Showing posts with label Rajneesh. Show all posts
Showing posts with label Rajneesh. Show all posts

Tuesday, May 1, 2018

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்



இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷால் ஈர்க்கப்பட்டு கம்யூன் உள்ளே வந்தவர். Swami Prem Niren என்கிற சந்நியாசப் பெயரால் அறியப்பட்டவர். ரஜனீஷின் எல்லா வித சட்ட சிக்கல்களையும் இவரே எதிர் கொண்டார்.

Charlotte விமான நிலையத்தில் கைதான ரஜனீஷ் மூன்று சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டார். அவரைப் பதினைந்து நாட்கள் அலைக்கழித்தும் அரசு எதிர்பார்த்த குற்றம் எதுவும் கிடைக்கவில்லை. பிலிப்பின் திறமையான முயற்சியால் குடியேற்ற மோசடி என்கிற வகையில் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

பிலிப்பின் ஒட்டு மொத்த பேச்சிலும் அவருக்கு ரஜனீஷ் மீதிருந்த அன்பும் பக்தியும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்தத் தொடரின் இன்னொரு பிரமாதமான அம்சம் இதன் எடிட்டிங். ஆறு பகுதியிலேயும் பிலிப்பின் பேச்சு இடம்பெற்றிருக்கும்.  ரஜனீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாட்களை நினைவு கூரும்போது பிலிப் நிலை குலைகிறார்.  பகவான் எவ்வளவு அற்புதமான மனிதர்! எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.

ரஜனீஷ்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோற்றத்தைப் பார்த்து தான் அடைந்த துயரத்தைப் பகிரும்போது பிலிப் முழுமையாய் உடைகிறார். ரஜனீஷின் மிகப் பெரிய பலம் பிலிப் போன்ற லட்சக்கணக்கான மனிதர்கள் அவர் மீது கொண்டிருக்கும் அன்புதான். வெறும் குரு- சீடன் என்பதையும் தாண்டிய பிணைப்பு இது.

பிம்ப உருவாக்கம் மீது நம்பிக்கையற்றவன் என்ற போதிலும் ஓஷோ என்றதுமே உருவாகும் வாஞ்சையை என்னாலுமே தவிர்க்க முடிவதில்லை. நான் அனைவரிடமும் சொல்வதுதான். ஓஷோ மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மனிதர். இதில் நானும் அடக்கம்தான்.

0

கம்யூனிலிருந்து வெளியேறிய ஷீலா குழுவினர் ஜெர்மனியில் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பிக்கின்றனர். ஜெர்மனில் வெளியாகும் பரபரப்புப் பத்திரிக்கையான ஸ்டெர்ன் ஷீலாவின் கதையை பிரசுரிக்க விரும்புகிறது. எப்போதுமே செய்திகளில் அடிபட விரும்பும், லைம்லைட்டில் இருக்க விரும்பும் ஷீலா இதற்குச் சம்மதிக்கிறார். அவரின் நிர்வாணப் புகைப்படத்தோடு முழுக் கதையும் வெளியாகிறது. இதைக் குறித்துச் சொல்லும்போது நாங்கள் வாழ எங்களுக்குப் பணம் தேவையாக இருந்தது. ஆகவே இதற்கு சம்மதித்தேன் என்கிறார் ஷீலா.

FBI ரஜனீஷைக் கைது செய்யும் அதே நேரம் ஷீலாவும் கைது செய்யப்பட்டு அமரிக்காவிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப் படுகிறார். குற்றங்களாக - ரகசிய ஒலிப்பதிவு, கொலை முயற்சி மற்றும் குடியேற்ற விசா மோசடி போன்றவை நிரூபிக்கப்படுகின்றன. ஷீலாவிற்கு இருபது வருட ஆயுள்  தண்டனை கிடைக்கிறது. ஆனால் நன்னடத்தை காரணமாக இரண்டரை வருடத்தில் வெளியே வருகிறார். தற்போது சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் ஷீலா முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.

0

இந்தத் தொடரின் போதாமை குறித்தும் சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. எனக்குமே ஹாசியாவின் தரப்பு இல்லாதது பெரும் உறுத்தலாக இருந்தது. ஹாசியா தற்போது இல்லையென்பதால் அது இயலவில்லை ஆனால் அவரின் கணவரும் ஓஷோவின் தனிப்பட்ட மருத்துவருமான ஜார்ஜின் நேர்காணலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறவில்லை. ஷீலா மிகத் தவறாக ரஜனீஷைப் பொதுவெளியில் கட்டமைத்தார் என்பதுதான் இவர்களின் ஆணித்தரமான தரப்பு. ஏன் ஒவ்வொரு ஓஷோ நம்பிக்கையாளரின் தரப்பும் இதுதான். இந்த ஆவணப்படம் பார்க்கும் வரை நானுமே கூட அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன். இந்த நம்பிக்கையை Wild Wild Country அசைத்துப் பார்த்திருக்கிறது.

பிலிப் என்கிற Swami Prem Niren இன் இணையதளத்தில் ரஜனீஷ் மருத்துவரின் நேர்காணல் கிடைக்கிறது. அவர்களின் தரப்பை - ஆவணப்படம் சொல்லாததை - அறிய இங்கே செல்லுங்கள்

http://sannyasnews.org/now/archives/7751

Wednesday, April 25, 2018

Wild Wild Country - மா ஆனந்த் ஷீலா



ஓஷோவின் அமெரிக்க வாழ்வைக் குறித்து வெளியாகி பெரும் அதிர்வுகளைக் கிளப்பியுள்ள வைல்ட் வைல்ட் கண்ட்ரி ஆவணப்படத்தில் மா ஆனந்த் ஷீலா கேமிராவைப் பார்த்து இப்படிச் சொல்வதோடு ஆறாவது  பகுதி நிறைவடைகிறது.

“ அவ்வளவுதானா எல்லாம் முடிந்ததா? இந்தப் பேச்சு முடியவே முடியாதென நினைத்தேன். இது மதுவிற்கான நேரம். வாருங்கள் நாம் மதுவருந்துவோம்” 

கனத்த இதயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த எனக்குமே கூட அப்படி ஒரு எண்ணம்தான் தோன்றியது. ஆனால் அதிகாலை எழ வேண்டியிருப்பதை நினைத்துக் கொண்டே, கனத்த இதயத்தைப் போர்த்திவிட்டுப் படுத்தேன்.

மா ஆனந்த் ஷீலா - நிச்சயம் இந்தப் பெயர் எனக்குப் புதிது கிடையாது. இருபதுகளிலேயே அறிந்து கொண்ட பெயர்.  ஓஷோவின் பேச்சுக்களின் வழியாய் ஷீலாவை அறிந்திருந்தேன்.  ஷீலா அமெரிக்காவில் ஓஷோவின் சரிவுகளுக்கு காரணமாய் இருந்தவர். ஓஷோ ஆசிரமத்தை மிகத் தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டவர் என்பதுதான் இதுநாள் வரைக்குமான ஷீலா பற்றிய என் அறிதல். ஆனால் இந்த ஆவணப்படம் அதை மாற்றியிருக்கிறது. 

ஷீலா நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று. தவறான ஆட்களின் தூண்டுதலால் ஷீலாவின் மீது வெஞ்சினம் கொண்ட ரஜனீஷ், ஷீலாவிற்கு குழி தோண்டுவதாய் நினைத்துக் கொண்டு தானும் விழுந்தார். அதேக் குழியில் அவரை நாடி வந்தவர்களையும் விழ வைத்தார். ஆனால் ஷீலா என்கிற அற்புதம் மட்டும் தன் குருவின் மீதான தீராக் காதலுடன் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 

தான் நினைத்ததை செயல்படுத்த ஷீலா கையாண்ட விதங்கள் வேண்டுமானால் சட்டத்திற்கு புறம்பாக இருக்கலாம் (  இந்தச் சட்டங்கள் என்பவையே யாரோ ஒரு சாரருக்கு சாதகமானவைதானே) ஆனால் ஷீலாவின் செயல்பாடுகளுக்குப் பின் இருந்த நோக்கங்கள் ரஜனீஷ் மீதிருந்த காதலால் அன்பால் பக்தியால் உருவானவை. அதில் என்ன பிரச்சினை இருக்க முடியும். ஷீலாவை இத்தனை வருடங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந்தமைக்காக இந்த ஆவணப்படத்தை பார்த்து முடித்து விட்டு வருந்தினேன்.

0

என்னுடைய சகோதரன் வழியாய் ஓஷோ எனக்கு அறிமுகமானார். புத்தகங்கள் பேச்சுக்கள் வழியாய் மெது மெதுவாய்  ஈர்க்கப்பட்டு பின்னர் ஒரு மீட்சிக்கு வேண்டி ஓஷோவின் சந்நியாசியாகவும் மாறினேன். என்னுடைய  இருபத்தோராவது வயதில் திருச்சி ஆசிரமத்தில் ஸ்வாமி ப்ரேம் அய்கா என்கிற சந்நியாசப் பெயர் எனக்கு கிடைத்தது. தியானங்கள், ஓஷோ நண்பர்களுடனான பயணங்களென முழுக்கப் பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. ஓஷோவின் பேச்சுக்களில் ’தனித்துவம்’ ’சுதந்திரம்’ ’கற்பனை’ என்கிற மூன்று விஷயங்கள் என்னைப் பெரிதும் பாதித்தன.  இருபதுகளில் உள்ள ஒரு சிறுநகரத்து இளைஞனுக்கு பெரிதாய் என்ன துக்கங்கள் இருந்துவிட முடியும்? ஓஷோவின் தியானங்களும் நடனங்களும் அதைக் கரைத்தன. நான் தன்னம்பிக்கையும் ஆற்றலும் கொண்டவனாய் மாறவும் உதவின. இதோ இதையெல்லாம் இப்படி எழுத விதையாகவும் அந்த அறிதல்கள் இருந்திருக்கக் கூடும்.

இந்தப் பின்புலத்தால் ’வைல்ட் வைல்ட் கண்ட்ரி’ என்கிற ஆவணப்படத்தோடு என்னால் முழுவதுமாக கரைந்து போக முடிந்தது.  இதன் ஆறு பகுதிகளையும் பார்க்கும் நாட்களில் ஆச்சர்யம்  அதிர்ச்சி வியப்பு என மாறி மாறி  உணர்வுகளால் அலைக்கழிக்கப் பட்டேன்.

 ஷீலாவின் முதல் பேச்சிலிருந்து கடைசிப் பேச்சு வரைக்குமான ஒவ்வொரு சொல்லும் என்னை அசர வைத்தது. என்ன ஒரு ஆளுமை . என்ன மாதிரிப் பெண் இவள்! எவ்வளவு புத்திக் கூர்மை!, எவ்வளவு ஆற்றல்! என மாய்ந்து போனேன். உண்மையில் ஹாலிவுட் ஆட்களை ஓஷோ தொலைவில் வைத்திருந்தால், ஷீலாவை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் இன்றைய அமரிக்காவில் பாதியை ரஜனீஷ்- இசம் கைப்பற்றி இருக்கும். கிறிஸ்துவ மதம் பெரும்பான்மையானதாக மாறி இருக்காது. அமெரிக்க வரலாறே திருத்தி எழுதப்பட்டிருக்கும். 

தன் இரும்புக் கரங்களால் உலகையே வேட்டையாடிக் கொண்டிருக்கும்  அமெரிக்கப் பெரியண்ணன்கள் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட்டிருப்பார்கள். ரஜனீஷ்-இசம் ஒரு மதமாக மாறி மக்களை கொண்டாட்டத்தில் திளைக்க வைத்திருக்கும். இன்றைய முழு மூட அமெரிக்க சமூகம் உருவாகியே இருக்காது. உலகமே அமைதியாக இருந்திருக்கும். ஓஷோவின் முட்டாள்தனத்தால் எல்லாம் பாழானது.

எப்படி? 

எழுதுகிறேன்.





Featured Post

test

 test