இக்கவிதைகள் தனிமையின் இசை மற்றும் நானிலும் நுழையும் வெளிச்சம் கவிதைத் தொகுப்புகளிற்குப் பிறகு எழுதப்பட்டவை. 2010 ஆம் வருடத்திலிருந்து 2013 வரைக்குமான கவிதைகள் (இப்படிச் சொல்வது சரியா எனத் தெரியவில்லை. கவிதை மனதில் விழுவது காலத்திற்கப்பாற்பட்டது இல்லையா?) ஆனால் இவை இந்த வருட இடைவெளிகளில்தான் எழுதப்பட்டன. கவிதை குறித்த பெரும் சலிப்புகள் மிகுந்த காலத்தில் இவை மின் தொகுப்பாக வந்திருக்க வேண்டாம்தான், ஆனால் ஒரு எதிர்ப்பைக் காண்பிக்க வேண்டிய அழுத்தத்தில் இவை இந்த வடிவத்தைப் பெறுகின்றன. இணையத்தில் எழுத ஆரம்பித்த புதிதில் கவிஞன் என்கிற பிரம்மைகள் எனக்கிருந்தன, காலப்போக்கில் அந்த அசட்டு பிம்பம் தன்னை அழித்துக் கொண்டது. எனக்கு எழுத வருகிறது என்பதைத் தாண்டி இக்காலகட்டத்தில் வேறெந்த எண்ணமும் இல்லை.
இத் தொகுப்பில் டேபிள் டென்னிஸ் என்கிற தலைப்பில் எழுதப்பட்ட கவிதைகள் யாவும் கோபி கிருஷ்ணன் பாதிப்பில் எழுதப்பட்டவை. இக்கவிதைகளுக்கும் அவரின் படைப்புலகத்திற்கும் பெரிய தொடர்பு ஒன்றும் இல்லையென்றாலும் கூட இவற்றை எழுதும் மனநிலையை கோபி கிருஷ்ணனின் படைப்புகளே தந்தன. மற்றபடி இச்சிறு தொகுப்பிலுள்ள கவிதைகள் யாவும் எனக்குப் பிடித்தமானவை. பிடிக்காதவற்றைச் சேர்க்கவில்லை. மொத்த கவிதைகளையும் வாசிக்கும்போது அதில் பருவமும் கால நிலையும் இணைப்புச் சங்கிலியாக / பின் இயங்கும் மனநிலைக் காரணியாக இருந்ததைப் போலத் தோன்றியது எனவே வஸந்தம், வேனில், பனி, டேபிள் டென்னிஸ் என்கிற உப தலைப்புகளில் இக் கவிதைகளைத் தொகுத்திருக்கிறேன். இப்பாலையில் மழை மிகக் குறைவென்பதால் மழை இடம்பெறவில்லை அல்லது மழை மனநிலை வாய்க்கவில்லை.
மனிதர்களை எனக்குப் பிடிக்காது எனத் தலைப்பு வைத்துவிட்டு யாருக்காவது சமர்பிப்பது அபத்தம் இல்லையா? ஆனாலும் டேபிள் டென்னிஸ் கவிதைகளை மட்டும் கோபிகிருஷ்ணனுக்கு சமர்ப்பிக்கிறேன். மற்றவை யாவும் எனக்கே எனக்கு மட்டும்தான்.