இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷால் ஈர்க்கப்பட்டு கம்யூன் உள்ளே வந்தவர். Swami Prem Niren என்கிற சந்நியாசப் பெயரால் அறியப்பட்டவர். ரஜனீஷின் எல்லா வித சட்ட சிக்கல்களையும் இவரே எதிர் கொண்டார்.
Charlotte விமான நிலையத்தில் கைதான ரஜனீஷ் மூன்று சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டார். அவரைப் பதினைந்து நாட்கள் அலைக்கழித்தும் அரசு எதிர்பார்த்த குற்றம் எதுவும் கிடைக்கவில்லை. பிலிப்பின் திறமையான முயற்சியால் குடியேற்ற மோசடி என்கிற வகையில் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
பிலிப்பின் ஒட்டு மொத்த பேச்சிலும் அவருக்கு ரஜனீஷ் மீதிருந்த அன்பும் பக்தியும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்தத் தொடரின் இன்னொரு பிரமாதமான அம்சம் இதன் எடிட்டிங். ஆறு பகுதியிலேயும் பிலிப்பின் பேச்சு இடம்பெற்றிருக்கும். ரஜனீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாட்களை நினைவு கூரும்போது பிலிப் நிலை குலைகிறார். பகவான் எவ்வளவு அற்புதமான மனிதர்! எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.
ரஜனீஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோற்றத்தைப் பார்த்து தான் அடைந்த துயரத்தைப் பகிரும்போது பிலிப் முழுமையாய் உடைகிறார். ரஜனீஷின் மிகப் பெரிய பலம் பிலிப் போன்ற லட்சக்கணக்கான மனிதர்கள் அவர் மீது கொண்டிருக்கும் அன்புதான். வெறும் குரு- சீடன் என்பதையும் தாண்டிய பிணைப்பு இது.
பிம்ப உருவாக்கம் மீது நம்பிக்கையற்றவன் என்ற போதிலும் ஓஷோ என்றதுமே உருவாகும் வாஞ்சையை என்னாலுமே தவிர்க்க முடிவதில்லை. நான் அனைவரிடமும் சொல்வதுதான். ஓஷோ மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மனிதர். இதில் நானும் அடக்கம்தான்.
0
கம்யூனிலிருந்து வெளியேறிய ஷீலா குழுவினர் ஜெர்மனியில் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பிக்கின்றனர். ஜெர்மனில் வெளியாகும் பரபரப்புப் பத்திரிக்கையான ஸ்டெர்ன் ஷீலாவின் கதையை பிரசுரிக்க விரும்புகிறது. எப்போதுமே செய்திகளில் அடிபட விரும்பும், லைம்லைட்டில் இருக்க விரும்பும் ஷீலா இதற்குச் சம்மதிக்கிறார். அவரின் நிர்வாணப் புகைப்படத்தோடு முழுக் கதையும் வெளியாகிறது. இதைக் குறித்துச் சொல்லும்போது நாங்கள் வாழ எங்களுக்குப் பணம் தேவையாக இருந்தது. ஆகவே இதற்கு சம்மதித்தேன் என்கிறார் ஷீலா.
FBI ரஜனீஷைக் கைது செய்யும் அதே நேரம் ஷீலாவும் கைது செய்யப்பட்டு அமரிக்காவிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப் படுகிறார். குற்றங்களாக - ரகசிய ஒலிப்பதிவு, கொலை முயற்சி மற்றும் குடியேற்ற விசா மோசடி போன்றவை நிரூபிக்கப்படுகின்றன. ஷீலாவிற்கு இருபது வருட ஆயுள் தண்டனை கிடைக்கிறது. ஆனால் நன்னடத்தை காரணமாக இரண்டரை வருடத்தில் வெளியே வருகிறார். தற்போது சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் ஷீலா முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.
0
இந்தத் தொடரின் போதாமை குறித்தும் சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. எனக்குமே ஹாசியாவின் தரப்பு இல்லாதது பெரும் உறுத்தலாக இருந்தது. ஹாசியா தற்போது இல்லையென்பதால் அது இயலவில்லை ஆனால் அவரின் கணவரும் ஓஷோவின் தனிப்பட்ட மருத்துவருமான ஜார்ஜின் நேர்காணலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறவில்லை. ஷீலா மிகத் தவறாக ரஜனீஷைப் பொதுவெளியில் கட்டமைத்தார் என்பதுதான் இவர்களின் ஆணித்தரமான தரப்பு. ஏன் ஒவ்வொரு ஓஷோ நம்பிக்கையாளரின் தரப்பும் இதுதான். இந்த ஆவணப்படம் பார்க்கும் வரை நானுமே கூட அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன். இந்த நம்பிக்கையை Wild Wild Country அசைத்துப் பார்த்திருக்கிறது.
பிலிப் என்கிற Swami Prem Niren இன் இணையதளத்தில் ரஜனீஷ் மருத்துவரின் நேர்காணல் கிடைக்கிறது. அவர்களின் தரப்பை - ஆவணப்படம் சொல்லாததை - அறிய இங்கே செல்லுங்கள்
http://sannyasnews.org/now/archives/7751