Tuesday, November 14, 2017

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா







கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX


பத்துக் கதைகளை கிண்டிலில் இப்படி மின்நூல் தொகுப்பாகக் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம் மிகத் தற்செயலானது. இதில் ஆர்வம் என்கிற ஒன்றைத் தவிர வேறெந்த இலாபக் குறிக்கோள்களும் இல்லை. எத்தனை பேர் வாங்குகிறார்கள் பார்ப்போமே என்கிற சிறுபிள்ளைத்தனமான ஆவல் மட்டும்தான் இக்கணத்தில் மேலோங்கி இருக்கிறது. கினோகுனியா என்கிற பெயர் தமிழ்ச் சூழலுக்கு வெளியில் இருந்ததால் அதையே இந்தத் தொகுப்பிற்கானப் பெயராய் தேர்ந்தெடுத்தேன். இருப்பின் அடிப்படையிலும் இலக்கிய மடங்களின் அங்கீகார அடிப்படையிலும் தமிழ் சூழலுக்கு வெளியே நானும் என் எழுத்தும் இருப்பதாலும் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
சிறுகதைகள் என்னுடைய களம் கிடையாது. மரபான ஒரே ஒரு சிறுகதையைக் கூட நான் இன்னமும் எழுதவில்லை. எழுதவும் மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். தமிழ் சிறுகதைப் பரப்பில் எல்லாவித சாத்தியங்களும் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டன. ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடர் மிகுந்து வராத இறுகிய கட்டுமாணங்கள் கொண்ட நவீனச் சிறுகதைகளிலிருந்து, சொல்லாமல் சொல்லிப் போகும் முத்திரைக் கதைகள் வரை எல்லாமும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. இனிப் புதிதாய் இதே மரபில் எழுத ஒன்றுமில்லை.
இனிமேலும் கதை என்ற ஒன்றை வழுவாத சட்டகங்களோடு எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற அலுப்புதான் என்னை என் விருப்பத்திற்கு எழுத வைத்தது. என் கதைகள் எந்த மரபின் தொடர்ச்சியுமல்ல நானும் எந்தப் பள்ளியையும் சார்ந்தவன் கிடையாது. (அதற்காக வானத்திலிருந்து குதித்தது / தவன் என்றும் பொருளில்லை) இந்த மரபும் பள்ளிகளும் எனக்கு அலுப்பூட்டுவதாய் இருக்கின்றன. எனவே என் விருப்பத்திற்கு எழுதுகிறேன். அவை கதைகள் ஆகின்றனவா, கலையம்சம் கொண்டிருக்கின்றனவா என்பதெல்லாம் வாசிப்பவரின் பாடு.

மேலும் நம் சிறுகதைச் சூழலில் வட்டாரவழக்கு, காமம், வாழ்வியல் என எல்லாமும் ஏற்கனவே கற்பனையாக எழுதப்பட்டுவிட்டன. இனிமேலும் மோட்டு வளையைப் பார்த்துக் கற்பனையைப் பிராண்டிக் கொண்டிருப்பது உண்மையிலேயே அலுப்பானது என்பதால் நான் வழமையான கதைகளை எழுத முயற்சிக்கவில்லை. இத் தொகுப்பில் இருப்பவை யாவும் என்னுடைய அறிதல்களும் அறிய முயன்றவையும் மட்டும்தான். இலக்கிய குருமார்கள் சொந்த அறிதலை பொதுவிற்குக் கடத்துவதே கலை என்பார்கள். அது அவர்களின் அறிதல் என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. என் வாழ்வும் பயணமும் எனக்குத் தந்ததை இப்படிப் புனைவுகளாய் எழுதிப் பார்த்திருக்கிறேன். பிடித்திருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் தூக்கிப் போடுங்கள். மின் பிரதியின் வசதியே நொடியில் அழித்துவிடலாம் என்பதுதான்.
மற்றபடி இத்தொகுப்பை என்னால் இயன்ற அளவிற்கு பிழையில்லாமல் கொண்டு வர முயன்றிருக்கிறேன். முதல் கதையான சமீபத்திய மூன்று சண்டைகள் ரேமண்ட் கார்வரை வாசித்த பாதிப்பில் எழுதிப் பார்த்தது. அது மட்டுமே மற்ற ஒன்பது கதைகளிலிருந்து மாறுபட்டிருக்கும். இத்தொகுப்பில் வரும் சமவெளி மான் கதையின் போதாமைதான் ஓரிதழ்ப்பூவாக உருவானது. சோதிடன், அங்கையற்கன்னி, மலர்ச்செல்வி கதாபாத்திரங்கள் என்னோடு நான்கு வருடங்கள் வரைப் பயணித்தார்கள். ஓரிதழ்ப்பூ அச்சிலும் கிண்டிலிலும் ஜனவரியில் கிடைக்கும். அதற்கு முன்பு இத் தொகுப்பு வருவதில் மகிழ்ச்சி.

கினோகுனியா அமேஸான் கிண்டில்


மிக்க அன்புடன்
அய்யனார் விஸ்வநாத்
13 நவம்பர் 2017
துபாய்

No comments:

Featured Post

test

 test