"If I'm killed, let that bullet destroy every closet door." - Harvey Milk
நிறம்,மொழி,சாதி,ஆரோக்கிய உடல் போன்ற வெளிப்புற சிறப்புத் தோற்றங்கள் மட்டுமே மனிதனை மனிதனாய் வாழ அனுமதிக்கின்றன. பெரும்பான்மைகளிலிருந்து ஏதோ ஒரு புள்ளியில் விலகும் சக மனிதர்களை விளிம்பிற்குத் துரத்தியடிப்பதே இப்பெரும்பான்மைக் கூடாரத்தின் உலகப் பொதுச் சமத்துவமாக இருந்து வருகிறது.சக மனிதனின் மேல் வன்முறையைத் திணிப்பதில் உலகின் எப்பாகத்தவரும் சளைத்தவர்கள் இல்லை.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாய் ஓரினச் சேர்க்கையாளர் ஹார்வி மில்க் 1977 ஆம் வருடம் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் “முதல் ஓரினச் சேர்க்கையாள” நகர மேற்பார்வையாளராக பொதுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சமீபத்திய ஒபாமாவின் வெற்றிக்கு எந்த விதத்திலும் குறைந்திடாத வெற்றி அது.வெள்ளை மாளிகையில் முதல் கருப்பர் என்பதுபோல் சமூகத்தால் துரத்தியடிக்கப்படுபவர்களின் ஒட்டு மொத்த வெற்றியாக ஓரினச் சேர்க்கையாளர் மில்க்கின் வெற்றி கருதப் பட்டது.
தனி மனித சுதந்திரத்தைக் கொண்டாடுவதாய் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்திருக்கும் அமெரிக்காவில்தான் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் துன்புறுத்தப் பட்டார்கள். அவர்களுக்கான எந்த உரிமையையும் அரசும் அதிகாரிகளும் வழங்கியிருக்கவில்லை.மத வாதிகள் புனிதர்கள் என எல்லா தரப்பினராலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் துரத்தியடிக்கப்பட்டனர்.எழுபதுகளின் ஆரம்பத்தில் ’சான் பிரான்சிஸ்கோ’ வரும் மில்க் அங்கு மக்கள் தொகையில் இருபது சதவிகிதத்தினருக்கு மேலிருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களை ஒன்று திரட்டுகிறார்.
தன் பால் உணர்வு குறித்தான குற்ற உணர்வு கொண்டு இருண்ட அறைகளுக்குள் அடைந்து கிடப்பவர்களை வெளியில் வர உதவுகிறார்.கூட்டங்கள், பேரணிகளென சக நண்பர்களை குழுவாய்த் திரட்டி சமுகத்தில் தங்களின் அங்கீகாரத்திற்காக தொடர்ச்சியாய் போராடுகிறார். ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த வெகு சன மிகை வெறுப்புகளை,ஓரினச் சேர்க்கையாளர்கள் பிடோபில்கள் என்பது போன்ற தவறான புரிதல்களை அவர்களிடையே இருந்து நீக்க பெரிதும் மெனக்கெடுகிறார்.மெல்ல மக்களின் ஆதரவைத் திரட்டி நகர மேற்பார்வையாளர் தேர்தலில் நின்று வெற்றி பெறுகிறார்.
விளிம்புகளின் வெற்றிகளுக்கு அதிகார வர்க்கங்கள் பரிசளிக்கும் மரணத்தை ஏற்று தனது நாற்பத்தி ஒன்பதாவது வயதில் மடிந்து போகிறார்.அவர் பதவியேற்று ஓராண்டு கழிந்து சக மேற்பார்வையாளன் ஒருவனால் துப்பாக்கியால் சுடப்பட்டு அலுவலகத்திலேயே இறந்து போகிறார் மில்க்.
இந்த உண்மைச் சம்பவங்களை அப்படியே Milk என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார் இயக்குனர் Gus Van Sant.ஹார்வி மில்க் கதாபாத்திரத்தில் ஷான் பென் நடித்திருக்கிறார். ஷான்பென் திரை வாழ்வில் இது மறக்க முடியாத கதாபாத்திரமாய் இருந்திருக்க கூடும்.இந்த வருட ஆஸ்கரை இந்தப் படத்தின் மூலம் சிறந்த நடிப்பினுக்காகத் தனதாக்கிக் கொண்டிருக்கும் ஷான் பென் இதில் ஹார்வி மில்க் ஆக வாழ்ந்திருக்கிறார்.ஓரினச் சேர்க்கையாளனின் உடல் மொழி, குரல், லாவகம், குழைவு,என எல்லா வெளிப்பாட்டிலும் மிகக் கச்சிதமான நடிப்பை சாத்தியப்படுத்தி இருக்கிறார். In to the wild திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராகவும் அடையாளப்படுத்திக் கொண்ட ஷான் பென் தன்னுடைய திரை வாழ்வின் உச்சத்தை இக்கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் எட்டியிருக்கிறார்.
இயக்குனர் Gus Van Sant இதுவரை இயக்கிய எல்லா படங்களும் உண்மைச் சம்பவங்களை அடி நாதமாக கொண்டவைகள்தாம்.உண்மையும் புனைவும் ஒரே திசையில் பயணிக்கும் லாவகமான திரைப்படங்களாகவே இவரது முந்தைய திரைப்படங்கள் இருக்கின்றன.ராபின் வில்லியம்ஸ் நடித்திருந்த Good Will Hunting திரைப்படம் எனக்குப் பிடித்த சிறந்த ஆங்கில க்ளாசிக்குகளில் ஒன்று.இவரது death trilogy (Gerry, Elephant and Last Days) பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளது.
எந்தக் காட்சியிலும் கதாபாத்திரங்களை தனித்துக் காட்டாததே இந்தத் திரைப்படத்தின் மிக முக்கிய அங்கமாக இருக்கிறது.காதல் காட்சிகள் முத்தக் காட்சிகளென பெரும்பான்மைப் படங்களையும் இத்திரைப்படத்தையும் எவ்வகையிலும் வித்தியாசப்படுத்தாது மிகுந்த மகிழ்வை உண்டாக்கியது.
மக்களிடையே இருந்த ஓரினச் சேர்க்கை குறித்த தவறான பிம்பத்தைக் களைய தன் உயிரைக் கொடுத்துப் போராடிய ஹார்வி மில்க்கின் வாழ்வை திரைப்படமாக்கியதன் மூலம் பார்வையாளனிடமும் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.மிக அதிக உழைப்பும் ஈடுபாடும் கலைத் திறமையும் இது போன்ற ஒரு மாற்றக் கடத்திகளுக்கு அத்தியாவசியமானவை.அதை இத் திரைப்படம் மிக நேர்த்தியாக செய்திருக்கிறது.
வலைச்சூழலில் லிவிங் ஸ்மைல் வித்யா வின் பதிவுகளும் பகிர்வுகளும் வலைப்பதிவர்களிடைய இருந்த திருநங்கை பிம்பம் குறித்தான சரியான புரிதல்களை ஏற்படுத்தியதையும் இத் திரைப்படத்தினோடு தொடர்பு படுத்தலாம்.மேலும் வித்யாவின் வாழ்வை மிகச் சரியாக திரைப்படமாக்கினாலும் நம் பொதுச் சூழலில் சிறிது மாற்றங்கள் ஏற்படும் என நம்பலாம்.
*கருப்பு வெள்ளைப் படத்திலிருப்பதுதான் ஹார்வி மில்க்