” நீ கேக்குற கேள்விக்குலாம்
பதில் சொல்லிட்டு, உன் காசுல திங்குற மூணு வேள சோத்துக்கு பதிலா, நாலு பேரோட படுத்து
சம்பாதிக்கலாம், வைடா ஃபோன.. வைடா.. ஃபோன”
தொடர்பு அறுந்துபோனது.
நளன் ஆழமாய் மூச்சை
இழுத்து விட்டுக் கொண்டான். அலைபேசியை சில நிமிடம் வெறித்தான். பின் அதைப் பத்திரமாய்
கட்டிலில் எறிந்துவிட்டு குளிக்கப் போனான்.
நளன். வயது
34. ஏதோ ஒரு ஊரில் வேலை பார்க்கிறான். கதையின் முதல் வரியைச் சொன்னது அவன்
மனைவி தமயந்தி. அவளும் ஏதோ ஒரு ஊரில் இருக்கிறாள். இருவருக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள்
ஆகியிருந்தன. ஒரு மகள். வாரத்திற்கு இரண்டு சண்டைகளை தவறாமல் நிகழ்த்துவார்கள். ஒவ்வொரு
சண்டையையும் அடுத்த சண்டை தன் தீவிரத்தாலும், உக்கிரமான வார்த்தைகளாலும் மலிவாக்கி விடுவாதால்
புதுப்புது சச்சரவுகள் அதன் உச்சத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன.
நளன் கறாரானவன்.
ஒரு நிறுவனத்தில் நிதிப் பிரிவில் வேலை பார்க்கிறான். அதே கணக்குப் பிள்ளை புத்தி வாழ்வின்
சகல கூறுகளிலும் தென்படும். தமயந்தி தன் ஆடைகளைத்
தவிர வேறெதையும் பெரிதாய் பொருட்படுத்தாதவள். சதா இவனிடம் கணக்கு சொல்லவேண்டுமே வென
கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். நேற்று காலை வாங்கிய உப்பு அரை கிலோவா? ஒரு கிலோவா?
என்கிற குழப்பத்தோடுதான் அவளின் பெரும்பாலான அடுத்த நாள் காலைகள் விடியும். ஆனால் சண்டை
என்று என்று வந்து விட்டால் யாரையும் ஒரு கை பார்க்கும் வல்லமை கொண்டவள்.
அலைபேசியில் கத்திவிட்டு கட்டிலில் சுருண்டு படுத்து அழுதுகொண்டிருந்த தமயந்தி, தன் நினைவிற்கு உடனே வந்த பழைய சண்டையை நினைத்துக் கொண்டாள்.
அன்று காலை நளன் ஊரிலிருந்து வந்திருந்தான். மகள்
நிலா பள்ளிக்கூடம் போயிருந்தாள். வந்த உடனேயே அவளைக் கட்டிக் கொண்டு படுக்கையில் தள்ளினான்.
அவர்களின் சண்டைகளைப் போலவே கலவியும் ஆக்ரோஷமானது. மதியம் நிலா பள்ளிக்கூடத்திலிருந்து
திரும்பும் வரை படுக்கையிலேயே கிடந்தார்கள். நளன் மதிய உணவை ஓட்டலில் சொல்லிவிட்டு
நிலாவோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்பாவைப் பார்த்த மகிழ்ச்சியில் நிலா வழக்கத்தை
விட சற்று அதிக குறும்புகளை செய்துகொண்டிருந்தாள். அவன் வாங்கி வந்திருந்த இரண்டு பொம்மைகளை
பத்தே நிமிடத்தில் உடைத்து எறிந்தாள். எரிச்சலான தமயந்தி, நிலா முதுகில் இரண்டு அடி
வைத்தாள். பதிலுக்கு நிலா ஏதோ திட்ட,
“இந்த வயசுல என்ன
பேச்சுடி பேசுற?” என அவள் மீதுப் பாயப் போனவளின் தலைமுடியை நளன் பிடித்து இழுத்து நிறுத்தினான்.
“எதுக்கு இப்ப
முடிய பிடிச்சி இழுக்குற? அவ என்ன பேச்சு பேசுறா தெரியுமா, என்ன தடுக்கிற” என்றபடியே
இவன் தலையில் ஒரு தட்டு தட்டினாள்.
அவ்வளவுதான் இவனுக்கு
ஆத்திரம் பொங்கிவிட்டது.
”பச்ச குழந்தைய
அடிக்கிற, ஏன்னு கேட்ட புருஷனையும் அடிக்கிற, என்னடி ரொம்ப குளிர் விட்டு போச்சா?”
என கன்னத்தில்
ஒரு அறை விட்டான். அவளும் இவன் மீது பாய முயன்று தோற்றாள். ஆனால் திருப்பி அடிக்க முடியாததின்
இயலாமையை அவனை கடுமையாய் வசைந்து தீர்த்துக் கொண்டாள்.
”தேவ்டியாப் பையா,
திருட்டுத் தேவ்டியாப் பையா, அடிடா அடி.. என்னக் கொன்னு போட்டுடு..” என அலறினாள்
திடீர் வசையால்
திகைத்தவன் “என்னது.. என்னது.. என இன்னும் ரெண்டு அடியை அவளின் வாய் மீது போட்டான்
நிலா இதையெல்லாம்
பார்த்து பயந்து, வீறிட்டழுதபடியே அடுத்த வீட்டிலிருக்கும் பாட்டி வீட்டிற்கு ஓடினாள்.
இவர்கள் போட்ட
சப்தம் தெருவிற்கே கேட்டது. பக்கத்து வீட்டிலிருந்த நளனின் அப்பாவும் அம்மாவும் உள்ளே
வந்தார்கள்
தமயந்தி குளியலறையில்
தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, குத்துக் காலிட்டு உட்கார்ந்து கொண்டு தேவ்டியாப்
பையன்… தேவ்டியாப் பையன்… என முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
பதற்றமாய் உள்ளே
வந்த அப்பா, “என்னடா பையா, என்னடா சண்ட?” என்றார்
எதுவும் சொல்லாமல் நளன் கோபத்தில் மூச்சிரைத்து நின்று கொண்டிருந்தான்.
“படிச்ச பசங்கதானடா
நீங்க, இவ்ளோ அசிங்கமாவா சண்ட போட்டுப்பீங்க?”
எதுவும் பேசாமல்
வெளியே போனான். இருட்டிய பிறகு பீர் வாசனையோடு வந்தான். நிலா தூங்கிப் போயிருக்க. இவள்
காத்துக் கொண்டிருந்தாள். சமாதானமாகிவிட்டார்கள்.
குளித்து விட்டு
வந்த பின்பும் ”படுத்து சம்பாதிச்சி” என்கிற சொல்லே நளன் காதில் திரும்பத் திரும்பக்
கேட்டுக் கொண்டிருந்தது. அருகில் இருந்தால் அடித்து நொறுக்கியிருக்கலாம்.
என்ன செய்வது?.. என்ன செய்வது?.. என அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.
மறுபடியும் அவளைத் தொலைபேசியில் கூப்பிட்டு ஆத்திரம் தீர திட்டினால் என்ன? அலைபேசியில் அழைத்துப் பார்த்தான். சுவிட்ச் ஆஃப்
செய்து விட்டிருக்கிறாள்.
இத்தனைக்கும், ”போன
மாசம் கொடுத்த பணத்துல ஐயாயிரம் ரூபாய்க்கு கணக்கு வரலயே என்ன செலவு பண்ண?” என சாந்தமாய்த்தான்
கேட்டான்.
“எழுதி வைக்க மறந்து
போய்ட்டேன், பன்ற செலவுக்கு எல்லாத்துக்கும் கணக்கு சொல்லியே ஆகனுமா?”
என அவள் கோபமாய்
திரும்பக் கேட்க, இவன் பதில் பேச, பிரச்சினை முதல் வரியில் வந்து நின்றது.
பதிலுக்கு
எதுவும் செய்ய முடியாத ஏமாற்றத்தோடு கிளம்பிக் கீழே வந்து பைக்கை உதைத்தான். முன்பு
நடந்த சண்டை ஒன்று அவன் நினைவில் ஓடியது.
நளனின் ஃபேஸ்புக்
தோழிகள் இருவர் அவனைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர். சிடுசிடுப்பை சிரமப்பட்டு
மறைத்துக் கொண்டு தமயந்தி அவர்களுக்கு காபி கொடுத்து விட்டு, மதிய உணவு பற்றி மூச்சு
விடாமல் இருந்தாள்.
பஸ் ஏற்றி விட்டு
வருவதாக சொல்லிவிட்டு அவர்களோடு கிளம்பிப் போன நளன் மாலை வரை திரும்பவில்லை. அவனின்
அலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
தமயந்தி கொதித்துக்
கொண்டிருந்தாள்.
நளனின் தோழிகள்
இருவரும் நளனிடம் ட்ரீட் கேட்டார்கள். மதியம் அவர்களை சாப்பிட்டுப் போகச் சொல்லாத தமயந்தியின்
மீது கோபத்திலிருந்தவன், அவர்களைக் கூட்டிக் கொண்டு அருகிலிருந்த மூன்று நட்சத்திர
ஓட்டலுக்குப் போனான். மூவரும் பியர் அருந்தினார்கள். கொறிக்க நல்ல உணவும் சேர்ந்து
கொள்ளவே பேச்சும் பியரும் மாலை வரை நீண்டது.
ஒரு வழியாய் பில்லைக்
கொடுத்துவிட்டு, பஸ் ஏற்றி விட்டு தள்ளாட்டமாய் வீடு வந்தவனை தமயந்தி எரித்து விடுவது
போல் பார்த்தபடியே கேட்டாள்.
”எந்த லாட்ஜூல
ரூம் போட்ட, ஒருத்தியா? ரெண்டு பேருமேவா?
நல்ல போதையிலும்,
ஏகத்திற்கும் பணம் செலவாகியிருந்த துக்கத்திலும் இருந்தவன் அவளை ஓங்கி அறைய முயன்றான்.
சுதாரித்து விலகிக் கொண்ட தமயந்தி அவன் இடுப்பின் மீது உதைத்தாள். கீழே விழுந்தவனின்
சட்டையைப் பிடித்து தூக்கி கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள். நளன் திருப்பி அடிக்கத்
தெம்பில்லாமல் அப்படியே சரிந்தான்.
அதிகாலையில் விழிப்பு
வந்தவன் அவசரமாய் படுக்கையைத் திரும்பிப் பார்த்தான். அருகில் தமயந்தி இல்லை. படுக்கையின்
மறு முனையில் நிலா கிடந்தாள். நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் நினைவிற்கு வந்ததும்
ஆத்திரமாய் எழுந்து ஹாலிற்கு வந்தான். ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு முகத்தை குத்துக்
காலில் புதைத்திருந்தவளைப் பார்த்தான். அவள் அருகில் போய் தலைமுடியைப் பிடித்து நிமிர்த்தினான்.
கண்கள் ரத்தச் சிவப்பில் குளமாகி இருந்தன.
எழுந்து இவனை அணைத்துக் கொண்டாள். சமாதானமாகி
விட்டார்கள்.
நளனால் தலைக்குள் ஓடும்
பழைய சண்டைகள் குறித்தான சப்தங்களை அலுவலகம் போகும் வரை தாக்குப் பிடிக்க முடியவில்லை.
வண்டியை பாதி வழியில் ஓரம் கட்டினான். அலைபேசியில் அவளை அழைத்தான். இப்போது ரிங் போனது.
எடுத்தாள்.
”குடும்பப் பொண்ணு
மாதிரியா பேசுற? என்ன செலவு பண்ணோம்னு எழுதி வச்சா என்னா? நான் என்ன நாலு பொண்ணுங்களோட
படுத்தா சம்பாதிக்கிறேன். ஒழைச்சுதாண்டி சம்பாதிக்கிறேன் “
லேசாய் விசும்பும் சப்தம்
கேட்டது.
அலைபேசியை அவசரமாய் துண்டித்துவிட்டு பைக்கை உதைத்தான்.
* ரேமண்ட் கார்வரின் படைப்புகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த பாதிப்பில் இதை எழுதிப் பார்த்தேன். சரியாக வந்திருப்பதாக உணரவே இங்கு..