Tuesday, July 29, 2008

உள்ளேயிருந்து சில குரல்கள் - 1யார் பிரகாரம் ஒருத்தன் மன நோயாளிங்கிறது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைதானே.யார் சரி யார் தப்புங்குறது எப்பவுமே ஒரு பிரச்சினதான்

சிலவருடங்களுக்கு முன்பு என் நண்பணின் சகோதரரைப் பார்க்க அரசு மன நல மருத்துவமனை - பாகாயத்திற்கு சென்றிருந்தேன்.எலெக்ட்ரிகல் டிப்ளமா முடித்து ஒரு நல்ல பணியிலிருந்த நண்பரின் சகோதரர், ஏதோ ஒரு நாளில் எதையோ கண்டு பயந்ததாயும், அதற்குப் பின்னர் அவர் தன் வசம்மீறி தன்னெதிரில் இருப்பவர்களைப் பார்த்து சத்தம் போடுவதாகவும்,கோபம் மிகுந்த சமயங்களில் வன்முறையில் இறங்குவதாகவும், நண்பண் சொன்னான்.தொடர்ச்சியாய் சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் இப்போது எப்போதாவதுதான் இப்படி நேர்கிறதெனவும் சொன்னான்.அந்த வினோதமான சூழல் என்னை ஏற்கனவே பயந்த,நெகிழ்ந்த ஒரு மனநிலைக்குத் தள்ளியிருந்தது.குழந்தைகள் சிகிச்சைப் பிரிவைக் கடந்தபோது எதுவோ அடைத்தது.ஆனாலும் வலிந்த இயல்புடன் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.மறந்தும் அவரிடம் எதையும் நோண்டவில்லை.பேசிமுடித்து வெளியில் வந்தவுடன் அவரைவிட பல விதயங்களில் நான் பின்தங்கி இருப்பதாய் உணர்ந்தேன்.மிகத் தெளிவான ஒரு நபர் அவர்.எந்த ஒரு நொடியில் சகலமும் காணாமல் போகிறது. எந்த நிமிடத்தின் துவக்கத்திலிருந்து மனதின் வினோதங்கள் நம்மை முழுதாய் ஆக்ரமிக்கின்றன என்பது புரியாத ஒரு புதிராகத்தான் இருக்கிறது.

கோபிகிருஷ்ணனின் இந்தப் புத்தகம் மிகப்புதியமுறையில் எழுதப்பட்ட ஒரு நாவல்.வெறும் தகவல்களாய் சொல்லப்பட்டிருக்கும் மனதின் பல்வேறு நிலைகள்.முதுநிலை உளவியல் படித்த ரவீந்திரனும் ஸ்டெல்லாவும் மனநோயாளிகளைப் பற்றின சமூகத்தின் தவறான புரிதலினை களையும் பொருட்டு ஒரு மனநல காப்பகத்தில் சந்தித்த மனநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்வதுதான் இந்நாவல்.அய்ம்பத்தி ஒன்பது மன நிலைகள் தனித்தனியாய் சொல்லப்பட்டிருக்கின்றன.அதனோடு பார்க்கும் காட்சிகளையும் பதிவு செய்திருக்கிறார்.19 காட்சிகளையும் 59 நிலைகளையும் இன்றும் தொடரும் பழமையெனும் தலைப்பில் ஆறு தனித்தனி குறிப்புகளும் சில செய்திகள் சிந்தனைகள் எனும் தலைப்பில் எட்டு குறிப்புகளும் உள்ளன.வெளியீட்டாளர்கள் (வம்சி புக்ஸ்)சிறுகதைகள் என வகைப்படுத்தியுள்ளனர்.கோபி இதனை படைப்பு என்பதோடு நிறுத்திக்கொள்கிறார். சிறுகதையா? நாவலா? என பதிப்பகத்தார் குழம்பியிருக்கக்கூடும்.ஒரு ஆராய்ச்சி நூலின் வடிவத்திலும், பல சிறுகதைகளின் வடிவத்திலும், மொத்தமாய் பார்த்தால் நாவலின் வடிவத்திலுமாய் இப்படைப்பை பல விதங்களில் பொருத்திக்கொள்ளலாம்.என்னைக்கேட்டால் கோபியின் ஒட்டு மொத்த படைப்புகளும் ஒரே நாவலின் வெவ்வேறு பக்கங்கள் என்பேன்.

ஏன் மன வினோதங்களையும் இயல்பாய் அங்கீகரிக்கக்கூடாது? எனக்கேட்கும் கோபி சுவாதீனம்,சுவாதீனமின்மை என்கிற பாகுபாடுகள் அற்ற சமூகத்தை உண்டாக்க உதவுவது தனது இலட்சிய கனவு என்கிறார்.மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை.மேலும் அவ்வாறழைக்க யாருக்கும் உரிமையும் இல்லை எனும் கோபி இப்படைப்பில் அவ்வார்த்தைகள் புரிதல் நிமித்தமாக கையாண்டதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறார்.

இந்தப் புத்தகத்தை படித்த முடித்தவுடன் இதில் சொல்லப்பட்டிருக்கும் பல நிலைகளில் நான் இருப்பதாக உணர்ந்தேன்.என் குணாதிசயங்களை ஒத்த பல நண்பர்கள் இப்புத்தகத்தில் காணக் கிடைத்தார்கள்.என்னுடைய அபார போலித்தனத்தின் காரணங்களோ என்னமோ நான் சமதளத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் அல்லது அது போன்ற ஒரு பிம்பத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.இந்த 59 நிலைகளில் உலவும் மனிதர்களின் அடிப்படைப் பிரச்சினை பயம்தான்.பயம்.. பயம்.. பயம்.. வாழ்வைப் பற்றின பயம்.. சமூகத்தினை பற்றின பயம்.. அடுத்தவர்களின் மதிப்பீடுகள் பற்றிய பயம்.. கட்டமைக்கப்பட்டவைகளின் மீதான பயம்.. புனிதங்களை மீறுவதன் பயம்.. புனிதங்களாய் இல்லாமல் போனதின் பயம்.. ஒருகட்டத்தில் மிகுந்த பயங்கள் தாங்காது, தன்னைக் காத்துக்கொள்ளும்பொருட்டு,வன்முறையாளர்களாக சடுதியில் மாறிப்போகிறார்கள் அல்லது சந்தேகிக்கிறார்கள்.தொடர்ச்சியான சந்தேகித்தல் வினோதமான நடவடிக்கைகளுக்கு அவர்களை உட்படுத்துகிறது.சில சந்தேகங்கள் கொலையிலும் சில சந்தேகங்கள் தற்கொலையிலும் முடிந்துபோகின்றன.

புத்தகத்திலிருந்து.....

நிலை 11

"இங்கெ எவ்வளவு நாளா இருக்கிங்க?"
"பதினஞ்சு நாளு இருக்கும் சார்"
"ஒங்க பேரென்ன?"
"பாளையம் சார்"
"என்ன வேல செய்யுறீங்க?"
"எனக்கு டெய்லர் வேல தெரியும்:எங்க வீட்டுல எல்லாரும் டெய்லருங்க சார்"
"ஏன் இங்க இருக்கீங்க?"
"நான் பீ துன்னுவேன் சார்"
"என்னது?"
"நா பீ துன்னுவேன் சார்"
"ஏன் அந்த மாதிரி?"
"அது கொஞ்சம் டேஸ்டா இனிப்பா இருக்கும் சார்"
"அது ஒங்களுக்கு தப்புன்னு தோணலயா?"
"என்ன தப்பு சார்?"
"ஒண்ணுமில்ல அத ஒங்களால நிறுத்த முடியலயா"
"இல்ல சார் இன்னிக்கு காலெயிலகூட ஒரு தடவ துண்ணேன்.என் கிராமத்தில என் சிநேகிதன் ஒருத்தன கூட எம்மாதிரி இருக்கான்."
"அவரும் இங்க இருக்காரா?"
"தெரியல்ல சார்"
"ஒங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"
"ஆயிரிச்சி.ஒரு பொண்ணு இருக்கா.நா வேணாம்னு சொல்ல சொல்ல என்னெ எங்கப்பா கல்யாணம் பண்ணிவச்சிட்டாரு்"
"ஏன் கல்யாணம்னா ஒங்களுக்குப் பிடிக்காதா?"
"எனக்கு அது தப்புன்னு தோணுது சார்.நான் என் பொண்டாட்டிகிட்ட தப்பா நடந்துகிட்டேன்.அவ பஞ்சு போல இருப்பா.நா தான் அவள கெடுத்துட்டேன்."
...........
"அவங்க ஒங்ககிட்ட நீங்க அந்த மாதிரி நடந்துகிட்டதா சொன்னாங்களா?"
"இல்ல சார் பஞ்சு போல இருக்குற ஒடம்பக் கெடுத்தா அது தப்புதான சார்"
"நீங்க ஒங்க மனைவி கூட எத்தன வருசம் வாழ்ந்திருப்பீங்க?"
"நாப்பது அம்பது வருசம் சார்"
"ஒங்க வயசென்ன?"
"இருபத்தி ஒம்பது இருக்கும் சார்"
"ஒங்க கொழந்த பேர் என்ன?"
"அருண் சார்.ஆனா பொண்ணா மாறி செல்வியாயிடுச்சி.ஆஸ்பத்திரில இருந்தப்ப ஆம்பிளக்கொழந்தையா இருந்திச்சி.வீட்டுல ஒரு வாரமாய் பொண்ணா வளர்த்து செல்வியாக்கிட்டாங்க."
........................
.......................
"ஒங்கள் ஒங்க மனைவி ஏத்துப்பாங்களா?"
"மாட்டா சார் நா தான் அவளக் கெடுத்திட்டன்.அம்மாவக்கூட கெடுத்திட்டேன்."
"அப்படின்னு யார் சொன்னா?"
"தெரியல்ல சார்"
"சரி பாளையம் நீங்க வார்டுக்கு போய் ஓய்வெடுத்துக்குங்க"
"சரி செல்வி சார்"

நிலை - 23.

எந்தலையில மூளையே இல்ல. நரம்புங்க அறுந்திருச்சி. குடல் போட்ற சத்தம் காது வரைக்கும் கேக்குது.சிறுநீரக நரம்புங்க,முதுகு நரம்புங்க அறுந்திருச்சி.கை நரம்புகளும் அறுந்திருச்சி. நரம்புங்களாம் இழுத்திட்டிருக்கு. கண்ணுலேயிருந்தும், காதுலேயிருந்தும், மூக்குலேயிருந்தும், உண்ணிப்பூச்சிங்க விழுந்திட்டு இருக்கு. தலையில இருந்து பேன், பேனா விழுந்திட்டிருக்கு. தலமுடியெல்லாம் நெட்டுக்குத்தலா நிக்குது. எப்பவும் தாகமா இருக்கு. பல்லெல்லாம் ஒண்ணொன்னா கீழ விழுந்துட்டே இருக்கு. ஒடம்பு பூரா வலிக்குது. ஒடம்புல ரத்தமே சுண்டி போச்சி. ரத்தம் சுண்டுற வாசன எனக்கு நல்லாவே கேட்குது. என்கிட்ட வராதீங்க. என் ஒடம்பு, ஒங்க ஒடம்புல இருக்கிற ரத்தத்த உறிஞ்சிரும். எல்லாமே என் ஊர் சனங்க என் மேல ஏவி விட்டிருக்க சாத்தானோட வேல.

காட்சி 11

புறநோயாளிகள் பிரிவு. தங்கள் பெயர் அழைக்கப்படுவதற்காக நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், பெஞ்சுகளில் அமர்ந்து காத்திருந்தனர். ஒரு மூலையில் ஒரு வாலிபன். கைகள் பின்புறம் ஒரு கயிற்றினால் இறுக்கமாக கட்டப்பட்டிருந்தன. கால்களும் அப்படியே. வாலிபன் திமிறிக்கொண்டிருந்தான். இருவர் அவனருகில் இருந்தார்கள். வாலிபன் "ஒலகத்தில இருக்க அத்தென பேரும் தேவடியாபசங்க.. இந்த டாக்டருங்க என் பிரச்சினைக்கு என்ன பெரிசா தீர்வு சொல்லிடப்போறாங்க?" எனக் கத்தினான்.அவனை அழைத்து வந்திருந்த இருவரின் ஒருவன் அவனது தாடையில் ஒரு குத்து விட்டான். வாலிபன் இன்னும் திமிறினான்.மீண்டும் ஒரு குத்து விழுந்தது. "அடிங்கடா டேய்.. கட்டிப்போட்டுதான என்ன அடிக்கமுடியும்" என்று வாலிபன் கத்தினான்.

Sunday, July 27, 2008

இன்னும் சில குப்பைகள்மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல்குட்டியையே
நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லையென..


Laybrinth ஐ போலிருக்கின்றன இத்தெருக்கள்.எத்தனை முறை வந்தாலும் குழம்பிப்போகிறேன்.சொல்லிவைத்தாற்போல ஒவ்வொருமுறையும் வழியைத் தவற விட்டு,சிறிது நேரம் நின்று, சுத்தி, கடுப்பாகி, வியர்த்து வழிந்து, பின்பு முளையின் ஏதோ ஒரு அடுக்கில் படிந்திருக்கும் ஏதோ ஒரு நினைவு தூண்டின பிரகாசத்தில் செல்ல நினைத்த இடத்திற்கு சென்றடைகிறேன்.இதென்ன வீதிகள்!!..இத்தனை குறுகலாய், இடைஞ்சலாய், அங்கங்கே திடீரென வளைந்து, நீண்டு, சிறுத்து, குறுகி பார்க்கவே எரிச்சலாக இருக்கிறது.பிதுங்கி வழியும் கட்டிடங்கள்.இடைவெளிகளே இல்லாத அளவுக்கு மிக இடுக்கமான உயரமான கட்டிடங்கள்.நடந்து செல்கையில் மூச்சு முட்டுகிறது.இங்கு வந்த பின் வானம் என்கிற வஸ்துவே இருக்கிறதா இல்லையா என்பது மறந்து போயிற்று.ஆறு மணிக்கு அடிக்கத் துவங்கும் வெயிலில் வியர்த்து அலுவலக வண்டியைப் பிடித்து வேலைக்குப்போய் நேரத்தைக் கடத்தி மீண்டும் ஆறு மணி வெயிலில் வியர்த்து இந்த பொந்தினை அடைவது மிகச் சலிப்பாய் இருக்கிறது.என்னக் கருமாந்திரன்டா இது ச்சே..

வார இறுதி இரவுகள் தூங்குவதற்கானதில்லை.மாய உலகின் வழிகாட்டிகளை சூழல் மறக்கடிப்பவைகளை அந்த இரவில் துணைக்கழைக்கலாம்.அவர்களின் துணையோடு பழகிய பொந்தில் சஞ்சரிப்பது சற்று ஆசுவாசமானது.விடியற்காலை மூன்று மணியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நடமாட்டங்கள் குறைந்த கருப்பு வெளி.கிடைத்த இடுக்குகளில் துருத்திக்கொண்டிருந்தன சிற்றுந்துகள்.சற்று உயரமான இடத்திலிருந்து பார்த்தால் சிற்றுந்துகளின் மீதுதான் இந்நகரம் எழுப்பப்பட்டிருக்கிறதோ என்கிற பிரம்மைகள் எழுகின்றன.சில கருப்புதேசத்து பெண்கள் மட்டும் சாலையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்தனர்.கும்பலாய் நின்றபடியும், பேசியும், புகைத்தும், நடந்தும், இரவு தீரப்போவதற்கான முனைப்புகளை, தவிப்புகளை வெளித் துப்பிக் கொண்டிருந்தனர்.பதுங்கி பதுங்கி வந்த சில இந்திய ஆண்கள், பைஜாமா அணிந்த பாகிஸ்தானிகள் தேர்வு செய்த பெண்களுடன் கட்டிடங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தனர்.ஒரு பெண் மட்டும் வெகு நேரமாய் நின்றுகொண்டிருந்தள்.ஒருவேளை அவள் வசீகரம் குறைந்தவளாய் இருக்கக்கூடும் அல்லது வந்தவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவளாயுமிருக்கலாம்.வெகுநேரம் காத்திருந்து சலித்த அப்பெண், அந்தப் பின்னிரவு தேவதை தான் புகைத்துக் கொண்டிருந்த சிகெரெட் துண்டினை சுண்டி விட்டெறிந்தாள்.அது கருப்பு நிறச் சாலையில் நெருப்பைத் தெறித்தபடி,செந்நிற அனலைக் கக்கியபடி கடைசி மூச்சை விட்டது.

வெறுப்புகள், வன்மங்கள், துவேஷங்கள், மிகவும் பாதுகாப்பானவை.நட்பு, அன்பு,ஸ்நேகம், சாப்டியா? எப்படியிருக்க? எனவெல்லாம் கேட்க நேரிட்டால் எரிச்சலாக வருகிறது.எல்லாமே தன்முனைப்பு சார்ந்தவைதாம்.எல்லாமும் சுய நலங்களாலானவைதாம். எல்லாமே பயன்படுத்திக்கொள்ளல்தாம்.மேலும் அதில் தவறேதுமில்லை.தன்னை நேசிப்பதில் சுயநலமாய் இருப்பதில் என்ன தவறு?.western philosophy படித்த குரங்கு ஒன்று வெகு நாட்களாக இப்படிச் சொல்லித் திரிகிறது.doing,happening இரண்டிற்குமான வித்தியாசங்களை உன்னால் புரிந்து கொள்ள முடிகிறதா? எனக் கேட்டேன்.குரங்கு சிறிது யோசித்தது.செய்வது நிகழ்வது இரண்டும்தான் சுயநலம் பற்றிய புரிதல்களுக்கான விளக்கமாய் இருக்க முடியும்.நானொரு அப்பட்டமான சுயநலவாதி என்பதை உணர்வது அதே நிலையில் தொடர்ந்து நீடிப்பதற்காக அல்ல.அதிலிருந்து மெதுவாய் வெளிவருவதற்காகவே.Ayn rand கள் அதே நிலையில் நீடித்திருக்கிறார்கள்.தான் தான் என்கிற குப்பைகளை பிறரிடம் சேர்த்த அமெரிக்க மூளைகள் பைத்தியம் பிடித்துதான் செத்தன.வேடிக்கைபார்த்தல்(witnessing) மட்டுமே எல்லாக் குழப்பங்களுக்குமான திறப்பு.

தொடர்ச்சியாய் ஒரே செயல்களை செய்துகொண்டிருப்பது எத்தனை அலுப்பான ஒன்று.இந்த முறையை வேண்டுமானால் கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள்.ஜே கிருஷ்ணமூர்த்தி awareness குறித்தான discourse ஒன்றில் சொல்லியிருப்பார்.ஒரு நாளில் நீங்கள் செய்யும் செயலை அடுத்த நாள் reverse ஆக செய்துபாருங்கள்.உதாரணம் காலை எட்டு மணிக்கு எழுபவராய் இருந்தால் ஐந்து மணிக்கு எழ முயற்சியுங்கள்.நகர அடைசல்களற்ற அமைதியான சாலையில் நடங்கள்.துயிலெழும் பட்சிகள்,மினுங்கிக் கொண்டிருக்கும் வெள்ளி, நீல நிற ஆகாயம், தவழும் மேகங்கள், மெல்லியக் குளிர் எல்லாம் உள்வாங்கியபடி நடந்து விட்டு வரும்போது தினசரி யின் பிடியிலிருந்து கொஞ்சம் உங்களை விடுவித்துக் கொள்ள முடியும் என்பார்.முயற்சித்துப் பாருங்கள்..

அடையாளங்களை அழித்தல் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்(இதை எழுவது எத்தனை அபத்தமானது!)ஏதோ ஒன்று தன்னை மீறி வளர்ந்து நிற்கும்போது அதன் வளர்ச்சி, ஆகிருதி, அல்லது பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட அதன் உருவம் பயம்கொள்ளச் செய்கிறது.தன்னிலிருந்து பெருக்கிக் கொண்டவைதான் இவைகளே தவிர இவற்றுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை.ஏதோவொரு சந்தர்ப்பங்களில் வெளிப்படும் இவை மீதான நம்பகத்தன்மைகள் சிறிது வியப்பை மட்டுமே தருகின்றன.அதே சமயத்தில் அவ்வியப்புகள் எப்படித் தோன்றினவோ அப்படியே காணாமல் போவதும் உருவாக்கிக் கொண்டவற்றின் பிழையா? அல்லது கொண்டவர்களின் பிழையா? என்னுடைய பிழையா? பிழை பிழை பிழை மழை மழை :))

எல்லாம் தவிர்த்துக், கடந்து, துறந்து, மூச்சடக்கி, காதுபொத்தி, நினைவுதவிர்த்து, உள்ளமிழும்போது உயிர்த்தெழுகிறது நிசப்தம்.

உன் பேச்சுக்கு
பூனைக்குட்டிகளின் முகங்களை
மனதில் தருவிக்கிறேன்
அவை உன் பேச்சின் மீது
இன்னும் வாஞ்சையைத் தூண்டுகின்றன
உன் கோபம்
எரிச்சல்
மகிழ்வு
சிரிப்பு
கிண்டல் அழுகை
என உணர்வுகளுக்கேற்றார்போல்
பூனைக்குட்டிகளின் முகங்கள்
வந்து வந்து போகின்றன
சொல்
நீயொரு பூனைக்குட்டியா?

புகைப்படம்: www.joelane.com/images/trash-use1a.jpg

Friday, July 18, 2008

சில திரைப்படக் கவிதைகள்:அவளைப்பற்றியாதவுமிருக்கலாம்..
மீன்கள் பாதங்களில் துழாவிக் கொண்டிருந்த
மாலையில் (சில்ரன் ஆஃப் ஹெவனின் கடைசிக் காட்சியை நினைத்துக்கொள்ளுங்கள்..)
அவளென் முதுகுப்பின்னால் நின்று கொண்டிருந்தாள்.
பாதங்களை விடுவிக்காது தலைதிருப்பிப் பார்த்ததில்
அவளின் மிகப்பெரிய கண்கள் இன்னும் வீங்கிப் பெருத்திருந்தன.
தன் வாழ்வின் மிக முக்கியமான தீர்மானங்களை
எடுக்கும் தருணம் வந்துவிட்டதென்றும்
தனியாய் பேச வேண்டியுமாய் விழைந்தாள்.
நான் தலையை திருப்பிக்கொண்டு
மீண்டும் மீன்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.
சற்று நேரம் கழித்து
எதுவும் பேசாமல் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.
என்னைத் துழாவிக் கொண்டிருந்த மீன்கள்
அவளின் பக்கமாய் போகவாரம்பித்தன...

******************************************

அருவியில் குதித்து செத்துப்போவதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.
பென்கிங்ஸ்லியைப்போல் மூச்சடைத்து இறப்பதையே அவள் விரும்பினாள்.
உயரத்திற்கும் தரைக்குமான இடைவெளியில்
சகலத்தையும் சில்லிடவைக்கும்
அபூர்வ நொடியினை உணர்ந்த பின்,
செத்துப்போவதின் அபரிதத்தை வலியுறுத்தியபடி இருந்தேன்.
அவள் உடல் சிதறுவதின் பயங்கரத்தை நினைத்து முகம் சுழித்தாள்.
"இறப்பு கோரமாய் இருக்கக்கூடாது"
(அவளெப்போதும் இப்படித்தான் குரூரங்களை விரும்புவதில்லை பர்ஃபியூம் பரிந்துரைத்ததினுக்காய் மூன்று நாட்கள் பேசாமலிருந்தாள்)
குரூரங்களை அழகியலாக்குவதும்
அழகியலை குரூரங்களாக்குவதும்
சூழலின் தேவை என்றேன்.
எனக்கவசியமில்லை என பதில் வந்தது,
மேலும் அழகு அழகில்லை எனவும்
குரூரம் குரூரம் இல்லை எனவும்
பிரசங்கிக்கத் தொடங்கினேன்.
அவள் தன் செருப்புகளை பொருத்திக்கொண்டாள்
விடைபெறும் நொடிக்கு முன்
மாலைத் தேநீருக்கு வரவேண்டாமென
சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

******************************************

வெப்பம் மிகுந்த இரவுகளில் நடைக்குப் போவதில்லை
இரவில் வியர்த்து வழிவது எனக்குப் பிடிக்காது.
இருப்பினும் கார்னீஷ் ஓரமாய் சந்திப்பதெனச் சொல்லியிருந்தேன்.
ஜெயமோகன்களைப் படிக்காதேவெனத் திட்டி
கோபியைக் கொடுத்திருந்தேன்.
வந்தவுடன் பிடிக்கவில்லையெனத் திருப்பிக்கொடுத்தாள்
ஏன் என்றதற்கு முனகலாய் பதில் வந்தது
"அசிங்கமா இருக்கு"
எது அசிங்கமென்றதெற்கு பதில் எதுவும் சொல்லாமல் போய்விட்டாள்.
நான் பாலகுமாரனை கொடுத்திருந்தால்
இன்றிவளை முத்தமிட்டிருக்கலாமென
நினைத்துக்கொண்டேன்.

image:http://alethakuschan.blogspot.com/2007_03_01_archive.html&h=354&w=400&sz=40&hl=en&start=29&tbnid=bQe_g4oGLNp1WM:&tbnh=110&tbnw=124&prev=/images%3Fq%3Dfishes%2Bin%2Bpond%26start%3D18%26gbv%3D2%26ndsp%3D18%26hl%3Den%26sa%3DN

Wednesday, July 16, 2008

தமிழ்மணம் - சுந்தர் - என்னோட ரெண்டணா

சுந்தரின் காமக்கதைகள் இடுகை 'மாற்றம்'(இந்த மாற்றம் என்பதை நான் ஆரம்பத்திலிருந்து மிகச் சரியாகத்தான் புரிந்துகொண்டேன் என்பதை என் நண்பர் அறிவார்)எனக்கு வருத்ததை தந்தது.இடுகை மாற்றத்துக்கான விளக்கம் தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகளெனத் தாமதமாக தரப்பட்டது இன்னும் வருத்தத்தையளித்தது அதனால் என்னுடைய கருத்துக்களாக அதே பதிவில் இவ்வாறு பின்னூட்டமிட்டிருந்தேன்.

/பல்வேறு மக்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளியிடும் தளமாக/

இந்த வரிகளை படிக்கும்போது என் சிரிப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை ..மன்னிக்க…சுந்தரின் இடுகைகளை மாற்றம் செய்வது குறித்து அவருக்கு எந்த வித தகவலையும் நிர்வாகம் தந்திருக்கவில்லை அதனோடு இப்படியானதொரு புதிய விதிகளையும் முன்னரே தமிழ்மணம் தந்திருக்கவில்லை.ஒரு செயலை செய்துவிட்டு பின்னர் அதற்கான காரணங்களை சொல்வது சப்பை கட்டாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது…

ஒரு படைப்பாளியின் அனுமதியில்லாது அவரின் படைப்புகளை உங்களின் வசதி/நியதி களுக்கேற்றார்போல மாற்றங்களை செய்துகொள்ளும் செயலை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்..

உங்களின் நியதி / வசதிகளை முன்னரே தெரிவித்திருந்தால் அதற்குள இயங்கும் படைப்போ படைப்பாளியோ தனக்கான உண்மத்தத்துடன் இயங்கலாம்..இயங்கியிருக்கலாம் இப்படி தடாலென நீங்கள் ஒரு விதியை புகுத்துவது மாற்று எழுத்துக்களுக்கு எதிரானது..

சினிமா கிசுகிசுக்களோ அரைகுரை நிர்வாணபுகைப்படங்களோ புனித வார்த்தைகளுடன் வெளியிடப்படுமானால் அதை நிர்வாகம் கொண்டாடுமா?சூடான இடுகை என்பது தமிழ் மனங்களின் சிதைந்தவடிவத்தினுக்கான ஏற்ற இடம் அவ்விடத்தையே நீக்குவது இதுபோன்ற சிக்கலை தீர்க்கலாம்…

By அய்யனார் on Jul 10, 2008

அடுத்ததாக voice on wings பதிவில் சில பகிர்வுகளை இவ்வாறு வைத்திருந்தேன்
காமம் குறித்தான உரையாடல்களை வெகுசனம் எப்போதுமே ஏற்கப்போவதில்லை..சூழல்,முதிர்ச்சி என்பதெல்லாம் வானத்தில் இருந்து குதித்து வராது.சில பழிகளுடன் அதற்கான சாத்தியங்களை நிறுவுவதுதான் நம் எழுத்துக்கான குறைந்த பட்ச நேர்மையாய் இருக்க முடியும்..
நடுத்தர வர்க்கத்து பெண் அனானிக்கு,
காமக்கதைகள் பெண்களை பீதியடைச் செய்கிறது..தளத்திலிருந்து வெளியேற்றுகிறது..என்பதெல்லாம் உங்களுக்கான கற்பனை அல்லது உங்களின் நம்பிக்கைகள்..சுந்தரின் பதிவுகளில் கிருத்திகா, பெருந்தேவி போன்றோரின் பின்னூட்டங்களை பார்க்கலாம்.வலைப்பதிவர் சந்திப்பில் பெண்கள் கலந்துகொள்ளாததாலேயே அவர்கள் பயந்து போய் ஒளிந்துகொள்கிறார்கள் என்பது அபத்தமாய் இருக்கிறது..பொன்ஸ்,லக்ஷ்மி என சில விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.மேலும் வலைப்பதிவர் சந்திப்பென்பது நட்பு ரீதியிலான ஒரு நிகழ்வே தவிர பெண்களுக்கான உரிமைகளை நிறுவும் இடம் அல்ல...

சமகால பெண்கள் உடல்மொழியை மிகத் தேர்ச்சியாகவே பேசுகிறார்கள்..கூச்சம் நாச்சம் என்பதெல்லாம் மரபின் வழி வந்த இயலாமைகள்தானே தவிர ஒட்டுமொத்த மதிப்பீடுகள் அல்ல...

மேலும்,காமத்தை தடை செய்தது மட்டுமே பிரச்சினையில்லை.இந்த விதயத்தை தமிழ்மணம் எதிர்கொண்ட அணுகுமுறையே ஒப்பாரிக்கான பின்புலமாகவும் இருக்கிறது...

July 12, 2008 10:58 PM

என்னுடைய பதிவில் என் எதிர்ப்பை சுட்டும் பொருட்டாக Warning : Adult content என்கிற பிறசேர்க்கையை வலுக்கட்டாயமாக திணித்திருந்தேன்.பின்பு செல்வராஜின் விளக்கப் பதிவின் பின்னூட்டத்திலும் என் நிலைப்பாட்டை இப்படி சொல்லியிருந்தேன்.

/இந்த விளக்கத்தை சற்று முன்னமே தந்திருந்தால்/
இதுதான் என்னுடைய ஆதங்கமாகவும் இருந்தது..வேலைப் பளு நேரமின்மை என்பவைகளை புரிந்து கொள்ள முடிந்தாலும்.அந்தந்த நிமிடத்தின் உணர்வுகள் அந்தந்த நிமிடத்திற்கானவை..உங்கள் விளக்கங்களுக்கு நன்றி..


இவ்விதமான எதிர் கருத்து பரிமாற்றங்களில் நான் எங்கேயும் என் கலக அடையாளத்தையோ,புரட்சிக்காரன் அடையாளத்தையோ காண்பித்திருக்கவில்லை.சொல்லப்போனால் அப்படியெதுவும் எனக்கில்லை.எனக்கான கருத்துக்களை நான் முன் வைக்கிறேன் அவ்வளவுதான்.போலி, புரட்சி, கலகம்,பினாவானா என்பதெல்லாம் அவரவர் சூட்டிக்கொள்ளும் பொதுப்புத்தி சார்ந்தவையே.தமிழ்மணத்தை நொண்டிக்கழுதை அதிகார பீடமாக நான் எப்போதும் கருதியதில்லை.எனக்கான நம்பிக்கைகள் பொய்க்கும் புள்ளிகளில் நான் என் நம்பகத்தன்மையை தக்கவைத்து் / மாற்றிக் கொள்ளும்பொருட்டு கேள்விகள் எழுப்புகிறேன் என்பதைத் தவிர்த்து வேறெந்த அடையாளமும் எனக்கில்லை.பிற அடையாளங்களுக்கான அவசியமோ தேவையோ எனக்கில்லை என்பதையும் என்னுடைய என் சார்ந்த நம்பிக்கைகளாக இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

அதிகாரக் கருமங்கள் பற்றிய புரிதல்களை நான் என்னளவிலிருந்தே தொடங்க விரும்புகிறேன்.அடுத்தவனை சுட்டிக்காட்டும் முன்பு என் ஓட்டைகள் எவை எவை என்பதை தெரிந்துகொள்ளவே நான் மிகவும் விரும்புகிறேன்.மேலும் இங்கே பினாவானா புரட்சிசெய்து கிழித்து நான் பெற்றுக்கொண்டதெல்லாம் என் நெருங்கிய நண்பர்களின் மூத்திரங்களை மட்டுமே என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.என்னுடைய இக்கருத்து கந்தசாமி போர்வை என் மீதான பிம்பங்களுடைய காரணங்களாக இருக்குமெனில் இந்நிகழ்வுகளுக்கு நான் நன்றி செலுத்தவே விரும்புகிறேன்.இறந்துவிட்ட ஒன்றின் பிம்பங்கள் உயிருள்ளதைக்காட்டிலும் பூதாகரமாய் வளர்ந்து நிற்பது இது போன்ற நிகழ்வுகளின் மூலம் உடைத்தெறியப்படுமெனின் அவற்றுக்கு நன்றி சொல்வதே நான் நம்பும் ஒன்றின் குறைந்தபட்ச அடியொற்றித்தனத்திற்கு வக்காலத்தாக அமைய முடியும்.

பெயரிலியின் முடிவினுக்கான குற்ற உணர்வுகளின் நீட்சியே இதை எழுதத் தூண்டியது. மேலும் இது குறித்து உரையாடவும் விருப்பமில்லை என்பதினால் நண்பர்கள் பின்னூட்டங்களைத் தவிர்க்கவும்.

சமையல் குறிப்புகள் : காங்கோ வின் கிழக்கு முனையிலிருந்து ஒரு கடிதம்

சென்ற இடுகைக்கு உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து கடிதங்களாய் வந்து குவிந்தன.வழக்கம்போல் ஏகப்பட்ட திட்டுகளும்,பாராட்டுகளுமாய் நிறைந்திருந்ததில் ஒரு கடிதம் மட்டும் கவனத்தை ஈர்த்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்பும், பண்பும், பாசமும், கொண்ட எழுத்தாளர் அய்யனார் அவர்களுக்கு, உங்கள் அன்பை என்றும் மறவாத கோவிந்தசாமி மற்றும் திரிபுரசுந்தரி சேர்ந்து எழுதிக்கொள்ளும் மடல்.உங்கள் சமையல் குறிப்புகளை படித்ததிலிருந்து எங்களின் நாவில் நீர் சுரந்த வண்ணம் இருக்கிறது.முருங்கை,மாங்காய் சாம்பார் என்பது எத்தனை சுவையானதென்பதை மறந்தே போயிருந்தோம்.உங்களின் பதிவு எங்களின் கிளர்ச்சியைத் தூண்டி விட்டது.ஆப்பிரிக்காவின் வெகு அடங்கிய பிராந்தியமான காங்கோவின் கிழக்கு பகுதியில் நாங்கள் வசித்து வருவதால்,நீங்கள் சொல்லியிருக்கும் சமையல் குறிப்பின்படி எதையும் சமைத்துப் பார்க்க முடியவில்லை.காய்கறிகளை கண்ணில் பார்த்தே பல வருடங்களாகி விட்டன.கம்பு,கேழ்வரகு,கடலைப் பிண்ணாக்கு,எள்ளுப்பிண்ணாக்கு போன்றவைகளே இங்கு பெருமளவு கிடைக்கின்றன.அரிசி அபூர்வமாய் கிடைக்கும்.இறைச்சியே எங்களின் பிரதான உணவாய் இருப்பதால் காய்கறிகளை மறந்தே போயிருந்தோம்.ஆனால் உங்களின் பதிவு எங்களுக்குள் என்னவோ செய்தது.என் மனைவி திரிபுர சுந்தரி நேற்று கனவிலும் முருங்கை மாங்காய் சாம்பார் என புலம்பினாள்.என்னால் அவளின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கு வருந்தினேன்.சரி உங்களுக்கு கடிதம் எழுதினாலாவது மனது ஆறுதல் அடையலாம் என்றே இக்கடிதம் எழுதினோம்..நீங்கள் தொடர்ச்சியாய் இதுபோன்ற பதிவுகளிட்டு இந்த வாழ்வை சிறிது கனவிடை தோய்ங்கள் என அன்போடு வேண்டுகோளிகிறோம்.

இப்படிக்கு
தங்களை என்றும் மறவாத
கோவிந்தசாமி மற்றும் திரிபுர சுந்தரி


இந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும் என் நினைவு பதின்மம் தப்பிப் போனது.என்றுமே தீராத பதின்மத்தின் கவர்ச்சிகளில் மூழ்கிப்போனேன்.ஆறாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்புவரை யாருக்கு கடிதம் எழுதினாலும் அன்பும், பண்பும், பாசமும், கொண்ட என்றுதான் ஆரம்பிப்பேன்.பனிரெண்டாம் வகுப்பில் கவிஞனானதால் ப்ரியமுள்ள என எழுத ஆரம்பித்தேன்.நான் ஒரு எழுத்தாளனாவதற்கு ப்ரியமுள்ள எனத் தொடங்கி எழுதப்பட்ட என் காதல் கடிதங்களே உறுதுணையாய் இருந்திருக்கலாம்.இதுவரை நானூற்றிச் சொச்சக் காதல் கடிதங்களை எழுதியிருக்கிறேன்.அவை பெரும்பாலும் என்னிடமே திரும்பி வந்தன.பெண்கள் இந்த வகையில் பத்திரிக்கை அலுவலகங்களை விட நேர்மையானவர்கள்.ஒரு பெண் மட்டும் என் கடிதம் படித்து,மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு ஏற்கனவே எடை அதிகமான காதல் கடிதத்தில்,ஒரு கல்லையும் சேர்த்துக் கட்டி,நான் அவள் வீட்டுப்பக்கமாய் போகும்போது சன்னலிலிருந்து என் மீது வீசியெறிந்தாள்.எனக்கு சிறிது விழிப்புணர்வு அதிகம் என்பதால் கல்லடியிலிருந்து ஒதுங்கிக் கொண்டேன்.

பதின்ம நதியின் கரைகளில் எத்தனை நேரம் அமர்ந்திருந்தேன் எனத் தெரியவில்லை. ஒரு வழியாய் மீண்டு, கோவிந்தசாமிக்கும் திரிபுரசுந்தரிக்கும் பதில் கடிதம் எழுதினேன் அதுவும் உங்களின் பார்வைக்காக.

அன்புமிக்க நண்பர் கோவிந்தசாமி மற்றும் திரிபுரசுந்தரிக்கு

வணக்கம்.தங்களின் மடல் கிடைக்கப் பெற்றேன்.உங்களுக்கு என் பதிவை படிக்கும் வாய்ப்பு கிட்டியமைக்கு எல்லாம் வல்ல இறையிடம் நன்றி சொல்கிறேன்.உங்கள் பிரதேசத்தில்
காய்கறிகள் கிடைக்காமல் போனதிற்காக வருந்துகிறேன்.இருப்பினும் இறைச்சி அற்புதமானது. இளம் மிருகங்களின் சுவை அபரிதமாய் இருக்கும்.பெரிய தீயில் அவற்றை வாட்டி லேசான கருகலோடு உண்பதை நினைத்தால் வாயில் சுவையூறுகிறது.நீங்கள் காய்கறிகளுக்காக எச்சிலூறுவதும் நாங்கள் இறைச்சிக்காய் எச்சிலூறுவதும் தவிர்க்க இயலாதது.

உங்களிடம் கிடைக்கும் பொருள்களை வைத்து வேறுவித சுவை கொண்ட உணவுகளை எப்படி சமைப்பதென இங்கே பகிர்கிறேன்.கம்பும்,கேழ்வரகும் கிடைக்கும் இடங்களில் தவிடும் கிடைக்கலாம்.கொஞ்சம் முயற்சித்து தவிடையும் வாங்கிவிடுங்கள்.தவிடில் இரண்டு வகை, ஒன்று பச்சரிசி தவிடு, இரண்டு புழுங்கலரிசி தவிடு, எப்படியாவது பச்சரிசி தவிடை தேடிப் பிடிங்கள்..

இப்போது சமையலைத் துவங்கலாம். இந்த உணவை எங்கள் ஊர்பக்கம் எருமாட்டுக் கஞ்சி என அழைப்பர்.இப்போது நாகரீக வடிவங்களுக்கு மெல்ல நாம் மாறிக்கொண்டிருப்பதால் எருமாமிர்தம் எனப் பெயரிட்டு அழைக்கலாம்.

தேவையான பொருட்கள்.

மல்லாட்டைப் பிண்ணாக்கு - 4 அன்னம் (நீங்கள் சொன்ன கடலைப் பிண்ணாக்குதான்)
எள்ளுப் பிண்ணாக்கு - 3 அன்னம்
கம்பு - 2 கப்
கேழ்வரகு - 2 கப்
பச்சரிசி தவிடு - தேவையான அளவு

கம்பு,கேழ்வரகு இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும்.உங்கள் ஊரில் உரல், உலக்கை இவையெல்லாம் கிடைக்குமா எனத் தெரியவில்லை. இரண்டையும் ஒரு பதமான மசிந்த நிலை வரும்வரை உலக்கை கொண்டு மசிக்கவும். மிக்ஸியினால் மசியச் செய்வது அத்தனை ருசியாய் இருக்காது.ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.தண்ணீர் நன்றாக கொதித்த பின் மசிந்த கம்பு + கேழ்வரகை கொட்டவும்.கொதிக்கத் துவங்கியதும் மல்லாட்டைப் பிண்ணாக்கு மற்றும் எள்ளுப் பிண்ணாக்கை போடவும். பிண்ணாக்கும்,கம்பும்,கேழ்வரகும் சேர்ந்து கொதிக்கத் துவங்கும்போது, ஒரு அற்புத மணம் உங்கள் நாசியினை நிறைக்கும்.தன்னிலை மறப்பதற்கு முன்பாக தவிட்டைக் கொட்டிக் கலக்கவும்.அவ்வளவுதான் சுவையான எருமாமிர்தம் தயார்.

இதை சூடாக உண்டால் நாக்கு தட்டிப்போகும்.சிறிது நேரம் ஆரவைத்து குடிப்பது ஆரோக்யமானது..இவ்வுணவை முயற்சித்துப் பார்த்துக் கடிதமெழுதுங்கள்.நான் எதற்கும் ஜெயமோகன்,நாஞ்சில் நாடன் இவர்களை ஆலோசித்து உங்கள் பகுதியில் கிடைப்பதைக் கொண்டு வேறுவகை இலக்கியச் சமையலேதேனும் செய்ய முடியுமாவென விசாரித்து வைக்கிறேன்.

ஆப்பிரிக்க காடுகளுக்கு போவது குறித்த என் ஆசைகள் உங்கள் கடிதத்தைப் பார்த்ததும் மீண்டும் அரும்பியிருக்கின்றன.உங்களின் தொடர்ச்சியான கடிதப் போக்குவரத்தின் மூலமே அரும்பின ஆசைகள் மலர்கின்றனவா எனப்பார்க்க வேண்டும்.எப்போது அவ்வாசைகள் மலர்கின்றனவோ உடனே அங்கு என் மனைவி,குழந்தைகளோடு வருகிறேன்.பிஸினஸ் க்ளாஸ் அவசியமில்லை நான் மிகச் சாதாரணனன்.

மிக்க தோழமையுடன்,
முன்/பின்/நடு/எதிர்/நவீன எழுத்தாளன்

அய்யனார்


***சமகால இலக்கியத்தை வேறொரு நிலைக்கு தனியாய் தள்ளிக்கொண்டு போகும் பிரியமுள்ள ஆசான் ஜெயமோகனுக்கு.

Tuesday, July 15, 2008

சமையல் குறிப்புகள்


என் இந்தியத் தனிமை வாசத்தில் சமையலறைகளை பியர் போத்தல்களை சேமிக்குமிடமாகத்தான் கருதிவந்திருந்தேன்.என் சகோதரனுடன் வசித்த இரண்டு வருட காலத்தில் வீடு என்கிற அமைப்பு வீடு என்கிற அமைப்பாகவே இருந்தது.அப்போதுதான் சுமாராக சமைக்க கற்றுக்கொண்டேன்.பின்பு நீண்ட இடைவெளிக்கப்பால் சமீபமாய் சமைக்கத் துவங்கியிருக்கிறேன்.முதலில் பயந்து கொண்டே சமைக்க ஆரம்பித்து இப்போது மிக நன்றாக சமைப்பதாக நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

சமைப்பதென்பது மிகவும் அலாதியானது."நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி" க்கேற்றார்போல் டன்டன்டன்டய்ய்.. டன்டன்டன்டய்ய்ய்..ம்ம்ம்ம்ம்.. என் லேசாக ரொமான்டிக் நடனமாடியடி சமைப்பது இன்னமும் அலாதி.சமீபத்தில் பார்த்த திரைப்படமொன்றில் சமைக்கும்போது சிறிது அன்பையும் சேருங்களென ஒரு ரெசிபியை சொல்லியிருப்பார்கள்.நான் எத்தனை முயற்சித்தும் அன்பை எங்கேயும் வாங்க முடியவில்லை.சரி என்னிலிருந்து பிடுங்க முடியுமாவென பார்த்தாலும் மருந்துக் குப்பியளவிற்கு கூட இல்லை.மற்றவர்கள் நம்மைப் பற்றிச் சொல்வதெல்லாம் சரிதான் போலிருக்கிறது என மிகுந்த வருத்தத்தோடு உலகின் மிகச்சிறந்த அன்பாளர்களான வைரமுத்துவையும் வாலியையும் துணைக்கழைத்தேன்.வாலி தொடங்கி பேரரசு வரை விரிந்த அன்பாளர்கலால் நிறைந்த இச்சமூகம் என்னைப்போன்ற காட்டுமிராண்டிகளை தனது கவிதை வரிகளால் சாதுவாக்குவதை இரண்டாம பாடலைக் கேட்கும்போதே உணரமுடிந்தது.பின்பென்ன செய்ய.. நதியெனப் பொங்கி, ஆறெனப் பெருக்கெடுத்து ஓடிய அன்பை வழித்தெடுத்து, உணவோடு கலந்து சமைத்து முடித்தேன்.இதுவரை உணர்ந்திராத சுவையென நண்பர்கள் ஆர்பரித்தார்கள்..எனக்கும் மிகுந்த களிப்பாய் போயிற்று.

சரி இப்போது மாங்காய் முருங்கைக்காய் சாம்பார் வைப்பது எப்படியெனப் பார்ப்போம்.நான் எப்படி சமைப்பேனோ அப்படியே சொல்கிறேன்.வழமைகளின் மீதான நம்பிக்கை இல்லாத பிம்பத்தைக் காப்பாற்றுவது எத்தனை கடினமென்பதை அனுபவித்தால்தான் தெரியும்..

1.குக்கர் பாத்திரத்தில் அரிசி எடுத்துக்கொள்ளவும்.சன்ரைஸ் கப் என்றால் நாலு பேருக்கு ரெண்டு, குண்டு கப் என்றால் நாலு பேருக்கு ரெண்டே முக்கா.
2.அரிசியை மூன்று முறை கழுவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.இந்த ஊற வைத்த அரிசியை யாரும் திங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மீறித் தின்பவர்களின் கல்யாணத்தில் மழை பலமாய் பெய்யுமென பயமுறுத்துவதும் அவசியம்.
3.இப்போது பாடல்களை தேர்வு செய்யலாம் அல்லது ஒரு தம் அடிக்கலாம்.
4 துவரம் பருப்பு அரை கப் எடுத்து நன்கு கழுவிக்கொள்ளவும்.
5.வெங்காயத்தை ஆறு துண்டாய் நறுக்கவும் ..நான்கு பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்..
6.மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் முருங்கைக்காயை நடுத்தர அளவில் வெட்டிக்கொள்ளவும்.
இப்போது குக்கர் பாத்திரத்தில் இருக்கும் அரிசியை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு அந்த குக்கரில் பருப்பு, வெங்காயம், மிளகாய், காய்கறிகள், பூண்டு என எல்லாவற்றையும் போடவும். கொஞ்சம் மஞ்சள் தூள சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
7.அடுப்பின் தீயை நன்றாக எரியவிடவும்.இப்போது தாளிப்பதற்கு தேவையான
வெங்காயம் - 2, தக்காளி - 2, பூண்டு - 4 பல், இம்மூன்றையும் பொடியாய் நறுக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி இவற்றையும் தயாராய் வைத்துக்கொள்ளவும்
8.பருப்பு,காய்கறி வெந்ததும்(3 விசில்) இறக்கி விட்டு வாணலியை அடுப்பில் வைக்கவும்.
9.வாணலி காய்ந்ததுதும் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி, என எல்லாவற்றையும் நன்கு வதக்கவும்..
10.குக்கரில் வெந்த காய்கறிகளை கரண்டியில் எடுத்து வாணலியில் போட்டு லேசாக வதக்கவும்.சிறிது நேரம் கழித்து பருப்பு வேக வைத்த தண்ணீரை வாணலியில் ஊற்றவும்.
கொஞ்சம் கொதி வந்த பின்பு சாம்பார் பொடியையும், உப்பையும் சேர்க்கவும்.
நன்கு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இப்போது ஊறவைத்த அரிசியை இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்
சரியாய் மூன்றாவது விசிலில் நிறுத்தவும்.சாதமும் சாம்பாரும் ரெடி..ஓரமாய் உட்கர்ந்து வேடிக்கை பார்த்த அறைத்தோழனை வத்தல் பொறிக்கச் சொன்னால் வேல முடிஞ்சது..

** லேபிள் க்கு நன்றி :ஜெயஸ்ரீ

பிகு

இதே சாம்பாரை வேறுவிதமாய் ருசியாய் எப்படி செய்யலாமென்கிற மாற்றுப் பார்வைகள் வரவேற்கப்படுகின்றன.

என் வாசகியின் வேண்டுகோளின்படி பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.

Saturday, July 12, 2008

என் மீது பெய்யுங்களேன்...:இப்போதைய மனநிலையில் ரத்தம் பட்டுத் தெறிக்கும்படி ஒரு கொலை செய்ய வேண்டும் போலிருக்கிறது.யோசித்துப் பாருங்களேன்..அடர் சிவப்பில்.... கொழ கொழவென... ரத்தம்..இரத்தம்..ரத்தம்....'இ' போட்டால் ரத்தத்தின் வீர்யம் குறைகிறதுதானே..அதனால் ரத்தமென்றே அழைக்கலாம்..ஏன்? யாரை? எதற்கு? என்றெல்லாம் வேண்டாம்.இப்போதைக்கு கொலை செய்ய வேண்டும் அவ்வளவுதான்.இதனால் இது என்பது எத்தனை அருவெருப்பு தெரியு்மா?மேலும் காரண காரியங்கள், எல்லாவற்றின் பின்னாலும் பருத்திருக்கும், துருத்தியிருக்கும், ஏதோ ஒன்று எனக்கு வெறுப்பூட்டுவதாய் இருக்கின்றது.எந்த தனிப்பட்ட ஒன்றும் இல்லாமல் ஒரு கொலை செய்யவேண்டும். ரத்த வாசனை... ரத்த நிறம்... ரத்தக் கொழ கொழப்பு... நினைத்தாவே சிலிர்க்கிறதுதானே!...A Clockwork Orange படம் பார்த்திருக்கி்றீர்களா? அந்த பூனைக் கண்ணனாய் என்னை நினைத்துக் கொள்ளுங்களேன்...

எனக்கு உறவுகள் மீது நம்பிக்கையில்லை..அன்பின் மீது நம்பிக்கையில்லை.. எல்லாவற்றையும் குரூரமாய் சிந்திக்கிறேன்..மிகத் தட்டையான, குறுகிய, விசாலமில்லாத, பார்வை கொண்டவன் என்பது எல்லாரின் மதிப்பீடுகளாக இருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.'நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல' (இதை தமிழ் சினிமா நடிகர் பிரசாந்த் சொல்வது போல ஒரு accent ல் புரிந்துகொள்ளவும்) உங்களிடம் ஒரு ரகசியம் சொல்லட்டுமா நான் அன்பிற்காக ஏங்கிச் சாகிறேன்.உண்மைக்காக அல்லது அதைப் போன்ற ஒன்றினுக்காக, போலித்தனமில்லாத சொற்களுக்காக, தினம் தினம் செத்து மடிகிறேன்.அய்யோஓஓஓஓஒ என்னிடம் பொய் சொல்லாதீர்களெனக் கதறுகிறேன். என்னால் போலித்தனங்களை, பொய்களை, நம்பிக்கைத் துரோகங்களை, சம்யோசித ஏமாற்றுதல்களை, பயன்படுத்திக் கொள்ளுதலை, தாங்க முடியவில்லை.பல்வேறு இருண்ட மூலைகளிலிருந்து ஏகப்பட்ட கைகள் நீளுகின்றன. யாசகித்தும், பறித்துமாய் என்னை எதுவுமில்லாதவனாக்குவதை எதிர்த்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.எனக்கு தோற்பதின் இனிமை உகந்ததாய் இருக்கிறது அதே சமயத்தில் தொடர்ச்சியாய் ஏமாறுவது தற்கொலைக்குத் தூண்டுகின்றது.

நேற்று சுத்தமாய் தூங்கப் பிடிக்காத பின்னிரவில் என் பால்கனியிலிருந்து குதிப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.என் கண் முன்னால் என் உடல் சிதறுவதை மங்கலாய் பார்க்க முடிந்தது.முதலில் தரையைத் தட்டுவது என் தலையாகத்தான் இருந்தது நங்க்க்க்க்க்க்க்க்க்... சொத்த்த்த்ஹ்... பொத்த்த்த்த்த்த்...சத்த்த்த்..எப்படி கேட்கும் இந்த சத்தம்? அந்த சத்தத்தை கேட்கமுடிந்தால் அதை எப்படியாவது வார்த்தைகளில் வடிக்க முயலுகிறேன்..கழிவிரக்கம் தாங்க முடியாததாய் இருக்கிறது..கொஞ்சம் பாசிட்டிவாய் எழுதட்டுமா?.. அல்லது மிகைப்படுத்தி.. கற்பனைப்படுத்தி.... அல்லது 'எல்லாமே நல்ல' மனோநிலைக்கு மாறட்டுமா?மாற்றிக் கொள்ளட்டுமா..சரி இப்போது பாருங்கள்..எப்படி உற்சாகம் கரைபுரண்டு ஓடப்போகிறதென...

என்னுடைய மிகப்பெரிய பலம் என்ன தெரியுமா? என் நிதானம் ..நான் மிக மெதுவாகத்தான் குடிப்பேன்..முதல் முறை குடித்த போதும் கூட மிக மெதுவாய், ரசித்துதான் குடித்தேன். பியரின் கசப்போ,குமட்டலோ எதுவுமில்லை.நிதானமாய் அப்பொன்னிற திரவத்தை மெல்ல உள்வாங்கி மிதந்தேன்.இதுவரைக்குமான என் குடி வரலாற்றில் நான் வாந்தி எடுத்தததில்ல. அதனோடு எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்க என் உடலைத் தயாராய் வைத்திருந்தேன. நிதானம் தவருவதில்லை.நிலை பிசகுவதில்லை.ஏனென்றால் நான் குடியை நேசிக்கிறேன்.இதுவரை குடித்ததிலேயே மீராவுடன் குடித்த நாளைத்தான் நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.பாண்டிச்சேரியின் பிரெஞ்ச் வீதியில் சில காலம் வசித்திருந்தேன். என் சன்னல்களைத் திறந்தால் கடலின் நீலம் அறையை நிறைக்கும்.மூங்கில் நாற்காலிகள் போடப்பட்ட, தொட்டிச் செடிகள் வைக்கப்பட்டிருந்த பால்கனியில், சூரியன் கடல் மதுவில் பனித்துண்டங்களாய் மிதந்து கொண்டிருந்த ஒரு மாலையில், கிழக்கில் இருளாய் மேகங்கள் கவிழ்ந்து ஓரிரு மின்னல் கீற்றுக்கள் எட்டிப்பார்த்த அபூர்வ பொழுதொன்றில், நாங்கள் எங்கள் கோப்பைகளை நிரப்பினோம்.பனித்துண்டமான சூரியன் முழுதுமாய் கரைத்து கொண்டிருந்த பொழுதை பார்த்துக்கொண்டிருந்தோம்.மின்னல்கள் பெருகி மேகங்களை அசைத்ததில் விழுந்த முதல் மழைத்துளியை அவள் சரியாய்த் தன் மார்பகங்களில் வாங்கினாள்.நானொரு சக்கரவாகப் பறவையின் வடிவம் கொண்டு அம்மழைத் துளியை பருக முனைந்தேன்.அவள் என்னை உதறித் தள்ளிவிட்டு ஏற்கனவே தான் கொண்டிருந்த பறவையின் அலகினைக் கொண்டு அம்மழைநீரைச் சுவைத்தாள்.அவள் உதடுகளின் வழியாய் என் நாவினைத் துளைத்து அவளுடனினுள் இறங்கிக்கொண்டிருந்த மழைநீரை பலவந்தமாய் சுவைத்தேன்.அது மதுவின் சுவையினைத் தரைமட்டமாக்கியது..

மீரா போலித்தனங்களில்லாதவள். நிசமானவள். உண்மையானவள். நெருக்கமானவள். பின்னங்கழுத்து, மூச்சுக்காற்று, மல்லிகைப்பூ ,கொலுசு, பாவாடை, தாவணி, சுடிதார், நிலம் பார்த்தல், வெட்கம், பொய்கள், என எதுவுமில்லாதவள்.மீரா தன் தலைமுடியின் சில கற்றைகளை முன்பக்கமாய் எடுத்துவிட்டிருப்பாள்.மிகச் சிறிய கூந்தல் அவளுக்கு. இறுக்கமான ஆடைகளின் மீது மோகமிருந்தது அவளுக்கு..ஒரு பிங்க் நிற லேடி பேர்ட் சைக்கிள் வைத்திருப்பாள்.அவள் அம்மா தரும் தயிர்சாதத்தை எனக்கும்,நான் கொண்டு வரும் இறைச்சியினை அவளுமாய் அலுவலக தினங்களில் பறிமாறிக் கொள்வோம்.. என்னறையில் நான் அவிழ்த்துப்போட்ட மிக அழுக்கான லுங்கியினையோ, கால்சராயினையோ,மிகுந்த ஆர்வங்களோடு,ஒரு குழந்தையின் விழைவுகளோடு, அணிந்துகொள்வாள். நான் அவள் அவிழ்த்துப்போட்ட ப்ராவின் ஊக்குகளை நோண்டிக்கொண்டிருப்பேன்...எதுவும் பேசாமல் அமர்ந்திருப்போம்.மணிகள் சலனமற்றுக் கரையும்.கிளம்பும் நேரத்தில் வேண்டா வெறுப்பாக மிகுந்த துயரங்களோடு அவள் தன்னுடைய ஆடைகளை அணிந்து கொண்டு புறப்படத் தயாராவாள்.நானொரு ஆணாய் பிறந்ததின் குற்ற உணர்வுகள் தாங்காது ஒரு சிகரெட்டினைப் பற்றவைப்பேன்.அவளுக்கு சிகரெட் வாசம் பிடிக்காததினால் அவளிருக்கும் சமயத்தில் நான் புகைத்ததில்லை.

பின்பொரு நாள் அவள் தற்கொலை செய்துகொண்டதாய் குறுஞ்செய்தியொன்று நண்பணொருத்தனிடமிருந்து வந்தது..நானொரு கோழை என்பதினால் தற்கொலை செய்துகொள்ளவில்லை.அதனோடு மிகமோசமான சல்லிப்பயல் என்பதினால் ஒரு கவிதையை அப்போதே எழுதிவிட்டேன். பாருங்களேன் என் சல்லித்தனத்தின் நிரூபணத்தை!!.. இப்போது புனைவு என்கிற லேபிளில் அவளையும் அடைத்துவிட்டேன்.யாருக்காவது மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தால் என் மீதும், என எழுத்தின் மீதும் பீறிட்டு அடியுங்களேன்..நின்றபடி பெய்வதையே நான் வரவேற்கிறேன் என்பதால் எப்பாலினராய் இருந்தாலும் நின்றபடி மூத்திரம் பெய்யுங்களென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, July 10, 2008

பொய்கள்.. பொய்கள்... பொய்கள்....


மெய்யிலிருந்து மீள்வதும்
மெய்த் தன்மையிலிருந்து விடுபடுவதென்பதும்
அத்தனை இலகுவானதில்லை.
உண்மையின் விகார தரிசனத்திற்காக
இப்பாழ் நிலங்களில் தனித்து,வெறுத்துத் திரிவதாக
சொல்வதும் கூட எத்தனை பொய்யானது?
ஒரு பொய்யினை உண்மையைப் போன்றதொன்று
நிராகரிக்காத தருணம் வரை
அதன் தரிசனம் அபரிதமானது.

எல்லாத் திசைகளிலிருந்தும் பெருகி வரும் பொய்களை
என்ன செய்வதென்று தெரியவில்லை
ஏற்கனவே பிதுங்கி வழியும் என் குதத்தை
உண்மையைப் போலதொரு குறி/யோனி யும்
பொய்களாய் விரிந்திருக்கும் குறிகளும்/யோனிகளும்
பரிதாபமாய் பார்த்து
தலைகவிழ்ந்து திரும்பப் போவதை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்...

எல்லாவற்றையும் விழுங்கிச் செரிக்கும்
கருமத்தை
எவனாச்சிம் கண்டு புடிச்சா என்ன?

புகைப்படம் : http://images.google.com/imgres?imgurl=http://4.bp.blogspot.com

Saturday, July 5, 2008

ராமின் கேள்விகளும் சுந்தருக்கான கேள்விகளும்

ராமின் கேள்விகளுக்கான பதில்கள்:

1) பின்நவினத்தின் வரையறைகள் எதுவும் வகுக்கபபட்டு இருக்கிறதா? அப்பிடியெனில் அந்த வரையறைகளுக்குள் உங்களின் எழுத்து பயணிக்கிறதா?

நான் வாசித்த அளவில் பின்நவீனமென்பது வரையறைகளுக்குட்பட்டதில்லை.மேலும் வரையறைக்குட்படுத்தவும் முடியாது.வளர்மதி சொல்வதுபோல் பின்நவீனத்தை நான் சூழலாகத்தான் நம்புகிறேன்.மானுட வாழ்வில் முழுமைக்கான அல்லது அதைப்போன்ற ஒன்றினுக்கான தொடர்ச்சியான தேடுதல்களில் ஏற்பட்ட தோல்வியை உள்வாங்கிக் கொள்ளும் சூழலையே பின் நவீனம் என்கிறோம்.பின்நவீன கூறுகளை உள்ளடக்கிய படைப்புகளாக விமர்சகர்களால் அடையாளம் காணப்படும் பல்வேறு பிரதிகள் தமிழில் தற்போது கோலோச்சுகின்றன,மேலும் தற்போது என்கிற வார்த்தையின் மூலமாக சமகால எழுத்துக்கள் மட்டுமே பின்நவீன எழுத்துக்கள் எனவும் புரிந்து கொள்ள முடியாது.பின்நவீனம் காலத்தை மறுக்கிறது.பின்நவீன கூறுகளாக சிலவற்றைச் சொல்லலாம்.
1.ஆசிரியன் இறந்துவிட்டான்
2.விளிம்பு மய்யமற்ற படைப்புகள்
3.பன்முகத் தன்மை
4.அதிகாரப் பரவலாக்கம்
5.ஒற்றைத் தன்மையைக் களைதல்
6.சிறுகதையாடல்கள்
7.தொடர்ச்சியான உரையாடல்கள் (விவாதம் என்கிற புள்ளியை விட்டு நகர்ந்து செவிசாய்த்தல்)
8.எதையும் சந்தேகித்தல்
9.கட்டவிழ்ப்பு
10.வரலாற்றை அழித்தெழுதுதல்

இன்னும் தமிழில் பின்நவீன புரிதல்களுக்கான புத்தகங்கள் போதிய அளவில் இல்லாமலிருப்பதும் மற்ற சித்தாந்த அடியொற்றிகளால் திரிக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக சொல்ல முடியும்.ரமேஷ் ப்ரேம்களின் படி "மற்றவற்றை கீழாக மதிக்கும், மற்றவற்றை அழித்து தன்னை நிலைநிறுத்தும் பாசிசத்திற்கு எதிரான மனநிலையை உருவாக்கும் ஒரு சூழல் தான் இந்திய பின்நவீனத்திற்கான அடிப்படை.” என்ற விளக்கமும் எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.நமது வலைச்சூழலைப் பொறுத்தவரை வளர்மதி, டிசே தமிழன், ஜமாலன், பைத்தியக்காரன் போன்றோர் பின்நவீனம் குறித்தான பகிர்வுகளை விரிவாய் பதிந்துள்ளனர். கீழ்கண்ட சுட்டிகள் உங்களுக்கு உதவலாம்
உரையாடலுக்கான துவக்கமாக சில குறிப்புகள் - வளர்மதி


மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் - டிசே வின் இந்த பதிவும் பின்னூட்டங்களும் மிக சுவாரஸ்யமானது


உம்பர்த்தோ ஈகோவும் உம்மணாமூஞ்சியும் - பைத்தியக்காரன்

இச்சமயத்தில் அதிகாரமய்யமற்ற படைப்பு / அதிகார மய்யங்களுக்கெதிரான எழுத்து என்பது அரசியல் கட்டுரைகள் மட்டுமல்ல என்பதையும் சொல்லிவிடுகிறேன்.ஒற்றைத் தன்மையைக் களைந்த பிரதிகளே அதிகாரமய்யத்தை களைந்தவையாக கருதப்படும்.மேலும் என் எழுத்து எதில் பயணிக்கிறது என்பதை சொல்ல வேண்டியவன் நானல்ல என்பதால் அதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

2) வெகுஜன எழுத்துக்கள் மாதிரி உங்களின் படைப்புகள் இல்லை? அதுமாதிரியாக உன்னால் எழுதவே முடியாதா? என உங்களை நோக்கி எழுந்த நண்பர்களின் விமர்சனங்களுக்கு என்ன பதில்?

முதலில் நான் எழுத்தைச் செய்வதில்லை என்பதை நண்பர்களுக்குப் புரிவிக்க விரும்புகிறேன்.வெகுசனத்தை குறிவைத்து எழுதும் திறமைகள் எனக்கில்லை. பரவலாய் படிக்கப்படவேண்டும் என்கிற ஆசைகளும், நிர்பந்தங்களும் எனக்கில்லை.மேலும் நானொரு பொழுதுபோக்கிற்கான உத்திரவாதங்களையோ சமூகத்தைப் புரட்டிப் போடும் சிந்தனைகளைகளுக்கான தூண்டுதல்களையோ தரமுடிபவன் அல்ல. எனக்கான ஏதோ ஒன்று இதில் நிறைவடைகிறது அதனால் இதனை தொடர்ச்சியாய் செய்துகொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். மேலும் என் நண்பர்களின் விமர்சனங்களுக்கு இப்போது என்னால் தர முடிந்ததெல்லாம் புன்னகையை மட்டுமே.

3) உங்களின் படைப்புகளை அச்சுப்புத்தகமாய் வெளியிடுவதற்கு ஏதேனும் உத்தேசம் உள்ளதா? ஆம் என்றால் எப்போ? இல்லையெனில் ஏன்??

முதலில் நான் எதுவும் பெரிதாய் எழுதிக் கிழித்து விட்டதாய் எனக்குத் தோன்றவில்லை.புத்தகங்களாய் கொண்டு வருவதில் எனக்கு ஆர்வம் இல்லை என்பதைத்தவிர வேறெந்த காரணங்களுமில்லை.எப்போது எனக்கு நிறைவு அல்லது அதைப் போன்ற ஒன்று ஏற்படுகிறதோ அப்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் அதுவரை சில மரங்கள் பாவம் உயிர்த்துப் போகட்டுமே :)

4) இணையம் எழுத்தும், பின்ன இத்யாதியும் தாண்டி குடும்பஸ்தானாக ஆன பினனரும் உங்களின் ஆரம்பகாலத்து மாதிரி வீரியமாக எழுதமுடிகிறதா?

ஆரம்பகாலத்து வீர்யம் என எதைக்குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை. அடர்வான வார்த்தைகளா? அல்லது மிகுந்த உடலெழுத்துக்களா? இக்கேள்வியை
திருமணத்திற்கு முன், பின் என எடுத்துக்கொண்டால் என்னால் சில வித்தியாசங்களை உணர முடிகிறது.சூழல்கள் மட்டுமே என்னையும் என் எழுத்தையும் தீர்மானிப்பதால் சூழலகளுக்கேற்ற வடிவத்தையே நான் ஏற்கிறேன்.இங்கே சூழல் எனக்குறிப்பிடுவது என் தனிப்பட்ட வாழ்வும் எண்ணங்களும் மாத்திரமே.பாலியல் வறட்சியும், நெடுந்தனிமையும் எனது எழுத்துக்களுக்கான இன்னொரு முகத்தை தந்திருக்கலாம். இப்போதைய சூழலில் மிக ஆசுவாசமான, நிதானமான, இலகுவான,மனநிலையில்தான் இருக்கிறேன். அதனால் என் எழுத்துக்களும் அப்படியிருக்கலாம்.மேலும் இம்மனநிலை விரிவாய் வாசிக்க ஏதுவாய் இருக்கிறது.நிதானமாய் எதையும் அணுகவும் தலைப்படுகிறேன்.அப்போதைய மனநிலையில் எழுதப்பட்டவைகளை இப்போது படிக்கையில் நான்தானா இது? என்கிற அசட்டுச் சிரிப்புகளை என்னால் தவிர்க்க முடியவில்லை.காலம் என்னை மீண்டும் மீண்டும் அழித்தெழுதிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடிவதில் எனக்கு மகிழ்ச்சியே.
அதிக சிக்கலில்லாத கேள்விகளை கேட்டதிற்கு நன்றி இராம்.இனி நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தருக்கான கேள்விகள்..

1.வலையின் சமீபத்திய பரபரப்பு உங்களின் காமக்கதைகள்.இந்தத் தொடருக்கான அவசியம் என்ன? காமத்தை அதிகாரத்திலிருந்து மீட்க வேண்டும் என்கிற சமூக நோக்கா? அல்லது இதுவும் ஒரு மொழிவிளையாட்டா? மேலும் இக்காமக்கதைகள் மிகச்சரியான புரிதல்களோடு வாசகனைச் சென்றடைய எந்த அளவிற்கு மெனக்கெடுகிறீர்கள்?

2.தலித்திலக்கியம் பற்றிய உங்களின் பார்வை என்ன? தலித் படைப்பாளி என்கிற தனி அடையாளம் அவசியமா இல்லையா?

3.வலையில் மிக ஆபத்தான எழுத்துக்களாக நீங்கள் உணர்வது டோண்டு ராகவனுடையதா? அல்லது ஜெயமோகனுடையதா? மேலும் இருவரில் யார் மிக மோசமான பாசிஸ்ட்?

4.உங்களுக்கு பிடித்த ஐந்து தமிழ் நாவல்களைப் பரிந்துரைங்களேன்?Tuesday, July 1, 2008

சமையலோடு சேரும் காதலும், கண்ணீரும்


Como agua para chocolate aka Like Water for Chocolate (1992)

மெக்சிகன் நாவலாசிரியையான Laura Esquivel வின் புகழ்பெற்ற நாவலைத் திரைப்படமாக்கியிருக்கிறார் Alfonso Arau (இவரின் கணவர்) இந்தப் புத்தகம் வெளிவந்த காலத்தில்(1989) மாந்தீரீக யதார்த்த கூறுகளுக்காக பெரிதும் சிலாகிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பவரும் லாராதான்.மாந்தீரீக யதார்த்தம் என்றால் வேற்றுகிரகவாசிகளாக கட்டமைப்பை நிறுவும் நவீனவியாதிகள் இத்திரைப்படத்தைப் பார்க்கலாம்.மெக்சிகோவில் 1890 லிருந்து 1930 வரைக்குமான குடும்ப அமைப்புகளின் கதைகளம்தான் இதன் சூழல்.ஒருவரிக் காதல் கதைதான் என்றாலும் படமாக்கிய விதமும், புதியதொரு சூழலும், சமதளத்திலிருந்து திடீர் திடீரென விலகிப்போகும் திரைக்கதையும், புதியதொரு அனுபவத்திற்கு உத்திரவாதமளிக்கிறது.காட்சிப்படுத்துதல்களை குறைவாய் செய்துவிட்டு கதைசொல்லி மூலமாக கதையை நகர்த்துவது சற்று சலிப்பைத் தந்தாலும் ஒரு நாவல் படித்த உணர்வை அடையமுடிகிறது.

Mama Elena சமையலறையில் வெங்காயத்தை வெட்டிக்கொண்டிருக்கும்போது பிரசவ வலி எடுத்து tita வை அம்மேசையின் மீது படுத்தபடி பிரசவிக்கிறாள்.அப்போது பனிக்குடம் உடைந்து நீர் படிக்கட்டுகளில் வழிந்தபடி ஓடுகிறது.அந்நீர் மறுநாள் உப்புகளாக படிந்திருக்கிறது அவ்வுப்புக்களை நான்கு சாக்குமூட்டையில் சேகரித்து வெகுநாட்கள் சமையலுக்கு பயன்படுத்தினார்களாம்.tita சமையல் தாதியுடன் வளர்கிறாள்.அவளது உலகம் சமையலறைதான்.pedro,tita வை காதலிக்கிறான் மூன்றாவது / கடைசி பெண்ணானதால் அவளின் தாய் tita விற்கு திருமணம் செய்ய மறுத்துவிடுகிறாள்.கடைசிப் பெண் தாய் உயிரோடு இருக்கும்வரை அவளை கவனித்துக்கொள்ளவேண்டுமென்பது அக்குடும்ப வழக்கமாய் இருக்கிறது.tita வை மணக்க முடியாதென உறுதியானதும் அவளின் அக்கா Rosaura வை மணந்து கொள்கிறான் pedro.கண்டிப்பும் பிடிவாதமும் கொண்ட தாயின் அன்பு கடைசி வரை tita விற்கு கிட்டாமலேயே போய்விடுகிறது.அவளின் பிடிவாதத்திற்கும் கண்டிப்புக்கும் காரணம் இழந்த அவளின் பழைய காதலாக இருப்பதை அவளின் இறப்பிற்கு பிறகு அறிந்துகொள்கிறாள்.வாழ்வும் யதார்த்தமும் tita வையும் pedro வையும் சுழற்றி அடிக்கிறது இறுதியில் tita வின் உறுதியான காதல் நீர்த்துப்போகாமல் pedro வுடன் சேர்கிறாள்.

மாந்திரீக யதார்த்த திரைப்படங்களென்றால் இதுதான் என்று சரியாய் அடித்துக்கூற தயக்கமாய் இருக்கிறது அறிபுனைவு / மாந்திரீக யதார்த்தம் இரண்டுக்குமான வித்தியாசங்களை யாராவது தலையில் அடித்து சொன்னால் புண்ணியமாகப் போகும்.என்னளவில் kubric ன் 2001: A Space Odyssey யை அறிபுனைவுத் திரைப்படமாகவும் அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் solaris திரைப்படத்தை மாந்திரீக யதார்த்தவியலிலும் வகைப்படுத்த முடிகிறது.Big fish படத்தின் இறுதிக் காட்சி வினோதங்களை கண்முன் கொண்டு வந்து புதுத் தளத்திற்கு கூட்டிச் சென்றது.இந்தத் திரைப்படத்தை பொறுத்தவரை அறிபுனைவுக் குழப்பங்கள் எதுவுமில்லை. Rosaura வின் திருமண விருந்திற்காக நள்ளிரவு வரை விழித்திருந்து செய்யப்படும் கேக்கில் tita வின் கண்ணீரும் கலந்திருக்கிறது விருந்தில் அக்கேக்கை சாப்பிடும் அனைவரும் நதிக்கரை ஓரமாக நின்றபடி தேம்பி தேம்பி அழுகிறார்கள்.திருமண விருந்து பாழாகிறது.tita எவ்வித மனநிலையில் உணவைச் சமைக்கிறாளோ அதே உணர்வு அதை உண்பவருக்கும் ஏற்படுகிறது.pedro பரிசளித்த ரோஜாப்பூ இதழ்களை கொண்டு சமைக்கப்படும் உணவு மூலமாக tita, pedro வை உணர்வு பூர்வமாக அனுபவிக்கிறாள் இருவரின் உடலும் ஒன்றாகும் உணர்வை இருவராலும் உனரமுடிகிறது.

சிண்ட்ரெல்லா தேவதைக் கதாபாத்திரத்தை நினைவூட்டும் tita வை மறக்க சில நாட்கள் பிடிக்கலாம்.tita வின் இன்னொரு அக்கா Gertrudis ஒரு புரட்சிக்காரனோடு ஓடிப்போகிறாள்.மிகக் கட்டுப்பாடான குடும்ப சூழல் அவளை அவ்வாறு நிர்பந்திக்கிறது.மெக்சிகன் புரட்சியும் இத்திரைப்படத்தின் சூழலில் பதிவு செய்யப்படுகிறது.குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும் Gertrudis ஐ 'அப்படியே' குதிரையில் தூக்கிச் செல்லும் காட்சி கனவுத் தன்மையை கொண்டு வருகிறது.
tita வின் சமையல் ருசியின் ரகசியத்தை கேட்கும் பெண்களுக்கு tita சொல்வது சமைக்கும்போது சிறிது அன்பையும் சேருங்கள் என்பதாகத்தான் இருக்கிறது. இதை வெகு காலத்திற்கு முன்பிருந்தே என் அம்மாவிடம் வம்பு சண்டை வாங்கும் நோக்கில் சொல்லிவந்திருக்கிறேன் :) மேலும் சமீபகாலமாய் என் சமையலுக்கான ரசிகர்கள் அதிகரித்த வண்ணமிருக்கிறார்கள் இதற்கு காரணம் சமைக்கும் போது உச்சஸ்தாயில் கேட்கும் பாடல்களும் உற்சாக மிகுதியுமே என்ச் சொல்வதில் தவறேதுமில்லை.

சமையல் தாதிக்களாக வரும் nacha மற்றும் chencha பாத்திரங்கள் சாமான்யர்களின் மிகுந்த அன்பை வெளிக்கொணரும் அழகான படைப்புகள்.புரட்சியின் இன்னொரு முகத்தினை தொட்டுச் செல்லும் காட்சி ஒன்றும் வருகிறது mama elana யையும் chencha வையும் எதிர் கும்பலொன்று சூறையாடுகிறது.tita தன் சமையல் மூலம் rosaura வை பழிதீர்ப்பதாகவும் இத்திரைப்படத்தை அணுகலாம் அல்லது அவளின் உணர்வுகள் அவ்விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் புரிந்துகொள்ளலாம்.rosaura வின் குழந்தைக்கு பாலூட்டுவதின் மூலமாக கன்னித்தாய் அல்லது நமது சூழல் நீலியின் குணாதிசயங்களாகவும் tita வின் பாத்திரம் விரிகிறது.ஒவ்வொரு காட்சிகளும் தன்னகத்தே கொண்டிருக்கும் விரிவுகள் திரைப்படத்திற்கான பன்முக வாசலைத் திறக்கிறது.இறுதிக் காட்சி ஏற்படுத்தும் தாக்கம் வினோதமானது tita வுடனான கலவின் உச்சக்கிளர்ச்சியில் மூச்சடைக்கிறான் pedro. தன்னை முதலில் எரித்துக்கொண்டு சகலத்தையும் தீயிலிட்டு அழிக்கிறாள் tita.

Featured Post

test

 test