Wednesday, December 30, 2009

வனமழிக்கும் தீயின் ஊற்று - நதியலை

இரவின் நிசப்தமாய் அணைப்பின் கதகதப்பாய் முத்தத்தின் ஈரமாய் அடக்கவியலா கண்ணீரின் ஊற்றாய் அந்தி மேகத்தீற்றலாய் குழைத்து குழைத்து ஊட்டப்படும் உணவின் ருசியாய் பகிரப்பட்டிருக்கின்றன அய்யனாரின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். பிரம்மாண்டமான மாளிகைகள் தராத சுகத்தைச் சின்னஞ்சிறு மரக்குடில் தந்துவிடுவதைப்போன்றது இக் குறுங்கவிதைகள். அந்தந்த நேரத்து நெகிழ்வை, ஆசையை, நினைவை, விரக்தியை, சோகத்தை எவ்வித பூச்சும் வர்ணனைகளுமில்லாமல் அப்படியே வார்த்தைகளை கோர்த்து அளித்திருக்கின்றார். ஏக்கத்தை, தவிப்பை, அன்பை சொல்லும் கவிதைகளை பெரும்பாலும் காதல் கவிதைகள் என்றே முத்திரை பதித்து விடுகின்றோம். இப்பதிவில் உள்ள பெரும்பாலான கவிதைகள் காதல் என்ற சட்டத்திற்குள் அறையப்படாது பொதுவாக நேசத்தை மொழியும் கவிதைகளாகவே பார்க்கத்தோன்றியது.

உணர்வுகளை எண்ணங்களை வெளிப்படையாக சொல்ல முடிவது ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. ஆனால் அப்படி தொடர்ந்து வெளிப்படுத்தப்படுவதாலேயே சில உணர்வுகள் மலிந்து விட்டன. அதிகமாக பயன்படுத்திப் பயன்படுத்தியே அதன் வீர்யத்தை குறைத்துவிட்டோமோவென எண்ணத்தோன்றுமளவுக்கு பல வார்த்தைகளை சக்கையாக்கிவிட்ட நிலையில் இதையெல்லாம் சொல்லத்தான் வேணுமா? என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குகின்றது. இப்படி சொல்லுவதா வேண்டாமா என்ற குழப்பநிலையில் சொல்லாமல் விடுவதின் விளைவுகளை அழகாக ஒப்பிட்டுள்ளார் இவ்வரிகளில்
‘சிலவற்றை சொல்லாமல் விடுவது
மழை மாலையில் முத்தங்களை தவறவிடுவதற்கு ஒப்பானது’
இப்படி உணர்வுகளை வெளிக்காட்டிவிடுவதின் நலன்களை அறிந்திருந்தும் தனது ப்ரியங்களை சொல்லிவிட முடியாமல் தவிக்கும் மனதினுக்கு மயிலிறகால் நீவிவிடுவதையொத்த சுகத்தை, ஆறுதலை இவ்வரிகளில் தேக்கி வைத்திருக்கிறார்.
“சொல்லப்படாதவைகள்
இந்த பயணங்களை
கொஞ்சம் நீட்டிக்கச் செய்யலாம்
-----------
-----------
அச்சிறு கால நீட்டிப்புகளுக்குள்
வாழ்ந்துவிட்டுப்போகட்டும் நமக்கான
'இது'”
மேலும் ‘நமக்கான இதில் மெளனங்களே மிகவும் வசதியானது’ என்கிறார். வசதி கருதி மௌனமாக இருப்பதா அல்லது சொல்லிவிடுவதே நல்லதா என்பவையெல்லாம் அனுபவத்தால் நன்கு அறிந்திருந்தாலும் அன்றாட வாழ்வில் சொல்லவேண்டுவதை சொல்ல முடியாமல்போவதாலும் சொல்ல வேண்டாமென்று நினைப்பவற்றை கொட்டித்தீர்ப்பதாலும் இழக்கும் முத்தங்கள் பெருகிக்கொண்டேயிருப்பதான விபரீதங்கள் தொடரத்தானே செய்கின்றன.

அன்பில் திளைக்கும் மனதினுக்கு மகிழ்ச்சியையோ துக்கத்தையோ அள்ளித்தர ஒரு சிறு நகர்வு போதுமானதாக இருக்கின்றது. நேசம் நிறைந்திருக்கும் உள்ளத்தில் மொத்தமாக குழைவும் நெகிழ்வும் குடிகொண்டுவிடுகின்றது. கிளர்வு புத்துணர்ச்சி படபடப்பு என எல்லாம் கலந்த உணர்வில் தளும்பும் மனதை அதே கோட்டில் உணர முடியாதவர்களுக்கு இத்தகைய அதீத நேசங்கள் சலிப்பானதாகவே இருந்துவிடுவது சாபமென்றாலும் எக்காரணத்திற்காகவும் விரிந்து நீளும் அன்பின் பரப்பை மடங்கி சுருட்டுவது இயலாக் காரியமாகத்தானாகின்றது என்பதை சொல்கின்றன இவ்வரிகள்.
“உனக்கான என் அன்பை
ஆக்டோபஸின் வடிவமொத்து
எல்லாத் திசைகளிலும்
விரித்தாயிற்று
ஒரு புள்ளியில் குவிய
இனிமேல் சாத்தியமில்லை”

ஆனால் ஒப்பற்று ஓங்கி உயரும் நேசங்கள் விளங்கிக்கொள்ளப்படும்போது அந்த மகிழ்ச்சியை சுகமான பாரத்தை தாங்கொனா களிப்பை எதிர்கொள்வது சற்று திக்குமுக்காட வைக்கும் சங்கதிதான் என்பதை சொல்கிறார் இப்படி

“தாங்கமுடியவில்லை
விழிகள் விரியச் சிரிக்கும்
எனக்கான அப்பெரும் புன்னகையை”
ஒருமித்து கலக்கும் இதயங்கள் சாதாரணமாக பேசும் மொழிகள் கூட கவிதையாகிவிடுகின்றன என்பதாக தோன்றியது மீன் தொட்டியில் இருக்கும் அழகான மீனுக்கு அவளின் பெயரை சூட்டியதாகவும் அதை ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப்போயேன் என்று அழைப்பதாக இருக்கும் கவிதை. நாமும் சென்று ரகசியமாக அம்மீனை கண்டுவரலாமோவென ஆவல் எழுப்பும் கவிதையது.

நுண்ணுணர்வுள்ள எந்த ஒரு இதயத்தையும் தனிமை தீண்டாமல் இருந்ததில்லை. நீங்காமல் உடனிருக்க பலரிருந்தும் தனிமையில் ஏங்கிக்கிடக்க எங்கிருந்தோ காரணமில்லா சோகம் தொத்திக்கொள்ள பலவேளைகளில் எதுதான் வேண்டுமென அறியாமல் மருண்டு அவளின் அருகாமை மட்டுமே நாடும். தன்னை சரியாக புரிந்துக்கொள்ள மாட்டாளாவென இடைவிடாத நிரந்தரமான தவிப்பு தங்கிவிடும். அப்படியான பொழுதுகளில் தன் நேசத்தை, வேட்கையை, ஊசலாட்டத்தை இத்தனை கச்சிதமாகவும் வடித்துவிடமுடியுமோ!

“நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்”
தனிமையிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் திணறிக்கொண்டு திணிக்கப்படும் வாழ்வில் கசங்கும் மனிதர்கள் ஏராளம். அப்படி தனிமை மட்டுமே வாய்க்கப்பெற்ற மனங்களின் மன்றாடல்கள் எத்தனை வேதனை மிகுந்ததாக இருக்கும். தனிமையின் இசையென தன் வலைபக்கத்துக்கு தலைப்பு வைத்திருக்கும் அய்யனார் அத்தனிமையிலிருந்து தப்பிக்க தனக்கான வழியாக சொல்வது…

“வேண்டுவதெல்லாம் வெதுவெதுப்பான
ஒரு மென் தொடுகை
அல்லது
விழிக்கையில் சிரிக்கும்
வெள்ளைப் பின்னனி கொண்ட
மிகப்பெரு இரு கரு நிற விழிகள்...”
வார்த்தைகளால் விளங்கச்செய்ய முடியாத அன்பை, தர முடியாத நம்பிக்கையை, உணரமுடியாத நெருக்கத்தை முத்தத்தின் அழுத்தமோ அணைப்பின் இறுக்கமோ எடுத்துரைத்துவிடுகின்றன. அதேபோல் முத்தங்களை மொழியும் கவிதைகள் முத்தங்களை போன்று கிளர்ச்சியூட்டவும் செய்கின்றன. அப்படியான சில வரிகள்…

“அவசரமாய் முத்தமிடத் தோன்றுகிறது”

“இப்போது உன் உதடுகளிலிருந்து
துவங்குவதே மிகச்சரியானதாயிருக்கக்கூடும்”
எதிர்ப்பார்ப்பதோ ஆசைபடுவதோ தானாக நிறைவேறிடுவது சுகம்தானெனினும் கேட்டு வாங்கி கொள்வதும் சுகமானதாகவே இருக்கின்றது காதலின் கொஞ்சல்களிலும் கெஞ்சல்களிலும். தனக்கான தேவையை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியங்கள் காதலில் இருப்பதில்லையென்றாலும் மறுப்புகளும் சிணுங்கள்களும் விலகல்களும் அதற்கான வித்துக்களாகின்றன. அப்படியான அழகான கெஞ்சலாக இருக்கின்றது ‘முத்தங்களிட்டு மலரச் செய்யேன் முதல் பூவை’ என்னும் வரிகள். ஆனால் அதையே வேறோர் கவிதையில் இப்படியும் பதிவு செய்கின்றார்.

“வனமழிக்கும்
தீயின் ஊற்று
உன் உதடுகளாய் இருக்கலாம்”
நேசிக்கும் உயிர்கள் எல்லாம் தொடர்ந்து ஒன்றாக வாழ நேரிடமுடியாமல் போவதுகூட என்றென்றைக்குமாக அக்காதலை நீடிக்கச்செய்கின்றதோ என்றே தோன்றுகின்றது. சேர்ந்து வாழ முடிந்தவர்கள் கூட தங்கள் காதலை வாழ்க்கைவோட்டத்தில் எங்கேனும் தொலைத்துவிட நேரிடலாம் ஆனால் பிரிந்தவர்களோ காலத்துக்கும் அக்காதலை சுமந்துக்கொண்டு நினைவுகளால் நீருற்றி வளர்த்துவருகின்றனர். காலத்துக்குமான வலிதான் இப்பிரிவு என்றாலும் அவ்வேதனைகளை கவிதைகளில் தவழவிட்டுப்பார்ப்பது சற்று ஆறுதலானதுதான். உருகி உருகி நேசிக்கும் தன்னவளை

“ஒளியில் சிதறும் கருமை நான்
நானிலும் நுழையும் வெளிச்சமவள்”
என்பதைவிடவும் உயர்வாக கூறிவிடவும் முடியுமோ? பார்ப்பதோ பேசுவதோ அத்தனை எளிதில் நடக்கக்கூடிய காரியமில்லாமலிருந்தாலும் தவித்திருந்து காத்திருந்து பேசி பழகியவளை பிரிய நேரிட்டதை எவ்வித அழுகையோ புலம்பல்களோ இல்லாமல் கச்சிதமாக அந்த ரணத்தை சாதாரணமான வரிகளைக்கொண்டு அசாராதாணமாக சொல்லிவிடும் கவிதையில் அப்பிரிவின் வேதனையோடு வியப்பாகவும் இருந்தது இவ்வரிகளை வாசிக்கும்பொழுது.

“அவள் கடைசியாய் தொலைபேசியபோது
எங்களிருவரிடமும் சொந்தமாய் தொலைபேசி இருந்தது”

மனம் அடையும் முதிர்ச்சியும் மாற்றமும் தான் எத்தனை விசித்திரமானது. துக்கத்தையும் ஆனந்தத்தையும் சுழற்சிமுறையில் சுகிக்கும் வினோதங்களை நம்முள்ளேயே நிகழ்த்திக்காட்டி நம்மை வியக்கவைக்குமல்லவா காலம். பிரிவுத்துயரின் ஆற்றாமையால் வாடும் பிம்பங்களின் ரணங்களை சொல்லாமல் சொன்னவர் இதோ இக்கவிதையில் பிரிவும் ஆனந்தமென்கின்றார்.

"துளை வழி வந்த
உன் குரலின் வெம்மைகளை
எனதறை முழுக்க
நிரப்பித் தூங்கிப்போகிறேன்
நினைவுகளை வாரியணைத்தபடி
நீ தூங்குவதாய் சொல்கிறாய்
எவர் சொன்னது
பிரிவு
வலிகள் மிகுந்ததென?"
பற்றோ அல்லது ஈர்ப்போ எந்த ஒன்றிலும் முழுமையாக ஈடுபடச்செய்கின்றது. இதுதான் இதைநோக்கித்தான் இப்படி முடிவடையுமென்றுதான் என்ற எதோ ஒரு நம்பிக்கையில் தொடர்வது பல காரணங்களால் தடைப்படக்கூடும். அப்படி தானாக தடைப்படும் சந்தர்ப்பங்களில் எப்படியோ மனது சமாதானம் அடைந்துக்கொண்டு மாற்று வழிகளை கண்டடைந்து விடுகின்றது. ஆனால் நாமாக முடிவு செய்ய வேண்டிய தருணங்களில் தொடர்ந்துக்கொண்டிருப்பதை துண்டிப்பதா அல்லது தொடர்வதா என்ற குழப்பங்கள் நீடிக்கின்றன. வெகு தொலைவு நகர்ந்துவிட்ட பின்பு அதை துண்டித்துக்கொள்ள மனம் என்றுமே விழைவதில்லை. அதற்கான காரணங்கள் பலவாக இருந்துவிடுகின்றன அவற்றில் ஒரு காரணத்தை விளக்குவதாக இவ்வரிகள்

“இதுவரை கடந்திடாத தொலைவுகளை கடந்தபின்னும்
பறவை பறந்துகொண்டிருக்கிறது
வழி தப்பும் பயத்தில்
நானும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்”
இதைப்போலவே பறவை என்ற படிமத்தைக்கொண்டு அழகாக வடிக்கப்பட்டுள்ள மற்றுமொரு கவிதை வரிகளில் எதேதோ எண்ணங்களிலும் கனவுகளிலும் கடந்து வந்த நிகழ்வுகளிலும் நம்மை மூழ்கடித்துக்கொண்டிருக்க கையிலிருக்கும் காலம் விலக்கிக்கொண்டிருப்பதாக சொல்கின்றார்.

“உதறி விழி திறக்கையில்
சன்னலருகில் சிறகுதிர்த்ததுப் பறந்திருந்தது
நிகழ் சிட்டுக்குருவி”
மென்மையானவர்கள் எல்லோருக்கும் காதல் அனுபவம் வாய்த்து விடுகின்றதா அல்லது காதலிப்பதால் மென்மையானவர்களாக மாற்றப்பட்டுவிடுகின்றார்களா என்று தோன்றுமளவுக்கு இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் மென்மையானவை. அடைமழைப்போல் பொழியாமல் மெல்லிய சாரலாக வருடுபவை. உள்ளம் பூரித்து பரவசிக்கும் நிலையில் உருகி உதிர்க்கும் வார்த்தைகளாகவே பட்டது இவ்வரிகளை வாசிக்கும் பொழுது

“அவளின் முகமேந்தியபடி சொன்னேன்
பூவீன்ற இப்பறவையும்
இன்னொரு பூவினை பிரசவிக்கப்போகும் நீயும்
அபூர்வமானவர்களென”
இவ்வளவு மென்மையை தன்னுள் தேக்கிக்கொண்டவரால் மட்டுமே இப்படியும் தீ கக்க முடியும் என்று உணர்த்தியது “கண்களுக்கெதிரில் நுரையின் பின் விரிந்திருக்கிறது எல்லைகளற்ற நீலம்” என்ற வரிகளை கொண்ட சிறப்பான கவிதை. தன் கவிதைகளில் நெகிழ்வை கொண்டுவருவதற்காக மெனக்கெட வைத்த முயற்சிகளை சொல்வதாக அமைந்த கவிதையும் சிறப்பு. அதில் “இப்போதெல்லாம் உங்களால் நெகிழ்வை உணரமுடிகிறதல்லவா என் கவிதைகளில்?” என்ற வரிகளை வாசிக்கும்போது ஆமென்று புன்னகையோடு பூரணமாய் ஒப்புக்கொள்ளமுடிகின்றது.

மென்தொடுகைக்கும் இறுக அணைத்தலுக்கும், நெற்றி முகர்தலுக்கும் இதழ் முத்தத்திற்கும் உள்ள வேறுபாடு போலத்தான் இவரின் இரண்டு கவிதைத் தொகுப்புகளான நானிலும் நுழையும் வெளிச்சமும் தனிமையின் இசையும். இதிலுள்ள கவிதைகள் எல்லாம் நேசத்தை மென்மையாக மிதமாகச்சொல்பவை. எந்த திருகலும் இசங்களும் உள்நுழையவிடாமல் எதார்த்தமாய் நிகழம் உள்ள வெளிப்பாடாக தன் மனவோட்டத்தை பதிவித்திருக்கிறார். அடர்த்தியாக கட்டிய பூமாலைக்களுக்கிடையில் இது போன்று மணம்வீசும் உதிரிப்பூக்களும் தேவையாகத்தானிருக்கின்றன.

‘நானிலும் நுழையும் வெளிச்சம்’ என்ற இக்கவிதை தொகுப்புடன் ‘உரையாடலினி (சிறுகதை)’, ‘தனிமையின் இசை (கவிதைகள்)’, என்ற புத்தகங்களை வெளிகொண்டுவரும் அய்யனார் இலக்கிய பரப்பில் மேலும் பல அடர்த்தியான படைப்புகளை கொண்டுவரவும், விரைவில் தன் முதல் நாவலை எழுதி முடித்து வெளியிடவும் வாழ்த்துக்கள்.

நதியலை
20 நவம்பர் 2009

Monday, December 28, 2009

கலைந்து பரவும் காதலும் காமமும் - அய்யனாரின் சிறுகதைகள் - ஜமாலன்

அய்யனாரை எனக்கு பதிவுகள் வழியாக மட்டுமே தெரியும். பதிவுகளில் எழுதத் துவங்கிய காலத்தில் அய்யனார் பதிவுலக பிரபலங்களில் ஒருவராக இருந்தார். இன்றும்கூட தமிழ் பதிவுலகில் அய்யனாருக்கு என்று ஒரு வாசக தளம் உள்ளது. அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்பது வளைகுடாவில் வசிக்கும் இலக்கிய எழுத்துலக அனாதைகள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதிலும் அய்யனாருக்கு வாய்த்த அமீரகத்தின் சுதந்திரங்கள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்ட ஒரு நாட்டில் வாழ்பவன் நான். புத்தக கடைகள் இல்லாத, திரை அரங்குகள் இல்லாத, பார்-கள், பஃப்-புகள் இல்லாத ஏன் முகந்தெரிய பெண் நடமாட்டம் இல்லாத பிரேமின் “புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்” நாவலில் வரும் வறண்ட “இருள்நகர்“தான் நான் வசிக்கும் நாடு. சங்கத் தமிழகத்தின் திணை திரிந்த பாலையைப்போல இணை திரிந்த பாலையிது. அந்தவகையில் அய்யனாரின் உலகம் இளைப்பாறலுக்கான ஓடைகளும், சோலைகளும் நிறைந்தது, ஈரம் படர்ந்தது, விசாலமானது, பரந்து விரிந்தது. இலக்கியமும், உணர்வுகளும் வறண்ட இந்த பாலையில் திடிரென என்னிடம் அவரது சிறுகதை தொகுப்பிற்கு முன்னுரை எழுதி தரும்படி கேட்டபோது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. முன்னுரை, பின்னுரை போன்ற உரைகூறும் பழக்கம் இல்லை என்பதைவிட இலக்கிய வாசிப்பும், எழுத்தும் எனக்கு மிகவும் அரிதானவையும்கூட. அய்யனார் எழுத்து புரிவதில்லை என்கிற பதிவுலகில் உள்ள பெயரால், புரியாமல் எழுதும் என்னிடம் முன்னுரை கேட்க எண்ணியிருப்பார் போலும்.

அவரது 30 கதைகளை ஒரேசேர வாசித்தபோது, அவரது இலக்கிய வளர்ச்சியின் படிநிலைகளை புரிந்துகொள்ளமுடிகிறது. எல்லா இலக்கியவாதிகளைப் போலவே தமிழில் சிறுவர்கதை, படக்கதை எனத்துவங்கி கல்கி, சுஜாதா, பாலகுமாரன் என கற்பணாவாதத்தில் (ரொமாண்டிசத்தில்) வளர்ந்து, பாய்ச்சலாக தமிழில் பின்னைய-நவீன எழுத்து முயற்சிகளை இடைவிடாது செய்துவரும் பிரேம்-ரமேஷை வந்தடைந்திருக்கிறார். அய்யனாரின் எழுத்துலகம் என்பது இந்த இரண்டு கடைக்கோடி புள்ளிகளிலும் பேசுபொருளாகக் கொண்டிருப்பது பெண்கள், காதல், காமம் மற்றும் உடல்கள். விடலைப்பருவத்தின் அல்லது அய்யனாரின் வார்த்தைகளில் பதின்மப் பருவக்காதலின் ஏக்கம் தொனிக்கும் கதைகளாகத் துவங்கி, காதல், பிரிவு, துயரம் என்று விகசிக்கும் அந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமாக காமத்திற்கு தாவி இறுதியில் உடலின் இருத்தலியல் வாதைகளில் முடிவதாக உள்ளன. கதைகளில் வரும் மீராவும், சாராவும் இந்த இரண்டு நிலைகளின் பெண் சித்தரிப்புகளாக உள்ளன. மீரா பாலகுமாரனின் முதிர்-பெண்களை நினைவூட்டுபவள்.

முதல் சிறுகதை தொகுப்பு என்றவகையில் அய்யனாரின் இக்கதை முயற்சிகள் குறிப்பிடத்தக்கது. இக்கதைத் தொகுதியில் முதல் 9 கதைகள் சுஜாதா, பாலகுமாரன் போன்ற எழுத்து நடைகளைக் கொண்ட கதையாடலாக எழுதப்பட்டிருந்தாலும், அதன் கரு அல்லது கதையின் பேசுபொருள் காதல் மற்றும் பதின்மப் பருவ காதல் முனுமுனுப்புகள் எனலாம். “சாமியார் செத்துப்போனார்” (கதைசொல்லியும் சாமியாரும் இரட்டைகளைப்போல இறுதி வாக்கியங்களில் ஏற்படுத்தும் தடுமாற்றம் கதையினை அடுத்த தளத்தில் நகர்த்திச் செல்கிறது. கதையே சாமியாரின் குறிப்பேட்டின பக்கங்களாக மாறிவிடுகிறது இறுதியில்.) மற்றும் ”சந்தோஷின் கிளி” தவிர மற்றவை காதலை மையமாகக் கொண்டவையே. இவைகள் பெரும்பாலானவர்களின் பதின்மப் பருவ அனுபவங்கள் என்றாலும் அய்யனார் அவற்றை தனக்கென வாய்த்த நேர்ப்பேச்சு தன்மையிலான ஒரு மொழிநடையில் செய்துள்ளார். வழக்கமான வர்ணனைகள் தத்துவ உரையாடல்கள் மூலம் வாசகனுக்கு புதிய உலகையும் தனது தத்துவ முடிச்சுகளையும் அவிழ்த்துவிடும் அளப்பரைகள் போன்ற தமிழின் பெரும் கதாசிரியர்களின் பழகிய பாணிகளைக் கைக்கொள்ளாமல் நேர்ப்பேச்சில் எழுதிச் செல்வது ஆசுவாசமானது. அதனால் வாசிப்பு எளிமையாக உள்ளது. பேச்சும் அனுக்கமாக உள்ளது. ரொமாண்டிசத்தை தாண்டிச் செல்லாத கதைகள் என்றபோதிலும், கதையாடலைவிட உரையாடலை (அதாவது பேச்சை) அதிகம் பயன்படுத்தும் ஒரு உத்தி இவருக்கு வாய்த்துள்ளது. எல்லாக் கதைகளிலும் கதாசிரியன் என்பவனின் தன்கூற்றாகவே கதைகள் எழுதப்பட்டுள்ளன. இது வாசிப்பிற்கு ஒரு இதத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அல்லது தன்முனைப்பின் அறிக்கையிடலாகவோ அல்லது பகற்கனவின் ஒரு எடுத்துரைப்பாகவோ இவை வெளிப்பட்டுள்ளன.

பொதுவாக, இக்கதைகளின் உள்ளார்ந்துள்ள நுட்பம் என்பது இருத்தலியல் வாதை என்பதாக கதாசிரியன் செய்துகொண்டுள்ள கற்பிதம் எனலாம். இக்கற்பிதத்தின் விளைவாகவே, ஆசரியனின் தன்னடையாளக் கதைகளாக இவை வெளிப்பட்டுள்ளது. ரொம்பவும் ஆசுவாசமான விசயம் இக்கதைகளில் தமிழ்ச் சினிமா தந்துள்ள செண்டிமெண்ட என்கிற “உணர்வெழுச்சிகள்“ இல்லை. தனது கதைக்கூறுகளின் எழுத்துருக்களாக படைக்கப்பட்ட பாத்திரங்கள் பற்றி தனது மதிப்பீடுகளை முன்வைப்பதில்லை. 10 வது கதை துவங்கி பின்வரும் கதைகள் சிலவற்றில் பிரேம்-ரமேஷின் பாதிப்பு இருப்பதையும், அப்படி இருப்பதை வாக்குமூலமாகவும் சொல்லிச் செல்கிறது ஒரு கதை. இந்த கடைசி 20 கதைகளில் அய்யனார் பின-நவீனத்துவக் கதைக்கூறலுக்கான முயற்சியில் இறங்கியிருப்பதை வாசிக்க முடிகிறது. துவக்கம் என்றவகையில் இது வரவேற்கத்தக்கது என்றாலும், இவற்றிலும் காதல், காமம் என்கிற எதிர்வுகளுக்கிடையிலேயே கதையாடல் நகர்த்தப்படுகிறது.

இக்கதைகளில் அய்யனாரின் வாசிப்பனுபவம் மற்றும் அரசியல் நுட்பங்களை அறியமுடியும். குறிப்பாக ”பதினான்காம் நகரம்” கதையில் வரும் மதங்களுக்கு எதிரான கதையாடல் மற்றும் ”மூங்கில்பூ” கதையில் வரும் கடவுளரின் உருவகங்கள் முக்கியமானவை. இக்கதைகளில் அய்யனாரின் இலக்கிய வளர்ச்சிக்கான தடத்தை உணர முடிகிறது. இக்கதையாடல்களில் சித்தரிக்கப்படும் சங்கமித்ரா, வீணா, தீவிலிருந்து வந்தப் பெண், உரையாடலினி, கரிபியன் கபேஃவின் கருப்புப் பெண், இரவு முழுக்க டிண்டோ பிராஸ் துவங்கி பலவற்றைப் பேசும் தோழியான பெண், ஆணுடலிலிருந்து அப்புறமாகி பெண் உடலிலும் அப்புறமாகி சாலை நடுவில் அழும் இறகு முளைத்த சாரா - என தமிழ்ச்சமூகத்தில் உள்ளே அழுத்தப்பட்டு மீறிக்கிளம்பும் பெண்கள் அல்ல இவர்கள், இயல்பாக காமத்தையும் தோழமையும் ஏற்கும் பெண்களாக உள்ளனர். இயல்பு மற்றும் இயற்கை இவற்றுடனான ஆசிரியனின் பற்றுருதி ஒரு காரணமாக இருக்கலாம். மனித உடலும், விலங்கின் சுதந்திரத்தை தரும் இறகும், வாலும் என இறகு முளைத்த மீன்-கன்னி என எண்ணத் தோன்றும் சாரா ஒரு தொன்மப் பாத்திரமாக வெளிப்பட்டு பெண்-காமத்தின் உச்சமாக மாறுவதாக ஒடுக்கப்பட்ட உடலின் மீட்பாக எழுதப்பட்டுள்ளது அக்கதை. நிர்வானம், போதை, தியானம், எழுத்து, காமம் என தனது இருத்தலின் வாதையை பதிலீடு செய்ய தவிப்பதாக பெரும்பாலான கதையாடல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. காதல் என்கிற முதற்பகுதி கதைகளைவிட காமத்தைப் பேசும் இந்த இரண்டாவது பகுதி கதைகள் பல அவதானங்களைத் தரக்கூடியவை. சுயஇன்பம், லெஸ்பியானிஸம் துவங்கி பெண் உடலின் காமம் பற்றிய விஷயங்கள் இக்கதைகளில் பேசப்படுகின்றன.

90-களுக்குப்பிறகான தமிழ்ச் சமூகத்தில் உடலைப் பேசுதல் என்கிற ஒரு இலக்கிய வகைமை முதன்மைப் பெற்றது. கெட்டது, அசிங்கம், பொது இடத்தில் பேசக்கூடாதவை என்கிற சமூகத் தணிக்கைக்கு உட்பட்ட பல விடயங்கள் இன்று இலக்கிய உலகில் அங்கீகரிக்கப்பட்டு எழுத்தாக மாறி உள்ளன. அத்தகைய எழுத்துக்கள் வழி உடலையும், காமத்தையும் முதன்மைப்படுத்தும் பாலியல் அரசியல் மற்றும் உடலரசியல் போன்றவை இன்று பேசுபொருளாக மாறியுள்ளன. எல்லாமே உடல் குறித்தனவே, உடலுக்கு அப்பால் எதுவும் இல்லை எனத்துவங்கும் இவைகள் தமிழ்ச் சமூகத்தின் காமத்தை முன்னுக்கு கொண்டு வந்து அலசி ஆராய்ந்து கொண்டுள்ளன. அவற்றின் விளைவாக இன்றைக்கான இலக்கிய படைப்புகளான கவிதை, நாவல், கதைகள் எல்லாம் காமத்தை ஒரு முக்கியப் பேசுப்பொருளாக கொண்டுள்ளன. கதைகள் மற்றும் இலக்கிய வாசிப்பின் வழியாக முன்னுக்கு வந்த இந்த அரசியல்கள், இன்று கதைகள் மற்றும் வாசிப்புகளை கட்டமைப்பதாக மாறியுள்ளன. ஆக, காமம் என்பதை உள்ளடக்கியோ விலக்கியோ இந்தவகை எழுத்துக்கள் கட்டமைக்கப்படுகின்றன.

பெண்ணின் காமத்தை ஒரு ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வேறுபாடுகள் முக்கியமானவை. பெண்ணின் காமத்தை பெண்ணே எழுதுவதற்கான சூழலை உருவாக்க இத்தகைய கதைகளும், வாசிப்பும் முன்நகர்த்தப்பட வேண்டியது அவசியம். அத்தைகய ஒரு எழுத்து முயற்சியே அய்யனாரின் இச்சிறுகதைகள். இவற்றில் சில கதைகளாக, பேச்சாக, நிகழ்வுகளாக, கவிதையாக மற்றும் சக இலக்கிய உலக அறிவுஜீவிதத்தின் போலியாக, புல்லரிப்பாக, உடல்மீதான இச்சையாக, உடலை உள்ளடக்கிக் கொள்வதற்கான ஈர்ப்பாக வெளிப்படுகிறது. அத்தகைய ஒரு வெளிப்பாட்டிற்கான முயற்சியே இக்கதைகள். இவற்றை வாசிப்பதன்மூலம் எழுத்தின் ஒரு உடல்சார் தடத்தை பற்றிச் செல்வதற்கு வாசகர்களுக்கு ஒரு வாசலாக இருக்கும். இக்கதைகளை இங்கு விளக்கி விமர்சிப்பது திறந்த ஒரு வாசிப்பனுபவத்தை பாதிக்கும் என்பதால் இந்த அறிமுகக் குறிப்புகளோடு நிறுத்திவிட்டு இனி கதைகளை நீங்களே வாசிக்கத் துவங்கலாம்.

- அன்புடன்
ஜமாலன்
ஜெத்தா - சவுதி அரேபியா
07-12-2009

Saturday, December 26, 2009

தனிமை இசைத்த குறிப்புகள் சில…- தமிழ்நதி

அன்புள்ள அய்யனாருக்கு,

உனது கவிதைக்கு முன்னுரை எழுதித் தரும்படி கேட்டிருந்தாய். பழகிய வடிவங்கள் முன்னுரையிலும் சலித்துவிட்டன. அதிலும், நண்பன் ஒருவனைப் படர்க்கையில் விளித்து எழுதுவதில் சிரமம் இருக்கிறது. நண்பன் மீதான அபிமானம் அவனது கவிதைகள் மீதான அபிமானமாகாது என்பதை நீயும் அறிவாய். எனினும்,

அவஸ்தைகள்
எதுவுமற்ற கவிஞன்
சூல்கொண்ட மேகத்தை
கலைக்கும் புயலைப்போல
தேர்ந்தெடுத்த சொற்களைக்கூட
இரக்கமற்ற பேனாவைக் கொண்டு
அழிக்கிறான்…
வசீகரமிழந்த சொற்கள்
மெல்ல உதிர்க்கின்றன
கவிதைக்கான வேட்கையையும்
இருத்தலின் நம்பகத்தன்மையையும்.
என்ற உனது சொற்களை வாசித்த பிற்பாடு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. ‘சூல்கொண்ட மேகத்தைக் காற்று கலைப்பது’மழையின் பொருட்டே என நீ அறியமாட்டாயா?

எழுத்துள் நுழைய முயலும் வாசகனை-வாசகியை வழிமறித்துப் பேசி, முன்முடிவுகளுடன் உள்ளே அனுப்பிவைக்கிற செயலாக முன்னுரை எழுதுவதென்பது சிலசமயங்களில் எனக்குத் தோன்றியிருக்கிறது. அதை அறிமுகம் என்றும் நுழைவாயில் என்றும் சொல்கிறார்கள். அதிலும் கவிதையானது அதை எழுதுபவர்களுக்கு நெருக்கமானதும் அந்தரங்கமானதும்கூட. மனதின் நுண்ணிய வரிகளால் நெய்யப்பட்ட மெல்லிய பட்டுத்துகில் அது. அதை அனுபவிக்க மட்டுமே முடியும். முன்னுரை, விமர்சனம் என்ற பெயரில் அதை உதறி விரித்து உரசிப் பார்ப்பது கொஞ்சம் குற்றவுணர்வைத் தருகிறது.

உன் கவிதைகளை மனதொன்றி முழுவதும் வாசித்தேன். ஒரு வகைமைக்குள் மட்டும் சிக்கிவிடாமல் தனிமை, உறவுகளின் பிரிவு, பிழைப்பின் பொருட்டு நிலம் பிரிந்த துயரம், காதல், காமம், சுயவிசாரணை மற்றும் எள்ளல், கழிவிரக்கம், மாயத்துள் விழுத்தி மயக்கும் கற்பனாவுலகம், சமூகத்தின் போலித்தனங்கள் குறித்த கசப்பு, இயற்கை, நெகிழ்ந்து கரைதல், எழுத்தெனும் பிடிமானம் எனப் பரந்துபட்ட தளங்களில் உன் கவிதை உலவியிருப்பது பிடித்திருந்தது. உபரியாக வாசிக்கும்போது தென்படாத கவித்துவத்தை தொகுப்பாக வாசித்தபோது உணரமுடிந்தது. இல்லாவிட்டாலுமென்ன? முதல் தொகுப்பு பெறும் ‘மன்னிப்பு’க்கு நீயும் உரித்துடையவனே. இன்றைக்குத் தமிழிலக்கியப் பரப்பிலே கவிஞர்கள் என்று அழைக்கப்படும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நீயும் இணைந்துவிடும் ‘விபரீதத்தை’முன்மொழிவதில் எனக்கொன்றும் தயக்கமில்லை. என்னை வழிமொழிந்து சொல்வது அவரவர் பாண்டித்தியத்தையும் விருப்புவெறுப்பையும் வட்ட-சதுரச் சார்பு நிலைகளையும் கவிதை குறித்த மனச்சித்திரங்கள் மற்றும் வகுத்திருக்கும் வரைவிலக்கணங்களைப் பொறுத்தது.

அவரவர்க்கான மொழியைக் கண்டடையும் அலைச்சல் பொதுவாக முதல் தொகுப்புகளில் துருத்தித் தெரியும். உன்னுடைய கவிதைகளில் ஏதோவோர் ஒருங்கிணைந்த மொழியமைவு கூடியிருப்பதாக நான் உணர்ந்தேன்.

நாம் படித்த கவிதைகள் நமக்குள்ளிருந்தபடி நாமறியாதபடி நம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றனவோ என்று உன்னுடைய சில கவிதைகளை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன். நீ சிலசமயங்களில் பிரேம்-ரமேஷ் ஐ, கல்யாண்ஜியை, கலாப்ரியாவை, ஏன் என்னைக்கூட (ஆற்றின் உட்பரப்பு – நதியின் ஆழத்தில்) நினைவுபடுத்துகிறாய்.
காதலெனும் சொல்லின் மீதேறி காமத்தளத்தில் சென்று இறங்கும்- ‘விழி மூடிப் பால் குடிக்கும்’ பாசாங்குப் பூனைகளைப் பற்றி எழுதியிருந்தாய்.

ரகசியங்களைத் தெரியும்படி புதைத்துவைப்பதின்
பின்னாலிருக்கும்
குறுகுறுப்புகள்
தெரியாமலில்லை
மறுத்தலின்
ஒளிதலின்
புரியாமலிருப்பது போன்ற
பாவனைகளின்
அரசியலெல்லாம்
கண்டுபிடித்தலின்
தேடுவதன்
கிறங்குவதன்
மீதிருக்கும் வேட்கைகள்தான்
என்பது எனக்கும்
தெரியும்.
---
பசிகொண்ட உடல்கள்
தேவதைகளின் வடிவமேற்று
ஆளரவமற்ற இடங்களில்
சக உடல்களைத் தின்றுதீர்க்கிறது
---
எல்லாக் காதல் கவிதைகளும்
ஓர் அறியாத பெண்ணின் ஆடைகளை
உரித்துப்
பார்ப்பதற்காக மட்டுமே எழுதப்படுகின்றன.
ஆண்-பெண்களின்
ரகசியமறியும் கருவி
என்பதைத் தவிர
காதல் கவிதைகள் குறித்துச் சொல்ல
எதுவுமில்லை.
---

‘காதலின் மீது உனக்கேன் இத்தனை காழ்ப்புணர்ச்சி?’என்று நான் கேட்கப் போவதில்லை. ‘காதல் உலகத்தை ஒரு நொடியில் அழகாக்கிவிடுகிறது, மனிதர்களைக் கனியச்செய்கிறது’ என்று நான் சொன்னால் அதை நீ ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. நான் கேட்பதெல்லாம், ‘காதல் என்பது காமத்தைச் சென்றடையும் வழியென’எத்தனை தடவைதான் எழுதுவாய் என்பது மட்டுமே. ‘கூறியது கூறல்’என்றுன்னைக் குற்றம் சொல்லப்போகிறார்கள்.

சாதாரண வழிசெல்லும் வார்த்தைகள் கடைசி வரியில் திடும்மெனக் கவிதையாகிவிடுவதை பல சமயங்களில் உணர்ந்தேன். ‘நேற்றுப் பெய்த மழை’என்ற கவிதையில் ‘நீ மழை பெய்ததாய் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாம்’என்று முடியும்போது உள்ளுக்குள் துயரமழையொன்று அடித்துப் பொழிய ஆரம்பித்தது. மழைக்கென ஐந்து கவிதைகளை தந்துவிட்டபோதிலும், பெரும்பாலான உன் கவிதைகளில் ஒரு வரியாவது மழையின் சில்லிப்பில் சிலிர்க்கத்தான் செய்கிறது.

பெண் ஈயம், பித்தளை, கட்டுக்களுடைத்து வெளிவரல்,
விளிம்பின் மொழி, சம உரிமை, இட ஒதுக்கீடு எல்லாவற்றின் மீதும்
மது நுரை பொங்கப் படர்கிறது
உடல் மட்டும் தனக்கான கட்டுக்களுடைத்து
நடனமிடத் துவங்குகிறது.
என்ற வரிகளினூடாக, எல்லாவிதமான ஒப்பனைகளும் கலைந்து சுயம் வெளிப்படும் தருணம் மதுவருந்தியிருக்கிறபோதே சாத்தியம் என்பதைச் சொல்வதற்கு முற்றிலும் தகுதியானவன்தான் நீ.

‘மய்யம்’என்ற பகுதியுள் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் பலவற்றுள் மாயா யதார்த்தவாதம் என்ற சித்து விளையாட்டை வாசிக்க நேர்ந்தது. நீலிகளும் தேவதைகளும் சாத்தான்களும் கடவுளரும் வெகு சாதாரணமாக உலவும் - மூத்திரமும் குருதியும் ஸ்கலிதமும் அளவுக்கதிகமாக வழியும் - கவிதைகளை நான் அவசரமாகக் கடந்தேன். ஒரே சமயத்தில் அதியதார்த்தத்தினுள்ளும் அதிமாயத்தினுள்ளும் உலவுவது, உனக்கு மட்டுமே சாத்தியம் அய்யனார். வகைதொகையில்லா சில உரையாடல்கள், உண்மைகளைப் பேசுதல், கண்டறிதல் மற்றும் எழுதுதல், மதுவிடுதி நடனப்பெண் ஈயம் மற்றும் பித்தளை போன்ற பின்னவீனத்துவ நினைவுபடுத்தல்களுடன் கூடிய தலைப்புகளுடனும் வழக்கம்போல ஒரு ஒவ்வாமையை உணர்ந்தேன்.

ஜெயமோகன்களைப் படிக்காதேவெனத் திட்டி
கோபியைக் கொடுத்திருந்தேன்
வந்தவுடன் பிடிக்கவில்லையெனத் திருப்பிக் கொடுத்தாள்
“ஏன்?”என்றதற்கு
முனகலாய்ப் பதில் வந்தது
“அசிங்கமாய் இருக்கு”
எது அசிங்கமென்றதற்குப் பதில் எதுவும்
சொல்லாமல் போய்விட்டாள்
நான் பாலகுமாரனைக் கொடுத்திருந்தால்
இன்றிவளை முத்தமிட்டிருக்கலாமென
நினைத்துக்கொண்டேன்
என்று சராசரிப் பெண்களின் வாசிப்பு ரசனையைச் சாடியிருந்தாய். ஆண் அறிவுஜீவி என்னும் மிதப்பு அதிலிருந்ததைக் கவனித்தேன். பாலகுமாரனை வாசிக்கும் பெண்கள் எல்லாம் இழுத்தவுடன் வந்து நெஞ்சில் விழுந்து முத்தம் கொடுக்குமளவிற்குக் கவிழ்ந்துபோகக்கூடியவர்களா என்ற எண்ணமும் எனக்குள் வந்துபோனது. மறுவளமாக, கோபியைப் படிக்கிறவர்கள் உறுதியானவர்கள்! ம்! சிலசமயங்களில் நம்மையறியாமலே நமது கசடுகளை வெளியில் கொட்டிவிடுகிறோம் என்று தோன்றுகிறது. நீ என்ன சொல்கிறாய்?

உண்மையைச் சொன்னால், உனது தொகுப்பை நான் கொஞ்சம் அசிரத்தையாகவே வாசிக்க ஆரம்பித்தேன். இணையத்தில் கொட்டிக்கிடக்கிற கவிதைகள் தந்த மிரட்சி அந்த அசிரத்தையைத் தந்திருக்கலாம். ஆனால், தேறக்கூடிய (எனது அளவுகோலில்) சில கவிதைகளை நீ எழுதியிருப்பதாக வாசித்து முடித்ததும் உணர்ந்தேன். ‘நாள்தோறும் நிறம் மாறும் தேவி’என்ற கவிதையில் கணந்தோறும் தளும்பும் பெண்மனதையும் அவளது மிகமெதுவான தந்திர விலகலையும் அழகாகச் சொல்லியிருந்தாய்.

‘வெறுமை கசப்பு வெறுப்பு மற்றும் தனிமை’, ‘பொதுப்படுத்தி மகிழ்தல்’ போன்ற ‘வெறும்’கவிதைகளைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

முன்மாதிரிகளின்
பிரமாண்டங்களில்
ஒன்றுமில்லாததாகிறது
கிளர்ந்தும் திரண்டும் எழும்
அடர்த்தியற்ற வடிவமற்ற
உள்ளெழுச்சிகள்
இருப்பினும்…
தினம் பூக்கும்
பூக்கள்
எதை நிரூபிக்கிறது
பூத்திருத்தலைத் தவிர்த்து?
முன்மாதிரிகளின் பிரமாண்டங்களைக் கண்டு நீ மிரட்சியடைய வேண்டியதில்லை. மேலும், பிரமாண்டம் என்பதன் வரையறைதான் என்ன? எழுதும்போது நீ உன்னளவில் உள்மனதுள் பூக்கிறாய். எழுது… எழுது… அதுவொன்றே நமக்குப் போதும்.

நட்புடன்
தமிழ்நதி
01-10-2009

Friday, December 25, 2009

வம்சி வெளியீடுகள் - 2010



இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு வம்சி புக்ஸ் நாற்பது புத்தகங்களைக் கொண்டுவருகிறது. நூல் விவரங்கள்..

1. தென்னிந்திய நவீன சிறுகதைகள்.தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட, நவீன போக்குகளை பிரதிபலிக்கும் நவீன சிறுகதைகளின் தொகுப்பு - தொகுப்பு : கே.வி. ஷைலஜா.

2. அனுபவங்களின் நிழல் பாதை - ரெங்கைய்யா முருகன், வி. ஹரி சரவணன்.
இந்திய பழங்குடி மக்களின் இன வரைவியல் குறித்த ஆய்வு பயணம்.

3. 19, டி. எம். சாரோனிலிருந்து - பவாசெல்லதுரை மண் சார்ந்த, மனிதம் சார்ந்த கட்டுரைகள்

4. உரையாடலினி - அய்யனார் விஸ்வநாத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

5. சூர்ப்பனகை கெ.ஆர்.மீரா. - தமிழில் கே.வி. ஷைலஜா நவீன மலையாள பெண்ணிய சிறுகதைகள்.

6. ஒரு கலகக்காரனின் கதை - ஜான் அப்ரகாம் தொகுப்பு ஆர்.ஆர். சீனிவாசன்.

7. ஒற்றை கதவு - சந்தோஷ் யெச்சிக்கானம் தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ.
மலையாள நவீன சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு.

8. உலக சிறுவர் சினிமா - பாகம் 3 விஸ்வாமித்திரன்.
உலகம் முழுவதிலுமிருந்து விஸ்வாமித்திரன் தொகுக்கும் சிறுவர்களுக்கான சினிமா.

9. பிறிதொரு மரணம் உதயசங்கர் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு.

10. எஸ். லட்சுமண பெருமாள் கதைகள் - முழுமையான சிறுகதைகள்

11 . கனக துர்கா - பாஸ்கர் சக்தியின் இதுவரையிலான முழுமையான கதைகளும் குறுநாவல்களும்.

12. தனிமையின் இசை - அய்யனார் விஸ்வநாத்தின் கவிதைகள்.

13. பாழ் மண்டபமொன்றின் வரைபடம். - கே. ஸ்டாலின் கவிதைகள்

14. மக்களுக்கான சினிமா - மாரிமகேந்திரன் (இலங்கை)

15. வியாழக்கிழமையைத் தொலைத்தவன் - விக்ராமதித்யனின் சமீபத்திய கவிதைகள்.

16. நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து... - பின்னிமோசஸ்

17. உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ. சிவகுமாரின் புதிய கதைகளின் முழுத் தொகுப்பு.

18. என்றும் வாழும் தெருக்கூத்து - பி.ஜே. அமலதாஸ்.

19. அமெரிக்கன் - தமிழில் சா. தேவதாஸ் - நாவல்

20. இறுதிசுவாசம் - லூயிபுனுவல் சுயசரிதம்

21. புதிர்களை விடுவித்தல் - சா. தேவதாஸ்

22. இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் - சா. தேவதாஸ்

23. தங்கராணி - வேலுசரவணன் (4 சிறுவர் நாடகங்கள்)

24. மனரேகை - விஸ்வாமித்திரன் (நகுலன் குறித்த எழுத்தும் புகைப்படங்களும்)

25. நானிலும் நுழையும் வெளிச்சம் - அய்யனார் விஸ்வநாத்

26. பெருவெளிச் சலனங்கள் - தொகுப்பு மாதவராஜ் (வலைபதிவுகளில் கிடைத்த அனுபவ பகிர்வுகள்)

27. கிளிஞ்சல்கள் பறக்கின்றன - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து நூறு கவிதைகள்)

28. மரப்பாட்சியின் சில ஆடைகள் - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து சில நவீன சிறுகதைகள்)

29. குருவிகள் பறந்துவிட்டன பூனை உட்கார்ந்திருக்கிறது - மாதவராஜ்(சொற்சித்திரங்கள்)

30. கண்ணாடி உலகம் - வே. நெடுஞ்செழியன் (கவிதைகள்)

31. கனா - ம. காமுத்துரை (சிறுவர்களின் மனஉலகை பேசும் கதைகள்)

32. சிலர்அதன் செவ்வி தலைப்படுவர் - ஆர்.ஆர்.சீனிவாசன்
(10 தமிழ் ஆளுமைகளின் விரிவான நேர்காணல்கள்)


மறுபதிப்பில் ...

1. சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே.வி. ஷைலஜா
2. எனக்கான வெளிச்சம் - தி. பரமேஸ்வரி (கவிதைகள்)
3. எதிர்பாராமல் பெய்த மழை - சிபிலா மைக்கேல் தமிழில்: சுகானா


வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை 606 601 செல் : 9444867023
e.mail- vamsibooks@yahoo.com

Tuesday, December 22, 2009

தனிமையின் இசை - என்னுரை

கடந்த மூன்று வருடங்களாய் என் வலைப்பூவில் எழுதப்பட்ட கவிதை வடிவ மாதிரிகளின் தொகுப்புதாம் இவை. எழுதப்பட்ட தருணங்களில் இவை அச்சிற்கானவை என்கிற தயாரித்தல்கள் எனக்கில்லாமல் இருந்தன. சுய புலம்பல்களாகவும், மிகவும் தன் வயமான உலகின் வெளிப்பாடாகவும், இருத்தலின் ஆசுவாசமாகவும் இவ்வடிவங்கள் என்னிலிருந்து தன்னைக் கட்டமைத்துக் கொண்டிருக்கலாம். எழுதப்படும் வரையிலிருந்து எழுதப்பட்ட பின்பு வரை அதே வார்த்தைகள் தரும் உணர்வு வெவ்வேறாய் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் பெருமித மகிழ்வுணர்வைத் தரும் இதே வார்த்தைக் கோர்வைகள் பின்பொரு நாளில் ஏளனத்தையும் சலிப்பையும் உண்டாக்கி விடுகின்றன. எப்போதைக்குமான மகிழ்வுகளையும் எப்போதைக்குமான இழத்தல்களையும் காலம் மிகச் சுலபமாய் கடந்து போகிறது.

இக்கவிதைகளில் மிகப் பிரதானமாய் இருப்பது நான் தான். என்னிலிருந்து என்னைக் கண்டறிவதே மிகக் கடினமாய் இருக்கிறதெனக்கு. மற்றவர், மற்றது இவைகளின் மீதெல்லாம் எனக்குப் பெரிதாய் அக்கறையோ வருத்தமோ இல்லாமலிருந்திருக்கிறது என்பதை இத் தொகுப்புகள் அறியத் தருகின்றன. போலித்தனம் குறைவான நார்சிச மனம் என்கிற சுய மதிப்பீடுகள்தாம் தொடர்ந்து இயங்க குறைந்த பட்சக் காரணமாய் இருக்கிறது. இதற்கானதென்று அறியாத என் புற அலைவுகளில் கிடைத்த ஏமாற்றமும் அந்நிய வாழ்நிலங்கள் தந்த அயற்சியும் அக அலைவுகளை நோக்கி இடம் பெயரச் செய்தன. புறம் அகம் இரண்டையும் ஒரே கோட்டில் சமன் செய்வதுதான் இக்கவிதைகளின் உயர்ந்த பட்ச சாத்தியமாக இருக்கிறது.

பிறழ்ந்த மனதின் பல்வேறு இடுக்குகளிலிருந்து வெளியேறும் வார்த்தை பூதங்கள் வெளித்துப்பும் கோர்வைகள் மயக்கத்தையும் பயத்தையும் இரு தரப்பிலும் உண்டாக்குகின்றன. எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் வார்த்தைகளில் பிடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கைகள் கவிதை வடிவத்தின் மீதான காதலை வலுவூட்டுகின்றன.

அலைந்து திரிந்து பிறழ்ந்து தற்போது மய்யமாகிப் போன விளிம்பு மனதின் அந்தந்த நிலைப்பாடுகள் இவைகள் என்பதைத் தவிர்த்து இக்கவிதைகள் குறித்து எழுதியவனாய் சொல்ல வேரெதுவுமில்லை. இதுவே மிகையாகவும் இருக்கலாம். மற்றபடி எவரும் பேசாததையோ எவராலும் சொல்லிவிட முடியாததையோ நான் பேசிவிட மெனக்கெடவில்லை. என் வாழ்வு எனக்குத் தந்ததை வன்மமாகவும், குரூரமாகவும், இரகசியக் கிசுகிசுப்பாகவும் உங்களிடம் கடத்த முயன்றிருக்கிறேன். அந்தந்த உணர்வுகளை அந்தந்த மாதிரியே இவைகள் உங்களுக்குள் கடத்தியிருந்தால் அதுவே இதற்கான நிறைவாய் இருக்க முடியும். அப்படி இல்லாமல் போனாலும் அஃது எவரின் குறைபாடுமில்லை.

வலைப்பூ வாசகர்களுக்கு, இணைய நண்பர்களுக்கு, சக வலைப்பதிவர்களுக்கு, வலைப்பூத் திரட்டிகளுக்கு என் முதல் நன்றியும் அன்பும். எனக்கான ஆசுவாசத்தை, நிறைவை அல்லது அதைப் போன்ற ஒன்றை இக்காலகட்டங்களில் எனக்குக் கிடைக்க இவ்விணைய வெளி உதவியாய் இருந்திருக்கிறது. எப்போதும் விழிப்பாய் இருந்த எழுத்துச் சோம்பலனை சக வலைப்பூக்களும் பதிவர்களும் எழுந்து சோம்பல் முறிக்க உதவியிருக்கின்றனர்.

எதிர்பார்ப்புகளற்ற அன்பை எல்லா விதங்களிலும் எனக்குத் தந்துகொண்டிருக்கும் பவாவும் ஷைலஜாவும் இப்புத்தத்தின் மூலமாய் இவ்வுலகில் பிரவேசிக்க வைத்திருக்கிறார்கள். என்னுள் புதிய நம்பிக்கைகளை, துளிர்ப்புகளை மலரச் செய்திருக்கும் இவர்கள் என் வாழ்வில் அபூர்வமானவர்கள்.

நூறு பக்கங்களுக்கு மேல் விரல்கள் நோகத் தட்டச்சி, நேர்த்தியான முகப்பு அட்டையை மிகுந்த சிரத்தையுடன் உண்டாக்கி இவ் உள்ளடக்கத்தில் குறைந்திருக்கும் அழகியலை புத்தக வடிவத்தின் மூலமாய் கூட்டிய வம்சி நண்பர்களுக்கு என் நன்றியும் அன்பும்.

வலையெழுத வந்ததிலிருந்து இன்று வரை என்னை வாசித்தும், விமர்சித்தும் சகித்தும் கொண்டிருக்கும் தமிழ்நதிக்கு என்னுடைய அன்பு.

நன்றி என்கிற ஒற்றைச் சொல்லினை மட்டும் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் வேண்டிய மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் என் சந்தர்ப்பத் துய்த்தல்களை சில நேரங்களில் புன்னகையோடும் சில நேரங்களில் அசூசையோடும் பார்த்துக் கொள்கிறேன்.

அய்யனார்
துபாய்
30 நவம்பர் 2009

Monday, December 21, 2009

மூன்று புத்தகங்கள் : என் முப்பரிமாண உலகம்


இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்கிற தலைப்புகளில் வர இருக்கின்றன. வலைப்பூவில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்து நேற்று வரை இங்கு எழுதப்படுபவைகள் புத்தகங்களுக்கான தயாரிப்புகள் அல்ல என்பதுதான் என் நம்பிக்கையாக இருந்து வந்தது. பவா மற்றும் ஷைலஜாவின் மிகுதியான அன்பே இப்புத்தகங்களுக்கான பிரதான காரணமாகும். இந்த மூன்று புத்தகங்களும் நண்பர்களின் உழைப்பையும் நேரத்தையும் உறிஞ்சிவிட்டுத்தான் நேர்த்தியாய் வெளிவருகின்றன.பவா அய்ந்து புத்தகங்களை கொண்டுவர விரும்பினார் என் சோம்பலும் பயமுமே அய்ந்தை மூன்றாக்கியது. இதுவரைக்கும் எழுதப்பட்ட கவிதைகளை கதைகளை தொகுத்ததில் நதியலையின் பங்கு மிக முக்கியமானது. தொகுக்கப்பட்டவற்றை புத்தக வடிவமைப்பினுக்கு மாற்ற முடியாமல் போனது யூனிகோடை பேஜ்மேக்கரில் கொண்டு வர நண்பர்கள் சகிதமாய் தலைகீழாய் நின்றும் முடியவில்லை. வம்சி நண்பர்கள் இம்மூன்று தொகுப்பையும் விரல்கள் நோக மீண்டும் தட்டச்சியிருக்கின்றனர். இறுதி கட்டத்தில் கதிர் தன் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி யூனிகோடை பேஜ்மேக்கரில் கொண்டுவந்திருக்கிறான். புகைப்படக் கலைஞர் பினு பாஸ்கர் புத்தக அட்டைகளை வடிவமைத்ததுத் தந்ததுடன் என் புகைப்படத்தையும் எடுத்துக் கொடுத்தார். தனிமையின் இசைக்கு தமிழ்நதியும் நானிலும் நுழையும் வெளிச்சத்திற்கு நதியலையும் உரையாடலினிக்கு ஜமாலனும் தங்களது பகிர்வுகளைத் தந்திருக்கின்றனர்.

இத்தனை பேரின் நேரமும் ஆற்றலும் என் தனியொருவனின் தம்பட்டங்களுக்காக வீணாகி இருப்பதை நினைக்கும்போது லேசாய் குற்ற உணர்வு எழுகிறது. புதியதொரு வாசகனை இப்புத்தகங்கள் கண்டடைய வேண்டுமென்பதற்காகத்தான் இத்தனை முயற்சியும் என்பது சற்று ஆறுதலானதுதான். ஆனால் புதிய வாசகனுக்கு/வாசகிக்கு புதிய கிளர்ச்சிகளை என் பழைய உணர்வுகள் தந்துவிடமுடியுமா என்கிற சந்தேகங்கள் இருந்தன. அது நேற்று இரவு சற்றுக் குறைந்தது. க.சீ.சிவக்குமார் தன் பக்கத்தில் என் இரண்டு தொகுப்புகளை படித்து முடித்ததும் என் அருகாமையை விரும்பியதாக குறிப்பிட்டிருந்தார். என் தொகுப்புகள் குறித்தான லேசான நிம்மதியை அக்குறிப்புகள் வரவழைத்தன. அவருக்கு என் நன்றி. மற்றபடி என்னைத் தொடர்ந்து நகர்த்தும் விசை நண்பர்களின் அன்பாக இருந்து வருகிறது.

இங்கு கொட்டப்பட்டிருக்கும் அத்தனை வார்த்தைகளுக்கும் பின்னாலிருக்கும் பெண்களை, காதலிகளை, ஸ்நேகிதிகளை, நண்பர்களை, துரோகிகளை, எதிரிகளை, அலைக் கழித்த வாழ்வை, அள்ளிக் கொடுத்த வாழ்வை மிக நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

Thursday, December 17, 2009

மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் - துபாய் திரைப்பட விழா

அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகள்:

ஆறாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில் டிசம்பர் 9 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 16 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்விழாவில் 55 நாடுகளிலிருந்து 168 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் அராபிய ஆவணப்படங்களும் பாலஸ்தீனிய குறும்படங்களும் உள்ளடக்கம். பெரும்பாலான திரையிடல்கள் மால் ஆஃப் எமிரேட்ஸ் - சினிஸ்டார் திரையரங்குகளிலும் சொற்பமான படங்கள் மதினாத் ஜூமைரா, டிஎம்சி உள்ளிட்ட மற்ற மூன்று இடங்களிலும் திரையிடப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதை தேர்வுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இது ஒருவகையில் சரியானதே. பெரும்பான்மையுடன் போட்டியிட முடியாத சிறுபான்மை சினிமாவிற்கான தளமாகவும் துபாய் திரைப்பட விழா இருக்கிறது. A celebaration of Indian cinema என்கிற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அமிதாப் பச்சனிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நம் ஊரிலிருந்து அவள் பெயர் தமிழரசி மற்றும் யோகி இரண்டும் இடம் பிடித்திருந்தன. பிற நாடுகளின் வரிசையில் பிரெஞ்சுத் திரைப்படங்களும் அதிகம் திரையிடப்பட்டன.

மற்ற நாடுகளின் சினிமா பரிச்சயமான அளவிற்கு நான் வாழும் நிலப்பரப்பின் திரைப்படங்களை இன்னும் பார்த்திருக்கவில்லை(ஈரான் நீங்கலாக) எனவே இம்முறை மத்திய கிழக்கின் படங்களைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் முன்பெப்போதுமில்லாத பரபரப்பான நாட்களை எதிர்கொண்டிருப்பதால் நான்கு படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

THE NILE BIRDS – Egypt
WHISPER WITH THE WIND -Iraq
MY DEAR ENEMY - South Korea
THE MAN WHO SOLD THE WORLD - Morocco

நான்கு படங்களுமே நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. திரைப்படம் என்கிற வகையில் எகிப்திய படமான நைல் பேர்ட்ஸ் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தாலும் நைல் நதிக்கரை மனிதர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வு, காமம், கொண்டாட்டம், துயரம் இவற்றை ஓரளவிற்கு சுமாரான திரைக்கதையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. எகிப்தில் சினிமா ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை. அதிக திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை. வளர்ச்சி, தொழில்நுட்பம் என எதுவுமில்லாத ஒரு தேசத்திலிருந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அந்நாட்டைப் பொறுத்த வரை ஒரு முக்கிய சினிமாவாக இருக்கலாம். இப்படத்தினை அதன் இயக்குனரோடும் கதாநாயகனோடும் அமர்ந்து பார்த்தேன். படம் முடிந்த பின்பான உரையாடலில் நான் சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் எகிப்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்து இச்சினிமா குறித்த நல்லதொரு திருப்தி இருந்ததை அவர்களின் களிப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

After the Downfall, Heman, The Children of Diyarbakir, Whisper with the Wind போன்ற குர்திஷ் இயக்குனர்களின் படங்கள் இம்முறை இடம் பெற்றிருந்தன. குர்திஷ் இன மக்களின் அழித்தொழிப்பை களமாகக் கொண்டிருக்கும் இத் திரைப்படங்கள் துருக்கி,ஈரான் மற்றும் ஈராக் நாடுகளால் கொன்று குவிக்கப்பட்ட குர்திஷ் இன மக்களின் அவலத்தை மிகுந்த வலியுடன் நம் முன் வைக்கின்றன. Turtles can fly படத்தை இயக்கிய பக்மன் ஹோபாடியின் No one Knows about Persian Cats படத்தைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன் அத்திரைப்படம் இங்கு திரையிடப்படாததால் இரானிய குர்திஷான ஷாஹ்ரம் அலிடியின் இயக்கத்தில் வந்த Whisper with the Wind படத்தைப் பார்த்தேன். ஷாஹ்ரம் அலிடியின் முதல் படமிது. கான் 2009 திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. குர்திஷ் இன மக்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வெறியாட்டத்தை, படுகொலைகளை இத் திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. வறண்ட மலைகள் சூழந்த நிலப்பரப்பு, எல்லாவிடத்தும் நிறைந்திருக்கும் காற்றின் அமானுஷ்ய சப்தம் இவற்றின் பின்னணியோடு மிகத் துல்லியமான, அபாரமான ஒளிப்பதிவும் சேர்ந்து இப்படத்தை மிளிரச் செய்திருக்கிறது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் சாமான்யர்களின் வாழ்வு மிகுந்த வலியுள்ளதாக இருக்கிறது. தொடர்ச்சியான போர்களிலும், வல்லரசுகளின் கோரத் தாண்டவங்களிலும் சிக்கி அலைவுறுவதோடு மட்டுமில்லாமல் மதம், சமூகக் கட்டுக்கள், சிறுபான்மை இனத்தவரின் மீதான அதிகாரத்தின் வெறியாட்டம் என எல்லா வன்முறைகளும் நிகழ்ந்த / நிகழ்ந்து கொண்டிருக்கும் இடமாக இத் தேசங்கள் இருக்கின்றன. இம்மாதிரியான சூழலிலிருந்து வெளிவரும் படங்கள் தங்களின் துயரம் நிரம்பிய வாழ்வை, இழப்பை, கதறல்களை இரத்தமும் சதையுமாக பார்வையாளன் முன் வைக்கின்றன. அவை ஏற்படுத்தும் அதிர்ச்சி பார்வையாளனை நிலைகுலைய வைக்கிறது. அப்படி ஒரு அதிர்வைத்தான் இப்படமும் ஏற்படுத்தியது. ஈராக் - அமெரிக்க போர்சூழல் பின்னணியில் வெளிவந்த turtles can fly படத்தின் தொடர்ச்சியாக இதை அணுகலாம். இரண்டு பிரச்சினைகளும் வெவ்வேறானது என்றாலும் இரண்டுமே சாமான்யர்களின் துயரத்தை மிக அழுத்தமாகவே நம் முன் வைக்கின்றன.

ஈராக் மலைப்பிரதேசங்களில் வாழும் குர்திஷ் மக்களின் அழித்தொழிப்பில் தன் மகனை இழந்த மாம் பால்டார் என்கிற முதியவர் திக்பிரம்மையுற்ற மனைவியுடன் எஞ்சிய நாளை கழிக்கிறார். தன் வாகனத்தில் மலைகள், சமவெளிகள் முழுக்கப் பயணித்து அங்கங்கே மீதமிருக்கும் மக்களுக்கு தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார். கூண்டோடு அழிக்கப்பட்ட கிராமங்கள், உயிரோடு புதைக்கப்பட்ட மனித உடல்கள் எல்லாவற்றையும் தாண்டி மீதமிருக்கும் மனிதர்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரது பயணங்களில் தென்படும் கடைகள், நிகழ்வுகள் யாவும் திரும்பி வரும்போது காணாமல் போயிருக்கின்றன அல்லது சிதிலமாகிக் கிடக்கின்றன. உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் அழித்தொழிப்புகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வரலாம் என்கிற பயத்தோடு வாழ்கிற மக்களின் அவலத்தை மிகத் துல்லியமாய் பதிவு செய்திருக்கும் படமிது. எல்லா நம்பிக்கைகளும் காணாமல் போன பின்பு அங்கங்கே கேட்கும் அல்லா அல்லா என்கிற அவலக் குரல்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் மாம் பால்டார் பதிவு செய்த பிறந்த குழந்தையின் அழுகுரலொன்றை தடைசெய்யப்பட்ட வானொலி ஒளிபரப்பு செய்கிறது. மலைப் பிரதேசமெங்கும் வானொலியில் கேட்கும் அப்போதுதான் பிறந்த குழந்தையின் அழுகுரல் புதியதொரு துவக்கத்திற்கான நம்பிக்கைகளைத் தருவதோடு படம் நிறைவடைகிறது.

ஈழம், குர்திஷ்தான் என நிறைவேறாமலேயே போன அற்புதங்கள் கணக்கிலடங்கா குழந்தைகளின் பெண்களின் முதியவர்களின் இளைஞர்களின் உடல்களைத் தின்று அதிகாரத்தின் காலடியில் புதையுண்டிருக்கலாம். ஆயினும் அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகளைப் பற்றிய கனவுகளின் மீது நம்பிக்கை வைப்பதுதான் இந்நாட்களின் மீட்பாய் இருக்கிறது.

Tuesday, December 15, 2009

அழுகை

பெருமழையின் சப்தங்களைப்
போலிருந்ததாய் சொன்னாள்
விசும்பலில் துவங்கி
கேவல்களாய் நிறைவுற்ற
சின்னஞ் சிறு சிம்பொனி
என முறுவலித்தாள்
பாறைப் பிளவிலிருந்து கசிந்த நதி
எனச் சொல்லிச் சிரித்தாள்
….
எதுவும் நினைவிலில்லை
நான் உடையத் துவங்கிய கணத்திற்கு
முன்புவரை
அவளின் பெருங்கருணை முலைகளில்
பாலருந்திக் கொண்டிருந்தேன்.

Monday, December 7, 2009

ஒரு புகைப்படக் கலைஞனும் பூனைகளால் நிறைந்த வீடும்

திருவண்ணாமலையில் பவா வுடன் ஓவியர் காயத்ரியின் ஸ்டூடியோவில் ஒரு புகைப்பட ஆல்பத்தைப் பார்க்க நேர்ந்தது. ஓவியமா ஒளிப்படமா என குழம்ப வைக்கும் அளவிற்கு ஒளியுடன் விளையாடியிருந்த அப் புகைப்படங்களை எடுத்தவர் யார் எனக் கேட்கையில் பவா பினு பாஸ்கரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். பினு பாஸ்கர் மிக நேர்த்தியான புகைப்படக் கலைஞன். சமரசங்களுக்கு இடம் கொடுக்காமல் வாழப் பழகியவன். தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவன். என்றெல்லாம் பவா சில உதாரணங்களோடு சொல்ல ஆரம்பித்ததும் பினுவை எனக்குப் பிடித்துப் போனது. பினு கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தற்போது தோஹாவில் வசிக்கிறார் என்றதும் விரைவில் பார்த்து விடலாம் எனத் திட்டமிட்டிருந்தேன்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் தொலைபேசுகையில் பினு துபாய் வருவதாகத் தெரிவித்தார். ஒரு பிற்பகலில் ballentine சகிதமாய் அவர் தங்கியிருந்த கடற்கரையோர வில்லா ஒன்றினுள் நுழைந்தேன். இரண்டு நவீன அழுக்கான ஹார்லி டேவிட்சன்கள், அதைச் சுற்றிச் சிதறிக் கிடந்த பேட்டரிகள், தட்டு முட்டு இரும்பு சாமான்கள், வண்ணம் உலர்ந்து உதிர்ந்த பெயிண்ட் காலி டப்பாக்கள் என எல்லாம் சேர்ந்து வில்லாவின் முகப்பில் என்னை வரவேற்றன. உள்நுழைந்தால் வரவேற்பரை முழுக்க இசைக் கருவிகள். கிதார்கள், மிகப் பெரிய ட்ரம்ஸ், கீபோர்ட் இன்னும் பல வகை தந்திக் கருவிகள் (ஸ்பானிய கிதாராக இருக்கலாம்) இங்கும் அங்குமாய் சிதறிக் கிடந்தன. இரண்டு பிரெஞ்சு நபர்கள் மேல் சட்டை இல்லாமல் கணினி முன் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் கைக்குலுக்கி உள் நுழைந்தால் கூடம். நடுக்கூடத்தில் ஒரு சலவை யந்திரம். அதைச் சுற்றி அழுக்குத் துணிகள். அதையும் கடந்தால் ஒரு சமயலறை. அதன் நடுவில் ஒரு பெரிய மகாகனி உணவு மேசை. அதன் மீது மடிக் கணினியை வைத்தபடி ஜூலியா அவரின் அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தார். ஜூலியா பினுவின் ஸ்பானியத் தோழி. திருவண்ணாமலையில் சிறிது காலம் வசித்திருந்திருக்கிறார். பவா மற்றும் காயத்ரியின் நலன் விசாரித்துவிட்டு பின் இணைந்து கொள்வதாக விடைபெற்றார்.

சமயலறையிலிருந்து வீட்டின் தோட்டம் துவங்குகிறது. சில மரங்கள் நடப்பட்டிருந்தன. புற்கள் வளர்க்கப்பட்டிருந்தன. வில்லாவைச் சுற்றிலும் விஸ்தாரமான காலியிடம். அங்கங்கே சிகெரெட் துண்டுகள் நிரம்பி வழியும் சாம்பல் கிண்ணங்கள். உடைந்த, நெளிந்த, தூசுபடிந்த இருக்கைகள். இவற்றோடு சுலபத்தில் எண்ணிவிட முடியாத எண்ணிக்கையில் பூனைகள். அந்த வில்லாவின் முகப்பு இரும்பு கேட்டிலிருந்து தோட்டத்துப் புற்செடிவரை எங்கும் நீக்கமற பூனைகள் நிறைந்திருந்தன. சின்னஞ்சிறு குட்டியிலிருந்து முதிர்ந்த பூனை வரை பல்வேறு வடிவில் பூனைகள் அவ்வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தன. பூனைகளுக்கான உணவு அங்கங்கே தட்டுக்களில் சிதறிக் கிடந்தது. அதுதவிர்த்து சமயலறை மேசையின் மீது யாராவது உணவருந்தும்போது அவரை குட்டிப் பூனைகள் மொய்க்கத் துவங்கிவிடும். ஜூலியா மேசையின் மீது உணவருந்திக் கொண்டிருந்தபோது சுமார் பத்து பூனைக்குட்டிகள் அவரின் மீதும் மேசையின் மீதும் ஒன்றன் பின் ஒன்றாய் ஏறியபடி உணவுத் தட்டினை நெருங்கின. ஜூலியா சிறிதும் சப்தமெழுப்பாது, சலிக்காது ஒரு கையினால் உணவருந்தியபடி இன்னொரு கையினால் மேசையிலிருந்து ஒவ்வொரு பூனைக்குட்டியையும் இலகுவாய் கீழிறக்கிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியை சற்றுத் தொலைவில் அமர்ந்தபடி நானும் பினுவும் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

வசிப்பிடங்களில் சுதந்திரத் தன்மை மிகவும் முக்கியமானது. சுத்தமான ஒழுங்கான வீடுகளைக் காட்டிலும் சுதந்திரத் தன்மையை இயல்பாய் கொண்டிருக்கும் இவ்வீடு உண்மையான கலைஞர்களுக்கானது. இந்த வீட்டின் உரிமையாளர் தேர்ந்த இசைக் கலைஞர். உலகின் பல பாகங்களிலிருந்து வரும் பயணிகள், புகைப்படக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் என எல்லாரின் தங்குமிடமும் இதுவாய் இருக்கிறது. பினுவால் இம்மாதிரியான இடங்களில் மட்டுமே தங்க முடிவதாய் சொன்னார். இம்மாதிரியான சூழல் மட்டுமே தொடர்ந்து வேலை செய்வதற்கு உகந்ததாய் இருக்கிறது என்றார்.

பிற்பகலுக்கு சற்று முன்னர்தான் பினு விழித்திருக்கிறார். நான்கு நாட்கள் தொடர்ச்சியாக தூங்காது நேற்று முழுக்கத் தூங்கியதாய் சொன்னார். இருவரும் கிளம்பி மெக்டொனால்டில் அமர்ந்தோம். பினு இதுநாள் வரைக்குமான தன் கதைகளை, பயணங்களை, வாழ்வை என்னிடம் சொல்லத் துவங்கினார்.

பட்டப் படிப்பிற்கு பிறகு எந்தத் துறையை தேர்ந்தெடுப்பதென்று மிகவும் யோசித்துப் பின்பு திரைப்படம்தான் தனக்கான துறையெனத் தீர்மானித்து அடையாறு திரைப்படக் கல்லூரியில் விண்ணப்பித்திருக்கிறார். காலியாகவிருக்கும் எட்டு இடங்களில் ஒரு இடம் மட்டுமே மற்ற மாநிலத்தினருக்கானது. அந்த இடத்தினுக்கான நேர்முகத் தேர்வு மிகக் கடினமாக இருக்கும் என்பதினால் பினு மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். நேர்முகத் தேர்வை திருப்தியாக செய்தும் ஜூரிகளின் பாராட்டு பெற்றும் அந்த இடம் ஆந்திரா தயாரிப்பாளர் ஒருவரின் மகனுக்கு சென்றுவிட்டிருக்கிறது. வெறுத்துப் போன பினு தன் பயணத்தை துவங்கியிருக்கிறார். ஒரு வருடம் முழுக்க வீட்டைத் துறந்துவிட்டு இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறார். இந்தியாவின் ஏதோ ஒரு மூலையிலிருந்து அவர் வீட்டுக்குத் தொலைபேசுகையில் பினுவின் அச்சன் ஆஸ்திரேலியாவிலிருக்கும் புகைப்படக் கல்லூரியில் சேரச் சொல்லி பினுவிற்கு அழைப்பு வந்திருக்கும் தகவலை சொல்லியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் படிப்பு வேலையென பத்து வருடங்கள் வாழ்ந்துவிட்டு துபாய் வந்திருக்கிறார். சாச்சி & சாச்சி என்ற விளம்பர நிறுவனத்தின் முதன்மை புகைப்படக்காரராய் வேலை பார்த்திருக்கிறார். ஆறு வருடத்திற்கு முன்பு துபாயை விட்டுப் போன அந்த நாளை மிகவும் வேடிக்கையும் குதூகலமுமான குரலில் பினு விவரித்தார். தான் பார்த்து வந்த வேலை சலிப்பை ஏற்படுத்தவே ஒரு நாள் இங்கிருந்து ஓடிவிடத் தீர்மானித்திருக்கிறார். தன் நண்பன் ஒருவனை காரில் ஏற்றிக் கொண்டு விமான நிலையம் வந்திருக்கிறார் கார் சாவியை நண்பனிடம் கொடுத்துவிட்டு விமானம் ஏறிப் போய்விட்டிருக்கிறார். மிக அதிக வருமானம், வீடு, கார், நண்பர்கள் என எல்லாவற்றையும் அப்படியே விட்டுச் செல்லும் துணிச்சல் வெகு சொற்பமானவர்களுக்குத்தான் வருகிறது. இப்போது மீண்டும் விளம்பரத் துறையின் மீது பினுவிற்கு ஆர்வம் வந்திருக்கிறது. நிறுவனங்களின் விளம்பரங்கள், நிகழ்வுகள் இவற்றை நண்பர்கள் உதவியுடன் வடிவமைக்கிறார். துபாயில் தன்னுடைய புகைப்படக் கண்காட்சியை வைக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார்.

தமிழில் ஒரு படம் பண்ண வேண்டுமென்பது பினுவின் ஆசையாய் இருக்கிறது. சமீபத்தில் பூ படம் பார்த்து பிடித்துப் போனதாம். சிறந்த கதைகளை படமெடுக்கத் துணியாத தமிழ் சினிமாவின் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

பினுவை சந்திக்கப் போவதற்கு முன்பு வரை எனக்கு நிறையத் தயக்கங்கள் இருந்தன. நட்பு நிமித்தமோடு மட்டுமில்லாமல் அவரின் மூலமாய் எனக்கு இரண்டு உதவிகள் தேவைப்பட்டன. ஒன்று என்னுடைய வரவிருக்கும் புத்தகங்களுக்கான முகப்பிற்குத் தேவைப்பட்ட அவரெடுத்த புகைப்படம் மற்றொன்று புத்தகப் பின்பக்கத்திற்கான அவரால் எடுக்கப் படப் போகிற என் புகைப்படம். முதலாவதைக் கூட கேட்டுவிடலாம் இரண்டாவதைக் கேட்கத்தான் நான் மிகவும் தயங்கினேன்.

உணவு முடித்து வீட்டிற்கு வந்ததும் நான் அதைக் கேட்டுவிட்டேன். இதற்கா இத்தனைத் தயக்கம் என்றபடி தன்னுடைய புகைப்படக் கருவியை எடுத்து வந்தார். சூரியன் அமிழும் நேரமாதலால் ஒளி குறைவாக இருந்தது. அவரின் புகைப்படப் பெட்டிக்கு சார்ஜ் தேவைப்படவே ஜூலியாவின் நிக்கானினால் என்னைப் புகைப்படமெடுக்கத் துவங்கினார். ஒரே ஒரு புகைப்படத்திற்காக அவர் செலவிட்ட நேரம் முப்பது நிமிடங்கள் ஐம்பதிற்கும் மேற்பட்ட கிளிக்குகள். அவற்றிலிருந்து சிலவற்றை என் மின்னஞ்சலுக்கு அனுப்புவதாய் சொன்னார்.

பினுவிற்கு சிதிலமடைந்த பிரதேசங்களின் மீது பெரும் காதலிருக்கிறது. அதிகம் கண்டு கொள்ளப்படாத இடங்கள், மறைக்கப்பட்டக் காட்சிகள் இவற்றை தனது புகைப்படங்களாக்க பெரிதும் விரும்புகிறார். அவரின் மடிக்கணினியில் அவரெடுத்தப் புகைப்படங்களைக் காண்பித்தார். உலகின் பல்வேறு பாகங்களில் நடத்திய கண்காட்சிகள் அவற்றில் இடம்பெற்ற படங்கள் என எல்லாம் பார்த்து முடித்த பின்பு என் எழுத்தைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார். நான் என் எழுத்தின் மீது வைத்திருக்கிற சுய மதிப்பீடுகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். நானிலும் நுழையும் வெளிச்சம் என்கிற தலைப்பை ஆங்கிலத்தில் விளக்கியபோது பினு மகிழ்ந்து போனார். அப்போது ballentine யையும் பூனைகள் புடைசூழ ஆரம்பித்திருந்தோம். இலேசாய் கூச்சம் விலக தலைப்புக் கவிதையை சொல்ல ஆரம்பித்தேன்.
விளக்குகளை அணைத்ததும்
அவள் பிரகாசிக்கத் துவங்குவாள்
இருளில் ஒளிரும் பாஸ்பரஸ் நீயென்பேன்
வெட்கத்தில் குழைந்து இன்னும் இறுக்குவாள்
அவள் உடலிலிருந்து வெளியேறும் வெளிச்சம்
நட்சத்திரங்களின் பிரகாசத்திற்கு ஒப்பானது
கருத்த வயல் வெளியில் அலையும்
மின்மினிப்பூச்சுகளின்
ஒளிச் சமிக்ஞைகளுக்கு ஒப்பானது
ஒளியில் சிதறும் கருமை நான்
நானிலும் நுழையும் வெளிச்சமவள்..
பினு இந்த அவள் பெண்ணாக இருக்க வேண்டிய அவசியமில்லை இல்லையா? என்றதற்கு ஆம் என்றேன் (வாழ்க போமோ!)

நன்கு இருட்டின பின்பு பினுவிடம் விடைபெற்று வந்தேன். கடற்கரை சாலையில் விரைகையில் மிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன். Bernardo Bertolucci திரைப்படம் ஒன்றினுக்குள் நுழைந்து அவரின் கதாபாத்திரங்களை சந்தித்துவிட்டு வந்த உணர்வைத்தான் அந்த வீடும் மனிதர்களும் பினுவும் தந்திருந்தனர். இம்மாதிரியான மனிதரை எனக்கு அறியத் தந்த பவாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

Tuesday, November 17, 2009

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்தொன்பது வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து போயிருக்கின்றனர். இதிலும் பெரிதாய் பேசப்பட்டவர் என எவருமே இல்லாததும் மற்றொரு குறையாகவே இருக்கிறது. 1936 ல் டி.பி ராஜலட்சுமி மிஸ் கமலா என்கிற தன் நாவலையே படமாக இயக்கி இருக்கிறார். அதற்குப் பின்பு வந்த மதுரை வீரன் (1938) படத்தையும் இவர் இயக்கினார். இவருக்குப் பின்பு கிட்டத் தட்ட முப்பத்தைந்து வருடங்கள் கழித்து தெலுங்கில் மீனா என்கிற படத்தை 1973 இல் விஜயநிர்மலா இயக்கினார். இவர் இயக்கிய ராம் ராபர்ட் ரஹீம் என்கிற படம் 1980 இல் தமிழில் வெளிவந்தது. எண்ணிக்கையளவில் இன்றும் எந்தப் பெண் இயக்குனரும் விஜயநிர்மலாவைத் தொட்டிருக்கவில்லை. இடையில் பானுமதியும் சாவித்ரியும் ஆசைக்கு ஓரிரு படங்கள் இயக்கிப் பார்த்துக் கொண்டதோடு சரி அதற்கும் இடையில் யாராவது வந்து போனார்களா அல்லது வராமலே போனார்களா என்கிற தகவல்கள் தெரியவில்லை. பின்பு பல வருடங்கள் கழித்து சுஹாசினி இந்திரா மூலமாய் பிரவேசித்தார். பலமான பின்னணி இருந்தும் அவரும் சோபிக்கவில்லை. அவருக்குப் பின்பு வந்தவர்களாக ப்ரியா, மதுமிதா மற்றும் சமீபமாய் நந்தினி. எழுபத்தொன்பது வருட தமிழ் சினிமாவில் பத்திற்கும் குறைவான பெண்களே இயக்குனர்களாக முடிந்தது எவ்வளவு பெரிய சோகம்.

பார்வையை சற்று விரிவாக்கினால் இந்திய அளவில் கூட அபர்ணா சென், மீரா நாயர், தீபா மேக்தா, ரேவதி, ஃபரா கான், ப்ரேமா கர்னாத், ராஜஸ்ரீ, பூஜாபட் தவிர்த்து வேறெந்த பெண் இயக்குனர்களும் பேசப்படவில்லை அல்லது உருவாகவில்லை. பெண்களை நடிகை அல்லது கவர்ச்சி என்கிற பிம்பத்திற்கு மேல் நகர இந்திய மனங்கள் அனுப்பதிப்பதில்லையா? அல்லது இந்தத் துறையைப் பொருத்த வரை பெண்களும் தங்களின் மூளையை விட அழகின் மீதுதான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

தமிழ் சினிமாவில் பெண்பார்வை, பெண் உணர்வு, பெண்ணியம் என்றெல்லாம் பேசிய ஆண்கள் திரையில் நம் முன் வைத்ததெல்லாம் அபத்தங்களையும் ஆபாசக் குப்பைகளையும்தான். பெண்ணிய இயக்குனர் என அடையாளப்படுத்தப் பட்ட பாலசந்தருக்கு நாயகி ஜாக்கெட் மாற்றுவதைக் காட்டுவதே மிகப் பெரிய புரட்சியாக இருந்தது. இம்மாதிரியான குப்பைகள் பெருகாமலிருக்கவாவது பெண் இயக்குனர்களின் பங்கு தமிழ் சூழலுக்கு அவசியமாகிறது. இதுவரை தமிழ் சினிமாக்களில் எழுதப்பட்ட காதல் பாடல்களில் பெண் தன்மையே / பார்வையே இல்லை என்கிற அதிர்ச்சி வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் கேட்டதும்தான் எனக்கு எழுந்தது. இதுவரை பெண்களின் காதலுணர்வுகளாய் ஆண்களால் எழுதப்பட்ட பாடல்களில் துருத்திக் கொண்டிருந்ததெல்லாம் ஆணாதிக்கமும் அபத்தமும் மட்டும்தான் என்பதை உணர ஒரு பெண் பாடலாசிரியரின் பங்கு அவசியமாகிறது. பெண்ணியம் என்பது கருப்பினப் பெண்ணிற்கும் வெள்ளையினப் பெண்ணிற்கும் வெவ்வேறானது. சினிமாவும் சரி வாழ்வும் சரி அவரவர் பிரச்சினைகளை அவரவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும் என்பது என் துணிபு.

பெண் தன் காதல் உணர்வைச் சொல்வதாய் ஒரு பாடல் எழுதப்படக்கூட தமிழ்சினிமா எழுபது வருடங்களுக்கு மேல் காத்துக் கொண்டிருக்க வேண்டியதாய் போயிற்று. இப் பரிதாப நிலையில் நாம் பெண் இயக்குனர்களை எப்படி எதிர்பார்க்க? இம்மாதிரியான சூழலிலிருந்து அவ்வப்போதாவது வெளிவரும் பெண்களை வரவேற்பது மிகவும் அவசியமானது. அதே சமயம் அவர்களின் படங்களின் மீதான விமர்சனங்களையும் கவனமாக அணுக வேண்டியதும் அவசியமாகிறது.

சம கால பெண் இயக்குனர்களில் ஒருவரான ப்ரியாவின் இயக்கத்தில் வெளிவந்த கண்ட நாள் முதல் திரைப்படம் காதல் உணர்வு, கனவில் மிதத்தல், சாந்தமான நாயகன், இழையோடும் நகைச்சுவை, ஏகத்துக்கும் பெண்மையென நல்லதொரு பொழுது போக்கு படமாக இருந்தது. இருப்பினும் அவருடைய அடுத்த படமான கண்ணாமூச்சி ஏனடா பெரும் ஏமாற்றத்தையே தந்தது. மதுமிதாவின் வல்லமை தாராயோ படமும் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளைக் கூடப் பூர்த்தி செய்யவில்லை. இவர்கள் இருவருக்குமான அடுத்த நகர்வுகள் சாத்தியமா? என்பதை அவர்களிடமே விட்டு விடுவோம்.

ப்ரியாவின் உதவி இயக்குனரான நந்தினியின் திரு திரு துரு துரு படத்தை கோவையில் பதிவுலக நண்பர்களுடன் பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. சம கால தமிழ்படங்களிலிருக்கும் பெரும்பாலான இம்சைகள் இப்படத்தில் இல்லை. நேர்த்தியான நாயகி, சின்ன சின்ன முடிச்சுகளாய் சிக்கல்கள், சுவாராஸியமான விடுவிப்புகள், மெளலியின் தரமான நடிப்பு என நல்லதொரு பொழுது போக்குப் படமாய் இருந்தது. தமிழில் கலைப்படங்களுக்குத்தான் சாத்தியமில்லையென்றால் நகைச்சுவைப் படங்களுக்கும் அதே போன்றதொரு தேக்க நிலைதான் இருந்து வருகிறது. பொய் சொல்லப் போறோம், திரு திரு துரு துரு போன்ற படங்கள் எப்போதாவது வந்து இந்தத் தேக்கத்தை உடைக்க முயலுகின்றன. ஆனாலும் திரைப்படம் வசூலித்தே ஆக வேண்டுமென்கிற நிர்பந்தங்கள் இருப்பதால் நம் சூழல் ரசிக சிகாமணிகளின் விருப்பத்தினை நிறைவு செய்யவே குப்பைகள் படங்களாக வடிவம் கொள்கின்றன. இந்தத் திரைப்படம் வசூலித்ததா எனத் தெரியவில்லை வசூலித்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி. நந்தினிக்கு பாராட்டுக்களும் வாழ்த்தும்.

பணத் தேவை, கடுமையான போட்டி, மந்தமான வியாபாரச் சூழல், இழுத்து மூடும் திரையரங்குகள், வணிகக் குறி, ரசிகவிசிலடிச்சான் குஞ்சுகள், தொலைக்காட்சி சீரியல்கள், திருட்டு விசிடி போன்ற நெருக்கடிகள் ஓரளவிற்கு சுமாரான படங்கள் வந்தால் போதும் என்கிற கட்டத்தினுக்கு பார்வையாளனை நகர்த்தி விடுகின்றன. அதையும் நிறைவேற்றச் சாத்தியமில்லாத நம் பண முதலை தயாரிப்பாளர்கள், ஸ்டார்கள், தலைகள், தளபதிகள், வீரர்கள், புயல்கள், கபோதிகள், கவிர்ச்சி கன்னிகள், விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாரையும் ஒரு சாக்கில் கட்டி நடுக்கடலில் விட்டு வந்தால் போதும் தமிழ் சினிமா பிழைத்துக் கொள்ளும்.

திரைப்படத் துறையில் உதவி இயக்குனர்களாக இருக்கும் ஓரிரு பெண்களை வலைப்பக்கங்களில் பார்க்க முடிகிறது. சந்திரா, தேன்மொழி தாஸ் போன்றோர் இலக்கியப் பின்புலத்தோடு திரையில் இயங்கிவருகின்றனர். ஏற்கனவே இலக்கியவாதியான உமாசக்தியும் இப்போது சந்திராவுடன் இணைந்திருக்கிறார். இவர்களின் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.

Friday, November 13, 2009

குளிர் நினைவுகள்


குளிர்பதனப் பெட்டியின் உர்ர் தான் இன்றைய விழிப்பில் கேட்ட முதல் சப்தம். இந்த சப்தத்தின் மீது எண்ணத்தைக் குவித்தபடி படுத்துக் கிடந்தேன். காலைப் பரபரப்புகள் இல்லாத இந்த விடுமுறைத் தினத்தைப் போல எல்லா தினங்களும் இருந்தால் எப்படியிருக்கும் என்கிற நினைவின் கனவுத் துழாவல்களோடு கடிகாரத்தின் நகரும் முள்ளின் சப்தமும் சேர்ந்து கொண்டது. இந்தப் புதிய வீடு எனக்குப் பிடித்திருக்கிறது. நகரத்தின் இரைச்சல்களிலிருந்து சற்றுத் தள்ளிய வீடிது. இதுவரை எத்தனை வீடுகளில் வசித்திருப்பேன் என்கிற எண்ணம் ஒவ்வொரு வீடாய் நினைவு படுத்தத் துவங்கியது. என் கிராமத்து வீடு, திருவண்ணாமலை வீடு, கிருஷ்ணகிரி அறை, காட்டிநாயனப் பள்ளி அறை, ஓசூர் தர்கா அறை, அண்ணாமலை நகர் வீடு, அண்ணாமலை நகர் அறை, டவுன்ஷிப் வீடு,பாண்டிச்சேரி நடேசன் நகர் வீடு, ரெட்டியார் பாளையம் அறை, எல்லப் பிள்ளைச் சாவடி வீடு, முதலியார் பேட்டை அறை சென்னை ஜாபர்கான் பேட்டை அறை,திருவள்ளூர் நேரு நகர் அறை, பூங்கா நகர் வீடு, ஆயில் மில் அறை, மதுரை வீடு, ஷார்ஜா பேங்க் ஸ்டீரீட் வீடு, துபாய் அல்கூஸ் அறை, கராமா அறை, டெய்ரா அறை, ஷார்ஜா வீடு மீண்டும் டெய்ரா அறை இப்போது இந்த பர் துபாய் வீடு. இது நான் வசிக்கும் இருபத்தி நான்காவது வீடு. புன்னகையும் அயர்ச்சியும் ஒரே சமயத்தில் எழுந்தது.

எது என்னை இப்படி விரட்டியடித்துக் கொண்டிருக்கிறதெனத் தெரியவில்லை. எல்லா வீட்டின் சித்திரங்களையும் வரிசையான காட்சிகளாக மாற்றி சுழலவிட்டுப் பார்த்தேன். முன் பின் கால வரிசைப்படி வேகமாய் நினைவுகளில் வீடுகளை நகர்த்தியும் பின்பு மெது மெது வாய் நகர்த்தியுமாய் நினைவுகளோடு விளையாடிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அலுக்கவே சடாரென எழுந்து திரைச்சீலையை சரக் கென விலக்கினேன். பளிச் வெள்ளை வெயில் திடீர் மிரட்சியாய் இருந்தது. சடார் சரக் பளிச் என்ன ஒரு ரிதம்! என நினைவு சப்தங்களில் முன்பும் பின்புமாய் அலையத் துவங்கியது.

நினைவைக் கட்டி இழுத்து நிகழில் பொருத்தினேன். மணி என்ன என சரியாய் தெரியவில்லை. எட்டரை அல்லது ஒன்பது இருக்கலாம். இங்கு குளிர் துவங்கி விட்டது.வெயிலுக்கு கருணை வந்து விட்டது. தூர தேசப் பறவைகள் வரத் துவங்கி விட்டன. கடல் புறாக்கள் அதிகம் கண்ணில் பட ஆரம்பித்து விட்டன. எல்லா காலத்திலும் இருக்கும் புறாக்கள் மிகுந்த அசட்டையாய் தரைத் தளத்தில் நடந்து கொண்டிருந்தன. குளிருக்கு ஒண்டும் பூனைகளைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். எல்லாப் பூனைகளையும் கொன்றிருப்பார்களோ என்கிற எண்ணம் பயத்தைத் தந்தது. இந்த நகரம் இன்னும் சரியாய் விழிக்கவில்லை. இரவு முழுக்க விழித்திருந்து விட்டு அடுத்த நாள் நண்பகல் வரை தூங்கும் இந்த நகரம் என்னை மட்டும் சீக்கிரம் எழுப்பி விட்டு விடும். மனித சஞ்சாரங்கள் குறைந்த காலையை நினைவுகளோடு போராடியபடி குளிரோடு அணுகுவது இதமாகத்தான் இருக்கிறது.

தேநீர் குடித்தால் என்னவெனத் தோன்றிற்று. தேநீர் தியானமுறை நினைவிற்கு வந்தது. சமோவாரில் தேநீர் கொதிக்கும் சப்தத்தின் மீது தியானித்தபடி, தயாரானவுடன் அதன் வாசனையை உள்ளிழுத்தபடி, தேநீரை மெதுவாய் மிக மெதுவாய் மிகமிக மெதுவாய் உறிஞ்சிக் குடித்தபடி நகரும் நாட்கள் மிகுந்த நிறைவுகளைத் தரக் கூடும். தியானம், நிர்வாணம், அமைதி, சலனமின்மை என எல்லாவற்றிலிருந்தும் இப்போது விலகிக் கடந்து வந்தாயிற்று. நினைவுகளோடு போராடப் பழகி விட்டிருக்கிறது. இது போன்ற தருணங்களில் நினைவே மிகப் பெரிய துணையாகவுமிருப்பதால் ஓஷோ, ஜேகே வையெல்லாம் பரணில் தூக்கிப் போட்டாயிற்று. எனக்கானத் தேநீரைத் தயாரிக்க எனக்கான உணவைச் சமைக்க எப்போதும் பிடித்திருக்கிறது. தேயிலையில் பால் கலப்பது வன்முறைதான் என்றாலும் எனக்கிதுதான் வசதி. செம்மண் நிறத்தில் லேசாய் ஏல வாசனையோடு டீ தயாரித்துக் குடிக்க எனக்குப் பிடித்திருக்கிறது. என் முடி வெள்ளையாவதற்கு இதுதான் காரணமென இவள் சொல்வதை நினைத்தபடியே மேலதிகமாய் ஒரு கரண்டி தேயிலையைக் கூட்டினேன். காலையில் புகைக்க எனக்குப் பிடிக்காது. உடல் மாசுபடுவதைக் காட்டிலும் இந்த அதிகாலைக் குளிர் காற்றில் புகை நாற்றத்தைக் கலப்பதில் விருப்பமிருந்ததில்லை. எனக்கு இரவுகளில்தான் புகை தேவைப்படும். குளிரில் நடுங்கியபடி மொட்டை மாடியில் புகைக்கும்போது காற்று மாசாவதை நினைத்துக் கொள்வதில்லை.

பால்கனியில் நடக்கையில் முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது. பால்கனியில் இதற்கும் அதற்குமாய் நடந்தபடி வாய்விட்டுப் படிக்கும் சிறுமியொருத்தி மீன் தொட்டியில் உலவும் மீனைப் போலிருக்கிறாள் என்கிற குறுங்கவிதையது. மிக வழக்கமான காட்சியை சாதாரண வார்த்தைகளில் புனைவிற்கு தள்ளுவது அல்லது தன் கவிதைப் படிமங்களை இயல்பிற்கு கொண்டு வருவது, இதில் அதையும் அதில் இதையும் சாதாரண வார்த்தைகளைக் கொண்டே கோர்ப்பது இவைதாம் இவர் கவிதைகளில் கவித்துவத்தை கொண்டு வரும் யுக்தியாக இருக்கிறது. யாருமில்லாத அமைதியான காலையில் சத்தமாய் ஒரு கவிதையை சொல்லி முடித்தவுடன் ஏற்படும் உணர்வினுக்குப் பெயர் தெரியவில்லை.

முழுக்க முழுக்க தன் வயமான இத்தனிமை எப்போதும் சலிப்படையாதிருக்க எனக்கு இலக்கியமும் திரைப்படமும் உதவியாய் இருக்கிறது. குற்ற உணர்வில் திளைக்காதிருக்க வாழ்வு இன்பமயமானதுதான் என்பதை நம்ப வார இறுதி விடுதிகளும் சக நண்பர்களும் உதவுகின்றனர். இவையெல்லாம் இல்லாத பிறருக்கு எது விடுதலையாய் இருக்க முடியும் என யோசித்துப் பார்த்தேன். பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையாய் இருக்கலாம். ஒட்டு மொத்த மனித இனமும் எதிலிருந்தாவது விடுபடுவது/எதிலாவது சிக்கிக் கொள்வது என்கிற இரண்டு நிலைப்பாட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தரைத் தளத்தில் கோடு போட்ட காகிதம் ஒன்றை மென் காற்று மெல்ல நகர்த்திக் கொண்டிருந்தது. புறா அக்காகிதத்தின் மீது வந்தமர்ந்தது. கோடு போட்ட காகிதம் ஒன்றில் பென்சிலில் கோழிக் கிறுக்கலாய் என் பக்கத்தில் பிடித்த வரிகளை எழுதி வைத்துக் கொண்ட நண்பியொருத்தியின் நினைவு வந்தது. அவள் அந்தக் காகிதத்தை ஸ்கேனித்து அனுப்பியிருந்தாள். எதையோ வீட்டில் தேடிக் கொண்டிருந்தபோது அந்தக் காகிதம் தட்டுப்பட்டதாயும், ஒரு வருடத்திற்கு முன்பு என் பக்கத்தை மிகுந்த விருப்பங்களோடும், எரிச்சலோடும், கோபங்களோடும் படித்துத் திரிந்ததாயும் அவ்வப்போது பிடித்தவற்றை ஏதாவது ஒரு காகிதத்தில் எழுதி, எங்காவது தொலைத்து விடுவது வழக்கமானதெனவும் சொல்லியிருந்தாள். மிகவும் இணுக்கி இணுக்கி அந்த ஒரு பக்கத்தில் நான் எழுதிய வரிகள் எழுதப்பட்டிருந்தன. இணையம் அறிமுகமாவதற்கு முன்பு வரை நானும் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த வரிகளை / காட்சிகளை என் நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொள்வது வழக்கம். அதே வழக்கத்தைக் கொண்ட இன்னொருத்தி எழுதி வைத்துக் கொள்வது என் வரிகளாய் இருக்கிறதென்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

இம்மாதிரிக் குளிர் காலையில், தேநீரோடு, காட்சிகளை விழுங்கியபடி, பிடித்தமான நினைவுகளில் மூழ்குவதும் ஒரு கட்டத்தில் சலிக்கவே செய்கிறது. சலிக்கும் நொடிதான் இசை கேட்பதற்கான துவக்கம். இந்துஸ்தானியையும் கஜலையும் மென்மையாய் கசியவிடும்போது தயவு செய்து யாராவது என் மூளையில் இந்த இந்தி / உருது மொழியை ஏற்றிவிடுங்களேன் எனக் கத்த வேண்டும் போலிருக்கும். என்னால் ஏன் இம்மொழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லை எனத் தெரியவில்லை.

சென்ற வருடத்திற்கு முந்தின குளிர்காலத்தில் கராமாவிலிருந்தேன். விடுமுறை தினங்களில் சீக்கிரம் எழுந்து நடைக்குப் போவது வழக்கமாய் இருந்தது. குளிர் விரவிய தெருக்களில், பனி மூடிய அகலமான சாலைகளில் ஏதேனும் ஒரு விநோதப் பறவை தட்டுப் படலாம். அகலமான இறக்கைகளில் அடர் நீலத்தில் தூரிகையால் பட்டையாய் கோடிழுத்தது போன்ற தீற்றல் கொண்ட பறவையொன்றை இது போன்ற ஒரு நடையில்தான் பார்த்தேன். பின்பொரு பறவையின் முகம் கொண்ட சிறுமியையும் செம்பழுப்பு நிற இறக்கைகளைக் கொண்ட நடுத்தர வயதுப் பெண்ணையும் அவ்வப்போது கடந்து போவேன். இருவரிடமும் கேட்காமலேயே விட்டுப் போன ஒரு கேள்வி என்னிடம் இருந்தது. உங்களை மனித உருவாய் போகக் கடவதென சபித்த பறவையின் பெயர் என்ன?

Tuesday, November 10, 2009

ரெய்ன் ரெய்ன் கோ அவே!!

மூன்று நாட்களாய் தொடர்ந்து மழை பெய்வதாய்
மின்னரட்டையில்
சகோதரர்
சொன்னார்
கேட்க மகிழ்வாயிருந்தது
மழையால் கிடைத்த விடுமுறைக்கு
குதூகலித்த மகளுடன்
நனைந்தபடி வீடு திரும்பிய
தாயொருத்தியின் பேச்சில்
ஈரமிருந்தது
தொடர்பிலிருந்த பெண்கவிஞர்கள் அனைவரும்
மழையால் இன்னும்
இளகியிருந்தனர்
அவரவர்களின் சமீபத்திய காதலனோடு
மழையையும் முத்தங்களையும்
பொருத்தி
தலா பத்து கவிதைகளை
எழுதிவிட்டிருக்கிறார்கள்
ஒவ்வொன்றாய்
அரட்டைப் பெட்டியில்
விழ ஆரம்பித்ததும்
பதறி வெளிவந்து
தூங்கிப்போனேன்
அதிகாலையில் தொலைபேசிய இவள்
தொடர்ச்சியான மழைக்கு இன்னும்
இவனது
வெண்பஞ்சுடல் தயாராகவில்லையென
வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்
கவிஞன்
மகனை மழையொன்றும் செய்யாது
என்கிற என் சமாதானங்கள்
அவளுக்குப் போதுமானதாய்
இருக்கவில்லை
படுக்கை விடுத்து
உயரமான திரைச்சீலையகற்றி
கண்ணாடிக் கதவு
வழியே
கட்டிடங்களுக்கு மத்தியில்
சிறிதாய் தென்பட்ட
வானம் என்கிற
வஸ்துவைப் பார்த்து
வாழ்வில் முதன் முறையாய்
அப்பாடலைக் கத்தினேன்
ரெய்ன் ரெய்ன் கோ அவே!!

Thursday, November 5, 2009

பவா வைப் பற்றி சில குறிப்புகள்

From தனிமையின் இசை

மிக நெருக்கடியான பணிச்சூழலில்தான் என் விடுமுறையைத் தீர்மானித்தேன். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இந்தியா வரவேண்டிய சூழல்கள் அமைவதால் விடுப்புகள் குறைவாகவே இருந்தன. இந்த நேசமற்ற சூழலும், இயந்திர முகங்களையும் பார்த்து சலித்து வெறுத்த தனிமை குறைந்த பட்சம் முப்பது நாட்கள் விடுப்பைக் கோரியது. எல்லாம் உதறி செப்டம்பர் மாதத்தின் ஒரு அதிகாலையில் ஓசியில் கிடைத்த ஒயினை மூக்கு முட்டக் குடித்த கிறக்கத்தோடு சென்னை வந்திறங்கினேன். மூன்று வருடங்களுக்கு முன்பு முதல் முறையாய் இந்த அயல்தேசத்திலிருந்து ஊருக்குக் திரும்பிய நாளின் பரவசமெல்லாம் எங்கே போயின எனத் தெரியவில்லை. என்னுடைய எல்லா உணர்வுகளையும், பரவசங்களையும், அறியாமைகளையும் இந்த நகரும் காலம் தின்றுக் கொழுத்துவிட்டுத்தான் செத்து மடிகிறது. காலத்தின் மாறுதல்களின் எந்த நச்சும் தீண்டியிராத மனிதர்களைப் பார்க்கும்போது பொறாமையும் இணக்கமும் ஒருமித்து, ஒரு வித ஸ்நேகம் உள்ளுக்குள் துளிர்விடுகிறது. அப்படி ஒரு மனிதர்தான் பவா.செல்லதுரை.

என் வாழ்வில் அபூர்வமாய் வந்துவிட்டுப் போன தேவதைகள் வாழ்வின் மீதான என் நம்பகத்தன்மைகள் குறித்து பெரிதும் கவலை கொள்வர். நான் மிகுந்த வறட்டுத் தனமாய் இருக்கிறேன், வெறும் அவநம்பிக்கைகளை மட்டுமே சுமந்தலைகிறேன் என்றெல்லாம் அவர்கள் பதறி மாய்ந்து, மாய்ந்து என் நிலைப்பாட்டை மாற்றப் பெரிதும் மெனக்கெடுவர். திமிர்,அலட்சியம், அசட்டை என என் பிரத்யேகமான வெவ்வேறு குணாதிசயங்களின் மூலம் எல்லாவற்றையும் சிதறடித்துவிட்டு அவர்கள் கடந்து போன பின்னர் கழிவிரக்கத்திலாழ்வதுதான் இதுவரைக்குமான என் வாழ்வாய் இருந்து வருகிறது. முதன் முறையாய் வாழ்வென்பது நெகிழ்ச்சியானது, அன்பாலானது, சக மனிதன் ஒருவனை எவ்வித முகாந்திரமுமில்லாது நேசிக்க முடியும் என்பன போன்ற நம்பிக்கைகளை, மனிதர்கள் அத்தனை போலித்தனமானவர்கள் அல்ல என்கிற இணக்கத்தை பவா வின் மூலமாய் கண்டறிய முடிந்தது.

பவா வின் வரவேற்பில் ஒரு குழந்தையின் குதூகலம் இருக்கும். ஒவ்வொரு முறையும் அதே குதூகலம் நிரம்பி வழியும். அன்பை, நேசிப்பை சரியான நேரத்தில், சரியான மனிதர்களிடத்தில், மிகச் சரியாய் சொல்ல முடிவது / வெளிப்படுத்த முடிவது என்னைப் பொறுத்தவரை மிக அபூர்வமான குணமாகத்தான் இருக்க முடியும். (என்னால் ஒருபோதும் வெளிப்படுத்த முடிந்ததில்லை) பவா வின் இயல்பே நெருக்கமும் இணக்கமுமான ஒரு குழைவு நிலைதான். ஒருவரை இதனால்தான் பிடிக்க வேண்டும் அல்லது ஒருவருடன் இதனால்தான் பழக வேண்டுமென்கிற துய்ப்பு சூழல் எனக்குக் கற்றுத் தந்த பாடங்களையெல்லாம் பவா காற்றில் பறக்கவிட்டார். என்னிடம் சொல்வதற்கு அவரின் இத்தனை வருட வாழ்வு இருந்தது. எனக்குத்தான் அவரிடம் சொல்ல புத்தகங்களையும் அந்நிய வாழ்வையும் தவிர வேறொன்றுமில்லாமல் போனது.

பவாவின் வீட்டில், நிலத்தில், கடையில், பயணிக்கையில், ஏரிக்கரையில், விடுதிப் பூங்காவில், விடுதி அறையில், என நாங்கள் சந்தித்துக் கொண்ட எல்லா இடங்களிலும் விடாது பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய தொடர்ந்த பேச்சில் நான் மெல்ல இளகத் துவங்கினேன். ஒரு கட்டத்தில் தினம் இரண்டு வார்த்தையாவது அவருடன் பேசாவிடின் அந்த நாளே முழுமையாகாத உணர்வும் வரத் துவங்கியது. என் வாழ்வின் மிக இலேசான நாட்களாக, நம்பிக்கையும் அன்புமான நாட்களாக இந்த விடுமுறை தினங்கள் இருந்தமைக்கு பவாதான் காரணமாக இருந்தார்.

பவா வை அவரின் குழந்தமை சிதையாது பார்த்துக் கொள்வதின் மிக முக்கியப் பங்கு தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளரான, மலையாளத்திலிருந்து பல காத்திரமான படைப்புகளை தமிழில் அதன் ஆன்மாவோடு கொண்டுவந்த ஷைலஜா மற்றும் அவரின் குடும்பத்தாரினுடையது. உலகின் எங்கோ ஒரு மூலையில் பிளாக்கில் பினாத்துகிறேன் என்கிற அறிமுகம் கூட எனக்கான அன்பைத் தருவதற்கு இவர்களுக்கு தேவையில்லாத ஒன்றுதான். நான் ஒரு சக மனிதன் என்பது மட்டுமே போதுமானதாகவும் வாசிப்பவன் என்பது அதிகப்படியான குணமாகவுமாய் இவர்களுக்கு இருக்கிறது.

ஒரு மின்சாரம் போன மதியத்தில் ஷைலஜா தன் கைகளினால் உருண்டையாக்கித் தந்த சோற்றுக் கட்டிதான் இதுவரை நான் சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்த உணவு. வீட்டில் சுற்றி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அந்தப் பின் மதிய அமைதியில் எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் அன்பைச் சேர்த்துப் பிசைந்த அந்தச் சோற்றுக் கட்டி அமிர்தமாய் இருந்தது. வம்சி மற்றும் மானஸியோடு நாங்களும் ஷைலஜாவின் பிள்ளைகளானோம்.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய உலகம் இதுவரை நான் அறிந்திராத ஒன்றாகத்தான் இருந்தது. பேச்சினூடாய் பகிர்ந்து கொண்ட மனிதர்கள், நிகழ்வுகள், சம்பவங்கள் யாவும் இயல்பு வாழ்வு குறித்தான என் முன் முடிவுகளை தகர்ப்பதாய் இருந்தது. எனக்குப் பிடித்தமான ஆளுமைகளில் தொடங்கி அடுத்த வீட்டு மனிதர் வரைக்குமாய் விரிந்திருந்த பவாவின் நட்புலகில் விரோதிகளோ பிடிக்காதவர்களோ இல்லை.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்கள் அனைவரின் வாழ்வு முறையும் புதிதாக இருந்தது. புகழ்,பணம், பிரபல வெறி என எல்லாவற்றிலிருந்தும் விலகி ஒதுங்கி கலையை வாழ்வாகவும், வாழ்வைக் கலையாகவும் நேசித்து வாழும் மனிதர்களையும் அவர்களின் படைப்புகளையும் நான் காண நேர்ந்தபோது நெகிழ்ந்து போனேன். நான் உழன்று கொண்டிருக்கும் இயங்கிக் கொண்டிருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கும் உலகத்தையும் அதில் கடக்க நேரிடும் சக மனிதர்களையும் அந்தச் சூழலில் நினைத்துப் பார்த்துக் கொண்டேன். எத்தனை மோசமான வாழ்வை நானும் என் சக உலகத்தவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைத்து சிரித்துக் கொண்டேன். இப்படி ஒரு எண்ணத்தை வரவழைத்தது திருவண்ணாமலையில் வாழும் ஸ்பெயின் ஓவியர் காயத்ரி காமுசும் அவரது கணவரான ஆனந்தும் தான். இருவரைப் பற்றியும் விரிவாக பிறகொருமுறைப் பதிகிறேன்.

நான் எதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன்? என்னைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்தும் மனிதர்களிடத்துமிருந்தும் ஏன் விலகி வந்துவிட்டேன்? என்றெல்லாம் எனக்குள் யோசனைகள் மிக ஆரம்பித்தன. வாழ்வை வறட்சியாக அணுக எனக்கு சில தோல்விகளும், பல புத்தகங்களும், சில துரோகங்களும் கற்றுக் கொடுத்திருக்கின்றன. கண்கள் விரியாதுச் சிரிக்க, அழுத்தமில்லாது கைக் குலுக்க இந்த அந்நிய வாழ்வும் சிநேகமற்ற மனிதர்களும் பழகிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வாழ்வை நேசிக்க, மனிதர்களை முன்முடிவில்லாமல் அணுக, எதிர்பார்ப்பில்லாத அன்பு சாத்தியம் என்கிற நம்பிக்கைகளையெல்லாம் எவரிடமிருந்தும் இதுவரை நான் பெற்றிருக்கவில்லை. இந்நம்பிக்கைகளை என்னில் துளிர்விட பவாவும் ஷைலஜாவும் அவரின் குடும்பமும் அவரின் நண்பர்களும் காரணமாய் இருந்திருக்கிறார்கள்.

விடைபெறும் நாளின் கடைசி சில மணிநேரங்களுக்கு முன்பு கூட பவா அவரின் கல் வீட்டில் அமர்ந்தபடி அவரின் நெகிழ்ச்சியான சத்தமான குரலில் பாவண்ணனின் கதையொன்றினை சொல்லிக் கொண்டிருந்தார். நானும் என் சகோதரனும் ஷைலஜாவும் அவரது குரல் வழி உலகில் பயணித்துக் கொண்டிருந்தோம். பக்கத்திலிருக்கும் சிறு நகரத்தினுக்கு சைக்கிளில் பயணிக்கும் ஆசைகள் மிகுந்த குமாஸ்தா ஒருவன் மிகப் பாடுபட்டு கடனுக்கு காத்திருந்து சைக்கிளொன்றை வாங்குகிறான். பயணத்தில் அவனோடு சிறுவன் ஒருவனும் சேர்ந்து கொள்ள இருவரின் பயணமும் சுகமாய் தொடர்கிறது. குமாஸ்தாவினுக்கு சைக்கிள் மீதிருந்த காதலை விட அச்சிறுவனுக்கு அதிகமான காதலிருப்பதை உணர்ந்து கொள்ளும் குமாஸ்தா சைக்கிளை அச்சிறுவனிடம் கொடுத்துவிட்டு பஸ் ஏறுவதாய் கதை முடியும். இந்தக் கதையை எழுதியவரின் உணர்வுகளை அப்படியே உள்வாங்கி தன் குரலில் அவ் உலகை படைக்கும் பவாவின் வார்த்தை வண்ணங்களில் முழுவதுமாய் கரைந்து போனோம்.

விமானத்தைப் பிடிக்கச் சென்னைக்கு விரைந்த அவ்விரவில் தொலைபேசியில் பவா வின் குரல் கேட்க என்னால் முடியவில்லை. வாழ்வில் எப்போதாவது அடைக்கும் தொண்டை அப்போது அடைத்துக் கொண்டது. என்னால் எப்போதும் அழமுடிவதில்லை என்பது உண்மைதாம் நண்பர்களே!

Tuesday, November 3, 2009

சிதைந்த நிஜமும் செழித்த நிழலும்

1

ஒழுங்குகள்/ ஒழுங்கீனங்கள் இவ்விரண்டிலும் என்னைப் பொருத்திப் பார்த்து மகிழ்ந்து, வருந்தி, கத்தி, புலம்பி நிகழைக் கொன்று கொண்டிருக்கிறேன். எல்லா உச்சத்தையும் எட்டியதாய் இறுமாந்தும், எல்லாவற்றையும் இழந்துபோனதாய் கதறியுமாய் நகர்கின்றன என் நினைவு மேகங்கள். நிறைவடையாது இருப்பதன் பெயர், நிறம், அடையாளம் என எதையும் கண்டறிய முடியவில்லை. ஆனால் அவ் உணர்வின் தன்மை நான் அடிக்கடிக் கனவு காணும் நதியினடியில் துயிலும் தணிவாகத்தான் இருக்கும். மேலும் அதன் இயல்பே உயரமான பாறையின் மீதிருந்து குதித்துச் சிதறிப்போவதற்கு முன்பான விநாடியின் உடல் சில்லிப்பை /துடிப்பை ஒத்ததாய் இருக்கலாம். ஒரு மலை வீற்றிருப்பதுபோல் இம்மாதிரியான நம்பிக்கைகள் என்னுள் பதியனிட்டுக் கொண்டிருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அதன் தடத்தைப் பிடித்துவிடலாம். அதுவரைக்கும் இவ்வுழல்வுதான்.அதுவரைக்கும் இந்த போதைதான்.அதுவரைக்கும் இந்தக் கோபம்தான். அதுவரைக்கும் இந்தப் பைத்தியம்தான் அதுவரைக்கும் இந்த வெந்துச் சாதல்தான். அதுவரைக்கும் இதேக் கதறல்கள்தாம். புலம்பல்கள்தாம். வாந்திதாம். தாம்.. தாம்...தாம்… தாஆஆம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்.

இறுதி எது? உச்சம் எது? நிறைவு எது? எங்கடா இருக்கு எனக்கான வாழ்வு? : ஜோர்பா தி புத்தா : அடிசெருப்பால!

சமீபமாய் நான் நம்பிக் கொண்டிருந்தவையனைத்தும் ஒவ்வொன்றாய் உதிரத் துவங்குகின்றன. இது எனக்கு மட்டும் பிரத்யேகமாய் அவ்வப்போது நிகழும் ஒன்று. அதனாலேயே நம்பிக்கைகளின் கிளைகளை நான் எப்போதும் விரிப்பதில்லை. விரித்திராத கிளைகள் வேர்களுக்குள்தான் அடங்கியிருக்கின்றன. அல்லது நீரினடியில் பற்றுதலுக்காய் அலைந்து கொண்டிருக்கும் வேர்களே விரிக்காத கிளைகளாவும் இருக்கின்றன. இப்பாதுகாப்பான, பத்திரமான, அதி ரகசிய, தகவலை தடம் பிடித்துவிடுபவர்களே எனக்கான பிரச்சினைகளாக உருமாறத் துவங்குகின்றனர். எல்லாவற்றையும் உதறவும் முடியாது /சுமக்கவும் முடியாது, விரும்பி/வெறுத்து, விலகி/நெருங்கி, எதிரெதிர் துருவங்களில் என்னையே பொருத்திக் கொண்டு இவ்விளையாட்டினை ஆடித் தீர்க்கிறேன். என் வாழ்வுச் சதுரங்க கட்டங்களில் நகரும் காய்களுக்கு எவ்வித குதூகலத்தையும் என்னால் தந்துவிட இயலாது. அதே சமயத்தில் எவ்விதத் துயரையும் தந்துவிடாதிருக்க மெனக்கெடுகிறேன். காய்கள் வெறுமனே நகர்ந்து கொண்டிருக்கின்றன அல்லது நகர்த்துபவர்கள் வெறுமனே நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். உற்சாகத்தினையோ வருத்தத்தினையோ தந்துவிடாத ஒன்றை ஏன் நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்? என்பவர்களுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. இது இப்படித்தான் இருக்கிறது.

எந்த ஒன்றின் எச்சம் நான்? எதன் மிகுதி என்னை நீட்டித்திருக்கிறது? எதன் விருப்பம் என்னை இயங்கவைக்கிறது?: உண்மையின் உன்னத சங்கீதம் : முடியல!

2

மனிதர்கள் எவரும் தேவையில்லையென்கிற மனநிலை எப்போதெல்லாம் எனக்கு ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் எனது கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வேன். நெருக்கமான நண்பர்கள், அறிமுகமானவர்கள், தினம் பேசுவோர், அவ்வப்போது சந்திப்போர் என எல்லாரையும் வெளியே தள்ளி மிகக் குரூரமாய் கதவைச் சாத்திக் கொள்ளும் இந்தத் திமிர்தான் அந்நிய வாழ்வின் மூலமாய் நான் பெற்றுக்கொண்ட செல்வப்பயனாய் இருக்கிறது. எனது தலைமறைவு வாழ்வு இன்னொரு வகையில் மிகுந்த சுவாரஸ்யமானது. அலுவலகத்திலிருந்து எத்தனை சீக்கிரம் வரமுடியுமோ அத்தனை சீக்கிரம் வந்து எனது பொந்திற்குள் அடைந்து கொள்வேன் அறைக்கதவை எந்தக் காரணத்திற்கும் திறந்துவிடத் தேவையில்லாத வாழ்வாய் இருப்பதால் எனக்குப் பிடித்தமான நிழல் உலகத்திற்குள் என்னை மூழ்கடித்துக் கொள்வேன். புத்தகங்களில், திரைப்படங்களில் வாழும் வாழ்க்கைக்கான பின்புலம் மனிதர்கள் மீதிருக்கும் என்னுடைய அவ நம்பிக்கைகளாகத்தான் இருக்கின்றன.

கைவசமிருக்கும் கடைசிப் பணத்தையும் சாம்பலாக்கிவிட்டு நடையைக் கட்டிய In to the Wild கிறிஸ்தான் கடந்த மூன்று வாரங்களாக நினைவிலாடிக் கொண்டிருக்கிறான். இந்த நிலப்பரப்பை ஒற்றைப் பணமில்லாமல் நடந்து /கடந்து பயணிக்கும் வாழ்வு மிக அதிக வளைவுகள் கொண்டதாய் இருக்கக் கூடும். விநோதங்களை, அதிர்ச்சிகளை, பயங்களை, எதிர் கொள்ள வேண்டிவரும். எதிர்பாராமின்மை மட்டும் எப்போதுமிருக்கலாம்.

சுதந்திரத்தின் காற்றை அடர்ந்த வனங்களில் உள்ளிழுக்க முடிவதை, பயம் என்பதின் நிழலைக் கூடத் தொடாத வாழ்வினை, புதிய மனிதர்களை, புதிய வாழ்வை, உயிர்ப்பை கிறிஸ் முழுமையாய் துய்ப்பதைக் காணும்போது ஏற்படும் ஒப்பீடுகள் இதுவரைக்குமான என் இயங்குதலை அபத்தமாக்கின. என்னுடைய நமுத்த இவ்வாழ்வின் மீது திரை கிறிஸ் கனவில் காறியுமிழ்கிறான். கெக்கலித்துச் சிரிக்கிறான். நான் கூனிக்குறுகி அறையின் இருள் மூலைகளில் ஒண்டுகிறேன். அவனது சுதந்திரப் பீறிடல், உற்சாகப் பிளிறல் சுதந்திரத்தை வாய் ஓயாது முணுமுணுக்கும் என் போதாமையின் செவுளில் ஓங்கி அறைகிறது, நான் பலமிழந்து மூர்ச்சையாகிறேன்.

மாறாய் குவாண்டினின் Death Proof பெண்கள் எனக்கு கிறக்கத்தையளிக்கின்றனர். மழை பெய்யும் மது விடுதியில் விடாது குடித்தபடி, சதா பேசியபடி, சிரித்தபடி, உரக்க கெட்ட வார்த்தைகளை சிதறிவிட்டபடி, சக பெண்களை பிட்ச் யாக்கிபடி, லாப் நடனமாடி, காரில் புணர்ந்து, மூக்கு முட்டக் குடித்து, சைக்கோ ஒருவனின் கார் மோதி சிதறிப்போகும் பெண்கள் என் ஒழுங்கீனங்கள் பற்றிய குற்ற உணர்வுகளை மழை நீர்ப்போல் கழுவிச் சென்றுவிடுகின்றனர். பிறிதொரு பெண்கள் அதே சைக்கோவை துப்பாக்கியால் சுட்டு, கதறக் கதற, விரையும் காரினால் பின்பக்கமாய் முட்டி முட்டி, விரட்டி, வழிமறித்து, தடியால் மண்டையிலடித்து, மூஞ்சியில் மாறி மாறிக் குத்துவிட்டு, தரையில் வீழ்த்தி, அவன் முகத்தில் காலை தூக்கி வைத்துக் கெக்கலிக்கும்போது என் அறையிருளை இவ்வின்பம் விரட்டியடிக்கிறது. திருடன் சேமித்தப் பணத்தை திருடனுக்கும் போலிசுக்கும் தண்ணி காட்டி லபக்கும் பெண்ணின் சாதுர்யமும் கால் கால்சட்டையணிந்து, பைப் புகைத்தபடி, சதா டிவி பார்த்தபடி, இன்னொருவனை துரோகிக்க தூண்டி, சமயோசிதமாய் இருக்க வேண்டிய இடத்தில் வாய் ஓயாது பேசி, குண்டடி பட்டுச் செத்துப் போகும் இன்னொரு பெண்ணின் இளமைத் திமிரும் புன்முறுவலை வரவழைக்கின்றன. நல்லவை, உன்னதம், நேர்மை, தெளிவு, உண்மை, வரலாறு, நேர்க்கோடு என எல்லாவற்றையும் தலைகீழாக்கும் சிதைக்கும் குவாண்டின் மறைமுகமாய் அல்லது நேரடியாய் என்னை என் குற்ற உணர்வுகளிலிருந்து தப்ப வைக்கிறான்.

இன்குளோரியஸ் படத்தில் குவாண்டின் நிறுவியிருப்பதெல்லாம் அதிகாரத்தின் வரலாற்றை அதற்கு இணையான அல்லது அதைவிட பலம் வாய்ந்த அதிகாரத்தின் பக்கம் நின்று புனைவுகளின் துணைக் கொண்டு சிதைத்திருப்பதுதான். சமூகம், அறம் , முறம் என்றெல்லாம் யோசிக்காது அதிகத் திமிர்த்தனமாய், அதிக நேர்த்தியாய் ஒருவன் திரிந்தால் அவனை எல்லாருக்கும் பிடித்துத்தான் தொலைகிறது.

வரலாறுகளை விளிம்பின் பார்வையிலிருந்து மறு உருவாக்கம் செய்வதின் தேவைகளை எவர் நிறைவேற்றுவார்/புரிந்துகொள்வார் எனத் தெரியவில்லை. இதை ஓரளவு தேவ் டி யின் சந்தா பாத்திரம் செய்திருக்கிறது. இதுவரைக்கும் சொல்லப்பட்ட தேவதாஸ் கதைகளில் சந்திரமுகி ஊறுகாயாக மட்டும் தொட்டுக் கொள்ளப்பட்ட ஒரு வஸ்து. இதை தேவ் டி நிர்நிர்மாணம் செய்திருக்கிறது. சந்தா என்கிற சந்திரமுகி உருவாவதற்கு இந்த சமூக அமைப்புகள் குரூரத் துணை போவதை சரியாய் பதிவு செய்த படம் இது. பாலியல் தொழிலாளி என்கிற வெற்றுச் சொல் மட்டும் அவர்களுக்கான சரியான அங்கீகாரத்தை வழங்கிவிடும் என அரசியலறிவாளர்கள் நம்புவதை சந்தா பாத்திரம் கிண்டலடிக்கும் இடத்தில் அவமானத்தில் கூனிக் குறுகினேன். கொலுசுகளின் சப்தங்களை மட்டும் கொண்டு முன் நகர்ந்து போகும் என் பிரியத்திற்குறிய சந்தா! என்னால் முடிந்ததெல்லாம் உன்னைச் சுமந்தலையும் இந் நாட்களை நீட்டிப்பது மட்டும்தான்....

Tuesday, October 20, 2009

இயலாச் சமன்

நிசியில் அதிர்ந்த
கனவின் பின்புலம்
எதுவாகவிருந்ததென
விழித்ததும்
நினைவைத் துழாவினேன்
வழக்கமான பாம்புத் துரத்தல்களாகவோ
நீருக்குள் மூழ்கித் திணறும்
சுவாசத்திற்கான தவிப்பாகவோ
நூற்றுக்கணக்கான
பிம்ப முலைகளில்
முகம் புதைத்துத் தூங்கும்
விருப்ப விழிப்புக் கனவாகவோ
அது இல்லாமலிருந்தது
ஒருவேளை
நெடு நாள் காத்திருப்பினுக்குப் பிறகு
முலை தொட மட்டும்
அனுமதித்தவளின்
மீதிருக்கும்
முடிவிலா ஏக்கத்தின்
தொடர்ச்சியாக
அது இருந்திருக்கலாம்
மீட்கும் பேராசையில்
மூச்சடைத்து
நினைவின் அடியாழம் வரை அலசியும்
நைந்த பாசியைக் கூட பெற முடியவில்லை
நினைவுத் திரும்பாக் கனவுகளும்
கால்களையகற்ற விரும்பாக் காதலிகளும்
சமன் செய்யும் புள்ளியின் பெயர்
என் இயலாமையாக
இருக்கக் கூடும்.


(..வாசுவிற்கு)

* இம்மாத அகநாழிகை இதழில் வெளிவந்தது.

Wednesday, September 16, 2009

குவாண்டின் டராண்டினோ - வசீகர வன்முறையாளன்



குவாண்டின் டராண்டினோ எனக்குப் பிடித்தமான இயக்குனர்களில் ஒருவர். மிகக் குரூரமான வன்முறையை வார்த்தையாகவும் காட்சியாகவும் மிக நேர்த்தியான விளையாட்டாய் நிகழ்த்திக் காட்டுவதில் தேர்ந்தவர். வெகுசனம், கலை என்கிற இருவேறு எதிரெதிர் துருவங்களை தங்களது திரைப்படங்களின் மூலம் ஒரே புள்ளியில் குவிக்கச் செய்த இயக்குனர்களாக அகிரா குரசோவா வையும் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கையும் சொல்லலாம். நான் டராண்டினை ஹிட்ச்காக்கின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். கொல்வது கலை என்கிற அணுகுமுறைதான் ஹிட்ச்காக்கினுடையது இவருக்கு கொலை அல்லது வன்முறை என்பது வசீகரமானதொரு விளையாட்டாய் இருக்கிறது.சன்னாசி சொல்வது போல “நான் சொல்லநினைப்பது இப்படி” என்கிற கோணம்தான் டராண்டினோ.

இவரின் சமீபத்திய திரைப்படமான இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் இன்னும் இங்கு வரவில்லை. தலைப்பின் வில்லங்கத்தை நினைவில் கொண்டு இந்நாட்டில் வெளிவராதென நானாகவே நினைத்துக் கொண்டே தரவிரக்கம் செய்தேன். சென்ற வாரத்தில் கமினே திரைப்படம் பார்க்கச் சென்றபோது இன்குளோரியஸ் விரைவில் வருகிற பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது. திரையில் இரத்தத் தெறிப்புகளை காண்பது அலாதி உற்சாகமாக இருக்குமென்பதால் திரையில் வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் எனத் தரவிறக்கம் செய்ததைக் கிடப்பில் போட்டாயிற்று.

டராண்டின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமாக Pulp Fiction (1994)பல்ப் பிக்சனையும் ரிசர்வாயர் டாக்ஸையும் சொல்லலாம். சில வலைப்பதிவுகளில் பல்ப் பிக்சனைப் புரிவிக்க நண்பர்கள் கட்டம் கட்டி விளக்கியிருந்ததை பார்த்து சிரித்துக் கொண்டேன். ஒரு திரைப்படத்தை பகிரவே இவ்வளவு மெனக்கெடல்கள் தேவைப்படும்போது அதை இயக்கியவன் எந்த அளவு மெனக்கெட்டிருப்பான் என நினைத்துக் கொண்டேன். ஆனால் பல்ப் பிக்சன் எனக்கு சிரமமான படமாகத் தோன்றவில்லை. அமரோஸ் பெர்ரோஸ், ரன் லோலா ரன், ப்ளைண்ட் சான்ஸ், இர்ரிவர்சிபிள், சங்கிங் எக்ஸ்பிரஸ் போன்ற வித்தியாசமான கதை சொல்லலைக் களமாகக் கொண்ட படங்களை ஒப்பிடும்போது பல்ப் பிக்சன் யுக்தி எளிமையானதே.

நான் லீனியர் கதை சொல்லல் என்பது திரையை விட புத்தகத்தில் எளிதாக இருக்கலாம். பல்ப் பிக்சன் திரைக்கதையை இப்படிப் புரிந்து கொள்ளலாம். ஒரு புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தின் சில பத்திகளை, எடுத்தவுடன் படித்து விட்டு மீண்டும் முதல் அத்தியாயத்திலிருந்து படிக்கத் துவங்கி, நடுவில் நான்காவது அத்தியாயத்தை மூன்றாவதாகவும், மூன்றாவதை நான்காவதாகவும் படித்து விட்டு, மீண்டும் கடைசி அத்தியாயத்தை முழுமையாகப் படித்து முடித்தால் அதுதான் பல்ப் பிக்சன் படம். இதில் கவனிக்க வேண்டிய ஒரே விதயம் என்னவெனில் இந்த புத்தகத்தை எங்கிருந்து படித்தாலும் அது வாசிப்பின்பத்தை தர வேண்டும் மற்றபடி ஒரு அத்தியாயத்திற்கும் இன்னொரு அத்தியாயத்திற்கும் தொடர்பு இருக்கலாம் அல்லது இருக்கத் தேவையில்லை. முதல்,இரண்டு,மூன்று,கடைசி அத்தியாயங்கள் எனச் சொல்வது கூட ஒரு புரிதலுக்காகத்தானே தவிர முதல் கடைசி என்கிற அடிப்படைகள் எதுவும் இல்லா வடிவமாகத்தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.(க்ளைமாக்சில் உயிரோடு இருக்கும் ஜான் ட்ரவோல்டாவை ப்ரூஸ் வில்லிஸ் இரண்டாவது அத்தியாயத்திலேயே கொன்று விடுவார்) இந்த நான் லீனியர் வடிவம் பின் நவீனக் கூறுகளில் ஒன்றாக அணுகப்படுகிறது. பன்முகத் தன்மை, வாசிப்பின்பம் போன்றவைகளையும் இத் திரைப்படம் உள்ளடக்கியிருப்பதால் பல்ப் பிக்சனை சிறந்த பின்நவீனத்துவ படங்களில் ஒன்றாக தைரியமாய் சேர்த்துவிடலாம்.

கசாமுசா திரைக்கதையை மெருகூட்ட ப்ரூஸ் வில்லிஸ்,சாமுவேல் ஜாக்சன், ஜான் ட்ரவால்டோ போன்ற தேர்ந்த நடிகர்கள், பாலியல் வார்த்தைகளை மட்டுமே கொண்டு நிரப்பிய சுவாரஸ்ய உரையாடல்கள், அவ்வப்போது வெடிக்கும் திடீர் துப்பாக்கிகள் , உடலிலிருந்து பீறிட்டடிக்கும் குருதித் தெறிப்புகளென காட்சியின்பத்தின் உச்சமாக ஒவ்வொரு காட்சியுமிருக்கும். இந்தப் படத்தினை உரையாடல்களுக்காகவே திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த சில உரையாடல் தொகுப்புகள் கீழே..
Jules: What does Marcellus Wallace look like?
Brett: What?
Jules: What country you from?
Brett: What?
Jules: What ain't no country I ever heard of! They speak English in What?
Brett: What?
Jules: ENGLISH, MOTHERFUCKER! DO-YOU-SPEAK-IT?
Brett: Yes!
Jules: Then you know what I'm saying!
Brett: Yes!
Jules: Describe what Marcellus Wallace looks like!
Brett: What, I-?
Jules: [pointing his gun] Say what again. SAY WHAT AGAIN. I dare you, I double dare you, motherfucker. Say what one more goddamn time.
Brett: He's b-b-black...
Jules: Go on.
Brett: He's bald...
Jules: Does he look like a bitch?
Brett: What?
[Jules shoots Brett in shoulder]
Jules: DOES HE LOOK LIKE A BITCH?
Brett: No!
Jules: Then why you try to fuck him like a bitch, Brett?
Brett: I didn't.
Jules: Yes you did. Yes you did, Brett. You tried to fuck him. And Marcellus Wallace don't like to be fucked by anybody, except Mrs. Wallace.

இன்னொரு அட்டகாசமான காட்சி
Fabienne: Whose motorcycle is this?
Butch: It's a chopper, baby.
Fabienne: Whose chopper is this?
Butch: It's Zed's.
Fabienne: Who's Zed?
Butch: Zed's dead, baby. Zed's dead.

மொத்த உரையாடல்களையும் படிக்க இங்கே

போதை மருந்து கடத்தல், ஆட்களைக் கடத்துதல், கொலை, கொள்ளை, கொண்டாட்டம் , பழிவாங்கல் போன்றவைகள்தாம் டராண்டினோ இயங்கும் தளமாக இருக்கிறது. நல்ல/ஹீரோயிச மாதிரிகளை எல்லாம் இவர் திரையில் கொண்டுவர மெனக்கெடுவதில்லை. கெடுதலை கெடுதலாகவே நம் முன் கொண்டுவருவதுதான் இவரது தனிச்சிறப்பாக இருக்கிறது.



ரிசர்வாயர் டாக்ஸ்
Reservoir Dogs (1992)சாதாரண கதையொன்றை மிகப் புத்திசாலித்தனமான திரைக்கதையாக எப்படி மாற்றுவது என்பதற்கான சரியான உதாரணம். வழமையான ஒரு கொள்ளைக் கூட்ட பாஸ், கை தேர்ந்த ஆறு திருடர்கள், ஒரு கொள்ளைத் திட்டம், பின்பு அத்திட்டத்தின் சொதப்பல். இவ்வளவுதான் இத்திரைப்படம். ஆனால் பார்வையாளன் காட்சியமைப்பில் திகைத்துப் போகிறான். திரைப்படங்களில் ஊறிய பார்வையாளனும் மேலோட்டமான பார்வையாளனும் தத்தம் பார்வைகளில் திருப்தியடைகிறார்கள். இந்த யுக்தி டராண்டினோவிற்கு எளிதாக வருகிறது. மிஸ்டர் வொயிட்/ப்ளூ/ப்ரவுன்/பிங்க்/ஆரன்ஞ்/ப்ளாண்ட் எனப் பெயரிட்டுக் கொண்ட ஆறு திருடர்கள் வைரத்தைக் கொள்ளையடித்துவிட்டு திட்டமிட்ட இடத்தில் சந்திக்கும் திட்டம் போலிஸின் இடையூறால் சொதப்பலாகிறது. ஒருவர் சுடப்பட்டு இறந்து போகிறார்.இன்னொருவர் மோசமாக காயமடைகிறார். இதில் ஒருவர் போலிஸ் இன்பார்மர் அவர் யார் என்கிற சந்தேகத்தினுக்கு அனைவரும் பலியாகின்றனர்.

போலிஸ் திருடனையும், திருடன் போலிஸையும் ஒருவரையொருவர் மிகக் குரூரமாகத் தாக்கிக் கொள்ள பிரதானமாய் புறக் காரணங்கள் எதுவுமே தேவையில்லை.அவன் திருடனாக/போலிஸாக இருப்பதே போதுமானது. இத்திரைப்படத்தில் சிக்கிக் கொண்ட போலிஸ் ஒருவனைத் துன்புறுத்தும் காட்சிகள் உளவியல் ரீதியிலாக சமூக அடையாளத்தின் சிக்கலைப் பேசுகிறது. சக மனிதன் என்ற பொதுவையெல்லாம் அடையாளங்களுக்காக தூக்கி எறிந்து விட்ட வன்முறையை குரூரமாய் நம் முன் வைக்கிறார் டராண்டினோ.தான் இயக்கும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கும் டராண்டினோ இதில் மிஸ்டர் ப்ரவுன் ஆக வந்து சுடப்பட்டு இறந்து போவார்.மிஸ்டர் பிங்க் ஆக நடித்திருக்கும் Steve Buscemi மிக அட்டகாசமான நடிகர்.fargo வில் இவரது முக பாவணைகளை பார்த்து பெரிதும் சிலாகித்துக் கொண்டிருந்தேன்.

இவரது மற்றத் திரைப்படங்களான கில் பில் 1 & 2 சின்சிட்டி போன்றவைகளின் அடிநாதமும் வன்முறையும் பழிவாங்கலும்தான். தனது மாஸ்டர் பீஸ் இன்குளோரியஸ்தான் எனச் சொல்லிக் கொள்ளும் டராண்டினோ அந்தப் படத்தின் மீதான என் ஆர்வத்தினை இன்னும் அதிகரித்திருக்கிறார். பல்ப் பிக்சன் தந்த கிளர்ச்சியை இன்குளோரியஸ் தருகிறதா? என்பதைப் பார்த்துவிட்டுப் பகிர்கிறேன்.

Tuesday, September 15, 2009

இந்தி திரைப்பட இசையும் அற்புத ரகுமானும்

என்னுடைய இந்தி மொழியறிவைப் பொறுத்தவரை இன்னமும் ஏ காவ் மே! ஏ கிஸான்! என்ற அளவில்தான் இருக்கிறது. மலையாளத்தை தடம் பிடித்த அளவிற்கு இன்னமும் இந்தியை முழுமையாய் பிடித்து விட முடியவில்லை. பதின்மங்களில் இந்திப் பாடல் கேட்பதில் ஒரு வித பெருமிதம் இருந்தது. என்னுடைய சகோதரன் நல்ல பாடல்களாய் தேடித்தேடி பதிந்து வைக்கும் கேசட்டுகளை கல்லூரிக்கு எடுத்துச் சென்று பிலிம் காட்டுவதில் எனக்கு அப்போது அலாதி மகிழ்ச்சி இருந்தது. இந்தி பாட்டு கேக்குறான்! இங்கிலீஷ் புக் படிக்கிறான்! என்றெல்லாம் பெண்கள் என்னைப் பற்றிச் சொல்வதாய் கற்பனை செய்து கொண்டு மகிழ்வேன். பின்பு மெல்ல பெண் வசீகரங்கள் போய் பாட்டும் புத்தகமும் மட்டும் ஒட்டிக் கொண்டன. தொண்ணூறாம் வருட இறுதிகளில்தான் நான் "தேரே மேரே பீச்சுமே" வைக் கேட்டு உருகினேன். ஒரு வார்த்தை கூட புரியாதெனினும் உயிரைப் பிழியும் சோகம் அந்தப் பாடலில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் "ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்?" படத்தையும் பார்த்தேன். இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி இந்தி மசாலா திரைப்படங்களின் இசை, கதை, காட்சியமைப்புகளை பத்து வருடங்களுக்கும் மேலாக வேறு தளத்தினுக்கு நகர்த்தாமல் வைத்திருந்தது. மெகா பேமிலிகள், எக்கச்செக்க பாட்டுகள், ஒரு காதல், ஒரு கல்யாணம், ஒரு சாவு என்கிற மசாலா பார்முலாக்களுக்கு முன்னோடியாக இருந்த படமிது. மேலும் இதில் வரும் "தீதி தேரா" வை விட "பெஹலா பெஹலா" பாடலும் "ஹம் ஆப்கே" என்கிற டைட்டில் பாடலும்தான் எனக்கு அதிகம் பிடித்தது. ஒரு படத்தின் பிரபலமான பாடலை விட அதிகம் பேசப்படாத பாடலே என்னை எப்போதும் ஈர்க்கிறது.

ஹம் ஆப்கே விற்குப் பிறகு நான் வசித்த நகரங்களில் வெளியான வணிக இந்தித் திரைப்படங்கள எல்லாவற்றையும் பார்க்கத் துவங்கினேன். "தில்வாலே துல்ஹேனியா", "தில்தோ பாகல் ஹை", " ராஜா இந்துஸ்தானி" என தொடர்ந்த இந்த இந்தி பட ஆர்வம் "குச்குச் ஹோதா" விற்கு பிறகு வடிந்து போனது. ஒரு கட்டத்தில் "என்னா படம் எடுக்கிறானுங்க அரைச்ச மாவயே அரைச்சிட்டு ராஸ்கல்ல்ல்ஸ்!!" என இந்தியை முற்றாக புறக்கணித்துவிட்டேன். ஆனாலும் இந்திப் பாடல்கள் கேட்பது மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. இரண்டாயிரம் வருடத்தின் துவக்கத்தில் "ஏக் லடுகி கோ தேகா சோ ஏசா லகா" தான் விழித்தெழுந்ததும் கேட்கும் பாடலாக இருந்தது. இந்தப் படத்தின் காட்சியமைப்பும் நன்றாக இருக்கும். இப்படிப் பட்டும் படாதவாறு இருந்த என் இந்தி இசை ஆர்வம் ரகுமானின் இந்தி நுழைவினுக்குப் பிறகு ஒரு வடிவத்தினுக்கு வந்தது. ரகுமான் இசையமைக்கும் எல்லா இந்தி பட கேசட்டுகளையும் வாங்கிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். தில் சே, யுவா பாடல்களை இந்தியில் கேட்க இன்னும் பிடித்திருந்தது.

நான்கு மாதத்தினுக்கு முன்பான ஒரு இரவில்தான் தில்லி 6 பாடல்களை கேட்டேன். பத்து பாடல்களையும் முழுதாகக் கேட்டபின்பு இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு புள்ளியில் தொலைந்து போயிருந்தேன். ரகுமானின் இசை கேட்ட உடனே பிடிக்கும் இசை அல்ல. நாட்பட நாட்பட போதை மிகும் திராட்சை மதுவினைப் போன்றது. ஆனால் தில்லி 6 பாடல்கள் ஏற்கனவே நன்கு ஊறிய மதுவாக இருந்தது. கேட்ட உடனே பிடித்த பாடல் மஸாக்களி தான். அதில் திளைக்கும் உற்சாகத்தினையும் பொங்குதல்களையும் முழுமையாய் அனுபவித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். "மெளலா மேரே!" பாடல் பித்த நிலையின் உச்சம். சூபி தியான நிலையின் இன்னொரு வடிவம் இந்தப் பாடலின் ஆன்மாவினை ஒத்திருக்கலாம். கொண்டாட்டமும், மகிழ்வும், குழைவும், உருகுதலும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்ட பாடல் இது. நான்கு மாதத்தினுக்கும் மேலாய் என்னைக் கட்டிப் போட்ட பாடல் இதுவெனச் சொல்லலாம். 'தில் கீரா கஹி பல் தஃபதன்' என்கிற பாடல் இன்னொரு அற்புதம். கடைசி இரண்டு நிமிடங்கள் அற்புதத்தின் உச்சம். மெதுவாய் ஆரம்பித்து மெல்ல மெல்ல வேகம் கூட்டி நம்மை நிறைக்கும் தந்தி அதிர்வுகள் உடலுக்குள்ளும் பாய்வதை எதைக் கொண்டும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. இந்தப் பாடல் முடிந்த பின்னும் உடல் அதிர்வதை ஒவ்வொரு முறையும் உணரமுடிகிறது. ரகுமானின் மீது மிகப்பெரிய காதலை வரவழைத்த பாடல் "ரெஹ்னா து!" காற்றில் வார்த்தையை லயத்தோடு அடிவயிற்றிலிருந்து துப்பும் வித்தையைத்தான் ரகுமான் அவரது குரலில் நிகழ்த்தியிருக்கிறார். இந்தப் பாடலை விட, இசையை விட, ரகுமானின் குரல் எனக்குப் பிடித்திருந்தது. மற்ற ஆறு பாடல்கள் என்னை வசீகரித்ததே தவிர இந்த நான்கு பாடல்களைப் போல பைத்தியம் பிடிக்க வைக்க வில்லை.

இதற்கு முன்பு ஒரே திரைப்படத்தின் பாடல்களை அல்லது ஒரே ஆல்பத்தை தொடர்ச்சியாய் நான்கு மாதங்களுக்கு மேலாய் கேட்டதில்லை. தில்லி 6 பாடல்களை கேட்டிராத நாளே இல்லையெனத்தான் சொல்லவேண்டும். இன்றைய தினம் வரை குறைந்துவிடாத ஈர்ப்புடன் இவ்விசை இருக்கிறது. இதுவரைக்குமான ரகுமானின் இசை வாழ்வில் தில்லி 6 ஒரு அற்புதம். இதை அவராலே தோற்கடிக்க முடிந்தால் அதுவே ரகுமானின் சாதனையாகவிருக்கும். இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஆர்வமே எனக்கு இல்லாமலிருந்தது. இந்த இசைக்கு முகங்களையோ, நடன அசைவுகளையோ பொருத்திப் பார்க்க நான் விரும்பவில்லை. டிவிடி வாங்கி வெகு நாள் கழித்து கடந்த வாரம்தான் நண்பர்களோடு பார்த்தேன். இசையை சிதைக்காமல் படமாக்கியிருந்த விதம் மிகுந்த ஆறுதலாய் இருந்தது. "ரெஹ்னா து" இசையும் "மெளலா மேரே" பாடலும் படம் முழுக்க சிதறியிருந்தது மிகுந்த மகிழ்வைத் தந்தது. படத்தில் நிறைய விசயங்களை பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள். எதையும் திணிக்காமல் காட்சிகளை அதன் போக்கில் விட்டிருப்பது நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. " தில் கீரா கஹி பல் தஃபதன்" பாடலுக்கான கற்பனையும் ரசிக்கும்படி இருந்தது. மஸாக்களி பாடல் படு கச்சிதமாய் படமாக்கப்பட்டிருந்தது. தில்லி 6 இந்தி(ய) சினிமாக்களில் நல்லதொரு மாற்றமாகத்தான் இருந்தது.

தில்லி 6 தந்த அதே கிறக்கத்தை அன்வர் படப்பாடல்களும் தந்தன. சொல்லப்போனால் அன்வரில் வரும் "மெளலா மேரே மெளலா" பாடலை தில்லி 6 க்கு முன்பிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வகையில் ரகுமானின் பிரம்மாண்டத்தின் முன்பு Mithoon Sharma, Pankaj Awasthi க்களின் இசை காணாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அர்ஸியோனுக்கு சற்றும் குறைந்திடாத பாடல்தான் "துசே நைநோ" நண்பர் வெங்கியின் மூலம்தான் இப்பாடலை நான் தவறவிட்டிருந்தது தெரிய வந்தது. அவருக்கு என் நன்றி. மேலும் இப்படத்தில் வரும் மூன்று நிமிட பாடல் வரிகளில்லாத இசை ஆலாபணைகள் இந்த இரவுகளை அழகாக்கிவிட்டுப் போகின்றன.

இவ்விரண்டு தொகுப்புகள் தந்த உற்சாகம் இந்துஸ்தானி, கஜல் மற்றும் சூஃபி இசையைத் தேட வைத்தது. சென்ற வாரத்தில் சில கஜல் மற்றும் சூஃபி குறுந்தட்டுக்களை வாங்கினேன். Nayyara Noor, Noorjehan, Farida Khanum, Shahita Parveen, Munni Begum, Abida Parveen, Reshma போன்ற கஜல் பாடகர்களின் தொகுப்புகளும் கிடைத்தது. இப்பெயர்களை கஜல் மற்றும் உருதுக் கவிதைகளில் நன்கு பரிச்சயமான ஆசாத்திடம் சொன்னபோது
அவர் புரிந்து கொள்வது சற்றுக் கடினம்தான் என்றார். விரைவில் வரப் போகும் ஓய்வு நாட்களில் இந்த இசைகள் என் அமைதிப் பொழுதுகளை நிரப்பலாம்.

Featured Post

test

 test