Tuesday, November 6, 2012

அத்தியாயம்- ஏழு

என்னை கிட்டத்தட்ட எல்லோருமே பைத்தியம் என்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும் ஆனால் என் தலையைத் தொலைவில் பார்த்த உடனேயே நைசாக நழுவி கண்ணுக்குப் புலப்படாத இடத்தில் மறைந்து கொள்கிறார்கள் என்பதுதான் ஆற்றாமையாக இருக்கிறது. இதே இவர்கள் ஒரு காலத்தில் என் பேச்சைக் கேட்க கியூவில் நின்றார்கள். அந்தி சாய்வதற்கு முன்னமே ரம் புட்டிகளை இடுப்பில் மறைவாய் சொருகிக்கொண்டு வந்துவிடுவார்கள். மலையடிவாரம், வயல்வெளி, சந்தடியில்லாத ரயில்வே கேட் என தினம் ஒரு இடம். ஆறு மணிக்கு பேச ஆரம்பித்தால் முடிய பத்து பதினோரு மணி ஆகும். நடுநாயகமாய் உட்கார்ந்திருப்பேன். வருபவர்கள் கையிருப்பிற்கேற்ப ஸரக்கை வாங்கி வந்துவிடுவார்கள். கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். அசராமல் பதில் சொல்லிக் கொண்டிருப்பேன். முப்பத்தைந்தைக் கடந்தவர்களின் கேள்விகளில் செக்ஸ் அல்லது ஆன்மீகம் தாண்டி வேறெதுவும் இருக்காது. கூட்டுக் கலவி, நிர்வாணம், சுதந்திரம் பற்றியெல்லாம் அசராமல் பேசுவேன். எதையாவது அச்சுபிச்சுவென்று சொல்லிவிட்டாலும் இறுதியில் ஓஷோ இப்படித்தான் சொல்றார் என முடிப்பேன். "இண்டலக்ட்ஸ் ஆர் காம்ளிகேடட் யு "நோ என்பேன். கூட்டம் வாயைப் பிளக்கும். எந்த மாதிரியான கேள்வியையும் ஓஷோ, ரமணர், வாத்சாயனர், கொக்கொகே சாஸ்திரம் என்பதில் போய் முடித்தால்தான் கேட்டவர்களுக்கு நிம்மதி.

 மதங்கள்- குறிப்பாய் இந்து மதம், திராவிடம், பெரியார், தமிழக அரசியலின் இன்னொரு பக்கம், சினிமா கிளுகிளுப்பு,நடிகை நியூஸ்கள் இதெல்லாம் முப்பதைத் தொடுபவர்களின் தளம். நடிகைகளைப் பற்றி பேசும்போது மட்டும் ஒரு செயற்கையான உற்சாகத்தை பேச்சில் வரவழைத்துக் கொள்வேன். அட்டு பீசான நடிகையை பேரழகி என சிலாகிப்பேன். உச்ச நட்சத்திரங்களும் இயக்குனர்களும் அவள் காலில் விழுந்து கிடந்தார்கள் என்பேன். இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார பிசினெஸ்மேன் அவளுக்குத் தங்கத்தில் ப்ரா செய்து கொண்டு போனான் என்பேன். அந்த கணத்திலேயே அந்த நடிகைக்கு ஓரிருவர் திடீர் தீவிர ரசிகர்களாகிவிடுவார்கள். அந்த நடிகை நடித்த மகா த்ராபையான படங்களின் டிவிடி க்களைத் தேடி அலைவார்கள். காவியத்தைப் பார்ப்பதுபோல் அப்படத்தைப் பார்த்துவிட்டு அடுத்தநாள் சிலாகிப்பார்கள். "உங்கள் கண் வழியே அவளைப் பார்த்தேன் அவள் பிரபஞ்சத்தின் பேரழகி" என வாரமலருக்கு கவிதை அனுப்புபவன் அடித்துவிடுவான்.

  புதிதாக குடிக்க ஆரம்பிக்கும் பயல்களுக்கு உரை கொடுப்பதுதாம் இருப்பதிலேயே சுலபம். குடியின் பெருமை பற்றிப் பேசினாலே போதுமானது. விஞ்ஞானப் பூர்வமாய் குடியின் பலன்கள், குடி உடலுக்கு செய்யும் நன்மை, குடிகாரப் பிரபலங்கள், குடித்துவிட்டு அவர்கள் செய்த கூத்து. பெண் குடிகாரர்கள், பெருங்குடிகார நடிகைகள் என தகவல்களாய் அள்ளி விட்டாலே போதும். பயல்களுக்கு போதை பன்மடங்காகி காசை ஸரக்கில் விசிறுவார்கள். பெரிய குடி என்பது சிறுபயல்களோடுதான் சாத்தியப்படும். அவர்களுக்கு நானொரு மகாபுருஷனாகத் தெரிந்த காலமும் உண்டு. இந்தக் கூட்டம் தன்னிச்சையாக அமையும். பொதுவாக மாலை எந்தக் குழு சீக்கிரம் வருகிறதோ அவர்களோடு இணைந்து கொள்வேன். என்னைப் போன்ற கலைஞர்கள், சிந்தனையாளர்கள், வாசிப்பாளர்கள் உழைப்பிற்கு எதிரானவர்களாக இருக்க வேண்டும். உழைத்தால் செக்கு மாட்டு வாழ்கைக்கு மூளை பழகிவிடும். என்னால் சுதந்திரமாக சிந்திக்க முடியாது என்பது போன்ற வாசகங்களால் இந்த கூட்டத்தைக் கட்டிப் போட்டும் வைத்திருந்தேன். புதுப்பயல்களில் ஓரிருவர் என் மொத்த செலவையுமே ஏற்றுக் கொண்டனர். உணவு, ஆடைகள், நல்ல இருப்பிடம் என எல்லாமும் கிடைத்தது. பல தடிதடியான புத்தகங்களையும் ஓரிருவர் வாங்கிக் கொண்டு வந்து கர்ம சிரத்தையோடு கொடுத்துவிட்டுப் போவார்கள். அந்த நாவல் குறித்த விமர்சனத்தை மறக்காமல் கேட்பார்கள். அதிரடியாக சொல்வேன். அதில் ஒரு பக்கத்திற்கு மேல் என்னால் வாசிக்க முடியவில்லை. எழுதினவனின் மூளை கிட்டத்தட்ட பத்தாம் நூற்றாண்டிலேயே செத்துப் போய்விட்டது. கையிருப்பை எல்லாம் போட்டு புத்தகம் வாங்கிக் கொடுத்தவன் புளங்காகிதமடைந்து இதல்லவா விமர்சனம் என்று விட்டு முழுத் திருப்தியாகப் போவான்.

  எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருந்தது. முப்பத்தைந்து வயது கும்பலில் ஒருவனால் வந்த வினை. ஒருநாள் அவன் நீங்கள் ஏன் நாவல் எழுதக் கூடாது எனக் கேட்டுவிட்டான். திக் கென்றானாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல். நான் சிந்தனையாளன் மட்டுமேதான். அதை நாவல் எனும் செயலாக்கி அதன் மூலம் கிடைக்கும் பலனை அனுபவிக்க தயாராக இல்லை என்றேன். ஒருவருக்கும் அப்பதில் உவப்பில்லாமல் போய்விட்டது. நாவல் எழுதுங்கள் என்பதை அந்தக் குழுவே சொல்ல ஆரம்பித்துவிட்டது. ஒரு கட்டத்தில் அவர்களின் நச்சரிப்புத் தாளாமல் மெல்ல முப்பத்தைந்து வயது கும்பலை கைகழுவிவிட்டு முப்பது கும்பலிலும் இருபது கும்பலிலும் மட்டும் தலைகாட்டிக் கொண்டிருந்தேன். எப்படியோ இந்த நாவல் பேச்சு மற்றவர்களுக்கும் பரவி நாவல் எழுதுங்கள் நாவல் எழுதுங்கள் என பார்க்கும் இடத்தில் எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.இவர்களின் தொல்லை தாங்க முடியாது போன ஒரு கட்டத்தில் நாவல் எழுதுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன்.

  எதை எழுதலாம் என்பது குறித்த சிந்தனைதான் இருப்பதிலேயே நெருக்கடியானது. எப்படி உட்கார்ந்து யோசித்தாலும் ஒரு மண்ணும் மூளையில் உதிக்கவில்லை. சில நாட்கள் எழுத்து குறித்த சிந்தையில் இருப்பதாகச் சொல்லி குடிக்க கூப்பிட்டவர்களை கழற்றிவிட்டேன். ஆனாலும் பக்கிகள் "நாவல் என்னாச்சு சார்?" என்பதைக் கேட்டுவிட்டுத்தான் நகர்ந்தனர். நாளையடைவில் நாவல் என்னாச்சு சார் என்ற கேள்வியின் மூலமாய் என்னை கேலிசெய்கிறார்களோ என்ற சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்தது. இந்த நாவல் என்னாச்சு என்பதை ஒரு வித நமுட்டுச் சிரிப்போடு எல்லாக் குழுவினரும் கேட்கப் பழக ஆரம்பித்த பிறகு அவமானம் தாங்காமல் சரி வருவதை எழுதுவோம் என உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். ஒரு பத்தி எழுதுவதற்குள் மூச்சு வாங்குகிறது. ஒரு பத்தியிலும் ஏராளமான எழுத்துப் பிழைகள். சின்ன ர வா? பெரிய ற வா சின்ன ன வா பெரிய ணா வா என்பது குறித்த சந்தேகமே நள்ளிரவு வரை ஓடும்.

  சரி இனி நாவலை வாயால் எழுதுவோம் என பழைய ஃபார்முக்கு வந்தேன். மாலை குடிசந்திப்புகளில் உற்சாகமாய் கலந்துகொண்டேன் உலகத்தின் எந்த மூலையிலும் எழுதப்படாத நாவலை எழுதப்போவதாக சொன்னதும் ஆர்வமானார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த எவராலும் எழுதப்படாத நாவல் தான் ஓடிக் கொண்டிருந்தது. அப்படி என்ன நாவல் என்றதற்கும் தயாராய்தான் இருந்தேன். "ஒரே நாவல் ஆனால் பல அடுக்குகள். ஒரு அடுக்கு க்ரைம். ஒரு அடுக்கு இலக்கியம். இன்னொரு அடுக்கு இதை இரண்டையும் எழுதும் நான். அதாவது எழுத்தாளர்களை எழுதும் எழுத்தாளன். எப்படி இருக்கு?" என ஆர்ப்பாட்டமாய் சிரித்தேன்.

  முப்பத்தைந்துகளிடம் "இந்த நாவல் ஒரு அடல்ட்ரி. அதாவது க்ரைம் நாவல் எழுதுபவனின் அடல்ட்ரி. ப்ளஸ் இலக்கிய எழுத்தாளினியின் அடல்ட்ரி ப்ளஸ் க்ரைம் நாவலுக்குள் வரும் ஏராளமான அடல்ட்ரி ப்ளஸ் இலக்கிய நாவலில் வரும் அடல்ட்ரி .. அடல்ட்ரி அடல்ட்ரி அடல்ட்ரி "எனச் சொல்லிவிட்டு மூச்சு வாங்கினேன்.

  முப்பதுகளிடம். "இந்த நாவல் ஒரு புதிர். அதாவது maze அதாவது லாப்ரிந்த். அதாவது ஒரு நாவலுக்குள் ஏராளமான புதிரடுக்குகள். ஒவ்வொரு அடுக்கிலேயும் ஒவ்வொரு பரவசம். புதிர்தன்மை பரவசம் என்லைட்மெண்ட். யா என்லைட்டண்டு" என்றேன்.

  இருபதுகளிடம் "இந்த நாவல் ஒரு கொண்டாட்டம் பரவசம், குடி, பெண், காமம், மேலும் குடி காமம் உடல் அவ்ளோதான் உடலுக்கு பேதம் கிடையாது. ஆணும் ஆணுமான உடல் பெண்ணும் பெண்ணுமான உடல் அல்லது க்ராஸ்ஃப்ங்க்சனல் உடல்" என்றேன்

  ஒரு மாதம் பிழைப்பு ஓடியது. அடுத்த மாதமே ஆரம்பித்துவிட்டார்கள். "எத்தன பக்கம் சார் எழுதி இருக்கீங்க. படிச்சு பாக்கலாமா?"

  "அப்படிலாம் எடுத்த உடனேயே எழுதுற முடியாதுப்பா. ஐரோப்பால ஒரு நாவல பத்து வருஷமா எழுதுவாங்க. ஏன் ஆயுள் முழுக்க ஒரே ஒரு நாவல் எழுதினவங்கலாம் இருக்காங்க. இது என் கனவு நாவல். மெதுவாத்தான் எழுதனும். தவிர அதுக்கான மனநிலை வேணாமா"? கேள்வி கேட்ட கூட்டம் சரியெனப் போய்விடும். இப்படியாக ஒரு மாதம் ஓடியது.

  அதற்கு அடுத்தது நேர்ந்தவைகளை பிறகு சொல்லும் மனநிலை இருந்தால் சொல்லுகிறேன். ஆனால் முதல் பத்தியில் சொல்லியிருப்பதுபோல இவர்கள் என்னைப் பார்த்தாலே ஓடிக் குதித்து தப்பி தலைமறைவாகிவிடுகிறார்கள் அவ்வளவுதான் சொல்ல வந்தது.

  மேலும்

Monday, November 5, 2012

அத்தியாயம் ஆறு

பரந்த நீர்வெளியின் ஒரு கரையிலிருந்து நீரின் முடிவாய் வீற்றிருக்கும் பசும் மலையைப் பார்க்கும் சந்தோஷம் வேறெதிலும் கிடைத்துவிடாதுதான். விழிப்பு வந்ததும் மனம் உடலை இழுத்துக் கொண்டு இங்கு வந்துவிட்டது. நேற்று மாலை இருள் கவிழ ஆரம்பித்திருந்த நேரத்தில் இப்பகுதியைக் கடந்தோம். பார்த்த உடனேயே பிடித்துப் போன இடம். நாளைய விடியலை இங்கிருந்துதான் துவங்க வேண்டுமென நேற்று காரில் போகும்போதே நினைத்துக் கொண்டேன். அதிகாலையில் விழித்துக் கொள்ளும் பழக்கமெனக்கு. கடந்த இருபது வருடங்களாக ஆறு மணிக்கு மேல் ஒரு நாளும் தூங்கியதாய் நினைவில்லை. பதின்மத்தின் துவக்கங்களில் மிகப் பிடித்தமான வேலையே தூங்குவதுதான். அம்மா கும்பகர்ணி எனத்தான் கூப்பிடுவார்கள். கும்பகர்ணி பெயரை ஒருமுறை வாய்விட்டு சொல்லிப்பார்த்தேன். சிரிப்பு வந்தது. என் வாழ்வின் மிகப்பிரமாதமான காலகட்டமது. பள்ளிப் படிப்பு முடித்ததும் எல்லாமே தலைகீழாய் மாறிப்போனது. மனம் அவ்விஷயங்களை நினைக்க விரும்பாமல் உதறிக் கொண்டு மலையையும் நீர்வெளியையும் பார் என்றது.

துர்கா இந்த மலைநகரத்தைத் தான் தேர்வு செய்தாள். அவள் தேர்வுகளின் மீது எனக்கு மறுபரிசீலனையே இருந்தது கிடையாது. கடந்த ஒரு வருடமாய் அவளுடைய தேர்வுகளின்படிதான் நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. துர்கா என்னுடைய சலிப்பான நிகழையே கிட்டத்தட்ட மாற்றியமைத்தாள். துர்கா... மிதமான குளிர் விரவிய அதிகாலையில் கிசுகிசுப்பாய் அவள் பெயரை உச்சரித்து சிரித்துக் கொண்டேன். அதிகாலை மேகங்கள் சோம்பலாய் நகராமல் நின்றுகொண்டிருந்தன. சலனமே இல்லாத நீர்பரப்பு. பிப்ரவரி மாதத்தின் இளந்தென்றல் காலை. அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். கரையோர உயர் மரங்கள் கிளைகள் முழுக்கப் பூக்களைச் சூடியிருந்தன. என்ன பெயர் என்றெல்லாம் தெரியவில்லை. மஞ்சள் நிறச் சிறுசிறு பூக்கள் காற்றிற்கு தூறலாய் நீரின் மீது விழுந்துகொண்டிருந்தன. துர்காவைக் கேட்டால் இந்த மரங்களின் முழு வரலாறையும் துல்லியமாக சொல்வாள். எப்போது பூக்கும் எப்படிக் காய்க்கும் என்பதையெல்லாம் அவள் சின்னஞ்சிறு கண்கள் விரிய சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்க மனம் பிரியத்தில் கசியும்.

அப்பாவிற்கு மலை நகரங்கள் பிடித்தமானவை. அவர் தம்முடைய இளம் பிராயத்தை பணத்திற்காய் பாலைவன நாடுகளில் தொலைத்திருந்தார். என்னுடைய ஐந்தாம் வகுப்பு வரை வருடத்திற்கொருமுறை நிறைய சாக்லேட்டுகளோடு வரும் இளம் அப்பாவின் பிம்பம் நன்றாய் நினைவிருக்கிறது. பாட்டி இறந்த பிறகு எங்களோடே நிரந்தரமாக வந்துவிட்டார். அப்பா மிக நிதானமானவர். வார்த்தைகளை அவ்வளவு கவனமாக, கச்சிதமாகப் பேசுவார். அம்மாவிடம் கூட அவர் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. ட்யூஷன் போகும் காலைகளில் ஸ்கூட்டரில் கூட்டிப் போய் விடும் அப்பா. வீட்டில் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக் கொள்ளும் அப்பா. கணக்கு சொல்லித் தரும் அப்பா. ரஜினி படம் கூட்டிப் போகும் அப்பா. கோடை விடுமுறையில் உல்லாசப் பயணம் கூட்டிப் போகும் அப்பா என எல்லாமும் அப்பாதான். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றதும் பொறியியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்க படிவம் வாங்கப் போன அப்பா சடலமாகத்தான் திரும்பவந்தார். சாலை விபத்து. ஸ்கூட்டரிலிருந்து தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் போய்விட்டது. இறந்த அப்பாவின் உடலைப் பார்க்கவேயில்லை. பயமாக இருந்தது. இந்த நொடி கூட வயிறு பிசைகிறது. அந்த கணத்தின் தாக்கம் இம்மி அளவு கூட குறையவில்லை. ஒருவேளை அப்பா இருந்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்குமோ?

தலையை உலுக்கிக் கொண்டேன். சதா பிரச்சினைகளில் மூழ்கித் திளைத்து தன்னை வருத்தி இன்பம் காணும் இம்மனநிலையை விட்டொழிக்கவே முடியவில்லை. எழுந்து நடக்க ஆரம்பித்தேன். மூச்சை ஆழமாக உள்ளிழுத்துக் கொண்டேன். பச்சை வாசம். விநோதமான பூக்களின் மணம். மூளை சுறுசுறுப்பானது. இருள் முழுவதுமாய் விலகி பச்சை நிறம் பிரகாசிக்க ஆரம்பித்தது. எங்கெங்கிலும் பச்சை. பசுமை. மரங்கள். பறவைகள் விழித்துக் கொண்டுவிட்டன. ஏராளமான கிளிகள் தென்பட்டன. பெரிய மரங்களின் பொந்துகளிலிருந்து ஓரிரு கிளிகள் எட்டிப்பார்த்தன. திரும்பிப்பார்த்தேன். ஆரம்பித்த இடத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதைப் போலிருந்தது. துர்கா விழித்துக் கொண்டு தேடுவாளே எனத் தோன்றியதும் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். உட்கார்ந்திருந்த பெஞ்சிற்கு வந்து சேர்ந்தேன். நாங்கள் தங்கி இருக்கும் விடுதியிலிருந்து இந்த இடம் பத்து நிமிட நடைதான். மீண்டும் உட்காராமல் விடுதிக்காய் நடக்க ஆரம்பித்தேன்.

எதிரில் துர்கா வந்து கொண்டிருந்தாள். த்ரீபைஃபோர்த் டாப்ஸ் சகிதமாக வந்து கொண்டிருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். துர்கா நல்ல கருப்பு. நல்ல உயரம். அவள் தோள் உயரம்தான் இருப்பேன். குட்டை யாக முடிவெட்டிக் கொள்வாள். அடர்த்தியான சுருள் முடி. கொஞ்சம் விட்டு வெட்டிக்கோயேன் என்றாள் ப்ச் என மறுத்துவிடுவாள். பார்த்த உடன் உற்சாகமாக கையசைத்தாள். சிரிப்பு வந்தது. வந்ததும் தோளில் கைபோட்டு அணைத்துக்கொண்டாள்.

”வெதர் செம ப்ளசண்ட் இல்ல ”

 ”ம்ம்”

”மைண்ட் ஃப்ரீ ஆகிடுச்சா”

”முழுசான்னு சொல்லிட முடியாது. ஆனா நல்லாருக்கு. தேங்க்யூ”

”ம்ம் சரி சாப்டுட்டு ஒரு குட்டி ரவுண்ட் அடிக்கலாம். பதினோரு மணிக்கு வெயில் அடிக்க ஆரம்பிச்சிடும். ஆக்சுவலா இது ஏழைகளின் ஊட்டிதான் ஸோ எப்பவும் குளிர் இருக்காது “

”அட அப்படி ஒரு பேர் இருக்கா”

”சிலர் சொல்வாங்க. தினத்தந்தில கூட அப்படித்தான் எழுதுவாங்கன்னு நினைக்கிறேன்”

விடுதிக்காய் நடக்க ஆரம்பித்தோம். துர்கா தோளில் கை போட்டுக் கொண்டேதான் வந்தாள். என் உயரம் அவளுக்கு கை போட்டுக் கொண்டு நடக்கத் தோதாய் இருக்கும். சரிவுக்கு இடப்புறம் ஏலகிரி என கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட மஞ்சள் போர்ட் ஐப் பார்த்தேன். ஒரு மஞ்சள் நிறப் பறவை போர்டின் மேல் சாவகாசமாய் அமர்ந்திருந்தது

”ஏய் அங்கபோரு போர்ட் க்கு மேச்சா ஒரு பறவை.”

”அதுதான் மாங்குயில்”

”அட மாங்குயில் ந்கிறது பறவ பேரா? நான் சினிமாப் பாட்டுன்னு இல்ல நினைச்சேன்”

”ஆமா இது மாம்பழக் கலர்ல இருக்கில்லயா அதான் அந்த பேர் தவிர சார் மாமரத்தை சுத்தியேதான் கிடப்பார்”

”அப்ப பூங்குயில்னும் ஒண்ணு இருக்கா”

”ஓ இருக்கே”

”கூவின பூங்குயில் குருகுகள் இயம்பின னு திருப்பள்ளி எழுச்சிலாம் பாடியிருக்காங்களே”

”எனக்கு ராமராஜன் பாட்டு மட்டும்தான் தெரியும் ”

சிரித்தாள்.

இந்தக் கருப்புப் பெண்கள் சிரிக்கும்போதுதான் எத்தனை வசீகரம். என் தோளைத் தாண்டி நீண்டிருந்த அவளின் விரல்களைப் பிடித்துக் கொண்டேன்.

- அத்தியாயம் ஒன்று வீணாவின் தலைப்பிடப்படாத புதிய நாவல்

”பிரமாதமான துவக்கம் வீணா. மனசு அப்படியே அந்த மலைப்பிரதேசத்துக்கு போய்டுச்சி”

கட்டிலின் ஹெட்போர்டில் தலையணை வைத்துச் சாய்ந்தபடி வீணாவின் கையெழுத்துப் பிரதியை வாசித்துக் கொண்டிருந்தேன். அவள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

”மொத்தம் ஐந்து அத்தியாயம் தாண்டா எழுத முடிஞ்சது”

”முடிச்சிட்டேன்னு சொன்ன?”

”இல்ல முடிக்க முடியல. இந்த ரெண்டு பெண்களும் என்ன ரொம்பவுமே தொந்தரவு பன்றாங்க”

”ம்ம் நாவல் எப்படிப் போகும்னு யூகிக்க முடியுது. நீ என்ன லெஸ்பியன் ஃபார்ம் குள்ள போகப் போறியா?”

”தெரியலடா ”

”வேணாம். இதுல நல்ல சென்ஸ் இருக்கு. புரட்சி, உடல்தத்துவம், புண்ணாக்குன்னு சுத்த விட்டுடாதே. பொயட்டிக்கா கொண்டுபோய் மெலோட்ராமடிக்கா முடிச்சிடு”

சிரித்தாள். ”நீ இப்படி சொல்வேன்னு தெரியும்”

”ரைட்டு விடு. ரெண்டுபேருக்கும் நடக்கும் கலவிய பத்து பக்கத்துக்கு ததும்ப ததும்ப எழுதி வை. கோடார்ட், பெலினி, பியானோடீச்சர் எல்லாத்தையும் சைட்ல பாத்துக்க. இருக்கவே இருக்கு டிண்டோ ப்ராஸ் மொத்த படத்தையும் பாத்து உடலதிகாரத்தை களையும் வழிமுறைகளை விளக்கி சுதந்திரத்தின் உச்சத்த துர்கா காளியின் வடிவமாகி தொட்டாள் னு அடிச்சிவிடு. நவீன இலக்கிய வாசகர்கள் சிலிர்த்துட்டு படிப்பாங்க”

”வேற எப்படி எழுத சொல்ற? துர்காவும் ஷங்கியும் வாழ்நாள் முழுக்க தோழிகளாக, அன்பு நிறைந்தவர்களாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்னு முடிச்சிடவா? ”

”கூட ஒரு காதல சேத்துக்க. ஒரு ஆண் உள்ளாற பூந்து துர்காவ கல்யாணம் ற பேர்ல ஏமாத்திடுறான். அவன் கூட வாழமுடியாம துர்கா மறுபடியும் ஷங்கி கிட்ட வந்து சேர்ந்துடுறா. சுபம்”

 ”கண்மணி மாத இதழ்ல பப்ளிஷ் பண்ணிடலாமா? காறித் துப்பிடுவேன். ஓடிப்போய்டு.”

”அடங்குடி. நீ என்ன பெர்ஸா எழுதி கிழிச்சிட போற? ஒண்ணு இந்த பேட்டர்ன் இல்லனா பிரெஞ்ச் பாதிப்பு பேட்டர்ன். வேற என்ன சொல்லிட முடியும் இந்த தளத்த வச்சிட்டு”

”அய்யனார், லிசன் நீ ஒரு சாகித்ய அகடாமி வின்னர் கிட்ட பேசிட்டு இருக்க. தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான அடையாளம் நானு. மைண்ட்ல வச்சிக்க”

”கண்ணு உனக்கு விருதுகொடுத்தப்ப யார் நடுவரா இருந்தாங்கன்னு எனக்கு தெரியும்”

”அசிங்கமா பேசாத உன்கூட படுத்திட்டா எல்லார்கூடவும் படுத்துருவேன்னு நினைக்கிறியா?”

”சே அப்படி சொல்லல. ஆனா சாகித்ய அகடாமி விருதுலாம் பெரிய அங்கீகாரம்னு நீ நினைச்சின்னா உன்ன விட முட்டாள் யாரும் கிடையாது. ஒண்ணுமே வேணாம் உனக்கு முன்னாடி யார்யார்லாம் இந்த விருத வாங்கி இருக்காங்கன்னு நீயே கேட்டுப் பாத்துக்க”

சிரித்துவிட்டாள் ”யெஸ். ஐ அட்மிட்”

”அவ்ளோதான் வீணா. இந்த நவீன இலக்கியம் நவீனத்துக்குப் பிறகான இலக்கியம் எல்லாமே பம்மாத்து. ”

”அப்போ பல்ப் எழுத்துதான் நிஜம்னு சொல்லவர்ரியா?”

”இல்ல பல்ப் எழுத்தலாம் எழுத்து ஸ்கேல்ல வச்சிப் பாக்க கூட தகுதி இல்லாதது”

”அப்புறம் ஏன் மாய்ஞ்சி மாய்ஞ்சி எழுதுற?”

 ”எனக்கு வேற எதுவும் தெரியாதே. இது தொழில் வீணா. சமூகம், புரட்சி, இலக்கியம், மேன்மை னு எந்த ஸோ கால்டு ஏமாத்து வேலையும் இல்லாத தொழில். ஐ எண்டர்டைன் பீபிள் தட்ஸ் ஆல். அதுக்கு மேல ஒண்ணும் கிடையாது”

”ஸப்பா போதும்டா தலவலிக்குது. நீ உன் ரூம்க்கு போ. நான் தூங்க போறேன்”

”பாவி மெட்ராஸ்ல இருந்து மழைல அடிச்சி புடிச்சி நீ கூப்டேங்கிறதுக்காக வந்திருக்கேன். கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம ரொம்ப அசால்டா கெளம்புன்ற?”

”ஓ அப்படியா சரிங்க சார் கிளம்புங்க சார் நாளைக்கு காலைல பாப்பம் சார்”

கட்டிலிருந்து எழுந்து போய் வீணாவை கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

“எப்படி இருக்க பொண்ணே”

”நல்லாருக்கேன் டா”

”சாரி கசாமுசான்னு பேசி உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டனா”

 ”நோ மேன். நீ உன் பார்வைய சொல்ற இதுல என்ன தப்பு?”

”சரி ஸரக்கு என்ன வச்சிருக்க”

”நோ சரக்கு, நான் எழுதனும். நீ கெளம்பு”

 ”இன்னிக்கு மட்டும். ப்ளீஸ் ப்ளீஸ்”

 ”பாவி மூட கெடுக்காத”

”நோ ஐ கெடுக்கபோவபையிங்க் யூ ஒன்லி”

”கருமம் போய் ட்ரஸ்ஸ மாத்திட்டு வா. ரெடி பண்ணி வைக்கிறேன்”

”தேங்க்யூ டார்லிங்”

”ஆனா மவனே குடிச்சிட்டு நான் தான் ஒலகத்தின் தலைசிறந்த எழுத்தாளினி. என்னோட ஒரு வரிய படிச்சிட்டு நாள் முழுக்க தேம்பி தேம்பி அழுதேன்னு லாம் அடிச்சி விட கூடாது. இப்ப எப்படி என்ன காய்ச்சி எடுத்தியோ அப்படியேதான் விடியுற வர பேசிட்டு இருக்கனும். ஓகேவா”

”ஓகே மா டன்”

- மேலும்

Saturday, November 3, 2012

அத்தியாயம் - ஐந்து


கோவை தாண்டியதுமே மழை பிடித்துக் கொண்டது. மலைப் பாதையில் ஏறுவதற்கு முன்பு ட்ரைவர் நின்னுப் போலாங்களா? எனக் கேட்டார். மறுப்பாய் தலையசைத்தேன். வீணா வை எவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்த்துவிடும் தவிப்பை ஒரு மணி நேரத்திற்கு முன்பு குடித்திருந்த பியர் ஏற்படுத்தி இருந்தது. மெதுவா போங்க போய்டலாம் என்றேன். வீணா வருடத்திற்கு ஒரு நாவல்தான் எழுதுகிறாள். பெரும்பாலும் மகாபலிபுரத்தில் வைத்து எழுத்தை ஆரம்பிப்பாள். இறுதி வடிவத்தை ஊட்டியில் வைத்து முடிப்பாள். சென்ற வருடம் வந்த மின்மினிகளின் பகற் கனவு நாவலை நாங்கள் இருவருமாய்த்தான் எடிட் செய்தோம். எங்களின் முரணான முதல் சந்திப்பிற்குப் பிறகு வீணா நினைவை விட்டு அகன்றே போனாள். மீண்டும் அவளை சென்ற வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் வைத்துதான் சந்தித்தேன். ஏற்கனவே வெளிவந்த என்னுடைய மூன்று அல்லது நான்கு மாத நாவல்களை தொகுத்து புத்தகங்களாக தரமான அச்சில் கெட்டி வண்ண அட்டைகளோடு சமீபமாய் பதிப்பிக்க ஆரம்பித்திருந்தோம். விச்சுவின் அடுத்த சக்சஸ்ஃபுல் புராஜக்ட். விற்பனை நன்றாக இருப்பதாக சொன்னான். சுஜாதாவிற்கு அடுத்தபடியாக புத்தகக் கண்காட்சியில் பெஸ்ட் செல்லர் நீதான்.. நம் புத்தகங்கள்தாம் .. என்ற அவன் உற்சாககுரலை என்னால் நம்பக் கூட முடியவில்லை. வாசகர்கள் உன்னை சந்திக்க விரும்புகிறார்கள் என்ற நச்சரிப்பின் காரணமாக ஒரு மாலை அரங்கிற்கு சென்றிருந்தேன். ஸ்டாலில் நல்ல கூட்டம். திரளான வாசகர்கள் சூழ்ந்து கொண்டனர். கையெழுத்தும் சங்கோஜமான பதில்களுமாய் தடுமாறிக் கொண்டிருந்தேன். கூட்டம் குறைந்ததும் அரங்கை விட்டு வெளியேறி கண்காட்சியை சுற்றிப் பார்க்கப் போனேன்.

ஒரு இலக்கியப் பதிப்பக ஸ்டாலில் வீணா சற்று உரத்த குரலில் உரையாற்றிக் கொண்டிருந்தாள். சின்னக் குழு அவளைச் சூழ்ந்து கொண்டிருந்தது. ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் ஜீன்ஸ் பேண்ட் டும் அணிந்திருந்த அவளை அம் மஞ்சள் வெளிச்சத்தில் தாண்டிப்போன போது மனதிற்குள் இனம் புரியாத ஏதோ ஒரு மாறுதல் நிகழ்ந்தது. திடீரென அவளை எனக்குப் பிடித்துப் போயிற்று. திரும்பி அவள் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலிற்குள் நுழைந்தேன். பேச்சினூடாய் என்னை அடையாளம் கண்டு கொண்டது அவள் கண்களில் தெரிந்தது. ஸ்டால் உரிமையாளர் என்னை எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு சின்ன நமுட்டுச் சிரிப்போடு தலையசைப்பில் என்னை வரவேற்றார். வீணாவை சூழ்ந்திருந்த குழுவிற்கு என்னைப் பிடிக்காதது, ஒரு ஜந்துவைப் போல் அவர்கள் பார்த்ததிலிருந்து அப்பட்டமாய் தெரிந்தது. எதையும் பொருட்படுத்தாமல் குழுவுடன் ஐய்க்கியமானேன். விர்ஜினா வுல்ஃப் என்கிற எழுத்தாளரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். தன்னுடைய கடைசி நாவலை எழுதிவிட்டு வீட்டிற்கு அருகாமையிலிருந்த நதியில் குதித்து தன்னை மாய்த்துக் கொண்டாள் என்ற வரியோடு ஒரு துளி கண்ணீரையும் சிந்தி, வீணா தன் உரையை முடித்த போது பலத்த கைத் தட்டல்கள் எழுந்தன. கைத்தட்டல் ஓய்ந்ததும் கூட்டத்தைப் பார்த்து நதியில் குதிப்பதற்கு முன்பு விர்ஜினா கூழாங்கற்களை தன் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்ட தகவலை சொன்னேன். கூட்டத்தில் ஒரு குரல்

“ ஆ! அப்படியா அது கூழாங்கல்லே தானா?” என்றதற்கு பலத்த சிரிப்பு எழுந்தது. நான் பொருட்படுத்தவில்லை. வீணாவிடம் போய் நன்றாகப் பேசினீர்கள் என்றேன்.புன்னகைத்தாள். இன்னும் சற்று அருகில் போய் டி.வி சீரியல் அல்லது சினிமாவிற்கு நீங்கள் முயற்சிக்கலாம் நடிப்பு நன்றாக வருகிறது என கிசுகிசுத்து விட்டு வெளியேறினேன்.

 அடுத்த நாள் காலை சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தூங்கி எழுந்து காபியோடு தினசரியை மேய்ந்து கொண்டிருந்தேன். ஒன்பது மணி இருக்கலாம். காலிங் பெல் அடித்தது. போய் கதவைத் திறந்ததும் குப் பென மது வாடை வீசியது. மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒல்லியான ஒரு நபரால் நிற்கக் கூட முடியவில்லை. தள்ளாடிக் கொண்டிருந்தார். சற்றே குள்ளமான இருவரும் ஸ்டடியாக இருந்தது போல் காட்டிக் கொண்டனர். யார் நீங்கலாம் எனக் கேட்டு முடிப்பதற்குள் குள்ளமாய் இருந்தவன் சற்று எக்கி என் மூக்கில் குத்தினான். எதிர்பார்த்திராத தாக்குதல் என்பதால் நிலைதடுமாறி கீழே விழுந்தேன். மூவரும் உள்ளே நுழைந்தனர். ஒல்லியாய் இருந்தவன் கெட்ட வார்த்தைகளை சத்தமாய் அள்ளி வீசினான். திட்டும்போது அவன் நாக்கு குழறவே இல்லை. மற்ற இருவரும் மல்லாந்து விழுந்து கிடந்த என்னை மார்பில் மிதித்தனர். அப்பா உள்ளே இருந்து அதிர்ச்சியாய் ஓடிவந்தார். ட்ரைவர் பெயர் சொல்லி இறைந்தார். ட்ரைவர் ஓடி வந்து மூவரையும் குண்டு கட்டாய் அள்ளி வெளியில் வீசினார்.

அப்பா போலிசிற்கு தொலைபேசினார். விச்சுவை விரைந்து வருமாறு அலைபேசியில் கத்தினார். கேட்டிற்கு வெளியில் மூவரும் சத்தமாய் வசைகளை இறைத்துக் கொண்டிருந்தனர். விச்சுவும் போலிசும் வந்து மூவரையும் அள்ளிக் கொண்டு போனார்கள். அம்மா ரத்தம் வழிந்த என் மூக்கில் ஐஸ்கட்டியை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் இரத்தம் நின்றது. எழுந்து நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அப்பா டாக்டரிடம் போகத் தயாரானதற்கு மறுப்பாய் தலையசைத்தேன். அம்மாவிடம் ஒன்றுமில்லை பயப்படாதே எனச் சொன்னேன். வந்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை. ஒல்லியாய் இருந்தவனை மட்டும் எங்கேயோ பார்த்தார் போலிருந்தது. ஏன் என்னை வந்து அடித்தார்கள்? என்பது புரியவில்லை. சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு போலிஸ் ஸ்டேசன் வரை போய்வருவதாய் சொல்லிவிட்டு கிளம்பினேன். அடுத்த தெருமுனையில்தான் போலிஸ் ஸ்டேசன். ட்ரைவருக்கும் வந்தவர்கள் யார் எனத் தெரியவில்லை

ஸ்டேசனில் விச்சு கம்ப்ளைண்ட் எழுதிக் கொண்டிருந்தான். ஒரு கான்ஸ்டபிள் மூவரையும் நையப் புடைத்துக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. திடீரென பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே கவிதையை ஒரு குரல் சப்தமாய் மந்திரம் போல் உச்சரிக்கத் துவங்கியது. எனக்கு குழப்பமாய் போயிற்று, பின் அறைக்குப் போனேன். கான்ஸ்டபிளடம் அடிப்பதை நிறுத்த சொன்னேன். மூவரையும் பார்த்து

“யார் நீங்கலாம் என்ன வந்து ஏன் அடிச்சீங்க?” என்றேன்

“என்னது நாங்க யாரா?” ஒல்லிக் குரல் அதிர்ச்சியாய் கேட்டது நான் குழப்பமாய் பார்த்தேன் ஒல்லியாய் இருந்தவன் பேச ஆரம்பித்தான்

 “தமிழ் எழுத்து சூழல் எவ்வளவு அயோக்கியத்தனமா இருக்குதுங்கிறதுக்கு இந்தக் கேள்வி ஒரு சான்று. இருந்தாலும் சொல்றேன். பாரதியாருக்குப் பிறகு தமிழ்ல கவிதை எழுதுறது நான் மட்டும்தான். என்ன உனக்கு தெரியாமப் போனதில ஆச்சரியம் இல்ல…”

எனக்கு உடனே அவன் பெயர் நினைவிற்கு வந்தது. அதீதன். சிறுபத்திரிக்கைக் கவிஞன். மற்ற இருவரையும் பார்த்தேன். நான் தான் காட்டுச்சித்தன் என்றான் ஒருவன். இன்னொருவன் மித்ராங்கி என்றான். மூவரின் எழுத்தையுமே படித்திருப்பது நினைவிற்கு வந்தது. மீண்டும், வெகு நிதானமாக

“என்னை ஏன் அடிச்சீங்க?” என்றேன்

“நீ வீணாவ சினிமா நடிக்க போவ சொன்னியாமே.. பாடு.. அவ்ளோ ஏத்தமாய்டுச்சா?” என்றான் காட்டுச்சித்தன்.

நான் மெதுவாய் “இல்ல சீரியல் தான் முதல்ல ட்ரை பண்ணிப் பார்க்க சொன்னேன்” என்றேன்

 மூவருமே ஒரே நேரத்தில் டாய் எனக் கத்தினார்கள். சட்டை செய்யாது எஸ்.ஐ நாற்காலிக்குப் போனேன். விச்சுவிற்கு மிக நெருக்கமான நண்பர் அவர்.

“இந்த மூணு பேரும் அம்புகள்தான் எய்தது எழுத்தாளர் வீணா” என்றேன். விச்சு நிமிர்ந்து பார்த்தான். அப்ப வீணா பேரையும் கம்ப்ளைண்ட்ல சேர்த்துடுறேன் என்றான். நான் எதுவும் பேசவில்லை. கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு வா என சொல்லிவிட்டு, எஸ்.ஐ தொலைபேசியில் ரைட்டர் வீணாங்களா? நீங்க ஸ்டேசன் வரனுமே என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டே வெளியில் போனேன். வீணாவைக் கொஞ்சம் அலைய விட்டுப் பார்க்கும் எண்ணம் தோன்றியது ட்ரைவரை கூப்பிட்டு வண்டியை எடுக்கச் சொன்னேன். முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு வீட்டிற்குத் திருப்பச் சொன்னேன். குளித்துவிட்டு சாப்பிடும்போது அலைபேசி அலறியது.

 “ரைட்டர் அய்யனார் “

“ஆமாங்க”

“வீணா பேசுறேன் “

அமைதியாக இருந்தேன்

“தயவு செய்ஞ்சி நான் சொல்றத நம்புங்க.. நடந்ததுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது”

 “ம்ம்”

“நீங்க நம்பலன்னு தெரியுது நான் உங்க வீட்டுக்கு வரேன்”

“இல்லங்க வீட்ல நிலைமை சரியில்ல. அம்மா பயந்துட்டாங்க. இன்னொரு நாள் வாங்க”

“அப்போ நீங்க என்ன நம்பனும். சத்தியமா அந்த மூணு பேரும் ஏன் வந்து உங்கள அடிச்சாங்கன்னு எனக்கு தெரியாது. சொல்லப்போன அதீதன தவிர்த்து மத்த ரெண்டு பேர்கிட்டயும் பேசினது கூட கிடையாது”

“அப்போ நான் உங்கள சினிமாவுக்கு நடிக்க போகச் சொன்னது அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?”

“நீங்க என் காதுகிட்ட பேசினத அதீதன் பாத்துட்டு வந்து என்கிட்ட கேட்டான். அப்படி என்ன சொன்னார்னு”

“நானும் நீங்க சொன்னத அவன் கிட்ட சொன்னேன். ஆனா நிச்சயமா அது இப்படி வெடிக்கும்னு எனக்கு தெரியாது”

அமைதியாக இருந்தேன்

“நடந்த தவறுக்கு ஏதோ ஒரு வகைல நானும் காரணமாகிட்டேன். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன்”

“எனக்கு கோபம் எதுவும் இல்லைங்க. அவங்க பண்ண தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க”

“சரி அய்யனார் இத சொல்லனும்னுதான் போன் பண்ணேன். உங்க கம்ப்ளைண்ட நான் என் வக்கீல் மூலமா பாத்துக்குறேன்” எனச் சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் துண்டித்தாள்.

உடனே விச்சுவிற்கு போன் செய்து கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கச் சொன்னேன். எஸ்.ஐ க்கு இம்மாதிரி எழுத்தாளர்கள் சண்டை எப்படி முடியும் என்பதில் அனுபவம் இருந்திருக்கும்போல எப்.ஐ.ஆர் எதுவும் போடவில்லை. வெறுமனே நால்வருக்கும் பொது வார்னிங் கொடுத்து அனுப்பிவிட்டார். அடுத்த நாள் காலை மூக்கில் பெரிய சைஸ் பிளாஸ்திரி ஒன்றை ஒட்டிக் கொண்டு வீணா வீட்டிற்குப் போய் காலிங் பெல் அடித்தேன். வீணாதான் திறந்தாள். என் மூக்குப் பிளாஸ்திரியைப் பார்த்து பதபதைத்தாள்.அவளின் இரவு உடை உடல் என்னையும் லேசாய் பதபதைக்க வைத்தது. இருக்கையில் அமர்ந்தேன். போலிஸ் ஸ்டேசனுக்கு அவளை வரவழைத்ததிற்காக மன்னிப்பு கேட்டேன். பப்ளிஷர் விச்சு உணர்ச்சிவயப்பட்டு செய்தது அது என புளுகினேன்.

“அவர் உடனே கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிட்டாரே இல்லனா எப்.ஐ.ஆர் அது இதுன்னு அலைய வேண்டி வந்திருக்கும்”

“ஆரம்பத்திலிருந்தே நமக்குள்ள எல்லாமே தப்பா வே நடக்குது “

“ஆனா ஒண்ண கவனிச்சிங்களா இது எதுக்குமே நாம காரணம் இல்ல மத்தவங்கதான் காரணமா இருக்காங்க “

புன்னகைத்தேன்.

அடுத்தடுத்த தினங்களில் நெருக்கமாகி விட்டோம். தினம் ஒருமுறையாவது பேசிக் கொண்டோம். எழுத்து, இலக்கிய கிசுகிசுக்கள், சினிமா, வாசிப்பு என நாங்கள் பேசிக் கொள்ள பல விஷயங்கள் இருந்தன. பல புள்ளிகளில் இருவரின் ரசனைகளுமே ஒத்திருந்ததன. வீணா மீது ஒரு பிடித்தம் வந்துவிட்டிருந்தது. ஆரம்பத்தில் என்னை அவளின் பக்கம் ஈர்த்தது உடலாக இருந்தாலும் மெல்ல அவளின் குணமும் எனக்குப் பிடித்துப் போயிற்று. வீணாவிற்கு என்னை விட பத்து வயது அதிகம். திருமணமாகி டைவர்ஸும் ஆகிவிட்டது. ஓரளவிற்கு வசதியான குடும்பம். அப்பா அம்மா அண்ணன் தம்பிகள் எல்லோரும் இருந்தாலும் தனியாகத்தான் வசிக்கிறாள். வீணாவுடைய முதல் நாவல் நெருஞ்சி முள். இலக்கிய உலகில் பல அதிர்வுகளை உண்டாக்கியது. அவளுக்கான தனி அடையாளத்தையும் தந்திருந்தது. வீணாவின் இரண்டாவது நாவலான அயல்மகரந்தச் சேர்க்கை க்கு சாகித்ய அகடாமி கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் எங்களின் அறிமுகம் நிகழ்ந்தது.

 ஒரு நாள் மாலை ஏழு மணிக்கு வீணாவிடம் இருந்து அழைப்பு வந்தது. லேசாய் குழறலாய் பேசினாள்

“எங்க இருக்க அய்யனார்?”

“வீட்லதாங்க”

“ரொம்ப பிசியா நீ”

“இல்லயே சொல்லுங்க”

“கொஞ்சம் மகாபலிபுரம் வரமுடியுமா”

“ஓ வரலாமே அங்க என்ன பன்றீங்க”

“என்னோட அடுத்த நாவல் தலைல வந்து உட்கார்ந்திருச்சி. ரொம்ப சிரமப்படுறேன். யார்கிட்டயாவது பேசியே ஆகனும். நீ வந்தா நல்லாருக்கும்”

அடுத்த இரண்டு மணிநேரத்தில் கடற்கரையை ஒட்டிய அவள் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அறை எண்ணை போனில் கேட்டுத் தட்டினேன். கதவைத் திறந்த வீணா கிட்டத்தட்ட தளும்பிக் கொண்டிருந்தாள். முன்பெப்போதும் பார்த்திராத அவளின் அன்றைய போதையூறிய புன்னகையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

 “சார் வந்துட்டோம்”

ஹோட்டலின் நியான் பெயர் மழையிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது இருள் அடர்ந்திருந்தது. மழை சற்று வலுத்திருந்தது. காரை விட்டிறங்கினேன். ட்ரைவர் கோவையில் உறவினர் வீட்டுக்குப் போவதாய் சொல்லியிருந்தார். மழையாக இருக்கவே காலையில் போகிறீர்களா என்றேன் இல்ல சார் கிளம்புறேன் ஏதாவது மாற்றம் இருந்தா போன் பண்ணுங்க எனச் சொல்லிவிட்டு வண்டியை நகர்த்தினார்.. மூச்சை உள்ளிழுத்து விட்டுக் கொண்டேன். வீணாவின் தளும்பும் உடலை நினைத்தபடியே ரிசப்ஷன் கவுண்டருக்காய் போனேன்.

---மேலும்

அத்தியாயம் – நான்கு


ஸ்வப்னா தன் ஸ்லீவ்லெஸ் டாப்ஸை பின் புறம் இழுத்துப் பிடித்து குத்திட்டு நிற்பதை கண்ணாடியில் நன்கு தரிசித்தாள். தலையை இடப்புறமும் வலப்புறமும் அசைத்துப் பார்த்து காதில் மின்னும் வைரத்தை திருப்தியுடன் பார்த்துக் கொண்டாள். பின்புற மேடுகளை தொட்டுப் பார்த்து உள்ளாடை இல்லையென்பதை இன்னொருமுறை உறுதிசெய்துகொண்டாள். ராகேஷிற்கு உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சன்னமான வெள்ளை டாப்ஸ் மட்டும்தான் அணிந்திருக்க வேண்டும். தண்ணீர் கட்டிலின் மேல் கிடந்த டேவிடாஃப் சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்துக் கொண்டு படுக்கையறையை விட்டு வெளியேறினாள். ஹாலில் அமர்ந்து கொண்டு 40 இஞ்ச் எல்சிடி திரையை உயிர்ப்பித்தாள். சன் மியூசிக்கில் வைத்துவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டாள். காலிங் பெல் அடித்தது. எழுந்து போய் குமிழ் வழியாய் பார்த்தாள். பின்பு ஒரு புன்னகையை உதட்டில் பொருத்திக் கொண்டு கதவைத் திறந்தாள். 

ராகேஷ்! 

சரியாய் ஐந்தடி ஏழு அங்குலம். கோதுமைக்கும் சற்று கூடுதலான நிறம். வெள்ளை ட்ராக் சூட்டிலிருந்தான். ஆசையாய் அவனை டார்லிங் எனக் கட்டிக் கொண்ட ஸ்வப்னாவை லேசாய் விலக்கினான். 

"வியர்வை யா இருக்கு.. சரி சொல்லு எதுக்கு அர்ஜெண்டா வர சொன்ன?"

" உங்கள நாலு நாளா பாக்காம ஏங்கிட்டேன் ராகேஷ். இன்னிக்கும் பாக்கலனா செத்துடுவேன்னு தோணுச்சி அதான் அர்ஜெண்டா வர சொன்னேன்"

முகத்தைப் பாவமாகவும் கண்களை கிறக்கமாகவும் வைத்துக் கொண்டாள். 

ராகேஷ் நிமிர்ந்து அவளைப் பார்த்து சொன்னான் 

”ஆனா நான் உன்னப் பார்த்தேன்” 

திகைத்த ஸ்வப்னா ”எங்க” எனக் குழம்பிக் கேட்டாள் 

“நேத்து மதியம் 3 மணிக்கு லீ மெரிடியன் ஓட்டல் ரூம் நம்பர் நானூத்து முப்பதில” 

ஸ்வப்னா வெளிறினாள் 

“இல்ல வந்து வந்து” தடுமாறினாள் 

“உன் கூட படுத்தவன் என் அடுத்த படத்தோட புரடியூசர். மறைவா கேமரா வேற வச்சி உன்ன இஞ்ச் இஞ்சா படம் புடிச்சிருக்கான் காமிக்கவா?”

 ஸ்வப்னாவிற்கு குப் பென வியர்த்தது லேசாய் தலை சுற்றுவது போலிருந்தது. 

ராகேஷ் டேவிடாஃப் சிகரெட் பாக்கெட்டை தேடி எடுத்தான். உள்ளே இருக்கும் சிகரெட்டை எண்ணிப் பார்த்தான். குறைந்திருந்த ஒரு சிகரெட் துண்டை ஆஷ்ட்ரோவோடு எடுத்துக் கொண்டான். கையோடு கொண்டுவந்திருந்த பிளாஸ்டிக் பையில் சிகரெட் பாக்கெட்டையும், ஆஸ்ட்ரேவையும் திணித்தான். பின்பு ஸ்வப்னாவை திரும்பிக் கூட பார்க்காமல் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான் அவள் தலைகுப்புற கீழேவிழும் சப்தத்தைக் கேட்க ஒரு நிமிடம் கதவருகில் நின்றான் சப்தம் கேட்டது படிகளில் இறங்க ஆரம்பித்தான். 

- பாய்சன் கனவுகள் பக்கம் முப்பத்தி ஆறு மற்றும் முப்பத்தி ஏழு 

கழிவறையில் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடினேன். இவளுக்கு சிகரெட் பழக்கம் இருக்காதே. பேசாமல் பாலில் விஷம் கலந்து விடலாமா? வேண்டாம். யாராவது சந்தேகப்பட்டு போஸ்ட் மார்டம் அது இதுவென்று போனால் மாட்டிக் கொள்வோம். தேனிலவிற்கு கொடைக்கானல் போய் வாராய் நீ வாராய் ஸ்டைலில் மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு விடலாமா? காலை எழுந்ததிலிருந்தே இதே சிந்தனைகள் உழன்று கொண்டே கிடந்தன. தலையை உதறியபடி அலுப்பு தீர குளித்தேன். குளித்து முடித்ததும் வழக்கம் போல் துண்டைத் தேடினேன். பாத்ரூம் கதவை லேசாய் திறந்து அம்மா துண்டு எனக் கத்தினேன். சில நொடிகளில் இவள் துண்டோடு முன் வந்து நின்றாள். காலையில் எழுந்த போது அருகில் இல்லை. எனக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. படுக்கையறை பாத்ரூமில் குளித்திருக்க வேண்டும். ஈர துவர்த்தை கூந்தலுக்குச் சுற்றியிருந்தாள். லேசாய் மஞ்சள் பூசிய வட்ட முகத்தில் பெரிய குங்குமப் பொட்டு. நீல நிறத்தில் மெல்லிய காட்டன் சேலையை உடுத்தியிருந்தாள். ஜாக்கெட்டில் அங்கங்கு ஈரம் பளபளத்தது. தலையை லேசாய் குனிந்துகொண்டு மென் புன்னகையோடு துண்டை எனக்காய் நீட்டினாள். எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டு கதவைச் சாத்தினேன். ஈரக் கண்ணாடியில் என்னையே ஒரு முறை ஆழமாய் பார்த்துக் கொண்டு மெல்ல முணுமுணுத்தேன்.

”இவளையா கொல்லப் போகிறோம்?”

- மேலும்

Friday, November 2, 2012

அத்தியாயம் – மூன்று

“நீ என்னிக்கு வர?”

 “நாளைக்கு நைட் அங்க இருப்பன்”

 “ஹோட்டல் போன் நம்பர் மெசேஜ் பன்றேன். கால் பண்ணி ரூம் புக் பண்ணிடு”

 “என்னது தனி ரூமா? அப்புறம் நான் என்ன டேஷ்க்கு அங்க வரனும்?”

 “ஏய் சும்மா உன் பேர்ல புக் பண்ணு. நான் இங்க ஒரு மாசமா தங்கி இருக்கறதால எல்லாரையும் தெரியும். நீ வந்து என் கூட தங்கினா தப்பா போய்டும். நீ அந்த ரூம்ல திங்க்ஸ் லாம் போட்டுட்டு யார் கண்லயும் படாம என் ரூம் க்கு வந்திடு.” 

“சரி. ஆனா ஒரு மாசமாவா ஹோட்டல்ல இருக்க?”

 “ஆமா டா இதோ இதோ ன்னு நாவல் இழுத்துட்டே போகுது. இந்த வாரத்துல முடிஞ்சிடும். எப்படி வந்திருக்குன்னு நீ வந்து படிச்சிட்டு சொல்லு”

 “நாவல் படிக்கறதுக்கா என்ன கூப்டுற?”

 “பின்ன வேற எதுக்காம்?”

 “உன்னப் படிக்க இல்லயா?”

 “கருமம் கேட்க சகிக்கல. ஏண்டா, நீ எழுதுற குப்ப நாவல் மாதிரியேதான் பேசுவியா?

 “எல்லாம் என் தலையெழுத்துடி”

 “கோச்சுக்காதடா. என்னதான் இருந்தாலும் நீ க்ரைம் எழுத்தாளன் தானே”

 “நீ பெரிய இலக்கிய எழுத்தாளினியாச்சே ஏன் என்னப் போய் உன் நாவல படிக்க கூப்டுற?”

 “நீ நல்லாப் படிப்பேன்னுதாண்டா”

 “கொடும எனக்கு டபுள் மீனிங்காவாவே அர்த்தமாகுது”

 “நான் டபுள் மீனிங்க் லதான பேசினேன்”

 “பாவி இரு வந்து வச்சிக்குறேன்”

 “வா வா சீக்கிரம் வா”

 “காலைலயே சரக்காடி கெறங்குற”

 “இல்லடா நீ வா நேர்ல பேசலாம்” 

கைப் பேசியைத் துண்டித்தேன். வீணா. சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர். என்னைப் போன்ற பல்ப் எழுத்தாளர்களை மூர்க்கமாய் மறுக்கும் இலக்கியவாதி. சமூகத்தின் அத்தனைப் பிரச்சினைக்கும் மூல காரணம் என்னைப் போன்றவர்களின் எழுத்துகள்தாம் என நம்பும் தூய இருதயம் கொண்டவள். சென்ற வருட இறுதியில் அவளுடைய பேட்டி ஒன்று ஆனந்த விகடனில் வெளிவந்திருந்தது. கேள்வி கேட்டவர் சம்பந்தமே இல்லாமல், என் எழுத்தைப் பற்றி அபிப்பிராயம் கேட்டிருந்தார். வீணா என்னுடைய ஒரே ஒரு நாவலை நான்கு பக்கங்கள் மட்டும் படித்ததாகவும் அதற்கு மேல் படிக்க முடியாத அளவிற்கு அந்நாவல் குப்பை எனவும், சாக்கடை எழுத்து எனவுமாய் பதில் சொல்லி இருந்தார். நான் இதைப் பொருட்படுத்தவில்லை. சாகித்ய விருது வாங்கியவர் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என என் மாத இதழில் நக்கலடித்துவிட்டுக் கடந்து போய்விட்டேன். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் என் அலுவலக விலாசத்திற்கு மலைக்க வைக்கும் எண்ணிக்கையில் கடிதங்களாய் வந்து குவிந்தன. எல்லாக் கடிதங்களுமே வீணாவை கண்டபடி வசைந்தும் எனக்கு ஆறுதல் சொல்லியுமாய் எழுதப்பட்டிருப்பதாக உதவியாளர் சொன்னார். எனக்குத் திடீரென இக்கடிதங்களோடு வீணாவைப் போய் பார்த்தால் என்ன? எனத் தோன்றியது. உதவியாளரை அத்தனை கடிதங்களையும் ஒரு பெரிய சாக்குப் பையில் போட்டுக் கட்டி காரில் வைக்கச் சொன்னேன். விச்சுவிடம் அவளின் முகவரியைத் தேடிப் பிடிக்கச் சொன்னேன். கே கே நகரில்தான் அவள் வீடு. அடுத்த அரை மணிநேரத்திற்குள் அவள் வீட்டின் முன்னால் போய் நின்று காலிங் பெல் அடித்தேன்.

பதின்மங்களைக் கடந்திராத ஒரு பெண் கதவைத் திறந்து யார் வேணும்? எனக் கேட்டாள். வீணாவைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னேன். ஹாலில் அமரச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள். ஹாலில் ஏராளமான புத்தகங்களோடு மிகப் பெரிய புத்தக அலமாரி ஒன்று கம்பீரமாய் நின்றிருந்தது. நடுத்தர வயதில் ஒரு பெண் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள்தான் வீணாவாக இருக்கக் கூடும். ஐந்து நிமிடத்தில் நைட்டி சகிதமாய் முகத்தை துண்டால் துடைத்தபடி வீணா ஹாலிற்கு வந்தாள். யாருங்க எனக் கேட்டவளை நிமிர்ந்து பார்த்தேன். சந்தன நிற வீணா அப்போதுதான் தூங்கி எழுந்தாள் போல, அவளின் மிகப் பெரிய கண்கள் பளிச்சென மின்னின. எழுந்து நின்று

 “நாந்தான் நீங்க சொன்ன சாக்கடை எழுத்துக்கு சொந்தமான அய்யனார்”

இரண்டு நொடி கண்களை இமைக்க மறந்து, சற்றுத் திகைத்து பின் சகஜமாகி “அட வாங்க வாங்க உட்காருங்க என்றபடியே பின்புறமாய் கழுத்தை திருப்பி மாலா, காபி கொண்டா” என்றுவிட்டு சொல்லுங்க என்றாள். எனக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகளே வரவில்லை. நொடிக்கொரு பாவணை காட்டும் அவளின் முகத்தையும் இரவு உடையில் தளும்பிய உடலின் கச்சிதத்தையும் பார்த்தும் பார்க்காமலிருக்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தேன். அவளாகவே தொடர்ந்தாள்.

“நான் எதிர்பாத்தத விட ரொம்ப யங் ஆ இருக்கீங்க நானூறு நாவல் எழுதிட்டீங்களாமே க்ரேட்”

“நானூறு குப்பை”

மெதுவாக சிரித்தாள்.

“சாரி. நான் அப்படி சொல்லி இருக்க கூடாதுதான். பேட்டி முடிஞ்சதுமே நான் சொன்னது தப்புன்னு புரிஞ்சி சொன்னத எடிட் பண்ண சொன்னேன். வேணுன்னே போட்டிருக்காங்க “

“ம்ம் அவங்களோடதும் விக்கனுமே “

 “காபி குடிங்க “

குடித்துவிட்டு எழுந்தேன்.

“சரி வரேங்க”

“என்ன விஷயமா வந்தீங்கன்னு தெரிஞ்சிக்கலமா?”

 “விகடன் பேட்டிய கேள்விப்பட்டு சும்மா உங்கள பாக்க வந்தேன் அவ்ளோதான் வரேன்”

நான் சொன்னதை அவள் நம்பவில்லை. என் கண்களை ஆழமாய் பார்த்து பரவால்ல சொல்லுங்க என்றாள் எதுவும் பேசாமல் எழுந்து வெளியேறி கேட்டைத் திறந்து கொண்டு வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த காரைத் திறந்து பின் சீட்டில் கிடந்த மூட்டையை வெளியே இழுத்தேன். பின்னாலேயே வந்தவள் கேட்டின் மேல் கையூன்றி

“என்ன மூட்டை? “

வெளியில் நின்றபடி ஒரு கை பிடிங்க என்றேன் மாலா எனக் குரல் கொடுத்தாள் உள்ளேயிருந்து வந்த மாலா மூட்டையின் இன்னொரு பக்கத்தைப் பிடித்தாள். இருவருமாய் இழுத்து வந்து கேட்டினுள் போட்டோம் என்னங்க இதெல்லாம் எனப் புதிராய் கேட்டவளுக்கு மூட்டையின் முடிச்சை அவிழ்த்தேன்.

தபால் உறைகள், இன்லெண்ட் லெட்டர்கள், போஸ்ட் கார்டுகள் என குவியலாய் தரையில் வந்து விழுந்தன.

“எனக்கு வந்த வாசகர் கடிதங்கள்.”

 “சரி இத ஏன் என் வீட்டுக்கு எடுத்து வந்தீங்க?”

 “இந்த எல்லா லெட்டருமே உங்களத் திட்டித்தான் வந்திருக்கு நியாயப்படி உங்ககிட்டதானே கொடுக்கனும்”

என்றபடியே கேட்டை சாத்திக் கொண்டு வெளியேறினேன். வீணா மலைத்துப் போய் நின்றதை காரில் அமர்ந்து பார்த்தபடியே வண்டியைக் கிளப்பினேன் -

-- மேலும்

Thursday, November 1, 2012

அத்தியாயம் இரண்டு.


“இன்னிக்கு காலைல முகூர்த்த நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி ஓடிப் போகலாம்னு இருந்தேன்”

அறையின் நீல மங்கல் வெளிச்சத்தில் அவள் முகம் இறுகியது லேசாகத் தெரிந்தது.

நான் அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் கேட்டேன்

 “ஏன் இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பமில்லையா?”

மல்லிகைப்பூவின் அடர் வாசமும் புதுத் துணிகளின் நறுமணமும்அந்தக் குறுகிய அறையை நிறைத்திருந்தன. அடைத்தபடி போடப்பட்டிருந்த கட்டிலின் ஒரு முனையில் நானும் மறுமுனையில் இன்று காலை மனைவியான அவளும் அமர்ந்திருந்தோம்.

“நான் இன்னொருத்தர காதலிச்சேன் “  தலை நிமிராமல் இறுகிய அதே குரலில் சொன்னாள்.

எனக்கு வயிற்றில் அமிலம் சுரந்தது.

“பெண் பார்க்க வந்தப்பவே சொல்லி இருக்கலாமே? பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு ஆயிரம் முற கேட்டனே? நீயும் பல்ல பல்ல காமிச்சியே”

என் குரல் ஆற்றாமையால் உயர்ந்திருந்தது

“சொல்லமுடியாத சூழ்நிலை”

 ஐந்து நிமிடம் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மின் விசிறியின் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அமைதியை உடைத்தேன்.

 “சரி ஏன் காலைல ஓடிப்போகல? “

“அந்த கடைசி நிமிஷ தைரியம் எனக்கு இல்லாமப் போய்டுச்சி... தவிர நேத்தில இருந்து கேட்டுட்டே இருந்த உங்க சந்தோஷமான சிரிப்பு.., கல்யாணத்துக்கு வந்திருந்த வி.ஐபி ங்க.. , உங்களுக்கு இருக்க பேர்..., கூடியிருக்க சொந்தக்காரங்க முகங்கள் எல்லாம் சேர்ந்து என்னப் போக விடாம செய்ஞ்சிருச்சி... எப்ப உங்களுக்கு மனைவியானனோ அந்த நொடில இருந்து உங்ககிட்ட உண்மையா இருக்கனும்..., எதையும் மறைக்க வேணாம்னு தோனுச்சி அதான் சொன்னேன்..“

கொஞ்சம் இலேசானதைப் போல் உணர்ந்தேன். இவள் தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போயிருந்தாள் என்னவாகி இருக்கும்? யோசிக்கவே பயமாக இருந்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டு,

“இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா நான் நினைக்கல.. காதலிக்கிறது ஒண்ணும் பெரிய கொலகுத்தம்லாம் கிடையாதே.. சந்தர்ப்பமும் சூழலும் சரியா அமைஞ்சா காதல்.., கல்யாணத்துல முடியும் இல்லனா இல்ல அவ்ளோதான். இதுல பெரிசா வருத்தப்பட எதுவும் கிடையாது”

நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

பார்வையைத் தாழ்த்திக் கொண்டேன். மீண்டும் மெளனம் எங்களைச் சூழ்ந்தது.

“எனக்கொரு சிகரெட் பிடிக்கனும் போல இருக்கு போய்ட்டு வந்திடுறேன்”

எனச் சொல்லியபடியே எழுந்து கதவைத் திறந்தேன். அறிமுகமில்லாத வீடு. ஹாலில் நிறைய பேர் படுத்திருந்தனர். வெளியில் போவதா வேணாமா என யோசனையாக இருந்தது. தயங்கியபடி கதவைப் பிடித்துக் கொண்டு நின்றேன். பின்னால் வெகு அருகில் வந்து

“ மாடிக்குப் போலாம் வாங்க” என்றாள்

இருவரும் அதிக சப்தம் எழுப்பாமல் அறையை விட்டு வெளியேறி பின்வாசல் கதவைத் திறந்து கொண்டு பக்கவாட்டில் இருந்த மாடிப்படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினோம். சற்று விஸ்தாரமான மாடிதான். அடுத்தடுத்த வீடுகள் கிடையாது. சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை ஆழமாய் உள்ளிழுத்தேன். பக்க வாட்டு கட்டைச் சுவரில் சாய்ந்தபடி கைகளைக் குறுக்கில் கட்டிக் கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு ஸ்மெல் பிடிக்கலன்னா கீழ போ நான் வந்திடுறேன்”

புன்னகைத்து “பரவால்ல இருக்கன்” என்றாள்

“ரொம்ப வித்தியாசமான முதலிரவில்ல “என சிரித்தேன் உதட்டைப் பிதுக்கினாள்

“என்னோட கதைகள் ல நிறைய ட்விஸ்ட் வரும். ஆனா முதலிரவுல மட்டும் ட்விஸ்ட் வச்சதே இல்ல. பாரேன் என்னோட முதலிரவுல எவ்ளோ ட்விஸ்ட்னு”

 குரலில் இருந்தது கேலியா வருத்தமா என்பதைப் பிரித்தரிய முடியவில்லை. பதிலுக்கு அவளிடமிருந்து என்ன உணர்ச்சிகள் வெளிப்பட்டன என்பதையும் சன்னமான நிலவொளியில் பார்க்கமுடியவில்லை.

 நானொரு க்ரைம் கதை எழுத்தாளன். இதுவரை நானூறு துப்பறியும் நாவல்களை எழுதியிருக்கிறேன். என்னுடைய முதல் க்ரைம் கதையை ப்ளஸ் டூ படிக்கும்போது எழுதி முடித்தேன். அச்சில் வந்தது என்னவோ டிகிரி முடித்து வேலைக்குப் போன பின்புதான். ஆனால் முதல் கதை அச்சிற்கு வரும் முன்பே கிட்டத்தட்ட நாற்பது கதைகளை எழுதி முடித்திருந்தேன். என் நண்பன் விச்சுதான் என் கதைகளை படித்துவிட்டு கைக் காசைப் போட்டு மாத நாவலாகப் பிரசுரித்தான். முதல் நாவலான ‘பெளர்ணமி இரவில்’ பதிப்பித்த நூறு காபிகளும் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தன. அந்த பெயரையே மாத நாவலுக்கு தலைப்பாக வைத்துக் கொண்டோம். பெளர்ணமி இரவில் இதழ் மாதம் பத்தாயிரம் காபிகள் வரை விற்கிறது. இருபத்தைந்து வயதில் வீடு, கார் என செட்டிலாகிவிட்டேன். சொந்த ஜாதியிலேயே பெண் தேடி, அதிக சிக்கலில்லாத குடும்பமாய் தேடிப் பிடித்து, ஜாதகப் பொருத்தத்துடன் சந்தோஷமாய் இவளை மணந்து கொண்டேன். சொல்லப்போனால் பத்து நிமிடங்களுக்கு முன்பு வரை சொந்த வாழ்வில் திருப்பங்களே இல்லாமல் இருந்தது.

புகைத்து முடிந்ததும் கீழிறிங்கினோம். இரவு விளக்கை அணைத்து விடச் சொன்னாள். கட்டிலில் படுத்துக் கொண்டோம். அடுத்த அரை மணிநேரத்தில் மூர்க்கமாய் கலவி கொண்டோம். எனக்கு முதன் முறை கிடையாது. அவளுக்கும் முதல் முறையாய் இருக்காது என தீர்க்கமாய் நம்பினேன். அந்த நம்பிக்கை மெல்ல அருவெருப்பாய் மாறத் துவங்கியது. எழுந்து உட்கார்ந்தேன். அவள் தூங்கிவிட்டிருந்தாள். கட்டிலை விட்டிறங்கி சன்னலுக்காய் போய் ஒரு கதவை மட்டும் திறந்து கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். அறையில் நிலவெளிச்சம் லேசாய் விழுந்தது. கட்டிலுக்காய் திரும்பி, உடை கலைந்து, கால்களகற்றிக் கிடந்தவளைப் பார்த்தேன். இதுவரை நான் எழுதியதிலேயே எளிமையான கொலை எந்த நாவலில் வருகிறது? என்பதைக் குறித்து யோசிக்கத் தொடங்கினேன்.

- மேலும்

Wednesday, October 24, 2012

Pulp எழுத்தாளரின் இலக்கிய காதலும் இலக்கிய எழுத்தாளரின் Pulp காதலும்

1.

தலைப்பேதான். இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் குறுநாவல். இடையில் ஏகப்பட்ட தடங்கல். ஒரே மனிதன் பல்வேறு சுமைகளை சுமக்க வேண்டியிருப்பதன் துர்பலன் தாமதம்தான். அதை விடுங்கள். பிரச்சினைக்கு வருகிறேன். இந்த நாவல் தாமதமாகிக் கொண்டே போவதன் உண்மையான காரணம் இந்நாவலில் வரும் பெண் எழுத்தாளரின் நாவலை என்னால் எழுத முடியவில்லை என்பதுதான். பெண் எழுத்தாளர் எழுதும் நாவலை ஆணாகிய நான் எப்படி எழுத முடியும்? எழுதி எழுதிப் பார்த்தும் பெண் மொழி சித்திக்கவேயில்லை. பெண் எழுத்தாளர் என்ன எழுதவேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதாவது அந்த நாவல் என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் எழுதும் மொழிதான் சரிப்படவில்லை. இதே நாவலில் ஆண் எழுத்தாளர் எழுதும் நாவல்களையெல்லாம் நானே எழுதிவிட்டேன். அவர் எழுதுவது pulp என்றாலும் கூட இலக்கிய எழுத்தாளனான என்னால் சற்று சிரமப்பட்டு அவற்றை எழுதிவிடமுடிந்தது. ஆனால் இலக்கிய வகைமையிலே எழுதும் இலக்கிய எழுத்தாளரான பெண் எழுதுவதை என்னால் எழுத முடியவில்லை. என் பிரச்சினையை உங்களுக்கு புரியும்படி சொன்னேனா? புரியவில்லையெனில் தயவுசெய்து சொல்லாததையும் புரிந்துகொள்ளுங்கள். இது எவ்வளவு பெரிய சிக்கல் என்பதை இன்னொருவர் புரிந்துகொள்ளாதவரை எனக்கு மாபெரும் சிக்கல்தாம்.

சுத்தமாய் எழுதவே வராமல் போன ஒரு பகலில் என் நெடுநாள் ஸ்நேகிதியைத் தேடிக் கொண்டு அவள் வீட்டிற்குப் போனேன். கண்கள் விரிய வரவேற்றவள் வரவேற்பரையில் அமரச் சொன்னாள். அவள் வீட்டு படுக்கையறை தவிர்த்து நான் எங்குமே அமர்ந்தது கிடையாது. ஒரு கட்டத்தில் அவள் என்னைப் படுக்கையறைக்குள் அனுமதிப்பதை நிறுத்தியவுடன் அவள் வீட்டிற்கு செல்வதையும், அவளைச் சந்திப்பதையும் நிறுத்திவிட்டேன். அமராமல் நின்று கொண்டே என் பிரச்சினையைச் சொன்னேன். சற்றுக் குழம்பினாள். யோசித்தாள். பின்பு சொன்னாள்.

 "உன் நாவலை நீ எழுது!"

அவளுக்கு சிறுபத்திரிக்கை வாசிப்பு உண்டு. இரண்டு மூன்று நல்ல கதைகளையும் எழுதியிருக்கிறாள்.அவையெல்லாமும் அவ்வார்த்தைகளுக்குப் பின்பிருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

"மொக்க போடாதே கதைய நான் சொல்றேன் நீ எழுத மட்டும் செய்" என்றேன். மாட்டேன் என்றாள். "நீ எழுத மறுப்பதற்கு நல்லதா ஒரே ஒரு காரணம் சொல் நான் போய்டுறேன்" என்றேன்.  உனக்கும் எனக்கும் ஏதோ இருப்பதாக ஏற்கனவே இங்கு கிசுகிசு ஓடிக் கொண்டிருக்கிறது. போதாததிற்கு ஒரே நாவலை சேர்ந்து எழுதினால் போச்சு. வெறும் வாய்களுக்கு அவல் கிடைத்தது போலாகும் என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அட! உன்னையும் என்னையும் வைத்து கிசுகிசுக்க வெல்லாம் செய்கிறார்களா? குஜாலாக இருக்கிறதே. இதற்காகவே அவசியம் இந்நாவலை நாம் இருவரும் சேர்ந்து தான் எழுத வேண்டும் என மகிழ்ச்சியில் கத்தினேன். அவள் முறைத்துக் கொண்டே சொன்னாள். உன்னை யாரும் வேசையன் என வசைய மாட்டார்கள்.  ஆனால் என்னை வேசி என்பார்களே. நான் சற்று யோசித்தேன். அவள் சொல்வதும் சரியெனப் பட்டது. யாருமே சீந்தாத மொழியில் எழுத்தாளராக இருப்பதன் துயரங்களின் தொடர்ச்சிதாம் இவையெல்லாமும் என்பதும் புரிந்தது. திரும்ப வந்துவிட்டேன். வரும் வழியில் எங்களைப் பற்றி யாரெல்லாம் கிசுகிசுத்திருப்பார்கள் என யோசித்துப் பார்த்தேன். என் எதிரிகள் ஒவ்வொருவராய் நினைவில் வந்தார்கள். நிச்சயம் எல்லோரும் வயிறெறிந்திருப்பார்கள். சந்தோஷமாக இருந்தது. என் எதிரிகள் ஒவ்வொருவரின் முகத்தையும் பதம் பார்க்க விருப்பம்தான் என்றாலும் திருப்பி அடித்துவிடுவார்களே என்ற பயம்தான் அதை தடுத்து வைத்திருக்கிறது. மாறாய் இம்மாதிரி வகையில் அவர்களை எரிச்சலூட்டுவது எனக்குப் பிடித்திருக்கிறது.

அதற்கடுத்த நாள் என்னுடைய இன்னொரு ஸ்நேகிதியைத் தேடி பக்கத்து நகருக்குப் போனேன். நாங்கள் எப்போதுமே பொதுவிடத்தில்தான் சந்தித்துக் கொள்வோம். என்னுடைய ஒரே வாசக நண்பி. எங்களுக்குள் தூய்மையான நட்பு இருந்தது. சந்தர்ப்பம் கிடைத்துமா? என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஏனெனில் இதுவரைக்குமே அவள் சந்தர்ப்பத்தை உருவாக்கித் தரவில்லை. எனக்கு சந்தர்ப்பத்தைத் துய்த்துத்தான் வழக்கம். உருவாக்கத் துப்பு கிடையாது. நன்றாக எழுதுவாள். இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறாள். அவளிடம் இந்நாவல் பிரச்சினையைச் சொன்னேன். நாவலின் களம் என்ன? எனக் கேட்டாள். "லெஸ்பியன்" என்றேன். ஒரு டீ கடையில் அமர்ந்துதான் பேசிக் கொண்டிருந்தோம். அவள் எதுவும் பேசாமல் எழுந்துபோய் டீ போடுபவரிடம். "அண்ணே அந்த க்ளாசில சுட்தண்ணி புடிங்க" என்றாள். அவரும் கொதிக்க கொதிக்க சுடுநீரை க்ளாசில் பிடித்துக் கொடுத்தார். என்னிடம் வந்தவள். "மூஞ்சிலயே ஊத்திருவேன் ஓடிடு" என்றாள். எனக்கு திக் கென்றாகிவிட்டது. எதுவும் பேசாமல் திரும்ப வந்துவிட்டேன்.

ஒருவேளை நாவலின் களத்தை அவளிடம் சொல்லியிருக்க கூடாதோ? கேடுகெட்ட இந்த தமிழ்மொழியில், தமிழ்சூழலில், இப்படி ஒரு நாவலை நான் அவசியம் எழுதத்தான் வேண்டுமா என யோசிக்க யோசிக்க ஆத்திரமாய் வந்தது. சிலர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களிடம் கேட்டுப் பார்க்கலாமா? என்கிற யோசனை எழுந்தது. ஆனால் எதையோ கேட்கப் போய் எசகுபிசகாக எதையாவது புரிந்துகொண்டு குச்சியை கையிலேயே பிடித்துக் கொண்டு ஆன்லைனில் நிற்கும் போலிஸ்காரர்களிடம் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டால்? அய்யோ நினைக்கவே திகிலாக இருந்தது. அந்த நினைப்பை அப்போதே கைகழுவினேன்.

எதுவுமே பிடிக்காமல் விட்டேத்தியாய் சில நாட்கள் சுற்றிக் கொண்டு திரிந்தேன். என் பழைய நண்பன் ஒருவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். கூடவே என்னுடைய மிகப் பழைய நண்பனான ஜானியை ஒரு அட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டு வந்திருந்தான். நண்பா இந்தா உனக்கு என் பரிசு என ஆதூரமாய் கட்டித் தழுவித் தந்தான். மகிழ்ச்சியாய் வாங்கிக் கொண்டேன். இப்போது என்ன செய்கிறாய் எனக் கேட்டான். ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாய் சொன்னேன். தலைப்பு? Pulp எழுத்தாளரின் இலக்கிய காதலும் இலக்கிய எழுத்தாளரின் pulp காதலும். ஒண்ணும் புரியலையே என்றவனிடம் சொன்னேன். எனக்கும் ஒண்ணும் புரியல. எழுதி முடிச்சிட்ட பிறகாவது புரியுதாண்ணு பார்ப்போம். அவன் முறைத்துவிட்டு எழுந்து போய்விட்டான். நான் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தேன். ஒரு லிட்டர் சிவப்பு லேபிள் புட்டி.. எடுத்து வெளியில் வைத்தேன். வழக்கமாய் உள்ளே ஜானி அமர்ந்திருப்பான். ஆனால் புட்டிக்குள் சிவப்பு நிறத்தில் ஒரு பெண் அமர்ந்துகொண்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். உற்சாகமாய் இருந்தது அட இதற்குள் நீ எப்படி வந்தாய் எனக் கேட்டேன். தெரியலபா ஆனா உன் பெண் நாவலை எழுதப்போறது நான் தான் என்றாள். அவளை ஆரத் தழுவிக் கொண்டேன்.

மேலும்

Wednesday, October 17, 2012

பன்னீர்ப் பூ


டி சப்தம் கேட்டு அதிர்ந்து விழித்தேன். அவள் மதியம் அணிந்திருந்த இளஞ்சிவப்புக் கரை வைத்த கருப்பு நிறக் காட்டன் புடவை என்னுடலைச் சுற்றியிருந்தது. கருப்பு இன்ஸ்கர்ட்டோடு எனக்காய் முதுகு காட்டித் தூங்கிக் கொண்டிருந்தாள். படுத்தவாக்கில் நகர்ந்து இடுப்பில் கை போட்டு இறுக அணைத்து கழுத்து இடைவெளியில் முகம் புதைத்து மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன். விழித்துக் கொண்டாள் போல. பதறி எழுந்து “ஏய் டைம் என்ன ஆச்சு?” என்றாள். தெரியவில்லை. மதியம் ஒரு மணிக்கு அறைக்குள் வந்தோம். வரும்போதே தூறல் பெரிதாகியிருந்தது. ஈரத் தலையோடு உள்ளே வந்தோம். துடைத்துக் கொள் என துண்டைக் கொடுக்கும்போது மழை சப்தம் அதிகமானதைக் கேட்டுக் கண்ணடித்தாள். "செம்ம சுச்சுவேசண்டா" என்றவளை அதற்குமேல் பேசவிடவில்லை.

 என்னை உலுக்கி எழுப்பினாள். போலாம்....போலாம்...போலாம்... என மூச்சுவிடாது நச்சரித்தவளை திட்டிய படியே எழுந்து புடவையை உடலிலிருந்து பிரித்துக் கொடுத்தேன். கண்ணை மூடியபடி அவள் புடவைக்காக கைநீட்டிய காட்சியை சிறிது நேரம் நீட்டித்தேன். சிணுங்கி மேலே பாய்ந்து புடவையைப் பிடுங்கிக் கொண்டு அறையோடு ஒட்டியிருந்த குளியலறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டாள். எழுந்து கிளம்பினேன். மாலை ஐந்துமணி ஆகியிருந்தது. குளிருக்கு உடல் மெல்ல நடுங்கியது. சன்னல் கதவைத் திறந்து பார்த்தேன். மழை விட்டிருந்தது. சன்னலை ஒட்டியிருந்த மாமரம் கனத்த மெளனத்திலிருப்பதைப் போல் பட்டது. பத்து நிமிடம் கழித்து கதவைத் திறந்துகொண்டு வேறொரு பெண்ணாய் வெளியில் வந்தாள். இளஞ்சிவப்பு நிற ஜாக்கெட்டும் கருப்புக் காட்டன் புடவையுமாய் அவளைப் பார்க்க எப்போதோ விரும்பியிருந்தேன். ஏதோ ஒரு சினிமா படத்தில் கதாநாயகி அணிந்திருந்த உடை. பார்த்தவுடன் பிடித்துப் போய் இவளிடம் சொன்னேன். இன்றைக்காய் எடுத்து வைத்திருந்தாள் போல.

 போலாம்பா என அருகில் வந்தவளை மெதுவாய் அணைத்துக் கொண்டேன். சொன்னா கேள்.. போலாம் வா.. டைமாச்சி.. என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்த அவளின் உதடுகளை சோம்பலாய் கவ்விக் கொண்டேன். சற்றுத் திமிறி என்னைப் பலவந்தமாய் விலக்கி தன் உதடுகளை உள்ளங் கையால் திரும்பத் திரும்ப அழுந்த துடைத்துக் கொண்டாள். அப்படித் துடைக்கும்போது அவள் நெற்றி சுருங்கியிருக்கும். அசூசையுமல்லாத கோபமுமல்லாத ஒரு விநோத முக பாவணை வெளிப்படும். எனக்கு இது ஒரு விளையாட்டாய் இருந்தது. அவள் ஒவ்வொரு உதட்டு முத்தத்திற்கும் இப்படி ஆவாள் என்பதுதான் இன்னும் சுவாரசியம்.

 ப்ளீஸ் போலாம் என்றாள். பெருமூச்சு விட்டபடி அறைக்கதவைத் திறந்தேன். வெளியேறினோம்.

தெருவில் மழை நீர் சிறுசிறு குளங்களை உருவாக்கிவிட்டிருந்தது. ஏழு மணிக்கான இருள் சூழ்ந்திருந்தது. கரு மேகங்கள் உடையும் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தன. அவளின் விரல் பிடித்தேன்.

 “விடு இதென்ன ரோட்ல?”
 .....

 “நீ ஏன் வர? நான் போய்க்கிறனே”

 பதில் சொல்லவில்லை. பிரதான சாலைக்கு வந்தோம். மழையில் எல்லா சிறுநகரங்களும் ஒன்று போலவே காட்சியளிக்கின்றன.

 “டீ குடிக்கலாமா”

 “வேணாம்டா டைம் ஆகிருச்சி”

 “அப்ப பஸ் ஸ்டாண்ட் உள்ள போக வேணாம் இங்கயே நிப்போம்”

திருத்தணியிலிருந்து வரும் பேருந்து நின்றது. ஏறிக் கொண்டோம். கூட்டம் இல்லை. முன் வரிசை சீட்டுகள் தவிர்த்துப் பின்னிருக்கைகள் காலியாகக் கிடந்தன. மொத்தப் பேருந்தே நனைந்து நடுங்கிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. சன்னல்கள் அடைக்கப்பட்டு மெல்லிருளாய் கிடந்தது. இடப்புறம் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தோம். சன்னலை மேலேற்றினாள். ஈரக் காற்று முகத்தை விசிறியது. திருவள்ளூர் ரயில்வே பாலத்தைக் கடந்தவுடன் மீண்டும் மழை பிடித்துக் கொண்டது. முகமும் ஆடைகளும் நனையத் துவங்கியதும் சன்னலை மூடினாள். எனக்கு மழையைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. சொல்லவில்லை.

 என் வலக்கை விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டு இறுக்கினாள். குளிர்தில்ல என சிரித்தாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மழையில் அவளின் கேசம் நெற்றி தோள் எல்லாம் நனைந்திருந்தன.

 “ஈரமான பூ போல இருக்க நீ” என்றேன்.

 “என்ன பூ? ரோஜாவா? இல்ல உனக்கு பன்னீர்பூ தான பிடிக்கும் ஈரப்பன்னீர் பூவா நானு?”

 “இல்லடி நீ பன்னிப்பூ”

என்றதும் வெடித்துச் சிரித்தாள்.

“நான் பன்னி சரி ஆனா நீ எரும. ஹப்பா! என்ன வெயிட்டு”

 நடத்துனர் அருகில் வந்ததும் அவசரமாய் கைப்பை திறந்து பணமெடுத்து நீட்டி ஒரு ஐயப்பன்தாங்கல், ஒரு அசோக் பில்லர் என்றாள். டிக்கெட்டை வாங்கி என் சட்டைப் பையில் திணித்தாள். உனக்கு நான் பன்ற கடைசி செலவு. டிக்கட்ட பத்ரமா வச்சிக்க என்றாள். அவள் கண்களை ஆழமாய் பார்த்தேன். நான் பார்ப்பதை உணர்ந்து கண்களை இன்னும் விரித்தாள்.  “நல்லா பாரு. இனிமே உன் பார்வைக்கெல்லாம் மயங்கமாட்டேன்” என்றாள். பின்னால் திரும்பி யாரும் பார்க்கவில்லையென உறுதிபடுத்திக் கொண்டு அவள் உதட்டைக் கவ்வி இழுத்தேன். என் மார்பைப் பிடித்துத் தள்ளி விடுவித்துக் கொண்டு உள்ளங்கையால் உதட்டைத் திரும்பத் திரும்ப அழுந்த துடைக்க ஆரம்பித்தாள். நான் சிரித்தேன்.

 “உன் ஃப்ர்ஸ்ட் நைட்லயும் இப்படித் தான் பண்ணியா?.. “

 “எப்படி?.. “

 உதட்டைத் துடைத்து துடைத்துக் காண்பித்தேன்.

 “அவன் உன்ன மாதிரி கவிஞன்லாம் கிடையாதே. டைரக்ட் மேட்டர்தான். அன்னிக்கு அவசர அவசரமா முடிஞ்சதும் அவசர அவசரமா எழுந்து போய் கப் கப் னு சிகரெட் புடிச்சான். எனக்கு சிரிப்புதான் வந்தது..”

 “அப்ப சிரிச்சயா? “

 “இல்ல ஆனா அதுக்கப்புறம் ஃபர்ஸ்ட் நைட்ட நினைச்சி நிறைய நாள் சிரிச்சேன். “

 “இப்ப சிரிப்பு வருதா”

 “இல்ல” ..

இரண்டு நிமிடம் அநிச்சையாய் மெளனத்திற்குப் போய் மீண்டோம்.

 மீண்டும் என் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.

 “நைட்டு என்னடா பசங்களோட சரக்கடிக்க போறியா?”

 “தெரில. அடிப்பேன்னுதான் நினைக்கிறேன்.” 

“ஓ சோகத்துல இருக்கியோ?”

 “இல்லயே ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என வெறுப்பாய் சொன்னேன். 

முதுகிற்குப் பின்னால் கைவிட்டு என்னுடலை அவளுக்காய் இழுத்து இறுக்கிக் கொண்டாள்.

 “சாரி கேக்கணுமா உங்கிட்ட”

 “இல்லடி ஆனா என்ன விட்டு போய்டாத ப்ளீஸ்”

 “ஐயோ இத நீ லட்சம் முற சொல்லிட்டே நானும் லட்சத்தி ஒரு முற விளக்கம் சொல்லிட்டேன். மறுபடியும் ஆரம்பிக்காத ப்ளீஸ்.” 

மெளனமானோம்.

 மழையின் வேகம் சீராய் அதிகரிக்கத் துவங்கியது. சாலையில் ஓடிய நீரைக் கிழித்துக் கொண்டு பேருந்து விரைந்தது. பூந்தமல்லி வந்ததே தெரியவில்லை விசில் சப்தத்தோடு ஐயப்பன் தாங்கல் என்றார் நடத்துனர். இருவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தோம்.அதுக்குள்ளவா வந்திருச்சி என்றாள். நான் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் நின்றுவிட்டு பேருந்து கிளம்பியது மீண்டும் தன் கையை முதுகிற்குப் பின் துழாவி என்னை இழுத்து இறுக்கிக் கொண்டாள்.

 நகரம் வெள்ளக் காடாகியிருந்தது. போரூரிலிருந்து பேருந்து ஊர்ந்துதான் போய் கொண்டிருந்தது. நாங்கள் மெளனத்திலிருந்து மீளவே இல்லை. மழையை, பைத்தியம் பிடித்த வாகன நெரிசலை சோடியம் விளக்குகளின் மங்கல் ஒளியோடு பார்த்தபடி ஊர்ந்து கொண்டிருந்தோம். கத்திப்பாரா விற்கு ஒரு கிமீ முன்பே வண்டி சுத்தமாய் நின்றுவிட்டது. இறங்கலாம் என எழுந்து கொண்டாள். இறங்கினோம்.

ஆட்டோ, பேருந்து என சகல வாகனங்களும் பெருங்குரலில் கத்திக் கொண்டிருந்தன. பேருந்து வந்த வழியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.

 “ரொம்ப டைமாயிருச்சா”

 “இல்லபா பரவால்ல”

 நடக்க நடக்க நெரிசல் குறைந்து கொண்டே வந்தது. எதுவுமே பேசத் தோன்றவில்லை. எல்லாம் தீர்ந்த வெளியில் நடந்து கொண்டிருந்தோம். என் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள். இது ரோடாச்சே என்றேன். புன்னகைத்து இன்னும் இறுக்கிக் கொண்டாள். சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. எங்களுக்கு சமீபமாய் ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஐயப்பன் தாங்கல்? என்றோம். ஓட்டுனர் தலையசைத்தார். ஆட்டோவில் அமர்ந்து மீண்டும் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.

மழை சுத்தமாய் நின்று போயிருந்தது. அடுத்த அரைமணிநேரப் பயணம். ஐயப்பன் தாங்கல் வந்துவிட்டது. அந்த பஸ் ஸ்டாப் தாண்டி நிறுத்துங்க என ஓட்டுனருக்காய் குனிந்து சொன்னாள். எனக்காய் நன்கு திரும்பி கடைசியா எனக்கொரு முத்தம் கொடு என்றாள். எனக்குள் அதுவரை அடங்கிக் கிடந்த ஏதோ ஒன்று உடைந்து சப்தமாய் அழுகையாய் வெளியேறியது. ஓட்டுனர் திகைத்து சப்தமெழ வண்டியை நிறுத்தினார். முகத்தை மூடிக் கொண்டு அழுத என்னை இழுத்து அணைத்துக் கொண்டாள். நெற்றியிலும் கன்னத்திலும் உதட்டிலுமாய் மாறி மாறி முத்தமிட்டாள். பின்பு மெல்ல தன்னை விலக்கிக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

 0

Monday, October 1, 2012

குள நடை

நான் வசிக்கும் பகுதியில் ஒரு பூங்கா இருக்கிறது. நல்ல விஸ்தாரமான பூங்கா. ஏராளமான மரங்கள், பரந்த புல்வெளி, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல் அத்துடன் இரண்டு கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு பெரிய குளம் ஒன்றும் உண்டு. நடப்பதற்கு தோதாய் குளத்தைச் சுற்றி இரப்பர் பூசிய நடைபாதை அமைத்திருக்கிறார்கள். நடை பாதை வழியெங்கும் அடர்ந்த செடிகொடிகளும், மரங்களும், ஏராளமான பறவைகளும், குறிப்பாய் சிட்டுக்குருவிகளின் கீச்சுச் சிறகடிப்புகளும் உடன் வரும். நடப்பதற்கோ அல்லது இளைப்பாறுவதற்கோ மிகச் சிறந்த இடம். கடந்த ஒரு வருடமாய் வார இறுதி நாட்களில் பயல்களை அழைத்துக் கொண்டு போய்வரும் இடம்தான் என்றாலும் ஒரு முறை கூட நடக்கப் போனதில்லை. ஒவ்வொருமுறையும் பூங்காவிலிருந்து திரும்பும்போது நாளையிலிருந்து நடக்க ஆரம்பிக்கவேண்டும் என நினைத்துக் கொள்வதோடு முடிந்து போய் விடும். ஆனால் சமீபமாய் வழக்கத்தைப் பொய்யாக்கிவிட்டு நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.

செய்ய ஒன்றுமே இல்லாமல் ஒரு நாளை வைத்துக் கொள்வதில் முனைப்பாக இருக்கும் என்னுடைய இயல்பும், மனைவியின் இண்டர்நெட் சமையலறிவும் சேர்ந்து என்னுடலைப் பதம் பார்த்திருக்கின்றன. புளிமூட்டை அல்லது அரிசிமூட்டை கணக்காய் உடல் பெருத்திருக்கிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் மனிதர்கள் என்னை அடையாளம் கண்டறிய முடியாது திகைப்பதைப் பார்த்து நானும் அவர்களோடே திகைப்பேன். அலுவலகத்தில் நடக்கும் உடல்நல முகாம்களில் வெள்ளைக் கோட்டணிந்த லெபனீஸ் பெண்கள் வயிறைத் தட்டிக் காட்டி சைகையால் குறைத்தே ஆகவேண்டும் என்பார்கள். புன்னகைத்து வைப்பேன். ஆனால் சமீபமாய் நடந்த ஒரு சம்பவம்தான் உடனடியாய் நடக்க தூண்டுதலாக அமைந்தது.

வழக்கமான ஒரு உடல்நல முகாம். அதே வழக்கமான லெக்சர்கள். பிபி, கொலஸ்ட்ரால் சோதனைகள். எல்லாம் முடிந்து ஒருவர் சொன்னார் உங்களின் Metabolic age 45. சற்றுக் கடுப்புடன் என்ன! இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள் எனக் கேட்டேன். உங்களின் மிகச்சரியான எடை அறுபது கிலோதான் பதினைந்து கிலோ அதிகமாக இருக்கிறீர்கள் என்றார். கோபப்பட்டு உடனடியாய் முகாமை விட்டு வெளியேறினேன். மாலை க்ரீன் டீ டப்பாக்கள், கொள்ளு சகிதமாய் வீட்டிற்கு போய் மனைவியிடம் என் வயது நாற்பத்தைந்து என்றேன். அடுத்த நாள் காலை காபிக்கு பதிலாய் ஊறவைத்துக் கொதிக்க வைத்த கொள்ளு நீரைத் தந்தாள். அதற்கடுத்த நாள் மாலை நடக்க ஆரம்பித்து விட்டேன்.

உற்சாகமாத்தான் இருக்கிறது. அவ்வப்போது வாங்கும் எலெக்ட்ரானிக் வஸ்துக்களை பயல்களே ‘இரு’ கை பார்த்துவிடுவதால் பாட்டுக் கேட்டு நடக்கும் பெரும்பான்மைகளின் கும்பலில் தனித்துத் தெரிகிறேன். தொடர்புக்கு ஒரு சாம்சங் போன் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கிறது ஆனாலும் அதைப் பேசுவதற்கு மட்டும்தான் பயன்படுத்த முடிகிறது. இயற்கையின் இசையை விட வாத்தியங்களின் இசை பெரிதா என்ன? குளிர்காலம் துவங்கிவிட்டதால் ஏராளமான பறவைகள் வர ஆரம்பித்துவிட்டன. நடக்கும்போது உடன் வரும் பறவைகளின் கீச்சுக் குரல்களுக்கு நிகரேது? மிக ரம்மியம். மாதத்திற்கு மூன்று கிலோ குறைப்பதுதான் இப்போதைய இலக்கு. பத்து நாள் நடந்துவிட்டு பதினோராம் நாள் சுத்த போர்,டைம் வேஸ்ட், இப்ப குண்டா இருந்தா என்ன? என்றெல்லாம் கிளம்பாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

Thursday, September 13, 2012

குரல்களின் அலைக்கழிப்பு - வவெதொஅவெகு

   ழுத ஒன்றுமேயில்லாத நாட்கள் இவை. நெருக்கடிகளும் சவால்களும் மன அயற்சியும்தான் படைப்பூக்கத்திற்கு மிக நெருக்கமானதாக இருக்குமோ என்னவோ. அப்படி எதுவுமே இல்லாத மனநிலையில் எழுத்தின் மீது பூனை சுருண்டு படுத்துக் கொள்கிறது. தூங்கும் பூனையைப் பார்த்தபடி பூனையை விஞ்சும் பெரிய கொட்டாவியோடு, அசட்டையாய் நகர்ந்து போய் கொண்டிருக்கிறேன். கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர் பாகம் இரண்டைப் பார்த்துவிட்டு எழுதிக் கொண்டிருந்தேன். பின்பு யாருக்காக/எதற்காக இதை எழுதுகிறோம்? என்ற கேள்வி எழுந்தது. எப்போதோ இந்த சிக்கலை இங்கு பதிவு செய்துமிருக்கிறேன் ( இவரு பெர்ஸா ஒல்க படம் பார்த்து கிழிப்பாராம் அதை வெலாவரியா எழுதுவாராம் அதுனால இவர பெரிய அறிவு சீவின்னு ஒலகம் நம்புமாம் போடாங்க்..) இப்படி ஒரு குரலை அசட்டை செய்துவிட்டுத்தான் சமூக வலைத்தளங்களில் சினிமா பற்றியே தொடர்ந்து வாய் வலிக்கப் பேசிக் கொண்டிருக்கிறேன். இனிமேல் அதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். டோனி காட்லிஃப் போன்ற பரவலாய் அறியப்படாத மேதைகளைக் குறித்து மட்டுமே குறிப்புகளாக எழுதி வைக்க உத்தேசம்.

தவிர தமிழ் இணையப் பரப்பில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது சலிப்பாகவும் இருக்கிறது. எல்லா மூஞ்சும் தெரிஞ்ச மூஞ்சாகவே இருப்பதன் எரிச்சல் அது. துரதிர்ஷ்டவசமாக புதிய மூஞ்சுகளோடு உரையாடலே நிகழவில்லை. பிஞ்சு மூஞ்சுகள், முத்துன மூஞ்சு என ஓரங்கட்டி விடுகின்றனவோ? என்கிற அச்சம் கூட அவ்வப்போது எழுகிறது. இதன் நீட்சியாய் ட்விட்டரில் போய் குத்த வச்சு உட்கார்ந்து புது மூஞ்சுகளோடு மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த எல்லா இணைய சலம்பல்களும் அலுவலகத்தில் புழங்கும் எட்டு மணி நேரம் மட்டும்தான். வீட்டை நெருங்கிவிட்டால் இணையம் அந்நியம்தான். குழந்தைகளின் மிகத் தூய்மையான உலகத்திற்குள் எந்த நெருக்கடிகளுமில்லாமல் தொலைந்து போய்விட முடிகிறது. குட்டிப் பயல்களின் வீரதீர சாகஸங்களை, ஆச்சரியங்களை, அற்புதங்களைப் பற்றி எழுதச் சொல்லித் தினம் கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஏற்கனவே குமாஸ்தா மனநிலை பீடித்திருக்கும் என்னை, முழுமுதற் குமாஸ்தாவாய் மாற்றிவிடும் செயல் அது என்பதால் தொடர்ந்து மறுத்து வருகிறேன். பயல்களின் உலகை மனம் ததும்பத் ததும்ப மிகை உணர்ச்சியில் எழுத என்னவோ போல் இருக்கிறது. என் சொந்த அனுபவங்களை புனைவுகளின் வழியாகக் கடத்துவதையே விரும்புகிறேன்.

திடீரென யோசித்துப் பார்த்தால் மனிதர்களோடு பழகுவதையே நான் நிறுத்திவிட்டிருப்பதைப் போன்ற தோற்றம் எழுகிறது. அலுவலகம் – வீடு - குடும்பம் என உலகம் மிகவும் சுருங்கிப் போயிற்று. ஆனால் இந்த சுருக்கத்தின் மீது எனக்கு ஒரு பிராதும் கிடையாது. ஏராளமான மனிதர்களோடு, நட்புகள் புடைசூழ வாழ்ந்த காலங்கள் பிற்காலத்தில் மனநெருக்கடிகளையும் குரோதங்களையுமே பரிசாகத் தந்தன. யாரையுமே எவ்விதத்திலும் தொந்தரவு செய்யாத இந்நாட்கள் சலனமில்லாமல் படுவேகமாகக் கடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

0

அயல் வாழ்வின் எல்லா வசதிகளையும் முழுமையாய் அனுபவித்துக் கொண்டே ஊருக்குப் போய் உட்கார்ந்து கொள்ளத் துடிக்கும் மனநிலைதான் எப்போதுமிருக்கிறது. ஆறு வருடங்களுக்கு முன்பு என் வளைகுடா ‘டார்கெட்’ சில வருடங்களும் சில லட்சங்களும் மட்டும்தான். ஆனால் இன்று நகர்ந்திருக்கும் எல்லையை சற்று அச்சத்தோடுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த அலிபாபாக் குகையிலிருந்து வெளியேறவே முடியாதோ? என்றும் கூட சில நேரங்களில் நினைத்துக் கொள்கிறேன். “இப்ப அடிச்சிப் பிடிச்சி போகிற அளவுக்கு என்ன வந்தது? இந்தளவுக்கு சொகுசான வேலைய எங்கியாவது எதிர்பாக்கமுடியுமா?” என்பதுதான் நான் உள்ளிட்ட எல்லோரின் கேள்வியும். ஆம் இப்போது என்னதான் வந்தது?

சமகாலத்தின் so called உச்சங்களில், பொருட்களால் நிறைந்த புறவுலகில் முழுமையாய் கரைந்து போகமுடியாதுதான் என் பிரச்சினை. இதையெல்லாமும் தாண்டிய களிப்பு எங்கோ, எதிலோ இருக்கிறது என்பதுதான் என் கற்பிதம். எப்போதும் ஒரு அழைப்புக்குரல் கேட்டபடியே இருப்பதாக உணர்கிறேன். இதெல்லாம் 'சும்மாடா' என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்களின் சப்தத்தைக் கூட்டிவிடுகிறேன். அதுவும் உதவவில்லையெனில் பாரதிராஜா படங்களில் வரும் கதாநாயகிகளுக்கு எப்போதும் கேட்டபடியிருக்கும் கடல் அலை சப்தத்தோடு என்னுடைய அழைப்புக் கற்பிதத்தையும் ஒப்பிட்டு பார்த்து சப்தமாய் சிரித்துவிடுகிறேன்.

0

நீதானே என் பொன்வசந்தம் பாடல்களை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சமீபமாய் எனக்கு மிகவும் பிடித்துப் போன ஆல்பம். எல்லாப்பாடல்களுமே பிடித்திருந்தாலும் ரம்யாவின் குரலில் வரும் சற்று முன்பு பாடல் அடித்துப் போடுகிறது. இந்தக் குரலையும் அதில் வழியும் உணர்ச்சிப் பெருக்கையும் கேட்கும்போது போர்ச்சுகலின் நாடோடி இசைப்பாடல் வடிவமான fado நினைவிற்கு வருகிறது. Fado என்றால் destiny என அர்த்தம். ஐரோப்பாவில் fado இசை வடிவம் மிகப் பிரபலமானது. அமேலியா ரோட்ரிகஸ் என்ற பாடகி இந்த fado பாடல்களின் ராணி. இவரின் குரலில் சில பாடல்களை யூடியூபில் கேட்டுப் பாருங்கள் மிகவும் உணர்ச்சிப் பெருக்கான அனுபவம் வாய்க்கும்.

அமேலியாவின் குரலும் எனக்கு மட்டும் ரகசியமாய் கேட்கும் அழைப்புக் குரலும் ஒரே மாதிரி இருப்பதை சமீபமாய் உணர்கிறேன்.ஆகவே இந்த மொக்கைப் பத்திக்கு குரல்களின் அலைக்கழிப்பு என இலக்கியத் தரமாய் பெயர் வைக்கிறேன்.

Friday, September 7, 2012

வேனிற்காலங்களின் இளவரசி


வேனிற் காலங்களின் இளவரசி
அடுக்குச் செம்பருத்திப் பூவை
வருடிப் போகிறாள்
வெண்மஞ்சளாய் கிளைப்பூத்து
செம்மஞ்சளாய் மண்பூத்து நிற்கும்
வேம்பூவைத் தழுவி
முத்தமிடுகிறாள்
நெருங்குவதற்கு முன்பே புங்கை
அடர்த்தியாய் பூச்சொறிந்ததை
புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறாள்
மழை நனைய
மலர்தலைத் தள்ளிப்போட்டிருக்கும்
பன்னீர் மரத்தை
செல்லமாய் கோபித்து நகர்கிறாள்
பூக்காலங்களின் இளவரசன்
வியர்த்து வந்து
வேனிற்கால இளவரசியின் முன் மண்டியிடுகிறான்.
தன் கருணைக் கரங்களால் அவனை வாரியெடுத்து
மார்புறத் தழுவுகிறாள்
பன்னீர் மரம் குலுங்கி பூப்பூவாய் பூக்கிறது.
 0




வேனிற் காலங்களின் இளவரசி 
மலரிலிருந்து கோபமாய் விழித்தெழுந்தாள் 
உற்சாகமாய் மேலெழ ஆரம்பித்திருந்த 
சூரியனை முறைத்து 
மீண்டும் உள்ளே போகுமாறு சமிக்ஞை செய்தாள். 
பெருகிப் பெருகி தகித்த 
சுவாசப் பெருமூச்சில் 
தாவர சங்கமங்கள் வேரோடு அழிந்தன. 
குழம்பிய காலநிலையொன்றின் நடுவில் 
அமர்ந்து கொண்டிருந்தவளின் துக்கம் உடைய 
தேம்பி அழ ஆரம்பித்தாள் 
உலகம் வெள்ளக்காடானது 
அதில் 
வேனிற்காலங்களின் இளவரசியும் 
மூழ்கிப் போனாள்.



புகைப்படம்: அமேலியா ரோட்ரிகஸ் போர்த்துகீசிய ஃபேதோ பாடகி

Monday, July 2, 2012

Gangs of Wasseypur - 2

1940 களில் வாஸிபூர் வழியே போகும் பிரிட்டீஷாரின் சரக்கு இரயில்களை ஷாகித்கான் தன் சகாக்களுடன், அப்பகுதியின் பிரபல கொள்ளையனான சுல்தானாவின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கிறான். உள்ளூர் மார்க்கெட்டில் அவ்உணவுப் பண்டங்களை குறைந்த விலைக்கு விற்று லாபம் ஈட்டுகிறான். இவ்விஷயம் சுல்தானா காதிற்குப் போகிறது. தக்க நேரத்திற்காக காத்திருக்கும் சுல்தானா, இன்னொரு கொள்ளை சம்பவத்தில் ஷாகித்கான் ஆட்களைக் கொன்று குவிக்கிறான். ஷாகித்கானின் சகாக்களில் ஒருவரான ஃப்ர்ஹான் மட்டுமே எஞ்சுகிறார். கர்ப்பிணி மனைவியுடன் ஷாகித்கானும் ஃபர்ஹானும் வாஸிபூரை விட்டு வெளியேறி தன்பாத்திற்குப் போகிறார்கள். பழைய அடையாளத்தையெல்லாம் மறந்து விட்டு அங்குள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் அடிமை வேலை செய்கிறான். பிரவத்தில் மனைவி இறந்து விடுகிறாள். மனைவி ஆபத்தில் இருந்த செய்தியை சொல்ல அனுமதிக்காதவனை அடித்து
நொறுக்கி சுரங்க உரிமையாளரான ரமதீர்சிங் கிற்கு முதன்மை அடியாளாகிறான். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. இந்திய அரசாங்கம் சுரங்கத் தொழிலில் டாடா க்களுக்கும் பிர்லா க்களுக்கும் காண்ட்ராக்ட் உரிமை தருகிறது. அவர்களுக்கு அத்தொழில் குறித்து கிஞ்சித்தும் அறிவில்லாததால் அதே முதலாளிகள் நீடிக்கின்றனர். இன்னமும் அதிகமாகப் பொருளீட்டுகின்றனர். ரமதீர்சிங் இன்னமும் செழிக்கிறான். ஒரு கட்டத்தில் ரமதீர்சிங் ஷாகித்கானை சமயோசிதமாகக் கொல்கிறான். ஷாகித்கானின் மகனையும்,ஃபர்ஹானையும் கொல்ல ஆளனுப்புகிறான். ஆனால் இருவரும் தப்பி விடுகிறார்கள். கொல்லச் சென்றவன் கொன்றுவிட்டதாகப் பொய் சொல்கிறான். ரமதீர் அரசியலில் பிசி யாகிறான். தொழிலாளி மந்திரியாகிறான். தொழிலாளர் யூனியன்களையும் கையகப் படுத்துகிறான். அவனின் ஆட்கள் கூலியாட்களுக்கு சொற்பமான முன் பணத்தைக் கொடுத்துவிட்டு வட்டியாக அவர்களின் மாத வருமானத்தைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். அவ்வப்போது தோன்றும் நேர்மை அரசாங்க அதிகாரிகளையும் கொன்று குவிக்கிறார்கள். ஆக ரமதீரின் சாம்ராஜ்யம் செழிப்படைகிறது.

 ஃபர்ஹான், ஷாகித்கான் மகனான சர்தார்கானை வளர்த்து ஆளாக்குகிறான். சர்தான் கானின் பதின்ம வயதிலேயே அவன் தந்தையின் மரணம் குறித்தும் ரமதீர்சிங் குறித்துமான கதைகளை சொல்கிறான். சர்தார்கான் இளம் வயதிலேயே அவனை அழிக்க வெஞ்சினம் கொள்கிறான். நக்மாவைத் திருமணம் செய்துகொள்கிறான். வரிசையாய் குழந்தைகளைப் பெற்றும் அடங்காத காமம் கொண்டு வேசிகளைப் புணர்ந்து திரிகிறான். அவனுக்கென்று ஓரிருவர் சேர்ந்ததும். ரமதீர் சிங்கிற்கு எதிராக மெல்ல வளருகிறான். ஸ்க்ராப் வியாபாரக் காண்ட்ராக்ட் பெறுவது, ரமதீர் சிங்கின் பெட்ரோம் பம்பைக் கொள்ளையடிப்பது, ரமதீருடன் நேரடியாக மோதி ஜெயிலுக்குப் போவது, ஜெயிலிலேயே பாம் தயாரித்து, சுவரை வெடிக்க வைத்து தப்பிப்பது, வாஸிபூரில் குரேஷிகளுக்கு சிம்ம சொப்பனமாவது என தொடர் நடவடிக்கைகள் மூலம் சர்தார் முக்கியப் புள்ளியாகிறான். கூடவே சர்தாரின் குடும்ப வாழ்க்கையும் விலாவரியாக பேசப்படுகிறது.

துர்கா என்றொரு பெங்காலிப் பெண்ணையும் இரண்டாவதாக மணந்து கொள்கிறான். முதல் மனைவியான நக்மா – வையும் குழந்தைகளையும் கைகழுவி விடுகிறான். பிள்ளைகள் பள்ளிக்குப் போவதை நிறுத்திவிட்டு ரயிலை சுத்தம் செய்து பணம் ஈட்டும் நிலைக்குப் போகிறார்கள். குடும்பத்தோடே இருக்கும் ஃபர்ஹானுக்கும் நக்மாவிற்கும் உறவு மலர்கிறது. அம்மாவையும் அப்பாவை வளர்த்தவரையும் ஒன்றாகப் பார்க்கும் முதல் மகன் மனம் வெறுக்கிறான். புகை- பொறுக்கித் தனம் என மாறிப் போகிறான். சர்தார் துர்காவுடன் திகட்டத் திகட்ட காமம் துய்க்கிறான். ரமதீர் சிங்கிற்கு தொடர் தொல்லைகள் தருகிறான். தன் இரண்டாம் மகனால் ஒருமுறை எதிரிகளின் குண்டிலிருந்து சர்தார் தப்பிக்கிறான். நக்மாவோடும் பிள்ளைகளோடும் மீண்டும் சேர்கிறான். துர்க்காவோடு சண்டை வருகிறது. மீன்பிடி தொழிலை ஆரம்பிக்கிறார்கள். நக்மா பெரிய வீட்டில் குளிர்சாதனப் பெட்டி, வாக்குவம் க்ளீனர் சகிதமாய் செட்டில் ஆகிறாள். பிள்ளைகளின் காலம் ஆரம்பிக்கிறது. ஃபைசல் கான் துப்பாக்கி வாங்க வாரணாசி போகிறான். துப்பாக்கி விற்பனையாளன் ஃபைசல் கானின் தாத்தாவான ஷாகித் கானைக் கொன்றவன். அவனின் சதியில் மாட்டி சிறைக்குப் போகிறான். சிறையிலிருந்து திரும்பி வருபவன். மீண்டும் துப்பாக்கி விற்பனையாளனை சந்திக்கப் போகிறான். முன்பு கொடுத்த அதே துப்பாக்கி என்பதை உணர்கிறான். விற்பனையாளனை கொல்கிறான். சமயோசிதமாய் துப்பாக்கிகளை ரயிலில் ஒளித்து வைத்துவிட்டு ஊருக்கு வருகிறான். இன்னொரு மகன் சர்தார் கானைப் போட்டுத் தள்ள துடிக்கும் சுல்தானா தங்கையின் மீது காதல் வயப்படுகிறான். சுல்தானாவின் எதிர்ப்பை மீறி திருமணம் நடக்கிறது. ஃபைசலும் காதல் வயப்படுகிறான். ஒரு அதிகாலையில் பெட்ரோல் பம்பில் வைத்து சர்தார் கானைப் போட்டுத் தள்ளுகிறார்கள். சர்தார் கான் இரத்த சக்தியாய் வண்டியிலிருந்து இறங்கி நடந்து போய் இன்னொரு மாட்டு வண்டியில் படுக்கிறான். முதல் பாகம் நிறைவடைகிறது.

 படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதைகள்- சம்பவங்கள்- நிகழ்வுகள்- போன்றவற்றை எழுத எழுத வந்து கொண்டே இருக்கின்றன. அவ்வளவு விவரணைகளை ஒரே படத்தில் திகட்டத் திகட்டத் தந்திருக்கிறார்கள். ஆனால் அலுப்போ சலிப்போ படம் பார்க்கும்போது ஏற்படுவதில்லை என்பதுதான் திரைக்கதையின் ஆச்சரியம். ஒண்ணரை மணி நேரத்திற்கு மேல் ஒரு திரைப்படத்தில் சொல்ல எதுவுமே இல்லை என்பது என் கற்பிதம். ஆனால் ஐந்தரை மணி நேரங்கள் அலுக்காத சலிக்காத ஒரு திரைப்படத்தை தர முடியும் என அனுராக் காஷ்யப் நிரூபித்திருக்கிறார். இதன் இரண்டாம் பாகத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சர்தார் கான் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மனோஜ் பாஜ்பாய். ராம்கோபால்வர்மாவின் சத்யா படம் நினைவிருக்கிறதா? அதில் டான் ஆக நடித்தவர். இந்தப்படத்தில் கிட்டத்தட்ட ஒரு முழு பட்டானாக வாழ்ந்திருக்கிறார். துபாயில் தமிழக- ஆந்திர அடிமட்டத் தொழிலாளிகளுக்கு அடுத்து பாகிஸ்தானிலிருந்து வரும் பட்டான்களின் எண்ணிக்கைதாம் அதிகம். நான் பார்த்த வரைக்குமான பட்டான்கள் முரட்டுத்தனமும் முட்டாள்தனமும் நிரம்பியவர்கள். எளிதில் உணர்ச்சிவயப் படுபவர்கள். எந்த பந்தா வும் இல்லாதவர்கள். எதற்கும் துணிந்தவர்கள். இந்த குணாதிசயங்கள் பெரும்பான்மையான பட்டான்களுக்கு ஒத்துப் போகும் போல.

சர்தார் கான் கதாபாத்திரம் இந்த குணாதிசயங்களை வேறு தளத்தில் பிரதிபலித்தது. காமுகனாக, முரடனாக, சுயநலமியாக, வஞ்சம் மிகுந்தவனாக, மூடனாக மனோஜ் பாஜ்பாயீ கிட்டத்தட்ட வாழ்ந்தே இருக்கிறார். தந்தையைக் கொன்ற ரமதீரைப் பழிவாங்கும் வரை தலையில் முடிவளர்ப்பதில்லை எனும் பதின்ம வயதில் எடுத்த சபதத்தோடு மொட்டைத் தலையில் லேசாக வளர்ந்த முடியோடே படம் முழுக்க வருகிறார். மனைவியுடனான ஊடல், கூடல், முரண்டு பிடிப்பது,  குரேஷிகளின் குடியிருப்புப் பகுதிகளுக்குப் போய் வெடிகுண்டு வீசுவது,  ரீமா சென்னின் மீது காம வயப்படல், தடதட வென முடிவுகளை உணர்ச்சி மேலீட்டில் எடுப்பது என மனோஜ் திரையில் வரும் ஒவ்வொரு நொடியும் உயிர்ப்பு. இவ்வளவு உயிர்ப்பும் ஆக்ரோஷமுமான ஒரு கதாபாத்திரத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்கிற ஆவல் தான் அதிகமானதே தவிர ஒரே ஒரு அசைவு கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை.

படத்தின் இன்னொரு பிரமாதமான காஸ்டிங் ரிச்சா சட்டா. சர்தார் கான் மனைவியாக வரும் நக்மா கதாபாத்திரம். ஏற்கனவே கொச்சையான பிஹாரி ஹிந்தியை இன்னும் கொச்சையாகப் பேசியிருப்பார். வாயைத் திறந்தால் வசை. படத்தை உயிர்ப்பாக வைத்திருப்பதில் இவரின் வசைகளுக்கும் பங்கு உண்டு. ஒரு சிறிய கட்டில் நன்கு வளர்ந்த இரண்டு மகன்கள் அருகே படுத்திருக்கிறார்கள். மூன்றாவது குழந்தை வயிற்றில் இருக்கிறது. சர்தார் கான் வேட்கையுடன் வயிற்றைத் தடவிக் கொண்டே கலவிக்கு அழைக்கிறான். டாக்டர்கள் கூடாதென்கிறார்கள் என்று மறுக்கிறாள். ”நீ கால மட்டும் விரி மத்ததுலாம் நான் பாத்துக்குறேன்” என்கிறான். ”இந்தப் பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சலில்லை” என்றபடி தீர்மானமாய் மறுக்கிறாள். ”நீ ஏன் அடிக்கடி வயிற்றைத் தள்ளிக் கொள்கிறாய்?” என்கிறான். கடுப்பான அவள் ”இதுக்கு காரணம் நீதான. இல்ல நீ ஊருக்குப் போறப்பலாம் அல்லா வந்தா ஓத்துட்டுப் போறாரு?” என்கிறாள். கோபம் கொண்டு எழுந்து போய்விடுகிறான்.

 நிறை மாத கர்ப்பத்தோடும் கையில் கத்தியோடும் சர்தார் கானை வேசிகள் குடியிருப்பில் விரட்டும் காட்சி ஒன்று போதும் ரிச்சா சட்டாவின் அற்புதமான நடிப்பைச் சொல்வதற்கு. இரண்டாம் மனைவியாக வரும் பெங்காலிப் புலி ரீமா சென் படத்தின் கவர்ச்சிக்கும் காமத்திற்கும் கொஞ்சமே கொஞ்சம் பங்களிக்கிறார். இரண்டாம் பகுதியில் ரீமாவின் பாத்திரம் வேறொரு பரிமாணத்தைக் காட்டக் கூடும். இது தவிர ஃபர்ஹான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பியூஷ் மிஸ்ரா, ரமதீர் - திக்மன்ஷூ போன்றார் படம் தொய்வில்லாமல் நகர முக்கிய காரணங்களாக இருக்கிறார்கள்.

மேக்கிங் குறித்து நாளெல்லாம் பேசிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு புத்திசாலித்தனம். அவ்வளவு நுட்பம். படத்தின் முதல் காட்சி ஒரு சீரியல் விளம்பரம். உயர் நடுத்தர வர்க்கத்து பெண்ணொருவர் அதீத பாவனைகளோடு பாடி ஆடும் பாடல், மெல்ல சுருங்கி டிவிப் பெட்டிக்குள் போகிறது. டிவிப் பெட்டி மெல்ல சிறியதாகிறது. பெட்டிக் கடை மாதிரி தெரிகிறதே என நாம் யோசிக்கும் முன்பே ஹை டெசிபலில் ஒரு தோட்டா டிவிப் பெட்டியைத் தாக்குறது. கடைய மூடு மூடு ஓடு ஒட்டிப்போ என்கிற குரல்கள் கேட்கின்றன. துப்பாக்கிகளோடு ஒரு கும்பல் ஃபைசல் கான் வீட்டைத் தகர்கிறது. சல்லடையாய் வீட்டைத் துளைத்தபின், கும்பலின் தலைவன் ஃபைசல் கான் மொபைலிற்கு போன் போடுகிறான். ஏதோ ஒரு குறுகிய அறையில் பைசல் கான் மற்றும் அவன் குடும்பம் ஒடுங்கி அமர்ந்திருக்கிறது. செல்போனின் ரிங் டோன் ”நாயக் கு ஹே! கல் நாயக் கு ஹே!. பாடல் சத்தமாக அலருகிறது. எடுக்காமல் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கும்பலின் தலைவன் இன்னொரு முறை முழு ரிங்கை விட்டு அனைவரும் செத்துப் போனார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு ”கல்நாயக் கதம்” என்கிறான்.

 இந்த ஒரு காட்சியின் நுட்பத்திற்காகவே அனுராக் காஷ்யப் – ஐ இறுகக் கட்டி முத்தமிடலாம். இன்னும் பேச வேண்டிய தளங்கள், பார்வைகள் படத்தில் ஏராளமாக உள்ளன. இரண்டாம் பாகம் வந்ததும் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

Sunday, July 1, 2012

Gangs of Wasseypur - 1

நிலக்கரிச் சுரங்கத்தில் கொத்தடிமை வேலை பார்க்கும் ஷாகித் கானிற்கு ஒரு செய்தி வருகிறது. அவன் மனைவியின் பிரசவத்தில் சிக்கல். செய்தி கொண்டு வந்தவனை சுரங்க முதலாளியின் அடியாட்கள் விரட்டிவிடுவதை பார்த்துவிடும் சக அடிமை ஒருவன் கிசுகிசுப்பாய் அச்செய்தியை சொல்கிறான். கண்காணிக்கும் அடியாட்களிடம் வீட்டிற்கு போக அனுமதி கேட்கிறான். மறுக்கப்படுகிறது. பலவந்தமாய் வெளியே போகிறான். கொட்டும் மழையில் வீட்டை அடைகிறான். ஆறு மணி நேரம் வலியில் துடித்த அவன் மனைவி ஆண் குழந்தையை பிரசவித்துவிட்டு இறந்துபோகிறாள். மனைவியைப் புதைத்துவிட்டு நிலக்கரிச் சுரங்க அடியாட்களை ஷாகித் கான் நையப் புடைக்கிறான். தடிதடியான அடியாட்களை சக கொத்தடிமைகளின் உற்சாக ஊக்குவிப்புக் குரல்களின் பின்னணியில் ஷாகித் கான் அடித்து வீழ்த்துவதை முதலாளி பார்க்கிறார். ஷாகித் கானை வேலையிலிருந்து விடுவித்து மேய்க்கும் அடியாளாக மாற்றுகிறார். இப்போது ஷாகித் கான் முன்னாள் சக வேலையாட்களை நையப் புடைக்கிறான். வீடுகளை எரிக்கிறான். ஆற்றாமையில் ஒருவன் ”நீயும் எங்களில் ஒருவன் தானே?”  என கேட்கிறான். ஷாகித் கான் அவனை நெட்டித் தள்ளி உதைக்கிறான்.

 கேங்ஸ் ஆஃப் வாஸிபூர் படத்தில் வரும் மேற்சொன்ன காட்சி படத்தை முழுவதுமாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம். முதலாளி வர்க்கத்தின் அசல் முகத்தையும் முதலாளி களாக விரும்பும் சாமான்யர்களின் ரத்தமும் சதையுமான போராட்டத்தையும் எழுபது வருட இந்திய அரசியல் பின்னணியோடு மிக அழுத்தமாய் நம் முன் வைத்திருக்கிறார் அனுராக் காஷ்யப். இவரின் இதற்கு முந்தைய அரசியல் படமான 2009 இல் வெளிவந்த குலால் ராஜபுத் அரசியலின் ‘பின்னணி’ யைத் தோலுரித்துக் காட்டிய படம். இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை சரியான அரசியலை முன் வைக்கும் படங்கள் மிக சொற்பமானவை. அதில் குலால் படத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. தற்போது வந்திருக்கும் கேங்க்ஸ் ஆஃப் வாஸிபூர் படம் குலாலைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. அனுராக் காஷ்யப் தன் சாதனையைத் தானே முறியடித்திருக்கிறார்.

வாஸிபூர் தற்போது ஜார்கண்ட்  மாநிலத்திலுள்ள தன்பாத் மாவட்டதிலிருக்கும் சிறுநகரம். இதற்கு முன்பு பீஹார் மாநிலத்தின் கீழும் அதற்கும் முன்பு பெங்கால் கீழும் இருந்தது. இங்கு பெரும்பான்மையினர் முஸ்லீம்கள். முஸ்லீம்களில் இறைச்சி வெட்டும் தொழிலைப் பிரதானமாகக் கொண்டிருக்கும் குரேஷிகளுக்கும் இன்னொரு பிரிவினரான சன்னி முஸ்லீம்களுக்கும் (பட்டான் என்று பொதுவாக அழைக்கப்படுவர்) எப்போதும் பகை இருந்தது. இந்த இரண்டு குழுக்களுக்கு இடையே நிகழும் வன்முறையும், போட்டியும், பழியும்தான் வாஸிபூரின் கதைக் களம். மொத்தக் கதையும் ஷாகித் கான் என்கிற பட்டான் குடும்பத்தின் பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது. நல்ல Vs கெட்ட என்கிற வழக்கமான சினிமாக் கதை சொல்லும் உத்திக்குப் பதிலாய் கெட்ட Vs கேடுகெட்ட என்கிற அடிப்படையில் பொருத்தி கதை சொல்வது. இந்த வகைக் கதை சொல்லும் உத்தியை செர்ஜியோ லியோனிலிருந்து, குவாண்டின் டராண்டினோ வரைக்குமாய் மிக சிறப்பாய் கையாண்டார்கள். இந்திய சினிமாவில் இவ் வகைக் கதை சொல்லும் உத்தி இப்படத்தில்தான் முழுவதுமாகச் சாத்தியமாகி இருக்கிறது. பின்னணி வரலாறை விவரிக்கும் டாக்குமெண்டரி ஸ்டைல் குரல், பரவசமான கொலைகள், களிப்பூட்டும் பாலியல் வசைகள் என படம் முழுக்க டராண்டினோவின் சாயலில் எடுக்கப்பட்டிருக்கிறது. டைட்டில் கார்ட் உள்ளிட்ட சில காட்சிகளில்  இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தின் நேரடி உத்தி- பாதிப்பு தெரிகிறது. 


இதுவரை படம் பார்க்காதோர் இனிமேல் வரும் பதிவுகளை படம் பார்த்துவிட்டு வாசிக்கவும். கதையை முழுவதுமாகப் பேச வேண்டிய தேவை இருக்கிறது. 


மேலும்

Tuesday, June 19, 2012

உயிர்த்திருத்தல்

சதத் ஹசன் மண்ட்டோவின் தலைப்பு மறந்து போன சிறுகதை ஒன்றில் அப்பா கதாபாத்திரமொன்று தொடர்ந்து வீட்டை/ தரையை சுத்தம் செய்தபடி இருக்கும். சிறு சிறு கூரான துரும்புகள் எங்கே தன் சின்னஞ்சிறு மகனை காயப்படுத்திவிடுமோ வென தொடர்ந்து அஞ்சியபடி இருக்கும். கடந்த மூன்று வருடங்களாய் நானும் அக்கதாபாத்திர மனநிலையில்தான் பெரும்பாலும் உழல்கிறேன். இந்த அசட்டுத்தனமான எண்ணங்கள், தேவையற்ற பயங்கள் யாவும் புதுத்தகப்பர்களின் இயல்பு - போகப்போக சரியாகிவிடும் என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்ட ஆரம்ப நாட்கள், இப்போதைய என்னைப் பார்த்து கேலியாகச் சிரிக்கின்றன. இன்னமும் மோசமான, பயங்களின்/ கற்பனைகளின் உச்சத்திற்குத்தான் நகர்ந்திருக்கிறேனே தவிர எவ்வித சமநிலை திரும்பலும் இல்லை. சொல்லப்போனால் பயம் துவங்கிய நாளிலிருந்து அடுத்த ஒண்ணரை வருடத்தில் இரட்டிப்பானதே தவிர சமநிலைக்குத் திரும்பவேயில்லை. இந்த பயங்களும், கற்பனைகளும், மிகைகளும் என்னைப் பலவீனனாக்கி இருப்பதை தனிமையில் புரிந்து கொள்கிறேன். ஏற்கனவே சோம்பேறியான என்னை வீட்டை விட்டு நகரவே நகராத அதி சோம்பேறியாக மாற்றியிருப்பதும் உண்மை. ஆனால் என் வாழ்வின் மிக சந்தோஷமான,உயிர்ப்பான நாட்கள் இவை என்பதையும் மறுப்பதற்கில்லை ( ஆமாம் நீ எப்போதுதான் துக்கமாயிருந்தாய்?)

பெரியவன் லொடலொட வென பேசிக்கொண்டே இருக்கிறான். சின்னவன் அவன் பேச்சைப் பார்த்து சொற்களற்ற குரலை அதே பாவத்தில் உயர்த்துகிறான். நால்வருமே சேர்ந்து கோரஸாய் கத்தி அவ்வப்போது வீட்டை அலற வைக்கிறோம். ஓடி, குதித்து, விழுந்து, வாரி, சுவறில் மோதி, பொருட்களை உடைத்து, கத்தி, சிரித்து, பயந்து, பயமுறுத்தி, பாடி, ஆடி ஒவ்வொரு நொடியையும் உயிர்ப்பாக்குகிறோம். புற உலக மனிதர்கள் தவிர்த்து எண்ணற்ற கதைகள், கதாபாத்திரங்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள், பேய்கள்(Bயா,காஞ்சனா) என எங்களின் உலகம் சகல வஸ்துக்களாலும் நிரம்பி வழிகிறது. பிங்குவும் ஷான் த ஷீப்பும் எங்களின் மூன்றாம் நான்காம் பிள்ளைகள். ஒரு உச்சத்தில் இதயம் விரிந்து கண்ணில் படும் அத்தனை சிறார்களும் எங்களின் பிள்ளைகளாக பாவிக்கும் பெரும்கருணையும் வந்து சேர்ந்திருக்கிறது.


அவதார், ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட், ஹேப்பிஃபீட், குங்க்பூபாண்டா, தமிழ் ரைம்ஸ், காக்கா –நரி கதைகள், குத்துபாட்டுக்கள் போன்றவைகளால் கூடம் நிறைகிறது. சோதனை முயற்சியாக சென்ற வாரத்தில் காஸ்ட் அவே வை பெரியவனோடு சேர்ந்து பார்த்தேன். டாம் ஹாங்க்ஸ் நெருப்பை வரவழைக்கும் காட்சிக்கு கண்கள் வியந்து ஆர்ப்பரித்தான். மெல்ல கதையை அவனுக்கேற்றார்போல் மாற்றி அங்கிள் டாமின் அவல நிலையை அவன் வார்த்தைகளில் மொழி பெயர்த்து ( பல்ல சரியா தேய்க்காததால அங்கிள்க்கு சொத்த பல்லு வந்திருச்சி, பிஷ் சாப்ட்றாம்பா, அங்கிள பியா கட்ச்சிருச்சா, காஞ்சனா(படம் வரையப்பட்ட பந்து) கடல்ல வுந்திரிச்சி, செம செமயா மழ, போட்ல போறான்) பாதிப் படம் பார்த்தோம். அலைகள் டாமை மீண்டும் கரை சேர்த்தபோது இவன் சோர்ந்து ”டி.வி பாத்தா கண்ணு கெட்டுடும்” என திடீர் நல்ல பிள்ளையாகி எழுந்து போய் சுவிட்சை நிறுத்தினான். பின்போர் இரவில் சில்ரன் ஆப் ஹெவன் படத்தையும் அவனுக்கு மொழி பெயர்த்தேன். சாகஸ காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் அச்சிறுவர்களின் முக பாவனைகள் இவனைப் பெரிதும் ஈர்த்தது. அலி ஓடி ஜெயிக்கும் காட்சிக்கு பெரியவன் ஆர்ப்பாட்டமாய் சிரித்தும், என் மனைவி கண்கள் நிறைந்துமாய் இரு வேறு மனப் பதிவுகளை வெளிப்படுத்தினர். தாய்மையின் உச்சத்தில் அலியும் சாராவும் இப்போது வளர்ந்திருப்பார்களா? சினிமா நடிக்கிறார்களா? எனக்கேட்ட மனைவிக்கு இணையத்தில் தேடிப் பார்த்து சொல்வதாய் சொன்னேன்.
 0 
சமீபமாய் மீண்டும் ஓஷோவை கேட்க ஆரம்பித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஓஷோவின் உரைகள் புத்துணர்வைத் தருவதென்னவோ உண்மை. தம்மபதா குறித்த உரைகளை தொடர்ந்து கேட்டதன் விளைவு, முன்பொரு காலத்தில் நான் விபாஸனா பயின்றது நினைவிற்கு வந்தது. இணைய நண்பர்கள் வழியாய் தம்மபதாவின் மூல வடிவம், மகாவசம்சம் போன்றவைகளை படிப்பதற்காக தரவிறக்கி வைத்திருக்கிறேன். மிக முக்கியமாக விபாஸனாவை மீண்டும் தூசி தட்ட வேண்டும் என்ற எண்ணமும் வந்திருக்கிறது. செய்ய வேண்டியவைகளின் பட்டியலில் தினம் ஒன்று கூடுவதாக இன்றளவும் வாழ்வு அமைந்திருப்பதில் திருப்தியே. என் ப்ரியத்திற்குறிய சோம்பலன் மிக நீளமான to-do பட்டியலில் புதிய வார்த்தை ஒன்றை இன்றும் எழுதிவிட்டு தூங்கப் போகிறான். தூக்கம் தழுவுவதற்கு முன்பு என்னுடைய கனவு இடத்தின் (மரங்கள் சூழ்-நீர் சூழ்-மலைகள் சூழ் ) சாணத் தரையில் பாய் விரித்து சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்றைத் தேடியெடுத்து முதல் பக்கத்தைப் பிரிக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அந்த மென்சூழலிலும் தூக்கமே தழுவுகிறது. நீங்கள் கிம்-கி-டுக் கின் the isle படத்தில் நீர் அசைவுடன் -படகு வீட்டில்- காற்றின் முணுமுணுப்போடு இருவர் தூங்கும் காட்சியை நினைவுபடுத்திப் பார்க்கலாம். நானும் அக்காட்சியைத்தான் கனவப்போகிறேன்.

Tuesday, May 8, 2012

வழக்கு எண் 18/9

இரானிய இயக்குனர் மக்பல்ஃப் ம் பாலாஜி சக்திவேலும் ஒரு டீக் கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறுவன் டீக் கடைக்காரரைப் பார்த்து மிகவும் அதட்டலாய் “ஒரு பன்னு கொடுய்யா” எனக் கேட்கிறான். மக்பல்ஃப் அந்த சிறுவனை உற்றுப் பார்த்துவிட்டு இந்தச் சிறுவனின் பின்னால் போனால் ஒரு பிரமாதமான கதை கிடைக்கும் என்கிறார். பாலாஜி சக்திவேல் மக்பல்ஃப் சொன்னதை சரியாக புரிந்து கொண்டதின் விளைவுதான் வழக்கு எண் 18/9. சாலையோர மனிதர்களின் பின்னால் அலைந்து/ஊடுருவி அவர்களின் வாழ்வை மிகச் சரியாகப் புரிந்து கொண்டாலொழிய இம்மாதிரிப் படம் நிகழ சாத்தியமேயில்லை. தமிழ் சினிமா காட்சிப் படுத்த வேண்டிய முக்கியமான விஷயங்களாக நான் நினைப்பவற்றுள் சாலையோர மனிதர்களின் வாழ்வும் ஒன்று. உதிரிகள், விளிம்புநிலை மனிதர்கள் மீதான கவனம் தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு ஏற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய மற்றம். சினிமாவும், இலக்கியமும், இன்ன பிற கலைகளும் சமூகத்தின் கண்ணை/ பார்வையை கூர்மையாக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. கேளிக்கை என்பதற்கான அருஞ்சொற்பொருளை மழுங்கியவை என மாற்றிய பெருமை, நம் தமிழ் சினிமா வணிகர்களுக்கு உண்டுதான் என்றாலும் அவர்களை ஒரு நிமிடமேனும் வெட்கமடையச் செய்யும் திராணி இந்தப் படத்திற்கு இருக்கிறது.

பாலாஜி சக்திவேலின் முதல் படமான சாமுராய் நிறையவே சினிமாத்தனங்கள் மிகுந்திருந்த சராசரிப் படம். ஆனால் இன்னபிற வணிக சினிமாக்களை விட சற்றே மேம்பட்டதாக இருந்தது. இரண்டாவதும், சங்கர் தயாரித்து ஜென்ம சாபல்யம் அடைந்து கொண்டதுமான காதல் தமிழின் மிக முக்கியமான சினிமா. நுணுக்கங்களும் விவரணைகளும் பின்னிப் பிணைந்த மிக உயிரோட்டமான படம். காதலின் வெற்றிக்குப் பிறகு குறைந்தது மதுரையை மையமாக வைத்து அதே சாயலில் ஐம்பது சிறுபடங்கள் வந்திருக்கும் ஆனால் காதல் திரைப்படத்தை மிஞ்சும் /நெருங்கும் அசலான மதுரைப் படம் ஒன்றைப் பிறரால் தர முடியாமலேயே போனது. மூன்றாவது படமான கல்லூரி எனக்கு பிடிக்கவில்லை. யதார்த்தவாதம், நேர்த்தியான கதாபாத்திர சித்தரிப்புகள் என நல்ல சினிமாவிற்கான பல விஷயங்கள் இருந்தும் தமிழ் நாட்டில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அவலத்தை ஆந்திராவில் நிகழ்த்திக் காட்டி படைப்பாளியின் ஆளுமை மீதான அவநம்பிக்கை உருவாக காரணமாக இருந்தது அந்தப் படம். பாலாஜி சக்திவேல் சில வருட இடைவெளிக்குப் பிறகு தந்திருக்கும் வழக்கு எண்ணை காதலின் இரண்டாம் பாகமாக அனுகலாம். காதல் பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்திய அதே உணர்வை,பாதிப்பை இந்தப் படமும் ஏற்படுத்தியிருக்கிறது.

இரு வேறு துருவங்களின் வாழ்வு, முக்கியமாய் பதின்மர்களின் உலகம் மிகக் கவனமாகக் கையாளப்பட்டுள்ளது. இளம் பிராயத்தில் பெண் மீது ஆணுக்கு ஏற்படும் ஈர்ப்பு, வறுமையின் எதிர்காலமாகவும் பணக்காரத்தனத்தின் வாயூரிசமாகவும் இருக்கின்றது. வசதி படைத்த நவீன வாழ்வும், ராட்சத்தனமாய் வளர்ந்திருக்கும் தொழில்நுட்பங்களும் முதலில் தேடிப் பிடித்துக் கொல்வது மனிதனின் நுண்ணுணர்வுகளைத்தான். ஒரே உணர்வின் வெளிப்பாட்டை இரு வேறு சூழல்கள் தீர்மானிக்கும் விதத்தை யோசித்துப் பார்த்தால் மெல்லிய பயம் படர்வதை தடுக்க முடியவில்லை. ஆர்த்தியின் வழியாய், ஜோதியின் வழியாய் தத்தமது மகளை பார்த்துக் கொள்ளும் தகப்பன்களின் பதட்டத்தை யாரால் குறைத்து விட முடியும்?


கிட்டத்தட்ட அழிந்தே போன கூத்துக் கலையின் சிறு எச்சமாய் சின்னசாமி கதாபாத்திரத்தை இத்திரைப்படம் மீட்டெடுத்திருக்கிறது. பெண் வேடமிடும் பதின்மர்களின் சாயல் அனைத்தையும் முழுமையாய் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த சின்னசாமி ஏதோ ஒரு கிராமத்தில் பெண் வேடமிட்டு கூத்தில் நடித்தவனாகத்தான் இருந்திருக்க வேண்டும். வேலுவை தனியாக சந்தித்து “உனக்கு பொய் பேச வராது மொதலாளி தொரத்திட்டான்னா எங்க போவ, அதான்யா நான் அப்புடிப் பேசினேன் எதையும் மனசில வச்சிக்காதய்யா” என மருகும் காட்சியை இன்னும் சில வருடங்களுக்கு என்னால் மறக்கவே முடியாது. அந்தக் காட்சிக்கு முத்தாய்ப்பாய் “இவ்ளோ காச வச்சிட்டு நான் என்ன பண்ணுறது இந்தாடா” என பணத்தை நீட்டும் வேலுவின் கண்களின் வழியே நேயத்தின் மாபெரும் விழுதுகளைப் பார்க்க முடிந்தது.

மிகக் குரூரமான பால்யத்தையும் மிக மோசமான அனுபவங்களை மட்டுமே வாழ்க்கையாகவும் கொண்ட வேலுவிற்கு முதலில் கிடைக்கும் அன்பு அல்லது பிடிமானம் ரோஸியினுடையது. நைந்த அக்கைகளைப் பிடித்து நிற்பவன் நிலத்தில் காலூன்றி இன்னொரு மெலிந்த பெண்ணின் கைகளைப் பிடித்துக் கொண்டு பறக்க நினைக்கிறான். இவர்களை அதிகார வர்க்கக் கழுகுகள் கொத்திக் கொத்தி விரட்டியடிக்கின்றன. நைந்த சிறு பறவைக்கும் கூரிய அலகிருப்பதை கழுகுகளுக்கு சொல்வதுதான் இறுதிக் காட்சி. மீறல்களும்,கிளிஷேவும் அங்கங்கே எட்டிப் பார்க்கிறதுதான் என்றாலும் பெரிய அளவில் உறுத்தல்கள் இல்லாமல் மிகச் சரியாகவே இக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல் புரிந்துணர்வோடு சாதிய வேர்களையும் சரியாய் தொட்டுப் போயிருக்கிறது.

அங்காடித் தெருவில் கால்களை இழந்த பெண்ணை வண்டியில் உட்கார வைத்துத் தள்ளிக் கொண்டு போகும் ஆணின் சித்திரமொன்று படத்தின் இறுதிக் காட்சி என்ன என்பதை பூடகமாக உணர்த்தும். இந்தப் படத்திலேயும் கண்ணிழந்த பெண்ணும் ஆணுமாய் அவ்வப்போது திரையைக் கடந்து போவதை வைத்து இறுதிக் காட்சியை யூகிக்க முடிகிறது( சிலப்பதிகார காலத்து உத்தியாயிற்றே) க்ளைமாக்ஸிற்கு சற்று முன்பிலிருந்து படத்தை துவங்கி, முன்னும் பின்னுமாய் கதையை சொல்லி, விவரணைகளாலும் நெகிழ்வுகளாலும் படத்தை நிரப்பி, அநீதியால் கலங்க வைத்து, ஆழமான நம்பிக்கையோடு படத்தை முடிப்பது நல்ல திரையாக்கம்தான். parallel சினிமாக்களுக்கு இது மிகவும் பழக்கமான வடிவம். நல்ல படங்கள் என அறியப்பட்ட பெரும்பாலான படங்கள் இந்த வடிவத்தைத்தான் கையாண்டிருக்கின்றன. தமிழிலும் இதே வடிவத்தில் சினிமாக்கள் வர ஆரம்பித்திருப்பதை நல்ல மாற்றம் எனக் கருதினாலும் சற்றே அலுக்க ஆரம்பித்திருப்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இப்போது மீண்டும் மக்பல்ஃபிற்கு வருவோம். ஒரு வேளை மக்பல்ஃப் இதேக் கருவை சினிமாவாக்கியிருந்தால் வேலுவிற்கு சிறைத் தண்டனை கிடைப்பதோடு படத்தை முடித்திருப்பார். சமூகத்தின் அவலத்தை பதிவு செய்ய நினைத்தின் நேர்மையான வெளிப்பாடு என்பது அந்த மட்டிலேயே நின்று போகிறது. மாறாய் இங்கு ஜோதியின் விஸ்வரூபம் முழுக்க சினிமாத்தனத்திற்காக சேர்க்கப்பட்ட இனிப்பு மட்டுமேதான். ஆனாலும் ஜோதியின் பழி வாங்கலுக்கான நியாயமான காரணங்கள் படம் நெடுக சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தக் கவித்துவ நியாயங்கள்தாம் படத்தைத் தாங்கி நிற்கின்றன.

Friday, May 4, 2012

Gadjo Dilo aka Crazy Stranger 1997: டோனி காட்லிஃப்


ஸ்டீபன் (Stéphane) என்கிற பாரீஸ் நகர இளைஞன் தன் தந்தைக்கு மிக விருப்பமான பாடகியான நோரா லூகா (Nora Luca) வைத் தேடிப் பயணிக்கிறான். அவனின் தந்தை இறக்கும் வரையிலும் நோரா லூகாவின் பாடல்களை மட்டுமே சிலாகித்துக் கேட்டுக் கொண்டிருந்தது அவனுக்கு முக்கியமாகப் படவே நோரா லூகாவைக் கண்டுபிடித்து தந்தையின் மரியாதையை செலுத்தும் நோக்கத்துடன் பயணத்தைத் துவங்குகிறான். தெற்கு ரோமானியாவின் சிறு நகரத்திற்கு வந்தடையும் ஸ்டீபனுக்கும் இசிடோர்(Izidor) என்கிற முதியவரின் வழியாய் அ
றிமுகமாகும் அக்கிராம ஜிப்சிக்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்களின் தொகுப்புதான் இப்படம். ரோமானிய ஜிப்சிக்களின் வாழ்வை மிக நேரடியாக பதிவு செய்த படம் இது. புனைக்கதைக்கும் ஆவணப்படத்திற்குமான மிகப் பெரும் இடைவெளியை டோனி காட்லிஃபின் படங்கள் குறைக்கின்றன. மக்களின் வாழ்வோடு புனைவாக சிலவற்றை சேர்த்து பதிவதுதான் இவரது பாணி. இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதாபாத்திரங்களும் என் மனதில் மிக ஆழமாய் தங்கிப் போய்விட்டன. எதனால் இந்தத் திரைப்படம் என்னை அடித்துப் போட்டது என்பதை சரியாய் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அறியாமையின் களிப்பையும் கொண்டாட்டத்தையும் ஒவ்வொரு காட்சியிலும் பெற முடிகிறது.

இப்படத்திற்கு இசையும் டோனி காட்லிஃப்தான். முழுக்க ரோமானிய ஜிப்சி இசைக் கருவிகளும், நாட்டுப்புற பாடல்களும் படத்தை நிறைத்திருக்கும். ரோமானிய ஜிப்சிக்கள் என அறியப்படுவோரின் ஆதி வேர் இந்தியாவிலிருந்துதான் துவங்குகிறது. வட இந்திய நாடோடிகள் இடம்பெயர்ந்து ரோமானியா முதற்கொண்டு ஐரோப்பா முழுக்க சிதறலாக வாழ்கின்றனர். ஆகவே அவர்களின் இசையிலும் நாட்டுப்புற பாடல்களிலேயும் இந்தியத் தன்மையை உணரமுடியும். மிக நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் நம் நரிக்குறவர்களின் சாயலை ரோமானிய ஜிப்சிக்களிடம் அப்பட்டமாகப் பார்க்க முடியும். உரத்த குரலில் ஆன்மா அதிரும்படி அடியாழத்திலிருந்து கதறி அழுவது போல் பாடுவதுதான் ஜிப்சிக்களின் பிரதான இசை மொழி. இன்னொரு வகையில் நம் ஊர் ஒப்பாரியோடும் இப் பாடல்களின் சாயலைப் பொருத்திப் பார்க்க முடியும். மிகப் பெரிய தந்தி இசைக்கருவிகளை மீட்டுவதிலும் ரோமானிய ஜிப்சிக்கள் தேர்ந்தவர்கள். ரோமானியர்களின் திருமணம், சாவு போன்ற சடங்குகளில் ஜிப்சிக்களின் இசை மிக முக்கியமான இடத்தை வகிக்கும். பனி உறைந்த, வழியேதும் புலப்படாத ஒரு சாலையில் நடந்து, நடந்து ஓய்ந்த ஸ்டீபனின் அறிமுகத்தோடு படம் துவங்குகிறது. எதிர்பாராத விதமாக அவனைக் கடந்து சொல்லும் குதிரை வண்டி ஒன்றில் இளம் பெண்கள் கும்பலாய் அமர்ந்திருக்கின்றனர். சோர்வாய் நடந்து செல்லும் ஸ்டீபனின் அந்நியத் தன்மையும் தோற்றமும் அப்பெண்களுக்கு சிரிப்பை வர வழைக்கிறது. அவர்களின் மொழியான ரோமானியில் அவன் யாரென வினவுகிறார்கள். மொழி புரியாத ஸ்டீபன் பிரெஞ்சும் ஆங்கிலமுமாய் பதில் பேச, அவன் பேச்சும் உருவமும் சிரிப்பை அதிகமாக்குகிறது. தாம் பேசுவது அவனுக்குப் புரியவில்லை என உணர்ந்த பெண்கள் அவனை சிரித்தபடியே வசைகிறார்கள். சிரிப்பும் கும்மாளமும் அப்பெண்கள் கூட்டத்தில் தளும்ப மேலும் பல வசைகளும் கூடலுக்கான அழைப்பையும்( என்னுடையதை நக்க வா, இதோ இவள் இருக்கிறாளா இவள் உன்னுடையதின் மேல் உப்பையும் மிளகையும் தூவி உண்பதில் கெட்டிக்காரி) காற்றில் சிதறவிட்டு அக்குதிரை வண்டியும் பெண்களும் அடர்ந்த மரங்களின் வழியாய் திரும்பி மறைகின்றனர். இன்னொரு ஜீப் ஒன்று அவனைக் கடந்து செல்கிறது. அதனுள் காயம்பட்ட ஒரு இளைஞனை போலீஸார் துப்பாக்கிகள் சகிதமாய் சிறைப்பிடித்து அழைத்துச் செல்கின்றனர்.

சூரியன் மறைந்த பின்பு அதே கிராமத்திற்கு வந்தடையும் ஸ்டீபன், மூடப்பட்ட ஒரு விடுதிக்கு வெளியே தனியாய் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் முதியவர் இசிடோரிடம் தங்கும் இடம் குறித்து விசாரிக்கிறான். ஏற்கனவே நல்ல போதையில் இருக்கும் அவர், அவனை வற்புறுத்தி குடிக்க வைக்கிறார். தன்னுடைய மகனை இந்த ரோமானியர்கள் பழி சுமத்தி போலிஸில் பிடித்துக் கொடுத்துவிட்டார்கள் எனவும், ஜிப்சிக்களுக்கு இங்கு நீதி கிடையாது எனவுமாய் அரற்றுகிறார். அவர் பேசுவது ஸ்டீபனுக்கும், ஸ்டீபன் பேசுவது அவருக்கும் புரியவில்லை என்றாலும் இசிடோர் அவனை அதிர்ஷ்டம்தான் தன்னிடம் அனுப்பி வைத்ததாக நம்ப ஆரம்பிக்கிறார். நல்ல போதையில் இருவரும் நெருக்கமாகி பாஷைகள் தேவையற்ற மொழியை பேச ஆரம்பிக்கின்றனர். இசிடோர் ஸ்டீபனைத் தன் வீட்டிற்கு அழைத்துப் போகிறார். ஒருவர் மட்டுமே வசதியாக உறங்க இயலும் படுக்கையில் அவனைப் படுக்கச் சொல்லிவிட்டு குதிரை லாயத்தில் போய் படுத்துக் கொள்கிறார்.

அடுத்த நாள் காலை இசிடோர் எழுந்து காட்டிற்கு விறகு சேகரிக்கப் போய்விடுகிறார். தன்னுடைய வீட்டில் ஸ்டீபன் தூங்குவதை மறந்துவிடுகிறார். அக்கம் பக்கம் இருக்கும் சிறுவர்களும், பெண்களும் தூங்கிக் கொண்டிருக்கும் ஸ்டீபனைப் பார்க்கிறார்கள். அவனுடைய ஆகிருதியான உருவம் சிறுவர்களை மிரட்சியடைய வைக்கிறது. அவனை பூதம் என்றும், சிறுவர்களைப் பிடித்துப் போகிறவன் என்றும் கோழிகளைத் திருடுபவன் என்றுமாய் ஆளாளுக்கு நினைத்துக் கொள்கிறார்கள். இன்னொரு சிறுவர் குழு வனப் பகுதிக்கு ஓடி இசிடோரிடம் அவன் வீட்டில் ஒரு பூதம் படுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஸ்டீபன் எழுந்து வீதியில் நடந்து போகிறான். அங்கு வாழும் மொத்த மக்களும் அவனை விநோதமாய் பார்க்கிறார்கள். தங்களுக்குள் அவனைப் பற்றி கிசுகிசுக்கிறார்கள். ஸ்டீபன் உணவு விடுதிக்குப் போய் இசிடோர் தங்க இடம் கொடுத்ததிற்கு நன்றி சொல்லும் விதமாய் உணவையும் மதுவையும் வாங்கிக் கொண்டு திரும்புகிறான். வீட்டிற்கு வரும் இசிடோருக்கு நேற்றைய சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன. ஸ்டீபனை தன் மகனாக பாவிக்கிறார். அதிர்ஷ்டம் அவனைத் தன்னிடம் அனுப்பி வைத்திருப்பதாக சக கிராமத்தவருக்கு சொல்கிறார். அவன் பேசுவதைப் புரிந்து கொள்ள சபீனா வை அழைத்து வரச் சொல்கிறார். சபீனா பெல்ஜியத்தில் சில காலம் வசித்தவள்.ஜிப்சிக் குழாமத்தின் பேரழகி ஆனால் கடுமையாக வசைவாள். ஒரு சிறுவன் இசிடோர் அழைத்து வரச் சொல்வதாய் சபீனாவைப் போய் அழைக்கிறான் அச்சிறுவனைப் பார்த்து ”உன் அம்மாவை அசிங்கப்படுத்துவதற்குள் ஓடிவிடு” என்பாள். இசிடோர் அழைத்தும் வர மறுத்து விடுகிறாள். இருவரும் கடுமையாய் பாலியல் வசைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள் (உன்னுடையது சுருங்கிப் போகட்டும்)

நாட்பட நாட்பட சபீனா,ஸ்டீபன்,இசிடோர் மூவருக்கும் இடையே மலரும் அன்பும், நட்பும் கொண்டாட்டமும் படத்தின் முக்கியமான காட்சிகளாக நகர்கின்றன. இசிடோர் தலைமையில் ஒரு திருமணத்திற்கு பாடவும் இசைக்கவும் போகிறார்கள். ஸ்டீபன் நோரா லூகாவைப் பற்றி அனைவரிடமும் விசாரிக்கிறான். இசிடோர் தனக்குத் தெரிந்த இசைக் கலைஞரான மிலன் என்பவரைப் பார்க்க அழைத்துப் போகிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சமீபத்தில் மிலன் இறந்துபோன தகவலை மட்டுமே பெறுகிறார்கள். தன்னுடைய நண்பன் இறந்துபோன துக்கம் தாளாது அவரைப் புதைத்த இடத்தில் சப்தமாய் பாடி இசிடோர் மருகும் காட்சி மனதில் நின்று போகிறது. சபீனாவும் ஸ்டீபனும் கலவி கொள்ளும் காட்சிக்கு நிகரான ஒரு காட்சியை நான் வேறெந்த படத்திலும் கண்டதில்லை. சுதந்திரத்தன்மையின் உச்சமாக இருவரின் கானகக் கலவியை மதிப்பிடலாம். அதிகார வர்க்கங்களின் வெறியாட்டத்தை ஜிப்சிக்களின் நெருக்கடியான வாழ்வை மிகத் துல்லியமாய் பதிவு செய்யும் வகையில் அமைந்திருக்கும் படத்தின் இறுதிக் காட்சி மிகவும் துக்கமானது. 

ஸ்டீபனாகவும் சபீனாவாகவும் நடித்திருந்த Romain duris ம் Rona Hartner ம் இப்படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தனர். இதே ஜோடி டோனி காட்லிஃபின் Children of the Stork படத்திலும் நடித்தார்கள். டோனியின் Exiles படத்திலும் ரோமைன் தூரிஸ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். ரோமானிய சமூகத்தினர் ஜிப்சிக்களை திருடர்களாக, களவை அடிப்படையாகக் கொண்டவர்களாகவே பார்க்கிறார்கள். ஆனால் ஜிப்சிக்கள் உன்னதமான கலைஞர்கள் என்பதை டோனி இப்படத்தில் மிக ஆழமாய் பதிவு செய்திருப்பார்.

சக்கரங்களின் மேல் வீடுகளை வைத்துக் கொள்ள கனவு காணும் ஜிப்சிக்களின் வாழ்வு தருணங்களில் மட்டுமே பொதிந்து கிடக்கிறது. இசிடோரின் மகனான அட்ரியானவின் அதிராகத்திற்கு எதிரான சின்னக் குரல் ஒட்டு மொத்த ஜிப்சி குழாமே தடயமில்லாமல் அழிந்து போவதற்கு காரணமாக அமைகிறது. ஆனால் தருணங்களில் வாழ்பவர்களுக்கு நிரந்தரங்களின் மீது ஒருபோதும் விருப்பமிருந்தது கிடையாது. நகர்வில் மட்டுமே வாழ்வு உயிர்த்திருப்பதாக ஜிப்சிக்கள் நம்புகின்றனர்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த tutti frutti பாடல்

Featured Post

test

 test