Sunday, November 24, 2019

தனியறை மீன்களின் சிறகடிப்பு




தனியறை மீன்கள் கவிதைத் தொகுப்பை நியாயமாக தனிமையின் இசை என்கிற இந்த வலைப்பக்கத்திற்குத்தான் சமர்ப்பித்திருக்க வேண்டும். பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இங்குதான் கவிதைகளை எழுதிப் பார்த்துக் கொண்டேன்.  வாசகர்களும் நண்பர்களும் கவிதைகள் வழியாகத்தான் என் உலகில் நுழைந்தனர். இதிலிருந்துதான் என் சின்னஞ்சிறு புனைவுலகு தன் சிறகுகளை விரித்துக் கொண்டது. கவிதைகள் எழுதிய காலகட்டங்களில் நெகிழ்ந்தும், சுருங்கியும், வெதும்பியும், உழன்றும் இன்னும் எல்லாவித மன உணர்வுகளிலும் கிடந்து அல்லாடினேன். சந்தேகமே இல்லாமல் அவற்றைப் பெண்களே தந்தனர். எல்லா உணர்வுகளையும் எழுதிப் பார்த்தேன். அந்த வடிவத்திற்கு கவிதை எனப் பெயர் வைத்துக்கொண்டேன். எழுதப்பட்டக் கவிதைகள் மிக அதிகபட்ச கொண்டாட்டத்தையும், கர்வத்தையும், காதலையும், காமத்தையும் கொண்டுவந்து சேர்த்தன. இலவச இணைப்பாய் ஏமாற்றம், துரோகம், பயன்படுத்துதல் போன்ற உணர்வுகளையும் பெற்றுக் கொண்டேன். எல்லாம் கடந்து மனம் சமநிலைக்குத் திரும்பியபோது தொடர்ந்து  கவிதைகள் எழுதும் விருப்பம் காணாமல் போயிருந்தது. போதும் இது என நிறுத்திக் கொண்டேன்.

’தனிமையின் இசை’, ’நானிலும் நுழையும் வெளிச்சம்’ எனும் தலைப்புகளில் இரண்டு தொகுப்புகள் அச்சில் வெளிவந்தன. ’எனக்கு மனிதர்களைப் பிடிக்காது’ எனும் பெயரில் ஒரு மின் தொகுப்பை வெளியிட்டேன். மூன்றுமே சரியான வாசக கவனத்தைப் பெறவில்லை. இணையத்தின் பழைய ஆட்கள் வாசித்த அல்லது மிகக் குறைவான கவிதை வாசகர்கள் மட்டும் வாசித்த தொகுப்புகளாய் மூன்றும் இருந்தன.   இந்தத் தொகுப்புகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க  என் தரப்பிலிருந்து நானும் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் மனதின் அடியாழத்தில் இதுவரை எழுதியவற்றை ஒரே தொகுப்பாய், தரமாய் கொண்டு வர வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அது இத்தனை வருடங்கள் கழித்து நிறைவேறி இருக்கிறது.

இந்தத் ’தனியறை மீன்கள்’ தொகுப்பு என் மனதிற்கு மிக நெருக்கமானதாக இருக்கிறது. இதை நிறைவேற்றிய சாருவுக்கும் காயத்ரி மற்றும் ராம்ஜிக்கும் என் அன்பு. கவிதைத் தொகுப்பின் பின் இணைப்பாய் சாருவுக்கும் எனக்கும் இடையே நிகழ்ந்த கவிதை உரையாடலும் இடம்பெற்றிருக்கிறது. இப்போதும் கவிதைகளை வாசிக்கும் பழையவர்களிடமும் புதிதாய் கவிதைகளை வாசிக்க ஆரம்பித்திருக்கும் புதியவர்களிடமும் இந்தத் தொகுப்பு போய்ச் சேர வேண்டும் என விரும்புகிறேன்.

அனைத்திற்கும் நன்றி. அனைவருக்கும் அன்பு

Featured Post

test

 test