Tuesday, January 3, 2023

King Pele : அஞ்சலிசனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் விளையாடிய ஆட்டங்களைப் பார்த்ததில்லை எனச் சொன்னேன். அப்போதுதான் அகில், பெலே வின் ஆவணப்படம் ஒன்று நெட்ஃபிலிக்ஸில் இருப்பதாகச் சொன்னான். உடனே பார்க்க ஆரம்பித்தோம். முதல் அரை மணி நேரம் ஊன்றிப் பார்த்தவர்கள் மெல்ல நழுவிப் போனார்கள். நான் முழுமையாகப் பார்த்து முடித்தேன். அவர் உலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்ட அடுத்த நாள் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்ததாலோ என்னவோ நெகிழ்ந்தும் போனேன்.
ஆவணப் படத்தை மிகச் சிரத்தையாக எடுத்திருக்கிறார்கள். கால்பந்துப் போட்டிகளை படத்தோடு இணைத்த விதமும் அபாரமாக இருந்தது. எனக்கு அந்தப் போட்டிகளைக் குறித்து ஒன்றும் தெரியாததால் பார்ப்பதற்கு விறுவிறுப்பாகவும் இருந்தது. அறுபதுகளில் உலகப் புகழை பெலே அடைந்த விதம் ஆச்சரியமானது. இத்தனைக்கும் ப்ரஸீல் என்கிற நாடு உலக வரைபடத்தில் எங்கிருக்கிறதென ஒருவருக்கும் தெரியாது. பெலே ப்ரஸீலை உலகம் அறியச் செய்தார்.
1970 ஆம் வருடம் மூன்றாம் முறையாக உலகக் கோப்பையை வென்ற பிறகு உடை மாற்றும் அறையில் பெலே “I am not Dead “ என மூன்று முறை உரத்துக் கத்தியிருக்கிறார். அவர் அதற்கு முன்பு
விளையாடிய இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களிலும் காயமடைந்து விலக நேரிட்டது. உலகக் கோப்பை நமக்கு ஒத்து வரவில்லை என முடிவு செய்து இனி உலகக் கோப்பையில் விளையாடப் போவதில்லை எனவும் அறிவித்திருக்கிறார். ஆனால் அரசாங்கத்தின் அழுத்தங்களால் வேறு வழியின்றி கலந்து கொண்டார்.
அந்த முறை எல்லாமும் சரியாக அமைந்து வெற்றிக் கோப்பையையும் முத்தமிட்ட பிறகு இப்படிக் கத்தியிருக்கிறார்.
அப்போது உடனிருந்த சக விளையாட்டு வீரர் கிட்டத்தட்ட ஐம்பத்தி இரண்டு ஆண்டுகள் கழிந்தும் அந்தத் தருணத்தை நினைத்தால் உடல் சிலிர்க்கிறதென படத்தில் சொல்கிறார்.
“வெற்றிகள் பரிசளிப்பது கோப்பையை மட்டுமில்லை, மாபெரும் விடுவிப்பை, அதையே நான் அதிகம் விரும்புகிறேன்”. என்பதுதான் பெலே வின் கூற்று. பதினேழு வயதில் ப்ரஸீலுக்காக ஆடத் துவங்கி முப்பது வயதில் முதல் தர ஆட்டங்களிலிருந்து விலகிவிடும் பெலே வை கால்பந்தின் பிதாமகன் என ரசிகர்களும் விமர்சகர்களும் கொண்டாடுகின்றனர். அறுபதுகளில் உலகமே பெலே வின் மீது பைத்தியமாக இருந்தது. அதே சமயம் அரசியல் காரணங்களுக்காக பெலேவை விமர்சிப்பவர்களும் உண்டு.
ப்ரஸீல் சர்வாதிகாரத்தால் துன்பப்பட்டபோது அரசாங்கத்திற்கு எதிராக பெலே எதையும் சொல்லவில்லை. அன்று அவர் குரல் கொடுத்திருந்தால், நடந்து கொண்டிருந்த அக்கிரமங்களுக்கு எதிராக நின்றிருந்தால், ஒட்டுமொத்த ப்ரஸீலுமே அவர் பின் திரண்டிருக்கும் என ஒரு கால்பந்து ரசிகர் ஆதங்கப்பட்டதையும் இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலாக பெலே எனக்கு கால்பந்து விளையாடுவதைத் தவிர்த்து வேறொன்றும் தெரியாது என்கிறார்.
இன்னும் சிலர் முகம்மது அலியையும் பெலே வையும் ஒப்பிட்டு முகம்மது அலி தன் புகழை எப்படிப் பயன்படுத்தினார் என்பதையும் பதிவு செய்கிறார்கள். ஆனால் முகம்மது அலி வாழ்ந்த சூழலில் பேச்சு சுதந்திரம் இருந்தது. ப்ரஸீலிலோ அதற்கும் கூட வழியில்லை. Medici போன்ற ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியிடம் எதுவும் எடுபட்டிருக்காது. பெலே அரசியலில் நுழையாமலிருந்ததே நல்லது எனவும் ஒரு தரப்பு பதில் கூறுகிறது.
கிங் பெலேவுக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது அவருக்குத் தெரிந்ததெல்லாம் மைதானமும், பந்தை இலக்குக்கு விரட்டுவதும்தான். தன் வாழ்நாளில் அதை மட்டுமே செய்தார். ப்ரஸீல் மட்டுமல்ல உலகமே அவரை கிங் பெலே எனக் கொண்டாடுகிறது. அதற்கு அவர் முழுத் தகுதியானவர். ‘கிங்’ கிற்கு மனமார்ந்த அஞ்சலி.

மகாத்மா காந்தியின் ஐந்து விநாடிகள்
மகாத்மா காந்தியின் ஐந்து விநாடிகள் எனும் சிறிய நூலை வாசித்தேன். காந்தியின் கடைசி இரண்டு நிமிடங்களைப் பற்றிய ஒரு புனைவு (இரண்டரை விநாடி ஒரு நிமிடம்). வால்டெர் ஏரிஷ் ஷேபர் எனும் ஜெர்மன் எழுத்தாளரால் 1949 இல் ரேடியோ நாடகமாக எழுதப்பட்டது. தமிழில் ஜி.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கிறார். நான் வாசித்த பிரதியில் ந.முத்துசாமியின் முன்னுரையும் இருந்தது. நெஞ்சைத் துளைக்கும் தோட்டா எனும் தலைப்பில் எழுதியிருந்தார். இந்த நாடகத்தை தமிழில் ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறை குழுவினர் நாடகமாக அரங்கேற்றியிருக்கிறார்கள். அந்த அனுபவத்தையும் முன்னுரையில் பகிர்ந்திருந்தார்.
குரல்கள் மட்டும் பேசிக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்ட ரேடியோ நாடகம் இது. காந்தியின் உடலைத் துளைத்த தோட்டா ஒரு குரலாகவும், பூமியும், காற்றும், நதியும் மற்ற குரல்களாகவும் வெளிப்படுகின்றன. காந்தியை நித்தியத்திற்கு அழைத்துச் செல்லும் காந்தியின் சாயல் கொண்ட குரலும் உண்டு. அதற்கும் காந்திக்குமான உரையாடல்கள் மிகுந்த உணர்ச்சிகரமாக எழுதப்பட்டுள்ளன. வாசிக்க வாசிக்க மனம் ததும்புகிறது. அந்தக் குரல், தோட்டா துளைத்த காந்தியின் உயிரை பேரொளிக்கு அழைத்துச் செல்கிறது. அது அழைத்துச் செல்லுமிடம் சொர்க்கம்.
காந்தியை விட சிறந்த தூதுவன் இக்காலத்தில் இல்லை என்பதால் அது அவரை அங்கே அழைத்துச் செல்வதாகச் சொல்கிறது. முதலில் அந்த இடத்தை காந்தி மறுக்கிறார். தான் அங்கு செல்ல தகுதியானவன் இல்லை என குரலிடம் மன்றாடுகிறார். ஆனால் அது சாத்தியமில்லை எனத் தெரிந்த பிறகு அதனிடம் பிரார்த்தனை வடிவில் ஒன்றைக் கோருகிறார். துன்பங்களில் உழலும் எண்ணற்ற மனிதர்களின் ஆன்மா, பிரச்சினைகளில் சிக்குண்டு தவிக்கும் இந்தியாவின் ஆன்மா மற்றும் தன்னைக் கொன்ற கொலையாளியின் ஆன்மா உட்பட சகலத்தையும் ஆசிர்வதித்து தடை ஏதும் சொல்லாமல் ஏற்றுக்கொள் என வேண்டுவதோடு நாடகம் முடிகிறது.
மிக ஆழமான கேள்விகளை நமக்குள் எழுப்பும் நூல் இது.

Featured Post

test

 test