Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Wednesday, April 18, 2012

பழி - சில கடிதங்கள்

“விஜி நான் அன்னிக்குப் போனது நீ இன்னொருத்தரோட படுத்திருந்தேன்னு இல்ல. எங்க நான் உன் வாழ்க்கைய பாழாக்கிடுவனோன்னு நினைச்சிதான் போனேன்” விஜி சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தாள். “நல்ல ஜோக் இது. நான் இன்னொருத்தன் பொண்டாட்டின்னு தெரிஞ்சிதானே என்கிட்ட பழகின? ஆரம்பத்துல இருந்தே நான் இன்னொருத்தன் பொண்டாட்டிதானே, அன்னிக்கு ராத்திரி மட்டும் என்ன உனக்கு திடீர் ஞானோதயம்?”

- இது பழி நாவலின் ஒரு பகுதி. ஆனால், பாண்டியில் விஜியை பிரிகையில்,

  “விஜி” என்றேன். மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்தாள். ”நான் போறேன்” ”நீங்க எதுக்கு போகனும்? அது தூங்கி எந்திரிச்சதும், நாங்க கிளம்பிடுறோம்” என்றாள் அதில் தெறித்த விலகலை, சடாரென என்னை யாரோவாய் சித்தரித்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ”எப்படி உன்னால முடிஞ்சது விஜி?” ”தெரில. திடீர்னு எனக்கு எல்லாம் தப்பா நடக்கிறா மாதிரி பட்டது.. ஒருவேளை நீங்க ஊருக்குப் போகாம இருந்திருந்தா இது நடந்திருக்காதோ என்னவோ.. நீங்க இல்லாத முத நாள் இரவு என்னால தூங்க முடியல. ஏதோ ஒரு மயக்கம் உங்க மேல இருந்தது போல. அது அன்னிக்கு தீர்ந்தா மாதிரி இருந்தது… நான் என்ன பண்ணிட்டிருக்கேன்னு யோசிச்சப்ப பயமா இருந்தது… என் மனசாட்சி உறுத்த ஆரம்பிச்சிருச்சி… என் வீட்டுக்காரர் எனக்காகதான் ஒரு கொல பண்ணிட்டு போலிசுக்கு மாட்டாம தலமறைவா சுத்திட்டிருக்கார். நான் என்னடான்னா இன்னொருத்தரோட எந்த குத்த உணர்வுமே இல்லாம ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கேன்னு ஏதோதோ தோண ஆரம்பிச்சிருச்சி… சரியா விடியற்காலைல இந்த மனுசன் கண்ணு முன்னால நிக்குறார்… -

விஜி தானே விலகி போனாள். நான் "பழியை" கிட்ட தட்ட நூறாவது முறை வாசிக்கிறேன். சின்ன உறுத்தல்.

  போதி ராஜா – ஃபேஸ்புக்கில்


அன்புள்ள போதி ராஜா,

எல்லாப் படைப்புகளுக்குமே ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நினைக்கிறேன். தேர்ந்த/ ஆத்மார்த்தமான வாசிப்பின் மூலம் எளிதில் அதை நெருங்கிவிட முடியும் என்பது என் நம்பிக்கை. உங்கள் வாசிப்பும் சுட்டி இருக்கும் விஷயமும் எனக்கு மீண்டும் கதையின் ஆன்மா குறித்தான நம்பிக்கையை வலுப்பெற வைக்கிறது. பழியின் மையமென நான் நினைப்பது இப் பகுதியைத்தான். அடல்டரி யில் ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு கிடையாது. ஒரு பெண் இரு துணைகளோடு வெளிப்படையாக வாழும் சூழல் இங்கு கிடையாது. விஜி கதாபாத்திரம் அப்படி ஒரு சூழலின் தேவையை முன் வைக்கிறது.

தானாக விலகிப் போகும் விஜி எப்படி அய்யனார் மீது பழி போட முடியும்? என்பது உங்கள் கேள்வி. விஜியை நாகராஜூடன் பார்த்தவுடனேயே இவனுக்கு விலகிப் போகும் எண்ணம் வந்துவிடுகிறது. நான் போறேன் என முதலில் முடிவெடுப்பது அய்யனார்தான். தவிர மிடில் க்ளாஸ் பின்னணியில் இருந்து வரும் விஜியிடம் இருவருடன் வாழ்வதற்கான மன தைரியத்தையும் நாம் எதிர்பார்க்க முடியாது. நாகராஜின் சதியில், காலம் தலைகீழாகப் புரட்டிப் போட்ட பின்பு மிகவும் இறுக்கமான/ பக்குவமான விஜி தன் நிலைக்கான காரணங்களாக நாகராஜையும் அய்யனாரையும் பார்க்கிறாள். அவர்களின் மீது வன்மம் கொள்கிறாள். அதிகாரம் கைக்கு வந்தவுடன் முத]லடியாக நாகராஜை அடிமையாக்குகிறாள். எதிர்பாரா விதமாக அய்யனாரை சந்திக்கும்போது அவனையும் கடுமையாக வசைகிறாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவனுக்காய் மடிந்தும் போகிறாள். என் நண்பர் ஒருவர் அரசியல் பிரக்ஞையோடு இந்நாவலை ஆண் மையப் பிரதி என விமர்சித்தார். ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்டேன். ஆனால் இதில் பெண்ணிற்கான அக்கறையும் இருக்கிறது என்பதை சற்று நெருங்கி வாசித்தால் அறிந்து கொள்ள முடியும். வரலாறாய் தொடரும் பெண்ணின் துயரங்களுக்கான மீறலை, புதிய திறப்பை பழியில் பதிவு செய்திருப்பதாகவே நினைக்கிறேன். 

உங்களின் தொடர் வாசிப்பிற்கும் அன்பிற்கும் நன்றி


Saturday, June 18, 2011

அய்யனாரின் விஜி

அய்ஸ்..

உங்க கதையை பற்றி என்னுடைய கருத்து இவை. பாதி எழுதி எழுதாமாலும் இருந்தது. இன்று தான் முடித்தேன். :) உங்கள் பார்வைக்கு.

நன்றி
கவிதா
http://kavithavinpaarvaiyil.blogspot.com/


அய்யனாரின் விஜி

முதல் பாகம் முழுவதுமாக படித்திருந்தேன். அது எங்கெங்கோ பயணித்து கொஞ்சம் எனக்கு கவனம் குறைந்தது, ரத்தம், கத்தி, காமம், கொலை ன்னு அதிகமாக இருந்தது. சில வார்த்தை பிரயோகங்கள் கெட்ட வார்த்தைகளாக நான் அறிந்துக்கொண்டாலுமே அவை எனக்கு புதிதாக இருந்தன. அய்யனாரின் கற்பனை வளமை கண்டு வியப்பாக இருந்தது. படுக்கை அறை வர்ணனைகள் திரும்பவும் வியப்பளித்தன. :) ஒரு வன்முறை நிறைந்த உடைகள் கலைந்த கவர்ச்சி கலந்த சினிமா பார்த்தது போன்ற ஒரு உணர்வு.

இரண்டாம் பாகம் வந்தபோது படித்தேன்.. அதே போன்ற ரத்தம், கத்தி, கொலை.. அதிகமாக பெண்கள் உறுப்புகள் அவற்றின் அதிக தேடல் என்று என்னமோ படிக்க ஆர்வமில்லாமல் போனது. பெண்களை இன்னும் கொஞ்சமாக கலந்திருக்கலாமென தோன்றியது.

நாவல் முடிந்து விஜி என்ற கதாப்பத்திரம் பற்றி அய்யனார் எழுதியவுடன், அவரின் கற்பனை மேல் இருந்த வியப்பு சற்றே பின் நோக்கி சறுக்கியது. இப்படியும் ஒரு பெண்ணை பற்றி எளிதாக எடைப்போட்டு விட முடியுமா? அதாவது ஒரு பெண்ணை பற்றி பேசும் போது, மேலோட்டமாக பேசலாம்.. அவரைப்பற்றி தெரியாதவரை, அல்லது அவரிடம் பழகும் வரை. அதில் மேற்கொண்டு சொன்னப்பட்ட கணவர் என்ற ஒருவரை ப்பற்றிய கருத்துரைகளை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மனிதர்களின் நடத்தை, செயல், பேச்சு போன்றவற்றை அதிக அளவில் கவனிக்கும் தன்மையுடைவளாக இருப்பதால், உடனே அவரின் கற்பனையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு தானா அய்யனார் என்ற எண்ணமே வந்தது.

சரி, எனக்குத் தெரிந்த ஒரு நிஜ விஜி யின் கணவரிடம் வருவோம். மேம்போக்காக பார்த்த வெளி ஆண்கள், விஜி யின் கணவன் அவளுக்கு ஏற்றவரில்லை என்று முடிவு செய்து பேசுகிறார்கள். காரணம், தோற்றம், பேச்சு, நடை, உடை, உடல் மொழி போன்றவை. இதில் யாருமே அந்த ஆணுடன் தொடர்புடையவர்களோ நேரடியாக பரிச்சயம் ஆனவர்களோ இல்லை. அப்படி இருக்க, அவரை ப்பற்றிய முன்முடிவு சரியா என்று தெரியவில்லை. பொதுவாக ஆண்களை அவர்களின் தோற்றம் நடத்தை பேச்சு வைத்து கணித்துவிட முடியுமா? அதாவது அவன் எதற்கும் தகுதியில்லாதவன், அதுவும் ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவு அவன் தகுதி இல்லாதவன் என எப்படி முடிவு செய்ய முடியும்? இதனை முடிவு செய்வது அவனை மணந்த பெண்ணால் மட்டுமே முடியும். அவள் வாய் திறந்து சொன்னால் மட்டுமே தெரியும்.

பல பெண்கள் தன் கணவர் பற்றி குறிப்பாக அவர்களின் படுக்கை அறை விஷயங்களை சக தோழிகளிடம் மிகவும் வெளிப்படையாக பேசுபவர்களாகவே உள்ளனர் என்பது ஆண்களுக்கு தெரியுமா? மாறாக ஆண்கள் தன் மனைவியை பற்றி வெளியில் மூச்சு கூட விடமாட்டார்கள் என்பதை அறிவோம். :).

எனக்கு தெரிந்த ஒருவர், வீடு முழுக்க சாமி படங்களும், யோகா, நாட்டு மருந்து, பக்தி புத்தங்கள் என படித்து எந்த நேரமும் ஒரு மயான அமைதியுடன் இருப்பார், இந்த நடைமுறை உலகத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இருக்காது, நடை உடை பாவனை எல்லாவற்றிலுமே அதீத சாந்தமும் நிதானமும் தெரியும். கடவுளை பற்றி பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாமல் பேசுவார். அவர் மனைவியிடமும் அதே அமைதியுடன் இருப்பார். அவர் மனைவி எந்த நேரமும் கத்தி ஆர்பாட்டம் செய்பவராகவே இருப்பார், இவர் மிக பொறுமையாக அவரை எப்பவும் சிரித்த முகத்தோடு சகித்துக்கொள்வார். எல்லாமே வீட்டில் மனைவி இஷ்டத்திற்கு தான் நடக்கும். மனைவி எங்கு போகிறார் வருகிறார் என்பது கூட இவருக்கு தெரியாது. இவரின் டெபிட், கெரிடிட் கார்ட் எல்லாமே மனைவியின் பர்சில் தான் இருக்கும். வாயில்லா பூச்சி எனவும், இவரை வெளியிலிருந்து கவனிப்பவர்கள் மிக எளிதாக "கூஜா" என்று சொல்லலாம். ஏன் வெளியில் சொல்லும் போது மனைவி வண்டி ஓட்ட, பின்னால் அமர்ந்து செல்வார். இவரை நான் கவனித்த வரை கணித்தது, மனைவிக்காக விட்டுக்கொடுக்கிறார், சுதந்திரம் கொடுக்கிறார், ஆனால் சொம்பு இல்லை என்பதே. :) . என் எதிரில் மனைவி அவரை மிக மோசமாக திட்டியபோது, அதே சிரிப்போடு, நீ பேசுவதற்கும் கத்துவதற்கும் என்னால் பதில் அளிக்க முடியும்.அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக உனக்கு அடங்கி போகிறேன் என்று நீ அர்த்தம் கொண்டால் அது உன் தவறேயன்றி என் தவறல்ல என்றார்.

அவருடைய மனைவியே என்னுடைய தோழி, தோழியின் மூலமே அவரை அறிவேன். ஆனால் அவரிடம் சில சமயம் கடவுள் பற்றிய விதாண்டாவாதத்தில் இறங்க முயற்சி செய்யும் போதே... நம்பி கேட்பவர்களிடம் விளக்கம் சொல்லலாம்... என்று முடித்துக்கொள்வார். அதிகம் பேசியதில்லை என்றாலும், தோழி அவர்களின் அந்தரங்கம் பற்றி ஒரு முறை சொன்ன போது.. அவரா இவர் என்று என்னை அதிசய வைத்தது.

வெளித்தோற்றதை வைத்தோ, அவர்களின் நடை உடை பாவனகளை வைத்தோ அவர் அப்படித்தான் என்று கணிப்பது சரியில்லை என்பதே என் கருத்து.

அன்புள்ள கவிதா,

தாமதமான இந்த பதிலுக்கு வருந்துகிறேன். உடனே பதில் எழுத முடியாமல் போய்விட்டது. பாராட்டுக் கடிதமாக இருந்தால் நன்றி என்ற ஒரே சொல்லோடு போய் இருக்கும். உங்கள் விமர்சனத்தை முக்கியமாக கருதியதால் பிறகு பதில் எழுதிக் கொள்ளலாம் என கிடப்பில் போட்டுவிட்டேன். ஒரு புனைவை வாழ்வின் யதார்த்தத்தோடு பொருத்திப் பார்க்கத் தேவையில்லை என்பது என் பார்வை. ஆனால் இந்த நாவலை நிஜமாகவே கருதியது என் விவரணைகளின் நம்பகத் தன்மை மீது மகிழ்ச்சி ஏற்படுகிறது. விஜி கணவனின் ஆண்மை குறித்து நாவல் ஒரு போதும் சந்தேகிக்கவில்லை. விஜியை அலைபவளாகவும் நாவல் சித்தரிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆண் மிக சுலபமாய் பிற பெண்களைக் காதலிக்க முடிவதுபோல் ஒரு பெண்ணாலும் இன்னொரு ஆணைக் காதலிக்க முடியும். உடல் ரீதியான திருப்தி மட்டுமே ஒரு பெண்ணுக்கு எல்லாவித முழுமைகளையும் தந்துவிடும் என எண்ணுவது சரியானதா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

விஜியின் கணவன் ஒரு லோக்கல் ரவுடி.விஜியை நயவஞ்சகமாக ஏமாற்றிப் படுகுழியில் தள்ளியவன். அவனை விஜி எதிர்கொள்ளும் விதத்தை, விஜியின் இன்னுமொரு பரிமாணத்தை நாவலின் இரண்டாவது பாகத்தில் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். போலவே ஒரு ஆண் இரண்டு பெண்களோடு எந்த வித குற்ற உணர்வும் கொள்ளாமல் சமூக அங்கீகாரத்தோடு வாழ்வதுபோல் ஏன் பெண்ணாலும் இரண்டு ஆண்களுடன் சமூக அங்கீகாரத்தோடு வாழ முடிவதில்லை என்பன போன்ற திறப்புகளையும் இரண்டாம் பாகத்தில் வாசிக்கலாம். மேலும் ஆண்தான் பெண்ணை வைத்துக் காப்பாற்ற வேண்டும் அவனுடன்தான் பெண் ஓடிப்போக வேண்டும் போன்ற சமூக வழக்குகள் குறித்துமான எதிர் கேள்விகளை நாவலின் இரண்டாம் பாகத்தில் வாசிக்கலாம். பெண் குறித்தான சில மாற்றுப் புரிதல்களை நாவலின் இழையோடே புரிந்து கொள்ளும்படிதான் எழுத மெனக்கெட்டேன். மற்றபடி தனியாக பெண் அடையாளம் குறித்து எதையும் நாவலில் வைக்க முயற்சிக்க வில்லை. அத்தியாயங்களாய் வெளிவரும்போதே வாசித்துவிட்டு உடனுக்குடன் விமர்சித்த நண்பர்கள் இரண்டாம் பாகத்தில் விஜியின் புதிய பரிமாணம் திடீரென்று ஏற்படுவது போன்ற தோற்றத்தை தருகின்றது என்றனர். இன்னொரு அத்தியாயமாக விவரித்து எழுதலாம் எனவும் கேட்டுக் கொண்டனர். இன்னொரு அத்தியாயமாய் விவரித்துச் சொல்ல நாவலின் களம் இடம்தராததால் போகிற போக்கில் சில விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டு மையத்திற்கு வந்துவிட்டேன்.

மற்றபடி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கெட்டவார்த்தைகள், இரத்தம், வன்முறை, படுக்கை அறை விவரிப்புகள் என எல்லாமும் இருக்கிறதுதான். அவற்றை வன்முறையின் அழகியலாகவும் வாசித்துப் பார்க்கலாம். உங்களின் பகிர்வுகளுக்கு நன்றி. எழுதிக் கொண்டிருக்கும் அடுத்த குறு நாவலையும் வாசியுங்கள்.

Friday, June 17, 2011

பழி சில கடிதங்கள்

ஹாய் அய்யனார் விஸ்வநாத்(பெயர் சரிதான் என நினைக்கிறேன்).

தொடர்ந்து அற்புதமான வாசிப்பு அனுபவம் தந்துக் கொண்டிருப்பதற்கு முதலில் வாழ்த்துக்கள்.

அதற்குமுன் மன்னிக்க இந்நாள்வரை பின்னூட்டங்களில் கூட பாராட்டாமைக்கு. ஓரிரு பாலா படங்களை பார்க்க நேரிடும்போது இறுதியில் உண்டாகும் ஒருவித கனமான அழுத்தத்தை உங்களின் பல படைப்புகளின் வாசிப்பின் இறுதியில் உணர்ந்திருக்கிறேன். சமீபத்திய உதாரணம் விஜி, தாமஸ் கேரக்டர்களை உள்ளடக்கிய குறுநாவல். கணக்கின்றி நிகழும் மீள்வாசிப்புகளில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம்.

எழுத்தில் வாசகனை கட்டிப்போட்டு ஆளுமை செய்யும் தங்களின் இந்த திறமை மேன்மேலும் பெருகி எங்களுக்கு அற்புதமான படைப்புகள் கிடைக்கவேண்டும் என்பது பேராவல்.

சில வருடங்களாக தொடர்ந்து தனிமையின் இசை குறிப்புகளை படித்துக் கொன்டிருந்தாலும் முதல்முறையாக இப்படி தனிமடலில் சொல்லத் தோன்றியதற்கு எனது அசாத்திய துணிச்சல் அல்லது எழுதும் முயற்சியும் காரணமாக இருக்கக்கூடும்.

ஆம். விஜி ஏற்படுத்திய பாதிப்பில் (அ) அய்யனாரின் பாதிப்பில் எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொளுங்கள். நானும் முதல்முறையாக ஓர் குறுநாவல்(ரொம்ப ஓவரா இருக்குல்ல...) அப்போ தொடர் அப்படின்னு வைச்சுக்கலாம்.

ஆம். எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஈ காக்கைகளும் வந்திராத என் வலைப்பூவில்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாய் என் அனாமதேய கிறுக்கல்கள் தங்களின் கடைக்கண் பார்வையில் என்றாவது ஒருநாள் படும் என்னும் நம்பிக்கையில்.

அன்புடன்
-சிவி

http://sssh24.blogspot.com/


வணக்கம் சிவி,
உங்கள் கடிதம் ஸ்பேமில் கிடந்தது. கவனிக்கத் தவறி விட்டேன். புலி பூனை என்றெல்லாம் எதுவும் கிடையாது சிவி. உங்களுடையதை நீங்களும் என்னுடையதை நானும் எழுதிப் பார்த்துக் கொள்கிறோம் அவ்வளவுதான்.
மாலை உங்கள் பக்கத்தைப் படிக்கிறேன்.
கடிதத்திற்கு நன்றி

Saturday, October 13, 2007

கடிதங்களை சேகரிப்பவனின் முதல் கடிதம்


உனக்கான ஒரு கடிதத்தை எப்படியாவது எழுதிவிடவேண்டுமென்கிற தவிப்பை இன்றோடு முடித்துவிட எண்ணி இதைத் தொடங்குகிறேன்.இந்த கடிதத்தில் என்ன எழுதவென்று சரியாய் தெரியவில்லை.தொடங்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இருந்தது (இனி அது பார்த்துக்கொள்ளும்) இதில் ஒரு சிக்கல் என்னவெனில் ஒழுங்கான திட்டமிடல்கள் எதுவும் இல்லாததால் இதன் வடிவம் கண்டிப்பாய் ஒழுங்காய் வராது எனத்தான் தோன்றுகிறது.எந்த ஒரு ஒழுங்கும், திட்டமிடல்களும் இல்லாத ஒன்றாய்த்தான் உன்னை நேசிக்க ஆரம்பித்தேன் மிகச் சரியாய் சொல்லப்போனால் அதுதான் என் இயல்பாக இருக்கிறது. என் நேசத்தினை பிரியத்தினை உன்னிடம் சரியாய் சொல்லிவிட்டதாய்த்தான் நம்புகிறேன்.தொலைபேசியிலோ நேரிலோ சண்டை போடுவதைப் போல என்னால் கடிதத்தில் உன்னுடன் சண்டை பிடிக்க முடியாது.உன் மீதான என் கோபங்கள் என் எரிச்சல்கள் இவற்றை வார்த்தைகளாக மாற்றக்கூடிய அவகாசம்தான் எப்போதும் கிடைக்கிறதே தவிர அவற்றை எழுத்துக்களாக்கிப் பார்க்கும் வரையில் அவை நீடிப்பதில்லை.என் கடிதங்களுக்கு நீ பதில் போடுவதில்லை என்கிற உன் கொலுசு சிணுங்கல்களுக்கு பதிலாய் இருக்கட்டுமே என்கிற நினைப்பில் ஓய்வான மனநிலையில் இதை எழுத ஆரம்பிக்கிறேன்.

என் பதின்மங்களில் கடிதங்கள் மீது மிகப்பெரிய காதல் இருந்தது.யாரிடமிருந்தாவது வந்து சேரும் கடிதங்கள் என்னுள் ஏற்படுத்தும் மலர்ச்சியினை மழையில் நனைந்த மரமல்லிப் பூக்களின் வாசத்தை ஆழமாய் உள்ளிழுக்கும்போது ஏற்படும் பரவசத்தினோடு ஒப்பிடலாம். பொங்கல் மற்றும் தீபாவளி வாழ்த்து அட்டைகளை அனுப்பாத நண்பர்களை அந்த நொடியிலிருந்து வெறுக்க ஆரம்பிப்பதும், அனுப்பும் நண்பர்களை மிக அதிகமாய் நேசிக்க துவங்குவதுமான மனநிலை அப்போதெனக்கு இருந்தது.மேலதிகமாய் கடிதங்களை சேகரிப்பது என்னுடைய பிடித்தமான செயலாக இருக்கிறது. என் விடுதி முகவரிக்கு வந்து சேர்ந்த முதல் கடிதத்தை கூட இன்னும் பாதுகாப்பாய் வைத்துள்ளேன்.இந்த சேகரித்தலில் இனம் புரியாத ஒரு நேசத்தினை நான் உணர்கிறேன். எனக்காக எழுதப்பட்ட வரிகள் என்றும் என்னைத் தேடிப் பயணித்து வந்த எண்ணங்கள் என்றுமாய் நினைத்துக்கொள்வேன்.இந்த சேகரித்தல்களில் இன்னொரு அசெளகரியமும் உள்ளது.இந்த பழைய கடிதங்கள் எப்போதும் இறந்த காலத்தை கண்முன் நிறுத்துகிறது.கடிதத்தை சேகரித்து வைத்திருக்கும் பெட்டியினை திறக்கும்போது இழந்த எல்லாமும் மீண்டும் உயிர்பெறத் துவங்குவதாய் தோன்றும்.வித்தைக்காரரின் கைகளிலிருந்து திடீரெனப் பறக்கத் துவங்கும் புறாவினைப் போல மனம் சடுதியில் அந்த கடிதம் எழுதப்பட்ட சூழலுக்குத் தாவிவிடும்.பின்பு அலைந்து திரிந்து நிகழிற்கு திரும்பும்போது ஏற்படும் வெறுமையை விட வலி மிகுந்தது எதுவுமில்லை.

கங்காவின் கடிதங்கள்,ஹேமா தன் சாய்வான எழுத்துக்களில் எனக்கெழுதிய நூற்று சொச்ச கடிதங்கள், என் அப்பாவின் உடைந்த கையெழுத்து, என் அண்ணனின் கொம்பில்லாத எழுத்துக்கள், வீணாவிடமிருந்து வந்த வாழ்த்து அட்டைகள், அபூர்வமாய் சங்கமித்ரா எழுதிய ஒரே ஓர் கடிதம், கல்லூரி நண்பர்கள்,பள்ளி நண்பர்கள் எனக்கனுப்பிய வாழ்த்து அட்டைகள், “ஏதாவது வேல அங்க கெடைக்குமா மச்சான்” கள் தீபாவளி பொங்கல் வாழ்த்துக்கள் என குவிந்திருக்கும் பெட்டியினை இப்போதெல்லாம் திறக்க அவகாசம் கிடைப்பதில்லை.மேலும் ஒரு கட்டத்தில் கடிதங்கள் வருவதும், எழுதுவதும் சுத்தமாய் நின்று போயிற்று.

உன்னுடைய முதல் கடிதம் எனக்கு வந்த போன வருடத்தின் செப்டம்பர் மாதத்தின் ஒரு நாளை இப்போது நினைத்துப்பார்க்கிறேன் அந்த நாள் மிகுந்த மகிழ்ச்சியளித்தது அந்த மகிழ்வான மனநிலையை இப்போது நினைவு கூர்ந்தாலும் அந்த மகிழ்ச்சியின் மீதங்கள் நினைவில் பரவுகிறது.முதல் கடிதத்திலியே உன் காதலை சொல்லியிருந்தாய் இருபத்தியிரண்டு பக்கங்களில் நீ சொல்லியிருந்த உன் காதல் என்னை மூச்சடைக்க செயதது. கடிதம் படித்து முடித்துவிட்டு என்னால் சீராய் மூச்சுவிடமுடியவில்லை.பிட்டர்ஸ்வீட் என்கிற ஆங்கில வார்த்தைக்கு அந்த சூழலைத்தான் நினைவு கொள்கிறேன்.ஏதோ ஒரு பயமும் தவிப்பும் உடல் முழுக்க பரவத் துவங்கியது.சலனங்களை விதைப்பது மனதை அசைத்துப்பார்ப்பது நம்பிக்கைகளையும் இணக்கத்தை ஏற்படுத்துவது போன்ற செயல்களை நான் அறவே தவிர்த்து வந்தேன் எப்படியோ உன்னிடத்தில் அதன் சாத்தியக்கூறுகளை நான் செயல்படுத்தியிருப்பது எனக்கே ஆச்சர்யமான ஒன்று.

உன் காதல் புறக்கணிக்க முடியாத வலிமையான ஒன்றாய் என் முன் அமர்ந்து புன்னகைக்கிறது.என் அத்தனை விறீடல்களையும் ஒரு பொருட்டாய் மதிக்காமல் பசி கொண்ட பாம்பு இரையினை மெல்ல விழுங்க ஆரம்பிப்பதைபோல உன் நேசங்களும் பிரியமும் என்னை விழுங்க ஆரம்பிக்கிறது.உன் காதலை மொத்தமாய் எடுத்துக்கொள்ளமுடியாத என் தவிப்பினை எப்படி சொல்வது?.யாரையுமே காதலிக்க முடியாமல் போகச் செய்துவிட்ட காலத்தின் இரக்கமற்ற சாபத்தினை இடையறாது நினைத்துக் கொள்கிறேன்.இந்த கணத்தில் செய்ய இயலுவதை மட்டும், இந்த கணத்தில் என்னால் தர முடிந்ததை மட்டும் பிரியத்தின் மிகுதிகளோடு நான் தருகிறேன் என்பதைத்தவிர சொல்ல வேரெதுவும் இல்லை.

முன்பொரு காலத்தில் நான் இரவு முழுக்க விழித்திருந்து கடிதங்கள் எழுதி குவித்ததைப்போல இன்று எனக்காய் நீ விழித்திருந்து கடிதங்களை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறாய். “எதை விதைக்கிறீர்களோ அதை அறுவடை செய்கிறீர்கள்” என்பது இந்த மட்டில் உண்மையாயிற்று.என் கடிதப்பெட்டியினுள் உன் கடிதங்களையும் சேர்த்துவிட அஞ்சுகிறேன்.இந்த பெட்டி தோல்விகளின் உள்வாங்கலாக மட்டும்தான் இருக்கிறது.நீயும் மற்றுமொரு துயரத்திற்கான ஆரம்பம்தான் என்பது தெளிவாய் தெரிந்திருந்தும் இந்த விளையாட்டினை ஆரம்பிக்கிறேன்.தோற்றுவிடுவோம் எனத் தெரிந்தே விளையாடுவதில் பெரிதாய் இழப்புகள் ஏற்படாது என்பது போல காட்டிக்கொண்டாலும் இழப்புகள் எப்போதும் இழப்புகளாக மட்டுமே இருக்கின்றன.

இரண்டு பக்கங்களுக்கு மேல் எழுத முடியவில்லை தேவி!.. ஏதோ ஒரு சங்கடம் அடி மனதில் பரவுகிறது...நீளம் குறைவான இந்த கடிதத்தை நீ மிகுந்த ஆவலுடன் வேகவேகமாய் படித்துமுடிப்பதை நினைத்துக்கொள்கிறேன். அது ஐஸ்கிரீமை வேகமாய் தின்றுவிட்டு மேலும் எதிர்பார்க்கும் சிறுமியின் மனோநிலையோடு ஒத்துப்போவதாய் இருக்கலாம்.

நாட் எக்ஸிஸ்ட்,புல்ஷிட்,சுயநலம், ஃபார் த சேக் ஆஃப் செக்ஸ்,என்றெல்லாம் ஒரு பாறையின் மீதேறி சத்தமாய் பிரசிங்கித்துக்கொண்டிருந்த என் தோள் தொட்டு திருப்பினாய் இடைவிடாது சொற்களைக் கொட்டியபடியிருந்த என் உதடுகளில் மிகுந்த தவிப்புகளோடு நீ முத்தமிட்ட கணத்தில் சகலமும் உறைந்து போனது.என் விரல்களை பிடித்துக்கொண்டபடி நீ முன்னால நடந்துபோகிறாய் இதோ உன் தடம் பற்றி பின்னால் நடந்துவருகிறேன்.நீ கூட்டி செல்லும் இந்தப்பாதை நானறியாதது வியப்பும் பிரம்மிப்புமாய் வேடிக்கை பார்த்தபடி உன் பின்னால் வருகிறேன்.அடர்வான மர இடைவெளிகளில் வெகு இயல்பாய் நீ நடந்து செல்கிறாய்.வளைந்தும் நெளிந்தும் குறுகியுமான இப்பாதைகளில் உன் வெகு பழகிய லாவகமான நடை இப்பாதைகளின் ஏகபோக உரிமைக்காரி என்பதுபோல இருந்தது...நீ! அற்புதங்களால் நிறைந்தவள்.

நேசங்களை மட்டுமே கொண்டிருக்கும் உன் உலகத்தில் என்னை அனுமதித்ததிற்கு நன்றி.’இது நானறியாதது’,’நான் இதுபோன்று இருந்ததில்லை’ என இடைவிடாது புலம்புகிறேன்.’நான் உனக்கு மட்டும்தான்’ என்றபடி இறுக்கி முத்தமிடுகிறாய்.நான் கொஞ்சம் கொஞ்சமாய் இறந்துகொண்டிருக்கிறேன்.

இழப்புகள் இழப்புகளாகவும்
நேசங்கள் நேசங்களாகவும்
பிரியங்கள் பிரியங்களாகவும்
முத்தங்கள் முத்தங்களாகவும் தான்
எப்போதுமிருக்கின்றன

- நான் -

Friday, August 3, 2007

அன்புள்ள சுகுணாதிவாகர்



அ மார்க்ஸ் உங்க நண்பரா
கட்டுரைகள் தொகுப்பா வந்திருக்கா?
ஆமாம், ஏன்?
யாருடைய கட்டுரைகளைக் கேட்கறீங்க?
தீராநதியில் படிக்கிறதோட சரி
அ மார்க்ஸ்
தனி தொகுப்பு ஏதாவது வந்திருக்கா
சிரிப்புதான் வருது, அந்த கிழட்டுபாடு ஒரு 75 புத்தகம் எழுதியிருப்பாரு.
:)
மன்னிச்சிரு நண்பா
எனக்கந்த ஞானம் கம்மி
தேடி படிக்கனும்
நீதான் காரல்மார்க்ஸையே யாருன்னு கேட்ட ஆளாச்சே((-
-------------- ××----------------
புதன் கிழமை இரவு 1 மணிக்கு வந்திருந்த குறுந்தகவலை வியாழக்கிழமை காலை ஆறு மணிக்குத்தான் பார்த்தேன்அதிர்ந்துபோய் கதிரை எழுப்பியதில் அவனுக்கும் விவரங்கள் தெரியவில்லை.ஜெஸிலாவின் கணவர் ரியாஸ் தொலைபேசி உறுதி செய்தார். நாள்முழுக்க கண் முன் அந்தக் குழந்தைகளின் பிம்பம் வந்து வந்து போய் கொண்டிருந்தது.தான் இருக்கும் இடத்தை எப்போதுமே ககலப்பாக வைத்திருக்கும் தனித்தன்மை கொண்ட ஆசிப் இந்த இழப்பை எப்படித் தாங்கிக்கொள்வார் எனத் தெரியவில்லை.ஆசிப்பின் குரலில் இருந்த உருக்கம் மனசை அசைத்துப்போட்டதென துக்கத்தில் கொஞ்சத்தை மடலில் அனுப்பியிருந்த மதிக்கும் தொலைபேசியில் கதறி அழுத ஜெஸிலாவிற்க்கும் பதில் சொல்ல மறுத்து எப்போதுமே மிதந்தலையும் என் நேசத்திற்க்குரிய சொற்கள் அசிங்கமாய் ஓடி ஒளிந்துகொண்டன.
-------------- ××----------------
பணம் என்கிற மிகச் சக்திவாய்ந்ததாய் சொல்லப்படுகிற வஸ்துவை வெற்றுத்தாள்களாக கருதத் துவங்கினால் துபாய் வாழ்வு கொண்டாட்டம்தான்.புனிதங்களை கட்டுடைத்ததில் பெரும்பங்கு நடனப்பெண்களைத்தான் போய் சேர வேண்டும்.ஒருமுலை விலக்கியோ மேல் துப்பட்டா இல்லாமலோ மதுவை கண்ணாடி குவளைகளில் வார்க்கும் பெண்கள் அனைவரும் உயிருள்ள பின்நவீன பிரதிகள்.தடுக்கி விழுந்தால் தென்னிந்திய மதுவிடுதிகள் நிறைந்த ஊர் இது.பனோரமா பாரில் நடனமாடும் ராதிகா பெரும்பாலும் வெள்ளை நிற உடைகளைத்தான் அணிந்திருப்பாள்.திறந்த முதுகும் பிதுங்கிய மார்புமாய் உயிர் உருகி நடனமாடும் அவள் தேவதை/மோகினி சாயலில் இருப்பாள்.ராசா ராசா உன்ன வச்சிருக்கென் நெஞ்சிலே ரோசா பூவப்போல என அவள் உருகும்போது அரைபோதையில் வாலியையும் வைரமுத்துவையும் கொண்டாடத் தோணுகிறது.
-------------- ××----------------
சுகுணாவின் கடிதங்களைப் போல ஹேமாவின் கடிதங்களும் குழந்தைத்தனமானதுதான்.அவள் எழுதிய 47 கடிதங்களிலும் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் நன்றாக சாப்பிடவும் என்பதைத் தவிர்த்து மேலதிகமாய் ஒன்றுமிருக்காது.எப்போது உங்களுக்கு கடிதமெழுத ஆரம்பித்தாலும் கிண்டலடிப்பீர்களே என பயந்து பயந்துதான் எழுதுகிறேன் ஆனால் இதற்க்கு மேல் எழுதத் தோணவில்லை என்பாள்.ஆனால் அவளின் கடைசிக் கடிதம் மட்டும் 13 பக்கங்களிலிருந்தது.சுகுணா,ஹேமா போல எப்போதும் வாழும் ஒருத்தி / ஒருவன் எல்லோர் மனதிலும் இருக்ககூடும்.
-------------- ××----------------
யார் கடிதமெழுதினாலும் பத்திரமாய் வைத்துக்கொள்வது இது வரை பழக்கமாக இருக்கிறது பத்தாம் வகுப்பு முடித்த கையோடு லீவிற்க்கு ஊருக்கு போன ராஜேஷின் கடிதம் கூட இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்.25 பைசா அஞ்சலட்டையில் சாய்வான எழுத்துக்களில என் அப்பா எனக்கெழுதிய ஒரே ஒரு கடிதத்தை அவ்வப்போது புன்னகையோடு பார்த்துக்கொள்வதுண்டு.
-------------- ××----------------
புகழேந்தி வாத்தியார் இங்கிலாந்தில் படித்தவர் என்பது நம்புவதற்க்கு சற்று கடினமான விதயம்.நல்ல கருப்பும் பெரிய தொந்தியுமாய் ஒரு உருவம்.ஆனால் அவரைப்போல் ஆங்கிலம் பேச ஒருவரும் இல்லை.அல்லது நான் பார்த்ததில்லை.மனிதர் ஆங்கிலச் சிறுகதைகள் வரும் இரண்டாம் தாளை எடுக்கும்போது உருகிப்போக வைப்பார்.குறிப்பாய் எ செல்பிஷ் ஜெய்ண்ட் என்றொரு கதை குழந்தைகளை தனது தோட்டத்தில் விளையாட அணுமதிக்காத ஆஜானுபாகான ஒருவனின் கதையை அவர் சொல்லிய விதம் இன்னும் மறக்க முடியாது.தன் உடல் முழுதும் அடுத்தவர்களின் காயங்களை சுமந்திருப்பதாய் ஒரு சிறுமி சொல்லும் கட்டத்தில் அவர் உட்பட அனைவரும் உருகிப்போனோம்.கடுகடுவென முகம் அவருக்கு ஆல் பெலோஸ் கமிங் ஃப்ரம் காடு என எல்லரையும் திட்டுவார்.ஒருமுறை டு யு நோ வாட் ஈஸ் ரேபிட் என என் பக்கத்திலிருந்தவனை கேட்டதற்க்கு அவன் சாதாரணமாய் எழுந்து எலி சார் என்றான்.
-------------- ××----------------
ஓசூரில் வாழ்ந்தவரை ஆதவன் தீட்சண்யா,க.சீ சிவக்குமார்,போப்பு, பா வெங்கடேசன் போன்ற செறிவான ஆட்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பார்ப்பேன்.குறிஞ்சி திரைப்பட இயக்கத்தின் திரைப்படங்களை ஓரமாய் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த நபர்களில் நானும் ஒருவனாய் இருந்திருக்கிறேன்.எப்போதும் வாயைத் திறந்திராமல் வந்து போன சுவட்டை ரெஜிஸ்டர்களில் மட்டும் குறித்துவிட்டு ஓடிப்போய்விடுவேன்.அவர்களின் கலந்துரையாடல்கள் பெரிய உலகத்தின் சன்னல்களாக இருந்தது.ஒருவேளை ரமேஷின் தம்பி என்றால் யாருக்கேனும் அபூர்வமாய் நினைவிற்க்கு வரலாம்.இந்த முறை விடுமுறைக்கு போகும்போது நிறைய கேள்விகளுடன் செல்ல உத்தேசம்.

-------------- ××----------------
கேலி,கிண்டல்,எள்ளல்,கலகம்,திமிர் இவற்றோடு உன் அன்பும் கட்டற்றதாய்த்தான் இருக்குமென நம்புகிறேன்.நான் ஓரினச்சேர்க்கையாளனாய் இல்லாதிருப்பது சற்று வருத்தமாய் இருக்கிறது.அப்படி இருந்திருந்தால் சித்தார்த் மற்றும் இளங்கோவோடு உன்னையும் முத்தமிட்டிருக்கலாம்.
-------------- ××----------------

Featured Post

test

 test