Friday, May 29, 2009

உடலைப் புசித்தல்


விழித்தெழுந்த காலையில்
அவளுடலைத் தின்னும்
வேட்கை யுதித்தது.
முழு உடலை இரண்டாய் மடித்து
லேசாய் உப்பு மிளகு தூவி,
கடித்துத் தின்று கொண்டிருந்தேன்.
உச்சியின் தகிப்பில்
சதைகளை கடித்து இழுத்து
உதடுகளில் இரத்தம் வழிய
அவளுடலைப் புசித்தேன்.
மாலைத் திரும்புகையில்
அதே உடலை நீள வாக்கில்
இரண்டாய் கீறி
பிளவுகளின் உள் நுழைந்து
பத்திரமாய் அமர்ந்து கொண்டேன்.
.....
இரவை நினைத்தால்தான்
பயமாக இருக்கிறது.

Wednesday, May 20, 2009

ப்ளாஸ்டிக் முகங்கள்


ஒரு இனத்தினை அழித்து விட்டதாய்
கொக்கரித்துக் கொள்ளுங்கள்.
எமது மண்ணை
நீங்களும் முத்தமிடுங்கள்.
ஆளுயர கட் அவுட்டுகளையும்,
அசையாத நாற்காலிகளையும்,
சில வருடங்கள் தக்க வைத்துக் கொள்ளுங்கள்....

இங்கிருப்பவர்கள்
வழக்கம் போல்
அஞ்சலிக் கவிதை
எழுதிக் கொல்வதோடு
நின்றுவிடாது
அள்ளி முடியாத
இத்தாலிய திரெளபதியின்
கூந்தலில் சிக்கெடுக்க
உதவிக் கொண்டிருங்கள்...

ப்ளாஸ்டிக்
சோடிப்புகளின்
பின் துருத்திக் கொண்டிருக்கும்
உங்களின் துணுக்குறல்களே
எமக்கு வேண்டியது

Saturday, May 16, 2009

8.குளம்,இரை,மீன் அல்லது குளம்:இரை:மீன்

வ.வெ.தொ.அ.வெ.கு - 8

குளம்:

மிகச்சிறிய நீச்சல் குளம் அல்லது மிகப்பெரிய நீர்த்தொட்டியினைச் சுற்றி இருக்கைகள் போடப்பட்டிருக்கும் அந்த மதுவிடுதி எனக்குப் பிடித்தமானது.ஆட்கள் இல்லாத முன்னிரவில் போய், கூட்டம் வரத் துவங்கும் நள்ளிரவில் இடத்தை காலி செய்வது என் வழக்கம்.சமீப காலமாய் போயிராததால் பழைய சேச்சிகளைக் காணவில்லை.தென்னிந்திய மனங்களை பித்தம் கொள்ள வைக்கும் உடலழகு சேச்சிகளுக்கே வாய்த்திருக்கிறது.சந்தன நிற தேகம் கொண்டவர்கள் சந்தனக் கீற்றை நெற்றிக்கும் வைத்திருப்பது சின்னக் கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது.தினம் தலைக்கு குளிக்கும் வழக்கத்தையெல்லாம் இவர்களுக்கு வனதேவதைகள் தந்துவிட்டிருக்கக் கூடும்.ஈரக்கூந்தல் பின் முதுகில் தன் தடத்தை பதித்திருக்கும் சுவடுகள் என்னால் எழுத முடியாமல் போகும் மிகச் சிறந்த கவிதைகள்.ஒவ்வொரு முறை போகும் போதும் அந்த நீர்த் தொட்டியின் வெறுமை என்னவோ செய்யும். ”சில மீன்களை அந்நீரில் விடுங்களேன்” என்ற கோரிக்கையை எவரிடமாவது வைக்கலாம் என்கிற எண்ணங்கள் எண்ணங்களாக மட்டுமே ஒவ்வொரு முறையும் தேங்கி விடுகின்றன.மீன்கள் உலவும் தொட்டிக்கு அருகாமையில்,மீன்களை மட்டும் பார்த்தவாறு மீன்களோடு அடியாழம் சென்று, துழாவி, திரும்பி, மீண்டும் மீனின் உலகத்திற்கு செல்ல உதவும் ஊக்கியினை ஒரு மிடறுக் குடித்து, மீண்டும் மீன்களோடு உலாவப் போவது நன்றாக இருக்கும்.எனக்கந்த சூழல் இல்லாமல் போனதால் மீனின் சாயல்களை கண்களில் கொண்டபடி தரையில் உலவும் சேச்சிகளின் விழி மீன்களை மெல்லிய இருளில் தேடிக்கொண்டிருப்பேன்.அது சாத்தியப்படாதபோது, நினைவுகளில் எப்போதும் உலவும் மீன்களுக்கு என்னை இரையாக்கிக் கொண்டிருப்பேன்.சமயத்தில் மீன் எனக்கிரையா? நான் மீனுக்கிரையா? எனக் குழம்பிப் போவேன்.எனக்கான குவளையில் சந்தன நிற சேச்சி தேவதைகள் மதுவை நிரப்பும் நிமிடங்கள் அந்த கணத்தின் சங்கடமான முள் நொடிகள். நெகிழ்வும் கூச்சமுமான அந்த நொடியின் பரவசத்தினை, மீன்கள் என்னை இரையாக்கத் துவங்கும்போது கேலி செய்கின்றன.எனக்காக உயர்த்தப்படும் புருவங்கள் கூட சில சமயங்கள் மிகுந்த நெகிழ்வைத் தந்துவிடுவதும் எனக்கான நெடுங் காத்திருப்புகளைக் கூட நான் சட்டை செய்யாதிருப்பதும் இரு வேறு குழப்பங்களாக என்னைத் தொடர்கின்றன.

இரை:

இந்த நகரம் முழுக்க கொன்றை மரங்கள் பூத்திருக்கின்றன.பச்சை இலைகளையெல்லாம் முழுவதுமாய் விடுவித்து விட்டு,கிளைகள் முழுக்க சிவப்பு நிறப் பூக்களைச் சூடி நிற்கின்றன. திடீரெனக் கொன்றை மரங்கள் எப்படி இந்த நகரத்தின் பிரதான சாலைகளில் வந்தன!என சென்ற வாரத்தில் வியந்து கொண்டிருந்தேன்.ஒரு வருடத்திற்கும் குறைவான காலம்தான் இந்தப் பிரதான சாலைகளில் நான் பயணித்திருக்கவில்லை.”அப்போதில்லாத கொன்றை மரங்கள் இப்போதெப்படி முளைத்தன?” என உரையாடலினியிடம் கேட்டேன்.
“அது பூக்காம இருந்ததால நீ கவனிச்சிருக்க மாட்டியா இருக்கும்!” என்றாள்.
மரங்களை கண்டறிய பூக்களின் முகவரி எனக்கெப்போதும் தேவைப்பட்டிருக்கவில்லை.”இது எப்படி நிகழ்ந்தது?” என என்னைச் சபித்துக் கொண்டிருந்தேன்.வெளிப்பூச்சுகளின் மூலமாய் உள்ளழகை அடையும் துய்ப்புக் குணமெனக்கு எனக் குமுறிக் கொண்டிருந்தேன்.
“வெளிப்பூச்சை வெளிப்பூச்சாகவே அணுகும் மனிதர்களுக்கு மத்தியில் நீ! உள்ளளழகை நோக்கி நகர்வது சற்று ஆசுவாசமானது”என்றாள்.
“ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை!” என்றேன்.
“இலுப்பைப் பூ வா? அதெப்படி இருக்கும் ?”
”மனச மயக்குற வாசனையோட ஒரு மாதிரி கிறங்க வைக்கிற பூ் அது...மரம் வெகு தொலைவில இருந்தாலும் வாசனை முன்னாலயே நம்மகிட்ட வந்திடும்...ஒரு மாதிரி வினோத வடிவத்தில இருக்கும் அந்தப் பூ...என் சிறுவயதில மத்தியான பொழுதில அந்த மரத்தடிப் பக்கம் போக என் பாட்டி அனுமதிக்காது...இலுப்பை மரத்தில வெள்ளை முனி இருக்குமாம்...ஒரு முறை கங்கா அத பாத்து மயங்கி விழுந்துட்டானாம்...இரவில அந்த மரத்தை கடக்கும் போது எனக்குள்ள எப்பவும் ஒரு துணுக்குறல் அப்போ இருக்கும்..ஆனா இப்ப இல்ல :)..ரொம்ப வருசத்துக்கப்புறம் சமீபமா என் அண்ணனோட மலை சுத்துறப்ப அடி அண்ணாமலை பக்கத்துல அந்த மரத்தை பார்த்தேன்...பூக்கள் மண்ணில சிதறிக் கிடந்தது....அதே வாசனை... அதே கிறக்கம்... சில பூக்களை சட்டைப் பையிலெ எடுத்து வந்தேன்...ஊர்லயே தங்கிடுறப்ப நிறைய மரங்களை வீட்டில வளர்க்கனும்.. இலுப்பை, கொன்றை,மகிழம்,பன்னீர் மரம் இதெல்லாம் ஏன் வீட்ல வளர்க்க மாட்டேங்கிறாங்கன்னு தெரில....வீடுன்னா புங்கையும் வேம்பும்தான் இருக்கு.ஆனா நான் இந்த மாதிரி மரங்களத்தான் வளர்க்கப் போறேன்”

........................

”என்னடி பேச்ச காணோம்?”

”உன்ன எனக்கு சுத்தமா பிடிக்காது.ஆனா உன் பேச்சுதான் என்ன உன்கிட்ட தேங்க விட்ருக்குன்னு நெனைக்கிறேன்.சரியான வார்த்தை ஜாலக்காரண்டா நீ!”

”அப்படியா?”

”என்ன நொப்படியா?”

”என்ன எது உங்கிட்ட தேங்கவிட்ருக்குன்னு தெரியுமா?”

”ஒண்ணும் தெரிஞ்சிக்க வேணாம்”

”இதான்..இந்த விலகல்தான்..பசுந்தளிர்களில சிதறும் நீர்த்துளி மாதிரி இருக்க நீ! எல்லாத்தையும் ரொம்ப அளவோட பேச வேண்டியிருக்கு உன்கிட்ட.. கிடைக்கிற எல்லாத்தையும் பயன்படுத்திக்கிற மோசமான குணம் இல்ல....அதான் அதான் உன்ன விலக்க முடியாம இருக்கேன்..”

“போதும் போதும் ரொம்ப கத விடாத”

மீன்: அல்லது குளம் : இரை: மீன்


எனக்காக எவரும் காத்திருக்காதது மதுவிருக்கும்போது ஆசுவாசமாகவும் மதுவில்லாதபோது அபத்தமாகவுமிருக்கிறது.எவை உன்னதம் எனக் குழப்பமாக இருக்கிறது.எப்போதும் தனித்திருக்க சபித்திருக்கப்பட்டவனா? ஆசீர்வதிக்கப்பட்டவனா? என்கிற குழப்பங்கள் வேறு இடை இடையே...எதுவிருப்பினும் இந்த இரவு அற்புதமானது.நெரிசலும்,வாகனங்களும் இல்லாத இந்த நீள,அகல,பிரதான நேர்கோட்டு சாலையில் லேசாய் வியர்த்தபடி நடப்பது நன்றாகத்தானிருக்கிறது.நினைவில் அவளும் பாடலுமாய் இணைந்திருந்தனர்.

”விழியிலே மணி விழியில் மௌளன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்”

இந்தப் பாடலை அவள் திரும்பத் திரும்பத் திரும்பத் த்பம்ருதி பாடச் சொல்லி கேட்டது மிகவும் பிடித்திருந்தது.ஒரே பாடலை தொடர்ச்சியாய் மூன்று மணிநேரம் கேட்கும் கிறுக்கு அவள்.உன் சின்னச் சின்ன கிறுக்குத்தனங்கள் தான் பிசாசே! உன்கிட்ட ஒட்டிக்க வச்சது.. என்பதை எப்போதாவது சொல்ல வேண்டும்.நான் வசிக்கும் பொந்து இருக்கும் குறுகலான சாலைக்குள் நுழைந்ததும்,நள்ளிரவில் நடமாடும் கருப்பு தேவதைகள் அங்கங்கே தென்பட்டனர்.”ஏய் ஸ்வீட்ஹார்ட் வாட்ஸ்ப்” என்ற தேவதைக்கு கையாலாகத என் புன்னகையை மட்டும் தந்துவிட்டு பொந்தில் அடைந்து கொண்டேன்.

Thursday, May 14, 2009

ஒரு அடிமை ஏஜெண்டின் கொலைவெறித் தாக்குதல்

பேரெழுத்தாளப் பிதாமகர்களின் பக்கங்களை எட்டிப்பார்த்து ”காண்டா”கும் வழக்கத்தை சில காலமாய் நிறுத்தி வைத்திருந்தேன்.இணைய உரையாடலில் வந்த தமிழன் கறுப்பி ஒரு இணைப்பைக் கொடுத்து முந்தின நாளின் இரவை கசப்பாக்கினார்.

கிம் கி டுக் கின் ”தீவு” படத்தினைக் குறித்தான பகிர்வில் ஒரு வரி, ஒரே ஒரு வரி என்னைக் கொலைகாரனாகவும்,ஆஃப்ரிக்க கண்டத்தில் கறுப்பின மக்களை வேட்டையாடி, கை விலங்கிட்டு அமெரிக்காவுக்கு இட்டுச் சென்று விற்ற அடிமை ஏஜண்டாகவும்,ப்ரூப் ரீடராகவும்,மேதாவியாகவும்,விக்கிபீடியா ”காப்பி”யாளனாகவும் மாற்றிவிட்டிருக்கிறது.அந்தப் படு மோசமான வரி இதுதான்
நமது ”.....”imdb மற்றும் wikipedia வில் தரப்பட்ட தப்பும் தவறுமான தகவல்களை அப்படியே தனது விமர்சனமாக்கி இருக்கிறார்.
அந்த வரி தேவையற்றதெனும்படியான அனுஜன்யாவின் பகிர்வினுக்கு இப்படி பதில் தந்திருந்தேன்
அனுஜன்யா என் நோக்கம் ஜெமோவோ ”.....” அல்ல.வேறொரு கோணம்தாம் :)
பெருமதிப்பிற்குறிய சிருஷ்டிகர்த்தா எங்கேயும் போய் தேட வேண்டிய அவசியம் வந்துவிடாமலிருக்கவே imdb plot summary இணைப்பினை இப்படித் தந்திருந்தேன்
Imdb யில் இன்னொரு பிரகஸ்பதி இத்திரைப்படக் கதாநாயகி வாய்பேசமுடியதவள் என்பதாய் ஒரு விமரிசனத்தை எழுதியிருக்கிறார்.
அந்த plot summary இப்படித் தொடங்கும்
Mute Hee-Jin is working as a clerk in a fishing resort in the Korean wilderness; selling baits, food and occasionally her body to the fishing tourists.
கொரியத் திரைப்படங்கள் விமர்சகர்களால் சரியாக அணுகப்படுவதில்லை என்கிற ஆதங்கம்தான் அந்தப் பதிவின் பிரதானமாய் இருந்தது.மற்றபடி எவரின் புத்திசாலித்தனங்களையும் சந்தேகிப்பதோ அல்லது என் புத்திசாலித்தனங்களை அடுத்தவனை முட்டாளாக்கி நிரூபிப்பதோ என் நோக்கம் இல்லை.அந்த பதிவை சாதாரணமாய் படித்திருந்தாலே இந்த உணர்வைப் புரிந்து கொண்டிருக்க முடியும்.அப்படிப் புரியாமல் வேரொரு மனநிலையை அந்தப் பதிவு தந்திருக்குமெனில் அதற்காக வருந்துகிறேன்.மேலும் அவரைப் போன்றவர்கள் அந்தத் திரைப்படத்தின் கடைசிக் காட்சியை எப்படி சிலாகிக்காமல் விட்டார்கள்?மேலும் அவரின் விமர்சனம் ஹீ ஜின்னை ஒரு கொலைகாரியாக சித்தரிக்கும் அபத்தத்தைக் கூட அவர் உணரவில்லையா என்கிற பல ஆதங்கங்கள்தாம் அவரைப் பற்றிய என் ஒற்றை வரிக்கு காரணங்களாக இருந்தன.

”ஆனானப் பட்ட ஹிந்து தினசரி” என்கிற வரியைப் படித்த போது எழுந்த அதிர்ச்சியும் கசப்பும் இவரின் பிம்பங்களைத் தரைமட்டமாக்கியது.ஹிந்து வை மலம் துடைக்க கூட பயன்படுத்துவதில்லை என்கிறபடியால் இவர் அழைப்பு விடுத்திருக்கும் ப்ரூஃப் ரீடர் பணியை ஏற்க முடியாமல் போவதை மிகுந்த வருத்ததோடு பதிவு செய்கிறேன்.

நீ என்ன எப்படி கொற சொல்லலாம்? நீ எப்படி என்னோடதில தப்பு கண்டுபிடிக்கலாம்?.நான் முட்டாள்தான்யா! ஆனா நீ கொலகாரன்....காப்பி அடிக்கிறவன்!.....அறிவ அதிகாரமா பயன்படுத்துறவன்!!..... ப்ரூப் ரீடர் வேலைக்குதான் லாயக்கு... ஆனா நான் சிருஷ்டிகர்த்தா என்ன குண்டாந்தடியால அடிக்காதே!!!!.....
இந்த வரிகளை அவர் சத்தமாய் சொல்வதாய் நினைத்துப் பார்த்தேன் சிரிப்பு பீறிட்டெழுந்தது.அவருக்காக வருத்தப்படுவதைத் தவிர்த்து இந்த நல்ல மனநிலையில் என்னால் எதுவும் செய்துவிடமுடியவில்லை.

பன்முகத் தன்மை குறித்தெல்லாம் பாடமெடுத்தவர்கள் தமக்கென வரும்போது மட்டும் ஓட்டுக்குள் சுருங்குவதும் வன்மத்தை உமிழ்வதும் நம் சூழலில் புதிதில்லை என்றாலும் இவரின் உமிழ்தல்கள் இவரின் பிம்பத்தின்மீதே படிந்து போனது நிரந்தர சோகம்.

போகிற போக்கில் புழுதி வாறித் தூற்றும் வேலையை வேறு செய்து வருகிறார்.அதைப் பற்றியெல்லாம் விரிவாய் எழுத பயமாய் இருக்கிறது.பாபாவின் பூரண ஆசி பெற்ற ’ ஆ’ சாமி யை விமர்சித்தால் எங்கே நானும் மண்டையைப் போட்டு விடுவேனோ என்கிற பயம் வேறு நேற்று இரவிலிருந்து தொற்றிக் கொண்டது.இவருக்கு மேலே இருந்து படு பயங்கர பாதுகாப்புகள் வேறு வந்து கொண்டிருப்பதால் விரல்கள் நடுங்க இந்தக் கருமத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

Thursday, May 7, 2009

நேர்காணல் : நாம் இதழ் - 2

9. சிறு பத்திரிக்கை எழுத்தாளர்களை தவிர்த்து வலையுலக வாசிப்பில் உங்களை கவர்ந்த வலைதள எழுத்தாளர்களாக யாரை குறிப்பிடலாம்?
இன்றளவிலும் என்னை தனது மொழியால் தக்க வைத்துக் கொண்டிருப்பது சன்னாசியின் கரிசல் வலைத்தளமே.அவரின் சிடுக்குகள் நிறைந்த மொழியின் வீச்சு என்னால் கடந்துவிட முடியாததாய் இருக்கிறது. பெரும்பாலான வலைப்பூக்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.பிடித்தமானவைகளின் பட்டியல்கள் அதிகம்.சிறுபத்திரிக்கைக்காரர்களான நாகர்ச்சுனன், வளர்மதி, ஜமாலன் போன்றோர்களைத் தவிர்த்து சித்தார்த், டிசே தமிழன், நிவேதா, பெயரிலி, ஜ்யோவ்ராம்சுந்தர்,பைத்தியக்காரன்,ஆடுமாடு, சுகுணாதிவாகர், தமிழ்நதி, மோகன்தாஸ், கதிர்,சுரேஷ்கண்ணன்,மதி கந்தசாமி, ஆசிப்மீரான், மணிகண்டன்,லேகா,நதியலை,கென் என நீளமானவை.

10. கடல் கடந்த பின்னரும் பணிச்சூழலை கடந்து வாசிப்பதற்கான எழுதுவதற்கான நேரத்தை பெற முடிவதன் காரணம் ?
சொந்த விருப்பம்தான்.ஏற்கனவே சொன்னது போல எனக்கான நிறைவு இத்தளமாய் இருக்கின்றது.

11. பொதுவாக கவிதைகள் குறித்தான உங்களின் பார்வை
கவிதையை விட வேறெதுவும் என்னை இட்டு நிரப்பமுடியுமா என்பது சந்தேகம்தான்.இரண்டாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து மாறிக்கொண்டும் வடிவத்தை அவ்வப்போது ஒழுங்கமைத்துக் கொண்டும் தன் இருப்பை மீள்பதிவித்துக்கொள்ளும் கவிதையின் வடிவம் எல்லைகளற்றது.பாப்லோ நெருடாவின் துயரமான இந்த இரவில் ஒரு கவிதை எழுதலாம் என்கிற நிலைப்பாடுதான் வெகு இணக்கமாக இருக்கிறதெனக்கு வாழ்வு நம் மீது செலுத்துகிற வன்முறையாலோ அல்லது உணர்வுகளை அசைத்துப்பார்க்கும் மென் தொடுகையாலோ கவிதை தனக்கான விதைகளை ஒரு தனிப்பட்ட சுயத்திற்குள் விதைத்துவிட்டு காணாமல் போய்விடுகிறது.துளிர் விடும் விதைகள் சூழல்களின் ஒத்திசைவில் செடியாகவோ மரமாகவோ தன் இருப்பை வடிவமைத்துக் கொள்கிறது.கவிதை ஒரு சொல்விளையாட்டோ அல்லது வெறும் அழகியல் வடிவமோ மட்டுமல்ல.தனக்குள் உயிர்ப்பாய் இருக்கும் கவிதையை பிரபஞ்சத்தில் ஒரு உயிரெனக் கொள்ளலாம். வளர்ச்சியடையும் பொருட்கள் மட்டுமே உயிருள்ளதென கருதப்படுவது போல் வளர்த்தெடுக்கப்படும் கவிதை வடிவங்கள் மட்டுமே உயிருள்ளது.பழைய அல்லது திரிந்த வடிவத்தை பிரகடனப்படுத்தியபடி வார்த்தைகளை பிடித்துத் தொங்கும் வடிவங்கள் கவிதையாகாது.அவை நாற்றமெடுத்த இறந்துபோன உடலின் துண்டங்கள் மட்டுமே.

12. எல்லாம் எல்லோருக்கும் - இன்று எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகம் எதை வாசிப்பது எதை விடுவது என்ற குழப்பநிலையில் இதன் வீச்சு எத்தகையதாக இருக்கும்?
இது ஒருவகையில் எல்லாருக்குமான எழுத்து முயற்சிகளுக்கான வாய்ப்பாய் இருக்கிறது.நம் பின்நவீனச் சூழலில் எழுத்தாளன் பிரதானப்படுத்தப்படுவதில்லை.எழுதி முடித்தவுடன் ஆசிரியன் இறந்து போகிறான்.வாசகன் மட்டுமே பிரதானமானவன்.வாசகனுக்கு ஒரு படைப்பை அணுக முழுச் சுதந்திரமிருக்கிறது.வாசகன் தன் இயல்பு நிலைக்கேற்ப படைப்பை புரிந்து கொள்ளும் சுதந்திரம் மிக முக்கியமானது. திணித்தல்களை தவிர்த்து எழுதப்படும் படைப்புகள் மட்டுமே இச்சூழலில் கொண்டாடப்படும்.எழுத்து வாசகனை முன்னிருத்துவதால் எழுதுபவனைக் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.சூழல்கள் உன்னதங்களை தீர்மாணித்துக் கொள்ளட்டும்.ஆக அதிக ஆசிரியனால் எப்போதும் மிகப் பரவலான வீச்சை உருவாக்கிவிடமுடியாது.வாசகன் மட்டுமே வீச்சினுக்கான காரணகர்த்தா.
13. உங்களின் வலைபதிவு எழுத்தால் இதுவரையில் கிடைத்தது என்ன?
தொடர்ச்சியான இடம்பெயர்தல்களில் நான் இழந்தது என் சமூக அடையாளம் மற்றும் ஒரு நிரந்தர முகவரி.யாரேனும் திடுமென்று உன் சொந்த ஊர் எதுவெனக் கேட்டால் சிறிது யோசித்து திருவண்ணாமலை என்கிறேன்.கடைசி 12 வருடங்களில் 6 மாதத்திற்கு மேல் எந்த சூழலிலும் தொடர்ச்சியாய் இருந்ததாய் நினைவில்லை(குறைந்த பட்சம் இருப்பிடங்களையாவது மாற்றிக் கொள்வதுண்டு)இந்த சிக்கலான நிகழிற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.ஏதோ ஒன்று உள்ளுக்குள் பூர்த்தியடையாமலேயே இருக்கிறது. வலையெழுத வந்த பின் நிறைவு அல்லது அதைப்போன்ற ஏதோ ஒன்று என்னை நிரப்பி இருக்கிறது.அடுத்த நகர்வுகளுக்கான அரிப்புகள் இல்லை.ஒரு கவிதையை எழுதிமுடிக்கும்போது கிளர்ந்தெழும் பரவசம் சின்ன இறுமாப்பைத் தருகிறது அடுத்ததாய் எழுதப்படும் கவிதை முந்தைய கவிதையை அபத்தமாக்குவது மீள முடியாத தவிப்பென சொல்லலாம்.மொத்தத்தில் எழுத்தென்பது ஆசுவாசமாய் இருக்கிறது.கிடைத்திருக்கும் நண்பர்கள் அல்லது தெரிந்துகொண்ட புதிய மனிதர்கள் மிகவும் இணக்கமாக இருக்கிறார்கள்.தோன்றும் எல்லா உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள முடிகிறது பெருகிக்கொண்டிருக்கும் நட்பு வட்டங்களினூடாய் என் அணுகுமுறைகளின் நம்பகத் தன்மைகள் நிரூபிக்கப்படுகின்றன.பறவையின்சிறகைப்போல காற்றில் முகவரியற்று வரும் கடிதங்கள் என் மொக்கை கவிதையை மூன்று வரிகளில் பாராட்டிச் செல்கிறது. ஆச்சர்யங்களும் வியப்பும் மேலிட திருவிழாவில் வழி தப்பிய குழந்தையொன்றின் காலடித் தடம் பற்றி கடந்து கொண்டிருக்கிறேன் வலைப்பதிவையும் எனக்கான எழுத்தையும்.

கருத்தாடல்கள்,அரசியல் நுட்புலம்,சந்தேகித்தல்,கூர்மையான விமரிசனப் பார்வை குறித்தான புரிதல்கள் சற்று புலப்பட துவங்கியிருக்கின்றன.இசங்கள், சித்தாந்தங்கள், கொள்கைகள்,இயக்கங்கள் போன்றவைகளைப் பற்றிய விழிப்பும் பரவலான வாசிப்பின் சாரங்களை சுலபமாய் பெற்றுக்கொண்டபடியுமாய் கடந்துபோகின்றன நாட்கள்.

14. புனைவு படிமம் குறியீடு நவீன சொல்லாடல் போன்றவை தங்களுக்குள் எவ்விதமான உணர்வுகளை ஏற்படுத்துகின்றன? புரிதலுக்கு சிரமமான இந்தகைய வடிவங்களே தீவிர இலக்கிய எழுத்தாளர்டகளுக்கு பரந்த வாசகபரப்பை பெற்றுத்தரவில்லையா? காரணம் எஸ்ரா வை தெரிந்த பலர் சொல்லும் முதல் வார்த்தை உங்களின் கதவிலாசம் நன்றாக இருந்தது அது மாதிரி ஏன் அதிகம் எழுதுவதில்லை
குறியீடும் படிமமும் நவீனத்துவ சொல்லாடல்கள் மேலும் அதற்கான தேவைகளும் மலிந்து போய்விட்டன. தற்போதைய பின்நவீன சூழலின் சொல்லாடலே புனைவு.பிரதிகள் ஒற்றைத் தன்மையில் இல்லாமல் திணித்தல்கள் இல்லாமல் பன்முக வாசிப்பினுக்கான சாரங்களை உள்ளடக்கிய பிரதிகளே புனைவுகள்.காலம், இடம், கதை சொல்லும் முறை, கதை சொல்லி என எல்லா தளங்களிலும் துல்லியத்தை வேண்டி நிற்கின்றன.சரியான பயிற்சியும் விரிவான பார்வையுமிருத்தலே புனைவினுக்கான அடிப்படை தேவைகளாய் முன் நிற்கின்றன.ஒரு பிரதி பரந்துபட்ட வாசகர்களை சென்றடைவது நல்லதுதான் என்றாலும் நமது வெகுசன வாசகனைப் பொருத்தவரை அவனுக்கு எல்லாமே ஆயத்தமாக வேண்டும்.ஆயத்த ஆடை, ஆயத்த உணவு, அதே போல ஆயத்த இலக்கியம்.மேலோட்டமான வாசிப்பிலேயே அந்த பிரதி தனது சாராம்சங்களுடன் வாசகனின் மூளையில் ஏறிப் படுத்துக்கொள்ள வேண்டும் அப்படி இல்லையெனில் அந்த பிரதி புரியவில்லை என தட்டையாக நிராகரித்துவிடுகிறான்.மேலும் வெகு சனத்திற்கான அடிப்படை சிக்கல் அவன் திரும்ப திரும்ப ஒரே வட்டத்தில்தான் உழலுகிறான் மாற்றங்களை விரும்புவதில்லை.எனவேதான் அதைப்போல ஏன் எழுதவில்லை ரீதியிலான கேள்விகள் முளைத்தெழுகின்றன.வெகுசனத்தினை திருப்திபடுத்தும் அல்லது தனது மூன்றாந்தரங்களால் வெகுசனத்தை கட்டமைத்திருக்கும் போலித்தனங்கள் நமது சூழலை விட்டு ஒழியாத வரை இந்தச் சிக்கல் நீடித்திருக்கும்.

நாம் இதழுக்கு தங்களைபற்றிய முழுமையான செய்தியை கொடுக்க உங்களின் குறிப்புகளை தந்திடுங்கள்
எந்த ஒரு முன்னேற்பாடுகளும் இல்லாது கணங்களில் வாழும் அல்லது வாழ்ந்து கொண்டிருப்பதாய் நம்பிக்கொண்டிருக்கும் என் இருப்பு தனக்கான முழுமைபெறல்களின் நீட்சியில் முதலில் கண்டெடுத்த வடிவம் கவிதை.அதன் கிளர்வில் மனம் பிழன்று கிறுக்கிக்கொண்டிருந்த என் நாட்குறிப்புகளனைத்தும் ஓர் நாள் சலிப்பு மிகுதியில் ஒளிந்துகொள்ள எங்காவது கொட்டிவிடத் தேக்கிவைத்த குப்பைகளனைத்தும் மிகுந்து, தேட ஆரம்பித்து, கண்டெடுத்தது வலைப்பூக்களை.முழுமைக்கான அல்லது அதைப் போன்ற ஒன்றினுக்கான தொடர்ச்சியான இடப்பெயர்வுகளில் தற்போதைய இருப்பு வலை எழுத்து மட்டுமே.நிழலின் குளுமையில் தணிந்துபோன வெம்மைகளில் நேசத்திற்கான கரங்கள் நீண்டு சேர்த்துக்கொண்டன நட்பென நாடிவந்த இதயங்களனைத்தையும்.அந்த நட்பே என்னை உங்களோடு நாம் இதழில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.எதிர்பார்ப்புகளற்ற நட்புகளுக்கு வெறும் நன்றியினை மட்டும் தெரிவித்துக் கொள்வது எத்தனை சுயநலமானது!.

Wednesday, May 6, 2009

நேர்காணல் : நாம் இதழ் - 1

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் நாம் சிற்றிதழுக்கு நேர்காணலொன்றை நண்பர் பாண்டித்துரை டிசம்பர் மாத இறுதிவாக்கில் கேட்டிருந்தார்.நேர்காணல் தருமளவிற்கு சாதித்துக் கிழித்தவை எதுவுமில்லையெனினும் நட்பின் நிமித்தமான பகிர்வுகளாகவே இவை இருக்கின்றன.

1. சிற்றிதழ் வாசிப்பனுபவம் வலையுலக வாசிப்பனுபவம் இரண்டினைபற்றிய உங்களின் அனுபவங்களை சொல்லுங்களேன்?
வெகுசன இதழ்கள் தந்த சலிப்பு மற்றும் போதாமை என்னைச் சிற்றிதழ்களுக்கு நகர்த்தியது. வாசிப்பின் துவக்கமாக கணையாழியாகவே இருந்தது.பெரும்பான்மைகளே நிறைந்து பிதுங்கும் புத்தக கடைகள் சிற்றிதழ்களுக்கான இடங்களைத் தந்திருக்கவில்லை. கணையாழியைத் தொடர்ந்து வாங்கவே பல கிலோமீட்டர்களை பயணிக்க வேண்டியிருந்தது. ஓசூரில் வாழ்ந்திருந்த காலகட்டத்தில் ஆதவன் தீட்சண்யாவின் விசை இதழ் படிக்க கிடைத்தது.பெரும்பான்மைகளின் தரங்களை பின்னுக்குத் தள்ளும் வடிவமைப்பு,காத்திரமான உள்ளடக்கங்கள் சிற்றிதழ் எனும் வடிவங்களை வேறு தளத்தினுக்கு நகர்த்தியிருந்தது.அந்த இதழ் தந்த பரவசம் பல சிற்றிதழ்களுக்கு ஆண்டு சந்தாவினை அனுப்ப ஒரு ஊக்கியாக இருந்தது.நம் மொழி தாண்டிய பிற மொழி படைப்புகளின் செறிவான மொழிபெயர்ப்பு, புதிது புதிதாய் அறிமுகமான இசங்கள், கவிதையின் காத்திரமான புதுத்தளம் என சிற்றிதழ்கள் மிகப்பெரிய போதையாய் இருந்தன.குறிப்பாய் ஆத்மா நாம் நடத்தி வந்த ழ இதழை சொல்லலாம்.சிற்றிதழ்களுக்கு முன்னோடியான சி.சு செல்லப்பாவின் எழுத்தை ஒரு பழைய புத்தகக் கடையில் தேடிப்ப்பிடித்தேன்.இன்னமும் அச்சு வடிவிலான பழைய சிற்றிதழ்களின் மேல் தீராத காதலிருக்கிறது.இலக்கிய தாகம் அல்லது வாசிப்பின்பம் தாண்டியும் சிற்றிதழ்கள் ஒரு இயக்கமாக வளரமுடியும் என்பதற்கு நிறப்பிரிகை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.தமிழின் சொற்பமான அறிவுஜீவிகள் தங்களது உக்கிரமான பார்வைகளை,மாற்றுக்களை விரிவான தளத்தில் பகிர்ந்து கொண்ட நிறப்பிரிகை வாசகனுக்கு உலகச் சிந்தனையின் நீரோட்டத்தில் கலக்க உறுதுணையாய் இருந்ததெனச் சொல்லலாம்.பழமைகளின், போலிகளின், பம்மாத்துக்களில் பதுங்கி கிடந்த 'உண்மை' நிறப்பிரிகை மூலமாக மெல்ல வெளியே வந்தது.பல மாற்றுச் சிந்தனைகளை நம் தளத்தில் உயிர்த்தெழச் செய்தது.காலச்சுவடு, உயிர்மை போன்ற இதழ்கள் சிற்றிதழ்களுக்கான சமரசமில்லா நிலைப்பாடிலுமில்லாது வெகுசன இதழ்களுக்கான மிகை போலித்தனதனங்களுமில்லாது தங்களுக்கான மித சமரசங்களை உள்ளரசியல்களோடு நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன.இவை பொதுப்புத்தி சார்ந்த இலக்கிய வாசகனின் தாகத்தை தீர்த்து வைக்க மெனக்கெடுகின்றன.

துபாய் வந்தபின்பு அறிமுகமான இணைய வாசிப்பு விரிவான வாசிப்பிற்கு உறுதுணையாய் இருந்தது.விரல் நுனியில் எல்லாவற்றையும் படித்து விட முடிந்தது. குறிப்பாய் கீற்று இணைய தளம் சிற்றிதழ்களை மொத்தமாய் சேகரித்து தருவது வாசகனுக்கு மிகுந்த உவப்பானது.தலித் இயக்கம்,பெரியாரியல் என நம்சூழல் சார்ந்த மொழியறிவு பெற இவ்வாசிப்பு மிகுந்த உறுதுணையாய் இருந்ததெனச் சொல்லலாம்.வலைப்பூக்கள் வாசகனாக மட்டுமே இருந்த என்னை எழுத்து சார்ந்தும் இயங்கத் தூண்டின.நாட்குறிப்புகளில் தீர்த்துக் கொட்டிய என் உள்ளெழுச்சிகளை அதே காத்திரத்தொடு வலைப்பூவிலும் எழுதும் சுதந்திரம் எனக்குக் கிட்டியது.வலைப்பூ நமக்குப் பிடித்தமானதை எழுத, பிடித்தமானதை தேர்ந்தெடுத்து வாசிக்க உதவியாய் இருக்கிறது.நண்பர்களுடனான விவாதங்கள் உரையாடல்கள் சரியான புரிதலுக்கு வழிவகுக்கின்றன.எல்லா தளங்களிலும் இருக்கும் பிரச்சினைகள் வலைப்பூவிலும் இருக்கிறதுதான் என்றாலும் நமக்கானதை தெரிவு செய்து கொள்ளும் சுதந்திரம் இன்றளவும் நம்மிடமே இருப்பது எத்தனை ஆறுதலான ஒன்று!

2. இன்று பல சிற்றிதழ் எழுத்தாளார்களும் இணைத்தில் இணைந்து விட்டனர் இவர்களின் வருகைபற்றி?
வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.தமிழர்கள் தமிழ்நாடு தாண்டியும் உலகம் முழுவதும் விரவியிருப்பதால் சிற்றிதழ்கள் கிடைப்பதற்கான சூழல்கள் மிகவும் அரிதாகின்றன. இணையம் இத்தேக்கத்தை உடைக்கிறது.இணையத்தில் வலைப்பூக்கள் அறிமுகமான புதிதில் பேரெழுத்தாளப் பிதாமகர்களின் கடுமையான விமர்சனங்களைத் தாண்டி வரவேண்டி இருந்தது. அச்சு வடிவங்கள் மட்டுமே இலக்கிய வடிவங்களாக முடியும். இணையம் பத்து நொடி பரவசத்திற்கானது என்பன போன்ற அரிதான தத்துவங்களையெல்லாம் கேட்டுத் துன்புற வேண்டியிருந்தது இன்று அது மெல்லத் திரிவடைந்து பேரெழுத்தாளர்களும் இணையத்தினை நோக்கிப் படையெடுப்பது நல்லதொரு மாற்றமே.சமீபத்தில் பிரம்மராஜனின் வரவும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கனவே நாகார்ச்சுனன் தன் பங்கினுக்கு மிகக் காத்திரமான உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சூழலில் பிரம்மராஜனின் வருகையும் பங்களிப்பும் அவசியமானது.மிதமான இலக்கியப் படையல்களை எஸ்ராமகிருஷ்ணனும், ஆபத்தான அரசியல் விளையாட்டை ஜெயமோகனும், வாசிப்பின்பத்தை மட்டுமே பிரதானமாக்கும் சாருவும் சிற்றிதழ் பேரிதழ் சூழல்களிலிருந்து வந்தவர்களே. அப்போது இணையத்தினை பழித்தவர்களுள் ஒருவரான ஜெயமோகன் இன்று ஏகப்பட்ட ஹிட்ஸ் என பேசிக்கொள்வது சிரிப்பைத்தான் வரவைக்கிறது. நிறப்பிரிகையில் மிக முக்கியமானவரான வளர்மதியும் தொடர்ச்சியாய் இணையத்தில் தன் பங்களிப்பை செய்து வருகிறார்.

3. தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது (அ) வாசித்துக்கொண்டிருப்பது சலிப்பை தருவதில்லையா!
இல்லை.சொல்லப்போனால் செய்ய வேண்டியது வேறு எதுவும் இல்லை.தொடர்ந்து வாசிப்பதும் எழுதுவதும் என் சுய விருப்பத்தினுக்காகவே.என் உள் சார்ந்த ஏதோ ஒன்று இச்செயல்களின் மீது ஆர்வம் உடையதாய் இருக்கின்றது.நிறைவு அல்லது அதைப்போன்ற ஒன்றினை ஒரு நல்ல பிரதி எனக்குத் தருகிறது.எனக்கு இணக்கமான பிரதி ஒன்றினை வாசித்து முடித்ததும் ஏற்படும் அதீத உணர்வுப் பெருக்கம் என் வெறும் பொழுதுகளை நிரப்பி விட்டுப் போகிறது.பிம்பங்களை உருவங்களாக்கும் முயற்சிகளில் என்னைச் செலுத்தி அந்த பிம்ப உருவாக்கங்களில் கிளர்ந்து அலைவது என்னை இன்பங்களில் திளைக்கச் செய்கிறது.வெகு சுமாரான ஒரு படைப்பை நிகழ்த்திக் காட்டும்போது ஏற்படும் மகிழ்ச்சி வார்த்தைகளில் சொல்ல இயலாதது.எழுத்து எழுதுபவனை எழுதிக்கொண்டிருக்கிறது என்பது எனக்கு மிக இணக்கமாக இருக்கிறது.

4. சுஜாதாவிற்கு பின் இன்று சிறுபத்திரிக்கையில் தீவிரமாக இயங்கிய பல எழுத்தாளர்கள் திரைதுறைக்கு வந்துவிட்டனர் இப்பொழுது இவர்களின் படைப்பினைஎப்படி அணுகிகிறீர்கள் ஏன் எனில் சினிமா எழுத்து மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது அங்கே எழுத்தாளார்கள் சமரசம் செய்துகொள்கிறார்கள் அவர்களிடம் கேட்கபடும் இத்தகையகேள்விக்கு வெளிப்படும் ரெடிமேட் பதிலாக இருப்பது டீம் ஒர்க்!
பொதுவாகவே சமரசங்கள் மீது எனக்கு மிகப்பெரும் சலிப்புகள் இருக்கின்றன.கலையும் கலைஞனும் சமரசங்களுக்கு அப்பாற்பட்டவை. உன்னதங்கள் எனக்கொண்டாடப்படுபவைகள் சமரச அரசியல்களில் சிக்கிக் கொள்ளாதவைகளாய் மட்டும்தான் இருக்க முடியும். எழுத்தாளர்கள் திரையில் தமது அடையாளத்தை நிறுவ மெனக்கெடாதது மிக எரிச்சலான ஒன்று. வெகுசனதிரையில் ஒரு இலக்கியவாதியால் மாற்றுக்களை கொண்டு வரமுடியாது என்பதெல்லாம் பொதுபுத்தி சார்ந்த கற்பிதங்களே.குறைந்த பட்சம் தான் இயங்கும் தளத்தின் தரத்தையாவது மெருகேற்றலாம்.ஆனால் அதற்கான எந்த முயற்சியினையும் எழுத்தாளர்கள் எடுத்ததாய் தெரியவில்லை. கூட்டுமுயற்சி என்பதெல்லாம் சப்பைக்கட்டாய் மட்டும்தான் இருக்க முடியும். தேவை, பிழைப்பு என்கிற இரண்டு பிரம்மாண்டங்களின் முன்பு படைப்பாளி தன்னை அடகு வைத்துவிடுகிறான்.இலக்கியத்திற்கு ஒரு முகமும் சினிமாவினுக்கு ஒரு முகமுமாய் இடத்தினுக்கு தகுந்தாற்போல் முகமூடியை மாற்றிக்கொள்ளும் எழுத்தாளர்களின் மீது பரிதாபமும் எரிச்சலும் ஒரே சமயத்தில் எழுகின்றன.சமீபத்தில் திரைப்பட பாடலாசிரியை தாமரை பேட்டி ஒன்றில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் ஒரு பாடலில் ஆங்கில வார்த்தைகளை சேர்க்க வேண்டி இருந்ததால் அந்தப்பாடலை மட்டும் தான் எழுத ஒப்புக்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலைப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

5. சினிமாவின் முன் எழுத்தாளனுக்கான அடையாளம் தொலைந்துகொண்டுவருதாக எண்ணத்தோன்றுகிறதா?
ஆம்.சொல்லப்போனால் சினிமாவில் எழுத்தாளனுக்கான எந்த அடையாளத்தையும் பார்வையாளன் உணரமுடிவதில்லை.உதாரணத்திற்கு சமீபத்தில் வந்த தாம்தூம் திரைப்படத்தை எடுத்துக் கொள்வோம். இத்திரைப்படத்திற்கு வசனம் எஸ்.ராமகிருஷ்ணன். இத்திரைப்பட வசனங்கள் வெகுசன இதழில் கூட பயிற்சிபெறாத ஆளுமை ஒருவர் வசனமெழுதி இருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதே தரத்தில்தான் இருந்தது. எஸ்.ராவின் நவீன மொழியாளுமையின் குறைந்த பட்ச சாத்தியங்களைக்கூட அவரால் அத்திரைப்படத்தில் செய்து காட்டமுடியவில்லை.குறைந்த பட்சம் காதல் காட்சிகளிலாவது மொக்கை வசனங்களை குறைத்துக்கொள்ள மெனக்கெட்டிருக்கலாம் ஆனால் அதற்கான எந்த முயற்சியினையும் அவர் எடுக்கவில்லை.இச்சூழலில் எழுத்தாளனின் அடையாளத்தை எங்கே
போய் தேட?.

6. குழும நட்பு வலைதள நட்பு பற்றி
வலைக்கு வந்த பின்பு கிடைத்த நட்புகள் மிகுந்த ஆசுவாசமாய் இருக்கின்றன.எனக்குப் பிடித்தமானவைகளைப் பகிர்ந்து கொள்ள நாட்குறிப்பை மட்டுமே நம்பியிருந்த நான் வலைக்கு வந்த பின்னர் என்னைப் போன்ற பல நண்பர்களை சந்திக்க முடிந்தது.முகமற்ற நட்புகளும், குரல் மட்டும் அறிந்த நட்புகளும் இதில் அடக்கம்.தொடர்ச்சியாய் இயங்க இந்நட்புகள் பேருதவியாய் இருக்கின்றன.கோபி கிருஷ்ணன் சொல்வது போல் என் முகமறியாத் தோழிகளே /தோழர்களே உங்களால்தான் நான் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன்.

7. துபாயில் இயங்கிவரும் தீவிர தமிழ் இலக்கிய அமைப்பு பற்றி அல்லது அங்குள்ள இலக்கிய வாசிப்பு நண்பர்களுக்கிடையேயதன சந்திப்பு பற்றி
துபாயில் தடுக்கி விழுந்தால் ஒரு தமிழர் அமைப்பை நீங்கள் காணநேரிடலாம். அவ்வமைப்புகளில் குழு மனப்பான்மை தவிர்த்து குறிப்பிட்டு சொல்ல வேறெதுவும் இல்லையெனினும் நண்பர் ஆசிப் மீரான் இலக்கியம், திரைப்படம் மற்றும் வாசிப்பு சார்ந்து இயங்கும் நண்பர்களை அமைப்பு சார்ந்து இயங்க உதவிவருகிறார்.மற்றபடி வலையின் பிரபலமான பல பதிவர்கள் இங்கு வசிப்பதால் பிடித்தமானவற்றை பகிர, தீவிரமாய் உரையாடல்களை நிகழ்த்த இச்சூழல் மிகுந்த இணக்கமாய் இருக்கிறது.எல்லாவற்றையும் விட நட்பு மிகப் பிரதானமாய் முன்னிருத்தப்படுவதால் ஒரே தளத்தில் இயங்கும் ஒத்த/மாற்று கருத்துடைய நண்பர்கள் பலர் ஒரே சூழலில் வசிப்பதும் அவ்வப்போது சந்தித்துக்கொள்வதும் மிகுந்த மகிழ்வானது.வேலைப்பளு, நெருக்கடியான பணி போன்ற சூழல்களிலும் இங்குள்ள நண்பர்கள் தொடர்ச்சியாய் தத்தமது தளத்தில் சீராய் இயங்குவது பாராட்டப்பட வேண்டியது.

8. உங்களின் வலைப்பக்கத்தில் சமீபமாக நீங்கள் எழுதிய காதல் கவிதைகான வெளிப்பாட்டின் பிண்ணனியல் உங்களின் மணநாளும் காரணமா?
இருக்கலாம்.என் எழுத்துக்களில் எனது அனுபவங்களை, என் வாசிப்புகளை, என் விருப்பங்களைத் தவிர்த்து பெரிதாய் வேறெதுவும் இல்லை.அடர்வான கசப்பான சூழலில் மிகக் குரூரமாய் எழுதிப்பார்ப்பதும் மிக லேசான தருணங்களில் மகிழ்வாய் எழுதிப் பார்ப்பதும் என் இயல்பாய் இருக்கிறது.தருணங்களில் வாழ்வதைத் தவிர்த்து மிகப் பிரதானமாய் எவ்வித வாழ்வையையும் கொள்கையினையும் நான் கடைப்பிடிக்க விரும்பாததால் என் எழுத்து என் வாழ்வை மட்டுமே பிரதிபலிக்கிறது.

Featured Post

test

 test