Thursday, April 11, 2019

தில்லி க்ரைம்- இந்திய மகள்களின் துயரம்
நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய வரவான Delhi Crime குறுந்தொடரைப் பார்த்து முடித்தேன். ஒரே நாளில் பார்த்துவிட முடிந்தது. அதைத் தொடரின் வெற்றியாகத்தான் கருதவேண்டும். இந்தியாவையே உலுக்கிய நிர்பயா வழக்கின் பின்னணியை அலசும் தொடர். பின்னணி என்பதை விட காவலர்கள் மற்றும் சட்டத்தின் பணி என்னவாக இருந்தது என்பதைப் பேசுகிறது. மிகச் சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் போலிஸ், குற்றவாளிகளைப் பிடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை கொஞ்சம் உணர்வுப்பூர்வமாகவும் சாகச மனப்பாங்கோடும் கதைகளாகப் பார்க்க முடிகிறது. 

நிறைய போதாமைகள் உள்ளன என்றாலும் மிக இறுக்கமான திரைக்கதையும் அபாரமான நடிகர்களும் மிகப்பெரிய பலம். குறிப்பாக டிசிபி வர்த்திகா சதுர்வேதி யாக நடித்திருக்கும் Shefali Shah வின் உணர்வுப்பூர்வமான பங்களிப்பு தொடரின் தரத்தை உயர்த்துகிறது. எப்படி Sacred Games தொடரில் சாயிஃப் அலி கான் மின்னினாரோ அதற்கு இணையாக இவரது நடிப்பைப் பேசலாம். ஒரு சாயலில் நம் ஶ்ரீவித்யாவைப் போல இருக்கிறார். அதே அளவில் பெரிய, கருணை மிகுந்த கண்கள் இவருக்கும் இருக்கிறது. இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே எனத் தேடியதில் காந்தி மை ஃபாதர் படத்தில் கஸ்தூரிபா காந்தியாக நடித்தவர் இவர்தான் என்பது தெரியவந்தது.

போலிஸ்காரர்களின் அர்ப்பணிப்பு மட்டுமே பிரதானமாகப் பேசப்படுவதால் இந்தத் தொடர் ஒற்றைப் பார்வையாகச் சுருங்கி விடுகிறது. இந்தியா முழுக்க கிளர்ந்தெழுந்த மக்களின் எழுச்சியும், போராட்டங்களும் சரியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. நிர்பயா வழக்கின்போது இருந்த மக்களின் மன உணர்வையாவது குறைந்த பட்சம் கொஞ்சம் நெருங்கிப் பார்த்திருக்கலாம்.

தொடரின் ஆரம்ப பயங்கரத்தை மட்டும் முதல் நாள் பார்த்துவிட்டு இனிமேல் இதைத் தொடர்ந்து பார்க்கவேண்டுமா அல்லது இயலுமா என்கிற கேள்விகள் எழுந்தன. இப்போது இருக்கும் மனநிலையில் நெஞ்சை உலுக்கும் தினசரி செய்திகளைக் கூட நான் வாசிப்பதில்லை. நம் நாளிதழ்கள் முழுக்க புனைவெழுத்தாளர்கள் நிரம்பி வழிவதால் அவர்கள் எழுதும் வன்புணர்வுக் கதைகள் நிஜ வன்புணர்வு நிகழ்வுகளை விட மோசமாக இருக்கின்றன. மேலும் ஒரு பூதத்தைப் போல பெருத்து நிற்கும் நியூஸ் மீடியாக்களுக்கு தீனி போட குற்றங்களின் போதாமையும் உள்ளதால் இவர்கள் இட்டுக் கட்டும் கதைகளில் அருவெருப்பு நிறைந்து வழிகிறது. 

இருப்பினும் ஏதோ ஒரு மன தைரியத்தில் நேற்று காலையில் பார்க்க ஆரம்பித்து இரவு முடித்தேன். வயதின் காரணமாக நிர்பயா வழக்கில்  தப்பித்த  குற்றவாளி யைக் குறித்து வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். தன் அடையாளங்களை மறைத்துக் கொண்டு அவன் எங்கோ, ஏதோ ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தாலும்  தினசரி அவனால் நிம்மதியாக உறங்கி விட முடியுமா என்ன?.

தொடரில் இந்த இளம் குற்றவாளி அகப்படும்போது அவன் வயது கேட்கப்படுகிறது. அவனால் அதற்கு சரியான பதிலைத் தர முடியவில்லை. பதினேழு அல்லது பதினெட்டு இருக்கலாம் என்கிறான். பதினெட்டுதான் என உடனிருக்கும் ஒரு ஆண் போலிஸ் சொல்லி கைது செய்ய முனைய, ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர் ''இல்லைப் பதினாறுதான் இருக்கும் முகத்தைப் பார்த்தால் தெரியவில்லையா' என வலுக்கட்டாயமாக அவனை இளங் குற்றவாளிப் பிரிவில் கைது செய்கிறார். நிஜத்தில் என்ன நடந்தது எனத் தேடிப் பார்க்க வேண்டும். மேலும் இந்த வழக்கின் பின்னாலிருந்த அதிகாரிகள், அவர்களது செயல்பாடுகள் குறித்தும் தேடி வாசிக்க வேண்டும் என்கிற உந்துதலை இந்தத் தொடர் ஏற்படுத்தி இருக்கிறது. காட்சிப்படுத்தப் பட்டவைகளில் எத்தனை சதவிகிதம் புனைவு என்பது தெரியவில்லை. ஒருவேளை நிகழ்வுகளை அப்படியே வைத்துக் கொண்டு கதாபாத்திரங்களை மட்டும் புனைந்திருக்கலாம் என்பது என் யூகம்.

என் நண்பன் ஒருவன் கேரளத்தையே உலுக்கிய சூரியநெல்லி விவகாரத்தைக் களமாகக் கொண்டு ஆங்கிலத்தில் ஒரு நாவலை எழுதியிருக்கிறான். அவன் அந்த நாவலை எழுதும்போது  தினசரி என்னோடு உரையாடுவான். அவன் தொடர்ந்து எழுத சில திரைப்படங்களையும் படைப்புகளையும் பரிந்துரை செய்தேன். நூலாக்கம் முடிந்து அடுத்த வாரம் புத்தகம் கைக்கு கிடைக்கும். சொல்ல வந்தது சூரியநெல்லி வழக்கின் பயங்கரம் குறித்துத்தான். ஒரு பதினாறு வயதுப் பெண்ணை நாற்பதிற்கும் மேற்பட்டோர் சீரழித்த பயங்கரம்தான் இந்த சூரியநெல்லி விவகாரம். ஒரு முக்கியமான அரசியல்வாதியும் இந்த விவகாரத்தில் அடிபட்டதால் வழக்கு திசைதிருப்பப்பட்டதா அல்லது உண்மையில் நடந்தது என்ன என்கிற தெளிவு நீதிமன்றத்திற்கு கிடைக்கவே இல்லை. தல்வார் பயங்கரம் எப்படி இன்றும் சந்தேகத்தைக் கிளப்புகிறதோ அப்படியே சூரிய நெல்லி விவகாரமும் ஏராளமான சந்தேகங்களைக் கொண்டிருக்கிறது. 

நிர்பயா வழக்கும் இப்படி சந்தேகங்களால் மூடப்படாமல் போவதற்கு இரண்டு காரணங்கள்தாம் பிரதானம். ஒன்று இவ்வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் விளிம்பு நிலை மனிதர்கள். இரண்டு நிர்பயா வை இந்தியா தன் மகளாகப் பார்த்தது.

வன்புணர்விற்கும் சீரழிவிற்கும் நசிவிற்கும் உள்ளாகும் அனைத்துப் பெண்களும் இந்தியாவின் மகள்தாம் என்கிற பார்வை அரசாங்கத்திற்கு எப்போது வருகிறதோ அப்போதுதான் பெண்கள் மீது நிகழும் வன்முறைகள் குறையும்.Featured Post

test

 test