Wednesday, June 29, 2022

கோவேறு கழுதைகள்



இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவலை நேற்றும் இன்றுமாக வாசித்து முடித்தேன். இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புதினம் இப்போது வாசிக்கும்போதும் புதிதாக இருக்கிறது. இந்த நாவலை என்னுடைய இருபதுகளில் வாசித்தேன். நேற்றைய வாசிப்பில் முதல் வரியிலேயே அதாவது ஆரோக்கியத்தின் பெயரைப் பார்த்த உடனேயே மனம் ஆழ்மனதிலிருந்து கதையை நினைவுபடுத்திக் கொண்டது. நல்ல படைப்புகளின் தன்மை இதுவாகத்தான் இருக்க முடியும்.

சமீபத்தில் லீனா மணிமேகலையின் மாடத்தி வழியாக புதிரை வண்ணார்கள் என்கிற பிரிவினரைக் குறித்து அறிந்தேன். கூடவே நிழலாக இமையத்தின் நாவலும் நினைவில் வந்தது. கோவேறு கழுதைகள் நாவலும் தலித் மக்களின் துணிகளை வெளுக்கும் வண்ணார்களின் வாழ்வியலைத்தான் பேசுகிறது. ஆனால் புதிரை வண்ணார் என்கிற சொல் நாவல் உட்பட எங்கேயும் பயன்படுத்தப்படவில்லை. தொழில் அடிப்படையில் மாடத்தியிலும் கோவேறு கழுதைகளிலும் ஒரே பிரிவினரின் வாழ்வைத்தான் சித்தரித்திருக்கிறார்கள். இரண்டு படைப்புகளிலும் இவர்களின் மீது நிகழ்த்தப்படும் உழைப்புச் சுரண்டல்கள், பாலியல் அத்துமீறல்கள், தீண்டாமைக் கொடுமைகள் எல்லாமும் பதிவாகியிருக்கின்றன. ஒரே வித்தியாசம் மாடத்தியில் வரும் வண்ணார்கள் தலித்துகளைப் பார்க்கக் கூட தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கோவேறு கழுதைகளில் ”வண்ணாத்தி எதிரில் வந்தால் அதிர்ஷ்டம்!” என்பதாகப் பதிவாகியிருக்கும்.

நாவலை வாசித்து முடித்த உடன், மனிதன் எத்தனைக் கீழ்மையானவன் என்பதைத்தான் நினைத்துக் கொண்டேன். வாய்ப்பும் அதிகாரமும் கிடைத்தால் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை நசுக்க ஒரு போதும் தயங்குவதில்லை. இவ்வளவு சாதியக் கொடுமைகளோடும், குரூரங்களோடும்தான் தமிழர் வாழ்விருந்தது என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். தமிழர் அல்லது முன்னோர் குறித்தப் பெருமை பேசும் ஒவ்வொருவரையும் கட்டிப் போட்டு இந்த நாவலை சப்தமாக வாசிக்க வைக்க வேண்டும். சக மனிதனின் மீது இத்தனை வன்முறைகளை நிகழ்த்திவிட்டு எங்கனம் தமிழர் என்கிற ஒரே சொல்லில் திரள முடியும் என்பதையும் கேட்க வேண்டும்.

மதம், இனம், சாதி போன்ற எந்தப் பின்னொட்டுகளோடும் கும்பல் கூடாதே என்பதுதான் என் தரப்பு. வடிவேலு துண்டால் கூட்டத்தினரின் தலையில் தட்டி விரட்டியடிப்பது போல என் சாதி, என் இனம், என் மதம் என யாராவது சொம்பைத் தூக்கிக் கொண்டு வந்தால் அவர்களை கவனமாக விரட்டியடிக்க வேண்டும். இந்த அறிவை வாசிப்பின் வழியாக மட்டும்தான் அடையமுடியும் என்பதால்தான் அனைத்து நிற சங்கிகளையும், தம்பிகளையும் படிங்கடா என அன்போடு கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

புராணங்கள் முன் வைக்கும் காவியப் பெண் பாத்திரங்களான கண்ணகி, சீதை, மணிமேகலைக்கு நிகரான காவியத் தன்மை கோவேறு கழுதைகளின் நாயகியான ஆரோக்கியத்திற்கும் உண்டு. ”வண்ணாத்தி வந்திருக்கேன்”, ”வண்ணாத்தி மவ வந்திருக்கேன்” என அந்தக் காலனி முழுக்கச் சுற்றிச் சுற்றி அலையும் ஆரோக்கியத்தின் கால்களையும் குரலையும் இப்போதும் கேட்க முடிகிறது.

இமையம் இந்த நாவலில் வண்ணார்கள் வாழ்வியலை விரிவாகப் பேசியதால் மட்டும் இது செவ்வியல் தன்மையை அடையவில்லை. மிக அசலான மொழியும் ஏராளமான சொலவடைகளும், பிற சமூகத்தினரின் தனித்துவங்களும் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கும். இன்றைய மொழியில் சொல்வதென்றால் அற்புதமான ’டீடெய்ல்ட் வொர்க்’. எனவேதான் இன்றும் நிற்கிறது.

மேலும் பண்பாட்டுத் தளத்திலும் இந்த நாவல் மிக முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. அறுவடைக் காலத்தின் சித்தரிப்பு மிக முக்கியமானது. தானியங்கள், உணவு, இன்று இல்லாத ஏராளமான இனக்குழுக்களின் வாழ்வியல் என மிக விரிவான சட்டகத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நாவலில் இருந்து சில வரிகளை கீழே தட்டச்சுகிறேன்.

”கோணி ஊசி, மணி, கொண்டை ஊசி, ரிப்பன், மை, பவுடர்களைக் கொடுத்து தானியங்களை வாங்கினார்கள் குறவர்கள். கூடை, முறம், புட்டி, தட்டு, சிப்புத் தட்டு, படல் செய்கிற குறவர்கள் ஊரை வளையமிட்டுக் கொண்டிருந்தனர். உரல் உலக்கை, கல்லுரல், ஆட்டுக்கல் ஆகியவற்றை கழுதைகளின் மீது ஏற்றிக் கொண்டு வந்தனர். கூத்தாடிகள் வீடுவீடாகப் பாட்டுப் பாடிக் கொண்டு வந்தனர். தொம்பன்கள் மாட்டுக் கொம்பு சீவினர். இரவுகளில் ஆட்டம் போட்டனர். தை ஆரம்பித்ததிலிருந்தே தாதன் தெருத்தெருவாக சங்கு ஊதினான். வளையல் விற்கும் நாயுடுப் பெண்கள், அம்மி கொத்தும் குறவப் பெண்கள், கூடை முறம் பின்னும் குறத்திகள், பச்சைகுத்தும் பெண்கள், கைரேகை, கிளிஜோசியம் பார்ப்பவர்கள், மைவைப்பவர்கள், பூம்பூம் மாட்டுக்காரன், உப்பு வண்டிகள், ஈயம் பூசுகிறவன், கருவாடு விற்பவர்கள் என அனைவரும் வந்தனர்.”


Thursday, June 16, 2022

திரையே நிகழாக- தொடர்கள்



நெஃபிலிக்ஸில் Ozark தொடரின் நான்காம் பாகத்தை ஆரம்பித்து நிறுத்தினேன்.  முதல் மூன்று பாகங்கள் சுவாரசியமாகப் போயின. பின்பு அந்த பேட்டர்ன் அலுக்க ஆரம்பித்ததால் நிறுத்தி விட்டேன். ஒரே ஒரு breaking bad தான் இருக்க முடியும். அதே தோசையை திரும்பவும் சுட்டு வைக்கும்போது அலுப்பு வந்து விடுகிறது. இருப்பினும் சுவாரசியமான கதைப் பின்னல்கள், கதாபாத்திரங்கள், மற்றும் எதிர்பாராத ட்விஸ்ட்களுக்காக ஒரு மாதத்தை இந்தத் தொடருக்குத் தந்தேன். அதுவே போதுமானது.

கொஞ்சம் நிதானமான தொடர்கள் எதையாவது பார்ப்போம் என்றெண்ணி அமேசான் ப்ரைமில் பஞ்சாயத்து சீசன் இரண்டை ஒரே அமர்வில் பார்த்து முடித்தேன். பஞ்சாயத்து முதல் சீசன் எனக்கு இன்னும் பிடித்திருந்தது. இதுபோன்ற ஆளரவம் குறைவான கிராம வாழ்க்கை மீதும்  வெள்ளந்தியான  மனிதர்கள் குறித்த கற்பனைகளும் மிருகங்கள் வாழும் நகரங்களில் உழலும் நம் அனைவருக்குமே உண்டு. நம்மிடம் இருக்கும் இந்த நாஸ்டால்ஜி வகை மென் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எடுக்கப்பட்ட இன்னொரு தொடர்தான் இது. பார்க்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கிராமத்தில் உயர் சாதியினரை விட்டால் வேறு ஆட்களே கிடையாதா என்பது போன்ற சலிப்பும் உடன் எழுந்தது. குப்தாக்களும், பாண்டேக்களும் , திரிபாதிகளும் சேர்ந்து நடித்த மற்றும் எடுத்த அவர்களைப் பற்றிய தொடர் போல. மாற்று ஆட்களோ பார்வைகளோ எதுவும் கிடையாது. மிக செளகர்யமாக, மனதை அலட்டிக் கொள்ளாமல் இது போன்ற தொடர்களை எடுக்கலாம், பார்க்கலாம், மூடி வைக்கலாம். அவ்வளவுதான். 

Dark தொடருக்குப் பிறகு அறிவியலின் பக்கம் போகாததால் கொஞ்சம் அறிவியல் புனைவின் பக்கம் ஒதுங்கலாம் என்றெண்ணி Outer Range தொடரின் முதல் இரண்டு பகுதிகளைப் பார்த்தேன். நன்றாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து பார்ப்பேன்.

இந்த நாட்டு நெட்ஃபிலிக்ஸ் Peaky Blinders தொடர் நம்பர் ஒன் இடத்தில் காண்பித்துக் கொண்டிருந்ததால் பார்க்கலாமே என்றெண்னி ஆரம்பித்தேன். அப்படியே இழுத்துக் கொண்டது. முதல் பாகத்தைப் பார்த்து முடித்தேன். சுவாரசியமான தொடர். காலகட்டத்தைக் கொண்டுவந்த மெனக்கெடலும் - வரலாறைப் புனைவோடு இணைத்த அபாரமான திரைக்கதையும் ஊன்றிப் பார்க்க வைத்திருக்கிறது. மொத்த பாகங்களையும் பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.

கூடவே Apple tv யில் Physical தொடரையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். கதாநாயகியை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவளின் மன ஓட்டங்களை அல்லது மைண்ட் வாய்ஸை இடை இடையே இணைத்திருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.  பல இடங்களில் என் குணாதிசயத்தையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ள முடிந்தது. நம்மால் சகித்துக் கொள்ளவே இயலாத பல இடங்களில் சம்பந்தமே இல்லாமல் கடமைக்காக அமர்ந்திருப்போம் இல்லையா – நாயகி அதைப் பல இடங்களில் பிரதிபலிக்கிறார்.

இவற்றுக்கிடையில் நல்ல விமர்சனங்கள் வருவதைப் பார்த்து பிபிசி தயாரிப்பில் வந்திருக்கும் This Is Going to Hurt தொடரின் முதல் இரண்டு பகுதிகளையும் டெலிக்ராம் வழி பார்த்து - மிரண்டு இது நமக்கானதில்லை என மூடி வைத்தேன். மருத்துவமனைகள் குறிப்பாக பிரசவ விடுதிகளின் மீது எனக்கு ஆழ்மனதில் ஒரு பயம் இருக்கிறது. அது தொடர்பான எதையும் தவிர்க்கவே முயல்வேன். இது ஒரு ஃபோபியாதான் – இன்னொரு சமயம் இதைக் குறித்து எழுதுகிறேன்.

ஒரு மலையாள சினிமா கதை விவாதத்தில் பங்கு கொள்ள முடிந்தது. கேரளாவையே மிரட்டிய  இன்னும் முடியாத ஒரு கொலை வழக்கை திரைக்கதையாக்கப் பேசிக் கொண்டிருக்கிறோம். இதையே நாவலாக்கினால் என்ன என்கிற எண்ணமும் எழுந்திருக்கிறது. மதுரை நாவலை எழுதும் கையோடு இந்தக் கொலைக் கதையையும் எழுதிவிடலாம்தான்.  அதற்கு இந்த ஒட்டு மொத்த சினிமா மற்றும் தொடர் அடிக்‌ஷனை நிறுத்த வேண்டும். புதிதாக எதையும் ஆரம்பிக்காமல் Peaky Blinders மற்றும் Physical தொடர்களை மட்டும் பார்த்து முடித்துவிட்டு நாவல்களுக்குத் திரும்ப வேண்டும்.



திரையே நிகழாக - சினிமா



லுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பரபரவென ஓடிக்கொண்டிருந்த வேலை கடந்த வாரத்தோடு முடிந்தது. கிடைத்த நேர மிகுதியில் ஜோ அண்ட் ஜோ , டான், இன்னலவரெ, சிபிஐ 5, ஐங்கரன், ஜனகனமண, நெஞ்சுக்கு நீதி, சேத்துமான், 12த் மேன் என தமிழிலும் மலையாளத்திலும் வரும் அனைத்து சுமார் படங்களையும் பார்த்து வைத்தேன். 

சிபிஐ 5 மரண மொக்கையாக இருக்கவே இது எப்படி ஐந்து படங்கள் வரை வந்திருக்க முடியும் என முதல் படமான சிபிஐ டைரிக் குறிப்பு (மலையாளம்) படத்தையும் பார்த்தேன். அதுவும் சுமார்தான். கே.மது என்பவர்தான் இந்த சிபிஐ வரிசையின் இயக்குநர். ஒரே மாதிரியான அலுப்பூட்டும் பேட்டர்ன், இது எப்படி 5 படங்கள் வரை வந்தது என்பதும் தெரியவில்லை.

ஜோமோன் ஜோமோள் படத்தின் ட்ரைலர் எனக்குப் பிடித்திருந்தது. மாத்யூவ் தாமஸ் பயலை கும்ப்ளாங்கி நைட்ஸிலிருந்தும் நஸ்லெனை தண்ணீர் மத்தான் தினங்களிலிருந்தும் பிடித்துப் போனதால் சற்று ஆவலாகத்த்தான் காத்திருந்தேன். ஆனால் படத்தில் ’காரியமாயிட்டு’ ஒன்றுமில்லை. நிகிலா விமலைப் பார்க்கப் பிடித்திருந்தது. 

ஜனகனமண படத்தின் கடைசி இருபது நிமிடங்களை வெட்டி வீசி இருந்தால் நல்லதொரு படமாக வந்திருக்கும். சங்கிகளின் பிரச்சினைகளைப் பேசுவதற்காக பெங்களூரைக் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனம்தான் ஆனால், தமிழ், மலையாளம், கன்னட மொழிக் கலப்பு சரியாக வரவில்லை. மிகவும் செயற்கையாக இருந்தது. இருப்பினும்  படத்தில் பேசப்படும் அரசியல் முக்கியமானது. இந்திய அளவில் அரசியல் கூறுணர்வு கொண்டவர்களில் மல்லுகள் முதன்மையானவர்கள் என்பதை நிரூபித்திருக்கும் இன்னொரு படம். 

இன்னலவரெ மற்றும் ஐங்கரன் படங்களை முழுமையாகப் பார்க்க முடிந்தது ஆனால் மனதில் நிற்கும்படி ஒரு காட்சியும் இல்லை. இந்த ஜீ.வி. பிரகாஷ் இருபது படங்கள் வரை நடித்திருப்பார் என நினைக்கிறேன். ஏன் ஒரு படம் கூட பேசும்படியாக இல்லை என்பது தெரியவில்லை. அவர் மீண்டும் இசைக்குத் திரும்பலாம். தானொரு சினிமா மெட்டீரியல் இல்லை என்பதை  அவரே விரைவில் உணரும் காலம் வரட்டும்.

நெஞ்சுக்கு நீதி மிக மோசமாக படமாக்கப்பட்டிருந்தது. ஆர்டிகள் 15 படத்தின் துவக்கக் காட்சியில் கொட்டும் மழையில் ஒரு நாட்டுப்புறப் பாடல் வருமில்லையா மொத்தப் படமும் அந்த ஒரு காட்சிக்கு இணை வைக்கக் காணாது. ஆனாலும் இந்தப் படம் பேசும் அரசியல் முக்கியமானது. சாதியின் பெயரால் இன்றும் நிகழும் குரூரக் கொலைகளுக்குப் பின்னிருக்கும் வன்மத்தை பேசும் கதைக்களம் என்பதால் குறைந்த பட்சம் கட்சிக்காரர்களாவது பார்த்து விழிப்படையட்டும் என்கிற நல் நோக்கத்தில் தனியாக விமர்சனம் என எதையும் எழுதவில்லை. ஜீ.வி. பிரகாஷூக்கு சொன்னதுதான் உதயநிதிக்கும். ஜீ.வி யாவது தன்னால் முடிந்த அளவுக்கு சட்டையைக் கிழித்துக் கொள்கிறார்.  உதயநிதியோ சவரம் செய்யக் கூட மெனக்கெடுவதில்லை. இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஒட்டு மொத்த தமிழ்சினிமாவும் அவர் கைகளில்தான் என்பதால் நமக்குச் சொல்ல ஒன்றுமில்லை. 

டான் – நூறு கோடி வசூலித்ததாக செய்திகளைப் பார்த்தேன். உண்மையாகவா? ஒரே ஒரு காட்சியைக் கூட ஒருவரும் புதிதாக யோசித்து வைக்கவில்லை. க்ரிஞ் டு த கோர். இந்தப் படமெல்லாம் இந்த ஓட்டம் ஓடுவது வரவிருக்கும் புது இயக்குநர்களின் திறமைகளை மிக மோசமாகக் குறைக்கும். ஏற்கனவே தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி அரை வேக்காடுகளால் நிரம்பி வழிகிறது. டான் போன்ற படங்களின் வெற்றி அரையைக் காலுக்கும் கீழாக்கும்.

சேத்துமான் படத்தின் கதைக்களம் முக்கியமானது. பெருமாள் முருகன் கதைகளை வாசித்திருப்பதால் படம் முதல் காட்சியிலிருந்தே உள்ளே இழுத்துக் கொண்டது. ஆனால் எதையோ சொல்ல வந்து எதையுமே சரியாக சொல்லாமல் விட்ட உணர்வே படம் பார்த்த பின்பு எழுந்தது. விக்ரம்களின் காலத்தில் இப்படி பிராந்திய உணர்வுடன் படமெடுக்க முன்வந்ததற்காக இயக்குநர் மற்றும் படக் குழுவினருக்கு பாராட்டுக்கள்.

12த் மேன் -  ”சும்மாதான இருக்கோம் ஒரு படம் எடுத்து வைப்போம்”  என்பது போல இருந்தது. ஐந்தாறு ஃபீல்ட் அவுட் நாயகிகளையும் நாயகர்களையும் உடன் மோகன்லாலையும் கூட்டிக் கொண்டு இயக்குநரும் தயாரிப்பாளரும் ஒரு வீக் எண்டட் ட்ரிப் போய் இருப்பார்கள் போல அங்கு வைத்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. இதைப் போன்ற ஒரே அறையில் / களத்தில் நிகழும் பல துப்பறியும் படங்களை பார்த்திருந்தாலும் முழுப் படத்தையும் பார்க்க வைத்த சுவாரசியம் திரைக்கதையில் இருந்தது. ஆனால் புதிதாக ஒன்றுமில்லை. 

Wednesday, June 15, 2022

புல்டோசர் ஜனநாயகம்



த்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைத்தபோது அக்கட்சியின் தொண்டர்கள் புல்டோசர்கள் சகிதமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டதைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்போது குழப்பமாக இருந்ததுஎதற்காக இந்தக் கூட்டம் புல்டோசரோடு சுற்றுகிறது என நினைத்துக்கொண்டேன்

சில நாட்களுக்கு முன்பு அஃப்ரீன் பாத்திமாவின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டபோதுதான் இந்தக் கும்பலின் புல்டோசர் பின்னணி புரிய வந்தது.  மிக வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் இந்திய இறையாண்மைத் தத்துவத்தை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கும் வேலையை ஆதித்யநாத் உள்ளிட்டோர் மும்முரமாக முன்னெடுத்திருக்கிறார்கள். பா.ஜ.க ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இந்த புல்டோசர் அபாயம் மிக வேகமாகப் பரவியும் வருகிறது.

இந்தியாவின் அடிப்படைக் கட்டுமாணம், நீதித்துறை, சட்டம், ஒழுங்கு என சகலத்தையும் இந்த மதவெறி பிடித்த கூட்டம் புல்டோசர் கொண்டு இடித்து நொறுக்குவதை ஒட்டு மொத்த இந்தியாவும் வேடிக்கை பார்க்கிறது. பத்திரிக்கைகள் வெளிப்படையாக எழுதத் தயங்குகின்றன. 

அஃப்ரீன் பாத்திமாவின் குடும்பத்துக்கு நிகழ்ந்த அநீதியைக் குறித்து யாராவது எழுதியிருக்கிறார்களா என்பதைத் தேடிப் பார்த்தேன். தமிழ் இந்து போலிஸ் தரப்பை எழுதி வைத்திருக்கிறது. பிரயாக்ராஜ் மாவட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் காத்ரி வீடுகள் இடிக்கப்படுவது வழக்கமான நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளதாக தமிழ் இந்து அறிவிப்பு வெளியிடுகிறது. இது அநீதி என்றோ, சிறுபான்மையினரின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல் என்றோ தமிழ் இந்து கட்டுரையில் ஒரு வரியும் இல்லை.போலவேஎதிர்கட்சிகள் தரப்பிலிருந்து எந்த ஒரு அழுத்தமான கண்டனமும் வந்ததாகத் தெரியவில்லை

ராகுல் காந்தியும் சோனியாவும் நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் பிஸியாக இருக்கிறார்கள்காங்கிரஸ் என்றொரு கட்சி இனிமேலும் உயிர்த்தெழும் என்கிற நம்பிக்கையும் செத்தே போனது.

கஞ்சா வழக்குகள், குண்டர் சட்டங்கள், லாக் அப் மரணங்கள், என்கவுண்ட்டர்கள் என நாம் அறிந்த அரச வன்முறையின் புதிய முகமாக இந்த புல்டோசர் இடிப்பு வந்து சேர்ந்திருக்கின்றது. இன்னும் என்னவெல்லாம் வரும் என்பதும் தெரியவில்லை. கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் நிகழ்ந்தப்படும் இந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு முடிவு இந்த நூற்றாண்டில் இல்லை போல. 

நீதி மன்றங்கள் தாமாக முன் வந்து புல்டோசர் பயங்கரங்களை விசாரிக்க வேண்டும். இந்தியக் குடிமக்களுக்கு நீதி மற்றும் ஜனநாயகத்தின் மீதுமிருக்கும் சொற்ப நம்பிக்கைகளை காக்க வேண்டியதும் நீதியரசர்களின் கடமைதான்.

Monday, June 13, 2022

நட்சத்திரங்களுக்குப் போகும் வழி

யிலின் அகவலோசை தூக்கம் என்கிற கனவிலிருந்து விழிப்படையச் செய்ததுமென்மையான குளிர்கூரைமட்டும் வேய்ந்து சுற்றிலும் திறந்திருந்த அந்த சதுர வடிவ அறையில் எங்களோடு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்ததுவழக்கமான நேரத்திற்கு முன்பாகவே விழிப்பு வந்துவிட்டதுயாரையும் எழுப்பி விடாமல் மெதுவாக எழுந்து வெளியே வந்தேன்பின்பனிக்கால மஞ்சுமஞ்சம்பில் கூரையிலும்அதன் மேல் ஏற்றிவிடப்பட்டிருந்த பூசணிக் கொடியிலும் படர்ந்திருந்ததுஅப்போதுதான் மலர்ந்திருந்த மஞ்சள்பூசணிப்பூவின் பரிசுத்தம் இரவில் தானாய் வந்து மண்டும் வழக்கமான நினைவுகளின் அழுக்கைச் சுரண்டி எடுத்ததுஎப்போதும் போல் மலையைப் பார்த்தேன்குளிரில் மலையை அணைத்தபடி துயில் கொண்டிருந்த வெண்மேகமும் இன்னும் விழித்திருக்கவில்லைஇந்த நிலம் முடியும் இடத்திலிருந்து மலைக்காடு துவங்குகிறதுநுழைந்ததும் ஒரு சிற்றோடைகடும் கோடையில் சில மாதங்களைத் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும்என் ஒவ்வொரு நாளையும் அங்கிருந்துதான் துவங்குவேன்அதை நோக்கி ஒன்றிரண்டு அடிகளை எடுத்து வைத்ததும் பனிப்புகை நடுவில் மங்கலாகஓர் உருவம் சமீபத்தில் நாங்கள் அமைத்திருந்த கல்தூணில் அமர்ந்திருப்பது புலப்பட்டது

அடுத்தடுத்த அடிகளை வேகமாக எடுத்து வைத்து கல்தூணை நெருங்கினேன்ஒரு பெண்சிலைபோல் அமர்ந்தபடி மலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அருகில் சென்றும் நான் வந்ததை அவள் உணரவில்லைமலையின் முழு அழகிலும் திளைத்திருந்தாள்.  தொண்டையைச் செருமியதும் சடாரெனத் திரும்பிப் பார்த்தாள்அவள் பார்வையின் வீச்சில் சற்றுத் தடுமாறி நின்றேன்வட்ட வடிவ முகம்அகலக் கண்கள்அடர்ந்தகருப்பு நிறம்மஞ்சள் நிறத்தில் புடவை அணிந்திருந்தாள்ஒரு கணம் கருமாரியம்மன் எழுந்து வந்து இங்கே அமர்ந்திருக்கிறாளோ என திகைத்துப் போனேன்ஆனால் அவள் மெதுவாகப் புன்னகைத்து தலையை அசைத்தாள்கல்தூண் சற்று உயரமானதுசராசரி உயரம் கொண்டவர்களும் எம்பித்தான் அமர வேண்டி வரும்அவள்கிட்டத்தட்ட அதிலிருந்து குதித்தாள்

சென்னையிலிருந்து இரவு முழுக்கப் பேருந்தில் பயணித்து இந்தச் சிறுநகரத்தின் பேருந்து நிலையத்திற்கு அதிகாலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்ததாகவும்அங்கிருந்து ஆட்டோ பிடித்து ஐந்து மணிக்கு முன்பே இங்கு வந்து விட்டதாகவும் சொன்னாள்அவளின் நிறுத்தாத பேச்சும் நறுக்கென்ற புன்னகையும் அவ்வளவு வசீகரமாக இருந்ததுவகிடெடுத்துப் படிய வாரியிருந்த தலை கலைந்து கிடந்ததுஉடையில் பேருந்தின் அழுக்குப் படித்திருந்ததுகண்கள் சோர்வுற்றிருந்தாலும் முகம் அவ்வளவு துலக்கமாக இருந்தது.

என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். "பொருத்தமான பெயர்எனச் சிரித்தாள்நான் அவளின் பெயரைக் கேட்கவில்லைஎங்கள் ஆசிரமத்திலேயே ஒரு கழிவறையும் குளியலறையும் இருந்ததுபெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது கிடையாதுஅவளுக்கு அதைச் சொன்னேன்அதை ஒட்டி இருக்கும் சிறிய சமையல் அறையில் டீத்தூளும் சர்க்கரையும் இருக்கும்தேநீர் வேண்டுமானால் போட்டுக் குடியுங்கள் என்றும் சொன்னேன்அவள் மறுப்பாய் தலையசைத்து விட்டுக் கேட்டாள்.

நீங்க எங்க போறீங்க?”

நான் சற்றுத் தயங்கி விரலை காட்டின் பக்கமாய் நீட்டினேன்

அவள் ஆர்வமாகநானும் வரவா?” என்றாள்

சரி என்று சொல்வதற்கு முன்பாகவே காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்எங்கள் நிலத்தையும் காட்டையும் ஒரு பெரிய பள்ளம் பிரித்திருந்ததுசரிவுகள் முழுக்க முட்செடிகளும் பாறைக் கற்களும் சிதறலாய் கிடக்கும்நாங்கள் நடந்து நடந்து உருவான ஒற்றைத் தடம் பனியால் சரியாகத் தெரியவில்லைவேகமாக முன்னால் சென்றவள் சற்று நின்றாள்.

இருங்க” என்றபடியே அவளுக்கு முன்னால் சென்று வழித்தடத்தில் நடக்க ஆரம்பித்தேன்என்னைத் தொடர்ந்து வரச் சொன்னேன்சரிவில் இறங்கும்போது அவள் தடுமாறி என் தோள்களைப் பிடித்துக் கொண்டாள்மீண்டும் ஒரு மேடேற்றம் என்பதால் நான் முதலில் ஏறி நின்று கொண்டு அவளுக்குக் கை நீட்டினேன்பற்றிப் பிடித்துக் கொண்டு மேலேறி வந்தாள்

அவளுக்கு மூச்சிரைத்தது.

புடவை அணிந்து கொண்டு நடப்பதின் சிரமத்தைச்சொன்னேன்.  சற்று நின்று மூச்சு வாங்கி விட்டுப் பேசினாள்

வேலைல இருந்து அப்படியே கிளம்பி வந்துட்டேன்எதைப்பத்தியும் யோசிக்கலமாத்துத் துணி கூட எடுத்துக்கல” 

நான் அப்போதுதான்  பெண்கள் வழக்கமாக உபயோகிக்கும் கைப்பையைக் கூட அவள் எடுத்து வராததைக் கவனித்தேன்அவளிடம் கேள்விகளைக் கேட்கத் தயக்கமாக இருந்ததுஆனால் சென்னையிலிருந்து எங்கள் ஆசிரமத்திற்கு எப்படி வந்திருக்க முடியும் என்கிற ஆச்சரிய உணர்வு இருந்து கொண்டிருந்ததுமிகவும் தயங்கி 

"இந்தஇடம்  எப்படித் தெரியும்?" எனக் கேட்டேன்

அவள் படபடவெனப் பேச ஆரம்பித்தாள்.

ஆறு மாசத்துக்கு முன்னால என்னோட வேல பாக்குற ஒரு பொண்ணு இங்கு வந்திருக்காஅவ சொல்லித்தான்தெரியும்அவ சொல்ல சொல்ல இந்த இடத்து மேலே ஏதோ ஒண்ணு வந்திருச்சிமனசுக்குள்ள தினம் இங்க வரணும் வரணும்னு நினைச்சிட்டே இருந்தது நடக்கவே இல்லநேத்து சாயந்திரம் வேலை முடிஞ்சி வீட்டுக்குப் போக இறங்கினப்போஇந்த ஊர் பஸ் ஒண்ணு போனதைப் பாத்தேன்எதைப்பத்தியும் யோசிக்கலகடகடன்னு பஸ் ஸ்டாப் போய் நின்னேன்அடுத்த பஸ்ஒரு மணி நேரம் கழிச்சி வந்ததுஏறி உட்கார்ந்துட்டேன்.”

பேசும்போது அவள் கைகளும் விழிகளும் குரலுமாய் சேர்ந்து கொண்டு பேச்சுடன் நடனமாடியதைப் பார்த்துச் சிரிப்பு வந்ததுஇவள் சொல்லும் பெண்ணை நினைவிருக்கிறதுஅன்று காலைப் பிரார்த்தனைகள் முடிந்து உணவருந்தப் போன நேரத்தில் தயங்கித் தயங்கி ஒரு பெண் ஆசிரம வாயிலில் நின்று கொண்டிருந்தாள்சமையல்காரரிடம் அந்தப் பெண்ணை உள்ளே அழைத்துவரச் சொன்னேன்எங்களுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தவர் அதைப் பாதியில் நிறுத்திவிட்டுப் போய் அவளை அழைத்து வந்தார்அவள் உள்ளே வந்ததும்உட்கார்ந்து சாப்பிடச் சொன்னேன்வேண்டாம் வேண்டாம் என மறுத்தவளை நாங்கள் அனைவரும் ஆற்றுப்படுத்தி சாப்பிடச் சொன்னோம்அப்போது பத்து பேர் வரைஆசிரமத்தில் இருந்தோம்ஸ்வாமி சச்சிதானந்தம் வெளியூர்போயிருந்ததால் பூஜை முதற்கொண்டு எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்ள வேண்டியிருந்ததுசாப்பிட்டு முடித்ததும் அந்தப் பெண் ஆசிரமத்தின் வலது மூலையில் பிரம்மாண்டமாய் கிளைப் பரப்பி நின்று கொண்டிருந்த செங்கொன்றை மரத்தின் அடியில் போடப்பட்டிருந்த கல் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்நாங்கள் யாரும்அவளைத் தொந்தரவு செய்யவில்லைவெகு நேரம் மலையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் எப்போது போனாள் என்பதையும் கவனிக்கவில்லை.

அவள் தோழியை நினைவிருப்பதாகச் சொன்னேன்இருவரும் ஓடையை நோக்கி 

நடக்க ஆரம்பித்தோம்காட்டு மரங்களும், புதர்களும் பனியில் குளித்திருந்தனபறவைகளின் மெல்லிய கீச்சொலி காடெங்கிலும் கேட்டுக் கொண்டிருந்ததுஓடையை அடைந்ததும் எனக்கு வழக்கமாக ஏற்படும் சுதந்திர உணர்வால் தலையின் இறுக்கம் நீங்கியதுஅந்நெ டுங்கால ஓடை ஒரு வெளியை உருவாக்கி இருந்ததுஇரு புறமும் மரங்கள் அடர்ந்திருக்கநீர் வரும் பாதை மட்டும் மலையிலிருந்து திறந்து கொண்டு வந்ததைப் போலத் தோற்றம் தரும்தினமும் பார்த்தாலும் ஒவ்வொரு முறைக்கும் மனம் திறந்து கொள்ளும்அந்தப் பெண் இந்தக் காட்சியைப் பார்த்து ஒரு கணம் தடுமாறினாள்இப்படி ஒரு திறப்பை அவள் எதிர்பார்த்திருக்கவில்லைமழைக்காலங்களில் ஓடையில் நீர் நிறைந்து ஓடிக் கொண்டிருக்கும்போது இத்தகையதொரு வெளியைப் பார்க்க முடியாதுமேலும் நீர் செந்நிறக் குழம்பாய் ஓடிக்கொண்டிருக்கும்மழையும் வெள்ளமும் முன்பனியும் ஓய்ந்த பின்பனிக்காலத்தில் இந்தப்பிரதேசம் வேறொரு அழகைப் பெற்றுவிடும்

கோடைக்கு இன்னும் சில நாட்களே மீதமிருக்கும் நிலையில் ஓடையில் நீர் வரத்து குறைவாகத்தான் இருந்ததுஓடைப் பாதையில் பெரிய மற்றும் சிறிய பாறைக் கற்கள் சிதறிக் கிடந்தனஆங்காங்கே குழிவான இடத்தில் மாசுமருவற்ற மிகத் தூய்மையான நீர் தேங்கி நின்று கொண்டிருந்ததுமிகக் குளிரான அதன் மேற்பரப்பில் பாதங்களை ஆசையாக வைத்துக் கொண்டே 

இந்தப் பாதை வழியா நடந்து போனா மலைக்குப் போயிடலாமா?” என்றாள்

போக முடியும் என்றும் ஆனால் பாதை சற்றுக் கரடு முரடாக இருக்குமென்றும் சொன்னேன்

எனக்குப் போகனும்நீங்க கூட வரீங்களா?” என மினுங்கும் கண்களால் கேட்டாள்.

சின்னஞ்சிறு குழந்ததையாய் அவள் முகமும் உடலும் மாறிவிட்டிருந்ததுஉடல் மற்றும் மனதின் அத்தனை  இறுக்கத்தையும் கழற்றி அவள் தூர எறிந்திருக்க வேண்டும்எனக்கும் ஆசிரமத்தில் வேலை ஒன்றும் இல்லைஸ்வாமிகாலை பூஜையைப் பார்த்துக் கொள்வார் என்பதால்

 போலாமே” என்றேன்ஓடை என்னையும் இளக்கியிருந்தது

அவள் மனம் பொங்கச் சிரித்தாள்.

ஆனால் நடப்பதற்கு முன்பு நான் குளிக்க வேண்டும் என்பதை இவளிடம் எப்படிச் சொல்வது என யோசித்துக் கொண்டிருக்கும்போது அவளே சொன்னாள். ”நான்குளிக்கனும்பளிங்கு மாதிரி இருக்க இந்தத் தண்ணியப் பாத்ததும் ரொம்ப ஆசையாயிருக்கு” என்றாள்.

புடவையோடு நடப்பதே சிரமம்அதையும் நனைத்துக் கொண்டு ஈர உடையோடு எப்படி நடப்பாள் என யோசித்தபடியே

ஈரத்துணியோட நடக்கிறது கஷ்டமாச்சே” என்றேன்.

நான் ஏன் துணியோட குளிக்கப்போறேன்” என்றாள்.

எனக்கு ஏனோ படாரெனச் சிரிப்பு வந்தது.

சரி நான் இங்க குளிக்கிறேன்நீங்க இன்னும் கொஞ்சம் முன்னால நடந்து போனா ஒரு பெரிய பாறை வரும் அததாண்டினா சின்ன குளம் மாதிரி தண்ணி தேங்கி இருக்கும்அங்க போய் குளிங்க”  என்றேன்.

 சரி” என உற்சாகமாய் முன்னால் நடந்தவள் சற்றுயோசனையாய் திரும்பி ”யாராவது வருவாங்களா?” என்றாள்.

யாராவது வரணும்னா இப்படித்தான் வரனும்அப்படி வந்தாநான் பாத்துக்குறேன்நீங்க குளிச்ச்சி முடிச்சதும் குரல்கொடுத்தா போதும் ” என்றேன்.

பிறகு நினைவு வந்தவனாய் கையில் வைத்திருந்ததுவர்த்தை அவளுக்காய் வீசினேன்.

உங்களுக்கு என்றவளிடம் வேட்டியில் துடைத்துக் கொள்வேன் எனச் சொன்னேன்அவள் இதற்காகவேகாத்துக் கொண்டிருந்தவளைப் போல அந்தப் பெரியபாறையை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.

நானும் வேட்டியைக் களைந்து விட்டு அணிந்திருந்த கால்சட்டையோடு நீரில் இறங்கினேன்அந்தப் பெண்ணும் இப்படித்தான் இறங்கியிருப்பாள் என உடனே தோன்றிய எண்ணத்தை விரட்டினேன்மலையைப் பார்த்து கையை உயர்த்தி தலைக்கு மேல் கும்பிட்டு நீரில் மூழ்கினேன்.

0

க்தி தன் உடைகளைக் களைந்து பாறைக் கல்லின் மீதுவைத்தாள்நீர் அசைவற்றிருந்ததுபின்புறமும் முன்புறமுமாய் இரண்டு பெரிய பாறைகள் அவளை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனகணுக்கால் வரைக்குமான நீர்சற்று முன்னே செல்லச் செல்ல முழங்காலை நனைத்ததுஅப்படியே அமர்ந்து கொண்டாள். வெற்றுடலின் பின்பாகத்தைச் சரளைக் கற்கள் ஆசையாய் குத்த மென்வலியுடன் நீரில் மூழ்கினாள்தேங்கியிருந்த நீர் என்பதால் மேல்பாகத்தில் குளிர்ந்து அடியாழத்தில் கதகதப்பாக இருந்ததுஅவள் இன்னும் முன்னே நடந்து சென்றாள்பாறையை நெருங்க நெருங்க நீரின் ஆழமும் அதிகரித்ததுஇடுப்பு வரைக்குமான நீரில் நின்று கொண்டு அவள் ஆனந்தமாக நீரை வாறி இரைத்தாள்உரத்துக் கத்த வேண்டும் என்கிற ஆசையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு மென் குரலில் கத்தினாள்அவள் உடல் சிலிர்த்துச் சிலிர்த்து அடங்கியதுநீரின் ஆழத்தில் அப்படியே புதைந்து கொள்ள விரும்பி உள்ளே மூழ்கினாள்மூச்சடக்கிக் கிடந்து கண்களைத் துழாவித் தரையைப் பார்த்தாள்பின் மூச்சுக்காக ஏங்கி சடாரென வெளியில் வந்து அப்போதுதான் மரம் வழி இறங்கி வந்தக் காற்றை ஆழமாய் உள்ளிழுத்து நுரையீரலில் நிரப்பிக் கொண்டாள்இந்த ஒரு நொடி போதும் என்கிற உணர்வு அவளுக்குத் தோன்றியது

நேற்றைய மாலையில் இந்த ஊரின் பெயரை முகப்பில் வைத்துக் கடந்துபோன பேருந்துக்கு நன்றி சொன்னாள் நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படி ஒரு சுதந்திர உணர்வை அவள் அறிந்ததில்லைமேற்கூரையில்லாதகதவின் தாழ்ப்பாளும் சரியாக இல்லாத  ஒரு குளியல் அறையில்தான் அவள் இத்தனை நாளும் குளித்தாள்அணிந்திருக்கும் உள்பாவாடையை மார்புவரை ஏற்றிக் கட்டிவிட்டு அந்தச்சிறிய அறையின் நடுவில் போடப்பட்டிருக்கும் கருங்கல்லில் அமர்ந்து கொண்டு பித்தளைச் சொம்பில் குடத்திலிருக்கும் நீரை வாறி தன் உடல் மீது ஊற்றிக் கொள்ளும் செயலை அவள் குளியல் என்றுதான்  இத்தனை நாட்களாக நம்பிக் கொண்டிருந்தாள்மேலும் அவளுக்கு வேறுவழியும் இல்லாதிருந்ததுஇன்று அவள் அணிந்திருந்த உடைகளை கழற்றும்போது தன் நைந்த உள்ளாடையை அவ்வளவு ஆவேசமாக கழற்றி எறிந்து விட்டுத்தான் நீரில் இறங்கினாள்அவளைப் போலவே அந்த வனத்தின் நீரும் அவளை விருப்பத்தோடு உள்வாங்கிக் கொண்டது.

இரண்டு கால்களையும் மடக்கிக் கொண்டு உடலை மிதப்பது போல் நீரின் மீது கிடத்திதலையைப் பின்னால் சாய்த்தபடி வானத்தைப் பார்த்தாள்.  சூரியனின் மென் தங்க வெளிச்சம் மேகங்களை எழுப்பிக் கொண்டிருந்ததுசோம்பலாய் அவை நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள்பறைவைகளின் ஒலி இன்னும்அடர்ந்தது.  தூங்கிக் கொண்டிருந்த காடும் பனியை உதறிவிட்டு எழுந்து இவளைப் பார்க்க ஆரம்பித்ததுமேலெழும் சூரியனையும் விழித்தெழும் வனத்தையும் குறித்து எந்தக் கவலையுமில்லாமல் சக்தி தனக்கே தனக்கான முழு உடலோடு கனவும் விழிப்புமான நிலையில் நீரில்  மிதந்தபடித்  திளைக்க ஆரம்பித்தாள்

சக்தி சென்னையில் மிகப் பிரபலமாக இருந்த ஒரு பெரியதுணிக் கடையின் புடவைப் பிரிவில் விற்பனைப்பெண்ணாக பணிபுரிந்து வந்தாள்தினசரி பதினோரு மணி நேரம் நிற்க வேண்டியிருக்கும்.  வாடிக்கையாளர்களுக்கு ஒரு புடவையை விரித்துக் காண்பித்துவிட்டு அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது கிடைக்கும் சில நிமிட ஓய்வில் கால்களை மடக்கி உட்கார அவளுக்கு ஏக்கமாகஇருக்கும் ஆனால் உடனடியாக இன்னொரு புடவையை எடுத்துப் போடுவதற்கான ஏவல் வந்துவிடும்

"இதை எடுஅதுஅதுமூணாவதுநாலாவது ரேக்பச்சையும் மஞ்சளும் கலந்த கலர்" சக்தியின் காதுகளில் சதாகேட்டுக்கொண்டிருக்கும் ஏவல்கள்தினசரி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பார்த்தாலும்அவர்களில் ஒரு முகம் கூட அவள் நினைவில்இருப்பதில்லை ஆனால் அந்த ஏவல் குரல்கள் அவளைத் தொடர்ந்து அலைக்கழிக்கும்சக்தி தலையை உலுக்கிக்கொண்டாள்இந்த வசீகர வனத் தனிமையிலும் அவள் காதுகளில் கேட்கும் ஏவல் குரல்கள் ஓயவில்லை

சக்தி தன் மனதின் ஏதோ ஒரு மூலையில் இருந்து எழும் தினசரியின் நினைவை வலுக்க ட்டாயமாக விரட்டிவிட்டு கால்களை இன்னும் மடக்கிக் கொண்டு நீருக்கடியில் உட்கார்ந்தாள்பாதி வரை நீரில் மூழ்கியிருந்த முலைகளின் மீதுஇவளின் அசைவுகளால் நீரில் உருவாகியிருந்த சிற்றலைகள் மெல்ல வந்து மோதிக் கொண்டிருந்தனஅப்படியே வெகுநேரம் அமர்ந்திருந்தாள்நீரின் சலனம் அடங்கியதுசூரிய ஒளியின் பிரகாசம் இன்னும் கூடவும் எழுந்து கொண்டாள்திறந்த வெளியில் நல்ல வெளிச்சத்தில் முழு உடலாய் நிற்கிறோம் என்கிற எண்ணம் அவளுக்கு வெட்கத்தையும் மகிழ்வையும் சுதந்திர உணர்வையும் ஒரே நேரத்தில் தந்து கொண்டிருந்ததுவெளிச்சம் காடு முழுக்கப் பரவியிருந்ததுபனித்திரை முற்றிலும் விலகி தாவரப் பச்சைகள் ஈரப் போர்வையை உதறியிருந்தனஆனாலும் இன்னும் மினுங்கலாய் காட்சிதந்தனபச்சையையும்  காட்டையும் மலையுச்சியையும் பார்த்தபடி சக்தி அப்படியே நின்று கொண்டிருந்தாள்

திடீரென ஒரு மரத்தின் பின்னாலிருந்து இலைகள் சலசலப்பது போன்ற ஒலி எழுந்ததுஅவசரமாய் ஓடிப்போய் புடவையை எடுத்து போர்த்திக் கொண்டு சப்தம் வந்த திசையைப் பார்த்தாள்ஒரு மான் மரத்தின் பின்னாலிருந்து மெதுவாய் எட்டிப் பார்த்ததுசக்தி அதுவரை இல்லாத குதூகலத்தை அடைந்தாள்சிரித்துக் கொண்டே புடைவையை கீழே போட்டு விட்டு துவர்த்தை எடுத்துஉடலைத் துடைத்துக் கொண்டாள்ஈரத்தை பிழிந்து விட்டு மீண்டும் கூந்தலில் சுழற்றிக் கொண்டாள்அந்தத் துவர்த்தில் விபூதியும் கற்பூர வாசனையும் மணந்ததுஉடைகளை நிதானமாய் அணிந்து கொண்டு நிமிர்ந்தவளின் எதிரே அந்த மான் அசைவற்று நின்று கொண்டிருந்ததுஅதைத் தொட விரும்பி கைகளை நீட்டியதும் அந்த மான் இரண்டடி பின்னால் நகர்ந்தது


"தொட விடமாட்டியா?" எனஅதன் கண்களைப் பார்த்துச் சிரித்தாள்பிறகு நடந்து வந்ததிசைக்காய் திரும்பி

நான் குளிச்சி முடிச்சிட்டேன் வாங்க” 

எனக் குரல்கொடுத்தாள்.

 

0

குளித்துவிட்டு எழுந்தேன்வேட்டியை இடுப்பில் கட்டிக்கொண்டு கால்சட்டையை கழற்றிப் பிழிந்து வெயில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த ஒரு பாறைக் கல்லின் மீது போட்டேன்உட்கார சற்று வசதியாய் இருந்த இன்னொரு கல்லின் மீது அமர்ந்து கொண்டு அவளின் அழைப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

ஒரு வருடத்திற்கு முன்பு நானும்  இந்தப் பெண்ணைப் போலத்தான்  எந்த அடையாளமும் இல்லாமல் இங்கு வந்துசேர்ந்தேன்வாழ்வில் எனக்கு கிடைத்திருந்த எல்லாவற்றையும் அதன் அருமையைத் தெரிந்து கொள்ளாமல் தொலைந்து விட்டிருந்தேன்வாழ்வையும் மனிதர்களையும் எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டதன் பலன்என என்னை நானே தேற்றிக் கொண்டு சொந்த ஊரையும் தெரிந்த மனிதர்களையும் விட்டு விலகிஏதோ ஒரு ரயிலில் ஏறி பணமில்லாதாதல் வழியில் எங்கேயோ இறக்கிவிடப்பட்டுபல மைல்கள் நடந்து தளர்ந்து விழுந்துயாரோ இட்டுப் போன பிச்சையைப் புசித்து கால் போன போக்கில் நடந்து வந்து கொண்டிருந்தபோது தொலைவில் இந்த மலை மங்கலாய் தென்பட்டதுமலையின் கம்பீரமும்அழகும் உள்ளுக்குள் என்னவோ செய்ததுஅதுவரை இலக்கே இல்லாமல் நடந்து கொண்டிருந்தவன்மலையை இலக்காக வைத்து நடக்கத் துவங்கினேன்.

இந்த ஊரில் காலெடுத்து வைக்கும் நொடிக்கு முன்பு அதுவரை வெயிலடித்துக் கொண்டிருந்த வானம் திடீரென இருட்டிக் கொண்டதுஎங்கிருந்தோ பெரும் மழை வந்ததுகாற்றும் மழையும் மின்னலும் இடியுமாய் என் வாழ்நாளில் பார்த்தேயிராத பேய் மழை கொட்ட ஆரம்பித்ததுஎன் உடலை அதற்கு ஒப்புக் கொடுத்துவிட்டு அப்படியே நின்றிருந்தேன்ஒரு மணி நேரம் கழித்துமழை வந்தசுவடே தெரியாமல் போய்விட்டதுமுகத்தைத் துடைத்துக் கொண்டு பார்க்கையில் மலைக்கு வெகு அருகில் நின்றிருந்தேன்கரும் பாறைகளும் பெரிய கற்களும் மழையில் கழுவி விடப்பட்டு மிகப் பிரகாசமாக மின்னினஓளியே கடவுளாய் அப்பாறைகளில் மின்னியதைக் கண்டவுடன் நான் ஈர உடையும் உடலுமாய்அப்படியே மண்ணில் விழுந்து வணங்கினேன்

மலையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும்  சாலையின் நடைபாதை எங்கும் காவி உடை அணிந்தவர்களைப் பார்க்க முடிந்ததுகூட்டமாகவும் தனித்தனியாகவும் நின்றும்அமர்ந்துமாய் அவரவர்கள் தங்களின் உலகத்தில் மூழ்கி இருந்தனர்என்னை யாரும் பொருட்படுத்தவில்லைநானொரு பெரிய புளியமரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தேன்எனக்கு எதிரேயும் அருகேயும் இரண்டுச் சிறு கோவில்கள் இருந்தனநடைபாதைக்குஅருகே வைக்கப்பட்டிருந்த திண்டில் எப்போதும் கற்பூரம் எரிந்து கொண்டிருந்ததுமலையை சுற்றிக் கொண்டுபோகும் மக்கள்கோவில்களின் வாசலில் எரிந்துகொண்டிருக்கும் கற்பூர தீபத்தில் தங்களுடைய ஒன்றையும் வைத்து வணங்கி விட்டுச் சென்று கொண்டிருந்தனர்எப்போதும் ஆள்நடமாட்டம் இருந்து கொண்டிருந்ததுநான் யாசிக்காமலேயே யார் யாரோ உணவைக் கொண்டுவந்து கொடுத்தனர்என் முன் காசும் விழுந்து கொண்டிருந்தது.  கிடைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருந்தேன்மனம் தன் தேவைகளைசுத்தமாய் மறந்திருந்ததுநாள் முழுக்க மலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்இரவு கவியும்போது ஒருசாமியார் வருவார்என் நெற்றியில் விபூதி பூசிவிட்டு இரண்டு பீடிகளை என் மீது வீசிவிட்டுப் போவார்அந்த இரண்டையும் புகைத்து முடித்தவுடன்இருள் மொத்தமாய் கவிழ்ந்துமலை மறைந்து போகும்இப்படி எத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் கடந்தன என்பது தெரியவில்லை.

ஒரு நாள் அந்த சாமியார் பகலில் வந்தார்என் கண்களை ஆழமாகப் பார்த்து அவர் பெயர் சச்சிதானந்தம் என்றும் அவர் அருகில் ஒரு ஆசிரமத்தில் தங்கி இருப்பதாகவும்சொன்னார்எனக்கு பேச்சு சுத்தமாய் மறந்து போயிருந்ததுகடைசியாய் எப்போது பேசினேன் என்பது கூட நினைவில் இல்லைஅவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென அவர் வா எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார்நான்  வசியத்திற்குக் கட்டுப்பட்டவன் போல அவர் பின்னால் நடக்க ஆரம்பித்தேன்அவர் நடந்து நடந்து இந்த ஆசிரமத்தை வந்தடைந்தார்

அது ஒரு நல்ல மழைக்காலம் என்பதால் இந்த ஓடையில் நீர்நிரம்பி ஓடிக்கொண்டிருந்ததுஒரு பெரிய சோப்புக்கட்டியையும் ஒரு காவி வேட்டித் துண்டையும் கையில் கொடுத்து குளித்துவிட்டு வரச் சொன்னார்அன்றிலிருந்து இந்த ஓடையையும் மலையின் திறப்பையும் ஒவ்வொருநாளும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்ஆரம்ப நாட்களில்இந்தக் காட்சியைக் காணும்போது உடல் சிலிர்க்க சிலிர்க்க மனம் திறந்து கொள்ளும்இப்போது உடல் சிலிர்ப்பதில்லைஆனால் மனம் மட்டும் இறுக்கத்தை விடுவித்துக் கொள்கிறது.

0

ந்தப் பெண்ணின் குரலை முதலில் ஏதோ பறவையின்குரல் என்பதாகத்தான் நினைத்தேன்பின்பு நினைவை உதறிக் கொண்டு எழுந்தேன்சட்டையைப் போட்டவாறே நடக்க ஆரம்பித்தேன்பாறையை நெருங்க நெருங்க அந்தப் பெண்ணின் குரல் சன்னமாய் கேட்க ஆரம்பித்ததுயாருடன் பேசுகிறாள் எனத் தெரியவில்லைகையில் அலைபேசி வைத்திருந்தாற் போலவும் இல்லையே என நினைத்துக் கொண்டே அருகில் போனதும் சிரிப்பு வந்ததுதலையில் ஈர்த் துவர்த்துடன் அதே நடனமாடும் உடல் மொழியோடு தீவிரமாக மானுடன் பேசிக் கொண்டிருந்தாள்என்னைப் பார்த்து பேச்சை நிறுத்திவிட்டு சிரித்தாள்அவளின் மலர்வைப் பார்க்க உள்ளுக்குள் ஏதோ செய்ததுபார்வையைத் தாழ்த்திக் கொண்டே மானை விரட்டினேன்நான் ஏதோ குற்றம் செய்ததைப் போல பதறினாள்

ஏன்மானைப் போய் விரட்டுறீங்க?” என்றாள்நான் சிரித்துக்கொண்டே 

இங்கே மான்கள் அதிகம்விரட்டலைன்னா நிலத்துக்குள்ள வந்து செடி கொடியெல்லாம் மேய்ஞ்சிட்டுப் போய்டும்” என்றேன்.

  சரிநாம போலாம்” என முன்னால் நடக்கஆரம்பித்தாள்

அந்த மான் சற்று நகர்ந்ததே தவிரஓடவில்லைஅம் மான் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன்காற்றில் கைகளை வீசிவிரட்ட முயன்றேன் ஆனால் அது சாவகாசமாகப் பின்னால் வந்ததுமுன்னால் சென்று கொண்டிருந்தவள் நின்று என்னிடம் ஏதோ சொல்ல வாய் எடுத்தவள் மானும் பின்னால்வருவதைக் கவனித்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்

"எங்க பின்னாலயே வாஎன அதற்கு ஒரு செய்தியையும் தந்தாள்நானும் சிரித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன்.

ஓடையில்தான் நடந்து கொண்டிருந்தோம்ஓடையின் இருமருங்கிலும் புதர்கள் அடந்திருந்ததுஅவ்வப்போது கற்கள்மீதேறிச் செல்ல வேண்டியிருந்ததுஈரக் கால்களோடு ஏறமுயன்று ஒன்றிரண்டு முறை வழுக்கி விழுந்தாள்நான் முன்னால் சென்றாலும் நடையில் என்னை மீறிச் செல்வதைஓர் உற்சாகமான விளையாட்டாகத் தொடர்ந்து ஆடினாள்அவ்வப்போது ”பாத்து பாத்து” எனச் சொல்லிக் கொண்டிருந்ததையும் நிறுத்திக் கொண்டேன்அவள்மெல்ல மெல்ல அந்த ஓடையின் மகளைப் போல மாறிக்கொண்டிருந்தாள்மலையை நெருங்க நெருங்க நீர் வரத்து அதிகமாக இருந்ததுமூங்கில் புதரைக் கடந்ததும் ஒருபெரிய வளைவு அதைத் தாண்டிவிட்டால் மலையின் காலடியைத் தொட்டுவிடலாம்நடை நிதானமானதுஅவளுக்கு இணையாக நடந்து கொண்டிருந்தேன்அவ்வப்போது என் தோள்களை இயல்பாகப் பற்றிக்கொண்டாள்திடீரென நினைவு வந்தவளாய் திரும்பிப்பார்த்தாள்மானைக் காணவில்லை

"மான் எப்ப போச்சு?" என்றாள்நான் சிரித்து "அது கொஞ்சதூரம்தான் வந்ததுஓடைல நடக்க அதுக்கு கஷ்டமா இருந்திருக்கும்அப்பவே காட்டுக்குள்ள ஓடிடுச்சிஎன்றேன்.

வெயில் அடர்ந்திருந்ததுபகல் முற்றியதும் பசிக்கஆரம்பித்தது

“ பசிக்குதா?” என்றேன்.

அவள் சிரித்தவாறே ”பயங்கரப் பசிமயக்கமே வருது” என்றாள்.

இனி மேல் மலை மீது ஏற இன்னும் வலு வேண்டும் என்பதால்நானும் நின்றேன்ஓடையை விட்டு விலகி குறுக்கே நடந்தால் மலை சுற்றும் பிரதான சாலைக்குப் போக முடியும் அங்கிருக்கும் சாப்பாட்டுக் கடையில் சாப்பிட்டு விட்டுதிரும்ப வருவதே நல்ல யோசனையாக இருக்க முடியும்அவளிடம் சொன்னேன்உடனே சரியென்றாள்இருவரும்புதர்களைத் தாண்டிபள்ளத்தில் இறங்கி மீண்டும் நிலத்திற்கு வந்தோம்பிரதான சாலைக்கு செல்லும் மண்தடத்தில் நடக்க ஆரம்பித்தோம்அது ஒரு சிறிய சாப்பாட்டுக் கடையில்தான் முடிந்தது

கடை வாசலில் இருந்த விறகடுப்பில் இட்லி வெந்துகொண்டிருந்ததுஒரே ஒரு பெஞ்சும் டேபிளும் மட்டும் போடும் அளவிற்குதான் கடைக்குள்ளே இடம் இருந்ததுஅவசரமாய் போய் அமர்ந்து கொண்டோம்அந்தக் கடைவைத்து நடத்தும் பெரியவர் எனக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்அவ்வப்போது எங்களின் ஆசிரமத்துக்கு வருவார்

வாங்க சாமி” என வரவேற்றவர் இலை போட்டபடியே 

என்ன சாமி இந்த பக்கமா இருந்து வரீங்க?” என்றார்

ஓடை வழியாய் வந்ததாக சொன்னேன்அவர் மனைவிசூடாக இட்லிகளை எடுத்து வந்து இலையில் வைத்தார்பசியில் இருவருமே வேகவேகமாக உண்டோம்அந்தஅம்மா இட்லிகளை வைத்துக் கொண்டே இருந்தார்ஒருகட்டத்தில் நான் நிறுத்திவிட அந்தப் பெண் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்எழுந்து விடாமல் சாப்பிடுவது போல் பாவணை செய்து கொண்டுஅமர்ந்திருந்தேன்அவள் என்னை நிமிர்ந்து பார்த்துநீங்கஎழுந்துக்கோங்க” என்றாள்.

நான் எழுந்து போய் கை கழுவிக் கொண்டேன்அந்தப்பெரியவரை அருகில் அழைத்து சாயந்திரம் வந்து பணம் தருவதாக சொன்னேன்அவர் என் கையைப் பிடித்துக்கொண்டு 

எனக்கே ரெண்டுமூணு நாளா அங்க வரனும்னுஇருந்ததுசாயந்திரம் நானே வரேன்” என்றார்.

அவள் சாப்பிட்டு முடித்து எழுந்து வந்தாள்கைகழுவிக்கொண்டவள் அந்த அம்மாவிடம்

இப்படி ஒரு இட்லியைஇதுக்கு முன்னால சாப்டதே இல்லை” என்றாள்அந்தஅம்மா கூச்சத்தில் நெளிந்து கொண்டே சிரித்தார்பேசிக்கொண்டே தன் ஜாக்கெட் உள்ளே இருந்து ஒருசிறிய பர்ஸை வெளியில் எடுத்தாள்நான் அவசரமாக 

"பணம்கொடுத்தாச்சி" என்றேன். ”எப்போ கொடுத்தீங்கஎனவிழிகளை விரித்தாள்நான் சிரித்துக் கொண்டே

கொடுத்தாச்சு வாங்க” என்றேன்.

இருவரும் மீண்டும் வந்த வழியே நடக்க ஆரம்பித்தோம்பத்தடி நடந்தவள் அப்படியே இடுப்பில் கைவைத்துக்கொண்டு நின்றுவிட்டாள்

முடியலகன்னாபின்னான்னு சாப்ட்டேன்” எனச் சிரித்தாள்நானும் சிரித்தபடியே ”அங்க நிழல்ல போய் உட்காரலாம்” என்றேன்மீண்டும் சரிவில் இறங்கி ஏறி காட்டிற்குள் நுழைந்தோம்

கொஞ்சம் உட்காரலாமா?” எனக் கேட்டாள் சற்று தூரத்தில் ஓடைக்கு சமீபமாக ஒரு காட்டு நுணா மரம் பசிய இலைகளை விரித்து நின்று கொண்டிருந்ததுஅதன் நிழலில் சிறுசிறு கற்களும் இல்லாதிருக்கவே அங்குபோகலாம் என்றேன்.

மரத்தின் அடியில் போய் அமர்ந்தோம்அவள் சிரமப்பட்டுக்கொட்டாவியை அடக்கிக் கொண்டாள். ”நைட்லாம் தூங்கவேற இல்லையா சாப்டதும் தூக்கம் வருது” என்றாள்நான்எழுந்து நின்று அணிந்திருந்த வேட்டியை கழற்றி தரையில் விரித்தேன்அவள் தலைக்கு சுற்றியிருந்த துவர்த்தும் வெயிலில் காய்ந்திருந்ததுஅதைச் சுருட்டி தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கச் சொன்னேன்

நீங்க?” என்றாள் 

நான் அந்தப் பக்கம் படுக்கிறேன்” என்றேன்

பரவாயில்ல இங்கயே படுங்க” என அந்த விரிப்பின் ஒரு ஓரமாய் படுத்துக் கொண்டாள்நான் தயக்கமாய் நின்றுகொண்டிருந்தேன்எனக்கும் தூக்கம் சுழற்றிக் கொண்டுவந்ததுதான்யோசித்துக் கொண்டிருக்கும்போதே அந்தப்பெண்ணின் சன்னமான குறட்டை ஒலி கேட்டதுஅவ்வளவு சீக்கிரம் தூங்கிவிட்டாளா என வியந்து கொண்டேஅவளுக்கு முதுகு காட்டிப் படுத்தேன்நிழல் அவ்வளவுகுளுமையாக இருந்ததுஎப்போது தூங்கினேன் என்பது தெரியாமல் நானும் தூங்கிப் போனேன்

0

க்தி நட்சத்திரங்களுக்குள் போக விரும்பினாள்ஆனால் எப்படிப் போவது என்பதுதான் அவளுக்குத் தெரியவில்லைஒரு காலத்தில் இந்த மலைக்காட்டிற்குள்  தொலைந்து போக ஆசைப்பட்டாள்அது நடந்ததுமலையின் மகளாக அவளால் மீண்டும் பிறந்து வர முடிந்ததுஆனால் நட்சத்திரங்களை நெருங்குவது எப்படி என்பதுதான்தெரியவில்லைதன் அருகில் முதுகு காட்டி உறங்கும் வனராஜனை தன் பக்கமாகத் திருப்பினாள்அவன் துயிலில் ஆழ்ந்திருந்தான்அவள் மெல்ல அவன் மீது  படர்ந்தாள்கண் விழித்தவனின் உதடுகளில் தன் இதழ்களைப் பதித்தாள்அவன் நாசிகண்கள்கன்னம்கழுத்து என முகம் முழுக்கத் தன் உதடுகளால் மென்மையாகவும் ஆழமாகவும் முத்தமிட்டாள்அவன் காது மடலைக் கவ்வும்போது வனராஜன் கூசி முனகினான்

இவள் அவன்காதருகே கிசுகிசுப்பாகக் கேட்டாள் 

என்னை நட்சத்திரங்களுக்கு உள்ளே அழைத்துப்போவாயா வனராஜா?”  

அவன் கிறக்கமாக 

அழைத்துப் போகிறேன் ஆனால் எனக்கு வழி தெரியாதே” என்றான்

வனராஜனுக்கு எப்படி நட்சத்திரங்களுக்கான வழி தெரியாமல் இருக்க முடியும்நீ பொய் சொல்கிறாய்” எனஅவன் மார்பில் முகத்தைப் புதைத்தாள்.

வனராஜன் அவள் முகத்தை உயர்த்திச் சொன்னான்

வானமும் நிலமும் வெகு தூரமானவைநட்சத்திரங்கள் மட்டும் காட்டில் மலர்ந்தால் நான் உன்னை இப்போதே அழைத்துச் சென்றுவிடுவேன் ஆனால் அவை வானில்அல்லவா மிளிர்கின்றன

சக்தி ஏமாற்றமாய்அவன் நாசியைத் தன் நாவால் வருடிவிட்டுச் சொன்னாள்.  

வனராஜனான உனக்கு இந்தக் கதை தெரியாதாஇந்தக் காட்டின் நடுவில் வானைத் தொடும் விருட்சம் ஒன்று பல்லாயிரக் கணக்கான வருடங்களாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறதுஅதுதான் நட்சத்திரங்களை மலர்களாகப் பிரசவிக்கிறதுஅந்நட்சத்திர மலர்பூத்துக்குலுங்கும் வரை மரத்தில் இருக்கும்பூவின் வதனம் சற்று வாடும்போது உடனடியாக அந்த மரம் அந்நட்சத்திர மலரை வானில் எறிந்து விடும்அங்கே அவை நிரந்தரமாக ஒளிவீசுகின்றன.

வனராஜன் ஆச்சரியத்தில் உறைந்தான்

நிஜமாகவா நிஜமாகவா?” என அரற்றினான்

சக்தி ஆழமாக அவன் கண்களைப் பார்த்து ”ஆம்” எனச்சொன்னாள்மேலும்

நான் இங்கு வந்த காரணமும் அதுதான்” என்றாள்.

அப்போது சக்தியின் மீது யாரோ படர்வது போல் தோன்றியதுசக்தி திடுக்கிட்டு எழுந்து கொள்ள முயன்று தடுமாறி மீண்டும் அவன் மீதே விழுந்தாள்அவள் முதுகின் மீது கனமான அந்த மான் ஏறிப்படுத்ததுசக்திக்கும் கீழே படுத்திருக்கும் வனராஜனுக்கும் மூச்சு முட்டியதுஅவன் அலற ஆரம்பித்தான்சக்தியாலும் மானின் எடையைத் தாங்க முடியவில்லைஅதை விலக்கிக் கீழே தள்ளவும் முடியவில்லைமான் இன்னும் அழுத்தமாய் சக்தியின் மீது படர ஆரம்பித்ததுசக்தி அலறலாய் சொன்னாள்

தயவு செய்து எழுந்திருஎன்னால் முடியவில்லைவனராஜனுக்கு மூச்சடைக்கிறதுஅவன் இறந்தும் கூடபோகலாம்” எனக் கத்தினாள்

மான் சக்தியின் காதருகில் சென்று அழுத்தமாகச் சொல்ல ஆரம்பித்தது

நான் உன்னை நட்சத்திரங்களை மலர்விக்கும் மரத்திற்கு அழைத்துப் போகிறேன்இந்தக் காடு என்னுடையதுஇதன் ஆழ அகலங்கள் எனக்கு மட்டும்தான் தெரியும்இந்த வனத்தின் ஒவ்வொரு தாவரமும் எனக்கானதுவிண்ணைத் தொட வளர்ந்திருக்கும் எல்லா மரங்களும் எங்களின் சந்ததியினர் மீதம் வைத்தவைதாம்அற்ப மனிதர்களால் இந்த வனத்தின் நுனியைக் கூட தொட முடியாதுநீயொரு சக்தி என்பதை உணர்நீ இவன் உடல் மீதுப் புரள்வதைக் காணச் சகிக்கவில்லைஉடனடியாக எழுந்து என்னோடு வா

சக்திக்கு மூச்சு முட்டியதுவனராஜன் கிட்டத்தட்ட மயங்கும் நிலையில் இருந்தான்அவள் மானிடம் கெஞ்சினாள்.

நான் வருகிறேன்வனராஜனும் உடன் வரட்டும்மூவருமாய் அங்கு போவோம் ஆனால் இப்போது தயவு செய்து என் மீதிருந்து எழு

மான் இன்னும் உக்கிரமடைந்ததுதன் எடையை இன்னும்அழுத்தியது

நான் உன்னை மட்டும்தான் அழைத்துப் போவதாகச் சொன்னேன்அதுவும் வனராஜன் உயிரோடு இருக்கும் வரை சாத்தியமில்லைஇதோ இன்னும் இரண்டு நிமிடம்தான்அவன் உயிர் போய்விடும்பிறகு என் மீது ஏறி அமர்ந்து கொள்உன்னை அந் நட்சத்திர வெளிக்குக் கூட்டிப் போகிறேன்” 

என்றபடியே இன்னும் அவளை அழுத்தியது

சக்தி தன் மொத்த வலுவையும் திரட்டி மானைக் கீழே தள்ள முயன்றாள்

நான் உன்னோட எங்கயும் வர மாட்டேன்போதும் எழுந்துபோ” எனக் கத்திக் கொண்டே எழுந்து அமர்ந்தாள்.

சக்திக்கு வியர்வை பொங்கி வழிந்ததுஇதயம் படபடவென அடித்துக் கொண்டதுஅவ்வளவு நிஜமாகவா இருக்கும் கனவு என முதன்முறையாய் வியந்தாள்அருகில் வனராஜன் சலனமே இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தான்சக்திக்குத் தாகம் நாவை வறட்டியதுஎழுந்து போய் புதரைத் தாண்டி ஓடைக்குள் இறங்கி நீரை அள்ளி அள்ளிக் குடித்தாள்வெயில் உச்சிக்கு வந்து விட்டிருந்ததுஉள்ளங்கை நீரள்ளி முகத்தில் அடித்துக் கொண்டாள்மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தவள் அப்படியே திடுக்கிட்டு நின்றாள்

வனராஜனுக்கு அருகே அவள் படுத்திருந்த இடத்தில் மிகப்பெரிய மஞ்சள் நிறப் பாம்பு ஒன்று படுத்திருந்ததுகிட்டத்தட்ட அவள் படுத்திருந்த அதே இடத்தில் அதேபோன்று படுத்திருந்ததுபயந்து போய் கத்த வாயெடுத்தவள் சூழலைப் புரிந்து கொண்டு நிறுத்திக் கொண்டாள்எப்படியாவது இங்கிருந்தபடியே வனராஜனை எழுப்பி விடவேண்டும் எனத் தவித்தாள்ஆனால் ஏதாவது அசைவை பாம்பு உணர்ந்தால் விபரீதமாகிவிடும் என்பதால் அப்படியே நின்று கொண்டாள்இருப்பினும் அவளின் அசைவை உணர்ந்த பாம்பு மெல்ல நகர ஆரம்பித்ததுஅது முழுமையாய் நகர்ந்ததும் ஓடிப்போய் அவனை உலுக்கி எழுப்பினாள்

0

"ஞ்சள் சாரையாகத்தான் இருக்கும்விஷமில்லாதது “எனச்சொல்லிக் கொண்டே எழுந்தேன்அவள் முகம் பளிச்சென்றிருந்தது

"அவ்வளவு பெரிய பாம்பைப் பார்த்ததும் ரொம்பப் பயந்துட்டேன்எனச் சிரித்தாள்

சரி மேலே போகலாமா?” என்றேன்அவள் சற்று சோர்வாக 

ஆசிரமத்துக்கே போலாமாஇந்த வெயில்ல மலை ஏறமுடியும்னு தோணல” என்றாள்

எனக்கும் அதுதான் சரியெனப் பட்டது.

இருவரும் வந்த வழியே நடக்க ஆரம்பித்தோம்.  பாம்பைப் பார்த்த பயம் அவளுக்கு இப்போது பரவசமாக மாறியிருந்ததுபேசிக் கொண்டே வந்தாள்திடீரென"உங்களுக்கு கனவு ஏதாவது வந்ததா?" என்றாள்

"இல்லைஎன சொல்லிவிட்டுச் சிரித்தேன்உனக்கு வந்ததா எனக் கேட்கவில்லைநான் கேட்பேன் என  எதிர்பார்த்திருப்பாள் போலஎதையோ சொல்ல முயன்றுபின்பு தவிர்த்தாள்.

வனத்தில் இருக்கும் விலங்குகள்பாம்புகள் மற்றும் ஆசிரமம் குறித்து கேள்விகளாய் கேட்டுக் கொண்டுவந்தாள்இந்த ஆசிரமம் ாருடையதென்று எனக்கும் தெரியாதுஇங்கு தோட்ட வேலைகளை பார்த்துக் கொண்டு அப்படியே இருப்பதாக சொன்னேன்

வெயில் உச்சிக்கு வந்துவிட்டது.  இருவருக்கும் வியர்வை பொங்கி வழிந்ததுமரங்கள் அசைவதைக் கூட நிறுத்தியிருந்தன. ”காலையில் அவ்வளவு குளிர்ந்த காடாஇது இப்படிப் புழுங்குகிறதே?” என அவள் அலுத்துக் கொண்டாள். ”இவ்வளவு தூரமா நடந்து போனோம்?” என்றும் வியந்து கொண்டாள்பாறைகள் தகித்தனகாலில் இடறிய கற்களும் முட்செடிகளும் பாதங்களை கீறியிருந்தனவலியை அவள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்து வந்து கொண்டிருந்தாள்ஆனால் அவ்வப்போது 

வந்துட்டோமா வந்துட்டோமா” என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தாள்ஒன்றைக் குறித்த பரவசம் தீர்ந்துபோனதும் மனம் இன்னொரு பரவசத்தை நோக்கி உடனடியாகத் தாவிவிடுகிறதுபழைய கிளர்வுகளின் சாட்சியாக மட்டுமே தங்கிவிடுவது என்பது துயரமானதுஒருவழியாக ஆசிரம எல்லைக்கு வந்து சேர்ந்தோம்மீண்டும் சரிவில் இறங்கி நிலத்திற்குள் நுழைந்தோம்

ஆசிரமத்தில் எல்லாமும் வரிசை தவறாது நடக்கும்முகப்பில் இருக்கும் சற்றுப் பெரிய ஓலைக் குடிலில்தான் தினசரி பூஜைகள் நடக்கும்காலை பத்து மணிக்கு ஆரம்பிக்கும் பூஜை பதினோரு மணி வாக்கில் முடிந்துவிடும்சச்சிதானந்தம் சில பாடல்களைப் பாடுவார்கடவுளர் புகைப்படங்களுக்கு தீப ஆரத்தி மற்றும் கற்பூர ஆரத்தி முடிந்ததும் பனிரெண்டு மணிக்கெல்லாம் அனைவரும் போய் இன்னொரு குடிலில் அமர்வோம்அங்குதான் சாப்பாடுதூக்கம்ஓய்வு என அனைத்தும்.

இந்த இரண்டு குடில்களோடு ஒரு சிறிய சமையல் அறையும் கழிவறையும் மட்டும்தான் ஆசிரமத்தின் கட்டிடங்கள் மற்ற இடங்களையெல்லாம் தோட்டமாகப் பயன்படுத்தினோம்காய்கறிகள்பழங்கள் தவிர்த்து பருப்பு வகைகள்கேழ்வரகுசோளம் போன்றவற்றையும் பயிரிட்டோம்சமையற்காரர்நான்சச்சிதானந்தம் ஸ்வாமிகள் தவிர்த்து இன்னும் இருவரும் இந்த ஆசிரமத்தில் நிரந்தரமாக இருக்கிறோம்மற்றவர்களெல்லாம் பயணிகள் அல்லது விருந்தினர்கள்அவர்கள் பெரும்பாலும் ஸ்வாமியின் நண்பர்களாக இருப்பார்கள்சமயத்தில் இமாலயத்திலிருந்தும் சிலர் வந்து தங்கிப் போவதுண்டு.  

ஒரு மணி வாக்கில் சாப்பாடு முடிந்ததும்  இரண்டு மணிவரை உறக்கம் அல்லது அங்கிருக்கும் சிறிய புத்தக அடுக்கிற்கு அருகில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருப்பேன்இரண்டரை மணிவாக்கில் மீண்டும் தோட்ட வேலைகள் இருக்கும்

இன்று எல்லா வழமையும் தலைகீழ்ஸ்வாமி தேடியிருப்பாரோ என்கிற மெல்லிய பதற்றமும் தொற்றிக் கொண்டதுநானும் அவளும் உள்ளே வந்தபோது யாரையும் பார்க்கவில்லைதூரத்தில் ஆசிரமவாசிகள் இருவரும் அவரை கொடிகளுக்கு பந்தல் இடும் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்சச்சிதானந்தம் ஸ்வாமியைக் காணவில்லைதோட்டத்தில் எனக்கும் சிறுசிறு வேலைகள்இருந்தனஎன் பின்னால் வந்து கொண்டிருந்தவள் ஆசிரமத்தின் மூலையில் இருந்த செங்கொன்றை மரத்தைப் பார்த்து ஒரு கணம் நின்றாள்பின்பு அதை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்நான் களைக் கொத்தியையும் சிறியகடப்பாறை ஒன்றையும் எடுத்துக் கொண்டு தோட்டம் நோக்கி நகர்ந்தேன்.

அந்தப் பெண் சரியாக அவளின் தோழி அமர்ந்திருந்த இடத்திற்குப் போய் உட்கார்ந்து கொண்டாள்நான் என் வேலைக்குள் மூழ்கிப் போனேன்இரண்டு மூன்று செடிகளை நட வேண்டியிருந்ததுஆசிரம எல்லையில் இடம் விட்டுகுழி தோண்டி பைகளில் இருந்த மரக் கன்றுகளை நட்டு நீரூற்றினேன்வேலை செய்து கொண்டிருக்கும்போது அந்தப் பெண் என்னைத் தேடிக்கொண்டு இங்கு வர வேண்டும் என்கிற குறுகுறுப்பு மனம் முழுக்க நிரம்பி இருந்ததுஆனால் அவள் வரவில்லைசூரியன் மேற்கில் சரிய ஆரம்பித்ததும் வேலையை அவசரமாக நிறுத்திவிட்டு வந்தேன்அந்தப் பெண்அமர்ந்திருந்த இடம் காலியாக இருந்ததுபோய்விட்டிருக்கிறாள்

எனக்குள் ஏதோ ஒன்று உடைந்து பொங்கிப் பொங்கிவந்ததுமெல்ல நடந்து அவள் அமர்ந்திருந்த இடத்திற்குப் போனேன்அந்தக் கல் இருக்கை மெளனமாகக் கிடந்ததுபெருமூச்செழ அதனிடம் கிசுகிசுப்பாகச்  சொன்னேன்

நட்சத்திரங்களைப் பிரசவிக்கும் விருட்சம் எங்கிருக்கிறது என்பது எனக்கும் தெரியும் கண்ணேஆனால் திரும்பும் வழிதான் தெரியாது



(முற்றும்)

 

Featured Post

test

 test