சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் விளையாடிய ஆட்டங்களைப் பார்த்ததில்லை எனச் சொன்னேன். அப்போதுதான் அகில், பெலே வின் ஆவணப்படம் ஒன்று நெட்ஃபிலிக்ஸில் இருப்பதாகச் சொன்னான். உடனே பார்க்க ஆரம்பித்தோம். முதல் அரை மணி நேரம் ஊன்றிப் பார்த்தவர்கள் மெல்ல நழுவிப் போனார்கள். நான் முழுமையாகப் பார்த்து முடித்தேன். அவர் உலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்ட அடுத்த நாள் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்ததாலோ என்னவோ நெகிழ்ந்தும் போனேன்.
Tuesday, January 3, 2023
King Pele : அஞ்சலி
சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் விளையாடிய ஆட்டங்களைப் பார்த்ததில்லை எனச் சொன்னேன். அப்போதுதான் அகில், பெலே வின் ஆவணப்படம் ஒன்று நெட்ஃபிலிக்ஸில் இருப்பதாகச் சொன்னான். உடனே பார்க்க ஆரம்பித்தோம். முதல் அரை மணி நேரம் ஊன்றிப் பார்த்தவர்கள் மெல்ல நழுவிப் போனார்கள். நான் முழுமையாகப் பார்த்து முடித்தேன். அவர் உலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்ட அடுத்த நாள் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்ததாலோ என்னவோ நெகிழ்ந்தும் போனேன்.
Thursday, June 16, 2022
திரையே நிகழாக- தொடர்கள்
நெஃபிலிக்ஸில் Ozark தொடரின் நான்காம் பாகத்தை ஆரம்பித்து நிறுத்தினேன். முதல் மூன்று பாகங்கள் சுவாரசியமாகப் போயின. பின்பு அந்த பேட்டர்ன் அலுக்க ஆரம்பித்ததால் நிறுத்தி விட்டேன். ஒரே ஒரு breaking bad தான் இருக்க முடியும். அதே தோசையை திரும்பவும் சுட்டு வைக்கும்போது அலுப்பு வந்து விடுகிறது. இருப்பினும் சுவாரசியமான கதைப் பின்னல்கள், கதாபாத்திரங்கள், மற்றும் எதிர்பாராத ட்விஸ்ட்களுக்காக ஒரு மாதத்தை இந்தத் தொடருக்குத் தந்தேன். அதுவே போதுமானது.
கொஞ்சம் நிதானமான தொடர்கள் எதையாவது பார்ப்போம் என்றெண்ணி அமேசான் ப்ரைமில் பஞ்சாயத்து சீசன் இரண்டை ஒரே அமர்வில் பார்த்து முடித்தேன். பஞ்சாயத்து முதல் சீசன் எனக்கு இன்னும் பிடித்திருந்தது. இதுபோன்ற ஆளரவம் குறைவான கிராம வாழ்க்கை மீதும் வெள்ளந்தியான மனிதர்கள் குறித்த கற்பனைகளும் மிருகங்கள் வாழும் நகரங்களில் உழலும் நம் அனைவருக்குமே உண்டு. நம்மிடம் இருக்கும் இந்த நாஸ்டால்ஜி வகை மென் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எடுக்கப்பட்ட இன்னொரு தொடர்தான் இது. பார்க்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கிராமத்தில் உயர் சாதியினரை விட்டால் வேறு ஆட்களே கிடையாதா என்பது போன்ற சலிப்பும் உடன் எழுந்தது. குப்தாக்களும், பாண்டேக்களும் , திரிபாதிகளும் சேர்ந்து நடித்த மற்றும் எடுத்த அவர்களைப் பற்றிய தொடர் போல. மாற்று ஆட்களோ பார்வைகளோ எதுவும் கிடையாது. மிக செளகர்யமாக, மனதை அலட்டிக் கொள்ளாமல் இது போன்ற தொடர்களை எடுக்கலாம், பார்க்கலாம், மூடி வைக்கலாம். அவ்வளவுதான்.
Dark தொடருக்குப் பிறகு அறிவியலின் பக்கம் போகாததால் கொஞ்சம் அறிவியல் புனைவின் பக்கம் ஒதுங்கலாம் என்றெண்ணி Outer Range தொடரின் முதல் இரண்டு பகுதிகளைப் பார்த்தேன். நன்றாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து பார்ப்பேன்.
இந்த நாட்டு நெட்ஃபிலிக்ஸ் Peaky Blinders தொடர் நம்பர் ஒன் இடத்தில் காண்பித்துக் கொண்டிருந்ததால் பார்க்கலாமே என்றெண்னி ஆரம்பித்தேன். அப்படியே இழுத்துக் கொண்டது. முதல் பாகத்தைப் பார்த்து முடித்தேன். சுவாரசியமான தொடர். காலகட்டத்தைக் கொண்டுவந்த மெனக்கெடலும் - வரலாறைப் புனைவோடு இணைத்த அபாரமான திரைக்கதையும் ஊன்றிப் பார்க்க வைத்திருக்கிறது. மொத்த பாகங்களையும் பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.
கூடவே Apple tv யில் Physical தொடரையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். கதாநாயகியை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவளின் மன ஓட்டங்களை அல்லது மைண்ட் வாய்ஸை இடை இடையே இணைத்திருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. பல இடங்களில் என் குணாதிசயத்தையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ள முடிந்தது. நம்மால் சகித்துக் கொள்ளவே இயலாத பல இடங்களில் சம்பந்தமே இல்லாமல் கடமைக்காக அமர்ந்திருப்போம் இல்லையா – நாயகி அதைப் பல இடங்களில் பிரதிபலிக்கிறார்.
இவற்றுக்கிடையில் நல்ல விமர்சனங்கள் வருவதைப் பார்த்து பிபிசி தயாரிப்பில் வந்திருக்கும் This Is Going to Hurt தொடரின் முதல் இரண்டு பகுதிகளையும் டெலிக்ராம் வழி பார்த்து - மிரண்டு இது நமக்கானதில்லை என மூடி வைத்தேன். மருத்துவமனைகள் குறிப்பாக பிரசவ விடுதிகளின் மீது எனக்கு ஆழ்மனதில் ஒரு பயம் இருக்கிறது. அது தொடர்பான எதையும் தவிர்க்கவே முயல்வேன். இது ஒரு ஃபோபியாதான் – இன்னொரு சமயம் இதைக் குறித்து எழுதுகிறேன்.
ஒரு மலையாள சினிமா கதை விவாதத்தில் பங்கு கொள்ள முடிந்தது. கேரளாவையே மிரட்டிய இன்னும் முடியாத ஒரு கொலை வழக்கை திரைக்கதையாக்கப் பேசிக் கொண்டிருக்கிறோம். இதையே நாவலாக்கினால் என்ன என்கிற எண்ணமும் எழுந்திருக்கிறது. மதுரை நாவலை எழுதும் கையோடு இந்தக் கொலைக் கதையையும் எழுதிவிடலாம்தான். அதற்கு இந்த ஒட்டு மொத்த சினிமா மற்றும் தொடர் அடிக்ஷனை நிறுத்த வேண்டும். புதிதாக எதையும் ஆரம்பிக்காமல் Peaky Blinders மற்றும் Physical தொடர்களை மட்டும் பார்த்து முடித்துவிட்டு நாவல்களுக்குத் திரும்ப வேண்டும்.
Thursday, July 4, 2019
பெண்களின் மன நல விடுதி கொண்டாட்டங்களால் நிரம்பியிருக்கிறது
’பிக் பாஸ்’ பெண்கள் சரியான மன நலம் கொண்டவர்கள் என சமூகத்தால் நம்பப்படுகிறவர்கள். இந்தச் சரியானப் பெண்களின் மன விகாரங்களைச் சகித்துக் கொள்ள முடிகிறதா என்ன?ஆனால் சிகிச்சைக்காக ஒரே கூரையின் கீழ் தங்க நேரிடும் பெண்களின் உலகில் இவ்வளவு வன்மங்கள் கிடையாது. மன நல விடுதியில் பெண்களின் சக இருப்பு கொண்டாட்டங்களால் நிரம்பியிருக்கிறது.
Thursday, April 11, 2019
தில்லி க்ரைம்- இந்திய மகள்களின் துயரம்
Thursday, January 31, 2019
ROMA - சமன் செய்யும் துயர்
அல்போன்ஸோ க்வெரானின் ரோமா படத்தைப் பார்த்து முடித்தேன். முதன் முறையாய் ஒரு நெட்பிலிக்ஸ் திரைப்படம் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கரின் பல்வேறு பிரிவுகளில் இடம் பிடித்திருப்பது நல்ல விஷயம்தான். திரைப்படம் திரையரங்குகளை மட்டும் நம்பியிருக்கத் தேவையில்லை. தமிழ்சூழலில் 'ரிலீஸ்' தான் மிகப் பெரியச் சிக்கலாக இருக்கிறது. ரோமா போன்ற உதாரணங்கள் நம் சூழலில் நல்ல நம்பிக்கைகளை விதைக்கலாம்.
அல்போன்ஸோ க்வெரானின் எல்லாத் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். Y Tu Mamá También, படமும் Children of Men திரைப்படமும் எனக்குப் பிடித்தமானவை. குறிப்பாக சில்ரன் ஆஃப் மென் என்னை நடுங்க வைத்தது. தொழில் நுட்ப ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் இவரின் திரைப்படங்கள் உச்சமானவை. ரோமா வின் ஒவ்வொரு காட்சியுமே இவரது Technical Brilliance க்குச் சான்று.
கருப்பு வெள்ளையில்தான் உணர்வுகள் மிகத் துல்லியமாக வெளிப்படுகின்றன. அதுவும் ரோமா போன்ற சற்றுக் கூடுதலாக நெக்குருக வைக்கும் படங்கள் கருப்பு வெள்ளையில் இன்னும் மிளிர்கின்றன.
ஒரு மத்தியதரவர்க்க வீட்டின் பணிப்பெண்ணைக் குறித்த கதை என ஒருவரியில் சொல்லிவிடக் கூடிய விஷயதாம்தான். 1970 களில் மெக்சிகோ நகரமே உள்நாட்டுக் கலவரங்கள், மாணவர் போராட்டங்களெனத் தடுமாறிக் கொண்டிருந்த காலம். அதே நெருக்கடிகள் பெரும்பாலான குடும்பங்களையும் அலைக்கழித்தது. குறிப்பாய் பெண்கள் எல்லாவித துரோகங்களிற்கும் உள்ளாகினர். இந்த நெருக்கடிகளும் இழப்புகளும் மாறி மாறி மக்களைத் துன்புறுத்திய கருப்பு வெள்ளை நாட்களை அல்போன்ஸோ க்வெரான் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
ஒட்டு மொத்த திரைப்படத்தையும் ஒற்றைச் சொல்லில் துயரும் காலம் அல்லது துயர் என சுருக்கி விடலாம். ஆனால் இந்த உணர்வைக் கையாண்ட விதம்தான் ஆச்சரியத்தைத் தருகிறது. ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட பலக் காட்சிகள் வியப்பைத் தந்தன. எவ்வளவு பெரிய ஒத்திசைவு இந்த குழுவினருக்கு இருந்திருக்க வேண்டும். மிகவும் அர்ப்பணிப்பான பணியின் பலனே இந்த அங்கீகாரம்.
இறுதிக் காட்சியில் நெகிழ்ந்தும் பதபதைத்தும் போனேன். ஏனோ யூமாவாசுகியின் இரத்த உறவு நாவல் படம் நெடுக நினைவில் வந்து கொண்டே இருந்தது. மீண்டும் அந்த நாவலை வாசிக்கும் எண்ணத்தையும் இந்தப் படம் தூண்டியது. துயரமும் இழப்பும்தான் மானுடத்தை இணைக்கிறது. சமூக அடுக்குகள், கருப்பு வெள்ளை மனநிலைகள், ஏற்றத் தாழ்வுகள் எல்லாவற்றையும் துயர் சமன் செய்து விடுகிறது. ரோமா திரைப்படம் இதன் சாட்சியமாய் விளங்குகிறது.
அறிவுத் தளத்தில் இந்தத் திரைப்படத்தை 'சென்டி' என ஒதுக்கிவிடலாம்தான் ஆனால் உணர்வுத் தளத்தில் அப்படிச் செய்ய இயலுமா எனத் தெரியவில்லை.
சமீபமாய் என்னைச் சுற்றியுள்ள உலகம் முழுவதும் 'சென்டி' யாக மாறிக் கொண்டிருக்கிறது. நானும் இந்தக் கத்தியைப் பள்ளத் தாக்கில் விசிறி எறிந்துவிட்டு அதி 'சென்டி'யாய் எழுதிக் கொண்டிருப்பதை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
Thursday, January 10, 2019
Black Mirror: Bandersnatch (2018)
Netflix இல் வெளிவரும் Black Mirror தொடரின் ரசிகன் நான். மிகச் சமீபமாய் நண்பர் பினாத்தல் சுரேஷ் பரிந்துரையின் அடிப்படையில் நான்காவது season லிருந்து பார்க்க ஆரம்பித்தேன். முதல் கதையான USS Callister தந்த வியப்பால் இதுவரை வெளிவந்த மொத்தப் பகுதிகளையும் தொடர்ச்சியாய் பார்த்து முடித்தேன். வேறொரு உலகத்தில் மிகச் சரியாக சொல்லப்போனால் எதிர்காலத்தில் வாழ்வது போன்ற பிரம்மை உருவானது. என் ஒவ்வொரு நொடியும் யாராலோ கண்காணிக்கப்படுகிறது. என் எல்லா நகர்வுகளையும் யாரோ தீர்மானிக்கிறார்கள் என்பன போன்ற கற்பனைகள் சூழ ஆரம்பித்தன. உண்மையில் என் பைத்தியம் முற்றிற்று. கிட்டத்தட்டக் கடவுளைப் போன்றே அறிவியலையும் காண வேண்டும். அறிவியலும் கடவுளும் ஒன்றே என்றெல்லாம் பிதற்ற ஆரம்பித்தேன்.
சதா இந்தக் கதைகளில் மூழ்கிக் கிடந்ததன் பலனாய் "முள்ளம்பன்றிகளின் விடுதி" என்றொரு கதையை எழுத முடிந்தது. (இந்தக் கதையை ஒட்டக மனிதர்கள் எனும் பெயரில் கானல் பதிப்பகம் தொகுத்த அமீரகச் சிறுகதைகள் நூலில் வாசிக்க முடியும்) ஆனாலும் இந்தத் தொடர் அடிமை மனநிலை சரியாகப் படாததால் 'நெட்ஃபிலிக்ஸை' கைவிட்டேன். அடுத்த Black Mirror பகுதி வரும்போது பார்த்துக் கொள்ளலாம். மேலதிகமாய் ஏப்ரலில் வரும் GOT . இதைத் தாண்டி வேறெந்த தொடரையும் பார்க்க கூடாது எனவும் முடிவெடுத்திருந்தேன். கடந்த வாரம் வெளியான Bandersnatch குறித்து நண்பர்கள் வியப்பாய் பேசிக் கொண்டதும், குறிப்புகளை வாசிக்காமல் இணையத்தில் தரவிறக்கிப் பார்க்க ஆரம்பித்தேன்.
Bandersnatch ஐ மொத்தம் ஆறு மணி நேரம் ஓடக்கூடிய படமாக வடிவமைத்திருக்கிறார்கள். முதல் இரண்டு மணி நேரங்கள் பார்த்து முடித்ததும் பொறி தட்டியது. ஏதோ பிசகு இருப்பதைப் போல் தோன்றியது. படத்தின் புதிர் பாதைகளில் தொலைந்து போனதால் இரண்டு மணி நேரங்கள் போனதும் தெரியவில்லை. நிறுத்தி விட்டு படத்தைக் குறித்து வாசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் இந்தப் படம் ஒரு Interactive Film என தெரியவந்தது. படத்துடன் பார்வையாளர்கள் இணைந்து பயணிக்கும் வகையில் திரை நாயகனின் தேர்வுகளை நாமே எடுக்கலாம். கனிணி விளையாட்டப்போல ஒரு கதையை சொல்ல முடிவது அறிவியல் தந்த கொடைதாம். மீண்டும் நெட்பிலிக்ஸை உயிர்ப்பித்து Bandersnatch ஐ முதலில் இருந்து பார்த்தேன். கதை தெரிந்து விட்டதால் தேர்வுகளின் முடிவு எங்கிட்டுச் செல்லும் என்பதும் தெரிந்திருந்தது. ஆனால் சுவாரஸ்யம் குன்றவில்லை. கொடுக்கப்படும் option களை தேர்வு செய்து படம் பார்த்தால் ஒண்ணரை மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து இன்னொரு option ஐ தேர்வு செய்து அதே கதையை இன்னொரு வடிவில் பார்க்கலாம். இப்படியாக ஆறு மணி நேரங்கள் பார்க்க முடியும்.
இந்த வியப்பை பயல்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். முதல் காட்சியில் வரும் கெலாக்ஸ் தேர்வைப் போட்டுக் காண்பித்தேன். இருவரும் கொஞ்சம் கூட வியப்பைக் காட்டிக் கொள்ளவில்லை. "இதெல்லாம் ரொம்ப பழசுப்பா" என்றபடியே ரிமோட்டை வாங்கி நெட்பிலிக்ஸிலேயே இருக்கும் ஒரு இன்ட்ராக்டிவ் கார்டூனைப் போட்டுக் காண்பித்தார்கள். ஓ என்றபடியே சிரித்து வைத்தேன். "இத பாத்துதாம்பா ப்ளாக் மிர்ரர்ல காப்பி அடிச்சிருக்காங்க" என்ற கிண்டல் கமெண்ட் ஒன்றும் வந்தது. இந்த இலக்கியச் சோம்பல் மன நிலையிலிருந்து விரைவில் வெளியே வந்தாக வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டேன்.
Monday, August 27, 2018
மெளனத்தின் சங்கீதம்
சாயிஃப் அலி கான் இவ்வளவு நல்ல நடிகரா என்ன! என்கிற வியப்புதான் முதலில் தோன்றியது. சாயிஃப் அலி கான் சினிமா வாழ்வில் சர்தாஜ் சிங் போல ஒரு கதாபாத்திரம் கூட அமையவில்லை என்றே நினைக்கிறேன். சந்தேகமே வேண்டாம் அவரின் ’கேரியர் பெஸ்ட்’ இதுதான்.
Thursday, February 22, 2018
Narcos : நமுத்த வாழ்வின் பரவசம்
பாப்லோ எஸ்கோபார் - கொலம்பியாவை உலகறியச் செய்த பெயர். பாப்லோ கொல்லப்பட்டு கால் நூற்றாண்டு ஆகப் போகிறதென்றாலும் இன்று வரை இந்தப் பெயர் தந்து கொண்டிருக்கும் ஈர்ப்பை தொடர்ந்து வெளிவரும் புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், சினிமாக்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். அசாதாரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் நம்முடைய நமுத்த சாதாரண வாழ்வில் இருக்கும் ஒரே பரவசம் . எனவேதான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள், டான் கள், கொள்ளைக் கூட்டத் தலைவர்கள், போதை மருந்து மாஃபியாக்கள், நடிகர்கள், குறிப்பாக கவர்ச்சி நடிகைகள் போன்றோரின் சொந்த வாழ்வை ஒட்டிய படைப்புகள் எப்போதும் வெற்றியில் சோடை போவதில்லை.
நார்கோஸ் மிக நேரடியாக கொலம்பியாவின் போதை மருந்துக் கும்பல் தலைவனான பாப்லோ எஸ்கோபாரின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறது. வாழ்வைப் பதிவு செய்வதில் இருக்க வேண்டிய நேர்மை இந்தத் தொடருக்கு இருக்கிறதா என்றால் இதுவரை இல்லை. அதாவது இரண்டு சீசன்கள் வரை. எனவே மூன்றாவது சீசனைப் பார்க்கும் ஆர்வம் விட்டுப் போயிற்று. ஆனால் வெற்றியைக் குறிவைத்து எடுக்கப்படும் தொடர்களில் இருக்க வேண்டிய சகலமும் நார்கோஸ் தொடரில் இருக்கிறது. பணக்கார வாழ்வின் பகட்டு, குடி, காமம், அதிகாரம் மற்றும் இவற்றோடு சம பங்கு இரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் என ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது. எனவே இயல்பாகவே ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. மிக வேகமாக இத்தொடரைப் பார்த்தும் விடுகிறோம். ஆனால் இறுதியில் இத்தொடர் புதிதாக எதையாவது சொல்லியிருக்கிறதா என யோசித்தால் வெறுமை தான் எஞ்சுகிறது. ஏற்கனவே நாம் பார்த்து சலித்த இலத்தீன் அமெரிக்க டான் களின் வாழ்வு, கொக்கைன் கடத்தல் பின்னணி, அமெரிக்க அரசின் அடுத்த நாட்டின் மீதான ’அக்கறை’ என ஏற்கனவே பார்த்து சலித்த விஷயங்கள்தாம் தொடரை ஆக்ரமித்திருக்கின்றன . மேலும் டான்கள் தங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் செண்டிமெண்ட் காதல், மனைவி அம்மா பாசம் என காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விஷயங்கள் யாவும் திகட்டிப் போனவை. ஒருவேளை காட் ஃபாதர் வரிசைப் படங்கள், ஸ்கார்ஃபேஸ், குட் ஃபெலாஸ், மரியா ஃபுல் ஆஃப் க்ரேஸ் மாதிரியான படங்களைப் பார்த்திராதவர்களுக்கு இந்தத் தொடர் நல்ல அனுபவத்தைத் தரலாம்.
நார்கோஸ் தொடரின் சிறப்பம்சம் என்னவென்று பார்த்தால் இதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் நிஜக் காட்சித் துணுக்குகள்தாம். கதையின் போக்கை ஒட்டியே 1970 -90 களில் கொலம்பியா மற்றும் அமெரிக்காவில் நடந்த நிஜ சம்பவங்களையும் டாக்குமெண்டரிக் காட்சிகளாக இணைத்திருப்பது தொடரின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறது. பாப்லோ எஸ்கோபராக நடித்திருக்கும் பிரேசில் நடிகரான Wagner Moura வின் பிரமாதமான நடிப்பும் நம்மைத் திரையோடு ஒன்ற வைக்கின்றது. கொலம்பியச் சூழல், நடிகர்கள், பின்னணி இசை, லேப் கள் எனப்படும் கொக்கைன் மருந்து தயாரிக்கும் இடங்கள், பயன்படுத்தப்பட்டிருக்கும் ஏராளமான துணை நடிகர்கள் என தொடருக்கான உழைப்பு பிரம்மாண்டம்தான் என்றாலும் திரைக்கதை ஒரே விஷயத்தையே சுற்றிச் சுற்றி வருவதால் அலுப்பையும் தவிர்க்கமுடிவதில்லை. அமெரிக்கத் தூதரகத்தின் உள்ளடி வேலைகள், கொலம்பிய அதிபரின் அரசியல் நகர்வுகள், அவரும் துணை அதிபரும் பாப்லோவை வீழ்த்த எடுக்கும் முயற்சிகளில் தென்படும் முதிர்ச்சியற்ற தன்மை போன்றவை தொடரை மேலும் பலகீனப்படுத்துகின்றன.
பாப்லோ எஸ்கோபரின் அசலான வாழ்வைத் தேடி வாசித்தால் தொடரில் சொல்லப்பட்டிருப்பதை விடக் கூடுதல் சுவராசியம் கொண்டதாக இருக்கிறது. நார்கோஸ் தொடர் எஸ்கோபரின் கொக்கைன் சாம்ராஜ்யத்தின் துவக்கத்தையும் உச்சத்தையும் சரிவையும் பிரதானமாக முன் வைக்கிறது. ஆனால் பாப்லோ கொக்கைன் உலகிற்கு வருவதற்கு முன்னரான வாழ்வு இன்னும் அசாத்தியத் தன்மை கொண்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளை விற்பவனாக, சில்லறைத் திருடனாக, கார் திருடனாக, அடியாளாக மெல்ல மெல்ல வளர்ந்து கொக்கைன் உலகில் நுழைந்திருக்கிறார். உலகக் குற்றவாளிகளின் வரலாற்றில் பாப்லோ எஸ்கோபர்தான் மிகப் பெரிய செல்வந்தர். 1990 களில் பாப்லோவின் வருட வருமானம் 30 பில்லியன் அமரிக்க டாலர். ஆம் பில்லியன். எவராலும் கற்பனை செய்து கூடப் பார்த்திராத வாழ்வை பாப்லோ எஸ்கோபர் வாழ்ந்திருக்கிறார். ஏராளமான வசிப்பிடங்கள். வீட்டிற்குள்ளேயே மிருகக் காட்சி சாலை வைத்திருந்ததாகவெல்லாம் விக்கி சொல்கிறது. வியப்புதான் மேலிடுகிறது.
நார்கோஸ் போல கவர்ச்சி சாயம் பூசாத அசலான பாப்லோ எஸ்கோபரின் வாழ்வை தேடி வாசிக்க அல்லது பார்க்க விருப்பமாக இருக்கிறது. பாப்லோவின் நிருபர் காதலி - தொடரில் வலேரியா - எழுதிய Loving Pablo புத்தகம் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தழுவி ஜேவியர் பார்டம் - பெனலோப் குருஸ் நடிப்பில் சென்ற வருடம் ஒரு ஸ்பானிய படமும் வெளியாகி இருக்கிறது. திரைப்படத்திற்கு வரவேற்பு இல்லை என்பதாக விமர்சனங்கள் சொல்கின்றன. பாப்லோவைக் குறித்தான நேஷனல் ஜியாக்ராபியின் டாக்குமெண்டரி ஒன்று கிடைத்திருக்கிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.
Featured Post
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
-
தொன்னூற்றி ஏழாம் வருட நவம்பர் மாத ஏழாம் தேதியன்றுதான் நாம் முதலில் சந்தித்துக் கொண்டோம்.எலெக்ட்ரானிக்ஸ் லேப் முன்பா? அல்லது சிவில் நூலகத்தில...
-
திரும்பிவர இயலா ஒற்றையுலகத்தில் நம்மைத் தொலைத்தது அந்த இசை வீணையின் அதிர்வுகளில் நினைவு முடிவிலியின் சுவர்களில் மோதி இரத்தமிழந்தது இப்போது உ...









