Tuesday, December 30, 2014

ஸ்வீடிஷ் பிசாசும் தமிழ் பிசாசும்


எனக்கு திகில் படங்களைப் பிடிக்காது. இன்றளவும் ஏகத்திற்கும் வெளிவந்து கொண்டிருக்கும் ஹாலிவுட் பேய் படங்கள் இந்த ஒவ்வாமை ஏற்படக் காரணமாக இருக்கலாம். பதின்ம வயதில் இங்க்லீஷ் படங்கள் என்றாலே பேய்படங்கள் தான். எங்கள் நகராட்சிப் பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் ஆங்கிலப் பேய் படங்களின் பெரும் ரசிகர். மாதத்திற்கு ஒரு பேய்படம் பார்த்துவிட்டு வந்து எங்களுக்குப் படு திகிலாய் கதை சொல்லிக் கொண்டிருப்பார். அழகி திரைப்படத்தில் எம்ஜிஆர் படக் கதை சொல்லும் ஆசிரியரை நினைவிருக்கிறதா? இவரும் கிட்டத்தட்ட அதே மிகை உணர்வோடுதான் கதையளப்பார். சில்வர் புல்லட், ஈவில் டெட் -ஒன், டூ ,த்ரீ போன்ற படங்கள் மீதெல்லாம் உயிரையே வைத்திருந்தோம். சிரமப்பட்டு காசு சேர்த்து டெக் மற்றும் கேசட்டுகளை தேடிப் பிடித்து கலர் டிவி இருக்கும் நண்பன் வீட்டில், எல்லோரும் தூங்கின நள்ளிரவில், பார்த்து பயந்து, தூங்கிக் கொண்டிருக்கும் அக்கம் பக்கத்தாரை, குறிப்பாக பதின்மப் பெண்களை விழிக்கச் செய்ய வேண்டுமென்றே அலறிய காலமும் உண்டு. பின்பு தொடர்ச்சியாய் பேய் படங்களாய் பார்த்து அலுத்து அந்த வகைமைப் படங்களின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வந்தது.

சமீபமாய் இரண்டு பேய் படங்களைப் பார்க்க நேர்ந்தது. ஸ்வீடிஷ் திரைப்படமான Let the Right one In (2008) ஐ ஒரு பிசாசின் கதை எனத் தெரியாமலேயேதான் பார்க்க ஆரம்பித்தேன். படம் துவங்கி இருபது நிமிடங்கள் கழிந்திருக்கும். பனி விரவிய இருள் பாலத்திற்கு அடியில் ஒடுங்கி உட்கார்ந்திருக்கும் சிறுமி, அங்கு அசமஞ்சமாய் வரும் ஒரு வழிப்போக்கரை அருகில் அழைத்து, அவர் மீது தாவி கழுத்தை உறிஞ்சும் காட்சியில் கிட்டத்தட்ட உறைந்தே போனேன். பேய் கதைகளை விட ரத்த காட்டேரிகளின் கதைகள் கூடுதல் திகிலானவை.ஹாலிவுட்டில் Vampire திரைப்படங்கள்தாம் மலிவானவை. பயமுறுத்துகிறோம் என்கிற போர்வையில் பெரும்பாலனவை அருவருப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. மாறாய் ஜெர்மன் மொழியில் உலகப் புகழ் பெற்ற இயக்குனர் வெர்னர் ஹெர்சாக்கின் இயக்கத்தில் வெளிவந்த Nosferatu the Vampyre திரைப்படம் நம்மிடையே ரத்தக் காட்டேரி தர வேண்டிய அசலான பயத்தை ஏற்படுத்தியது. ரத்தக் காட்டேரியாகவே வாழ்ந்திருந்த க்ளாஸ் கின்ஸ்கியை மறக்க முடியுமா? கிட்டத்தட்ட Let the Right one In - ஐயும் ஹெர்சாக்கின் திரைப்படத்திற்கு அருகாமையில் வைத்துப் பேசலாம். Vampire ஆக நடித்திருக்கும் பனிரெண்டு வயது சிறுமி தன் அசாதாரண நடிப்பால் நம் கண்களை திரையை விட்டு அகலாமல் கட்டிப் போடுகிறாள். காட்சிகளின் மேலடுக்கில் இத்திரைப்படம் திகில் படமாகவும் அடிநாதமாய் அற்புதமான இளம் காதல் கதையாகவும் பிணைந்திருப்பதால் நம்மிடயே ஆழமான தாக்கத்தை இத்திரைப்படம் ஏற்படுத்துகிறது.

Let the Right one In உலகம் முழுக்க தரப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது. மலைப்பூட்டும் அளவிற்கு இத்திரைப்படம் குவித்திருக்கும் விருதுகளின் மூலம்தான் இப்படத்தைக் கண்டடைந்தேன். இது தந்த திகைப்பும் பரவசமும் விநோதமாக இருந்தது. சென்ற மாதமே பார்த்திருந்தாலும் இன்று வரை அதன் தாக்கம் நீங்கவில்லை. உடல் சோர்ந்திருந்த நேற்றிரவும் இத்திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்து இடையில் நிறுத்தமுடியாமல் முழுப் படத்தையும் பார்த்து விட்டே தூங்கினேன்.

இத்திரைப்படம்  Tomas Alfredson என்கிற எழுத்தாளரின் இதே பெயரில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த நாவலை ஒட்டி எடுக்கப்பட்டது. எழுத்தாளரே திரைப்படத்தின் திரைக்கதையாசிரியர். ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரத்தின் புற நகர் பகுதியான ப்ளாக்பெர்க்கில் இத்திரைப்படத்தின் சம்பவங்கள் நிகழ்கின்றன. உறைபனியும் இரவும் மெளனமான கட்டிடங்களும் இந்த திகில் படத்திற்கு அசாதரணமான பின்புலத்தைத் தந்திருக்கின்றன.

ஆஸ்கர் என்கிற பனிரெண்டு வயது சிறுவனுக்கும் அவன் பக்கத்து அடுக்ககத்திற்கு புதிதாய் குடிவரும் Eli என்கிற அவன் வயதை ஒட்டிய சிறுமிக்கும் ஏற்படும் நட்பு மெல்ல ஆழமான உறவிற்கு நகர்கிறது. அவள் மனித ரத்தத்தின் மூலம் உயிர் வாழும் ரத்தக் காட்டேரி என ஆஸ்கர் அறிந்துகொண்ட பின்பும் அவர்களிடையே ஏற்பட்ட பிணைப்பு விலகுவதில்லை. இதற்கு மேல் இத்திரைப்படத்தின் கதையை சொல்வது உசிதமல்ல. பரபரப்பும் திகிலும் இணைந்த பரவசமான அனுபவத்தை நிச்சயம் இத்திரைப்படம் தரும். ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, எடிட்டிங், காஸ்டிங் என எல்லா பிரிவுகளிலும் இத்திரைப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ரத்தக் காட்டேரியினால் கடிபட்டு உயிர்பிழைத்தோர் தன்னளவில் ரத்தக் காட்டேரியாய் மாறிவிடும் வழமைகள் இத்திரைப்படத்திலும் தொடர்கிறதுதான் என்றாலும் அதை எவ்வளவு நுணுக்கமாக சொல்ல முடியுமோ அவ்வளவு நுட்பமாக சொல்லியிருக்கிறார்கள். ரத்தக் காட்டேரியை அடையாளம் கண்டுகொள்ளும் ஏழெட்டுப் பூனைகள் சிலிர்த்துக் கொண்டு ரத்தக் காட்டேரியால் கடிபட்டுப் பிழைத்து வரும் தம் எஜமானியின் மீது பாயும் காட்சி சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது.இரத்த வாடை அடிக்கும் Eli யின் அறை, அவள் பகலில் வெளியே வராதது, பாத்டப்பில் இருள் மூடிக்குள் சுருண்டு தூங்குவது, மரத்தின் மீதும் கட்டிடங்களின் மீதும் பரபரவென ஏறுவது, காற்றில் பறப்பது, ஆட்களின் கழுத்தைக் குறிபார்த்துக் கடிப்பது போன்ற காட்டேரியின் புனைவியல்புகளை முடிந்தவரை யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கண்களில் ஆழமான அமைதியும் பேரழகும் கொண்ட ELI என்கிற பதின்மப் பெண் ஒரு பேயைப் பார்க்கிறோம் என்ற எண்ணமே எழாதவாறு நம்மைக் கடைசிவரைப் பார்த்துக் கொள்கிறாள்.

ஆஸ்கரை எப்போதும் வம்பிழுக்கும் சக மாணவர்களின் இறுதிக் காட்சி ரத்த சகதியைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றியது. ஆனால் அவள் ஆஸ்கர் மீது வைத்திருக்கும் ஆழமான காதலை நியாயப்படுத்தவும் அந்தக் காட்சி தேவையானதாக இருந்தது. ஆட்களைக் கொன்று அவர்களைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டு இரத்தம் உறிஞ்சும் காட்சிகள் எல்லை மீறாமல் அழகியலோடு படமாக்கப் பட்டிருந்தன. இவை போன்றவையே இத்திரைப்படத்தை மற்ற படங்களிலிருந்து தனித்து அடையாளப்படுத்துகிறது.

0

தமிழ்ப் பிசாசு துபாயில் வெளியாகவில்லை. இணையப் பக்கங்களில் பிசாசைப் பார்த்து மிரண்ட நண்பர்களின் நிலைத் தகவல்கள் மற்றும் உடனுக்குடன் எழுதப்பட்ட ஏராளமான சினிமாக் கட்டுரைகள் ஆகியவை நல்ல பிரின்டிற்காகக் கூட காத்திருக்க விடாமல் பிசாசைத் திருடிப் பார்க்க வைத்தன. மிஷ்கின் மீது எனக்கு சாய்வுகள் உண்டு என்பதால் இத்திரைப்படம் பார்த்து முடித்த உடன் எழுந்த உணர்வுகளை எழுதவில்லை. ஆனால் வெகுசன ரீதியிலான இந்த வெற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. மிஷ்கின் நிச்சயம் இந்த வெற்றிக்குத் தகுதியான ஆள்தான்.

பிசாசு படம் துவங்குவதற்கு முன்பு திரைப்படத்திற்கான பின்புலத் தகவல்களுக்காக மிஷ்கின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்குப் போய் அங்கிருக்கும் மனோதத்துவ பேராசியரோடு தங்கி கலந்து உரையாடியதாக அறிந்திருந்தேன். மேலும் பாலா வின் தயாரிப்பு என்பதால் மிஷ்கினுக்கு பொருளாதார ரீதியில் நிறைய சுதந்திரம் கிடைக்கும். எனவே வெகுசன / வெற்றி நிர்பந்தங்கள் இல்லாமல் குப்ரிக்கின் The Shining போன்ற சைக்காலஜிகல் த்ரில்லர் படமாக பிசாசு இருக்கும் என நானாகவே நினைத்துக் கொண்டு படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். பிசாசு என் எதிர்பார்ப்பின் அருகாமைக்குக் கூடப் போகவில்லை. ஜெயமாலினி காலத்து கவர்ச்சிப் பிசாசை மிஷ்கின் தன் அழகியல் சட்டகத்திற்குள் கொண்டு வந்து சமகால அழகுப் பிசாசாக மாற்றிவிட்டிருக்கிறார். இது எல்லாத் தரப்பையும் பூர்த்தி செய்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ஏனெனில்  மிஷ்கின்
பிசாசு பற்றிய பழங் கதைகளை  பிசகாமல் அப்படியே தந்திருப்பதால் வழக்கமான பழக்கத்தையே இயல்பாகக் கொண்டிருக்கும் வெகுசன மன உணர்வுகள் இத்திரைப்படத்தோடு சுலபமாய் ஒன்றிப் போயின. 

மிஷ்கினின் திரை மொழி நாம் அறிந்ததுதான். தாழ் காமிராக் கோணங்கள், விலாவரியான மிட்ஷாட், அவர் படங்களில் மட்டுமே வரும் ஆட்டோக்காரர்கள், சாலையோர மனிதர்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் அவர்களின் பிரத்யேகமான அவசர வசன உச்சரிப்பு, ஏற்கனவே நாம் அறிந்திருந்த நடிகர்களின் இன்னொரு பரிமாணம், அவர்களின் நாடகீய பாவணைகள், உருக வைக்கும் பின்னணி இசை, இரவு, சுரங்க நடை பாதை, சென்னை மத்யமர் குடியிருப்புப் பகுதியின் வீதிகள் போன்ற அச்சுப் பிசகாத மிஷ்கின் பாணிப் படத்தில் புதிதாய் பேய் வந்திருக்கிறது. இந்தப் பேய்தான் இதுநாள் வரை மிஷ்கினை கடுமையாக விமர்சித்தவர்களின் வாயை மூடவைத்திருக்கிறது என்பது சற்று அபத்தமான நிதர்சனம்தான்.

பேய் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது அடிப்படை. பிசாசே லாஜிக்கை மீறின வடிவம்தானே ஆக பிசாசு படத்திற்குள் லாஜிக்கையெல்லாம் கொண்டு வர மெனக்கெடவில்லை. ஒரே ஒரு வாக்கியத்தையும் சற்று புத்திசாலித்தனமான திருப்பத்தையும் கதையாக எடுத்துக் கொண்டு சமீபமாய் தமிழ் மனங்களை ஆக்ரமித்திருக்கும் பேய் பற்றையும் தனக்கு நன்றாகக் கைவரும் திரைமொழியில் சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார். சற்று யோசித்தால் ஒருவேளை மிஷ்கின் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் தந்த மன ரீதியிலான உளைச்சல்களால் கடுப்பாகி தமிழ் ரசிகர்களான உங்களுக்கு எல்லாம் இவ்வளவு போதும் என பிசாசை எடுத்திருக்கிறாரோ என்றெல்லாம் படம் பார்த்து முடிந்ததும் தோன்றியது.

மிஷ்கின் தன் தனித்துவமான திரை மொழிக்காக சித்திரம் பேசுதடியிலிருந்து பிசாசு வரை பேசப்படும் இயக்குனராக இருக்கிறார். இனி அவர் அழுத்தமான திரைக்கதைகளை நோக்கி நகர வேண்டியது அவசியம் என்றே நினைக்கிறேன். பிசாசை ஒரு உற்சாக டானிக்காக எடுத்துக் கொண்டு மிஷ்கின் பிராந்தியம் சார்ந்த, குறிப்பாய் தமிழ் சூழல் சார்ந்த கதைகளின் மீது கவனத்தை செலுத்த வேண்டும்.
0

இந்த ஃபேஸ்புக் காலத்தில் தமிழ் அறிவு சூழலையும் தமிழ் சினிமா எனும் பிசாசு பிடித்திருப்பதை  மிகுந்த எரிச்சலோடு அவதானித்து வருகிறேன். தமிழின் முக்கிய அறிவுஜீவிகள் என என்னால் கருதப்பட்ட பலரும் வெளிவரும் அத்தனை மொக்கை தமிழ் சினிமாக்களையும் பார்த்து ஃபேஸ்புக்கில் படுபயங்கரமான விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கவே திகிலாக இருக்கிறது. அதோடு நில்லாமல் சற்று சுமாரான படங்களையும் கண்டமேனிக்குப் புகழ்ந்து தள்ளுவதையும் பார்த்து -  திகில் படங்களைப் பார்த்தே திகிலடையாத நான்- கடும் பீதியடைகிறேன்.  தமிழின் அறிவு ஜீவிகளை பிடித்து உலுக்குவது ஃபேஸ்புக்கின் லைக் பேயா? அல்லது தமிழ்சினிமா எனும் பிசாசா? எனப் பிரித்தறியக் கடினமாக உள்ளது. இந்தப் பேயால் அந்தப் பிசாசு உயிர்தெழுகிறதா? அல்லது நிஜமாகவே இவர்களைத் தமிழ் சினிமா பிசாசுதான் பிடித்ததா? என்பதை உறுதியாகக் கண்டறிய முடியவில்லை. மிஷ்கினுக்கு வைத்த வேண்டுகோளைப் போலவே தமிழ் அறிவு ஜீவிகளுக்கும் தமிழ் சினிமா எனும் பிசாசைக் கைவிட்டு வரும் புத்தாண்டிலாவது மனம் திரும்புங்கள் எனக் கேட்டுக் கொள்வோம்.

0


Tuesday, December 16, 2014

இயற்கையின் சமீபம்

Alamar (2009)  -  திரைப்படத்தை முன் வைத்து :


ஏழு வயதில் கடல் பார்த்த பிரம்மிப்பு எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. மூன்றாம் வகுப்பு  கோடை விடுமுறைக்குப் புதுச்சேரி சித்தப்பா வீட்டிற்குப் போயிருந்தபோதுதான் முதன் முறையாய் கடலைப் பார்த்தேன். புதுவைக் கடல் சீற்றம் மிகுந்தது. காந்தி சிலைக்கு சமீபமாய் அப்போது ஓரளவிற்கு மணற்திட்டிருந்தது. கடலில் பயமில்லாமல் இறங்கி, சீறிவரும் அலைகளை பிரம்மிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தேன். என் உயரத்திற்கு வரும் அலைகளை நெருங்கவோ, குறைவாய் இருந்த மணற்திட்டில் கால் பதிந்து அலைநுரையை கையில் அள்ளவோ பயமில்லாமல் இருந்தது. கிராமத்தில் வளர்ந்ததால் ஐந்து வயதிலேயே நீச்சல் கற்றுக் கொண்டேன்.  ஆறு, குளம், ஏரி குட்டை என எங்கே நீரைப் பார்த்தாலும்  நிஜாரைக் கழட்டி எறிந்துவிட்டு குதிக்கும் வழக்கமிருந்தது. விடுமுறை நாட்களில் நாள் முழுக்க நீரில் கிடந்து செம்பட்டை ஏறிய தலைமுடியோடு திரிந்த பால்யம் என்னுடையது. கடல் சிறுவர்களுக்கு எவ்வளவு பெரிய பரவசத்தைத் தரும் என்பதை நானாகவும் என் குழந்தைகளின் மூலமும் அறிந்திருக்கிறேன். Alamar என்கிற இந்த மெக்சிகன் திரைப்படம் ஒரு சிறுவனின் கடல் அனுபவங்களைப் பற்றிப் பேசுகிறது. அந்த அனுபவங்கள் வழக்கமாய் யாருக்கும் கிடைக்காத அபூர்வ அனுபவமாக அச்சிறுவனுக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களான நமக்குமாய் அமைகிறது.

தாயுடன் இத்தாலியில் வசிக்கும் சிறுவன் நேதன், விடுமுறைக்குத் தன் தந்தையும் தாத்தாவும் வசிக்கும் மெக்சிகோவின் Banco Chinchorro கடலுக்குப் போய் வருவதுதான் கதை. Banco Chinchorro வைக் கடல் என்பதை விட பவழத் தீவு (Atoll) எனக் குறிப்பிடுவது பொருத்தமானது. மோதிர வடிவில் இருக்கும் இக்கடற்பரப்பு காயலைச்( lagoon) சுற்றி இருக்கும். ஏராளமான நீர்தாவரங்களையும் இயற்கையின் பேரெழிலையும் கொண்ட பிரதேசம். இந்தப் பகுதியின் மொத்த அழகையும் இத்திரைப்படம் தன்னில் பொதிந்து வைத்திருக்கிறது. அத்துடன் மூன்று தலைமுறை ஆண்களின் மகத்தான அன்பையும் மிக மென்மையாய் பேசுகிறது. காயலுக்கு சமீபமாய் கடலில் மர வீடமைத்து நேதனின் தந்தையும் தாத்தாவும் வசிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும்  படகில் போய் மீன்களைப் பிடித்து வருகிறார்கள். நேதனின் தந்தையும் தாத்தனும்  மீன்களைப் பற்றியும் அவற்றைப் பிடிக்கும் முறைகளைப் பற்றியும் சமைக்கும் முறைகளைப் பற்றியும் அவனுக்குச் சொல்லித் தருகிறார்கள். தூண்டிலிட்டு பாரகுடா மீன் வகைகளையும் கடலுக்கு அடியில் போய் lobster களை யும் தந்தையும் தாத்தனும் பிடித்து வருகிறார்கள். தந்தை தன் மகனுக்கு நீச்சல் கற்றுத் தருகிறான். பறவைகளைப் பற்றி அவற்றின் இயல்பு பற்றிச் சொல்லித் தருகிறான். இயற்கையோடு இணக்கமாக எவ்வாறு இருப்பது என்பதை சொல்லித் தருகிறான். முதலைகளை கண்டு அஞ்சாதிருப்பது அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு வரும் cattle egret பறவையொன்றோடு விளையாடுவதென நேதன் ஒவ்வொரு நாளையும் அத்தனைப் புத்துணர்வோடு கழிக்கிறான். தாத்தா தன் மீனவ வாழ்வைக் குறித்தும் இயற்கைக்கு சமீபமாக இருக்கும் ஆனந்தம் பற்றியும் மகனோடு பேசுகிறார். அவர்களின் உரையாடலில் மீனையும் ஸ்ட்ராங் காஃபியையும் பறவைகளையும் கடலையும் தாண்டி வேறொன்றும் இருப்பதில்லை. இயற்கையின் இன்னொரு அங்கமாகவே அம்மனிதர்களின் வாழ்விருக்கிறது. இயற்கையைக் கண்டு அஞ்சாமல் அதனோடு இரண்டறக் கலப்பது குறித்து தாத்தனும் தந்தையும் சிறுவனுக்குக் கற்றுத் தருகிறார்கள்.

Pedro González-Rubio என்கிற இயக்குனரின் இயக்கத்தில் 2009 இல் வெளிவந்த இத்திரைப்படம் ஆவணப்படத்தின் சாயல் கொண்டது. பிரம்மிக்க வைக்கும் ஒளிப்பதிவு, இயற்கையின் அசலான பின்னணி ஒலிகள் என இத்திரைப்படம் நம்மை ஒரு மகத்தான அனுபவத்திற்குக் கூட்டிச் செல்கிறது. அதோடில்லாமல் நம் குழந்தைகளுக்கு நாம் தர வேண்டியது என்ன என்பதை இப்படத்தின் தந்தையும் தாத்தனும் உணர்த்துகிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே என் குழந்தை வளர்ப்பின் பயங்கரங்கள் கண் முன் வந்து போயின. அக்கறை எனும் பெயரில் என் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்ப்பதின் அறியாமை குறித்து வெட்கினேன். இத் திரைப்படம் நிறைய பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு அல்லது அடுத்த தலைமுறைக்கு நாம் தர வேண்டியது என்ன என்பது குறித்தான புதுத் திறப்பாக இருக்கும். எனக்கு இருந்தது.

0


எது என்னுடைய உண்மையான வாழ்வு? எப்போது நான் முழு மகிழ்ச்சியாக இருக்கிறேன்? என்ன செய்தால் அதில் என்னால் முழுமையாகத் திளைக்க முடியும்? என்கிற கேள்விகள் எப்போதும் இருக்கின்றன. இதே கேள்விகளை வெவ்வேறு சூழலில் பல வருடங்களாக என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். எதுவுமே என்னை முழுமையாய் இட்டு நிரப்புவதில்லை. எல்லாவற்றிலிருந்தும் தப்பித் தப்பி ஓடுகிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்று தற்காலிகத் தீர்வாக இருந்தது/ இருக்கிறது. முழுமையான என்ற ஒன்றே இவ்வுலகில் இல்லை என எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்கிறேன். முழுமை இல்லாமற் போகட்டும் ஆனால் பிடித்தம் என்ற ஒன்று இருந்தாக வேண்டும்தானே? என்ன செய்தால் என் நிகழ் பிடித்தமானதாக அமையும் என்கிற தொடர்ச்சியான தேடலில் இயற்கைக்குச் சமீபமாக இருந்தால் என்னால் முழுமையாக இருக்க முடியும் என்கிற முடிவிற்கு வந்திருக்கிறேன். ஏதோ இந்தப் பாலையில் நாட்கள் கழிவதால் ஏற்பட்ட எதிர் ஈர்ப்பு என்று இதை சுலபமாய் தாண்டிப் போக முடியாத அளவிற்கு நாள்பட நாள்பட இந்த எண்ணம் வலுப்படுகிறது. ஆம் இயற்கையின்  அருகாமையில் இருந்தால் என்னால் முழுமையாக இருக்க முடியும். இத்திரைப்படத்தில் வருவது போல கடலில் வீடமைத்து மீன் பிடித்து உண்டு வாழ்வது என் இயல்பிற்கு மிக நெருக்கமாக இருக்கும். அல்லது ஏதோ ஒரு மலைக் கிராமத்தில், சிறு வீட்டில், உயர்ந்த மரங்களுக்கு நடுவில் வசித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் கண்விழித்ததும், சற்றுத் தொலைவிலிருக்கும் மலையருவிக்கு நடந்து போய் குளித்துவிட்டுத் திரும்புவதாய் அமையும் காலை வேளைகளை நினைத்துப் பார்க்கிறேன். நிச்சயம் இது முழுமையாகத்தான் இருக்க முடியும். குறைந்த பட்சம் பறவைகள் ஒலிப் பின்னணியில் எங்களூர் மலையடிவாரத்தில் அடர்ந்த மரங்களை வளர்த்தும், தாவரங்களை வளர்த்துமாய் நிகழை மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவே என் முழுமையாய் இருக்க முடியும்.


Monday, December 15, 2014

ப்ராமின் டாமினேஷன்


மலையாள மற்றும் வங்காளப் படைப்புகளின் அறிமுகத்தோடு ஒப்பிடுகையில் கன்னட இலக்கியமும் சினிமாவும் எனக்கு அத்தனை பரிச்சயம் கிடையாது. பைரப்பா, அனந்தமூர்த்தி, கிரீஷ்காசரவள்ளி, கிரீஷ்கர்னாட் மற்றும் விவேக் ஷன்பேக், போன்ற சொற்ப ஆளுமைகளின் படைப்புகளை அறிந்திருந்ததோடு சரி. சமீபத்தில் வாசித்த சிக்கவீர ராஜேந்திரன் நாவல் கன்னட இலக்கியத்தின் மீது பெரும் விருப்பம் ஏற்படக் காரணமாயிருந்தது. மனதளவில் என்னைக் கன்னடனாக உணரத் தொடங்கும் அளவிற்கு படைப்புகளின் வழியாய் அந்நிலங்களில் காலபேதமின்றி உலவிக்கொண்டிருக்கிறேன். கர்நாடகத்தின் நிலக்காட்சியும் மக்களும் பண்பாடும் என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன. பைரப்பா எழுதிய ஒரு குடும்பம் சிதைகிறது நாவலையும் இன்று காலை வாசித்து முடித்தேன். இந்திய சுதந்திரத்திற்கு முன்னரான கிராம வாழ்வை குறிப்பாக தும்கூர் பகுதி மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நாவல் வழியாய் மிகக் கச்சிதமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. பெண்ணடிமைத்தனம், அறியாமை, கல்வியறிவின்மை, வறுமை, ப்ளேக் போன்ற கொள்ளை நோய்கள், பஞ்சம், என மக்கள் மிகக் கடுமையான காலகட்டத்தை எதிர்கொள்ள நேரிட்ட கதையை ஒரு பிராமணக் குடும்பத்தை மையமாக வைத்து பைரப்பா மிக அசலாகச் சித்தரித்திருக்கிறார்.

சமூக வலைத் தளங்களை பிராமண நோய் பீடித்திருப்பதாலோ அல்லது தற்செயலாகவோ ”கன்னட இலக்கியத்தில் ப்ராமின் டாமினேஷன் அதிகம்” என்றொரு தகவலை தோழி வழியாய் அறிய நேர்ந்தது. அவசரமாய் விக்கியில் தேடிப் பார்த்தால் பைரப்பா பிராமணர்தான். எங்குதான் ப்ராமின் டாமினேஷன் இல்லை என சமாதானமாகிக் கொண்டேன். கல்வி அவர்களிடம் இருந்ததால், முதலில் கல்வி கற்றவர்கள் அவர்கள்தாம் என்பதால் அறிவுச் சூழலில் அவர்களின் இருப்பு மிகுந்திருப்பதைத் தவிர்க்க முடியாது. தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்களேன் இருக்கும் சொற்ப ஆளுமைகளில் சொற்பமே சொற்ப ஆட்களைத் தவிர்த்து அனைவருமே பிராமணர்கள்தாம். ஏன் இந்திய அளவில் கூட எழுத்தாளர்கள் உள்ளிட்ட அறிவுப்புல ஆளுமைகளில் தொண்ணூறு சதவிகிதம் உயர்சாதியினர்தாம். இதில் புதிய ஆட்கள் உள்ளே வருவது, புதுச் சிந்தனைகள் உள்ளே வருவது போன்றவை மிக மெதுவாகத்தான் நிகழும். அனேகமாய் இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆகலாம். அந்த ஐம்பது ஆண்டுகளை நூறு ஆண்டுகளாக நீட்டிக்கச் செய்ய பத்ரிக்களும் ஜெயமோகன்களும் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பார்கள் என்றாலும் உயர் சாதியினரின் ஆயுளும் மற்ற சாதியினரின் ஆயுட் காலமும் ஒன்றாகவே இருப்பதால் மாற்றங்கள் அடுத்த நூற்றாண்டிலாவது நிகழ்ந்து விடும் என நாம் மூச்சு விட்டுக் கொள்ளலாம்.

தமிழில் குறிப்பாக பிராமணர் படைப்புகளை எடுத்துக் கொண்டால் அவற்றை  யதார்த்தம், அழகியல் எனும் இரு பெரு பிரிவுகளிலும், காமம், அகச்சிக்கல், உள்ளொளி தரிசனம், பொருந்தாக்காமம், நிறைவேறாக் காமம், இப்படி சில பல உள் வகைமைக்குள்ளும் பொருத்தி விட முடியும். இதைத் தாண்டி அவர்களின் சுயசாதி விமர்சனம் படைப்புகளில் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. கன்னடத்திலும் மலையாளத்திலும் இந்தப் போக்கு இல்லை. பெரும்பாலான உயர்சாதியினர் படைப்புகளில் சுயசாதி விமர்சனம் அடிப்படையான ஒன்றாக இருந்தது. ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் அர்ச்சகர்களையும் பூசாரிகளையும் மக்களை ஏய்த்துப் பிழைப்பவர்களாக பைரப்பா சித்தரித்திருப்பார். நாவலின் முதல் அத்தியாயமே ஒரு பிராமணக் குடும்பத்தின் அதிகாலை, தாய் மற்றும் மகன்களின் ஏராளமான வசைச் சொற்களோடுதான் விடிகிறது. மகன்கள் தாயை ”மொட்டை முண்டை”, ”கழுத முண்டை” என வசைவதும் பதிலுக்குத் தாய் மகன்களை ”தேவடியாப் பிள்ளைகளா” என வசைவதுமாய் நாவல் ஆரம்பிக்கும். பிராமணக் குடும்பத்தின் கதை என்றாலும் கூட மிக நேரடியான மக்கள் மொழி அதாவது மிக அசலான கிராம மொழியில்தான் மொத்த நாவலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் பிராமணர் அல்லத ஜெயகாந்தன் போன்றோர் கூட தங்களின் பெரும்பாலான படைப்புகளை பிராமண மொழியில்தான் எழுதினர். நம் சூழலைப் பொருத்த வரை பிராமண மோகம் என்பது எந்த விதத்திலும் பாதிக்கப்படாது தலைமுறை தலைமுறையாய் நம்மிடையே கடத்தப்பட்டிருக்கிறது. அறிவு, கலை எனும் பாவணையில் விமர்சனமே இல்லாத அழகியல் படைப்புகள்தாம் நம் மூளைகளில் மேன்மையானவையாய் பதிய வைக்கப்பட்டிருக்கின்றன. இதை ஒரு கும்பல் மிகத் தெளிவாகவே இன்றும் செய்து வருகிறது. அவர்களின் பெயர்கள்தாம் மாறியிருக்கின்றனவே தவிர மனநிலை என்னவோ ஒன்றுதாம்.

தமிழ் மனசாட்சியின் குரல் என தன்னை வர்ணித்துக் கொள்ளும் ஜெயமோகனுக்கு பார்ப்பான் என வசைவதும் பறையன் என வசைவதும் ஒன்றல்ல என்கிற அடிப்படை கூட  எப்படி புரியாமல் போனது என்பதுதான் திகைப்பாக இருக்கிறது. சமூக அவலம் அல்லது சமூக அறம் குறித்த விஷயங்களை ஜெயமோகன் அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்தே பெறுவதால் சுய சாதி விமர்னம் கொண்ட, முற்போக்குப் பேசும் பிராமணர்கள் யாராவது அவரின் பக்கத்து வீட்டிற்கு குடி போய் பிராமணர்களின் சமகால நிலையைப் புரிய வைக்க வேண்டுகிறேன். துரதிர்ஷ்டவசமாக ஆதரவு அணியிலும் எதிர் அணியிலும் ஒரே சாதியினரைக் கொண்ட சூழலாக நமது தமிழ்சூழல் இருக்கிறது. ஜெ குறிப்பிடும் இடைசாதி வெறியர்களின் குரல் கருத்துத் தளத்திற்கு இன்னும் எட்டவில்லை அல்லது அவர்களின் குரல் முற்போக்கு பிராமணர் குரல் அளவிற்குத் தெளிவாக இல்லை. தலித்களின் குரலைக் கேட்கவோ காதுகளே இல்லை.


Wednesday, December 10, 2014

சிக்கவீர ராஜேந்திரன் - 2

வீரராஜன் கோழையோ சோம்பேறியோ அல்ல. விளையாட்டிலும் துப்பாக்கி சுடுவதிலும் தேர்ச்சி பெற்றவன். சிறுவயதில் வீரராஜனுக்கு கிடைத்த அளவுகடந்த சுதந்திரம், தாயின் அரவணப்பின்மை, தந்தையின் சரியான வழிகாட்டலின்மை போன்றவைகள் அவனை முரட்டு இளைஞனாக வளர வழிவகுக்கிறது. வீரராஜனுக்காக எதையும் செய்யத் துணியும் சக விளையாட்டுத் தோழனான நொண்டிப் பசவனின் அளவு கடந்த மரியாதையும் பக்தியும் விசுவாசமும் வீரராஜனை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றன. பெண்பித்து, மதுமயக்கம் என சகல போகங்களிலும் மிக இளம் வயதிலேயே வீரராஜன் எல்லையற்றுத் திளைக்கிறான். மகனின் போக்கைக் கண்டு திகைக்கும் தந்தை குடகு வம்சத்தை சேர்ந்த துணிச்சலும் கம்பீரமும் நற்குணங்களும் கொண்ட பெண்ணான கெளரம்மாவை வீரராஜனுக்கு மணம் முடித்து வைக்கிறான். தந்தைக்குப் பிறகு அரியணை ஏறியதும் அவனின் தீய குணங்களும் இரட்டிப்பாகின்றன.

கெளரம்மா வீரராஜனின் அத்தனை மூடத்தனங்களையும் தாங்கிக் கொள்கிறாள். வீரராஜன் மீது மக்களுக்கும் மந்திரிகளுக்கும் ஏற்படும் அசெளகர்யங்களை முடிந்தமட்டில் கெளரம்மா தீர்த்து வைக்க மெனக்கெடுகிறாள். வீரராஜனுக்கு இருக்கும் ஒரே பலகீனமான மகள் பாசத்தை வைத்து ஓரிரு நற்காரியங்களை அவளால் சாதித்துக் கொள்ள முடிந்தாலும் அவனின் தீமைக் குணங்கள் ஒரு எல்லைக்கு மேல் அவளை நகரவிடாமல் செய்து விடுகிறது.

முப்பத்தைந்து வயதிலேயே வீரராஜன் மூப்படைந்து விடுகிறான். அளவு கடந்த பெண் இன்பத்தால் ஆண்மையையும் இழக்கிறான். சதா பசவனுடன் இழந்த ஆண்மையை மீட்டெடுக்க மருத்துவ வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறான். இருந்த போதிலும் கண்ணில் படும் பெண்டிரை கவர்ந்து வரச் சொல்லி அரண்மனையில் வைத்துக் கொள்கிறான். இந்த மீறல் எல்லை தாண்டி அசலூர் உயர்குடிப் பெண்கள் மீதும் பாய்கிறது. இத்தகவல் ஆங்கிலேயர் அரசிற்குப் போக வீரராஜனுக்கு சிக்கல் ஆரம்பிக்கிறது. அரண்மனை வரவு செலவை கவனித்துக் கொள்ளும் செட்டியார் குடும்பத்துப் பெண்கள் மீதும் சிக்கவீர ராஜன் தன் கவனத்தைத் திருப்ப குடகின் மிக முக்கியஸ்தர்களும் மந்திரிகளும் மன்னன் மீது அதிருப்தியும் கோபமும் அடைகின்றனர்.

தங்கை தேவம்மாவும் மைத்துனன் சென்ன பசவனும் தனக்கு எதிராக கலகம் செய்யத் துணிவதாகக் கருதி வீரராஜன் தங்கையை அரன்மணைக்குள் சிறை வைக்கிறான். மக்களிடையே செல்வாக்கு பெற்றிருக்கும் சென்ன பசவன் தகுந்த நேரம் பார்த்து வீரராஜனை பதவியிலிருந்து இறக்கிவிட்டு தன் மனைவியை ராணியாக்க முயற்சிகளை எடுக்கிறான். அதற்காக தொடர்ச்சியாக பெங்களூரை ஆளும் ஆங்கில அரசிற்கு கடிதங்களை எழுதுகிறான்.

சிக்கவீர ராஜனின் பெரியப்பாவும் அவர் மகனும் குடகின் நிலை சரியில்லை எனவும் மக்கள் துயரடைகின்றனர் எனவும் சென்ன வீரன் மூலம் கேள்விப்பட்டு குடகிற்கு  வருகின்றனர். அங்கிருக்கும் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசி மன்னனை பதவியிலிருந்து இறக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

மன்னனின் அடாவடிப் போக்கிற்கு எதிராக உள்ளூர் இளைஞர்கள் காவிரி மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் கீழ் அணி திரள்கின்றனர்.

வீரராஜனின் தகப்பன் லிங்கராஜன் தாசி குலப் பெண்ணான பாப்பாவை திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்துவிட்டு குழந்தை பிறந்ததும் அரண்மனையை விட்டு விரட்டிவிடுகிறான். அந்தக் குழந்தையின் பிஞ்சுக் காலை வளைத்து அரண்மனை சேவகர்களிடம் வளரவிடுகிறான். பல வருடங்கள் கழித்து பாப்பா பகவதியாகத் திரும்பி வருகிறாள். அரசனை வீழ்த்தி அவளின் குழந்தையை அரசனாக்க முயற்சிகளை எடுக்கிறாள்.

வீரராஜனின் தன் உண்மை ஊழியனான நொண்டி பசவனை மந்தியாக்குகிறார். இது மற்ற முக்கிய மந்திரிகளான போபண்ணாவிற்கும் லக்‌ஷ்மி நாரயணய்யாவிற்கும் பிடிக்காமல் போகிறது. அரசன் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மிக மோசமான நிலையை அடைகின்றன.

இப்படியாக எல்லாத் திசைகளில் இருந்தும் சிக்கவீர ராஜனுக்கு எதிரிகள் முளைக்கின்றனர். இதுபோன்ற சூழல்களை நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஒட்டு மொத்த இந்தியாவையும் வீழ்த்திய வெள்ளை அரசு குடகையும் மிக எளிதாக தன்னுடையதாக்கிக் கொள்கிறது. மைசூரைப் போல குடகும் வெள்ளையரிடம் போய்விடக்கூடாதென குடகின் மந்திரிகள் ராணி கெளரம்மாவை அரியணையில் ஏற்றும் முயற்சிகளும் பலிக்காமல் குடகு ஆங்கிலேயர் வசமே போகிறது.

சிக்கவீர ராஜன் தன் தங்கையின் பிஞ்சுக் குழந்தையைக் கொன்ற பிறகு புத்தி பேதலித்து படுக்கையில் வீழ்கிறான். அப்போதிலிருந்து கடைசியாகப் பசவன் அவன் கையாலே கொல்லப்படுவது வரை நடைபெறும் சம்பவங்கள் யாவும் பரபரப்பும் வேகமும் மிகுந்தவை. இந்தப் பகுதியை வாசித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு Downfall திரைப்படம் நினைவிற்கு வந்தது. ஹிட்லரின் கடைசிப் பத்து நாட்களை பேசும் மிகக் கச்சிதமான ஜெர்மானியப் படமது. ஹிட்லர் மெல்ல மெல்ல சுற்றி வளைக்கப்படும் சம்பவங்களும் நிகழ்வுகளும் எத்தனை சுவாரசியமும் திருப்பமும் வாய்ந்ததோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் சிக்க வீர ராஜேந்திரன் நாவலின் கடைசிப் பக்கங்கள் இருந்தன.

ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் சிக்க வீர ராஜேந்திரனுக்கும் இடைய நிகழும் கடிதப் போர் நாவலில் மிக முக்கியமான பகுதி. நாசூக்காகவும் மிக விவரமாகவும் வெள்ளையர்கள் குறு நில மன்னர்களுக்கு கொடுத்த அழுத்தம் கடிதங்களில் மிகத் துல்லியமாய் வெளிப்பட்டிருக்கும். அப்படி இருந்தும் தங்கள் விரோதத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் ஒரு குழுவினர் மடிகேரிக்கு வந்து விருந்தினர்களாகத் தங்கி விட்டுப் போவார்கள். ஆங்கிலப் பெண்களுக்கு இந்திய அணிகலன்கள் மீது பெரும் விருப்பம் இருந்தது. ராஜ பரம்பரை நகைகளை சன்மானம் பெறுவதற்காக மன்னர்களுக்கு முன் நடனமாடவும் உறவு கொள்ளவும் தயாராக இருந்தனர். மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் நிகழ்வுகளும் நடந்தேறியிருப்பதை சம்பவங்களாக ஆசிரியர் விவரித்திருப்பார்.
0

நாவலில் நொண்டிப் பசவன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறுவயதில் சக விளையாட்டுத் தோழர்கள் அவனை வெறுத்து ஒதுக்க வீரராஜன் மட்டும் பசவனைத் தன்னோடு சேர்த்துக் கொள்வான். அந்த நன்றியும் விசுவாசமும் பசவனுக்கு சாகும் வரை தொடரும். வீரராஜன் சிறைபிடிக்கப்படும்போது தன்னுடைய அவசர மூடத்தனத்தால் பசவன்  தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டதாக தவறாகப் புரிந்து கொண்டு அவனை சுட்டு வீழ்த்தி விடுவான். ஆனாலும் அரசனுக்கு ஏதும் நேரக்கூடாது என்ற எண்ணத்தோடே பசவன் மடிந்து போவான். பசவனுக்கு  அவன் பிறப்புப் பின்னணி தெரியாமலே போய்விடும். நாய்களையும் மிருகங்களையும் வளர்ப்பவன். பிறப்பால் நாவிதன் என்றெல்லாம் மற்ற மந்திரிமார்களால் இகழப்பட்டவன், அரசன் லிங்கராஜனின் மகன் தான் என்பது அவன் இறப்பிற்குப் பிறகே தெரியவரும். 

வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு புறமும் தியாகமும் நன்றிவிசுவாசமும் ஒருபுறமுமாய் ஏராளமான கதாபாத்திரங்கள் நாவல் நெடுகப் பயணித்திருக்கின்றன. தொட்டவீர ராஜனின் நண்பரான கிழவர் உத்தய்ய தக்கன், சென்ன பசவனுக்காக உயிரை விடும் சோமன், ராணி கெளரம்மாஜி, தீட்சிதர், மந்திரிகள் போபண்ணா, லக்‌ஷ்மி நாரயணய்யா, உத்தய்யன், தொட்டவ்வா என விசுவாசத்திற்கும் நேர்மைக்கும் உதாரணமாய் பல கதாபாத்திரங்கள் மேன்மையாய் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ராணி கெளரம்மாஜிக்கு அரசாள எல்லாத் தகுதியுமிருந்தும் கணவனை பதவியிலிருந்து இறக்கிவிட்டு அந்த இடத்தில் அமர மாட்டேன் என தீர்க்கமாய் மறுத்துவிடுகிறாள். ராஜ வாழ்க்கை போனபின்பும் காசியில் தொடர்ச்சியாய் நோன்பிருந்து பூஜைகள் செய்து உயிரை விடுகிறாள். கெளரம்மாஜி குடகின் மனசாட்சியாக குடகர்களின் மேன்மை குணங்களின் ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.

ஆங்கிலேயர் குடகை கைப்பற்றிய பிறகு பனாரஸில் சில காலம் வசிக்கும் வீரராஜன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி அதன் மூலம் வெள்ளையரின் நன்மதிப்பை சம்பாதித்து மகளை ராணியாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறான். அதுவும் தோல்வியடையவே இங்கிலாந்திற்கு செல்கிறான். அங்கு ராஜனின் மகள் ஒரு ஆங்கில அதிகாரியை திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுக்குப் பிறந்த பெண் இந்தியா வந்து இந்த நாவலை எழுதும் ஆசிரியரிடம் பின் கதைகளைக் கூறுவதாக நாவல் நிறைவடைகிறது.


0
Tuesday, December 9, 2014

சிக்கவீர ராஜேந்திரன் - 1

சிக்கவீர ராஜேந்திரனை இவ்வளவு தாமதமாக வாசித்ததை எண்ணி வருந்தினேன். குடகுப் பகுதிக்கு செல்வதற்கு முன்னால் இந்நாவலை வாசித்திருந்தால் அந்தப் பிரதேசங்களை இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக்க முடியும். மடிகேரியில் எஞ்சியிருக்கும் நினைவுச் சின்னங்களையும் தேடிப் பார்த்துவிட்டு வந்திருக்கலாம். போகட்டும். அடுத்த பயணத்திலாவது குடகுப் பகுதியை முழுமையாய் பார்க்க வேண்டும். நாவலில் குறிப்பிட்டிருக்கும் இடங்களை குறிப்பாய் மடிகேரி, நால்கு நாடு மற்றும் அப்பங்குள அரண்மனைகளை பார்த்து வர வேண்டும். 

சிக்கவீர ராஜேந்திரன் நாவல் ஸ்ரீநிவாச என்கிற மாஸ்தி வெங்கடேச அய்யங்காரால் 1956 இல் கன்னடத்தில் எழுதப்பட்டது. வரலாற்றுப் புனைவு என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாக இந்நாவலைச் சொல்லலாம். மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் நான்லீனியர், மெட்டா போன்ற உத்திகளை மிக அசாதரணமாக நாவலில் கையாண்டிருக்கிறார். நாவலின் வடிவமும், எழுதப்பட்ட விதமும், மிகச் சாதாரணமான பேச்சு மொழியும், வாசிப்பின்பத்தின் உச்சிக்கு நம்மைக் கொண்டு செல்கின்றன. நாவலின் சரளமான தமிழாக்கம் ஒரு மொழிபெயர்ப்பு நாவலை வாசிக்கிறோம் என்கிற கவனமே ஏற்படாதவாறு அத்தனை நேர்த்தியாக இருந்தது. 
ஹேமா ஆனந்ததீர்த்தன் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 

ஹேமா ஆனந்ததீர்த்தன் பலவருடங்களுக்கு முன்பு மாத நாவல்களை மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு சில நாவல்களை வாசித்த நினைவும் இருக்கிறது. சிக்கவீர ராஜேந்திரனை மொழிபெயர்த்ததின் மூலம் அவரின் தமிழிலக்கியப் பங்களிப்பு மிக முக்கியமானதாகிறது.

சிக்கவீர ராஜேந்திரன் நாவலுக்காக மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் ஞானபீட விருதைப் பெற்றார். கன்னடத்தின் ஆஸ்தியாகக் கருதப்படும் மாஸ்தி குறித்து விக்கியில் சில சுவாரசியமான தகவல்களைப் பார்த்தேன். மொத்தம் 123 நூல்களை கன்னடத்திலும் 17 நூல்களை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். தன்னுடைய 95 ஆவது வயதில் பிறந்த தினத்தன்றே இயற்கை எய்தியிருக்கிறார் (ஜூன் 06,1891 – ஜூன் 06 1986) புதுக்கன்னடச் சிறுகதை வடிவம் மாஸ்தி வெங்கடேச அய்யங்காருக்காகவே காத்துக் கொண்டிருந்ததாக விமர்சகர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள்.

குடகின் கடைசிக் குறுநில மன்னனான சிக்கவீர ராஜேந்திரனின் வாழ்வைத் (பெரும்பாலும் உண்மைச் சம்பவங்கள்) தொகுத்து எழுதப்பட்ட நாவல்தான் இது. இந்நாவலில் ஆசிரியரும் கதாபாத்திரமாக வருகிறார். சிக்கவீர ராஜேந்திரனின் மகளைச் சந்தித்தது, அவள் மூலமாய் ஆவணங்களைப் பெற்றது, மொத்தமாய் திரட்டிய தகவல்களைக் கொண்டு இதை ஒரு நாவலாய் எழுத ஆரம்பிப்பது என நாவல் எழுதப்பட்ட கதையை நாவலுக்கு உள்ளேயே கொண்டுவந்திருக்கிறார். மேலும் கதை சொல்லப்படும் முறை மரபான ஆரம்பம் முதல் இறுதி வரையாய் இல்லாது, பிரச்சினைகள் துவங்கும் காலகட்டத்தில் இருந்து ஆரம்பித்து இடை இடையே மூன்று தலைமுறை கதையைச் சொல்லி, பல புதிர் சுவாரசியங்களை உள்நுழைத்து, பின்பு அவை ஒவ்வொன்றாய் அவிழ்வதாய் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வடிவம் சம காலத்திலும் புத்தம் புது வடிவமாகப் போற்றப்படுவது. இதை அறுபது வருடங்களுக்கு முன்பு மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் பயன்படுத்தியிருப்பது என்னை வியப்பிலாழ்த்தியது.

தென் கர்நாடகத்தின் மிகச் செழிப்பான பகுதியான குடகு காவிரியின் பிறப்பிடம். காவிரி மட்டுமில்லாது பத்திற்கும் மேற்பட்ட ஏராளமான சிற்றாறுகள் பாயும் மலைப் பகுதி. இங்கு வசிப்பவர்கள் குடகர்கள் எனப்பட்டனர். ஆனாலும் எந்த ஒரு காலத்திலும் இப்பகுதியை குடகர்கள் அரசாண்டதாக வரலாறு கிடையாது. குடகர்கள் அரச பதவியை வலிந்தே ஏற்காமல் இருந்ததாக நாவலில் வரும் மந்திரியான போபண்ணா கதாபாத்திரத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மிக செழிப்பான பகுதியான குடகு, பக்கத்து அரசுகளான மலையாளம், மைசூர், மங்களூர் போன்றவற்றின் பொறாமையைப் பெற்றிருந்ததாலும் மலைக் காடென்பதால் குடகை வெற்றிக் கொள்வது சிரமமாக இருந்தது. கதம்ப, கங்க, சோழ, சாளுக்கிய, ஹேய்சால வம்சங்கள் ஆண்டபிறகு கேரி அரச வம்சம் இருநூறு வருடங்கள் குடகை ஆட்சி புரிந்தது. கடைசியாக உடையார்களின் அரசாட்சி இருந்தது. அதன் கடைசி மன்னன் சிக்கவீர ராஜேந்திரன் குடகுப் பகுதி ஆங்கிலேயர் வசம் போக காரணமாக இருந்தான். அந்த சம்பவங்களைத்தான் இந்நாவல் பேசுகிறது. 

வரலாற்று நாவல்கள் இதுவரை நம் மீது படிய வைத்திருக்கும் அத்தனை மரபு மிகைகளையும் இந்நாவல் அடித்து நொறுக்கியிருக்கிறது. சதா போகத்தில் திளைக்கும் முரட்டுக் குடிகார அரசனை பார்க்க மிக நெருக்கமாக இருந்தது. நம்முடைய பெரும்பாலான வரலாற்று நாவல்கள் மிகையான ஜோடனைகள் நிறைந்தவை. அதிகாரச் சார்பு கொண்டவை. மன்னனை வீரதீரபராக்கிரம் பொருந்திய சாகச நாயகனாக மட்டுமே நமக்குச் சொல்லிக் கொண்டிருந்தவை. தமிழில் இந்தப் போக்கு அலுப்பூட்டும் அளவிற்கு எழுதப்பட்டு சமகாலத்தில் மட்டுமல்லாது என்றென்றைக்கும் போற்றப்படும் தமிழ் அடையாளங்களாக உருவாக்கப்பட்டன.  

பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் மற்றும் வானம் வசப்படும் நாவல்கள் மட்டுமே இந்த அயற்சியூட்டும் வரலாற்று நாவல் பொய்மைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றின. ஆனாலும் இவ்விரண்டு நாவல்களும் சிக்கவீர ராஜேந்திரன் நாவல் தந்த களிப்பைத் தரவில்லை. வரலாற்றுப் புனைவை இப்படி நேரடியான மக்கள் மொழியில் எழுத முடியும் அதிலேயும் மன்னன் என்பவன் மக்களில் ஒருவன் தான். அவனும் இன்னொரு மனிதனைப் போலவேதான் இருப்பான் - பேசுவான் - நடந்து கொள்வான். சதா கெட்டவார்த்தைகளை அள்ளி வீசுவான் என்பதெல்லாம் நமக்குப்/ எனக்குப் புதிதுதான். 

தொட்ட வீர ராஜேந்திரன் இந்த வம்சத்தின் மிகச் சிறந்த அரசனாகப் போற்றப்பட்டான். குடகு மக்களின் விருப்பத்தையும் அன்பையும் பெற்ற ஒரே அரசனாக தொட்டவீர ராஜேந்திரனே கருதப்பட்டான். சூழ்ச்சியால் அவனிற்குப் பிறகு ஆட்சிக்கு வரும் தம்பி லிங்கராஜன் மற்றும் லிங்கராஜனின் மகனாகிய சிக்கவீர ராஜேந்திரன் ஆகிய இம்மூன்று தலைமுறைக் காலத்தின் வரலாறு சுருக்கமாகவும் சிக்கவீர ராஜேந்திரனின் வீழ்ச்சி குறித்து விலாவரியாகவும் நாவலில் பேசப்படுகிறது.

வீழும் காலம் என்பது அதிகார வாழ்வில் மிக முக்கியமான பகுதி. ஒரு வம்சம் வீழ்ச்சியடையும்போது மக்கள் உடனடியாய் அந்த வீழ்ச்சியின் பின்புலத்தை அறிந்து கொள்ள ஆர்வமடைவார்கள். அதிகாரம் தன் தரைத்தளத்திற்குக் கீழே சாமான்யர்களால் நெருங்க முடியாத ஏராளமான ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கிறது. இரகசியங்களின் மீதான விருப்பம் நம்மை கதைகளை எழுதவும் வாசிக்கவும் தூண்டுகிறது. அப்படித்தான் பலப்பல வரலாற்றுப் புனைவுகள் கதைகளாக எழுதப்பட்டன. மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் இன்னொரு நாவலான ”சென்னப்பசவ நாயக” நாவலும் ஷிமோகா பகுதியின் கடைசி நாயக்க மன்னின் வீழ்ச்சியைத்தான் பேசுகிறது. இந்நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை.கண்டிப்பாக சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். மாஸ்தி தன் சிறுகதைகளுக்காகத்தான் அதிகம் பேசப்பட்டார்.

-    
-  மேலும்


Featured Post

test

 test