Tuesday, August 29, 2017

LIVIN லிவின் - இணையத் தொடர்

நண்பன் சித்து பகிர்ந்திருந்த சுட்டியைப் பிடித்துப் போய் இந்த லிவ் இன் தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன். இதுவரை பதினோரு பாகங்களை யூடியூபில் பதிவேற்றி இருக்கிறார்கள். அதிகபட்சம் பதினைந்து நிமிடங்கள் என்பதால் முதல் அமர்வில் ஆறு பாகங்களும் அடுத்த அமர்வில் ஐந்து பாகங்களுமாய் ஒரே நாளில் பார்த்துவிட வாய்த்தது. அதிகம் மெனக்கெடாத வழக்கமான 'ஹால் ட்ராமா'தான் என்றாலும் உரையாடலில் தென்பட்ட சுவாரசியமும் சமகால விஷயங்களை உள்வாங்கிய இளைஞர்களின் வெளிப்பாடு என்பதாலும் மிகவும் பிடித்துப் போய்தான் பார்த்தேன்.

ஒரு வகையில் இந்தத் தொடர் எனக்கு 'கேம் ஆஃப் த்ரோன்' ஜூரத்திலிருந்து வெளியேற உதவியது. இதில் ஒரு சுவாரசிய முரண் என்னவென்றால்  இந்த மொத்தக் குழாமும் 'கேம் ஆஃப் த்ரோன்' தொடரின் தீவிர ரசிகர்கள் போல. பெயர் உருவம் புத்திசாலித்தனம் உட்பட அப்படியே GOT சாமை, சாமிநாதனாக உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். போதாத குறைக்கு Her திரைப்படத்தின் AI காதலியும் சாமோடு சேர்ந்து கொள்கிறாள். ”அடப் போட்டோ காப்பிப் பசங்களா!” எனத் திட்ட முடியாத அளவிற்கு இதையெல்லாம் இவர்கள் வெளிப்படையாக, உரையாடலாக சொல்லிவிடுகிறார்கள். நாமும் So What! எனக் கடந்து இவர்களோடு ஒட்டிக் கொள்ள முடிகிறது.

ஜங்க் ஃபுட், பியர், வீடியோ கேம், உலகத் திரைப்படங்கள், முரகாமி, சேர்ந்து வாழ்தல், பிடித்ததைச் செய்தல், சோம்பலாய் சந்தோஷமாய் இருத்தல் என சமகால ’அப்பர் க்ளாஸ்’ இளைஞர்களை இந்தத் தொடர் திகட்டத் திகட்ட முன் நிறுத்துகிறது.

சகலரையும்  ’ப்ரோ’ என அழைக்கும் சம உலகமாக இந்த இளைஞர்களின் உலகு மெல்ல மாறிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. நிஜமாகவே சென்னை வாழ்வு இப்படி இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்போலத்தான் தோன்றுகிறது. குழாயை சரி செய்ய வரும் ப்ளம்பர்,  ஹரீஷை ”ஹாய் ப்ரோ” என அழைப்பதும் ஹரிதாவுடன் கடலை போடுவதும் பார்க்கவே நன்றாக இருந்தது. அய்யர் பாஷையில் அங்கலாய்க்கும் மாமியை சாம் ’ரேஸிஸ்ட் பீபுள்’ எனத் திட்டுகிறான். ஒரிஜினல் புத்திசாலிகள் இந்த ITத் துறையில் ஏமாற்றப்படுவது குறித்து, வீட்டைத் துறந்து வெளியில் இடம் சரிப்படாமல் அலையும் இளைஞர்கள் குறித்தெல்லாம் சாம் கதாபாத்திரம் மூலம் பேசியிருக்கிறார்கள்.

எழுத்தாளராகும் கனவில் இருக்கும் ஹரிதா கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. ஹரீஷ், சாம், சித்தார்த், ஹரிதா அப்பா, ஹரீஷ் அக்கா, வீட்டு உரிமையாளர், அவர் மனைவி என விரல் விட்டு எண்ணக்கூடிய கதாபாத்திரங்கள்தாம். பட்ஜெட் பிரச்சினைகள் இருக்கக் கூடும் என்றாலும் ஒரு தொடருக்குப் போதுமான கதாபாத்திரங்கள் இல்லை என்பது முழுமையற்ற தன்மையை உருவாக்குகின்றது. பதினோராவது பகுதியில்தான் மியா வருகிறாள். அவளும் சாமைப் போலவே இருப்பது ஏமாற்றம். தொடரின் சுவாரசியத்தைக் கூட்ட முரண்களையும் நிகழ்வுகளையும் உருவாக்க வேண்டியது அவசியம். புதிதாக எந்த சம்பவங்களும் நிகழாமல் வெறுமனே டிவி முன்னால் அமர்ந்து தின்று குடித்து விளையாடிப் படம் பார்த்து நகர்வதால் அலுப்பும் தட்டுகிறது. இந்தக் குழுவினர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

இணையத் தொடர் என்பதால் சென்ஸார் பிரச்சினைகள் கிடையாது. ஃபக், பாஸ்டர்ட், மேட்டர் என வெளிப்படையாக ஜாலியாகப் பேசிக் கொள்கிறார்கள். ஹரீஷ், தன் அக்கா தொடர்ந்து குடைச்சலைக் கொடுக்கவே ஃபக் ஹர் என்கிறான். உடனே ஹரிதா கூல் ஜேமி லானிஸ்டர் என்கிறாள். இதெல்லாம் ஒரு சின்னப் புன்னகையை வரவழைத்தது.

ஹரீஷ் எடுக்கும் புகைப்படங்களை விட அவன் உதவியாளனான சித்தார்த் எடுக்கும் புகைப்படங்கள் இன்னும் நுணுக்கமாகவும் உயிர்ப்பாகவும் இருக்கிறது. ஆக அடுத்த தலைமுறை இளைஞர்கள் இன்னும் சுதந்திரமாகவும் உயிர்ப்பாகவும் இருப்பார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள்.

சமூக ஏற்றத் தாழ்வுகளற்ற, ஆண்பெண் பாகுபாடில்லாத, திருமணம்- பந்தம் போன்ற நமுத்த விஷயங்களில்லாத, சுதந்திரமான, இளமை மின்னும் ஒரு வாழ்வைப் பார்க்க நிஜமாகவே நன்றாக இருக்கிறது.




புதிர்களின் சுழல் - முல்ஹாலன்ட் ட்ரைவ்

எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பதைப் போன்ற உணர்வை சில படங்கள் தரும். முல்ஹாலண்ட் ட்ரைவ் அதில் முதன்மையானது. சில வருடங்களுக்கு முன்பு இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு குழம்பியது - திகைத்தது - ’வாட் த ஃபக்’ எனப் புலம்பியது - இன்னும் நினைவில் இருக்கிறது. அடுத்த நாள் இணையத்தில் தேடி விமர்சனங்களை, விளக்கங்களை வாசித்தும் நிறைய இடைவெளி இருப்பதைப் போல் தோன்றியது. படம் பார்த்த நண்பர்களிடம் பேச முனைந்தாலோ, அவர்களின் புரிதல் இன்னும் அகலபாதாளத்தில் இருந்தது. அப்படியே அதைக் கடந்து போய்விட்டேன். நேற்று ’மேக்’ திரும்பி வந்ததும் ஒரு நல்ல படம் பார்ப்போமே எனத் துழாவியதில் முதலில் கண்ணில் பட்டது இந்தப் படம்தான். அரைமணி நேரம் பார்ப்போம் என ஆரம்பித்து முழுமையாய் முடித்துவிட்டுத்தான் தூங்கப் போனேன். இந்த முறை இன்னும் சில விஷயங்கள் தெளிவாகின.

தமிழில் முல்ஹாலண்ட் ட்ரைவ் படத்திற்கு விமர்சனம் எழுதி இருக்கிறார்களா என இன்று கூடத் தேடி ஓய்ந்து போனேன். இல்லை. அல்லது என் கண்ணில் படவில்லை. முதல் முறை தவறவிட்டு இரண்டாம் முறை தெளிவான சில விஷயங்கள்,

1. பெட்டியும் டயானாவும் ஒருவர்தாம்.  நயோமி வாட் இரண்டு கதாபாத்திரங்களிலும் அபாரமான வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.

2. படத்தின் கடைசி இருபது நிமிடங்களான டயானா பகுதி மட்டும்தான் நிஜம். மற்றவை எல்லாம் கனவு.

3. காபிக் கடையின் பின்புறம் வெளிப்படும் உருவம் பேய் கிடையாது. ஒரு சாலையோர மனிதன்.

நமக்குத் தேவைப்படும் கதையானப் படமாக முல்ஹாலண்ட் ட்ரைவ் ஐ இப்படிப் புரிந்து கொள்ளலாம்.

டயானா வும் கமீலாவும் உறவில் இருக்கிறார்கள். இருவருமே ஹாலிவுட்டில் நடிகைகளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். டயானாவின் வாய்ப்பை கமீலா இயக்குனரை மயக்கிப் பறித்துக் கொள்கிறாள். அவர் மீது காதல் வயப்படுகிறாள். ஒரே நேரத்தில் காதலையும் கதாநாயகி வாய்ப்பையும் இழந்த டயானா, கமீலாவைக் கொன்று பழி தீர்க்க விரும்புகிறாள். அதற்காக ஒரு அடியாளை நாடுகிறாள். அவனும் அதற்கு சம்மதிக்கிறான். வேலை முடிந்ததும் ஒரு சாவியை அவள் வீட்டில் வைத்துவிடுவதாய் சொல்கிறான். டயானா உறங்கச் செல்கிறாள். அவள் காணும் கனவுதான் பெட்டிக்கும் ரீட்டாவிற்கும் இயக்குனருக்கும் நிகழும் சம்பவங்கள். பக்கத்து வீட்டுப் பெண்ணின் அழைப்பு மணியில் எழும்  டயானா வீட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும் சாவியைப் பார்க்கிறாள். கமீலாவைக் கொன்ற குற்ற உணர்வு அவளுக்குள் பல மாய பிம்பங்களை ஏற்படுத்தி தற்கொலை செய்து கொள்ள வைத்துவிடுகிறது. அவள் துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டு இறந்து போகிறாள்.

இதுதான் மேலோட்டமான கதை. ஆனால் இதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. என் பழகிய மூளைக்கு கதை என்ற ஒன்று - லாஜிக் என்ற ஒன்று - தேவைப்படவே இந்தப் படத்தை இப்படிச் சுருக்கிப் புரிந்து கொண்டேன். ஆனால் படம் நிச்சயமாக மேலே சொன்ன கதை மட்டுமே இல்லை.

இதில் வரும் நீல நிறப் பெட்டி மற்றும் சாவியை மட்டும் வைத்துக் கொண்டே இதை ஒரு அறிவியல் புனைக் கதையாவும் புரிந்து கொள்ளலாம். பேக் டு த ஃபியூச்சர், ஜூமாஞ்சி மாதிரியான இணை உலகில் நடக்கும் சம்பவங்களை விவரிக்கும் படமாகவும் முல்ஹாலண்ட் ட்ரைவ் திரைப்படப்படத்தைப் பார்க்கலாம். காலங்களைக் கடந்து செல்லப் பயன்படும் காலயந்திரம் போல அந்த நீலப்பெட்டியையும் சாவியையும் புரிந்து கொள்ளலாம்.  முதல் காட்சியிலிருந்து அந்த நீலப்பெட்டியின் சாவி கைக்கு கிடைக்கும் வரை ரீட்டாவிற்கும் இயக்குனருக்கும் ஏராளமான துன்பங்கள் நிகழ்கின்றன. பெட்டிக்கு மட்டுமே எல்லாம் சரியாக நிகழ்கின்றன. ரீட்டா சாவியால் அக் காலயந்திரத்தை திறக்கும் முன்னரே பெட்டி மறைந்து போகிறாள்.  திறந்ததும் ரீட்டாவும் மறைந்து போகிறாள். ரீட்டா - கமீலா என்கிற புகழ்பெற்ற நடிகையின் சமகாலக் கொண்டாட்ட வாழ்விற்குள் வந்துவிடுகிறாள். அங்கு எல்லாமும் சரியாக இருக்கிறது. ஆனால் பெட்டி என்கிற டயானாவின் வாழ்வு துயரமாக இருக்கிறது.

இப்படியாக ஏராளமானக் கதைகளை காண்போரே உருவாக்கிக் கொள்ளும் சாத்தியங்கள் கொண்ட படமிது. இதே போல பன்முக சாத்தியம் கொண்ட ’இன்செப்ஷன்’ மாதிரியான  திரைக்கதைகள் வந்தாலும் முல்ஹாலண்ட் ட்ரைவில் இருக்கும் விரிவும் ஆழமும் புதிருக்கான பின்னணி மன உளவியலும்  தனித் தன்மை கொண்டவை. கனவுகள் குறித்து ஆரோய்வோருக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு ஆய்வுக் களமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. படத்தில் இன்னும் தெளிவடையாத குழப்பங்கள் ஏராளம் உண்டுதான் என்றாலும் புகைமூட்டமாக இருந்த மனம் கொஞ்சம் தெளிவடைந்திருக்கிறது.

அடுத்த முறை வழக்கம்போல் தனியாகப் பார்ப்பதற்குப் பதில்  கொஞ்சம் விவரமான நபருடன் கொண்டாட்ட மனநிலையில் இந்தப் படத்தைப் பார்த்தால் இன்னும் தெளிவடையாத கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன்.



Thursday, August 24, 2017

பல்ப் 3. பல்ப்பின் இலக்கியக் காதல்

”நீ என்னிக்கு வர?”

 “நாளைக்கு நைட் அங்க இருப்பன்”

 “ஹோட்டல் போன் நம்பர் மெசேஜ் பன்றேன். கால் பண்ணி ரூம் புக் பண்ணிடு”

 “என்னது தனி ரூமா? அப்புறம் நான் என்ன டேஷ்க்கு அங்க வரனும்?”

 “ஏய் சும்மா உன் பேர்ல புக் பண்ணு. நான் இங்க ஒரு மாசமா தங்கி இருக்கறதால எல்லாரையும் தெரியும். நீ வந்து என் கூட தங்கினா தப்பா போய்டும். நீ அந்த ரூம்ல திங்க்ஸ் லாம் போட்டுட்டு யார் கண்லயும் படாம என் ரூம் க்கு வந்திடு.”  

“சரி. ஆனா ஒரு மாசமாவா ஹோட்டல்ல இருக்க?”

 “ஆமா டா இதோ இதோ ன்னு நாவல் இழுத்துட்டே போகுது. இந்த வாரத்துல முடிஞ்சிடும். எப்படி வந்திருக்குன்னு நீ வந்து படிச்சிட்டு சொல்லு”

 “நாவல் படிக்கறதுக்கா என்ன கூப்டுற?”

 “பின்ன வேற எதுக்காம்?”

 “உன்னப் படிக்க இல்லயா?”

 “கருமம் கேட்க சகிக்கல. ஏண்டா, நீ எழுதுற குப்ப நாவல் மாதிரியேதான் பேசுவியா?”

 “எல்லாம் என் தலையெழுத்துடி”

 “கோச்சுக்காதடா. என்னதான் இருந்தாலும் நீ க்ரைம் எழுத்தாளன் தானே”

 “நீ பெரிய இலக்கிய எழுத்தாளினியாச்சே ஏன் என்னப் போய் உன் நாவல படிக்க கூப்டுற?”

 “நீ நல்லாப் படிப்பேன்னுதாண்டா”

 “கொடும எனக்கு டபுள் மீனிங்காவாவே அர்த்தமாகுது”

 “நான் டபுள் மீனிங்க் லதான பேசினேன்”

 “பாவி இரு வந்து வச்சிக்குறேன்”

 “வா வா சீக்கிரம் வா”

 “காலைலயே சரக்காடி, கெறங்குற”

 “இல்லடா, நீ வா நேர்ல பேசலாம்”  

விக்ரம் கைப் பேசியைத் துண்டித்தான்.

லேனா. சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர். விக்ரமைப் போன்ற பல்ப் எழுத்தாளர்களை மூர்க்கமாய் மறுக்கும் இலக்கியவாதி. சமூகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் வெகுசன எழுத்துகள்தாம் என நம்பும் தூய இருதயம் கொண்டவள். சென்ற வருட இறுதியில் அவளுடைய பேட்டி ஒன்று ஆனந்த விகடனில் வெளிவந்திருந்தது. கேள்வி கேட்டவர் சம்பந்தமே இல்லாமல், புகழ் பெற்றிருக்கும் விக்ரமின் எழுத்தைப் பற்றி அபிப்பிராயம் கேட்டிருந்தார். லேனா விக்ரமின் ஒரே ஒரு நாவலை நான்கு பக்கங்கள் மட்டும் படித்ததாகவும் அதற்கு மேல் படிக்க முடியாத அளவிற்கு அந்நாவல் குப்பை எனவும், சாக்கடை எழுத்து எனவுமாய் பதில் சொல்லி இருந்தார். அவன் இந்தப் பேட்டியை வாசித்திருந்தாலும் பொருட்படுத்தவில்லை. சாகித்ய விருது வாங்கியவர் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என அந்த மாத பெளர்ணமி இரவில் இதழில் நக்கலடித்துவிட்டுக் கடந்து போய்விட்டான். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் அவன் அலுவலக விலாசத்திற்கு மலைக்க வைக்கும் எண்ணிக்கையில் கடிதங்களாய் வந்து குவிந்தன. எல்லாக் கடிதங்களுமே லேனாவை கண்டபடி வசைந்தும் அவனைப் புகழ்ந்துமாய் எழுதப்பட்டிருந்தன. விக்ரமே வியந்து போனான். திடீரென அவனுக்கு இக்கடிதங்களோடு லேனாவைப் போய் பார்த்தால் என்ன? எனத் தோன்றியது. உதவியாளரை அழைத்து அத்தனைக் கடிதங்களையும் ஒரு பெரிய சாக்குப் பையில் போட்டுக் கட்டி, காரில் வைக்கச் சொன்னான். அசோக்கிடம் கேட்டு அவளின் முகவரியைத் தேடிப் பிடித்தான். கே கே நகரில்தான் அவள் வீடு. அடுத்த அரை மணிநேரத்திற்குள் வீட்டின் முன்னால் போய் நின்று காலிங் பெல் அடித்தான்.

பதின்மங்களைக் கடந்திராத ஒரு பெண் கதவைத் திறந்து யார் வேணும்? எனக் கேட்டாள். லேனாவைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னான். ஹாலில் அமரச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள். ஹாலில் ஏராளமான புத்தகங்களோடு மிகப் பெரிய புத்தக அலமாரி ஒன்று கம்பீரமாய் நின்றிருந்தது. நடுத்தர வயதில் ஒரு பெண் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள்தான் லேனாவாக இருக்கக் கூடும். ஐந்து நிமிடத்தில் நைட்டி சகிதமாய் முகத்தை துண்டால் துடைத்தபடி லேனா ஹாலிற்கு வந்தாள். யாருங்க? எனக் கேட்டவளை நிமிர்ந்து பார்த்தான். சந்தன நிற லேனா அப்போதுதான் தூங்கி எழுந்தாள் போல, அவளின் மிகப் பெரிய கண்கள் பளிச்சென மின்னின. எழுந்து நின்று

 “நாந்தான் நீங்க சொன்ன சாக்கடை எழுத்துக்கு சொந்தமான விக்ரம்”

இரண்டு நொடி கண்களை இமைக்க மறந்து, சற்றுத் திகைத்து பின் சகஜமாகி “அட வாங்க வாங்க உட்காருங்க என்றபடியே பின்புறமாய் கழுத்தை திருப்பி மாலா, காபி கொண்டா” என்றுவிட்டு சொல்லுங்க என்றாள். அவனுக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகளே வரவில்லை. நொடிக்கொரு பாவணை காட்டும் அவளின் முகத்தையும் இரவு உடையில் தளும்பிய உடலின் கச்சிதத்தையும் பார்த்தும் பார்க்காமலிருக்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தான். அவளாகவே தொடர்ந்தாள்.

“நான் எதிர்பாத்தத விட ரொம்ப யங் ஆ இருக்கீங்க நானூறு நாவல் எழுதிட்டீங்களாமே க்ரேட்”

“நானூறு குப்பை”

மெதுவாகச் சிரித்தாள்.

“சாரி. நான் அப்படி சொல்லி இருக்க கூடாதுதான். பேட்டி முடிஞ்சதுமே நான் சொன்னது தப்புன்னு புரிஞ்சி சொன்னத எடிட் பண்ண சொன்னேன். வேணுன்னே போட்டிருக்காங்க “

“ம்ம் அவங்களோடதும் விக்கனுமே “

 “காபி குடிங்க “

குடித்துவிட்டு எழுந்தான்.

“சரி வரேங்க”

“என்ன விஷயமா வந்தீங்கன்னு தெரிஞ்சிக்கலமா?”

 “விகடன் பேட்டியக் கேள்விப்பட்டு சும்மா உங்கள பாக்க வந்தேன் அவ்ளோதான். வரேன்”

விக்ரம் சொன்னதை அவள் நம்பவில்லை. அவன் கண்களை ஆழமாய் பார்த்து பரவால்ல சொல்லுங்க என்றாள். எதுவும் பேசாமல் எழுந்து வெளியேறியவன் கேட்டைத் திறந்து கொண்டு வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த காரைத் திறந்து பின் சீட்டில் கிடந்த மூட்டையை வெளியே இழுத்தான். பின்னாலேயே வந்தவள் கேட்டின் மேல் கையூன்றி

“என்ன மூட்டை? “ எனக் கேட்டாள்

ஒரு கை பிடிங்க” என்றான்.

லேனா தன் இடத்தில் இருந்து அசையாமல், மாலா எனக் குரல் கொடுத்தாள்.

உள்ளேயிருந்து வந்த மாலா மூட்டையின் இன்னொரு பக்கத்தைப் பிடித்தாள். அந்த மூட்டையை இருவருமாய் இழுத்து வந்து கேட்டினுள் போட்டனர்.
“என்னங்க இதெல்லாம்?” எனப் புதிராய் கேட்டவளுக்கு மூட்டையின் முடிச்சை அவிழ்த்துக் காண்பித்தான்.

தபால் உறைகள், இன்லெண்ட் லெட்டர்கள், போஸ்ட் கார்டுகள் என குவியலாய் தரையில் வந்து விழுந்தன.

“எனக்கு வந்த வாசகர் கடிதங்கள்.”

 “சரி, இத ஏன் என் வீட்டுக்கு எடுத்து வந்தீங்க?”

 “இந்த எல்லா லெட்டருமே உங்களத் திட்டித்தான் வந்திருக்கு நியாயப்படி உங்ககிட்டதானே கொடுக்கனும்”

என்றபடியே அவள் பதிலை எதிர்பாராமல் கேட்டைத் திறந்து கொண்டு வெளியேறினான். லேனா கோபம் கொப்பளிக்க நின்று கொண்டு அந்தக் கடிதங்களையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். விக்ரம் காரில் அமர்ந்துகொண்டு கண்ணாடியைச் சரி செய்து அவளைப் பார்த்தபடியே வண்டியைக் கிளப்பினான்.

அந்த சந்திப்பிற்குப் பிறகு லேனாவை விக்ரம் மறந்து போனான்.எழுத்தில் கவனத்தைத் திருப்பினான்.  ஆனால் அசோக்கின் கொதிப்புதான் அடங்கவில்லை. இலக்கிய எழுத்து என்பது வெறும் ஜோடனை அல்லது பாவனை மட்டும்தான் என அசோக் ஆழமாய் நம்பினான். மேலும் ஒரு எழுத்திற்கு இலக்கிய அந்தஸ்தைக் கொடுப்பது எது என்பது குறித்தும் அவனிற்குள் கேள்விகள் இருந்தன. அதிக மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் எளிய மக்கள் வாங்கும் விலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவுமே மாத நாவலை மலிவான தாளில் விலை குறைவாய் கொடுக்கிறோம் அதற்காக அது தரமில்லாததாகிவிடுமா என்றெல்லாம் இரவு குடி சந்திப்புகளில் விக்ரமுடன் மருகிக் கொண்டிருந்தான். இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தான். விக்ரமின் இரண்டு நாவல்களைத் தொகுத்து ஒரே புத்தகமாக தரமான அச்சில் கெட்டி வண்ண அட்டைகளோடு கொண்டு வந்தான். அந்த வருட புத்தகக் கண்காட்சியிலும் ஸ்டால் போட முடிவெடுத்தான். இப்படித்தான் பெளர்ணமி இரவில் பதிப்பகம் உருவானது. அட்டையின் பின்பக்கத்தில் பிரபலங்களின் ப்ளர்ப் புகழாரங்கள் தாங்கிய அடுத்தடுத்த ஐம்பது புத்தகங்கள் தயாராகின. புத்தகக் கண்காட்சி துவங்கியதும் தினமும் மாலையில் விக்ரமை ஸ்டாலுக்கு வரச் சொன்னான். விக்ரமும் சிரத்தையாய் கண்காட்சிக்கு சென்று வந்தான். ஸ்டாலில் நல்ல கூட்டம். திரளான வாசகர்கள் சூழ்ந்து கொண்டனர். கையெழுத்தும் சங்கோஜமான பதில்களுமாய் திக்குமுக்காடினான். அசோக்கும் உற்சாகத்தில் மிதந்தான். விற்பனை நன்றாக இருப்பதாக சொன்னான்.

“சுஜாதாவிற்கு அடுத்தபடியாக புத்தகக் கண்காட்சியில் பெஸ்ட் செல்லர் நீதான், நம் புத்தகங்கள்தாம்” என்ற அவன் உற்சாககுரலை விக்ரமால் நம்பக் கூட முடியவில்லை.

கூட்டம் குறைவாக இருந்த ஒரு மாலையில் கண்காட்சியைச் சுற்றிய வரப் போனபோது லேனாவைப் பார்த்தான். ஒரு இலக்கியப் பதிப்பக ஸ்டாலில் லேனா சற்று உரத்த குரலில் உரையாற்றிக் கொண்டிருந்தாள். சின்னக் குழு அவளைச் சூழ்ந்து கொண்டிருந்தது. ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் ஜீன்ஸ் பேண்ட் டும் அணிந்திருந்த அவளை அம் மஞ்சள் வெளிச்சத்தில் தாண்டிப்போன போது மனதிற்குள் இனம் புரியாத ஏதோ ஒரு மாறுதல் நிகழ்ந்தது. திடீரென அவளைப் பிடித்துப் போயிற்று. திரும்பி அவள் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலிற்குள் நுழைந்தான். பேச்சினூடாய் விக்ரமை அடையாளம் கண்டு கொண்டது அவள் கண்களில் தெரிந்தது. ஸ்டால் உரிமையாளர் அவனை எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு சின்ன நமுட்டுச் சிரிப்போடு தலையசைப்பில் அவனையும் வரவேற்றார். லேனாவை சூழ்ந்திருந்த குழுவிற்கு விக்ரமைப் பிடிக்காதது ஒரு ஜந்துவைப் போல் அவர்கள் பார்த்ததிலிருந்து அப்பட்டமாய் தெரிந்தது. எதையும் பொருட்படுத்தாமல் குழுவுடன் ஐய்க்கியமானான். விர்ஜினா வுல்ஃப் என்கிற எழுத்தாளரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். தன்னுடைய கடைசி நாவலை எழுதிவிட்டு வீட்டிற்கு அருகாமையிலிருந்த நதியில் குதித்து தன்னை மாய்த்துக் கொண்டாள் என்ற வரியோடு ஒரு துளி கண்ணீரையும் சிந்தி, லேனா தன் உரையை முடித்த போது கைத் தட்டல்கள் எழுந்தன. கைத்தட்டல் ஓய்ந்ததும் கூட்டத்தைப் பார்த்து, நதியில் குதிப்பதற்கு முன்பு விர்ஜினா கூழாங்கற்களை தன் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்ட தகவலை விக்ரம் சொன்னான்.

கூட்டத்தில் ஒரு குரல்ஆ! அப்படியா அது கூழாங்கல்லே தானா?” என்றதற்கு பலத்த சிரிப்பு எழுந்தது. 

அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. நேராக லேனாவிடம் போய், ”நன்றாகப் பேசினீர்கள்” என்றான்.

புன்னகைத்தாள்.

“இன்னும் சற்று அருகில் போய் டி.வி சீரியல் அல்லது சினிமாவிற்கு நீங்கள் முயற்சிக்கலாம் நடிப்பு நன்றாக வருகிறது” என கிசுகிசுத்து விட்டு வெளியேறினான்.

 டுத்த நாள் காலை விக்ரமிற்கு சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தூங்கி எழுந்து காபியோடு தினசரியை மேய்ந்து கொண்டிருந்தான். ஒன்பது மணி இருக்கலாம். காலிங் பெல் அடித்தது. போய் கதவைத் திறந்ததும் குப் பென மது வாடை வீசியது. மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒல்லியான ஒரு நபரால் நிற்கக் கூட முடியவில்லை. தள்ளாடிக் கொண்டிருந்தார். சற்றே குள்ளமான இருவரும் ஸ்டடியாக இருந்தது போல் காட்டிக் கொண்டனர். யார் நீங்கலாம் எனக் கேட்டு முடிப்பதற்குள் குள்ளமாய் இருந்தவன் சற்று எக்கி அவன் மூக்கில் குத்தினான். எதிர்பார்த்திராத தாக்குதல் என்பதால் விக்ரம் நிலைதடுமாறி கீழே விழுந்தான். மூவரும் உள்ளே நுழைந்தனர். ஒல்லியாய் இருந்தவன் கெட்ட வார்த்தைகளை சத்தமாய் அள்ளி வீசினான். திட்டும்போது அவன் நாக்கு குழறவே இல்லை. மற்ற இருவரும் மல்லாந்து விழுந்து கிடந்த விக்ரமை மார்பில் மிதித்தனர். விக்ரமின் அப்பா உள்ளே இருந்து அதிர்ச்சியாய் ஓடிவந்தார். வெளியில் காரைத் துடைத்துக் கொண்டிருந்த ட்ரைவர் பெயர் சொல்லி இறைந்தார். வேலையில் கவனமாக இருந்த பாலன், இவர்கள் மூவரும் உள்ளே சென்றதையோ அங்கு நடந்த களேபரத்தையோ கவனிக்கவில்லை. சுதாரித்துக் கொண்டவர் உள்ளே ஓடி வந்து மூவரையும் குண்டு கட்டாய் அள்ளி வெளியில் வீசினார்.

அப்பா போலிசிற்குத் தொலைபேசினார். அசோக்கிடம் விவரத்தைச் சொல்லி விரைந்து வருமாறு அலைபேசியில் கத்தினார். கேட்டிற்கு வெளியில் மூவரும் சத்தமாய் வசைகளை இறைத்துக் கொண்டிருந்தனர். பத்து நிமிடத்தில் அசோக்கும் போலிசும் வந்து சேர்ந்தனர். போலீசார் மூவரையும் அள்ளிக் கொண்டு போனார்கள். விக்ரமின் அம்மா ரத்தம் வழிந்த அவன் மூக்கில் ஐஸ்கட்டியை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் இரத்தம் நின்றது. விக்ரம் எழுந்து நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அப்பா டாக்டரிடம் போகத் தயாரானதற்கு மறுப்பாய் தலையசைத்தான். பதறிய அவன் அம்மாவிடம் ஒன்றுமில்லை பயப்படாதே எனச் சொன்னான். வந்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை. ஒல்லியாய் இருந்தவனை மட்டும் எங்கேயோ பார்த்தார் போலிருந்தது. விக்ரம் சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு போலிஸ் ஸ்டேசன் வரை போய்வருவதாய் சொல்லிவிட்டு அசோக்குடன் கிளம்பினான். அடுத்த தெருமுனையில்தான் போலிஸ் ஸ்டேசன்.

ஸ்டேசனில் ஒரு கான்ஸ்டபிள் மூவரையும் நையப் புடைத்துக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. திடீரென பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே கவிதையை ஒரு குரல் சப்தமாய் மந்திரம் போல் உச்சரிக்கத் துவங்கியது. விக்ரம் குழம்பினான். கான்ஸ்டபிளபிடம் அடிப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டு கேட்டான்,

“யார் நீங்கலாம் என்ன வந்து ஏன் அடிச்சீங்க?”

“என்னது நாங்க யாரா?” ஒல்லிக் குரல் அதிர்ச்சியாய் கேட்டது

விக்ரம் குழப்பமாய் பார்த்தான்

ஒல்லியாய் இருந்தவன் பேச ஆரம்பித்தான்

 “தமிழ் எழுத்து சூழல் எவ்வளவு அயோக்கியத்தனமா இருக்குதுங்கிறதுக்கு இந்தக் கேள்வி ஒரு சான்று. இருந்தாலும் சொல்றேன். பாரதியாருக்குப் பிறகு தமிழ்ல கவிதை எழுதுறது நான் மட்டும்தான். என்ன உனக்கு தெரியாமப் போனதில ஆச்சரியம் இல்ல…”

உடனே அவன் பெயர் நினைவிற்கு வந்தது. அதீதன். சிறுபத்திரிக்கைக் கவிஞன்.

”நீங்களாம்?” என மற்ற இருவரையும் பார்த்துக் கேட்ட விக்ரமை நக்கலாய் பார்த்துவிட்டு

”நான் தான் காட்டுச்சித்தன்” என்றான் ஒருவன். இன்னொருவன் முறைத்துக் கொண்டே ”மித்ராங்கி” என்றான்.

விக்ரமிற்கு மூவரின் எழுத்தையுமே படித்திருப்பது நினைவிற்கு வந்தது. மீண்டும், வெகு நிதானமாக

“என்னை ஏன் அடிச்சீங்க?” என்றான்

“நீ லேனாவ சினிமா நடிக்க போவ சொன்னியாமே.. பாடு.. அவ்ளோ ஏத்தமாய்டுச்சா?” காட்டுச்சித்தன் கத்தினான்

புரிந்து கொண்ட விக்ரம் மெதுவாய் “இல்ல சீரியல் தான் முதல்ல ட்ரை பண்ணிப் பார்க்க சொன்னேன்” என்றான்.
மூவருமே ஒரே நேரத்தில் டாய் எனக் கத்தினார்கள். சட்டை செய்யாது எஸ்.ஐ நாற்காலிக்குப் போனான். அசோக்கிற்கு மிக நெருக்கமான நண்பர் அவர்.

“இந்த மூணு பேரும் அம்புகள்தான் எய்தது எழுத்தாளர் லேனா” என்றான்.

அப்ப லேனா பேரையும் கம்ப்ளைண்ட்ல சேர்த்துடுங்க என்றான் அசோக். 

“கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு வா” என சொல்லிவிட்டு விக்ரம் வெளியேறினான்.

எஸ்.ஐ தொலைபேசியில் ”ரைட்டர் லேனாங்களா? நீங்க ஸ்டேசன் வரனுமே” என சொல்லிக் கொண்டிருந்தது கேட்டது. அவனுக்கு லேனாவைக் கொஞ்சம் அலைய விட்டுப் பார்க்கும் எண்ணம் தோன்றியது பாலனைக் கூப்பிட்டு வண்டியை எடுக்கச் சொன்னான். முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு வீட்டிற்குத் திருப்பச் சொன்னான். குளித்துவிட்டு சாப்பிடும்போது அலைபேசி அலறியது.

 “ரைட்டர் விக்ரம் “

“ஆமாங்க”

“லேனா பேசுறேன் “

அமைதியாக இருந்தான்.

“தயவு செய்ஞ்சி நான் சொல்றத நம்புங்க.. நடந்ததுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது”

 “ம்ம்”

“நீங்க நம்பலன்னு தெரியுது நான் உங்க வீட்டுக்கு வரேன்”

“இல்லங்க வீட்ல நிலைமை சரியில்ல. அம்மா பயந்துட்டாங்க. இன்னொரு நாள் வாங்க”

“அப்போ நீங்க என்ன நம்பனும். சத்தியமா அந்த மூணு பேரும் ஏன் வந்து உங்கள அடிச்சாங்கன்னு எனக்கு தெரியாது. சொல்லப்போனா அதீதன தவிர்த்து மத்த ரெண்டு பேர்கிட்டயும் நான் பேசினது கூட கிடையாது”

“அப்போ நான் உங்கள சினிமாவுக்கு நடிக்க போகச் சொன்னது அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?”

“நீங்க என் காதுகிட்ட பேசினத அதீதன் பாத்துட்டு வந்து என்கிட்ட கேட்டான். அப்படி என்ன சொன்னார்னு”

“நானும் நீங்க சொன்னத அவன் கிட்ட சொன்னேன். ஆனா நிச்சயமா அது இப்படி வெடிக்கும்னு எனக்கு தெரியாது”

”…..”

“நடந்த தவறுக்கு ஏதோ ஒரு வகைல நானும் காரணமாகிட்டேன். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன்”

“எனக்கு கோபம் எதுவும் இல்லைங்க. அவங்க பண்ண தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க”

“சரி விக்ரம், இத சொல்லனும்னுதான் போன் பண்ணேன். உங்க கம்ப்ளைண்ட நான் என் வக்கீல் மூலமா பாத்துக்குறேன்” எனச் சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் துண்டித்தாள்.

விக்ரம் அவளை மேலும் கோபப்படுத்தி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். உடனே அசோக்கிற்கு போன் செய்து கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கச் சொன்னான். எஸ்.ஐ க்கு இம்மாதிரி எழுத்தாளர்கள் சண்டை எப்படி முடியும் என்பதில் முன் அனுபவம் இருந்திருக்கும்போல, எப்.ஐ.ஆர் எதுவும் போடவில்லை. வெறுமனே நால்வருக்கும் பொது வார்னிங் கொடுத்து அனுப்பிவிட்டார்.

அடுத்த நாள் காலை விக்ரமிற்கு அவளோடு மேலும் விளையாடிப் பார்க்கும் எண்ணம் தோன்றியது. மூக்கில் பெரிய சைஸ் பிளாஸ்திரி ஒன்றை ஒட்டிக் கொண்டு லேனா வீட்டிற்குப் போய் காலிங் பெல் அடித்தான். லேனாதான் திறந்தாள். மூக்குப் பிளாஸ்திரியைப் பார்த்து பதபதைத்தாள். அவளின் இரவு உடை உடல், அவனையும் லேசாய் பதபதைக்க வைத்தது. இருக்கையில் போய் அமர்ந்தான்.

மெதுவாக தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஆரம்பித்தான்

“போலிஸ் ஸ்டேசனுக்கு உங்களை வரவழைச்சதுக்கு சாரிங்க, பப்ளிஷர் அசோக் உணர்ச்சிவயப்பட்டு செய்தது அது”

“அவர்தான் உடனே கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிட்டாரே இல்லனா எப்.ஐ.ஆர் அது இதுன்னு அலைய வேண்டி வந்திருக்கும்”

“ஆரம்பத்திலிருந்தே நமக்குள்ள எல்லாமே தப்பாவே நடக்குது “

“ஆனா ஒண்ண கவனிச்சிங்களா, இது எதுக்குமே நாம காரணம் இல்ல மத்தவங்கதான் காரணமா இருக்காங்க “

புன்னகைத்தான்

அடுத்தடுத்த தினங்களில் இருவரும் நெருக்கமாகி விட்டனர். தினம் பேசிக் கொண்டனர். எழுத்து, இலக்கிய கிசுகிசுக்கள், சினிமா, வாசிப்பு என இருவரும் பேசிக் கொள்ள பல விஷயங்கள் இருந்தன. பல புள்ளிகளில் இருவரின் ரசனைகளுமே ஒத்திருந்ததன. விக்ரம் மீது லேனாவிற்கு ஒரு பிடித்தம் வந்துவிட்டிருந்தது. பல்ப் எழுதுகிறன் இவ்வளவு படித்திருப்பான் என அவளால் நம்பவே முடியவில்லை. லேனாவின் உடலை மட்டுமே ஆரம்பத்தில் கவனித்த விக்ரம் மெல்ல அவளின் குணத்தையும் கவனிக்க ஆரம்பித்தான். எல்லா வகையிலும் அவள் மிகச் சிறந்தவள் என அவனிற்குத் தோன்ற ஆரம்பித்தது. லேனாவிற்கு விக்ரமை விட இரண்டு வயது அதிகம். திருமணமும் டைவர்ஸும் ஆகிவிட்டது. ஓரளவிற்கு வசதியான குடும்பம். அப்பா அம்மா அண்ணன் தம்பிகள் எல்லோரும் இருந்தாலும் தனியாகத்தான் வசிக்கிறாள். லேனாவுடைய முதல் நாவல் 
நெருஞ்சி முள். இலக்கிய உலகில் பல அதிர்வுகளை உண்டாக்கியது. அவளுக்கான தனி அடையாளத்தையும் தந்திருந்தது. லேனாவின் இரண்டாவது நாவலான அயல்மகரந்தச் சேர்க்கை க்கு சாகித்ய அகடாமி விருதும் கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் அவள் கொடுத்த பேட்டி வாயிலாக விக்ரம் அறிமுகம் நிகழ்ந்தது. இப்படியே போய்கொண்டிருந்த நட்பு ஒரு மாலை அறுந்தது.

 அன்று மாலை ஏழு மணிக்கு லேனாவிடம் இருந்து அழைப்பு வந்தது. லேசாய் குழறலாய் பேசினாள்

“எங்க இருக்க விக்ரம்?”

“வீட்லதாங்க”

“ரொம்ப பிசியா நீ”

“இல்லயே சொல்லுங்க”

“கொஞ்சம் மகாபலிபுரம் வரமுடியுமா”

“ஓ வரலாமே அங்க என்ன பன்றீங்க?”

“என்னோட அடுத்த நாவல் தலைல வந்து உட்கார்ந்திருச்சி. ரொம்ப சிரமப்படுறேன். யார்கிட்டயாவது பேசியே ஆகனும். நீ வந்தா நல்லாருக்கும்”

அடுத்த இரண்டு மணிநேரத்தில் விக்ரம் கடற்கரையை ஒட்டிய அவள் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அறை எண்ணை போனில் கேட்டுத் தட்டினான். கதவைத் திறந்த லேனா கிட்டத்தட்ட தளும்பிக் கொண்டிருந்தாள். முன்பெப்போதும் பார்த்திராத அவளின் அன்றைய போதையூறிய புன்னகையை இப்போது நினைத்தாலும் அவனிற்கு சிலிர்க்கும். உள்ளே நுழைவதற்கு முன்பே அவன் மீது சரிந்தாள். விக்ரம் அப்படியே அவளை அள்ளிக் கொண்டான். இருவரும் ஆழமான காதலில் விழுந்தார்கள். நிறையப் பயணித்தார்கள். குடித்தார்கள். கொண்டாடினார்கள். ஆனால் அவர்களது வேலைகளில் கவனமாகவும் இருந்தார்கள்.

 “சார் வந்துட்டோம்” பாலனின் குரல் அவன் நினைவுகளைத் திருப்பக் கொண்டுவந்தது.

நேற்று லேனா போனை வைத்த உடனேயே மனம் அவளோடு போய் ஒட்டிக் கொண்டது. சில மாதங்களாக இருவரும் சந்தித்திருக்கவில்லை. விடிந்ததும் பாலனை எழுப்பி ஊட்டி போவதாகச் சொன்னான். வண்டியை மெக்கானிக்கிடம் எடுத்துக் கொண்டு போய் சரிபார்த்துவிட்டு வரச் சொன்னான். எல்லாம் முடிந்து காலை பத்து மணிக்கு கிளம்பினார்கள். கோவை வந்து சேர மாலையாகிவிட்டது. கோவையைத் தாண்டியதுமே மழை பிடித்துக் கொண்டது. மலைப் பாதையில் ஏறுவதற்கு முன்பு பாலன் நின்னுப் போலாங்களா? எனக் கேட்டார். மறுப்பாய் தலையசைத்தவன் மெதுவாகப் போகச் சொன்னான். லேனா வை எவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்த்துவிடும் தவிப்பை ஒரு மணி நேரத்திற்கு முன்பு குடித்திருந்த பியர் ஏற்படுத்தி இருந்தது. லேனா வருடத்திற்கு ஒரு நாவல்தான் எழுதுகிறாள். பெரும்பாலும் மகாபலிபுரத்தில் வைத்து எழுத்தை ஆரம்பிப்பாள். இறுதி வடிவத்தை ஊட்டியில் வைத்து முடிப்பாள். சென்ற வருடம் வந்த மின்மினிகளின் பகற் கனவு  நாவலை இருவருமாய்த்தான் எடிட் செய்தனர். 

கார் மெதுவாக வந்து சேர்ந்தது. ஹோட்டலின் நியான் பெயர் மழையிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இருள் அடர்ந்திருந்தது. மழை சற்று வலுத்திருந்தது. காரை விட்டிறங்கிய விக்ரம் மூச்சை உள்ளிழுத்து விட்டுக் கொண்டான். லேனாவின் தளும்பும் உடலை நினைத்தபடியே ரிசப்ஷன் கவுண்டருக்காய் போனான்.

-    மேலும்



Wednesday, August 23, 2017

பல்ப் 2. முதலிரவுத் திருப்பம்

"இன்னிக்கு காலைல முகூர்த்த நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி ஓடிப் போகலாம்னு இருந்தேன்”

அறையின் நீல வெளிச்சத்தில் அவள் முகம் இறுகியது லேசாகத் தெரிந்தது.

விக்ரம் அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் கேட்டான்.

 “ஏன் இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பமில்லையா?”

மல்லிகைப்பூவின் அடர் வாசமும், புதுத் துணிகளின் நறுமணமும்அந்தக் குறுகிய அறையை நிறைத்திருந்தன. அடைத்தபடி போடப்பட்டிருந்த கட்டிலின் ஒரு முனையில் விக்ரமும் மறுமுனையில் இன்று காலை அவன் மனைவியான வேதவல்லியும் அமர்ந்திருந்தார்கள்.

“நான் இன்னொருத்தர காதலிச்சேன் “  தலை நிமிராமல் இறுகிய அதே குரலில் சொன்னாள்.

விக்ரம் வயிற்றில் அமிலம் சுரந்தது.

“பெண் பார்க்க வந்தப்பவே சொல்லி இருக்கலாமே? பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு ஆயிரம் முற கேட்டனே? நீயும் பல்ல பல்ல காமிச்சியே”

அவன் குரல் ஆற்றாமையால் உயர்ந்திருந்தது. 

அவள் அதே இறுக்கமாய் பதிலளித்தாள்.

“சொல்லமுடியாத சூழ்நிலை”

 ஐந்து நிமிடம் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மின் விசிறியின் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அமைதியை உடைத்த விக்ரம் சமாதானமாய் கேட்டான்

 “சரி ஏன் காலைல ஓடிப்போகல? “

தலை நிமிர்ந்தவள்

“அந்த கடைசி நிமிஷ தைரியம் எனக்கு இல்லாமப் போய்டுச்சி. தவிர, நேத்தில இருந்து கேட்டுட்டே இருந்த உங்க சந்தோஷமான சிரிப்பு, கல்யாணத்துக்கு வந்திருந்த வி.ஐபி ங்க, உங்களுக்கு இருக்க பேர், கூடியிருக்க சொந்தக்காரங்க  இப்படி எல்லாம் சேர்ந்து என்னப் போக விடாம செய்ஞ்சிருச்சி. ஆனா ஒண்ணு எப்ப உங்களுக்கு மனைவியானனோ அந்த நொடில இருந்து உங்ககிட்ட உண்மையா இருக்கனும், எதையும் மறைக்க வேணாம்னு தோனுச்சி அதான் சொன்னேன்..“

விக்ரம் இலகுவானான். இவள் தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போயிருந்தாள் என்னவாகி இருக்கும்? யோசிக்கவே அவனுக்குப்  பயமாக இருந்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டு மெதுவாக சொன்னான்

“இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா நான் நினைக்கல, காதலிக்கிறது ஒண்ணும் பெரிய கொலகுத்தம்லாம் கிடையாதே சந்தர்ப்பமும் சூழலும் சரியா அமைஞ்சா காதல் கல்யாணத்துல முடியும் இல்லனா இல்ல.. அவ்ளோதான். இதுல பெரிசா வருத்தப்பட எதுவும் கிடையாது”

விக்ரம் பேசப்பேச வேதவல்லி  நிமிர்ந்து அவனை இன்னும் ஆழமாகப் பார்த்தாள்

பேசி முடித்தவன் அவள் தன்னையே ஆழமாகப் பார்ப்பதை உணர்ந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.

அறையை மீண்டும் மெளனம்  சூழ்ந்தது.  சில நிமிடங்களுக்குப் பிறகு விக்ரம், 

“எனக்கொரு சிகரெட் பிடிக்கனும் போல இருக்கு போய்ட்டு வந்திடுறேன்”

எனச் சொல்லியபடியே எழுந்து கதவைத் திறந்தான். வேதவல்லியின் வீட்டில்தான் முதலிரவு. அறிமுகமில்லாத வீடு. ஹாலில் நிறைய பேர் படுத்திருந்தனர். வெளியில் போவதா வேணாமா என யோசனையாக இருந்தது. தயங்கியபடி கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். 

அதைப் புரிந்து கொண்டவள் அவனுக்குப் பின்னால் வெகு அருகில் வந்து

“ மாடிக்குப் போலாம் வாங்க” என்றாள்

இருவரும் அதிக சப்தம் எழுப்பாமல் அறையை விட்டு வெளியேறி பின்வாசல் கதவைத் திறந்து கொண்டு பக்கவாட்டில் இருந்த மாடிப்படிக்கட்டுகளில் ஏறி மொட்டை மாடிக்கு வந்தனர். சற்று விஸ்தாரமான மாடிதான். அடுத்தடுத்த வீடுகள் கிடையாது. 

விக்ரம் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை ஆழமாய் உள்ளிழுத்தான். வேதவல்லி பக்க வாட்டு கட்டைச் சுவரில் சாய்ந்தபடி கைகளைக் குறுக்கில் கட்டிக் கொண்டு அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு ஸ்மெல் பிடிக்கலன்னா கீழ போ, நான் வந்திடுறேன்” என்றான்

பதிலுக்குப் புன்னகைத்து “பரவால்ல இருக்கன்” என்றாள்

“ரொம்ப வித்தியாசமான முதலிரவில்ல “என சிரித்தான்.

வேதா உதட்டைப் பிதுக்கினாள்.

விக்ரம் தொடர்ந்தான்

 “என்னோட கதைகள் ல நிறைய ட்விஸ்ட் வரும். ஆனா முதலிரவுல மட்டும் ட்விஸ்ட் வச்சதே இல்ல. பாரேன் என்னோட முதலிரவுல எவ்ளோ ட்விஸ்ட்னு”

 குரலில் இருந்தது கேலியா வருத்தமா என்பதைப் பிரித்தரிய முடியவில்லை. பதிலுக்கு அவளிடமிருந்து என்ன உணர்ச்சிகள் வெளிப்பட்டன என்பதையும் சன்னமான நிலவொளியில் அவனால் பார்க்கமுடியவில்லை. புகையை இன்னும் ஆழமாய் உள்ளே இழுத்தான். நிலா மேகங்களுக்கிடையில் போய் ஒளிந்து விளையாட ஆரம்பித்தது. அந்த சிகரெட் புகை அவ்வளவு அடர்த்தியாய் காற்றில் கலந்தது.

 விக்ரம் ஒரு க்ரைம் கதை எழுத்தாளன். இதுவரை நானூறு துப்பறியும் நாவல்களை எழுதியிருக்கிறான். அவனுடைய முதல் க்ரைம் கதையை ப்ளஸ் டூ படிக்கும்போது எழுதி முடித்தான். அச்சில் வந்தது என்னவோ டிகிரி முடித்து வேலைக்குப் போன பின்புதாம். ஆனால் முதல் கதை அச்சிற்கு வரும் முன்பே கிட்டத்தட்ட நாற்பது கதைகளை எழுதி முடித்திருந்தான். அலுவலகத்தில் உடன் பணிபுரிந்த அசோக்கின் நட்பு கிடைத்தபின்புதான் கதைகளை அச்சில் வெளியிடுவது குறித்தே யோசித்தான். அதற்கு முன்பு அப்படி ஒரு எண்ணம் விக்ரமுக்கு இருக்கவில்லை. அசோக்  கதைகளை படித்துவிட்டுப் பரவசமடைந்தான். அதோடு நிற்காமல் கைக் காசைப் போட்டு மாத நாவலாகவும்  பிரசுரித்தான். முதல் நாவலான ‘பெளர்ணமி இரவில்’ பதிப்பித்த நூறு காப்பிகளும் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தன. இருவரும் அந்த பெயரையே மாத நாவலுக்கு தலைப்பாக வைத்துக் கொண்டார்கள். தற்சமயம் பெளர்ணமி இரவில் இதழ் மாதம் இருபத்தைந்தாயிரம் காபிகள் வரை விற்கின்றது. இருபத்தைட்டு வயதில் வீடு, கார் என செட்டிலாகிவிட்டான். சொந்த ஜாதியிலேயே பெண் தேடி, அதிக சிக்கலில்லாத குடும்பமாய்  பிடித்து, ஜாதகப் பொருத்தத்துடன் சந்தோஷமாய் வேதவல்லியை மணந்து கொண்டான். சொல்லப்போனால் பத்து நிமிடங்களுக்கு முன்பு வரை விக்ரமின் சொந்த வாழ்வில் திருப்பங்களே இல்லாமல் இருந்தது.

அடுத்தடுத்து இரண்டு சிகரெட்டுகளை புகைத்து முடிந்ததும், விக்ரம் கீழே இறங்கலாம் என்றான். 

இருவருமாய் அறைக்குத் திரும்பினார்கள். வேதவல்லி இரவு விளக்கை அணைத்து விடச் சொன்னாள். கட்டிலில் படுத்துக் கொண்டார்கள். அவளின் அருகாமை வாசனை அவனைக் கிறக்கியது. மெல்லத் தயங்கித் தயங்கி அவளைத் தொட்டான். அவள் இசைந்து கொடுப்பதைப் போல பட்டது. விக்ரம் இப்போது எந்தத் தயக்கமும் இல்லாமல் அவளை அணுகினான். அடுத்த அரை மணிநேரம் மூர்க்கமாய் கலவி கொண்டார்கள். அவனுக்கு முதன் முறை கிடையாது. ஆனால் இவ்வளவு திருப்தியான கலவியை அவன் இதற்கு முன்பு அடைந்திருக்கவில்லை. படுக்கையிலேயே இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். இவளுக்கும் இது முதல் முறையாய் இருக்காது என்கிற எண்ணம் அவன் மனதில் வந்து விழுந்தது. சிகரெட் முடியும் போது அந்த எண்ணம் தீர்க்கமாய் வலுப்பெற்றது. அவனால் உறங்க முடியவில்லை. மெல்ல  மெல்ல அந்த எண்ணம் அருவெருப்பாய் மாறத் துவங்கியது.  வேதவல்லியை உற்றுப் பார்த்தான். அவள் தூங்கிவிட்டிருந்தாள். கட்டிலை விட்டிறங்கி சன்னலுக்காய் போய் ஒரு கதவை மட்டும் திறந்து வைத்தான். அறையில் நிலவெளிச்சம் லேசாய் விழுந்தது. கட்டிலுக்காய் திரும்பி அவளை மீண்டும் பார்த்தான். உடை கலைந்து, கால்களகற்றிக் கிடந்தாள். அந்தக் கோலம் அவனை ஆத்திரப்படுத்தியது.  அவள் காட்டிய ஈடுபாடும் இந்த லஜ்ஜை இல்லாக் கோலமும் அதுவரை அவன் கற்பனை செய்து வைத்திருந்த அடக்க ஒடுக்கமான பெண் பிம்பத்தைத் தகர்த்தது. தான் ஏமார்ந்துவிட்டோம் என மருகினான். உடனடியாய் அவள் கழுத்தை நெறித்துக் கொன்று விடும் வேகம் அவனிற்குள் பெருகியது. அதன் பின் விளைவுகளை யோசித்தவன் மெல்ல நிதானமாகி, இதுவரைக்குமாய் அவன் எழுதிய க்ரைம் கதைகளில் எளிமையான கொலை எந்த நாவலில் வருகிறது? என்பதைக் குறித்து யோசிக்க ஆரம்பித்தான்.

- மேலும்

Sunday, August 20, 2017

குளி சீன் நாயகிகளின் கரைச்சல்கள்



கன்யகா டாக்கீஸ் படப் பெயரை சில வருடங்களுக்கு முன்பே பல விருதுப் பட்டியல்களில் கண்ட நினைவு. சென்ற வாரம்தான் பார்க்க வாய்த்தது. எதிர்பார்த்திருந்த அளவிற்கு முழுமையான படம் இல்லை என்றாலும் மிக முக்கியமான பின்னணியைக் கொண்ட படம். இயக்குனர்  உளவியலில் சற்றுத் தேர்ந்திருந்தால்  - குறைந்தபட்சம் ஃப்ராய்டியல் அளவிற்காவது- சிறப்பானதாக வந்திருக்கும். ஆனாலும் இதுவரை திரையில் பேசாத சிக்கலைப் பேசும் வகையிலும் சில நல்ல தருணங்களைக் கொண்ட வகையிலும் முக்கியமான திரைப்படமாகிறது.

மலையாள சினிமா கலைப்படைப்புகளால் அறியப்பட்டதைக் காட்டிலும் சாஃப்ட் போர்ன் எனப்படும் சீன் படங்களால்தான் வெகுசனப் பரப்பில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அதிகம் அறியப்பட்டது. இன்று சன்னி லியோனிற்கு திரண்ட கூட்டம் திடீரென்றெல்லாம் உருவாகிவிடவில்லை. இந்தக் கூட்டத்தின் முந்தின தலைமுறை  அன்று  ஷகிலாவிற்காக திரையரங்குகளில் கூடியது. கேரள சூப்பர் ஸ்டார்களின் திரையுலக எதிர்காலத்தையே ஒன்றுமில்லாததாக்கும் வலிமை ஷகிலாவிற்கு இருந்தது. அழகிற்கு எந்தப் பஞ்சமும் இல்லாத கேரளத்தில் காமத்தின் பஞ்சம் மட்டும் எப்போதும் இருக்கிறது.

 போர்ன் படங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் சுருங்கிவிட்டபின்பு அதை வெளியிட மட்டுமே இருந்த கன்யகா டாக்கீஸ் மாதிரியான திரையரங்கங்களின் தேவை முடிவிற்கு வருகிறது. கடந்த பத்து வருடங்களில்  ஆயிரக் கணக்கில் திரையரங்குகள் கேரளத்திலும் தமிழகத்திலும் மூடப்பட்டன. இதில் ஐநூறாவது 90 களில் கோலோச்சிய போர்ன் படங்களுக்கான பிரத்யேகத் திரையரங்குகளாக இருக்கலாம்.

குய்யாலி மலைக் கிராமத்தின் கன்யகா டாக்கீஸும் இப்படித்தான் கட்டுப்படியாகாமல் மூடப்படுகிறது. அதன் முதலாளியான ஆலேன்சியருக்கு வேறு சில குடும்பப் பிரச்சினைகளும் தொடர்ந்து நெருக்கடியைத் தரவே - மனைவியையும் இழந்த அவர் - தியேட்டரை சர்ச் சிற்கு எழுதிவைத்துவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். இது ஒரு கதை.

டாக்கீஸ் இருந்த இடத்தில் புதிதாக தேவாலயம் கட்டப்படுகிறது. ஒரு பாதிரியார் கிராமத்திற்குள் வருகிறார். அவர் எதிர்கொள்ளும் சிக்கல் இன்னொரு இழையாக சொல்லப்படுகிறது.

மூன்றாவது இழை அதே கிராமத்தைச் சேர்ந்த லேனாவின் பிரச்சினைகளைப் பற்றியது. லேனாவின் மிகப் பிரமாதமான நடிப்பால் இந்த இழையே என்னை அதிகம் ஈர்த்தது. ஹோம் நர்ஸாகப் பணிபுரிவதாக தந்தையிடம் சொல்லிக் கொண்டாலும் உண்மையில் லேனா ஒரு போர்ன் நடிகை. சந்தர்ப்பவசத்தால் இந்த துறைக்குள் தள்ளப்படுகிறாள். மாமாக்களாலும் ஏமாற்றுக்காரர்களாலும் வறுமையாலும் சூழப்பட்ட அவளது வாழ்வு இப்படியாகிறது.

பாதிரியாருக்கு போர்ன் பட நாயகிகள் எழுப்பும் போலி விரகதாப ஒலிகள் காதுக்குள் கேட்க ஆரம்பிக்கின்றன. பக்திமானான அவர் அதைக் கேட்டமாத்திரத்தில் நடுங்க ஆரம்பிக்கிறார். லேனாவின் குளி சீன் காட்சித் துண்டு ஒன்றை அவள் ஊர் இளைஞர்கள் பார்த்துவிடுகிறார்கள். நள்ளிரவில் அவள் வீட்டின் முன்பு சூழந்து கொண்டு பைக்கில் ஹார்ன் அடித்தும் அவளை வர்ணித்துமாய் அவமானமடைய வைக்கிறார்கள். அவள் அடுத்த நாள் ஊரைவிட்டு வெளியேறுகிறாள். பாதிரியார்  மனநல நிபுணர்களை நாடியும் பிரச்சினை தீராமல் தியேட்டர் முதலாளி ஆலேன்சியரை வரவழைக்கிறார். இருவருமாய் ஒரு பயன்படுத்தாத அறையைத் திறக்கிறார்கள். அதிலிருந்து ஏராளமான பெண்களின் விரகதாப ஒலிகள் கேட்க ஆரம்பிக்கின்றன. படம் முடிந்து போகிறது.

திரைப்படத்தில் இடையூடாக சில விஷயங்கள் பதிவாகின்றன. குய்யாலி கிராமத்தின் இளம் பெண்கள் ஆண்களுடன் ஓடிப் போகிறார்கள். அந்தக் குடும்பம் அவ்வளவு துக்கத்தையும் அவமானத்தையும் அடைகிறது. ஆலேன்சியரின் இரண்டு பெண்களுமே ஓடிப் போகிறார்கள். ஆலேன்சியரின் மனைவி அந்தத் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்.

காமமும் ஏமாற்றமும் பிணைந்தே இருக்கிறது. தன் உடலைக் காட்சிப் பொருளாக்க வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்படும் பெண்களின் போலி விரகதாப ஒலிகள் கடவுளின் கருவறை எங்கும் எதிரொலித்தபடி இருக்கின்றன. இதை எதிர்கொள்ள முடியாத நொய்ந்த மனங்கள் சிதைவுற்றும் ஓடிஓளிந்துமாய் தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றன.

Thursday, August 17, 2017

கண் விழிக்கும் நீலக் கண் ட்ராகன்


கேம் ஆஃப் த்ரோன் ஆர்யாவின் அதிரடியோடு துவங்கி நம்மை பரவசத்தில் ஆழ்த்தினாலும் இந்த  ஏழாவது சீசன் வழக்கத்தை விட வேகமாக செல்கிறது. சில சமயம் ஏன் இவ்வளவு அவசரம் என்றும் கூட தோன்றுகிறது. இராஜாங்க அரசியல், குடும்பங்களின் கதைகள், அரசியல் நுட்பங்கள், தத்துவார்த்த உரையாடல், நிதானமான குடி, கொப்பளிக்கும் காமம் என எதுவுமே இல்லாமல் கதைச் சுருக்கமாகவே ஆறு பகுதிகளும் கடந்து போயின. ஆம் கசிந்த ஆறாவது பகுதியையும் நேற்று பார்த்துவிட்டேன். உறைபனிக் காலத்தின் பயமும்,  ஆர்மி ஆஃப் டெட் குறித்த அச்சங்களும் வெறும் பேச்சாகவே  ஆறு சீசன்களும் முன் வைத்ததால் இந்த சீசனில் அவற்றைக் காட்சிப் படுத்த மெனக்கெடுகிறார்கள் போல. 

விண்டர் ஃபால் மீண்டும் புத்துணர்வு பெறுகிறது. ஜான் ஸ்நோ வடக்கின் அரசனாகிறான். சக அரச குடும்பங்களை ஒன்றிணைக்கிறான். நெடிய துயரங்களை அனுபவித்த சான்ஸா, ப்ரான் மற்றும் ஆர்யா அனைவரும் தங்களின் கூட்டிற்குத் திரும்புகிறார்கள். நிஜமாகவே இந்தக் காட்சிகள் மிகுந்த மன உவப்பைக் கூட்டின. ஜானும் ஆர்யாவும் சந்திக்க நேர்ந்திருந்தால் அந்தக் காட்சி இன்னும் உருக்கமாக இருந்திருக்கும். ஆர்மி ஆஃப் டெட் - ஐ தகர்க்க ஜான் டனேரிஸைத் தேடிப் போகிறான். தன்னுடைய குடும்பத்தையே நிர்மூலமாக்கிய செர்ஸியைப் பழி வாங்கும் எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மக்களைக் காப்பதே பிரதானப் பணி எனும் நோக்கில் ஒரு முழுமையான அரசனாய் ஜான் ஸ்நோ மிளிர்கிறான்.

டனேரிஸின் எழுச்சி தொடர்ச்சியாய் கிளர்ச்சியூட்டுகிறது. முழுமையாய் வளர்ந்து நிற்கும் தன் இராட்சத ட்ராகன்களோடு அவளின் ஆதி இருப்பிடமான ட்ராகன்ஸ்டோனை வந்தடைகிறாள். அங்கிருந்து காய்களை நகர்த்தி ஐயர்ன் த்ரோனை அடையும் நோக்கில் தன் ஆலோசகர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபடுகிறாள். செர்ஸியின் எதிரிகளை ஒன்று திரட்டுகிறாள். அனைவரும் நிபந்தனையின்றி டனேரிஸிற்கு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். டிரியனின் திட்டப்படி காஸ்டர்லி ராக் கோட்டையை முற்றுகையிடுகிறார்கள். ஆனால் அது மிக எளிமையாக அவர்களுக்கு கிடைக்கிறது. ஜேமியும் செர்ஸியும் திட்டமிடுதலில் இரண்டடி முன்னால் இருக்கிறார்கள். செழிப்புமிக்க ஹை கார்டனை வீழ்த்தி அவர்களின் செல்வங்களைக் கொள்ளையடித்து வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்தி ”லானிஸ்டர் ஆல்வேஸ் பேஸ் பேக்” என்பதை நிரூபிக்கிறார்கள். 

ஒலன்னாவை விஷம் அருந்தி மரணிக்கப் பணிக்கும் ஜேமிக்கு அவளொரு ரகசியத்தைச் சொல்கிறாள். ஜோஃப்ரிக்கு விஷம் வைத்தது தாம் தானென்றும் இந்த இரகசியத்தை நீ அவசியம் செர்ஸியிடம் சொல்ல வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு நிறைவாய் செத்துப் போகிறாள். ஓலன்னா, டனேரிஸிடம் ”எல்லாவற்றுக்கும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்க நீ ஒன்றும் ஆடில்லை, ட்ராகன்” என அறிவுறுத்துகிறாள்.

ஆலோசனைகளால் அலுப்புறும் டனேரிஸ் நேரடியாய் களத்தில் இறங்கி தானொரு ஆடில்லை ட்ராகன் என உணர்த்துகிறாள். ட்ராகன் கக்கும் நெருப்பு ஆற்றில்  லானிஸ்டர் படைகள் எரிந்து சாம்பலாகின்றன. ஜேமி தன் உயிரைப் பொருட்படுத்தாது டனேரிஸைக் கொல்லப் பாய்கிறான். ட்ராகன் அவன் மீது நெருப்பை உமிழ்கிறது. தக்க சமயத்தில் ப்ரான் ஜேமியின் உயிரைக் காப்பாற்றுகிறான். 

செர்ஸியை மணக்க விரும்பும் இரோன் அவள் மகளுக்கு விஷம் வைத்த சாண்ட் ஸ்னேக் பெண்கள் மீது போர் தொடுக்கிறான் ஒபராவும் நைமீரியும் போரில் மடிகிறார்கள். எல்லாராவையும் டையீனையும் சிறைப்பிடித்து வருகிறான். அவர்களால் யாராவும் கைது செய்யப்படுகிறாள். செர்ஸி தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறாள். 

ஜோரா, சிட்டாடலில் சாமின் முயற்சியால் குணமாகி மீண்டும் டனேரிஸிடம் வருகிறான். ஜோராவின் ஆரம்பகால துணையில்லாமல் டனேரிஸ் இன்றொரு மாபெரும் சக்தியாய் உருவாகி இருக்கவே முடியாது. டனேரிஸிற்கு ஜோராவின் மீதிருக்கும் அன்பு அப்படியே இருக்கிறது. அவனைத் தன்னோடு இணைத்துக் கொள்கிறாள்.

ஜான் ஸ்நோ திரும்பத் திரும்ப வொயிட் வாக்கர்ஸ் குறித்தும் பிணப்படைகளைக் குறித்தும் டனேரிஸிடம் சொல்கிறான். நம்மை நோக்கி மிகப்பெரும் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது உண்மையில் செர்ஸி ஒரு பிரச்சினையே இல்லை என்பதுதான் அவன் தரப்பு. அனைவரும் ஒன்று திரண்டு இந்த ஆர்மி ஆஃப் டெட்டை எதிர்க்க வேண்டும் என்கிறான். ஆனால் இதை எப்படி நம்ப வைப்பது எனத் திணறுகிறான். இறுதியாய் ஒரே ஒரு வொயிட் வாக்கரை சிறைப் பிடித்து செர்ஸியின் முன்பு நிறுத்தினால் அவள் நம்புவாள் என முடிவு செய்கிறார்கள். இதற்கிடையில் டிரியன் ஜேமியை கிங்க்ஸ் லாண்டில் ரகசியமாய் சந்திக்கிறான். டேவோஸ் ராபர்ட் ப்ராத்தியனின் பாஸ்டர் மகனான கெண்ட்ரியை அழைத்து வருகிறார். டேவோஸ், கெண்ட்ரி,ஜோரா மற்றும் ஜான் ஆகியோர் ஒரு வொயிட் வாக்கரை சிறைப்  பிடிக்கக் கிளம்புகிறார்கள்.


எல்லைச் சுவரை வந்தடையும் ஜான் குழாமினருடன் அங்கு சிறைப் பிடிக்கப் பட்டிருக்கும் ஹவுண்ட் குழாமினர் இணைந்து கொள்கிறார்கள் அனைவரும் சுவரைக் கடந்து பனிப் புதைவிற்குள் செல்கிறார்கள். ஜான் ஏற்கனவே ஆர்மி ஆஃப் டெட்டைப் பார்த்திருக்கிறான். அதன் பயங்கரம் என்ன என்பது அவனிற்குத் தெரியும் . ஆனால் அப்படி ஒன்று இருப்பதை ஒருவரும் நம்பவில்லை என்பதாலேயே இந்த குருட்டு முடிவை எடுக்கிறான். அது மிகப்பெரும் நெருக்கடியில் தள்ளுகிறது. பிணப் படை  இந்தக் குழுவினரை சூழ்ந்து கொள்கிறது.  திக்கு முக்காடிப் போகிறார்கள். இனி தப்பமுடியாது அனைவரும் சாக வேண்டியதுதான் என்ற நிலை வரும்போது டனேரிஸ் தன் ட்ராகன் மீது பறந்து வருகிறாள். ட்ராகன் நெருப்பைக் கக்கியும் பிரயோசனமில்லை. பிணப்படைகள் சாம்பலில் இருந்து மீண்டு வருகின்றன. நைட் கிங் எனப்படும் பிணங்களின் தலைவன் சக்தி வாய்ந்த அம்பை ஒரு ட்ராகன் மீது செலுத்தி அதை வீழ்த்துகிறான். டனேரிஸ் திகைத்துப் போகிறாள். ஒரு பெரிய மலையைப் போல ட்ராகன் பனித்தரையில் வீழ்ந்து மூழ்கிப் போகிறது. ஜானைத் தவிர மற்றவர்களை ட்ராகன் மீது ஏற்றிக் கொண்டு டனேரிஸ் தப்பிக்கிறாள். ஜான் கடுமையாக சண்டையிட்டு நீரில் மூழ்குகிறான். அனைவரும் அகன்றதும் உயிர் பிழைத்து மேல் வருகிறான். டனேரிஸ் எல்லைச் சுவரில் நின்று கொண்டு ஜான் வருவானா என துக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள். உடல் முழுக்க காயங்களோடு நினைவு தப்பி ஒரு குதிரையின் மீது ஜானின் உடல் வந்து சேர்கிறது.

பிணப் படையினர் பனியில் புதைந்திருந்த ட்ராகனை சங்கிலிகளால் பிணைத்து மேலே இழுத்துப் போடுகிறார்கள். நைட் கிங் தன் மந்திரக் கோலை ட்ராகன் மீது வைக்கிறான். ட்ரகனின் கண் நீலமாய் திறந்து கொள்கிறது. இதோடு ஆறாம் பகுதி நிறைவடைகிறது.

ஆக பிணப்படையில் இன்னொரு ஆளாய் ட்ராகன் மாறிவிடும். ஏற்கனவே வலிமையான வொயிட் வாக்கர்ஸ் களுக்கு இன்னொரு இராட்சத பலம் வந்து சேர்ந்திருக்கிறது. இனிதான் நிஜமான ஆட்டம்.

பார்த்து முடித்த பிறகு எனக்கு இப்படித் தோன்றியது. ட்ராகனோடு ஜானையும் நைட் கிங் கைப்பற்றி அவனையும் பிணமாக உயிர்த்தெழச் செய்திருக்க வேண்டும். எப்போதும் அவர்களைக் குறித்தே அச்சம் கொண்டிருந்த ஜான் இப்போது அவர்களின் படைத் தளபதியாய் மாறி இருக்க வேண்டும். ஜான் தலைமையில் ஆர்மி ஆஃப் டெட் ஐயர்ன் த்ரோனைக் கைப்பற்ற வந்தால் எப்படி இருக்கும்?! டனேரிஸோடு செர்ஸி, ஆர்யா, சான்ஸா,யாரா, ப்ரைய்ன் என அனைத்துப் பெண்களும் ஒன்று திரண்டு ட்ரியன் ஆலோசனைப்படி ஜேமி மற்றும் ப்ரான் முன்னெடுப்பில் ஒரு குழுவும் ஜான் ஸ்நோ மற்றும் நைட் கிங் தலைமையில் ஆர்மி ஆஃப் டெட்டும் எதிர் எதிரே மோதிக் கொண்டால் ரகளையாக இருக்குமல்லவா?

ஆனால் அப்படி நேராது. ஜான் ஸ்நோவும் டனேரிஸும் அனைவரையும் அழித்துவிட்டு திருமணம் செய்து கொண்டு ஒன்றாய் ஐயர்ன் த்ரோனில் அமர்வார்கள். அவர்களின் பிள்ளைகள் வருவர்கள். எங்கிருந்தாவது ஒரு லானிஸ்டர் எதிரி முளைப்பான். மீண்டும் பிணம் உயிர்த்தெழும் இது ஒரு தொடர் சங்கிலியாய் செல்லும் என்பதே என் யூகம்.



Wednesday, August 16, 2017

பல்ப் : 1.உன் நாவலை நீ எழுது

பல்ப். இதுதான்  தலைப்பு. இச்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் குறுநாவல். ஏன் எப்போதும் குறுநாவல் என்றால், உலகளாவிய சமகால எழுத்து மற்றும் கலைச்சூழலை பின்நவீனச்சூழல் எனக் கருதுகிறேன். இச்சூழல் எல்லா அதிகாரங்களுக்கும் எதிரானது. எனவே அதிகாரத்தை முன் நிறுத்தும் எந்த ஒன்றும்  சமகாலத்தைச் சேர்ந்தவை இல்லை. ஆபத்தானவையும் கூட. நம் சூழலை, பண்பாட்டு வெளியை பெருங்கதையாடல்கள் எனச் சொல்லப்படுகின்ற பெரும் மதங்கள்தாம் ஆள்கின்றன. இங்கே விளிம்பிற்கோ அல்லது சிறுதெய்வங்களுக்கோ  இடமே இல்லை. இலக்கியத்தில்  நாவல்கள் என்பவையும் இத்தகைய அதிகாரத்தின் கூறுகளை உள்ளடக்கியிருக்கின்றன. அவற்றை உடைப்பதே சமகால எழுத்தின் முக்கியப் பணி. ஆகவே நான் சிறுகதையாடல்கள் எனக் கருதப்படுகின்ற குறுநாவல்களை எழுதுகிறேன். பிரான்சில் இவ்வடிவத்தை நாவெலா என்கிறார்கள். நாவெலா வே இனி வரும் சமூகத்தின் இலக்கிய முகமாக இருக்கும். அங்கு யாரும் இப்போது நாவல்கள் எனச் சொல்லப்படுகின்ற மிகப் பழைய பிரதியை எழுதுவதில்லை. பிரான்சிற்கு அடுத்தபடியாக தமிழில் இவ்வடிவத்திற்கு முக்கியப்பங்கு என்னால் ஆற்றப்பட்டுக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவர்.  ஒருவேளை நீங்கள் புது வாசகராக இருந்தால் ஒரு தகவலுக்காக இதைச் சொல்கிறேன். இந்த விளக்கம் வீண் ஜம்பத் தொணியில் எழுதப்பட்டிருப்பதாய் உங்களுக்குத் தோன்றினாலும் பரவாயில்லை. சில உண்மைகளை பட்டவர்த்தனமாய் சொல்லிவிடுவது என் இயல்பு மேலும் உண்மை எந்தத் தொணியிலும் எழுதப்படலாம் என்பது என் நிலைப்பாடு. பின் நவீனம் எது உண்மை என்பது குறித்தும் பல கேள்விகளை, அய்யங்களை எழுப்புகிறது. அதைத் தொடர்ந்து போனால் இந்த நாவல் கோட்பாட்டாளர்கள் தமிழில் எழுத முயன்ற நாவல்களைப் போலப் பரிதாபமாக இருக்கும். நானொரு புனைவெழுத்தாளன். எனவே இந்த விளக்கத்தை இங்கே நிறுத்திவிட்டு கதையைத் தொடர்கிறேன்.

ஓரிதழ்ப்பூவைப் போல அல்லாமல் பல்ப் குறு நாவலை ஒரே மூச்சில் எழுதிவிடுவதுதான் திட்டம். ஒரே நேரத்தில் எழுத்தாளனாகவும் குமாஸ்தாவாகவும் இருந்து தொலைய வேண்டியிருக்கும் சாப யதார்த்த வாழ்வைப் புறந்தள்ளிவிட்டுத்தான்  இந்த அசாதாரண திட்டத்தில் இறங்கினேன். மகத்தான உழைப்பைச் செலுத்தி எழுதிக் கொண்டிருக்கும்போது  தடாரென நின்று போனது. இதில் ஒரு இலக்கியப் பெண் எழுத்தாளர் வருகிறார். அவர் இந்த கதைக்குள் ஒரு நாவலை எழுதுகிறார் ( அவருக்கு அரசியல் பிரக்ஞை இல்லை. என்னைப் போல் குறுநாவல் எழுதாமல் இன்னமும் நாவல்தான் எழுதுகிறார்) அந்தப் பெண் எழுத்தாளரின் நாவலை என்னால் எழுத முடியவில்லை என்பதுதான் பிரச்சினை. பெண் எழுத்தாளர் எழுதும் நாவலை ஆணாகிய நான் எப்படி எழுத முடியும்? எழுதி எழுதிப் பார்த்தும் பெண் மொழி சித்திக்கவேயில்லை. பெண் எழுத்தாளர் என்ன எழுதவேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதாவது அந்த நாவல் என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் எழுதும் மொழிதான் சரிப்படவில்லை. இதற்குள் இன்னொரு ஆண் எழுத்தாளரும்  வருகிறார். அவர் ஒரு பல்ப் எழுத்தாளர். அவர் எழுதுவது pulp என்றாலும் கூட அவர் எழுதும் கதைகளை எல்லாம் நானே எழுதிவிட்டேன். நானொரு தூய இலக்கிய எழுத்தாளனான இருந்தாலும் சற்று  சிரமப்பட்டு அவற்றை எழுதிவிடமுடிந்தது. ஆனால் இலக்கிய வகைமையிலே எழுதும் இலக்கிய எழுத்தாளரான பெண் எழுதுவதை என்னால் எழுத முடியவில்லை. என் பிரச்சினையை உங்களுக்கு புரியும்படி சொன்னேனா? புரியவில்லையெனில் தயவுசெய்து சொல்லாததையும் புரிந்துகொள்ளுங்கள். இது எவ்வளவு பெரிய சிக்கல் என்பதை இன்னொருவர் புரிந்துகொள்ளாதவரை எனக்கு மாபெரும் சிக்கல்தாம். 

எவ்வளவு முயன்றும் சுத்தமாய் எழுதவே வராமல் போன ஒரு பகலில் என் நெடுநாள் ஸ்நேகிதியைத் தேடிக் கொண்டு அவள் வீட்டிற்குப் போனேன். கண்கள் விரிய வரவேற்றவள் வரவேற்பரையில் அமரச் சொன்னாள். அவள் வீட்டுப் படுக்கையறை தவிர்த்து நான் எங்குமே அமர்ந்தது கிடையாது. ஒரு கட்டத்தில் அவள் என்னைப் படுக்கையறைக்குள் அனுமதிப்பதை நிறுத்தியவுடன் அவள் வீட்டிற்கு செல்வதையும், அவளைச் சந்திப்பதையும் நிறுத்திவிட்டேன். அமராமல் நின்று கொண்டே என் பிரச்சினையைச் சொன்னேன். சற்றுக் குழம்பினாள். யோசித்தாள். பின்பு சொன்னாள்.

 "உன் நாவலை நீ எழுது!" 

அவளுக்கு சிறுபத்திரிக்கை வாசிப்பு உண்டு. இரண்டு மூன்று நல்ல கதைகளையும் எழுதியிருக்கிறாள். அவையெல்லாமும் அவ்வார்த்தைகளுக்குப் பின்னிருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

"மொக்க போடாதே கதைய நான் சொல்றேன் நீ எழுத மட்டும் செய்"  

மாட்டேன் என்றாள். 

"நீ எழுத மறுப்பதற்கு நல்லதா ஒரே ஒரு காரணம் சொல், நான் போய்டுறேன்" 

“உனக்கும் எனக்கும் ஏதோ இருப்பதாக ஏற்கனவே இங்கு கிசுகிசு ஓடிக் கொண்டிருக்கிறது. போதாததிற்கு ஒரே நாவலை சேர்ந்து எழுதினால் போச்சு. வெறும் வாய்களுக்கு அவல் கிடைத்தது போலாகும்” என்றாள். 

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

“அட! உன்னையும் என்னையும் வைத்து கிசுகிசுக்க வெல்லாம் செய்கிறார்களா? குஜாலாக இருக்கிறதே. இதற்காகவே அவசியம் இந்நாவலை நாம் இருவரும் சேர்ந்து தான் எழுத வேண்டும்” என மகிழ்ச்சியில் கத்தினேன். 

அவள் முறைத்துக் கொண்டே சொன்னாள். 

“உன்னை யாரும் வேசையன் என வசைய மாட்டார்கள்.  ஆனால் என்னை வேசி என்பார்களே” 

நான் சற்று யோசித்தேன். அவள் சொல்வதும் சரியெனப் பட்டது. யாருமே சீந்தாத மொழியில் எழுத்தாளராக இருப்பதன் துயரங்களின் தொடர்ச்சிதாம் இவையெல்லாமும் என்பதும் புரிந்தது. திரும்ப வந்துவிட்டேன். வரும் வழியில் எங்களைப் பற்றி யாரெல்லாம் கிசுகிசுத்திருப்பார்கள் என யோசித்துப் பார்த்தேன். என் எதிரிகள் ஒவ்வொருவராய் நினைவில் வந்தார்கள். நிச்சயம் எல்லோரும் வயிறெறிந்திருப்பார்கள். சந்தோஷமாக இருந்தது. என் எதிரிகள் ஒவ்வொருவரின் முகத்தையும் பதம் பார்க்க விருப்பம்தான் என்றாலும் திருப்பி அடித்துவிடுவார்களே என்ற பயம்தான் அதை தடுத்து வைத்திருக்கிறது. மாறாய் இம்மாதிரி வகையில் அவர்களை எரிச்சலூட்டுவது எனக்குப் பிடித்திருக்கிறது. 

அதற்கடுத்த நாள் என்னுடைய இன்னொரு ஸ்நேகிதியைத் தேடி பக்கத்து நகருக்குப் போனேன். நாங்கள் எப்போதுமே பொதுவிடத்தில்தான் சந்தித்துக் கொள்வோம். என்னுடைய ஒரே வாசக நண்பி. எங்களுக்குள் தூய்மையான நட்பு இருந்தது. சந்தர்ப்பம் கிடைத்துமா? என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஏனெனில் இதுவரைக்குமே அவள் சந்தர்ப்பத்தை உருவாக்கித் தரவில்லை. எனக்கு சந்தர்ப்பத்தைத் துய்த்துத்தான் வழக்கம். உருவாக்கத் துப்பு கிடையாது. நன்றாக எழுதுவாள். இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறாள். (வாசகி என்றாய்? என அப்பாவித்தனமாகக் கேட்காதீர்கள். குறைந்தது ஐந்து கவிதைத் தொகுப்பு வரை வெளியிட்டவர்கள்தாம் தமிழில் வாசகர்கள்) அவளிடம் இந்நாவல் பிரச்சினையைச் சொன்னேன். நாவலின் களம் என்ன? எனக் கேட்டாள்.

 "லெஸ்பியன்" என்றேன். 

ஒரு டீ கடையில் அமர்ந்துதான் பேசிக் கொண்டிருந்தோம். அவள் எதுவும் பேசாமல் எழுந்துபோய் டீ போடுபவரிடம். 

"அண்ணே அந்த க்ளாசில சுட்தண்ணி புடிங்க" என்றாள். 

அவரும் கொதிக்க கொதிக்க சுடுநீரை க்ளாசில் பிடித்துக் கொடுத்தார். என்னிடம் வந்தவள். 

"மூஞ்சிலயே ஊத்திருவேன் ஓடிடு" என்றாள். எனக்கு திக் கென்றாகிவிட்டது. இவள் எப்போது எழுத்தாளரானாள்? இன்று வரை வாசகி என்றல்லவா நம்பிக் கொண்டிருந்தேன். எதையும் பேசாமல் திரும்ப வந்துவிட்டேன். 

ஒருவேளை நாவலின் களத்தை அவளிடம் சொல்லியிருக்க கூடாதோ? கேடுகெட்ட இந்த தமிழ்மொழியில், தமிழ்சூழலில், இப்படி ஒரு நாவலை நான் அவசியம் எழுதத்தான் வேண்டுமா என யோசிக்க யோசிக்க ஆத்திரமாய் வந்தது. சிலர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களிடம் இன்பாக்ஸில் கேட்டுப் பார்க்கலாமா? என்கிற யோசனை எழுந்தது. ஆனால் எதையோ கேட்கப் போய் எசகுபிசகாக எதையாவது புரிந்துகொண்டு குச்சியை கையிலேயே பிடித்துக் கொண்டு ஆன்லைனில் நிற்கும் போலிஸ்காரர்களிடம் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டால்? அய்யோ நினைக்கவே திகிலாக இருந்தது. அந்த நினைப்பை அப்போதே கைகழுவினேன். 

எதுவுமே பிடிக்காமல் விட்டேத்தியாய் சில நாட்கள் சுற்றிக் கொண்டு திரிந்தேன். என் பழைய நண்பன் ஒருவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். கூடவே என்னுடைய மிகப் பழைய நண்பனான ஜானியை ஒரு அட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டு வந்திருந்தான். 

“நண்பா இந்தா, உனக்கு என் பரிசு” என ஆதூரமாய் கட்டித் தழுவித் தந்தான். மகிழ்ச்சியாய் வாங்கிக் கொண்டேன். 

“இப்போது என்ன செய்கிறாய்? எனக் கேட்டான். ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாய் சொன்னேன். 

”என்ன தலைப்பு?”

“ Pulp”  

”குண்டு பல்பா? அத வச்சி இன்னாபா கத”  என்றவனிடம்  

”இல்ல நண்பா இது எல்இடி பல்ப் பத்தின கத” என அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னேன். .

அவன் வழக்கம்போல் புதிராய் என்னைப் பார்த்துவிட்டு எழுந்து போய்விட்டான். 

அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தேன். ஒரு லிட்டர் சிவப்பு லேபிள் புட்டி. எடுத்து வெளியில் வைத்தேன். வழக்கமாய் உள்ளே ஜானி அமர்ந்திருப்பான். ஆனால் இன்றோ புட்டிக்குள் சிவப்பு நிறத்தில் ஒரு பெண் அமர்ந்துகொண்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். 

ஆச்சரியமாய் இருந்தது 

“அட இதற்குள் நீ எப்படி வந்தாய்?” எனக் கேட்டேன். 

“தெரியல. ஆனா உன்  நாவலில் வரும் பெண் மொழியை எழுதப்போறது நான் தான்” என்றாள். 

வாழ்வு ஒன்றும் அவ்வளவு மோசமில்லை என ஆனந்தக் கூக்குரலிட்டபடியே அவளை ஆரத் தழுவிக் கொண்டேன். 


- மேலும்

Featured Post

test

 test