Thursday, January 31, 2019

ROMA - சமன் செய்யும் துயர்




அல்போன்ஸோ க்வெரானின் ரோமா படத்தைப் பார்த்து முடித்தேன். முதன் முறையாய் ஒரு நெட்பிலிக்ஸ் திரைப்படம் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கரின் பல்வேறு பிரிவுகளில் இடம் பிடித்திருப்பது நல்ல விஷயம்தான். திரைப்படம் திரையரங்குகளை மட்டும் நம்பியிருக்கத் தேவையில்லை.  தமிழ்சூழலில் 'ரிலீஸ்' தான் மிகப் பெரியச் சிக்கலாக இருக்கிறது. ரோமா போன்ற உதாரணங்கள் நம் சூழலில் நல்ல நம்பிக்கைகளை விதைக்கலாம்.

அல்போன்ஸோ க்வெரானின் எல்லாத் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். Y Tu Mamá También, படமும் Children of Men திரைப்படமும் எனக்குப் பிடித்தமானவை. குறிப்பாக சில்ரன் ஆஃப் மென் என்னை நடுங்க வைத்தது. தொழில் நுட்ப ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் இவரின் திரைப்படங்கள் உச்சமானவை. ரோமா வின் ஒவ்வொரு காட்சியுமே இவரது Technical Brilliance க்குச் சான்று.

கருப்பு வெள்ளையில்தான் உணர்வுகள் மிகத் துல்லியமாக வெளிப்படுகின்றன. அதுவும் ரோமா போன்ற சற்றுக் கூடுதலாக நெக்குருக வைக்கும் படங்கள் கருப்பு வெள்ளையில் இன்னும் மிளிர்கின்றன.

ஒரு மத்தியதரவர்க்க வீட்டின் பணிப்பெண்ணைக் குறித்த கதை என ஒருவரியில் சொல்லிவிடக் கூடிய விஷயதாம்தான். 1970 களில் மெக்சிகோ நகரமே உள்நாட்டுக் கலவரங்கள், மாணவர் போராட்டங்களெனத் தடுமாறிக் கொண்டிருந்த காலம். அதே நெருக்கடிகள் பெரும்பாலான குடும்பங்களையும் அலைக்கழித்தது. குறிப்பாய் பெண்கள் எல்லாவித துரோகங்களிற்கும் உள்ளாகினர். இந்த நெருக்கடிகளும் இழப்புகளும்  மாறி மாறி மக்களைத் துன்புறுத்திய  கருப்பு வெள்ளை நாட்களை அல்போன்ஸோ க்வெரான் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

ஒட்டு மொத்த திரைப்படத்தையும் ஒற்றைச் சொல்லில் துயரும் காலம் அல்லது துயர் என சுருக்கி விடலாம். ஆனால் இந்த உணர்வைக் கையாண்ட விதம்தான் ஆச்சரியத்தைத் தருகிறது. ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட பலக் காட்சிகள் வியப்பைத் தந்தன. எவ்வளவு பெரிய ஒத்திசைவு இந்த குழுவினருக்கு இருந்திருக்க வேண்டும். மிகவும் அர்ப்பணிப்பான பணியின் பலனே இந்த அங்கீகாரம்.



இறுதிக் காட்சியில் நெகிழ்ந்தும் பதபதைத்தும் போனேன். ஏனோ யூமாவாசுகியின் இரத்த உறவு நாவல் படம் நெடுக நினைவில் வந்து கொண்டே இருந்தது. மீண்டும் அந்த நாவலை வாசிக்கும் எண்ணத்தையும் இந்தப் படம் தூண்டியது. துயரமும் இழப்பும்தான் மானுடத்தை இணைக்கிறது. சமூக அடுக்குகள், கருப்பு வெள்ளை மனநிலைகள், ஏற்றத் தாழ்வுகள் எல்லாவற்றையும் துயர் சமன் செய்து விடுகிறது. ரோமா திரைப்படம் இதன் சாட்சியமாய் விளங்குகிறது.

அறிவுத் தளத்தில் இந்தத் திரைப்படத்தை 'சென்டி' என ஒதுக்கிவிடலாம்தான் ஆனால் உணர்வுத் தளத்தில் அப்படிச் செய்ய இயலுமா எனத் தெரியவில்லை.
சமீபமாய் என்னைச் சுற்றியுள்ள உலகம் முழுவதும் 'சென்டி' யாக மாறிக் கொண்டிருக்கிறது. நானும் இந்தக் கத்தியைப் பள்ளத் தாக்கில் விசிறி எறிந்துவிட்டு அதி 'சென்டி'யாய் எழுதிக் கொண்டிருப்பதை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

Thursday, January 24, 2019

சலனமற்று முன் நகரும் புராதனப் படகு- த்வீபா




கிரிஷ் காசரவள்ளி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான த்வீபா  ( தீவு) கன்னடப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்துவிட்டு இன்னும் அத் திரைப்படத்தின் நினைவுகளோடே சுற்றிக் கொண்டிருக்கிறேன். வாழ்நிலம் மீதான மனிதனின் உரிமை,  தொன்மத்துடனான மனித இருப்பு, இயற்கையுடனான வாழ்வியல் பிணைப்பு, அதிகாரங்களும் அரச யந்திரங்களும் உருவாக்கும் சூழலியல் சீர்கேடு, இறுதியாய் பெண் குறித்தான தெய்வ ஒப்பீடுகள் என இந்தத் திரைப்படம் எல்லாக் காலத்திற்கும் பேசப்பட வேண்டிய நுட்பமான விஷயங்களை மிகச் சரியாய் பேசியிருக்கிறது.

ஒன்றன் பின் ஒன்றாய் இந்தத் திரைப்படம் தொடும் உணர்வுகளும் அரசியலும் நிலைப்பாடும் நிலைகுலைய வைக்கின்றன. ஆழமான நதியின் மீது சலனமற்று முன் நகரும் புராதனப் படகைப் போல இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கிறது. திரைப்படத்தின் எந்தக் காட்சியையுமே கிரீஷ் காசரவள்ளி உருவாக்கவில்லை. கதைப் பேசும் இடத்திற்கே சென்று மொத்த சம்பவங்களையும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இயற்கையோடு இணைந்து ஒரு திரைப்படம் உருவாவது சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனால் த்வீபா அப்படியே வந்திருக்கிறது. மிகப்பெரிய மாஸ்டரால் மட்டுமே இயலக் கூடிய விஷயங்கள் இவை. அந்த வகையில் கிரீஷ் காசரவள்ளியை உலகத்தின் மிகச் சிறந்த மாஸ்டர் இயக்குனர்களின் வரிசையில் வைத்துப் பேசிவிட முடியும்.

த்வீபா - சாகித்ய அகடாமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் நா டிசெளசாவின் நாவல் - கன்னடத்தில் சாகித்ய அகடாமி விருது பெற்ற என்கிற அடைமொழியை எந்தத் தயக்கமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கு தகுதியானப் படைப்புகளுக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறது. தமிழில் எழுதத்தான் கூச்சப்பட வேண்டும்.  இந்த நாவலைத்தான் கிரீஷ் திரையில் கொண்டு வந்திருக்கிறார். நான் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதுதான் இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கியம் கன்னடத்தில்தான் எழுதப்படுகிறது. இந்தக் கூற்றை நிரூபிக்க இதோ இன்னொரு உதாரணம் இந்த நாவல். 

கன்னட மொழிபெயர்ப்புகள் தமிழில் அதிகம் நிகழ வேண்டும். எழுத்தாளர் விவேக் ஷன்பேக் தவிர வேறு யாரும் சமீபமாய் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. வங்கம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகும் மிகச் சிறந்த படைப்புகளும் தமிழிற்கு வருவதில்லை. சினிமாப் பின்புலம் கொண்ட அல்லது தன்முனைப்பும், பிரபல வெறியும் கொண்ட பிற மொழி எழுத்தாளர்களின் படைப்புகள் அதேத் தன்மைகளைக் கொண்டிருக்கும் தமிழர்களால் மொழிபெயர்க்கப்படுகிறது. இது இந்திய இலக்கியத்தையே குழி தோண்டிப் புதைக்கும் செயலாகவே பார்க்கிறேன். தமிழில் மொழிபெயர்ப்போர் குறைந்தபட்ச நேர்மையுடனாவது இயங்க வேண்டிய தேவை இப்போது அதிகம் உருவாகியிருக்கிறது. மொழிபெயர்ப்புகளில் முக்கியப் பங்கு வகித்துக் கொண்டிருந்த நேஷ்னல் புக் ட்ரஸ்ட் இப்போது இயங்குகிறதா என்பதும் தெரியவில்லை.

இந்தப் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான நாகியை செளந்தர்யா ஏற்று நடித்திருக்கிறார். உயிரைக் கொடுத்து நடிப்பது எனச் சொல்வார்களே அதற்கு உதாரணமாக செளந்தர்யாவின் இந்தக் கதாபாத்திரத்தைச் சொல்லிவிடலாம்.  தவிர செளந்தர்யாவே இப்படத்தின் தயாரிப்பாளர். நிஜமாகவே செளந்தர்யாவின் இழப்பு இப்போதுதான் என்னை பாதித்திருக்கிறது. இவ்வளவு மகத்தான நடிகையை தமிழ் சினிமா எவ்வளவு மோசமாகப் பயன்படுத்தியிருக்கிறது என்பதை நினைத்தால் இன்னும் எரிச்சல் மண்டுகிறது. கூரியப் போர் வாட்களை  வெங்காயம் நறுக்க மட்டுமே பயன்படுத்தும் அகங்காரம் கொண்டது நம் தமிழ் சினிமா. அதோடு ஒரு தசாம்தத்திற்கு ஓரிருவர் என உருவாகி வரும் கலைஞர்களையும் பணத்தாலே அடித்து  மிக மோசமான மசாலாப்பட இயக்குனர்களாக மாற்றிவிடும் வல்லமையும் கொண்டது. போகட்டும். 

இந்தப் படம் குறித்துச் சொல்ல இன்னும் இருக்கிறது. இது வெற்றுப் புலம்பலாகப் போய்விடவிடவே அடுத்த பதிவில் எழுதுகிறேன்.


Friday, January 11, 2019

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்


Y

ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை சமீபமாய் மீண்டும் வாசித்தேன். என் இருபதுகளில் மிகுந்த உணர்வெழுச்சியைத் தந்த  நாவல் இது.  ஹென்றி கதாபாத்திரம் என்னுடனேயே தங்கிவிட்டது என்றும் கூட சொல்லிவிடலாம். சில மாதங்களுக்கு முன்பு இந்நாவலின் பிடிஎப் வடிவம் கிடைத்தது.  மீண்டும் வாசிக்க விரும்பினாலும் ஒரு சின்னத் தயக்கம் இருந்தது. நம் ஆரம்பகாலத்தில் வாசித்த, மிகவும் பிடித்துப் போன படைப்புகளை இப்போது வாசித்துப் பார்க்கும்போது அது மிகவும் சாதாரணப் படைப்பாக தோன்றிவிடலாம்.  மோகமுள்ளை மறுவாசிப்பு செய்து அப்படி ஒரு உணர்வை அடைந்தேன். இதையா அப்படி கொண்டாடினோம் என்கிற மனநிலை உருவானது. ஆனாலும் மரப்பசு நாவல் மறு வாசிப்பிலும் பிடித்திருந்தது. ஒரு குழப்பமான மனநிலையில்தான் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை வாசிக்கத் தொடங்கினேன். முழுமையாய் வாசித்தே மீண்டேன். இந்த நாவல் இன்னும் அதிகமாய் என்னை ஈர்த்துக் கொண்டது.

இப்போதைய வாசிப்பில் ஹென்றி கதாபாத்திரத்தை கிரேக்க எழுத்தாளர் நிகோஸ் கஸண்ட்ஸாசிஸ் உருவாக்கிய ஸோர்பா கதாபாத்திரத்தோடு ஒப்பிட முடியும் எனத் தோன்றியது. இருவருமே கணங்களில் வாழ்பவர்கள். பழைய மரபான விஷயங்களை உடைத்து தன்னியல்பான ஒரு வாழ்வை முன்னெடுப்பவர்கள். ஸோர்பாவின் கொண்டாட்ட முறைகள்  (குடி, பெண், நடனம்) வேறாக இருந்தாலும் இருவரின் மனநிலையும் ஒன்றுதான் எனத் தோன்றியது. இதயத்திலிருந்து பேசவும் வாழவும் முடிகிற ஒரு மனிதனாக இருவரையும் ஒரே தராசில் வைக்க முடியும்.

ஹென்றியின் வளர்ப்புத் தந்தை கதாபாத்திரமான சபாபதிப் பிள்ளை இன்னொரு அற்புதமான குணவார்ப்பு. அவரின் அடியொற்றித்தான் ஹென்றி என்கிற முழுமையான மனிதன் உருவாகிறான். ஹென்றி பள்ளிக்கூடம் போவதில்லை. அவனுக்கு என்ன செய்யப் பிடிக்கிறதோ அதை மட்டுமே செய்யும் சுதந்திரத்தை பப்பா தருகிறார். பப்பா ஹென்றியிடம் சொல்வது ஒன்றைத்தான் எப்போதும் சந்தோஷமாக இரு அதுவே தர்மம். ஹென்றி அப்படித்தான் இருக்கிறான்.

ஜேகே உருவாக்கியிருக்கும் கிருஷ்ணராஜபுரம் ஒரு கற்பனை கிராமம். ஆனால் கிராம மக்கள் பேசும் வட்டார வழக்கு வட தமிழகத்தின் மொழியாக இருக்கிறது. மல்லாட்டை, காசி என பணத்தை சொல்வது - எளிய மக்கள் சதா எச்சிலைத் துப்பியபடி, துப்பிய எச்சிலின் மீது காலால் மண்ணை நகர்த்தி மூடுவது, வேட்டியை தலைப்பாகையாக கட்டிக் கொள்வது போன்ற விவரிப்புகள் ஒரு வடதமிழக கிராமத்தை அடையாளம் காட்டுகின்றன. மக்களின் பேச்சு மொழியும் வட தமிழக மொழிதான்.

இந்த கிருஷ்ணராஜ புரத்திற்கு ஆங்கிலோ இந்தியனைப் போன்ற தோற்றம் கொண்ட தமிழ் சரிவரப் பேசத் தெரியாத ஹென்றி வந்து சேருகிறான்.  அவன் வரும் லாரியில் அறிமுகமான தேவராஜனுடன் நட்பு உருவாகிறது. தேவராஜன் அந்த கிராமத்து பள்ளிக்கூடத்து வாத்தியார். அவர் வீட்டிலேயே தங்குகிறான். தேவராஜன் ஒரு முறை ஹென்றியை குடிக்க அழைக்கிறார். ஹென்றிக்கு குடிப்பழக்கமில்லை ஆனால் மறுப்பேதும் சொல்லாமல் தேவராஜனுடன் குடிக்க அமர்கிறான். அவனுக்காக ஊற்றப்பட்ட மது காலியாவதே இல்லை. தேவராஜன் எனக்காக உங்கள் கொள்கையை தளர்த்துகிறீர்களா எனக் கேட்கிறார். ஹென்றி என் கொள்கையே Flexible ஆக இருப்பதுதான் என்கிறார். இந்த வரியைப் படித்துவிட்டு ஒரு கணம் ஆடிப்போனேன்.

எவ்வளவு பெரிய தத்துவம் இது. மனிதன் மட்டும் Flexible ஆக இருந்துவிட்டால், மதங்களும் சாதிகளும் அவனை கூறு போட்டிருக்காது இல்லையா?

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - என்றென்றைக்குமான நாவல்.




Thursday, January 10, 2019

Black Mirror: Bandersnatch (2018)



Netflix இல் வெளிவரும் Black Mirror தொடரின் ரசிகன் நான்.  மிகச் சமீபமாய் நண்பர் பினாத்தல் சுரேஷ் பரிந்துரையின் அடிப்படையில் நான்காவது season லிருந்து பார்க்க ஆரம்பித்தேன்.  முதல் கதையான  USS Callister தந்த வியப்பால் இதுவரை வெளிவந்த மொத்தப் பகுதிகளையும்  தொடர்ச்சியாய் பார்த்து முடித்தேன். வேறொரு உலகத்தில் மிகச் சரியாக சொல்லப்போனால் எதிர்காலத்தில் வாழ்வது போன்ற பிரம்மை உருவானது. என் ஒவ்வொரு நொடியும் யாராலோ கண்காணிக்கப்படுகிறது. என் எல்லா நகர்வுகளையும் யாரோ தீர்மானிக்கிறார்கள் என்பன போன்ற கற்பனைகள்  சூழ ஆரம்பித்தன. உண்மையில் என் பைத்தியம் முற்றிற்று. கிட்டத்தட்டக் கடவுளைப் போன்றே அறிவியலையும் காண வேண்டும். அறிவியலும் கடவுளும் ஒன்றே என்றெல்லாம் பிதற்ற ஆரம்பித்தேன்.

சதா இந்தக் கதைகளில் மூழ்கிக் கிடந்ததன் பலனாய் "முள்ளம்பன்றிகளின் விடுதி" என்றொரு கதையை எழுத முடிந்தது. (இந்தக் கதையை ஒட்டக மனிதர்கள் எனும் பெயரில் கானல் பதிப்பகம் தொகுத்த அமீரகச் சிறுகதைகள் நூலில் வாசிக்க முடியும்) ஆனாலும் இந்தத் தொடர் அடிமை மனநிலை சரியாகப் படாததால் 'நெட்ஃபிலிக்ஸை' கைவிட்டேன்.  அடுத்த Black Mirror பகுதி வரும்போது பார்த்துக் கொள்ளலாம். மேலதிகமாய் ஏப்ரலில் வரும் GOT . இதைத் தாண்டி வேறெந்த தொடரையும் பார்க்க கூடாது எனவும் முடிவெடுத்திருந்தேன். கடந்த வாரம் வெளியான Bandersnatch குறித்து நண்பர்கள் வியப்பாய் பேசிக் கொண்டதும்,  குறிப்புகளை வாசிக்காமல் இணையத்தில் தரவிறக்கிப் பார்க்க ஆரம்பித்தேன்.

Bandersnatch ஐ மொத்தம் ஆறு மணி நேரம் ஓடக்கூடிய படமாக வடிவமைத்திருக்கிறார்கள். முதல் இரண்டு மணி நேரங்கள் பார்த்து முடித்ததும்  பொறி தட்டியது. ஏதோ பிசகு இருப்பதைப் போல் தோன்றியது. படத்தின் புதிர் பாதைகளில் தொலைந்து போனதால் இரண்டு மணி நேரங்கள் போனதும் தெரியவில்லை. நிறுத்தி விட்டு படத்தைக் குறித்து வாசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் இந்தப் படம் ஒரு Interactive Film என தெரியவந்தது. படத்துடன் பார்வையாளர்கள் இணைந்து பயணிக்கும் வகையில் திரை நாயகனின் தேர்வுகளை நாமே எடுக்கலாம். கனிணி விளையாட்டப்போல ஒரு கதையை சொல்ல முடிவது அறிவியல் தந்த கொடைதாம். மீண்டும் நெட்பிலிக்ஸை உயிர்ப்பித்து Bandersnatch ஐ முதலில் இருந்து பார்த்தேன். கதை தெரிந்து விட்டதால் தேர்வுகளின் முடிவு எங்கிட்டுச் செல்லும் என்பதும் தெரிந்திருந்தது. ஆனால் சுவாரஸ்யம் குன்றவில்லை. கொடுக்கப்படும் option களை தேர்வு செய்து படம் பார்த்தால் ஒண்ணரை மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து இன்னொரு option ஐ தேர்வு செய்து அதே கதையை இன்னொரு வடிவில் பார்க்கலாம். இப்படியாக ஆறு மணி நேரங்கள் பார்க்க முடியும்.

இந்த வியப்பை பயல்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். முதல் காட்சியில் வரும் கெலாக்ஸ் தேர்வைப் போட்டுக் காண்பித்தேன். இருவரும் கொஞ்சம் கூட வியப்பைக் காட்டிக் கொள்ளவில்லை. "இதெல்லாம் ரொம்ப பழசுப்பா" என்றபடியே ரிமோட்டை வாங்கி நெட்பிலிக்ஸிலேயே இருக்கும் ஒரு இன்ட்ராக்டிவ் கார்டூனைப் போட்டுக் காண்பித்தார்கள். ஓ என்றபடியே சிரித்து வைத்தேன். "இத பாத்துதாம்பா ப்ளாக் மிர்ரர்ல காப்பி அடிச்சிருக்காங்க" என்ற கிண்டல் கமெண்ட் ஒன்றும் வந்தது.  இந்த இலக்கியச் சோம்பல் மன நிலையிலிருந்து விரைவில் வெளியே வந்தாக வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டேன்.

Thursday, January 3, 2019

அஞ்சலி- ம்ருணாள் சென்


ம்ருணாள் சென் இயக்கத்தில் 1989 இல் வெளியான Ek Din Achanak படத்தைப் பார்த்தேன். படத்தின் துவக்கத்திலேயே இது அப்பாவைப் பற்றியது என அறிந்ததும் மாற்றி விட நினைத்தேன். ஆனால் நாம் எதிலிருந்து ஓடி ஒளிகிறோமோ அதுவே நம்மை விரட்டும் என்பதால் அப்பாவின் நினைவுகளுடனே தொடர்ந்தேன். குடும்பத்தில் திடீரென ஒருவர் இல்லாமல் போவது - இதுதான் ஒட்டு மொத்தப் படத்தின் ஒரு வரிக் கதை. உறவுகளுக்கிடையில் அது ஏற்படுத்தும் விளைவுகளைப் படம் அவ்வளவுக் கூர்மையாய் சொல்கிறது. பிற தொழில்நுட்ப உதவிகள் ( காட்சி, இசை, எடிட்டிங் போன்ற) இல்லாமல் நூறு சதவிகித நடிப்பாற்றலால் மட்டுமே ஓர் அழுத்தமான கதையை பார்வையாளருக்கு கடத்துவது எவ்வளவு சிரமம்! ஷபானா ஆஸ்மி, அபர்ணா சென், ரூபா கங்குலி போன்றவர்கள் இதை அநாயசமாகக் கடந்து கதாபாத்திரங்களுக்கு உயிர்ப்பைத் தந்திருக்கிறார்கள். உண்மையில் நாம் இந்தியக் கலைப்பட மேதைகளான சத்யஜித் ரே, கட்டக், ம்ருணாள் சென்னை வைக்கும் அதே இடத்தில் அவர்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த நஸ்ருதின் ஷாக்களையும் ஷபான ஆஸ்மிகளையும் வைக்க வேண்டும்.

 ஒரு மழை நாளில் வீட்டை விட்டு வெளியேறும் ஓய்வு பெற்ற பேராசிரியர் மீண்டும் வீடு திரும்புவதில்லை. மனைவியும் மகள்களும் மகனும் நண்பர்களும் உறவினர்களும் ஒரு கட்டத்தில் நாமும் ஏன் அவர் வீடு திரும்பவில்லை என்கிற காரணத்தைத் தேடி, படத்தின் வழியாய் அதற்கான விடையை அறிந்து கொள்ள முனைகிறோம். யாருக்கும் விடை அவ்வளவு சீக்கிரம் கிடைப்பதில்லை. ஏதேதோ சந்தேகங்கள் நாளையடைவில் எல்லாமும் நீர்த்துப் போகின்றன. ஒரு வருடத்திற்குப் பிறகு அவர் மனைவிக்கு அவர் போனதிற்கான காரணம் புரிகிறது. அந்த ஒற்றைச் சொல் அதுவரைக்கும் இயல்பான தளத்தில் இருந்த படத்தை, கதை சொல்லலை தத்துவார்த்த தளத்திற்கு மாற்றுகிறது. அந்த ஒற்றைச் சொல் அல்லது அந்தக் கருத்தாக்கம் என்ன என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் இந்த ஒரு வார்த்தை முடிவு எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. கவிதையின் கடைசி வரி போன்றோ, சிறுகதையின் இறுதிப் பத்தி போன்றோ ஒரு திரைப்படத்தையும் முழுமையாய் வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றுவிட முடியும் என்பதே திகைப்பான இனிப்பாக இருக்கிறது. ம்ருணாள் சென்னிற்கு அஞ்சலி.

Featured Post

test

 test