ஷீலா நான்கு கிடாக்களுடன் வசிக்க நேரிடும் வீட்டை விட்டுப் போய்விடுவதாக சொல்லும் காட்சி இது.
தன் காதலனுடன் ஓடி வந்தபோது அழிந்து மண்ணாகப் போய்விடுவாய் என்கிற அம்மாவின் சாபத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பதால், தான் எங்கு சென்றாலும் அந்த இடம் விளங்காமல் போய்விடும். எனவே இங்கிருந்து போய்விடுவதாய் சொல்கிறார். வாயில் கதவில்லாத அந்த வீட்டின் முன்திட்டில் அமர்ந்திருக்கும் பாபி, பின்னால் நின்று இதைச் சொன்ன ஷீலாவின் பக்கமாய் திரும்பிச் சொல்வான். அப்படியானால் நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்கள். இனி அழிந்து மண்ணாகப் போக இந்த வீட்டில் ஒன்றுமில்லை.
தியேட்டரில் சிரிப்பு அள்ளுகிறது.
அவ்வளவு பெரிய துக்கத்தை, இழப்பை, வெறுமையை இந்தக் கதாபாத்திரங்கள் இப்படித்தான் கேலியாகக் கடந்து போகிறார்கள்.
'கும்ப்ளாங்கி நைட்ஸ்' திரைப்படம் கேரளத்தின் நிலத்திலிருந்து ஆழமாய் வேர்கொண்டு மலர்ந்திருக்கிறது. இதை வேறெந்த மொழிக்கும் சூழலுக்கும் கொண்டு போக முடியாது. திருட்டுப் பயம் தேவைப்படாத அசலான திரைப்படம்.
சமகாலக் கவிதை, சமகால எழுத்து,மற்றும் சமகாலத் திரைப்படம் என சிலவற்றை என்னால் அடையாளம் காட்ட முடியும். சிக்கல் என்னவென்றால் தமிழிலக்கியச் சூழலில் இதுகாரும் தரப்பட்ட 'லிஸ்ட்' கள் தந்த அவநம்பிக்கை இதைச் செய்ய தடையாக இருக்கிறது. மேலும் இதுதான் சமகாலக் கவிதை, எழுத்து என எழுதிவிட்டு அதற்குப் பிறகு ஏற்படும் கலகத்தை எதிர்கொள்ளவும் நான் தயாரில்லை. ஆனால் திரைப்படங்களை அடையாளம் காட்ட முடியும்.
ராஜீவ் ரவி, ஷ்யாம் புஷ்கரன், ஷெளபின், பகத் ஃபாசில், ஆஷிக் அபு, சனல் குமார், திலீஷ் போத்தன் போன்ற மலையாள முகங்கள்தாம் சமகால திரைப்படத்தின் முகவரிகள். தமிழில் இப்படிச் சொல்ல சில ஆட்கள் இருக்கிறார்கள்தாம். எழுத நினைக்கும்போதே அவர்கள் அடுத்த படத்தில் தங்களின் இன்னொரு முகத்தைக் காட்டி நம்மை விரட்டிவிடுகிறார்கள்.
கும்ப்ளாங்கி நைட்ஸ் ன் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரைக்குமாய் நம் முகத்தில் அப்படி ஒரு புன்னகை வந்து அமர்ந்து கொள்கிறது. இடைவேளைக்கு முன்பு ஒரு பதற்றம். இறுதிக்கு முன்பு இன்னொன்று. அதுவும் பெரும் புன்னகையாக முடிகிறது. காரணம் பகத் ஃபாசில் என்றொரு முழுமையான நடிகன்.
சஜி யாக வாழ்ந்திருக்கும் ஷெளபின் மனதை அள்ளுகிறார். கேரளத்தின் இந்த வருட சிறந்த நடிகர் விருதிற்கும் தகுதியானவர். மேல் சட்டை இல்லாமல் சாரத்தை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு அவர் வரும் காட்சிகள் எல்லாமும் அவ்வளவு புதிதாய் இருக்கிறது. தேங்காயைய் பற்களால் சுரண்டி தின்றபடி அதனுடன் வெல்லத்தையும் ஒரு கடி கடித்துக் கொண்டு படுத்திருக்கும் காட்சிக்கு தியேட்டரில் பலத்த சிரிப்பலை எழுகிறது. போனியிடம் அடி வாங்கிய இரவில் ரமேஷூடன் குடிக்கும் காட்சியும், ரமேஷும் சஜியை ஓசி தான் என்க, ஓடிப்போய் தன்னை மாய்த்துக் கொள்ள முனையும் காட்சியும் இன்னும் மனதிலேயே நிற்கிறது.
படத்தின் கவித்துவ தருணங்களை மெருகூட்டுவது பேபி மோல் ஆக நடித்திருக்கும் அன்னா பென். குட்டையான சுருண்ட முடி கொண்ட இந்தப் பெண் அவ்வளவு அழகு. காயல் பின்னணியில் வெயிலும், இளமை மின்னும் பாபியும் பேபியும் படத்தின் கனவுத் தன்மைக்குப் பாலமாக இருக்கிறார்கள்.
மகேஷிண்ட ப்ரதிகாரம், தொண்டிமுதலும் திருக்சாக்ஷியும் படங்களை கும்ப்ளாங்கி நைட்ஸ் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. இனி இந்தக் குழாம் எடுக்கப் போகும் படங்கள் கும்ப்ளாங்கியை பின்னுக்குத் தள்ள வாழ்த்துகள்.