Monday, September 27, 2010

ஓஎன்வி இரசிகரின் மத்தி மீன் குழம்பு ரெசிபி

சமீபமாய் நண்பர் ஒருவரின் வீட்டிற்குப் போயிருந்தேன். அவர் ஒரு மலையாளி. என்னுடன் வந்தவர்கள் என்னை ‘புள்ளி எழுத்துக்காரானானு’ என அவருக்கு அறிமுகப்படுத்த அவரிடம் ஒரு சிறிய பரபரப்புத் தொற்றிக் கொண்டது. என்னுடைய எழுத்துப் பின்புலங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார், அவரையும் ஒரு கலாகாரன் என்றே நண்பர்கள் அறிமுகப்படுத்தினர். நண்பர், ஓஎன்வி குருப்பின் மிகப்பெரும் இரசிகர். ஓஎன்வியின் புகைப்படமும் சில புத்தகங்களும் அவர் வீட்டில் பார்க்க முடிந்தது. அவர் ஜீவிதத்தில் ஓஎன்வியைத் தவிர வேறு யாரையும் படித்ததில்லை, படிக்க விரும்பியதுமில்லையாம். "ஓஎன்வியின் பாடல்களுக்கு காங்கிரஸ் மலையாளிகளும் அடிமை, நான் ஒரு உதாரணம்!" என்கிற கூடுதல் தகவலையும் பகிர்ந்தார். பின்பு படுக்கையறைக்குச் சென்று திடீரென தரையில் படுத்தார். கட்டிலுக்கடியில் ஊர்ந்து, சிறிய அரை வட்டம் ஒன்றை அடித்து அப்ஸல்யூட் வோட்கா பாட்டிலோடு வெளியில் வந்தார். மிகச் சுறுசுறுப்பாக கண்ணாடிக் குவளைகளையும்,பனித்துண்டங்களையும் ஐந்தே நிமிடங்களில் தயாரித்த வெள்ளரிக்காய் சாலட்லையும் கொண்டு வந்து மேசையில் பரப்பினார். முதல் ரவுண்டிற்குப் பிறகு அதே அவசரத்துடன் உள்ளறைக்குச் சென்று சட்டையணிந்தார். "பத்து மினிட்டு" எனச் சொல்லியபடியே கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்விட்டார். உடன் வந்த நண்பர்கள் புதிர் முக பாவனை ஏதும் இல்லாமல் சாதாரணமாய் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் தம்மடிக்கப் போயிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். மிகச் சரியாய் ஒன்பதரை மினிட்டில் உள்ளே மீன்களோடு வந்தார்.

அவரின் வீடு ஸ்பானிய பாணியில் கட்டப்பட்டது. இண்டர்நேஷனல் சிட்டியில் ஸ்பானிஷ் ப்ளாக்கில் வசிக்கிறார். வீட்டின் கூடத்தோடு ஒட்டியபடி சமையலறை இருக்கும். கிட்டத்தட்ட நம் செட்டிநாட்டு வீடுகளின் உள் முற்றம் போன்ற ஒரு செவ்வக வடிவ திட்டுதான் சமையலறை. எங்களுடன் பேசியபடியே இருபது நிமிடத்தில் சுவையான காரமான மத்தி மீன் குழம்பையும் பத்தே நிமிடத்தில் கப்பாவையும் தயாரித்து மூன்றாவது இரவுண்டில் பரிமாறினார். அபரிதமான ருசியுடனிருந்தது அந்த உணவு. பொதுவாகவே மலையாளிகளின் உணவின் மீது எனக்கு பெரிதாய் விருப்பம் கிடையாது. ஒரு வித அசிரத்தையுடன் தான் சாப்பிடத் துவங்கினேன். நல்ல காரத்துடனான மீன் குழம்பின் சுவை அறைக் குளுமையையும் மீறி வியர்க்க வைத்தது. நண்பரின் மீன் குழம்பு ரெசிபி மிகவும் சுலபமானது. ஒரு சொட்டு எண்ணெய் கூட பயன்படுத்தாமல் இந்த ருசியான குழம்பைத் தயாரித்தார்.

இந்த மல்லு மீன் குழம்பிற்கு தேவையான பொருட்கள் (பெயர் நானாய் வைத்ததுதான் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை)

மத்தி மீன் (நெய் மத்தி கிடைத்தால் மிக நன்று) : ஆறு அல்லது எட்டு முழுத் துண்டுகள்
சிறிய வெங்காயம் பொடியாய் நறுக்கியது : அரை கப்
பூண்டு பொடியாய் நறுக்கியது : கால் கப்
மிளகாய் தூள் – தனியா கலக்காதது : இரண்டு மேசைக் கரண்டி
தனியா தூள் – மிளகாய் கலக்காதது : ஒரு மேசைக் கரண்டி
பச்சை மிளகாய் – நடுவில் கீறித் துண்டாக்கவும் – ஆறு துண்டுகள்
இஞ்சி – பொடியாய் நறுக்கியது : கால் கப்
கொடும்புளி - எலுமிச்சையளவு
வெந்தய பொடி – சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

வாயகன்ற மண் சட்டியை (மண் சட்டி இல்லையென்றால் மீன் குழம்பு வைக்கும் திட்டத்தைக் கைவிடவும்) அடுப்பில் வைத்துச் சூடாக்கி மிளகாய் மற்றும் தனியா தூளை இட்டு லேசாய் வாட்டிக் கொள்ள வேண்டும். பின்பு நீரூற்றி நன்கு கலக்கவும். இப்போது கறிவேப்பிலை,பூண்டு,வெங்காயம்,மிளகாய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாய் சட்டியிலிருக்கும் கரைசலில் போடவும். லேசாய் கொதி வந்த பின்பு கொடும்புளியைத் தூவிவிடவும். பின்பு மீன் துண்டங்களை ஒவ்வொன்றாய் கரைசலில் அமிழ்த்தவும். ஒரு போதும் கரண்டியைப் பயன்படுத்திக் கலக்க கூடாது. சட்டியை ஜாக்கிரதையாய் தூக்கி கலக்கலாம். ஒரு மூடியைப் போட்டு மூடிவிட்டு தீயைக் குறைத்துவிடவும். பத்தே நிமிடத்தில் ருசியான குழம்பு தயார். ஒரு வித அனுபூதி நிலையில் அவர் இந்த ரெசிபியை என்னிடம் பகிர்ந்தார். நான் நான்கு ரவுண்ட் அனுபூதியோடு இதையும் சிரத்தையாய் கேட்டுத் தெரிந்து கொண்டபடி விடைபெற்றேன்.

சனிக்கிழமை ஓஎன்விக்கு ஞான பீட விருது கிடைத்ததை அறிந்ததும் நண்பரின் நினைவு வந்தது. தொலைபேசி வாழ்த்தினேன். ‘நிங்கள் என்னை விளிக்கும் அம்பதாவது ஆளாம்’ என்ற ஆச்சரிய தகவலையும் பகிர்ந்தார். ஓஎன்விக்கு கூட இத்தனை தொலைபேசி அழைப்புகள் போயிருக்காது என்றேன். மனிதர் ஐம்பதாவது முறையும் அதே நெகிழ்வோடு ஓஎன்வியை நினைவு கூர்ந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஓஎன்வியை துபாயில் நேரில் சந்தித்தும் பரவசமடைந்திருக்கிறார். ஓஎன்வி எழுதிய சினிமா பாடல்கள் குறுந்தகடைக் கேட்டேன். வெள்ளியன்று வந்தால் அவரின் பாடல்களைக் கேட்டபடியே குடிக்கலாம் என அழைப்பு விடுத்தார். வருவதாகச் சொல்லி தொலைபேசியை வைத்தேன்.

நேற்று ஜெமோவின் ஓஎன்வி வசை கட்டுரையைப் படித்தவுடன் நண்பருக்குத் தொலைபேச வேண்டும் போலிருந்தது. ஆனால் அபரிதமான அந்த மீன் குழம்பின் ருசிதான் என்னை அம் முட்டாள்தனமான எண்ணத்திலிருந்து காப்பாற்றியதோ என்னவோ. ஏனெனில் ஓஎன்வியை யாராவது அவர் முன் கிண்டலடித்தால் மனிதர் மிருகமாகிக் கிண்டலடித்தவரை கடுமையாய் தாக்கும் நிலைக்குச் சென்றுவிடுவாராம். ஒரு குடி நிகழ்வில் அவர் நண்பர்களில் யாரோ ஒருவர் அச்சுதானந்தனை முன் வைத்து எழுந்த கிண்டலை ஓஎன்வியில் முடித்துச் சிரிக்க ஆரம்பிக்ககூட இல்லையாம் பளார் என்ற சப்தத்தை அனைவருமே கேட்டிருக்கிறார்கள். சிவப்பான விழிகளோடு மூச்சு வாங்க "பட்டி மோனே" என புஸ்ஸிக் கொண்டிருந்தாராம் நண்பர். அவருடைய இன்னொரு நண்பர் இந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்தார். நான் பெருமூச்சு விட்டுக் கொண்டேன். ஜெமோ கட்டுரையை அப்படியே சொல்லி இருந்தால் என் நிலை என்ன ஆகி இருக்கும். நல்ல வேளை தப்பித்தேன்.

மாலை பேரங்காடியில் நெய் மத்தி மீன்களைப் பார்த்தேன். அப்போதுதான் வந்து இறங்கி இருக்க வேண்டும். அதன் மலர்ச்சியே என்னை வாங்கத் தூண்டுவதாய் இருந்தது. மீன்களை வாங்கிக் கொண்டு வந்தேன். நண்பரின் ரெசிபியை நினைவுபடுத்திப் பார்த்தேன். தமிழ் மரபில் ஊறிய சமையல் மனம் வெங்காயத்தையோ பூண்டையோ வதக்காமல் குழம்பு வைக்க அஞ்சியது. எனவே அதே பொருட்களைக் கொண்டு கீழ் வரும் முறையில் செய்து பார்த்தேன். இந்த முறையும் மிக ருசியாகவே இருந்தது. நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாம்.

மல்லோ-டமில் மத்தி மீன் குழம்பு.

தேவையான பொருட்கள்: மேலுள்ளதுதான். தாளிக்க எண்ணைய் மட்டும் இம்முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை :

வாயகன்ற மண் சட்டியை (மண் சட்டி இல்லையென்றால் இம்முறையிலேயும் மீன் குழம்பு வைக்கும் திட்டத்தைக் கைவிடவும்) அடுப்பில் வைத்துச் சூடாக்கித் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். வெந்தயம் (வெந்தயப் பொடிக்குப் பதிலாய் வெந்தயமே நாம் பயன்படுத்தலாம்) கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் போன்றவற்றை வரிசைக் கிரமமாய் போட்டு வதக்கவும். மேற் குறிப்பிட்ட மிளகாய் மற்றும் தனியா தூளைக் கொட்டிக் கிளறி நீரூற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் புளிக் கரைசலை ஊற்ற வேண்டும் ( புளியை அப்படியே இட வேண்டாம்) மீன்களை ஒவ்வொன்றாய் மெதுவாய் குழம்பில் இறக்கவும். மென் தீயில் வைத்துக் கொதிக்க விடவும். இதன் சுவையும் அபரிதமாய்த்தான் இருந்தது. ஆனால் லேசான ருசி வேறுபாட்டை உணர முடிந்ததுதாம் என்றாலும் குழப்பம் ஒன்றும் இல்லை.

இப்போது மல்லு மீன் குழம்பிற்கும் மல்லோ-டமில் மீன் குழம்பிற்குமான செய்முறை வித்தியாசங்கள் மற்றும் ருசி அளவின் விகித உயர்ச்சிகள், தாழ்வுகள் குறித்துப் பதிவு செய்ய வேண்டும். அதை இன்னொரு முறை செய்கிறேன். நீங்கள் இரண்டு முறைகளையும் முயற்சித்துப் பார்த்து விட்டு எனக்கு எழுதுங்கள். பூமியிலிருந்துதான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

Wednesday, September 15, 2010

மன்றாடல்


எனக்கான எதுவொன்றின் ஆசுவாசக் கரங்கள் எப்போதும் அணைத்துக் கொள்ளும் தவிப்புகளோடு விரிந்திருக்கின்றனவோ அவற்றின் தாள் பணியும் அல்லது அவற்றைக் கண்டுணர்ந்து முழுமையாய் அடைக்கலமாகும் பெருமுயற்சிகளே இந்தச் சிறு(மை) வாழ்வுப் பிரயத்தனங்களின் பின்புலமாகவிருக்கிறது என்பதுதான் என் இத்தனை தலை கீழ் பாடுகளின் ஒற்றை வரி விளக்கமாகவிருக்கிறது.

என் ப்ரியத்திற்குரிய ப்ரியமே உன் வடிவம் யாது? உன் பருண்மை என்ன? உன்னொளி என் இருண்மைகளை விரட்டுமா? நீ இப்பிரபஞ்சத்தில்தான் உலவுகிறாயா? உடல் முழுக்க காயங்களைக் கொண்டிருக்கிறேன். எப்போதுமே எதைக் கொண்டும் நிரப்பிடாத இடைவெளியை நானாகவே தருவித்துக் கொண்டிருக்கிறேன். நீ என் மீட்பராய் இருப்பாய். என்னை இரட்சிப்பாய். திசையறியா ஆட்டுக் குட்டிகளின் தாய்மை நீயாமே? என்னைக் காத்தருள். என்னை மீட்டெடு. என் பாவங்களை நீக்கு. தூய வெண்ணிறப் போர்வை கொண்டு என்னை மூடு. உன் சுகந்தத்தில் கண் மூடி நெடு நாள் உறங்க வேண்டும். என்னருகே உறங்கும் என் மகனின் பாதுகாப்புணர்வு எனக்கும் கிட்டட்டும். என் அறிவுக் குப்பைகளென்று நானாய் நம்பிக் கொண்டிருப்பவற்றை நீக்கு. என் போலித்தன்ங்களை களை. என்னை நிர்மூலமாக்கு. என்னை அழி. என்னை ஒரு பள்ளத்தாக்கிலிருந்து தலைக் குப்புறத் தள்ளிவிடு. என்னை இல்லாமலாக்கு என் இறையே. என் காதலே. என் மதுவே.

தூயச் செந்நிற மது நானாவேன். தூய வெண்ணிற மதுவும் நானாவேன். அதிதூய போதையாய் இரு. இருள் கிழிக்கும் ஒளி நானாவேன். ஒளி மூடும் இருள் போர்வையும் நானாவேன். நீ என் ஆதவனாய் சந்திர பிம்பமாய் எப்போதுமிரு. விருட்சம் நான். கிளை நான். இலை நான். சருகு நான். நீ என் வேராய் இரு. நீ என் நீராய் இரு. நீ என் விழுதாய் இரு. என் இறையே, என் காதலே, என் மதுவே, எனக்கான எல்லாமாய் நீ இரு.

இந்தப் பாலையில் அலைகழிகிறேன். தங்க மணல் வசீகரிக்கிறது. ஒளியில் ஜ்வலிக்கும் மணலில் நடக்க நடக்க கால்கள் புதைகின்றன. மூச்சு முட்டுகின்றது. மீள நீண்ட கைப் பிடிகள் யாவும் வழுக்கல்கள். யோசனைகளோடு நீண்ட விரல்கள் யாவிலும் விந்தின் கொடு நாற்றம். இல்லை இல்லை இல்லை என்னை மீட்கும் கரங்கள் இவைகளில்லை. என்னை வெளியேற்றும் விரல்களும் இவைகள் இல்லை. அஃதொரு தூய்மையின் முடிவிலா தாய்மைக் கரங்கள். விரிந்த இரு கரங்கள். நீண்ட விரல்களில்லை. ஒருபோதுமில்லை.

அஃதொரு நதியின் கரங்களை ஒத்திருக்கும். எல்லையிலா விரிவைக் கொண்ட நதியின் கரங்களவை. என் கனவில் வந்ததே. பதறி விழித்தும் விழாமலும் அழுதேனே. அக்கரங்களை நானறிந்தில்லையெனினும் கண்டு கொள்வேன். முன்பொரு பொழுதில் அக்கரங்களின் விரிவு தொடைகளின் மடியாய் விரிந்திருந்தது. என்னை முழுவதுமாய் பொதிந்து கொண்டது. அப்போதுதான் நானழுதேன். முதன்முறையாய். கடைசி முறையாயும். அத்தொடை மடிகளின் கதகதப்பை நானறிவேன். அதன் சாயல்களை நீ கொண்டிருந்தால் கூட போதும். என் இறையே என் மதுவே. நீ இப்பூமியிலா உலவுகிறாய்?

மேகக் கூட்டங்களின் பொதி நீயாமே. வானின் நீலமும் நீயாகவே இருக்க முடியும். கடலும் வானும் சங்கமிக்கும் நீலப் பின் புற ஒளியும் நீதானே? இந்தப் பனிக்கட்டி கரையும் செந்நிறத் திரவம் தரும் கரைசலும், வான் கடல் நீலமும் ஒன்றா? அப்படியெனில் நான் வானைக் குடிக்கிறேன். அப்படி அப்படியெனில் நான் கடலைக் குடிக்கிறேன். நீரில் ஒளிரும் கத்தி மீனாய் பாய்கிறேன். ஆழம் பயம் தருகின்றது. நீல ஆழம் போகப்போக இருளின் ஆழம். நீ ஆழமாய் இரு. ஆனால் நீலமாய் இரு. கருப்பு இருளின் ஆழம் அச்சமூட்டுகின்றது. ஆழம் இருள்தான் எனினும் நீ நீலமாயிரு. எனக்கே எனக்காய் நீல ஆழ இருளாயிரு. என் ப்ரிய ப்ரிய ஆழமே, இருளே, நீலமே.

அறியாதவனாய் கேட்கிறேன் எங்கிருக்கிறாய் நீ? சாவின் வடிவத்திலா இயங்குகிறாய்? மரணம்தான் எப்போதைக்குமான ஆசுவாசமா? எல்லாவற்றையும் குடித்துத் தின்றுச் செரித்துக் கொண்டாடும் வாழ்வல்லவா உனது! உன்னிடம் வந்தவர்களை என்ன செய்வாய்? எப்போதைக்குமான அன்பை அறியத் தருவாயா? ஏய் சாவே, நீ என்னை என்ன செய்வாய்? ஒருவேளை நீ தான் என் இறையா? என் மதுவா? என் காதலா? நீதான் சகலமுமா? என்னை அணைத்துக் கொள்ளேன். உன்னில் பொதிந்து கொள்ளேன். என்னை மூழ்கடியேன், என்னில் திளையேன் அல்லது உன்னில் திளைக்கவிடேன். என் இறையே மதுவே காதலே சாவே.

Featured Post

test

 test