ஞையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நல்ல எழுத்தும் இலக்கியமும் மனதை விசாலப்படுத்தும் என அறிந்திருக்கிறோம் ஆனால் செயலின் ஒவ்வொரு தன்மையையும் கச்சிதப்படுத்தும் வாழ்வு முறை எனக்கு முரகாமியின் வழியாகத்தான் வந்தது.

ஸ்லீப் கதையின் நாயகிக்கு முப்பது வயது. ஆரம்பப் பள்ளிக்கு செல்லும் ஒரு மகன். கணவன் பல் மருத்துவர். அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பவர். நண்பர்களோ குடிப்பழக்கமோ கொண்டாட்டங்களோ இல்லாதவர். படுத்த உடன் தூங்கிவிடுபவர். மகனுக்கும் அவரின் அத்தனை சாயல்களும் இருக்கும். இவளுக்கு வாழ்வின் மீது பெரிதாய் புகார்கள் கிடையாது. எல்லாமும் சரியாக இருக்கும். காலை எழுந்து சிற்றுண்டி தயாரித்து கணவனையும் மகனையும் காலை எட்டு பதினைந்திற்கு ஒரே மாதிரி பத்திரம் எனச் சொல்லி வழியனுப்புவாள். அவர்கள் இருவரும் ஒரே மாதிரி தலையசைத்து ’டோன் வொர்ரி’ எனச் சொல்லிவிட்டுப் போவார்கள். அவர்கள் சென்ற பிறகு இவள் கடைக்குப் போய் தேவையானதை வாங்கிவருவாள். இவளிடம் ஒரு பழைய ஹோண்டா சிவிக் இருக்கிறது. வீட்டிற்கு வந்ததும் வீட்டைத் துடைப்பது, துணிகளைத் துவைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவாள். பதினோரு மணி ஆனதும் மதிய உணவைத் தயாரிப்பாள். கணவன் மதிய உணவு அருந்த வருவான். சேர்ந்து சாப்பிடுவார்கள். திருமணம் ஆன புதிதில் மதிய உணவிற்குப் பிறகு அவன் நெடுநேரம் வீட்டில் அவளோடு இருப்பான். அவை மகிழ்ச்சியும் இளமையும் நிரம்பிய காலங்கள். இப்போது அப்படியல்ல ஓரு மணி நேரத்திற்குள் திரும்ப மருத்துவமனை சென்றுவிடுவான். அவன் போன பிறகு வண்டியை எடுத்துக் கொண்டு அருகாமையில் இருக்கும் ’ஹெல்த் க்ளப்’ பிற்குப் போய் நீச்சலடிப்பாள். அழகு குறித்தும் ஆரோக்கியம் குறித்துமான கவனம் அவளுக்கு உண்டு. பின் மதியத்தை வாசிப்பது, ரேடியோ கேட்பது, ’விண்டோ ஷாப்பிங்’ செய்வது போன்ற வெவ்வேறு வகையில் செலவிடுவாள். மாலையானதும் மகன் வருவான். அவனுக்கு நொறுக்குத் தீனி கொடுத்துவிட்டு  விளையாட அனுப்புவாள். இரவுணவைத் தயாரிப்பாள். ஆறு மணிக்கு விளையாடிவிட்டு திரும்பும் சிறுவன் வீட்டுப் பாடங்கள் செய்வான் அல்லது கார்டூன் பார்ப்பான். கணவன் வந்ததும் இரவுணவு.  எட்டரை மணிக்கு மகன் தூங்கப் போவான். பிறகு இருவரும் மொசார்ட் அல்லது ஹேடனைக் கேட்பார்கள். இவளுக்கு இருவரின் இசைக்குமான வித்தியாசம் எப்போதும் பிடிபட்டதில்லை. அவன் இசை கேட்டுக்கொண்டே செய்தித்தாள் வாசிப்பான். பிறகு தூக்கம். அவ்வளவுதான். இந்த வரிசைக் கிரமம் எந்த வகையிலும் மாறாது. மாறாமல் இருக்க அனைவரும் மெனக்கெடுவார்கள்.

ஒருநாள் இவளுக்கு தூக்கம் வராமல் போய் விடுகிறது. தூங்காமல் இருப்பதால் ஏற்படும் எந்த அசெளகரியங்களும் இருக்காது. வழக்கம்போலவே இருப்பாள். ஆனால் தூங்க மாட்டாள். கல்லூரி காலத்திலும் ஒரு மாதம் இப்படித் தூங்காமல் இருந்தாள். தூக்க மாத்திரை, குடி என எதைப் பயன்படுத்தினாலும் தூக்கம் வராது. உடலும் மனமும் அவ்வளவு விழிப்பாகவும் புகை மூட்டமாகவும் இருக்கும். தனக்கு இருந்த சிக்கலை அவள் யாரிடமும்  - இப்போதுபோலவே - சொல்லவில்லை. ஒரு நாள் அந்தத் தூக்கமின்மை போய்விடும். தொடர்ச்சியாக இருபத்தேழு மணி நேரம் தூங்கி எழுந்து சரியாகிவிடுவாள். மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு அந்தப் பிரச்சினை இப்போது வந்திருக்கிறது.

இந்தத் தூக்கமின்மை வருவதற்கு முன்னால் அவளுக்கு பயங்கரமான கனவு ஒன்று வரும். இம்முறை ஒரு வயோதிகன் அவள் காலின் மீது நீரைக் கொண்டிக் கொண்டிருப்பதாய் கனவு வந்தது. ஒரு ஜாரில் நீரை நிரப்பி அவள் பாதங்களின் மீது நிறுத்தாமல் கொட்டிக் கொண்டிருக்கிறான். அவளால் கத்தவோ அல்லது எழுந்து ஓடவோ முடிவதில்லை. தன் கால்கள் விரைத்து நகரமுடியாமல் போய்விடுவோமோ என பயந்து அலறி அக்கனவில் இருந்து விழிக்கிறாள். அவ்வளவுதான். தூக்கமின்மைக்கு வந்து விட்டாள். எழுந்து வியர்வையால் நனைந்த தன் உடைகளை மாற்றிக் கொண்டு ஹாலிற்கு வருகிறாள். ஒரு முழுக் கோப்பை பிராந்தியைக் குடிக்கிறாள்.  திருமணத்திற்கு முன்பு நன்கு குடிப்பாள். கணவனுக்கு  குடிப்பழக்கம் இல்லாததால் அது நின்று போயிருக்கும். எப்போதோ பரிசாய் கிடைத்த ஒரு ரெமி மார்டின் பாட்டில் வீட்டில் இருக்கும்   கனவு தந்த பயத்திலிருந்து விடுபட நரம்புகளை சாந்தப்படுத்த குடிப்பாள். மேலும் ஒரு கோப்பை குடித்ததும் அவளுக்கு என்ன செய்வதன்று தெரியாமல் அன்னா கரீனா புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிப்பாள். அவ்வளவுதான் அந்த உலகத்திற்குள் விழுந்துவிடுவாள். அவளுடைய பழைய இளம் உலகம் விழித்துக் கொள்ளும். முடிவு என்ன என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இக்கதையை வாசித்து முடித்ததும் ஓர் அபரிதமான புத்துணர்விற்குள் தள்ளப்பட்டேன். என்னைச் செயலின்மைக்கு நகர்த்தியவையும் புத்தகங்கள்தாம். இப்போது அதே புத்தகங்களே செயலூக்கியாக இருக்கும் முரணை நினைத்து சிரித்துக் கொண்டேன்.

முரகாமியின் The Elephant Vanishes  தொகுப்பு  1980 லிருந்து 1991 வரைக்குமாய் அவர் எழுதிய சிறுகதைகளை உள்ளடக்கியது. மொத்தம் பதினேழுச் சிறுகதைகள். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு மன உணர்வுகளைத் தூண்டிப்பார்க்கும். இத்தொகுப்பின் முதல் சிறுகதையான The Wind-up Bird and Tuesday's Women பின்னாளில் ’வைண்ட் அப் பேர்ட் க்ரோனிகள்’ நாவலின் முதல் அத்தியாயமாகவும் இடம் பெற்றது. இச்சிறுகதையின் தொடர்ச்சியாக ’வைண்ட் அப் பேர்ட்’ நாவலை எழுதியிருப்பார். வேலை இல்லாத ஒரு  மத்திம வயது ஆண் கதாபாத்திரத்தின் தினசரி மிகப் பிரமாதமாக எழுதப்பட்டிருக்கும்.  The Dancing Dwarf, Lederhosen போன்ற பிற கதைகளும் எனக்கு மிகவும் பிடித்தன. லெடர்ஹோசன் என்கிற ஜெர்மானிய உடை ஒரு பெண்ணின் அத்தனை வருட வழமையை உடைத்துப் போடும் விநோதமான கதை. விநோதங்களின் அரசனான முரகாமி தினசரிகளில்  இருந்து அதைக் கண்டெடுக்கிறார் என்பதுதான் இன்னும் விசேஷம்.

Tuesday, May 23, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினேழுஅகத்திய மாமுனி நேற்றிரவு துர்காவைப் பார்த்த இடத்தில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் மூன்று சிறு பாதைகள் பிரிந்தன. எதில் போவது என அறியாமல் திகைத்து நின்றார். துர்கா எந்தப் பாதையிலிருந்து வந்திருப்பாள் என்பதையும் யூகிக்க கடினமாக இருந்தது. எதிரெதிரே நின்றுகொண்டிருந்தவள் திரும்பி உடன் வந்த சிறுமியை வீட்டிற்குப் போகச் சொன்னது நினைவில் இடறியதும் தேனிமலைக்கு போகும் பாதையில் நடக்க ஆரம்பித்தார்.  தாமரை நகர் தொகுப்பு வீடுகளைக் கடந்து பிரதான தண்டராம்பட்டு சாலையை வந்தடைந்தார். இனி எங்கு போவது என குழப்பமாக இருந்தது. மணி ஒன்பதரை இருக்கும். வெயில் முற்ற ஆரம்பித்திருந்தது. பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் கும்பல் கும்பலாக வந்து கொண்டிருந்தனர். ஒரு சிறுவனை மடக்கி

”இது எந்த இடம்”? என்றார்

”எந்த எடம்னா? ”  சிறுவன்

”எடத்தோட பேர் என்ன?”

”இது தேனிமல, இது பார்வதி நகர், இது தாமர நகர் ”

என அனைத்து திசைகளிற்கும்  ஒவ்வொரு பெயரைச் சொன்னான். மாமுனி மேலும் குழம்பினார். அவனிடமே குத்து மதிப்பாக கேட்டார்.

”ஒரு அம்மா பெருசா பொட்டு வச்சிட்டு ஒரு சின்ன பொண்ண கூட்டிகிட்டு வருவாங்களே அவங்கள பாத்திருக்கியா?”

”அவங்க வூட்டுக்காரு சாமியாரா? ”

மாமுனி மையமாய் தலையாட்டினார்.

”இதோ இந்த ஸ்கூல் தெருவிலதான் வூடு”

எனச் சொல்லிவிட்டு ஓடிப்போனான்.

அரை நம்பிக்கையில்  சாலையைக் கடந்து பள்ளிக்கூடத் தெருவிற்குள் நுழைந்தார்.

எதிரில் வந்து கொண்டிருந்த பள்ளிப் பிள்ளைகளில் ஒரு சிறுமி இவரைப் பார்த்து தயங்கி நின்றாள்.

”ஆயாவ பாக்கவா வந்திருக்கீங்க? எனக் கேட்டாள்.

மாமுனி பரபரப்படைந்து

“ஆமா ஆமா அவங்க வீடு எங்க?” என்றார்.

”இதோ இப்படியே கொஞ்ச தூரம் போனதும் ஒரு புங்க மரம் வரும், அங்க திரும்பினீங்கனா மூணாவது வீடு. திண்ண இருக்கும்.”

என்று சொல்லிவிட்டு ஓடினாள்.

மாமுனிக்கு ஒரு கணம் எல்லாமும் சரியானது போல் பட்டது. இரண்டே நிமிடத்தில் வீட்டை அடைந்தார். வீடு திறந்து கிடந்தது.  உள்ளே எட்டிப் பார்த்தார். யாரையும் காணவில்லை. குரலெடுத்து அழைக்கத் தயங்கி திண்ணையிலேயே சோர்வாய் அமர்ந்தார்.
ஐந்து நிமிடத்தில் வீட்டின் பின்புறத்திலிருந்து கையில் துடைப்பத்தோடு கலைந்த கூந்தலும் தளர்ந்த உடலுமாய் துர்கா வந்தாள்.  திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்தவரைப் பார்த்துத் திகைத்தாள்.

”எப்படி வூட்ட கண்டுபிடிச்ச?”

மாமுனி அவசரமாய் எழுந்து நின்று அவளை வணங்கினார். பகலில் வேறு மாதிரி இருக்கிறாளே என மனதில் நினைத்துக் கொண்டார்.

”ஐயே கையெட்த்துலாம் கும்பிடாதே. உள்ள வா” என்றாள்

சாமிக்கு இவள் அம்மனாய் இருக்க முடியாது என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடியது. வீட்டிற்குள் வந்து அமர்ந்தார்.

”பழையது கீது சாப்புட்றியா?” என்றாள்

அவசர அவசரமாய் தலையசைத்தார்.

துர்கா ஒரு அலுமினிய குண்டானில் இருந்து சோற்றை அள்ளி எவர்சில்வர் தட்டில் போட்டுக் கொடுத்தாள். மேலே தொங்கிக் கொண்டிருந்த உரியில் இருந்த தயிர் கலயத்தை எடுத்து கெட்டித் தயிரை ஊற்றி கல் உப்பை கொஞ்சம் சோற்றில் போட்டாள்.  மாமுனி சரியாகக் கூட பிசையாமல் அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டார்.

நல்ல பெசைஞ்சு மெதுவா சாப்டு என்றபடியே ஒரு ஈயத் தட்டில் பழைய சுண்ட வைத்த குழம்பை கொஞ்சம் ஊற்றி அவருக்காய் தள்ளினாள்.

மாமுனி நர உடல் கொண்ட நாளிலிருந்து அவ்வளவு சுவையான உணவை உண்டதில்லை. நிதானமாக ரசித்து ருசித்துச் சாப்பிட்டார். தொண்டை வரை நிறைந்ததும் போதும் எனச் சொல்லிவிட்டு பெரிய ஏப்பம் ஒன்றை விட்டார். எழுந்து  பின் வாசலுக்காய் போய் கை கழுவிட்டு வந்தார். அதற்குள் துர்கா ஒரு புதுப்பாயை எடுத்து தரையில் போட்டிருந்தாள்.

”தலையில அடி வேற பட்டிருக்கு படு” என்றாள்.

மாமுனியின் கண்கள் ஏற்கனவே சோர்ந்து உறங்கி விழ இருந்தன. எதுவும் பேசாமல் போய் படுத்துக் கொண்டார்.

துர்கா குளிப்பதற்கு தயரானாள்.   தன் கொண்டையை அவிழ்ந்து கூந்தலை கையால் விசுக் விசுக் என அடித்தாள். கொடியில் தொங்கிக் கொண்டிருந்த உள்பாவாடையையும் பாடியையும் எடுத்துக் கொண்டு பின் வாசல் கதைவை சாத்திக் கொண்டு தோட்டம் போன்ற ஒரு சிறிய இடத்தின் மூலையில் இருந்த குளியலறைக்குள் நுழைந்தாள். தகரக் கதவு  இருந்தது ஆனால் மேற்கூரை இல்லாத நான்கு சுவர் தடுப்பது. அதற்குள் ஒரு சிறிய நீர் தொட்டி இருந்தது. அதில் குளுமையான நீரை நிரப்பியிருந்தாள். நிதானமாய் உடைகளை முற்றும் களைந்து விட்டு நீரின் மேல் மிதந்து கொண்டிருந்த அலுமினியப் பாத்திரத்தில் டபுக் கென சத்தம் வர நீரை அள்ளி அள்ளி ஊற்றிக் கொண்டாள். அக்குளுமையில் ஸ்ஸ் என சப்தமும் எழுப்பினாள்.

சோர்வுற்றிருந்த கண்களை மூடிக் கொண்டாலும் மாமுனிக்கு காதுகள் திறந்தே இருந்தன.  துர்கா வின் ஸ்ஸ் சப்தமும் நீர் விழும் சப்தமும் கேட்டதும் அவருடல் கிளர்ச்சியடைந்தது. வயிறு நிறைந்திருந்ததால் சற்றுத் தெம்பாக உணர்ந்தார். காமம் சிலிர்ப்பாய் அவருடலில் எழுந்தது. அக்கணமே குளியலறைக்குள் நுழைந்து அவளைத் தழுவ விரும்பினார். ஆனால் உடன் பயமும் சேர்ந்தது. நினைவில் அவளைத் தழுவி முத்தி தரையில் கிடத்திப் படர்ந்தார். நிஜத்தை விட இந்தக் கனவு இன்னும் கிளர்ச்சியைத் தந்தது. மாமுனி முதன் முறையாய் அவருடலும் மனமும் ஏற்படுத்தும் அதிசயங்களையும் இன்பத்தையும் உணர்ந்தார். கிட்டத்தட்ட காமத்தில் ஈடுபடும் சுகத்தையும் பரவசத்தையும்  நினைவே தந்தது. மேலும் அந்நினைவில் நுழைந்தார். குறி கிளர்ந்து விறைத்து எழுந்தது. மேலும் மேலும் நினைவில் காமத்தின் உச்சியைத் தொட்டார்.  ஸ்கதலிதப் பிசுபிசுப்பும் நிறைவும் சோர்வும் ஒருங்கே மண்டி ஆழமானத் தூக்கத்தினுள் விழுந்தார்.

குளித்து விட்டு வந்த துர்கா உடை மாற்றிக் கொண்டு, குண்டானில் மீந்து கிடந்த பழைய சோற்றை நீராகாரமாய் குடித்துவிட்டு முன் கதவை ஒருக்களித்து சாத்திவிட்டு பூக்கூடையை இடுப்பில் வைத்துக்கொண்டு கோவிலுக்குப் போனாள்.

வீட்டின் அமைதி மாமுனியை இன்னும் ஆழமானத் தூக்கத்திற்கு இழுத்துப் போனது. பல வருடங்களாய் அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்த எல்லாமும் சாந்தமடைந்து விட்டிருந்தது. அவர் இனி அறிய வேண்டிய மானுட உண்மைகள் எதுவுமில்லை.

மாமுனி விழிந்தெழுந்த போது ஒளி மங்க ஆரம்பித்திருந்தது. வீட்டில் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. அதுவரை இல்லாத நிதானமும் அமைதியும் அவருக்கு கிடைத்திருந்தது. எழுந்து கொண்ட மாமுனி மெல்ல வீட்டை விட்டு வெளியே வந்தார். கதவை முழுவதுமாய் சாத்திவிட்டு நடக்க ஆரம்பித்தார். பள்ளிப் பிள்ளைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தான் திரும்ப வேண்டிய வீடு குறித்த அச்சம் மெல்ல அவர் மனதில் படர்ந்தது. மலைக்குப் போய் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு ரமணரிடம் சொல்லிக் கொண்டு அகத்தீஸ்வரம் போய்விடலாம் என முடிவெடுத்தார். நல்ல வேளையாக அவள் அம்மனில்லை. அந்தக் குடிகாரன் போகராகவும் இருக்க முடியாது. அந்தப் பூவும் இதில்லை. இது எல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஊழ்வினை. சாபம் என்பது தான் மட்டுமே இடுவது என நம்பிக் கொண்டிருந்தவர் அவர். இத்தனை அலைக்கழிப்புகளுக்கும் காரணம் வேறொருவரின் சாபமாகத்தான் இருக்கக் கூடும் என முதன் முறையாய் நம்பினார்.

எதிரே நிமிர்ந்து பாத்தார். மலை அகலக் கால் பரப்பி சம்மணமிட்டு அமர்ந்திருப்பது போல் அத்தனை பிரம்மாண்டமாய் அமர்ந்திருந்தது. இந்நகரின் வேறெந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் இத்தனை அழகாய் இம்மலை தோன்றவில்லை. இந்த இடம்தான் மலையின் முழு அழகையும் காணத் தந்தது. மாமுனிக்கு உள்ளே ஏதோ உடைவது போல் தோன்றியது. தாம் தேடி அலைந்த ஓரிதழ் பூ இம்மலைதானோ. எப்போதும் பூத்திருக்கும் நித்தியப் பூ இம்மலையாகத்தான் இருக்கமுடியும். மாமுனிக்கு எல்லாமும் தெளிந்து வந்தது. உள்ளில் ஏதோ ஒன்று நிறைவடைந்தது. இதுதான் எல்லாமும். இயற்கையின் ஓரிதழ்ப்பூ அண்ணாமலைதான். இதுவே நித்தியமும். மாமுனி அப்பிரம்மாண்டத்தை விழுந்து வணங்கினார். இனி அவருக்கு எங்கு போவது என்பது குறித்த குழப்பங்கள் ஏற்படாதவாறு இப்பிரம்மாண்டம் பார்த்துக் கொள்ளும்.

மாமுனிக்கு ஒரே ஒரு முறை துர்காவைப் பார்த்து நன்றி சொல்லிவிட்டு வரலாமா என்கிற எண்ணம் தோன்றியது. உடனே தலையை வேகமாய் அசைத்து தனக்குத் தானே மறுப்பு தெரிவித்துக் கொண்டு மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

- மேலும்

Wednesday, May 17, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினாறு


ரமா கிளம்பிப் போனபிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்றுமில்லாத அமைதி வாய்த்திருந்தது. இது அபூர்வம்தான். இயலாமையின் பரிதவிப்பு எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.  மனதைப் பிசைந்து பிசைந்து பைத்தியமாக்கிக் கொண்டிருந்த குழப்பமான எண்ணங்கள் யாவும் சடுதியில் காணாமற் போனது போலிருந்தது. மனம் தெள்ளத் தெளிவாகியிருந்தது. குடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். குடியை நினைத்தாலே அருவெருப்பாக இருந்தது. எவ்வளவு இழிவான பிறவி நான் என்கிற சுய பச்சாதாபம் மேலெழுந்தது. அதை மேலும் வளரவிடாமல் மீண்டும் இரமணாசிரமத்திற்குத் திரும்பினேன்.  பிரதான தியான ஹாலை விடுத்து கிணற்றடியை ஒட்டிய சிறிய தியான அறையில் போய் அமர்ந்து கொண்டேன். அந்த மென்னிருளும் அமைதியும் பாதி இருளில் கரைந்து அறிய முடியா ரகசியத்தைப் போல  வீற்றிருக்கும் ரமணரின் சிலையும் என்னை மேலும் சாந்தப் படுத்தியது. ஜன்னலை ஒட்டிப் போடப்பட்டிருந்த சிறு தரைவிரிப்பில் அமர்ந்து கொண்டேன். கண்களை மூடப் பயமாக இருந்தது. அப்படியே அமர்ந்திருந்தேன்.  தலைக்குள் ஏராளமான சப்தங்கள். காதுகளில் குரல்கள் திம் திம் என அலறின.  சுவற்றில் அடித்த பந்தாய் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்த சொற்களைக் கதறலை மனம் மெல்ல உள்வாங்கிக் கொண்டது. மெது மெதுவாய் மனம் அமைதியடையத் துவங்கியது.

சாந்தமே கூட ஒரு கட்டத்தில் மூச்சு முட்ட ஆரம்பித்தது.  உடன் அமர்ந்திருப்போரைச் சலனப்படுத்தாமல் மிக மெதுவாய் எழுந்து வெளியே வந்தேன்.  வெயில் உச்சிக்கு வந்து விட்டிருந்தது. வீட்டிற்குப் போகலாமா என்ற எண்ணம் தோன்றியது. வேண்டாம். அவள் கேட்டால் தேவையில்லாத பொய் சொல்ல வேண்டியிருக்கும். இப்படியே மலையேறி ஸ்கந்தாசிரமம் வரை போய்வர முடிவு செய்தேன்.

நானும் ரமாவும் அமர்ந்திருந்த இடத்தில் இப்போது வேறு யாரோ ஜோடியாய் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களிற்குச் சமீபமாகத்தான் திருமணமாகியிருக்க வேண்டும். அந்தப் பெண் அணிந்திருந்த தாலிக்கயிறின் மஞ்சள் புத்தம் புதிதாக இருந்தது. மனதில் காமம் மின்னலாய் தோன்றி மறைந்தது. புதுத்தாலியைப் பார்த்த உடன், ஏன்  மனம்  காமத்தோடு ஒன்றுகிறது?

எல்லாவற்றையுமே கோணலாகப் பார்க்கும் மனம் உலகத்திலேயே எனக்கு மட்டும்தான் வாய்த்திருக்கும் போல. அதற்கு மேலும் பார்வையை அங்கு நகர்த்தாமல், ஒற்றைக் கம்பிக் கதவைத் திறந்து கொண்டு மலை மீது ஏறத் துவங்கினேன். வெயில் முற்றியிருந்தது. அனல் இல்லை. போலவே காற்றும் அத்தனைச் சூடாக இல்லை. படிக்கட்டுக்கள் செங்குத்தாக இருந்தன. பத்துப் படிக்கட்டிலேயே மூச்சு வாங்கியது. படியைத் தவிர்த்துவிட்டு பாறையில் நடக்க ஆரம்பித்தேன். முடியவில்லை. இரண்டு பக்கமும் அடர்ந்த மரநிழலும், உட்கார வாகாய் ஒரு கற்திண்டும் நடைபாதைக்குச் சமீபமாய் இருந்தது. அதில் அமர்ந்து கொண்டேன். வானம் தெள்ளத் தெளிவாய் இருந்தது. பஞ்சுப் பொதி மேகங்கள் சின்னச் சின்னதாய் சிதறிக் கிடந்தன. பகலில் ஆகாயம் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. பெருமூச்சு விட்டேன்.

ஓய்விற்குப் பிறகு மனம் சிறு சாகசத்திற்கு தயாரானது. தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். இந்தத் தடம் மாறவே இல்லை. முன்பு  நடைபாதை ஓரங்களில் நடப்பட்டிருந்த மரச் செடிகள்  சற்று வளர்ந்திருக்கின்றன. ஏதோ ஒரு அமைப்பைச் சேர்ந்த குழுவினர் இந்த மலையில் மரங்களை வளர்த்து வருகிறார்கள். உயரமான மஞ்சம் புற்களும், காரைச் செடிகளும், முற்செடிகளும், புதர்களும்தான் இம்மலை முழுக்க மண்டியிருக்கும். இப்போது நிறைய மரங்களைக் காண முடிகிறது.

சிறுவயதில் இரவில் எங்கள் வீட்டின் வாசலில் பாய்போட்டு படுத்துக் கொள்வது வழக்கம். புழுக்கமான வேனிற்காலங்களில் எங்கள் தெரு முழுவதுமே வாசலில்தான் படுத்திருக்கும்.  எப்போதும் பூத்திருக்கும் இந்த மலையெனும் நித்தியப்பூ எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் . இரவில் மலையில்  காய்ந்த அல்லது அறுப்பு முடிந்த மஞ்சம் புற்களை எரிவூட்டுவார்கள். அது ஆங்காங்கே திட்டுத் திட்டாய் கொழுந்து விட்டு எரியும். தரையில் படுத்துக் கொண்டே இந்த பிரம்மாண்ட மலையில் ஆங்காங்கே எரியும் தீப்பிழம்பைக் காண்பது விநோதமான சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும் . பல வருடங்கள் அந்தத் தீப் பிழம்பை கொள்ளி வாய் பிசாசு என நம்பிக் கொண்டிருந்தேன். அமுதா அக்காதான் எரிவது மஞ்சம்  புல் தான் பேயில்லை என்கிற உண்மையைச் சொன்னது.

அமுதாக்காவை நினைத்த போது உதட்டில் ஒரு புன்னகை அநிச்சையாய் வந்து போனது. இப்போது எங்கிருக்கிறாள். எப்படியிருப்பாள் என்கிற யோசனைகளும் ஓடின. நானும் ரமாவும் ஒன்றாகப் போய் அவள் முன் நின்றால் எப்படி எதிர்கொள்வாள் என்பதை யோசித்துக் கொண்டே நடந்தேன். பாதை சற்று சமதளமாக இருந்தது. அத்தனை மூச்சிரைப்பில்லை. மனம் நழுவிக் கொண்டது.

மீசை அரும்பியபின்பு கூட அமுதாக்கா பின்புதான் சுற்றிக் கொண்டிருந்தேன். என்னைக் கேலி பேசாதவர்கள் குறைவு. தெருப் பயல்கள் முழுக்க மரப்பேட்டும் ரப்பர் பந்துமாய் புழுதியைக் கிளப்பிக் கொண்டிருக்கையில்  நான் அமுதாக்காவுடன் தாயமோ பல்லாங்குழியோ விளையாடிக் கொண்டிருப்பேன். செஸ் கேரம்போர்டு போன்றவை அவளிற்குச் சரிப்பட்டு வரவில்லை.  ஒரு காலை மடித்தும் ஒரு காலை நீட்டியுமாய்  உட்கார்ந்து, அழகாய் உருண்டையாய் என்னால் கொண்டுவரப்பட்ட கூழாங்கற்களில் அஞ்சாங்கல் விளையாடுவதுதான் அவளுக்குப் பிடித்திருந்தது. கல் விளையாட்டிலேயே பல வகை இருந்தன. ஐந்து கல், ஏழு கல், பதினாறு கல் இப்படி முப்பத்தி இரண்டு கல் வரை நீளும் விளையாட்டு அது. நாள் முழுக்க விளையாடிக் கொண்டிருப்போம். இடையில் சமைக்க, சாப்பிட, தூங்க மட்டுமே விலகிப் போவோம்.

பள்ளி நாட்களில் மாலை வீட்டிற்கு வந்து பையை வைத்துவிட்டு அமுதாக்கா வீட்டிற்குப் போய் விடுவேன். அம்மா அவள் வேலை பார்க்கும் பள்ளியிலிருந்து வந்து, முகம் கழுவிக் கொண்டு என்னைத் தேடி வருவாள்.  வீட்டுப்பாடம் இருக்கிறது என இழுத்துக்கொண்டு போவாள்.  ஒம்பதாங்க்ளாஸ் வந்துட்ட இன்னும் என்னடா அவ பின்னாடியே சுத்திட்டு இருக்க என கடிந்து கொள்வாள். எனக்குத்தான் அவளைப் பார்க்காமல் இருக்க முடிந்ததில்லை.
எப்போது சனிக்கிழமை வரும் என இருக்கும். சனிக்கிழமை அம்மாவிற்கு வேலை நாள். அவள் கிளம்பிய உடன் பின்னாலேயே நானும் கிளம்பி அமுதாக்கா வீட்டிற்குப் போய்விடுவேன். அவளிடம் ஓர் அபூர்வ அமைதி இருந்தது. இதுவரைக்குமே புரிந்து கொள்ள முடியாத ஓர் உணர்வு அவளின் மேல் எனக்கு இருந்தது. அதை ஒரு போதும் என்னால் காமத்துடன் நேர் வைத்துப் பார்க்க முடியவில்லை.

பத்தாம் வகுப்பு கால் பரிட்சை சமயத்தில் அவளுக்குத் திருமணம் நடந்தது.  யாரோ ஒரு அரைக் கிழவனுக்கு இரண்டாந்தாரமாய் வாழ்க்கைப் பட்டு  போனாள். அந்தத் தெருவே அவள் பின்னால் அலைந்தது. அவள் நினைத்திருந்தால் யாராவது ஒரு பையனுடன் ஓடிப்போயிருக்க முடியும். ஆனால் மிகக் கறாராய் ஒருவனையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தாள். எப்போதும் அவளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் என்னை அத்தெருவின் மொத்த இளைஞர் கூட்டமும்   வெறுப்புடன் பார்த்தது. ஓரிருவர் என்னை நைச்சியப்படுத்திக்கொண்டு அமுதாக்காவிற்கு லெட்டர் கொடுக்கப் பார்த்தனர். நான் அவர்களின் முன்பே அக்கடிதங்களை கிழித்துப் போட்டு ஆணவமாய் நடந்து போவேன். இந்த அரைக்கிழ கணவனைப் பார்த்த போது அந்த ஈபி யில் வேலைக்கு சேர்ந்திருந்த அண்ணனின் கடிதத்தை கிழிக்காமல் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது.

அம்மா அத்தனை வற்புறுத்தியும் அவள் திருமணத்திற்குப் போக மறுத்துவிட்டேன். பரிட்சை இருக்கிறது அது இதுவென சொல்லி போகாமல் இருந்துவிட்டேன். ஏனோ அந்த ஆளோடு அவளைப் பார்க்க பிடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டு போனவள்தான். ஓரிரு முறை வந்து போனதோடு சரி. பிறகு அவளின் குடும்பமும் அங்கிருந்து காலிசெய்து கொண்டு போய்விட்டது. என் நினைவில் இருந்தும் போய்விட்டாள். ஏனோ இத்தனை வருடங்கள் அமுதாக்கா நினைவே வரவில்லை. இன்று காலை ரமாவைப் பார்த்துப் பேசிய பின்புதான் நான் ஒரு மனிதன் என்றும் எனக்கும் முன்பொரு வாழ்விருந்தது என்றும் தெரியவந்திருக்கிறது.

முதல் குன்றைத் தாண்டி வளைவிற்கு வந்துவிட்டிருக்கிறேன்.  சற்று ஓய்வெடுத்துக் கொள்ள விரும்பி நடைபாதையிலிருந்து விலகி சரிவிலிருந்த உயரமான பாறையின் மீது ஏறி அமர்ந்து கொண்டேன்.
திருவண்ணாமலை நகரம் கோபுரங்கள் பிரகாசிக்க  அத்தனை அழகாய் தெரிந்தது. தொலைவில் இருந்து பார்க்க எல்லாமும் மிகச் சிறியதாக அழகாக மாறிவிடுகின்றன. அருகாமையின் பிரம்மாண்டத்தைத்தான் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

- மேலும்
பவா - அனந்தமூர்த்தி


கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலான பவ - வை தமிழில் வாசித்தேன். பிறப்பு என்கிறத் தலைப்பில் நஞ்சுண்டன் மொழிபெயர்த்திருக்கிறார். காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. அளவில் மிகச் சிறிய நாவல்தான். இதற்குள்ளும் மூன்று பாகங்கள் உண்டு. எழுத்தாளரின் வசதிக்கேற்ப ஒரு நாவலை அத்தியாயங்களாகப் பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்தான். பிறப்பு நாவல்  மூன்று தலைமுறை ஆண்களின்  உறவுச் சிக்கல்களைப் பேசுவதால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கலாம்.

சிவராம் கரெந்த வின் அழிந்த பிறகு நாவலைப் போல பிறப்பும் ரயில் பயணத்தின் வழியாய் நம்மைக் கதைக்குள் கூட்டிப் போகிறது. முதல் நான்கைந்து அத்தியாயங்கள் அசுவராசியமாய் நகர்ந்து போக, சாஸ்திரிகளின் முன்கதை முதுகுத் தண்டில் அதிர்வை ஏற்படுத்தி கதைக்குள் ஒன்ற வைத்து விடுகிறது.

சாஸ்திரமும் வேதமும் ஓதுபவர், ஹரிக் கதைகளை சொல்லும் ஒரு மடியான முதியவர் அவ்வளவு குரூரமானவராய் இருந்திருப்பார் என நம்பவே எனக்கு நேரம் பிடித்தது. மரபான பல விஷயங்களை தமிழ் நாவல்களும் வாசகரும் கடக்காமல்தான் இருக்கிறோம். பார்ப்பனர்களைக் குறித்தப்  பகடிகள்  நம்மிடையே உண்டு என்றாலும் அவர்களைக் குரூர வில்லன்களாக சித்தரித்தக் கதைகளை நான் வாசித்த நினைவே இல்லை. அதுவும் மிக ஆசாரமான ஒரு பிராமணருக்கு இவ்வளவு குரூரப் பின்புலம் உள்ளது போன்ற ஒரு படைப்பு நம் சூழலில் வெளிவந்திருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

பிறப்பு நாவல் - தினகர் மற்றும் பிரசாத் ஆகிய இருவரின் பிறப்புகளைக் குறித்த மர்மங்களைத் தகவல்களாய் தருகிறது. பின்பு திட்டவட்டமாய் எதுவும் சொல்லாமல் இந்தக் கற்பு நிலை என்பதை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு கதாபாத்திரங்களின் நகர்வைக் குறித்த ஒரு சித்திரத்தோடு முடிந்து போகிறது.

தொலைக்காட்சிப் பிரபலமான தினகர் தன் மண வாழ்வில் தோல்வியுற்று - இவருக்கு ஏராளமான காதலிகள், மனைவிக்கு ஒரே ஒரு காதலன். ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். வழியில் ரயிலில் சாஸ்திரிகளை சந்திக்கிறார். தினகர் அணிந்திருக்கும் ஸ்ரீசக்ரத்தைப் பார்த்து அவருக்கு இவன் தன் மகனாக இருப்பானோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஏற்கனவே ஒரு பெண்ணை சேர்த்துக் கொண்ட சாஸ்திரி வைப்பின் ஆசைப்படி இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு குழந்தை இல்லாததைக் காரணம் காட்டி அவளைச் சித்திரவதை செய்கிறார். அவளோ புதிரும் வைராக்கியமும் நிரம்பியவள். இவரை ஒரு பொருட்டாகவும் மதிப்பதில்லை. இடையில் அவர்கள் வீட்டில் கெட்ட ஆவிகளை ஓட்ட வரும் மாந்த்ரீகனுடன் அவளுக்குப் பரிச்சயம் ஏற்படுகிறது. மாந்த்ரீகன் அவளுக்கு தம்புராவை மீட்ட சொல்லித் தருகிறான். இதனால் வெறியேறும் சாஸ்திரி மனைவியான சரோஜாவை அடித்து நொறுக்கி வீட்டின் பின்னால் புதைத்துவிட்டு வெளியேறுகிறார். அவளைக் கொன்றுவிட்டதாகவும் நினைத்துக் கொள்கிறார். பிறகு காதலி ராதாவின் ஆசைப்படி இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து வளர்ந்து பிராமணர் அல்லாத இன்னொருவனுடன் ஓடிப்போகிறது..

தலை சுற்றுகிறது அல்லவா.. இப்படித்தான் போகிறது கதை.

பழமையில் ஊறி அது தரும் ஆண் சுதந்திரத்தில் திளைத்து, சாதியும் பணமும் தரும் திமிரை பெண் மீது ஏவித் திரியும் ஆண்களின் கதை இது.  கூடவே அவர்களின் திமிரை அனுமதித்தபடி தங்களின் வெளியேறல்களை மீறல்களை கட்டமைத்துக் கொள்ளும் பெண்களும் இதே கதையில் வருகிறார்கள்.  தாம் புணர்ந்த பெண்களின் கற்பு குறித்த அச்சம் கொண்ட ஆண்களான சாஸ்திரியும் நாராயணனும் மெல்ல தங்களின் நிலைப்பாட்டிலிருந்து நகர்கிறார்கள். பல பெண்களைப் புணரும் தினகர் தன் மனைவியை இன்னொருவனோடு படுக்கையில் பார்த்தவுடன் அதிர்ந்து ஓடிப்போகிறான்.

தினகர் சாஸ்திரிகளுக்குப் பிறந்தவனா அல்லது மாந்திரீகனுக்குப் பிறந்தவனா என்கிற சந்தேகத்தைப் போலவே -  பிரசாத் தினகருக்குப் பிறந்தவனா அல்லது நாராயணனுக்குப் பிறந்தவனா என்கிற சந்தேகம் சாஸ்திரியையும் நாராயணனையும் வாட்டி எடுக்கிறது. தினகரும் பிரசாத்தும் இதிலிருந்து தப்பிக்கிறார்கள். ரகசியம் அறியப்பட வேண்டாததாய் கரைந்து போகிறது.

மூன்று தலைமுறைக் கதையை வெறும் கதைச் சுருக்கமாய் தந்துவிட்ட போதாமை இந்நாவலில் உண்டு. ஆனால் இக்கதைகள் உலவும் தளம் யாரும் தொடாததாய், தொடப் பயப்படும் தளமாய் இருக்கிறது. அனந்தமூர்த்தி அநாயசமாய் மரபுகளை உடைக்கிறார். உடன் ஆன்மீக மசாலாப் பொடிகளைத் தூவி விடுகிறார். இவரை இந்தியச் சூழல் மிகைப்படுத்துகிறதா என்கிற எண்ணமும் எனக்கு வந்து போகத் தவறவில்லை.


Thursday, May 11, 2017

காற்று வெளியிடை - மணிரத்னத்தின் Fringe Elements


மணிரத்னத்தின் காதற் படங்களின் மீது எனக்கொரு வாஞ்சை உண்டு. ஓ காதல் கண்மணி வரை அவரின் படங்களை - குறிப்பாய் காதல் படங்களை திரையில் காண்பதே வழக்கம். காற்று வெளியிடையைக் காணப் போகவில்லை. மணி - ரகுமான் கூட்டணியின்  முதல் தூண்டிலான பாடல்கள் இதில் சுமார்தான். ட்ரைலர், மீசையில்லாத கார்த்தி என அரங்கிற்கு போகத் தூண்டும் மணியின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் எதுவும் செல்ஃப் எடுக்கவில்லை. கூடுதலாய் ஃபேஸ்புக் அறிஞர்கள் படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தே கழுவி ஊற்ற ஆரம்பித்திருந்தார்கள். இக்காரணங்களால் திரையரங்கிற்கு செல்லும் ஆர்வம் விட்டுப் போனது. நேற்று நல்ல பிரிண்டில் படம் பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரஜினி படங்களில் லாஜிக் பார்ப்பது எத்தனை அபத்தமோ, அத்தனை அபத்தம் மணியின் படங்களில் யதார்த்தம் அல்லது உண்மையைத் தேடிக் கொண்டிருப்பது. இவர் படங்களைக் குறித்து  ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமெனில் ’ஒரு பணக்காரப் பகல் கனவு’ அவ்வளவுதான். இரண்டரை மணி நேரம் பணக்காரனாக வாழ யாருக்கு ஆசை இருக்கிறதோ எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு இருக்கிறது.

முதலில் படத்தின் நிறைகளைப் பார்த்துவிடலாம். வழக்கமான நிறைகளான  இசை, தேர்ந்த ஒலியமைப்பு, கண்களில் ஒற்றிக் கொள்ளும் போட்டாக்ராபி, நடனம், சிறந்த எடிட்டிங், அழகான பாடல் காட்சிகள் என எல்லா புற அழகு விஷயங்களும் கச்சிதம். நாயகி டாக்டர் கதாபாத்திரத்திற்கு சரியாகப் பொருந்துகிறார். சாய் பல்லவி இல்லாமல் போன குறை தெரியவில்லை. ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் உலகத்தரம். ஆங்கிலப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு படம் நெடுகிலும் இருந்தது.   குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் படத்தில் அலையலையாய் எழுந்து அடங்கும் ஊடலும் கூடலுமான காதல். அந்தக் காதலுணர்வு மணி படங்களில் தொன்று தொட்டு வரும் அபாரமான விஷயம். மணிக்கு புதிதாக சொல்ல எதுவும் தெரியாது என்பதுதான் அவர் காதற் படங்களின் விசேஷம். காதல் புதுப்பித்துக் கொள்கிற வஸ்து கிடையாது. அது எப்போதும் நினைவுகளில் தோய்ந்திருப்பது.

ஒரு க்ரியேட்டராக மணியின் பங்களிப்பு இத்திரைப்படத்தில் குறைவு. இக்குழுவினரின் முக முக்கியமான தவறு கார்த்தியை மிகத் தவறாகப் பயன்படுத்தியதுதான்.  கார்த்தியை அப்படியே விட்டிருக்கலாம். இதுதான் கதாபாத்திரம் நடித்துக் கொள் என விட்டிருந்தால் சரியாகச் செய்திருப்பார்.  சூர்யாவைக் காட்டிலும் கார்த்தி சிறப்பான நடிகர். பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மெட்ராஸ் என மூன்று உதாரணங்கள் நம் முன் உள்ளன. கதாபாத்திரமாகவே மாறிவிடும் திறமை கார்த்திக்கு உண்டு. அவரைப்போய் வித்தியாசமாக நடிக்க வைக்கிறோம் என கண்களை உருட்டி உருட்டிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். இந்த முட்டாள்தனமான எக்ஸ்பிரஷன் யாருடைய ஐடியா எனத் தெரியவில்லை. கதாநாயகன் லேசாய் ’சைக்கோ’ என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டு ஆண்கள் நூறு சதவிகிதம் ஆணாதிக்கமும் ஈகோவும் ஆம்பள பொம்பள பாகுபாடும் கொண்டவர்கள்தாம். அவர்கள் சாதாரணமாகத்தான் இருப்பார்கள். முழியைப் பிதுக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். இந்த எளிய உண்மையை மணி புரிந்து கொண்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.


பலமுறை குறிப்பிட்டதுதான் மணி அடிப்படையில் படைப்பாளுமை கொண்டவர் அல்ல. சிறந்த தொழில்நுட்பவாதியும் மற்றவர்களிடமிருந்து தனக்கு வேண்டியதை சரியாகப் பெற்றுக் கொள்ளும் மேலாண்மை ஆற்றலும் மிக்கவர்.  எனவே இவரின் படங்களுக்கு இருக்கும் வெளிப்புற அழகியல் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது. ஒரு படைப்பாளியின் மிக முக்கிய பங்களிப்பான உட்புற ஆழம் உள்ளீடற்றதாக இருக்கிறது. எளிமையான தமிழில் சொல்ல வேண்டுமெனில் வாசனை மட்டும் உள்ள காலிப் பெருங்காய டப்பா அவ்வளவுதான்.

 கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக  அவர் பின்பற்றும் திரைக்கதை முறமைகள் சிலவற்றைக்
குறிப்பிடுகிறேன்.

1. பார்த்த உடன் காதல்
2. திமிர் பிடித்த ஆம்பள கதாநாயகன்
3. அழகான நல்ல கதாநாயகி  - உடனடியாக காதலை ஏற்றுக் கொள்ள மறுப்பது
4.  சிறு பிரிவு
5. நாயகனோ நாயகியோ ஒருவர் இன்னொருவரைத் தேடி பயணிப்பது
6. பயணத்தின் முடிவில் நீல்லனா செத்திருவேன் என இணைவது
7. திருமணம் அ சேர்ந்து வாழ்வது
8. ஈகோ  ஊடல் அ பிரிவு
9. ஒரு சம்பவம் - இழப்பு - துயர்
10. மனந்திருந்தி இணைதல்
11. தேசம் - ராணுவம் போன்ற எக்ஸ்ட்ரா பிட்டுகள்


92 ரோஜாவிற்கு முன்பான மணிக்கு - இந்த பத்து நிகழ்வுகள் நடைபெறும் இடப் பின்னணியாக ஃப்ரிஞ் எலிமெண்டான தமிழ்நாடு இருந்தது. ரோஜாவிற்குப் பிறகு பின்னணியாக இந்தி பேசும் இந்தியா இருக்கிறது.  அவ்வளவுதான்.  இன்றளவும் 92க்குப் பிறகான மணியின் காதல் படங்களில் எனக்குப் பிடித்தது அலைபாயுதேதான்.  அதைத்தான் அவர் திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறார். ஷாலினியைத் தேடி மாதவன் கேரளா போகும் காட்சியையும் பின்னனியில் ஒலிக்கும் எவனோ ஒருவனையும் அவ்வளவு அற்புதமான ஒளிப்பதிவையும்  எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கமுடியாது. அதைத்தான் காற்று வெளியிடைக் காதலாக மணி ரீக்ரியேட் செய்திருக்கிறார்.

மற்றபடி படத்தில் வரும் ராணுவம், போர், பாகிஸ்தான் பார்டர், பாக். ஜெயில், அங்கிருந்து தப்பித்து ஆப்கன் போவது, அந்த மலை சேஸிங்க் இதெல்லாமே மிகப் பெரிய ஜோக்.Tuesday, May 9, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினைந்து

சாமிநாதன் பெரிய மஞ்சள் பை ஒன்றுடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். என்றாவது ஒரு நாள் இங்கிருந்து போய்த்தான் ஆக வேண்டும் என்பதை அறிந்தே இருந்தான். ஆனால் அது ஏன் இத்தனை சடுதியில் நிகழ வேண்டும் என்பதை நினைக்க நினைக்கத்தான் ஆற்றாமையாக இருந்தது. ஒரு மரத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் வேரோடு பிடுங்கிப் போட்டதைப் போலிருந்தது. பதினைந்து வருடங்கள் வாழ்ந்த  இடமிது, குடிசையாகவே இருந்தாலும் அவன் வாழ்ந்த வீடு. பழகிய மனிதர்கள், மரம் செடி கொடி எல்லாமும் இன்று காலை முதல் அவனுக்குச் சொந்தமானதில்லை என்பதை  அவனால் நம்ப முடியவில்லை.  மனித வாழ்வின் மிக முக்கியமானவை முதல் இருபத்தைந்து வருடங்கள்தாம். மிகத் தூய்மையான அந்த இளம் பிராயத்தை சாமிநாதன் இந்த வயதான ஜோசியருக்கு அர்ப்பணித்திருந்தான். கடைசி வரை அவர் ஒன்றுமே இவனுக்குச் சொல்லித் தரவில்லை. இவனாய் கைக்கு கிடைத்த பஞ்சாங்கங்கள், அவரின் பழைய நோட்டுப் புத்தகங்களைத் திருட்டுத்தனமாய் படித்து மோடாமொத்தமாய் சிலவற்றைத் தெரிந்து கொண்டான். எதனால் இன்று காலை இவனை வெளியேறச் சொன்னார் என்பது எத்தனை யோசித்தாலும் பிடிபடவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோசியம் கேட்க வந்தவர்களிடமும் இப்படித்தான் விநோதமாக நடந்து கொண்டார் . வயதானால் இப்படித்தான் புத்தி பிசகிவிடுமோ என்னவோ. ஜோசியம் கேட்க வந்தப் பெண்ணை நினைத்த மாத்திரத்தில் சாமியின் உடல் தகித்தது. எப்பேர்ப்பட்ட பெண்ணவள். எதற்காக இந்த ஜோசியர் அவளை ஒரே ஒரு கணம் மட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து  வெளியேறச் சொன்னார் என்பது இன்னும் பிடிபடவில்லை.  ஒருவேளை ஜோசியர், தான் அவள் நினைவாகவே இருப்பதை தெரிந்து கொண்டிருப்பாரோ  அதற்காகத்தான் தன்னையும் வெளியேற்றினாரோ என்கிற எண்ணம்  வந்து போனது. ஆனால் அடுத்த கணமே இருக்காது, எண்ணங்களையெல்லாம் தெரிந்து கொள்ள அவரென்ன கடவுளா என தன்னைச் சமாதானம் செய்துகொண்டான்.

சாமிநாதனுக்கு பெண்ணுடல் லட்சுமி வழியாய் அறிமுகமானது. பதினைந்து அல்லது பதினாறு வயதில் கிணற்றில் குளிக்கிற சாக்கில்,  அவளறியாமல் அவளின் குறுமுலைகளை உரசிப் பார்த்துக் கொள்வான். விளையாட்டுத் தருணங்களில் ரகசியமாய் அவள் உடலைத் தொட்டுப் பார்த்து அப்போதுதான் விழித்திருந்த காமத்தை மெல்ல வளர்த்தான்.  அவன் நினைவில் எப்போதும் லட்சுமியே இருந்தாள். தினமும் காலை ஒன்பது மணிக்கெல்லாம் அவள் மாடுகளை ஓட்டிக் கொண்டு ஏரிக்கரைக்கு வந்துவிடுவாள். பின்னாலேயே சாமியும் அவள்  தின்பதற்கு எதையாவது எடுத்துக் கொண்டு சாணியள்ள ஒரு கூடையையும் எடுத்துக் கொண்டு வந்து சேர்வான். இப்போதெல்லாம் சாமி மாடு மேய்க்க வரும் பயல்களுடன் விளையாடுவதை நிறுத்தி விட்டிருந்தான். சதா லட்சுமியோடு சுற்றிக் கொண்டிருந்தான். அவளோடு மண்ணில் கோடுகளைக் கீறி ஆடுபுலி ஆட்டமோ அல்லது புளியங்கொட்டை ஆட்டமோ விளையாடுவான். ஏரிக்கரைச் சரிவில் நாவல் பழம் பறிக்க, கொடுக்கலிக்காய் பறிக்க இருவரும் சேர்ந்து போவார்கள். மரத்தின் மீது ஏற்றி விடும் சாக்கில் அவளைத்  தொட்டுப் பார்த்து விடுவான். முலைகள் அவன் மீது உரசும்போதுதான் அவனுக்குத் தீப்பற்றிக் கொண்டதைப் போலிருக்கும். ஓரிரு வருடங்கள் வரை அவன் தைரியம் அதுவரைதான்  அவனை அனுமதித்தது.

லட்சுமிக்கு காமம் இன்னும் விழித்திருக்கவில்லை. அவள் சிறு பெண்ணாக, கள்ளம் கபடம் இல்லாமல் அவனுடன்  பழகினாள். சாமிக்கு எப்படியாவது அவளிற்கு முத்தம் கொடுத்துவிட வேண்டும் என்கிற ஆசை இருந்தது.  நாட்பட நாட்பட முத்த எண்ணம் புணர்ச்சிக்கு கூட்டிப் போனது.  எப்போதும் நினைவில் அவளின் மேல் விழுந்து புரண்டு கொண்டிருந்தான். சம்பவங்களை உருவாக்கி அதன் முடிவில் அவள் தன் மேல்  விழுவதாகவும், தான் உடனே அவள்  உடைகளைக் களைவதாகவுமாய் அவன் பகற் கனவுகள் நீண்டு கொண்டிருக்கும்.

 லட்சுமி மேலும் களையாக, அழகானவளாக அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தாள். அவன் வயதையொத்த பயல்களுடன்  லட்சுமி குறித்து ரகசியமாய் பேசிக் கொள்வான். அவள் தன்னைக் காதலிப்பதாகவும் ஆலமரத்தடிக்குப்  பின்னால் வரச் சொல்லித்  தன்னை எப்போதும் கூப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் அடித்து விடுவான். லட்சுமி குறித்து அறிந்த பயல்கள் அவனை நம்ப மாட்டார்கள். போடா ஆண்டி, என அவனை கிண்டலடித்துவிட்டு ஓடிவிடுவார்கள். அப்போதெல்லாம் சாமிக்கு இன்னும் வெறியேறும்.

ஒரு முத்தம் கொடுத்துவிட்டால் மடங்கி விடுவாள் என இன்னொருவன் சொன்னதைக் கேட்ட நொடியில் அவன் மனதில் ஒரு திட்டம் மெல்ல உருவானது. சாமி அதற்கு மேல் பொறுமையற்றவன் ஆனான். எப்படியாவது அந்தத் திட்டத்தை செயல்படுத்தி விடும் முனைப்பில் இருந்தான். சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.

ஒரு மாலையில் ஏரிக்கரையில் லட்சுமி தனியாக இருந்தாள்.  மேற்கில் சூரியன் விழுந்துவிட்டது. மாடுகள் மேய்ச்சலை முடித்திருந்தன.  சாமி வீட்டிற்குப் போவதாய் அவளிடம் சொல்லிக் கொண்டு முன்னரே கிளம்பி வழியில் இருக்கும் பெரிய ஆலமரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். லட்சுமி மாடுகளை ஏரிச்சரிவிலிருந்து வீட்டிற்கு விரட்ட ஆரம்பித்தாள். ஏரிக்கரை சரிவில் இரண்டு பெரிய ஆலமரங்கள் இருந்தன. அதைத் தாண்டினால் இடுப்பளவிற்கு புதர் மண்டியிரு க்கும். அதைக் கடந்துதான் ஊருக்குள் செல்லும் மண்பாதைக்குப் போக வேண்டியிருக்கும்.

அவள் அப்புதரைக் கடக்கும்போது  சாமிநாதன் வெளிப்பட்டான். லட்சுமி இங்க வரியா என அழைத்தான்.

“என்னா சாமிநாதா நீ இன்னும் வூட்டுக்கு போவலயா” என்றபடியே அவனை நோக்கி வந்தாள். அன்று லட்சுமி  வெளிர் நீல தாவணி அணிந்திருந்தாள். கழியை வீசி மாடுகளை விரட்டியிருந்ததால் மாராப்பு ஒதுங்கி ஜாக்கெட்டில் முலை துருத்திக் கொண்டு அவனையேப் பார்ப்பது போலிருந்தது. நெருங்கியவளின் மீது
சற்றும் தாமதிக்காமல்  பாய்ந்தான். அதை ஒருபோதும் எதிர்பாராதவள் நிலைகுலைந்து கீழே விழுந்தாள். சாமி மேலே படுத்து அவள் முலைகளைப் பிசைந்தான். லட்சுமி அலறினாள். தன் வாய் கொண்டு அவள் வாயைப் பொத்தினான். அவசர அவசரமாக அவள் பாவாடையை மேலேற்றினான். அன்று அவள் உள்ளாடை  அணிந்திருக்கவில்லை. அவன் உடையைக் களைவதற்குள் சுதாரித்துக் கொண்ட லட்சுமி  பலங்கொண்ட மட்டும் அவனைப் பிடித்து கீழே தள்ளினாள். எழுந்து நின்று அவன் அடிவயிற்றில் ஒரு எத்து விட்டாள்.

“அட எச்சக்கல நாயி யார்கிட்ட வச்சிக்கிற?”

 என இறைந்தவள், ஆத்திரம் அடங்காது மாடு மேய்க்க வைத்திருந்த நீண்ட கழியால் அவனை அடித்து நொறுக்கினாள் . வலி தாங்க முடியாமல் எழுந்து ஓட ஆரம்பித்தான். ஆத்திரமும் கோபமும் மிக, சுற்றி முற்றிக் கீழே பார்த்தவளுக்கு வாகாய் ஒரு கருங்கல் கிடைத்தது. அதை எடுத்து அவன் தலையைக் குறிபார்த்து வீசினாள். நல்ல கூரான கருங்கல் ’னங்’ கென அவன் மண்டையைப் பதம் பார்த்தது. ரத்தம் வழிய வழிய நிற்காமல் ஓடினான்.

பின்னும்  ஆத்திரம் தீராத லட்சுமி தன் உடைகளை சரிசெய்து கொண்டு

”தேவிடியாபையா நாளைக்கு வர்ரண்டா உன் வூட்டாண்ட, மவன செத்தடா நீ”

எனக் கத்தியபடியே காற்றில் கழியை வீசிக்கொண்டு முன்னால் போன மாடுகளை நோக்கி விரைந்து நடக்க ஆரம்பித்தாள்.

மூச்சு வாங்க ரத்தகாயத்துடன்குடிசையை அடைந்த சாமிநாதனை ஜோசியர் பார்த்து, உடனடியாக வெட்டுகாயச் செடியின் தழையைப் பறித்து  அரைத்துக் கட்டினார். என்னாயிற்று எனக் கேட்டதற்கு கீழ விழுந்துட்டேன் எனச் சொல்லி சமாளித்தான்.

அன்று முழுவதும் சாமிநாதன் பயத்தில் வெளிறிப் போய் கிடந்தான். இரவில் தூக்கம் சுத்தமாய் வரவில்லை. தலை வேறு விண் விண் என வலித்துக் கொண்டிருந்தது. எப்படியும் நாளைக் காலை லட்சுமி அவள் சொந்தக்காரர்களை கூட்டி வந்து விடுவாள். தலைகீழாகக் கட்டி தொங்கவிடுவார்களோ அல்லது போலிஸில் பிடித்துக் கொடுத்து விடுவார்களோ என்றெல்லாம் எண்ணிப் பயந்து கொண்டிருந்தான். நள்ளிரவில் எழுந்து போய் ஜோசியர் பூஜை செய்யும் கடவுள் படங்களுக்கு முன் நின்று மனம் உருக வேண்டிக் கொண்டான். இனி செத்தாலும் இப்படி ஒரு தவறைச் செய்யமாட்டேன். இந்த ஒரு முறை மட்டும் காத்து ரட்சி தேவி என மனமுருக துர்க்கை அம்மனை வேண்டிக் கொண்டான்.

அடுத்த நாள், ஒன்றும் அசம்பாவிதமாக நிகழவில்லை. சாமிநாதன் குடிசையை விட்டு வெளியே போகவே இல்லை. காலை முதல் மாலை வரை வீட்டில் இருந்த வேலைகளை செய்து கொண்டிருந்தான். எருமட்டை நிறைய சேர்ந்து கிடந்ததால் ஜோசியரும் அவனை ஒன்றும் கேட்கவில்லை. அடுத்தடுத்த நாட்களிலும் கூட சாமி குடிசையை விட்டு நகரவில்லை. அங்கேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். பயம் அவனை விட்டு அகலாதிருந்தது.

நான்கு நாட்கள் கழித்து எருமட்டை தீர்ந்துவிட்ட பின்பு சாணியெடுக்கப் போயே ஆக வேண்டும். தயங்கியும் பயந்துமாய் வீட்டை விட்டு வெளியேறி ஏரிக்கரைக்குப் போனான். நுணா மரத்தடியில் லட்சுமியும் வழக்கமாய் மாடு மேய்க்க வரும் பாட்டியும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். இவன் அவசர அவசரமாய் போய் அங்கங்கே கிடந்த சாணக் குவியலை அள்ளி கூடையில் போட்டுக் கொண்டான். அந்தப் பாட்டி இவனைப் பார்த்து

”டேய் சாமிநாதா இங்க வா” எனக் கூப்பிட்டது,

காதில் விழாதவன் போல அவசர அவசரமாய் கூடையை நிரப்பி எடுத்து தலையில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தவனை லட்சுமியின் ஏய் சாமி என்கிற குரல் நிறுத்தியது.

அசையாமல் கூடையோடு கல் மாதிரி நின்றான். லட்சுமியே எழுந்து அவனருகில் வந்தாள். அவனைப் பார்த்து குறும்பாய் புன்னகைத்தபடியே. தலையில அடி ஜாஸ்தியா எனக் கேட்டாள். முறைத்து விட்டு நகரப் பார்த்தவனை தடுத்து நிறுத்தினாள்.

“எங்கூட்ல மட்டும் சொல்லியிருந்தேன் மவனே இன்னிக்கு நீ இங்க இருந்திருக்க மாட்ட, ஒழுங்கு மரியாதயா நடந்துக்க இனிமே, சரியா?” என்றாள்.

சரி எனும் விதமாய் அவசர அவசரமாய் தலையாட்டினான்.

“சரி போ”  எனச் சொல்லி விட்டு மரத்தடிக்காய் திரும்ப நடக்க ஆரம்பித்தாள்.

சாமிநாதனுக்கு அப்போதுதான் உயிர் வந்தது. நான்கு நாட்களாய் அரண்டு போய் கிடந்தவனுக்கு சிரிப்பு வந்தது. தேவிடியா இருடி உன்ன வச்சிக்குறேன் என மெல்ல மனதிற்குள் கறுவிக் கொண்டான். அதோடு சாமிநாதனின் பதின்மம் முடிவிற்கு வந்தது.

 பஞ்சாங்கத்தை தினம் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். ஜோசியர் இன்னும் தளரவே சமையல் பொறுப்பும் அவன் மீது  விழுந்தது. அவ்வளவுதான் அடுத்த எட்டு வருடங்கள் அவனால் குடிசையை விட்டு நகரமுடிந்ததில்லை. எப்போதாவது சினிமா பார்க்க அல்லது ஊர் திருவிழாவிற்கு மூங்கில் துறைப் பட்டு போய் வருவதோடு சரி. அவன் வயதையொத்த பயல்களின் சகவாசமும் மொத்தமாய் விட்டுப் போயிற்று.

இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, கனவில் நினைத்துக் கொள்ளக்கூட பெண் பிம்பங்கள் இல்லாத இளம் பருவமாய் இருந்து கொண்டிருந்தது. அப்போதுதான் அந்தப் பெண் வந்தாள். அன்று கார்த்திகை தீபம்.  நேற்று இரவிலிருந்தே நல்ல மழை வேறு. அதிகாலையில் மழை சற்று விட்டிருந்தது. ஜோசியர் அந்த மழையிலும் வழக்கம்போல் எழுந்து குளித்துவிட்டு எட்டு மணி வண்டிக்கு திருவண்ணாமலை போக தயாராகிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவர்கள் வந்தனர். அந்தப் பெண் கருமாரியம்மன் சிலை போன்ற நிறமும் உடற்கட்டும் கொண்டிருந்தாள். அதிகாலையிலேயே குளித்திருக்க வேண்டும், மஞ்சள் பூசி சாந்து பொட்டு வைத்திருந்தாள். பார்க்க பார்க்க அவனால் கண்களை அவள் மீதிருந்து எடுக்க முடியவில்லை. உடன் வந்த வயதானவர் ஜோசியரைப் பார்க்க வேண்டும் எனச் சொன்னபோது அமரச் சொல்லிவிட்டு குடிசைக்குப் பின்னால் போய் நின்று கொண்டான். மறைவாக இருந்து கொண்டு அவளையே வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி ஒரு பெண்ணை இதுவரையும் இனிமேலும் பார்க்க முடியாது என்ற எண்ணம் தோன்றியது. திருமணம்தான் அவர்களின் பிரச்சினை என்றதும் அவனுக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. எப்போதுமில்லாததாய் ஜோசியர் அவர்களைப் பார்க்கவும் மறுத்து விட்டார். அவர்களை அனுப்பி விடச் சொல்லி அவனிடம் சொன்னார்.

அந்தப் பெண் தான் அவனிடம் விலாசத்தைக் கொடுத்தாள். குரலில் அவ்வளவு திண்மை. கோவில் மணி ஒலியைப் போல பேசினாள். தேவபாண்டலம்தான். அதிகபட்சம் அரை மணி நேரத்தில் போய்விடக் கூடிய ஊர். அவர்கள் போன பின்பு சாமிக்கு அவள் மீதான பித்து இன்னும் கூடியது. அறியாப் பருவத்தில் லட்சுமியின் மீது வந்த மையல் எல்லாமும் இப்போது நினைவிற்கு வந்தது. இரண்டு நாட்கள் அவள் நினைவாகவே கிடந்தான்.

இன்று காலை ஜோசியர் அவன் பெயர் சொல்லி அழைத்தார். அவர் பெயர் சொல்லி அழைப்பது அபூர்வம். யோசனையாய் சென்றவனிடம் ஒரு கட்டு பணத்தை கையில் திணித்தார். துணிமணிகளை எடுத்துக் கொண்டு புறப்படச் சொன்னார். எங்கே என திகைப்பாய் கேட்டவனிடம் எதுவும் சொல்லாது குடிசைக்குள் போய் சாமிப் படங்களின் முன் கண் மூடி அமர்ந்துவிட்டார். சிலையாய் சில நேரம் நின்றவன். மெல்ல தன் உடைகளைத் தேடி எடுத்து ஒரு மஞ்சள் பையில் போட்டுக் கொண்டு கிளம்பினான்.

பேருந்து எதுவும் வரும் வழியைக் காணோம்.  சாமி நாதன் சட்டைப் பையைத் தடவினான். ஒரு பேப்பர் கையில் கிடைத்தது.  அந்தப் பெண்ணின் விலாசம். சாமிநாதனுக்கு உடல் ஜிவ்வென்றானது. கையில் பணம் வேறு இருந்தது. போய்த்தான் பார்ப்போமே என்ற எண்ணம் உதித்தது. சுற்று முற்றும் பார்த்தான். மஞ்சு ஒயின்ஷாப் என்கிற போர்ட் கண்ணில் பட்டது. ஒரிருமுறை பியர் குடித்திருக்கிறான். திருவிழா சமயத்தில் ஊருக்குள் வரும்போது அவன் செட்டுப் பயல்களோடு குடித்து அதன் சுவை பிடிக்காமல் போகவே தொடராதிருந்தான். இன்று ஏனோ குடிக்க வேண்டும் போல் இருந்தது. நேராய் கடைக்குள் போனவன். அங்கிருந்த பழைய உடைந்த சேரில் உட்கார்ந்தான். என்ன என்று கேட்ட பையனிடம் ஒரு பீர் என்றான். காலையில் குளுமையாய் பீர் அவன் வயிற்றில் இறங்கியதும் அவன் வேறொரு ஆளானான்.

சட்டைப்பையிலிருந்த விலாசத்தை மீண்டும் படித்தான். அருகில் இருந்தவரிடம் பாண்டலத்துக்கு எப்ப பஸ்ஸு என்றான். பன்னண்டுக்கு வள்ளிசெல்வன் வருவான் என்றார். ஒரு பீர் முடிந்திருந்தது. உலகமே தெள்ளத் தெளிவாய் ஆனது போல இருந்தது. தள்ளாட்டமாய் எழுந்து கொண்டவன் 12 பணி பஸ்ஸைப் பிடித்து தேவ பாண்டலம் என்கிற கிராமத்தில் இறங்கினான். பஜனைக் கோவில் தெரு எதுவென அங்கிருந்த டீக் கடையில் விசாரித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். மிகச் சிறிய ஊர். அந்தத் தெருவில் கடைசி வீடு. கொஞ்சம் உயரமான கூரை வீடு. இரண்டு பக்கமும் சாணத்தால் மெழுகிய   திண்ணை இருந்தது. வாசலில் அகலமாய் கோலம் போட்டிருந்தது. கதவு லேசாக ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது. சாமி வெளியில் நின்றபடியே பெரியவரே எனக் கூப்பிட்டான். அந்தத் தெரு கனத்த மெளனத்திலிருந்தது. ஒரே ஒரு மனிதத் தலையைக் கூட காணவில்லை. எல்லோரும் வயல் வேலைகளுக்கு போய்விட்டிருக்கக் கூடும். பதில் வராமல் போகவே வீட்டிற்குள் நுழைந்து கதவைத் தள்ளினான்.

அந்தப் பெண் நடு வீட்டில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு தலைவாரிக் கொண்டிருந்தாள். இவனுக்கு சற்றுத் திக் கென்றானது. ஏதோ சொல்ல வாயெடுத்தவனை உள்ள வாங்க என்ற அவளின் வெண்கலக் குரல் தடுத்து நிறுத்தியது. உள்ளே போய் அமர்ந்தவனை சாப்புட்ரீங்களா எனக் கேட்டாள். தலையாட்டினான். உள்ளே போய் ஒரு அகலத் தட்டில் பழைய சோற்றைப் போட்டு நிறைய மோர் ஊற்றி அவனிடம் கொடுத்தாள். அரைப் போதை சுத்தமாய் தெளிந்திருந்தது. நல்ல பசி வேறு, சோற்றை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டிருந்தான். அவள் அவ்வளவு நிதானமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடிந்ததும். சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். தட்டிலேயே கைக் கழுவிக் கொள்ளச் சொன்னாள். அவன் பொம்மையைப் போல அவள் சொன்னதைச் செய்தான். தட்டை உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டு திரும்பி வந்து வாசல் கதவை அழுத்திச் சாத்தினாள். அவனுக்காய் திரும்பி நின்று அவனை ஆழமாய் பார்த்தாள். சாமி  பயமும் தடுமாற்றமுமாய்எழுந்து நின்றான். சிவப்பு நிறப் புடவை அணிந்திருந்தாள். அன்று போலவே மஞ்சள் பூசிய முகத்தில் வட்டமாய் சாந்து பொட்டு. சாமியின் இருபத்தைந்து வருட இளம் காமம் சடாரென தலைக்கேறியது. ரத்தம் ஓட்டம் குபீரென அவன் உடம்பில் தாறுமாறாகியது அவள் மீது பாய்ந்தான். அவள் அவனை ஏந்திக் கொண்டாள்.

- மேலும்

Thursday, May 4, 2017

லார்ஸ் வோன் ட்ரையரைக் காணுதல்


லார்ஸ் வோன் ட்ரையரின் திரைப்படங்களை மீண்டும் பார்ப்பது என்பது அத்தனை இலகுவான காரியம் இல்லைதான். ஆனாலும் துணிந்து ஆரம்பித்து விட்டேன்.இவரின் படங்கள் யாவும்  மனித வாழ்வின் இருண்மையை, ஆழமான துக்கத்தை அவநம்பிக்கையை வரலாற்றோடும் அரசியலோடும் இணைத்துப் பேசுபவை. புனைவுடல்களின் வதை, அதன் களிப்பு, பன்முனைக் காமம் போன்றவையும் இவரது இழையூடான பேசுபொருள்கள்.

’ஆன்ட்டி க்ரைஸ்ட்’ படத்தின் வழியாகத்தான் லார்ஸ் வோன் ட்ரையரின் உலகத்திற்குள் நுழைந்தேன். அது தந்த அதிர்ச்சியும் துக்கமும் வெகு நாட்கள் நீடித்திருந்தன. அடுத்ததாக ’ப்ரேக்கிங் த வேவ்ஸ்’ இவ்வளவு பைத்தியத் தன்மையும் துக்கமும் காதலில் இருக்க முடியுமா என என்னை அரற்ற வைத்தது. எமிலி வாட்ஸன் என்கிற நடிகையின் ஒரே மகத்தான படமாக இதுவே அமைந்தது. ’இடியட்ஸ்’ - டாக்மி  95 தியரி அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் போர்னோ அடிப்படையில் கூட என்னைக் கவரவில்லை. கூட்டுக் கலவி, நிர்வாணத்தின் சுதந்திரம் போன்றவை ஐரோப்பாவில் தேய்ந்த ஜானர்கள்.  ’டிண்டோ ப்ராஸ்’ மாதிரியான ஜாம்பவான்கள் கோலோச்சிய தளம். இது லார்ஸ் வோன் ட்ரையரின் படமில்லை என்கிற எண்ணமே இடியட்ஸ் பார்த்த பிறகு தோன்றியது.  டாக்மி தியரிப்படியே டைரக்டர் க்ரெடிட் டும் இடியட்ஸ் படத்திற்கு கிடையாது. போலவே ’டாக்வில்லே’ படமும் தலைச் சுற்றலைக் கொண்டுவந்தது. அவ்வளவு நவீனமான திரைமொழி. நவீன ஸ்டேஜ் ட்ராமாவாகவும் புரிந்து கொள்ள முயன்று தோற்றேன். லார்ஸ் வோன் படங்களைத் திரும்பப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றக் காரணமாக இருந்ததும் இப்படத்தின் புரிந்து கொள்ள முடியாதத் தன்மைதான். 

’டான்சர் இன் த டார்க்’ திரைப்படம்தான் லார்ஸ் வோனின் சாதனைப் படம் என்பேன். அவரின் மற்ற படங்களின் ஒப்பீட்டளவில் இதுவே அகதி அரசியலை மிக நேரடியாகப் பேசியது. ’நிம்போமேனியாக்’, ’மெலன்கோலியா’ போன்ற படங்கள் வதையின் உச்சம்.  குறிப்பாகப் பெண்ணுடலின் கிளர்ச்சியையும் வலியையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டன. ஐந்து மணி நேர நிம்போமேனியாக்கை ஒரே அமர்வில் அயராது பார்த்து முடித்தது என் தனிப்பட்ட சாதனை.

த எலிமெண்ட் ஆஃப் க்ரைம், ஈரோபா போன்ற திரைப்படங்களும் கிங்க்டம் உள்ளிட்டத் தொலைக் காட்சித் தொடர்களும் இன்னும் பார்க்க வேண்டியுள்ளன. ஒரே இயக்குனரின் மொத்த படங்களையும் தொடர்ச்சியாகப் பார்ப்பது நிஜமாகவே தனி அனுபவம்தான். தற்சமயம் இவரின் ஆழமானப் படங்களைக் காணும் மனநிலையும் வாய்த்திருக்கிறது. பிடித்ததில் இருந்து ஆரம்பிப்போமே என ’டான்சர் இன் த டார்க்’ திரைப்படத்தை கடந்த வாரம் பார்த்தேன். இரண்டாம் முறை பார்க்கும் போது முதல் தடவை பிடிபடாத அமெரிக்க அரசியல் பார்வைகள் துலங்கின. விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.


Monday, May 1, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினான்கு

சங்கமேஸ்வரன் திகைத்து நின்றான்.  இயற்கை உபாதைக்காக புதர் மறைவிற்காய் சென்ற மலர்செல்வியைக் காணோம். இருள் வேறு கவிந்து வருகிறது. இன்னும் பல காத தூரம் இந்தக் கானகத்தின் வழியே நடந்து செல்ல வேண்டும். குமார பர்வதத்தின் அடர்த்தியும் இதில் வசிக்கும் எண்ணற்ற ஜீவராசிகளின் கடும் விஷத்தன்மை குறித்தும் அறிந்திருந்தான். ஒரே ஒரு பச்சைத் தவளை தன் எச்சத்தை உமிழ்ந்தாலும் என்னாகும் என யோசிக்க யோசிக்க பயம் அடிவயிற்றைக் கவ்வ ஆரம்பித்தது. இனியும் தாமதிக்க வேண்டாம் என முடிவு செய்தவனாய் நடந்து செல்ல வேண்டிய பிரதான தடத்தில், ஒரு கொத்துத் தீக் கொன்றை மலர்களை அடையாளத்திற்காய் வைத்து விட்டு புதரை நோக்கி நடந்தான்.

கழுத்தளவு வளர்ந்திருந்த புதருக்குப் பின்னால் நீரின் சலசலப்புக் கேட்டது. சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு சப்தம் வந்த திசைக்காய் நடந்தான். நடக்க நடக்க சப்தம் பெரிதாகிக் கொண்டே வந்தது. மலர் மலர் என பெருங்குரலில் கத்திக் கொண்டே நடந்தான். பெரும் நீர்ச் சப்தத்தில் அவன் குரல் அமுங்கிப் போயிற்று. நடந்து கொண்டிருந்தவன் திடுக்கிட்டு நின்றான்.  பத்தடி தூரத்தில் காட்டாறொன்று மண்குழம்பலாய் சிவப்பு நிறத்தில் நுரைத்துப் பொங்கி சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு மிரட்சியடைந்தான். மலர் இங்கு வர வாய்ப்பில்லை என உணர்ந்தவனாய்  வந்த திசைக்காய் திரும்பி ஓட ஆரம்பித்தான். மூச்சிரைத்தது. கால் முட்டி வரைக்கும் செடிகள் வளர்ந்திருந்தன. வரும்போது இப்படி இல்லையே என்கிற எண்ணம் பாதி தூரம் ஓடிவந்த பிறகுதான் தோன்றியது.  வேரொரு திசைக்காய் ஓடினான்.   அதுவும் தவாறான திசையெனத் தோன்றியது. பாதையோரத்தில் கழுத்தளவு  வளர்ந்திருந்த புதர்களைக் காணவே இல்லை.  காட்டாற்றை நோக்கி நடந்த பாதையையும் காணவில்லை.  தடமே இல்லாத வனத்தில் வெகு சீக்கிரத்தில் அவனும் தொலைந்து போனான்.

மலர்களை அடையாளம் வைத்து விட்டு வந்த பிரதான சாலையை எப்பாடுபட்டும் கண்டறிய முடியவில்லை.  மரங்களும் செடிகளும் கொடிகளும் மெல்ல மெல்ல நகர்ந்து எல்லா வழிகளையும் மறைத்துக் கொண்டதைப் போலத் தோன்றியது . எந்தத் திசை, எந்த வழி என பார்த்துக் கொண்டிருக்கும்போதே சடுதியில்  இருள் பிரம்மாண்ட ராட்சதனைப் போல் வந்து, மொத்த வனத்தையும் மூடியது. எல்லா நம்பிக்கைகளையும் ஆற்றலையும் இழந்த சங்கமேஸ்வரன் அருகில் ஏற வாகாய் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறி இலைகள் இல்லாத கிளையில் அமர்ந்து கொண்டான்.

இருள் கண்களுக்குப் பழகியப் பிறகு பார்வை கூர்மையடைந்தது. அசைவுகள் துலக்கமாய் தெரிந்தன. கூடுதலாய் எங்கிருந்தோ படையென வந்த மின்மினிப் பூச்சிகள் இருளுக்கு வெளிச்சத்தை வாரி வழங்கின. சங்கமேஸ்வரனின் பயம் சற்றுக் குறைந்தார்போல் தோன்றியது. மீண்டும் மலர், மலர்செல்வி என இருளின் திசைகளுக்குள் குரலைச் செலுத்திப் பார்த்தான். சில பட்சிகள் மரங்களிலிருந்து எழும்பிப்  பறந்து மீண்டும் அமர்ந்தன. தூரத்தில் ஓநாய்களின் பதிற்கூவல் கேட்டது. அவ்வளவுதான். சகலமும் முடிந்து போனதாய் உணர்ந்தான். சோர்வும் பசியும் துக்கமும்  அவனை மண்டின.

இந்த வனத்தின் அடர்த்தியையும் ஆபத்தையும் உணர்ந்திருந்தும் மலர்ச்செல்வியின் விருப்பத்தை நிறைவேற்றத் துணிந்தது எவ்வளவு பெரிய இடரில் முடிந்திருக்கிறது எனக் குமைந்தான். எல்லா தெய்வங்களையும் மனம் வேண்டிக் கொண்டது. எந்தத் திசையில் விடியும் எனத் தெரியாமல் எல்லாத் திசைகளையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அசலான கானகம் உயிர் கொள்ள ஆரம்பித்தது.

0

சங்கமேஸ்வரன் திருவண்ணாமலை மத்தலாங்குளத் தெருவைச் சேர்ந்தவன். திருவூடல் தெருவிலிருந்த மலர்ச்செல்வியை அவள் பருவமெய்தும் முன்பிலிருந்து காதலித்து வருகிறான். மலர்செல்வியோ அவனை ஏறிட்டும் பார்த்தாள் இல்லை. அவனுடைய காத்திருப்புகள்  மற்றும்  பிரயத்தனங்களிற்குப் பிறகு தன்னை மேற்குத் தொடர்ச்சி மலைச் சமவெளிகளுக்கு அழைத்துச் சென்று வந்தபிறகு அவனைக் காதலிப்பதாய் சொல்கிறாள். மகிழ்ச்சியடையும் சங்கமேஸ்வரன் உடனே ஒப்புக் கொள்கிறான். அவளோ தான் செல்ல வேண்டிய இடங்களைக் குறித்து ஓர் துல்லியக் கற்பனையைக் கொண்டிருக்கிறாள். மனிதர்களின் கால்தடங்கள் பதிந்திராத அசலான கானகத்திற்குள் சென்று வர வேண்டுமென அவள் விரும்பினாள் போலும்.

சங்கமேஸ்வரன் பரிந்துரைந்த வழக்கமான இடங்களை அவள் மறுத்தாள். இந்தப் பயணத்திற்கான திட்டமிடல்கள் ஒரு வருடம் நீண்டன. ஒவ்வொரு முறையும் சங்கமேஸ்வரன் ஒரு இடத்தின் அல்லது கானகத்தின்  பெயரோடு அவளைக் காண வருவான், அவளோ அதைக் கேட்டு சில நிமிடங்கள் அசையாமல் நின்று கொண்டிருப்பாள். பின்பு மெல்லத் தலையசைத்து மறுத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிடுவாள். குஜராத் எல்லையில் துவங்கி கன்னியாகுமரி வரைக்குமாய் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒவ்வொரு சமவெளிப் பகுதியையும் ஆராய்ந்து அவன் கொண்டு வந்த பெயர்கள் அனைத்தையும் அவள் நிராகரித்தாள். மிகவும் சோர்ந்து போன சங்கமேஸ்வரன் தன்னை இதிலிருந்து காக்கும்படியும் அவளே ஒரு இடத்தை சொல்ல வேண்டியுமாய் அவளைக் காணச் சென்றிருந்தான்.

மலர்செல்வி அன்று பர்வதமலைக்குச் சென்றுவிட்டிருந்தாள். அவன் உள்ளுணர்வில் பர்வதம் என்கிற சொல் எப்படியோ உள் நுழைந்தது. மிகவும் பரபரப்பாய் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வரைபடத்தை இணுக்கிணுக்காய் மீண்டும் ஆராயத் துவங்கினான். அவன் கண்ணில் பட்டது அந்தப் பெயர். குமார பர்வதம் அல்லது புஷ்பகிரி.

அடுத்த நாள் அதிகாலையிலேயே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. ஆறு மணி ஆகக் காத்திருந்தான். ஆனதும்,  தன்னுடைய வாகனத்தை எடுத்துக் கொண்டு திருவூடல் தெருவிற்குப் போனான். மலர்செல்வி அவள் வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள் இவன் வண்டியை அவளுக்கு சமீபமாய் நிறுத்தி அருகில் வா என கண்களால் அழைத்தான். மலர்செல்வி அருகில் போனாள். அவன் கிசுகிசுப்பாய் சொன்னான்.

“நாம் செல்லப் போகிற இடத்தின் பெயர் குமார பர்வதம் அல்லது புஷ்பகிரி ”

”மீண்டும் சொல்”

”குமார பர்வதம்”

மலர்செல்வி கைகளில் வைத்திருந்த கோலப்பொடிப் பாத்திரத்தைக் கீழே நழுவ விட்டாள். அணிந்திருந்த நைட்டியிலேயே கைகளைத் துடைத்துக் கொண்டு , உட்கார்வதற்கு வாகாய் அந் நைட்டியை சற்று மேலேற்றி அவன் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டாள். போகலாம் என்றாள். அவன் எங்கெனக் கேட்கவில்லை. சீறலாய் வண்டியைக் கிளப்பினான்.

அந்த வண்டியிலேயே ஆறு நாட்கள் பயணித்து அவர்கள் குமார பர்வதத்தை வந்தடைந்தனர். முதல் இரண்டு நாட்கள் எந்தப் பிரச்சினையும் இல்லை. காலை முதல் மாலை வரை கானகத்தில் அலைந்து விட்டு அவர்கள் தங்கியிருக்கும் சோமவார்பேட்டைக்கு வந்து விடுவார்கள். இன்றுதான் அவள் தன்னுடையை கனவைச் சொன்னாள். சிறு வயதிலிருந்து அவளைத் துரத்தும் ஒரு கனவு என அந்தக் காட்சியை  விவரித்தாள்.

விரிந்த பசும் சமவெளி. நெடுந்தொலைவிற்கு மரங்களோ புதர்களோ இல்லாத வெறும் புல்வெளி. அந்தப் புல்வெளியின் எல்லையில் ஒரு நதி மெல்லிய கோடாய் வழிவது தெரிகிறது. புல்வெளியின் மத்தியில் ஓர் புள்ளிமான். தகதகவென மஞ்சளாய் மின்னும்  சூரியனின் தங்க ரேகைகள் அப்புள்ளிமானின் மீது விழுகிறது. அந்த ஒற்றைப் புள்ளிமான் சலனமில்லாமல், தலையைக் கூடத் தூக்கிப் பார்க்காமல் அமைதியாய் புல்லை மேய்ந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். அவ்வளவுதான் அந்தக் கனவு.

மலர்ச்செல்வி அப்புள்ளிமானைத் தினசரிக் கனவில் கண்டாள். ஒருமுறையாவது அக்கனவை நேரில் பார்த்துவிட வேண்டுமென பைத்தியமாய் இருந்தாள். சதா அவள் நினைவில் அக்காட்சியே தங்கியிருந்தது. குமார பர்வதம் என்கிற பெயரைக் கேட்டதும் அவள் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. மனம் அநிச்சையாய் அக்கனவைத் தனக்குள் நிரப்பிக் கொள்ள உடல் அவன் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டது. இதோ இந்தக் கானகம் அவ்வளவு அழகோடு இருந்தாலும் அவள் கனவில் கண்டக் காட்சியை இன்னும் காண முடியவில்லை. இதுவரை எவரிடமும் சொல்லாத தன் அந்தரங்கக் கனவை, ஆசையை சங்கமேஸ்வரனிடம் சொன்னாள்.
சங்கமேஸ்வரன் உடனே  அதற்கு சம்மதித்தான். இன்றே அதைக் கண்டு விடலாம் என பரபரப்படைந்து சம்வெளிகளின் இடம் குறித்து விசாரித்து வரக் கிளம்பினான்.

ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தவன் மலையின் தெற்குப் பகுதிக்காய் நடக்க ஆரம்பித்தான். இம்மலைச்சரிவில்  நீண்ட பசும் புல்வெளி இருப்பதாகவும் அதன் முடிவில் ஓர் நதி ஓடுவதாகவும் சொன்னான். மலர்செல்வி கண்கள் மினுங்க அவளைப் பார்த்தாள். நெகிழ்ச்சியிலும் பரவசத்திலும் மிதந்தபடியே, அக்காட்சியைக் கண்டதும் தன்னைத் தருவதாக அவன் காதுகளில் கிசுகிசுத்தாள். அதுவரை அவளைத் தொட்டிராதவன்  இழுத்து அணைத்து உதடுகளில் முத்தமிட்டான். மீதி, மலைக்கு அந்தப் பக்கம் எனச் சிரித்தான். அவளும் சிரித்து அவனைத் தழுவிக் கொண்டாள்.

காலை ஆரம்பித்த அவர்களின் மலைப் பயணம் நீண்டு கொண்டே சென்றது. மலை உச்சியை அவர்களால் அடையவே முடியவில்லை. இதோ இதோ என மாலை வந்துவிட்டதே தவிர மலையுச்சி வரவில்லை. இருவருமே சோர்ந்து போயினர். இனித் திரும்பவும் முடியாது என்கிற எண்ணமும் சங்கமேஸ்வரனின் மனதைப் பயமாய் கவ்வியது. அப்போதுதான் இயற்கை உபாதைக்காய் மலர்செல்வி புதர்களின் பின்புறம் சென்று காணாமல் ஆனாள்.

0

மரக்கிளையில் இருளில் வெளவாலைப் போலத் தொங்கி கொண்டிருந்த சங்கமேஸ்வரனுக்கு மரண பயம் மெல்ல விட்டுப் போயிற்று. மலர்செல்வி இனி உயிருடன் கிடைப்பாள் என்கிற நம்பிக்கைகள்அற்றுப் போயின. முதலில் தென்படும் விலங்கிற்குத் தன்னைத் தந்துவிடலாம் என மனதளவில் தயாரானான். அப்படியே உறங்கியும் போனான்.

ஓர் பறவையின் அலறல் சப்தம் கேட்டு விழித்தான். விடிய ஆரம்பித்திருந்தது. காட்சிகள் துலங்கின. இருள் மெல்ல விலக ஆரம்பித்திருந்தது. மரக்கிளையில் எழுந்து நின்று கண்களைத் திறந்தவனுக்கு பெரும் புல்வெளி ஒன்று காணக் கிடைத்தது. மலையுச்சிக்கு சமீபமாய் இருப்பதை உணர்ந்தான். சோர்வாய் இறங்கி நடந்து  பத்து நிமிடத்தில் மலையுச்சியை அடைந்தான்.

காலைச் சூரியன் மேலெழ ஆரம்பித்திருந்தது. கோடையாதலால் பனிப் பொழிவுகள் ஏதும் இல்லை. வெளிர் நீல வானத்தில் தங்கப் பிழம்பாய் சூரியன் மேலெழுந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டவன் உச்சியிலிருந்து பார்த்தான். அவனிற்கு முன்பு ஓர் பசுஞ் சமவெளி விரிந்திருந்தது. சமவெளிக்கு அப்பால் நதியுமிருந்தது. அவன் அக்காட்சியில் உறைந்தான்.

தொலைவில் விலங்கொன்று மெதுவாய் நடந்து வந்து கொண்டிருந்தது. என்ன விலங்கு என்பதைக் காண முடியவில்லை.  ஆனால் அது இன்னொரு உடலை சுமந்து வந்து கொண்டிருந்தது.  பார்ப்பதற்கு மனித உடல் போல் தோன்றியது. சங்கமேஸ்வரன் பித்துப்  பிடித்தவனைப் போல  அந்த விலங்கை நோக்கி ஓட ஆரம்பித்தான். நெருங்க நெருங்க காட்சித் துலங்கிற்று. அஃதொரு புள்ளி மான்.  வெறி கொண்டவனைப் போல அச்சரிவில் புயலாய் ஓடி அம்மானை நெருங்கினான். அம்மானின் உடலில் மலர்ச் செல்வி கிடந்தாள். மான் அவளுடலை ஏந்திக் கொண்டிருந்தது.

சங்கமேஸ்வரன் மூர்ச்சையானான்.

- மேலும்

Featured Post

test

 test