Sunday, November 30, 2014

கூண்டுப் புளி

நேற்று இரவு முழுவதும் ஒரு நொடி கூட என்னால் தூங்க முடியவில்லை. ஒரு முழு இரவையும் கொப்பளிக்கும் எண்ணங்களோடும், குற்ற உணர்வோடும், இயலாமையோடும் கழித்தது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். வாழ்வில் ஏரளமான தூங்க முடியாத நிசிகள் இருந்திருக்கின்றனதாம் என்றாலும் விடியலில் எப்படியாவது தூக்கம் இழுத்துக் கொண்டுவிடும். ஆனால் நேற்று அப்படி ஒன்று நிகழவேயில்லை. மனம் குழப்பத்திலும் கழிவிரக்கத்திலும் சஞ்சலித்தபடியே இருந்தது. இப்படியான போராட்ட மனநிலைக்கான காரணத்தை எழுதக் கூச்சமாக இருக்கிறது. வெட்கமும் அவமானமும் பிடுங்கித் தின்றபடியே இருக்கிறது. இனி தனியாகக் குடிப்பதில்லை. அப்படியே குடித்தாலும் இணையத்தைத் திறப்பதில்லை என்கிற கறாரான முடிவிற்கும் வந்திருக்கிறேன். வெள்ளி இரவு நிலையில்லாமல் உளறிக் கொட்டி ஒரு ஆன்மாவின் முகச் சுளிப்பிற்கும் கோபத்திற்கும் உள்ளானதை எண்ணி வெட்குகிறேன். அதற்குப் பிராயச்சித்தமாக என் ஃபேஸ்புக் கணக்கை முடக்கியிருக்கிறேன். கூகுல் ப்ளஸ் என்னை அத்தனை விகாரங்களோடும் ஏற்றுக் கொண்டு விட்ட இடம் என்பதால் முதல் நாள் உளறி அடுத்த நாள் அழிப்பது வழக்கமாகவே மாறிவிட்டது. அதைக் குறித்து வெட்கமேற்படாதவாறு வழமை பார்த்துக் கொள்கிறது.

என் தனிமையை எந்த அளவிற்கு கொண்டாடுகிறேனோ அந்த அளவிற்கு அதைக் கண்டு பயப்படுபவனாகவும் இருக்கிறேன். கட்டவிழ்த்த வனாந்திர வெளியும் சுதந்திரமும் என்னை அதிக உற்சாகமடைய வைக்கும் அதே நேரத்தில் அந்த மிகு வெளி குறித்து மிரட்சியும் அடைகிறேன். எனக்கு கூண்டுதான் சரியாக இருக்கும். கூண்டில்தான் என்னால் மனச் சமாதானங்களோடு வாழ்ந்து கொள்ள முடிகிறது. கூண்டின் பாதுகாப்பு குறித்து அதன் வழமைகள் குறித்து அதன் சோம்பல் தன்மை குறித்து இந்தப் புளிக்கு மிகுந்த ஆசுவாசங்கள் இருக்கின்றன. செய்ய ஒன்றுமே இருக்காத வாழ்வை எப்படி ஒரு மனம் விரும்ப முடியும்? ஒரு நாள் முழுக்க எதையுமே செய்யாமல் கடத்தும் தடித்தனம் எப்படியோ வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது. அந்த தடித்தனத்தில் ஊறி மூளையும் உடலும் மட்கிக் கொண்டிருக்கிறது. இலைகள் மட்கினால் சரி. மரமே மட்குவதை என்ன செய்து சரி செய்ய முடியும்?

 சும்மா இருப்பதுதான் பெரிய விஷயமாகிற்றே. "கிட சும்மா" என சமாதானமாகிவிடலாமென்றாலும் சதா பகற் கனவில் மூழ்கும் மனதின் ஓயாத பேராசையைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதென்ன சுயமிது? இத்தனை ஆசைகளையும் கனவுகளையும் இதன் ஆழத்தில் யார் வந்து கொட்டியிருப்பார்கள்? மனம் பேராசையின், சுயப் பெருமிதத்தின், பகட்டு வெளியின் நாயகனாகத் தன்னை அலங்கரித்துக் கொள்கிறது. போகுமிடமெல்லாம் ராஜாதி ராஜப் பின்னணிக் குரல் காதில் விழுந்து கொண்டே இருக்கவேண்டுமென விரும்புகிறது. பச்சையாக சொல்வதென்றால் சில சினிமாக்காரர்களின் பகட்டு வாழ்வை அருகிலிருந்துப் பார்த்துவிட்டு தானும் அதுபோல மாறிவிட இந்தப் புளி கொட்டையைப் பிதுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சினிமாப் பித்திலிருந்து வெளிவர புத்தக வாசிப்பைத் துரிதப்படுத்தி யிருக்கிறேன். என் நமுத்த வழமைகளில் இருந்து சீக்கிரம் வெளியே வர வேண்டும். மாலையில் கர்ம சிரத்தையாய் நடப்பது. இசை கேட்பது. புத்தகம் படிப்பது. குறைவாய் படம் பார்ப்பது. குறைவாய் உண்பதென திடீரென வாழ்வு நம்ப முடியாத ஒழுங்கிற்கு திரும்பிவிடும். அந்த கணத்திற்காக காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு செய்ய ஒன்றும் இல்லை. ஃபேஸ்புக்கைத் தொலைத்திருப்பதால் மீண்டும் வலைப்பூ வில் நாட்டம் செல்லத் துவங்கியிருக்கிறது. எழுதாமல்தான் நான் துருப்பிடித்துப் போனேன். இனி எழுதி எழுதி என்னை மீளக் கொணர்வேன்.Tuesday, November 25, 2014

தீக்கிரை - Incendies 2010


எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ஜுலை மாத வெயில் மதியத்தில்தான் இந்த நாட்டிற்கு வந்தடைந்தேன். இந்த நகரத்தின் நிறம், சாம்பல் வெண்மையாக இருந்தது. இவ்வளவு பிரகாசமான ஒளி வெள்ளம் நிரம்பிய நகரத்தைப் பார்க்க விநோதமாகவும் இருந்தது. நீல வானம் மற்றும் வெண்ணிற மேகங்கள் என்பதெல்லாம் என் ஆதிக் கனவானது. வெகு தொலைவிற்குப் புழுதிய மண்டிய, கலங்கலாய் நீலம் தெரியும் விரிந்த வெளிதான் என் வானமாகிற்று. கண் கூசும் வெயில் பிறகு குளிர் கண்ணாடிகளுக்கு பின் பாந்தமானது. பிறகெப்போதுமே இந்நகரம் முதன்முறை தந்த விநோத நிற உணர்வைத் திரும்பத் தரவேயில்லை. மறந்து போன முதல் முத்த உணர்வைப் போலவே இந்நகரகம் தன் வழமைக்குள் என்னை அழுத்திக் கொண்டது. Incendies திரைப்படம் வாயிலாக எனக்கந்த உணர்வுகள் திரும்பக் கிடைத்தன. இந்த மத்தியக் கிழக்கு நாடுகளின் நிறத்தை இத்திரைப்படத்தில் பார்க்க முடிந்தது. லெபனான் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் சந்து பொந்துகள், மலைப்பாதைகள் எங்கும் சோர்வோடுயும் துயரத்தோடும் சுற்றி அலைந்துவிட்டுத் திரும்பிய மனநிலையும் பெற்றேன்.

Incendies திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் The Bridges of Madison County திரைப்படத்தை நினைவுபடுத்தின. படத்தின் பிரதானக் கதாபாத்திரமான நவ்வல் மார்வன் திடீர் வலிப்பு வந்து இறந்து போகிறாள். அவளின் மகள் ஜீனும் மகன் சைமனும் இரட்டைக் குழந்தைகள். அவர்களிற்கு உயிலாக சில வேண்டுகோள்கள் அவளின் மேலாளரும் வக்கீலுமான லேபெல் வழியாய் வந்தடைகிறது. அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரனும் தகப்பனும் இருப்பதாகவும் அவர்களிடம் சேர்க்கச் சொல்லி இரண்டு தனித்தனி கடிதங்களை வக்கீல் இருவரிடமும் தருகிறார். நவ்வல் தன் உடல் வழக்கமான கிறிஸ்துவ முறைகளின் படி புதைக்கக் கூடாதெனவும், உடைகளைக் களைந்துவிட்டு மண்ணில் முகத்தைத் திருப்பி வைத்து (புட்டங்களை இந்த உலகிற்குக் காட்டியபடி) புதைக்க வேண்டுமெனவும் உயிலில் கேட்டுக் கொண்டிருக்கிறாள். மேலும் தர வேண்டிய கடிதங்களை உரியவர்களிடம் சேர்த்துவிட்டுப் பின்பு வந்து தன் கல்லறையில் சிலுவை நட்டு பெயரைப் பொறித்து வைக்கலாம் அதுவரை தன் கல்லறை அப்படியேதான் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இது இரட்டையர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தருகிறது. தாயின் மரணத்திற்குப் பிறகு அவளைப் பற்றியதான புதிர்கள் மகள்களுக்கு ஆதூரமாகவும் மகன்களுக்கு அசூசையாகவும் இருப்பது உலகம் முழுக்கப் பொதுவாக இருக்கும் ஆண் மனப்பான்மைகளில் ஒன்று. சைமன் அவ்வாறே அதை வெளிப்படுத்துகிறான். தாயின் வேண்டுகோளின் படியெல்லாம் யாரையும் தேடிக் கொண்டு போக முடியாது. அவள் சொன்னபடி இறப்புச் சடங்குகளை செய்யவும் முடியாது என மறுக்கிறான். ஜீன் அவனைத் தேற்ற முயற்சிக்கிறாள். பிறகு தானே கிளம்பி தாயின் பழைய வாழ்க்கையைத் தேடிப் போகிறாள்.

நவ்வல் மார்வனின் முன் கதையும், எப்போதுமே உக்கிரமாக போர் நடந்து கொண்டிருக்கும் தாயின் சொந்த நிலங்களில் அவளின் தடயங்களைத் தேடி மகள் ஜீன் அலைவதும் லெபனான் நாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திரைப்படத்தில் வரும் நகரங்களுக்கும் ஊர்களுக்கும் கற்பனைப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். நவ்வல் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவள் என்பதும் நேரடியாக சொல்லப்பட வில்லை. முஸ்லீம் குழுவிற்கும் கிறிஸ்தவ குழுவிற்கும் இடையே நிகரும் போராக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் மிகக் குரூரமாக சுட்டுக் கொல்லப்படுவதை அழுத்தமாய் சொல்லியிருப்பதன் மூலம் பாலஸ்தீன- இஸ்ரேல் பின்னணிக் களத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிய வரும். ஆனால் மிகக் கவனமாய் அதன் அரசியல் எல்லைகளுக்குள் போவதை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு திரைப்படத்தின் மூலம் அனுக இயலக்கூடிய சிக்கலாக இந்த யுகாந்திரப் பிரச்சினை இல்லாதிருப்பதால் அது குறித்த நெருடலும் எனக்கு இல்லை. அவ்வளவு எளிமையாய் பாலஸ்தீன- இஸ்ரேல் பிரச்சினையை பேசிவிட முடியாதுதானே. ஆனால் போரின் விளைவுகளை, வலியை மிக ஆழமாய் நம்மால் கடத்த இயலும். இத்திரைப்படமும் அதைத்தான் செய்திருக்கிறது.

தாயின் பின்புலத்தைத் தேடி வரும் ஜீனிற்கு தாயின் உறவினர்கள் ஒருவருமே உதவ முன் வருவதில்லை. அவளைப் பற்றி பேசுவதையும் தவிர்க்கிறார்கள். தங்களின் குடும்பத்திற்கு தீராத களங்கத்தை நவ்வல் உண்டாக்கி விட்டதாய் ஆத்திரப்படுகிறார்கள். இடைவெட்டாய் நவ்வலின் முன் கதையும் ஜீனுடன் பயணிக்கிறது.

நவ்வல் ஒரு முஸ்லீம் இளைஞனுடன் காதற் கொண்டு ஓடிப்போகத் திட்டமிடுகிறாள். அவளின் சகோதரர்கள் அந்த இளைஞனைக் கொன்று அவளையும் கொல்ல வரும்போது பாட்டியினால் காக்கப்படுகிறாள். நவ்வல் கர்ப்பமாக இருப்பதை அறிந்து பதபதைக்கும் பாட்டி குழந்தை பிறந்த பின்பு அவளை வேறொரு நகரத்திற்கு அனுப்பிப் படிக்க வைப்பதாக சொல்கிறாள். குழந்தை பிறந்ததும் அடையாளத்திற்காக குழந்தையின் குதிகாலில் மூன்று புள்ளிகளை பாட்டி பச்சை குத்துகிறாள்.பின்பு உடனடியாய் அக்குழந்தையை அநாதை விடுதியில் சேர்ப்பித்து விடுகிறாள். நவ்வலும் வேரொரு நகரத்திற்குப் போய் வசிக்க ஆரம்பிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவளால் குழந்தையின் நினைவிலிருந்து மீளமுடியாமல் தேடிக் கொண்டு வருகிறாள். மிக குரூரமான போர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வழியில் பல்வேறு கொடுமைகளை சந்திக்க நேரிடும் நவ்வல் இந்தப் போர்களுக்கு காரணமான ஒரு தலைவனை கொன்று விடுகிறாள். பதினைந்து வருட சிறை தண்டனையும் பெறுகிறாள். இரவில் சதா பாடிக்கொண்டிருக்கிறாள். அதனால் பாடும் பெண் என்கிற அடையாளத்தைப் பெறுகிறாள். தண்டனை இறுதிக் காலத்தில் அங்கு வரும் சிறைக் காவலன் ஒருவன் நவ்வல் பாடுவதை நிறுத்த தினம் மிகக் குரூரமாக வன்புணர்கிறான். அதனால் கருத்தரிக்கும் நவ்வல் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். பிரசவ தாதியின் உதவியால் அக்குழந்தைகளை சிறையிலிருந்து வெளியே வந்ததும் பெற்றுக் கொண்டு கனடா வந்தடைகிறாள்.

ஜீன் இந்த கதையைப் பலரின் வழியாய் கண்டடைகிறாள். ஜெயிலில் பணியிருந்த முதியவர் சிறையில் நவ்வலுக்கு குழந்தை பிறந்ததாக சொல்கிறார். உடைந்து போகும் ஜீன் தன் சகோதரனை தொலைபேசியில் அழைத்து எல்லா விஷயங்களையும் சொல்லி அழுகிறாள். வக்கீலோடு சைமனும் வந்து சேர்கிறான். மூவரும் சில அதிகாரிகளின் தொடர்பு மூலம் விரிவாய் தேட பல புதிர்கள் ஒன்றன் பின் ஒன்றாய் அவிழ்கின்றன. சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் இந்தத் திரைப்படம் தந்த அதிர்ச்சித் திருப்பத்தைப் போல வெறெந்த படமும் தரவில்லை. தேடிக்கொண்டிருந்த உண்மை சகோதரனின் வாயிலாய் அறிந்த பிறகு ஜீனின் கேவல் எழுந்தடங்கும் காட்சி நினைவில் அப்படியே உறைந்து விட்டது. 

நவ்வல் மார்வனாக லுப்னா அஸெபெல் என்கிற பெல்ஜிய நடிகை நடித்திருக்கிறார். ஏற்கனவே இவரை டோனி காட்லிஃபின் Exils (2004) திரைப்படத்தின் கதாநாயகியாகப் பார்த்திருக்கிறேன். நைமா என்கிற கதாபாத்திரம் ஜிப்சி வாழ்வின் அத்தனை பரவசங்களையும் நமக்குத் தரும். எப்படி காட்ஜோ டிலோ வின் ரோமைன் தூரிசையும் ரோனா ஹார்ட்னைரையும் மறக்கவே முடியாதோ அப்படியே எக்ஸில் நைமாவையும் சீக்கிரம் மறந்து விட முடியாது. லுப்னா அஸெபெலிற்கு இன்செண்டிஸ் மிக முக்கியமான திரைப்படம். இந்த நவ்வல் கதாபாத்திரம்தான் இதுவரைக்கும் அவர் பெற்றிருக்கும் அனைத்து விருதுகளையும் தந்திருக்கிறது.

 இன்செண்டீஸ் 2010 இல் வெளிவந்த கனேடியத் திரைப்படம். Wajdi Mouawad என்கிற லெபனான் எழுத்தாளரின் இதே பெயரில் வெளிவந்த நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. Denis Villeneuve இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சமகாலப் புது இயக்குனர்களில் டெனிஸ் மிக அதிகம் பேசப்படக்கூடியவராக இருக்கிறார். இதுவரை ஆறு திரைப்படங்களை இயக்கி இருக்கும் டெனிஸ் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறார்.

Sunday, November 23, 2014

கங்கைப் பருந்தின் சிறகுகள்


ஒவ்வொரு முறை ஊரிலிருந்து திரும்பும்போதும் கிட்டத்தட்ட ஒரு மாதகாலத்திற்கு அங்கிருந்த நாட்களில் ஏமார்ந்த அனுபவங்களை மிகுந்த கொதிப்போடு அசைபோட்டுக் கொண்டிருப்பேன். ஒரு பக்கம் என் அறியாமை குறித்த அவமானம் இருந்தாலும் பிறரை ஏமாற்றுவதை, பிறர் பொருளை எந்தக் குற்ற உணர்வுமில்லாமல் திருடும் மனநிலையை, எம் மக்கள் எவ்வாறு பெற்றனர்? என்பது குறித்தும் யோசித்துக் கொண்டிருப்பேன். இந்நாட்களில் ஊரில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் அதன் மூலம் பெறும் ஏமார்ந்த அனுபவங்கள் சற்று அதிகமாகவே உள்ளன. பார்க்கும் எல்லா மனிதர்கள் மீதும் இயல்பாகவே ஒரு அவநம்பிக்கை வந்து படிகிறது. கிரகித்துக் கொள்ள சற்று சிரமமாக இருந்தாலுமே கூட சதுரங்க வேட்டை திரைப்படம் தரும் ’உனக்கு கத்துக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு நினைச்சிக்கோ’ வென அந்த சூழலை,அனுபவத்தைத் தாண்டிப்போக வேண்டியதாக இருக்கிறது. 

இந்த நகரீயத்திற்கு முன்பு, இந்த பொருள்மயவாதத்திற்கு முன்பு, உலக முதலாளிகள் இந்தியாவின் சந்து பொந்துகளை ஆக்ரமிப்பதற்கு முன்பு, எம் மக்களின் மனநிலை இப்படி இல்லை. அடுத்தவரை ஏய்த்துப் பிழைப்பதை திறமை என்கிற பெயரிட்டு அழைக்கும் ஈனத்தனங்கள் வந்தடைந்திராத காலமும் வாழ்க்கைமுறையும் நமக்கு இருந்தது. கங்கைப் பருந்தின் சிறகுகள் நாவல் மக்களின் இந்த மன நகர்வைப் பேசுகிறது.  கிராமங்களுக்கு சாலைகள் போடப்படுவது மக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமேயல்ல என்கிற புள்ளியிலிருந்து அந்த கிராம மக்களின் வாழ்வு முறையின் மாற்றத்தை மிகத் துல்லியமாய் சொல்கிறது. இந்திய தேசத்தின் வரைபடத்தில் மிகச்சிறிய புள்ளியாய் இருக்கும் ஒரு கிராமத்தின் வாழ்க்கை மாற்றங்களுக்கான காரணமும் ஒட்டு மொத்த தேசத்தின் மாற்றங்களுக்கான காரணமும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இதைத்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோமோ என்னவோ.

இந்திய செவ்வியல் நாவல்களில் இருக்கும் பொதுத்தன்மைகளில் நிலக்காட்சிகள் குறித்த விவரணைகள் எனக்குப் பிடித்தமானவை. அக்னி நதியாகட்டும், நீலகண்டப் பறவையைத் தேடி நாவலாகட்டும் நிலக்காட்சிகளைப் பதிவு செய்வதில் அவ்வளவு மெனக்கெடலைச் செய்திருக்கின்றன. பருவகால மாற்றங்கள், அதற்கேற்ப மாறும் மக்களின் வாழ்வாதார வேலைகள். சடங்குகள், வழிபாடுகள் என அந்தப் பிரதேசத்தின் மொத்த பண்பாட்டு/ பயன்பாட்டு தகவல்களையும் வாழ்வோடு ஒட்டிக் கதையாக சொல்லப்பட்டுவிடுகின்றன. இந்தத் தன்மை வெறும் புனைவெழுத்து வாசிப்பாக மட்டும் நின்றுவிடாமல் மானுட வாழ்வு குறித்த ஆவணமாகவும் மாறுகிறது. கங்கைப் பருந்தின் சிறகுகள் நாவலும் இதே தன்மையைக் கொண்டிருக்கிறது. சோனாய் ஆறு இந்நாவலில் ஒரு கதாபாத்திரமாகவே இடம் பெற்றிருக்கிறது. சோனாய் ஆற்றை மையமாக வைத்து மொத்தக் கதையும் சொல்லப்படுகிறது.

மேராபூர் கிராமத்தில் வசிக்கும் போக்ராம் கடின உழைப்பாளி. பருவ காலத்திற்கேற்ப நெல், கடுகு, சணல் மற்றும் ரெடிமேட் துணிகளை பக்கத்து ஊர் சந்தைகளில் விற்றுப் பிழைப்பு நடத்தும் வியாபாரி. மனைவி, குழந்தைகள், இளம் தங்கை மற்றும் முதிர்ந்த தாய் என ஒரு சிறு குடும்பத்தை நிர்வகிப்பவன். போக்ராமின் தங்கை வாசந்தி சகோதரனின் நண்பனான தனஞ்செயன் என்கிற இலட்சியவாத இளைஞன் மீது காதல் வயப்படுகிறாள். அவனுடைய சோகம் நிரம்பிய முன் கதையும், ஊர்மக்களுக்காக அயராமல் உழைக்கும் அவனின் நற்குணங்களின் மீதும் காதற் கொள்கிறாள். ஊர்மக்களுக்கு ஹோமியோபதி வைத்தியம் செய்வதோடு நிற்காமல் அக்கிராம மக்களின் எல்லா அரசு சார்ந்த தேவைகளையும் பூர்த்தி செய்பவனாகவும் தனஞ்செயன் இருக்கிறான்.

தேர்தலுக்கு முன்பு கிராமங்களை நகரத்துடன் இணைக்கும் சாலைகள் மிக விரைவில் போடப்படுகின்றன. இதனால் பட்டணத்தில் பொருட்கள் வாங்கி உள்ளூர் சந்தைகளில் விற்று இலாபம் பார்க்கும் போக்ராமின் தொழில் நசிவடைகிறது. மேலும் பட்டணத்திலிருந்து பெரு முதலாளிகள் நேரடியாகவே பொருட்களை மக்களிடமிருந்து வாங்கவும் பல்வேறு நகரங்களிலிருந்து சிறு சிறு முதலாளிகள் தங்களின் பொருட்களை உள்ளூர் சந்தைகளில் விற்கவும் படையெடுத்து வருவதால் போக்ராமின் வியாபாரம் மொத்தமாகவே நசிந்து போகிறது. விரக்தியடையும் போக்ராம் குடும்பத்தாரிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறான். இதற்கிடையில் தேர்தலில் போட்டியிடும் வக்கீல் ஒருவர் போக்ராமை தனக்காக பிரச்சாரம் செய்ய அழைக்கிறார். போக்ராமிற்கு புதிய வாசல் ஒன்று திறக்கிறது. நிறைய பணம், பொய், புரட்டு என ஆள் சடுதியில் மாறிப்போகிறான். மக்களிடம் செல்வாக்கு பெற்ற உள்ளூர் தலைவர் ஒருவரை எதிர்த்து வக்கீல் நிற்கிறார். தனஞ்செயன் மக்கள் தலைவருக்கு ஆதரவளிக்கிறான். இதனால் போக்ராமிற்கும் தனஞ்செயனுக்கும் விரோதம் முளைக்கிறது. தேர்தலில் வக்கீலே ஜெயிக்கிறார். போக்ராமிற்கு நிறைய காண்ட்ராக்ட்களை வழங்குகிறார். போக்ராம் மிகப்பெரும் செல்வந்தனாகிறான். தங்கை வாசந்திக்கு செல்வாக்கான குடும்பத்திலிருந்து மாப்பிள்ளைப் பார்த்து நிச்சயம் செய்கிறான். வேறு வழியில்லாமல் வாசந்தி தனஞ்செயனோடு ஓடிப்போக திட்டமிடுகிறாள். ஒரு அதிகாலையில் படகுத் துறையில் அவளை அழைத்துப் போக தனஞ்செயன் காத்திருக்கிறான். வீட்டைவிட்டு வெளியேறும் வாசந்தி படகுத் துறையை அடைவதற்கு முன்பு அவள் விரலில் அணிந்திருக்கும் நிச்சய மோதிரத்தை ஒரு கணம் பார்க்கிறாள். தாயின் மீதும், குடும்பத்தாரின் மீதும் பாசமும் கடமையும் நினைவை அழுந்த மீண்டும் வீட்டிற்கே வந்துவிடுகிறாள். அதனால் அவளடையும் வாழ்க்கை மாற்றத்தை சமூக மாற்றப் பின்புலத்தோடு இந்நாவல் முன் வைக்கிறது.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்பான காலகட்டத்தின் கிராம வாழ்வியல் மாற்றங்களை விலாவரியாகப் பேசினாலும் மக்களிடமிருந்த தீண்டாமை, அறியாமை, பெண்ணடிமைத்தனம் போன்ற இந்தியப் பொது பிரச்சினைகளும் நாவலில் பேசப்படுகின்றன. பெண் செய்யும் தவறு ஆணையும் குடும்பத்தையும் பலி வாங்கும் என்பது போன்ற நீதிகள் மூத்த பெண்களின் வாயிலாக இளம் பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கற்பு நெறி மிக ஆழமாக பெண் மனங்களில் பதிய வைக்கப்படுகிறது. வாசந்தியின் கனவணான மதுரா, நற்குணங்களையும் மனைவி மீது மிகுந்த அன்புள்ளவனாகவும் இருக்கிறான். ஆனால் வாசந்தி தனஞ்செயனோடு ஓடிப்போகத் துணிந்தவள் என்பதைக் கேள்விப்பட்டவுடன் விரக்தியடைகிறான். மனைவியை வெறுத்து ஒதுக்குகிறான். ஒட்டு மொத்த சமூகமே தன்னைக் கேலியாக பார்ப்பதாய் கழிவிரக்கம் கொண்டு மடிகிறான். இலட்சியவாதமும் நேர்மையும் துணிவும் கொண்ட தனஞ்செயன் விதவைக் காதலியை, எல்லாம் இழந்து அநாதரவாய் நிற்கும் காதலியை, அவளாகவே வரத் துணிந்த பின்பும் ஏற்கத் தைரியமில்லாதவனாய் ஓடிப்போகிறான்.

புதுக்கணவனையும், பிரசவிக்கையில் குழந்தையையும், தாயையும் இழந்த வாசந்தி மாமனார் மாமியார் வீட்டிலேயே தஞ்சமடைகிறாள். சதா சோனாய் ஆற்றைப் பார்த்தபடியும், ஊர் நிலவரங்களையும் இன்னும் பல வேடிக்கைக் கதைகளையும் பேசும் வேலைக்காரி மூலம் அவள் பொழுது நகர்கிறது. அவள் வழியாய் தனஞ்செயனோடு சேரும் முயற்சிகளும் தோல்வியடைய உள்ளூரில் காதலிக்கும் இன்னொரு ஜோடி ஓடிப்போக தன் நகையை விற்றுப் பணம் கொடுத்து நிறைவடைகிறாள். கிராம இளைஞர்கள் பிழைப்பிற்காய் பட்டணம் நோக்கி நகரும் மாற்றத்தோடு நாவல் முடிகிறது.

கங்கைப் பருந்தின் சிறகுகள் நாவல் அஸாமி மொழியில் லக்‌ஷ்மி நந்தன் போரா என்பவரால் 1963 ஆம் ஆண்டு எழுதப்பட்டிருக்கிறது. திருமதி துளசி ஜெயராமன் இந்நாவலை 1975 இல் மொழிபெயர்த்திருக்கிறார். Ganga Chilonir Pakhi என்கிற நாவலின் பெயரிலேயே 1976 இல் திரைப்படமாக வெளிவந்தது.வாசந்தி என்கிற இளம்பெண்ணின் துயரக் கதை என்கிற ஒரே வரிதான் இந்நாவல் என்றாலும், ஏராளமான வங்க நாவல்களில், சத்யஜித்ரே சினிமாக்களில் பேசப்பட்டுவிட்ட கைம்பெண் துயரம் குறித்து பேசும் இன்னொரு நாவல் என்றாலும் அஸ்ஸாம் போன்ற அதிகம் அறியப்படாத பகுதியின் வாழ்க்கை முறையை, மக்களின் பண்பாட்டு விழுமியங்களோடு மிக நேர்மையாய் எழுத்தில் கொண்டுவந்தமைக்காக இந்நாவல் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. வாசந்தி தனஞ்செயன் மீது காதல் வயப்படும் முற்பகுதி எனக்குப் பல குறுந்தொகைப் பாடல்களை நினைவுபடுத்தின. இயற்கையும் காதலும் படபடப்பும் துயருமாக இந்நாவலின் காதற்பகுதிகள் எழுதப்பட்டிருக்கின்றன. நாவலின் தலைப்பு இருத்தலியல் சார்ந்த படிமமாக துலக்கப்படுகிறது. தலைப்பிற்கான பொருத்தமாய் நாவல் இப்படியாய் முடிகிறது

பருந்தின் சிறகுகளில் ஆறு பருவங்களின் வர்ண ஜாலங்கள் நிரம்பியிருந்தன. உயிர் வாழும் ஆசை மிகவும் தீவிரமாக அப்பருந்தின் சிறகுகளில் படபடத்தது. சோனாய் நதியின் மீது மேலும் கீழுமாகப் பறந்து செல்லும் கங்கைப் பருந்து நதியில் மீன் நீந்துவதற்கான சைகை காட்டியது கங்கைப் பருந்தின் சிறகுகள் படபடக்க அதன் காற்று வாசந்தியின் உடலிலும் பட்டது. ஆனால் அந்தக் காற்று அசைவற்று நின்றுவிட்டது. அழகிய சோனாய் நதி எப்போதும் போல் பாய்ந்து கொண்டேயிருந்தது.Monday, November 10, 2014

உன்னத எழுத்தின் அய்ம்பது தடைக்கற்களும் ஒரே ஒரு உண்மையும்


    நிகழ்திரை யின் கடைசிக் கட்டுரை என்று எழுதினேன் என தேடிப்பார்க்க வேண்டும். கடந்த டிசம்பர் மாத துவக்கமாக இருக்கலாம். அதற்குப் பிறகு ஒன்றுமே எழுதவில்லை. இந்த தேக்கம் எப்படி வந்தது? இவ்விரல்களால் இந்த எழுத்துக்களைத் தட்டச்சி எத்தனை மாதங்களாயிற்று? நான் எழுதாமலிருப்பதற்கான காரணங்கள் என்ன என யோசித்துப் பார்த்ததில் உடனடியாய் அய்ம்பது காரணங்களைப் பட்டியலிட முடிந்தது. இதில் ஒரே ஒரு உண்மைதான் இருக்கமுடியும் என அந்தரப்பட்சி கத்திக் கதறிச் சொல்கிறது. அதைக் காரணம் கேட்டவர்கள் கண்டுபிடித்துக் கொள்ளவும்.

 1. மனம் ஒன்றவில்லை.

 2. எழுத ஒன்றுமேயில்லை.

 3. எழுத பயமாக இருந்தது.

 4. எழுதத் தயக்கமாக இருந்தது.

 5. இனி உண்மையை எழுத முடியாதெனத் தோன்றியது.

 6. பாவணைகளின் மீது பெரும் சலிப்பு வந்தது.

7. எழுத்தென்பதே பாவணையாகத்தான் இருக்க முடியும் என்கிற ஆழமான நம்பிக்கை விழுந்தது.

8. என்னை யாரிடமும் வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

9. எனக்குத் தனிமை தேவைப்பட்டது.

10. என் சுற்றங்களை எனக்குப் பிடிக்கவில்லை.

11. இந்த மெய்நிகர் உலகம் அலுப்பூட்டியது.

 12. எழுத்துக்கள் வழி உருவாகும் அல்லது எழுத்துக்களால் உருவாகும் உணர்வுகள் அத்தனையும் போலித்தனமானவை எனத் தோன்றியது.

 13. இணையம் வழியோ அல்லது அச்சு வழியோ எழுத சலிப்பாக இருந்தது.

 14. எழுத, என்ன எழுத, எழுதி என்ன ஆக, என ஒரு புள்ளியில் விழுந்த அவநம்பிக்கை பன்மடங்காகப் பெருகியது.

 15. எழுத சோம்பலாக இருந்தது.

 16. என்னால் புதிதாக எதுவுமே எழுத முடியாதெனத் தோன்றியது.

 17. இனி புதிதாக எழுத எதுவுமே இல்லை எனவும் தோன்றியது.

 18. நானும் எழுத வேண்டும் என்கிற உந்துதலை வாசித்த எந்த எழுத்துக்களுமே தரவில்லை.

 19. என் வாழ்வில் சிக்கல்களே இல்லை.

 20. என்னை இந்த வாழ்வும் மனிதர்களும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். 

21. நான் சக மனிதர்களை தவிர்க்க விரும்புகிறேன்.

 22. என்னிடம் சுயநலம் மிகுந்தது.

 23. பேராசை புகுந்தது.

 24. உச்சபட்ச சோம்பலனாக மாறிப்போனேன்.

 25. காணும் காட்சிகள் யாவற்றையும் வார்த்தைகளாய் மாற்றி அதில் சில புனைவு சுவாரஸ்யங்களை நுழைத்தோ அல்லது பழைய மிகப்பழைய நினைவுகளில் திளைத்து அதில் சமபங்கு பகற் கற்பனையைப் புகுத்தி எழுத்துக்களாய் மாற்றியோ திருப்தியடையும் நிகழின் மீது மிகுந்த பரிதாபம் எழுந்தது. 

26. என் முதல் நாவல் பழி மீதிருக்கும் வசீகரம் குறையவேயில்லை.

 27. பழியைத் தாண்டி என்னால் எழுத முடியாதெனத் தோன்றியது.

 28. என்னை இந்த முட்டாள் சமூகம் கொண்டாடவேயில்லை.

 29. குறிப்பாக ஃபேஸ்புக் பெண்களுக்கு என்னைத் தெரியவேயில்லை. பிறகு எழுதி என்னாகப்போகிறதென எழுதாமல் இருந்து விட்டேன்.

 30. நான் எந்தக் குழாமிலும் இல்லாததால் என் பெயர் எல்லாத் தரப்பிலும் மிகக் கவனமாகத் தவிர்க்கப்படுகிறது. அந்த சிரமத்தை அவர்களுக்கு ஏன் வைப்பானேன்?

 31. சமகால எழுத்து சல்லிப் பயல்களிடம் சிக்கிக் கொண்டதால் எழுதவில்லை.

 32. இலக்கியத்தை காசாக்கி விளம்பரமாக்கி சந்தி சிரிக்க வைக்கும் வியாபாரிகள் மிகுந்திருக்கும் இந்த காலகட்டத்தில் நான் எழுதாமல் இருப்பது எனக்கும் எழுத்திற்கும் நல்லது.

33. வாசிப்பதை விட, எழுதுவதை விட , சினிமா பார்க்கப் பிடித்திருந்தது

34. வலைப்பூவில் எழுதி, அதற்குப் பொருத்தமாய் ஒரு படம் தேடி, போஸ்ட் செய்து, கூகுல் பள்ஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் இணைப்பு கொடுத்து அதிகபட்சம் முந்நூறு பேரை படிக்க வைப்பதால் என்னாகி விடப்போகிறது?

35. தமிழ் இணைய சமுகத்திற்கு தமிழ் சினிமாதான் சகலமும். இந்த ஆட்டு மந்தைகள் வாசிக்க ஏன் இந்தனை பிரயத்தனம்?

36. சும்மா இருக்கப் பிடித்திருந்தது.

37. எழுத நிறைய இருந்தும் எழுதாமலிருப்பதுதான் உன்னதம். அது தன்னிலிருந்து தானாய் மிகுந்து வரவேண்டும் ஒருபோதும் செய்யக் கூடாது.

38. எழுத்து ஆன்மாவிலிருந்து உருவாகவேண்டும். காலையெழுந்தவுடன் கக்கூஸ் என்பது மாதிரி ஆகிவிடக் கூடாது.

39. ஒரே விஷயத்தைத் திரும்ப திரும்ப எழுதாதே

40. சினிமா பற்றியே எழுதாதே. ஏற்கனவே யாரும் சினிமா தாண்டி சிந்திப்பதேயில்லை.

41. தமிழ் சினிமாவிற்கும் அதில் பணிபுரிவோருக்கும் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் மிரட்சியடைய வைக்கிறது. ஒரு எழுத்தாளனாய் என்னைக் கூசிச் சுருங்கச் செய்கிறது.

42. இலக்கியம் மீதும் தமிழ் எழுத்தாளர்கள் மீதும் இருந்த கவர்ச்சியும் விருப்பமும் போய்விட்டது.

43. வளவளவென எழுதாதே. எழுத்து கச்சிதமாக இருக்க வேண்டும். மிகக் குறைவாக ஆனால் ஆழமாக எழுதுவதே எழுத்து. இது மினிமலிச காலம்.

44. குமாஸ்தா வாழ்வின் இன்பங்களில் திளைப்பதால் எழுதவில்லை.

45. குடும்பம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதால் எழுதவில்லை

46. நான் வெறுப்பில் திளைக்கிறேன்

47. சதா காமத்தில் உழல்கிறேன்

48. பொறாமை மிகுந்திருக்கிறது.

49. இணையத்தில் எங்கு திரும்பினாலும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களாகவே காணக் கிடைக்கிறார்கள். இந்தப் பெரும்பான்மை அறிவு சமூகத்தில் எழுதாமலிருப்பதே தனித்துத் தெரிவதற்கான ஒரே வழி.

50. அலுவலக கணினியில் தமிழ் தட்டச்சு கடந்த ஒரு வருடமாக செயல்படவில்லை.

Featured Post

test

 test