என்னைக் களைந்தேன்இந்த இருக்கை உனக்கு வசதியாக இருக்கிறதா?சரியாய் அமர்ந்துகொள்...குளிர் போதுமா?...கொஞ்சம் குறைக்கட்டுமா?..குறைவாகத்தான் குடித்திருக்கிறாய்..இன்னும் வேண்டுமானால் தருவிக்கட்டுமா?..என்னிடம் போதிய சிகரெட்டுகளும் கைவசமிருக்கின்றன்..இந்த ஒரு இரவைப் பொறுத்துக்கொள் ..நான் என்னைப் பற்றி யாரிடமாவது பேச வேண்டி இருக்கிறது..எனக்கான பேச்சுக்கள் அதிகரித்து என்னை இரவில் தூங்கவிடுவதில்லை (மனமுலைகள் பெருகிப் பெருகி இன்னும் முலைகள்..) என வாழ்வில் நான் செய்திருந்த எல்லா வன்முறைகளும் இப்போது தொடர்ச்சியாய் நினைவுக்கு வருகிறது.அவை தந்த கசப்புணர்வில் என் மீதே எனக்கு குமட்டிக் கொண்டு வருகிறது....எங்காவது வாந்தி எடுக்க வேண்டியதின் உந்துதல்களில் இந்த அறையை, இரவை, உன்னை நாடி வந்திருக்கிறேன்.திலகவதி மொழி பெயர்த்திருந்த ஜாங்லீயின் தவம் என்றொரு சிறுகதை நினைவிற்கு வருகிறது, அதில் கதாநாயகி இப்படிச் சொல்வாள் "நான் தூங்கப் போகும் முன் அன்றைய தினத்தில் நான் செயத தவறுகளை நினைத்துக்கொள்வேன்.. மூடியப் போர்வைக்குள்ளிருந்து ஆயிரம் ஜோடிக் கண்கள் என்னையே பார்ப்பது போலிருக்கும்... எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் தண்டனை அது" என,என்னைப்பொருத்தவரை என் வன்முறைகளைச் சத்தமாய் வாய்விட்டுச் சொல்வதுதான் சரியானதாய்ப் படுகிறது...என் மொழி உனக்குத் தெரியாமல் போனதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சொல்லப்போனால் நீ! ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பித்தாய்...என் உளறல்களை,அபத்தங்களை,குற்றங்களை நீ! அறிந்து கொள்ள வேண்டியதின் பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்தாய்.
என் உடல் இருந்தது
என் உடலைக் களைந்தேன்
நான் இருந்தது
நானைக் களைந்தேன்
வெற்றிடத்துச்
சூனிய வெளி இருந்தது
சூனிய வெளியைக் களைந்தேன்
ஒன்றுமே இல்லை....
ஆத்மாநாம்
பெண்களை விட அவர்களின் பெயர்களில் எனக்கு கிறக்கம் அதிகம்.ஏனோ தெரியவில்லை..என்னுடன் பழகுபவர்களின் பெயர்களை அடிக்கடி உரக்க கூப்பிட்டுக் கொள்வது எனக்கு வழக்கமாக இருக்கிறது.என் நண்பன் ஆழியூரானைப் போலவே எனக்கும் நித்யா, அர்ச்சனா, நிவேதா, யாழினி, ப்ரியதர்ஷினி, ப்ரியா என்றெல்லாம் பெயர் வைத்திருக்கும் பெண்கள் அழகாய் இருப்பார்கள் என்ற கற்பனையும் உண்டு.இந்த நேரத்தில் எனக்கு நந்திதா என்ற பெயர் பிடித்திருக்கிறது.உன்னை நந்திதா என்றழைக்கட்டுமா?
நந்திதா
நந்திதா
நந்திதாஆஆஆஆஆஆஆ..
மன்னித்துக்கொள்..இப்படி ஆரம்பத்திலேயே உன்னை மிரட்சி அடைய செய்திருக்க வேண்டாம்.ஏனோ சத்தமாய் கூப்பிடுவதில் இப்படி கத்துவதில் உள்ளே ஏதோ ஒன்று நிறைவடைகிறது.
அகம் பிரம்மாஸ்மி, நான்,ஆத்மா,சாரீரம்,நத்திங்க்னஸ்,எம்ப்டினஸ்,நீதான் கடவுள்,உள்ளிருக்கும் புத்தர்,தேவன், சாத்தான், புனிதம், புண்ணாக்கு இப்படி ஏகப்பட்ட திரிவுகளாய் நம் வரலாறு முழுக்க, வாழ்க்கை முழுக்கத் திரித்துப்போயிருக்கின்றனர் ஏகப்பட்ட மகானுபாவர்கள்.இந்த சமயத்தில் நான் உனக்கொன்று சொல்லுகிறேன் கேட்டுக்கொள்!.. என் வாழ்வு முழுக்க நான் அலைந்து திரிந்து கண்டெடுத்தப் பேருண்மை இதுதான்.. நீ! இப்பிரபஞ்சத்தின் ஏனைய விலங்குகளோடு இன்னுமொரு விலங்கு அவ்வளவுதான்.ஒரு விலங்காய் இருப்பதை முழுமையாய் உணர்ந்துகொள்வது மட்டுமே உண்மைக்கான தீவிர தேடுதலின் முடிவாய் இருக்கமுடியும்.
சரி இந்த ஆத்ம(?)விசாரங்களை நிறுத்துவோம்.நான் வாழ்ந்திருந்த இந்த சொற்ப காலத்தினுள் என்னால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைப் பற்றி பேசுவோம்.சொல்லப்போனால் அதற்காகத்தான் இங்கு வந்தேன்.என் நினைவிலிருப்பதை மட்டும் இப்போது பட்டியலிடுகிறேன்.
1.நீர்த்தவளை,ஓணான்,பட்டாம்பூச்சி,தெருநாய்,பாம்பு,எலி போன்ற சக விலங்குகளை/உயிரினங்களை கொல்வதில் எனக்கு மிகப்பெரிய ஈடுபாடிருந்தது.என் பால்யம் முழுக்க அவைகளைத் தேடித் தேடி கொன்று கொண்டிருந்தேன்.
2.பத்தாம் வகுப்பு கடைசித் தேர்வில்(வரலாறு புவியியல்) பின்னால் உட்கார்ந்திருந்த நண்பன் பார்த்து எழுதுகிறான் எனத் தெரிந்தும் என் விடைத்தாளினை கேள்வித்தாள் கொண்டு மூடினேன்.அந்த தேர்வில் அவன் தோல்வியுற்றான்.(அவனை திரிசூல் பாரில் மது சப்ளை செய்துகொண்டிருக்கிறவனாக சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது)
3.ஒரு சின்னஞ்சிறு கிராமத்து பெண்ணை (அவள்பருவமெய்தி ஓராண்டுதான் ஆகியிருந்தது) காதல் என்றபெயரில் துன்புறுத்தினேன்.அவளை கிளர்த்த கவிதைகளாய் எழுதிக் குவித்து,காத்திருந்து, பின்னால் அலைந்து, முதலைக் கண்ணீர் வடித்து, சிகரெட்டுகளாய் புகைத்து,எக்ஸ்பையரி ஆன மருந்தை குடித்து விடுவதாய் மிரட்டி யாருமற்ற ஒரு மதியத்தில் அவளின் உதடுகளில் முத்தமிட்டு என் காதலின் வெற்றிக்கனிகளை ருசித்தேன்.
4.எனக்காக தன் வீட்டை துறந்து, உறவுகளைத் தவிர்த்து, காத்துக்கொண்டிருந்த அதே பெண்ணை செட்டிலாகவில்லை என்றொரு சப்பைக் கட்டோடு இன்னும் நாட்களைத் தள்ளிப்போட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் காத்திருப்பின் வலிகளை தாங்கமுடியாது விலகிப்போன பெண்ணைக் கொண்டு எழுதிய புனைவுகளில் என்னை அடையாளப்படுத்திக் கொண்டேன். (செத்தும் கொடுத்தாள் பாதகத்தி!)
5.வராத காதலனுக்காய் காத்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தி என்னை விரும்புகிறாள் என மறைமுகமாய் தெரிந்தும்,அவளை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் விலகிப்போனேன்.(அவன் அவளை என்ன செய்திருப்பான் என யாருக்குத் தெரியும்?)
6.புத்திசாலிப்பெண்ணின் புத்திசாலித்தனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஆணொருவன் அவளை விலக்கி வைத்திருந்தான்.என்னால் அவளுக்கொரு வாழ்வமைத்துக் கொடுத்திருக்க முடியுமென்கிற சூழல் இருந்தும், விட்டால் போதுமென விலகிவிட்டேன்(அவளை கிளர்த்தி கலவி கொள்ள முயற்சித்து தோல்வியுற்றதால் அந்த ஓட்டம்)
7.எவ்வித காரணங்களுமில்லாமல் கன்னியொருத்தியின் காதலை காலில் போட்டு மிதித்தேன்.அவளைத் தாங்கொனா துயரத்தில் தள்ளினேன்.அதே சமயத்தில் நடுத்தரவயதுக்காரியொருத்தியின் காதலுக்காய் ஏங்கிச் செத்தேன்.
இன்னும் என்னால் நேரடியாக/மறைமுகமாக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் ஏரளமாயிருப்பினும் இவைகளை சொல்லி முடித்த பின் ஏற்படும் ஆயாசமும் கழிவிரக்கமும் என்னைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.
ஆனாலும் நான் சாக விரும்பவில்லை.கலைத்துப் போட்டு வாழ்வதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது.சூழலகளை மாற்றுவது,வழக்கத்திற்கு எதிரான செயல்களை செய்வது போன்றவற்றின் மூலமாக என் அபத்தங்களை/இருப்பை பழிவாங்கிக் கொள்கிறேன்.ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல ஒரே செயலுக்கான எதிர் செயல்களை அவ்வப்போது செய்வதின் மூலமாக 'கவனிப்பு' சாத்தியப்படுகிறது.பழகிய மூளை,பழகிய வாழ்வு என்பதிற்கும் இயந்திரத்தனத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?
நானொரு மிருகம் என்பதை ஓர் அடர்ந்த காட்டில் நிர்வாணமாய் சுற்றியலைந்த போதுதான் கண்டுகொண்டேன்.பின் அதிலிருந்து மீண்டு நகரத்தில் வசிக்கத் தொடங்கினேன்.சமூகம் என்ற ஒன்றோடு இணைந்திருக்க முயலும்போது அன்பு என்கிற மிகப்பெரிய ஆயுதத்தை மனிதர்கள் பிரயோகிக்கத் தொடங்குகிறார்கள்(குறிப்பாய் பெண்கள்).இந்த யுக்தி மிகவும் ஆபத்தானது.ஒருவரைக் கொல்வது விடவும் அவரை நேசிப்பதென்பது மிகக் கொடிய தண்டனை.நான் இந்த சூழலிலிருந்து விலகி இருக்க ஆசைப்படுகிறேன்.நாளை மீண்டும் என் சொந்த கானகத்திற்கு திரும்பிப்போகிறேன்.கடைசியாய் சொல்லிவிட்டுப் போக எனக்கு யாரும் இல்லாததால் உன்னிடம் வந்தேன்.
எல்லாம் கொட்டி முடிந்த பின் மிகவும் சோர்வாக இருக்கிறது.உனக்குப் பாடத் தெரியுமா?...எனக்காக ஒரு பாடல் பாடுவாயா?...உன் சொந்த மொழியாய் இருந்தாலும் பரவாயில்லை....இசைக்கும் பெண்ணிற்கும் மொழியென்பது அவசியமில்லை..
.......
.......
ஓ! சாரி!
கேன் யூ சிங் எ சாங் ஃபார் மீ?
FUCK YOU BASTARD ! GET LOST!!