Thursday, August 27, 2009

சில திரைப்படக் குறிப்புகள்

கடந்த ஒரு மாதத்தில் நிறைய திரைப்படங்களைப் பார்க்க முடிந்தது. டோரண்ட் உதவியுடன் பல வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்த சில முக்கியமான படங்களையும் பார்த்தேன். கிம் கி டுக் ன் நான்கு படங்களை ஒரே நாளில் பார்த்தேன்.The bow,The coast guard,Breath ,மற்றும் dream. நான்குமே வெவ்வேறு உணர்வுகளை தந்துவிட்டுப் போனது. இதுவரையில் பார்த்த கிம் கி டுக் ன் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமாக The isle ஐ சொல்லலாம். The bow திரைப்படத்தையும் இதன் தொடர்ச்சியாகத்தான் என்னால் அணுக முடிகிறது. சாத்தியம் சாத்தியமற்றவை என்கிற இரு வேறு கூறுகளை கிம் கி டுக் சுலபமாய் கடந்து போகிறார். மாயா யதார்த்த அல்லது முற்றிலுமான மாயத் தன்மை கொண்ட நிகழ்வுகளை வெகு சுலபமாய் திரைப்படங்களில் நிகழ்த்திக் காட்டுகிறார்.அதீத fantasy லேசான அலுப்பை வரவழைக்கிறதென்றாலும் மயக்கத்தையும் கிளர்ச்சியையும் இவரது படங்கள் தரத் தவறுவதில்லை.

The bow திரைப்படத்தின் களமும் மிகப் பரந்த நீர்வெளியாக இருக்கிறது. இதில் இசை இன்னொரு முக்கிய அங்கம். மயக்கம் தரக்கூடிய ஒரு இசை படம் முழுவதும் கசிந்து வேறொரு மனநிலைக்கு பார்வையாளனை நகர்த்துகிறது. நீரின் மீது ஊஞ்சலாடும் பெண், அவளின் களங்கமில்லா இளமை என திரைப்படம் நம்மை நிலத்திலிருந்து நீரினுக்கு அழைத்துப் போகிறது. இத்திரைப்படத்தில் கடைசிக் காட்சியை பார்வையாளன் தத்தம் கற்பனைக்கு ஏற்ப புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சிறு வயதிலிருந்து ஒரு பெண்ணை வளர்த்து அவளின் பதினேழாவது வயதில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் அறுபது வயது ஆண், சிறு இடைஞ்சலுக்குப் பிறகு அவளைப் பாரம்பரிய முறையோடு தனிப்படகில் திருமணம் செய்து கொள்கிறார். சம்பிரதாய உணவு முடிந்ததும் நீரில் பாய்கிறார்.பின்பு அரூப வடிவில் அவளுடன் கலவி காணாமல் போகிறார். கால்களுக்கிடையில் இரத்தம் இழந்து மீளும் அப்பெண்ணை அவளின் காதலன் எதிர்கொள்வதோடு படம் முடிகிறது. இந்த அறுபது வயது நாயகன் உருவமற்ற தன்மையை அடையவே ஒரு பெண்ணை பதினேழு வயது வரை வளர்த்து மணந்து கொள்கிறான். பின் உருவமற்ற வடிவம் கொண்டு அவளைப் புணர்ந்து பிரபஞ்சத்தோடு கலப்பதாக நான் புரிந்து கொண்டேன். தேவதைக் கதைகளில் வரும் புனைவுச் சாத்தியமாகத்தான் இத்திரைப்படத்தை நான் புரிந்து கொண்டேன்.

The coast guard கரையோரக் காவல்படை வீரன் ஒருவன் வாழ்வில் நிகழும் சம்பவங்களை யதார்த்தமாகவும் லேசான புதிர்தன்மையினோடும் பதிவு செய்திருக்கிறது. காவல் அதிகாரிகள் தங்களைக் காத்துக் கொள்ள அப்பாவிகளின் மீது நிகழ்த்தும் வன்முறைகளை மிக குரூரத்தோடு முன் வைக்கிறது. கண்ணெதிரில் காதலன் உடல் சிதறிப் போனதைக் கண்டு மனம் பிறழும் நாயகி, அவசரப்பட்டுக் கொன்று விட்டோமே என மன உளைச்சலுக்கு உள்ளாகும் காவல் வீரன்,மனம் பிறழ்ந்த பெண்ணை பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரிகள் என பல்வேறு பாத்திரங்கள் முன் வைப்பது சக மனிதன் மீது நிகழ்த்தும் வன்முறைகளை மட்டுமே.

Breath திரைப்படம் அடிக்கடி தற்கொலைக்கு முயலும் சிறைக் கைதி ஒருவனைப் பற்றிப் பேசுகிறது. அவனை வந்து சந்திக்கும் ஒரு பெண் (yeon), அவனை மகிழ்விக்க அவள் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே இதற்காக இது என்கிற காரணங்கள் இல்லாமலே நிகழ்கின்றன. பின்பு அப்பெண் தனக்கு துரோகமிழைக்கும் கணவனைப் பழிவாங்கும் பொருட்டே இவனைச் சந்திக்கிறாளென சொல்லப்படுகிறது. கிம் கி டுக் கின் மிக வித்தியாசமான படமாக இதைச் சொல்லலாம். சந்தேகம்,துரோகம்,ஈகோ என உலகின் எல்லா பாகத்து கணவன் மனைவி உறவுகளுக்கிருக்கும் பிரச்சினைகளையும் இப்படம் தொட்டிருக்கிறது.ஒரே விநோதம் அல்லது புதிர்தன்மை சிறைக் கைதியை மிக மகிழ்வாக வைத்திருக்கும் அப்பெண்ணின் நடவடிக்கைகள்தாம்.அவனை தன் பழைய காதலனாக நினைத்துக் கொள்வதும், அவன் வாழும் அச்சிறை சூழலுக்கு வசந்தகால, பனிக்கால உள்கட்ட அமைப்புகளை செய்து கொடுப்பதுமாய் அவளது நாட்கள் நகர்கின்றன. அவனும் மெல்ல அப்பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். மேலும் அக் கைதியின் உடனிருக்கும் சக சிறைவாசி ஒருவனுக்கு இவனின் காதல் பிடிக்காமல் போகிறது. சிறைக் காட்சிகளில் இவரது வழக்கமான குரூரம் தெறிக்கிறது.

இதுவரை நான் பார்த்திருந்த இவரது படங்களில் சிறைக் காட்சிகள் பொது அம்சமாக இருக்கின்றன. இவரின் பெரும்பாலான பிரதான பாத்திரங்கள் சிறையிலிருக்கிறார்கள். அல்லது சிறையிலிருந்து தப்பித்தவர்களாக இருக்கின்றனர். சிறை கிம்கிடுக்கை ஏதோ ஒரு வகையில் பாதித்திருக்கலாம். எட்டுத் திரைப்படங்களுக்குப் பிறகு கிம் கி டுக் எனக்கு அலுத்துப் போனார். அவரின் மிகச் சிறந்த படம் என எவராவது பரிந்துரைத்தால் மீதிப் படங்களைப் பார்த்துக் கொள்ளலாம் அதுவரை குட் பை கிம் கி டுக் என இரான் சினிமா பக்கம் ஒதுங்கியாயிற்று.

இரானிய திரைப்படங்கள் எளிமையானவை, மிகுந்த உணர்வுப் பூர்வமானவை. பார்வையாளனை மிகச் சுலபமாய் நெகிழ்வுத் தன்மைக்குத் தள்ளிவிடுபவை. மஜித் மஜிதி, அப்பாஸ் கிராஸ்தமி, மக்பல்ஃப் , ஜாபர் போன்றோர் தொடர்ச்சியாய் தமது சிறப்பான பங்களிப்பை இரானிய சினிமாக்களில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். Dariush_Mehrjui, யின் இயக்கத்தில் 1969 இல் வெளிவந்த The cow என்கிற கறுப்பு வெள்ளைத் திரைப்படம் இரானிய சினிமாவில் மிக முக்கியமானது. ஒரு பசுவின் மீது மனிதனுக்கிருக்கும் காதலை, பெருமையை, அப்பசுவே தன்னுடைய உலகமாக நினைத்து வாழும் எளிமையான கிராமத்து மனிதனின் வாழ்வை, இப்படம் பேசுகிறது. கிராமத்து மனிதர்களிடமிருக்கும் , ஒற்றுமை, அன்பு, அறியாமை, உதவும் குணம், கோபம் என எல்லா உணர்வுகளையும் இத் திரைப்படம் துல்லியமாய் பார்வையாளனிடத்தில் சேர்க்கிறது. இத் திரைப்படம் வந்த காலகட்டம் மிகவும் வியப்பிற்குறியதாய் இருந்தது. கறுப்பு வெள்ளையில் இத்தனை துல்லியமாய், ஒரு உணர்வு ரீதியிலான படத்தை எப்படி உருவாக்க முடிந்தது என வியந்து கொண்டிருந்தேன். இது தவிர்த்து அப்பாஸின் taste of cherry யையும் the white balloon ஐயும் பார்க்க முடிந்தது.

ஈரான் ஈராக் கூட்டுத் தயாரிப்பில் வந்த Turtles can fly படத்தையும் சென்ற வார மதியத்தில் பார்த்தேன். ஈழநாதன் ஒருமுறை பின்னூட்டமொன்றில் இத்திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்டது நினைவில் வந்தது. அமரிக்க ஈராக் போர்தான் இத்திரைப்படத்தின் களம். போரில் அலைக்கழிக்கப்படும் சிறுவர்கள் / பதின்மர்களின் உலகத்தில் நிகழும் குரூரங்களை பதிவு செய்திருக்கும் படமிது. ஒரு சிறுமியின் தற்கொலையிலிருந்து துவங்கும் இப்படத்தைப் பார்த்து முடித்த பின்பு மிகுந்த அலைக்கழிப்பிற்குள்ளானேன். நிம்மதியின்மையும் கசப்புணர்வும் அந்த மாலையில் துவங்கி இரவு முழுவதும் தங்கியிருந்தது. இவளது மொழியில் சொல்லப் போனால் அன்று குடிப்பதற்கு அத்திரைப்படம் ஒரு காரணமாய் இருந்தது. ஆனால் இத்திரைபடம் ஒரு பக்க சார்பானது என்பதாய் விமர்கர்களால் விமர்சிக்கப் படுகிறது. சதாமின் வீழ்ச்சியைக் கொண்டாடுவதாகவும் அமெரிக்க அழித்தொழிப்பை ஆதரிப்பதாகவும் இருக்கிறது என்பதான கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் இத்திரைப்படம் பார்த்து முடித்ததும் புஷ்ஷின் முகத்தில் காறி உமிழத்தான் எனக்குத் தோன்றியது.

ஸ்டேன்லி குப்ரிக்கின் மொத்த படங்களில் Lolita மட்டும் பார்க்காமல் இருந்தது. விளாடிமிர் நபக்கோவ் எழுதி மிகவும் புகழ்பெற்ற லோலிட்டா நாவலை குப்ரிக் 1962 ல் திரைப்படமாக்கி இருப்பார். நாவலை ஏற்கனவே படித்திருந்ததால் திரையில் என்னால் ஏமாறவே முடிந்தது. நாவலாய் படிக்கும் போது இருந்த கிளர்ச்சியும், காமமும் படத்தில் முழுமையாய் என்னால் உணரமுடியவில்லை. ஸ்டேன்லி குப்ரிக்கின் படங்களில் இயல்பாய் இருக்கும் அதீதத்தை இதில் பார்க்கமுடியவில்லை. படு யோக்கியமாய் படமாக்கி இருந்த குப்ரிக்கின் மீது லேசான கோபமும் எழுந்தது.ஆனால் இத்திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் மிகச் சிறந்த மாற்றுப் படமாக இருந்திருக்கலாம்.

சென்ற வார வெள்ளிக்கிழமைக் காலையை அமரோஸ் பெர்ரோஸ் படம் அழகாக்கியது. தூங்கி எழுந்தவுடன் இத்திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன் இரண்டரை மணி நேரங்கள் ஓடும் இத்திரைப்படம் இன்னும் சிறிது நேரம் நீடிக்காதா என்ற ஏக்கத்தை வரவழைத்துவிட்டுப் போனது. மணியின் ஆயுத எழுத்து படத்திற்கான ’இன்ஸ்பிரேசன்’ இத்திரைப்படம்தான். கோலிவுட்காரர்களின் ’இன்ஸ்பிரேசன்’ ஸ்பானிஷ் மொழி வரை விரவியிருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சிதான். பாபேல்,21 கிராம்ஸ் படங்களை இயக்கிய Alejandro González Iñárritu வின் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த படமிது. மோட்டர் சைக்கிள் டைரீஸ் படத்தில் இளமைக் கால சேகுராவாக நடித்திருந்த Gael García Bernal இதில் ஆக்டோவியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரை விட el chivo கதாபாத்திரமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு சாலை விபத்திலிருந்து மூன்று கதைகளாக விரியும் இத் திரைப்பட யுக்தி வெகுவான எடிட்டிங் உழைப்பைக் கொண்டிருக்கிறது. நாய்ச் சண்டை காட்சிகளை படமாக்கி இருந்த விதமும் அழுக்கு மண்டிய ஒரு பொந்தில் பல நாய்களோடு வசிக்கும் el chivo கதாபாத்திரம் தந்த உணர்வும் புதுவிதமானது.இத் திரைப்படத்தைப் பற்றி விரிவாக பகிரும் எண்ணமிருப்பதால் இக்குறிப்புகளோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஆந்த்ரே தர்க்கோயெவ்ஸ்கியின் ஸ்டாக்கர், பாசோலினியின் அராபியன் நைட்ஸ், கீஸ்லோவெஸ்கியின் The Decalogue வரிசைகளில் கடைசி மூன்றையும் பார்த்து முடிக்க முடிந்தது அவை குறித்துப் பின்பு.

Monday, August 24, 2009

சென்னை சில நினைவுகள்


எட்டாம் வகுப்பு அ பிரிவு நண்பர்களோடுதான் சென்னையை முதன்முறையாய் எதிர்கொண்டேன். ஒரு சிறுநகரப் பதின்மனின் ஆச்சர்யங்களும், வியப்பும் எனக்கு அப்போது சற்று அதிகமாகவே இருந்தது. மகாபலிபுரம்,விஜிபி கோல்டன் பீச், மெரினா என சென்னைக்கு உள்ளும் புறமும் சுற்றி வந்ததில் சென்னை மிக வசீகரமான பெரு நகரமாக எனக்கு முன் விரிந்திருந்தது. “இந்த ஊருக்கெல்லாம் நான் போயிருக்கனே!” என சக நண்பர்களிடம் பீற்றிக் கொள்ளும் வேளைகளில் ’மெட்ராஸ்’ தான் முதலில் வந்தது. உறவினர் வீடுகள்,திருமண விழாக்களென படிக்கும் காலகட்டத்தில் அவ்வப்போது சென்றதுண்டு என்றாலும் சென்னையை முழுமையாக சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு அப்போது கிட்டியிருக்கவில்லை.

படிப்பு முடிந்ததும் ஒரு நேர்முகத் தேர்வினுக்காக சென்னைக்குத் தனியாய் போன நாள் நினைவிலிருக்கிறது. ஓசூரிலிருந்து இரவுப் பயணம். எட்டு மணி நேரங்கள் பயணித்துப் போயிருந்தேன். இரவுப் பயணம் புதிதாகையால் சுத்தமாய் தூங்கியிருக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்தினுக்கு முன்னதாகவே பேருந்து பாரீஸ் கார்னர் சென்றுவிட்டிருந்தது. விடியற்காலை ஐந்து மணிக்கு தோளில் ஒரு பையுடன் அந்தப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்தேன். நடைபாதை முழுக்கத் தூங்கிக் கொண்டிருந்த மனிதர்களைப் பார்க்க புதிதாகவும் வருத்தமாகவும் இருந்தது. பாரீஸ் கார்னர் மற்றும் பூக்கடைப் பகுதிகள் பத்து வருடத்திற்கு முன்பு தங்களுடைய அதிகாலை மெல்லிய குளிருக்கு மிக அதிக வறுமையையும், அழுக்கையும், குவியலாய் மனிதர்களையும் போர்த்தியிருந்தன.

திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்து, பல்லவனைப் பிடிக்க நடந்து கொண்டிருந்தேன். உறவினர் வீட்டிற்குச் சென்று இளைப்பாறி, அங்கிருந்து நேர்முகத் தேர்வினுக்கு செல்லும் திட்டம். நடைபாதை முழுக்க மனிதர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் கீழிறங்கி சாலை ஓரமாகவே நடந்து கொண்டிருந்தேன். குப்பைத் தொட்டி ஒன்றின் பின்னால் ஒரு சிறு குடும்பம் படுத்திருந்தது. மிகவும் நைந்த அந்தப் பெண் வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் மேல் சட்டை முற்றாய் விலகிக் கிடந்து. கணவன் ஒரு புறமும் கைக்குழந்தை ஒரு புறமும் அவள் கையினை தலையணையாக்கி இருந்தனர். அதே போல் அப்பெண்ணின் ஒரு முலையை குழந்தையும் இன்னொன்றினைக் கணவனும் கைப்பற்றி இருந்தனர். ஒரு சில நிமிடங்கள் கண்ணில் விழுந்த அக்காட்சி எனக்குள் மிகப்பெரிய கசப்புகளை உண்டாக்கிவிட்டுப் போனது. சொல்லமுடியாதொரு துக்கமும் கசப்பும் அந்த அதிகாலையில் என்னுள் படர்ந்தது. நகரத்தின் குரூரமான கைகளுக்குள் சிக்குறும் இயலா மனிதர்களின் வாழ்வை யோசிக்க யோசிக்க பயமாய் இருந்தது. மேலதிகமாய் சென்னை என்கிற பெரு நகரத்தின் மீதிருந்த வசீகரம் சுத்தமாய் வடிந்து போனது.

அந்த வேலை எனக்குக் கிடைக்கவில்லை அதற்கு பிறகு சென்னையில் பணிபுரிய வேண்டுமென்கிற முயற்சிகளையும் கை விட்டேன். வெவ்வேறு ஊர்களுக்குத் துரத்தியடித்த வாழ்வு ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் சென்னைக்குக் கொண்டு வந்தது. என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒரே வீட்டில் இருந்ததும் மீண்டும் நான் சென்னை வர காரணமாக இருந்ததெனச் சொல்லலாம். காசி தியேட்டர் எதிர் சந்தில்தான் வாசம். அப்போது நான் வாழ்வைக் கொண்டாட,மனிதர்களைத் தவிர்க்கப் பழகி இருந்தேன்.

கோல்டன் பாரையும், படிக்கட்டு பாரையும் சனிக்கிழமை இரவுகளில் நிரப்பினோம். நவீன திரையரங்குகள்,பைக் பயணம்,புதிய தோழிகளென பெரு நகரத்தின் வசீகரங்களை முழுமையாய் துய்க்கத் துவங்கினேன். கன்னிமாரா இன்னொரு புகலிடமாக இருந்தது. இத்தனை பெரிய பழமையான நூலகத்தில் அமர்ந்திருப்பதே மிகவும் பெருமையாக இருந்தது. பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்களை அங்கேதான் கழித்தேன்.

சீட்டுக் கட்டை கலைத்துப் போடுவதும் என் இருப்பிடங்கள் மாறுவதும் அத்தனைச் சுலபமானது. ஏதோ ஒன்று திடீரென சலிக்கவே என் இருப்பிடத்தை அலுவலகத்துக்குச் சமீபமாய் திருவள்ளூருக்கு மாற்றிக் கொண்டேன். எட்டு மணி நேர நிம்மதியான வேலை, வீட்டிற்கு வந்து அழைத்துப் போகும் சிற்றுந்து, பத்து நிமிடப் பயணம், என நகரத்தின் பரபரப்புகள் திடீரென முற்றிலுமாய் உதிர்ந்து போயின. ஆயிரம் ரூபாய் வாடகையில் பூங்கா நகரில் மிகத் தாராளமான வீடு கிடைத்தது. என் வசிப்பிடங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த வீடு இன்று வரை அவ்வீடாகத்தான் இருக்கிறது. சுற்றிலும் அடர்த்தியான மரங்கள் வளர்ந்திருந்த வீட்டின் மாடியில் நான் குடியிருந்தேன். கிழக்குப் பக்கம் பார்த்த மிகப்பெரிய பால்கனி ஒன்று சரிவான சிமெண்ட் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் இருந்தது. என்னை முழுமையாய் புத்தகங்கள் ஆக்ரமித்திருந்த காலகட்டங்களாக அவையிருந்தன. வீட்டிற்குச் சமீபமாய் பூங்கா நகர் கிளைநூலகம் இருந்தது. பெரும்பாலான புத்தகங்களில் ஒட்டிக் கொண்டிருந்த பக்கங்களை நான்தான் பிரித்தேன். நிலைப்படிக்காய் வெறும் தரையில் தலையணை மட்டும் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருப்பேன். அந்த வீட்டில் வெப்பத்தை நான் எதிர் கொண்டதே இல்லை. கோடைகாலத்தில் கூட குளுமையான செந்நிற சிமெண்ட் தரை தகிப்பை விரட்டி விட்டிருந்தது. செய்ய வேரெதுவுமே இல்லாத நாட்களாய் அவை இருந்தன. மேலும் என்னுள் மார்க்வெஸ்,கால்வினோ,போர்ஹேஸ், ரமேஷ் ப்ரேம், கோணங்கி என குழப்பமான சித்திரங்கள் உலவிக் கொண்டிருந்தன.

பூங்கா நகர் உள்ளடங்கிய பகுதியாதலால் சப்தங்கள் மிகக் குறைவு. அப்போது அந்நகரில் அத்தனை நெருக்கடியும் இல்லாமலிருந்தது. ஒவ்வொரு தெருவினுக்கும் மலர்களின் பெயரைச் சூட்டியிருப்பார்கள். முல்லைத் தெரு,மல்லித் தெரு,செம்பருத்தி தெரு என தெருக்களின் பெயரை உச்சரிக்கவே மகிழ்வாக இருக்கும். அந்தச் சூழலும் வேலையும் பிடித்துப் போனதால் அங்கேயே நிலம் வாங்கி நிரந்தரமாய் தங்கும் எண்ணமும் இருந்தது. மீண்டும் எங்கிருந்தோ வந்த சாத்தான் அவ்விடத்தினை விட்டும் துரத்தியடிக்க வைத்தது.

சுனாமி வந்த கறுப்பு ஞாயிறன்று என் நண்பி ஒருத்தியுடன் மின்சார ரயிலில் மெரினாவுக்குச் சென்று கொண்டிருந்தேன். காலைப் பதினோரு மணிக்கு சமீபமாய், அலையைப் பார்க்க நீங்கள் செல்ல வேண்டாம் உங்களைப் பார்க்க அலை வருகிறதென ரயிலில் இருந்தவர்கள் கிண்டலாய் சொல்லிக் கொண்டார்கள். நேரம் ஆக ஆக அதன் தீவிரம் மெல்ல எல்லாருக்கும் புரிய ஆரம்பித்த போது ரயிலை நிறுத்தி விட்டிருந்தார்கள். நாங்களும் உறைந்திருந்தோம். இரண்டு மணி நேரம் முன்னதாய் கிளம்பியிருந்தால் அலையோடு போயிருக்கலாமென நண்பி சொன்னாள்.

வட சென்னை நண்பர்களுடன் காசிமேடு பகுதியை சுற்றித் திரிந்த நாட்களும் சுவாரசியமானவை. சுண்ட கஞ்சி என்கிற வஸ்துவும் அது தந்த போதையும் இன்னமும் நினைவிலிருக்கிறது. ஒரு வாரம் வட சென்னையிலும், அடுத்த வாரம் சத்யம் திரையரங்கிலும், அதற்கடுத்த வாரம் ’ஈஸிஆர் லாங்க் ட்ரைவு’மாய் வாழ்வின் உச்சம், வீழ்ச்சி இரண்டையும் ஒரே மனதோடு எதிர் கொள்ளும் பக்குவம் அப்போது வாய்த்துவிட்டிருந்தது.

அயல் வாழ்வு சென்னையை ஒரு சிறு நகரமாக்கி விட்டிருக்கிறதென்றாலும் சென்னை எனக்கு பிடித்த ஊர்களின் பட்டியலில் இருக்கத்தான் செய்கிறது.பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை!

சந்தன முல்லையின் இவ்விடுகை இந்நினைவுகளை கிளறிப்போட்டது.அவருக்கு நன்றி.

Monday, August 17, 2009

சமவெளி மான்


1
பாசியில் நழுவும்
விலாங்கு மீனாகவும்
நீள்தெரு வளைவில்
பளிச்சிட்டு மறையும்
முதுகாகவும்
ஒவ்வொரு முடிவிலிருந்தும்
கிளைக்கும் பாதையாகவும்
அது இருந்தது
வெய்யிலின் தகிப்படங்கியிரா
பிறிதொரு நாளின் மாலையில்
இருவரும் சேர்ந்து
அதைத்
துடிக்கத் துடிக்கக்
கொன்றோம்.

அங்கையற்கன்னியுடன் சங்கமேஸ்வரன் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இருக்கைக்கு வலது புறமாய் சன்னலை ஒட்டிப் போடப்பட்டிருந்த சாய்விருக்கையில் அமர்ந்தபடி சீஷா புகைத்துக் கொண்டிருந்தேன். இப்புகைத் தேநீர் விடுதி கான் அப்துல் கபார் சாலையின் முடிவிலிருக்கிறது. வழமை தவறாமல் தினம் காலைப் பதினோரு மணிக்கு இங்கு வர இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இவ்விடுதி நகரின் மய்யத்திலிருந்தாலும் நெரிசல் கண்ணில் படாதவாறு நான்கு சிவப்பு குல்மோஹர் மரங்கள் சன்னல்களைப் போர்த்தியிருக்கின்றன. இரண்டு, பெரும்பாலும் கவ்வாலியும் எப்போதாவது வார்த்தைகளற்ற ஷெனாய் இசையும் மூங்கில் வேய்ந்த கூரையிலிருந்து கசிந்து கொண்டிருக்கும். மேலும் எனக்கானச் சரியான வாசத்துடனான கமறாத கலவையை இங்கிருக்கும் பணிப்பெண் தெரிந்து வைத்திருப்பதும் இன்னொரு முக்கிய காரணம்.

காலைப் பதினோரு மணி வெயிலுக்கான உற்றத் தோழன் காகமாகத்தான் இருக்க முடியும். குல்மோஹரின் சிறு கிளைகளில் அமர்ந்தபடி குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு மூன்றுக் காகங்கள் குரலெழுப்பிக் கொண்டிருக்கும். ஷெனாய் இசைக்கு இடைவெட்டாய் கேட்கும் காகத்தின் கரைச்சலும் என்னுடைய உடலின் லேசான மிதப்பும் சமவெளிகளில் திரியும் மானின் மனநிலைக்கு என்னைக் கொண்டுச் செல்லும்.

பதினைந்து நாட்களுக்கு முன்பு காக்கை நாடி சோதிடர் ஒருவரை மத்தலாங்குளத் தெரு அரசு மதுக்கடையில் சந்தித்தேன். கையில் மிக மோசமான போதையைத் தரக்கூடிய கால் புட்டி வஸ்து ஒன்றுடன் எனக்கு சமீபமாய் வந்து நின்றார். தொண்டையை லேசாய் கனைத்துக் கொண்டு புட்டியின் மூடியைத் திறந்து 110 டிகிரியில் உடலைச் சாய்த்து அவ்வஸ்தை அப்படியே தொண்டைக்குள் சரித்துக் கொண்டார். பின்பு சம நிலைக்குத் திரும்பி தலையை உலுக்கிக் கொண்டார். இரத்தச் சிவப்பிலிருந்த விழிகளில் உருட்டி உருட்டி என்னைச் சற்று நேரம் பார்த்து விட்டு “நீயொரு சமவெளி மான்” என்றார்.

2


சங்கமேஸ்வரன் என்னருகில் வந்து காதில் சொன்னான்.

“நீங்களொரு சமவெளி மான்”

“என்ன?”

“நீங்களொரு சமவெளி மான்”

“எப்படித் தெரியும்?”

“சென்ற வாரத்தில் அங்கையற்கன்னியும் நானும் கிழக்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களுக்கு சென்றிருந்தோம்.கானகத்தில் வழி தப்பிய அவள் நினைவு மயங்கி எங்கேயோ கிடந்திருக்கிறாள். அவளையொரு சமவெளி மான் தன்னுடலில் சுமந்து என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது.அச்சமவெளி மானின் முகம் உங்களைப் போலவிருந்தது”

“அதை நான் பார்க்க முடியுமா?”

“தெரியவில்லை.ஆனால் மீண்டும் நாங்கள் அங்கு செல்ல விரும்பவில்லை.
மீண்டும் அங்கையற்கன்னியைத் தொலைக்க நான் தயாரில்லை”

அங்கையற்கன்னி தன் கைப்பையிலிருந்து கையகலக் கண்ணாடி ஒன்றை எடுத்து வந்து என் முகத்தினுக்கு முன்னால் காண்பித்தாள்.“அந்தச் சமவெளி மான் இப்படித்தான் இருந்தது.”கண்ணாடியில் தெரிந்தது அங்கையற்கன்னியின் முகம்.

3

காக்கை நாடி சோதிடர் மலர்செல்வியிடம் அழுது கொண்டிருந்தார்.

“அவன் சமவெளி மான்தான்”

“யார்?”

“இன்று சந்தித்தவன்.பெயர் தெரியவில்லை.ஆனால் அவன்தான் சமவெளி மான்”

“சரி சாப்பிடுங்க”

“நீயொரு குழிமுயல் தெரியுமா?”

“தெரியும்”

“நானொரு நரி”

“அப்படியா?”

“ஆம் குள்ள நரி”

“சரி இருக்கட்டுமே”

“குள்ள நரி முயலுடன் சம்போகிப்பது குள்ள நரியின் அதிர்ஷ்டமாக இருக்கலாம் ஆனால் முயலுக்கு நரகம்தானே?”

“நிறைய குடிச்சீங்களா?”

“நீ பேசாம அவனை காதலி.அவன்தான் உனக்கு சரி”

“வேண்டாம்”

“தெருவில் கிடக்கும் கருங்கல்லை தூக்கி வந்து என் தலையில் போட்டுக் கொன்றுவிட்டு அவனுடன் போய்விடு”

“உளறாம சாப்பிட்டுப் படுங்க”

“மலர்”

“ம்ம்”

“உன்னைவிட நான் பதினைந்து வயது பெரியவன்”

“அதனால என்ன”

“உன்னைவிட ஐந்து வயது சிறியவனான அவனோடு சம்போகித்து என்னைப் பழிதீர்!”

“போதும் தூங்குங்க”

4

சங்கமேஸ்வரனும் நாடி சோதிடனும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். அங்கையற்கன்னி மலர்செல்வியின் கன்னத்தோடு கன்னம் ஒட்டி பக்க வாட்டில் அணைத்துக் கொண்டாள். நாடிசோதிடன் மலர்செல்வியின் பாதங்களில் முத்தமிட்டான். அங்கையற்கன்னி சங்கமேஸ்வரனை கீழே தள்ளி அவன் மீதமர்ந்தபடி அவனின் கால் சட்டைப் பொத்தான்களை லேசான வெட்கத்தோடும்,விரகத்தோடும் விடுவிக்கத் துவங்கினாள். மலர்செல்வி சமவெளி மானைப் பற்றிய கனவில் மூழ்கினாள். சமவெளி மானாகிய நான் அங்கையற்கன்னியின் உடலை சுமந்து கொண்டு பள்ளத் தாக்குகளில் அலைந்தேன்.

5

இன்று காலை பதினோரு மணிக்கு முன்னதாகவே வந்துவிட்டேன்.புத்தா பார்-III ஒலித்தது. எனக்கு வழமைகளை மாற்றப் பிடிப்பதில்லை. பணிப்பெண்ணைக் கூப்பிட்டு மாற்றச் சொன்னேன். அவள் ஒரு யுவதியினை நோக்கி விரல் நீட்டி அவளின் விருப்பம் அவள் கொண்டு வந்த இசைத் தகடு என்றாள்.நான் அவளின் இருக்கைக்குப் போனேன்.

“இந்த இசை எனக்குப் பிடிக்கவில்லை”

“அதனாலென்ன. எனக்குப் பிடித்திருக்கிறது”

“நல்லது “

நான் திரும்ப வந்து என் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.சற்று நேரம் கழித்து அவள் என்னருகில் வந்து சொன்னாள்.

“நீங்களொரு சமவெளி மான்”

நான் புன்னகைத்தேன். போய்விட்டாள்.

வழக்கமான நேரத்திற்கு சங்கமேஸ்வரனும் அங்கையற்கன்னியும் வந்து சேர்ந்தார்கள். அங்கையற்கன்னி எனக்காய் வந்து என் முகத்தினை வருடினாள். முதுகினை வருடினாள். என்னுடலை இறக்கிவிடுங்களேன் என மண்டியிட்டு அழுதாள். முடியவில்லையென நானும் அழுதேன். காக்கை நாடி சோதிடனும் மலர்செல்வியும் வந்தனர். எங்களிருவரின் கேவல் தாங்காது சோதிடனும் அழ ஆரம்பித்தான். சங்கமேஸ்வரனுக்கு ஏனோ சிரிப்பு பொங்கிப் பொங்கி வந்து கொண்டிருந்தது. மலர்செல்வி புரியாமல் விழித்தாள். சங்கமேஸ்வரன் திடீரெனக் கத்தினான்

“அய்யனார் நீங்களொரு சமவெளி மான்!”

மலர்செல்வி திடுக்கிட்டாள்.பரபரப்பின் உச்சத்தில் அவள் இதயம் துடிக்க ஆரம்பித்தது. முதன்முறையாய் சமவெளி மானைப் பார்த்தாள். பின்பு மிகுந்த சினத்துடன் தன் இடுப்பில் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த பிஸ்டலை வெளியெடுத்து முதலில் அங்கையற்கன்னியினை நோக்கிச் சுட்டாள். அருகில் அழுது கொண்டிருந்த சோதிடனின் நெற்றிப் பொட்டில் அடுத்த குண்டு பாய்ந்தது. ஓட ஆரம்பித்த சங்கமேஸ்வரனின் பின்னந்தலையில் அடுத்த குண்டு. மூவரும் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். இரத்தம் அந்தத் நேநீர் விடுதியின் தரைகளில் திட்டுத் திட்டாய் தேங்கி நின்றது. மலர்செல்வி சமவெளி மானை அள்ளியெடுத்து திட்டாய் தேங்கியிருந்த இரத்தத்தில் முக்கினாள். பின்பு இரத்தம் தோய்ந்த அச் சமவெளி மானைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டு குல்மோஹர் மரத்தடி நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

Thursday, August 13, 2009

சிறுமியும் வண்ணமீனும்

குழந்தைகளை மய்யமாகக் கொண்டத் திரைப்படங்கள் பார்வையாளனை எளிதில் நெகிழ்வுறச் செய்பவை. எவ்விதத்திலும் மாசுபட இயலாத சிறார்களின் உலகம் மீதிருக்கும் வளர்ந்தவர்களின் ஏக்கம் கூட இப்பொதுவானப் பிடித்தங்களுக்கானக் காரணமாய் இருக்கலாம். மேலும் சிறார்களின் உலகத்தில் பிரவேசிப்பதென்பது மிகக் கடினமான காரியமாகவும் இருப்பதால் இம்மாதிரியான திரைப்படங்கள் மூலம் அவர்களின் உலகத்தை எட்டிப் பார்த்த மகிழ்வையும் வளர்ந்தவர்களால் பெற்றுவிட முடிகிறது. குழந்தைகளின் உலகத்தைப் பதிவிப்பதில் ஈரானிய சினிமாவிற்குத் தனியிடமிருக்கிறது. வேறெந்த மொழியிலும் சிறுவர்களின் அக / புற உலகைக் கண்முன் கொண்டு வரும்படியான சிறப்பான படைப்புகளை எவரும் நிகழ்த்திக் காட்டவில்லை. ஈரானில் மஜித் மஜிதி போன்ற இயக்குனர்கள் குழந்தைகளின் உலகத்தை மட்டுமே படங்களாக எடுக்கிறார்கள்.

Jafar Panahi இயக்கத்தில், அப்பாஸ் கைரோஸ்டமியின் திரைக்கதையில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த The White Balloon படத்தையும் சமீபத்தில் பார்க்க நேரிட்டது.Taste of cherry தந்த அயர்ச்சியிலிருந்து மீட்க இது மிகவும் உதவியாய் இருந்தது.Jafar Panahi யின் இன்னொரு முக்கியமான திரைப்படம் The Circle இரண்டு மாதங்களுக்கு முன் இத்திரைப்படம் பார்த்துவிட்டு வட்டத்திற்குள் பெண் எனத் தலைப்பிட்டு ஒரு பகிர்வை எழுதிப் பார்த்தேன். அது எனக்கே திருப்தியில்லாது போனதால் பதியவில்லை. மதம், சமூகம் போன்றவை பெண்களின் மீது நிகழ்த்தும் வன்முறையை மிகச் சிறப்பாகப் பதிவித்திருந்த படம் அது. மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு விரிவாய் பகிர முயல்கிறேன்.

ஈரானியத் திரைப்படங்களில் வில்லன்களோ கதாநாயகன்களோ இருப்பதில்லை. மனிதம், அன்பு, போராட்டம், இழப்பு என மனித வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முடிந்த வரை ஒற்றைத் தன்மையில்லாது கதைகளாக்கும் தளமாகவே ஈரானியச் சினிமா இருக்கிறது. குறிப்பாய் இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாரிடத்தும் வெறுப்பும் துவேஷமும் இல்லை. சக மனிதர்கள் மீது இயல்பாய் இருக்கும் அக்கறையைப் பொதுத் தன்மையாக்கி இருக்கிறார்கள்.

பாம்புகளை வைத்து வித்தை காட்டுபவர், தையற்கடைக்காரர், மீன் கடை வைத்திருப்பவர், சிறுமியின் அழுகையை தாங்காது அவளுக்கு உதவ வரும் பாட்டி,சிறுமியின் அண்ணன், இராணுவ இளைஞன், பலூன் விற்கும் பதின்மன் என இத்திரைப்படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களிடத்தும் இந்த அன்பும் நேயமும் இழைந்தோடுகிறது.

ஏழு வயதுச் சிறுமி ரஸியாவிற்கு கடையில் புதிதாய் வந்திருக்கும் வண்ணமீனை வாங்க 100 டோமன்கள் தேவைப்படுகின்றன. புத்தாண்டைக் கொண்டாட அம்மாவிடம் ஒரே ஒரு நோட்டாக கைவசமிருக்கும் 500 டோமனை அண்ணன் உதவியுடன் நச்சரித்து வாங்கி கடைத்தெருவிற்குப் போகிறாள். வீட்டைக் கடந்ததும் பாம்பாட்டி வித்தைக் காட்டிக் கொண்டிருக்கும் சிறிய கும்பலைக் காண்கிறாள். அவளை அக்கூட்டத்திற்கு எப்போதுமே அவளின் அம்மா அனுமதித்ததில்லையாதலால் அதை வேடிக்கைப் பார்க்க கூட்டத்திற்குள் நுழைந்து விடுகிறாள். பாம்பாட்டி அவளிடம் இருக்கும் 500 டோமன் நோட்டை எடுத்து வேடிக்கை காட்டுகிறார். பணம் கிடைக்காமல் போய்விடுமோ என பயந்துபோய் அழ ஆரம்பித்ததும் அவர் பணத்தை திருப்பித் தந்து விடுகிறார். பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டமாய் கடைக்கு ஓடும் ரஸியா வழியில் பணத்தைத் தொலைத்துவிடுகிறாள். பின்பு ஒரு பாட்டி உதவியுடன் அப்பணம் மூடப்பட்ட கடையின் பாதாள சாக்கடைக்குள் இருப்பதைக் கண்டுபிடிக்கிறாள். அப்பணத்தை அவளும் அவள் அண்ணனும் எவ்வாறு வெளியில் மீட்கிறார்கள் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.

புத்தாண்டின் முந்தின நாளிற்கான கடைத்தெரு மிகுந்த உற்சாகமானது. நாளை பிறக்க விருக்கும் புது வருடத்தினை மக்கள் மகிழ்வாய் எதிர்கொள்ளும் கடைசி நிமிடங்களில் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்ளும். கடைகளை மூடிவிட்டு தத்தம் சொந்த கிராமத்திற்கோ அல்லது உறவினர் வீடுகளுக்கோ இடம்பெயர்வர். திடீரென எங்கிருந்தோ வித்தை காட்டுபவர்களும், வேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும், பலூன் விற்பவர்களுமாய் சிறுநகரங்களுக்கு வந்துக் குமிவர். வாழ்த்துப் பறிமாறல்களும், சிறுசிறு சச்சரவுகளுமாய் சிறுநகரத்தின் கடைத்தெருக்களில் சந்தோஷமும், மகிழ்வும் நிரம்பி வழியும். அப்படியொரு ரம்மியமான மாலைப்பொழுதில் தன் வீட்டிலிருந்த மொத்த பணத்தையும் தொலைத்து விடும் சிறுமியின் மனநிலை பார்வையாளனுக்கு ஒரு வித பதட்டத்தை தந்துவிடுகிறது. அவள் அந்தப் பணத்தை மீட்கும் வரை அந்தப் பதட்டம் நீடித்திருக்கிறது. இதுவே இத்திரைப்படங்களின் வெற்றியாகவிருக்கிறது.

ரஸியாவாக நடித்திருக்கும் சிறுமி மனதை ஈர்க்கிறாள். அவளின் தொணதொண பேச்சு படம் முடிந்த பின்பும் கேட்டுக் கொண்டிருந்தது. அழுகை, பிடிவாதம், மகிழ்ச்சி என உணர்வுகளுக்கேற்றார் போல் மாறும் அவளின் முக பாவங்கள் பார்வையாளனை படத்தோடு ஒன்ற வைக்கின்றன. ஈரானியச் சினிமாக்களில் இன்னொரு பிரதான பொது அம்சம் சிறுவர் கதாபாத்திரங்கள். நடிப்பது என்பதிலிருந்து முற்றாய் விலகி வாழ்வது என்கிறத் தளத்தினுக்கு இவர்கள் எவ்வாறு இடம்பெயர்கிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது. அவர்களை அத்தளத்தினுக்கு நகர்த்தும் இயக்குனர்களின் திறமை அசாத்தியமானது. மேலும் சிறுவர் கதாபாத்திரங்களின் மூலம் நசுக்கப்படும் வாழ்வினுக்கெதிரான அரசியல் எதிர் கூற்றுகளையும் இத் திரைப்படங்கள் மிக நேர்த்தியாய் முன் வைக்கின்றன.

Jafar Panahi பெண்களுக்கெதிரான சமூகத்தின் பாராபட்சங்களை ரஸியா கதாபாத்திரம் மூலம் காட்சிப் படுத்துகிறார். ஆண் குழந்தைகளென்றால் தோளில் உட்காரவைத்து பாம்பாட்டி வித்தையைக் காண்பிக்கும் பெரியவர்கள் சிறுமிகளை மட்டும் அந்தப் பக்கம் செல்லவே அனுமதிப்பதில்லை. அருகில் யாரும் இல்லாதபோது அந்தச் சிறுமி மறைக்கப்பட்டதை நோக்கியே ஓடுகிறாள். தற்செயலாய் பணத்தை தொலைத்துவிட்ட பின் அந்தப் பாம்பாட்டி வித்தையை அவள் பார்க்கப் போனதினால்தான் பணத்தினை தொலைக்க நேரிட்டதென வயதான பாட்டி ஒருத்தியின் மூலமாய் மீண்டும் சமூக ஒழுங்குத் திணித்தல்கள் அவள் மீது திணிக்கப்படுகின்றன.

சமூகத்தின் பயன்படுத்துதல் தன்மையை பலூன் விற்பவனின் மூலம் காட்சிப்படுத்தியிருப்பார். பாதாளச் சாக்கடையிலிருந்து பணத்தை எவராலும் வெளியிலெடுத்து விடுமுடியாத நிலையில் பலூன் விற்கும் பதின்மன் பலூன்களை கட்டி வைத்திருக்கும் நீண்ட கழியில் பபுள் கம்மை ஒட்டி அப்பணத்தை வெளியில் எடுத்து தருகிறான். பணம் கிடைத்த மகிழ்வில் ரஸியாவும் அவள் அண்ணனும் சிட்டாய் பறந்துவிடுகிறார்கள். பலூன் விற்கும் பதின்மன் ஒரே ஒரு வெள்ளைப் பலூனுடன் அப்படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பதோடு படம் நிறைவடைகிறது.


மஜித் மஜிதியின் Children of Heaven, Color of Paradise, Father போன்ற திரைப்படங்களில் இழையோடும் மென்சோகமும், கவித்துவமும் இத்திரைப்படத்தில் சற்றுக் குறைவுதான் என்றாலும் ஜாஃபர் மற்றும் அப்பாஸின் அணுகுமுறை வித்தியாசமானது. இவர்கள் கவித்துவத்தை திணிப்பதில்லை மாறாய் பார்வையாளனிடத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

Tuesday, August 11, 2009

வனமழியும் தீயின் ஊற்று*


அவள் மென் மென்னியை
கைகளால் நெறித்துக்
கொன்றுவிடப் போவதாய்
சொல்லிக்
கொண்டிருந்தேன்
புன்னகைத்தாள்
குரல்வளையைக் கடித்துத்
துப்பிவிடப்
போவதாயும் சொன்னேன்
சிரித்தாள்
அவளின் தலையைத்
தூண்களில் மோதி
சிதைக்கப் போவதாய்
இறுகினேன்
சப்தமாய் சிரித்தாள்
கால்கள்
இரண்டையும் பற்றித் தூக்கி
180 டிகிரியில் அவளுடலைக்
காற்றில் விசிறி
முகத்தை சுவற்றில் நச் என மோதி
கூழ்கூழாக்கப் போவதாய் கத்தினேன்
நெருங்கி வந்து
என் இதழ்களைக்
கவ்விக் கொண்டாள்….

*வனமழியும் தீயின் ஊற்று அவளின் உதடுகளாய் இருக்கலாம்

Monday, August 10, 2009

கொண்டாட்டமும் வெறுப்பும் (அ) பொழுதிற்கொரு முகம்

வ.வெ.தொ.அ.வெ.கு – 10

வியாழக்கிழமை மாலைகள் எப்போதும் உற்சாக வண்ணத்தை அணிந்திருக்கின்றன. அன்றைய தினம் மற்ற மாலைகளை விட வெப்பம் மிகுதியாக இருந்தாலும் கூடச் சகித்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை எப்படி வந்துவிடுகிறதெனத் தெரியவில்லை. புத்தகம், எழுத்து, திரைப்படம், பாழாய் போன ப்லாக் உலகம் என்கிற இத்தொடர் வஸ்துக்களுக்குச் சிறிதும் தொடர்பில்லாத நண்பர்கள் ஆங்காங்கே இருந்து தங்களது வருகையை மாலையிலிருந்தே அறிவிக்கத் துவங்குவர். நெரிசலான இடத்தில் குறுகலான ஆனால் சுதந்திரமான என் இருப்பிடம் தூங்கப் போகாத அன்றைய இரவை ஆவல் / எரிச்சலாய் எதிர்கொள்ளக் காத்திருக்கும். ஒவ்வொருவரும் அன்றைய தினத்திற்கான மிக விசேஷமான மதுவினை எங்கிருந்தாவது பெற வார நாளின் துவக்கத்திலிருந்தே முயற்சி செய்துகொண்டிருப்பர். சிவப்பு அல்லது வெள்ளை ஒயின், ரெட் அல்லது ப்ளாக் லேபிள், சிவாஸ் ரீகல் அல்லது பகார்டி என விதவிதமான தேர்ந்த மதுக்குப்பிகளோடு அறை நிறைவர்.

வியாழக் கிழமை மதியமே அறை வரும் நண்பன் வெயிலைப் பொருட்படுத்தாது நல்ல மீன்களைத் தேடிப் போவான். கிங்பிஷ், மத்தி, விரால், இன்ன பிற பெயர் தெரியா மீன்களைத் தேடிப் பிடித்து வாங்கி வருவான். மாலையில் சாவகாசமாய் அறை நுழையும் என்னைத் தேர்ந்த மீன் மணம் வரவேற்கும். கேலியும் கிண்டலும் நிரந்தரமாய் எல்லாரிடத்தும் தங்கியிருக்கும். பெரும்பாலான நண்பர்கள் என் சொந்த ஊரினைச் சேர்ந்தவர்களாதலால் மொழி தன்னுடைய போலித்தனத்தைக் களைந்து அதன் வேரைச் சூடி நிற்கும்.

பால்ய கால ஸ்நேகிதிகள், இடங்கள், தெருக்கள், சண்டைகள் விளையாட்டுகள் எனப் பேச்சுக்களை சொந்த நிலம் மட்டுமே ஆக்ரமித்திருக்கும். இயலாமைகள், தோல்விகள், இழந்தவைகள் மட்டுமே நினைவுகளில் தேங்கிவிடுவது வரமா? சாபமா? இரவு முழுக்கப் பேசுவதற்கான கதைகள் எல்லாரிடத்துமிருக்கின்றன. இசம்கள் தத்துவங்கள், நவீனத்துவங்கள் என எந்தப் பாம்பின் விஷம்களும் தீண்டியிராத இரவுகள் மிகுந்த ஆசுவாசமானவை. நேற்றைய இரவை “எங்கள் ஆசான்” விஜயகாந்தோடு கொண்டாடினோம். அவர் “பஞ்சா”க மட்டுமே பேசுகிறார் அல்லது பேசுவதெல்லாமே “பஞ்சா”க இருக்கிறது. தன்னை நோக்கிப் பாய்ந்துவரும் துப்பாக்கித் தோட்டாவை பல்லால் கவ்வித் திருப்பித் துப்பி வில்லனைக் கொல்வது, தன்னுடல் வலிமையின் மூலம் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்களை வெடித்துச் சிதற வைப்பது, பைக்கை ஹெலிகாப்டரில் மோதி சின்னா பின்னமாக்குவது போன்ற அதிபயங்கர சாகசங்களைக் காட்டிலும் அவரின் "பஞ்ச்" டைலாக்குகள் அதிஅதிபயங்கர விளைவுகளை எங்களிடத்தில் உண்டாக்கின. விஜயகாந்த் பேசும் ஒவ்வொரு டைலாக்கும் 'எப்பூஊடி' போட வைத்தது. ஒரு கட்டத்தில் 'எப்பூஊடி' சொன்ன நண்பர்கள் வாய் வலித்து நிறுத்திவிட்ட பின்பு அவர் பேசும் டைலாக்குகளுக்கு வீட்டின் சுவர்கள் 'எப்பூஊடி' என ஆரம்பித்தன. சுவர்களையும் குமைய வைக்கும் ஆற்றல் தமிழ்சினிமா கதாநாயகர்களுக்கே உள்ளது.

எப்போதும் இரவினுக்கு ஓரிரு மணிநேரங்களேயே மீதம் வைத்துவிட்டுத் தூங்கப்போவோம்.

நண்பர்கள் போன வெள்ளியிரவில் ஒரு நாள் தூங்கின சாத்தான் விழித்தெழும். கணினித் திரையில் தென்படும் தமிழெழுத்துக்களை விழி வயிற்றினைக் கொண்டுத் தின்றுத் தீர்க்கும். வன்மம், கோபம், ஆனந்தம், சிரிப்பு, எரிச்சல் என விழித் திரையில் எழுத்துக்கள் ஏற்படுத்தும் சலனங்களை நொடிக்கொருமுறை வெளித்துப்பிக் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் பெரும்பாலும் இச்சாத்தானுக்கு எரிச்சலுணர்வே மேலோங்கியிருக்கிறது. நள்ளிரவில் அது சடாரென எல்லாவற்றையும் உதறிவிட்டு மேலெழும். சேமிப்பிலிருக்கும் குறுவட்டுக்கள், இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டவை, நண்பர்களிடமிருந்து பெற்றவை எனக் குழப்பமாய் சிதறிக் கிடப்பவைகளிலிருந்து ஏதேனும் ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து சாத்தானின் விழிகள் தின்ன ஆரம்பிக்கும். அது மீதமுள்ள இரவினுக்குப் போதுமானது.

வார இறுதிகளில் உரையாடலினி தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுவாள். எவ்வித மந்திர சக்தி கொண்டும் அவளிருப்பிடத்தைக் கண்டு பிடிக்க முடியாது. எல்லா சனிக்கிழமைகளும் அவளுக்கானதாய் இருக்க வேண்டுமென்கிற என் ஆவலினை அவள் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. பெரும்பாலான சனிக்கிழமை மதியங்களில் மாலைத் தேநீருக்கு அழைத்துக் கொண்டிருப்பேன் இல்லை மன்றாடிக் கொண்டிருப்பேன். அவள் திட்டவட்டமாய் மறுப்பாள். என் கத்தல்களையோ, கதறல்களையோ, ப்ளீஸ்களையோ, ஒரேஒருடைம்களையோ, இதான் கடேசிகளையோ, மிக சாவகாசமாகத் தாண்டிப்போவாள். இனி இயலாது என்றான பிறகு ஏற்படும் ஆத்திரத்திலும் வெறுப்பிலும் அவளைப் படு மோசமாய் திட்டுவேன். அதையும் மிக சுலபமாய் தாண்டிப் போவாள். அவளைப் போன்ற நெஞ்சழுத்தக்காரியை நான் பார்த்ததில்லை. கண்ணகி சிலைக்குப் பக்கத்தில் அவளுக்கும் ஒரு சிலையை என் ஆயுள் காலத்திற்குள் வைத்துவிடவேண்டும் என்பதுதான் என்னுடைய இப்போதைய விருப்பமாக இருக்கிறது.

புராண கால நாயகிகளைத் தன் நடவடிக்கைகளிலும் நவீனயுக விடிவெள்ளிப் பெண் தன்மைகளை மனதளவிலும் இவளால் எப்படி ஒரே நேரத்தில் பெற்றிருக்க முடிகிறது என்கிற ஆச்சர்யம்தான் கடந்த இரண்டு வருடங்களாக இவளின் பின்னால் என்னை அலைய வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் தீரும் வரை அலைந்து கொண்டிருக்க வேண்டியதுதான். மகிழ்வையும் வெறுப்பையும் அதனதன் உச்சங்கள் தொட எனக்குத் துணையாய் இருந்தவள் என்பதினால் வெறுப்பில் மகிழ்வையும் மகிழ்வில் வெறுப்பையும் கண்டின்புறும் சித்தன் மனநிலைக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

சனிக்கிழமை மாலையை மட்டும் எதைக் கொண்டும் நிரப்பி விடமுடியவில்லை. தன் சார்ந்த துக்கமும், இயலாமையும், ஏமாற்றமும், கசப்புணர்வும், பெருகி வழியும். வியர்த்து வழிய நடந்தோ, புத்தகத்தில் தலையை விட்டுக் கொண்டோ, திரைப்படத்தில் மூழ்கியோதான் சனியிரவுகளை அரை குறையாய் கொல்ல வேண்டியிருக்கிறது. இரவு முழுக்கத் தூங்கியிராத ஞாயிற்றுக் கிழமை விடியல்கள் நரகத்திற்கு இணையானவை. எந்தச் சனியிரவும் என்னை அலைக்கழிக்காமல் போனதில்லை. எந்தச் சனிமாலையிலும் துணையிருந்ததில்லை. என் பிரியத்திற்குறிய நண்பர்களே, தேவதைகளே, தோழிகளே, காதலிகளே, நண்பிகளே நீங்கள் என்னை உண்மையாகவே நேசித்தால் சனி இரவுகளில் மட்டும் என்னோடு துணையிருங்கள்.

Thursday, August 6, 2009

தற்கொலை ஒரு விடுபடல் அவ்வளவுதான்


அப்பாஸ் கைரோஸ்டமியின் A taste of cherry யைச் சென்ற வார இறுதியில் பார்க்க முடிந்தது. படம் பார்த்து முடித்த பின்பு ஒரு சம நிலையின்மையை, ஒரு பதட்டத்தை என்னால் உணர முடிந்தது. மீதியிருந்த இரவு சப்பணமிட்டு என் எதிரில் அமர்ந்து கொண்டது. ஈரானியத் திரைப்படங்கள் பெரும்பாலும் எனக்குத் தந்ததெல்லாம் அமைதியின்மையே. இதுவரை பார்த்திருந்த எல்லா ஈரானிய படங்களும் ஏதோ ஒரு வகையில் என் சம நிலையைக் குலைத்துவிட்டே போயிருக்கின்றன. அப்பாஸ் கைரோஸ்டமி, மஜித் மஜிதி, Makhmalbaf, என மிகச் சிறந்த கலைஞர்களை கொண்ட களமாக ஈரானிய சினிமா இருக்கிறது. சினிமா என்பற்கான வரையறுக்கப்பட்டப் பொதுக் கூறுகளை ஈரானிய சினிமா களைந்துவிடுவதாலோ என்னவோ பொதுக் கூறிலேயே உழன்ற சாதாரணப் பார்வையாளர்களை இவை வசீகரிப்பதில்லை. பின்னணி இசையைக் கூட முற்றாய் தவிர்த்தவையாகத்தான் அப்பாஸின் படங்களிருக்கின்றன.

அப்பாஸின் the wind will carry us ஐ இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். கதை, திரைக்கதை, காட்சியமைப்பு, விறுவிறுப்பு போன்ற வஸ்துக்கள் எதையும் திணிக்காமலேயே ஒரு மிகச் சிறந்த திரையனுபவத்தை நிகழ்த்திக் காட்ட முடியும் என்பதற்கு அப்பாஸின் திரைப்படங்களை உதாரணமாய் சொல்லலாம்.இவரின் பெரும்பாலான படங்களில் கதை என்று தனியாய் எதுவுமிருக்காது. ஏதாவது ஒரு சூழலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கு நிகழ்பவற்றை அச்சூழலின் இன்னொரு கண்கொண்டு பார்ப்பதுபோல பதிவிப்பதுதான் இவருக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. சம்பவங்களை நிகழ்த்தாது தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதுபோன்ற ஒரு மன நிலையை பார்வையாளனுக்குக் கடத்துவதுதான் இவரின் அணுகுமுறையாக இருக்கிறது.

இன்றளவும் காட்சிகள் ஏற்படுத்தும் அழுத்தங்கள் திரையில் நிகழாது பார்வையாளனிடம் நிகழ்வதுதான் தூய சினிமாவின் சாத்தியங்களாக இருக்கின்றன.

தற்கொலைச் செய்து கொள்ள முடிவெடுக்கும் தருணம் மிகக் குரூரமானதாக இருக்கக் கூடும். இழப்பை, துயரை எதிர்கொள்வதை விட அதற்குப் பின் வரும் நாட்கள் மிகுந்தச் சிரமமானவை. இயல்பாய் வாழ விடாதவை. நினைவில் மிகும் இழந்தவை குறித்தானத் தொடர்ச்சியான எண்ணங்களே தன்னை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கத் தூண்டுபவயாகவும் இருக்கலாம். தன்னுடைய சவக் குழியில் தானே போய் படுத்துக் கொள்ளும் அவலம் எதன் மூலமும் பகிரமுடியாதது. இவ்வுலகில் ஒற்றையனாய் வாழ்வதன் துயரத்தை இத் திரைப்படம் பேசுகிறது. தனிமனிதனின் இழப்பென்பது நட்பு, கடவுள், மனிதம், போதனை, அறம் என பிற எந்த ஒன்றினாலும் ஈடு செய்து விட முடியாதது. இழப்பு எப்போதும் இழப்பாகத்தான் இருக்கிறது.

பிரதான கதாபாத்திரம் தன்னுடையப் பிணத்தை புதைக்க ஒரு நபரைத் தேடி படம் முழுவதும் அலைவதுதான் இத்திரைப்படத்தின் கதை. இக்கதாபாத்திரத்தின் சிக்கல் இதுவரை நான் கண்டிராதது. தன்னுடைய இழப்புகளுக்கான காரணத்தையோ குற்றச் சாட்டுகளையோ நீதிதவறலையோ இக்கதாபாத்திரம் முன்வைப்பதில்லை. தான் எதற்காக தற்கொலை முடிவினுக்கு வந்தோமென்பதைக் கூட இப்பாத்திரம் சொல்வதில்லை. ஆனால் இப்பாத்திரம் தன் உடல் மண்ணோடு புதைய வேண்டுமென விரும்புகிறது. மிகுந்த அன்போடு தன்னை ஒருவர் அடக்கம் செய்ய வேண்டுமென விரும்புகிறது. அதற்கான நபர் ஒருவரைத் தேடி அலைகிறது.

மரணத்தைப் பற்றிய உரையாடல்கள் மிகுந்த வசீகரமானவை. அல்லது எனக்கு மிகவும் பிடித்தவை. பிரபஞ்சத்தின் அதி ரகசியங்களில் ஒன்றான மரணத்தைப் பற்றிப் பேசவே, கேட்கவோ எனக்கு எப்போதும் சலிப்பதில்லை. The Curious Case of Benjamin Button இல் வரும் மரணம் குறித்தான பின் விவரணங்களை நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். (முதியோர் இல்லங்களில் மரணம் ஒரு அழையா விருந்தாளியைப் போல் எப்போதும் தங்கியிருக்கிறது)

இத் திரைப்படக் கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாய் மரணம் குறித்து உரையாடுகின்றன. எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் தற்கொலைக்கு துணை போக மாட்டேன் என ஒருவன் விழுந்தடித்து ஓடுகிறான். தற்கொலை கடவுளுக்கு எதிரானது என ஒருவன் பிரசங்கிக்கிறான். ஒரு முதியவர் தான் தொடர்ந்து வாழ மல்பெரிப் பழத்தின் சுவையே போதுமான காரணமாக இருந்தது எனச் சொல்கிறார். இடி சப்தங்கள் மிகும் ஒரு இரவுப் பொழுதில் பிரதான காதாபாத்திரம் குழிக்குள் சென்று படுத்துக் கொள்கிறது.மழை சகலத்தையும் மூடும் வண்ணம் பொழியத் துவங்குகிறது.
அப்பாஸின் திரைப்படங்களில் இன்னொரு பிரதான அம்சம் landscape. ஈரானின் உள்ளடங்கிய கிராமங்கள், மணற்பிரதேசங்கள், சமவெளிகளென திரையில் விரியும் நிலம் பார்வையாளனுக்கு புது அனுபவமாகவிருக்கும். பெரும்பாலான காட்சிகளை தொலைவிலிருந்து பதிவிப்பது இவரது விருப்பமாக இருக்கலாம்.

Mr. Badii என்கிற பிரதான கதாபாத்திரத்தினை ஏற்று நடித்திருப்பவர் Homayoun Ershadi. இவரின் இறுகிப் போன முகமும் உணர்வுகள் எந்த நிமிடமும் உடைந்து விடலாம் ரீதியிலான பாவனைகளும் வெகுநேரம் மனதில் நின்றது.

தற்கொலை பாவமோ குற்றமோ அல்ல ஒரு விடுபடல் அவ்வளவுதான் என்பது மேலோட்டமான, குரூரமான சிந்தனையாகத் தோன்றினாலும் தற்கொலை செய்து கொண்டவனின் வலிகள் எவராலும் தீர்க்க முடியாதவையாகத்தான் இருக்க முடியும்.

Tuesday, August 4, 2009

பிறந்தநாள்


வெள்ளையும் நீலமும்
கலந்த சுடிதார்
சிவப்பு நிற பனியன்
அகலச் சிவப்புக் கறைவைத்த
கருநிறப் புடவை
ஒற்றைச் சிவப்பு ரோஜா
கோவில் சினிமா கடற்கரை
வன்மென் முத்தங்கள்
குவிமுலைப்புதைவுகள்
ஆடையான நீள்முடி
தூக்கம் மிதக்கும் விழிகள்
ஒரே ஒரு மெழுகுவர்த்தி
ஒளிரும் கண்களில்
நிழலாடிய என்
பசித்த உதடுகள்
கழுத்து வியர்வையில்
மினுங்கும் பூவிதழ்கள்
மடிச்சுருளும் பூனையுடல்
மென் நாவு தீண்டும் காதுமடல்
………..
………

சிலவற்றை
எளிதில் கடக்க முடிவதில்லை
நினைவுகளை அழிக்க
பின்னிரவு வரை
நினைவுகளோடே
குடிக்க வேண்டியிருக்கிறது

உன்னுருவம் மங்கி
நினைவுகள் அதிரும்
இவ்வெம்மையிருள் தெருக்களில்
உனக்கான பாடலொன்றை
எப்போதும் சுமந்தலைகிறேன்
………
ஒருபோதும் சந்தித்துவிடாதிருப்போம்.

Sunday, August 2, 2009

கப்பல்காரி


மழைமாலைத்
தெருநதியில்
கப்பல்கள்.

செய்பவளின்
கண்ணெதிரில்
மடியாமல்
மெல்ல
மிதந்து போய்
பின்
மூழ்கும்.

விடியலில்
புங்கை மர
தடித்த வேரில்
சிக்கிச்
செத்துக் கிடக்கும்
அதே
கப்பல்கள்.

எவ்விதச்
சலனமுமில்லாது
தாண்டிப் போவாள்
அதே கப்பல்காரி.

Featured Post

test

 test