Monday, April 30, 2018

Wild Wild Country - 2 விஷக்கன்னி


இந்த ஆவணப்படம் குறித்தான  முதல் பதிவிற்கு வந்த எதிர்வினைகள், என் ஒரு பக்க சாய்வைக் குறித்து கேள்வி எழுப்பின. ஒருவேளை ஷீலா தந்த வியப்பில்  மிகையாக எழுதுகிறேனோ என எனக்கே சந்தேகம் தோன்றியதால் நான்கைந்து நாட்கள் இதை எழுதுவதை தள்ளிப்போட்டேன். இப்போது மனம் சமநிலைக்கு வந்திருப்பதாகவே உணர்கிறேன்.

எல்லாத் தரப்புகளையும் இந்தத் தொடர் உள்வாங்கியிருப்பதுதான் இதன் தனிச் சிறப்பு. முடிந்தவரை உண்மைகளைச் சொல்ல மெனக்கெட்டிருக்கிறார்கள்.  ஷீலாவின் இடத்தைப் பறித்துக் கொண்ட Ma Prem Hasya (Francoise Ruddy) மரணமடைந்து விட்டதால் அவரின் தரப்பு மட்டும் இதில் பதிவாகவில்லை. ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் எதனால் ரஜனீஷ் அவ்வளவு மோசமாக ஷீலாவை வெறுத்தார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் துல்லியமாக  நமக்குக் கிடைத்திருக்கும்.

ஷீலா தன் பதினாறாவது வயதில் ரஜனீஷை மும்பையில் வைத்துச் சந்திக்கிறார். குஜராத் படேல் சமூகத்தைச் சேர்ந்த ஷீலாவிற்கு ரஜனீஷை அவரின் தந்தை இரண்டாம் புத்தா என்கிற அடைமொழியோடு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அந்த சந்திப்பை ஷீலா அவ்வளவு பரவசத்தோடு நினைவு கூர்கிறார். அவரின் கண்களைப் பார்த்த நொடியில் தான் முழுமையடைந்ததாகவும் அந்த கணத்தில் இறந்துபோகவும் தயாராக இருந்ததாகவும் சொல்கிறார்.  பின்னணியில் காண்பிக்கப்படும் புகைப்படங்களும் அவ்வளவு உண்மையாக இருக்கின்றன.

பதினேழாவது வயதில் ஷீலாவை அவரது பெற்றோர் உயர்கல்வி பயில நியூஜெர்ஸிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஷீலா அங்கே மார்க்கை சந்திக்கிறார். My first love, the beautiful man என மார்க் குறித்து விழிகள் விரியப் பேசுகிறார். உயர் சமூக இளைஞர்களின் ஹிப்பிக் கொண்டாட்ட வாழ்வாக இவர்களின் காதல் இருந்ததைப்  புகைப்படங்கள் வழியாய் புரிந்து கொள்ள முடிகிறது. மார்க்கிற்கும் ரஜனீஷைப் பிடித்துப் போகவே இருவரும் பூனே ஆசிரமத்திற்கு வந்து சேர்கின்றனர். சில வருடங்களில் மார்க் கேன்சரில் இறந்து போக, ஷீலா பூனா ஆசிரமத்திற்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்.

ஷீலா தன்னை ஒரு மார்க்கெட்டிங் ஆளாகத்தான் முன் நிறுத்திக் கொள்கிறார். தியானம் செய்வதில் அவருக்கு ஆர்வமில்லை. தியானத்தை ஒரு பொருளாக,  பணத்தைக் கொண்டு வரும் பொருளாக மட்டுமே பார்க்கிறார்.

இந்தியாவில் 70 களின் இறுதியில் ரஜனீஷ் பரவலாக சென்றடைகிறார்.  அதே நேரம் அவருக்கு கணிசமான எதிரிகளும் உருவாகின்றனர். ஒரு முறை அவரின் மீது கத்தி வீசப்படுகிறது. அரசியல்வாதிகளையும் தன்னுடைய கிண்டல்களால் முறைத்துக் கொள்ளவே கம்யூனில் ஒரு வித சமனில்லாத நிலை நிலவுகிறது. மேலும்  ஏராளமான பணமும் குவிகிறது.

ஷீலா அமெரிக்காவிற்கு சென்று விடும் யோசனையைச் சொல்கிறார். ரஜனீஷ் உடனே அதை அங்கீகரிக்கிறார். ஒரேகன் மாநிலத்தின் ஆண்டலோப் பகுதியில் 65000 ஏக்கர் நிலத்தை ஷீலா வாங்குகிறார். எதற்குமே பயனில்லாத இடம். கரடுமுரடான மலைக் குன்றுகளையும் பாறைகளையும் கொண்ட  முரட்டு நிலம். ஷீலா அந்த நிலத்தைப் பண்படுத்துகிறார். சொற்ப வருடத்தில் அந்தப் பிரதேசத்தையே நவீன நகரமாக மாற்றிக் காட்டுகிறார். இந்தப் பகுதிகளின் வீடியோ ஃபுட்டேஜ் களைப் பார்க்க பார்க்க ஆச்சரியம் மேலெழுகிறது. 80 களில் இருக்கும் கட்டுமாண வசதிகள், உபகரணங்களைக் கொண்டு அதிவேகமாக ஒரு நகரத்தை உருவாக்க முடியும் என்பதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனால் ஷீலா அதை நடத்திக் காண்பிக்கிறார்.

அதி நவீன தியான அரங்கங்கள், தனித்தனிக் குடியிருப்புகள், டைனிங் ஹால்கள்,  நீச்சல் குளங்கள் என பிரம்மிக்க வைக்கும்படியாய் ஒரு நகரம் தயாராகிறது. மேலும் விவசாய நிலங்களை உருவாக்கி அதில் கம்யூனிற்குத் தேவையான காய்கறிகளையும் பயிரிட்டுக் கொள்ளும்படியான வசதிகளையும் ஏற்படுத்துகிறார்கள்.

ரஜனீஷ் ஏர்வேஸ் என்கிற பெயரில் கம்யூனில் ஒரு விமான தளமே உருவாகிறது. நான்கைந்து விமானங்கள் நிற்கின்றன. வரிசையாக ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், குவியும் மக்கள் கூட்டம் என மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமான  ரஜனீஷ்புரம் உருவாகிறது. நீளமான சிவப்பு அங்கி மற்றும்  ஓஷோ உருவம் பதித்த டாலைரைக் கொண்ட மணியை அணிந்த ஆயிரக்கணக்கான சந்நியாசிகள் ரஜனீஷ் புரத்தை நிறைக்கிறார்கள். இந்தக் கட்டுக் கோப்பான அமைப்பின் பின்னால் ஷீலா இருக்கிறார். கம்யூனின் ஒவ்வொரு அசைவும் ஷீலாவிற்கு தெரிகிறது. ரஜனீஷின் தனியறை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் ரகசிய ஒலிக்கருவிகள் பதிக்கப்பட்டு எல்லாப் பேச்சுக்களும் பதிவு செய்யப்படுகின்றது. கொஞ்சம் நாடகத்தனமாக சொல்லப்போனால் அங்கு ஷீலாவிற்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையமுடியாது.

ஷீலா தினமும் மாலையில் ரஜனீஷை சந்திப்பார். அப்போது ரஜனீஷ் மெளனத்திலிருந்தார். அவர் சந்திக்கும் ஒரே நபர் ஷீலா மட்டும்தான்.  ஷீலா எல்லா விஷயங்களையும்  ரஜனீஷிடம் பகிர்ந்து கொள்வார் மேலும் அவரின் விருப்பத்தையும் கம்யூனின் அடுத்த கட்ட நகர்வையும்  ரஜனீஷ் சொல்லியதாக சந்நியாசிகளிடம் அல்லது முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களிடம் ஷீலா சொல்வார்.  இந்த ஒரு வழிப் பாதையில் நான்கு வருடங்கள் யாரும் குறுக்கிடவில்லை.

கம்யூனிற்குப் பிரச்சினைகள் எப்படி உருவாகின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.

1. 50 குடும்பங்கள் வசிக்கும் ஆண்டலோப் பகுதி முழுக்கவே வெள்ளையர்கள் வசித்து வந்தனர். இயல்பாகவே அவர்களிடம் நிற உணர்வும் கடவுள் பக்தியும் மிகுந்திருந்தது.  திடீரென உருவான ரஜனீஷ்புரத்தின் பிரம்மாண்டமும் அங்கு குவியும் ஆட்களும் அங்கிருந்து வரும் சப்தங்களும் அவர்களின் இயல்பைக் குலைத்தது.
மெல்ல  ரஜனீஷ் புரத்தின் மீது மிகுந்த வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு நாள் ரஜனீஷ்புரக் குடியிருப்பில் வெடிகுண்டு ஒன்று வெடிக்கிறது.

2. இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது நிறவெறி பிடித்த உள்ளூர்காரர்கள்தாம் என ஷீலா நினைக்கிறார். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே கம்யூனின் பாதுகாப்பிற்கான ஒரே வழி என ஷீலா நம்புகிறார் எனவே ரஜனீஷ்புரத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலிலும் ஈடுபாடு காண்பிக்க ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவரான   கிருஷ்ண தேவா ஆண்டலோப்பின் மேயராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அமெரிக்காவின் ஜனநாயக சட்டங்கள் ஷீலாவிற்கு தன் எல்லைகளை விரிவாக்க உதவியாக இருக்கின்றன. மேலும்  எங்கெல்லாம் வழிகளை உருவாக்க முடியுமோ அங்கெல்லாம் ஷீலாவால் ராஜபாதையையே போட்டுக் கொள்ளும் ஆற்றல் இருந்தது.

3.அடுத்ததாக 1984 ஆம் ஆண்டின் வாஸ்கோ கவுண்டி தேர்தலில் வெற்றிபெற ஷீலா தேர்ந்தெடுத்த வழிதான் அவரே சொல்வதுபோல எவராலும் கற்பனை கூட செய்து பார்த்திராத ஒன்று. நாடெங்கிலும் உள்ள ஆயிரம் வீடற்ற மனிதர்களை/ நோயாளிகளை அழைத்து வந்து கம்யூனில் தங்க இடமும் உணவும் கொடுக்கிறார். நோயுற்றவர்களுக்கு மருத்துவ வசதிகளையும் செய்து தருகிறார். அவர்களுக்கு கம்யூனில் வேலையும் தரப்படுகிறது. அரசாங்கத்தாலும் சக மனிதர்களாலும் கைவிடப்பட்டவர்கள் ஷீலாவின் மூலம் மீண்டும் ஒரு அடையாளத்தையும் புது வாழ்வையும் பெறுகிறார்கள். ஆனால் ஷீலாவின் உண்மையான நோக்கம், நடைபெற இருக்கும் தேர்தலில் ஆயிரம் பேரையும் தமக்கு ஆதரவாக  வாக்களிக்கச் செய்வதுதான். ஆயிரம்பேரும் பதிவுசெய்து கொள்ளப் போகும் நாளில் அதை எதிர்பார்க்காத ஒரேகன் மாநில அரசு, தேர்தலுக்கு முன்னரான வாக்காளர் பதிவை ரத்து செய்கிறது. தம் திட்டத்தில் தோல்வி அடையும் ஷீலா கணிசமான நபர்களை - தொந்தரவு செய்யும் நபர்களை என ஷீலா குறிப்பிடுகிறார் - வெளியேற்றுகிறார். அதில் ஒரு நபரால் கழுத்து நெறிக்கப்பட்டு சாகும் நிலையை அடைந்து தப்பிக்கிறார்.

4. தன் திட்டங்கள் முறியடிக்கப்பட்டாலும் மனம் தளராத ஷீலா  சந்நியாசிகளைப் பயன்படுத்தி பல்வேறு உணவகங்களின் உணவுகளில் விஷத்தைக் கலந்ததாகச் சொல்கின்றனர். இதனால் வாஸ்கோ கவுண்டியைச் சேர்ந்த 750 நபர்கள் ஒரே நேரத்தில் வயிற்று உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.  ஆனால் ஷீலா இதை மறுக்கிறார். பிற்பாடு இந்தக் குற்றம் ஷீலாவின் மீது சுமத்தப் பட்டாலும் நிரூபிக்கப்படவில்லை. மேலும் நகரத்திற்கு தண்ணீர் வரும் நீர்த்தொட்டியில் எலியின் துணுக்குகளை ஷீலாக்குழுவினர் கலந்ததால்தான் 750 பேர் பாதிக்கப்பட்டனர் என்றொரு கதையையும் உள்ளூர் வாசிகள் சொல்கின்றனர். ஆனால் இரண்டிற்குமே ஆதாரம் இல்லை.

5. இந்தக் காலகட்டத்தில் ரஜனீஷின் புகழ் ஹாலிவுட் வரை பரவுகிறது. நிறைய புதுப் பணக்காரர்கள் உள்ளே வருகின்றனர். குறிப்பாக காட்பாதர் திரைப்படத் தயாரிப்பாளரின் முன்னாள் மனைவி Francoise Ruddy ரஜனீஷிடம் நெருக்கமாகிறார். அவரின் புதுக் கணவர் ரஜனீஷின் மருத்துவராகிறார். ஷீலாவிற்கு இந்த நபர்களின் நெருக்கம் பிடிக்காமல் போகிறது.  குறிப்பாக ரஜனீஷின் மீது கொண்டிருக்கும் தனக்கு மட்டுமேயான தன்மைதான் அவரைக் கொலை வரைக்கும் இட்டுச் செல்கிறது.

6. ரஜனீஷின் மருத்துவரான ஜார்ஜை கொலை செய்ய திட்டம் தீட்டிய குற்றம் ஷீலா மீது சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டது. ரஜனீஷை மரணத்திலிருந்து காக்கவே  மருத்துவரைக் கொலை செய்ய முயன்றதாக ஷீலா தன்னுடைய தரப்பாக கூறுகிறார்.  ரஜனீஷ் மருத்துவரிடம் வலிக்காமல் சாகும் முறையை கேட்டு அறிந்துகொண்டதை ஷீலா இரகசிய பதிவுக் கருவிகளின் மூலம் கேட்டதாகவும். மோர்பினைப் பயன்படுத்த மருத்துவர் பரிந்துரைத்ததை கேட்டு பதட்டமடைந்ததாகவும் கூறுகிறார். இந்தக் குழுவினர் அவரை மயக்க மருந்துகளிலேயே வைத்திருந்தனர் எனவும் ஷீலா குற்றம் சாட்டுகிறார். தனக்கு நெருக்கமான சந்நியாசிகளில் ஒருவளான ஸ்டோர்க் மூலம் விஷ மருந்து கொண்ட ஊசியை மருத்துவர் மீது செலுத்தி இருக்கிறார். ஆனால் மருத்துவர் தப்பித்துக் கொண்டார்.

7. ’பொசஸிவ் ’ குணம்தான் ஷீலா வீழ்ச்சியடைய முக்கியக் காரணமாக இருந்தது. ஷீலாவிற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் ஸ்டோர்க்கிற்கே ஒரு முறை விஷம் வைத்திருக்கிறார் என்பதுதான் மிகவும் அதிர்ச்சியான செய்தி. ஒருமுறை  ரஜனீஷ், தான் வந்த காரின் பானட் மீதிருந்த ரோஜாப் பூக்கள் முழுவதையும் அங்கு நின்று கொண்டிருந்த ஸ்டோர்க்கை எடுத்துக் கொள்ளுமாறு  சொல்லியிருக்கிறார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஷீலா அடுத்த நாள் ஸ்டோர்க்கின் காபியில் விஷத்தைக் கலந்திருக்கிறார்.தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஹாலிவுட் குழாமினரின் செல்வாக்கு கம்யூனில் அதிகரிக்கிறது. ஒருகட்டத்தில் ஷீலாவால் ரஜனீஷைப் பார்க்கக் கூட முடியாமல் போகிறது. தான் பாடுபட்டு உருவாக்கியவை எல்லாம் நொறுங்குவதைப் பார்க்க முடியாமல் ஷீலா தனக்கு நெருக்கமான 25 பேருடன் ஜெர்மனிக்குப் போய்விடுகிறார்.

இதுவரைக்குமே கம்யூன் மீது சுமத்த ஒரு குற்றமும் அரசிற்கோ, கம்யூன் மீது அதிருப்தியில் இருந்த மக்களுக்கோ கிடைக்கவில்லை. ஆனால் நான்கரை வருடங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ரஜனீஷ் முதன் முறையாய் பேச ஆரம்பிக்கிறார்.
ஷீலாவின் மீது அடுக்கடுக்காய் குற்றங்களை சுமத்துகிறார். ஐம்பதைந்து மில்லியன் பணத்தை எடுத்துக் கொண்டு ஷீலா ஓடிவிட்டதாக சொல்கிறார். தன் தனிப்பட்ட மருத்துவரைக் கொல்லப் பார்த்ததாகவும், ரஜனீஷ்புர வளர்ச்சிக்குத் தடையாக இருந்த அட்டர்னி டர்னரைக் கொல்ல முயற்சித்தார் எனவும் இதெல்லாம் தனக்குத் தெரியாமல் நடந்தது எனவுமாய் சொல்கிறார்.

மீடியாக்களும், அரசும், FBI ம் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மதத்திற்கும் உள்ளூர் அரசியலுக்கும் எதிர்ப்பாய் முளைத்த இராட்சத மரத்தை வேரோடு பிடுங்கி எறிய தங்களின் அனைத்து சக்திகளையும் அவர்கள் முடுக்கி விடுகிறார்கள்.

ரஜனீஷ் அவர்களாகப் பிடுங்கிப் போடுவதற்கு முன்பு தாமாகவே உருவான எல்லாவற்றையும் அழிக்கிறார்.

“ என்னுடைய சாராம்சமே மதங்களுக்கு எதிரானதுதான், நானே ஒரு மத அடையாளமாக மாறுவேனா? சுத்த நான்சென்ஸ் எல்லாமே ஷீலாவின் விளையாட்டு”  என அவர் ஷீலா கட்டி வைத்த கோட்டையை உடைக்கிறார். ரஜனீஷ் இசம் புத்தகங்களைக் கொளுத்துகிறார்கள். அதென்ன சிவப்பு ஆடை என்கிற அடையாளம்? அதையும் அழி என உடைகளைக் கொளுத்துகிறார்கள்.

ஒரு நெடிய தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதைப் போல ரஜனீஷ் நடந்து கொள்கிறார்.  ஷீலாவின் நம்பிக்கையாளர்களை அதிரடியாக மாற்றுகிறார். ஹசியா வின் குழாம் அதிகார வட்டங்களுக்கு உள்ளே வருகிறது. மேயரான கிருஷ்ணாவை மாற்றுகிறார்கள். எல்லாக் கட்டுக் கோப்பும் குலைகிறது.

ஷீலா மீது கம்ப்ளைண்ட் ரெஜிஸ்டர் செய்யவே  FBI உள்ளே நுழைகிறது. வயர் டேப்பிங் என்கிற ரகசிய ஒலிப்பதிவு அமரிக்காவில் குற்றமாகக் கருதப்படும். அதற்கான ஆதாரத்தை FBI  கைப்பற்றுகிறது.  ஏராளமான ஆயுதங்களையும்  கைப்பற்றுகிறார்கள். மூன்றாவதுதான் மிகப் பெரிய குற்றம். குடியேற்ற உரிமை மோசடி. இதில் ரஜனீஷின் பெயரையும் சேர்க்கிறார்கள்.

மேயர் கிருஷ்ணா அப்ரூவராக மாறுவதால் FBI ன் வேலை இன்னும் எளிதாகிறது. ஷீலாவிற்கும் ரஜனீஷிற்கும் வாரண்ட் கிடைக்கிறது. உடனே கைது செய்யும் உத்தரவையும் நீதிமன்றம் இடுகிறது.

ரஜனீஷைக் கைது செய்த நாடகம்தான் அமெரிக்கா ஆடிய மிகப் பெரிய ஆட்டம். மொத்த மீடியாவும் ரஜனீஷ் கைது நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்தது. போலிஸ் கம்யூன் உள்ளே நுழைய பயப்படுவது போல் நடித்தது. உள்ளே அனைவரும் ஆயுதங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தாக்குதல் நிகழலாம் என கதைகளை கட்டிவிடுகிறார்கள். கம்யூனிற்கு பின்னால் இருக்கும் காடுகள் வழியாய் போலிஸ்காரர்கள் பதுங்கிப் பதுங்கி உள்ளே நுழைய முயற்சிப்பது போல் காண்பிக்கிறார்கள். ஆனால் எதுவும் நிகழ்வதில்லை.

இந்த அபத்த நாடகத்தின் உச்சம்தான் இன்னும் அபத்தம். ரஜனீஷ் தன் விமானத்தின் மூலம் கம்யூனை விட்டு வெளியேறுகிறார். தப்பிக்க முனைகிறார். FBI  சிரித்துக் கொள்கிறது. வான்வழிப் படைக்கு உத்தரவுகள் பறக்கின்றன. அங்கு அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது. விமானம் தரையிறக்கப்பட்டு ரஜனீஷ்  கைது செய்யப்படுகிறார்.

- மேலும்

Wednesday, April 25, 2018

Wild Wild Country - மா ஆனந்த் ஷீலாஓஷோவின் அமெரிக்க வாழ்வைக் குறித்து வெளியாகி பெரும் அதிர்வுகளைக் கிளப்பியுள்ள வைல்ட் வைல்ட் கண்ட்ரி ஆவணப்படத்தில் மா ஆனந்த் ஷீலா கேமிராவைப் பார்த்து இப்படிச் சொல்வதோடு ஆறாவது  பகுதி நிறைவடைகிறது.

“ அவ்வளவுதானா எல்லாம் முடிந்ததா? இந்தப் பேச்சு முடியவே முடியாதென நினைத்தேன். இது மதுவிற்கான நேரம். வாருங்கள் நாம் மதுவருந்துவோம்” 

கனத்த இதயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த எனக்குமே கூட அப்படி ஒரு எண்ணம்தான் தோன்றியது. ஆனால் அதிகாலை எழ வேண்டியிருப்பதை நினைத்துக் கொண்டே, கனத்த இதயத்தைப் போர்த்திவிட்டுப் படுத்தேன்.

மா ஆனந்த் ஷீலா - நிச்சயம் இந்தப் பெயர் எனக்குப் புதிது கிடையாது. இருபதுகளிலேயே அறிந்து கொண்ட பெயர்.  ஓஷோவின் பேச்சுக்களின் வழியாய் ஷீலாவை அறிந்திருந்தேன்.  ஷீலா அமெரிக்காவில் ஓஷோவின் சரிவுகளுக்கு காரணமாய் இருந்தவர். ஓஷோ ஆசிரமத்தை மிகத் தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டவர் என்பதுதான் இதுநாள் வரைக்குமான ஷீலா பற்றிய என் அறிதல். ஆனால் இந்த ஆவணப்படம் அதை மாற்றியிருக்கிறது. 

ஷீலா நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று. தவறான ஆட்களின் தூண்டுதலால் ஷீலாவின் மீது வெஞ்சினம் கொண்ட ரஜனீஷ், ஷீலாவிற்கு குழி தோண்டுவதாய் நினைத்துக் கொண்டு தானும் விழுந்தார். அதேக் குழியில் அவரை நாடி வந்தவர்களையும் விழ வைத்தார். ஆனால் ஷீலா என்கிற அற்புதம் மட்டும் தன் குருவின் மீதான தீராக் காதலுடன் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 

தான் நினைத்ததை செயல்படுத்த ஷீலா கையாண்ட விதங்கள் வேண்டுமானால் சட்டத்திற்கு புறம்பாக இருக்கலாம் (  இந்தச் சட்டங்கள் என்பவையே யாரோ ஒரு சாரருக்கு சாதகமானவைதானே) ஆனால் ஷீலாவின் செயல்பாடுகளுக்குப் பின் இருந்த நோக்கங்கள் ரஜனீஷ் மீதிருந்த காதலால் அன்பால் பக்தியால் உருவானவை. அதில் என்ன பிரச்சினை இருக்க முடியும். ஷீலாவை இத்தனை வருடங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந்தமைக்காக இந்த ஆவணப்படத்தை பார்த்து முடித்து விட்டு வருந்தினேன்.

0

என்னுடைய சகோதரன் வழியாய் ஓஷோ எனக்கு அறிமுகமானார். புத்தகங்கள் பேச்சுக்கள் வழியாய் மெது மெதுவாய்  ஈர்க்கப்பட்டு பின்னர் ஒரு மீட்சிக்கு வேண்டி ஓஷோவின் சந்நியாசியாகவும் மாறினேன். என்னுடைய  இருபத்தோராவது வயதில் திருச்சி ஆசிரமத்தில் ஸ்வாமி ப்ரேம் அய்கா என்கிற சந்நியாசப் பெயர் எனக்கு கிடைத்தது. தியானங்கள், ஓஷோ நண்பர்களுடனான பயணங்களென முழுக்கப் பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. ஓஷோவின் பேச்சுக்களில் ’தனித்துவம்’ ’சுதந்திரம்’ ’கற்பனை’ என்கிற மூன்று விஷயங்கள் என்னைப் பெரிதும் பாதித்தன.  இருபதுகளில் உள்ள ஒரு சிறுநகரத்து இளைஞனுக்கு பெரிதாய் என்ன துக்கங்கள் இருந்துவிட முடியும்? ஓஷோவின் தியானங்களும் நடனங்களும் அதைக் கரைத்தன. நான் தன்னம்பிக்கையும் ஆற்றலும் கொண்டவனாய் மாறவும் உதவின. இதோ இதையெல்லாம் இப்படி எழுத விதையாகவும் அந்த அறிதல்கள் இருந்திருக்கக் கூடும்.

இந்தப் பின்புலத்தால் ’வைல்ட் வைல்ட் கண்ட்ரி’ என்கிற ஆவணப்படத்தோடு என்னால் முழுவதுமாக கரைந்து போக முடிந்தது.  இதன் ஆறு பகுதிகளையும் பார்க்கும் நாட்களில் ஆச்சர்யம்  அதிர்ச்சி வியப்பு என மாறி மாறி  உணர்வுகளால் அலைக்கழிக்கப் பட்டேன்.

 ஷீலாவின் முதல் பேச்சிலிருந்து கடைசிப் பேச்சு வரைக்குமான ஒவ்வொரு சொல்லும் என்னை அசர வைத்தது. என்ன ஒரு ஆளுமை . என்ன மாதிரிப் பெண் இவள்! எவ்வளவு புத்திக் கூர்மை!, எவ்வளவு ஆற்றல்! என மாய்ந்து போனேன். உண்மையில் ஹாலிவுட் ஆட்களை ஓஷோ தொலைவில் வைத்திருந்தால், ஷீலாவை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் இன்றைய அமரிக்காவில் பாதியை ரஜனீஷ்- இசம் கைப்பற்றி இருக்கும். கிறிஸ்துவ மதம் பெரும்பான்மையானதாக மாறி இருக்காது. அமெரிக்க வரலாறே திருத்தி எழுதப்பட்டிருக்கும். 

தன் இரும்புக் கரங்களால் உலகையே வேட்டையாடிக் கொண்டிருக்கும்  அமெரிக்கப் பெரியண்ணன்கள் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட்டிருப்பார்கள். ரஜனீஷ்-இசம் ஒரு மதமாக மாறி மக்களை கொண்டாட்டத்தில் திளைக்க வைத்திருக்கும். இன்றைய முழு மூட அமெரிக்க சமூகம் உருவாகியே இருக்காது. உலகமே அமைதியாக இருந்திருக்கும். ஓஷோவின் முட்டாள்தனத்தால் எல்லாம் பாழானது.

எப்படி? 

எழுதுகிறேன்.

Monday, April 2, 2018

ஓரிதழ்ப்பூ மேலும் சில விமர்சனங்கள்

ஓரிதழ்ப்பூ - ராம்கி


ஓரிதழ்ப்பூ- அய்யனார் விஸ்வநாத் 
------------------------------------------------------
அய்யனாரை நான் முதலில் சந்தித்தது ஜெயமோகன் தங்கியிருந்த விடுதியில். அங்குதான் முதலில் கேட்டேன் இந்தத் தலைப்பை.
...
வெயில் கொளுத்தும் களம். மற்ற உணர்வுகளுக்கு இடம் இருக்குமா? இந்த உலகமும் மனிதனும் உருவான காலத்திலேர்ந்தே ஆணும் பெண்ணும் உறவாடிய சிக்கல்களும் தோன்றியிருக்க வேண்டும். மனதின் அடித்தளத்தில் உருவாகும் அர்த்தமற்ற அல்லது அர்த்தமுள்ள நிஜமான உணர்வுகளுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் தத்தளிக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. 

அது ஒரு மலைகளால் சூழப்பட்ட வெயில் நகரம். தன்னுடைய எண்ண சூழல்களை வைத்து பிடித்தும் பிடிக்காமலும்  போகும் இடங்கள். சங்கமேஸ்வரன் மலர்விழியின் ஆசைக்கு அவளைக் காவுக் கொடுத்துவிட்டு மான் முகத்தோடு, சிறு வயது முதல் மானைப் பற்றிய கனவுகளோடு வளர்ந்து, நரி முகத்தோடு வரும் ரவியைக் கைப்பிடிக்கும் அங்கையை வசீகரிக்கிறான். 

எப்போதும் குடியோடும் அமுதாக்காவின் நினைவுகளோடும் அங்கையை அண்ட முடியாமல் இருக்கும் ரவி.

பூவைத் தேடி அல்லது பூவின் அர்த்தத்தைத் தேடி , துர்காவில் முங்கி கண்டெடுத்த மாமுனி. 

துர்காவின் அரை புருஷன் சாமிநாதன். 

இவர்களிடயே நிகழும் பத்து பதினைந்து நாட்களின் சங்கமம். 

மலையை விட்டு மாமுனி  கடும் கோபத்தோடு இறங்குவதோடு தொடங்கி ரவி வீட்டைவிட்டு இலக்கில்லாமல்  வெளியேறும் வரை முன்னும் பின்னும் பயணிக்கும் அதே சமயத்தில் நகரத்தின் மொத்த சீதோஷ்ண நிலையையும் பதிவு செய்கிறார். 

மலையும், மலைச் சார்ந்த மழையும், கொளுத்தும் வெயிலும் , விஸ்கி மற்றும்  ஏமாற்றங்களும் கொண்ட கதம்பம். நுகர்ந்தால் நாசியில்  குருதி பெருகிடும் மலரை ஒத்து இந்தக் கதையில் போதை சலிப்பின்றி பயன்படுத்தப் பட்டிருகிறது. 

தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம், போதை அல்லது அதிகமான புத்துணர்ச்சி என்ற இரண்டு தீவிர நிலைமைகளைக் கொண்டு நகர்கிறது. 

நல்ல பசி வேலையில் உள்ளிறங்கும் உணவுப் போல சரசரவென்று சரியும் எழுத்து. 

குளத்தின் மீது எறியப்பட்ட கல் ஏற்படுத்தும் வெவ்வேறு தவளைப்பாய்ச்சல் போல எழுத்து – ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் வெவ்வேறு உணர்வுகளை உயிர்த்தெழச் செய்கிறது. 

பெண்களே ஆண்களின் உந்து சக்தியாக இருந்திருக்கிறார்கள். அகத்தியராக நினைத்துக் கொள்ளும் நபர் துர்காவில் கண்டதும், ரவி தேடிய அமுதா அக்காவிலும், சங்கமேஸ்வரன் மலர்விழியில் கண்டதும் இந்த சக்திதான். 

சம்பவங்கள் துரத்தத் துரத்த ஓடுபவன் ஒருவன், தன் வினையில் இலக்கில்லாமல் ஓடுகிறவன் இன்னொருத்தன் என்று வாழ்க்கை ஒரு சின்ன வட்டத்தில் சுழற்றி சுழற்றி அடிக்கும். நம்மில் பல பேர் அதை உணராமலே வெகு வாழ்க்கையைக் கடந்து விடுவோம். 
எழுத்தாளன் ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்து விட்டுச் செல்கிறான். அதனாலேயே ஓடிய வேகத்துக்கு ஒரு ஆசுவாசம் போல ஆற்றுப் படுத்தும் அவனுடைய எழுத்துக்கள். 

ஊரைப் பற்றிய விவரங்கள்  நாவலின் ஊடே விவரிப்பது காட்சியின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்கிறது. 

“திருவண்ணாமலை ஒரு வறட்சிப் பகுதி. வெயில் நகரம். இந்த உயரத்தில் பார்க்கும் பொழுது எவ்வளவு மரங்கள் தென்படுகின்றன. ஒரு நாள் கூட இவ்வளவு மரங்கள் சூழ வாழ்கிறோம் என்ற எண்ணமே தோன்றாமல் இருந்திருக்கிறோம்.” 

நாவலை உருவாக்குவதில் நாவலாசிரியரின் உழைப்பும் அக்கறையும் தெரிகிறது. சில இடங்களில் உரையாடல்கள் தேவைக்கு அதிகமாகவும் , சில அம்சமான விவரணைகளுக்குப் பிறகு வரும் வட்டார உரையாடலும் நெருடலாக இருக்கிறது. இந்த நாவலின் பிரதான பாத்திரம் ரவியின் தோல்விக்கான காரணம் அவனின் பொறுப்பற்றத் தன்மையும் (ஆனால் அவன் பாவமாகவே படைக்கப் பட்டிருப்பான்) காரணமோ என்றும் யோசிக்க வைக்கிறது. 

மாமுனியின் பாத்திரம் அட்டகாசம். கனவுப் பாதையில் கொஞ்ச நேரம் இவ்வுலகை மறக்க வைக்கிறார் . 

இந்தாருங்கள் ஓராயிரம் பூக்கள் அய்யனார். வாழ்த்துகள்.

Sunday, April 1, 2018

ஓரிதழ்ப்பூ - ஜீ.முருகன்
ஓரிதழ்ப்பூ
...........
அய்யனார் விஸ்வநாத்
………

திருவண்ணாமலை மலைக்கும் அந்த நகரத்துக்கும் அசாதாரணங்கள் நிறைந்த வசீகரங்கள் பல இருக்கின்றன. பெரிய கோபுர வாசலில் இருந்த மண்டபம் (தீ விபத்தில் அது சரிந்துவிட்டது) என்னை ஈர்த்தது போல வெவ்வேறு விதங்களில் அவை உலகத்தின் பல திசைகளிலிருந்து மனிதர்களை ஈர்க்கின்றன. ஆன்மிகம், பக்தி, கிரிவலம், தத்துவம் எல்லாம் மேலுக்கான காரணங்கள் மட்டுமே. 

‘மரம்’ நாவலின் பிரதான பாத்திரங்களை உருவாக்கிவிட்டு அவர்களை எங்கே உலாவ விடுவது என்று சுமார் ஆறு மாத காலங்கள் யோசித்துக்கொண்டிருந்த போது திருவண்ணாமலை நிலவெளியை ஞாபகம்கொண்டதும் சட்டென்று அவர்கள் அங்கே குடியேறிவிட்டார்கள். 

அப்படித்தன் அய்யனார் விஸ்வநாத்தின் ஓரிதழ்ப்பூ நாவலில் வரும் பாத்திரங்கள் அந்த வினோத நிலவெளியில் பொருந்திப் போயிருக்கிறார்கள். அகத்திய முனி, சாமிநாதன், ரவி, அங்கையர்க்கன்னி, மலர்ச்செல்வி, சங்கமேஸ்வரன், துர்க்கா, அமுதா, ரமா எல்லோருமே தங்களுக்குள் ஒரு அசாதாரணத்தை சுமந்து திருவண்ணாமலை மண்ணில் வலம்வருகிறார்கள்.

‘கொம்பில்லா இலையில்லாக் காம்பில்லா ஓரிதழ்ப் பூவாம் கண்டு தெளிந்து உண்டு நீங்கி நிலையில் நிறுத்து பிளவில் பூக்கும் மலரை யறிய வேணுங் கண் யறிந்த கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து யடைவாய் உன்மத்தம்’ 

என்ற புதிரில் ஒளிந்திருக்கும் ஓரிதழ் பூவை இருநூறு ஆண்டுகளாகத் தேடியும் கிடைக்காமல் பொதிகை மலையிலிருந்து திருவண்ணாமலைக்கு வருகிறார் அகத்திய முனி. 

ஒரு நாள் ரவி கோபத்தில் அவரிடம் சொல்கிறான், “ங்கொம்மா, பாவடையத் தூக்கிப் பாரு இருக்கும்” என. விடை கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் முனி. பிறகொருநாள் ‘அண்ணாமலை’ தான் அந்த ஓரிதழ்ப்பூ என்றும் கண்டுகொள்கிறார்.

ரமணாஸ்ரமம், சேஷாத்திரி மகரிஷி ஆஸ்ரமம், கந்தாஸ்ரமம், தேனிமலை, சமுத்திரம் ஏரி என ஒரு நாடங்க அரங்கு போல திருவண்ணாமலை மயக்கம் கொள்ள முனி, சாமி, ரவி, துர்க்கா, அங்கை எல்லோரும் நாடக நடிகர்களாக மாறிவிடுகிறார்கள். யாதார்த்தத்தில் காலூன்றாத அவர்களின் வினோதப் பண்புகளே இந்த நாவலின் பெரிய வசீகரம். காமமும் காதலும் போதையும் பைத்திய நிலையும் அவர்களை இயங்கும் விசைகளாகின்றன.

‘மான்’ என்ற படிமம் ரொமான்டிஸத்தை நோக்கி நாவலை இழுத்தாலும் பெரும் காமத்தை நோக்கிய பாத்திரங்களின் விழைவு அதை ஈடு செய்துவிடுகிறது. 

நம்ப முடியாத, நாடகீயமான சம்பவங்களே நாவலின் கட்டமைப்பு என்பதால் நாவலுக்கு பலவீனமாக இல்லாமல் அவையே பலமாகவும் மாறிவிடுகின்றன. 

இந்த நாவல் வேண்டி நிற்கும் தத்துவார்த்த தளம் ஒன்று கைகூடாமல் போனதும் நடந்திருக்கிறது. 

மண் வாசனை உத்தரவாதத்தோடு, வட்டார மொழிப் பேசி, ரத்தமும் சதையுமான மனிதர்கள் உலாவும் யாதார்த்த வகை என்ற பாதுகாப்பான எல்லைக்குள் நீதிக் கதைகள் எழுதுபவர்களுக்கு மத்தியில் அபூர்வமாக மலர்ந்துள்ளது கனவுத் தன்மை கொண்ட இந்த ஓரிதழ்ப்பூ.

..........

வெளியீடு கிழக்குப் பதிப்பகம், பக்கங்கள் 166, விலை ரூ.150.

Featured Post

test

 test