Thursday, February 22, 2018

Three Billboards Outside Ebbing, Missouri


ஸ்பாட்லைட் Spotlight (2015), Manchester by the Sea (2016) வரிசையில் இந்த வருடம்  Three Billboards.  ஹாலிவுட்டில் வருடத்திற்கு  ஒரு படம் இப்படியாக  வந்து விருதுகளை அள்ளுகின்றது. வழக்கம் போல இந்தப் படமும் ஆஸ்கரின் பெரும்பாலான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. எதனால் இந்த செண்டிப் படங்கள் வலுவான தாக்கத்தை நம்மிடையே ஏற்படுத்துகின்றன என யோசித்தால் மழுங்கிப்போன நம்முடைய அற உணர்வு இதற்கான பிரதான காரணமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

 நம்மைச் சுற்றி நிகழும் அநீதிகளுக்கெதிரான போராட்டம்தான்  கிட்டத்தட்ட மறத்துப் போன நம் அற உணர்வை மெல்ல மீட்டெடுக்கின்றது. இந்த அற உணர்வு, காலம் தாமதிக்கும் நீதியின் மீது இன்னும் கோபம் கொள்ள வைக்கிறது.  நீதி வென்றே ஆக வேண்டும் என நம்மைத் தீவிரப்படுத்துகிறது.

இந்த வகைத் திரைப்படங்களும் இத் தீவிர மனநிலையை பார்வையாளர்களிடம் உருவாக்குகின்றன. மேலும் திரைக்கதையின் மய்யக் குரூரத்தை நேரடியாகக் காட்சிப்படுத்தாமல் உரையாடல் வழியாகவோ அல்லது தொலைவுக் காட்சிகளின் வழியாகவோதான் சொல்கிறார்கள். காட்சிப்படுத்தப்படும் குரூரத்தை விட சொல்லப்படும் குரூரம்    பெரும் தாக்கத்தை நம்மிடையே ஏற்படுத்துகின்றது.

Spotlight , Manchester by the Sea,  Three Billboards Outside Ebbing Missouri  இம்மூன்று திரைப்படங்களும் மேலே சொன்ன உத்திக்குள் வருகின்றன. இப்படங்களின் இயக்குனர்கள் மிக இறுக்கமான திரைக்கதை வடிவைக் கையாள்கிறார்கள். நீதிக்காக போராடும் கதாபாத்திரங்களை முசுடுகளாய்,  எதிர்த்தன்மை கொண்டவர்களாய் சித்தரிக்கிறார்கள்.  இந்த இறுக்கம் உடையும் தருணம் ஒன்று  வரும்போது பார்வையாளர்களும் கதாபாத்திரத்தோடு சேர்ந்து உடைகின்றனர்.  படம் தன்னளவில் முழுமையடைகிறது.

இது ஒரு அபாரமான எப்போதுமே சோடை போகாத உத்தி. ஸ்பாட்லைட்டும், மான்செஸ்டர் பை த சீ யும், த்ரீ பில்போர்ட்ஸும் இந்த உத்தியை சரியாகக் கையாண்ட படங்கள். இது சற்றுப் பிசகினால் அது Moonlight (2016) திரைப்படம் போல ஆகிவிடும். மூன்லைட்டும் சிறந்த படம்தான் என்றாலும் அது தவறவிட்டது இந்த இறுக்கத்தையும் உடைதலையும்தான்.

த்ரீ பில்போர்ட்ஸ் படத்தின் புதுத் தன்மை அதன் பெயரிலேயே இருக்கிறது. சம்பந்தப் பட்டோரை குற்ற உணர்வடைய வைக்கும் விளம்பரம் என்பதுதான் இதில் புது சிந்தனை. பிறகு அது உருவாக்கும் பின் விளைவுகளின் பின்னாலேயே போனால் முழுமையான அவார்ட் மெட்டீரியல் நமக்குக் கிடைத்துவிடும். இந்தப் படம் இதைக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறது.

ஒரு அநீதி இழைக்கப்படுகிறது. சட்டத்தாலும் காவலர்களாலும்  நீதியை வழங்க முடியாமல் போகிறது. பாதிக்கப்பட்டவர் ஒரு நூதனப் போராட்ட த்தைக் கையில் எடுக்கிறார். அது ஏற்படுத்தும் விளைவுகளால் இன்னொரு அநீதி நிகழ்கிறது. இப்போது அநீதி  க்கு எதிராய் இன்னொரு அநீதியை உருவாக்கியாகிற்று. பின்பு இரு அநீதிகளும் ஒன்றிணைந்து நீதியை நோக்கிப் பயணிக்கும்போது திரைப்படம் மகத்தான எழுச்சியை நம்மிடையே உருவாக்கிவிடுகிறது.

இத் திரைப்படத்தின் பின்னணி எனக்கு டேவிட் லிஞ்சின் தொலைக்காட்சித் தொடரான Twin Peaks - ஐ நினைவூட்டிக் கொண்டே இருந்தது. 1990 களில் தொலைக்காட்சித் தொடராக வெளியாகிப் பெரும் வெற்றியடைந்த ட்வின் பீக்ஸின் கதைக்களமும், த்ரீ பில்போர்ட்ஸின் கதைக்களமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். டேவிட் லிஞ்ச், ட்வின் பீக்ஸ் எனும் கற்பனை நகரத்தை உருவாகியிருப்பார். அங்கும் ஒரு இளம்பெண் வன்புணரப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பாள். அதன் பின்னணியைத் துப்பறியும் தொடராக ட்வின் பீக்ஸ வளர்ந்திருக்கும். முதல் எட்டுப் பகுதிகள் மட்டும் பார்த்திருந்தேன். இன்னும் பார்க்க 30 பகுதிகள் உள்ளன. நார்கோஸ் அலுத்ததால் மீண்டும் ட்வின் பீக்ஸை ஆரம்பிக்கும் திட்டம்.

த்ரீ பில்போர்ட்ஸில் தானைத் தலைவன் டிரியன் லானிஸ்டர் aka Peter  சில காட்சிகள் வருகிறார். எனினும்  பிரதான கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது Frances Louise McDormand என்பதால் அவருக்கே அதிக ஸ்கோப். ஃப்ரான்சசும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

துமாரி சுலு


வித்யா பாலனைப் பிடிக்கும் என்றாலும்  ’நெகிழவைக்கும்பெண்ணிய’  வகைமைத் திரைப்படமோ என அஞ்சி ’துமாரி சுலு’ வைப் பார்க்காமல் விட்டேன். சோம்பலான ஒரு மதியப்பொழுதில்  சும்மா பார்த்து வைப்போமே என ஆரம்பித்து முழுமையாய் ஒன்றிப்போனேன். படம் இப்படிக் குறிப்பு எழுதும் அளவிற்குப் பிடித்துப் போனது.

துமாரி சுலு வில் குறிப்பிட்டே ஆகவேண்டிய முதல் விஷயம், இது பெண்ணை மய்யமாகக் கொண்ட படமென்றாலும் எந்த ஆணையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவில்லை. குறிப்பாகப் பிரதான பெண் கதாபாத்திரத்தின் கணவரை உலகின் மிக மோசமான அயோக்கியனாய் சித்தரிக்கவில்லை. இந்த ஆசுவாசம் மட்டுமல்லாது இந்தப் பிரதான பெண் கதாபாத்திரம் துன்பத்திலும் சோர்விலும் மூழ்கி ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு பல தடைகளைத் தாண்டி குறிப்பாக ஆண்களை மிதித்து மேலெழுந்து நிற்கவில்லை. இந்த இல்லாத தன்மைகளே படத்தின் மிகப்பெரிய பலம்.

மிக இயல்பான, பாவணைகள் குறைவான, எளிமையான, வெள்ளந்தித்தனமும் உஷார்தனமும் சேர்ந்த ஒரு மிடில் க்ளாஸ் புடவை கட்டிய ஆண்ட்டியின் சில சுவாரசியமான நாட்களை இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது. வித்யா பாலன் இந்தக் கதாபாத்திரத்தில் அப்படிப் பொருந்திப் போகிறார். சர்வ நிச்சயமாக வேறொரு நடிகையால் இந்தப் பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்க முடியாது என்பது திட்டவட்டம். சுலு என்கிற சுலோச்சனாவின் கணவராக நடித்திருக்கும் அஷோக் கதாபாத்திரமும் சிறப்பு.

லெமன் ஸ்பூனில் ஆரம்பித்து டிபன் காண்ட்ராக்ட் கிடைக்குமா எனக் கண்கள் மின்னக் கேட்கும் காட்சி வரை மொத்தமும் வித்யாபாலனின் விளையாட்டு. அடித்து ஆடியிருக்கிறார். படத்தின் பல காட்சிகள் கவிதை. குறிப்பாகத் தொலைபேசியில் துமாரி சுலு நிகழ்ச்சியில் பேசும் ஒரு முதியவர், தன் மனைவி பெயரும் சுலோச்சனாதான் அவளுக்கும் உன்னைப் போன்ற குரல் அவளையும் சுலு என்றுதான் அழைப்பேன் எனக் கூறும் இடம் . இது ஒரு தேய்ந்த காட்சிதான். வழக்கமாக இது போன்ற காட்சிகளில் நாயகி குளோஸ்-அப் பில் கண் கலங்குவதாக ஒரு ஷாட்டை வைப்பார்கள். ஆனால் அப்படி  க்ளிஷே வாக மாற இருக்கும் ஒரு காட்சியை தன் இலகுவான வெளிப்பாட்டால்  வித்யா சம நிலைக்குத் திருப்பியிருப்பார்.  இப்படிப் பல காட்சிகள் வித்யாவினால் மெருகூட்டப்பட்டிருக்கும். மகன் திரும்பக் கிடைக்கும் காட்சியில் நொடி நேர மெளனத்திற்குப் பிறகு வெடிக்கும் காட்சியும் அபாரம்.இறுதிக் காட்சியில் கிடைக்கும் நெகிழ்ச்சியை உருவாக்க வேண்டி மகன் காணாமல் போகும் சம்பவம், சுலுவின் இரட்டை சகோதரிகள் தரும் அழுத்தம், ரேடியா ஜாக்கி வேலையை விடுவது போன்ற காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த மெனக்கெடல்களையும் தவிர்த்திருந்தால் முழுமையான இயல்பான படமாக வந்திருக்கும். ஆனால் இந்த உருவாக்கப்பட்டவைகள் தரும் உணர்வும் நன்றாகத்தான் இருந்தது.

துமாரி சுலு வின் தமிழ் வடிவத்தில்  ஜோதிகா நடிக்க இருப்பதாக வந்த செய்தியைப் படித்ததிலிருந்து சற்று திக் கென்றுதான் இருக்கிறது.   மகேஷிண்ட ப்ரதிகாரம் தமிழில் வந்த அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் அடுத்த அதிர்ச்சி. எப்படி  பகத் பாசிலுக்கு மாற்றாய் உதயநிதியை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லையோ அதற்கு சற்றும் குறையாதது வித்யா இடத்தில் ஜோதிகாவை வைப்பது. இந்த கோராமைகளிலிருந்து பணம் போடும் தயாரிப்பாளர்களாவது எங்களைக் காக்க வேண்டும்.


Narcos : நமுத்த வாழ்வின் பரவசம்


பாப்லோ எஸ்கோபார்  - கொலம்பியாவை உலகறியச் செய்த பெயர். பாப்லோ கொல்லப்பட்டு கால் நூற்றாண்டு ஆகப் போகிறதென்றாலும் இன்று வரை  இந்தப் பெயர் தந்து கொண்டிருக்கும் ஈர்ப்பை தொடர்ந்து வெளிவரும் புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், சினிமாக்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். அசாதாரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் நம்முடைய நமுத்த சாதாரண வாழ்வில் இருக்கும் ஒரே பரவசம் . எனவேதான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள், டான் கள், கொள்ளைக் கூட்டத் தலைவர்கள், போதை மருந்து மாஃபியாக்கள், நடிகர்கள், குறிப்பாக கவர்ச்சி நடிகைகள் போன்றோரின் சொந்த வாழ்வை ஒட்டிய படைப்புகள் எப்போதும் வெற்றியில் சோடை போவதில்லை.

நார்கோஸ் மிக நேரடியாக கொலம்பியாவின் போதை மருந்துக் கும்பல் தலைவனான பாப்லோ எஸ்கோபாரின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறது. வாழ்வைப் பதிவு செய்வதில் இருக்க வேண்டிய நேர்மை இந்தத் தொடருக்கு இருக்கிறதா என்றால்   இதுவரை இல்லை. அதாவது இரண்டு சீசன்கள் வரை. எனவே மூன்றாவது சீசனைப் பார்க்கும் ஆர்வம் விட்டுப் போயிற்று. ஆனால் வெற்றியைக் குறிவைத்து எடுக்கப்படும் தொடர்களில் இருக்க வேண்டிய சகலமும் நார்கோஸ் தொடரில் இருக்கிறது. பணக்கார வாழ்வின் பகட்டு, குடி, காமம், அதிகாரம் மற்றும் இவற்றோடு சம பங்கு இரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் என ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது. எனவே இயல்பாகவே ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. மிக வேகமாக இத்தொடரைப் பார்த்தும் விடுகிறோம். ஆனால் இறுதியில் இத்தொடர் புதிதாக எதையாவது  சொல்லியிருக்கிறதா என யோசித்தால் வெறுமை தான் எஞ்சுகிறது. ஏற்கனவே நாம் பார்த்து சலித்த இலத்தீன் அமெரிக்க டான் களின் வாழ்வு, கொக்கைன் கடத்தல் பின்னணி, அமெரிக்க அரசின் அடுத்த நாட்டின் மீதான ’அக்கறை’ என ஏற்கனவே பார்த்து சலித்த விஷயங்கள்தாம் தொடரை ஆக்ரமித்திருக்கின்றன . மேலும் டான்கள் தங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் செண்டிமெண்ட் காதல், மனைவி அம்மா பாசம் என காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விஷயங்கள் யாவும் திகட்டிப் போனவை. ஒருவேளை காட் ஃபாதர் வரிசைப் படங்கள், ஸ்கார்ஃபேஸ், குட் ஃபெலாஸ், மரியா ஃபுல் ஆஃப் க்ரேஸ் மாதிரியான படங்களைப் பார்த்திராதவர்களுக்கு இந்தத் தொடர் நல்ல அனுபவத்தைத் தரலாம்.

நார்கோஸ் தொடரின் சிறப்பம்சம்  என்னவென்று பார்த்தால் இதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் நிஜக் காட்சித் துணுக்குகள்தாம். கதையின் போக்கை ஒட்டியே 1970 -90 களில் கொலம்பியா மற்றும் அமெரிக்காவில் நடந்த நிஜ சம்பவங்களையும் டாக்குமெண்டரிக் காட்சிகளாக இணைத்திருப்பது தொடரின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறது.  பாப்லோ எஸ்கோபராக நடித்திருக்கும் பிரேசில் நடிகரான Wagner Moura வின் பிரமாதமான நடிப்பும் நம்மைத் திரையோடு ஒன்ற வைக்கின்றது. கொலம்பியச் சூழல், நடிகர்கள், பின்னணி இசை, லேப் கள் எனப்படும் கொக்கைன் மருந்து தயாரிக்கும் இடங்கள், பயன்படுத்தப்பட்டிருக்கும் ஏராளமான துணை நடிகர்கள் என தொடருக்கான உழைப்பு பிரம்மாண்டம்தான் என்றாலும் திரைக்கதை ஒரே விஷயத்தையே சுற்றிச் சுற்றி வருவதால் அலுப்பையும் தவிர்க்கமுடிவதில்லை. அமெரிக்கத் தூதரகத்தின் உள்ளடி வேலைகள், கொலம்பிய அதிபரின் அரசியல் நகர்வுகள், அவரும் துணை அதிபரும் பாப்லோவை வீழ்த்த எடுக்கும் முயற்சிகளில்  தென்படும் முதிர்ச்சியற்ற தன்மை  போன்றவை  தொடரை மேலும் பலகீனப்படுத்துகின்றன.

 பாப்லோ எஸ்கோபரின் அசலான வாழ்வைத் தேடி வாசித்தால் தொடரில் சொல்லப்பட்டிருப்பதை விடக் கூடுதல் சுவராசியம் கொண்டதாக இருக்கிறது. நார்கோஸ் தொடர் எஸ்கோபரின் கொக்கைன் சாம்ராஜ்யத்தின் துவக்கத்தையும் உச்சத்தையும் சரிவையும் பிரதானமாக முன் வைக்கிறது. ஆனால் பாப்லோ கொக்கைன் உலகிற்கு வருவதற்கு முன்னரான வாழ்வு இன்னும் அசாத்தியத் தன்மை கொண்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளை விற்பவனாக, சில்லறைத் திருடனாக, கார் திருடனாக, அடியாளாக மெல்ல மெல்ல வளர்ந்து கொக்கைன் உலகில் நுழைந்திருக்கிறார். உலகக் குற்றவாளிகளின் வரலாற்றில் பாப்லோ எஸ்கோபர்தான் மிகப் பெரிய செல்வந்தர். 1990 களில் பாப்லோவின் வருட வருமானம் 30 பில்லியன் அமரிக்க டாலர். ஆம் பில்லியன். எவராலும் கற்பனை செய்து கூடப் பார்த்திராத வாழ்வை பாப்லோ எஸ்கோபர் வாழ்ந்திருக்கிறார்.  ஏராளமான வசிப்பிடங்கள். வீட்டிற்குள்ளேயே மிருகக் காட்சி சாலை வைத்திருந்ததாகவெல்லாம் விக்கி சொல்கிறது. வியப்புதான் மேலிடுகிறது.நார்கோஸ் போல கவர்ச்சி சாயம் பூசாத அசலான பாப்லோ எஸ்கோபரின் வாழ்வை தேடி வாசிக்க அல்லது பார்க்க விருப்பமாக இருக்கிறது.  பாப்லோவின் நிருபர் காதலி - தொடரில் வலேரியா - எழுதிய Loving Pablo புத்தகம் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தழுவி ஜேவியர் பார்டம் - பெனலோப் குருஸ் நடிப்பில் சென்ற வருடம் ஒரு ஸ்பானிய படமும் வெளியாகி இருக்கிறது. திரைப்படத்திற்கு வரவேற்பு இல்லை என்பதாக விமர்சனங்கள் சொல்கின்றன. பாப்லோவைக் குறித்தான நேஷனல் ஜியாக்ராபியின் டாக்குமெண்டரி ஒன்று கிடைத்திருக்கிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.


Sunday, February 18, 2018

Dance Dance Dance - Haruki Murakami


ஹாருகி முரகாமியின் நாவலான  Dance Dance Dance ஐ ஒலி வடிவில் கேட்டு முடித்தேன். ஒலி வடிவம் எனக்கு மிகப் பழகிய ஒன்றுதான். பதின்மத்திலிருந்தே ஓஷோ பேச்சுக்களை கேசட்டில் திரும்பத் திரும்பக் கேட்டுத் தேய்த்த அனுபவம் இருக்கிறது என்பதால் ஒலி வடிவம் எனக்கு மிகப் பிடித்தமானதும் கூட. ஆனால் நாவல்களை ஒலி வடிவில் இதுவரை முழுமையாகக் கேட்டதில்லை. சென்ற வருடம் The Girl with the Dragon Tattoo நாவலைக் கேட்க ஆரம்பித்து, அலுப்படைந்து  பாதியிலேயே நிறுத்தினேன். அதற்குப் பிறகு ஒலி வடிவ நாவல்களை முயற்சிக்கவில்லை. இந்த வருட முயற்சியில் வெற்றி. பதிமூன்று மணி நேர  Dance Dance Dance ஐ மிகுந்த ஆர்வத்துடன் கேட்டேன். இதில் முக்கிய பங்கு இந்நூலை வாசித்த குரல் கலைஞரான Rupert Degas க்கு உரித்தானது. கேட்பதற்கு மிகக் கச்சிதமான குரல் இவருடையது. குரல்களின் வித்தியாசங்கள் வழியாய் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிக்காட்டிய விதமும்  அபாரம். மிகவும் ஒன்றிப்போய் கேட்டேன்.

டான்ஸ் டான்ஸ் டான்ஸ் முரகாமியின் ஆறாவது நாவல். மூன்றாம் நாவலான A Wild Sheep Chase ன் தொடர்ச்சி. இதிலேயும் ஷீப் மேன் எனப்படும் புனைவுக் கதாபாத்திரம் இடம்பெறுகிறது. ஒப்பீட்டளவில் எனக்கு Wild Sheep Chase நாவலே பிடித்திருந்தது. டேன்ஸ் நாவலில் மிக அலுப்பூட்டும் அளவிற்கான ஒரே விவரணைகள் திரும்பத் திரும்ப வருகின்றன. குறிப்பாக இளம்பெண் யூக்கிக்கும் கதை சொல்லிக்கும் இடையே நிகழும் சம்பவங்கள் அவ்வளவு அலுப்பூட்டின.

கதை சொல்லி நாவல் முழுக்க குடித்துக் கொண்டும் தின்று கொண்டுமிருக்கிறார். அவரின் மிகத் திட்டமிடப்பட்ட துல்லியமான நாட்கள் சில இடங்களில் அபார உணர்வையும் சில இடங்களில் அலுப்பையும் தருகின்றது. முதல் அத்தியாயங்களில் வந்து கொண்டே இருக்கும்  டால்பின் ஹோட்டல்  குறித்த மிக நீண்ட விவரணைகள் எரிச்சலை வர வழைக்கின்றன. யாராவது கதை சொல்லியுடன் தின்றும் குடித்தும் கலவியும் கொள்கிறார்கள். அதைக் குறித்தும் மிக நீளமான வியாசங்கள். அடேய் முரகாமி போதும்டா என்கிற அளவிற்கு சில பகுதிகள் அலுப்பூட்டின. நாவலின் மிக சுவாரசியமான விஷயங்களாக நான் கருதியவை.

1. கதாபாத்திரங்களை இணைத்த முறை. வெவ்வேறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களை ஒரே இழையின் கீழ் கொண்டு வந்தது. உதாரணம் : கீக்கி - மே - ஜூன் இவர்களை இணைக்கும் சங்கிலியாக கோதண்டா.

2. கோதண்டாவிற்கும் யூக்கிக்கும் இடையே உள்ள தொடர்பு.

3. யூக்கியின் குடும்பம் குறித்தான சித்தரிப்பில் இருந்த புதுத் தன்மை . எல்லாவற்றையும் வாங்கிவிட முடியும் என நம்பும் எழுத்தாளர் அப்பா, வேலை என்று வந்து வந்துவிட்டால் சகலத்தையும் மறந்து போகும் புகைப்பட நிபுணரான அம்மா.
இவர்களுக்கிடையே அல்லாடி தனிமையில் விடப்படும் பதிமூன்று வயது யூக்கி.  மேலதிகமாய் அப்பாவின் நண்பன். அம்மாவின் ஒற்றைக்கை நண்பன்.

4. ஹவாய் குறித்தான விவரணைகள் - அங்கு நிகழும் விநோத சம்பவம்.நிகழ்ந்த / நிகழவிருக்கும்  மரணங்களை எலும்புக் கூடுகளோடு இணைத்திருப்பது.

5. பால்ய நண்பர்களான கதைசொல்லியும் கோதண்டாவும் முதலில் சந்திக்கும் அந்த இரவு. இருவரும்  சகல மதுவகைகளையும்  குடித்துத் தீர்க்கிறார்கள். எல்லாம் குடித்து ஓய்ந்த பிறகு கோதண்டா விலை மாதுக்களை அழைக்கிறான். கதைசொல்லி மே வோடும் கோதண்டா உடன் வரும் இன்னொரு பெண்ணுடனும் கலவி கொள்கிறார்கள். இந்த சம்பவங்களின் விவரணைகள் துல்லியத்தின் உச்சம்.

6. நடிகனான கோதண்டாவின் வாழ்க்கை. அவனுக்கும் அவன் மனைவிக்குமான விநோத உறவு.

7. மறைந்து போதல் குறித்தான கருத்தாக்கம். உடல்கள் சுவரின் வழியாய் இன்னொரு உலகில் நுழையும் மாயத்தன்மை.

8. நாவலின் புத்தம் புதுத் தன்மை. இந்நாவல் வெளியான வருடம் 1988. முப்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவலில் இருந்த சமகாலத் தன்மை வியப்பூட்டியது. ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஆழமான கற்பனையூக்கம் முரகாமியிடம் மிகுந்திருக்கிறது எனவேதான் அவர் காலம் கடந்தும் அப்படியே நிற்கிறார்.


முரகாமியின் பிரதானக் கதாபாத்திரங்கள் அபாரமான இசை ஞானம் கொண்டவை. டான்ஸ் கதைசொல்லியும் தொடர்ச்சியாய் அறுபதுகளின் ராக் அண்ட் ரோல் இசையைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான். நாவலைக் கேட்டுக் கொண்டிருந்த நாட்களில் நானும் பீச் பாய்ஸ் குழுவினரின் பாடல்களை யூடியூபில் தேடிப் பார்த்தேன்.  பீட்டில்ஸ் குழுவினரின் இசை எனக்கு பரிச்சயமானதுதான் என்றாலும் பீச் பாய்ஸை மிகவும் பிடித்திருந்தது.

ஒப்பீட்டளவில் நார்வேஜியன் வுட், காஃபா ஆன் த ஷோர், வைண்ட் அப் பேர்ட் உயரங்களுக்கு இந்நாவல் இல்லை. எனவே வாசிக்காமல் வைத்திருக்கும் முரகாமியின் முதல் இரண்டு நாவல்களை Hear the Wind Sing மற்றும் Pinball ஐ தவிர்த்துவிட்டு After Dark ஐ எடுத்திருக்கிறேன்.

ஆனால் முரகாமியின் நாவல்களை வாசிக்கும் நாள்களில் ஒரு வித ஒழுங்கமைதி நமக்குள்ளேயும் வந்து விழும். அந்த அமைதியை இந்த நாவலும் தந்தது. ஓஷோ எப்போதும் விழிப்புணர்வில் இருக்க வேண்டியதைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருப்பார். முரகாமியின் நாவல்களும் அதைத்தான் செய்கின்றன. ஆழமும் அகலமுமான விழிப்புணர்வு. தன்னைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக கவனிப்பது. இந்தத் தன்மை இந்த நாவலிலும் இருக்கிறது. A wide beautiful awareness of being.
Thursday, February 15, 2018

வண்ணத்துப் பூச்சிகளின் விடுதலை : Titli


டிட்லி தன் புத்தம்புது மனைவியை அவளுடைய காதலனுக்கு கூட்டிக் கொடுக்க வண்டியில் அழைத்துச் செல்கிறான் . பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கும் நீலு, எதிர் காற்றில் அலையும் தன் முடிக்கற்றைகளை ஒதுக்கியவாறே  டிட்லியின் பெயர் காரணத்தைக் கேட்கிறாள்.  டிட்லியின் அம்மாவிற்கு முதல் இரண்டு குழந்தைகளும் பையன்கள், மூன்றாவதாய் பெண் குழந்தை வேண்டுமென விரும்பியவள் அக்குழந்தைக்கு டிட்லி என்கிற பெயரையும் தேர்வு செய்து விட்டிருக்கிறாள். ஆனால் மூன்றாவதாகவும் ஆண் குழந்தையே பிறப்பதால்  ஏமாற்றமடைபவள், தேர்வு செய்த பெயரை மாற்றிக் கொள்ள விரும்பாமல் டிட்லி என்கிற பெயரையே தனக்கு வைத்துவிட்டதாக சொல்கிறான். நீலுவிற்கு சிரிப்பு பொங்கிக் கொண்டு வருகிறது.

 டிட்லி தன் மனைவியை அவளுடைய காதலனிடம் கொண்டு போய் விடுகிறான். நீலு, டிட்லியின் முன்பே தன் காதலனான பிரின்சை அணைத்துக் கொள்கிறாள். இருவரும் ஓர் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்கிறார்கள்.  நீலுவின் மூலம் கிடைக்கும் இரண்டரை லட்ச ரூபாய் பணத்திற்காக டிட்லி இதையெல்லாம் செய்கிறான். அப்பணத்தைக் கொண்டு புற நகரில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பேரங்காடியின் வாகன நிறுத்த ஒப்பந்தத்தை வாங்கிவிடுவான். அதன் மூலம் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் நரகத்துளையிலிருந்து விடுதலை அடைவான்.

 குடும்பத்தாரின் நிர்பந்தத்தால் டிட்லியை மணந்து கொள்ளும் நீலு, தன் காதலன் பிரின்ஸ் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற உடன் தன்னை மணந்து கொள்வான் என்கிற கற்பனையில் எல்லா எல்லைகளுக்கும் நகர்கிறாள். இறுதியில் அவன் தன்னை வஞ்சித்ததை உடைந்த கையோடு உணர்கிறாள். குடும்பம் என்கிற பெயரில் தன் அண்ணன்கள் செய்யும் முட்டாள்தனமான குரூரத் திருட்டுக் கொலைகளுக்குத் துணைபோகும்  டிட்லியும்  வதைபடுகிறான்.  இந்த இரு நசுக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சிகளும் மேலும் நசுங்கி தங்களின் பறத்தலை சாத்தியப்படுத்த முனைவதாக படத்தை முடிக்கிறார்கள்.நேற்றிரவு இவ்வளவு ஆழமான, நேரடியான படத்தைப் பார்த்து திகைத்துப் போனேன்.  டிட்லி 2014 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. கான் திரைப்பட விழா உட்பட உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளியிருக்கிறது. தமிழ்சூழலில் சரியாக கவனம் பெறாததால்  எப்படியோ தவற விட்டிருக்கிறேன்.

டிட்லியின் குடும்பமும் வீடும்  அசாத்தியமாகச்  சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு நுணுக்கமான கதாபாத்திர வடிவமைப்பும் கதைக்களமும் இந்திய சினிமாவில் நிகழ்ந்திருப்பதற்கு உண்மையில் நாம் பெருமைப் பட வேண்டும். ஒரு உணவு மேசை கூட நுழைய முடியாத எலிப் பொந்து போன்ற வீடு. அதில் ஒருவர் உணவருந்திக் கொண்டிருக்கும்போது இன்னொருவர் சப்தமாக தொண்டையைச் செருமி காறி உமிழ்ந்து பல்லைத் துலக்கிக் கொண்டிருப்பர். டிட்லி யை அவனது அண்ணன் விக்ரம் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும்போது தந்தை வரிக்கியை டீயில் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.  நிதர்சனமும் உண்மையும் சாதாரண மக்களின் மீது அறையும் ஆணியை திரைப்படம் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஒரு நகரம் இராட்சதத்தனமாக வளரும்போது அது அங்கிருந்த எல்லாவற்றையும் தின்றுவிட்டுத்தான் மேலெழுகிறது. மண், மனிதர்கள் அவர்களிடைய இருந்த நேயம் என எல்லாமும் இந்த நகர வளர்ச்சியில் அழிந்து போகின்றன. இந்தத் தன்மை இந்திய இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்த அளவில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் சினிமாவில் நேரடியாகச் சொல்லப்பட்டதில்லை. டிட்லி திரைப்படம் குறியீட்டு வடிவில் இந்த அழிவைப் பேச முனைகிறது.

டிட்லி கதாபாத்திரம் தன்னுடையை விருப்பத்தை அடைந்த பிறகு  அங்கிருந்து கீழே விழுகிறது. இதற்காகவா எல்லாம் என விரக்தியடைந்து தொடர்ச்சியாக வாந்தியெடுத்து மீண்டும் யதார்த்தத்திற்கு வருகிறது. தன்னைப் போலவே வஞ்சிக்கப்பட்ட இணையிடம் மீண்டும் செல்கிறது. இந்த கருத்தாக்கமும் இலக்கியத்தில் பேசப்பட்டதுதான். எல்லாம் அடைந்த பின் ஏற்படும்  விரக்தி உணர்வு, இதை ஒட்டியும் ஏராளமான படைப்புகள் இலக்கியத்தில் பதிவாகி இருக்கின்றன. தமிழில் மோகமுள் நாவல் இதை பதிவு செய்தது.

வன்முறையோடு இயைந்த  வாழ்வை அழுந்தந்திருத்தமாய் திரையில் கொண்டு வந்திருக்கும் இயக்குனர் கானு பேலின் முதல் படம் இது.  இத்திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த லலித் பேல் உண்மையில் கானு பேலின் தந்தை. அண்ணனாக விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ரன்வீர் ஷோரி. இவர் கொங்கனா சென்னின் முன்னாள் கணவர். கானு பேல் டிட்லிக்கு முன்பு ’Love Sex Aur Dhokha’ திரைப்படத்தை எழுதியிருக்கிறார்.

’ஆன்கோன் தேகி’ படம் நினைவிருக்கிறதா? 2014 இல் வெளிவந்த இன்னொரு பிரமாதமான படமது.  அதை இயக்கிய ரஜத் கபூர், திபாகர் பேனர்ஜி, அருண் ஷோரி  போன்றவர்கள் இயங்கும் கவர்ச்சி வெளிச்சமற்ற  பேரலல் சினிமா உலகமும் இந்தியில்தான் இயங்கி வருகிறது. இந்த காத்திரமான ஆட்கள் சத்தமே இல்லாமல் பிரமாதமான திரைப்படங்களை குறிப்பிட்ட இடைவெளிகளில் கொடுத்து வருகிறார்கள். இனி இவர்களின் மீதும் ஒரு கண்ணை வைக்க வேண்டும்.


Wednesday, February 7, 2018

முன்பின் எந்தச் சாயல்களுமில்லாத இன்றைப்போல


லாகிரி வஸ்துக்களைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறேன். ஒப்பீட்டளவில் பெரும் தீங்கைத் தரும்  இணையம் மற்றும் ஃபேஸ்புக் புழக்கத்தையும் குறைத்துவிட்டேன். அலுவலகக் கணினியில் ஹென்றி மில்லர் - தற்போது செக்ஸஸ் -1, காரில் முரகாமியின் Dance Dance Dance  ஒலி நூல்,  ஐபோனில் What we talk about When we talk about Running, Mac இல் நார்கோஸ் தொடர், டிவியில் சத்யஜித்ரே என எல்லாவற்றையும் பிடித்தமானதாக மட்டும் மாற்றி வைத்திருக்கிறேன். மாலை வேளைகளில் குடும்பத்தோடு வேதாத்திரி மகரிஷியின் எளிய உடற்பயிற்சிகள். வியாழக் கிழமைகளில் ஷீரடி சாய்பாபாவை நோன்பிருந்து வணங்குதல் என பெளதீக இருப்பும்  ஒழுங்கமைவில் சென்றுகொண்டிருக்கிறது. மனமும் உடலும் நீரூற்றிக் கழுவிட்ட சிவப்பு சிமெண்ட் தரை போல இருக்கிறது. அத்தனைக் குளுமை. சுகந்தம். மெளனம். அமைதி. ஏகாந்தம்.

சகலமும் ஒரு நிலைக்கு வந்திருக்கிறது. தலைக்குள் எப்போதும் கேட்கும் இரைச்சல் இல்லை. இனி வேண்டுவது, ஆவது, சென்றடைவது என்றெல்லாம் எதுவும் கிடையாது. வழக்கமான பழக்கத்தின் விளைவால் வார இறுதியின் மாலைகள் மட்டும் சற்றுச் சவாலாக இருக்கிறதுதாம் ஆனால் அதைக் கடந்துவிடவும் முடிகிறது.

வார நாட்களைப் போலவே வார இறுதியிலும் அதிகாலையில் விழிப்பு வந்துவிடுகிறது. பிடித்தமாதிரியான காஃபியைத் தயாரித்து அருந்துகிறேன். இங்கு வந்து வசித்த வீடுகளில் தற்போது வசிக்கும் இந்த வீடே ஒப்பீட்டளவில் மிக விசாலமான, வெளிச்சமான வீடு. வீட்டிற்கு முன் கட்டிடங்களில்லாத வெளியும் கிடைத்திருப்பதால் வெளிச்சமும் காற்றும் வீட்டை நிரப்புகின்றன. பால்கனியில் நின்று  உயர்ந்திருக்கும் கட்டிடங்களோடு மெளனமாய் உரையாட முடிகிறது. எட்டு வருடங்களுக்கு முன்பு பர் துபாய் வீட்டில் வசித்தபோது  வீடுகளைப் பற்றி குளிர் நினைவுகள் என்றொரு குறிப்பை எழுதினேன். அந்த வீட்டிற்குப் பிறகும் ஐந்து வீடுகள் மாறினேன். இது நான் வசிக்கும் முப்பதாவது வீடு. அதேப் புன்னகைதாம் ஆனால் அயற்சியில்லை.

அடுத்து எழுத வேண்டிய நாவல் குறித்தான எண்ணங்கள் அவ்வப்போது வந்து போகின்றன. திருவண்ணாமலை ட்ரிலாஜியின் கடைசி நாவலைத்தான் ஓரிதழ்ப்பூவிற்குப் பிறகு எழுத வேண்டும் என  திட்டமிட்டிருந்தேன்.  என்னுடைய ஏழு வயதில் ஜப்தி காரியந்தல் கிராமத்திலிருந்து திருவண்ணாமலை தேனிமலைப் பகுதிக்கு வந்து குடியேறினோம். தண்டராம்பட்டு  சாலையை ஒட்டியே என் பாட்டி நிலம் வாங்கி வீட்டைக் கட்டினார்கள். வீட்டு முகவரி பார்வதி நகர் என்றாலும்  வீடிருக்கும் பகுதி தேனிமலைதான்.

தேனிமலைப் பகுதியில்  1980 களில்  24 மனை தெலுங்கு செட்டியார்களும் ஒரு குழுவாக வந்து குடியேறினார்கள். துணிகளை மூட்டை கட்டியும் சைக்கிளில் வைத்துமாய் அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று விற்று வருவார்கள் என்பதால் அவர்களைப் பொதுவாக மூட்டைக்காரர்கள் என அழைப்பார்கள்.  அவர்களுக்கு முன்பே  தேனிமலையில் ஒட்டர்கள் வசித்து வந்தனர். பன்றி வளர்ப்பு அவர்களின் முதன்மையான தொழிலாக இருந்தது. இந்த இரு சமூகங்களுக்கிடையே இருந்த நட்புறவும் விரோதமும்தான் பிரதான கதைக் களம்.

90 களின் இறுதியில் எங்கள் பகுதி மெல்ல அடையாளமிழந்தது. தாமரைக் குளத்திலிருந்து ஆரம்பித்து பார்வதி நகர் வரைக்குமாய் விரிந்திருந்த பசுமையான வயல்களை, குளங்களை, குட்டைகளை, கிணறுகளை அழித்துவிட்டு  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகளை அமைத்தது. என் கண் முன்னால் நிகழ்ந்த இந்த மாற்றம் ஏற்றுக் கொள்ள முடியாததாய் இருந்தது. அவ்வளவு கொண்டாட்டமான என் பால்யம் திடுதிப்பென வெளிறிப்போனது.

என்னுடைய முதல் இருபது வருட வாழ்வையும் இதன் பின்னணியில் சேர்த்து எழுதி திருவண்ணாமலை   ட்ரிலாஜியை நிறைவு செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் இதற்கு இன்னும் சில தகவல்கள் தேவைப்படுகின்றன. தேனிமலைப் பகுதியில் எஞ்சியிருக்கும் சில முதியவர்களை சந்திக்க வேண்டும். எனவே தற்போதைக்கு என் எந்த சாயல்களுமில்லாத ஒரு நாவலை எழுதிப் பார்க்கும் ஆவல் எழுந்திருக்கிறது.  புதிர், காமம், குடி, வன்முறை எல்லாமும் அலுப்பாகத் தோன்றுவதால் முற்றிலும் புதியதொரு எண்ணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

நேற்றின் எந்தச் சாயல்களுமில்லாத இன்று எத்தனை ஆசுவாசமாக இருக்கிறது என்பதை நேற்றைக் கொன்றவர்களே அறிவர்.

Featured Post

test

 test