Monday, February 22, 2010

கடினத்திலிருந்து நீர்மைக்கு


மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பிப்ரவரி மாத இறுதியில்தான் இந்த வலைப்பூ மலர்ந்தது. கல்வியினுக்குப் பிறகு மூன்று வருடங்கள் தொடர்ந்து ஒரே தளத்தில், ஒரே இடத்தில், ஒரே மாதிரியான வாழ்வினை நான் எப்போதும் எதிர்கொண்டிருக்கவில்லை. கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் அதிகபட்சம் ஒண்ணரை வருடங்கள் ஒரே சூழலில் வாழ்ந்திருந்ததுதான் என் சாதனையாக இருந்தது. இதோ இந்த வலையும், எழுத்தும் விலக இயலா ஈர்ப்பாக மூன்று வருடங்கள் கடந்த பின்னும் என்னுள் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு போதும் கடமையாகவோ, வேலையாகவோ, நிர்பந்தமாகவோ, பிறரின் விருப்பத்தினுக்காகவோ இந்த எழுத்து இன்னமும் செய்யப்படாததாகவே இருக்கிறது என்கிற நம்பிக்கைகள் மட்டுமே இதைத் தொடரும் காரணங்களாகப் பின்னிருந்து கொண்டிருக்கின்றன.

பதிமூன்று வயதில் கிடைத்த மெரூன் நிற டைரியொன்று ஏதோ ஒரு கணத்தில் என் அந்தரங்க நண்பனானது. என் மிக இரகசியத் தகவல்களை ஒளித்து வைக்குமிடமாகவும் விரைவில் அது மாறியது. நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தையும் என் அண்ணனைப் பார்த்துதான் எழுத ஆரம்பித்தேன். இரகசியமாய் அவரின் டைரிகளைப் படித்து அதே மாதிரி எழுதி வைத்துக் கொள்ள ஆரம்ப நாட்களில் பெரிதும் மெனக்கெட்டேன். இதுவரைக்குமான எல்லாமும் அண்ணனைப் பார்த்துக் கற்றுக் கொள்வது அல்லது அண்ணன் கற்றுக் கொடுத்ததாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. முக்கிய சம்பவங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், புத்தகம், சினிமா பற்றிய குறிப்புகள் எல்லாமும் அப்போதிலிருந்து இன்றைய தேதி வரைக்குமாய் அந்தந்த புரிதல்களுக்கு ஏற்றார் போல் என்னால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது இல்லாமல் போனது அந்தரங்கமாகத்தான் இருக்கிறது என்றாலும் அதற்கு படைப்பு, ஆசிரியன், வாசகன் என்றெல்லாம் வேறுவேறு பெயர்களை சூட்டிக் கொண்டாயிற்று.

கற்பனைகளால் கட்டமைக்கப்படும் உலகம், மிகவும் சாந்தமான மன நிலையைத் தந்துவிடுகிறது. இயல்பிற்கேத் திரும்பாத வேறொரு உலகத்தில் மொத்தமாய் தொலைந்து போய்விடும் பரவச ஆசையும் அந்த கணத்தில் மேலெழும். ஆனாலும் பயம், தேவைகள், நிர்பந்தம் என ஏதேதோ பெயர்களில் நான் மீண்டும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்துக் கொண்டு இயல்பு உலகத்தினுக்கு வந்து விடுகிறேன். இந்த தேர்வு என்னுடையது. இந்த இயல்பு வாழ்க்கையை தெரிவு செய்தது நான். சுதந்திர வாழ்வினையோ அல்லது பாதுகாப்பில்லாத வாழ்வினையோ என்னால் சகித்துக் கொள்ள இயலாது. தோளில் ஒரு பையினை மாட்டிக் கொண்டு கால் போன போக்கில் என்னால் நடந்து போய்விடமுடியாது. ஹிப்பிக்களின் வாழ்வெல்லாம் சிலாகிக்க மட்டும்தானேயன்றி பின் தொடர்வதற்கில்லை என்பன போன்ற சாமர்த்திய அனுகுமுறைகளே என் வாழ்வாக இருக்கிறது.

கடந்த நான்கு வருடங்களாய் இதுவாய், அதுவாய் ஆக வேண்டுமென்கிற ஆசைகளோ, கனவுகளோ சுத்தமாய் இல்லை. எனக்கிருந்த மிக உயர்ந்த பட்சக் கனவே ஏதோ ஒரு நிறுவனத்திற்காக மேனஜராய் குப்பை கொட்ட வேண்டுமென்பதாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது வந்திருக்கும் தொலைவு அந்த கனவுகளை வெகு அற்பமாக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பிடங்களின் தொடர்ச்சியான மாற்றங்கள், சந்திக்க நேர்ந்த புதிய மனிதர்கள், அலைக்கழிப்பும், அதி உற்சாகமுமான வாழ்வு மற்றும் மனநிலை என எல்லா பரீட்சார்த்தங்களுமிருந்தும் உண்மையாகவே எனக்கு எதிலேயும் ஆர்வமோ பிடிப்போ இல்லை. எல்லா இடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கின்றேனோ என்கிற சந்தேகங்கள் வேறு வர ஆரம்பிக்கின்றன. இந்த வாழ்வை உற்சாகமாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டியதெல்லாம் உண்மையாகவே எனக்குப் பிடித்த வேலையை செய்வதும், பிடித்த மாதிரி வாழ்வதும்தான். ஆனால் எப்படி இருந்தால் எனக்குப் பிடிக்கும்? என்பதுதான் இப்போதைய குழப்பமாக இருக்கிறது. சமூகத்திற்கும், சூழலுக்கும், மனிதர்களுக்கும் ஏற்றார்போல் மாற்றி மாற்றித் தகவமைத்துக் கொண்டதன் மூலம், என்னுடைய அடையாளத்தை முற்றிலுமாய் இழந்துவிட்டிருக்கிறேன். எது என்னுடைய பிடித்தம்? எந்த நகர்வில் என் பூரணத்துவத்தை எட்ட முடியும்? என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இப்போதைய சவாலாக இருக்கிறது.

இது நான் இல்லை, இது என் உலகம் இல்லை என்கிற கிசுகிசுப்புக் குரலை எனக்கான தினசரிகளினூடாய் எப்போதும் கேட்டபடியிருக்கிறேன். அந்தக் கிசுகிசுப்புகள் எப்போது உரத்து ஒலிக்க ஆரம்பிக்கிறதோ அப்போதென்னால் குறைந்த பட்ச நிம்மதியுடன் கூட வாழ முடியாதுதான் போலிருக்கிறது. குரலை உயர்த்தவிடாமலிருக்கவும் நான் உபாயங்களைக் கண்டறிந்திருக்கிறேன். சொல்லப்போனால் இங்கே கொட்டப்படும் வார்த்தைகளுக்கான ஆதாயமும், இந்தப் பரப்பைக் கெட்டியாய் பிடித்துக் கொள்வதற்கான காரணங்களும் குரலை உயர்த்த விடாமலிருக்கத்தான்.

0
இந்த வலைப்பக்கத்தை துவங்கிய நாளிலிருந்து இன்று வரைக்குமாய் கிடைத்த, கிடைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களும் அவர்களின் வழி விரியும் உலகமும் புதுமையானவை. நல்ல / கெட்ட என்றெல்லாம் பிரித்தோ, ஒதுக்கியோ, உயர்த்தியோ, தாழ்த்தியோ பார்க்கும் வழக்கத்திலிருந்து மெல்ல நகர்ந்து மனிதர்களை மனிதர்களாக பார்ப்பதற்கு பழகிக் கொள்கிறேன். எல்லா துன்பங்களுக்கும் காரணம் “நான்” எல்லா இன்பங்களுக்கும் காரணம் “நீ” என்கிற அனுகுமுறை இவ்வுலகில் இரு மனிதர்களுக்கிடையிலான உறவுகளை மகிழ்ச்சியாய் வைத்திருக்க உதவும் என்கிற நம்பிக்கைகள் வரத் துவங்கிவிட்டன. குற்றம் சுமத்துதல், பழிபோடுதல், வன்மம், பகை, கழிவிரக்கம், குற்ற உணர்வு, இழந்தவற்றின் மீதான ஏக்கம், இயலாமை, நிகழின் மீதான வெறுப்பு, அவநம்பிக்கை, குறுக்கு புத்தி, என வெவ்வேறு மனநிலைகளைக் கடந்து கொண்டிருக்கிறேன்.

நதியின் வசீகரக் குளுமையை நினைவில் கொண்டபடி பாலையைக் கடப்பது படு அபத்தமானது என உள்ளிருக்கும் நிகழ் புத்தன் குரலெழுப்பினாலும் அவன் குரல் வளையை என் ஆயிரம் இயலாமை கரங்களைக் கொண்டு நெறித்தபடி அதே நதியின் நினைவுகளோடு நிகழைத் தொலைக்கிறேன். நினைவில் காடுள்ள இன்னொரு மிருகம் நான். எந்த வனத்திலிருந்தும் தப்பவில்லையெனினும் மீண்டும் வனம் புக விழையும் நவீன மிருகமாகத்தானிருக்கிறேன். அடர்ந்த வனங்களை மோகித்தபடி காட்டுச் சிற்றோடைகளில் நீந்திக் களிக்கிறேன். எந்நேரத்திலும் விரிந்த நீர்ப்பரப்பு நினைவில் விடாமல் சிறு அலைகளை ஏற்படுத்தியபடி இருக்கிறது. என் வாழ்வாக, கனவாக, கிளர்ச்சியாக (நீரினடியில் இன்னொரு உடல் நுழைவது என் நெடுநாளையக் கிளர்வுகளில் ஒன்று) விருக்கும் இந்நீரே என் மரணமாகவுமிருக்கும்.

மலைகளில் தோன்றி, பள்ளத்தாக்குகளில் வீழ்ச்சியடைந்து, வளைவுகளில் குறுகி, பாறைகளில் உயர்ந்து, சமவெளியில் சலனமற்று நகரும் நதியினை யொத்ததாய் இருக்கிறது வாழ்வு. அதே சமவெளி நதியின் இருப்பினையொத்த மனநிலையோடு மீதமிருக்கும் வாழ்வையும் கடந்துவிடுவதற்கான விருப்பங்களும் வரத் துவங்கியாயிற்று. மஜித் மஜிதியை ஊருக்கு வர வழைக்க விரும்பும் பவாவின் மனநிலையோடோ, கோணங்கியைப் போல ஊர் சுற்றிக் கொண்டோ எஸ்.ராமகிருஷ்ணனைப் போல பொதிகை மலையில் இலைகளின் நடனத்தை எழுதிக் கொண்டோ மீதமிருக்கும் வாழ்வினைக் கடக்க நான் விரும்புகிறேன்.

மூன்று வருடங்களுக்கு முன்பிருந்த கடின “நான்” இரண்டாம் வருடத்தில் இளகி மூன்றாம் வருடத்தில் நீர்மையாகியிருக்கிறது. இனி செய்ய வேண்டியதெல்லாம் காண்பதுவும் கடப்பதுவும் மட்டுமே.
0

Tuesday, February 16, 2010

யோனி நிலம்


தொலைதூரத்தில்
வரைபடப் புள்ளிகளாய் தெரியும்
புகை மலை முகடுகளுக்குப் பின்னுள்ள
நிலத்தின் இதயத்திலிருந்து
கடல் துவங்குவதாகவும்
பிளந்த யோனியின் சாயல்களில்
விரிந்திருக்கும் மணற்வெளியில்
நீர் சலித்த மோகினிகளும்
வனம் சலித்த நீலிகளும்
தழுவிக் கிடப்பதாகவும்
நகரத்து யட்சியொன்று
அதன் பெரும் ஏக்கத்தை
என்னிடம் கடத்தியது

யோனி நிலக் கிளர்வுகளோடு
ஏங்கிச் செத்த நிகழ் வேட்கையின்
கொடுங்கனவில்
இலுப்பை முனியின் நீள்முடியைக்
கைவசப்படுத்திய என் முப்பாட்டித் தோன்றி
அவ்வுன்னத நிலங்களில்
மலங்கழித்துத் திரிவதாய்
கெக்கலித்தாள்

அவளறியாமல் அவளின் சுருக்குப் பையினுள்
தஞ்சம் புகுந்தேன்
காலத்தின் உறைந்த உதடுகளோடும்
புகையிலை வாசங்களோடும் பயணித்து
முடிவின்மையின் சாஸ்வதங்களை முத்தமிட்டபடி
விழுங்கக் காத்திருக்கும்
யோனி நிலத்தினுள் புதைந்து கொள்வேன்

Sunday, February 14, 2010

காதல் நிமித்தமான கதைகளும் உரையாடல்களும்


இன்றைய தினத்திற்கான வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை. பழைய குப்பைகளிலிருந்து ஒன்றை மீள்வாசித்து நிறைவடைகிறேன். உங்களுக்கும் அப்படியே எனில் மகிழ்வு.
0
ஒரு கடற்கரை நகரமொன்றின் மிக அழகான சாயந்திரத்தில்தான் அது நிகழ்ந்தது. கிளைகள் விரித்து நெடிதுயர்ந்து வளர்ந்த விருட்சமொன்றின் பக்க வாட்டிலிருந்த வெளிச்சம் மெதுவாய் குறைந்துகொண்டு வந்தபடியிருந்தது. இருளென்பது மிகவும் குறைந்த ஒளி என்கிற பாரதியின் வசனக் கவிதையை சொல்லிக்கொண்டிருந்தேன்.அவளின் முகத்திலிருந்து மறைந்த வெளிச்சம் கண்களினுள் புகுந்தது.எப்போதும் பயத்தை மட்டுமே வெளிக்காட்டிய அக்கண்களிலிருந்து எல்லையில்லாததொன்று நீரின் வடிவம் பெறத் துவங்கியது.வெடித்துச் சிதறிய விம்மல்களோடு அவள் என் மார்பின் வசம் புகுந்தபடி திக்கித் திணறி தன் நெடுங்காலக் காதலைச் சொன்னபோது பாறைகளுக்குள் மெதுவாய் அலையடித்துக் கொண்டிருந்த கடல் நீர் தன் எல்லைகளை விரிவுபடுத்தியது.நாங்கள் மிதக்கத் துவங்கினோம்.எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு சிட்டுக்குருவியும் இன்னொரு தேன்சிட்டும் தம் இறக்கைகளை எங்களுக்குத் தந்துவிட்டுப் போனது மிதந்து சலித்த பொழுதொன்றில் சிறகுகளை அணிந்துகொண்டு பறக்கத் துவங்கினோம்.

அவளை முத்தமிடும்போது மயிர்க்கால்களில் பூக்கள் முளைக்கத் துவங்கின.விரல்களைத் தீண்டும்போது இதயம் தன் வீணையின் நரம்புகளை சுண்டி விட்டது.அவள் தன் தோள்களிலும் உள்ளங்கையிலும் என் அம்மாவின் சாயல்களைத் திருடி வைத்திருந்தாள்.மிக நீண்ட காத்திருப்புகளுக்குப் பிறகுதான் அவளின் உதடுகள் எனக்குக் கிடைத்தது,இல்லை எடுத்துக் கொண்டேன் என்பதுதான் பொருத்தமாயிருக்கும்.உதடுகள் என் வசமான பின் அவள் தனது நம்பிக்கைகளை,அடையாளங்களை முற்றிலுமாய் இழந்துபோனாள். என் 'தான்' திருப்தி பெற்றது என் 'தான்' நிறைவடைந்தது. என் 'தான்' கடைசியில் காணாமல் போனது. நாங்கள் இன்னும் உயரப் பறக்கத் துவங்கினோம்.

ஒரு மலைப் பிரதேசத்திற்கு பனிக்கால விடியலில் சென்றடைந்தோம்.புகையெனப் பனி அவளின் கேசம் படிந்தது.குளித்து முடித்த சின்னஞ் சிறு பூனைக்குட்டியினைப் போல அவளின் உடல் நடுங்கிப் போனது. ஒரு தாய் பூனையின் அரவணைப்புகளோடு அவளை என்னில் பொதிந்து கொண்டேன்.என் மார்பில் நீள வாக்கில் கூர்மையான கத்தியினைக் கொண்டு கிழித்து உள்ளே தஞ்சமடைந்தாள். தான் எப்போதுமே பெற்றிராத கதகதப்பினை நான் தருவதாய் உள்ளிருந்து முனகியபடியிருந்தாள். பின்பொரு நந்தவனத்திற்குச் சென்றோம் பிரபஞ்சத்தின் புதிர்களை, முடிச்சுகளை அவள் தன் உள்ளாடை கொண்டு மறைத்து வைத்திருந்தாள்.ஆடைகளையும்,ரகசியங்களையும் ஒருமித்துத் தளர்த்தினோம். இயற்கையின் அதி அற்புத ரகசியங்களை நாங்கள் தட்டுத் தடுமாறியபடி கண்டறியத் துவங்கினோம். அஃதொரு கள்வெறியேறிய பைத்தியக்காரனின் சலம்பல்களையும் தேனுன்ட வண்ணத்துப் பூச்சியின் கிறக்கத்தினையும் ஒத்திருந்தது.புதிர்கள் விடுபட்ட பொழுதுகள் மிகுந்த மயக்கத்தையும் விடுவித்த பொழுதுகள் சலிப்பையும் தந்தன.

இறக்கைகளை கழற்றி எறிந்து விட்டு நடக்கத் துவங்கினோம்.பிறகு அவள் இன்னொருத்தனையும் நான் இன்னொருத்தியையுமாய் கல்யாணம் செய்துகொண்டோம்.

00
காத்திருத்தலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?..இந்த உலகத்தின் உன்னதமான செயல் அதைத் தவிர வேறெதுவுமில்லை என்பது என் திண்ணம்..என்னவளைப் பார்ப்பதற்கு எப்போதும் இரண்டு மணி நேரங்கள் முன்னால் வருவது எப்போதுமெ எனக்குப் பிடித்திருக்கிறது.அவள் என்னைப் பார்ப்பதற்காக மட்டுமே வருகிறாள். ஆம்! என்னைப் பார்ப்பதற்காக மட்டுமே...அவளிடம் மொத்தம் பதினெட்டு நிற சுடிதார்கள் இருக்கின்றன.. மூன்று நிறப் புடவைகள்.. ஓரே ஒரு முறை மட்டும் தாவணியில் பார்த்திருக்கிறேன்.. அதன் பிறகு அதை அவள் அணிவதில்லை...எனக்கும் அவளுக்கும் திருமணமான இரவில் அந்த ஆடையைத்தான் அணியச் சொல்லப் போகிறேன்...கொலுசுகளில் மூன்று விதம் அவளிடம் இருக்கிறது.. வெண்ணிறப் பாதங்களில் வெள்ளி நிறக் கொலுசுகள் எத்தனைக் கவிதை!! இல்லை...ஆம்! எத்தனை பேர் எத்தனையோ முறை சொல்லி சலித்துப் போனாலும் அவளின் பாதங்களுக்கு கொலுசுகள் அழகுதான்... இன்னமும் மல்லிகைப் பூக்கள், கண் மை, இரட்டைப் பின்னல் எனச் சொல்லிக் கொண்டு போக அவளிடம் ஏராளம் உண்டு.. ஆனால் அவற்றை எல்லாம் என்னால் அதிக நேரம் பார்க்க முடியாது. அவள் கண்களை எத்தனை நொடிகள் பார்த்திருப்பேன் என எனக்குத் தெரியாது.. இமைக்கும் நேரத்திற்கு கூடுதலாய் சில நொடிகள் இருக்கலாம் அவ்வளவுதான்.. ஒரு முறை என் அத்தனை வீரத்தையும் வரவைத்துக் கொண்டு நேரம் கேட்டேன் அவளிடம் ஒன்பது பதினைந்து என்றாள் என் கைக் கடிகாரம் எப்போதும் அந்த நேரத்தைத்தை தான் காட்டுகிறது ..

எனக்கு முன்னால் சில இலட்சம் ஆணகள் எப்படி காதலித்தார்களோ அதே சாயலில்தான் அவளைக் காதலித்தேன்.. எனக்கு எதெல்லாம் காதல் என சொல்லிக்கொடுக்கப்பட்டதோ அதே முறையில்தான் நானும் அதை அணுகினேன்...நான் அந்தப் பெண்ணின் மீது பைத்தியமானேன்...அவள் உயிர் வாழ்வதே எனக்காகத்தான் என நம்பத் துவங்கினேன்... உணர்வுகளைக் கடத்த அன்பினைப் பரிமாற வார்த்தைகள் அத்தனை முக்கியமில்லை என்பது என் துணிபு.நான் கண்களால் பேசத் துவங்கினேன்.. அவள் எனக்கு பதிலும் சொன்னாள்.. மிக நிறைவாய் இருக்கிறேன் நான்.இதுவரை அவளுக்காய் எழுதப்பட்ட கடிதங்கள் மொத்தம் இருநூற்றை தாண்டிவிட்டது கவிதைகள் கூட சிலதை எழுதியிருக்கிறேன்.ஒரு நாள் சொல்ல வேண்டும்.. என் காதலை, தவிப்பை, காத்திருத்தலை சொல்லிவிடுவேன்.. ஆனால் அதற்கு முன்னால் மொத்தமாய் காதலித்து விடுவதென தீர்மானித்திருக்கிறேன்.. ஒருவேளை அவள் என்னை மறுத்தாள் கொல்வதற்கு ஒரு கத்தியினையும் கால் சட்டைப் பையினுள் தயாராய் வைத்திருக்கிறேன்..அந்த அழகான வயிற்றில் சதக் சதக் எனக் கத்தியால் குத்துவது குரூரமானதுதான்.. என்றாலும் எனக்கு வேறுவழியில்லை..

ஏனெனில் நான் அவளைக் காதலிக்கிறேன்.

காதலிப்போர்/படுவோர் களுக்கு காதலர் தின நல்வாழ்த்துக்கள்..எதுவுமில்லாதோருக்கு அன்பும் அனுதாபங்களும்

Wednesday, February 10, 2010

கினோகுனியா

இருவரும் திகைத்துத்தான் போனோம். கிட்டத் தட்ட இரண்டு மணி நேரத்தினுக்கும் மேலாக இந்தப் பேரங்காடியின் இரண்டாவது தளத்தில் கினோகுனியா வைத் தேடிக் கொண்டிருக்கிறோம். கினோகுனியா என்பது புத்தகக் கடையின் பெயர். உலகின் பெரும்பாலான பகுதிகளில் இந்தக் கடை தங்களின் கிளைகளை வைத்துள்ளது. பெரும்பாலான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்தக் கடைக்கு அடிக்கடி வருவோம். இவள் இக்கடையின் உறுப்பினர் திட்டத்திலும் இருக்கிறாள். இருநூறு திர்ஹாம்களுக்கு மேல் வாங்கினால் இருபது திர்ஹாம் தள்ளுபடியும் இவளுக்கு கிடைக்கும். இன்று இந்தக் கடையைக் காணோம். சுற்றி சுற்றி ஒரே இடத்தினுக்கு வந்து கொண்டிருந்தோம் இருவருக்குமே மிக நன்றாகப் பரிச்சயமான இடமிது. திடீரென எப்படி மறைந்து போகும்? இவ்வளவு பெரிய கடையினை காலி செய்யவே கிட்டத்தட்ட பத்து நாட்கள் பிடிக்கும் இவள் போன வாரம் வேறு இங்கு வந்து போயிருக்கிறாள். இந்த வாரம் கினோகுனியா இருந்த இடத்தில் பாரீஸ் காலரி என்கிற வாசனைத் திரவியக் கடை இருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய பேரங்காடியான இதில் இடக்குழப்பங்கள் சாதாரணமென்பதால் பழியை எங்களின் கவனத்தின் மீது போட்டுக் கொண்டு இந்தத் தளம் முழுக்க சுற்றியலைந்தோம். உண்மையிலேயே அந்தக் கடை இல்லை.

வேறு உதவியை அணுகலாம் என்கிற நோக்கில் அங்குத் தென்பட்ட பேரங்கடிக் காவலர்களிடம் விசாரிக்க முடிவு செய்தோம். சீருடை அணிந்த மண்ணின் மைந்தர் ஒருவரிடம் விசாரிக்கையில் “அப்படி எதுவும் இங்க இல்லயே” என்றார். இவள் துணுக்குற்றாள் “முன்னாடி வந்திருக்கோம் இடம் மறந்திடுச்சி” “இல்ல மேடம் அந்த மாதிரி கட எதுவும் இங்க இல்ல. வேணும்னா அங்க இருக்க மேப்ப பாத்துக்கோங்க” என்றபடியே விலகிப் போனார். ஒவ்வொரு தளத்திலும் பேரங்காடியின் வரைபடம் சட்டம் போட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிந்தும் அதை இருவருமே மறந்துவிட்டிருந்தோம். லேசாய் சிரித்தபடியே வரைபடத்தை நோக்கிச் சென்றோம். வரைபடத்திலும் கினோகுனியா இல்லை. இருவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு மணி நேரம் அலைந்ததில் இருவரின் முகத்திலும் சோர்வு படித்திருந்தது. ஆனாலும் கடை குறித்தான தகவல்களையாவது அறிந்து கொண்டேயாக வேண்டுமென இவள் பிடிவாதமாய் இருந்தாள். என்னால் அவளை சமநிலைக்கு கொண்டு வர முடியவில்லை.

பேரங்காடியின் உதவி மேசை நினைவுக்கு வரவே அங்கு சென்று விசாரித்தேன். உதவி மேசையிலும் அப்படி ஒரு கடை இல்லை என்றார்கள். இவளின் ஆத்திரம் அதிகமானது ஆங்கிலத்தில் இரையத் துவங்கினாள். “நான் போன வாரம்தான் அந்த கடைக்கு வந்து மூணு புக் வாங்கினேன் இதோ இதே தளத்துலதான் அந்த கட இருந்தது. அதுக்குள்ள எப்படி காணாம போகும்? நீ வேலைக்கு புதுசா? எவ்ளோ நாளா இங்க இருக்க? இந்த மால் மேனேஜர கூப்டு” என்கிற அவளின் கத்தலுக்கு அங்கங்கே சென்று கொண்டிருந்தவர்கள் ஒரு கணம் நின்று விட்டு பின்பு நடக்க ஆரம்பித்தனர். நான் பொறுமையை மெதுவாய் இழக்கத் துவங்கினேன். பசி வேறு கோபத்தை அதிகமாக்கியது.

“ஏய் வா போலாம்.” “இல்ல நான் இந்த மால் மேனஜர பாத்துட்டுதான் வருவேன். உங்க மேனஜர கூப்ட போறிங்களா இல்லயா” என உதவி மேசைக்காய் திரும்பி அவள் கத்தத் துவங்கினாள்.

அந்த பிலிப்பைன் தேசத்துப் பெண் இவளின் கத்தலில் பயந்து போனது யாருக்கோ அவசரமாய் தொலைபேசியது. குட்டி மாமிச மலையையொத்த அராபியர் ஒருவர் அசைந்து அசைந்து வந்தார். என்ன விசயம் என இவளிடம் கேட்க இவள் கினோகுனியா புராணத்தை ஆரம்பித்தாள். குட்டி மலை சிரமப்பட்டு வாய் திறந்து என் முப்பது வருட அனுபவத்தில் அப்படி ஒரு கடையை நான் கேள்விப்பட்டது கூட இல்லை என்றார். இவளுக்கு கண்களில் நீர் திரண்டது. என் விரல்களை அழுத்தமாய் பிடித்துக் கொண்டாள். பின்பு உதவி மேசையை விட்டு நகர்ந்தாள். சற்று தூரம் நடந்து சென்று அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து அழத் துவங்கினாள். எனக்கு கோபம், எரிச்சல், பரிதாபம், என எல்லா உணர்வுகளும் ஒரே சமயத்தில் எழுந்தன.

மெல்ல அவளருகில் அமர்ந்து தலைவருடிச் சொன்னேன் “இங்க இருக்க எல்லாப் பயலுகளும் முட்டாளுங்க புக்க பத்தி இவனுங்களுக்கு என்ன தெரிய போவுது. ஒரு வேள நாம எந்த தளம்னு மறந்து போயிருக்கலாம் அடுத்த வாரம் வந்து மெதுவா முதல் தளத்துல தேடலாம் இப்ப வா போலாம்” என்றேன். அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். “அப்படியும் இருக்கலாம். வா இப்பவே போய் முதல் தளத்துல தேடலாம்” என என்னை இழுத்தபடியே தானியங்கி படிக்கட்டுகளுக்காக காத்திருக்காது படிகளில் தாவித் தாவி இறங்கினாள். எனக்கு கண்கள் இருண்டன.
0

இந்த நாள் இத்தனை மோசமாக விடிந்திருக்கவில்லை. இந்தப் பாலையில் எப்போதாவது பெய்யும் அபூர்வ மழை நேற்றைய இரவில் ஆரம்பித்திருந்தது. அடர்ந்த மேகங்களும் பிசுபிசுத் தூறல்களும் என் சொந்த தேசத்தில் வாழும் உணர்வைத் தூண்டியிருந்தன. பின்னிரவு முழுக்கத் தூங்காது மழையோடும் பாடல்களோடும் நொடிகளை நகர்த்திக் கொண்டிருந்தேன். லேசாய் வெளிச்சம் வர ஆரம்பித்த போது வெகு மாதங்கள் கழித்து ஒரு கவிதையை வேறு எழுதி விட்டிருந்தேன். மிகுந்த நிறைவோடு தூங்கச் செல்கையில்தான் தொலைபேசியில் இவள் அழைத்தாள். பத்து நாட்களுக்கு முன்பு செத்தாலும் என் முகத்தில் விழிப்பதில்லை என்ற சபதங்களோடு சென்றவள் இன்றுதான் அழைக்கிறாள். நடுவில் நான் இரண்டு முறை தொலைபேசியில் அழைத்தும் ஒரு முறை நேரில் சென்றும் கூட அவளின் கோபத்தை தணிவிக்க முடியாமலிருந்தது. ஒருவேளை மழையைப் பார்த்து இளகிவிட்டாளோ என புன்னகைத்தபடியேதான் தொலைபேசியை உயிர்ப்பித்தேன்.

அவள் குரலில் இன்னும் லேசாய் கோபமிருந்தது. ஆனாலும் அவளுக்கு கடந்த ஆறு நாட்களாக நடக்கும் சம்பவங்களின் புதிர் தன்மை என்னிடம் சொல்லாதிருக்க முடியாததாய் இருந்திருக்கிறது. இதுவரை அவள் பதினேழு பொருட்களைத் தொலைத்திருக்கிறாள். இன்னும் என்னவெல்லாம் காணாமல் போகுமோ என்று நினைத்து பயந்துதான் என்னை அழைத்திருக்கிறாள். முதலில் தொலைந்தது அவளின் செல்போன். என்னிடம் கோபித்துக் கொண்டு போன மூன்றாம் நாள் மாலை அது காணாமல் போயிருக்கிறது. மாலை நடைக்கு அவள் வழக்கமாய் செல்லும் டெய்ரா ஆப்ரா சாலையில்தான் அது காணாமல் போயிருக்கிறது. இவள் நடைக்கு செல்லும்போது உடன் கைப் பை எதுவும் எடுத்துச் செல்வதில்லை. செல்போனை மட்டும் எடுத்துச் செல்வாள். வழியில் தெரிந்தவர் தென்பட்டாலும் கூட ஒரு புன்னகையோடு கடந்து விடுவது இவள் வழக்கம். அந்த போன் எப்படி மாயமானது என்பது இந்த நிமிடம் வரை அவளுக்குப் புதிராக இருப்பதாகச் சொன்னாள். இரண்டு புத்தகங்கள், நான்கு டிவிடிகள், இரண்டு ரேபான்கள், கார் சாவி, தங்கக் கொலுசு (ஒரே ஒரு காலில் மட்டும் அணிந்திருப்பாள். மிக மெல்லிதான ஒரே ஒரு முத்து வைத்த கொலுசு அதை மட்டும் அணிவதாய் ஒத்துக் கொண்ட இரவில் நான் வாங்கித் தந்தது) இரண்டு வளையல், ஒரு நகவெட்டி, இரண்டு சிகரெட் லைட்டர் என இத்தனையும் காணாமல் போயிருக்கின்றது.

யாராவது உன் நண்பர்கள் எடுத்து வைத்து விளையாடுவார்கள் என அவளைத் தேற்றினேன். அவளுக்கு அதிகம் நண்பர்களில்லை மேலும் அவளின் வீட்டிற்கெல்லாம் அத்தனை எளிதில் யாரையும் அனுமதிப்பவளுமல்ல என்பதினால் என்னுடைய ஆறுதல்கள் பலனில்லாமல் போனது. தன்னைச் சுற்றி ஏதோ வினோதமாக நடக்கிறது என புலம்பினாள். ஒவ்வொன்றாய் காணாமல் போய்கொண்டு வந்து கடைசியில் தானும் காணாமல் போய்விடுவதுதான் நடக்கப் போகிறது என பயந்தபடியே அவள் சொன்னபோது எனக்கு வந்த தூக்கமும் காணாமல் போனது.

அடுத்த அரை மணிநேரத்தில் அவளின் வீட்டிலிருந்தேன். என்னைப் பார்த்ததும் கோபத்துடனே சிரித்து வைத்தாள். ஏதாவது கவன குறைவில் எங்காவது வைத்திருப்பாள் என்றுதான் அவள் முகத்தினைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது. உள்ளே தோன்றிய வினோத மனநிலை சமநிலைக்கு வந்தது. அவள் ஒவ்வொரு பொருளும் காணாமல் போன நேரம், இடம், சம்பவங்கள் என துல்லியமாய் விளக்க ஆரம்பித்தாள். நான் ஒரு சின்ன கொட்டாவியுடன் வரவேற்பரையிலேயே தூங்க ஆரம்பித்தேன்.அவள் நான் தூங்குவது தெரிந்தும் கூட சொல்லிக் கொண்டிருந்தாள்.

மதிய உணவிற்காகவும் அப் இன் த ஏர் படம் பார்க்கவும்தான் இந்தப் பேரங்காடியினுக்கு வந்தோம். இரண்டு மணிக் காட்சி நிறைந்து விட்டதால் நான்கரை மணிக் காட்சிக்கு இரண்டு டிக்கெட்டுகள் எடுத்துக் கொண்டு மீதமிருக்கும் இரண்டு மணிநேரத்தை கினோகுனியாவில் கழிப்பதுதான் எங்களின் திட்டமாக இருந்தது.

0
முதல் தளத்திலும் இதற்கும் அதற்குமாய் விறுவிறு வெனத் தேட ஆரம்பித்தாள். எல்லாரிடமும் விசாரித்தாள். ஒரே பதிலே திரும்பத் திரும்பக் கிடைத்தது. நான் பொறுமை இழந்து அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்துகொண்டேன். காலையிலிருந்து எதுவுமே சாப்பிட்டிருக்கவில்லை. நன்கு தெரிந்த ஒன்றை எல்லாரும் இல்லை இல்லை எனும்போது ஆத்திரமாக வருகிறது. அவள் இன்னும் குழம்பிப் போய் இருந்தாள். இழுக்காத குறையாய் அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினேன். கீழ்தளத்திலிருந்து காரை உயிர்ப்பித்து வெளியே வந்தோம். இவள் புலம்பலை நிறுத்தவில்லை. கண்களில் மெல்லிதாய் நீர் பளபளத்தது.

“எவ்ளோ பெரிய கட எப்படி யாருக்கும் தெரியாம போகும்” இப்பவாச்சும் நம்புறியா என்ன சுத்தி ஏதோ நடக்குது” என பேசிக்கொண்டே வந்தவள் திடீரென சக்கரங்கள் அதிரும்படி ப்ரேக் பிடித்து காரை நிறுத்தினாள். கதவுகளை வேகமாய் திறந்து கொண்டு “அவன் தான் அதே கிழவன் தான். ஒவ்வொரு பொருளும் காணாம போவும்போதும் இந்தக் கிழவன பாக்குறேன் இந்த கடைய மறைச்சது இவனாதான் இருக்க முடியும். உன்ன விட மாட்டேண்டா!” எனக் கத்தியபடியே யாரையோ நோக்கி ஓடத் துவங்கினாள்.

Thursday, February 4, 2010

குருவிகளின் பாடலும் மீன்களின் சிதறலும்


மஜித் மஜிதியின் The Song of Sparrows திரைப்படத்தினை முன் வைத்து….

அந்தச் சிறுவர்கள் தத்தமது குடும்பத்தாரின் இடையூறுகளையும் தாண்டி பாழடைந்த ஒரு குளத்தினை சீரமைத்து தங்க மீன்களை வளர்க்க விரும்புகின்றனர். பூச்செடிகளை நகரத்தினுக்கு கொண்டு போகும் நாளொன்றில் அவர்களுக்கு வளர்க்க மீன்கள் கிடைக்கின்றன. அவர்களின் உயரத்தினுக்கு சமமான ஒரு பிளாஸ்டிக் வாளியில் தங்க மீன்களை வாங்கி அப்பூச்செடிகளுக்கு அடியில் மறைத்து வைக்கின்றனர். போகும் வழியெங்கும் அந்த மீன்களை வளர்ப்பது பற்றி, அவை பல்கிப் பெருகப் போவதைப் பற்றி மிகுந்த ஆவலுடன் பேசிக் கொள்கின்றனர். செடிகளை இறக்க வேண்டிய இடம் வந்ததும் சிறுவர்கள் தொட்டிச் செடிகளை வண்டியிலிருந்து இறக்கி சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்கின்றனர். அப்போதுதான் அவ்வாளியினுள் ஓட்டை விழுந்திருப்பதை ஒரு சிறுவன் கவனிக்கிறான். ஏராளமான தண்ணீர் ஏற்கனவே வெளியேறிவிட்டிருக்கிறது. கூச்சலிட்டு மற்ற சிறுவர்களை அழைக்கிறான். அனைவரும் வண்டியிலேறி வாளிக்கு மேல் வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளை வேக வேகமாய் அப்புறப்படுத்துகின்றனர். மீன்கள் இறந்துவிடுமென பயந்து வாளியினை வெளியிலெடுக்க இடையூராய் இருக்கும் தொட்டிச் செடிகளை வீசி எறிகின்றனர். வண்டியிலிருந்து அவ்வாளியினை தூக்க முடியாமல் தூக்கிக் கீழிறக்குகின்றனர். சற்றுத் தள்ளி வாய்க்கால் ஒன்றில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது அதை வாளியினுள் நிரப்பி மீன்களை காப்பாற்றி விடலாம் என்கிற உத்வேகங்களோடு அவ்வாளியைத் தூக்கியபடி ஓட முனைகின்றனர். சிறுவர்களின் மென்பிடி நழுவ பிளாஸ்டிக் வாளி உடைந்து மீன்கள் சிமெண்ட் தரையில் சிதறுகின்றன. பதைபதைப்புகளோடு பார்த்துக் கொண்டிருக்கும் நான் அவர்களோடு சேர்ந்து கொண்டு அய்யோ! வென சத்தமாய் அலறுகிறேன். சுவாசம் தடைபட்ட தங்க மீன்கள் உயிர் வாழ வேண்டி சிமெண்ட் தரையில் துடிக்கின்றன. மிகுந்த துக்கங்களோடும், அழுகையோடும் அச் சிறுவர்கள் துடிக்கும் மீன்களை அருகில் ஓடும் நீரில் தள்ளிவிடுகின்றனர். அதிர்ச்சியில் குமைந்து போய் இயலாமையில் வெகு நேரம் மருகிக் கொண்டிருக்கிறேன். மஜித் மஜிதியை வெறுக்கும்/நேசிக்கும் கணம் இதுவாகத்தானிருக்கிறது.


இரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் சமீபத்திய படமான The Song of Sparrows ல் வரும் ஒரு காட்சிதான் மேல் குறிப்பிட்டது. பார்வையாளர்களின் சமநிலையைக் குலைப்பதுதான் இவரின் எல்லாத் திரைப்படங்களின் அடிநாதமாகவும் வெற்றியாகவும் இருக்கிறது. பெரும்பாலும் சிறுவர்கள், பதின்மர்கள் மற்றும் சாமான்யர்களின் வாழ்வுதான் மஜித் மஜிதி பயணிக்கும் திசையாக இருக்கிறது. எளிமையான மனிதர்களிடம் நிரம்பிக் கிடக்கும் அன்பு, மனித நேயம், கருணை இவற்றை முன் நிறுத்தாமல் வெகு இயல்பான குணமாக காட்சிப்படுத்துவது இவரின் தனிச் சிறப்பு. எளியோர்களின் வாழ்வினை தேவைகள் பழிவாங்கும் குரூரம், சிறுவர்களின் அக உலகம், பதின்மர்களின் மனச் சிக்கல்கள் என்பவையெல்லாம் மஜித் மஜிதி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும், நம் முன் வைக்கும் கதைகளாக இருந்து வருகின்றன.

மஜித்தின் திரைப்படங்களில் மீனும் நீரும் முக்கியப் படிமமாக காட்சிப் படுத்தப்படுகிறது. இரானிய சினிமாக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட திரைப்படிமம் மீனாக இருக்கலாம். எளிய மனிதர்களின் இயலாமையை, அவர்கள் வாழ்வின் குரூரங்களால் பழிவாங்கப் படுவதை காட்சிப்படுத்தும் அழகியல் படிமமாக மீன்களை குறிப்பாய் தங்க மீன்களை கையாள்வது இரானிய இயக்குனர்களின் தனித் தன்மையாக இருக்கிறது. சில்ரன் ஆப் ஹெவனின் கடைசிக் காட்சியை இதுவரைக்குமான மஜித்தின் திரையாக்கங்களின் கவித்துவ உச்சம் என்றும் கூட சொல்லி விட முடியும். ஒரு சிறுவனின் இரத்தம் தோய்ந்த கால் விரல்களை மீன்கள் கடிக்கும் காட்சிதான் அது. ஃபாதர் திரைப்படத்தின் இறுதிக் காட்சியிலும் இரத்தம் தோய்ந்த சிறுவனின் கரங்கள் நீரில் அலையும் காட்சியை வைத்திருப்பார். Baron திரைப்படத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசாது பார்வைகளில் மட்டுமே நேசத்தினைப் பரிமாறிக் கொள்ளும் அப்பெண் விடைபெறும் காட்சியில் மழை ஒரு பாத்திரமாய் இடம் பெற்றிருக்கும். குழைந்த சேற்று மண்ணில் பதிந்திருக்கும் அவளின் பாதச் சுவட்டில் மழை நீர் நிறையும் காட்சி மிகக் கவனமாய் பதியப்பட்டிருக்கும். நீர் மனிதனின் ஆதாரம் மட்டுமல்ல ஆசுவாசமும் அதுதான் என்பதுதான் இவர் தரும் செய்தியாக இருக்கிறது.

The Song of Sparrows என்கிற இந்தப் படம் தீக்கோழிப் பண்ணை ஒன்றிலிருந்து துவங்குகிறது. பண்ணையில் பணிபுரியும் கரீம் ஒரு நாள் திரும்பி வராத தீக்கோழி ஒன்றினுக்குப் பொறுப்பேற்று வேலையை இழக்கிறார். மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் வாழ்வாதாரத்தினுக்காக வேறு வேலை குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் கரீம் எதிர்பாராத விதமாய் வாடகை ஓட்டுனராகிறார். தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் நகரம் முழுவதும் அலைந்து திரிந்து பயணிகளை / பொருட்களை ஏற்றிச் செல்கிறார். முன்பு பார்த்துக் கொண்டிருந்த வேலையில் கிடைத்த பணத்தை விட அதிகம் சம்பாதிக்கிறார். அவரின் குடும்பம், குழந்தைகள், சுற்றியுள்ள மனிதர்கள், அவருடைய ஓட்டுனர் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள், மேலும் அவருக்கு நிகழும் எதிர்பாராத விபத்து இதைச் சுற்றிப் படம் நகர்ந்து ஒரு சிறிய நம்பிக்கையுடன் நிறைவடைகிறது.


பணத்தின் அத்தியாவசியமும் முக்கியத்துவமும் உழைக்கும் மனிதர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டிருப்பதை படம் நெடுகிலும் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். ஒரு சிறுமி போக்குவரத்து நெரிசல்களுக்கிடையில் சாம்பிராணிப் புகையை வாகனங்களுக்கு விசிறியபடி பணத்தை யாசிக்கிறாள். அவளது சிறு பிராயமும், குரலும் சிக்னலில் காத்திருக்கும் கரீமை நெகிழ்த்த தன் சட்டைப் பையினுள் துழாவி 500 டோமன்களை எடுக்கிறார். ஆனால் அதையே அச்சிறுமிக்குத் தர அவரின் வாழ்வு இடம் தராததால் காத்திருக்கும் பிற வாகனங்களின் கதவுகளைத் தட்டி 500 டோமன்களுக்கு சில்லறை கிடைக்குமா என சோதிக்கிறார். 500 டோமனுக்கு சில்லறை வைத்திருக்குமளவுக்கு ஏழைகள் அங்கு இல்லாததால் பலரிடம் சோதித்தும் 500 டோமனை மாற்ற முடியாமல் போகிறது. மிகுந்த வருத்தங்களோடு அச்சிறுமியைப் பார்த்தபடியே கரீம் சிக்னலைக் கடக்கிறார். அன்பு, கரிசனம், மனித நேயம் போன்ற உணர்வுகளெல்லாம் கூட பணத் தேவையின் பிரம்மாண்டங்களின் முன் நிறமிழந்து போவதை இந்தக் காட்சி மிக அழுத்தமாய் பதிவிக்கிறது.

அன்றாட வாழ்வினுக்கான பணத்தை அன்றைய நாளின் உழைப்பில் மட்டுமே ஈட்ட முடியும் மனிதர்களின் வாழ்வு ஏராளமான திருப்பங்களைக் கொண்டிருக்கும். தொடர்ந்து வரும் நெருக்கடிகள், அம்மனிதனைச் சார்ந்திருக்கும் குடும்பம், தேவைகள் என ஏகப்பட்ட சவால்களுடன் கடினமான உடலுழைப்பையும் கோரும் வேலையும் அம்மனிதனை விழுங்கக் காத்திருக்கும். எல்லாவற்றையும் எதிர் கொள்ள அம்மனிதனுக்கு பெரும் உந்து சக்தியாக இருப்பது வாழ்வின் மீதான விருப்பமும், தன் குடும்பம் என்கிற அமைப்பின் மீதான காதலும் தான். இந்த ஆதார நம்பிக்கைகள்தாம் அன்றாடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் மிகப் பெரிய பலமாகவும் இருக்கிறது.

கரீம் மகளின் காது கேட்கும் கருவி செயலற்றுப் போகிறது. புதிய கருவி வாங்குவதற்கான பணத்தை சேமிப்பதற்குள் அவர் விபத்துக்குள்ளாகிறார். கால்களுக்கு மருந்திடும் மகளை வருடியபடி குணமானதும் புதிய கருவி வாங்கிவிடலாம் என ஆதூரமாய் சொல்கிறார். கேட்காத கருவி இப்போது பேட்டரி மாற்றியதும் இயங்குவதாயும் பாடங்களைக் கேட்க முடிவதாயும் அவளின் மகள் சொல்கையில் மகிழும் கரீம் உண்மையில் அக்கருவி இயங்காதிருப்பதையும் உடனே தெரிந்து கொள்கிறார். இந்தக் காட்சியில் ஏற்படும் உணர்வினுக்குப் பெயர்தான் நெகிழ்வாய் இருக்க முடியும்.

வாழ்விலிருந்து திரையையும் திரையிலிருந்து வாழ்வையும் இணைக்கும் பாலமாக மஜித் மஜிதி தொடர்ந்து இயங்குகிறார். அவரின் திரை வாழ்வில் இக்குருவிகளின் பாடல் மிக முக்கியமானது.

Monday, February 1, 2010

த்ராபை / மறுதலிக்கப்பட்ட சொற்குவியல்கள்

குளியலறையின் ஈரச் சுவற்றில்
எலுமிச்சை மர அடிக் கிளையில்
தக்காளிச் செடிக் குவியலின் வேர்களில்
பசும்நெடு புற்களில்
இன்னும் ஈரம் காய்ந்திடா
இடமெங்கிலும்
திசைக்கொன்றாய் பயணித்தபடி
எப்போதும் நிரம்பிடாத
தன் நீர்க்கூடுகளை
நிதானமாய்
சுமந்தலைகின்றன
அதிகாலை நத்தைகள்
உங்களால் எப்படி சாரா இப்படி மிருதுவாய் பேச முடிகிறது? உண்மையில் நீங்கள் அன்பின் வடிவம் சாரா! அன்பானவர்களுக்கு ஒரே மாதிரியான உருவம் வாய்ப்பது எத்தனை ஆச்சர்யம் பாருங்களேன்! பெரிய்ய கண்களும் சற்றுச் சரிந்த முலைகளும் இருக்கும் எல்லா பெண்களும் அன்பானவர்களாய்த்தான் இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. உங்களைப் பார்த்த கணத்திலே தீர்மானித்து விட்டேன் நீங்கள் என்னை அன்பு செய்வீர்களென ஆனால் இத்தனை அதிகமான அன்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை சாரா. என் மீது இத்தனை அன்பாய் இருக்காதீர்கள். என்னால் தாங்கிக் கொள்ள முடியாத சுமையாக உங்களின் அக்கறைகளும் நேசங்களும் என்னை ஆக்ரமிக்கின்றன சாரா. இப்பொழுதுதான் என்றில்லாமல் எப்பொழுதிலும் உங்கள் நினைவாகவே இருக்கிறது சாரா. சென்ற வாரத்தில் ஒரு நாள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தீர்கள் இல்லயா அந்தப் புன்னகை பகல் முழுக்க இரவு முழுக்க என் நினைவுகளில் நிமிடத்திற்கொரு முறை வந்து வந்து போய்க்கொண்டிருந்தது சாரா. இனிமேல் அப்படிப் புன்னகைக்காதீர்கள் சாரா.

நேற்றய அதிகாலைக் கனவில் உங்கள் பூவுடலுடன் கலவிக் கொண்டிருந்தேன் உங்களுக்கு வலிக்குமே என மிக மிக மிருதுவாய் உங்களுடல் கலக்கையில் இந்த அலாரம் அலற ஆரம்பித்தது. என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை சாரா, சனியன் எப்போது கத்துவது என்கிற விவஸ்தை வேண்டாமா? விழிகளைத் திறக்காது கையால் துழாவியெடுத்து அந்தச் சனியனை தூக்கி எறிந்தேன். அது எதன் மீதோ மோதி சிதறிப் போனது. நான் மிக மென்மையானவன் தான் சாரா ஆனால் நம்மிருவருக்குமிடையில் இடைஞ்சல் வருவதை நான் விரும்பவில்லை தடைகள் இடைஞ்சல்கள் சிக்கல்கள் பிரச்சினைகள் என எந்த வகையிலும் உங்கள் நெற்றியை சுருங்க வைக்க விடமாட்டேன் சாரா. இந்த அலாரச் சனியனால் உங்களின் உடல் எவ்வளவு திடுக்கிட்டிருக்கும் அது கனவாகவே இருப்பினும் கூட என்னால் இந்த அதிர்ச்சியிலிருந்து விலக முடியவில்லை. மீண்டும் அக்கனவினுள் என்னால் புக முடியவில்லை. கனவில் நீங்கள் வெற்றுடலுடன் காத்திருப்பீர்களே எனப் பதறி பதறி கனவினுள் புக முயன்று தோற்றேன்.

என் நேற்றைய காலை நரகமாய் இருந்தது சாரா அதனால்தான் வெளியில் எங்கும் போகாமல் அறைக்கதவை இறுக்கமாய் சாத்திக் கொண்டு உள்ளேயே இருந்துவிட்டேன். நேற்றைய பகல் கதவை யாரும் தட்டியிருக்கவில்லை. பால்கனிக்கு ஒரே ஒரு புறா மட்டும் வந்தமர்ந்து போனது. அறை முழுக்க உங்களின் அன்பைத்தான் நிரப்பி வைத்திருந்தேன் சாரா. நேற்றுப் பகல் முழுதும் உங்கள் அன்பில்தான் திளைத்திருந்தேன் உங்களின் நினைவு மிக மகிழ்வாய் இருக்கிறது சாரா. நீங்கள் ஏன் சாரா இத்தனை அழகாய் பிறந்து தொலைத்தீர்கள். ஐ லவ் யூ சாரா உங்களின் பேரன்பில் பேரழகில் நான் நீந்திக் களிக்கிறேன். ஐ லவ் யூ சாரா.

நன்றிப் பெருக்கில் என் இதயம் ததும்பி வழிகிறது சாரா. எனக்கு இங்கு கிடைத்திருப்பவை எல்லாமே மிகுதிதான். உலகத்தின் எல்லா சிறந்தவற்றையும் நான் அனுபவித்து விட்டேன் சாரா. உங்கள் முலைகளின் மீது எனக்கு பைத்தியம் சாரா. கனவில் நினைவில் பிறழ்வில் இயல்பில் மாறாத ஒன்று உங்களின் முலைத் தழுவித் தூங்கிப் போதல் மட்டுமே. இன்றைய பிற்பகலில் உங்கள் முலைத் தழுவிக் கிடந்தது கனவா நிஜமா எனத் தெரியவில்லை. கனவிற்கும் நிஜத்திற்குமான வேறுபாடுகளில் நான் வெளிறிப் போவதில்லை சாரா. கனவு நிஜமாகவும் நிஜம் கனவாகவும் ஏன் இருக்கக் கூடாது. நிகழ் – நிழல், நிழல் - நிகழ் என எந்த வித்தியாசங்களுமில்லை சாரா, நீங்கள் மட்டும்தான் எல்லாவற்றிலும் நிரம்பி வழிகிறீர்கள் அதில் நான் திளைக்கிறேன். உச்ச கட்ட நெகிழ்வில் நான் இளகி நதியாகிறேன் சாரா. உங்களை ஏந்தி பயணிப்பேன்.
0

ஒரு பின் மதிய மேலோட்டப் புணர்வில் உடைந்த அவளுடைய இளஞ்சிவப்பு நிறக் கண்ணாடி வளையல் துண்டெடுத்து மார்பில் அப்போதுதான் முளைவிட ஆரம்பித்திருந்த மயிர்களுக்கு மத்தியில் என் மீது படுத்த வாக்கிலேயே மூன்று இடங்களில் லேசாய் கீறினாள். இரத்தம் துளிர்த்து வியர்வைக் கசகசப்புகளோடு எரிந்தது. சிவப்பு வண்ணம் பூசியிருந்த குளிர்ந்திருந்த சிமெண்ட் தரையில் என் மீது படுத்திருந்தவளை மல்லாத்தி அவள் விளையாட்டில் கிழிபட்டு லேசாய் கசிந்த இரத்தத் துளிகளை ஆட்காட்டி விரல் நுனியில் சேகரித்து ஏற்கனவே தளர்ந்திருந்த அவளது மேல் சட்டையை வலது பக்கமாய் முற்றும் விலக்கி என் பெயரினை எழுதினேன்.

0

எப்போதும் அறை நிறைக்கும் சூரியனை இன்று காணவில்லை. புரண்டு மணி பார்க்கையில் ஒன்பது மணியாகியிருந்தது. எழுந்து திரைச்சீலைகளை அகற்றுகையில் சத்தமில்லாத மழை சன்னலுக்கு வெளியே கோடுகளாய் இறங்கிக் கொண்டிருந்தது. விழித்தெழுந்த காலையில் முதலில் பார்க்கும் மென்மழை மிகுந்த உற்சாகத்தை தருவதாய் இருந்தது. ஒரு பெரிய வீட்டின் மேல் தளமிது. கிழக்கு பக்கம் வாசலும் மேற்கில் அகலமான பால்கனியும் இருப்பதால் குளிர் காலங்களில் சூரிய உதயத்தையும் வெயில் காலங்களில் சூரிய அஸ்தமனத்தையும் தேநீரோடு சாவகாசமாய் அமர்ந்து பார்க்க இந்த வீடு மிகவும் வசதியாய் இருந்தது. சற்றுத் தள்ளிக் கடல் இருப்பதால் இரவில் அலைகளின் சப்தத்தைக் கூட கேட்க இயலும். இதுபோன்ற ஒரு மழை நாளில்தான் வீணா இந்த வீட்டிற்கு வந்தாள். ஒழுங்கற்றவனின் வீடு மட்டும் எப்படி இத்தனை ஒழுங்காய் இருக்கிறது என சிரித்தபடியே கேட்டாள். பால்கனியில் சரிந்திருந்த புங்கை மரக் கிளையிலிருந்து மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. வீடு முழுக்க ஈரமும் மெல்லிதான இருளும் ஒலிப்பானில் கசிந்த கொண்டிருந்த மொஸார்டும் அவளை ஏதோ செய்திருக்க வேண்டும். இம்மாதிரி வீட்டில் வசிப்பதற்காக உன் மாதிரி ஜந்துக்களையும் சகித்துக் கொள்ளலாம் என்றாள். ஜந்துக்கள் என்ன செய்யும் என்பதை அவளுக்கு காண்பித்த நாளும் அதுதான்.

தன் நீளக் கூந்தலை பால்கனி மரத்திலிருந்து சொட்டும் மழை நீர் படும்படி விரித்து தரையில் படுத்திருந்தாள். கருப்பு நிறப் பின்னணியில் வெள்ளைப் பூக்கள் சிதறிய காட்டன் புடவை அணிந்து வந்திருந்தாள். அதன் முந்தானையை அகலமாய் தரையில் பரப்பி இடக்காலை சற்று மடித்து வலது காலை முழுதுமாய் நீட்டி அவள் படுத்திருந்தாள். மழை அவள் கூந்தலை நனைத்து என்னுள் இறங்க ஆரம்பித்திருந்தது.

நான் மொஸார்டை நிறுத்தினேன். இசைத்து வெகுநாள் ஆகியிருந்த பியானோவை உயிர்பித்தேன் அவள் படுத்திருந்த இடத்திலிருந்து ஆங்கில எழுத்து T வாக்கில் நான் அமர்ந்து இசைக்கத் துவங்கினேன். பயிற்சிக்காய் வாசித்துப் பழகிய குறிப்புகளை இசைக்கத் துவங்கியதும் அவள் கண்களை மூடிக் கொண்டாள். மழை அதே மென்மையோடு தொடர்ந்து கொண்டிருந்தது. நான் என் வானிலே வை வாசிக்கத் துவங்கியதும் அவள் எழுந்து கொண்டாள் அந்தப் பாடலை நான் வாசித்து முடிக்கும் வரை அசையாது அமர்ந்திருந்தாள். பின்பு எழுந்து வந்து பியானோ மரச்சட்டங்களில் வலது கை முட்டி யூன்றியபடி என் கண்களை ஆழமாய் பார்க்கத் துவங்கினாள்.

0

சொந்த ஊரில் வசிக்க நேர்ந்தால் என்னால் ஒரு வரி கூட எழுத முடியாதெனத்தான் தோன்றுகிறது எழுத வேண்டிய அவசியமும் நேர்வதில்லை. நேரப் போதாமின்மை என்பதை விட எல்லாவற்றையும் எழுத்துக்களாக்கிப் பார்க்கும், தன்னுலகத்தைப் பிரதானப்படுத்தி பொதுவில் வைக்கும் அல்லது எழுத்தின் மூலமாக அக அரிப்பை, விளம்பர நமைச்சலைத் தீர்த்துக் கொள்ளும் மனநிலை சொந்த நில வாழ்வில் இல்லாதிருப்பதும் எழுத்தை உற்பத்திச் செய்யாதிருப்பதிற்கான காரணங்களாக இருக்கலாம். மேலும் எழுத்தை செய்பவர்களுடனான சகவாசமும் இல்லாதிருப்பதால் நமைச்சல்கள் சற்றுக் குறைவுதான். எனக்குத் தெரிந்த எழுத்தாளர் நண்பர்கள் பலர் எழுதுவதை நிறுத்தி விட்டிருக்கிறார்கள், அல்லது பல வருடங்களாய் ஒன்றுமே எழுதுவதில்லை. அவர்களின் இந்த நிலைப்பாட்டின் மீது எனக்கு வாஞ்சை இருக்கிறது. எவரிடமும் நீங்கள் ஏன் எழுதுவதில்லை என்ற கேள்வியை கேட்க விரும்புவதில்லை. மேலும் முன்பொரு காலத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் சமீபத்திய எழுத்துக்களையெல்லாம் கவனமாகத் தவிர்த்து விடுகிறேன். என்றைன்றைக்குமானவைகள் சிலரால் மட்டுமே சாத்தியமாகின்றன. அல்லது அப்படி எதுவும் இல்லாதிருக்கவும் கூடும்.

எழுதுவது என்பதிலிருந்து செய்வதினுக்கு நகர்வது மனிதனின் அற்பத் தனங்களில் ஒன்றுதான். இதெல்லாம் எழுதப்பட்டது இதெல்லாம் செய்யப்பட்டது என திட்டவட்டமாய் எதையும் சொல்லிவிடமுடியாதுதான் என்றாலும் அவரவருக்கு போலித்தனமாய் தோன்றும் எழுத்துக்கள் அந்தந்த வாசகனின் துயரமாகத்தான் இருக்கிறது. தான் இயங்கும் தளத்தின் விரிவையும் ஆழத்தையும் உணர்பவனால் மட்டுமே ஓரளவிற்கு நேர்மையானவற்றை நிகழ்த்திக் காட்ட முடியும் பூனையின் கண் கொண்டு இப்பரப்பில் பிதுங்கி வழிபவர்களால் உண்டாவது வாசகனின் வெளியேற்றம் மட்டுமே.

0

நீர் சேகரித்த
நத்தைக் கூடுகள்
கானகத்தில் வழி தவறிய
சிறுவனின் தாகம் தணிக்கலாம்
பாதாளச் சிறையிலடைக்கப்பட்ட
இளவரசியை உயிர்த்திருக்க வைக்கலாம்
நண்பகல் வரை கத்திக்கொண்டிருந்த
தவிட்டு வால் குருவியின் தொண்டையை
இதப்படுத்தலாம்.
தேனுண்ணும் வண்ணத்துப் பூச்சியினுக்கோ
கவிதை எழுதும் எனக்கோ
தாகம் குறித்துச் சொல்ல
எதுவுமில்லை
ஒருவேளை
மென் சிறு புன்னகையை
எப்போதும் தேக்கி வைத்திருக்கும்
அவளின் ஈர உதடுகளுக்குத்
தெரிந்திருக்கலாம்

Featured Post

test

 test