Monday, August 27, 2018

மெளனத்தின் சங்கீதம்

மூன்று மாதங்களாய் இந்தப் பக்கத்தைத் திறக்க முடியவில்லை. புழக்கத்தில் இல்லாமல் இருந்தால் எல்லாமும் துருப்பிடித்துப் போகிறது. இந்தப் பக்கம் மட்டும் அப்படியே இருப்பதுதான் ஆச்சரியம். தினம் ஐம்பது பேராவது இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்கிறார்கள். அந்த எளிய மனங்களுக்காவது எதையாவது இங்கு கிறுக்கி வைக்க வேண்டும். இந்தியப் பயணம், தொடர்ச்சியான விடுமுறைகள் என அலுவலகத்தில் சாவகாசமாய் உட்கார்ந்து எழுத நேரம் வாய்க்கவில்லை. என் அலுவலக மேசையும் கணினியும் இல்லாமல் போனால் என்னால் எழுதவே முடியாதோ என்கிற பயமும் அவ்வப்போது தோன்றுவதுண்டு. நிறைய எழுதுவதற்கான உந்துதலில் மேக்புக்கை  வாங்கியதோடு சரி. ஓரிதழ்ப்பூவின் எடிட்டிங் வேலை பார்த்ததைத் தவிர, அதை வரவேற்பரையில் பார்க்க முடியாத படங்களைக் காண மட்டுமே பயன்படுத்துகிறேன். 

’வாட்ஸப்’ வழியாய் அமீரகத் தமிழ் வாசிப்பாளர் குழுமம் என்கிற பெயரில் நாற்பது நண்பர்கள் இணைந்திருக்கிறோம். ஒரு வருடத்திற்கும் மேலாய் இந்தக் குழு கலையாமல் இருப்பதும், தினம் உரையாடல்கள் நிகழ்வதும் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய நிகழ்வுதான். நிறைய சந்திப்புகளும்,  விவாதங்களும், கிண்டலும் கேலியுமாய் குழு ஆரோக்கியமாக நகர்கிறது. தினசரியின் சலிப்பை உணர்ந்து ஒரு வருடமாகிற்று. ஃபேஸ்புக்கில் கிடந்து உழலுவதும் தவிர்க்கப்பட்டு மன ரீதியிலாய் ஆரோக்கியமாக உணர்கிறேன். எந்த உளைச்சலும், உயர்வுணர்வும், தாழ்வுணர்ச்சியும் இல்லை. 

இதுவே எழுதுவதற்கான சரியான மனநிலையும் காலமும் என்பதை உணர்ந்தே என் அடுத்த நாவலை எழுத ஆரம்பித்தேன். சோம்பலால் தள்ளிப் போகிறது. மேலதிகமாய் இரண்டு சிறுகதைகளும் மூளையில் வந்து உட்கார்ந்து கொண்டு நகராமல் அடம்பிடிக்கின்றன. இடையில் மீண்டும் கவிதை எழுதும் முனைப்பு வேறு. ஆனால் ஒரு வரி கூட எழுதவில்லை. இந்தச் சுகசெளகர்யச்சோம்பலிலிருந்து மீள வேண்டும்.

வாழ்வு இணக்கமாக இருக்கிறது. நண்பர்கள் மகிழ்வைக் கூட்டுகிறார்கள். சகலத்திலும் மென்மையும் கருணையும் நிரம்பி வழிகிறது. ஆன்மாவின் இசைத்தட்டிலிருந்து மெளனத்தின் சங்கீதம் இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. நினைவில் அவ்வப்போது எழும் பிழைகளின் அவமானத்தைத் துடைத்தெறிந்து விட்டு முன்னால் நகர்கிறேன். இந்த நிகழ் மகத்தானது. ஒருபோதும் மீளக் கிடைக்காதது. சிரிக்கும் செம்மஞ்சற்ப்பூவில் தோற்கும் வெட்கைச் சூரியனைப் பார்த்துப் புன்னகைத்துக் கடக்கிறேன்.


0

’நார்கோஸ்’, ’வைல்ட் வைல்ட் கண்ட்ரி’ தொடர்களுக்குப் பிறகு நெட்ஃபிலிக்ஸில் ’ப்ரேக்கிங் பேட்’ இரண்டு சீசன்களைப் பார்த்தேன். இடையில் ’சாக்ரெட் கேம்ஸ்’ எட்டு பகுதிகள் - அவ்வளவுதான் வந்திருக்கிறது,-  ’ப்ளாக் மிர்ரர்’ நான்கு பகுதிகள் பார்த்து முடித்திருக்கிறேன். ப்ளாக் மிர்ரரின் முதல் இரண்டு கதைகளும் வியப்பிலாழ்த்தின. எதிர்காலத்தின் கதைகள் என இவற்றை வகைமைப்படுத்தலாம்.  அறிவியல் புனைக் கதைகள் என்பதைத் தாண்டி கதை சொல்லலில் எவ்வளவு துல்லியம்! Black Mirror - Series 4 ன் முதல் கதையான USS Callister தந்த வியப்பு, கடந்த ஒருவாரமாக அப்படியே இருக்கிறது Arkangel மற்றும் Crocodile கதைகளும் பிரமாதம். Game of Thrones போல மிகத் தாமமாக கண்டறிந்த தொடர் இது. இதற்கு முன்பு வெளியான  ப்ளாக் மிர்ரரின் முதல் மூன்று பாகங்களையும் பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.

Sacred Games வழக்கமான மும்பை தாதா கதைதான்.  மனித வாழ்வில் ஒருபோதும் அலுக்கவே அலுக்காதவை என சில விஷயங்கள் உண்டு. போலவே  பணம்,பெண்,போதை, அதிகாரம், வன்முறை இவற்றை உள்ளடக்கிய சினிமா அல்லது தொடர் எத்தனை வந்தாலும் அவை கண்டிப்பாய் நம்மை கட்டிப்போடும். கொஞ்சம் சுவாரசியமும், புத்திசாலித்தனமான திரைக்கதையும், தேர்ந்த நடிகர்களும் இருந்தால் போதும். திரையுடன் பார்வையாளர்கள் ஒன்றிப்போகலாம்.  அப்படித்தான் இந்தத் தொடரும் இருக்கிறது. 

சாயிஃப் அலி கான் இவ்வளவு நல்ல நடிகரா என்ன! என்கிற வியப்புதான் முதலில் தோன்றியது. சாயிஃப் அலி கான் சினிமா வாழ்வில்  சர்தாஜ் சிங் போல ஒரு கதாபாத்திரம் கூட  அமையவில்லை என்றே நினைக்கிறேன். சந்தேகமே வேண்டாம் அவரின் ’கேரியர் பெஸ்ட்’ இதுதான்.

Ganesh Gaitonde வாக தானைத் தலைவன் நவாசுதீன் சித்திக். சாயிஃப் உயிரைக் கொடுத்து நடிப்பதை ஒரே ஒரு உடலசைவில் நவாசுதீன் மிக எளிதாக தாண்டுகிறார். மொத்த தொடரையும் இவரது இருப்பே தாங்குகிறது. இந்தியாவின் மிகச் சிறந்த சமகால நடிகன் இவராகத்தான் இருக்க முடியும். Sacred Games குறித்தும் விரிவாக எழுதுகிறேன்.


Featured Post

test

 test