Mubi தளத்தில்
கீஸ்லோவெஸ்கி, ஹெடரோவ்ஸ்கி, ஆக்னஸ் வர்தா, சாப்ளின், டிண்டோ ப்ராஸ், எரிக் ஹோமர் போன்ற
பிரபலமான இயக்குநர்களின் படங்களைத் தவிர்த்து அதிகம் அறிமுகம் இல்லாத படங்களும் காணக்
கிடைக்கின்றன. ஒரு வகையில் அபூர்வமான படங்கள் என்றும் சொல்லிவிடலாம். அவற்றை வரிசையாகப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன். கொலம்பியா மற்றும் ப்ரஸீல் நிலம் சார்ந்த படங்களே இப்போதைய
தேர்வாக இருக்கின்றன.
இரண்டு நாட்களுக்கு
முன்பு பார்த்த ப்ரஸீல் சினிமாவான Casa Grande (2014) ஓர் அற்புதமான அனுபவத்தைத் தந்தது.
ரியோ டி ஜெனீரோ நகரமும் அதன் இரு வேறு சமூக அமைப்பும் படத்தில் துல்லியமாகப்
பதிவாகி இருந்தது. மேல் தட்டு வர்க்க வாழ்வும் விளிம்பு நிலை வாழ்வும் ஒரு பதின்மனின்
பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. பள்ளி இறுதியாண்டு பயிலும் பணக்கார வர்க்கத்தைச்
சார்ந்த பதினேழு வயது மாணவன் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மன நெருக்கடிகளை அவன் வாழும்
சமூகம், அங்கு நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார சிக்கல்களோடு சேர்த்துப் பேசியிருப்பது
மிக ஆரோக்கியமான சினிமாவுக்கான திறப்பைத் தந்தது.
ரியோ டி ஜெனீரோ
நகரத்தின் மலையையும், கடற்கரையையும், பொது இடங்களில் எவ்விதத் தயக்கமுமின்றி முத்தமிட்டுக்
கொள்ளும் பதின்மர்களின் உலகையும், அவர்கள் ஆடும் ஃபோரோ நடனத்தையும் பார்த்துவிட்டு
ப்ரஸீல் செல்வதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தும் போகாமல் விட்டுவிட்டோமே என வருந்தினேன்.
போலவே இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பதின்மர்களின் ஆண் பெண் பாகுபாடுகள்
கடந்த சுதந்திரமான அனுகுமுறை என்னை வியப்பிலாழ்த்தியது. பாலியல் பாகுபாடுகளைக் கடந்த
சமூகம்தான் எல்லா வகையிலும் மேம்பட்ட சமூகமாக இருக்க முடியும். படத்தின் நாயகனான
Jean அப்படி ஒரு முடிவைத்தான் இறுதியில் எடுக்கிறான்.
No comments:
Post a Comment