Wednesday, May 29, 2013

ஓரிதழ்ப்பூ அத்தியாயம் மூன்று

 
அமுதாக்கா இந்தா மருதாணிப் பூ

! ஹப்பா! என்ன வாசன. இந்த வாசன ஒரு மாதிரி இருக்கில்ல

ஆமா

உனக்கும் பிடிக்குமா மருதாணிப்பூ

பிடிக்கும் ஆனா ரொம்ப பிடிச்சது மரமல்லிப் பூ தான்

ஏன் மரமல்லி பிடிக்கும்?”

அதுல பீப்பி ஊதலாம்”

ஐயே ஏழாவது வந்துட்ட இன்னுமா பீப்பிலாம் ஊதுற

அதனால என்ன?அக்கா கார்ட்ஸ் வெளாடலாமா?”

போடா போர். நீதான் ஜெயிப்ப

வேற என்ன பண்ணலாம்

சும்மா இருக்கலாம்

உனக்கு ரஜினி பிடிக்குமா கமல் பிடிக்குமாடா?”

ரஜினி. உனக்கு?”

கமல். என்ன கலர் பிடிக்கும்?”

நீலம். உனக்கு?”

மெருன். ரொம்ப பிடிச்ச படம் எது?”

ராஜா சின்ன ரோஜா.உனக்கு

அலைகள் ஓய்வதில்லை. உன் பிரெண்ட்ஸெல்லாம் யாரு?”

முருகன், கோபி அப்புறம் ரமா. உன் பிரண்ட்ஸ்லாம் யாரு?”

ப்ச் யாருமே இல்ல. நான் தான் பத்தாவதுக்கப்புறம் ஸ்கூல் போகலயே

கூட படிச்சவங்க?”

பொண்ணுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆய்டுச்சி. தெரிஞ்ச ஒண்ணு 
ரெண்டு பசங்களும் வெளியூருக்கு படிக்க போய்ட்டாங்க

உனக்கு எப்பக்கா கல்யாணம்?”

அடபோடா

ஏங்க்கா?”

எனக்கு கல்யாணமே வேணாம்

ஏங்க்கா?”

என்னவோ பிடிக்கலடா

போனமாசம் உன்ன பொண்ணு பாக்க வந்தாங்களே. மாப்ள கூட நல்லா 
இருந்ததா அம்மா சொன்னாங்க. அவங்க லட்டர் போடலயாக்கா?”

இல்லடா.”

ஏன் உன்ன பிடிக்கலயாமா?”

எங்க தரித்திரத்த பிடிக்காம இருந்திருக்கும்

காசு கேட்கறாங்களாக்கா?”

ஆமாடா ஓசில யாராச்சும் கல்யாணம் பண்ணிப்பாங்களா?”

உங்க அப்பாதான் வேலைக்கு போறாரே அவர்கிட்ட காசு இல்லயா?”

அவர்தான் சாயங்காலம் ஆனா குடிச்சிடுறாரோ எப்படி இருக்கும்?”

நல்லவேள எனக்கு அப்பா இல்ல

உண்மதாண்டா. எனக்கு அப்பான்னு ஒருத்தர் இல்லாம இருந்திருந்தா கூட 
நல்லாருந்துருக்கும்.”
..

செம்பருத்தி பூத்திருக்காடா உங்க வீட்ல?”

உனக்குதான் அடுக்கு செம்பருத்தி பிடிக்காதே

பரவால்ல. வா போய் பறிக்கலாம்

தலைலதான் மல்லி இருக்கே எதுக்கு செம்பருத்தி?”

சாமிக்குடா. சாயங்காலம் கோயிலுக்கு போலாம்

அப்ப சாயங்காலம் பறிச்சிக்கலாம்

அப்ப வாடிடும்டா

போக்கா நான் வரல

ஏண்டா? “

பாட்டி ஏதாச்சிம் வேல வைக்கும்

அம்மா எங்க

ஸ்கூல் க்கு போயாச்சி

இன்னிக்கு சனிக்கிழமையாச்சே

அடுத்த வாரம்  ஏதோ இன்ஸ்பெக்சனாம் லாக் கொடுக்கனும்னு போயிருக்கு

உங்க அம்மா ரொம்ப நல்லவங்கடா

ஆமாக்கா

உன் அப்பாவ நினைவிருக்கா உனக்கு?”

இல்லக்கா. நான் வயித்துல இருக்கும்போதே செத்துட்டதா அம்மா சொல்வாங்க

உங்க அம்மா பாவம்டா தனியா உன்ன வளத்திருக்காங்க

பாட்டி தான் இருக்காங்களே

இது வேற தனி டா

என்ன வேற?”

ஆம்பள துணை இல்லாம தனியா இருக்கிறது

எதுக்கு ஆம்பள துண?”

ஒரு பாதுகாப்புக்குதான்

அதான் நான் இருக்கனே

ஆமா இவரு பெரிய ஆம்பள

ஆமா நான் ஆம்பளதான்

அப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?”

ச்சீ நீ எனக்கு அக்காவாச்சே

அதுனால என்னடா?”

பே

இப்ப வேணாம்டா வளந்து என்ன கல்யாணம் பண்ணிக்க

அய்ய பே

முகம் எப்படி செவக்குது பாரு

போ நா வீட்டுக்கு போறேன்

டேய் ரவி நில்றா நில்றா


”பே பே பே”


ஓட்டமாய் வீட்டிற்கு வந்துவிட்டேன். பாட்டி கூடத்தில் உட்கார்ந்து கொண்டு கீரை ஆய்ந்து கொண்டிருந்தது. என்னை நிமிர்ந்து பார்த்து எங்கடா போய் சுத்துற என அதட்டியது. மறு பேச்சு பேசாமல். செம்பருத்தி செடியிடம் போய் நின்றேன். கையகலத்தில் சிவப்படுக்காய் பூத்திருந்த ஒரு பூ விடம் கிசுகிசுப்பாய் சொன்னேன்

நான் வளந்து அமுதாக்காவ கல்யாணம் பண்ணிப்பேன்

- மேலும்

புகைப்படம் : பினுபாஸ்கர்

Featured Post

test

 test