Tuesday, January 26, 2021

பூரணம்

விடுமுறைக் காலம் என்கிற ஒன்றை கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம். சிறிய சாகசங்களை மேற்கொண்டால் அடைந்துவிடலாம்தான் என்றாலும் செயற்கையாக உருவாக்கப்பட்டப் பாதுகாப்புணர்வு - வேலை,வீடு எனும் இந்தச் சின்னஞ்சிறு வட்டத்திற்குள்ளேயே உழல வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேசத்தின் அளவே ஒரு பெரிய தீப்பெட்டி அளவிற்குத்தான் என்பதால் சற்றுப் பெரிய செவ்வகத்திற்குள் இருக்கும் சின்னஞ்சிறு சதுரத்தில் மொத்த வாழ்வுமே அடங்கிவிடுகிறது - இந்த அலுப்பூட்டும் தினசரியை எப்படி வாழ்வெனச் சொல்வது என்பது வேறு விஷயம்.

புராதன நகரின் வீதிகளில் மனம் தொலைத்த நாடோடியாய் அலைந்தும், அடர்வனங்களில் சுற்றித் திரிந்தும், காட்டருவிகளில் துள்ளிக் குதித்தும், விரிந்த ஆழியின் பாதங்களில் சரணடைந்துமாய் - ஒழுங்கான நாட்கள் உடலிலும் மனதிலும் சேர்த்த செதில்களை உரித்துக் கொண்ட நாட்களை நினைத்துக் கொள்கிறேன். நினைவு,  நிகழின் முதுகில் இன்னும் அழுத்துகின்றது. 

நாளின் ஒவ்வொரு மணித்துளியையும் பயனாக, உற்பத்தி வெளியீடாக மாற்றிவிட்டால் குறைந்தபட்சம், வீணடித்தல் உருவாக்கும் குற்ற உணர்விலிருந்தாவது வெளியேறிவிடலாம். அதையும் செய்துவிட மனம் ஏன் முனைவதில்லை என்பதும் தெரியவில்லை. நான் எதையும் செய்வதில்லை நிகழ மட்டுமே அனுமதிக்கிறேன் என்பது போன்ற தூய கலையின் அடிப்படைகள் கற்றுக் கொடுத்த விழுமியங்களை நான் கடைபிடிக்கிறேனா அல்லது என் சோம்பல் மனம் அதை தனக்குக் கிடைத்த ஆதாரமாக வைத்திருக்கிறதா என்பதையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இப்போதைக்கு, இருப்புக்கும் இன்மைக்கும் பாலமாக இருக்கும் புனைவுகள் வழியாகத்தான் நாட்கள் நகர்கின்றன. ஏராளமான திரைப்படங்கள், குறைவான நூல்கள் என இந்தக் கதவடைந்த காலத்தைத் துரத்துகிறேன். இந்த வாழ்வுமுறையில் இருக்கும் ஆறுதலான ஒன்று என்னவென்றால், இங்கு ஒரு நாள் என்பது பேரழகியின் அளவான புன்னகையைப் போன்றது. சடுதியில் மின்னி மறைந்துவிடும். நாட்கள் எப்படி வாரங்களாகின்றன என்பதை யோசிப்பதற்குள் மாதம் முடிந்துவிடும். உலகம் இலகுத் தன்மை அடையும் காலம் வரும்வரை எதையும் செய்யாமல் சும்மா இருப்போம் என்கிற குரலைத்தான் ஒன்றும் செய்ய இயலவில்லை. கூடவே  நீ யாரிடம் எதை நிருபிக்க வேண்டும், அடைந்த இலக்குகள் போதுமானவை என அந்தக் குரல் இன்னும் வலுவாகும்போது ஆபத்து இரட்டிப்பாகின்றது.

அடைந்தது அல்லது அடைய வேண்டியது என எதுவுமில்லை என்பதுதான் உண்மை. என் வாழ்வின் மொத்த விழைவே இருப்பது என்பதாகத்தான் இருக்கிறது. அந்த இருப்பு பரிபூரணமான, முழுமையான திளைப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். பூரணம் என்கிற சொல் இயற்கையின் அண்மையிலிருந்துதான் உருவாகி வந்திருக்க வேண்டும். ஆகவே அதன் கிளைகளில் இளைப்பாற விரும்புகிறேன். ”காலமே அனுமதி!”

No comments:

Featured Post

test

 test