Scam 1992 தொடரைப் பார்த்து முடித்தேன். பார்த்துக் கொண்டிருக்கும்போதும், முடித்த பின்னரும் சில தகவல்களை இணையத்தில் துழாவி உறுதிபடுத்திக் கொண்டேன். இன்னும் ஆழமாக வாசித்து தெரிந்து கொள்ள வேண்டிய விடுபடல்களும் தொடரில் உள்ளன என்றாலும் Scam 1992 மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. இவ்வளவு வலுவான, நேரடி ஆதாரங்களை முன் வைக்கின்ற ஒரு இணையத் தொடர் இதற்கு முன்பு இந்தியத் திரையில் வந்தது கிடையாது. இந்தத் தொடரின் பலகீனமாக நான் நினைப்பது ஹர்ஷத் மேத்தா -வை கதாநாயக பிம்பமாக்கும் ’ஊதிப் பெருக்கல்’ வேலைகளை இயக்குநர்களும் திரைக்கதையாளர்களும் செய்திருக்கிறார்கள். இயக்குநர்களின் பின்னொட்டாக மேத்தா வருவதால் இதைத் தற்செயல் என எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை. இந்த நெருடலைத் தவிர்த்துப் பார்தால் Scam 1992 ஓர் அபாரமான அனுபவம்.
குஜராத்தி நாடகக் கலைஞரான பிரதிக் காந்தி, ஹர்ஷத் மேத்தா கதாபாத்திரத்துக்கு மிகச் சரியான நியாயத்தைச் செய்திருக்கிறார். இவரின் பேச்சு, நடை, உடல்மொழி எல்லாவற்றிலும் பழைய ரஜினிகாந்தின் சாயல்களைப் பார்க்க முடிந்தது. உண்மையிலேயே அற்புதமான நடிகர். தமிழ் அல்லது மலையாளத் திரையுலகம் இவரைப் பயன்படுத்தலாம். முகத்தில் தென்னிந்தியத் தன்மை தெரிகிறது. சிபிஐ விசாரணை அதிகாரியான மாதவன் கதாபாத்திரத்தில் ரஜத் கபூர் மிரட்டியிருக்கிறார். ’ஆன்கோன் தேகி’ என்றொரு அற்புதமான படம் வந்தது நினைவிருக்கிறதா? அதைப் போன்ற இன்னும் சில நல்ல படங்களின் இயக்குநர் அவர். படத்தில் சஞ்சய் மிஸ்ரா தம்பியாகவும் நடித்திருப்பார்.
இந்திய அதிகார அமைப்பின் பலகீனங்களையும், பொருளாதார கட்டமைப்பிலிருக்கும் ஏராளமான ஓட்டைகளையும் Scam 1992 மிகத் தெளிவாக முன் வைத்திருக்கிறது. இந்திய ஆட்சி-அதிகாரத்தின் ஊழல் கணக்குகள் அனைத்தும் தனியொருவனின் தலையில் எழுதி முடித்து வைக்கப்பட்ட ஒரு பழைய கதை இது. இதற்குப் பின்னர் இந்தியாவில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்தினால் அதுவும் இதே போன்றதொரு சட்டகத்தில் தான் பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை. இனிமேலும் இப்படித்தான் நடக்கும்.
இதைத்தான் நம் ’சூப்பர்ஸ்டார்’ ’சிஸ்டம்’ சரியில்லை என ’சிம்பிளாக’ சொன்னார். பாவம், இந்தக் ‘கொரோனா’ அவரையும் சரிசெய்ய வரவிடாமல் செய்துவிட்டது.
No comments:
Post a Comment