Showing posts with label தனிமையின் இசை. Show all posts
Showing posts with label தனிமையின் இசை. Show all posts

Tuesday, March 9, 2010

புத்தக வெளியீட்டு விழா


வம்சி வெளியீட்டு விழாவில் என்னுடைய மூன்று புத்தகங்களும் வரும் சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையில் வெளியிடப் பட இருக்கின்றன. தமிழ்நதி சந்திரா முத்து கிருஷ்ணன் ஆகியோர் என் புத்தகங்களைக் குறித்து பேச இருக்கிறார்கள். வம்சியின் மற்ற புத்தகங்களும் உடன் வெளியிடப்படுவதால் திரளான படைப்பாளிகள் கலந்து கொள்கிறார்கள். மூன்று நாள் பயணமாக வரும் நானும் விழாவில் பங்கு கொள்கிறேன். நேரமும் சந்தர்ப்பமும் வாய்க்கும் நண்பர்கள் இச்சிறு அறிவிப்பை அழைப்பாக ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும். முதல் புத்தக வெளியீட்டை சொந்த ஊரில் நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். வரும் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து ஞாயிறு மதியம் வரை 9952236058 என்ற எண்ணில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, December 26, 2009

தனிமை இசைத்த குறிப்புகள் சில…- தமிழ்நதி

அன்புள்ள அய்யனாருக்கு,

உனது கவிதைக்கு முன்னுரை எழுதித் தரும்படி கேட்டிருந்தாய். பழகிய வடிவங்கள் முன்னுரையிலும் சலித்துவிட்டன. அதிலும், நண்பன் ஒருவனைப் படர்க்கையில் விளித்து எழுதுவதில் சிரமம் இருக்கிறது. நண்பன் மீதான அபிமானம் அவனது கவிதைகள் மீதான அபிமானமாகாது என்பதை நீயும் அறிவாய். எனினும்,

அவஸ்தைகள்
எதுவுமற்ற கவிஞன்
சூல்கொண்ட மேகத்தை
கலைக்கும் புயலைப்போல
தேர்ந்தெடுத்த சொற்களைக்கூட
இரக்கமற்ற பேனாவைக் கொண்டு
அழிக்கிறான்…
வசீகரமிழந்த சொற்கள்
மெல்ல உதிர்க்கின்றன
கவிதைக்கான வேட்கையையும்
இருத்தலின் நம்பகத்தன்மையையும்.
என்ற உனது சொற்களை வாசித்த பிற்பாடு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. ‘சூல்கொண்ட மேகத்தைக் காற்று கலைப்பது’மழையின் பொருட்டே என நீ அறியமாட்டாயா?

எழுத்துள் நுழைய முயலும் வாசகனை-வாசகியை வழிமறித்துப் பேசி, முன்முடிவுகளுடன் உள்ளே அனுப்பிவைக்கிற செயலாக முன்னுரை எழுதுவதென்பது சிலசமயங்களில் எனக்குத் தோன்றியிருக்கிறது. அதை அறிமுகம் என்றும் நுழைவாயில் என்றும் சொல்கிறார்கள். அதிலும் கவிதையானது அதை எழுதுபவர்களுக்கு நெருக்கமானதும் அந்தரங்கமானதும்கூட. மனதின் நுண்ணிய வரிகளால் நெய்யப்பட்ட மெல்லிய பட்டுத்துகில் அது. அதை அனுபவிக்க மட்டுமே முடியும். முன்னுரை, விமர்சனம் என்ற பெயரில் அதை உதறி விரித்து உரசிப் பார்ப்பது கொஞ்சம் குற்றவுணர்வைத் தருகிறது.

உன் கவிதைகளை மனதொன்றி முழுவதும் வாசித்தேன். ஒரு வகைமைக்குள் மட்டும் சிக்கிவிடாமல் தனிமை, உறவுகளின் பிரிவு, பிழைப்பின் பொருட்டு நிலம் பிரிந்த துயரம், காதல், காமம், சுயவிசாரணை மற்றும் எள்ளல், கழிவிரக்கம், மாயத்துள் விழுத்தி மயக்கும் கற்பனாவுலகம், சமூகத்தின் போலித்தனங்கள் குறித்த கசப்பு, இயற்கை, நெகிழ்ந்து கரைதல், எழுத்தெனும் பிடிமானம் எனப் பரந்துபட்ட தளங்களில் உன் கவிதை உலவியிருப்பது பிடித்திருந்தது. உபரியாக வாசிக்கும்போது தென்படாத கவித்துவத்தை தொகுப்பாக வாசித்தபோது உணரமுடிந்தது. இல்லாவிட்டாலுமென்ன? முதல் தொகுப்பு பெறும் ‘மன்னிப்பு’க்கு நீயும் உரித்துடையவனே. இன்றைக்குத் தமிழிலக்கியப் பரப்பிலே கவிஞர்கள் என்று அழைக்கப்படும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நீயும் இணைந்துவிடும் ‘விபரீதத்தை’முன்மொழிவதில் எனக்கொன்றும் தயக்கமில்லை. என்னை வழிமொழிந்து சொல்வது அவரவர் பாண்டித்தியத்தையும் விருப்புவெறுப்பையும் வட்ட-சதுரச் சார்பு நிலைகளையும் கவிதை குறித்த மனச்சித்திரங்கள் மற்றும் வகுத்திருக்கும் வரைவிலக்கணங்களைப் பொறுத்தது.

அவரவர்க்கான மொழியைக் கண்டடையும் அலைச்சல் பொதுவாக முதல் தொகுப்புகளில் துருத்தித் தெரியும். உன்னுடைய கவிதைகளில் ஏதோவோர் ஒருங்கிணைந்த மொழியமைவு கூடியிருப்பதாக நான் உணர்ந்தேன்.

நாம் படித்த கவிதைகள் நமக்குள்ளிருந்தபடி நாமறியாதபடி நம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றனவோ என்று உன்னுடைய சில கவிதைகளை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன். நீ சிலசமயங்களில் பிரேம்-ரமேஷ் ஐ, கல்யாண்ஜியை, கலாப்ரியாவை, ஏன் என்னைக்கூட (ஆற்றின் உட்பரப்பு – நதியின் ஆழத்தில்) நினைவுபடுத்துகிறாய்.
காதலெனும் சொல்லின் மீதேறி காமத்தளத்தில் சென்று இறங்கும்- ‘விழி மூடிப் பால் குடிக்கும்’ பாசாங்குப் பூனைகளைப் பற்றி எழுதியிருந்தாய்.

ரகசியங்களைத் தெரியும்படி புதைத்துவைப்பதின்
பின்னாலிருக்கும்
குறுகுறுப்புகள்
தெரியாமலில்லை
மறுத்தலின்
ஒளிதலின்
புரியாமலிருப்பது போன்ற
பாவனைகளின்
அரசியலெல்லாம்
கண்டுபிடித்தலின்
தேடுவதன்
கிறங்குவதன்
மீதிருக்கும் வேட்கைகள்தான்
என்பது எனக்கும்
தெரியும்.
---
பசிகொண்ட உடல்கள்
தேவதைகளின் வடிவமேற்று
ஆளரவமற்ற இடங்களில்
சக உடல்களைத் தின்றுதீர்க்கிறது
---
எல்லாக் காதல் கவிதைகளும்
ஓர் அறியாத பெண்ணின் ஆடைகளை
உரித்துப்
பார்ப்பதற்காக மட்டுமே எழுதப்படுகின்றன.
ஆண்-பெண்களின்
ரகசியமறியும் கருவி
என்பதைத் தவிர
காதல் கவிதைகள் குறித்துச் சொல்ல
எதுவுமில்லை.
---

‘காதலின் மீது உனக்கேன் இத்தனை காழ்ப்புணர்ச்சி?’என்று நான் கேட்கப் போவதில்லை. ‘காதல் உலகத்தை ஒரு நொடியில் அழகாக்கிவிடுகிறது, மனிதர்களைக் கனியச்செய்கிறது’ என்று நான் சொன்னால் அதை நீ ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. நான் கேட்பதெல்லாம், ‘காதல் என்பது காமத்தைச் சென்றடையும் வழியென’எத்தனை தடவைதான் எழுதுவாய் என்பது மட்டுமே. ‘கூறியது கூறல்’என்றுன்னைக் குற்றம் சொல்லப்போகிறார்கள்.

சாதாரண வழிசெல்லும் வார்த்தைகள் கடைசி வரியில் திடும்மெனக் கவிதையாகிவிடுவதை பல சமயங்களில் உணர்ந்தேன். ‘நேற்றுப் பெய்த மழை’என்ற கவிதையில் ‘நீ மழை பெய்ததாய் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாம்’என்று முடியும்போது உள்ளுக்குள் துயரமழையொன்று அடித்துப் பொழிய ஆரம்பித்தது. மழைக்கென ஐந்து கவிதைகளை தந்துவிட்டபோதிலும், பெரும்பாலான உன் கவிதைகளில் ஒரு வரியாவது மழையின் சில்லிப்பில் சிலிர்க்கத்தான் செய்கிறது.

பெண் ஈயம், பித்தளை, கட்டுக்களுடைத்து வெளிவரல்,
விளிம்பின் மொழி, சம உரிமை, இட ஒதுக்கீடு எல்லாவற்றின் மீதும்
மது நுரை பொங்கப் படர்கிறது
உடல் மட்டும் தனக்கான கட்டுக்களுடைத்து
நடனமிடத் துவங்குகிறது.
என்ற வரிகளினூடாக, எல்லாவிதமான ஒப்பனைகளும் கலைந்து சுயம் வெளிப்படும் தருணம் மதுவருந்தியிருக்கிறபோதே சாத்தியம் என்பதைச் சொல்வதற்கு முற்றிலும் தகுதியானவன்தான் நீ.

‘மய்யம்’என்ற பகுதியுள் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் பலவற்றுள் மாயா யதார்த்தவாதம் என்ற சித்து விளையாட்டை வாசிக்க நேர்ந்தது. நீலிகளும் தேவதைகளும் சாத்தான்களும் கடவுளரும் வெகு சாதாரணமாக உலவும் - மூத்திரமும் குருதியும் ஸ்கலிதமும் அளவுக்கதிகமாக வழியும் - கவிதைகளை நான் அவசரமாகக் கடந்தேன். ஒரே சமயத்தில் அதியதார்த்தத்தினுள்ளும் அதிமாயத்தினுள்ளும் உலவுவது, உனக்கு மட்டுமே சாத்தியம் அய்யனார். வகைதொகையில்லா சில உரையாடல்கள், உண்மைகளைப் பேசுதல், கண்டறிதல் மற்றும் எழுதுதல், மதுவிடுதி நடனப்பெண் ஈயம் மற்றும் பித்தளை போன்ற பின்னவீனத்துவ நினைவுபடுத்தல்களுடன் கூடிய தலைப்புகளுடனும் வழக்கம்போல ஒரு ஒவ்வாமையை உணர்ந்தேன்.

ஜெயமோகன்களைப் படிக்காதேவெனத் திட்டி
கோபியைக் கொடுத்திருந்தேன்
வந்தவுடன் பிடிக்கவில்லையெனத் திருப்பிக் கொடுத்தாள்
“ஏன்?”என்றதற்கு
முனகலாய்ப் பதில் வந்தது
“அசிங்கமாய் இருக்கு”
எது அசிங்கமென்றதற்குப் பதில் எதுவும்
சொல்லாமல் போய்விட்டாள்
நான் பாலகுமாரனைக் கொடுத்திருந்தால்
இன்றிவளை முத்தமிட்டிருக்கலாமென
நினைத்துக்கொண்டேன்
என்று சராசரிப் பெண்களின் வாசிப்பு ரசனையைச் சாடியிருந்தாய். ஆண் அறிவுஜீவி என்னும் மிதப்பு அதிலிருந்ததைக் கவனித்தேன். பாலகுமாரனை வாசிக்கும் பெண்கள் எல்லாம் இழுத்தவுடன் வந்து நெஞ்சில் விழுந்து முத்தம் கொடுக்குமளவிற்குக் கவிழ்ந்துபோகக்கூடியவர்களா என்ற எண்ணமும் எனக்குள் வந்துபோனது. மறுவளமாக, கோபியைப் படிக்கிறவர்கள் உறுதியானவர்கள்! ம்! சிலசமயங்களில் நம்மையறியாமலே நமது கசடுகளை வெளியில் கொட்டிவிடுகிறோம் என்று தோன்றுகிறது. நீ என்ன சொல்கிறாய்?

உண்மையைச் சொன்னால், உனது தொகுப்பை நான் கொஞ்சம் அசிரத்தையாகவே வாசிக்க ஆரம்பித்தேன். இணையத்தில் கொட்டிக்கிடக்கிற கவிதைகள் தந்த மிரட்சி அந்த அசிரத்தையைத் தந்திருக்கலாம். ஆனால், தேறக்கூடிய (எனது அளவுகோலில்) சில கவிதைகளை நீ எழுதியிருப்பதாக வாசித்து முடித்ததும் உணர்ந்தேன். ‘நாள்தோறும் நிறம் மாறும் தேவி’என்ற கவிதையில் கணந்தோறும் தளும்பும் பெண்மனதையும் அவளது மிகமெதுவான தந்திர விலகலையும் அழகாகச் சொல்லியிருந்தாய்.

‘வெறுமை கசப்பு வெறுப்பு மற்றும் தனிமை’, ‘பொதுப்படுத்தி மகிழ்தல்’ போன்ற ‘வெறும்’கவிதைகளைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

முன்மாதிரிகளின்
பிரமாண்டங்களில்
ஒன்றுமில்லாததாகிறது
கிளர்ந்தும் திரண்டும் எழும்
அடர்த்தியற்ற வடிவமற்ற
உள்ளெழுச்சிகள்
இருப்பினும்…
தினம் பூக்கும்
பூக்கள்
எதை நிரூபிக்கிறது
பூத்திருத்தலைத் தவிர்த்து?
முன்மாதிரிகளின் பிரமாண்டங்களைக் கண்டு நீ மிரட்சியடைய வேண்டியதில்லை. மேலும், பிரமாண்டம் என்பதன் வரையறைதான் என்ன? எழுதும்போது நீ உன்னளவில் உள்மனதுள் பூக்கிறாய். எழுது… எழுது… அதுவொன்றே நமக்குப் போதும்.

நட்புடன்
தமிழ்நதி
01-10-2009

Tuesday, December 22, 2009

தனிமையின் இசை - என்னுரை

கடந்த மூன்று வருடங்களாய் என் வலைப்பூவில் எழுதப்பட்ட கவிதை வடிவ மாதிரிகளின் தொகுப்புதாம் இவை. எழுதப்பட்ட தருணங்களில் இவை அச்சிற்கானவை என்கிற தயாரித்தல்கள் எனக்கில்லாமல் இருந்தன. சுய புலம்பல்களாகவும், மிகவும் தன் வயமான உலகின் வெளிப்பாடாகவும், இருத்தலின் ஆசுவாசமாகவும் இவ்வடிவங்கள் என்னிலிருந்து தன்னைக் கட்டமைத்துக் கொண்டிருக்கலாம். எழுதப்படும் வரையிலிருந்து எழுதப்பட்ட பின்பு வரை அதே வார்த்தைகள் தரும் உணர்வு வெவ்வேறாய் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் பெருமித மகிழ்வுணர்வைத் தரும் இதே வார்த்தைக் கோர்வைகள் பின்பொரு நாளில் ஏளனத்தையும் சலிப்பையும் உண்டாக்கி விடுகின்றன. எப்போதைக்குமான மகிழ்வுகளையும் எப்போதைக்குமான இழத்தல்களையும் காலம் மிகச் சுலபமாய் கடந்து போகிறது.

இக்கவிதைகளில் மிகப் பிரதானமாய் இருப்பது நான் தான். என்னிலிருந்து என்னைக் கண்டறிவதே மிகக் கடினமாய் இருக்கிறதெனக்கு. மற்றவர், மற்றது இவைகளின் மீதெல்லாம் எனக்குப் பெரிதாய் அக்கறையோ வருத்தமோ இல்லாமலிருந்திருக்கிறது என்பதை இத் தொகுப்புகள் அறியத் தருகின்றன. போலித்தனம் குறைவான நார்சிச மனம் என்கிற சுய மதிப்பீடுகள்தாம் தொடர்ந்து இயங்க குறைந்த பட்சக் காரணமாய் இருக்கிறது. இதற்கானதென்று அறியாத என் புற அலைவுகளில் கிடைத்த ஏமாற்றமும் அந்நிய வாழ்நிலங்கள் தந்த அயற்சியும் அக அலைவுகளை நோக்கி இடம் பெயரச் செய்தன. புறம் அகம் இரண்டையும் ஒரே கோட்டில் சமன் செய்வதுதான் இக்கவிதைகளின் உயர்ந்த பட்ச சாத்தியமாக இருக்கிறது.

பிறழ்ந்த மனதின் பல்வேறு இடுக்குகளிலிருந்து வெளியேறும் வார்த்தை பூதங்கள் வெளித்துப்பும் கோர்வைகள் மயக்கத்தையும் பயத்தையும் இரு தரப்பிலும் உண்டாக்குகின்றன. எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் வார்த்தைகளில் பிடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கைகள் கவிதை வடிவத்தின் மீதான காதலை வலுவூட்டுகின்றன.

அலைந்து திரிந்து பிறழ்ந்து தற்போது மய்யமாகிப் போன விளிம்பு மனதின் அந்தந்த நிலைப்பாடுகள் இவைகள் என்பதைத் தவிர்த்து இக்கவிதைகள் குறித்து எழுதியவனாய் சொல்ல வேரெதுவுமில்லை. இதுவே மிகையாகவும் இருக்கலாம். மற்றபடி எவரும் பேசாததையோ எவராலும் சொல்லிவிட முடியாததையோ நான் பேசிவிட மெனக்கெடவில்லை. என் வாழ்வு எனக்குத் தந்ததை வன்மமாகவும், குரூரமாகவும், இரகசியக் கிசுகிசுப்பாகவும் உங்களிடம் கடத்த முயன்றிருக்கிறேன். அந்தந்த உணர்வுகளை அந்தந்த மாதிரியே இவைகள் உங்களுக்குள் கடத்தியிருந்தால் அதுவே இதற்கான நிறைவாய் இருக்க முடியும். அப்படி இல்லாமல் போனாலும் அஃது எவரின் குறைபாடுமில்லை.

வலைப்பூ வாசகர்களுக்கு, இணைய நண்பர்களுக்கு, சக வலைப்பதிவர்களுக்கு, வலைப்பூத் திரட்டிகளுக்கு என் முதல் நன்றியும் அன்பும். எனக்கான ஆசுவாசத்தை, நிறைவை அல்லது அதைப் போன்ற ஒன்றை இக்காலகட்டங்களில் எனக்குக் கிடைக்க இவ்விணைய வெளி உதவியாய் இருந்திருக்கிறது. எப்போதும் விழிப்பாய் இருந்த எழுத்துச் சோம்பலனை சக வலைப்பூக்களும் பதிவர்களும் எழுந்து சோம்பல் முறிக்க உதவியிருக்கின்றனர்.

எதிர்பார்ப்புகளற்ற அன்பை எல்லா விதங்களிலும் எனக்குத் தந்துகொண்டிருக்கும் பவாவும் ஷைலஜாவும் இப்புத்தத்தின் மூலமாய் இவ்வுலகில் பிரவேசிக்க வைத்திருக்கிறார்கள். என்னுள் புதிய நம்பிக்கைகளை, துளிர்ப்புகளை மலரச் செய்திருக்கும் இவர்கள் என் வாழ்வில் அபூர்வமானவர்கள்.

நூறு பக்கங்களுக்கு மேல் விரல்கள் நோகத் தட்டச்சி, நேர்த்தியான முகப்பு அட்டையை மிகுந்த சிரத்தையுடன் உண்டாக்கி இவ் உள்ளடக்கத்தில் குறைந்திருக்கும் அழகியலை புத்தக வடிவத்தின் மூலமாய் கூட்டிய வம்சி நண்பர்களுக்கு என் நன்றியும் அன்பும்.

வலையெழுத வந்ததிலிருந்து இன்று வரை என்னை வாசித்தும், விமர்சித்தும் சகித்தும் கொண்டிருக்கும் தமிழ்நதிக்கு என்னுடைய அன்பு.

நன்றி என்கிற ஒற்றைச் சொல்லினை மட்டும் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் வேண்டிய மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் என் சந்தர்ப்பத் துய்த்தல்களை சில நேரங்களில் புன்னகையோடும் சில நேரங்களில் அசூசையோடும் பார்த்துக் கொள்கிறேன்.

அய்யனார்
துபாய்
30 நவம்பர் 2009

Monday, December 21, 2009

மூன்று புத்தகங்கள் : என் முப்பரிமாண உலகம்


இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்கிற தலைப்புகளில் வர இருக்கின்றன. வலைப்பூவில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்து நேற்று வரை இங்கு எழுதப்படுபவைகள் புத்தகங்களுக்கான தயாரிப்புகள் அல்ல என்பதுதான் என் நம்பிக்கையாக இருந்து வந்தது. பவா மற்றும் ஷைலஜாவின் மிகுதியான அன்பே இப்புத்தகங்களுக்கான பிரதான காரணமாகும். இந்த மூன்று புத்தகங்களும் நண்பர்களின் உழைப்பையும் நேரத்தையும் உறிஞ்சிவிட்டுத்தான் நேர்த்தியாய் வெளிவருகின்றன.பவா அய்ந்து புத்தகங்களை கொண்டுவர விரும்பினார் என் சோம்பலும் பயமுமே அய்ந்தை மூன்றாக்கியது. இதுவரைக்கும் எழுதப்பட்ட கவிதைகளை கதைகளை தொகுத்ததில் நதியலையின் பங்கு மிக முக்கியமானது. தொகுக்கப்பட்டவற்றை புத்தக வடிவமைப்பினுக்கு மாற்ற முடியாமல் போனது யூனிகோடை பேஜ்மேக்கரில் கொண்டு வர நண்பர்கள் சகிதமாய் தலைகீழாய் நின்றும் முடியவில்லை. வம்சி நண்பர்கள் இம்மூன்று தொகுப்பையும் விரல்கள் நோக மீண்டும் தட்டச்சியிருக்கின்றனர். இறுதி கட்டத்தில் கதிர் தன் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி யூனிகோடை பேஜ்மேக்கரில் கொண்டுவந்திருக்கிறான். புகைப்படக் கலைஞர் பினு பாஸ்கர் புத்தக அட்டைகளை வடிவமைத்ததுத் தந்ததுடன் என் புகைப்படத்தையும் எடுத்துக் கொடுத்தார். தனிமையின் இசைக்கு தமிழ்நதியும் நானிலும் நுழையும் வெளிச்சத்திற்கு நதியலையும் உரையாடலினிக்கு ஜமாலனும் தங்களது பகிர்வுகளைத் தந்திருக்கின்றனர்.

இத்தனை பேரின் நேரமும் ஆற்றலும் என் தனியொருவனின் தம்பட்டங்களுக்காக வீணாகி இருப்பதை நினைக்கும்போது லேசாய் குற்ற உணர்வு எழுகிறது. புதியதொரு வாசகனை இப்புத்தகங்கள் கண்டடைய வேண்டுமென்பதற்காகத்தான் இத்தனை முயற்சியும் என்பது சற்று ஆறுதலானதுதான். ஆனால் புதிய வாசகனுக்கு/வாசகிக்கு புதிய கிளர்ச்சிகளை என் பழைய உணர்வுகள் தந்துவிடமுடியுமா என்கிற சந்தேகங்கள் இருந்தன. அது நேற்று இரவு சற்றுக் குறைந்தது. க.சீ.சிவக்குமார் தன் பக்கத்தில் என் இரண்டு தொகுப்புகளை படித்து முடித்ததும் என் அருகாமையை விரும்பியதாக குறிப்பிட்டிருந்தார். என் தொகுப்புகள் குறித்தான லேசான நிம்மதியை அக்குறிப்புகள் வரவழைத்தன. அவருக்கு என் நன்றி. மற்றபடி என்னைத் தொடர்ந்து நகர்த்தும் விசை நண்பர்களின் அன்பாக இருந்து வருகிறது.

இங்கு கொட்டப்பட்டிருக்கும் அத்தனை வார்த்தைகளுக்கும் பின்னாலிருக்கும் பெண்களை, காதலிகளை, ஸ்நேகிதிகளை, நண்பர்களை, துரோகிகளை, எதிரிகளை, அலைக் கழித்த வாழ்வை, அள்ளிக் கொடுத்த வாழ்வை மிக நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

Featured Post

test

 test