Sunday, November 24, 2019

தனியறை மீன்களின் சிறகடிப்பு




தனியறை மீன்கள் கவிதைத் தொகுப்பை நியாயமாக தனிமையின் இசை என்கிற இந்த வலைப்பக்கத்திற்குத்தான் சமர்ப்பித்திருக்க வேண்டும். பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இங்குதான் கவிதைகளை எழுதிப் பார்த்துக் கொண்டேன்.  வாசகர்களும் நண்பர்களும் கவிதைகள் வழியாகத்தான் என் உலகில் நுழைந்தனர். இதிலிருந்துதான் என் சின்னஞ்சிறு புனைவுலகு தன் சிறகுகளை விரித்துக் கொண்டது. கவிதைகள் எழுதிய காலகட்டங்களில் நெகிழ்ந்தும், சுருங்கியும், வெதும்பியும், உழன்றும் இன்னும் எல்லாவித மன உணர்வுகளிலும் கிடந்து அல்லாடினேன். சந்தேகமே இல்லாமல் அவற்றைப் பெண்களே தந்தனர். எல்லா உணர்வுகளையும் எழுதிப் பார்த்தேன். அந்த வடிவத்திற்கு கவிதை எனப் பெயர் வைத்துக்கொண்டேன். எழுதப்பட்டக் கவிதைகள் மிக அதிகபட்ச கொண்டாட்டத்தையும், கர்வத்தையும், காதலையும், காமத்தையும் கொண்டுவந்து சேர்த்தன. இலவச இணைப்பாய் ஏமாற்றம், துரோகம், பயன்படுத்துதல் போன்ற உணர்வுகளையும் பெற்றுக் கொண்டேன். எல்லாம் கடந்து மனம் சமநிலைக்குத் திரும்பியபோது தொடர்ந்து  கவிதைகள் எழுதும் விருப்பம் காணாமல் போயிருந்தது. போதும் இது என நிறுத்திக் கொண்டேன்.

’தனிமையின் இசை’, ’நானிலும் நுழையும் வெளிச்சம்’ எனும் தலைப்புகளில் இரண்டு தொகுப்புகள் அச்சில் வெளிவந்தன. ’எனக்கு மனிதர்களைப் பிடிக்காது’ எனும் பெயரில் ஒரு மின் தொகுப்பை வெளியிட்டேன். மூன்றுமே சரியான வாசக கவனத்தைப் பெறவில்லை. இணையத்தின் பழைய ஆட்கள் வாசித்த அல்லது மிகக் குறைவான கவிதை வாசகர்கள் மட்டும் வாசித்த தொகுப்புகளாய் மூன்றும் இருந்தன.   இந்தத் தொகுப்புகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க  என் தரப்பிலிருந்து நானும் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் மனதின் அடியாழத்தில் இதுவரை எழுதியவற்றை ஒரே தொகுப்பாய், தரமாய் கொண்டு வர வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அது இத்தனை வருடங்கள் கழித்து நிறைவேறி இருக்கிறது.

இந்தத் ’தனியறை மீன்கள்’ தொகுப்பு என் மனதிற்கு மிக நெருக்கமானதாக இருக்கிறது. இதை நிறைவேற்றிய சாருவுக்கும் காயத்ரி மற்றும் ராம்ஜிக்கும் என் அன்பு. கவிதைத் தொகுப்பின் பின் இணைப்பாய் சாருவுக்கும் எனக்கும் இடையே நிகழ்ந்த கவிதை உரையாடலும் இடம்பெற்றிருக்கிறது. இப்போதும் கவிதைகளை வாசிக்கும் பழையவர்களிடமும் புதிதாய் கவிதைகளை வாசிக்க ஆரம்பித்திருக்கும் புதியவர்களிடமும் இந்தத் தொகுப்பு போய்ச் சேர வேண்டும் என விரும்புகிறேன்.

அனைத்திற்கும் நன்றி. அனைவருக்கும் அன்பு

Thursday, October 10, 2019

ஹிப்பி தற்போது விற்பனையில்


ஹிப்பி நாவல் வெளிவந்துவிட்டது. நண்பர்கள் கீழ்காணும் இணைப்பைச் சொடுக்கி இணையத்தில் வாங்கலாம்.

https://zerodegreepublishing.com/books/new-releases/%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%be/?fbclid=IwAR1vAecoFTx9Jec7DmmohoOfAqaZ0ZYTDiscA7WK0Q-Mz-8aF6hS_Ikfz24


இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது.
ஜவ்வாது மலைத் தொடரும், திருவண்ணாமலையும் வசீகரமான கதாபாத்திரங்களாக உருமாறியிருக்கும் இந்நாவலில் வெயிலும் மழையும் ஊடுபாவி வடதமிழகத்தின் இன்னொரு முகத்தை அறியத் தருகின்றது.
ஹிப்பிகளும், விளிம்பு நிலை மனிதர்களும் சேர்ந்து உருவாக்கும்        இக்கதைவெளியெங்கும் கஞ்சா நெடி விரவிக் கிடக்கிறது. ஒரு புள்ளியில் நிலைபெறாத நாடோடி மனங்களில் உள்ள காமமும், போதையும், கைவிடப்பட்ட அன்பும், கொண்டாட்டமும் வாசிப்போரைக் கனவுத் தன்மைக்குள் தள்ளுகிறது.
அய்யனார் விஸ்வநாத்தின் தனித்துவமான மொழியும் பின் நவீனத்துவக் கதை கூறலும் இந்நாவலின் அலாதியான வாசிப்பின்பத்திற்கு வலு சேர்க்கின்றன.


0

மாரியோ பர்கஸ் யோசாவைப் படிக்கும் போதெல்லாம் இந்த அளவு சுவாரசியமாகக் கதை சொல்ல தமிழில் யாருமே இல்லையே என்று வருத்தப்படுவேன். இங்கே இலக்கியம் என்றாலே ‘டல்’லாக இருக்க வேண்டும் என்று ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிறது. அய்யனார் விஸ்வநாத்தைப் படித்த போது அந்த என் எண்ணம் மாறி விட்டது. பிரமாதமான கதைசொல்லி. அதே சமயம் Content-உம் பல உள்ளடுக்குகளைக் கொண்டதாக இருக்கிறது. அய்யனார் வெறும் கதைசொல்லி மட்டும் அல்ல. மீண்டும் மீண்டும் வாசிக்கக் கோருபவை அவர் நாவல்கள். அந்தத் தன்மைதான் பொழுதுபோக்குக் கதைகளுக்கும் இலக்கியத்துக்குமான வித்தியாசம். அய்யனார் விஸ்வநாத்தின் ஹிப்பி நாவலைப் படித்து விட்டேன். அற்புதம். எடுத்தால் கீழே வைக்க முடியாது. நல்லவேளை, அய்யனார் ஏற்கனவே வெளிநாட்டில் இருக்கிறார். இல்லாவிட்டால் கதையின் முடிவுக்காக அவரை நாடு கடத்தியிருப்பார்கள். மிரட்டும் நாவல். இதை உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.
– சாரு நிவேதிதா

Tuesday, September 24, 2019

ஹிப்பி - நாவல்





தான் வாழும் அல்லது வாழ்ந்த நிலத்தின் மீதான அன்பு என்பது மனிதருக்குப் பொதுவானது. எழுதுபவனுக்கோ அவன் சார்ந்த நிலமும் மக்களும் என்றும் முதன்மையானவர்கள். உலகின் பெரும்பாலான எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் நிலத்தைக் குறித்து மூன்று படைப்புகள் எழுதுவதை ஒரு சாதனையாகக் கருதுவார்கள்.
இஸ்தான்புல்லையும்,தைவானையும், போலந்தையும், தென்கொரியாவையும் -மேதைகளின் Trilogy வழியாக அறிந்த எனக்கு என் நிலமான திருவண்ணாமலை குறித்து ஒரு ட்ரிலாஜி எழுதும் ஆசை உருவானது. அதன் முதல் கனிதான் ஓரிதழ்ப்பூ. அதைத் தொடர்ந்து இதோ ஹிப்பி . இம்முறை இன்னும் அழுத்தமாய் என்னிடமிருந்தும் இன்னும் தரமாய் எழுத்துப் பிரசுரம் வழியாகவும் ஹிப்பி நாவல் வெளிவருகிறது.
சாரு நிவேதிதா, காயத்ரி மற்றும் ராம்ஜிக்கு என் அன்பு.

Sunday, August 18, 2019

அம்பிலி - கடவுளின் கண்



இதயத்திலிருந்து வாழும் ஒரு மனிதனைக் குறித்த முழுமையானச் சித்திரம்தான் அம்பிலி. கள்ளங் கபடமில்லாத தூய அன்பு, உயிரைப் பிழியும் இசை, இயற்கையின் பேரெழில் மிளிரும் மகத்தான நிலக் காட்சிகள் ஆகிய இவை மூன்றையும் சரிவிகிதத்தில் கலந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கினால் எப்படிக் கரையாமல் இருக்க முடியும். பல காட்சிகளில்  உருகிப் போனேன். படத்தின் முதல் பாதியில் மூன்றாம் பிறை ’டைப்’ காதல் கதையாகி விடுமோ என்ற என் யூகம் இரண்டாம் பாதியில் தவிடு பொடியானது. கேரளத்தின் கட்டப்பனையிலிருந்து காஷ்மீர் வரைக்குமான ஒரு சைக்கிள் பயணமாக, ஓர் அற்புதமான பயணத் திரைப்படமாக அம்பிலி உருக்கொள்கிறது. இறுதியில் காஷ்மீரின் கம்பீர மலைகளுக்கு முன்பு அம்பிலியின் சின்னஞ் சிறு இதயம் நெகிழ்ந்தும் கரைந்தும் வெடித்துமாய் தன்னை அறிகிறது. கவித்துவமும் தத்துவமும் அம்பிலி - ஷெளபினின் நிகரில்லா நடிப்புமாய் பின்னிப் பிணைந்து நமக்கு ஓர் அபாரமான காட்சி அனுபவத்தை இந்தத் திரைப்படம் வழங்குகிறது.

அம்பிலியின் திரைக்கதை எழுதப்பட்ட விதம் சவாலானதுதான். முதல் ஒரு மணிநேரத்திற்கு கேரளத்தின் எழில், அம்பிலியின் சின்னஞ்சிறு நண்பர்கள், கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள், நகைச்சுவை, நாயகி தான்வியினுடனான காதல், ஒரு முன் கதை என ஏராளமான விஷயங்கள் சொல்ல இருக்கின்றன. ஆனால் இரண்டாம் பாதியில் சாலைப் பயணம் மட்டும்தான், பெரும்பாலும் இரண்டே கதாபாத்திரங்கள் மற்றும் நிலங்கள் அவ்வளவுதான். இரண்டாம் பாதியை நிறைக்க இயக்குனர் எந்த விதத் தனி - ஸோ கால்டு சுவாரசிய விஷயங்களையும் திணிக்கவில்லை. இந்திய நிலம் பார்வையாளர்களை ஒன்றச் செய்துவிடும் என நம்பியிருக்கிறார்கள். அது நடந்திருக்கிறது. எந்தத் திருப்பங்களுமில்லாமல் நேர்கோட்டில் மிக நிதானமாக நம்மையும் இணைத்துக் கொண்டு படம் நகர்கிறது.

அம்பிலி ஒரு காட்சி அனுபவம். படம் முழுக்க ஏரியல் ஷாட் களைப் பயன்படுத்தி மொத்த நிலத்தின் அழகையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். கிட்டத் தட்டக் கடவுளின் கண் கொண்டு இந்தப் பூமியைப் பார்ப்பது போன்ற உணர்வை அடைந்தேன். படத்தின் ஒளிப்பதிவாளரான Sharan Velayudhan புதியவர். அவரின் மிகச்சிறந்த படமாக இது இருக்கும். இசையமைப்பாளரான Vishnu Vijay இயக்குனார் ஜான் பால் ஜார்ஜின் முந்தைய படமான Guppy யில் இணைந்து பணியாற்றியவர். இசையால் படத்தை நிறைத்திருக்கிறார். ஆராதிகே பாடலை நேற்றிலிருந்து திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒளிப்பதிவும் இசையும் அம்பிலியின் முழுமைக்கு முக்கியக் காரணங்களாகின்றன.



கேரளத்தின் In to the Wild என்றும் கூட அம்பிலியைச் சொல்லிவிட முடியும். இன் டு த வைல்ட் தனிமைப்படுதலைக் கொண்டாடி, வழமையின் நமுத்தத் தன்மையை பயணத்தின் வழியே களையும் திரைப்படம். ஆனால் அம்பிலி அன்பை, முழுமையை பயணத்தின் வழியே உணர்த்தும் படம். இந்தக் கள்ளங்கபடமற்றச் சிறுவன் செல்லுமிடமெல்லாம் அன்பை விதைக்கிறான்.
அவசியம் திரையரங்கில் காண வேண்டிய படம்.

Sunday, July 21, 2019

கிரீஷ் கர்னாட் - குலப்பெருமையை அசைத்தல்


கிரீஷ் கர்னாட் நடித்து, திரைக்கதை வசனம் எழுதிய சம்ஸ்காரா திரைப்படம் இந்திய சமூகம் என்றும் நினைவில் வைத்திருக்க  வேண்டிய படம். பார்ப்பனியம் கோலோச்சியிருந்த, சாதி வெறியும் தீண்டாமையும் உக்கிரமாய் இருந்த காலகட்டங்களில் மாத்வ பிராமணர்கள் வசிக்கும் ஓர் அக்கிரஹாரத்தில் நடைபெறும் கதையாக சம்ஸ்காராவை யு,ஆர் அனந்தமூர்த்தி எழுதியிருப்பார்.

கிரீஷ் கர்னாட் ஒழுக்கமும், பக்தியும், நிறைந்த கல்வி ஞானமும் கொண்ட ஆச்சாரியார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  சில பிராமணக் குடும்பங்கள் வசிக்கும்  அந்த அக்கிரஹாரத்தின் முதன்மைப் பண்டிதராகவும்  ஆச்சாரியார் இருப்பார். இன்னொரு கதாபாத்திரமான நாராயணப்பாவாக புகழ் பெற்ற எழுத்தாளரும் கெளரி லங்கேஷின் தந்தையுமான பி. லங்கேஷ் நடித்திருப்பார். நாராயணப்பா அந்த பிராமணக் குடியிருப்பின் எல்லா மரபுகளுக்கும் எதிரானவர். குடியும் கொண்டாட்டமும் பாட்டும் கூத்தும் நட்பும் காதலுமாய் வாழ்பவர்.

 ஒரு நாள் நாராயணப்பா இறந்து போகிறார்.  அவர் பிறப்பால் பிராமணன் என்பதாலும் அவரை அக்கிரஹாரத்தை விட்டு விலக்கி வைக்காததினாலும் இன்னொரு பிரமணனே இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும். ஆனால் அதை யார் செய்வது என்பதில் குழப்பம் வரும். சண்டியராகத் திரிந்ததால் பிற பிராமணர்கள் யாரும் இறுதி காரியத்தைச் செய்ய முன் வர மாட்டார்கள். அப்போது அவரின் மனைவியான சந்திரி தான் அணிந்திருக்கும் நகைகளைக் கழற்றி ஆச்சாரியாரிடம் கொடுப்பாள். இறுதி காரியங்களைச் செய்பவர்களுக்கு இந்நகைகள் போகட்டும் எனச் சொல்லிவிடுவாள். இதைக் கேள்விப்பட்டதும் ஊரில் இருக்கும் அத்தனை பிராமணர்களும் நாராயணப்பாவிற்கு இறுதி காரியத்தைச் செய்ய முன்வருவார்கள். ஆனால் ஆச்சாரியார் கடவுளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்.

 இறுதிக் காரியம் யார் செய்ய வேண்டும் என்பதற்கான பதில் வேண்டி ஆஞ்சநேயருக்கு இரவு பகலாக பூஜை செய்து கொண்டிருப்பார். அவரின் மனைவி பல வருடங்களாக படுத்தப் படுக்கையாகக் கிடப்பவள். மனைவிக்கான பணிவிடைகளையும் ஆச்சாரியாரே செய்து வருவார். பதில் எதுவும் கிடைக்காததால் ஆச்சாரியார் மிகுந்த ஏமாற்றத்துடன் கோவிலை விட்டு வெளியே வரும்போது  எதிரே நாராயணப்பாவின் மனைவி சந்திரி அமர்ந்திருப்பாள். உடலும் பொழுதும் உந்தவே அவளுடன் ஆச்சாரியார் உறவு கொண்டுவிடுவார்.

அதனால் குற்ற உணர்வு அடையும் ஆச்சாரியார் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது மனைவி இறந்திருப்பாள். அவள் உடலைத் தனி ஒருவராகத்  தகனம் செய்துவிட்டு அந்த ஊரை விட்டு ஓடிப்போவார். வெளியூரில் தன்  அடையாளத்தை மறைந்துக் கொண்டு அலையும்போது உடன் வருபவனின் நிர்பந்தத்தின் பேரில் திருவிழா நடைபெறும் கோவில் ஒன்றில் அமர்ந்து உணவருந்துவார். அங்கு ஒருவரால் இன்னார் என அடையாளம் காணப்படவே அங்கிருந்து தலை தெறிக்க ஓடுவார். பின்னாலேயே வரும் வெள்ளந்தியான சக பயணியிடம் தான் யார் என்பதையும் எதனால் இங்கு அலைகிறேன் என்பதையும் சொல்வார். அதைக் கேட்டுத் திகைப்படையும் பயணி அவரை விட்டு விலகிப் போவான். மீண்டும் தன் சொந்த கிராமத்திற்கு வரும் ஆச்சாரியார், இறந்து போன நாராயணப்பா தன்னை விட மேலானவர் என சுயத் தெளிவு அடைவதோடு படம் நிறைவடையும்.

இன்று வரைக்குமே இந்த நாவலும், திரைப்படமும் அடிப்படைவாதத்தில் ஊறிப்போன மனங்களை அடித்து நொறுக்குவதாகத்தான் இருக்கிறது. சம்ஸ்காரா நாவலுக்குத் திரையிலும் நியாயத்தைச் செய்த வகையில் கிரீஷ் கர்னாட் ஒரு முக்கியமான கலைஞனாகிறார்.

இதைத் தொடர்ந்து எஸ்.எல் பைரப்பாவின் வம்ச விருக்‌ஷா நாவலை பி.வி. காரந்தோடு சேர்ந்து இயக்கி திரைப்படத்தில் ராஜா ராவ் என்கிற முக்கியக் கதாபாத்திரம் ஏற்றும் நடிக்கிறார். வம்ச விருக்‌ஷா நாவல் பரம்பரை கண்ணியத்தை உடைத்து நொறுக்கும் வண்ணம் எழுதப்பட்டிருக்கும். பிராமணர்களின் குலப்பெருமையை அசைத்துப் பார்க்கும் புத்துலக நாவல். திரையிலும் இந்த உணர்ச்சி சரியாகவே வெளிப்பட்டது. யு. ஆர்.அனந்த மூர்த்தி, பைரப்பா, குவெம்பு, சிவராம காரந்த், மாஸ்தி, பி.லங்கேஷ், கிரீஷ் கர்னாட் என கன்னடத்தின் அத்தனை எழுத்தாளர்களும் சுய சாதி மற்றும் சுய மதத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும், அதிகாரத்தை தங்களின் எழுத்துக்களின் வழியாய் எதிர்த்தும் வந்தனர். எனவேதான் கன்னட இலக்கியத்தை இந்தியாவின் மிக முன்னோடி இலக்கியம் என நான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்.

கன்னூரு ஹெக்கடத்தி, காடு ஆகிய இரண்டு படங்களும் கிரீஷ் கர்னாட் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்கள். சம்ஸ்காரா, வம்ச விருக்‌ஷா, கன்னூரு ஹெக்கடத்தி, காடு இந்நான்கு படங்களையும் கிரிஷ் கர்னாட் மறைவிற்குப் பிறகு தொடர்ந்து பார்த்தேன். எழுத்து, நாடகம், நடிப்பு, இயக்கம் இப்படி கலையின் எல்லா வடிவங்களிலும் தன் தனி முத்திரையைப் பதித்தவர். சாகும் வரையிலும் மூக்கில் ஒரு குழாயை சொருகிக் கொண்டாவது அதிகாரத்திற்கு எதிராகப் போராடியவர். சம காலத்தின் மிக முக்கியமான அர்பன் நக்சலான கிரீஷ் கர்னாடிற்கு அஞ்சலி


Thursday, July 4, 2019

பெண்களின் மன நல விடுதி கொண்டாட்டங்களால் நிரம்பியிருக்கிறது





Girl, Interrupted படம் மன நல விடுதியில் தங்க நேரிலும் பெண்களின் வாழ்வை மிகத் துல்லியமாகப் பேசுகிறது. 1999 இல் வெளிவந்த திரைப்படம். நான் நேற்றுதான் பார்த்தேன். தொடர்களைப் பார்க்கும் மனநிலையிலிருந்து தற்காலிகமாக வெளியேறியிருப்பதால் நெட்ஃபிலிக்ஸைத் துழாவி இந்தப் படத்தைக் கண்டுபிடித்தேன். One Flew Over the Cuckoo's Nest – ஐ கொண்டாடிய உலகம் Girl, Interrupted ஐ ஏன் கைவிட்டது எனத் தெரியவில்லை. அதிகம் கவனம் பெறாத மிக ஆழமான படம். பெண்களின் மன உணர்வுகளையும் சிக்கல்களையும் இவ்வளவு ஆழமாகப் பேசிய படம் எதுவும் சமீபமாய் பார்த்த நினைவில்லை.

Susanna Kaysen என்கிற அமெரிக்க எழுத்தாளர் தன்னுடைய மனநல விடுதி நாட்களை Girl, Interrupted எனும் பெயரில் நினைவுக் குறிப்புகளாக எழுதினார். அதுவே திரைப்படமானது. சுசன்னா பாத்திரமேற்று நடித்த Winona Ryder இந்தத் திரைப்படத்தை தயாரித்துமிருந்தார். அற்புதமாக நடித்திருந்தார் என்றாலும் லிசா என்கிற துணைக் கதாபாத்திரமேற்று நடித்த ஏஞ்சலினா ஜூலி நடிப்பில் இவரைப் பின்னுக்குத் தள்ளி மொத்த விருதுகளையும் வாங்கி விட்டிருக்கிறார்.

படத்தின் உரையாடல்கள் அபாரமானவை. மீண்டும் மீண்டும் வாசிக்கப் பட வேண்டியவை. மன நலம் சார்ந்த பேச்சை மிகச் சரியாக கையாண்டிருக்கிறார்கள். சில காட்சிகளை யூகிக்க முடிந்தது. டெய்சிக்கு என்ன நேரும் என்பது முன்னரே அறிந்ததுதான். கனமான திரைப்படத்திற்கு வலு சேர்க்கும் நாடகீயத் தருணங்கள் படத்தில் கிடையாது என்பதுதான் One Flew Over the Cuckoo's Nest படத்திற்கும் Girl, Interrupted படத்திற்கும் உள்ள வேறுபாடு. மேலும் ஜாக் நிக்கல்சன் என்கிற அரக்கனால் முன்னது பிரபலமானது. பின்னதில் எழுத்து வலுவானது. எழுதுபவனாய் இதுவே முதன்மையானதாய் தோன்றுகிறது.

Girl, Interrupted  படம் பார்த்து முடித்ததும் உடனடியாக ’பிக் பாஸ்’ வீட்டின் பெண்கள்தாம் நினைவிற்கு வந்தனர். 

மனம் பிறழ்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் பெண்கள் சேர்ந்து இருக்க நேரிடும் உலகம் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சிகளில் களேபரம் செய்யும் பெண்களின் உலகை விடத் தரமானதாக இருக்கிறது. 

’பிக் பாஸ்’ பெண்கள் சரியான மன நலம் கொண்டவர்கள் என சமூகத்தால் நம்பப்படுகிறவர்கள். இந்தச் சரியானப் பெண்களின் மன விகாரங்களைச் சகித்துக் கொள்ள முடிகிறதா என்ன?ஆனால் சிகிச்சைக்காக ஒரே கூரையின் கீழ் தங்க நேரிடும் பெண்களின் உலகில் இவ்வளவு வன்மங்கள் கிடையாது.  மன நல விடுதியில் பெண்களின் சக இருப்பு கொண்டாட்டங்களால் நிரம்பியிருக்கிறது. 

காழ்ப்புகளாலும் பொறாமைகளாலும் பிரபல வெறியாலும் நிரம்பி வழியும் இந்த ’சோ கால்ட்’ மன நிலை சரியான பெண்களின் உலகைப் போல, மன நல விடுதியில் இருக்க நேரிடும் பெண்களின் உலகு இல்லை. இவர்கள் தங்கள் இதயங்களை இறக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். 

லிசா வின் குரூரமானப் பேச்சைத் தாங்க முடியாமல் சுசன்னா சொல்வாள். ”உன் இதயத்தில் அன்பில்லை, உண்மை என்கிற சாக்கை வைத்துக் கொண்டு இதயத்தைச் சாகடித்துவிட்டாய். நீ ஏற்கனவே இறந்து போனவள்” என்பாள். 

இதயம் மரத்துப் போன அத்தனைப் பேரும் நடைப் பிணங்கள்தாம். நடைப் பிணங்களின் நட்சத்திர வாழ்வில்தாம் எத்தனைப் பூச்சுகள்? 

Thursday, June 13, 2019

முள்ளம்பன்றிகளின் விடுதி





லீமா இன்றைக்குள் உறுதிபடுத்தச் சொன்னாள். நாங்கள் வசிக்கும் அடுக்கு மாடிக் கட்டிடத்தின் எண்பதாவது தளத்தில் இருக்கும் பறக்கும் கார் நடைமேடையில் நடந்து கொண்டிருந்தோம். இருவரின் அலுவலகத்திற்கும் எதிரெதிர் திசையில் பயணிக்க வேண்டும். லீமா அவளது அலுவலகப் பறக்கும் காரில் ஏறியபடியே மீண்டும் சைகையில் நினைவூட்டினாள். காலை ஏழு மணி ஆகியிருந்தது. இந்த உயரத்திலிருந்து பார்க்கும் போது கீழேயும் மேலேயும் வெறும் புகைமூட்டமே சூழ்ந்திருந்தது. வானம் பூமி இரண்டுமே அற்பக் கற்பனைகளாகத் தோன்றின. தொலைவில் இருந்த நூறு மாடிக் கட்டிடங்கள் லேசாய் தென்பட்டன. சூரியன் எப்போதாவது வரும். வெளிச்சத்தைப் பார்த்தே நாட்களாகின்றன. சூரிய ஒளிக்கதிரின் மினுமினுப்பு நினைவிற்கு வந்தது. உடன் மிளாவின் நினைவும். அவசரமாய் தலையை உலுக்கிக் கொண்டேன். மிளாவின் நினைப்பு வரவே கூடாது. என் அலுவலகப் பறக்கும் கார் வந்தது ஏறிக் கொண்டேன்.

இரண்டரை நிமிடம். அலுவலகத்தின் என் அறைக்குள் இறங்கினேன். இன்றைக்காவது நியூரோ சர்ஜனை சந்தித்து விட வேண்டும். லீமா குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டத்தை எப்போது சொன்னாளோ அன்றிலிருந்தே தமிழ் பேசும் நியூரோ சர்ஜனை தேடிக் கொண்டிருந்தேன். நளன் என்கிற ஒரு மருத்துவர் கிடைத்தார். ஆனால் சந்திக்கத்தான் முடியவில்லை. இன்று கிடைத்திருக்கிறது.  காலைப் பதினோரு மணிக்கு சந்திக்க வேண்டும். அவரின் அலுவலகத்தை அலைபேசியில் பார்த்துக் கொண்டேன். வாகனத்தை முன்பதிவு செய்தேன். வேலையில் விழுந்தேன்.

பத்து ஐம்பதிற்கு வாகனம் சன்னலுக்காய் வந்தது. சன்னலைத் திறந்து கொண்டு ஏறினேன். ஐம்பத்தேழிற்கு மருத்துவமனை வரவேற்பரையில் இறங்கிக் கொண்டேன். பதினோரு மணிக்கு உள்ளே அழைக்கப்பட்டேன். மருத்துவர் நளன் எழுந்து கைக்குலுக்கினார். தமிழ் பேசுபவர் என அறிந்ததும் மகிழ்ந்ததாகச் சொன்னார். நல்ல தமிழில் பேசினார்.
எனக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. மிளாவிலிருந்து தொடங்குவது சரியாக இருக்குமென நினைத்து எங்களின் முதல் சந்திப்பிலிருந்து ஆரம்பித்தேன்.

முள்ளம்பன்றி விடுதியில்தான் நாங்கள் முதலில் சந்தித்துக் கொண்டோம். அங்கு வைத்தா? என்றால், இல்லை. அதற்கு முன்பும் பார்த்திருக்கிறோம். அவசரத் தீண்டல்கள், காதலின் தீவிர தாப சமிக்ஞைகள் எல்லாமும் முன்பே இருந்தன. ஏன், இந்த விடுதிக்கு வரும் வரும் வழியில் கூட காரில் ஓட்டுனர் அசந்த நேரம் பார்த்து அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டோம். வழியில் ஓர் உணவகத்தில் உணவருந்திவிட்டு, வெளியே வருகையில் கிடைத்த யாருமில்லா கணமொன்றில் கூட அவளைப் பின்புறமாய் அணைத்துக் கொண்டு அவளின் மீதிருந்தப் பித்தைச் சொன்னேன். ஆனாலும் விடுதியில்தான் முதல் சந்திப்பெனக் கூறுவேன். இரு உடல்களின் ஆரத் தழுவுதலே உயிரின், ஆன்மாவின் முதல் சந்திப்பாக இருக்க முடியுமல்லாவா, அது இங்குதான் நிகழ்ந்ததுஇந்த முள்ளம் பன்றி விடுதி, கடல் மட்டத்திலிருந்து எத்தனையோ ஆயிர அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. மேற்கு மலைத் தொடர்களின் அசல் வசீகரத்தை நாங்கள் தங்கியிருந்த அறையின் விஸ்தாரமான பால்கனியிலிருந்து பார்க்க முடியும். பூச்சிகளின் அடர் பின்னணி இசையோடு இரவு முழுக்க குளிரில் நடுங்கியபடியே அந்தப் பால்கனியில் உடல்கள் புதைந்து கிடந்தோம். அறைக்குள் சென்றால் அனுமதியற்றப் படுக்கைகளை கண்காணிக்கும் கேமிராவிற்குள் விழுந்துவிடுவோம் எனப் பயந்ததை விட தூங்கிவிடுவோமே என்றுதான் அதிகம் பயந்தோம். எங்களுக்கே எங்களுக்காய் அந்த அடர் இருள், குளிர் இரவு இருந்தது. நாங்களும் அதனோடு இருந்தோம். “

பேச்சைத் தொடரமுடியவில்லை. மூச்சை ஆழமாய் இழுத்து விட்டுக் கொண்டேன். என் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த நளன் எழுந்து நின்றான்.

ஏதாவது அருந்துகிறீர்களா?”

தேநீர்என்றேன்.

நளன் கதவிற்காய் மெல்ல நடந்துபோய் அதன் பக்கவாட்டில் இருப்பதே தெரியாமல் இருந்த தொடுதிரையை உயிர்ப்பித்து தேநீருக்குச் சொன்னான்.

திரும்பி வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டு

பிறகு?” என்றான்.

அடுத்த நாள் திரும்பிவிடுவதுதான் திட்டம். எனவேதான் ஒவ்வொரு நொடியையும் எங்களுக்கானதாய் பாதுகாத்தோம். ஆனால் எங்களால் எங்களிடமிருந்து மீளமுடியவில்லை. நகரத்தில் காத்துக் கிடக்கும் எங்களின் தனித்தனி சொந்த அழுத்தங்கள், வேலைகள், நிர்பந்தங்கள் யாவும் மறந்து போயின. என் நாற்பது வருட வாழ்வில் முதன்முறையாய், இந்த வாழ்வு என்னுடையது, எனக்குப் பிடித்தபடி இருப்பதில் என்ன தவறு எனத் தோன்றியது. அடுத்த நொடியே அவளும் இதை ஆமோதித்தாள். இது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் கடந்த மூன்று மாதங்களாக இப்படித்தான் நடக்கிறது. எனக்குத் தோன்றுவது எல்லாமே அவள் காண விரும்பியது. அவள் விரும்புவது எல்லாமும் என் அத்தனை வருடக் கனவாய் இருந்தது. இந்த அபாரமான சங்கமத்தின் ஆச்சரியக் கரைகளைக் காணவே இந்த விடுதிக்கு வந்திருந்தோம். அவள் இதற்கு ஒரு பெயர் வைத்திருந்தாள். ’சோல்மேட்ஸ்’. இந்த வார்த்தையைச் சொல்லிவிட்டு கூடவே இது ஆன்மாவின் இணைப்பு. நீயும் நானும் வெறும் நண்பர்களல்ல, காதலர்களுமல்ல; சோல்மேட்ஸ். இப்படி எல்லாம் நடந்தாக வேண்டுமென்பதுதான் விதி.” எனச் சொல்லியபடியே என்னில் இன்னும் அழுந்தப் புதைந்து கொள்வாள்நான்கு நாட்கள் அங்கிருந்தோம். மூன்று நாட்கள்தாம் ஆனதாய் நினைத்துக் கொண்டிருந்ததுதான் விநோதம். விடுதியறையை காலி செய்யும்போதுதான் தேதியைப் பார்த்தோம். எங்களைத் தனித்தனியாய் விழுங்கக் காத்திருக்கும் கடமையெனும் திறந்தவாய் முதலைகளை நினைத்து அப்போதுதான் பயமே எழுந்தது. இருவரும் சில்லிட்ட உள்ளங்கைகளைப் பிணைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி, நகரம் வந்தடைந்தோம்.”

அறைக்கதவு திறந்தது. மேற்சட்டை அணிந்திராத ஒரு நாயர் இரண்டு கண்ணாடிக் குவளைகளில் தேநீர் கொண்டு வந்து தந்தார்.

 இது ஸோரோ

என அறிமுகப்படுத்தியபடியே அந்த நாயரின் தலைக்காய் நளன் கையை அசைத்தான். அவருக்கு மேற் சட்டை வந்தது.
ஸோரோ அவசரமாய் பேசியது,

மன்னித்துக் கொள்ளுங்கள், பக்கத்து அறை அஜிதனுக்கு தேநீர் கொண்டு சென்றேன். அவருக்கு எல்லாவற்றிலும் நீரில் மூழ்கிப் போன அவரின் கேரளம் இருந்தாக வேண்டும். உங்கள் அறைக்கு வரும்போது தவறுதலாக அப்படியே வந்துட்டேன். உடனே சரி செய்து விடுகிறேன்

என்றபடியே ஸோரோ தன் வலது கண்ணைத் தொட்டது. நீலநிறத் தொடுதிரை அதன் முன்னால் உயிர்த்தது. எண்ணற்ற அல்கரிதம்கள் அந்த அறையில் மிதந்தன. ஸோரோ ஒன்றை அழுத்தித் திருத்தியது. பிறகு கண்ணை மூடிக் கொண்டது
நளன் புன்னகைத்தான்.

ஸோரோ வெளியேறியது.

எல்லாவற்றையும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு வெள்ளை நிற அறை. எதிரெதிரே இருந்த இரண்டு மர இருக்கைகளில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அறையில் வேறெந்தப் பொருளுமில்லை. உரையாடலை ஆரம்பிக்கும்பொழுது என் பின்னங் கழுத்தில் சின்னஞ்சிறு குமிழொன்றை நளன் பொருத்தினான். இது உறுத்தாது, நம் உரையாடலையும் உங்கள் மன உணர்வையும் வெறுமனே பதிவு மட்டும் செய்யும். நம்முடைய சிகிச்சைக்கு அத்தியாவசியமானது எனச் சொல்லியிருந்தான். அந்த சாதனத்தை வைத்த உணர்வு கூட எனக்குத் தோன்றவில்லை.

சொல்லுங்க 

நளன் என் கவனத்தைத் திருப்பினான். தொடர்ந்தேன்,

"இருவரும் எங்கள் தினசரிகளுக்கு வந்து சேர்ந்தோம். கடந்து போன நான்கு நாட்களுக்கான கேள்விகளைச் சமாளித்தோம். அதற்கு அடுத்த நாள் இயல்பான நாளாக மாறிப்போனது. நம்மைச் சுற்றி உள்ள உலகத்தில் நாம் இல்லை என்றால் அது இயங்காது என எண்ணியது எத்தனை முட்டாள்தனம் எனப் புரிந்தது. எங்களின் உலகங்களை அவ்வப்போது துண்டித்துக் கொண்டோம். எந்த பயமும் இல்லாமல் அடுத்தடுத்து சந்தித்துக் கொண்டோம்.

மலைகள்தாம் எங்களை ஈர்த்தன. குறிப்பாக மேற்கு மலைத் தொடர். மனிதர்கள் போக முடிந்த எல்லை வரை போனோம். காலம், அகாலம் என இலக்கில்லாமல் அதன் மடியில் விழுந்து புரண்டு எழுந்தோம். ஒவ்வொரு பயண முடிவிலும் அவ்வளவு புதிதாய் மலைகளிலிருந்து கீழே இறங்கினோம். அடுத்த முறையோ இன்னும் ஆசையாய் மலைகளின் மீதேறினோம். எங்களுக்கு இயற்கை மீதான அச்சம் இல்லாமல் இருந்தது. வனத்தின் ரகசிய இடங்களைத் தேடித் தேடி அலைந்தோம். மலையருவிகளை, ஓடைகளைத் தொடர்ந்து போய் அதன் ரகசிய ஊற்றுக்களை அறிந்தோம். பகலே எங்களின் கொண்டாட்டப் பொழுது. அடர் வனங்களில், மரச்சரிவுகளில் சூரிய ஒளி அவ்வளவு ஆசையாய் ஊடுறுவும். வெளிச்சமிருந்தாலே மகிழ்ச்சிதான். அதன் உதவியுடன் மலைத்தாயின் ரகசிய அடுக்குகளை கண்டறிந்து, அதன் இடுக்குகளில் எங்களைப் புதைத்தபடி கலவி கொண்டோம். விலங்குகள், பாம்புகள், பூச்சிகள், பள்ளத்தாக்குகள், சரிவுகள், கடும் மழை, கொடுங்குளிர் என இயற்கையின் எந்த ஒரு வடிவமும் எங்களைத் தொந்தரவு செய்யவில்லை. இரவில் மட்டும் எங்காவது அடைந்து கொள்வோம். அந்த சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒரு கானக விலங்கின் இரையாவது குறித்தும் எங்களுக்கு சம்மதமிருந்தது. ஒரு பசித்த புலிக்கு எங்களைத் தின்னக் கொடுக்கவும் தயாராக இருந்தோம். எனவே இயற்கையின் அகண்ட பேரதிசயங்களில் முழுமையாய் திளைத்துக் கிடந்தோம்.

மலைகளையும் காடுகளையும் தவிர்த்து புராதன இடங்களைக் காணுவதிலும் எங்களுக்கு ஆர்வம் இருந்தது. இயற்கைச் சீற்றங்களால் முற்றிலும் அழிந்து போன தமிழ்நாட்டின் எச்சங்களை அடிக்கடி போய் பார்த்து வருவோம். புத்தகங்கள் வழியாய் அறிந்திருந்த நகரங்களின் எச்சங்களைத் தேடுவோம். உடைந்து விழுந்து கிடக்கும் கோபுரங்கள், சிதைந்த கோவில்கள், சரிந்த மலைகள் என எல்லாவற்றையும் தேடித் தேடிப் பார்ப்போம். அதெப்படி ஒரே இரவில் தமிழ்நாட்டின் அத்தனை வீடுகளும் மண்ணிற்குள் புதைந்தன என ஆச்சரியமாய் பேசிக் கொள்வோம். மரங்களோ பறவைகளோ வேறு எந்த உயிரினங்களோ இல்லாத பிரதேசத்தை பார்ப்பதும் விநோதமானதுதான். எங்களுக்கு இந்த மாதிரியான சாகசங்களும் பிடித்திருந்தன."


நளன் ஆச்சரியமாய் கேட்டான்.

தமிழ் நாட்டிற்குள் செல்ல எப்படி அனுமதி வாங்கினீர்கள்? அதன் எல்லைகள்தாம் அடைக்கப்பட்டிருக்கின்றனவே!”

சிரித்தபடி பதில் சொன்னேன்.

ஏற்கனவே சொன்னது போல எங்களுக்கு பயங்கள் கிடையாது. துப்பாக்கி ரவைகளுக்கும் எங்கள் உடலைத் தர தயாராக இருந்தோம்

நளன் இறுக்கமாய் சொன்னான்

சட்டப்படி நீங்கள் இருவரும் செய்தது குற்றம். கவனமாக இருங்கள்.”

நான் அதை பொருட்படுத்தவில்லை. பயங்களற்ற இருப்பு என்கிற சொல்லைக் கூட இவர்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். புன்னகைத்து வைத்தேன்

அவனிடம் ஆரம்பத்தில் இருந்த இலகுத் தன்மை மெல்ல காணாமல் போயிருந்தது. அதை இன்னும் அதிகமாக்க விரும்பினேன்.தொடர்ந்து பேசினேன்.

”காதலின் உச்சத்திற்கான எங்கள் பயணம் சீராகவே இருந்தது. மூன்று வருடங்கள் இப்படியே போனது. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் பேசுவோம். இதில் இரண்டு மணிநேரம் எங்காவது பொது இடத்தில் சந்தித்துப் பேசுவோம். நாங்கள் பேச அவ்வளவு இருந்தது. ஆனால் இரவு ஒரு போதும் எங்களுக்கானதில்லை. அவள் தன் கடமைகளுக்குள்ளும் நான் என் கடமைகளுக்குள்ளும் போக வேண்டியிருந்தது

நளன் இடைமறித்து,

ஏன்? திருமணம் செய்து கொண்டிருக்கலாமே? இப்போது விதிகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. ஒரு முறை திருமணம் செய்து கொள்ளலாம். குழந்தைதான் பெற்றுக் கொள்ள முடியாது.”

நான் நளனை நிமிர்ந்து பார்த்து சொன்னேன்.

எனக்கொரு மனைவியும் அவளுக்கொரு கணவனும் ஏற்கனவே இருக்கிறார்கள்

நளன் சற்றுக் கோபமாய் சொன்னான்.

நீங்கள் தவறான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது மருத்துவமனை. காவல் நிலையமில்லை

பதற்றப்படாதீர்கள். நான் இன்னும் என் சிக்கலுக்கே வரவில்லை.”

நளன் மீண்டும் ஸோரோவை அழைத்து தண்ணீர் கொண்டு வரச் சொன்னான்.

இவன் மிகக் கட்டுப்பாடாக வளர்த்தெடுக்கப்பட்ட முதல் அரச தலைமுறைப் பையனாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

ஸோரோ தண்ணீரோடு வந்தது.

ஒரு புட்டித் தண்ணீரையும் குடித்து முடித்தவன் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு,

சீக்கிரம் பிரச்சினைக்கு வாருங்கள்என்றான்.

”சென்ற மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையை நினைவிருக்கிறதல்லவா. அன்று மாலைதான் அவளைக் கடைசியாகச் சந்தித்தது

நளன் அவசரமாய் குறுக்கிட்டான்

மழைப் பிரளயத்தில் சிக்கி விட்டார்களா?”

இல்லை என தலையசைத்து விட்டுத் தொடர்ந்தேன்.

“உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையும் ஐந்து செண்டி மீட்டர் மழை பொழியும். ஆனால் அன்றோ காலையில் ஆரம்பித்த மழை நிற்கவேயில்லை. அரசின் தகவல் தொடர்பு சாதனங்கள் அலறிக் கொண்டிருந்தன. நம் நாட்டு மக்கள் தொகையின் ஐம்பது சதவிகிதமான விஞ்ஞானிகள் அன்று மழையை நிறுத்த வானவியலின் எல்லா வித சாத்தியங்களையும் முயன்று கொண்டிருந்த மாலை நேரம், அவளிடமிருந்து அழைப்பு வந்ததுஉடனே சந்திக்க வேண்டும் என்றாள். அப்போது மழையின் அளவு பதினைந்து செண்டிமீட்டர்களை கடந்திருந்தது. மகிழ்ச்சியாய் சரியென்றேன். ஒரு புது இடத்தின் வரைபடத்தை அனுப்பி ’இங்கு வந்துவிடு’ என்றாள்அந்த அடுக்கு மாடி குடியிருப்பு தன் கடைசி நாளில் இருந்தது. நாளையோடு அந்தக் கட்டிடம் கட்டப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவடையும் நிலையில் அதை இடிப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அவள் அனுப்பிய வரைபடம் முதல் தளத்திலிருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்றது. கதவு திறந்தே இருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. வெளியே மழை ஆக்ரோஷமாய் தொடர்ந்து கொண்டிருந்தது. நான் என் மழைக்கோட்டை கழற்றி வைத்து விட்டு உள்ளே நுழைந்தேன். பரந்த வரவேற்பறை. நாங்கள் வழக்கமாய் பயன்படுத்தும் வாசனை மெழுகு வர்த்தி சன்னமாய் எரிந்து கொண்டிருந்தது. அவள் அதன் அருகே நின்று கொண்டிருந்தாள். மஞ்சள் வெளிச்சத்தில் ஒளிர்ந்தபடி என்னைப் பார்த்து புன்னகைத்தாள். அருகில் சென்றுத் தழுவிக் கொண்டேன். முத்தங்களால் நிறைத்தேன். எரிந்து கொண்டிருந்து மெழுகுவர்த்தி எங்கள் உடலசைவால் உண்டான காற்றில் அணைந்ததுஎப்போதும் போல் கலவினோம்” அரை மணி நேரம் கழித்து மீண்டவள். மெழுகு வர்த்தியை உயிர்ப்பித்தாள். என் முகத்தைக் கைகளில் ஏந்தி கண்களை ஆழமாய் பார்த்துச் சொன்னாள்.

இன்றோடு நம் தொடர்பை முடித்துக் கொள்ளலாம். நாளையிலிருந்து நாமிருவரும் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள வேண்டாம்’ 

அவள் விளையாடுகிறாள் என நினைத்து 

சரி அப்படியே பண்ணிடலாம்’ என்றபடியே அவளை இழுத்து முத்தமிட்டேன்வலுக்கட்டாயமாய் தன்னை விலக்கிக் கொண்டவள்

நான் சொல்வது நிஜம். இன்றோடு எல்லாமும் முடிந்தது’ என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் தொடர்ந்து பேசினாள்.

இப்போதெல்லாம் உன் தொலைபேசி அழைப்புகளோ, பேச்சோ, உன் இருப்போ, முத்தங்களோ, கலவியோ எனக்கு ஆரம்பத்தில் தந்த உணர்வுகளை, படபடப்பை, எழுச்சியைத் தருவதில்லை. எல்லாமும் மிகச் சாதாரணமாக இருக்கிறது. என் எல்லா வியப்புகளும் பரவசங்களும் காணாமல் போய்விட்டன. நீயும் என் கணவனைப் போலாகிவிட்டாய். என் தினசரிகளில் நீயும் ஒருவனாய் கரைந்துபோய் விட்டாய். இதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் எனத் தோன்றுகிறது. போதும் இது. இத்தனை வருடங்களாய் திளைத்த காதல் உணர்வு என்னிடம் இப்போது சுத்தமாய் இல்லை. பிரிந்து விடலாம். நம் விடைபெறலும் இயல்பாய் நிகழட்டும்  என விரும்புகிறேன் அவ்வளவுதான்

அவள் பேசுவதை நிறுத்தினாள். கண்கள் கலங்கி இருந்தன. வெளியே மழை சத்தம் இல்லை. எங்கும் மயான அமைதி.
என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்குமே கூட ஆரம்பகாலத்தின் பரவசங்கள் இப்போது இல்லைதான். ஆனால் இதுதான் யதார்த்தம் எனத் தெரிந்திருந்தது. எனினும் அவளை சமாதானப்படுத்த முயன்று தோற்றேன். ஒரு வேளை அலுவலக அல்லது குடும்ப அழுத்தங்கள் காரணமாக இவள் இப்படிப் பேசலாம். ஓரிரு நாட்கள் தனிமையில் இருந்தால் சரியாகிவிடுவாள் என நினைத்து நானும் அதிகம் அவளை தொந்தரவு செய்யவில்லை. விடைபெற்று வீடு திரும்பினேன்.
அடுத்த நாள் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. அதற்கு அடுத்த நாள் அவள் அலைபேசிக்கு அழைத்தேன். அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மின்னஞ்சல், சமூக வலைத் தளங்கள் என எல்லா வித தொடர்புகளையும் முடக்கி இருந்தாள். ஒரு விதமான பயமும் இறுக்கமும் மனதைக் கவ்வியது. பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. அவள் பணிபுரியும் அலுவலகத்தின் பெயர் தெரியும் விலாசம் தேடிக் கண்டுபிடித்துச் சென்றேன். அவள் அங்கிருந்தும் விடைபெற்றிருந்தாள். அவள் நண்பர்களிடம் வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு அங்கும் சென்றேன். வேறொரு நகரத்திற்குப் போய்விட்டதாகவும் அந்த விலாசம் எதுவும் தரவில்லையென்றும் சொன்னார்கள். அவ்வளவுதான். எனக்கு உலகமே சுழன்றது. இனி அவளைத் தேடுவதும் வீண். திரும்பி வந்தேன். வாழ்வு இயந்திரத்தைப் போலானது. வழமைகள் தவறாத தினசரிகளில் இருந்தேன் என்றாலும் என் நினைவு முழுக்க அவளாகவே இருந்தாள்.

எங்கள் முதல் சந்திப்பிலிருந்து கடைசிச் சந்திப்பு வரைக்குமான ஒவ்வொரு தருணமும் சதா நினைவிலாடியபடியே இருந்தது. எதிலேயும் ஒன்றமுடியவில்லை. எவ்வளவு நடித்தும் இதை என் மனைவி கண்டுபிடித்து விட்டாள். வேறுவழியில்லாமல் எல்லாவற்றையும் அவளிடம் சொன்னேன். அவளால் நான் சொன்னதை நம்பமுடியவில்லை.

’இப்படியெல்லாம் நடக்க சாத்தியமா? அதெப்படி ஏற்கனவே ஒரு பந்தத்தில் இருக்கும் ஆணும் பெண்ணும் இப்படி பழக முடியும். இது தண்டனைக்குறிய குற்றமல்லவா?’ 

என்றெல்லாம் மாய்ந்து போனாள்.

நான் பேசிப்பேசி அவளைக் கரைத்தேன். உடல் ரீதியாக எதுவும் நடக்கவில்லை எனப் பொய் சொன்னேன். சில நாட்கள் கழித்து அவள் சமாதானம் ஆனாள்

பேச்சை நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்தேன்.
நளன் பெருமூச்சு விட்டான்.

தப்பித்தீர்கள். உங்கள் காதலி செய்ததுதான் சரி. இல்லையென்றால் உங்கள் இருவருக்குமே இது பெரிய சிக்கலாய் போய் முடிந்திருக்கும்

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சரி நான் என்ன செய்ய வேண்டும்?”

”சொல்கிறேன். என் மனைவி, எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடுவேன் என நம்புகிறாள். இப்போது அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் இரண்டு வருடம் காத்திருக்க வைத்து அனுமதிக்கிறார்களாம்

நளனும் ஆமோதிப்பாய் தலையசைத்தான்

“ஆனால் விண்ணப்பத்தோடு அங்கு நடக்கும் உடல் பரிசோதனையிலேயும் தேற வேண்டும். கணவன் மற்றும் மனைவியின் மூன்று வருட நினைவுகளை சேகரித்து ஒவ்வொன்றாய் ஆராய்கிறார்கள். அதில் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியுடைய நினைவுகள் இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும்.”

நளன், “ ஆம்” என்றான்.

என்னுடைய நினைவில் என்ன இருக்கும் என்பதைத்தான் இவ்வளவு நேரம் சொன்னேன்

நளன் எழுந்து நடந்தான்.

புரிகிறது. உங்கள் மெமரியில் படிந்திருக்கும் இந்தப் பெண் தொடர்பான சம்பவங்களை அழிக்க வேண்டும் அதானே?”

ஆம் என தலையசைத்தேன்.

அரை மணி நேர வேலைதான். ஆனால் இதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. முதலில் உங்களின் கேஸ் ஹிஸ்டரியை எழுதி அரசாங்கத்திடம் அனுமதி வாங்கவேண்டும். திருமண பந்தத்திற்கு வெளியிலான உறவு என்பது தண்டனைக்குறிய குற்றம் என்பதால் அது கடினம். அதை விட சிக்கல் உங்களின் தமிழ்நாட்டுப் பயணங்கள். அரசாங்கம் இதை அறிந்தால் உங்கள் இருவருக்குமே மரண தண்டனை நிச்சயம்

நான் அயர்ந்தேன். இது நடக்காது என உணர்ந்தேன். இருந்தாலும் கேட்போமே எனக் கேட்டேன்.

இதற்கு வேறு தீர்வே இல்லையா?”

நளன் மெளனமாக இருந்தான்.

நான் மேலும் அழுத்திக் கேட்டேன்.

ப்ளீஸ் எந்தக் குற்றமும் செய்யாத என் மனைவிக்காக நீங்கள் உதவித்தான் ஆக வேண்டும்

நளன் தன் விரலை உயர்த்தினான். கணினித் தொடுதிரை ஒன்று அவன் முன்னால் வந்தது.

என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் இயலுமா எனப் பார்க்கலாம்என்றான்

தயாரானேன்.

உங்கள் காதலியின் பெயர் என்ன?”

மிளா

என்ன?”

மிளா

உண்மைப் பெயரா?”

ஆம் இதுதான் அவள் பெயர். மிளா ஒரு வகையான காட்டு மானின் பெயர்

சரி அவரின் அலைபேசி எண், மின்னஞ்சல்?”

சொன்னேன்.

நளன் அரசுத் தகவல் வங்கியில் அவள் விவரங்களைத் தேடினான். அவள் தற்சமயம் வேறொரு நகரத்திற்கு குடிபெயர்ந்திருப்பது தெரிய வந்தது. ஆழமாய் யோசித்தான். பின்பு என்னுடைய தகவல்களை வாங்கி அதையும் தகவல் வங்கியில் அலசினான். சரியாக வரிகளை கட்டும் எந்தவித குற்றப் பின்னணியுமில்லாத பிரஜை நான் என்பதை அறிந்து கொண்டான்.

சரி செய்துவிடலாம். ஆனால் அதற்கு கொஞ்சம் செலவாகும்

மருத்துவக் காப்பீடு இருக்கிறது

பணம் மருத்துவமனைக்கல்ல எனக்குஎனச் சிரித்தான்.

லஞ்சமா? இது குற்றம்

நளன் தாழ்வாய் என்னைப் பார்த்தபடி

நீங்கள் செய்தது மட்டும் என்ன புரட்சியா?”

என்னால் பேசமுடியவில்லை.

எவ்வளவு? எனக் கேட்டேன்.

அரை மில்லியன்”.

எழுந்து கொண்டேன். எனக்கிது வேண்டாம். வருகிறேன். எனச் சொல்லியபடியே திரும்பினேன்.

நில்லுங்கள் என்ற நளன் இதைப் பாருங்கள் என அவன் ஆட்காட்டி விரலை நீட்டினான். உரையாடல் ஆரம்பத்தில் என் கழுத்தில் வைத்த சின்னக் குமிழ் அவன் விரல் நுனியில் இருந்தது.

உங்கள் ஒட்டு மொத்த நினைவும் இதில் பதிவாகி இருக்கிறது. சாம்பிள் பார்க்கிறீர்களா?”

நளன் அந்தக் குமிழை கணினித் தொடுதிரையில் பொருத்தினான்.

மிளா அந்தத் திரையில் தோன்றினாள். நளன் காற்றில் விரலை நகர்த்தினான். நான் மிளாவை அணைத்துக் கொண்டிருந்த காட்சி திரையில் நகர்ந்தது. நளன் மீண்டும் விரலை நகர்த்தினான். என் மனைவி உள்ளாடைகளோடு திரையில் தோன்றினாள்.
நிறுத்து எனக் கத்தினேன். நளன் ஒரு சின்னச் சிரிப்போடு திரையை அணைத்தான்.

உங்கள் மனைவி மற்றும் காதலி இருவருமே மிக அழகாக இருக்கிறார்கள்என்றான்

அவன் மீது பாய்ந்தேன்.

நாசூக்காய் விலகிக் கொண்டவன், தொடர்ந்தான்,

வன்முறை எனக்குப் பிடிக்காது. உங்கள் உயிருக்கு அரை மில்லியன் விலை மிகக் குறைவு. மேலும் உங்களின் சம்பளம், கடன் இதையெல்லாம் கருத்தில் கொண்டே இந்தக் குறைவான தொகையைக் கேட்டேன். நாளை வங்கி நபரை அனுப்புகிறேன். அவர் உங்கள் சம்பள விவரங்களை வாங்கிக் கொண்டு கடன் தருவார். நாளை மறுநாள் பணம் என் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதும் இங்கு வாருங்கள், அரை மணிநேரம்தான். மிளா தொடர்பான எல்லா நினைவுகளையும் அழித்து விடுகிறேன். மேலும் சில நல்ல பொறுப்பான தகப்பனுக்கான நினைவுகளையும் உங்கள் மூளையில் பதிகிறேன். நிச்சயம் குழந்தைக்கான அனுமதி கிடைக்கும்

நளன் நிறுத்தாமல் பேசினான். அவனுக்கு இது போன்ற அனுபவங்கள் ஏற்கனவே இருந்திருக்கும் போல. அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னவோ உங்களை எனக்குப் பிடித்துவிட்டது ஆகவே கேஸ் ஹிஸ்டரிய மாற்றி எழுதுகிறேன். வேலை தொடர்பான அதிக அக்கறையால் உருவான அழுத்தங்களை நினைவிலிருந்து நீக்கும் சிகிச்சை என்று எழுதி அரசாங்கத்திற்கு அனுப்பி விடுகிறேன். மருத்துவ காப்பீடும் கிடைக்கும். உங்கள் அலுவலகத்திலேயும் பதவி உயர்வு கிடைக்கலாம். ஆல் பெஸ்ட்என முடித்தான்.

நான் சிக்க வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். எதுவும் பேசாமல் கதவிற்காய் நடந்தேன். அவனை அடிக்கத்தான் முடியவில்லை ஆத்திரம் தீர வசையலாம். ஆனால் வார்த்தைகளே வரவில்லை. ஆனாலும் இப்படி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் போய்விட முடியாது. அவனிற்காய் திரும்பி வெறுப்பாய் சொன்னேன்.

நீ உன் அம்மாவிற்கு கூட ஒரு நல்ல விலை வைத்து விற்றுவிடுவாய்

நளன் இன்னும் சத்தமாய் சிரித்தான்.

எனக்கு அம்மா கிடையாது. டிஎன்ஏ க்ளோனிங்

ஆத்திரத்தில் மூச்சிறைத்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து சிரிப்பதை நிறுத்திய நளன் இறுக்கமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.

என்ன செய்வது நண்பா, ஒரு மில்லியன் டாலர் கொடுத்தால் என்னால் மூன்று நாட்கள் இந்த நரகத்தை விட்டு வெளியே போய் வர முடியும். இதை விட்டுத் தற்காலிகமாக வெளியேற எல்லாமும் செய்யலாம்தானே, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எந்தக் கண்காணிப்புகளுமில்லாத முழு மூன்று நாட்கள். சுதந்திரம். இந்தச் சொல்தான் எத்தனை இனிக்கிறது. சுதந்திரம்ம்ம் ”

பரவசத்தில் நளன் கண்களை மூடிக் கொண்டான்.

எனக்கு மீண்டும் மிளாவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் நினைவிலாடின. தலையை உலுக்கிக் கொண்டு மறுவார்த்தைப் பேசாது வெளியேறினேன்.

ஸோரா நாயர் மேற்சட்டை இல்லாமல் தேநீர் குவளையோடு அஜிதனின் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தது.





Featured Post

test

 test