Showing posts with label இருபது வெள்ளைக்காரர்கள். Show all posts
Showing posts with label இருபது வெள்ளைக்காரர்கள். Show all posts

Tuesday, April 18, 2017

விமர்சனமும் சுயமும்






தற்செயலாக இருபது வெள்ளைக்காரர்கள் குறுநாவல் தொகுப்பிற்கு எழுதப்பட்ட விமர்சனத்தை வாசித்தேன்.  திண்ணை இணையப் பத்திரிக்கையில் இரா. ஜெயானந்தன் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம் எழுதியிருக்கிறார். சமீபமாகத்தான் கண்ணில் பட்டது.  வழக்கமான விமர்சன சொற்களைப் பயன்படுத்தாமல் அவர் மனதிற்கு என்ன பட்டதோ அதை எழுதியிருக்கிறார்.

இருபது வெள்ளைக்காரர்கள் - புத்தக வெளியீட்டு விழாவிற்கு நானே போகவில்லை.  எழுதுவதோடு எழுதுபவனின் வேலை முடிந்துவிடுவதாகத்தான் நினைக்கிறேன்.  புத்தகம் பார்த்தீர்களா என்கிற சாதாரணக் கேள்வியைக் கூட  நண்பர்களிடம்  வெகு கவனமாகத் தவிர்த்தேன். என்னுடைய எந்த முயற்சியும் இல்லாமலேயே இருபது வெள்ளைக்காரர்கள் அது  சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்தது. படைப்பு அதற்கான வாசகரைத் தேடிக் கொள்ளும் என்பதெல்லாம் உண்மைதான். மேலதிகமாய் இத்தொகுப்பின் மூன்று குறுநாவல்களையும் இணையத்தில்தான் எழுதினேன். உடனுக்குடன் அதை வாசித்தவர்கள் தங்களின் பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது.

பழி எழுதப்பட்ட காலத்தில் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல புதிய வாசகர்கள் அறிமுகமானார்கள். நானுமே பழியைப் பித்து நிலையில்தான் எழுதினேன். இன்றளவும் எனக்கு பிடித்த நாவல் பழிதான்.  பழி தந்த பரவசத்தை  இனி எப்போதுமே அடையமுடியாது எனதான் நினைக்கிறேன்.  முதல் நாவல் என்பதால் தோன்றிய எண்ணம் மட்டுமில்லை என்பதை வாசித்தவர்கள் அறிந்திருப்பார்கள். காமமும் வன்முறையும் அதன் ஆழத்திலிருந்து வெளிப்பட்டன. பழியை இரண்டு பாகங்களாக எழுதினேன். இரண்டாம் பாகத்திற்கு அதிகம் உழைக்க வேண்டி இருந்தது. நான் ஒருபோதும் சென்றிருக்காத ஆந்திராவின் பல பிரதேசங்களில் கதை நிகழ்ந்தது. கோதாவரியாறு தொடங்கி கங்காவரம் வரை ஊர்களை கூகுலில் பிடித்தேன். மேப்பைத் துருவித் துருவி கதை நிகழ வேண்டிய களங்களை அமைத்தேன். தெலுங்கு வார்த்தைகள் அனைத்தையும் நண்பர் கென்னிடமிருந்து பெற்றேன். ரோட் மேப் இன்று வரை மனப்பாடமாகி இருக்கிறது. உண்மையிலே பழியை சாகஸ மன நிலையில்தான் எழுதினேன். அப்படியே அது எழுத்திலும் வந்தது. இன்றளவும் நேர்ப் பேச்சில்  பழியைப் பற்றி யாராவது பேசுகிறார்கள். பயங்கரமான ரைட்டப் என்பது அவர்களிடமிருந்து வரும் முதல் சொல். அதை ஏன் யாரும் அச்சில் கட்டுரையாக எழுதவில்லை என்பது எனக்குத் தெரியாது. உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு அது அவசியமும் இல்லை.  ஒன்றை எழுதும்போது பெரும் பரவசத்தை விடவா, அதைப் பற்றி பிறர் எழுதி வாசிப்பதில் வந்துவிடப் போகிறது?

மழைக்காலம் நிறையப் பெண் வாசகர்களைத் தந்தது. அதில் பயன்படுத்திய கவிதைகள், புதுவை நகரம், மழை, காமம், பேச்சு, போதை, இளமையின் ஊசலாட்டம் என மிதமான வாசிப்புற்குத் தேவையான எல்லாமும் இருந்தன.  என் வாழ்வின் முக்கியமான ஒரு காலகட்டத்தை எழுதிப் பார்க்க விரும்பினேன்.  எழுத எழுத அது வேறு வடிவத்தைப் பெற்றது. பழிக்கு அப்படியே நேரெதிராய் அந்நாவல் இருந்தது.  பெயர் உட்பட மழைக்காலம் நாவலில் வரும் எந்தக் கதாபாத்திரத்தையும் மாற்றவில்லை. அப்படியே இருந்தது, அப்படியே எழுதினேன். சில நண்பர்கள் தாமதமாகப் படித்து அடப்பாவி என்றனர். சிரித்துக் கொண்டேன்.

இருபது வெள்ளைக்காரர்கள் இன்னொரு தளம். சுதந்திரத் தன்மையின் மீதிருக்கும் என் விருப்பமும்  அதற்கு நேரெதிரான குமாஸ்தா வாழ்வின் யதார்த்தமும் சேர்ந்து இதை வடிவமைத்திருக்கும் என எண்ணுகிறேன். இதன் திரைக்கதை வடிவம் இன்னும் நன்றாக வந்திருக்கிறது. பார்ப்போம்.

அச்சில் பழியைத் தனியாகக் கொண்டுவர வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது. ஓரிதழ்ப்பூவை எழுதி முடித்த உடன் நான்கு குறுநாவல்களையும் தனித் தனியாக அச்சில் கொண்டு வர முயற்சி செய்கிறேன். ஓரிதழ்ப்பூ வை எழுதும் இந்நாட்களில் மனம் முழுக்க திருவண்ணாமலை அடிவாரத்தில் தஞ்சமடைந்திருக்கிறது. அகத்திய மாமுனியை  வேறு அங்கு அலையவிட்டிருக்கிறேன். முன்பு வரைவு செய்திருந்த வடிவம் மாறிப் போய்விட்டது. கொஞ்சம் நெருக்கடியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் மனம் தீவிரத் தன்மை அடைந்திருக்கிறது. விரைவில் முடித்துவிடுவேன் என நம்புகிறேன்.

இந் நான்கு குறுநாவல்களுக்கும் பொதுவான ஒரு தன்மை இருக்கிறது. அதைப் பற்றி பிறகு பேசுவோம்.

திண்ணையில் விமர்சனம் எழுதிய ஜெயானந்தன் அவர்களுக்கு நன்றி.



Tuesday, April 17, 2012

இருபது வெள்ளைக்காரர்கள் - முன்னுரை

18 டிசம்பர் 2011 துபாய் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வித சாகஸ மன நிலையில் திளைத்துக் கொண்டிருந்தேன். மனம் எப்போதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மிகவதிக உணர்வெழுச்சி என்னை முழுவதுமாய் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. ஒரு நாளின் வரிசைக் கிரமத்தில் ஒரு நொடியைக் கூட முன் பின் மாற்ற அனுமதிக்காத என்னுடைய நிகழ், மிகுந்த இயலாமையோடு அத்தனை எழுச்சியையும் கொண்டு போய் எழுத்தில் கொட்ட வழிவகுத்தது. அந்தப் பேரெழுச்சியில் எழுதப்பட்டதுதான் ‘பழி’. இரண்டு பக்கங்கள் எழுதினாலே இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தூண்டும் மனதின் அரிப்புகளையெல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு நூறு பக்கங்கள் எழுதி முடித்தேன். ஆறு மாத மகனும் மனைவியும் ஊரிலிருந்து வந்த பின்னர் மனதின் பரபரப்பு சற்று அடங்கியது. நானும் எழுதியதை தூக்கிப் போட்டுவிட்டு மிக சந்தோஷமாய் மகனின் உலகத்திற்குள் நுழைந்து கொண்டேன். பாதியில் விட்ட பழியை எடுத்துப் படித்த என் மனைவி, அதன் காமத்தையும் வன்மத்தையும் கண்டு மிரட்சியடைந்து இதைப் பிரசுரித்தால் படிப்பவர்கள் உன்னைக் கெட்டவனாக நினைத்துக் கொள்ளப் போகிறார்கள் என பயந்தாள். எழுதியதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே எனவும் அறிவுறுத்தினாள்.

இடையில் மழைக்காலம் கதைக்கான முடிச்சு மனதில் விழுந்தது. அம்முடிச்சை அப்படியே கொண்டுபோய் பாண்டிச்சேரியில், நான் கடந்து வந்த சூழலில் பொருத்திக் கொண்டு எழுத ஆரம்பித்தேன். ஆனால் அந்தக் கதைக்கு தேவையான மென்மையையும் காதலையும் என்னால் எழுத்தில் கொண்டு வரவே முடியவில்லை. முழுக்க வன்மத்திலும் காமத்திலும் மனம் தகித்துக் கொண்டிருந்தது. எழுதாமல் தீராதிது என உணர்ந்ததும் மழைக்காலத்தை அழித்து விட்டு மீண்டும் பழியை தூசி தட்டி, உத்திகளைப் புகுத்தி, அத்தியாயங்களாய் பிரித்து வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். சாகஸம், காமம்,வன்மம், பரபரப்பு என வெகுசன வாசிப்பிற்கு தேவையான எல்லா விஷயங்களும் பழியில் இருந்ததால் இணையத்தில் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல புதிய வாசகர்களின் அறிமுகமும் கிடைத்தது. என் வலைப் பக்கத்தைப் பார்த்தாலே விழுந்தடித்துக் கொண்டு ஓடும் பலரையும் இந்நாவல் கட்டிப் போட்டது. போலவே பல விமர்சனங்களையும் எதிர்கொண்டேன். இலக்கிய வாசகர்களிடமிருந்தும், பெரும்பாலான வாசகிகளிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுக் கொண்டேன். ஆனால் எல்லாத் தரப்பு வாசகர்களும் ஒரு விஷயத்தை ஒத்துக் கொண்டார்கள். அது பழியின் சுவாரசியம். ஒரே மூச்சில் படித்தேன் என்பதுதான் எல்லோருடைய பகிர்வாகவும் இருந்தது.

பழிக்கு கிடைத்த வரவேற்பு தந்த உற்சாகம் அடுத்தடுத்து மழைக்காலத்தையும் இருபது வெள்ளைக்காரர்களையும் எழுத வைத்தது. மழைக்காலம் குறுநாவலில் வரும் மையப் பாத்திரங்களைத் தவிர்த்து பிற எல்லாப் பாத்திரங்களும் நிஜமானவை. இடம்,சூழல், பெயர் என எதையும் மாற்றவில்லை. எழுதித் தீரா சில விஷயங்களின் வரிசையில் காதலுணர்வும், இளமையும்தான் முதலிடத்தைப் பிடிக்கும் போல. என்னால் விட்டு வெளியேறவே முடியாத பொறிதான் மழைக்காலமாக வடிவம் பெற்றது. சில மென் உணர்வுகளை இந்தக் குறுநாவல் அசைத்துப் பார்க்கலாம்.

என்ன எழுதினாலும் அதாகவே, அந்த எழுத்தின் உணர்வாகவே கிடப்பதுதான் என்னுடைய மாபெரும் சிக்கல். இந்த சிக்கல் பிற படைப்புகள் மூலமும் அவ்வப்போது ஏற்படுவதுதான். பழி எழுச்சியையும், மழைக்காலம் காதலுணர்வையும், இருபது வெள்ளைக்காரர்கள் நடுவாந்திரமாக ஒரு மன உணர்வையும் தந்தது. ஒரே நேரத்தில் நெருங்கியும், விலகியும் சஞ்சரிக்கும் மனதை இருபது வெள்ளைக்காரர்கள் உருவாக்கியது. திருவண்ணாமலை சமுத்திர ஏரிக்கரை, இரமணாசிரமம், மலை சுற்றும் பாதை, ஜவ்வாதுமலை அடிவாரம், வனம்,மலை ஓடை, என இடங்களின் மீது புனையப்பட்ட கதைதான் இருபது வெள்ளைக்காரர்கள். இந்தக் கதைக்கான ஆதாரப் புள்ளி நிலப் பிரதேசங்கள்தாம். இந்த இடங்களெல்லாம் என் மனதின் அடியாழத்தில் தங்கிப் போனவை. ஒரு வகையில் இப்பிரதேசங்களில் அலைந்து திரிய முடியாமல் போன ஏக்கத்தின் வடிகாலாகவும் இக் குறுநாவலை அனுக முடியும். மற்றபடி எழுத்தின் மூலம் எழுதுபவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லாமும் எனக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. இனி கிட்டுபவை எல்லாம் மிகுதியே.

என்னுடன் எப்போதுமிருக்கும் பவா, பார்த்துப் பார்த்து புத்தகத்தை நேர்த்தியாய் கொண்டு வர மெனக்கெடும் ஷைலஜாக்கா, மூன்று நாவல்களையும் சிரத்தையாய் வாசித்துத் தொகுத்த ஜெயஸ்ரீ, நெருக்கடியான பணிகளுடைக்கிடையிலும் அட்டைப் படம் தந்த பினு, வடிமைத்த வம்சி நண்பர்கள் என எல்லோருக்கும் நன்றி சொல்லி மாளாது. என்றென்றைக்குமான என் ப்ரியங்களும் அன்பும்.


அய்யனார் விஸ்வநாத்
ayyanar.v@gmail.com
ayyanaarv.blogspot.com
00971554216250

Friday, March 16, 2012

இருபது வெள்ளைக்காரர்கள் – குறுநாவல் தொகுப்பு

நண்பர்களுக்கு,

பழி, மழைக்காலம் மற்றும் இருபது வெள்ளைக்காரர்கள் ஆகிய மூன்று குறு நாவல்களும் ஒரே தொகுப்பாய் வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

தொடர்பு கொள்ள

வம்சி பதிப்பகம்
19.டி.எம் சாரோன்
திருவண்ணாமலை
தொலைபேசி 9444867023



Featured Post

test

 test