Showing posts with label சமகால இலக்கியம். Show all posts
Showing posts with label சமகால இலக்கியம். Show all posts

Monday, November 10, 2014

உன்னத எழுத்தின் அய்ம்பது தடைக்கற்களும் ஒரே ஒரு உண்மையும்


    நிகழ்திரை யின் கடைசிக் கட்டுரை என்று எழுதினேன் என தேடிப்பார்க்க வேண்டும். கடந்த டிசம்பர் மாத துவக்கமாக இருக்கலாம். அதற்குப் பிறகு ஒன்றுமே எழுதவில்லை. இந்த தேக்கம் எப்படி வந்தது? இவ்விரல்களால் இந்த எழுத்துக்களைத் தட்டச்சி எத்தனை மாதங்களாயிற்று? நான் எழுதாமலிருப்பதற்கான காரணங்கள் என்ன என யோசித்துப் பார்த்ததில் உடனடியாய் அய்ம்பது காரணங்களைப் பட்டியலிட முடிந்தது. இதில் ஒரே ஒரு உண்மைதான் இருக்கமுடியும் என அந்தரப்பட்சி கத்திக் கதறிச் சொல்கிறது. அதைக் காரணம் கேட்டவர்கள் கண்டுபிடித்துக் கொள்ளவும்.

 1. மனம் ஒன்றவில்லை.

 2. எழுத ஒன்றுமேயில்லை.

 3. எழுத பயமாக இருந்தது.

 4. எழுதத் தயக்கமாக இருந்தது.

 5. இனி உண்மையை எழுத முடியாதெனத் தோன்றியது.

 6. பாவணைகளின் மீது பெரும் சலிப்பு வந்தது.

7. எழுத்தென்பதே பாவணையாகத்தான் இருக்க முடியும் என்கிற ஆழமான நம்பிக்கை விழுந்தது.

8. என்னை யாரிடமும் வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

9. எனக்குத் தனிமை தேவைப்பட்டது.

10. என் சுற்றங்களை எனக்குப் பிடிக்கவில்லை.

11. இந்த மெய்நிகர் உலகம் அலுப்பூட்டியது.

 12. எழுத்துக்கள் வழி உருவாகும் அல்லது எழுத்துக்களால் உருவாகும் உணர்வுகள் அத்தனையும் போலித்தனமானவை எனத் தோன்றியது.

 13. இணையம் வழியோ அல்லது அச்சு வழியோ எழுத சலிப்பாக இருந்தது.

 14. எழுத, என்ன எழுத, எழுதி என்ன ஆக, என ஒரு புள்ளியில் விழுந்த அவநம்பிக்கை பன்மடங்காகப் பெருகியது.

 15. எழுத சோம்பலாக இருந்தது.

 16. என்னால் புதிதாக எதுவுமே எழுத முடியாதெனத் தோன்றியது.

 17. இனி புதிதாக எழுத எதுவுமே இல்லை எனவும் தோன்றியது.

 18. நானும் எழுத வேண்டும் என்கிற உந்துதலை வாசித்த எந்த எழுத்துக்களுமே தரவில்லை.

 19. என் வாழ்வில் சிக்கல்களே இல்லை.

 20. என்னை இந்த வாழ்வும் மனிதர்களும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். 

21. நான் சக மனிதர்களை தவிர்க்க விரும்புகிறேன்.

 22. என்னிடம் சுயநலம் மிகுந்தது.

 23. பேராசை புகுந்தது.

 24. உச்சபட்ச சோம்பலனாக மாறிப்போனேன்.

 25. காணும் காட்சிகள் யாவற்றையும் வார்த்தைகளாய் மாற்றி அதில் சில புனைவு சுவாரஸ்யங்களை நுழைத்தோ அல்லது பழைய மிகப்பழைய நினைவுகளில் திளைத்து அதில் சமபங்கு பகற் கற்பனையைப் புகுத்தி எழுத்துக்களாய் மாற்றியோ திருப்தியடையும் நிகழின் மீது மிகுந்த பரிதாபம் எழுந்தது. 

26. என் முதல் நாவல் பழி மீதிருக்கும் வசீகரம் குறையவேயில்லை.

 27. பழியைத் தாண்டி என்னால் எழுத முடியாதெனத் தோன்றியது.

 28. என்னை இந்த முட்டாள் சமூகம் கொண்டாடவேயில்லை.

 29. குறிப்பாக ஃபேஸ்புக் பெண்களுக்கு என்னைத் தெரியவேயில்லை. பிறகு எழுதி என்னாகப்போகிறதென எழுதாமல் இருந்து விட்டேன்.

 30. நான் எந்தக் குழாமிலும் இல்லாததால் என் பெயர் எல்லாத் தரப்பிலும் மிகக் கவனமாகத் தவிர்க்கப்படுகிறது. அந்த சிரமத்தை அவர்களுக்கு ஏன் வைப்பானேன்?

 31. சமகால எழுத்து சல்லிப் பயல்களிடம் சிக்கிக் கொண்டதால் எழுதவில்லை.

 32. இலக்கியத்தை காசாக்கி விளம்பரமாக்கி சந்தி சிரிக்க வைக்கும் வியாபாரிகள் மிகுந்திருக்கும் இந்த காலகட்டத்தில் நான் எழுதாமல் இருப்பது எனக்கும் எழுத்திற்கும் நல்லது.

33. வாசிப்பதை விட, எழுதுவதை விட , சினிமா பார்க்கப் பிடித்திருந்தது

34. வலைப்பூவில் எழுதி, அதற்குப் பொருத்தமாய் ஒரு படம் தேடி, போஸ்ட் செய்து, கூகுல் பள்ஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் இணைப்பு கொடுத்து அதிகபட்சம் முந்நூறு பேரை படிக்க வைப்பதால் என்னாகி விடப்போகிறது?

35. தமிழ் இணைய சமுகத்திற்கு தமிழ் சினிமாதான் சகலமும். இந்த ஆட்டு மந்தைகள் வாசிக்க ஏன் இந்தனை பிரயத்தனம்?

36. சும்மா இருக்கப் பிடித்திருந்தது.

37. எழுத நிறைய இருந்தும் எழுதாமலிருப்பதுதான் உன்னதம். அது தன்னிலிருந்து தானாய் மிகுந்து வரவேண்டும் ஒருபோதும் செய்யக் கூடாது.

38. எழுத்து ஆன்மாவிலிருந்து உருவாகவேண்டும். காலையெழுந்தவுடன் கக்கூஸ் என்பது மாதிரி ஆகிவிடக் கூடாது.

39. ஒரே விஷயத்தைத் திரும்ப திரும்ப எழுதாதே

40. சினிமா பற்றியே எழுதாதே. ஏற்கனவே யாரும் சினிமா தாண்டி சிந்திப்பதேயில்லை.

41. தமிழ் சினிமாவிற்கும் அதில் பணிபுரிவோருக்கும் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் மிரட்சியடைய வைக்கிறது. ஒரு எழுத்தாளனாய் என்னைக் கூசிச் சுருங்கச் செய்கிறது.

42. இலக்கியம் மீதும் தமிழ் எழுத்தாளர்கள் மீதும் இருந்த கவர்ச்சியும் விருப்பமும் போய்விட்டது.

43. வளவளவென எழுதாதே. எழுத்து கச்சிதமாக இருக்க வேண்டும். மிகக் குறைவாக ஆனால் ஆழமாக எழுதுவதே எழுத்து. இது மினிமலிச காலம்.

44. குமாஸ்தா வாழ்வின் இன்பங்களில் திளைப்பதால் எழுதவில்லை.

45. குடும்பம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதால் எழுதவில்லை

46. நான் வெறுப்பில் திளைக்கிறேன்

47. சதா காமத்தில் உழல்கிறேன்

48. பொறாமை மிகுந்திருக்கிறது.

49. இணையத்தில் எங்கு திரும்பினாலும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களாகவே காணக் கிடைக்கிறார்கள். இந்தப் பெரும்பான்மை அறிவு சமூகத்தில் எழுதாமலிருப்பதே தனித்துத் தெரிவதற்கான ஒரே வழி.

50. அலுவலக கணினியில் தமிழ் தட்டச்சு கடந்த ஒரு வருடமாக செயல்படவில்லை.

Sunday, March 10, 2013

பாரதிக்குப் பிறகு..


பாரதிக்குப் பிறகு மனுஷ்யபுத்ரன்தான் 
சாரு சொன்னார். இனியும் ஸொல்வாரா எனத் தெரியாது
பாரதிக்குப் பிறகு தேவதேவன்தான் 
ஜெமோ சொன்னார்.இனியும் ஸொல்வார்
பாரதிக்குப் பிறகு நீதான் மச்சி
நாக்குழறலாய் நண்பன் சொன்னது
அடுத்த குடியிலும் நிச்சயம் ஸொல்வான்
பாரதிக்குப் பிறகு நீதாண்டி 
நாக்குழறாமல் நானும் ஒரு 
கவிஞரிடம் ஸொன்ன நினைவு
அடுத்த முறையும் ஸொல்ல  தயார்தான்
அவள்தான் கேட்க விரும்பாமல் போய்விட்டாள்.                                                                                                                                      


·         இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ஜாலி' யான மூடில் எழுதியது. சீரியசான மூடில் படித்தாலும் சரியாக இருப்பதுபோல் தோன்றியதால் இங்கே


Monday, September 27, 2010

ஓஎன்வி இரசிகரின் மத்தி மீன் குழம்பு ரெசிபி

சமீபமாய் நண்பர் ஒருவரின் வீட்டிற்குப் போயிருந்தேன். அவர் ஒரு மலையாளி. என்னுடன் வந்தவர்கள் என்னை ‘புள்ளி எழுத்துக்காரானானு’ என அவருக்கு அறிமுகப்படுத்த அவரிடம் ஒரு சிறிய பரபரப்புத் தொற்றிக் கொண்டது. என்னுடைய எழுத்துப் பின்புலங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார், அவரையும் ஒரு கலாகாரன் என்றே நண்பர்கள் அறிமுகப்படுத்தினர். நண்பர், ஓஎன்வி குருப்பின் மிகப்பெரும் இரசிகர். ஓஎன்வியின் புகைப்படமும் சில புத்தகங்களும் அவர் வீட்டில் பார்க்க முடிந்தது. அவர் ஜீவிதத்தில் ஓஎன்வியைத் தவிர வேறு யாரையும் படித்ததில்லை, படிக்க விரும்பியதுமில்லையாம். "ஓஎன்வியின் பாடல்களுக்கு காங்கிரஸ் மலையாளிகளும் அடிமை, நான் ஒரு உதாரணம்!" என்கிற கூடுதல் தகவலையும் பகிர்ந்தார். பின்பு படுக்கையறைக்குச் சென்று திடீரென தரையில் படுத்தார். கட்டிலுக்கடியில் ஊர்ந்து, சிறிய அரை வட்டம் ஒன்றை அடித்து அப்ஸல்யூட் வோட்கா பாட்டிலோடு வெளியில் வந்தார். மிகச் சுறுசுறுப்பாக கண்ணாடிக் குவளைகளையும்,பனித்துண்டங்களையும் ஐந்தே நிமிடங்களில் தயாரித்த வெள்ளரிக்காய் சாலட்லையும் கொண்டு வந்து மேசையில் பரப்பினார். முதல் ரவுண்டிற்குப் பிறகு அதே அவசரத்துடன் உள்ளறைக்குச் சென்று சட்டையணிந்தார். "பத்து மினிட்டு" எனச் சொல்லியபடியே கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்விட்டார். உடன் வந்த நண்பர்கள் புதிர் முக பாவனை ஏதும் இல்லாமல் சாதாரணமாய் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் தம்மடிக்கப் போயிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். மிகச் சரியாய் ஒன்பதரை மினிட்டில் உள்ளே மீன்களோடு வந்தார்.

அவரின் வீடு ஸ்பானிய பாணியில் கட்டப்பட்டது. இண்டர்நேஷனல் சிட்டியில் ஸ்பானிஷ் ப்ளாக்கில் வசிக்கிறார். வீட்டின் கூடத்தோடு ஒட்டியபடி சமையலறை இருக்கும். கிட்டத்தட்ட நம் செட்டிநாட்டு வீடுகளின் உள் முற்றம் போன்ற ஒரு செவ்வக வடிவ திட்டுதான் சமையலறை. எங்களுடன் பேசியபடியே இருபது நிமிடத்தில் சுவையான காரமான மத்தி மீன் குழம்பையும் பத்தே நிமிடத்தில் கப்பாவையும் தயாரித்து மூன்றாவது இரவுண்டில் பரிமாறினார். அபரிதமான ருசியுடனிருந்தது அந்த உணவு. பொதுவாகவே மலையாளிகளின் உணவின் மீது எனக்கு பெரிதாய் விருப்பம் கிடையாது. ஒரு வித அசிரத்தையுடன் தான் சாப்பிடத் துவங்கினேன். நல்ல காரத்துடனான மீன் குழம்பின் சுவை அறைக் குளுமையையும் மீறி வியர்க்க வைத்தது. நண்பரின் மீன் குழம்பு ரெசிபி மிகவும் சுலபமானது. ஒரு சொட்டு எண்ணெய் கூட பயன்படுத்தாமல் இந்த ருசியான குழம்பைத் தயாரித்தார்.

இந்த மல்லு மீன் குழம்பிற்கு தேவையான பொருட்கள் (பெயர் நானாய் வைத்ததுதான் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை)

மத்தி மீன் (நெய் மத்தி கிடைத்தால் மிக நன்று) : ஆறு அல்லது எட்டு முழுத் துண்டுகள்
சிறிய வெங்காயம் பொடியாய் நறுக்கியது : அரை கப்
பூண்டு பொடியாய் நறுக்கியது : கால் கப்
மிளகாய் தூள் – தனியா கலக்காதது : இரண்டு மேசைக் கரண்டி
தனியா தூள் – மிளகாய் கலக்காதது : ஒரு மேசைக் கரண்டி
பச்சை மிளகாய் – நடுவில் கீறித் துண்டாக்கவும் – ஆறு துண்டுகள்
இஞ்சி – பொடியாய் நறுக்கியது : கால் கப்
கொடும்புளி - எலுமிச்சையளவு
வெந்தய பொடி – சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

வாயகன்ற மண் சட்டியை (மண் சட்டி இல்லையென்றால் மீன் குழம்பு வைக்கும் திட்டத்தைக் கைவிடவும்) அடுப்பில் வைத்துச் சூடாக்கி மிளகாய் மற்றும் தனியா தூளை இட்டு லேசாய் வாட்டிக் கொள்ள வேண்டும். பின்பு நீரூற்றி நன்கு கலக்கவும். இப்போது கறிவேப்பிலை,பூண்டு,வெங்காயம்,மிளகாய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாய் சட்டியிலிருக்கும் கரைசலில் போடவும். லேசாய் கொதி வந்த பின்பு கொடும்புளியைத் தூவிவிடவும். பின்பு மீன் துண்டங்களை ஒவ்வொன்றாய் கரைசலில் அமிழ்த்தவும். ஒரு போதும் கரண்டியைப் பயன்படுத்திக் கலக்க கூடாது. சட்டியை ஜாக்கிரதையாய் தூக்கி கலக்கலாம். ஒரு மூடியைப் போட்டு மூடிவிட்டு தீயைக் குறைத்துவிடவும். பத்தே நிமிடத்தில் ருசியான குழம்பு தயார். ஒரு வித அனுபூதி நிலையில் அவர் இந்த ரெசிபியை என்னிடம் பகிர்ந்தார். நான் நான்கு ரவுண்ட் அனுபூதியோடு இதையும் சிரத்தையாய் கேட்டுத் தெரிந்து கொண்டபடி விடைபெற்றேன்.

சனிக்கிழமை ஓஎன்விக்கு ஞான பீட விருது கிடைத்ததை அறிந்ததும் நண்பரின் நினைவு வந்தது. தொலைபேசி வாழ்த்தினேன். ‘நிங்கள் என்னை விளிக்கும் அம்பதாவது ஆளாம்’ என்ற ஆச்சரிய தகவலையும் பகிர்ந்தார். ஓஎன்விக்கு கூட இத்தனை தொலைபேசி அழைப்புகள் போயிருக்காது என்றேன். மனிதர் ஐம்பதாவது முறையும் அதே நெகிழ்வோடு ஓஎன்வியை நினைவு கூர்ந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஓஎன்வியை துபாயில் நேரில் சந்தித்தும் பரவசமடைந்திருக்கிறார். ஓஎன்வி எழுதிய சினிமா பாடல்கள் குறுந்தகடைக் கேட்டேன். வெள்ளியன்று வந்தால் அவரின் பாடல்களைக் கேட்டபடியே குடிக்கலாம் என அழைப்பு விடுத்தார். வருவதாகச் சொல்லி தொலைபேசியை வைத்தேன்.

நேற்று ஜெமோவின் ஓஎன்வி வசை கட்டுரையைப் படித்தவுடன் நண்பருக்குத் தொலைபேச வேண்டும் போலிருந்தது. ஆனால் அபரிதமான அந்த மீன் குழம்பின் ருசிதான் என்னை அம் முட்டாள்தனமான எண்ணத்திலிருந்து காப்பாற்றியதோ என்னவோ. ஏனெனில் ஓஎன்வியை யாராவது அவர் முன் கிண்டலடித்தால் மனிதர் மிருகமாகிக் கிண்டலடித்தவரை கடுமையாய் தாக்கும் நிலைக்குச் சென்றுவிடுவாராம். ஒரு குடி நிகழ்வில் அவர் நண்பர்களில் யாரோ ஒருவர் அச்சுதானந்தனை முன் வைத்து எழுந்த கிண்டலை ஓஎன்வியில் முடித்துச் சிரிக்க ஆரம்பிக்ககூட இல்லையாம் பளார் என்ற சப்தத்தை அனைவருமே கேட்டிருக்கிறார்கள். சிவப்பான விழிகளோடு மூச்சு வாங்க "பட்டி மோனே" என புஸ்ஸிக் கொண்டிருந்தாராம் நண்பர். அவருடைய இன்னொரு நண்பர் இந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்தார். நான் பெருமூச்சு விட்டுக் கொண்டேன். ஜெமோ கட்டுரையை அப்படியே சொல்லி இருந்தால் என் நிலை என்ன ஆகி இருக்கும். நல்ல வேளை தப்பித்தேன்.

மாலை பேரங்காடியில் நெய் மத்தி மீன்களைப் பார்த்தேன். அப்போதுதான் வந்து இறங்கி இருக்க வேண்டும். அதன் மலர்ச்சியே என்னை வாங்கத் தூண்டுவதாய் இருந்தது. மீன்களை வாங்கிக் கொண்டு வந்தேன். நண்பரின் ரெசிபியை நினைவுபடுத்திப் பார்த்தேன். தமிழ் மரபில் ஊறிய சமையல் மனம் வெங்காயத்தையோ பூண்டையோ வதக்காமல் குழம்பு வைக்க அஞ்சியது. எனவே அதே பொருட்களைக் கொண்டு கீழ் வரும் முறையில் செய்து பார்த்தேன். இந்த முறையும் மிக ருசியாகவே இருந்தது. நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாம்.

மல்லோ-டமில் மத்தி மீன் குழம்பு.

தேவையான பொருட்கள்: மேலுள்ளதுதான். தாளிக்க எண்ணைய் மட்டும் இம்முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை :

வாயகன்ற மண் சட்டியை (மண் சட்டி இல்லையென்றால் இம்முறையிலேயும் மீன் குழம்பு வைக்கும் திட்டத்தைக் கைவிடவும்) அடுப்பில் வைத்துச் சூடாக்கித் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். வெந்தயம் (வெந்தயப் பொடிக்குப் பதிலாய் வெந்தயமே நாம் பயன்படுத்தலாம்) கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் போன்றவற்றை வரிசைக் கிரமமாய் போட்டு வதக்கவும். மேற் குறிப்பிட்ட மிளகாய் மற்றும் தனியா தூளைக் கொட்டிக் கிளறி நீரூற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் புளிக் கரைசலை ஊற்ற வேண்டும் ( புளியை அப்படியே இட வேண்டாம்) மீன்களை ஒவ்வொன்றாய் மெதுவாய் குழம்பில் இறக்கவும். மென் தீயில் வைத்துக் கொதிக்க விடவும். இதன் சுவையும் அபரிதமாய்த்தான் இருந்தது. ஆனால் லேசான ருசி வேறுபாட்டை உணர முடிந்ததுதாம் என்றாலும் குழப்பம் ஒன்றும் இல்லை.

இப்போது மல்லு மீன் குழம்பிற்கும் மல்லோ-டமில் மீன் குழம்பிற்குமான செய்முறை வித்தியாசங்கள் மற்றும் ருசி அளவின் விகித உயர்ச்சிகள், தாழ்வுகள் குறித்துப் பதிவு செய்ய வேண்டும். அதை இன்னொரு முறை செய்கிறேன். நீங்கள் இரண்டு முறைகளையும் முயற்சித்துப் பார்த்து விட்டு எனக்கு எழுதுங்கள். பூமியிலிருந்துதான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

Wednesday, July 16, 2008

சமையல் குறிப்புகள் : காங்கோ வின் கிழக்கு முனையிலிருந்து ஒரு கடிதம்

சென்ற இடுகைக்கு உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து கடிதங்களாய் வந்து குவிந்தன.வழக்கம்போல் ஏகப்பட்ட திட்டுகளும்,பாராட்டுகளுமாய் நிறைந்திருந்ததில் ஒரு கடிதம் மட்டும் கவனத்தை ஈர்த்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்பும், பண்பும், பாசமும், கொண்ட எழுத்தாளர் அய்யனார் அவர்களுக்கு, உங்கள் அன்பை என்றும் மறவாத கோவிந்தசாமி மற்றும் திரிபுரசுந்தரி சேர்ந்து எழுதிக்கொள்ளும் மடல்.உங்கள் சமையல் குறிப்புகளை படித்ததிலிருந்து எங்களின் நாவில் நீர் சுரந்த வண்ணம் இருக்கிறது.முருங்கை,மாங்காய் சாம்பார் என்பது எத்தனை சுவையானதென்பதை மறந்தே போயிருந்தோம்.உங்களின் பதிவு எங்களின் கிளர்ச்சியைத் தூண்டி விட்டது.ஆப்பிரிக்காவின் வெகு அடங்கிய பிராந்தியமான காங்கோவின் கிழக்கு பகுதியில் நாங்கள் வசித்து வருவதால்,நீங்கள் சொல்லியிருக்கும் சமையல் குறிப்பின்படி எதையும் சமைத்துப் பார்க்க முடியவில்லை.காய்கறிகளை கண்ணில் பார்த்தே பல வருடங்களாகி விட்டன.கம்பு,கேழ்வரகு,கடலைப் பிண்ணாக்கு,எள்ளுப்பிண்ணாக்கு போன்றவைகளே இங்கு பெருமளவு கிடைக்கின்றன.அரிசி அபூர்வமாய் கிடைக்கும்.இறைச்சியே எங்களின் பிரதான உணவாய் இருப்பதால் காய்கறிகளை மறந்தே போயிருந்தோம்.ஆனால் உங்களின் பதிவு எங்களுக்குள் என்னவோ செய்தது.என் மனைவி திரிபுர சுந்தரி நேற்று கனவிலும் முருங்கை மாங்காய் சாம்பார் என புலம்பினாள்.என்னால் அவளின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கு வருந்தினேன்.சரி உங்களுக்கு கடிதம் எழுதினாலாவது மனது ஆறுதல் அடையலாம் என்றே இக்கடிதம் எழுதினோம்..நீங்கள் தொடர்ச்சியாய் இதுபோன்ற பதிவுகளிட்டு இந்த வாழ்வை சிறிது கனவிடை தோய்ங்கள் என அன்போடு வேண்டுகோளிகிறோம்.

இப்படிக்கு
தங்களை என்றும் மறவாத
கோவிந்தசாமி மற்றும் திரிபுர சுந்தரி


இந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும் என் நினைவு பதின்மம் தப்பிப் போனது.என்றுமே தீராத பதின்மத்தின் கவர்ச்சிகளில் மூழ்கிப்போனேன்.ஆறாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்புவரை யாருக்கு கடிதம் எழுதினாலும் அன்பும், பண்பும், பாசமும், கொண்ட என்றுதான் ஆரம்பிப்பேன்.பனிரெண்டாம் வகுப்பில் கவிஞனானதால் ப்ரியமுள்ள என எழுத ஆரம்பித்தேன்.நான் ஒரு எழுத்தாளனாவதற்கு ப்ரியமுள்ள எனத் தொடங்கி எழுதப்பட்ட என் காதல் கடிதங்களே உறுதுணையாய் இருந்திருக்கலாம்.இதுவரை நானூற்றிச் சொச்சக் காதல் கடிதங்களை எழுதியிருக்கிறேன்.அவை பெரும்பாலும் என்னிடமே திரும்பி வந்தன.பெண்கள் இந்த வகையில் பத்திரிக்கை அலுவலகங்களை விட நேர்மையானவர்கள்.ஒரு பெண் மட்டும் என் கடிதம் படித்து,மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு ஏற்கனவே எடை அதிகமான காதல் கடிதத்தில்,ஒரு கல்லையும் சேர்த்துக் கட்டி,நான் அவள் வீட்டுப்பக்கமாய் போகும்போது சன்னலிலிருந்து என் மீது வீசியெறிந்தாள்.எனக்கு சிறிது விழிப்புணர்வு அதிகம் என்பதால் கல்லடியிலிருந்து ஒதுங்கிக் கொண்டேன்.

பதின்ம நதியின் கரைகளில் எத்தனை நேரம் அமர்ந்திருந்தேன் எனத் தெரியவில்லை. ஒரு வழியாய் மீண்டு, கோவிந்தசாமிக்கும் திரிபுரசுந்தரிக்கும் பதில் கடிதம் எழுதினேன் அதுவும் உங்களின் பார்வைக்காக.

அன்புமிக்க நண்பர் கோவிந்தசாமி மற்றும் திரிபுரசுந்தரிக்கு

வணக்கம்.தங்களின் மடல் கிடைக்கப் பெற்றேன்.உங்களுக்கு என் பதிவை படிக்கும் வாய்ப்பு கிட்டியமைக்கு எல்லாம் வல்ல இறையிடம் நன்றி சொல்கிறேன்.உங்கள் பிரதேசத்தில்
காய்கறிகள் கிடைக்காமல் போனதிற்காக வருந்துகிறேன்.இருப்பினும் இறைச்சி அற்புதமானது. இளம் மிருகங்களின் சுவை அபரிதமாய் இருக்கும்.பெரிய தீயில் அவற்றை வாட்டி லேசான கருகலோடு உண்பதை நினைத்தால் வாயில் சுவையூறுகிறது.நீங்கள் காய்கறிகளுக்காக எச்சிலூறுவதும் நாங்கள் இறைச்சிக்காய் எச்சிலூறுவதும் தவிர்க்க இயலாதது.

உங்களிடம் கிடைக்கும் பொருள்களை வைத்து வேறுவித சுவை கொண்ட உணவுகளை எப்படி சமைப்பதென இங்கே பகிர்கிறேன்.கம்பும்,கேழ்வரகும் கிடைக்கும் இடங்களில் தவிடும் கிடைக்கலாம்.கொஞ்சம் முயற்சித்து தவிடையும் வாங்கிவிடுங்கள்.தவிடில் இரண்டு வகை, ஒன்று பச்சரிசி தவிடு, இரண்டு புழுங்கலரிசி தவிடு, எப்படியாவது பச்சரிசி தவிடை தேடிப் பிடிங்கள்..

இப்போது சமையலைத் துவங்கலாம். இந்த உணவை எங்கள் ஊர்பக்கம் எருமாட்டுக் கஞ்சி என அழைப்பர்.இப்போது நாகரீக வடிவங்களுக்கு மெல்ல நாம் மாறிக்கொண்டிருப்பதால் எருமாமிர்தம் எனப் பெயரிட்டு அழைக்கலாம்.

தேவையான பொருட்கள்.

மல்லாட்டைப் பிண்ணாக்கு - 4 அன்னம் (நீங்கள் சொன்ன கடலைப் பிண்ணாக்குதான்)
எள்ளுப் பிண்ணாக்கு - 3 அன்னம்
கம்பு - 2 கப்
கேழ்வரகு - 2 கப்
பச்சரிசி தவிடு - தேவையான அளவு

கம்பு,கேழ்வரகு இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும்.உங்கள் ஊரில் உரல், உலக்கை இவையெல்லாம் கிடைக்குமா எனத் தெரியவில்லை. இரண்டையும் ஒரு பதமான மசிந்த நிலை வரும்வரை உலக்கை கொண்டு மசிக்கவும். மிக்ஸியினால் மசியச் செய்வது அத்தனை ருசியாய் இருக்காது.ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.தண்ணீர் நன்றாக கொதித்த பின் மசிந்த கம்பு + கேழ்வரகை கொட்டவும்.கொதிக்கத் துவங்கியதும் மல்லாட்டைப் பிண்ணாக்கு மற்றும் எள்ளுப் பிண்ணாக்கை போடவும். பிண்ணாக்கும்,கம்பும்,கேழ்வரகும் சேர்ந்து கொதிக்கத் துவங்கும்போது, ஒரு அற்புத மணம் உங்கள் நாசியினை நிறைக்கும்.தன்னிலை மறப்பதற்கு முன்பாக தவிட்டைக் கொட்டிக் கலக்கவும்.அவ்வளவுதான் சுவையான எருமாமிர்தம் தயார்.

இதை சூடாக உண்டால் நாக்கு தட்டிப்போகும்.சிறிது நேரம் ஆரவைத்து குடிப்பது ஆரோக்யமானது..இவ்வுணவை முயற்சித்துப் பார்த்துக் கடிதமெழுதுங்கள்.நான் எதற்கும் ஜெயமோகன்,நாஞ்சில் நாடன் இவர்களை ஆலோசித்து உங்கள் பகுதியில் கிடைப்பதைக் கொண்டு வேறுவகை இலக்கியச் சமையலேதேனும் செய்ய முடியுமாவென விசாரித்து வைக்கிறேன்.

ஆப்பிரிக்க காடுகளுக்கு போவது குறித்த என் ஆசைகள் உங்கள் கடிதத்தைப் பார்த்ததும் மீண்டும் அரும்பியிருக்கின்றன.உங்களின் தொடர்ச்சியான கடிதப் போக்குவரத்தின் மூலமே அரும்பின ஆசைகள் மலர்கின்றனவா எனப்பார்க்க வேண்டும்.எப்போது அவ்வாசைகள் மலர்கின்றனவோ உடனே அங்கு என் மனைவி,குழந்தைகளோடு வருகிறேன்.பிஸினஸ் க்ளாஸ் அவசியமில்லை நான் மிகச் சாதாரணனன்.

மிக்க தோழமையுடன்,
முன்/பின்/நடு/எதிர்/நவீன எழுத்தாளன்

அய்யனார்


***சமகால இலக்கியத்தை வேறொரு நிலைக்கு தனியாய் தள்ளிக்கொண்டு போகும் பிரியமுள்ள ஆசான் ஜெயமோகனுக்கு.

Tuesday, July 15, 2008

சமையல் குறிப்புகள்


என் இந்தியத் தனிமை வாசத்தில் சமையலறைகளை பியர் போத்தல்களை சேமிக்குமிடமாகத்தான் கருதிவந்திருந்தேன்.என் சகோதரனுடன் வசித்த இரண்டு வருட காலத்தில் வீடு என்கிற அமைப்பு வீடு என்கிற அமைப்பாகவே இருந்தது.அப்போதுதான் சுமாராக சமைக்க கற்றுக்கொண்டேன்.பின்பு நீண்ட இடைவெளிக்கப்பால் சமீபமாய் சமைக்கத் துவங்கியிருக்கிறேன்.முதலில் பயந்து கொண்டே சமைக்க ஆரம்பித்து இப்போது மிக நன்றாக சமைப்பதாக நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

சமைப்பதென்பது மிகவும் அலாதியானது."நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி" க்கேற்றார்போல் டன்டன்டன்டய்ய்.. டன்டன்டன்டய்ய்ய்..ம்ம்ம்ம்ம்.. என் லேசாக ரொமான்டிக் நடனமாடியடி சமைப்பது இன்னமும் அலாதி.சமீபத்தில் பார்த்த திரைப்படமொன்றில் சமைக்கும்போது சிறிது அன்பையும் சேருங்களென ஒரு ரெசிபியை சொல்லியிருப்பார்கள்.நான் எத்தனை முயற்சித்தும் அன்பை எங்கேயும் வாங்க முடியவில்லை.சரி என்னிலிருந்து பிடுங்க முடியுமாவென பார்த்தாலும் மருந்துக் குப்பியளவிற்கு கூட இல்லை.மற்றவர்கள் நம்மைப் பற்றிச் சொல்வதெல்லாம் சரிதான் போலிருக்கிறது என மிகுந்த வருத்தத்தோடு உலகின் மிகச்சிறந்த அன்பாளர்களான வைரமுத்துவையும் வாலியையும் துணைக்கழைத்தேன்.வாலி தொடங்கி பேரரசு வரை விரிந்த அன்பாளர்கலால் நிறைந்த இச்சமூகம் என்னைப்போன்ற காட்டுமிராண்டிகளை தனது கவிதை வரிகளால் சாதுவாக்குவதை இரண்டாம பாடலைக் கேட்கும்போதே உணரமுடிந்தது.பின்பென்ன செய்ய.. நதியெனப் பொங்கி, ஆறெனப் பெருக்கெடுத்து ஓடிய அன்பை வழித்தெடுத்து, உணவோடு கலந்து சமைத்து முடித்தேன்.இதுவரை உணர்ந்திராத சுவையென நண்பர்கள் ஆர்பரித்தார்கள்..எனக்கும் மிகுந்த களிப்பாய் போயிற்று.

சரி இப்போது மாங்காய் முருங்கைக்காய் சாம்பார் வைப்பது எப்படியெனப் பார்ப்போம்.நான் எப்படி சமைப்பேனோ அப்படியே சொல்கிறேன்.வழமைகளின் மீதான நம்பிக்கை இல்லாத பிம்பத்தைக் காப்பாற்றுவது எத்தனை கடினமென்பதை அனுபவித்தால்தான் தெரியும்..

1.குக்கர் பாத்திரத்தில் அரிசி எடுத்துக்கொள்ளவும்.சன்ரைஸ் கப் என்றால் நாலு பேருக்கு ரெண்டு, குண்டு கப் என்றால் நாலு பேருக்கு ரெண்டே முக்கா.
2.அரிசியை மூன்று முறை கழுவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.இந்த ஊற வைத்த அரிசியை யாரும் திங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மீறித் தின்பவர்களின் கல்யாணத்தில் மழை பலமாய் பெய்யுமென பயமுறுத்துவதும் அவசியம்.
3.இப்போது பாடல்களை தேர்வு செய்யலாம் அல்லது ஒரு தம் அடிக்கலாம்.
4 துவரம் பருப்பு அரை கப் எடுத்து நன்கு கழுவிக்கொள்ளவும்.
5.வெங்காயத்தை ஆறு துண்டாய் நறுக்கவும் ..நான்கு பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்..
6.மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் முருங்கைக்காயை நடுத்தர அளவில் வெட்டிக்கொள்ளவும்.
இப்போது குக்கர் பாத்திரத்தில் இருக்கும் அரிசியை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு அந்த குக்கரில் பருப்பு, வெங்காயம், மிளகாய், காய்கறிகள், பூண்டு என எல்லாவற்றையும் போடவும். கொஞ்சம் மஞ்சள் தூள சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
7.அடுப்பின் தீயை நன்றாக எரியவிடவும்.இப்போது தாளிப்பதற்கு தேவையான
வெங்காயம் - 2, தக்காளி - 2, பூண்டு - 4 பல், இம்மூன்றையும் பொடியாய் நறுக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி இவற்றையும் தயாராய் வைத்துக்கொள்ளவும்
8.பருப்பு,காய்கறி வெந்ததும்(3 விசில்) இறக்கி விட்டு வாணலியை அடுப்பில் வைக்கவும்.
9.வாணலி காய்ந்ததுதும் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி, என எல்லாவற்றையும் நன்கு வதக்கவும்..
10.குக்கரில் வெந்த காய்கறிகளை கரண்டியில் எடுத்து வாணலியில் போட்டு லேசாக வதக்கவும்.சிறிது நேரம் கழித்து பருப்பு வேக வைத்த தண்ணீரை வாணலியில் ஊற்றவும்.
கொஞ்சம் கொதி வந்த பின்பு சாம்பார் பொடியையும், உப்பையும் சேர்க்கவும்.
நன்கு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இப்போது ஊறவைத்த அரிசியை இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்
சரியாய் மூன்றாவது விசிலில் நிறுத்தவும்.சாதமும் சாம்பாரும் ரெடி..ஓரமாய் உட்கர்ந்து வேடிக்கை பார்த்த அறைத்தோழனை வத்தல் பொறிக்கச் சொன்னால் வேல முடிஞ்சது..

** லேபிள் க்கு நன்றி :ஜெயஸ்ரீ

பிகு

இதே சாம்பாரை வேறுவிதமாய் ருசியாய் எப்படி செய்யலாமென்கிற மாற்றுப் பார்வைகள் வரவேற்கப்படுகின்றன.

என் வாசகியின் வேண்டுகோளின்படி பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.

Featured Post

test

 test