Monday, January 11, 2021

எழுத்தச்சன் - எம்.டி.வாசுதேவன் நாயர்

 


சென்ற மாதம் எம்.டி.வாசுதேவன் நாயரின் ’மஞ்ஞு’ நாவலை வாசித்தேன். அளவில் மிகச் சிறிய நாவல். நாவல் இயங்கும் களமும் குறுகியது. ஆனால் இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கும் விமலா டீச்சரை 70களில் ஆரம்பித்து 90களின் இறுதி வரைக்குமான காலகட்டங்களில் வெளிவந்த மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் பார்த்திருக்க முடியும்.  பூப்போட்ட புடவை அணிந்த பாந்தமான உடல் மொழியும் கொந்தளிப்பான மன உணர்வுகளையும் கொண்ட முப்பதுகளில் இருக்கும் பெண்களை டீச்சர்களாக அல்லது அலுவலக ஊழியர்களாகப் பார்த்திருப்போம். மேலும் அவர்கள், சுயநலம் கொண்ட உறவுகளுக்காக தங்களுடைய வாழ்வை அர்ப்பணிப்பவர்களாகவும் அதை உள்ளூர விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். இந்தப் பொது வரையறையை தந்தது எம்.டியா க இருக்கலாம் என்பது என் கணிப்பு. கூடுதலாக ”யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது”, ”மேகமே மேகமே” போன்ற பாடல்களை  பின்னணியில் வைத்துக் கொண்டு புடவைத் தலைப்பை தோள்மீது போர்த்தியபடி குளிர் அடர்ந்த மலைப் பிரதேசத்தில் நடந்து போகும் மெல்லிய பெண்களுக்கான காவியத் தன்மையை தந்தது எம்.டியின் எழுத்தாக இருக்கலாம். 

‘மஞ்ஞு’ வின் சித்தரிப்பு இத்தகைய தன்மைகளைக் கொண்டிருந்தது. இந்த நாவலை எம்.டியே 83 இல் திரைப்படமாக எடுத்தார். சரியாக வரவில்லை. ஒரு இயக்குநராக எம்.டி என்னை ஈர்த்ததில்லை. நல்ல மன நிலையை உருவாக்கிய படமாக ’ஒரு சேரு புஞ்சிரி’இருந்தது. ’நிர்மால்யம்’ சிறப்பான படம்தான் என்றாலும் கதையை அப்படியே படமாக்குவதில் என்ன இருக்கிறது. இயக்குநரின் தனித்துவம் என்பது கதையைக் காட்சியாக மாற்றுவதில் கிடையாதே. மேலும் எம்.டி அதிகத் திரைப்படங்களை இயக்கவும் இல்லை. அவருடைய இடம் திரைக்கதை தான் அதில் எப்போதுமே சிறந்து விளங்கினார். பல வெற்றிகளைக் குவித்தார்.

’மஞ்ஞு’ வைத் தொடர்ந்து ’நாலுகெட்டு’ நாவலையும் சென்ற வாரம் வாசித்து முடித்தேன். 1958 இல் வெளிவந்த நாவல் 2021 இல் வாசிக்கும்போதும் புத்துணர்வைத் தந்தது. ஆம் இந்நாவலின் களமும், மொழியும் பேசப்பட்டிருக்கும் விஷயங்களும் பழைய கரு வாக இருக்கலாம். யதார்த்தம் எப்போதோ அலுத்துப் போய், நவீனமும், பிறகான நவீனமும் சோபையிழந்த இந்நாட்களிலும் இந்த நாவலை வாசிக்கும்போது அத்தனைப் பொங்குதல்கள் மனதிற்குள் நிகழ்ந்தன. நான் தள்ளிவைத்திருக்கும் பல விஷயங்களை, இலக்கியம் குறித்தான என் கட்டுப்பெட்டி நம்பிக்கைகளை, அசாதரணங்களே தேவை எனும் கருத்தியலை இந்த நாவல் சற்று அசைத்துப் பார்த்தது. 

இந்தியச் செவ்வியல் படைப்புகளில் இருக்கும் பொதுத் தன்மைகள் குறித்து முன்பு எழுதியிருக்கிறேன். வங்காள மற்றும் கன்னட இலக்கியப் படைப்புகளில் இருக்கும் பொதுத் தன்மை மலையாளச் சூழலுக்கும் பொருந்துகிறது. மீறல்கள் மட்டும் இலக்கியமாவதில்லை, சாதாரணங்களும் இலக்கியம்தான். என்ன ஒன்று, சாதாரணங்களை எழுதும்போது இன்னும் கொஞ்சம் கவனமாக, கூர்மையாக எழுதவேண்டும் இல்லையெனில் பாதாளத்தில் விழுந்துவிடும். எம்.டி தன்னுடைய முதல் நாவலிலேயே இதைத் திறம்படச் செய்திருக்கிறார். நாலுகெட்டு நாவலுக்கு கேரள சாகித்ய அகடாமியும் கிடைத்தது.  23 வயது இளைஞனின் முதல் நாவலுக்கு இத்தகைய விருதுகள் கிடைப்பது கேரளத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்று.

திடீரென எம்.டியின் மீது கவனம் குவிந்ததும் பார்க்காமல் இருந்த அவரின் பழைய திரைப்படங்கள் ஒன்றிரண்டைப் பார்த்தேன். ’சதயம்’, ’பரிணயம்’,’பெரும்தச்சன்’ எனத் தள்ளி தள்ளி வந்து ’ஒரு வடக்கன் வீரகதா’வில் நின்றேன். அடுத்த மூன்று மணி நேரம் என்னிடம் இல்லை. வடக்கன் வீரகதாவின் திரைக்கதைக் கட்டமைப்பு அசாத்தியமானது. கீதாவின் தற்கொலை காட்சிக்குப் பிறகு சந்துவின் மீது கோபமும் பரிதாபமும் எரிச்சலும் ஒரு சேர எழுந்தது.

“என்ன மாதிரியான கதாபாத்திரம் இது?, இவன் யாருக்கு நேர்மையாக இருக்கிறான்? என்ன பைத்தியக்காரத்தனம் இது?”  என்றெல்லாம் மனம் பொருமிக் கொண்டது. ஆனால் இறுதியாக, ஒரு மனிதன் தனக்கு நேர்மையானவனாக இருப்பதுதான் முக்கியம் எனத் தோன்றியது, அதற்காக அவன் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். இதைத்தான் அற உணர்வு என்கிறோம். அறத்தின் பால் நிற்பதும் அதையே வாழ்வாகக் கொள்வதும் கடும் சவால்கள் நிறைந்தது. சந்து கதாபாத்திரம் அதையெல்லாம் எதிர்கொள்கிறது. 

மம்மூட்டி, மாதவி, கீதா, பாலன். கே.நாயர், சுரேஷ்கோபி, சமீபத்தில் மறைந்த கலை இயக்குனர் பி.கிருஷணமூர்த்தி போன்றோரின் மிகச் சிறப்பான பங்களிப்பைக் காட்டிலும் இந்தக் கதையின் பிரம்மாண்டம் தனித்துத்தான் தெரிகிறது. 

மலையாளச் சினிமாவின் ஜாம்பவன்களான அரவிந்தன், கேஜி.ஜார்ஜ், அடூர்,பரதன்,பத்மராஜன், லோஹி வரிசையில் எம்.டிக்கு இருக்கும் இடம் இன்னும் விசேஷமானது. ஒரு இலக்கியவாதியாகவும், சினிமாக்காரராகவும் ஜெயித்தவர். எழுத்தச்சன் எனும் சொல்லுக்குப் பொருத்தமானவர்


No comments:

Featured Post

test

 test