Saturday, December 20, 2008

வாசகனின் நாட்குறிப்பிலிருந்து...

19.02.2012 : ஞாயிறு: இரவு 8.30
இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் ஏற்பட்ட உணர்வுகளை வினோதம் என்றுதான் சொல்ல வேண்டும்.வினோதங்களின் திகைப்புகளிலிருந்து விடுபட வெகுநேரம் பிடித்தது.

பயம்.. பயம்... பயம்... இந்த பயம் என்பதை திரும்பத் திரும்பத் திரும்பத் த்பம்ருதி சொல்கையில் அல்லது கத்துகையில் பயம் பாசியைபோல் இழை இழையாகப் படரத் துவங்குகிறது. அடிவயிற்றிலா ஆரம்பிக்கிறது பயம்?இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். யாருக்குத் தெரியும்? ஆனால் ஏற்படும் உணர்வினுக்குப் பெயர் பயம்தான்.இப்போதெல்லாம் அதிகமாக பயப்படுகிறேன்.காரணமேயில்லாமல்;பயப்பட வேண்டிய எந்த நிகழ்வுகளுமே நடந்துவிடாதபோதும் கூட என்னால் பயப்படாமல் இருக்கமுடியவில்லை....இதனால்தான் பயம் வருகிறது என்றெல்லாம் இல்லை.எல்லாமும் பய நிலைக்குத் தள்ளுகிறது.சென்ற வாரத்தில் தூக்கம் வராத பின்னிரவில் வாழ்வு மிக மகிழ்ச்சியாய் இருக்கிறதெனக் கவலைப்பட்டேன்.அடுத்தநாள் கிட்டத் தட்ட முன் தின இரவின் அதேப்பொழுதில் வாழ்வு எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறதென மிக அதிகமாய் வருந்தினேன்.இது மனநலம் தொடர்புடைய குறைபாடா என விபரீதமாய் யோசித்துத் தொலைகிறேன்.(இந்தப் பத்தியை எழுதி முடிக்கும்போது பாருங்களேன்..விபரீதம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறேன். கடந்த இரண்டு தினங்களில் இந்த விபரீதம் என்கிற வார்த்தையைப் பதினெட்டு முறை பயன்படுத்திவிட்டேன்.ஏன் சம்பந்தமே இல்லாமல் ஒரே வார்த்தை திரும்பத் திரும்பத் திரும்பத் த்பம்ருதி என் நாவிலிருந்து வெளிப்பட வேண்டும்? ஏதேனும் விபரீதம் நிகழப்போவதைதான் மறைமுகமாக இது சுட்டுகிறதோ?எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.என்மேல் பேரன்பு கொண்ட தோலர், தோழர், தோழர்காள்! தோழரே!! டேய் தோலா!!! எனக்கு யாராவது உதவுங்களேன்...

-மீப்பெருவெளியில் தொலைந்த மீ (பீ)யொலிக் குறிப்புகள்:அய்யனார்

22.05.2012 :ஞாயிறு:இரவு 11
கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்றின் நெகிழ்வுகள் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டிருக்கிறது.இந்தப் புத்தகத்தை படித்திருக்க வேண்டாம்தான்.படித்து முடித்ததும் விலகிப்போனவளின் நினைவுகள் விடாது இம்சிக்கத் துவங்கியது.

எல்லா ஞாயிற்றுக் கிழமைகளைப் போலவே இன்றும் ஏழு மணிக்கெல்லாம் வந்துவிட்டிருந்தாள்.டிசம்பர் மாதக் குளிரில் தண்ணீர் விறைத்திருக்கும்.எப்படிக் குளித்தாள் எனத் தெரியவில்லை.தலைக்கு வேறு குளித்துத் தொலைத்திருக்கிறாள்.விழித்தெழுந்த காலையில் மஞ்சள் நிற புடவையும்,தழைந்த கூந்தலில் மல்லிகைப் பூவுமாய் ஆத்மார்த்த காதலியை பார்க்கும் வாய்ப்பு கிட்டப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.அவளுக்கு விநாயகரை மிகவும் பிடிக்கும்.யானை என்றால்தான் பயப்படுவாள்.மணக்குள விநாயகருக்கு பனியில் குளித்திருந்த தாமரை மலர்களை இன்னொரு பனியில் குளித்த தாமரை சகிதமாக வாங்கிக் கொண்டு போய் சாத்தினேன்.விடுமுறை நாளை இப்படித்தான் துவங்குவோம்.எல்லாச் சனிக்கிழமை மாலைகளிலும் அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்.இப்படிச் சொல்வாள் "முதல்ல கோயில்,அப்புறம் பீச்,..ம்ம்.. அப்புறம் கொஞ்சமா எங்காச்சிம் சாப்டுட்டு சினிமா..ஒரே ஒரு முத்தம்தான் ஓகேவா?..மதியம் எங்காச்சும் போய் நான்வெஜ்... ஹாஸ்டல் சாப்பாடு கொடும தெரியுமா?..சாயந்திரம் நம்ம பார்க்ல.. நம்ம ப்ளேஸ் அங்கயும் ஒண்ணே ஒண்ணுதான்.."அவள் சொன்ன முறை மாறாது ஒரு நாள் கழியும்.முத்தக் கணக்கில் மட்டும் சற்று தாராளமாய் இருப்பாள்.வழக்கமாய் நடப்பதை எதற்கு எழுதிக் கொண்டிருக்கிறேன் எனில் இன்று மதியம் உணவகத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் இப்படிப் புலம்பவிட்டது.

அந்த மேல்தட்டு உணவகத்தின் குளிரூட்டப்பட்ட பிரிவில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம்.அந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லா உடைகளணிந்த இருபது வயது மதிக்கத் தக்க ஆணும், பதின்மங்களைத் தாண்டியிராத பெண்ணும்(அந்தப் பெண் பள்ளிச் சீருடை தாவணி அணிந்திருந்தாள்)மிகுந்த தயக்கங்களோடும்,பயத்தோடும் எனக்கு எதிரிலிருந்த இருக்கைகளில் வந்தமர்ந்தனர்.அந்தப் பெண் அந்த சூழலை மருண்ட பெரிய விழிகளின் துணைகொண்டு மிரட்சியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.அவன் மிகுந்த பதட்டமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.மெனு கொடுக்கப்பட்டது.வாங்கிப் புரட்டிப் பார்த்தவனின் கண்களில் அதிர்ச்சி தெறித்தது.அந்தப் பெண்ணை பார்த்தவாறு "வேற எங்காச்சும் போலாம் இங்க நம்ம ஊரு சாப்பாடு இல்ல" எனச்சொல்லி அப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெளியில் போய்விட்டான்.பத்து நிமிடத்திற்குள் நடந்த இந்நிகழ்வு என்னை சமநிலையில் இருக்கவிடாது துன்புறுத்தியது.இவளிடம் புலம்பியபடி இருந்தேன்."நீ இருக்கச் சொல்ல வேண்டியதுதானே நாம் கொடுத்திருக்கலாமே" என என் குற்ற உணர்வுகளை இன்னும் அதிகமாக்கினாள்..

- உதிர் நட்சத்திரங்களின் வழி பயணித்தவளோடு வாழ்ந்த தொள்ளாயிரத்து முப்பத்தியோரு நாட்கள்:அய்யனார்

19.08.2012 : ஞாயிறு : மதியம் 3 மணி
இவ்விதமான கதை சொல்லல்கள் என் இளம்பிராயத்து வாழ்வை மீட்டுவதாய் இருந்தது.நான் தொலைத்த என் கிராமம் சார்ந்த நினைவுகளை இப்புத்தகத்தில் அடையாளம் கண்டுகொண்டேன்.

"அவன் எம்மாம் பெரிய மசிராண்டியா இருந்தா எனுக்கின்னா..போடா பெரிசா வந்திட்டான்..மான ரோசத்தோட வாழறவடா நானு..ஒத்த பொம்பளயா ஒன்ன வளக்கல?. நீ இன்னா அழுவியா பூட்ட?..எவன் ஒறவுஞ்சாரமும் எனுக்கு வேணாம்.. எந்தக் கொம்பன் வூட்டுக்கும் நான் வர்ல.. எவனும் இங்க வரவும் வேணாம்".

மாமா வீட்டுத் தொடர்பு இப்படித்தான் அறுபட்டது.போன வருசக் கடேசியில் மல்லாட்டக் கொல்லியில் தப்புக்காய் பொறுக்கப் போன போது பூங்காவனத்தை கடேசியாய் பார்த்தது.காஞ்சியில் ஒன்பதாவது சேர்ந்தபிறகு முன்பு போல் வெளியில் போக முடியவில்லை.சனி ஞாயிறில் மாட்டை ஓட்டிக்கொண்டு பெரிய்ய ஏரி,காவாங்கரை எனப் போய்விடுவதால் ஊரில் என்ன நடக்கிறது என்றே தெரிந்து கொள்ள முடியாமல் போனது.ஏரிக்கரை இலுப்பை மரத்தடி மதியங்களில் விழிப்பும் கனவுமாய் பூங்காவனத்தின் முகம் வந்து போகும்.அலையலையாய் கூந்தலும், குறும்புச் சிரிப்புமாய் என்னை நிறைக்கையில் அம்மாவின் குரல் அசீரரியாய் காதில் ஒலிக்கும்."இலுப்பம்பூ வாசனைக்கு மத்தியானத்துல முனி கினி வந்து அண்டும்..அந்த பக்கமா போய் ஒக்காராதே" சற்றுத் தள்ளிப்போய் கொடுக்காப்புளி மரத்தடி முட்களை அகற்றிவிட்டு அமர்வேன்.


- பூங்காவனம் : அய்யனார்

23.12.2012 : ஞாயிறு பின்னிரவு 2.00
இன்று சுத்தமாய் தூங்க முடியவில்லை.பல கவிதைகள் எனக்குப் பொருந்திப் போனது.வெறும் அழகியல் சார்ந்தவைதான் என்றாலும் நெடுநாள் புகைக்காமல் இருந்த என்னை புகைக்க வைத்தது இத்தொகுப்பு...

பூவரசமர பெஞ்சிலமர்ந்தபடி
மதிய மழையும்
கடலும்
கலவுவதினை
பார்த்துக் கொண்டிருந்தோம்
மஞ்சள் நிற இறக்கைகளும்
நீலக் கழுத்தையும்
கொண்ட சிறுபறவையொன்று
மஞ்சள் நிற பூவரசம் பூவிலிருந்து எட்டிப்பார்த்தது
பூ பிரசவித்த பறவை என பரவசப்பட்ட
அவளின் முகமேந்தியபடி சொன்னேன்
பூவீன்ற இப்பறவையும்
இன்னொரு பூவினை பிரசவிக்கப்போகும் நீயும்
அபூர்வமானவர்களென

...................................
ஒரு மழை நாளில்
வந்திருக்க வேண்டிய நேரம் வரை
வராமல் போனாள்
குத்தும் சாரல்களின் துணையுடன்
வழியெங்கிலும் தேடியலைந்து
திரும்பினேன்
அவளோடு சேர்ந்து
நனைந்த பூனைக்குட்டியொன்றும்
பூட்டிய கதவுகளுக்கு முன்
ஒண்டிக்கொண்டிருந்தது


-நானிலும் நுழையும் வெளிச்சம்:அய்யனார்

Thursday, December 11, 2008

சந்தோசின் கிளி


சந்தோசு எதையாவது வளர்த்துக்கொண்டிருப்பான்.எல்லாச் சிறுவர்களுக்கும் இருக்கும் பொது ஆர்வம்தான் என்றாலும் சந்தோசின் பிராணி வளர்ப்பு ஆர்வம் சற்று அதீதமானதுதான்.மேலும் அவன் வளர்ப்பதைத் தூக்கிக் கொஞ்சியோ, செல்லப் பெயரிட்டு அழைத்தோ, இம்சித்தோ, நான் பார்த்ததில்லை.அவன் வளர்க்கும் பிராணிகளுக்கான உணவு ,பாதுகாப்பு இவற்றில் செலுத்தும் கவனத்தை அவற்றினோடு விளையாடுவதில் காட்டமாட்டான்.தூரத்தில் அமர்ந்து அப்பிராணி விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான்.பள்ளி முடிந்ததும் ஓட்டமும் நடையுமாய் திரும்புவான்.ஒருவேளை அப்பிராணி கடைசி வகுப்புகளிலேயே அவன் நினைவில் வந்துவிட்டிருகக்கூடும்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக எந்தப் பிராணியும் அவனோடு நிலைப்பதில்லை. நாய்,பூனைக்குட்டி,முயல் என அவன் வளர்த்ததெல்லாம் கொஞ்சம் வளர்ந்ததும் காணாமல் போய்விடும்.எதுவும் பேசாமல் இரண்டு நாட்கள் உம் மென்று சுற்றித் திரிவான்.அவன் அம்மா இரண்டு அடி போட்டதும் சம நிலைக்குத் திரும்புவான்.

சந்தோசு என் அக்காவின் மகன். ஆறாம் வகுப்பு படிக்கிறான். அவன் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் ஒரு பெரிய மனுசத்தனம் தெரியும்.நானும் இப்படித்தான் இருந்தேன்.அறிமுகமாகா மனிதர்களிடம் லேசாய் கூச்சம், புது இடத்தில் வெட்கம் ,பிடிவாதமில்லாது இருத்தல்,பலர் புழங்கும் இடத்தில் அடங்கி ஒடுங்கி இருத்தல் என என் சிறுவயது குணாதிசியங்களையே இவனும் பிரதிபலித்தான் . எனக்கும் அவனுக்குமான ஒரே வித்தியாசம் புத்தகங்கள்தாம். நான் எத்தனை முயன்றும் அவனிடம் படிக்கும் வழக்கத்தைக் கொண்டு வர முடியவில்லை. சிறுவர் பத்திரிக்கைகளை என் முன்னால் படிப்பது போன்ற பாவனை செய்வானே ஒழிய நான் சற்று அகன்றதும் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து விடுவான்.

சிறுவர்கள் வாசிப்பதை நிறுத்திவிட்டால் என்னாகும் என்கிற யோசனை எனக்குப் பயத்தையே தந்தது.வாசிப்பினூடாய் விரியும் காட்சிகள் ஒருவனது கற்பனைத் திறனை மேம்படுத்தும். மேலும் வாசிப்பு மட்டுமே மனிதனை முழுமையாக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.நான் ஆறாம் வகுப்பில் பொன்னியின் செல்வனை முடித்திருந்தேன்.இவன் குறைந்த பட்சம் அம்புலிமாமா வாவது படித்தால் நன்றாக இருக்கும்.ஆனால் இவன் தொலைக்காட்சி டிஷ்ஷீயும், டம்களில் மூழ்கிப் போயிருந்தான்.எந்த நேரமும் சுட்டி டிவியும், ஜெட் எக்ஸ்ம் வீட்டை அதிரச் செய்து கொண்டிருக்கும்.
மாதம் ஒருமுறை வீட்டிற்குப் போகும் இரண்டு தினங்களில் அவனைத் துன்புறுத்த வேண்டாமே என நானும் அதிகம் அவனை பிடித்து உலுக்குவதில்லை.ஒவ்வொரு முறை திரும்பும்போதும் அவனுக்கு பணம் கொடுத்து வருவேன்.”வீண் செலவு செய்து திரிகிறான் பணம் கொடுக்காதே” என அக்கா எவ்வளவு சொல்லியும் நான் பணம் கொடுத்துவிட்டுத்தான் வருவேன்.சந்தோசு தன் பணத்தை சேமிக்கும் இடங்கள் எவரும் அறியாதது.அவன் அம்மாவின் கண்ணில் பட்டுவிடாமல் இருக்க அதிகம் மெனக்கெடுவான்.அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பான்.அதை அவன் அம்மாவிடம் இருந்து காப்பாற்ற அவன் துப்பறியும் போலீசாக தன்னை நினைத்துக் கொள்வானாயிருக்கும்.பெட்டி சந்து, மண்ணைத் தோண்டி புதைத்தல், மரப் பொந்து என அவன் தேர்ந்தெடுக்கும் இடங்கள் பரம ரகசியமானது.

மூன்று மாதங்களுக்கு முன்னால் ஒரு கிளி வாங்கினான் .அக்காவும் அம்மாவும் அவனை உலுக்கி எடுத்திருக்கிறார்கள்.சின்னஞ்சிறு கிளி, இறக்கைகள் கூட இன்னமும் முளைத்திருக்கவில்லை.”பாவம் டா.. விட்டுட்டு வந்திடு” என அவனிடம் கெஞ்சியும்,மிரட்டியும் பார்த்திருக்கிறார்கள்.அவன் மசியவில்லை. ”விலைக்குதான் வாங்கிவந்தேன், எங்கிருந்தும் பிரித்து வரவில்லை”.. என சொன்னதும் என் அக்கா எனக்குத் தொலைபேசி ”ஏண்டா இவனுக்கு காசு கொடுத்து தொலையுற” என பொருமினாள்.”கிளிதான வளர்க்கட்டுமே என்ன இப்ப?” என தொடர்பை துண்டித்தேன்.அடுத்தவாரம் ஊருக்குப் போனபோது கிளிச்சத்தம் என்னை வரவேற்றது.பெருமையாய் தூக்கி வந்து என்னிடம் கொடுத்தான்.கிளி என்னென்ன சாப்பிடும்.. எப்போது சாப்பிடும்.. எந்த மாதிரி கத்தினால் என்ன அர்த்தம்.. என எல்லாவற்றையும் ஒப்பித்தான்.கிளிக்கூண்டு தற்சமயம் கிடைக்காததால் வெங்காய கூடையை தற்காலிக கூண்டாய் மாற்றி விட்டிருந்தான்.வீட்டை விட்டு விடுமுறை தினங்களில் கூட எங்கும் செல்லாமல் இருந்தான்.சினிமாவுக்கு அழைத்தேன் ”வர்ல மாமா கிளி தனியா இருக்கும்” என மறுத்து விட்டான்.முன்பு போல் அவன் சரியாய் படிப்பதில்லை ..எந்நேரமும் 'கிளி' 'கிளி' எனத் திரிகிறான் என அக்கா புராணம் வாசித்தாள்.”சின்னப்பசங்க அப்படித்தான் இருப்பாங்க வேலய பார்” என திட்டி விட்டு வந்தேன்.

அதற்கடுத்த மாதம் ஊருக்குப் போனபோது கிளி சற்று வளர்ந்திருந்தது..இங்கும் அங்குமாய் வீட்டிற்குள்ளேயே பறந்து கொண்டிருந்தது.இரண்டு முறை கிளி பறந்து போய் மாமரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாயும், தாத்தா மரமேறி பிடித்துத் தந்தாரெனவும் சொல்லிக்கொண்டிருந்தான்.”கிளி வளர்க்கிறேன்னு எல்லார் உயிரையும் எடுக்குது இது” என அக்கா அவனை லேசாய் தட்டி விட்டுப்போனாள்.சென்ற மாதம் ஊருக்குப் போகமுடியவில்லை.வாரம் ஒருமுறை அவனுக்குத் தொலைபேசி கிளி விசாரிப்புகளை செய்துகொண்டிருந்தேன்.

இரண்டு தினங்களுக்கு முன்பு அக்கா தொலைபேசினாள்.”நீ கொஞ்சம் வரமுடியுமாடா?.. இவன் ரெண்டு நாளா எதும் சாப்டல... அழுதிட்டே இருக்கான்” எனச் சொன்னதும் கிளம்பிப் போனேன். என்னைப் பார்த்ததும் இன்னும் அழத் தொடங்கினான். ”கிளி பறந்து போய்டுச்சு மாமா” என்றவனைத் தேற்றினேன்.”வேற கிளி வாங்கிக்கலாண்டா” என சொன்னதும் அக்கா கத்த ஆரம்பித்தாள் ”இனிமே இந்த வீட்ல எதையாச்சிம் வளர்க்கிறேன்னு ஆரம்பிச்சான்.. அவ்ளோதான்” என்றவளைக் கத்தி அடக்கினேன்.ஒரு வழியாய் அவனைச் சாப்பிட வைத்து, ”கிளி அடைஞ்சி இருந்தா பாவம்டா.. இறக்கை முளைச்சதும் நானே அத பறக்க விடலாம்னுதான் இருந்தேன்” என மெதுவாய் அவன் தலைவருடி சொன்னதும் சமாதானமானான்.மாலை கடைக்குப் போய் மீனும் மீன் தொட்டியும் வாங்கிக் கொடுத்தேன்.

பேருந்தில் திரும்பி வரும்போது சந்தோசு புத்தகங்கள் வாசிக்காமலிருப்பது குறித்தான கவலைகள் என்னிடம் காணாமல் போயிருந்தன.

Monday, December 8, 2008

அனுஜன்யா ஓய்வு மற்றும் சித்தார்த்

நண்பர் அனுஜன்யாவிடமிருந்து இருநூறாவது பதிவினுக்கான வாழ்த்தாய் வந்திருந்த மடல் லேசான வெட்கத்தைத் தந்தது.மேலும் இந்த அன்பினுக்கு நான் தகுதியானவனில்லை என்கிற எண்ணமும் எழத் தவறவில்லை.சுயத் திருப்திகள் மட்டுமே என்னை இயங்கவைப்பதும் கூட இவ்வெண்ணத்தினுக்கு ஒரு காரணமாய் இருக்கக்கூடும்.ஒரு மாதத்தினுக்கு முன்பே இக்கீழ்கண்ட கவிதையை அவர் என் இருநூறாவது பதிவினுக்காய் எழுதிவிட்டிருக்கிறார்.
அய்ஸ் - இருநூறு

புரியவில்லை கவிதையெனவும்
தோள் குலுக்கிய அய்யனார்
கூட்டிசென்றது கூத்துப்பட்டறைக்கு;
சூரபத்மன் பின்னால் ஆடிய அலைகடல்
நடனக்காரியின் நீலச்சேலையென
இடைவேளையில் தெரிந்தது;
மீள் தோன்றிய அலைகடலில்
நீலப் புடவையும் நடனக்காரியின்
முகமும் மட்டும் தெரிந்தது.
திரும்பி வருகையில்
அய்யனார் சொன்னது
அலையும் கவிதையும் ஒண்ணுதான்.

எவ்வித முகாந்திரகளுமில்லாது அன்பினை மட்டுமே பிரதானமாய் கொண்ட நண்பர்களுக்கு பிரத்யேகமாய் சொல்லிக்கொள்ள நன்றியினைத் தவிர பெரிதாய் வேறெதுவும் என்னிடமில்லை.தொடர்ச்சியாய் வாசிக்கும், நேசிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றி.
.......................................

தொடர்ச்சியாய் பதிமூன்று நாட்கள் விடுப்பளித்து தம் அரசாங்க சலுகையை நிரூபித்த என் நிறுவனத்திற்கு நன்றி.இந்த ஓய்வு மிக லேசான மனநிலையைத் தந்துவிட்டிருக்கிறது.செய்ய எதுவுமே இல்லாத பனிக்குளிரடங்கிய ஒரு முழு நாள் அற்புதமானது.அ.மார்க்சின் ஓய்வு குறித்தான கட்டுரை ஒன்று ஓய்வின் உன்னதங்களை,அரசியல்களை முன் வைக்கிறது.ஓய்வும், ஓய்வைக் கொண்டாடி அனுபவித்தலும் கீழானதாக அறங்கள் வடிவமைக்கப்பட்டதை துல்லியமாக முன் வைக்கும் இக்கட்டுரை, மக்களின் விருப்பங்களை கீழிறக்கி அவர்களை சோம்பேறிகள், குடிகாரர்கள், வேட்கைப் பிரியர்கள் என சமூகத்திலிருந்து விலக்கி, இகழ்ந்து வருவதையும் சுட்டத் தவறவில்லை.கடமை அறியோம் தொழிலறியோம் என தலைப்பிடப்பட்ட இக்கட்டுரை மிகவும் பிடித்திருந்தது.மேலும் இதே தொகுப்பில் குடி பற்றியதான குடியும் குடித்தனமும் என்கிற கட்டுரையும் மிக முக்கியமானது.

கழிவறையில் ஆத்மாநாம், வரவேற்பரையில் ஆழிசூழ் உலகு, படுக்கையறையில் நெடுங்குருதியென பாதி பாதி படித்த புத்தகங்களும், சமீபத்தில் கிடைத்த லூயி புனுவலின் Belle de Jour,Viridiana,An Andalusian Dog திரைப்படங்கள் தந்த பெரும் திகைப்புகளும் ஓய்வின் உன்னதங்கள்.லூயி புனுவலின் பாத்திரங்களின் விநோதங்களில் மூழ்கித் திளைத்தபடியே பிரஸ்ஸோனின் பிக்பாக்கெட்டை பார்த்துக்கொண்டிருக்கவும்,சாம்பார் என்கிற வஸ்துவை குறைந்த பட்ச ருசியுடன் சமைப்பதெப்படி என்கிற மிகக் கடினமான பயிற்சியினை என மனைவிக்கு தந்தபடியுமாய் கடந்துபோகின்றன இவ்விடுமுறை நாட்கள்.Pedro Almodóvar ன் Dark Habbits ம் ஆலிவர் ஸ்டோனின் தயாரிப்பில் வந்த salvator ம் பாதியில் நிற்கின்றன.இவ்விடுமுறைக்குள் Kieslowski யின் The Decalogue தொடர்களை பார்த்து முடிக்கவும் திட்டமிருக்கிறது.பழைய வலைப்பதிவுகளை தேடிப்பிடித்து படித்துக் கொண்டிருந்தேன்.சுரேஷ் கண்ணனின் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் மிகவும் பிடித்திருந்தது.வரம் தந்த சாமிக்கு பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர் அழ ஆரம்பித்து விட்டாராம்.எத்தனை அற்புதமான கணமாய் இருந்திருக்க முடியுமென நினைத்துக்கொண்டேன். எனக்கு இந்தப் பாடலைக் கேட்கும்போதுத் தொண்டை அடைக்குமே தவிர வாய் விட்டு அழவெல்லாம் முடியாது. அது அவருக்கு வாய்த்திருக்கிறது. வெகுநாட்களாய் பேசிக்கொண்டிருக்கும் நண்பர் ரெளத்ரன் பக்கத்திலும் இதே போன்ற ஒரு குறிப்பை படிக்க நேர்ந்தது. கற்பூர பொம்மையொன்று பாடல் அவரால் கேட்கவே முடியாமல் போனதை குறிப்பிட்டிருந்தார்.கேளடி கண்மணியில் வரும் இப்பாடலும் என் தொண்டையை அடைக்கும்.
.......................................

இன்று சித்தார்த்தின் மணவிழா வரவேற்பு.சித்து எனக்கு வலையில் கிடைத்த முதல் நண்பன். ஒரு வகையில் இவ்வலைப்பதிவிற்கு காரணமானவன்.நாங்கள் அரட்டையில் பேசியவற்றைத் தொகுத்தால் அது ஜெயமோகனின் நாவலை விட மிக அதிக பக்கங்கள் கொண்டிருக்கலாம்.ஜோ வினுக்குப் பிறகு எனக்கு கிடைத்த ஆத்மார்த்த நண்பன்.பேசிப்பேசிப்பேசிப்பேசி சலிக்காமல் இருந்தோம். இருவருக்குமான பெரும்பான்மைப் புள்ளிகள் ஒன்றே.பேச்சுக்கள் அவனை என் இடத்தினுக்கு வர நெருக்கடி தந்தன.முதல் முறையாய் என்னை பார்க்கவென்று கடல் கடந்து வந்த ஒரே ஜீவன் சித்தார்த்தான்.நாங்கள் இரவு முழுக்கப் பேசினோம், ஊர் சுற்றினோம் ,படித்துச் சண்டையிட்டோம் ,படங்களாய் பார்த்துத் தள்ளினோம் அவனோடு இங்கு கழித்த நான்கு நாட்கள் அற்புதமானவை. அவனுடைய வாழ்வின் முக்கியமான தருணத்தில் மிகுந்த நெகிழ்வுகளோடு நினைத்துக் கொள்கிறேன்.மனம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள் சித்தார்த்! செம்புலப்பெயல்போல் கலந்த அன்புடை நெஞ்சங்கள் என்றும் வாழ்கவே!!
.......................................

இப்பொழுதெல்லாம்

நன்றாகத்தான் இருக்கிறது
மெத்தென்ற புல்தரை
சில பறவைகள்
மீண்டும் மீண்டும்
எனைத் தேடி வருகின்றன
ஒரு மாற்றத்திற்காய்
நானோ
அவற்றின் வண்ணத்திலும்
சிறகிடுக்குகளின் அழகிலும்
அமிழ்ந்து போகிறேன்
கண் விழிக்கையில்
நான் மட்டுமே இருக்கிறேன்
இப்பொழுதெல்லாம்
பறவைகளைத் தேடுகிறேன்
ஒரு மாற்றத்திற்காய்...
- ஆத்மாநாம்

Featured Post

test

 test